நண்பர்களே,
வணக்கம். ‘அமைதிப் படை‘ சத்யராஜின் நாகராஜ சோழலின் தாக்கம் மாதந்தோறும் என்னையும் பீடிப்பதுண்டு! மாதத்தின் இரண்டாவது – மூன்றாவது வாரங்களில் பணிகளோடு மல்யுத்தம் நடந்து கொண்டிருக்கும் வேளையில், பதட்டத்தில் சேரின் நுனியில் பம்மிக் கொண்டிருப்பேன்! ‘அட்டைப்பட டிசைனை பொன்னன் இன்னும் முடிக்கலியா?‘; ”ஆத்தாடியோவ்… ரின்டின் கேனில் இனனும் 30 பக்கங்கள் கிடக்கே எழுதுவதற்கு?!!; கிராபிக் நாவலை இன்னும் தொட்டே பார்க்கலைடா சாமி!”" என்ற ரீதியில் வயிற்றைக் கலக்கிக் கொண்டிருக்கும்! ஆனால் மாதயிறுதி நெருங்க-நெருங்க; பணிகள் ஒவ்வொன்றாய் நிறைவு காணக்-காண; அப்படியே லாத்தலாய் சேரில் அமர்ந்து கால் மேல் கால் போட்டு ஹாயாக ஆட்டத் தோன்றும்! ‘என் பணிகள் முழுசும் முடிஞ்சுது டோய்; இனி பைண்டிங்கில் முட்டி, மோதிக் கொள்ளுங்கள் – ஐயாம் எஸ்கேப்!!" என்று அந்த நொடியில் மனதில் ஒரு ஜாலி ஸ்மர்ஃப்பாகி விடுவேன்! அந்த லாத்தலெல்லாமே அட்டவணையில் அடுத்த செட் இதழ்களைப் பார்க்கும் வரையில் தான் நீடிக்கும் என்பது வேறு கதை! “"ஆஹா… அடுத்த மாசம் டபுள் ஆல்பமா? டெக்ஸ் 224 பக்கப் பணியா? கார்ட்டூன்லே க்ளிப்டன் காத்திருக்கிறாரா?"” என்றெல்லாம் மண்டைக்குள் பதிவாகத் தொடங்கும் வேளையே புருவங்கள் மறுக்கா செருகிக் கொள்ளும்; சேரின் நுனி நோக்கிப் பிட்டம் வழுக்கிப் போகும்; ரிங்கா-ரிங்கா ரோசஸ் என்று அதே ஆட்டம் திரும்பிடும்! ஆனால் – இடைப்படும் அந்த ஒற்றை மணி நேரம் மட்டுமாவது முழுப்பரீட்சை விடுமுறைகளின் முதல் நாட்காலையில் விழித்தெழும் மாணவனைப் போல ஜாலியோ ஜாலியாய் உணர்ந்திடுவது வழக்கம் !
இதெல்லாமே கொஞ்ச காலமாய்ப் பழகிப் போய் விட்ட routine தானென்றாலும் – வாழ்க்கையின் மகிமையே இது போன்ற சிற்சிறு சந்தோஷங்களை ரசிப்பது தானே? LMS மெகா குண்டு புக்கை அறிவித்த 2014-ன் மத்திய நாட்கள் தான் இந்தத் தருணத்தில் நினைவுக்கு வருகின்றன! அந்நேரம் ஜுனியர் எடிட்டர் சென்னையில் படித்துக் கொண்டிருக்க, எனது துணைவியுமே அங்கே அவரோடு கேம்ப் அடித்திருக்க – வீட்டில் நான் மட்டும் ஒற்றையாளாய் வேதாளம் போல குந்திக் கிடப்பேன்! காலையில் கண்முழித்த மறுகணமே எந்த மெஸ்ஸில் இன்றைக்கு இட்லி வங்கச் சொல்லலாம் என்ற நினைப்பு எழும் முன்பாகவே "எல்-லே-ம்-மெ-ஸ்ஸ்ஸ்ஸ்" என்ற கூக்குரல் ஸ்டீரியோ எஃபெக்டுடன் ஒலிப்பது போலத் தோன்றும்! மலங்க மலங்க எழுந்து வந்து பல்தேய்க்க பிரஷ்ஷைத் தேடும் போதே – ‘டைகர் கதைக்கு டைப்செட்டிங் ஆரம்பிக்கவே இல்லியோ ? அந்த கிராபிக் நாவல் தலையும் புரிய மாட்டேங்குது, வாலும் புரியமாட்டேங்குது… என்னேன்னு எழுதப் போறேனோ?” என்ற குடைச்சல் ஆரம்பித்திருக்கும்! காலெண்டரில் தேதியைக் கிழிக்கப் போனால் குளிர் காய்ச்சல் வந்துவிடுமோ என்ற பயம் ஜிங்கு ஜிங்கென்று ஆடும்! அந்த நாட்களெல்லாமே நமது ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட; மாதம் தவறாது இதழ்களைத் தயாரித்துக் காட்ட; வாக்கைக் காப்பாற்றுவேனென்று (எனக்குமே சேர்த்து) நிரூபித்துக் காட்ட வேண்டியதொரு மௌனமான நிர்ப்பந்தம் நிலவுவது போல் எனக்குத் தோன்றும்! NBS இதழைக் கூட ஒரு மாதிரியாய் ஒப்பேற்றியிருந்தோம், becos அதனோடு அந்த நாட்களில் complex ஆன இன்ன பிற இதழ்கள் ஏதும் கிடையாது ! ஆனால் LMS இதழின் பருமனும் அசாத்தியம்; ஒன்றுக்கு இரண்டாய் இதழ்கள் ; அதனுள்ளிருந்த b&w கிராபிக் நாவலைக் கையாளத் தெரியாது முழித்த பதற்றம் ; தவிர –மாதம் இரண்டோ, மூன்றோ இதழ்களுண்டு என்ற பாணியும் அமலில் இருந்திட - 2014-ல் ப்ரெஷர் ரொம்பவே கூடுதலாய் உணர்ந்திட முடிந்தது! பற்றாக்குறைக்கு அது தான் நமது முதன்முதல் ஹார்ட்கவர் முயற்சியும் கூட! So பைண்டிங்கின் சூட்சமங்களைப் புரிந்து கொள்வதிலும் நாக்குத் தொங்கியது & அதற்கென அவசியப்படும் அவகாசம் எவ்வளவாக இருக்குமென்பதையும் யூகிக்க முடிந்திருக்கவில்லை! மதியம் அச்சிட்ட தாட்களை ஒப்படைத்து விட்டு மறுநாளே போய் ‘புக் ரெடியாகிடுச்சா அண்ணாச்சி?‘ என்று குடலை உருவிடும் சாத்தியங்கள் இதனில் கிடையாதெனும் போது அதுவும் என் பீதிகளைக் கூட்டித் தந்தது! நிச்சயமாய் சொன்ன தேதிக்குள் இந்தவாட்டி இதழை ரிலீஸ் செய்ய முடியப் போவதில்லை ; ”"வேதாளம் முருங்கை மரம் ஏறிடுச்சுடோய்!"” என்ற கலாய்ப்புகள் ரவுண்ட் கட்டப் போகின்றன என்றே எனக்குப்பட்டது! ஆளே இல்லாத வீட்டுக்குள் அரை லூசைப் போல பினாத்திக் கொண்டு திரிந்த நாட்களவை!
அட்டைப்பட டிசைன் பிரமாதமாய் அமைந்த நொடியில் தான் முதன்முதலாய் எனக்குள் ஒரு நம்பிக்கை துளிர்விட்டது – இந்த இதழை நாம் சொதப்பப் போவதில்லையென்று! ஞாயிறு இரவு ஹோட்டலில் ஒரு ரவா தோசையை ஆர்டர் பண்ணிய கையோடு கல்லாவில் குந்தியிருந்த கேஷியரை உம்மணாம்மூஞ்சி ஸ்மர்ஃப் போல நான் முறைத்துக் கொண்டிருந்த சமயம் தான் வாட்சப் கூப்பிட்டது! பார்த்தால் 3 வெவ்வேறு கலர் variant-களில் LMS-ன் ராப்பரை நமது டிசைனர் பொன்னன் அனுப்பியிருந்தது தெரிந்தது! பின்னணி ப்ளு; பச்சை; இளம் சிகப்பு என்று அந்த முதற்கட்ட டிசைன்களே டாலடிக்க, 'ரவா தோசையில் முந்திரிக்குப் பதிலாய் பொரிகடலையைப் போட்டு ஏமாத்திப்புட்டாய்ங்களே !!' என்ற கவலை கரைந்தே போனது! பீச்சாங்கையில் டைப்படித்து மாற்றங்களை; திருத்தங்களைச் சொல்லி விட்டு பில்லுக்குப் பணம் கொடுக்க எழுந்து போன போது அந்நேரம் வரை நம்பியாரைப் போல வில்லனாய் கண்ணுக்குத் தென்பட்ட கேஷியர் – தெய்வக்களை சொட்டும் A.V.M. ராஜனாகக் காட்சி தந்தார்! ‘வரட்டுமா அண்ணாச்சி?‘ என்றபடிக்கே வீட்டைப் பார்த்து நடக்கத் தொடங்கிய போது – LMS-ஐ பார்த்து பயந்த நிலை மாறி எனக்குள் ஒரு எதிர்பார்ப்பு குடியேறத் துவங்கியிருந்தது ! ‘ஸ்பெஷல் டப்பா செய்யச் சொல்லணும்; ஒரு சின்ன புக்; இன்னொரு பெரிய புக்… so அடிபடாமல் இருக்க cushion தேவை‘ என்றெல்லாம் மகாசிந்தனைகள் றெக்கை கட்டத் துவங்கியிருந்தன! தொடர்ந்த நாட்களில் அந்த b&w கிராபிக் நாவலை எழுதி முடித்த கையோடு எனது LMS பணிகள் ஒட்டுமொத்தமாய் நிறைவடைந்த நொடியில் எனக்குள் பீறிட்ட உற்சாகத்தைக் கொண்டு வைகை எக்ஸ்பிரஸை எஞ்சின் இல்லாமலே சென்னை வரைக்குமென்ன -– துபாய் வரையிலுமே இழுத்துப் போயிருக்க முடியுமென்பேன்! அச்சு; பைண்டிங் டெஸ்பாட்ச் என சகலமும் முடிந்து விட்டிருந்த வேளையில் உங்கள் சிலாகிப்புகளை இங்கே பார்க்க முடிந்த போது – அதுவரையிலான பீதிப்படலம் சுத்தமாய்ப் போயே போயிருந்தது! ‘ஹை… அடுத்து இது மாதிரியான project-க்கு எதை இழுத்து விடலாம்?‘ என்ற கட்டைவிரல் சிந்தனைகளே அலையடித்தன!
அட… எல்லாம் சரி தான்! ஆனால் 4 வருஷ flashback-க்கு இப்போ என்ன முகாந்திரம்?” என்று கேட்கிறீர்களா? காரணம் இல்லாதில்லை folks! பிப்ரவரியில் தேதிகள் குறைச்சல் என்பதால் பணியாற்றும் அவகாசமும் சொற்பம் என்பது அப்பட்டம்! So இம்முறை வழக்கத்துக்கு மாறாக கொஞ்சம சீக்கிரமே எனது பணிகளை நிறைவு செய்திட வேண்டிய சூழல்! இது காரணம் # 1 ! காரணம் நம்பர் 2 – நமது ஆபீஸ்ரூமில் நிறையவே பராமரிப்பு / மராமத்து அவசியமென்றிருப்பதால் அந்த வேலைகள் தொடரும் வாரங்களில் நடைபெறவுள்ளன! So தற்காலிகமாய் ஒரு மாதத்துக்கேனும் சந்திலும், பொந்திலுமே ஆபீஸ் செயல்படவிருப்பதால், ஏப்ரலின் தயாரிப்பு + அச்சுப் பணிகள் இதன்பொருட்டு தடைபட்டிடக் கூடாதேயென்று நினைத்தேன்! அதன் விளைவாய் எழுந்த மகாசிந்தனை தான் ஏப்ரலின் இதழ்களையும் சூட்டோடு சூட்டாய்த் தயாரித்து, பிரிண்ட் செய்து வைத்து விடலாமென்ற தீர்மானம்!
தண்ணீருக்குள் தூக்கிக் கடாசி விட்டால் கடப்பாரை நீச்சலோ, மண்வெட்டி நீச்சலோ - ஏதோவொன்று தானாய் சாத்தியமாகிப் போகுமென்பதை கடந்த 10 + நாட்களில் உணர்ந்து வருகிறேன் ! நல்ல நாளைக்கு - ஒரு 44 பக்க ஆல்பத்தின் எடிட்டிங் பணிகளை இந்த-அந்தாவென்று ஒரு வாரத்துக்கு நீட்டி முழக்குவது வாடிக்கை ! ஆனால் இப்போதோ அவசியம் என்றாகும் போது ஒற்றை இரவே போதும் - ஒரு ஆல்பத்தின் (எனது) பணிகளைக் கரைசேர்த்திட என்பது புரிகிறது !! டைப்செட்டிங்குக்கு நமக்கு அவ்வப்போது உதவிடும் வேலையாட்களின் கதவுகளிலும் நங்கு-நங்கென்று தட்டி, அவர்களையும் இழுத்துப் போட்டு 'ஆட்றா ராமா- தான்றா ராமா !! என்று குட்டிக்கரணங்களைப் போடச் செய்தோம் !! 2018-ன் துவக்கம் முதலாகவே ராப்பர்களை 3 மாதங்கள் in advance என்று தயாரித்து வைத்திருப்பது இந்த நொடியில் கைகொடுக்க, ஏப்ரலின் black & white டெக்ஸ் இதழ் நீங்கலாய் மற்ற சகலமும் தொடரும் நாட்களில் அச்சாகியே முடிந்து விட்டிருக்கும் ! So மார்ச்சின் பணிகளும் முடிந்து; ஏப்ரலின் முக்கால்வாசிக் கிணறைத் தாண்டி விட்டேன் (என்னளவிற்கு) என்பதால் – ”"நாகராஜ விஜயன்"” அவதார் பற்றிய நினைப்பு மெது மெதுவாய்த் தலைதூக்கியது! Black & white டெக்ஸ் வில்லர் மாத்திரமே எனது பணிப் பட்டியலில் எஞ்சி நிற்கிறது ஏப்ரலுக்கென! தொடரும் நாட்களில் அதையும் முடித்து விட்டேனெனில் - மல்லாக்கப் படுத்து விட்டத்தை ரசிக்க கொஞ்சமே கொஞ்சமாய் அவகாசம் கிடைக்கக் கூடும் என்பேன்! ஆனால் – தொலைவில் நமது பெல்ஜியத்து சஞ்சய் ராமசாமி முறைப்பாக நின்று கொண்டு – ”அங்கே என்னமா சத்தம்?” என்று கேட்பது போலத் தோன்றுவதால், அடுத்த பணிக்குள் குதித்து விட்டு "பேசிக்கிட்ருக்கோம் மாமா !!" என்று பதில் சொல்ல வேண்டியது தான் போலும் ! பற்றாக்குறைக்கு – ”777 பக்கங்கள்” என்று ஒரு பெரிய பதாகையோடு இரவுக் கழுகார் & கோவும் மனக்கண்ணில் தோன்றி மறைய – சகல துவாரங்களையும் M-சீல் போட்டு மூடிக் கொள்வதே உத்தமம் என்பதில் சந்தேகமில்லை!
August-ன் மெகா ப்ராஜெக்ட்களுமே மெது மெதுவாய் துவக்கம் கண்டு வருகின்றன! டிஜிட்டல் ஃபைல்கள் சகலமும் வந்து சேர்ந்திருக்க, DTP பணிகள்; டிசைனிங் வேலைகள் என ஆளாளுக்குப் பிரித்துக் கொடுத்திருக்கிறேன்! மாதிரிப் புத்தகங்களை போட்டுப் பார்த்து, பைண்டிங்குக்கான முன்னேற்பாடுகள் பற்றியும் குறித்துக் கொள்ளத் துவங்கி விட்டோம். 3 ஆல்பங்கள் கொண்ட தொகுப்பு (XIII) என்பதால் – பணிகள் முடிய, முடிய ஒவ்வொரு ஆல்பத்தையாகத் தயார் செய்து, பிரிண்ட் பண்ணிப்,பத்திரப்படுத்தி வைக்க எண்ணியுள்ளேன்! ஆகஸ்ட் வரை இழுத்துப் போய் கடைசி நேரத்தில் அண்டாவுக்குள் கை நுழைய மாட்டேன்கிறது என்ற கதையாகிடக் கூடாது அல்லவா? So சிறுகச் சிறுகத் துவங்கி வரும் பணிகள், நாளாசரியாய் வேகம் காணுமென்ற நம்பிக்கையோடு இருக்கிறேன்! மிச்சம் ஆண்டவனின் கைகளில் !
டெக்ஸின் டைனமைட் ஸ்பெஷலைப் பொறுத்த வரையிலும் இத்தாலிய மொழிபெயர்ப்பில் முழி பிதுங்கிக் கொண்டிருக்கிறது – அந்தப் பக்க எண்ணிக்கையின் பொருட்டு! ”"ஆவ்… ஒரே தம்மில் இத்தனை பக்கங்களை எழுதுவதா? செத்தேன்!” என்று ஆளாளுக்குத் தெறித்து ஓட்டமெடுக்க, அவர்களுள் ஒரு பொறுமைசாலியைத் தாஜா செய்து project-ஐ ஒப்படைத்துள்ளார் ஜுனியர் எடிட்டர். நான் எனக்குத் தெரிந்த குடலை உருவும் வேலையை மட்டும் கனகச்சிதமாய் செய்து வருகிறேன் - "ஸ்கிரிப்ட் வந்திருக்கா ? வந்திருக்கா ?" என்று தினப்படி நொச்சரிப்பதில் ! அப்புறம் சரியான reference கிடைத்தால் நமது "மாலையப்பன் எக்ஸ்பிரஸ்" பிய்த்துப் பிடுங்கி ஓட்டமெடுக்கும் என்பது இன்னொருமுறை நிரூபணமாகியிருக்க - முன் & பின் அட்டைப்படங்கள் ரெடி ! வாரத்துக்கு ஒரு தபா அவற்றை வெளியே எடுத்து வைக்கச் சொல்லி கழுத்து சுளுக்கிப் போன வான்கோழியின் ஜாடையில் இந்த ஆங்கிளிலும், அந்த ஆங்கிளிலும் பார்வையிட்டு வருகிறேன்! டா வின்சியின் மோனாலிசாவை பாரிசின் லூவெர் மியூசியத்தில் பார்த்த சமயம் கூட இவ்வளவு நேரத்தைச் செலவழித்த மாதிரி ஞாபகமில்லை! ஆனால் எனது ஓவிய ரசிப்பின் மீது பெட்ரோலை ஊற்றித் தான் கொளுத்த வேண்டுமென்பேன் !! இத்தனை "கலைக்கண்ணோடு" பார்த்து, ரசித்து, சிலாகித்து அடியேன் approve செய்திடும் டிசைன்களில் சிவவற்றைப் பார்த்த மாத்திரத்திலேயே நீங்கள் பிழை கண்டு சொல்லும் போது எனக்கே என் மீது கோபம் கோபமாய் வரும்! லிப்ஸ்டிக் போட்ட லாரன்ஸ்-டேவிட்; திருவிழாவில் காணாது போன தேவ் ஆனந்தின் தூரத்து உறவுமுறை போலான மாயாவிகளெல்லாம்– என் முன்னே பெயிண்டிங்குகளாய் நிற்கும் போது, அழகு பிம்பங்களாகவே தெரியும் மர்மம் இன்றளவுக்கும் எனககுப் புரியாத புதிரே! என்னவோ போடா மாதவா moment தான் !
அட்டைப்படங்களின் topic-ல் இருக்கும் போது சென்றாண்டின் சித்திரப் performance-களைப் பற்றியும், இன்ன பிற tops & pits பற்றியும் பார்த்திடலாமா ?
இதோ 2017 சார்ந்த கேள்விகள் - -சற்றே தாமதமாய் :
1. உங்கள் பார்வையில் ‘Album of the Year 2017’ எதுவோ? (ஒற்றை முதல் பரிசு மட்டுமே சாத்தியம் என்பதால் “"ஆங்… இது… அப்புறம் அது… அப்பாலிக்கா இதுவுமே"” என்ற தேர்வுகள் வேண்டாமே ?!)
2. உங்கள் பார்வையில் “அறிமுகம் of the Year”?
3. உங்கள் பார்வையில் ”சொதப்பல் of the Year” 2017?
(இங்கேயும் ஒற்றை சாய்ஸ் மட்டுமே ப்ளீஸ்)
4. அட்டைப்படங்களுள் உங்களது Top3 ?
5.மிகச் சுமாரான அட்டைப்படங்களின் பட்டியலுமே ப்ளீஸ்? The Bottom 3 ?
6. 2017-ன் “Top Moment” – உங்களைப் பொறுத்தவரை ?
7. லயன் கிராபிக் நாவல் (சந்தா E)– உங்கள் பார்வையில்?
8. 2017 – ஒட்டுமொத்தமாய் என்ன மாதிரியான அனுபவம் என்பீர்கள்?
(a) சூப்பர்-டூப்பர் (b) தேவலாம்! (c) ஹாவ்வ்வ்!
மேற்கண்ட நம்பர் வரிசைப்படியே உங்கள் பதில்களைப் பதிவிடலாம் guys – அல்லது மின்னஞ்சலாகவும் அனுப்பிடலாம். And please note – அவரவரது ரசனை சார்ந்த தேர்வுகள் என்பதால் அவற்றை விமர்சித்தல் வேண்டாமே?!
அப்புறம் கேள்வி # 8-க்கு பதிலை நான் தந்துள்ள 3 தேர்வுக்குள்ளிருந்து மட்டுமே செய்தால் நலமென்பேன்! விசாலமாய் எழுத நினைப்போர் - கடுதாசிகளையோ; மின்னஞ்சல்களையோ தேர்வு செய்திடுங்கள் ப்ளீஸ்!
Before I sign off – இதோ மார்ச்சின் நமது உடைந்த மூக்காரின் க்ளாசிக் மறுபதிப்பின் அட்டைப்படம் + உட்பக்க preview! ஒரிஜினல் டிசைன்; துளியும் மாற்றமின்றி! உட்பக்கங்களோ தகதகக்கும் கலரில்!
கேப்டன் டைகரின் ‘மாஸ் ஹிட்‘ கதை வரிசையில் அநேகமாய் சகலமும் வண்ணத்தில் ஆஜராகி விட்டிருக்கும் நிலையில் – இனி பார்வைகளைப் புதுக்கதைகள் பக்கமாக ஓட விட வேண்டுமோ? மோவாயில் விரல் வைத்து சிந்திக்கும் படங்கள் ஒரு டஜன்!
புறப்படும் முன்பாய் ஒரு முக்கிய தகவலுமே! ஏர்செல் நிறுவனத்தின் சொதப்பல்களின் புண்ணியத்தில் நமது அலுவலகத்து செல்போன்கள் சகலமுமே மண்டையைப் போட்டு விட்டுள்ளன! அவற்றை வேறொரு நெர்வொர்க்கில் இணைத்திட முயற்சித்து வருகிறோம். இடைப்பட்ட தருணத்தில் தொடர்பு கொள்ள நினைக்கும் பட்சத்தில் கீழ்க்கண்ட நம்பரைப் பயன்படுத்திடலாம்!
8870908407
And 2017 -ன் இதழ்களை உங்களுக்கு நினைவூட்டும் பொருட்டு தொடர்கின்றன - ஜனவரி to டிசம்பர் வரையிலான இதழ்களின் அட்டைப்படங்கள் !!
Have a great Sunday! Bye now… See you around!