நண்பர்களே,
வணக்கம். திக்கெட்டும் பகைவர்கள் இளம் டெக்ஸை சூழ்ந்து நிற்க, திக்கெட்டும் தினுசு தினுசான பெயர்களுடனான வைரஸ்கள் நம்மை ரவுண்டு கட்டிச் சாத்தி வருகின்றன ! ஆய்வுக்கூடத்திலிருந்து பயங்கர வைரஸ் கிருமிகள் கொண்டதொரு டப்பியைத் தூக்கிக் கொண்டு ஓடிய தாத்தாவைப் பற்றி காரிகனின் அந்நாட்களது க்ளாஸிக் கதையொன்றில் வாசித்த போது த்ரில்லாக இருந்தது தான் ! ஆனால் நிஜ வாழ்வில் தெளிய வைத்துத், தெளிய வைத்து மொத்தும் முட்டுச் சந்து டெக்னீக்கை கற்று வைத்துள்ள இந்த வைரஸை பார்க்கும் போது பேஸ்தடிக்கிறது !
நிரம்ப எதிர்பார்ப்புகளோடு தமிழகப் பதிப்புலகமே எதிர்நோக்கியிருந்த சென்னைப் புத்தக விழா ஒத்தி வைக்கப்பட்டிருக்க, அதன் முதுகில் இம்முறையாவது நல்லபடியாக சவாரி செய்திடலாமென்ற நம்பிக்கை பணாலாகிப் போயிண்டே !! So மொட்டை மாடியில் காயப்போட்டிருந்த வத்தல், வடாமை ஒதுக்கிய கையோடு - நமது ஆன்லைன் புத்தக விழாவுக்கு ரெடியாகி வருகின்றோம் !
நிஜத்தைச் சொல்வதானால் டிசம்பர் 31 தேதிக்கு அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சேதி கிட்டிய நொடியே அரக்கப் பறக்க ஒரு சிங்கிள் ஆல்பம் & ஒரு டபுள் ஆல்பம் என 2 out of sylabus இதழ்களை ரெடி செய்திட ஆரம்பித்து விட்டிருந்தேன் ! ஏற்கனவே சென்னை விழாவுக்கென ரெடி செய்திருந்ததொரு மாயாவி மறுபதிப்பும் மேஜையின் ஓரத்தில் காத்திருந்தது ! So அவற்றுடன் லயன் லைப்ரரி # 1 - TEX க்ளாஸிக்ஸும் இணைந்திடும் போது, மொத்தம் 4 ஸ்பெஷல்ஸ் இந்த ஆன்லைன் விழாவின் highlight ஆக அமைந்திடுமென்று திட்டமிட்டிருந்தேன் ! ஆனால் no Chennai Bookfair என்றானவுடன், மாயாவி பின்சீட்டுக்கு நகர்ந்து விட்டிருந்தார் ! And ஏற்கனவே FFS ; இன்னும் காத்திருக்கும் வேதாளன் ஸ்பெஷல் என்ற ஹெவி மீல்சுக்கு நடுவே இந்த ஸ்பெஷல் சமோசாக்களையும், பாவ் பாஜியையும் வம்படியாய்த் திணித்தால், அஜீரணமாகிப் போகுமென்ற பயம் தொற்றியது ! 'ரைட்டு...சமோசா மட்டும் இருக்கட்டும், பாவ் பாஜி வாணாம் ; சிங்கிள் ஆல்பம் மட்டுமாவது ஓ.கே. ' என்று அடுத்த மகா சிந்தனை எழுந்தது ! ஆனால் FFS புக்கில் பொம்மை பார்க்கும் படலத்தைத் தாண்டவே இன்னும் நம்மில் நிறைய பேருக்கு அவகாசம் கிட்டில்லா - என்பதை கவனித்த போது, சமோஸாவையும் பதுக்கி விட்டேன் ! So வேறேதேனுமொரு வேளைக்கு அவை காத்திருக்கும் !
இந்தத் தருணத்தில் ஒரு விஷயம் நம் கவனத்தைக் கோருவதாய் எனக்குப் படுகிறது ! இந்த "குண்டு புக்" மோகங்கள் என்பனவெல்லாம், நமது முன்னாட்களது வாசிப்பு வேகங்கள் சார்ந்த 'பழைய நெனைப்புடா பேராண்டி !' அனிச்சைக் குரல்கள் என்றே இப்போதெல்லாம் தோன்றுகிறது ! அழுத்தமான கதைக்களங்களெனில்,சேர்ந்தார் போல 25 பக்கங்களை வாசிக்கும் நேரமோ, பொறுமையோ இன்றைக்கு நம்மில் அநேகருக்கு இருப்பின், லைனாக அவர்கள் அனைவருக்குமே மெரினா பீச்சின் ஓரமாய் சிலைகளை வைத்து விடலாம் என்பேன் ! ஏற்கனவே நிறைய பேரின் போட்டோக்கள் நமது மெயில்பாக்சில் உள்ளன எனும் போது, சிலை செய்ய டகாலென்று ஆர்டர் தந்து விடலாம் !! செல்போன் நோண்டல்கள் ; வாட்சப் அளவளாவல்கள் ; ரீல்ஸ் குட்டி வீடியோக்கள் ; இன்ஸ்டா ஊர்வலங்கள் ; OTT தளங்களில் ரக ரகமாய் சினிமாக்கள் - என்ற நமது மின்மய அன்றாடங்களுக்கு மத்தியில் நெடும் வாசிப்புகளுக்கு நேரம் திரட்டுவது குதிரைக் கொம்பென்பது புரிகிறது ! Of course - "புழைப்பு..புழைப்பு" என்றதொரு சமாச்சாரத்தையும் இடையிடையே பார்க்க வேண்டியதும் இருக்கும் தான் !!
So நமது SMASHING '70ஸ் concept இந்நாட்களுக்கு பொருந்திடுமென்றே தோன்றுகிறது ! ஒவ்வொரு கதையும் மிஞ்சிப் போனால் 20 பக்கங்கள் or 22 பக்கங்கள் தான் ; and ஒவ்வொன்றுமே தனித்தனி one shots தான் எனும் போது, காலையில் பாரியாளுக்கு டீ போட தண்ணீர் கொதிக்க வைக்கும் வேளையில் ஒரு கதை ; ரைஸ் குக்கரில் சோறு பொங்குவதை மேற்பார்வை செய்யும் தருணங்களில் இன்னொரு கதை ; சீக்கிரமாய் துணி காயப்போட்டு முடித்து விட்டால், மொட்டை மாடியில் வைத்தே இன்னொரு கதை என்று முடித்து விடலாம் தான் !! Intense ஆன நெடுந்தொடர்களை இனி கணிசமான யோசனைகளுக்குப் பின்னேயே கையில் எடுத்திட வேண்டும் என்பது புரிகிறது ! And ஜவ்வுமிட்டாய்ப் பார்ட்டிகளுக்கு கல்தா தந்து விட்டு, crisp ஆக ரெடி செய்துள்ள நடப்பாண்டின் கமர்ஷியல் அட்டவணையினை எண்ணி நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொள்கிறேன் ! Going ahead, இனி முழுக்க முழுக்கவே entertainers-க்கு மட்டுமே நம் மத்தியில் இடமிருக்கும் என்பது புரிகிறது !
இங்கேயொரு கேள்வி guys : "இரத்தப் படலம்" போலான நெடும் தொடரினை 1986-ல் துவங்கி God knows when வரையிலும் நாம் அத்தியாயம் அத்தியாயமாகவே வாசித்து வந்திருக்கிறோம் ! So இனி வரும் நாட்களில் "தொகுப்புகளாய் வாசிப்போம்" என்ற கொடியினை கிட்டங்கிக்குள் கிடத்தி வைத்து விட்டு, "நிதானமாய் வாசிப்போம்" என்ற கொடியினைக் கையில் எடுத்தால் என்ன ? ஜேசன் ப்ரைஸ் ஆல்பங்களை அடுத்தடுத்த 3 மாதங்களில் வெளியிட்டது போல, இனிமேல் கண்ணில்படக்கூடிய 3 பாக / 5 பாக ஆல்பங்களை மாதாந்திரத் தவணைகளில் முயற்சிப்பது பற்றிய உங்களது அபிப்பிராயம்ஸ் ப்ளீஸ் ? End of the day - வாங்கும் இதழ்களை நீங்கள் வாசித்திட வேண்டும் என்பதே நமது ஒரே அவா ; so அதற்கு உதவிடக்கூடிய எதுவாயினும் worth some thought ! யோசியுங்களேன் நண்பர்ஸ் ?
Of course - வாசிப்புக்கென இன்னமும் நேரமும், பொறுமையும் கொண்டுள்ள நண்பர்களும் இங்கு கணிசம் என்பதை மறுக்கவே மாட்டேன் ! அவர்களின் உத்வேகங்களே நம்மை நகர்த்தி வரும் தூண்டுகோல்கள் என்பது யதார்த்தம் ! But sadly அவர்களது எண்ணிக்கை குறைச்சல் என்பதுமே யதார்த்தம் ! இங்கு தான் புதிய தலைமுறையினை ; குட்டீஸ் தலைமுறையினை நமது 'பொம்ம புக்' அரங்கிற்குள் நுழைத்திடும் அவசியங்கள் முன்னெப்போதையும் விட ஸ்பஷ்டமாய் மிளிர்கின்றன !! அவர்கள் நம்மைவிடவும் இப்போதெல்லாம் சூப்பர் பிசி என்பது தெரிந்த சமாச்சாரம் தான் ; ஆனால் குட்டிக்கரணம் அடித்தேனும் அவர்களை நமது பொம்ம புக் உலகிற்குள் நுழைக்க முயற்சிப்பது order of the day என்பேன் !
'ஏன்டாப்பா டேய்...நீ போடற கதையைப் படிச்சி எனக்கே அப்பப்போ தலைமாட்டிலே சாவிக்கொத்தையும், பூரிக்கட்டையையும், விளக்குமாத்தையும் வைச்சுக்க வேண்டி போகுது ; இந்த அழகிலே புள்ளீங்களை இதனுள்ளாற கூட்டியாறதா ? விளங்குனாப்டி தான் !' என்ற மைண்ட்வாய்ஸா ? No worries guys ! பசங்களை நம் உலகினுள் அழைத்து வருவதன் முதற்படியாய் நாமே ஏன் அவர்களின் உலகுக்குள் நுழைந்து பார்க்கக்கூடாது ? 'இவன் ரொம்ப குழப்புறானே ?!' என்ற கவுண்டர் மைண்ட்வாய்ஸ் கூட கேட்கிறது இங்கே ! நான் சொல்ல வருவது சிம்பிள் !! உலகெங்கும் குட்டீஸ்களுக்கென ஒரு செட் கதைகள் புழக்கத்தில் உண்டு தானே - அலாவுதீனும் பூதமும் ; அலிபாபாவும் 40 திருடர்களும் ; ஜாக் & தி பீன்ஸ்டாக் ; சிண்ட்ரெல்லா இத்யாதி, இத்யாதி என்று ! அவற்றையே நம் குட்டீஸ்களுக்கு காமிக்ஸ் வடிவில் தந்தாலென்ன ?
To cut a long story short, சென்றாண்டின் ஒரு பொழுதினில் இது சார்ந்த ஒரு அலசலுக்குள் ஜூனியர் எடிட்டரும், நானும் புகுந்திருந்தோம் ! And அதன் பலனாய் நமது படைப்பாளிகளிடமே இந்த classic fairy tales - காமிக்ஸ் வடிவங்களில் இருப்பதைக் கண்டறிந்தோம் ! அவர்கள் உருவாக்கியிருந்த ஆல்பங்கள் கீழ்க்கண்ட template-ல் இருந்தன :
- 30 பக்கங்களுக்கு காமிக்ஸில் கதை சொல்லும் முயற்சி !
- 10 பக்கங்களுக்கு அதே கதையினை சுலப நடையில், வரிகளில் சொல்லும் முயற்சி !
- 8 பக்கங்களில் அந்தக் கதையின் ராஜ, ராணி, மந்திரி, ஆனை, வாத்து, கரடி, குரங்கு - என சகலத்தையும் சுலபமாய் வரைந்திடும் பயிற்சிப் படலம் !
So 48 பக்கங்களில் நம் குழந்தைகளுக்குத் அழகானதொரு கதையினை வெவ்வேறு வடிவங்களில் சொல்வது மட்டுமன்றி, அவற்றை வரைந்து பார்க்கும் ஆர்வங்களையும் இந்த ஆல்பங்களில் நிறைத்திருப்பதாய் எனக்குப் பட்டது ! என்ன ஒரு சிக்கல் - காமிக்ஸ் பக்கங்களில், முழுக்க முழக்கவே அந்நாட்களில் சார்லி சாப்ளின் திரைப்படங்களை போல silent பாணியிலேயே கதைகளை நகர்த்தியிருந்தனர் - சுத்தமாய் டயலாக் இல்லாமல் ! கொஞ்சமேனும் வாசிக்க வரிகளின்றிப் போனால் சுகப்படாதே ? என்று நெருடிட, படைப்பாளிகளிடமே கேட்டேன் - "இதில் கதையை நகற்றும் பாணியில் வரிகளை நாங்கள் சேர்த்துக் கொள்ளலாமா ?" என்று ! சிறிது சிந்தனைக்குப் பின்பாய் ஒரேயொரு மாதிரிப் பக்கத்தை ரெடி பண்ணிக் காட்டச் சொல்லி அவர்களும் கோரிட, அடிச்சுப் பிடித்து அனுப்பி வைத்தேன் ! படைப்பாளிகளும் ஓ.கே. சொல்லிட, நமது லயன் லைப்ரரி வரிசையினில் மெய்யான குட்டீஸ் ஐட்டத்தை நுழைத்திடும் திட்டம் ஊர்ஜிதம் கண்டது ! இது 'உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக' சமாச்சாரமெல்லாம் கிடையாதென்பது உறுதி ; அமர் சித்ர கதா / டிங்கிள் / பூம்பட்டா போன்ற இதழ்களெல்லாம் இதற்கு அண்ணனான உருவாக்கங்களை நமக்குக் காட்டியுள்ளனர் என்பதை நன்றாகவே அறிவேன் தான் ! ஆனால் இந்த ஒரே புக்கில் காமிக்ஸ்-சிறுகதை-சித்திரம் என்ற concept கொஞ்சம் புதுசு என்பதோடு, வீட்டிலிருந்தபடிக்கே ஆன்லைன் க்ளாஸ்களில் கரணமடிக்கும் வாண்டுகளுக்கு கொஞ்சமேனும் பொழுதுகளைப் போக்க இந்த 3-in-1 உதவிடக்கூடும் என்று நினைத்தேன் !
இந்த முயற்சி வெற்றி காணுமா ? சொதப்புமா ? என்றெல்லாம் நான் பெரிதாய் மண்டையைப் பிய்த்துக் கொள்ளவில்லை என்பதற்குக் காரணங்கள் 2 உண்டு ! பிய்க்கும் அளவுக்கு அங்கே எதுவும் கிடையாதென்ற obvious முதல் காரணத்தைத் தாண்டி, இந்த 50 ஆண்டுப் பயணத்தினில், நமது ஜூனியர்களுக்கானதொரு exclusive சமாச்சாரமாய் நாம் எதையும் செய்திருக்கவில்லை என்ற உறுத்தல் தான் காரணம் # 2 ! மிஞ்சிப் போனால் ஒரு புக்கின் filler pages-களில் இடம்பிடித்திருக்கக்கூடிய கபிஷோ ; விச்சு-கிச்சுவோ ; சமீபத்தைய எலியப்பாவோ குட்டீஸ்களின் கவனங்களை ஈர்த்திருக்கலாம் தான் ! இன்னும் ஒரு படி மேலே போனால், ரின்டின் கேன் ; லக்கி லூக் போன்ற ஆல்பங்கள் புரட்டிப் படம் பார்க்கும் அளவுக்காவது ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியிருக்கலாம் ! ஆனால் - "அவர்களுக்கே அவர்களுக்கானது" என்று சொல்லும் விதமாய் (நம்மிடம்) எதுவும் இல்லை என்பது தானே நடைமுறை ?! So முயற்சித்துத் தான் பார்ப்போமே - இந்தத் தடமானது நமது ஜூனியர்களின் முகங்களில் பல்ப் எரியச் செய்கின்றதா ? அல்லது எனது சொட்டை மண்டைக்கொரு பல்ப் வாங்கித் தருகிறதா என்று ?!
This is how it will pan out....
- CINDERELLA (சிண்ட்ரெல்லா)
- JACK & THE BEANSTALK (பீன்ஸ் கொடியில் ஜாக் ! )
- SNOW WHITE (பனித்துளி இளவரசி)
- THE UGLY DUCKLING (எல்லாம் அழகே)
ஆகிய 4 க்ளாஸிக் கதைகள் April'22 முதல் சீரான இடைவெளிகளில் வெளிவந்திடும் !
**நமது ரெகுலர் (லக்கி லூக்) சைசில் ..
**48 வண்ணப் பக்கங்களுடன் ..
**ரூ.100 விலையில் ..
ஒவ்வொரு இதழும் இருந்திடும் !
And இந்த இதழ்கள் நமது ரெகுலர் இதழ்களுடன் ஒரே பார்சலில் ஒரு போதும் பயணிக்காது !! So 4 இதழ்களுக்குமான shipping cost (தமிழகத்தினுள்) ஆக ரூ.25 x 4 = ரூ.100 என்று இருந்திடும் !
ரூ.500-க்கு உங்கள் வீட்டுக் குட்டீசின் பெயரில் சந்தா செலுத்திடும் பட்சத்தில், சந்தாக்கள் பதிவு செய்யப்படுவதே அவர்களின் பெயர்களில் தானிருக்கும் & பார்சல்கள் அவர்களது பெயர்களுக்கே அனுப்பிவைக்கப்படும் ! So இனி வீட்டுக்குள் நுழையும் போது உரக்கவோ, கிசுகிசுப்பாகவோ - 'எனக்கு காமிக்ஸ் பார்சல் வந்துச்சா ?' என்ற குரல் கொடுப்பது நீங்கள் ஒருவராக மட்டுமே இருந்திடக் கூடாதென்பதற்கே இந்த ஏற்பாடு !
And ஒவ்வொரு புக்கின் முதல் பக்கத்திலும் - "இந்த புக் Master / Ms.__________ன் பொக்கிஷம் !" என்று அச்சிடப்பட்டிருக்கும் ! கெத்தாக அவர்களது பெயர்களை அதற்குள் கிறுக்கி வைத்துக் கொண்டு பத்திரப்படுத்திக் கொள்ளட்டுமே ?
அப்புறம் இரண்டோ,மூன்றோ வாரங்களுக்கு முன்பாய், "குட்டீஸ்களுக்கொரு ஏற்பாடு & அது குறித்து உங்களின் ஒத்தாசைகள் எனக்கு அவசியமாகிடும்" என்று நான் குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம் ; நான் உங்களிடம் கோரிடப் போகும் ஒத்தாசைகள் மூன்று விதங்களிலானவை :
- உங்கள் இல்லங்களில் இவற்றை வாசிக்கக்கூடிய வயதுகளில் சுட்டிகள் இருக்கும் பட்சத்தில் - சந்தா ப்ளீஸ் !
- இந்த இதழ்கள் வெளிவரும் மாதங்களில் மட்டுமாவது, பிள்ளைகளுக்கு அவற்றை வாசித்துக் காட்டிடவும், கதை சொல்லிடவும், படம் வரைந்து காட்டி குஷிப்படுத்திடவும் அவசியம் அவகாசம் ஒதுக்கிக் கொள்ள வேண்டுமென்பது எனது request # 2 !
- பள்ளிகளுக்கு வழங்கிட ; உங்கள் நட்பு வட்டத்தினுள் / சுற்றத்தாரின் மத்தியில் அன்பளிப்பு தந்திட இவை உதவிடக்கூடும் ! So maybe worth a thought please ?
Last but not the least - ஒவ்வொரு புக்கின் பின்பகுதியிலும் இடம்பிடித்திடவுள்ள சிறுகதையினை தமிழில் எழுதி அனுப்பிட உங்கள் முன்னே கோரிக்கை # 4 வைக்கின்றேன் !! காமிக்ஸ் ஆக்கத்தினை நான் பார்த்துக் கொள்கிறேன் guys ; சிறுகதை வடிவத்தில் தொடர்ந்திட வேண்டிய வரிகளை சிம்பிளான, அழகான தமிழில் எழுதி அனுப்பிடுங்களேன் - ப்ளீஸ் ? The best ஆகத் தேர்வாவதை அந்தந்த புக்கினில் பயன்படுத்திக் கொள்வோம் !
முதல் இதழாக வரவிருப்பது சிண்ட்ரெல்லா ! உலகத்துக்கே தெரிந்த இந்தக் கதையினை நம் வீட்டுப் பிள்ளைகள் ரசிக்கும் பாணியில் அழகாய் தமிழில் எழுதி அனுப்பிடுங்களேன் ?
So "கதை சொல்லும் காமிக்ஸ்" என்ற இந்த குட்டீஸ்களுக்கான தொடருக்கு நமது ஆன்லைன் புத்தக விழாவிலிருந்து சந்தா சேகரிப்பினைத் துவங்கிடவுள்ளோம் ! தொடரவுள்ள 4 நாட்களில் (13 ; 14 ; 15 & 17 ஜனவரி) உங்களுக்கான புக்ஸ்களை ஆர்டர் செய்திடும் போது இவற்றிற்கும் சேர்த்து ஏற்பாடு செய்திட முயற்சியுங்களேன் - ப்ளீஸ் !
இவை நமது மாமூலான outlet-களில் எத்தனை தூரத்துக்கு விற்பனை காணும் என்பதோ ; முகவர்களில் எத்தனை பேர் வாங்குவர் என்பதோ சத்தியமாய்த் தெரியாத சமாச்சாரங்களே ! So சத்தமின்றி இது ஜெயிக்கவும் கூடும் ; பிரமாதமாய் சொதப்பவும் கூடும் ! வெற்றியோ, தோல்வியோ, we gave it a decent try என்ற திருப்தி இதனிலிருந்து எடுத்துச் செல்ல இயலுமென்ற நம்பிக்கை எனக்குள்ளது ! Fingers crossed !
And now, here you go with details for the Online Book Fair folks !
- சமீபத்தைய டெக்ஸ் ஆல்பங்களில் எல்லாமே ஸ்டாக் நஹி என்பதில் ரகசியங்கள் கிடையாது ! கொரோனா கொடுமைகளுக்குப் பயந்து நாம் பிரிண்ட்ரன்னைக் குறைத்திருந்தது ஒரு காரணமெனில், ஊருக்கே தெரிந்த காரணம் # 2 ! So 8 டைட்டில்களில் ஒரு சிறிய அளவு மறுக்கா ரெடி பண்ணியுள்ளோம் !
- அப்புறம் 10 ஆண்டுகளுக்கு முன்னே LION NEW LOOK ஸ்பெஷல் இதழின் 2 கதைகளுள் ஒன்றான "வானவில்லைத் தேடி !" (லக்கி லூக்)- ஒரு சிங்கிள் ஆல்பமாய் ; ஒரிஜினல் அட்டைப்படத்துடன் வருகிறது !
- And of course - TEX க்ளாசிக்ஸ் 1 - பழிக்குப் பழி - முழுவண்ணத்தில் ; ஹார்டுகவரில் ; ஏகப்பட்ட அட்டைப்பட நகாசு வேலைகளுடன் தக தகத்திடவுள்ளது !
- அப்புறம் எல்லா கொள்முதல்களுக்குமே மாயாவி போஸ்டர் நமது அன்புடன் !
- அது மாத்திரமன்றி, கடைசி நிமிடத்தில் போனெல்லியில் சம்மதம் வாங்கியாச்சு இன்னொரு 'தல' போஸ்டருக்கு ! So இந்த பொங்கல் புத்தக விழாவின் எல்லா கொள்முதல்களுக்குமே ஒரு TEX போஸ்டரும் நமது அன்புடன் !
And தினசரி ஊக்கங்களாய் -
*கூடுதலான தொகைக்கு ஆர்டர் செய்திடும் நண்பருக்கு - "இரத்தப் படலம்" Black & White தொகுப்பு பரிசாகிடும் !
*கூடுதலான எண்ணிக்கை புக்ஸ் வாங்கிடும் நண்பருக்கு (சமீபத்தைய) கலரிலான "கழுகுமலைக் கோட்டை" பரிசாகிடும் !
ஒவ்வொரு தினத்தின் வெற்றியாளர் அன்றிரவு இங்கே அறிவிக்கப்படுவார் ! And as usual - கூடுதல் டிஸ்கவுண்ட் கொண்ட இதழ்கள் ; CINEBOOK ஆங்கில இதழ்களுக்கு டிஸ்கவுண்ட் ; ரூ.1200-க்குக் கூடுதலான கொள்முதல்களுக்கு தமிழகத்தினுள் கூரியர் கட்டணம் தள்ளுபடி - என்ற சலுகைகள் உண்டு !
PLEASE NOTE : ஜனவரி 16 - ஞாயிறன்று ஊரடங்கு என்பதால் நாமும் பூட்டியே இருப்போம். அதற்குப் பதிலாய் மறுதினம் (17 - திங்கள்) we will be around !
And here's the STOCK LIST :
ஷப்பா....ரெம்ப நேரமாய் கொத்தவால் சாவடியில் கூவிக் கொண்டேயிருக்கும் பீலிங்கு எழுவதால் நடையைக் கட்டுகிறேன் folks !
And அந்த LIVE QUIZ மேட்டர் பற்றி !!
சனிக்கிழமை மாலை 6 to 6-30-க்கு ஓ.கே.வாகிடுமா உங்களுக்கு ? And if yes - எத்தனை பேருக்குக் கலந்து கொள்ள தோதுப்படும் ?
கொஞ்சமாச்சும் நண்பர்கள் தேறிடாத பட்சத்தில் தனியாய் டீ ஆத்துவது செம மொக்கையாக இருக்கும் ! So சொல்லுங்களேன் guys - உங்களின் சனி மாலை அட்டவணை இன்னான்னு ? அவ்விதம் அரங்கேறுவதாக இருப்பின் - QUIZ இருந்திடவுள்ளது - சிஸ்கோவின் "சத்தமாயொரு மௌனம்" & "என் பெயர் டேங்கோ" விலிருந்தே ! நீங்க ரெடியாகிறதை பொறுத்தே நானும் கேள்வி கேட்க ரெடியாகணும் ; becos அவற்றை எழுதிய நாட்களெல்லாம் ஏதோவொரு தூரத்து தினத்தில் என்பதாகப் புதையுண்டு கிடக்கின்றன மண்டைக்குள் !
Bye all ; see you around !! அனைவருக்கும் முன்கூட்டிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !! பொங்கலும், புதுக் கரும்புகளும், மட்டில்லா மகிழ்வுகளும் இல்லமெங்கும் இனிக்கட்டும் !