நண்பர்களே,
முன்குறிப்பு : "நான் கொஞ்சம் பிசி ; உன் மொக்கையை முழுசா படிக்க இப்போ நேரமில்லை !" என்று சொல்வோரா நீங்கள் ? நேராக பதிவின் கடைசிப் பகுதியில் சிகப்பில் உள்ள வரிகளுக்கு ஜம்ப் பண்ணி வாசித்த கையோடு நீங்கள் புறப்பட்டு விடலாம் ! மாறாக, "லீவிலே தான் இருக்கேன் ; தோசை சுடற நேரத்திலேயோ ; பாத்திரம் தேய்க்குறே நேரத்திலேயோ வாசிச்சிப்புடுவேன் !" என்போரா நீங்கள் ? - carry on with the reading !!
வணக்கம். கோலிவுட் பட க்ளைமாக்ஸ் காட்சிகளில் அடிக்கொரு தடவை பார்த்திருப்போம் - ரயில் கிளம்பி வேகம் எடுக்க ஆரம்பிக்கும் போது, பிளாட்பார்ம் டிக்கெட் கூட எடுத்திருக்காத ஈரோ சார் ரத்தம் சொட்டச் சொட்ட கையை நீட்டியபடிக்கே ஓடியாருவார் & ரயில் பெட்டியின் வாசலில் தொங்கிக்கொண்டே நிற்கும் ஈரோயினி கையை நீட்டியபடிக்கே "பிராணநாதா...கமான் ..கமான் !!" என்று கிண்டியில் ரேசுக்குப் போகிறவரைப் போல கூவிக் கொண்டிருப்பார் ! இந்த மாதிரியான சீன்களைப் பார்க்கும் போதெல்லாம் - 'ஏண்டாப்பா டேய்...அது தான் ரயில் ரெண்டு நிமிஷத்தில் கெளம்பிடும்னு தெரியுமில்லே ? ரெண்டு நிமிஷங்களுக்கு முன்னே வந்து தொலைச்சிட்டா குடியா முழுகிடும் ?' என்று கடுப்பாக இருக்கும் ! ஆனால்..."செய்வன 'த்ரில்லாய்ச்' செய் " என்ற சினிமாக்களின் தாரக மந்திரங்களை அத்தினி சுலபமாய் மாற்ற முடியாது தானே ? ; so ரயில்வே ஸ்டேஷன்களின் slow motion sequences தொடர்ந்து கொண்டே இருக்கின்றன !
'அது சரி, இந்த விளக்கமெல்லாம் இப்போ எதுக்குடா தம்பி ?' என்கிறீர்களா ? Simply becos எரிச்சல்மூட்டும் அந்த ஈரோ சார் last நிமிட்டில் ஓடியாரும் சீனுக்கு நிகரான காட்சிகள் நம் தரப்பிலும் இவ்வாரத்தில் அரங்கேறி வந்துள்ளன & 'தேமே' என்று அவற்றைப் பராக்குப் பார்த்து வர வேண்டிப் போனது எனக்கு !!
*FFS எனும் concept இறுதியானது 7 மாதங்களுக்கு முன்பாய் !!
*FFS இதழினை டிசம்பர் 29 -ம் தேதிக்கு டெஸ்பாட்ச் செய்திட வேண்டுமென தீர்மானித்ததும் அதே 7 மாதங்களுக்கு முன்பாய் !!
*FFS-ன் கதைகளுக்கு ஏற்பாடுகள் பூரணமானது 5 1/2 மாதங்களுக்கு முன்பாய் !
*FFS-ன் ஒட்டு மொத்த மொழிபெயர்ப்பும் ; டைப்செட்டிங்கும் ; எடிட்டிங்கும் நிறைவுற்றது 1 1/4 மாதங்களுக்கு முன்பாய் !
*FFS-ன் ஒட்டு மொத்த அச்சுப் பணிகளும் நிறைவுற்றது டிசம்பர் 10 தேதிக்கு !
நியாயப்படிப் பார்த்தால் பைண்டிங் & இத்யாதி வேலைகள் நிதான வேகத்தில் நடந்திருந்தால் கூட கிறிஸ்துமஸுக்குள் புக்ஸ் கைக்கு வந்திருக்க வேண்டும் & 4 நாட்கள் சாவகாசமாய் கிட்டியிருக்கும் - நம்மாட்கள் டெஸ்பாட்ச் செய்திட ! இது தான் இந்த டைரடக்கரின் திட்டமிடல் ! ஆனால் அட்டைப்பட டிசைனுக்கு போராட்டம் ; பைண்டிங்கில் சதிராட்டம் ; கனத்த பொட்டிகளுக்கோசரம் குத்தாட்டம் என்று குறுக்கால நிறைய சண்டைக் காட்சிகள் அரங்கேறியதன் பலனாய், புக்ஸ் திங்கள் இரவுக்குத் தான் ஆபீஸ் வந்து சேர்ந்தன !
புக்ஸ் வந்து இறங்கும் போதே - "நாளைக்கே இம்புட்டையும் அனுப்பப் சொல்லி சாமியாடுவானே ? இந்த காண்டாமிருகக் கனத்திலான டப்பிக்குள்ளாற புக்ஸை அடைச்சு, வாயை ஓட்றதுக்கே ஆளாளுக்கு அரை டஜன் இட்லிக்களை கூடுதலா சாப்பிட தேவைப்படுமே ?" என்ற நம்மாட்களின் பீதி தோய்ந்த மைண்ட்வாய்ஸ் எனக்குக் கேட்காத குறை தான் ! ஒண்ணு...ரெண்டு..மூணு....நாலு ...என குடும்பம் குட்டியோடு FFS ஆபீசுக்குள் வலது காலை எடுத்து வைத்துப் புகுந்த நொடியில், நம்மாட்களுக்கு உட்காரக் கூட இடம் நஹி ! So 'அடுத்த சில நாட்களுக்கு ஞான் ஆத்தும் டீயை வெளியிலே வைச்சு ஆத்திக்கும் ; நிங்கள் எண்ட ரூமை எடுத்துக் கொள்ளுங்கோ !' என்றபடிக்கே என் ரூமை திறந்து மொத்தத்தையும் அங்கே இறக்கச் செய்தேன் ! அப்பாலிக்கா ஆரம்பிச்சது தான் பாம்பே சர்க்கஸ் !!
டப்பிக்கள் நாம் எதிர்பார்த்ததைவிடவும் முரட்டுத்தனமாய் அமைந்து போயிருக்க, பசையின் ஈரம் காய்ந்த பாடைக் காணோம் !! "காய போடுங்க...விரிச்சுக் காய போடுங்க !" என்றபடிக்கே FFS மெயின் புக்ஸ்களை வேக வேகமாய்ப் புரட்டினேன் ! கடந்த 6 மாதங்களாய் என்னோடு வீட்டில் குடித்தனமே நடத்தியிருந்த அத்தனை கதை மாந்தர்களையும் புக்கில் பார்க்கும் போது கும்பகோணத்து அசோகா அல்வாவைப் பார்த்தது போல குஷியாய் இருந்தது ! Alpha....ம்ம்ம்...சிஸ்கோ...என்றபடிக்கே பக்கங்களைப் புரட்டினால்.திடு திடுப்பென சிஸ்கோவுடன், டேங்கோவும் ஆஜராகியிருக்கக் கண்டேன் ! "இது எப்போ இவங்க கூட்டணி போட்டாங்க - எனக்கே தெரியாம ?" என்றபடிக்கே புரட்டினால் - பைண்டிங்கில் பக்கங்களைத் தப்பாக வைத்துத் தைத்து விட்டிருப்பது புரிந்தது ! 'போலீஸ்...ஆம்புலன்ஸ்...பயர் சர்வீஸ்..மிலிட்டரி' என கூவாத குறையாய் நான் கத்திக் கூப்பாடு போட்டதில் 3 பேர் பைண்டிங் ஆபீசுக்கே ஓட்டமெடுத்திருந்தனர் - அங்கே பணி நடந்து கொண்டிருந்த பாக்கிப் பிரதிகளிலும் இது போலான குளறுபடி ஏதேனும் நேர்ந்துள்ளதாவென்று சரி பார்க்க ! ஆபீஸிலோ அத்தனை பேரையும், அவரவரது வேலைகள் என்னவாக இருப்பினும், தூக்கி ஓரம் கட்டிவிட்டு, புக்ஸை புரட்டச் சொல்லிப் பணித்தேன் ! 'சரி, நம்மாட்களில் யாரும் இதில் அரைப் பக்கத்தைக் கூடப் படிக்கும் பொருட்டு புரட்டப் போவதில்லை ; இப்புடியாச்சும் முழு புக்கையும் புரட்டட்டுமே !!' என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டேன் ! புரட்டினார்கள்.. புரட்டினார்கள்.... வாழ்க்கையின் ஒரத்துக்கே போகும் வரைப் புரட்டினார்கள் & at the end of it - மொத்தம் 3 புக்ஸ் மட்டும் உல்டா புல்டா பக்கங்களோடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது ! And அங்கே பைண்டிங்கில் இன்னொரு 6 பிரதிகள் !! 'அவற்றைக் கடாசுங்கள்' என்றபடிக்கே லைட்டாக ஒரு பெருமூச்சை விட்டுக் கொண்டேன் !
ஆனால் அது சற்றே அவசரப்பட்ட பெருமூச்சாகிப் போனது ! Becos ஜவ்வு மிட்டாய் படலங்கள் ஓய்ந்த பாடில்லை !!
இதழ்களில் இரண்டு - செம பருமன் எனும் போது, வாசிப்பு அடையாளங்களுக்கென bookmarks அவசியமாச்சே ?! And ஒன்றுக்கு நான்காய் அவற்றைத் தந்திடும் மஹாசிந்தனை கொஞ்சம் தாமதமாகவே எழுந்திருந்தது எனக்கு ! 'ரைட்டு...அதை டிஜிட்டலில் பிரிண்ட் போட்டால் ஒரு மணி நேரத்தில் வாங்கிப்புடலாமே' என்றபடிக்கே கோகிலாவுக்கு ஓலை அனுப்பினோம் - டிசைன் பண்ணி அவசரமாய் அனுப்பப் சொல்லி ! அந்தப் பொண்ணும், நமது அவசரம் புரிந்தவராய் மின்னல் வேகத்தில் அனுப்பி வைக்க, மைதீனிடம் கொடுத்து டிஜிட்டல் பிரிண்ட் போட அனுப்பினால், மண்டையைச் சொரிந்தபடிக்கே திரும்பினான் - ""டிஜிட்டல் ஸ்டுடியோவில் செம ரஷில் பணிகள் ஓடி வந்ததன் பலனாய் அவர்களிடம் பிரிண்டுக்கான Toner Inks காலியாகிடுச்சாம் ; நாளை தான் பெங்களூரிலிருந்து வருமாம் !" என்றான் ! ஊருக்குள் டிஜிட்டல் பிரின்டர்ஸ் நிறையவே இருந்தாலும், நாம் செல்வது அவர்களுள் லேட்டஸ்ட்டான மிஷினை வைத்திருக்கும் நிறுவனத்துக்கே & அவர்கள் தரும் ரிஸல்ட்ஸ் செமையாய் இருக்கும் ! மற்றவர்களிடம் அந்தத் தரம் இருப்பதில்லை என்பதை அனுபவத்தில் பார்த்துள்ளோம் ! கையைப் பிசைந்தபடிக்கே நில்லாமல், இங்கும் அங்குமாய் விசாரித்துவிட்டு சிவகாசியின் புறநகரில் உள்ள இன்னொரு புதுவரவிடம் ஓடினோம் ! Wow - அவரும் ஒரு புத்தம்புது மிஷினை வைத்திருந்தார் and மாதிரிகளை போட்டுப் பார்த்தோம் - செம ஹேப்பி !
ரைட்டு...பிரிண்ட் போட்டு வாங்கி வந்தால் வேலை முடிந்தது என்றபடிக்கே ஆபீசுக்குத் திரும்பி 'ஆபரேஷன் ரவுண்டு பன்' ஆரம்பித்தோம் ! போனவாட்டியே மிஸ் ஆன ரவுண்டு பன்னை இம்முறையாச்சும் உள்ளே நுழைக்கணுமே - என்றபடிக்கு ஒரு பன்னை வாங்கியாந்து டப்பிக்குள் புக்ஸோடு வைத்து ஒட்டி விட்டு, மொத்து மொத்தென்று நாலுவாட்டி கீழே போட்டுப் பார்த்தேன் - 'கூரியர் டெஸ்டிங்..கூரியர் டெஸ்டிங்' என்றபடிக்கே ! அப்புறமாய் பாக்ஸைப் பிரித்து பன்னும், புக்ஸும் நலமா ? என்ற பரிசோதித்தோம் ! கிங்கரர்கள் போல புக்ஸ்சார் அனைவருமே திடமாய், தாட்டியமாய் இருக்க, ரஷ் அவரில் பஸ்சுக்குள் சிக்கிய ஓமக்குச்சி நரசிம்மன் போல பன் பிதுங்கிக் கிடந்தது ! பொட்டியைத் திறந்த நொடியில் இது கருவாடாட்டம் வெளிப்பட்டால் சுகப்படாதே என்றபடிக்கே பன்னுக்குப் பதிலாய் என்ன வைக்கலாம் ? என்ற அவசர ஆலோசனைக்குழு போட்டு ஆராய்ந்தோம் ! மிகச் சரியாக அந்நேரம் தான் நம்ம STV அன்போடு அனுப்பியிருந்த மெகா திருப்பதி லட்டு பார்சலும் கூரியரில் வந்து சேர, பெருமாளின் பிரசாதத்தை கொஞ்சமாய் வாயில் போட்டபடிக்கே - "பன்னுக்குப் பதிலாய் லட்டு !! போய் இருக்கிற லட்டுகளிலே ஒரு சேம்பிள் வாங்கிட்டு வா மைதீன் !" என்று தீர்மானித்தேன் ! சோட்டா பீம் லட்டு ; திருப்பதி லட்டு ; ஸ்பெஷல் லட்டு - என 3 கிரேடுகளில் லட்டுக்கள் ஆஜராயின & மறுக்கா நாசா விஞ்ஞானிகளைப் போல "டப்பி ஓபன்...புக்ஸ் + லட்டு பேக்கிங்...டப்பி க்ளோஸ்....டப்பி crash test " என்ற பரிசோதனைகளை செய்து பார்த்தோம் ! மூன்று லட்டுக்களும் பூந்தியாய் மட்டுமே வெளியேறின இந்தப் பரிசோதனையின் முடிவில் ! மனம் தளராது - பேப்பரில் பேக் செய்யப்பட்டிருக்கும் plum cake ஒன்றை வாங்கி வரச் சொல்லி உள்ளே நுழைத்துப் பார்த்தால், ஊஹூம்..அது உள்ளே நுழைந்த பாடையே காணோம் ! "பக்கி பசிக்குதுனு எதையாச்சும் வாங்கித் தின்னுறானா ? இல்லாங்காட்டி மெய்யாலுமே டெஸ்டு தான் பண்ணுறானா ?" என்ற சந்தேகம் மைதீனுக்கு எழுந்துவிடக்கூடும் என்பதால் மேற்கொண்டு மைசூர்பாகு ; சூஸ்பெரி ; ஜாங்கிரி போன்ற ஐட்டங்களை வாங்கி வரச்சொல்லும் யோசனைகளைக் கைவிட்டேன் ! "ஸ்வீட் எடு..கொண்டாடு...!" என்று மாமூலுக்குத் தீர்மானித்த கையோடு, எலி சைசில் அல்லாது, நார்மல் அளவிலான சாக்லெட்டை வாங்கிட்டு வாப்பா !" என்று பணம் கொடுத்து அனுப்பிவைத்தேன் ! Sorry guys ; இந்தவாட்டியும் பன் கதை - அல்வா கதையாகிப் போய் விட்டது ! But ரொம்பச் சீக்கிரமே காத்திருக்கும் நமது Online புத்தக விழாவினில் - எல்லா கொள்முதல்களுக்குமே ஒரு ரவுண்டு பன் நிச்சயமாய் அனுப்பிடப்படும் ! Thats a promise !! பன்னின்றிப் பிரதிகள் வாராது !!
கொடுக்கப்பட்டிருந்த பணிகள் அனைத்தையும் முடித்து விட்டு, what next ? என்ற கேள்வியோடு நம்மாட்கள் நிற்க - அதற்குள்ளாக அவர்களை கசரத்து வாங்க அடுத்த பணியோடு காத்திருந்தேன் ! நீரின்றி அமையாது உலகு ; ஸ்டிக்கரின்றி அமையாது புக்கு ! So 2 திருத்தங்கள் பண்ணிட அவசரம் அவசரமாய் ஓட்டமெடுத்தனர் ஸ்டிக்கர்களை பிரிண்ட் செய்து வாங்கி வர ! இப்போதெல்லாம் நம்மாட்கள் எதுக்குமே அசருவதில்லை தான் ; ஆந்தை மண்டையன் ஒவ்வொருவாட்டியும் ஏதாச்சும் கோக்கு மாக்காகப் பண்ணச் சொல்லிக் குடலை உருவாது இருக்கமாட்டான் என்பது அவர்களை பொறுத்தவரைக்கும் ஒரு given ! ஆரம்பித்த ஸ்டிக்கர் ஒட்டல்ஸ் இரவு ஒன்பது வரை தொடர்ந்தது ! Phew !! இதற்கு மேலும் பெண்டு நிமிர்த்திட வேண்டாமென்று 'இன்று போய் நாளை வாங்கோ !' என்று வழியனுப்பினேன் !
ரைட்டு...புக்ஸ் சரி பார்த்தாச்சு ; புக் மார்க்ஸ் ரெடி ; சாக்லெட்டும் ரெடி ; டப்பாக்களும் ரெடி - பேக்கிங் ஆரம்பிக்கலாமென்றால் - அழகுக்கு அழகேற்றும் போட்டோக்களுடனான அவரவரது புக்ஸ்களை அவரவரது சந்தா / முன்பதிவு நம்பர்களோடு tally செய்து சரியாய் அனுப்பிடும் படலம் காத்திருந்தது ! ஆசை ஆசையாய் புக்கைத் திறந்து, பிள்ளைகளிடம் அவர்களது போட்டோக்களைக் காட்டும் ஆர்வத்தோடு இருப்பவர்களுக்கு, வேறேதேனும் பூச்சாண்டி மாமாவின் போட்டோ வெளிப்பட்டால் மெய்யாலுமே சங்கடமாகிப் போய்விடுமல்லவா ? So சந்தாவில் இருப்போரில் போட்டோஸ் அனுப்பியோர் யார் ? ; போட்டோஸ் அனுப்பாதோர் யார் ? ; ஆன்லைனில் FFS முன்பதிவுகள் மட்டும் செய்து அவற்றுடன் போட்டோஸ் அனுப்பியிருப்போர் யார் ? ; அப்புறம் ஏஜெண்ட்களிடம் ஆர்டர் செய்து அவர்கள் வாயிலாய் போட்டோக்களை அனுப்பியிருப்போர் யார் ? - என ரகம் ரகமாய் பிரித்திட வேண்டியிருந்தது ! நம்மாட்கள் இன்றைக்கு காலையில் எட்டு மணிக்கெல்லாம் ஆஜராகி விட்டிருக்க, போட்டோஸ் sorting படலம் துவங்கியது ! And ஒன்பதரைக்கு ஆபீஸ் வந்து சேர்ந்த நேரம் முதலாய், தினுசு தினுசாய் அவ்வப்போது நான் சுட்டு வைக்கும் இது போலான இடியாப்பங்களை அவர்கள் கையாளும் நேர்த்தியை ரசித்துக் கொண்டிருக்கிறேன் ! சரிபார்த்துப், பார்த்து டப்பாக்களுக்குள் அவர்கள் புகுத்தும் புக்ஸ்களின் முதல்பக்கத்தினிலிருந்து அவ்வப்போது புன்னகைக்கும் உங்களின் போட்டோக்களை பார்க்கும் போது மெய்யாலுமே எனக்கே ஜிவ்வென்றிருந்தது ! Guys - இந்த இதழின் பாக்கி 311 பக்கங்களுமே உங்களுக்கு ரசிக்காது போனாலும் கூட, இதனில் நீங்கள் cherish செய்திட உருப்படியாயொரு காரணம் இருக்கவுள்ளது ; போட்டோக்கள் அனைத்துமே செம !!
So நடு நடுவே உங்களின் எண்ணற்ற போன்களுக்குப் பதில் சொல்லியபடிக்கே நடந்த தெறிக்கும் பேக்கிங் படலமானது ஒரு வழியாய் நிறைவுற்று, சந்தாக்கள் + FFS முன்பதிவுகள் முழுசும் கூரியர்களுக்குப் பயணமாகி விட்டன ! And நாளை காலை முதலாய் உங்கள் இல்லக் கதவுகளைத் தட்டிட FFS குடும்பம் தயாராகயிருக்கும் - - கூரியர் நண்பர்கள் மனசு வைக்கும் பட்சங்களில் ! உங்களின் உள்ளக் கதவுகளையுமே அவை தட்டிட வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனைகள் !! All Fingers Crossed !!
எது எப்படியோ - எனக்குள் ஒருவித PPD syndrome ! "இது என்னடா டேய் புதுக் கரடி என்கிறீர்களா ?" 10 மாசம் வயிற்றில் பிள்ளையைச் சுமந்து பயணிக்கும் தாய்க்கு, பிரசவத்துக்குப் பின்பாய் ஒரு வித மனச்சோர்வு ; ஒரு தற்காலிக வெறுமை தோணுமாம் ! அதனை PostPartum Depression என்கிறார்கள் ! நாம பிரசவத்தைக் கண்டோமா - வயிற்றில் சுமக்கும் அனுபவங்களைக் கண்டோமா - இந்த PPD-தனை உணர்ந்திருக்க ? நாம் வளர்க்கும் வயிறுகளெல்லாமே பரோட்டாக்களும், பிரியாணிகளும் தரும் உபயங்கள் தானே ? இருப்பினும், என்னால் இந்த நொடியில், அந்தத் தாய்களின் உணர்வுகளோடு சன்னமாய்...ரொம்பச் சன்னமாய் relate செய்திட முடிகிறது ! ஒரு பிரசவத்தின் பாதி அவகாசமே FFS எனும் இந்தக் கனவை நான் சுமந்து திரிந்திருப்பேன் ! And சுமந்து திரிந்த நாட்களின் ஒவ்வொன்றுமே ஏதோ ஒருவித நோவையோ, படபடப்பையோ கொண்டு வந்தவைகளே ! ஆனால் இன்று அந்தக் கனவைத் தரையிறக்கிய வேளையில், தாண்டி வந்துள்ள ஒவ்வொரு நாளுமே விலைமதிப்பற்றவைகளாகத் தென்படுகின்றன ! மாநிறமோ, ஆப்பிள் நிறமோ ; குட்டையோ, நெட்டையோ ; வத்தலோ , தொத்தலோ - அந்தக் கனவெனும் மழலை(களை) இறக்கி வைத்த நிம்மதியோடு ஒரு சன்னமான வெறுமையுமே உணர்கிறேன் !! தொடரும் நாட்களில் அந்த மழலை(கள்) ஓடியாடிடத் துவங்கிட்டால் - அந்த வெறுமையின் இடத்தில் சந்தோஷம் குடியேறும் என்பது நிச்சயம் ! புனித மனிடோ அருள் புரிவாராக நம் மழலை(கள்) மீது !!
Happy Reading all !! And Advance Wishes for a Wonderful 2022 !! தொடரும் நாட்களில் நமது FFS குடும்பத்துக்குமே கொஞ்சம் நேரம் ஒதுக்கிட முனையுங்களேன் - ப்ளீஸ் ?
And புத்தாண்டின் தினத்திலோ, அதன் மறுநாளான ஞாயிறிலோ சீனியர் எடிட்டருடன் அளவளாவ எண்ணிடும் பட்சத்தில் ஒரு ZOOM மீட்டிங்கையோ ; அது போல ஏதோவொன்றையோ ஏற்பாடு செய்திடலாம் ! ஆர்வமிருப்பின் சொல்லுங்களேன் - ஜூனியரைக் கொண்டு ரெடி பண்ணிடலாம் ! Bye all ....see you around soon !