நண்பர்களே,
வணக்கம். செம சுவாரஸ்யமானதொரு வாரத்தின் இறுதியில் “பதிவு நேரம்” புலர்ந்திருக்க- இதோ ஆஜராகி நிற்கிறேன்! போன ஞாயிறின் பதிவிற்கு உங்களின் ரகளையான 300+ பின்னூட்டங்களும் ; தொடர்ந்த தினத்தின் மினி பதிவிற்கும் உங்களிடமிருந்து பிரவாகமெடுத்துள்ள பலதரப்பட்ட எண்ணச் சிதறல்களும் ஒரு பக்கமெனில்; “என் பெயர் டைகர்” தொடர்பாய் ஏராளமான பாராட்டுக்கள்; ஆலோசனைகள்; அறிவுரைகள்; ஆதங்கங்கள் என நமது மெயில் பாக்ஸ் நிரம்பிக் கிடந்தது! பற்றாக்குறைக்கு ABSOLUTE CLASSICS தொடர்பாய் ஏகமாய் கதைத் தேர்வுகள்; உற்சாக வரவேற்புகள்; ‘இது ஏன் இப்படி?‘ ‘அது ஏன் அப்படி?‘ ரீதியிலான கேள்விகள் என்று ஒரு கத்தை ஈ-மெயில்களும் கூட!! இன்னொரு பக்கமோ - சென்னைப் புத்தக விழாவினில் நமது இதழ்களை முதன் முறையாய் பார்க்க நேரிட்ட (புது) வாசகர்களும் சரி; ஹிந்து; பிசினஸ்லைன்; இன்டியன் எக்ஸ்பிரஸ்; தினமலர் நாளிதழ்களின் கவரேஜ் புண்ணியத்தில் தகவல் அறியப்பெற்ற வாசகர்களும் - ‘மாயாவி புல் செட் இருக்குதா?‘; ‘நாடோடி ரெமி உள்ளதா?‘ என்ற பாணியில் கணைகளைத் தொடுத்திருக்க- அத்தனை பேருக்கும் பதில் போட முனைவதற்குள்ளேயே இந்த வாரம் ஓடியே போய்விட்டது! இந்தக் களேபரங்களுக்கு மத்தியில் 2 x அரை கிலோ மைசூர்பாகுகள் மறந்தே போயிருக்க- ஒரு வழியாய் இன்றைய கூரியரில் அவற்றை அனுப்பியுள்ளோம்! திங்கள் காலையில் ஈரோட்டிலும்; சேலத்திலும் ‘அவுக் அவுக் அவுக்‘ என்ற ஓசை எழும் பட்சத்தில் அது நிச்சயம் 'டுரா முரா 'பூச்சியின் கைவண்ணமாக இராது என்று சொல்ல முடியும்!
ஊருக்குத் திரும்பிய கையோடு மற்ற வேலைகள் என்னை பிசியாக்கி வைத்திட- ஒரே வாரத்திற்குள் டைப்செட்டிங் பணிகள் முடிந்த நிலையில் ஜுலை மாதத்தின் சகல கதைகளும் என் மேஜையில் படையெடுத்து நிற்பதைப் பார்க்க முடிந்தது ! பற்றாக்குறைக்கு “ஈரோட்டில் இத்தாலி” இதழின் எல்லாக் கதைகளும் ரெடி எனும் போது அடுத்த ஒரு வாரத்திற்கு அல்லும், பகலும்- பெல்ஜிய நாயகர்களோடும்; இத்தாலிய ஸ்டார்களோடும் தான் குப்பை கொட்டியாக வேண்டும்! ‘ஹை ஜாலி...!‘ என்று மனதின் ஒரு பக்கம் சந்தோஷம் ஊற்றடித்தாலும், காத்திருக்கும் பணிகளின் விஸ்தீரணம் அந்த ஆந்தை விழிகளை இன்னமும் அகலமாய் விரியச் செய்கின்றன!
மேஜையில் குவிந்து கிடக்கும் கதைகளின் தாயகங்களில் தான் இந்த வாரத்தின் பாதியையும் கழிக்க நேரிட்டது என்பது ஒரு ஆச்சர்யமான coincidence என்பேன் ! ஞாயிற்றுக்கிழமைகளைப் பெரும்பாலும் ஊர் திரும்பும் பயணத்திற்கே செலவிடுவது வாடிக்கை! ஆனால் இந்த முறையோ வாரயிறுதியை இத்தாலியிலேயே நீட்டிக்க வேண்டிய சூழல் என்பதால் சென்ற சனிக்கிழமை இரவைப் பதிவினில் செலவிட்டு விட்டு, ஞாயிறு பகலில் என்ன செய்வதென்று யோசிக்கத் தொடங்கினேன். ஊரைச் சுற்றிப் பார்க்கும் வயதுகளையெல்லாம் தாண்டி ஒரு மாமாங்கம் ஆகிப் போய் விட்ட நிலையில்- நமக்குத் தான் இருக்கவே இருக்கிறதே காமிக்ஸ் உலகம்! மிலான் நகரில் திரும்பிய பக்கமெல்லாம் காமிக்ஸ் இதழ்கள் குவிந்து கிடப்பது ஒரு பக்கமிருக்க- எனக்குத் தெரிந்த இரு பழைய காமிக்ஸ் கடைகளும் உண்டு! நேரம் கிடைத்தால் அங்கே போய் ‘ஆ‘ வென்று வாய் பார்ப்பது எனது பொழுதுபோக்கு! ஆனால் இம்முறையோ அங்கே போவதற்குப் பதிலாக- ஒரு காமிக்ஸ் நூலகத்திற்கு விசிட் அடிப்பதென்று தீர்மானம் செய்தேன்.
சாவகாசமாய் மதியமாய் அந்த இடத்தைத் தேடிப் பிடித்து உள்ளே நுழைந்த மறுகணமே எதிர்பட்டவர்கள் இத்தாலியின் ஆதர்ஷப் புருஷர்களான டேஞ்சர் டயபாலிக்கும், நமது இரவுக் கழுகாருமே! டெக்ஸின் பெரிய சைஸ் ஒரிஜினல் சித்திரங்கள் சுவற்றில் தொங்கியிருப்பதைப் பார்த்தபோதே அந்த இடத்தோடு ரொம்பவே அன்னியோன்யம் ஆகி விட்டது போலொரு உணர்வு எனக்குள்! சின்னச் சின்ன அலமாரிகளில் சூப்பர்மேன்; பேட்மேன்; ஸ்பைடர் மேன் பொம்மைகள்; கொஞ்சம் டி-ஷர்ட்கள் என விற்பனை சமாச்சாரங்கள் முன்னறையில் இருக்க, உள்ளே சென்றாலோ ஒரு நீ-ள-மா-ன ஹாலின் மத்தியில் நிறைய மேஜைகளும் நாற்காலிகளும்! சுவரோரமாய் இருந்த புத்தக ஷெல்ப்களில் வரிசை வரிசையாய் காமிக்ஸ் அடுக்குகள்! வேண்டியதை எடுத்துக் கொண்டு அங்கேயே அமர்ந்து சாவகாசமாய் அத்தனையையும் படித்துக் கொள்ளலாம்- கட்டணங்கள் ஏதுமின்றி! குட்டிப் பசங்கள் கொஞ்சப் பேர் இத்தாலிய டிஸ்னி கதைகளுக்குள் லயித்துக் கிடக்க; இளைஞர்கள் நிறையப் பேர் விதவிதமான போஸ்களில் காமிக்ஸ் இதழ்களோடு மேஜை மீது சாய்ந்து கிடந்ததைப் பார்க்கவே உற்சாகமாக இருந்தது!
ஹாலின் இடதுபுறமொ சின்னதொரு அரங்கு போல்- ஒரு சின்ன மேடையுடன் ஒரு அறை! ஏதேனும் காமிக்ஸ் வெளியீட்டு விழா; ஆசிரியர் / ஓவியர் சந்திப்பெனில் அங்கே அரங்கேறிடும் போலும்! அவற்றை அலங்கரித்து நின்ற போட்டோக்களைப் பார்த்த போது தான் சென்றாண்டின் ‘டெக்ஸ் கிராபிக் நாவல் காமிக்ஸ்‘ முதல் இதழின் வெளியீடு நடைபெற்றது கூட இந்த குட்டியரங்கில் தான் என்பது புரிந்தது! அண்ணாந்து பார்த்தால் நமது XIII; தளபதி டைகர் என்று பிரான்கோ-பெல்ஜிய popular நாயகர்களின் நீளமான banner-களும்!
ஓரம் சாரங்களில் சூப்பர்மேன்; டெக்ஸ்; டயபாலிக் ஆகியோரின் கட்அவுட்கள் கம்பீரமாய் நிற்க- ஆளாளுக்கு அவர்களோடு நின்று செல்ஃபிக்கள் சுட்டுத் தள்ளிக் கொண்டிருந்தனர்! ‘அட... நாம் ஏன் விடுவானேன்?‘ என்று நானும் அந்த புண்ணியத்தை சேர்த்துக் கொண்டேன்! மறுவாரம் ஸ்மார்ட் ஃபோன்களுக்கென ஒரு டயபாலிக் app இந்த அரங்கில் வெளியிடப்பட இருந்ததால்- நமது கறுப்புடுப்பு நாயகர் கொஞ்சம் கூடுதல் தேஜஸோடு முறைத்துக் கொண்டிருந்தார்!
எல்லாச் சம்பிரதாயங்களையும் முடித்துக் கொண்டான பின்னே, புத்தக அலமாரிகளில் குவிந்து கிடந்த பிரதிகள் பக்கமாய் கவனத்தைத் திருப்பிட- அதன் நாயகர்களில் பலர் நமக்குப் பங்காளிகளாகவும், தோஸ்துகளாகவும் காட்சி தந்தனர்! மர்ம மனிதன் மார்ட்டின்; ஜுலியா; CID ராபின்; டெக்ஸ்; டயபாலிக்; டைலன் டாக்; மேஜிக் விண்ட் என்று நம் அணிவகுப்பின் பிரதான முகங்கள் சகலமும் அங்கே வண்டி வண்டியாய்க் குவிந்து கிடந்தன!
‘வாய்ப்பை விட்டுடாதேடா கைப்புள்ளே‘ என்ற சத்தம் தலைக்குள் உரக்க ஒலிக்க, ஒரு லோடு டெக்ஸ் பிரதிகளைக் கீழறக்கி மேஜையில் அடுக்கிவிட்டு வேக வேகமாய் அவற்றைப் புரட்டத் தொடங்கினேன்! என்னதான் இன்டர்நெட்டில் ஆராய்ச்சிகள் சாத்தியமெனினும் ஒரு புத்தகத்தைப் பரபரவென்று புரட்டி, அதனை ரசித்து ; கதை பற்றியொரு அனுமானத்தை உருவாக்கிடும் அனுபவத்தின் சுலபத்தன்மையும் ; சுவாரஸ்யமுமே தனி என்பதால் கிடைத்த இந்த அழகான அவகாசத்தை வீணடிக்க மனது கேட்கவில்லை! அதிலும் டெக்ஸின் 1-200 கதைகள் மொத்தமாய் அங்கே வீற்றிருக்க- இந்தத் தொடரின் டாப் கதைகளே அவைதான் எனும் பொழுது - அவற்றைப் பரிசீலிக்கும் வாய்ப்பு ரொம்பவே ஸ்பெஷல் என்று தோன்றியது ! TEX கதைகள் எப்போதுமே ஒரு சீராய் ஆரம்பித்து ; ஒரு சீராய் முடியும் ரகங்கள் கிடையாது ; இதில் ஆரம்பித்து, அதில் பயணித்து, வேறு எதிலோ நிறைவுறுவதே டெக்ஸின் கதை பாணிகள்! So ஒரு கதையின் தலை எங்குள்ளது? வால் எங்குள்ளது? என்ற ஆராய்ச்சியிலேயே தலைமுடி கார்சனின் பாணிக்கு மாறிப் போவது வாடிக்கை. ஆனால் இம்முறையோ அவசரம் ஏதுமின்றி; வசதியாய் ஆராய்ச்சி செய்திட அந்த ஞாயிறு பின்மதியப் பொழுது அமைந்து போக நிதானமாய் பணிக்குள் மூழ்கினேன். தற்போதைய டெக்ஸ் தொடரினில் 12 வெவ்வேறு ஓவியர்கள் பணியாற்றி வருவதால் ஓவிய பாணிகளில் ஏராளமாய் வேறுபாடுகள் தெரிவது கண்கூடு! அந்நாட்களில் ஒன்றோ இரண்டோ ஓவியர்கள் தான் செயல்பட்டிருப்பார்கள் என்பதால் பெரியளவில் திகட்டல் இராது என்று நம்பிக் கிடந்த எனக்கு அன்றைக்கு சின்னதொரு பாடம் படிக்க முடிந்தது! (துவக்க) ஓவியர் காலெப் நீங்கலாக அன்றைக்கு கூட ஏராளமானவர்கள் சித்திரங்கள் போட்டுள்ளதை- இதழ்களைப் புரட்டப் புரட்டத் தெரிந்து கொண்டேன்! So சற்றே மொக்கையான சித்திரங்கள் கொண்ட கதைகளை ‘டப்‘பென்று ஓரம்கட்டிவிட்டு பாக்கி இதழ்களைப் பேன் பார்க்கத் தொடங்கினேன்! நேரம் ஓடியதே தெரியவில்லை - எனது டயரியில், கதைகளின் பெயர்கள்; பக்க எண்ணிக்கைகள்; வெளியீட்டு நம்பர்கள் என்று நிரப்பிக் கொண்டே போனதில்! ஆறு மணி சுமாருக்கு நிமிர்ந்த பொழுது கிட்டத்தட்ட 22 கதைகளின் விபரங்கள் என்னிடம் தயாராகி இருந்தன! அடுத்த சில வருஷங்களுக்குத் ‘தல‘யின் கச்சேரிகளுக்கு நம்மிடம் ராகங்கள் ஏகமாய் ரெடி என்ற சந்தோஷத்தில் ஜுலியா; மார்டின்; டயபாலிக் பக்கமாகவும் கொஞ்சம் நேரம் செலவிட்டேன்! ஆனால் இவர்களது கதைகளின் பெரும்பான்மை one-shots; சீரான ஆரம்பமும், முடிவும் கொண்டவை என்பதால் ‘டெக்ஸ் ஆராய்ச்சி‘க்கு நிகராய் இவற்றில் மெனக்கெட அவசியமிருப்பதில்லை! Moreover இவர்கள் எல்லோருமே ஆண்டுக்கு ஒன்றோ இரண்டோ slot-களை மாத்திரமே தமதாக்கும் ஸ்டார்கள் என்பதால் புத்தகங்களை தூக்கி ஷெல்பில் அடுக்கி விட்டு நடையைக் கட்டத் தயாரானேன்!
வாசலுக்கருகே இருந்த வரிசையில் ஒரு டெரர் ராப்பருடன் டேஞ்சர் டயபாலிக் என்னை உற்றுப் பார்த்து நிற்க- அந்தப் பிரதியில் மட்டும் ஒன்றை வாங்கினேன். இத்தாலிய இதழை வாங்குபவனுக்கு மொழி நிச்சயம் தெரிந்திருக்கும் என்ற நினைப்பில் கல்லாவிலிருந்த கேஷியர் என்னிடம் ஆர்வமாய் தஸ்-புஸ்சென்று ஏதோ சொன்னார்! ‘ஹி...ஹி... only english!‘ என்று நான் அசடு வழிய - பக்கத்திலிருந்த இளம் பெண், அடுத்த வாரம் அங்கே நிகழவிருக்கும் Diabolik interactive app வெளியீட்டு விழாவுக்கான குட்டி இன்விடேஷன் அட்டையை என்னிடம் தந்து விட்டு- ‘டயபாலிக் ரசிகரெனில் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்!‘ என்றார்! பூம்-பூம் மாடு போல தலையாட்டி நின்ற போதே- ‘Diabolik- for your collection?’ என்று கேட்டார்! ‘Yes and no...! டயபாலிக் எங்கள் ஊரில் தமிழ் பேசுவதுண்டு; நாங்கள் அவரது கதைகளை வெளியிட்டுள்ளோம்!‘ என்று சொன்ன மறுநொடி அந்தப் பெண்ணின் முகத்தில் அப்படியொரு பரபரப்பு ; ஆனந்தம்! பக்கத்திலிருந்த கேஷயரிடமும், சகப் பணிப்பெண்களிடமும் ‘சிக்கி-முக்கி‘ என்று வேக வேகமாய்த் தகவலைப் பரிமாற- ooh... ooh... என்று அவர்களது உதடுகள் வியப்பில் விரிந்தன! எங்கள் ஊரில் இவரைக் கழுவிக் கழுவி காக்காய்க்கு ஊற்றுவதும் நடைமுறையே என்று சொல்லியிருந்தால் அந்த உதடுகள் வேறு விதமாய் உருமாற்றம் பெற்றிருக்கக் கூடும் என்பதால் சாலைக்குச் சென்று பஸ்ஸைப் பிடிக்க விடைபெற்றுப் புறப்பட்டேன்! ரூமுக்குத் திரும்பும் போது- ஞாயிறை உருப்படியாய் பிரயோஜனப்படுத்திய திருப்தி என்னை நிரப்பியிருந்தது!
மறுநாள் மற்ற வேலைகள் மாமூலாய் துவங்கிட, செவ்வாயன்று ஊர் திரும்புவதாய் புரோக்ராம்! ஆனால்- ‘ஆனது ஆச்சு; இன்னுமொரு அரை நாள் மெனக்கெட்டால் படைப்பாளிகளை பெல்ஜியத்தில் சந்தித்து விடலாமே!‘ என்ற சபலம் சப்புக்கொட்டச் செய்ய- ஏதாவது புட்போர்ட் அடிக்க வாய்ப்புள்ளதா என்ற இறுதிக்கட்ட விமானக் கட்டணங்களை நோட்டமிட்டேன்! என் யோகத்திற்கு 3000 ரூபாய் சுமாருக்கெல்லாம் அதிகாலை விமானத்தில் டிக்கெட்டிருக்க- யோசிக்காமல் மூட்டையைக் கட்டினேன். அங்கே பெல்ஜியத்தில் மூன்றே மணி நேரம் தான் நேரமிருக்கும் என்றாலும்- அதற்குள் ஆனமட்டும் முயற்சித்துப் பார்க்கலாம் என்று அவசரம் அவசரமாய் ஒரு அப்பாய்ண்ட்மென்ட் கேட்டு வைத்தேன். பாரிசிலும் சரி, ப்ரஸ்ஸல்ஸிலும் சரி- ‘வாம்மா மின்னல்!‘ பாணியில் படைப்பாளிகளின் அலுவலகத்தில் திடுதிடுமென்று குதிப்பது எப்போதுமே என் வாடிக்கை என்பதால் அவர்கள் புன்னகையோடு ஓ.கே. சொன்னார்கள்! So ‘தம்‘ கட்டிக் கொண்டு ஒரே ஓட்டமாய் அவர்கள் முன்னே ஆஜரானேன் புதன் காலையில்!
மலையெனக் குவிந்து கிடக்கும் ஆல்பம்கள்; வேற்று மொழிகளில் பதிப்புகள்; புது வரவுகள்; பழம் நினைவுகள் என படைப்பாளிகளின் அலுவலகங்கள் எப்போதுமே என் மூச்சைத் துரிதமாக்கும் சமாச்சாரங்களோடு நிறைந்து கிடப்பது வழக்கம்! இம்முறையும் அதற்கு விதிவிலக்கல்ல தான்! வெண்கலக் கடையில் எதுவோ நுழைந்தது போல- பர பரவென்று இங்கும் அங்குமாய் முட்டைக் கண்களைச் சுழல விட்டுக் கொண்டே முடித்த மட்டிற்கும் உள்வாங்க முயற்சித்தேன்! சீன மொழியில் சமீபமாய் லக்கி லூக் இதழ்கள் வெளிவரயிருப்பதாகப் போன தடவையே சொன்னார்கள்! லக்கியும், டால்டனும், ஜாலி ஜம்பரும் ஜாக்கி சான் பாஷை பேசுவதைப் பார்க்க அட்டகாசமாகயிருந்தது! இன்னொரு பக்கமோ லக்கியின் 70-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் பொருட்டு பிரெஞ்சிலும், ஜெர்மன் பாஷையிலும் வெளியாகியிருந்த ராட்சஸ சைஸிலான ஆல்பங்களைப் பார்க்க முடிந்தது! கலரிலும் சரி; black & white லும் சரி- புது பாணியிலான லக்கி சும்மா தக தகத்தார்! மெய்யாகவே b&w-ல் இந்த சாகஸம் செமையாகத் தோற்றம் தருகிறது! "விற்பனை எவ்விதமுள்ளது- லக்கியின் இந்தப் புதுப்பாணிக்கு?!" என்று கேட்டு வைத்தேன்! முகம் நிறையப் புன்முறுவலோடு- ‘ஏப்ரலிலிருந்து இதுவரைக்கும் 6 முறைகள் மறுபதிப்பு செய்து விட்டோம்!‘ என்ற போது பொறாமையாய் இருந்தது அவர்கள் தேசத்துக் காமிக்ஸ் காதலைப் பார்த்து!
இன்னொரு பக்கம் நமது ஞாபக மறதிக்கார நண்பரின் புது ஆல்பம் ரிலீஸ் தொடர்பாய் போஸ்டர்கள்; கட் அவுட்கள் நின்றன- XIII என்ற முத்திரையைப் பெரிதாகத் தாங்கிக் கொண்டு! ‘இந்தச் சுற்று இப்போதைக்கு ஓவர்.... அடுத்து எப்போது?‘ என்று கேட்டேன்! ‘For sure...!’ என்று மட்டும் பதில் சொன்னார்கள்! எப்போது? யார் கதாசிரியர் / ஓவியர் என்பதெல்லாம் தீர்மானமாகவில்லை ; ஆனால் உடனடியாக இல்லாவிட்டாலும்- அடுத்த ஓரிரு ஆண்டுகளுக்குள் “படலம் தொடரும்!” என்ற சேதி கேட்ட போது கலவையான உணர்வுகள் எனக்குள்!! And 2017-ன் நடுவினில் XIII மர்மம் தொடரினில் அடுத்த spin-off ஆல்பம் தயாராகிடுமாம்! அதன் நாயகரோ- கால்வின் வாக்ஸ்! மொத்தம் 13 spin-off ஆல்பங்கள் என்பது தான் இதனின் திட்டமிடல்! “கால்வின் வாக்ஸ்” நம்பர் 10 என்பதால் இதன் பின்னே மேற்கொண்டு 3 spin-offs வந்திடுமாம்! இது வரையிலான டாப் விற்பனைகள்- மங்கூஸ்; பெட்டி பார்னோவ்ஸ்கி & கர்னல் ஆமோஸ் என்றார்கள்! இப்போது வெளியாகியுள்ள XIII-ன் இறதி ஆல்பத்தில் அரை மில்லியன் பிரதிகள் (500,000) அச்சிட்டுள்ளனராம்! காது வழியாகப் புகை வராத குறைச்சல் தான் எனக்கு!
‘புதிதாய் Sci-fi ரகக் கதைகளை முயற்சித்துப் பார்க்கலாமே? என்று சிலபல புது ஆல்பம்களை என் முன்னே நீட்டிய போது ‘சந்தா X-Y-Z’ என்று என்னென்னவோ எண்ணங்கள் எனக்குள் கபடி ஆடத் தொடங்கின! ‘இதை வாங்கிடுவோமா?; ‘அதற்குக் கான்டிராக்ட் போட்டு விடுவோமா?‘ என்று ஆசை பொங்கியெழுந்தாலும்- மண்டையில் என்னை நானே நாலு தட்டு தட்டிக் கொண்டு நிதானம் கொள்ள முயற்சித்தேன்! மாதிரிகளைக் கொண்டு செல்கிறேன்; நிச்சயம் யோசிப்பேன்!‘ என்று சொல்லி வைத்தேன்! புதிதாய் வெளியாகிடவுள்ள சில கிராபிக் நாவல்களின் அட்வான்ஸ் பிரதிகளைக் காட்டிய போது அந்த சித்தரத் தரங்களைப் பார்த்து ஸ்தம்பித்தே போனேன்! ரொம்ப dark ஆனதொரு கதைக்களம் என்று மேலோட்டமாய் அவர்கள் விவரித்ததைக் கேட்ட போது என் நாடித்துடிப்பு எகிறத் தொடங்கியிருந்தது! ‘ஆண்டவா.... இவற்றையெல்லாம் தமிழுக்குக் கொண்டு செல்ல ஒரு வாய்ப்புக் கிட்டினால் இந்த ஜென்மத்துக்கு ஒரு சிறு அர்த்தம் கிட்டிடுமே! என்ற தவிப்பு! கொஞ்சமே கொஞ்சமாய் பரிசோதனைகளுக்கென ஒரு களமும், காலமும் புலர்ந்திட்டால் என்னென்னவோ சாத்தியமாகிடும் folks! இவை எல்லாமே நம் மாமூலான அளவுகோல்களில் 100/100 வாங்கக் கூடிய படைப்புகளாக இராது போகலாம் தான்; ‘பொழுது போக்கு‘ என்ற ரீதியில் நாம் பரிச்சயம் கண்டிருக்கும் பாணிகளில் இவை அடங்கிடும் வாய்ப்புகள் சொற்பமே! ஆனால் காமிக்ஸ் படைப்புலகின் உச்சபட்ச சில கற்பனைகளின் வளங்களை தரிசித்த ஆத்மதிருப்தி நமதாகலாம்! என்றேனும் இந்த வளங்களையும் வாஞ்சையோடு அரவணைக்க நாம் அனைவருமே, சந்தோஷமாய் தயாராகும் நாள் விடியுமென்ற நம்பிக்கையோடு அந்த மாதிரிகளை அவர்களிடம் திரும்பத் தந்தேன்!
சரி... நாளைய திட்டமிடல்கள் ஒருபக்கமிருக்க, தற்போதைய பசிக்கு என்ன பதில்? என்று வழக்கம் போல கௌ-பாய்; டிடெக்டிவ் என்ற தேடல்களை தொடர்ந்தேன்! பிரமிக்கச் செய்யும் ஓவியத் தரத்துடன் இரு வித்தியாசமான கௌ-பாய் தொடர்கள் கண்ணில் பட்டன! ஏற்கனவே அவற்றுள் ஒரு தொடர் பற்றிய ஆராய்ச்சியோடே நான் தயாராக இருந்ததால்- அதனை ‘பட்‘டென்று ‘டிக்‘ அடித்து விட்டேன்! அந்தக் “குதிரைக்காரர்” 2017-ன் highlight ஆக இருந்திடுவார்! டிடெக்டிவ் தொடர்கள்... ஆக்ஷன் தொடர்கள் பற்றிய பேச்சிலிருந்த பொழுது- வேய்ன் ஷெல்டன் மேற்கொண்டும் தொடரக் கூடுமென்று அவர்கள் சொன்ன போது ‘அட்ரா சக்கை... அட்ரா சக்கை‘ என்று உள்ளுக்குள் துள்ளியது! இந்தா- அந்தாவென்று அவர்களது நேரத்தில் 120 நிமிடங்களை ஸ்வாஹா செய்திருந்தேன் அந்நேரத்திற்குள்! புறப்படத் தயாரான சமயம்; என் கையிலிருந்த ஒரு வண்டி ஆல்பம்களைச் சுமந்து செல்ல ஒரு சிகப்புத் துணிப்பையைத் தந்தார்கள்- லக்கியின் படத்தோடு! ஸ்டைலாக அதனுள் இதழ்களைத் திணித்துக் கொண்டு விடைபெற்ற பேது- புஜங்கள் சுகமாய் கனத்தன! நான் சென்றிருந்த முக்கியப் பணி 50-50 என்ற நிலையில் ஊசலாடிக் கொண்டிருப்பினும், சைக்கிள் கேப்பில் சிக்கிய காமிக்ஸ் ஆராய்ச்சிப் பொழுதுகள் என்னை நிறைவாக உணரச் செய்து கொண்டிருந்தன !
வியாழன் மதியம் சென்னை திரும்பிய போது வெயிலும், மாமூலான பணிகளும், வரவேற்று நின்றன! ஊரில் ஒரு மூட்டைக் கதைகள் - அடுத்த கட்ட எடிட்டிங்கை எதிர்நோக்கிக் காத்துக் கிடக்கின்றன என்று மைதீன் தகவல் சொன்ன போது கண்ணில் பூச்சி பறப்பது போல் தோன்றியது !
அதன் மத்தியிலோ- பதிவிலும், நமது மெயில் பாக்ஸிலும் சென்னை உஷ்ணத்துடனான எண்ணச் சிதறல்கள் சில பல! ‘இது Absolute Classics–ஆ?‘; ‘இதை எப்படித் தேர்வு செய்யப் போச்சு?‘; ‘அதை தேர்வு செய்யாதது ஏனோ?‘; ‘இந்த விலை சரிதானா?‘; "அது க்ரே மார்க்கெட்...இது புல்லு மார்க்கெட் !" ‘இதற்கு hard cover கேட்டோமா?‘; ‘விற்பனையாளர்களிடம் பேசி நிறைய விற்பனை செய்ய வழி பார்க்கலாமே?‘ ’80,000 பிரதிகள் விற்றவர்களாச்சே நீங்கள் (????? எந்த நூற்றாண்டில் ???) "கூடுதலாய் அச்சிட்டு... பலரையும் சென்றடைய வழிபார்க்க வேண்டாமா?‘ என்ற ரீதியில் ஆதங்கங்கள்; அர்ச்சனைகள்; அறிவுரைகள்! ‘பதில் போட மாட்டீர்கள் என்று தெரியும்- ஆனால் நான் எழுதாமல் இருக்க மாட்டேன்!‘; ‘இதை நினைத்தால் பயமாக உள்ளது- அதைப் பார்த்தால் பீதியாக உள்ளது‘ என்ற மெயில்கள் இன்னொரு பக்கம்! திங்கள் மாலைக்குப் பின்பாக கம்ப்யூட்டர் பக்கமே வர இயலாது தெருத் தெருவாய் சுற்றிக் கொண்டிருப்பவனுக்கு ஒருசேர இந்த மின்னஞ்சல் மழையைப் பார்த்த போது எழுந்த முதல் சிந்தனையே- ‘இன்னும் எத்தனை மாமாங்கங்கள் கழிந்தாலுமே இந்த நித்திய விசாரணை- நிரந்தரக் குற்றவாளி' syndrome-லிருந்து எனக்கு விடுதலையிராது போலும் என்பது தான்! புதிதாய் ஒன்றை முயற்சிக்கும் முன்பாக அதன் சாதக பாதகங்களை எங்களது பார்வையில் அலசிவிட்டே களமிறங்குகிறோம்! நம்மிடமுள்ள பணத்திற்குள்; ஆற்றல்களுக்குள் இயன்ற உச்சத்தைத் தொட்டுப் பார்க்க ஒவ்வொரு நாளும் முயற்சித்து வருகிறோம்! நம் பயணப் பாதையில் ஒளிவுமறைவுகள் வேண்டாமே என்பதால் இயன்றவரைக்கும் நம்மைச் சுற்றிய சூழல்களை; நிகழ்வுகளை பகிர்ந்திடுவதில் நான் தயங்குவதில்லை! ஆனால் தத்தம் பார்வைக் கோணங்களில் சரியெனப்படும் தேர்வுகளோ- தீர்மானங்களோ எடுக்க என்னால் இயலாது போகும் மறுநொடியில் விரோதப் பார்வைகளும், பரிகாசங்களும், எள்ளல்களும் ரவுண்ட் கட்டத் தொடங்கி விடுகின்றன! ABSOLUTE CLASSICS சமாச்சாரத்தில் நிகழ்வதும் அதுவே !
விமர்சனங்களோ, மாற்றுக் கருத்துக்களின் உஷ்ணமோ நமக்குப் புதிதல்ல ! சொல்லப் போனால் கடந்த 4+ ஆண்டுகளில்,இங்கும், வேறெங்கிலுமோ "காமிக்ஸ் நேசம்" + "காமிக்ஸ் மீதான அக்கறை" என்ற முகாந்திரங்களில் நண்பர்களிடம் நான் வாங்கியுள்ள சாத்துக்கள் + ஏச்சுக்களை ஒரு பட்டியலிட்டால் அது NBS-ஐ விடக் கனமானதொரு புத்தகமாகி விடும் ! ஆனால் ஒவ்வொரு முறையும் அவற்றைத் தாண்டிச் செல்லும் வலிமையை எனக்கு நல்குவது இன்னமும் ஒவ்வொரு இதழினிலும் பணியாற்றும் பொழுதும் கிடைக்கும் அந்த உற்சாகமும், உத்வேகமுமே ! ஆனால் "என் எண்ணத்தோடு ஏற்பில்லை - so நிச்சயம் நீயொரு உதவாக்கரையே !" என்ற மேக்கி நூடுல்ஸ் ரகத் தீர்ப்புகளும், உடனடிக் கண்சிவத்தல்களும் ஒரு கட்டத்துக்கு மேல் அயர்ச்சியையே ஏற்படுத்துகின்றன ! உங்களில் பலருக்கும் ஏதோவொரு சிறு விதத்தில் நானொரு முகம் பார்க்கும் ஞாயிறுக் கண்ணாடி என்பதால் - எனது சங்கடங்களையும், இயலாமைகளையும் அவ்வளவாய் வெளிக்காட்டிக் கொள்வதில்லை ! தலைமேல் பாறாங்கல்லே கிடக்கும் வேளைகளில் கூட அதனை சுமையாய் கருதிட அவகாசம் எடுத்துக் கொண்டதில்லை ! உங்கள் ரசனைகளே எனது ரசனை - and vice versa தான் நிஜமென்ற கற்பனையில் நாட்களைத் தள்ளிக் கொண்டு வந்துள்ளேன் ! ஆனால் இதுபோன்ற ஒவ்வொரு தருணத்திலும், ரசனைகளில் நாம் எல்லா வேளைகளிலும் ஒரே பக்கத்தில் இல்லை என்பது புரிகிறது ! நிச்சயமாய் ஆளுக்கொரு ரசனை / தேர்வு / விருப்பம் இருக்கலாம் - தவறில்லை தான் ; ஆனால் எனது தேர்வுக்குப் பின்னே ஒரு மெய்யான காரணம் இருக்கக்கூடுமென்ற சிந்தனைக்கு ஒரே ஒரு நொடி ஒதுக்கும் பொறுமை நம்மில் பலருக்கும் இருப்பதில்லையே ?
லக்கி லூக்கின் இதழுக்கென "ஒரு கோச் வண்டியின் கதை" யினை நான் தேர்வு செய்ததற்கான முழுக் காரணத்தை இதழ் வெளியாகும் தருணம் புரிந்து கொள்வீர்கள் என்பது திண்ணம் ; ஆனால் அதன் பொருட்டு இன்று எனக்கு நல்கப்படும் "முதல் மரியாதைகளை" சமன் செய்திட பின்னோக்கிச் சென்றிடும் கால இயந்திரங்கள் ஏதேனும் இருக்குமா - தெரியவில்லையே ! And "ஜெஸ்ஸி ஜேம்ஸ் " உங்களின் பெரும்பான்மையின் தேர்வே ! இதில் நான்உடனடி வில்லனாகிப் போவதன் வழிவகைகள் என்னவோ - சிந்திக்கிறேன் ! கருத்துச் சுதந்திரம் உண்டு தான் ; உங்கள் காமிக்ஸ் நேசத்தை யாரும் குறைவாய் மதிப்பிடப் போவதுமில்லை தான் ! ஆனால் அவையே என் தொழிலில் எந்தப் பொருளை - எவ்வளவு ;தயாரிப்பது ? எவ்விதம் - யாருக்கு விற்பனை செய்வது ? ; என்ன விலை நிர்ணயம் செய்வது ? என்பதில் எனக்கிருக்க வேண்டிய உரிமைக்குள் ஊடுருவும் பட்சத்திலும் நான் அமைதியாய் தலையாட்ட வேண்டுமென எதிர்பார்த்தல் நியாயம் தானா ?
- நானாய்த் தீர்மானம் செய்தால் - நானொரு சர்வாதிகாரி ; திமிர் பிடித்தவன் !
- தீர்மானத்தை வாசகர்களிடமே விட்டால் நானொரு பூம்-பூம் மாடு ; தலையாட்டிப் பொம்மை !!
- உங்களுக்குப் பிடிக்கா தீர்மானம் அமலாகிட்டால் நானொரு மடையன் !
- பல்லைக் கடித்துக் கொண்டு இலட்சங்களின் பணச் சுமைகளை தாண்டிடும் ஒரு நூறு தருணங்களில் வேலையைச் செய்யும் எடிட்டர் மாத்திரமே நான் !
- ஒரு கூரியர் டப்பாவில் பத்திருபது ரூபாய் விரயமாவதைத் தவிர்க்க எண்ணிட்டால் நானொரு மொள்ளமாறி !
- மறுபதிப்பு முயற்சியினை அறிவிக்கும் தருணம் நானொரு ஜீனியஸ் !
- அதனில் உங்களுக்கு வசதிப்படா இதழ் தேர்வாகும் வேளையில் நானொரு ஞானசூனியம் !
நிச்சயமாய் உலக நாயகன் கூடத் திணறிப் போய்விடுவார் - நண்பர்களில் ஒருசாரார் அவ்வப்போது எனக்குத் தந்திடும் கணக்கிலா வேஷங்களைப் புனைந்திட எண்ணினால் !
ஆனால் மாறுபடும் இந்தச் சூழல்கள் என்னை தளரச் செய்வதில்லை ; மாறாக நண்பர்களது அபிப்பிராயங்களைத் தவறென நிரூபிக்கும் வேகமே ஊற்றெடுப்பது வழக்கம் ! இப்போதுகூட உறுதியோடு சொல்கிறேன் - லக்கி டைஜெஸ்டின் முதல் இதழ் வெளியான பின்னே எனது தேர்வுகளும், விலைகளும், திட்டமிடல்களும் தவறென உங்களுக்குத் தோன்றிடும் பட்சங்களில் - உங்களின் பாக்கிப் பணம் முழுவதையும் refund செய்திடத் தயாராக இருப்போம் ! And இதர இதழ்களின் கதைத் தேர்வுகள் (பிரின்ஸ் ; சிக் பில் ; டெக்ஸ்வில்லர்) நிறைவுறும் அடுத்த ஓரிரு வாரங்களிலேயே உங்களுக்கு அவற்றில் ஏற்பில்லை எனும் பட்சத்திலும் கூட - உங்கள் முன்பதிவுத் தொகையினை திரும்பக் கோரிப் பெற்றுக்கொள்ளலாம் !
refunds.lioncomics@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஒரே ஒரு மெயில் - உங்கள் வங்கிக் கணக்கு விபரங்களோடு தட்டி விட்டால் - மறுநாளே உங்கள் பணம் உங்களைத் தேடி வந்திருக்கும் ! உங்களுக்குப் பிடித்தமில்லா இதழ்களை உங்கள் தலைகளில் கட்டி, அதனில் ஒரு கோட்டை கட்டிக் குடியிருக்கும் சொகுசு நிச்சயமாய் என் குறிக்கோள் கிடையாது......குடியிருக்கும் வீடும், பணியாற்றும் அலுவலகமும் வங்கியில் அடமானமாய் நின்றாலும், சக்தியுள்ள வரை இந்தப் பயணத்தைத் தொடர்வது மாத்திரமே ! ('
அடடா..செண்டிமெண்ட் சீன போட்டு நெஞ்சைத் தொட்டுட்டீங்களே ஆசானே !" என்ற வரிகளை நாளை டைப் செய்யும் சிரமத்தை "மாணாக்கர்களில்" சிலருக்கு வைக்காது - அதையும் கூட நானே டைப் அடித்து விடுகிறேனே - கட் & பேஸ்ட் செய்துகொள்ள வசதியாய் !!)
1000 / 1200 என்ற சர்குலேஷனில் வழக்கமான விலைகள் சாத்தியமில்லை என்றால் - 'கூடுதலாய் விற்கப் பார் !!" என்ற அறிவுரைகள் !! ஏழு இலக்கக் கடன்தொகைப் பட்டியலைக் கையில் வைத்துக் கொண்டு அதனில் பாதி போல தேறவே தேறாது என்ற "குதூகலத்தை" நான் உங்களிடம் பங்கிடாது போவது என் தவறோ - என்னவோ ?! "நான் ஹார்ட்கவர் கேட்டேனா ?" என்ற கேள்வி எழுப்பிய கையோடே - "மாடஸ்டிக்கு ஹார்ட் கவர் ஏன் கிடையாது ?" என்ற கேள்வியும் ! கையால் பைண்டிங் செய்யும் வழிமுறைகளில் வெறும் 64 பக்கங்களே கொண்ட இதழுக்கு ஹார்ட் கவர் போடுவதில் நடைமுறைச் சிக்கல்கள் உண்டென்று நான் விளக்க நேரம் எடுத்துக் கொண்டால் - "சப்பைக் கட்டு கட்டுகிறான் !" என்ற எள்ளல்கள் ! சரி...அவர்களே புரிந்து கொள்வார்களென்று அமைதி காத்தால் - "பதில் போட இங்கிதமறியா திமிர் பேர்வழி !" என்ற ரௌத்திர மின்னஞ்சல்கள் !"குவிந்து கிடக்கும் பணிகளை தாமதங்களின்றிச் செய்திடவே நாக்குத் தொங்கிப் போகிறது ; இதனில் ஒவ்வொரு மின்னஞ்சலுக்கும் பொறுமையாய், விளக்கமாய் பதில் எழுத அவகாசம் கிட்டுவதில்லை !" என்பதை நீங்கள் புரிந்திருப்பீர்கள் என்ற எனது எதிர்பார்ப்பில் தவறே போலும் ! "சந்தா Z போடும் வழியைப் பார்க்காது - இதற்குள் தலை நுழைக்கவில்லை என யார் அழுதது ? " என்ற கேள்விகள் ------- பணிச்சுமையின் சூழலும்,, ஆண்டின் மத்திய பொழுதின் பணத் திட்டமிடல்களும் அதற்கு ஒத்துழைக்கவில்லை என்ற பதிலை நான் ஓராயிரம் முறைகள் ஒப்பித்து விட்ட பின்னேயும் !
நிறைய கடின தினங்களைத் தாண்டி வந்துள்ள போதிலும், புன்னகையைத் தொலைக்காதிருக்க ஆண்டவன் இதுவரை வரம் தந்துள்ளார் ! பொதுவில் வைத்து எனது யோக்கியமும், நோக்கங்களும் விவாதப் பொருட்களாகும் இந்த நூற்றியோராவது வேளையிலும் அந்த வரம் தொடரக் கோரி பிரார்த்திக்க மட்டுமே தோன்றுகிறது ! இப்போது சொல்லுங்களேன் - மெய்யாகவே செம சுவாரஸ்யமான வாரம் தானே இது ?
அட...ஊருக்குத் திரும்பிய பின்னே ஒரு வேண்டுதலின் பொருட்டு கோவிலுக்குப் போகலாமென வெளியூருக்கு சனி மாலையில் புறப்பட்டால் - ஏழு மணிவாக்கில் ஒரு நண்பரிடமிருந்து மின்னஞ்சல் - "ப்ளாக் பக்கம் கொஞ்சம் எட்டிப் பாருங்களேன் - நிலவரம் சரியில்லை" என்று ! கோவில் வாசலில் நின்று போனை உருட்டி நெட்டுக்குள் புகுந்தால் ஆன்மீகம் சார்ந்த கருத்து மோதல்களைக் காண நேரிட்டது irony of life என்று தான் தோன்றியது ! எனக்கு சாத்தியமான 2G இன்டர்நெட் நல்கிய மொக்கை ஸ்பீடில் இந்த சர்ச்சை எங்கே-எவ்விதம் துவங்கியது என்ற ஆய்வைச் செய்ய சாத்தியமாகிடவில்லை என்பதால் - மேற்கொண்டு உஷ்ணப் பரிமாற்றம் வேண்டாமே என்ற எண்ணத்தில் முதல்முறையாய் நமது பதிவுப் பக்கத்திற்கு கமெண்ட்ஸ் moderation -ஐ அமல் செய்தேன் - தற்காலிகமாய் ! வீடு திரும்ப 11 மணி ஆகிப் போக, அதன் பின்னே புதுப் பதிவைத் தயார் செய்வதிலேயே இத்தனை நேரமாகிவிட்டது !
ஆன்மிகம் சார்ந்த கருத்து இங்கே பதிவான தருணமே அதனை நீக்காது போனது நிச்சயம் என் தவறே ! அந்தப் பின்னூட்டத்தை முழுவதும் படிக்காது நுனிப்புல் மேய்ந்து சென்ற அசட்டையின் பலனாய் இன்றைக்கு இந்த சர்ச்சை வேரூன்றி நிற்கிறது என்பதால் - அதன் பொருட்டு எனது ஆழ்ந்த மன்னிப்புக் கோரல்கள் ! ஆன்மீகத்தில் ; கடவுள் நம்பிக்கையில் - எனக்கு மிகுந்த பற்றும் ; போற்றுதலும் உண்டென்பதில் ஒளிவு மறைவுகள் கிடையாது ! கடவுள்மறுப்புக் கொள்கை ஒரு உரிமையெனில் ; அதன் மறு பக்கமும் ஒரு சம உரிமையே ! ஆனால் நாம் நேசிக்கும் காமிக்ஸ் - மதமோ ; ஜாதியோ அறியாதென்பதால், அவையிரண்டுக்குமே இந்தத் தளம் ஒரு தாயகமாகிட வேண்டாமே ? அந்த ரீதியில் யார் பதிவிட்டிருப்பினும், அதில் நிச்சயம் எனக்கு உடன்பாடில்லை ! நாளைய பொழுது கொஞ்சம் அவகாசம் கிடைக்கும் நேரம் சென்ற பதிவினுள் புகுந்து சலனம் ஏற்படுத்தும் பின்னூட்டங்கள நிச்சயம் நீக்கி விடுவேன் ; அதுவரை அவற்றை ஓரம் கட்டிவிடுங்களேன் - ப்ளீஸ் ?
புதிய நாயகர்களுள் ஓரிருவரை அறிமுகம் செய்திடவும் ; இன்னுமொரு இதழின் அறிவிப்பினைச் செய்திடவும் இந்த ஞாயிறைப் பயன்படுத்திட எண்ணியிருந்தேன்!; ஆனால் அதற்கென சற்றே சௌஜன்யமான வேளையினை எதிர்நோக்கிடுவது தேவலை என்பதால் - இப்போதைக்கு விடைபெறுகிறேன் folks ! ஆர்வமிகுதியில் ஏதேதோ செய்துவிட்டு விளக்குமாற்றுச் சாத்துக்கள் வாங்குவதை விட, தட்டுத் தடுமாறியாவது நிதானமான வியாபாரியாகிட முயற்சிப்பதே இனி வரும் நாட்களின் கட்டாயமெனில் - அந்தப் பள்ளிக்கூடம் பக்கமாய் ஒதுங்க எத்தனிக்க வேண்டும் போலும் ! ஒரு ஸ்லேட்டும் , பல்ப்பமும் இருந்தால் - யாராச்சும் இரவல் தாருங்களேன் guys - ஆட்டையைப் போடாது நிச்சயம் திரும்ப ஒப்படைத்து விடுவேன் !!
Bye for now !! See you around folks !
P.S : Comments moderation அமலில் இல்லை ! எப்போதும் போலவே பின்னூட்டமிடலாம் !