Powered By Blogger

Sunday, February 27, 2022

ஞாயிறு இரவில் ..!

 நண்பர்களே,

வணக்கம். ஒரு நடுக்கும் பனியிரவு ! கொட்டும் பனியில்,  சாரை சாரையாய் படையெடுத்து வந்து கொண்டுருக்கும் எதிரிகளின் பூட்ஸ் தடங்கள் ஓராயிரம் தடங்களை உருவாக்கி வருகின்றன ! ஊருக்குள் நுழைந்திட உதவும் ஒரு பழைய பாலத்தை வெடி வைத்துத் தகர்த்து விட்டால் எதிரிகளைக் கணிசமாய்த் தேக்கி வைத்து விடலாமென்று அங்கே நிலை கொண்டிருக்கும் தாய்நாட்டுப் படை தீர்மானிக்கிறது !  தொலைவிசை இயக்குமுறையில் குண்டுகளை வெடிக்கச் செய்யலாமென்ற திட்டமிடலோடு அவசரம் அவசரமாய் பாலத்தில் வெடிபொருட்களை பொருத்துகிறார்கள் ! ஆனால்...ஆனால்...எதிர்பார்த்ததை விடவும் எதிரிகளின் டாங்கிகள்  வேகமாய் நெருங்கியிருக்க, தொலைவிலிருந்து குண்டை இயக்கும் வாய்ப்பில்லை !! என்ன செய்வதென்று தாய் நாட்டின் சிறு படைப்பிரிவானது கையைப் பிசைந்து கொண்டிருக்க, சிரித்த முகத்துடன் marine வீரன்  ஒருவன் முன்னே வருகிறான் ! நண்பர்களுக்கு bye சொல்லிவிட்டு, தானே போய் அந்த குண்டை வெடிக்கச் செய்து பாலத்தோடு, தானும் சுக்கு நூறாகிப் போகிறான் !!

இன்னொரு கொட்டும் பனியிரவு ! உக்கிரமாய் போர் நடந்து வரும் தன் நாட்டிலிருந்து தனது 2 சிறு குழந்தைகளோடு எல்லையை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறார் ஒரு தந்தை ! பிள்ளைகளின் தாயோ, இன்னொரு தேசத்திலிருந்து விரைந்து கொண்டிருக்கிறார், எல்லையில் தன் குடும்பத்தைச் சந்தித்த கையோடு, போர் முடியும் வரைக்கும் வேறெங்கேனும் குடும்பமாய் அடைக்கலம் தேடிடலாம் என்று ! ஆனால்...ஆனால்...எல்லையிலோ அந்தப் பிள்ளைகளின் தந்தை முரட்டுத்தனமாய் வழிமறிக்கப்படுகிறார் !  கை கால் திடமாயுள்ள, 60 வயதுக்குட்பட்ட எல்லா ஆண்மகர்களும் தாய்நாட்டு இராணுவத்தில் இணைந்து, யுத்தத்தில் பங்கேற்பது கட்டாயம் என்ற அவசரச் சட்டம் அங்கே பிரகடனம் செய்யப்பட்டிருப்பதால், அந்தத் தந்தையால் பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு எல்லையைக் கடக்க வழியில்லை ! செய்வதறியாது சுற்று முற்றும் பார்க்கிறார், அவர் கண்ணில் படுவது  58 வயதுப் பெண் மட்டுமே ! அவர் யார் என்பதோ ? எந்த ஊர் என்பதோ தெரியாது ! ஆனால் தனது 2 பிள்ளைகளையும், அவர்களது பாஸ்போர்ட் மற்றும் அடையாள அட்டைகளையும் அவரிடம் ஒப்படைத்து விட்டு, எல்லையின் மறுமுனையில் காத்திருக்கவுள்ள தனது மனைவியின் செல் நம்பரை மட்டும் கிறுக்கித் தருகிறார் ! "எப்படியாவது என் பிள்ளைகளை என் மனைவியிடம் ஒப்படைத்து விடுங்கள் ; போர் முடியும் போது நான் உயிர் பிழைத்து மிஞ்சியிருந்தால் அவர்களை சந்திக்கிறேன்" என்று சொல்லிவிட்டு, கையில் திணிக்கப்பட்ட துப்பாக்கியோடு இராணுவத்தினருடன் நடையைக் கட்டுகிறார் ! முந்தைய நொடி வரைக்கும் அரணாய் நின்ற தந்தை இனி இல்லை என்ற நிலையில் - அந்தப் புதிய, முதிய பெண்ணின் தோளே கதியென்று 2 குழந்தைகளும் சாய்ந்து கொள்கின்றன ! இரவெல்லாம் பயணிக்கிறார் - புதிய பொறுப்பையும், பிள்ளைகளையும் சுமந்து நிற்கும் அந்தப் பெண். எல்லையையும் கடக்கிறார்கள் - மைனஸ் 7 டிகிரி குளிரில் ! போர் பூமியிலிருந்து அண்டை நாட்டுக்குள் தஞ்சம் தேடிக் குவிந்திருந்த ஆயிரமாயிரம் அப்பாவிகளின் ஜன சமுத்திரத்தின் மத்தியில், கிறுக்கலான ஒரேயொரு செல் நம்பரை மட்டும் கையில் பற்றியபடிக்கே அந்தப் பெண் பதைபதைப்போடு காத்திருக்கிறார் !  தேற்ற முடியா அழுகையில் பையன் கரைந்து கொண்டிருக்கும் போது, செல் போன் ஒலிக்கிறது ! சற்றைக்கெல்லாம் அந்தப் பிள்ளைகளின் 33 வயதுத் தாய் அங்கே தலை தெறிக்க ஓடிவருகிறார்  தாரையாய் ஓடும் கண்ணீருடன் !! தனது 2 பிள்ளைகளையும் வெறி வந்தவர் போல வாரியணைத்து ஆசுவாசப்படுத்திக் கொண்ட பின்னே - அவர்களை பத்திரமாய் அழைத்து வந்த பெண்மணியை இறுக அணைத்துக் கொள்கிறார் ! இருவருக்குமே பீறிட்டு வரும் அழுகையை அடக்க வழி தெரியவில்லை !

சின்னஞ்சிறு தீவு அது ! அதற்கு காவல் நிற்போர் வெறும் 13 தாய்நாட்டு வீரர்கள் ! ஒரு ராட்சச எதிரி கப்பல் அங்கே கரையினை நெருங்கியபடியே - "மரியாதையாய் அத்தனை பேரும் சரணடைந்து விடுங்கள் !" என்று மிரட்டலாய் அறிவிக்கிறது ! கப்பலில் உள்ள தளவாடங்களைக் கொண்டு அந்தத் தீவையே தடம் தெரியாமல் செய்து விட முடியும் தான் ! ஆனால் ரேடியோவில் செய்திப் பரிமாற்றம் நடத்திடும் தாய்நாட்டு வீரர்கள் துளியும் அசந்தது போல தெரியக்காணோம் ! "டேய் கொங்கனாடொக்குகளா....உங்களுக்குத் தெரிஞ்சதைச் செஞ்சுக்கோங்கடா ஈத்தரைகளா !!" என்று எகிறி அடிக்கின்றனர் ! வெகுண்டு தாக்குதல் நடத்துகிறது கப்பல் ! தோட்டாக்களும், வெடிகுண்டுகளும் ஏற்படுத்திய புகை மண்டலம் கலைந்த போது அந்தப் 13 வீரர்களும் அங்கே குருவிகளைப் போல செத்துக் கிடக்கின்றனர் !!  

சரக்குக்குப் பிரசித்தி பெற்ற தேசம் அது ! தவித்த வாய்க்கு வோட்க்கா தருவது அங்கே ஜகஜம் ! ஆனால் திடீரென்று Molotov's Cocktail என்ற புது ஐட்டத்தை செய்வது எப்படி ? என்று அந்த நாட்டின் பாட்டி முதல் பேத்தி வரை ஆராய்ச்சி செய்ய ஆரம்பிக்கின்றனர் !! "அட, ஊரே பற்றி எரிகிறது ; போர் ஒன்று உக்கிரமாய் நடந்து வருகிறது ! இந்த ரணகளத்திலும் இந்தக் கிளுகிளுப்பு தேவை தானா ?" என்று உலகமே மண்டையைச் சொரிகிறது ! அப்புறம் தான் தெரிகிறது - Molotov's Cocktail ஒரு புதுவகைச் சரக்கல்ல ; குப்பென்று பற்றியெறியக்கூடிய சரக்கு உள்ள பாட்டிலுக்குள் திரியைப் போட்டுத் தீவைத்துத் தூக்கி வீச ஏதுவான ஆயுதம் என்று ! எதிர்ப்படும் எதிரிகள் மீது அவற்றை வீச வீடுதோறும் ஜனம் ஆயத்தமாகி வருகிறார்கள் என்பதை உணரும் போது உலகமே வியக்கிறது அந்த மக்களின் வீரத்தையும், தாய் நாட்டுப் பற்றையும் எண்ணி !!

நேற்று வரைக்கும் பிஸியாய் இயங்கி வருமொரு ஐரோப்பியத் தலைநகரம் அது ! இடியாய் போர்மேகங்கள் சூழ்ந்திட, விண்ணிலிருந்து குண்டு வீச்சு நிகழக்கூடுமென்ற எச்சரிக்கை சைரன்கள் நகரம் முழுக்க நாராசமாய் ஒலிக்க ஆரம்பிக்கின்றன ! வளைகளைத் தேடி ஓடும் எலிகளை போல மக்கள் பதுங்கு தளங்களிலும், அருகாமையில் உள்ள மெட்ரோ தரைக்கடி ரயில்நிலையங்களிலும் தஞ்சம் புகுகிறார்கள் ! விறைக்கும் குளிரில் ஆயிரமாயிரம் மக்கள் அங்கே அண்டிக்கிடக்கின்றனர் - தங்கள் வேலைகளை போட்டது போட்டபடிக்கே விட்டுவிட்டு ! ஆனால் சில இயற்கையின் நியதிகளை போரோ ; சைரன்களோ ; பதுங்குதளங்களோ கட்டுப்படுத்தாதே ! நிறைமாத கர்ப்பிணியான ஒரு பெண்ணுமே அங்கே மெட்ரோ ரயில் நிலையத்தில் பதுங்கிக் கிடக்க, அவருக்குப் பிரசவ வலி ஆரம்பிக்கிறது ! மருத்துவமனைக்குச் செல்ல வாய்ப்பே இல்லை என்பதால், அங்குள்ள பெண்களே பிரசவம் பார்க்க முனைகின்றனர் ! மிகுந்த சிரமங்களுக்குப் பின்பாய், சூழ்ந்துள்ள மக்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் ஒரு அழகான பெண்குழந்தை அந்த போர்பூமியில் ஜனிக்கின்றது !  இன்னொரு பக்கமோ, அங்கே பதுங்கிக்கிடக்கும் சுட்டிகளின் பொழுதுபோக்குக்கென யாரோ ஒரு எஞ்சினியர் ஒரு ஸ்க்ரீன் போல ஏதோவொன்றை ரெடி செய்து, புரஜெக்டர் போலவும் உருவாக்கி, அதனில் கார்ட்டூன்களை ஓடச் செய்கிறார் ! எத்தனை இடர்கள் இடைப்பட்டாலும், அத்தனையிலும் ஒரு சாதனை செய்து காட்டும் மனிதனின் போர்குணத்தின் லேட்டஸ்ட் அத்தியாயமாய் இதனை உலகமே பார்க்கின்றது !!

Cut...Cut...!! Back to reality !! மேற்சொன்ன காட்சிகளை ஒரு சுமாரான டைரக்டரிடம் ஒப்படைத்தால் கூட, தனது படத்தில் மெர்சலான காட்சிகளாக்கிவிடுவார் ; ஒரு சுமாரான காமிக்ஸ் கதாசிரியரிடம் ஒப்படைத்தால் கூட - பின்னிப் பெடலெடுத்து விடுவார் தான் ! ஆனால் துரதிர்ஷ்டவசமாய் காட்சிகளில் எவையும் கற்பனைகளே அல்ல ! சகலமும் யுக்ரைன் மண்ணில் கடந்த சில நாட்களாய் தாண்டவமாடி வரும் யுத்தமெனும் அரக்கனின் கைவண்ணங்களே ! 

யுத்தங்கள் பூமிக்குப் புதிதே அல்ல தான் ; கடந்த கால் நூற்றாண்டுக்குள் மத்திய கிழக்கில் வெவ்வேறு இலக்குகளில் ; ஆப்கானிஸ்தானில் ; பிரிவினை கண்ட ரஷ்ய நாடுகளில் என ஏகமாய் சண்டைகளில் சட்டைகளும், பல்லாயிரம் உயிர்களும் வதைபட்டுள்ளன தான் ! ஆனால் இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்பாய் இத்தனை பெரியதொரு படையெடுப்பினையோ, மோதலையோ உலகம் கண்டதில்லை எனும் போது இது வரலாற்றின்  மெகா கரும்புள்ளி என்பதில் ஐயமேயில்லை ! நம்மவர்களிலும் சுமார் 25,000 பேரும் யுக்ரெய்னில் சிக்கிக் கிடக்க, அவர்களுள் 20,000 பேர் மருத்துவம் பயிலச் சென்ற மாணவ / மாணவியர் எனும் போது - எங்கேயோ யாருக்கோ நடக்கும் தலைநோவாய் இதனைப் பார்க்கத் தோன்றவில்லை ! இந்த வலைப்பூவைத் துவங்கிய நாளினில் காமிக்ஸ் சார்ந்த சமாச்சாரங்களைத் தவிர்த்த வேறு 'கருத்து கந்தசாமி' மேட்டர்களுக்குள் ஒரு போதும் தலையை நுழைத்திடவே கூடாதென்பதில் உறுதியாக இருந்தேன் தான் ; ஆனால் ட்விட்டரிலும், இன்ன பிற தகவல் தளங்களிலும் பிரவாகமெடுத்து வரும் செய்திகளின் தாக்கங்களை பார்க்கும் போது ரொம்பவே உறுத்துகிறது ! காப்பியில் அரை ஸ்பூன் சர்க்கரை குறைச்சலாகிப் போனால் விசனம் கொள்கிறோம் நாம் ; ஆனால் சோறு, தண்ணீரின்றி நம் மாணவர்கள் நடுக்கும் குளிரில் எங்கெங்கோ எல்லைகளில் அனாதைகளாய் நிற்கும் காட்சிகளைப் பார்க்கும் போது, அவர்களுக்காகவும், அவர்தம் குடும்பத்தினருக்காகவும் பதறாமல் இருக்க முடியவில்லை !  

நமது கதைகளில் இரும்புக்கை நார்மன் யுத்த பூமியில் நடைபோட, பின்னணியில் 'டும்கீல்' என்று வெடிகள் வெடிக்கும் போது நாம் ஆர்வமாய்ப் பக்கங்களை புரட்டியிருப்போம் ! அதிரடிப் படை ; பெருச்சாளிப் பட்டாளம் ; சார்ஜெண்ட் தாமஸ் என ஏகமாய் war நாயகர்களைக் கதைகளில் சந்திக்கும் போது உற்சாகம் கொண்டிருப்போம்  ; ஆனால் நிஜத்தினில் யுத்தங்களின் கோரப் பரிமாணங்களைப் பார்க்கும் போது உள்ளுக்குள் எழுவது உற்சாகமல்ல என்பது மட்டும் நிச்சயமாய்த் தெரிகிறது ! இங்கே ஒரு மூலையில் குந்தியபடியே போரின் அவல முகங்களைப் பற்றி ஒரு முழியாங்கண்ணன் அரற்றி, புடினின் மனசும் மாறப் போவதில்லை ; கியெவ் நகரின் அல்லல்களும் மட்டுப்படப்போவதில்லை தான் என்பது புரிகிறது ! கண்முன்னே விரியும் காட்சிகள் ஏற்படுத்தும் ஆற்றமாட்டாமைக்கு இது ஒரு வடிகால் மாத்திரமே என்று வைத்துக் கொள்ளுங்களேன் !! புனித மனிடோ இந்த இரத்தச் சேதத்துக்கு சீக்கிரமே ஒரு முற்றுப்புள்ளி வைத்து காத்திடட்டும் !

And இந்த மாதத்தினில் ஜம்போவின் வெளியீடாக வரவுள்ளதுமே போரும், போர் சார்ந்த முஸ்தீபுகளுமான "போர்முனையில் தேவதைகள்" என்பது செம irony !! இதோ - மெருகூட்டப்பட்ட ஒரிஜினல் அட்டைப்படத்தில் பிரிவியூ + உட்பக்கங்களின் முதற்பார்வைகளுமே : 


நாம் வாழ்ந்து வரும் காலங்களின் பிரதிபலிப்பாய் இந்த ஆல்பத்தினைப் பார்த்திடலாம் என்று தோன்றுகிறது ! And இதன் படைப்பாளிகளில் ஒருவர் ஒரு முன்னாள் நீதிபதியுமே என்பதால் கதை நெடுக ஒருவித யதார்த்தம்,  புலனாய்வின் பரிமாணங்கள், என்று இழையோடுவதைப் பார்த்திட முடிகிறது ! In fact, ஒருவித மேற்கத்திய பார்வையில் இந்த ஆல்பம் புனையப்பட்டிருப்பினும், இது ஒரு நிஜ சம்பவத்தின் தழுவலாம் ; வித்தியாசமான சித்திர பாணி & இதமான டிஜிட்டல் கலரிங்கில் சொல்லப்பட்டிருப்பது ஒரு உக்கிரமான சமகாலத்துக் கதை ! இந்தக் கதையோட்டம் குறித்து நம் மத்தியில் நிச்சயமாய் நிறைய பேசிடுவோம் என்பது இப்போதே உறுதிபட தெரிகிறது !  மதம் சார்ந்த விஷயங்களில், மேற்கின் பார்வைகளும், நமது பார்வைகளும் நிரம்பவே மாறுபடும் என்பதை yet again இந்த ஆல்பத்தில் நாம் பார்த்திடவுள்ளோம் ! நிறையவே கூகுள் தேடல்களோடே இதன் மொழிபெயர்ப்பினைக் கையாண்டிட வேண்டிப் போனது ! சொல்லப் போனால் இந்தக் கடைசி ஒன்றரை ஆண்டுகளில் நமது பணிகளோடு நான் செய்ய நேர்ந்துள்ள கூகுள் தேடல்கள், செம வலிமையானது என்பேன் ! கூகுளப்பா - வாழ்க நீவீர் !!

மார்ச்சின் மூன்று இதழ்கள் + எலியப்பா இணைப்பு இதழும் அச்சாகி, பைண்டிங்கில் உள்ளன ! So செவ்வாயன்று டெஸ்பாட்ச் இருந்திடுமென்று எதிர்பார்க்கலாம் ! And இம்மாதத்து எலியப்பா இதழ் உங்களிடமிருந்து  சில வினவல்களை வெளிக்கொணராது போனால் நான் ஆச்சர்யம் கொள்வேன் ! படிக்கும் போது புரியாது போகாது - நான் குறிப்பிடுவது எதையென்று !

அப்புறம் சனியிரவே வந்திருக்க வேண்டிய பதிவானது காணாமல் போனது குறித்து நிறைய நண்பர்கள் - "நலம் தானா ? உடலும் ,உள்ளமும் நலம் தானா ?" என்று அன்புடன் விசாரித்திருந்ததற்கு thanks a bunch folks ! முதுகுவலி எனும் சைத்தான் அநியாயத்துக்குப் படுத்தி எடுத்ததே இந்த சிவகாசி சம்முவசுந்தரம் மட்டையாகிக் கிடக்க வேண்டிப் போனதன் காரணம் ! தவிர, வாரயிறுதியில் சில பல அவசர மராமத்து வேலைகளுக்குள்ளும் தலைநுழைக்க வேண்டியிருந்ததால் இந்தப் பக்கமாய் தலைகாட்டத் தாமதமாகிப் போய்விட்டது ! Sorry guys !! 

Before I sign out - சில குட்டி updates :

1.என் மண்டையில் எஞ்சியுள்ள கேசத்தைப் போல, "விரல் விட்டு எண்ணிவிடலாம்" - என்ற எண்ணிக்கையினைத் தொட்டு விட்டது "வேதாளர் ஸ்பெஷல்கையிருப்பு !!  சமீபத்தில் நான் பார்த்த அதகள பரபரப்பு முகமூடி மாயாத்மாவுக்கே !

2.மாண்ட்ரேக் ஸ்பெஷல் சார்ந்த கதைத் தேர்வுகளை நேற்றைக்குத் தான் பூர்த்தி செய்திருக்கிறேன் ! இயன்ற மட்டுமே காதுகளை பூ ஸ்டாண்ட் ஆக்கிடக்கூடிய கதைகளுக்கு கல்தா தந்துவிட்டு, ரசிக்கக்கூடிய கதைகளாய்த் தேர்வு செய்துள்ளேன் ! இந்தக் க்ளாஸிக் கதைகளுக்குள் துளாவத் துளாவத் தான் அந்நாட்களின் படைப்பாளிகளின் கற்பனை வளங்களின் முழுப் பரிமாணங்களும் புரிபடுகின்றன !  Promises to be a thrilling album !

3.ஒரு புது ஜானரில் ஒரு அதிரடி நாயகர் ; வித்தியாசமான பாணியினில்  சீக்கிரமே களமிறங்கவுள்ளார்  ! Any guesses ?

4.1960-களில் ஒரிஜினலாய் வெளியான ஸ்பைடர் சாகசங்கள் இப்போது 2 கதைகள் இணைந்த டபுள் ஆல்பமாய் இங்கிலாந்தில் மறுபதிப்பு காண்கிறது ! சைத்தான் விஞ்ஞானி & இன்னொரு கதை தான் முதல் வெளியீடு !! இதற்கான வரவேற்பு எவ்விதமிருக்கும் என்று பார்க்க செம curious !!

Bye all...see you around ! இந்த வாரத்தின் ஒரு சிறு பகுதியை புது இதழ்களுக்கென ஒதுக்கிட முனையுங்களேன் - ப்ளீஸ் ! 

Sunday, February 20, 2022

ஹலோ மார்ச் !

 நண்பர்களே,

வணக்கம். சுடு தண்ணீரும், கஷாயங்களும் சகாயங்கள் பல செய்ய, இதோ வண்டி மெது மெதுவாய் தண்டவாளத்தைத் தேடிக் கிளம்புகிறது ! சும்மாவே மோட்டு வளையை முறைத்துக் கொண்டு பொழுதுகளை  நகர்த்துவது செம போர் என்பதோடு, சத்தமின்றித் தேதிகளும் ஓட்டமெடுத்து வருகின்றன என்பதால் இந்த வாரத் துவக்கத்திலேயே பேனாவைத் தூக்கியாச்சு ! ஏற்கனவே தினங்கள் குறைச்சலான மாதமிது எனும் போது - இதற்கு மேலும் சோம்பிக்கிடப்பது சுகப்படாதல்லவா ? So வந்தாச்சூ - பணிகளுக்கும், பதிவுக்கும் !  

நல்ல காலத்துக்கு இது மூன்று இதழ்கள் கொண்ட மாதமே & அவற்றுள் ஒன்றின் மொழிபெயர்ப்பு கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்னமே நிறைவுற்றிருந்ததொன்று என்பதால் ரொம்ப மலைப்பாக இருக்கவுமில்லை ! So இதோ - அந்த 5 ஆண்டுகளுக்கு முன்பான 'தல' தாண்டவத்தின் பிரிவியூ :

நிறைய நேரங்களில், பெருசாய் லாஜிக் இன்றி, சில மாஸ் கதைகள் கூட பீரோவுக்குள் புதைந்து போயிடுவதுண்டு ! "பாலைவனத்தில் பிணம்தின்னிகள்" அவ்விதம் துயில் பயில நேரிட்டதொரு 'தல' சாகசமே ! Maybe இப்படியொரு டொக்கான பொழுதினில், எனது வேலைப்பளுவினைக் குறைக்கும் பொருட்டே, இந்த ஆல்பம் இத்தனை காலமாய் ஓய்வில் இருந்ததோ - என்னமோ ! 2016 - இதனை கருணையானந்தம் அங்கிளிடம் எழுத நான் அனுப்பிய வருஷமானது ! ஏதோ காரணங்களினால் தொடர்ந்திட்ட 2017 & 2018 ஆண்டுகளில் இந்த ஆக்ஷன் மேளா நம் அட்டவணைக்குள் புகுந்திடவில்லை & அதற்குள் என் ஞாபகத்திலிருந்தும் இது விலகியே நின்று வந்தது ! 2022-க்கான அட்டவணையினை இறுதி செய்திடும் போது அகஸ்மாத்தாய் கையிலுள்ள கதையிருப்பின் ஸ்டாக்கை செக் செய்த போது "ஏலே னொண்ணே, இந்த வருஷமாச்சும் சான்ஸ் தர்றதா உத்தேசம் கீதா - இல்லியா ?"  என்று நம்மவர் கொடுத்த குரல் loud & clear ஒலித்தது ! So 2022 அட்டவணையினில் நான் புகுத்திய முதல் TEX ஆல்பம் இது தான் ! கதை என்று பார்த்தால் அனல்பறக்கும் தெறி அதிரடி தான் ! பொதுவாகவே பனிப்பிரதேசங்களுக்கோ ; பாலைவனங்களுக்கோ நம் ரேஞ்சர் அணி பயணிக்கும் போதெல்லாம் கதைகள் பட்டையைக் கிளப்புவது வாடிக்கை ! And its no different this time too - கார்சனும், டெக்ஸும் ; கிட்டும், டைகரும் ஒட்டுமொத்தமாய் கரம்கோர்க்க ; ஒரு சைக்கோத்தனமான வில்லனும் அமைந்து போக - பட்டாசு பறக்கிறது பக்கங்கள் நெடுக ! And அந்தச் சித்திர ஜாலங்கள் இன்னொரு பக்கம் தம் பங்குக்குக் குமுறி எடுக்க - 224 பக்க புல்லெட் டிரெயின் பயணம் நமக்கு வெயிட்டிங் ! And  வேறொரு டெக்ஸ் ஆல்பத்தின் முகப்பை இந்த இதழுக்கு ஏற்றவாறு நமது சென்னை ஓவியர் மாற்றி வரைந்த அட்டைப்படமும் - கதையின் அனல் மூடுக்கு அச்சாரம் போடுவதாய் எனக்குத் தோன்றியது ! What say guys ? இதோ - உட்பக்க டிரெய்லருமே : 


மொத்த டீமுமே இத்தனை யூத்தாய் ; இத்தனை கெத்தாய் நாம் சித்திரங்களில் பார்த்து ஏக காலமாச்சு என்பேன் ; ஓவியர் நடத்தியுள்ளது ஒரு சித்திர மேளாவே தான் ! So ஏற்கனவே மொழிபெயர்ப்பு தயாராக இருந்த ஆல்பம் என்பதால்,  மாமூலான சில மாற்றங்களோடு இதனைத் தயார் செய்திட இன்னும் 2 நாட்களின் அவகாசமே நமக்கு அவசியமாகிடும் என்பேன் ! 

Moving on, ஏற்கனவே பாதிக்குப் பேனா பிடித்திருந்த நிலையினில், மீதத்தை முதலில் பூர்த்தி செய்தது - நம்ம 'போலீஸ் பாதி / பாஸ்டர் பாதி' பார்ட்டியான SODA வின் சாகசத்துக்கு ! "காலனோடு கூட்டணி" தான் நடப்பாண்டில் டேவிட் சாலமன் களமாடும் அரங்கம் ! இரண்டே ஆண்டுகளில், இந்த வித்தியாசமான நாயகர் நம் மத்தியில் ஒரு சாலிடான இடத்தைப் பிடித்து விட்டிருப்பது நிஜமாகவே எனக்கு ஆச்சர்யமூட்டும் விஷயம் ! ஆக்ஷன் நாயகர் தான் ; டுமீல்-டுமீல் என்று பயணிக்கும் கதைகளும் தான் - ஆனால் 'நேர் கோடு' என்றால் 'நெற்றியிலே போடு' என கண்சிவக்கும் கதாசிரியரின் செம dark கதை வரிசை இது எனும் போது, எனக்குள் குட்டியூண்டாய் ஒரு பயம் இருக்கவே செய்தது - இவரை நாம் எவ்விதம் வரவேற்போம் என்று ! பற்றாக்குறைக்கு சித்திர பாணியும் கார்ட்டூன் ஸ்டைல் ! ஆனால்  இனம் சொல்ல இயலா ஒரு வசீகரத்தை கதாசிரியர் இந்தத் தொடர் நெடுக விதைத்து வைத்திருக்க -  "நான் சோதா இல்லை" - என்று சவால் விடுகிறார் SODA ! "வித்தியாசமான ஹீரோ" ; "வித்தியாசமான கதை" என்ற வார்த்தைப் பிரயோகங்கள் - கால்மிதிகளாய் ஒரு நூறு தபா மிதிப்பட்டவைகளே நம் மத்தியில் ! ஆனால் அந்த வார்த்தைகளுக்கு நிஜமாய் நியாயம் செய்யவல்லவர் இந்த போலீஸ்கார பாஸ்டர் மட்டுமே என்பேன் : 

ஒரு பலவீன இதயத்துடனான குள்ளமான அம்மா ; கையில் ரெண்டு விரல்களைத் தொலைத்ததொரு ரகுவரன் ஜாடையிலான ஹீரோ - இவர்களே இந்தக் கதைவரிசையின் மைய மக்கள் ! கதை நெடுக ஒரே கருப்பு சூட்டில் ; கறுப்புக் கண்ணாடியுடன் சுற்றி வரும் ஹீரோவுக்கு போலீஸ் உத்தியோகம் ; ஆனால் வீட்டில் அம்மாவிடம் அதனைச் சொல்லிட இயலா சூழல் - so லிப்ட் அவர்கள் குடியிருக்கும் 23-ம் மாடிக்கு முக்கி முனகிப் பயணிக்கும் முன்பாய் - போலீஸ் யூனிபார்ம் to பாஸ்டர் டிரெஸ் என்று உருமாற்றம் செய்து கொண்டு குப்பை கொட்டும் நெருக்கடி ! கதையாய்ப் படிக்கும் போது - "ஓஹோ !" என்றபடிக்கே பக்கங்களை புரட்டியிருந்திருப்போம் தான் - ஆனால் யோசித்துப் பாருங்களேன் , கதாசிரியர் இப்படியொரு template தகர்க்கும் ஹீரோவை சிருஷ்டிக்க எத்தனை யோசித்திருப்பார் என்று ! ஒப்பீட்டில் - ஒரு CID ராபினின் உருவாக்கம் சுலபம் ; ஒரு ரிப்போர்ட்டர் ஜானியின் ஆக்கமும் சுலபம் ; ஒரு ஒற்றைக்கண் ஜாக்கின் படைப்பும் சுலபம் ! ஆனால் சொங்கியான ஒரு ஹீரோவுடன், நியூயார்க்கின் குற்ற வீதிகளில் SODA தொடரினை அரங்கேற்றுவது - calls for a special effort from the creator !! இம்முறையும் கதாசிரியர் புல் பார்மில் தான் இருக்கிறார் - தட தடுக்கும் ஒரு சாகசத்தை உருவாக்கிய கையோடு ! இங்கே கதையில் மட்டுமன்றி, வசனங்களிலும், ஸ்கிரிப்டிலும் கதாசிரியரின் முத்திரைகள் கணிசமாய் இருப்பதால் - தமிழாக்கம் ஒருபோதும் சுலபமாகவே இருப்பதில்லை ! இம்முறை பிரெஞ்சு to இங்கிலீஷ் மொழிமாற்றம் ஒரு சென்னை மாணவியின் கைவண்ணம் ; ஆங்காங்கே லைட்டாக தண்ணீர் குடித்துக் குடித்தே தமிழ் மொழிபெயர்ப்பினைச் செய்து முடித்தேன் ! And தெறிக்கும் டிஜிட்டல் கலரிங்கில் இந்த ஆல்பம் மினுமினுப்பதை அச்சு முடிந்த பக்கங்கள் பறைசாற்றுகின்றன ! திங்களன்று மீதமும் அச்சாகி, பைண்டிங் புறப்பட்டு விடும் ! Here you go with the trailers : 
மார்ச்சின் புக் # 3 - :"போர்முனையில் தேவதைகள்" ; ஜம்போ சீசன் # 4-ன் இதழ் நம்பர் 4 ! அந்த ஆல்பத்தின் இறுதிப் பத்துப் பக்க மொழிபெயர்ப்பு மட்டுமே பெண்டிங் எனும் போது, திங்களுக்குள் என் பணி நிறைவுற்று, வாரத்தின் நடுவாக்கில் அச்சுக்கு ரெடியாகி விடுமென்பேன் ! அந்த இதழின் பிரிவியூவை அடுத்த பதிவுக்கென வைத்துக் கொள்வோமே ?! இப்போதைக்கு தேவதைகளை பைசல் செய்து முடித்த கையோடு, சிகாகோ போகும் உத்தேசத்தில் உள்ளேன் - அங்குள்ள சாம்ராட்டை நம்மவர்கள் வதம் செய்வதை அருகிலிருந்து ரசிக்க ! ஏற்கனவே இதுவுமே பாதி முடித்திருந்த கதை எனும் போது அதிக நேரம் எடுத்திடக் கூடாது தான் ! பார்ப்போமே !

Bye all ; see you around ! Have a great Sunday !!

Friday, February 11, 2022

Phew...phew...& phew !

 நண்பர்களே,

வணக்கம்.'ஜல்பண்ணன் வந்திருக்காக...ஜுரம்மண்ணே வந்திருக்காக... மற்றும் தொண்டை வலியெல்லாம் வந்திருக்காக ---- வாம்மா ஓமிக்ரான்!!' என்பதே கடந்த ஞாயிறு முதலான எனது ரிங்க்டோனாகிப் போயுள்ளது ! "போர்முனையில் தேவதை"களுக்குள் நுழையலாமென்று கிளம்பிய போதே தொண்டையில் 'கிச் கிச்' வித்தியாசமாய்த் தோன்ற, ஒரு அண்டாவில் வெந்நீரையும், கஷாயங்களையும் போடச் செய்து மண்ட ஆரம்பித்தேன் ; ஊஹூம்..பப்பு வேகலியே !! ஞாயிறு இரவே புரிந்தது - 2 சீசன்களுக்கு கதவைத் தட்டியிரா விருந்தாளி இந்த மூன்றாம் சீசனுக்கு வந்தேபுட்டார் என்பது ! தடுப்பூசிகளை முறைப்படிப் போட்டு, மாஸ்க்கோடே விடாப்பிடியாய்க் குப்பைகொட்டி ; கூட்டங்களை அறவே தவிர்த்து வந்த நம்மளையுமே - 'அட...வாங்க, பழகிப் பாப்போம் அண்ணாச்சி !' என்று ஓமிக்ரனார் அணுகியிருந்தார் !  அப்புறமென்ன, விருந்தாளிக்கான உபசரிப்புகளோடு இந்த வாரத்தின் பொழுதுகள் முழுநேர மோட்டுவளை ஆராய்ச்சியோடு தொடர்கின்றன ! தடுப்பூசிகளின் மகிமையும், மருத்துவத்தின் மாயாஜாலமும் கைகொடுத்திட மூன்று  நாட்களில் சிரமங்கள் நீங்கி விட்டன - உசிரை வாங்கும் அந்தத் தொண்டை வலி நீங்கலாக ! வேதாளரின் அசாத்திய வெற்றி ஏகப்பட்ட அஸ்திகளில் ஏற்படுத்தியுள்ள எரிச்சலுக்குத் துளியும் குறைச்சலில்லா அனல் மட்டும் தொண்டையினில் தொடர்ந்தது !! மிமிக்ரி மயில்சாமியெல்லாம் இந்த வாரம் அடியேனிடம் பிச்சை தான் எடுத்திருக்க வேண்டும் - பெருந்தலைவர்கள் அண்ணாவிலிருந்து, கலைஞரிலிருந்து ஒவ்வொருவரது குரல்களையும் டிசைன் டிசைனாய் எனது தொண்டை எடுத்துவிட்ட அழகின் முன்னே ! இதோ - ஒரு மாதிரியாய் தொண்டை நோவு இன்றைக்குத் தான் கொஞ்சமாய் மட்டுப்பட்டுத் தென்பட , இதற்குமேலும் விட்டத்தை முறைத்துக் கொண்டிருந்தால் மறை கழன்று போகுமென்று பட்டது ! 'ரைட்டு....ஜம்போவோடு பயணிக்கலாமென்று பக்கங்களை எடுத்துக் கொண்டு அமர்ந்தால், பேனா பிடிக்க கை நடுங்கித் தொலைக்கிறது ! 'போச்சா..போச்சா....இந்த மாதம் வாய்ஸில் மொழிபெயர்ப்பைப் பதிவு செய்வது தான் வழி போலும் !' என்றபடிக்கே வேலையை ஆரம்பித்தவனுக்கு வேகம் பிடிக்கவேயில்லை ! போதி தர்மர் செட்டைச் சேர்ந்த நமக்கெல்லாம், பேப்பரும், பேனாவும் இல்லாது எழுத முற்படுவது, முட்கரண்டியோடு ரவா தோசையைத் தின்ன முற்படுவது போலுள்ளது ! 'ஊஹூம்...ரெண்டு நாள் கழிச்சு வேக வேகமாகவாச்சும் எழுதி சமாளித்துக் கொள்ளலாம்  ; இந்த வாய்ஸ் ரெக்கார்டிங் கூத்துக்கள் நமக்கு சத்தியமாய் வேலைக்கு ஆகாது' என்று தீர்மானித்தேன் ! ரொம்பவே போர் அடிக்க, எனது லேப்டாப்பில் குவிந்து கிடக்கும் வேதாளரின் புதுக் கதைகளுக்குள் கொஞ்ச நேரம் ரவுண்டு அடித்தாலென்னவென்று கம்பியூட்டரைத் தூக்கிக் கொண்டு அமர்ந்த போது surprise ...surprise  - டைப்படித்தால் கைநோவக் காணோம் ! அப்புறமென்ன - 'உலகத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக, வெள்ளிக்கிழமையே ஒரு பதிவு !' என்று போட்டுப்புடலாமென்றபடிக்கே ஆஜராகி விட்டேன் ! Before I get into the blog - ஒற்றை அறிவுரை guys !! தடுப்பூசிகளை, பூஸ்டர் டோஸ்களை மட்டும் சரியான நேரங்களில் போட்டுப்புடுங்க - ப்ளீஸ் ! அப்புறம் அந்த மாஸ்க் மேட்டரையும் 'ஜெய் டயபாலிக் !' என்றபடிக்கே தொடர்ந்திடுங்களேன் !! Phewwwww !! 

And yes , இன்னொரு பெரிய PHEWWWWWWWW !!! கூட போட்டுக் கொள்கிறேனே - "வேதாளன் ஸ்பெஷல் -1" ஈட்டியுள்ள அதகள வெற்றியின் பரிமாணத்தைப் பார்த்து ! இதுவரையிலுமான இந்த 50 ஆண்டுப் பயணத்தின் கடைசிப் 10 ஆண்டுகளின் ஒவ்வொரு hit இதழும் என் நினைவில் ஸ்பஷ்டமாய்த் தங்கியுள்ளன ! NBS கண்ணில் காட்டிய ஆரவாரங்கள், LMS ஏற்படுத்திய அதிரடிகள் ; "மின்னும் மரணம்" காட்டிய உத்வேகங்கள் ; "இரத்தப் படலம்" உண்டாக்கிய அதிர்வலைகள் ; "நிஜங்களின் நிசப்தம்" கொணர்ந்த காட்டாற்று வெள்ளம் ; டைனமைட் ஸ்பெஷல் / லயன் 250 / லயன் 400 ; Muthu FFS கட்டவிழ்த்து விட்ட உற்சாகங்கள் etc etc  ; என்று அடுக்கிக் கொண்டே போகலாம் தான் ! ஆனால் அவை அனைத்திலுமே ஒரு நூலிழையாகவேனும் பகடிக்குரல்கள் ; விமர்சனக்குரல்கள் ஒலித்திருந்தன என்பதை மறுப்பதற்கில்லை ! அட, "இரத்தப் படலம்" வண்ணத்தில் வெளியான வேளையில் கூட சர்ச்சைகள் சல்லிசாய் சுற்றில் இருந்து வந்தன தானே ? ஆனால், ஆனால், இம்மாதம் வேதாளர் ஈட்டியுள்ள வெற்றியானது beyond my wildest dreams ; ஒற்றை சிறு விமர்சனமுமின்றி பெங்காலியின் காவலர் ஒரு அசாத்திய ஆளுமையினைப் பதிவு செய்துள்ளார் ! அட்டை டப்பியில் துவங்கி, அட்டைப்படம், இதழின் வடிவமைப்பு ; தயாரிப்புத் தரம் ; கதைகளின் classic தன்மை - என்று Smashing '70 s இதழ் # 1-ஐ  நீங்கள் சிலாகித்திருப்பது முற்றிலும் வேறொரு லெவலில் !! 2015-ல் 'நயாகராவில் மாயாவி' மறுபதிப்போடு மும்மூர்த்திகள் மறுவருகை துவங்கிய நாட்களில் மட்டுமே இது போன்ற ஏகோபித்த ; பிசிறில்லா உற்சாகங்களைப் பார்த்திட முடிந்திருக்கிறது ! நாம் பால்யங்களின் மாறாக் காதலர் கூட்டம் என்பதில் ரகசியங்களே லேது தான் ; வேதாளர் ஒரு செமத்தியான நாயகர் என்பதிலும் சந்தேகங்களே இருந்திருக்கவில்லை தான் ! ஆனாலுமே இந்த ஒற்றை வாரத்தின் உங்கள் ஆரவார வரவேற்பு has been staggeringly stunning ! கண்ணாடிகளில் வதனத்தைப் பார்க்கும் போதெல்லாம் மீசையின் நரைமுடிகளும், பள பளக்கும் கபாலமுமே கவனத்தைக் கோருவது எனக்கு வாடிக்கை ! ஆனால்  இன்றைக்கோ -  'அட பேப்பயலே...இப்படியொரு ஸ்டார் நாயகரை இத்தினி காலமா தொங்கலில் விட்டிருந்திருக்கியே !!' என்று கழுவி ஊற்றும் மனச்சாட்சியே கண்ணாடியில் பிரதானமாய்த் தெரிகிறது ! நிஜத்தைச் சொல்வதானால் இந்த நாயகரின் ஆளுமையினையும், உங்களின் ஆதர்ஷங்களையும் குறைத்து மதிப்பிட்டமைக்கு - I owe an apology for sure !! நமது வாசிப்புகளில் பழமைக்கும்,புதுமைக்கும் மத்தியில் இருந்திட வேண்டிய ஒரு balance சார்ந்த எனது கணக்கில் கொஞ்சம் பிசிறடித்துள்ளது புரிகிறது -  சாரி guys ! 

அடுத்த பத்தியிலுமே இன்னொரு Phewwwwww போட்டுக்குவோமே - இம்முறை வேதாளரின் பெயரைச் சொல்லி ஆங்காங்கே காது வழியாய், மூக்கு வழியாய் அந்நாட்களது கரி எஞ்சின்கள் போல புகைவிட்டுவரும் அன்பர்களுக்கொரு அடையாளமாய் !! "சந்தா கட்டிப்புடாதீங்க !!" என்ற ஒற்றை agenda சகிதம் கொஞ்ச காலமாகவே கொடி பிடித்து வரும் ஆர்வலர்களை FB க்ரூப்பில் உள்ள நண்பர்கள் அறிவர் ! And இம்முறை Smashing '70s தடத்தினில் - 'all or nothing ' என்பதில் நாம் தீர்மானமாயிருக்க, அதைப் பிடித்துக் கொண்டு - "வேதாளன் மட்டும் வேணும்னா அதை மட்டும் தனியா வாங்கிக்கோப்பா ; சந்தா கட்டுவானேன் ?" என்ற அடுத்த கொடியேற்றத்துக்கு அஸ்திவாரம் அதிதீவிரமாய் நிகழ்ந்தது ! And ஒரு சுபயோக சுபதினத்தில் புக்கும் வந்தாச்சு ; பந்தை ஸ்டேடியதுக்கு வெளியே சாத்தும் சேவாக் பாணியில் வேதாளர் சிக்ஸரையும் போட்டுத் தாக்கிய நிலையில் "அன்பு அணி" வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தது - மார்க்கெட்டில் வேதாளர் இதழ் விற்பனைக்கு வருகிறதா ?  என்ற தேடலில் ! 

இவை சகலமுமே இவ்விதம் தான் அரங்கேறும் என்பதை 4 மாதங்களுக்கு முன்னமே உணர்ந்திருந்ததால் - நமது முகவர்களிடம் "இதனில் உங்களின் ஒத்துழைப்பு எங்களுக்கு அவசியம்ங்க சார் ! முதல் புக்குக்கு ஆர்டர் செய்திடும் சமயமே, அடுத்த புக்கான ரிப் கிர்பி ஸ்பெஷலுக்கான முன்பணமும் செலுத்தினால் மாத்திரமே சப்ளை செய்திட வேண்டி வரும்  ! ரிப் கிர்பி புக் ரெடியாகும் தருணம், அதற்கடுத்த மாண்ட்ரேக் ஸ்பெஷல் இதழுக்காக முன்பணம் அவசியமாகிடும்ங்க சார்  & so on " என்பதை வலியுறுத்தியிருந்தோம் ! புக் ரிலீஸ் ஆகும் தினம் வரையிலும் வெறும் 15 பிரதிகளுக்கு மட்டுமே ஒரேயொரு ஏஜெண்டின் ஆர்டர் + முன்பணம் கிட்டியிருந்தது ! ஆனால் உங்கள் கைகளில் வேதாளர் மினுமினுக்கத் தொடங்கி, ஆங்காங்கே க்ரூப்களில் நீங்கள் சிலாகிக்கத் துவங்கிய பின்னர் சுதாரித்த சுறுசுறுப்பான முகவர்கள், வேதாளருக்கான முன்பணம் + ரிப் கிர்பிக்கான முன்பணங்களை அனுப்பத்துவங்கினர் ! And அதுவும் கூட சொற்பமான எண்ணிக்கைகளில் தான் ! பாக்கி முகவர்களோ, "இந்த புக்குக்கு மட்டும் தான் இப்போ பணம் அனுப்ப முடியும்" என்று அடம் பிடிக்க, "சாரிங்க....! It has to be all or nothing !" என்று சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொண்டோம். இதன் பொருட்டு கண்சிவந்த முகவர்கள் எத்தனை பேர் என்பது அவர்களிடம் பேசி வரும் அண்ணாச்சிக்கும், எனக்கும் தான் தெரியும். ஆனால், கடக்கும் ஒவ்வொரு நாளிலும் வேதாளரின் ரகளைகளை நீங்கள் ரவுண்டு கட்டிப் பதிவிட்டுக் கொண்டிருக்க, முகவர்களிடம் மனமாற்றங்கள் !! கொஞ்சம் கோபங்களோடே ரிப் கிர்பிக்குமான முன்பணங்களோடே ஆர்டர்கள் செய்தனர் and அவர்கட்கு புக்ஸும் அனுப்பியாச்சு ! And இதுவும் கூட இன்னமும் அனைத்து ஏஜெண்ட்களின் நடைமுறை என்றும் ஆகியிருக்கவில்லை ; மெய்யாகவே கடை வைத்து வியாபாரம் செய்திடும் முகவர்களில் பாதிக்கு மேற்பட்டோர் இம்மாதம் அண்டர்டேக்கர் + ப்ளூகோட்ஸ் மட்டுமே வாங்கியுள்ளனர் ! இதுவரைக்கும் ஆர்டர் செய்துள்ளோரின் பெரும்பான்மை இணையத்தில் கம்பும் சுழற்றி, கடையும் விரித்திடும் pseudo agents மாத்திரமே ! So பினாமி பெயர்களில் கொக்கரிப்புகளும், அவர்களது கடுப்புக் குரல்களும் இன்று ஒலிப்பதில் no surprises at all !! "இல்லே..இல்லே...நான் வேதாளனுக்கு மட்டும் தான் காசு அனுப்புனேன் ; அடுத்ததுக்குலாம் commit பண்ணிக்கலை !!" என்று இன்னமும் கம்புசுற்றல்கள் தொடராது போகாதென்பதை யூகிப்பதில் சிரமமேயில்லை - becos பொதுவெளியில் ஒரு பில்டப் தருவதைத் தலையாய கடமையாக நம்பி வரும் பார்ட்டிகளுக்குப் பஞ்சமேது ? எங்களுக்கும் தெரியும், எங்களின் வங்கிக் கணக்குக்கும் நிஜங்கள் தெரியுமெனும் போது more power to the கம்புசுத்திங்ஸ் ஜென்டில்மென் !

அப்புறம் நமது நிபந்தனைகளுக்கு உட்பட்ட முகவர்களிடம் - "அண்ணாச்சி....புக்ஸ் வேங்கிட்டீங்க..சந்தோசம் !! ஆனா நீங்க என்ன பண்றீங்க - வேதாளரை அப்புறமாய் விற்றுக்கோங்க ! இப்போதைக்கு கடைகளில் தனியாய் வித்தீங்கன்னா எங்க அன்பு அணி  - "பாத்தியா ? பாத்தியா ?" என்று துள்ளிக் குதிப்பாங்க !!" என்று சொல்லவாவது சாத்தியப்படுமா ? எதிர்பார்த்தபடியே கடைகளில் விற்பனைக்கு வந்தவற்றை வேக வேகமாய் வாங்கிப் போட்டு ; அதுவும் ஒண்ணுக்குப், பத்து புக்கா வேங்கிப் போட்டு, அதை அழகா அடுக்கி வைச்சு ; போட்டா புடிச்சி -"பாத்தியாலே..? நான் தான் சொன்னேனலே ?" என்று கொக்கரிக்கும் அந்த அன்பைப் பார்த்த போது புல்லரித்தது ! காமிக்ஸ் நல்லுலகத்துக்கு ஒரு கருத்தை நிலைநாட்டுற வேகத்தில், இதே போல நீங்க ஆளாளுக்கு தொடர்ந்து பத்து பத்தா வேங்கி ஆங்காங்கே போட்டீகன்னா, நம்ம ஏஜெண்ட்கள் செழிப்பாகிக்குவாங்கல்லியா ? என்ன நான் சொல்லுதது ? இந்த ஆரவார புகை சமிக்ஞைப் படலங்கள் இன்னும் சில நாட்களுக்குத் தொடர்ந்தாலே போதும் - ஒரு மறுபதிப்பை திட்டமிட வேண்டிய அவசியம் உருவாகிடலாம் ; becos we are already running low in stock of வேதாளர் !! வெளியான ஒற்றை மாதத்துக்குள் விற்றுத் தீர்ந்த இதழ்களென்ற பெருமை, இதற்கு முன்பாக - "நிஜங்களின் நிசப்தம்" இதழுக்கும், மார்டினின் "மெல்லத் திறந்தது கதவு" இதழுக்குமே உண்டு ! ஆர்வலர்கள் மனசு வைத்தால் வெகு விரைவில் வேதாளன் ஸ்பெஷல் - 1 அந்தப் பட்டியலுக்குள் புகுந்திருக்கும் !

நிதானமாய் யோசிக்கும் போது இந்தச் "சந்தா கட்டாதீங்க" குரல் ஒலிப்பதற்கான காரணம்  - வெறுமனே என் மீதான பொத்தாம் பொதுவான வெறுப்பின் வெளிப்பாடு மட்டுமே அல்ல என்பது obvious ! "நந்தியாட்டம்  குறுக்கால இவன் கடை விரிச்சுக் கிடக்கும் வரையிலும் - ஏதேதோ புது முயற்சிகள் சிரமமாகிப் போகின்றன ! So இவனைக் கடையைச்  சுருட்டச் செய்ய ஒரே வழி, கடந்த பத்தாண்டுகளாய் lifeline தந்து வரும் சந்தாதாரர்களை கலைப்பதே ! கொரோனா காலங்களிலேயாச்சும் ஏதாச்சும் சுணங்கும்னு பார்த்தாக்கா, இந்தப் பயபுள்ளை இப்போதான் இன்னும் வேகமா ரவுண்டு கட்டியடிக்குது & இவன் சொல்றதைக் கேட்டுப்புட்டு மக்களும் சந்தாக்களைக் கட்டி வைக்கிறாங்களே !!" என்ற ஜெலுசில் பருகும் படலங்கள் - குயந்தை பிள்ளை கூட அறிந்திருக்கும் காரணம் ! அப்புறமாய் வெவ்வேறு குறிக்கோள்களோடு, சில புது திட்டமிடல்களோடு புறப்பட்டோர், ஆங்காங்கே தடித்தாண்டவராயனாட்டம் நாம் நிற்பதால் சந்தித்த சில பின்னடைவுகள், வன்மங்களின் அடுத்த முக்கிய காரணி ! விலாவாரியாய் அவற்றைப் போட்டுடைப்பது அத்தனை நாகரீகமாக இராதென்பதால், அதனில் elaborate செய்திட மாட்டேன் ! இத்தனை மட்டும் சொல்லுவேன் -  "இரத்தப் படலம்" கண்ணில் காட்டியுள்ள விலைகளையும், க்ரே மார்க்கெட்டில் அவை ஈட்டி வரும் விலைகளையும் பார்த்த பின்னே நிறையப் பேர் கால்குலேட்டர்களும், கையுமாய் உலவத் துவங்கியுள்ளனர் & அவர்களது கணக்குகளுக்குப் பெரும் இடர்கள் - நானும், நம்மை நேசித்திடுவோரும், சந்தா செலுத்திடும் உங்களின் அன்புள்ளங்களுமே  ! So ஒன்றைக் குலைத்தால் சீக்கிரமே அடுத்ததையும் குலைத்து விடலாமென்ற உத்வேகங்களே - இந்தத் தொடர் "Anti சந்தா" பிரச்சாரங்களின் பின்னணி என்பது எனது பார்வை ! இலைமறை காய்மறையாது - புண்ணாக்காவது, இப்போதெல்லாம் வெளிப்படையாகவே வன்மங்களைக் கொப்பளிப்பதிலேயே புரிகிறது - யார் யாரது / எந்தெந்தத் திட்டமிடல்கள் / எவ்வளவு பாதிப்புகளைக் கண்டு வருகின்றன என்பது ! யார் பிழைப்பையும் கெடுப்பது நமது நோக்கமே அல்ல ; ஆனால் நாமிருப்பதே இடைஞ்சல் என்று எண்ணுவோரை என்னென்பது ? 

இந்தப் புகை சமிஞைகள் வானவில்லின் ஒரு இருண்ட முனையெனில், நண்பர்களின் ஆரவாரமான கொண்டாடல்களும், நமக்கென உத்வேகங்களுடன் ஒவ்வொரு நிலையிலும் அவர்கள் குரல் கொடுத்து வருவதும், வானவில்லின் வர்ணமயமான மறுமுனை ! பல காலமாகவே  சிலபல FB க்ரூப்களிலும், வாட்சப் க்ரூப்களிலும் நண்பர்கள் நமக்காக குரல் கொடுத்து வருவது கண்கூடு ! ஆனால் இந்த "ஊட்டிக்குப் போகாதீங்க" பாணிப் பிரச்சாரங்களை "அன்பர்கள் அணி" கையில் எடுத்த நாள்முதலாய் - பாசிட்டிவ் உணர்வுகளைத் தெறிக்க விடும் நம் நண்பர்கள், விஸ்வரூபமெடுத்து இன்று நமது ஒவ்வொரு இதழின் வெற்றியிலும் பங்கெடுக்கும் நிலைக்கு உயர்ந்துள்ளனர் ! நல்லவற்றை உரக்கச் சொல்லுவது ; நெருடுபவற்றை எனது கவனங்களுக்குக் கொண்டு வருவது ; வன்மப் பிரச்சாரங்களுக்கு ஜாலியாய் கவுண்டர் பாணியில் கவுன்டர் தருவது ; படித்ததில், பிடித்ததை ஊருக்கே கேட்கும் விதமாய்ப் பகிர்வது - என ஒவ்வொரு நாளும் நண்பர்கள் நமக்கென செய்து வரும் உபகாரங்கள் ஒரு வண்டி ! இதோ - சமீபத்தைய SMASHING '70s சந்தா சேர்க்கைக்குக் கூட நண்பர்களின் பங்களிப்பு அளப்பரியது ! நமது ஐம்பதாண்டு அனுபவத்தில் பார்த்திரா ஒரு சந்தா நம்பரை இங்கு நிஜமாக்கியுள்ளது க்ளாஸிக் நாயகர்களின் கீர்த்திகள் மட்டுமல்ல, நண்பர்களின் அயரா உழைப்புகளுமே ! அதன் பொருட்டு பொதுவெளிகளில் அவர்கட்கு கிடைத்து வரும் அர்ச்சனைகள் + முதல் மரியாதைகளின் வீரியம் தான் அவர்களது உழைப்புகளுக்கான அங்கீகாரங்கள் !! And இந்த வெறுப்புப் பிரச்சாரங்களை வழக்கம் போல தாண்டிப் போக நினைத்த என்னை, இன்றைக்கு இது குறித்த விளக்கமளிக்கச் செய்வதுமே நமக்காக துணை நிற்கும் நண்பர்களின் முயற்சிகளை கொண்டாடிடும்  வேட்கையே  ! Thanks for everything guys ; என்றேனும் ஒரு நாளில் இந்த எதிர்பார்ப்புகள் இல்லாத அன்புகளுக்கு நிச்சயமாய் ஏதேனும் கைமாறு செய்யாது நான் ஓய்வுக்குள் போக மாட்டேன் ! இப்போதைக்கு எங்களது கரம் கூப்பிய நன்றிகளை மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள் !

So where do things stand with SMASHING '70s ?

நண்பரொருவர் - "நான் வேதாளன் வெளியே தனியா கிடைக்காதென்ற காரணத்துக்காகவேண்டி தான் ரெண்டாது சந்தாவுமே கட்டினேன் ; இப்போ கூவிக் கூவி விக்கிறாங்களே ?" என்று ஆதங்கப்பட்டு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார் ! நான் அவருக்களித்த பதில் மேலே விவரித்துள்ள விஷயங்களின் சாரம் & ஓரிரு கூடுதல் தகவல்கள் : 

தகவல் # 1 - நமது ஆன்லைன் ஸ்டோரில் வேதாளர் புக்கை நாங்கள் தனியிதழாய் லிஸ்டிங் செய்திடவில்லை ; செய்திடப் போவதுமில்லை ! 

தகவல் # 2 : If at all ஸ்டால் கிடைக்கும் பட்சத்தில், சென்னைப் புத்தக விழாவுக்கும் சரி, தொடரவுள்ள விழாக்களுக்கும் சரி, வேதாளரை தனியிதழாய் விற்கும் உத்தேசமும் இல்லை ! So எங்கள் அளவில் சொல்லிலும், செயலிலும் வேறுபாடுகள் இராது ! காரிகன் ஸ்பெஷல் -1 வெளியாகும் தினத்தில் தான் அதுவரையிலுமான இதழ்களை தனித்தனியாய் லிஸ்டிங் செய்திடுவோம் ! 

தகவல் # 3 : SMASHING '70s பயணத்தினில் இன்னமும் சில surprises காத்துள்ளன & சந்தா செலுத்தியுள்ளோருக்கு exclusive ஆக ; பெருசாய்ப் புன்னகைக்கக் காரணமின்றிப் போகாது என்ற promise ! 

தகவல் # 4 : இரண்டாவது சந்தா செலுத்தியது வீண் விரயமென்று இன்னமும் தோன்றிடும் பட்சத்தில், no worries - உங்களின் தொகையினை திருப்பித் தந்து விடுகிறோம் நண்பரே ! 

மேற்படி பதிலானது நண்பருக்கு மட்டுமல்ல ; இரண்டோ, மூன்றோ சந்தாக்கள் செலுத்தியிருக்கக்கூடிய நண்பர்களுக்கும் holds good !! நீங்கள் செய்திட வேண்டியதெல்லாம் உங்களின் 2 சந்தா நம்பர்களையும் குறிப்பிட்டு, lioncomics@yahoo.com என்ற நமது மின்னஞ்சலுக்கு "REFUND ONE SANTHA" என்ற வாசகத்தோடு, உங்களின் GPay விபரத்தோடு ஒரு மெயிலைத் தட்டி விட்டால் போதும் ; வேதாளன் புக்குக்கான கிரயத்தை மட்டும் கழித்து விட்டு மீதத்தை மறுதினமே ஆவன செய்திடுவோம் ! 

இது நிச்சயமாய் அசட்டுத் துணிச்சலின் பீற்றலோ, கொழுப்பின் வெளிப்பாடோ அல்லவே அல்ல guys !  இன்றைக்குக் கடைகளில் வேதாளரை தனியிதழாய் வாங்க முடிந்தாலுமே, SMASHING '70s சந்தா சேர்க்கை இன்னமுமே செம வேகமாய்த் தொடர்ந்து வருவதே இந்த க்ளாஸிக் தடத்தின் rousing statement & எனது நம்பிக்கைகளின் அச்சாணி ! And வேதாளர் மாத்திரமல்ல, தொடரவுள்ள ஒவ்வொரு க்ளாஸிக் நாயகருமே முத்திரை பதிக்காது போக மாட்டார்களென்பதில் எனக்கும் சரி, உங்களுக்கும் சரி, பூரண நம்பிக்கையுள்ள போது - இன்றைய வன்ம வெளிப்பாடுகளை  ஜாலியாய்க் கடந்து செல்வதென்ன பெரிய காரியமா  folks ?  "He who laughs last" ....என்று ஏதோ இங்கிலீஷில் சொல்லுவார்களே ; அதை மட்டும் நினைவில் இருத்திக் கொண்டால் போச்சு ! 

மீண்டும் சந்திப்போம் all ; have a great weekend !! See you around & Stay safe !!

Sunday, February 06, 2022

நேற்று..இன்று..நாளை..!

 நண்பர்களே,

வணக்கம். வேதாள மாயாத்மா !! சந்தேகமின்றி இந்நொடியின் நாயகர் இந்த முகமூடி சூப்பர் ஹீரோவே ! ஒற்றை நாளே ஓடியுள்ளது - பிப்ரவரியின் இதழ்கள் உங்கள் கைகளை எட்டி, so pretty early days தான் ! இருந்தாலும் இந்த நொடி வரையிலுமான உங்களின் அதிரடி சிலாகிப்புகள் சந்தேகமறப் பறைசாற்றுவது, மாயாத்மா மீதான நமது  அசாத்திய மையல்களை !! 'ஹய்யய்யய்யோ....நான் இது எதிர்பார்க்கவே இல்லை ; என்க்கு ஆச்சர்யமா இருக்குது ! தேங்க்யூ ஸ்வீட்ஹார்ட்ஸ் !' என்று புதுமுக நடிகைகள் பாணியில் பீலாவும்  விட மாட்டேன் ; "ஆங்...இது எனக்கு முன்னமே தெரியும் சார் ! எதிர்பார்த்திருந்தேன் சார் ...ஐ நோ...ஐ நோ...ஐ நோ...!!" என்று ரகுவரன் பாணியில் போட்டுத் தாக்கவும் மாட்டேன் ! Simply becos ரசனைகளின் ஒரே பக்கத்தில் நீங்களும், நானும் உள்ளோமோ ? Smurfs ; பென்னி ; லியனார்டோ தாத்தா தேர்வுகளில் நிகழ்ந்தது போல, பேப்பயலாட்டம் நானாகவே ஏதேனும் கற்பனையினில் வாழ்ந்து வருகின்றேனா ? என்ற சந்தேகம் இந்த வியாழன் வரைத் தொடர்ந்தது எனக்கு ! Oh yes - உங்களின் சந்தா எண்ணிக்கைகள் சொன்னது செம பாசிட்டிவ் சமாச்சாரத்தினையே ; ஆனால் தேக்ஸாவில் கமகமக்கும் பிரியாணி, இலைகளில் பரிமாறப்பட்டு, வயிறுகளுக்குப் பயணமாகி, திருப்தியான ஏப்பங்களாகவும், நிறைவான புன்னகைகளாகவும் உருமாற்றம் காணும் வரையிலும் சமையல்காரனுக்கு உள்ளுக்குள் உடுக்கை அடிக்காது போகாதே ?!  

பெங்காலி கானகத்தின் முதல்வரை நமது மறுவருகைக்குப் பின்பாய் நண்பர்கள் பலரும் முன்மொழிந்திருக்கலாம் தான் ; ஆனால் எனக்கு நினைவில் நிற்பதோ நமது கோவைக்கார இரும்பு தெய்வம் துள்ளிக் குதித்தபடியே 2014 ஈரோடு புத்தக விழாவின் போது எழுப்பிய கோரிக்கை தான் ! LMS புக் ரிலீஸ் ; ஸ்டாலில் நண்பர்கள் சந்திப்பு என்ற உற்சாகத்தின் மத்தியில் அந்தக் கானக்குரலோன் "வேதாளர் வருவாரா சார் ?" என்று கேட்டபோது பொத்தாம் பொதுவாய் ஏதோ பதில் சொல்லி வைத்திருந்தேன் என்பது மட்டும் ஞாபகமுள்ளது ! அந்த ஆண்டின் அக்டொபர் தான் வேதாளரெனும் கனியினை மடியில் விழச் செய்ய வாய்ப்புள்ளதா ? என்று நான் முதன் முதலாய் முயற்சித்தது - நமது இரண்டாவது இன்னிங்சில் ! மும்பையில் இருந்த அந்நாட்களது ஏஜெண்ட்களிடம் தொடர்கதையாக வேதாளர் கதைகளை நமது இதழ்களில் முயற்சிக்கலாமா ? என்ற ரீதியில் கேட்டிருந்தேன் ! அதன் காரணம் - அந்நேரத்துக்கெல்லாம் King Features நிறுவனமானது தம் நாயகர்களின்  முழுநீளத் தொகுப்புகளுக்கான உரிமைகளை நேரடியாய்  அமெரிக்க ஆபீஸிலிருந்தே  கையாளத் துவங்கியிருந்தது ! இங்கிருந்த முகவர்களுக்கு, தினசரிகளுக்கு, வாராந்தரிகளுக்கு, தொடர்கதைகளுக்கு  உரிமைகளைச் சந்தை செய்யும் பொறுப்பு மட்டுமே எஞ்சியிருந்தது ! So இக்கட உள்ளோரிடம் தொடர்கதைகள் ரூபத்தில் தலைநுழைத்திடுவோமே என்பதே அந்நாட்களின் மஹா சிந்தனை ! "பண்ணலாம் ; ஆனால் ஒவ்வொரு முறையும் 2 பக்கங்களுக்கு மிகுந்திடக்கூடாது" என்று முகவர்கள் சொல்லிய போது என் வேகம் போன இடம் தெரியலை ! ஒரு கணிசமான அளவிலான பக்கங்களை ஒவ்வொரு இதழிலும் நுழைத்தாலன்றி, உங்கள் வீட்டுத் துடைப்பங்களோடு நேர்முகச் சந்திப்பினை நடத்திட உத்திரவாதமானதொரு வழியாக இருக்குமென்பது புரிந்தது - becos முன்னொரு காலத்தில் "காமிக்ஸ் எக்ஸ்பிரஸ்" எனும் ரயிலை விடறேன் பேர்வழியென மு.ச.வா ?  மூ.ச.வா ? என்று தெரிந்திராத ஒரு முட்டுச் சந்துக்குள் போய் முட்டி நின்று, அங்கே ஆளாளுக்கு ஊறப்போட்டு ஊறப்போட்டு ஒரு வாரத்துக்கு வெளுத்தெடுத்தது நேற்றைய நிகழ்வாட்டம் நினைவில் நிற்கி !! In fact - அமெரிக்காவைக் கண்டு பிடித்த கொலம்பசுக்கு நிகராய் "முட்டுச் சந்து" எனுமொரு மர்ம மண்டலத்தை நீங்கள் தேடிப் பிடித்து எனக்கு அறிமுகம் செய்து வைத்த நாட்களே அவை தான் எனலாம் ! 

So திட்டத்தைக் கைவிட்டுவிட்டு வேறு பணிகளின் மும்முரத்தில் மறந்தும் போனேன் ! அடுத்ததாய் வேதாளர் வேட்டையில் நான் ஈடுபாடு காட்டியது 2017-ல் !  சின்ன விலை ; ரெகுலரான சிறுசிறு வேதாளர் black & white கதைகள் என்ற திட்டமிடல் அன்றைக்கிருந்தது !  அமெரிக்காவில் இருந்த அவர்களின் தலைமையகத்தோடு நேரடியாய் பேசிட முனைந்தேன் ! But எனக்கே எனது முன்மொழிவில் அன்றைக்கு அத்தனை நம்பிக்கை இருந்திருக்கவில்லை ; becos கிராபிக் நாவல்ஸ் ; கார்ட்டூன்ஸ் ; டெக்ஸ் சந்தா ; ஆக்ஷன் சந்தா ; மறுபதிப்புச் சந்தா என அந்நேரம் ரவுண்டு கட்டிச் சாத்திக் கொண்டிருந்தோம் ! So ஆண்டொன்றுக்கு மிஞ்சிப் போனால் மூன்றோ, நான்கோ சிங்கிள் ஆல்பங்களைத் தாண்டி வேதாளருக்கு ஸ்லாட்ஸ் ஒதுங்கியிருக்க வழியிராது என்பது எனக்குத் தெரிந்தே இருந்தது ! எனக்கே முழுசாய் ஓ.கே. என்றுபட்டிராததொரு சமாச்சாரம், படைப்பாளிகளுக்கு ரசிக்க வழி ஏது ? Sorry ! என்று கை விரித்து விட்டார்கள் ! அதன் பின்னே மலையாளத்தில் ரீகல் காமிக்ஸ் நிறுவனம் வேதாளரை வெளியிடுவதைக் காட்டி, நண்பர்கள் என்னிடம் கேட்ட கொஞ்ச காலத்தில் மறுக்கா முயற்சித்தேன் தான் ! But கொரோனா ரவுசுகள் துவங்கியிருந்த நாட்கள் அவை ! முழு லாக்டௌன் ; முழுசாய் கடைமூடல் என்ற ரீதியில் பிழைப்பு நாறிக் கொண்டிருக்க, வேதாளருடன் கைகுலுக்கும் முனைப்பு தற்காலிகமாய்ப் பின்னுக்குச் சென்றது ! அந்நேரத்திற்குள் ரீகல் காமிக்ஸ் இங்கிலீஷிலும் வேதாளரை அட்டகாசமாய் வெளியிடத் துவங்கிட, எனக்கு மண்டைக்குள் குடைச்சல் துவங்கியது ! நாட்களின் ஓட்டத்தோடு லாக்டௌன் # 2 வந்து சேர்ந்தது ! தினசரிப் பதிவுகள், முத்து காமிக்ஸ் 50-வது ஆண்டுமலர் சார்ந்த கும்மிகள், என்று நாட்கள் ஓடி வந்தன ! இந்த மைல்கல் ஆண்டினில் என்ன செய்யலாமென்று யோசித்த போது எனக்குத் தோன்றிய concept தான் - "நேற்று..இன்று..நாளை "! 

நேற்றைய ஜாம்பவான்கள் 

+இன்றைய சூரர்கள்

+நாளைய வீரர்கள் 

என நாயகர்களை 3 ஆல்பங்களில் முத்து ஐம்பதாவது ஆண்டுமலர் ஸ்பெஷலினில் அடக்கிட எண்ணினேன் ! ஆனால் ஒரே சமயத்தில் சகலத்தையும் இழுத்து விட்டால் பட்ஜெட் ; பணிச்சுமை என எல்லாமே எகிறி விடும் என்பது புரிந்தது ! So கொஞ்சம் யோசித்த போது, இந்த "நேற்று..இன்று..நாளை.." சமாச்சாரத்தை ஒற்றை மாதத்து ஆல்பங்களுக்குள் அடைப்பதற்குப் பதிலாய், அந்த ஆண்டினையே இந்த concept-க்கான களமாக்கினால் என்னவென்று தோன்றியது !! அதன் பின்னே ஜனித்தவை தான் SMASHING '70s சார்ந்த திட்டமிடல் ; சுஸ்கி-விஸ்கி மீள்வருகை முயற்சிகள் ; இளம் டைகர் தொகுப்பென்ற எண்ணம் ; ஆல்பா ; சிஸ்கோ ; டேங்கோ ; IR$ ; ZAGOR etc etc என்ற புது நாயகர்களின் வேட்டை  et al ! 

உங்களின் பழமைக்காதல்கள் கல்வெட்டுக்களில் பதிக்காத குறையாய் அனைவரும் அறிந்த விஷயம் எனும் போது எனது பிரதான கவனம் அங்கே இருந்தது ! ஆண்டின் 4 பருவங்களுக்கேற்ப, 4 க்ளாஸிக் ஜாம்பவான்களை களமிறக்கினாலென்ன ? என்று யோசித்த போது வேதாளர் & கோ.வைத் தாண்டி வேறு யாரும் மனதில் ஓட்டமெடுக்கவில்லை ! நமது ஆதர்ஷ மும்மூர்த்திகளிடம் புதுசாய்க் கதைகள் லேது எனும் போது - மறுக்கா மறுபதிப்பெனும் பால் கறக்கும் முயற்சிகளில் சுவாரஸ்யம் இருக்காதே ? So முழுமூச்சில் திட்டமிட்ட போது தான் அமெரிக்க Hermes Press செய்து வரும் black & white மெகா தொகுப்புகள் நினைவுக்கு வந்தன ! அவற்றை அமெரிக்காவில் நேரில் பார்த்திருந்த சமயத்தில், அங்கிருந்து  தூக்கி வருவதற்கு சோம்பல்பட்டு வாங்காது விட்டிருந்தேன் ! சரி, அமேசான் உள்ளவனுக்கு அண்டமே அரைஞாண் கயிற்றில் தொங்கும் தானே - சூட்டோடு சூடாய் அமேசானில் ஆர்டர் போடலாம் என்று பார்த்தால் கொத்தோடு, குலையோடு சொத்தை எழுதி வைத்தால் மட்டுமே அந்த இதழ்களை வாங்கிட முடியும் போலும் என்று எண்ண வைக்கும் விதங்களில் விலைகள் ரூ.16,000 ; ரூ.20,000 என்று இருந்தன ! ஒரேயொரு புண்ணியவான் மட்டும் நான்காயிரத்துச் சில்லறைக்கு ஒற்றை புக் வைத்திருக்க, அவசரமாய் அதற்கு ஆர்டர் போட்டேன் ! மூன்று வாரங்களில் கதவைத் தட்டிய வேதாளரை சைடில் இருந்து ; ஓரத்திலிருந்து ; முக்கிலிருந்து, மூலையிலிருந்து - என வெவ்வேறு கோணங்களில் ரசித்தான பின்னே நாமும் இதே போல ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக் கதைகளை தைரியமாய் black & white -ல் ஒரு மெகா தொகுப்பாய்ச் செய்யலாம் என்று துணிந்தேன் ! என் முன்னே இருந்த சபலங்களும், சவால்களும் கணிசம் :

சபலம் : வண்ணத்தில் நாம் முழுசுமாய் மனதைப் பறிகொடுத்திருக்கும் பார்ட்டிஸ் ! And அண்டை மாநிலத்தில் ரீகல் கலரில் தாக்கு தாக்கென்று தாக்கிக் கொண்டிருக்கின்றனர் ! So அதே ரீதியிலான ஜோதியில் ஐக்கியமாகிடும் சபலம் ஆர்ப்பரித்தது ! 

ஆனால் உள்ளுக்குள்ளோ எனக்குத் தடா போட்டது வேதாளர் கதைவரிசையின் உச்சங்கள் இருப்பது புதிய / சமீபத்தைய படைப்புகளில் அல்ல என்ற நம்பிக்கை தான் ! எனது லங்கோட்டு பால்யங்களில் பிதாமகர் Lee Falk & ஓவிய அசுரர் Sy Barry - என்ற கூட்டணியுடன் தான் வேதாள உலாவில் நான் பங்கேற்றிருந்தேன்  எனும் போது, அதுவே நமது துவக்கப் புள்ளியாய் இருந்திட வேண்டுமென்ற நமைச்சல் உள்ளுக்குள் குடியிருந்தது ! So என் முன்னான முதல் சவால், கலரெனும் ஊட்டித் தக்காளி கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இருந்தாலும், கருப்பு வெள்ளையெனும் நாட்டுத் தக்காளியில் உங்களை ஆர்வம் காட்டிடச் செய்வது ! \

சவால் # 2 - க்ளாஸிக் ஜாம்பவான்களில் வேதாளர் டபுள் ஓ.கே. ; ஆனால் மீதப் பேரை உங்களின் பகடிகளிலிருந்து போர்த்தி, இந்தத் திட்டத்தின் அங்கங்களாக்கிட வேண்டிய அவசியம் ! 4 நாயகர்கள் ; ஆளுக்கொரு ஆல்பம் எனும் போது variety அள்ளிடும் ! அதே இடத்தில 4 ஆல்பங்கள், நாலுமே வேதாளர் என்றால், இரண்டாவது ஆல்பத்துக்குப் பின்பாய் லேசாய் அயர்ச்சி எட்டிப்பார்த்து விடும் என்று எனக்குப்பட்டது ! So King Features நிறுவனத்திடம் கோரிக்கையினை முன்வைத்த போது, நான்கு நாயகர்களை 'தகிரியமாய்' தொகுப்புகளில் போட்டுத் தாக்குவது என்று உள்ளுக்குள் உறுதி கொண்டிருந்தேன் ! அதனை, 'லயனுக்கு சந்தா கட்டிப்புடாதீங்க' ஆர்வல அணியினைத் தாண்டி உங்களிடம் கொண்டு சேர்ப்பது எனது சவால் # 2 ஆக இருந்தது !

சவால் # 3 : 'எடுத்தோம், கவிழ்த்தோம் ' என்றில்லாது - ஒரு புதுத் திட்டமிடலுக்கு போதுமான அவகாசம் வழங்கிட வேண்டும் ; knee jerk ரியாக்ஷனாய் முதல் சாத்து விழும் பட்சத்தில், கடையைத் தூக்கிடாது - குறைந்த பட்சமாய் 2 ஆண்டுகளுக்கேனும், 8 ஆல்பங்களுக்கேனும் 'தம்' கட்ட வேண்டுமென்ற எனது நம்பிக்கை ! 'ஒரு வெற்றிக்கு நிறைய பிள்ளைகள் இருந்திடக்கூடும் ; தோல்வியோ அநாதை ' என்று எங்கோ படிந்திருந்தது நினைவுக்கு வந்தது ! பீற்றிக் கொண்டு பிள்ளையார் சுழி போட்டு விடலாம் தான் ; ஆனால் அந்தத் துவக்கம் உங்களின் ஆதர்ஷங்களைப் பெறத் தவறினால், தொடர்ந்திடக்கூடிய 7 ஆல்பங்களைக் கொண்டு பீச்சில் சுண்டலுக்குப் பொட்டலம்  மடிக்கவாச்சும் செய்யலாமென்று நினைத்தால், பீச்கள் கூட பூட்டியே கிடக்கும் காட்சிகள் தான் கண்முன்னே ஓடி வந்தன ! So இந்த முயற்சி 'all or nothing' ரகம் என்பது தெள்ளத் தெளிவாய்ப் புரிந்தே இதனுள் கால் நுழைத்திட வேண்டியிருந்தது ! That was சவால் # 3 !

சவால் # 4 - நடைமுறையிலானது ! ஒரு தடம் ரெடியாய் இருக்கும்  போது, அதன் மீது ஜட்கா வண்டியையோ, பென்ஸ் காரையோ செலுத்த ஓரளவுக்கு நொள்ளையில்லாத கண்களும், கொஞ்சமாய் பாதைகள் பற்றிய ஞானமும் இருந்தால் போதும் தான் ! ஆனால்  'புளிசாதத்தை நீயே கட்டிக்கினு, ரோட்டையும் நீயே போட்டுக்கினு, டயரை உருட்டிக்கினோ, அரைபாடி லாரியை ஒட்டிக்கினோ ஊர்போய்ச் சேர்ந்துக்கோ மாப்பு !' என்பதே நிலவரம் என்றால் பேந்தப் பேந்த முழிக்க வேண்டிப் போகும் ! இந்த ஆல்பத்தை எந்த format-ல் செய்வது ? என்ன விலை நிர்ணயிப்பது ?  'டூ மச்' என்று தோன்றாமல், 'டூ லிட்டில்' என்றும் தோன்றாமல் எத்தனை கதைகளை இணைப்பது ? மெய்யாலுமே ஒரு collector's edition ஆக இதனை மிளிரச் செய்வதாயின் என்ன பேப்பர் ? என்ன திக்னெஸ்ஸில் ? அட்டைப்படங்களே இல்லாத இந்தக் கதைவரிசைக்கு அட்டைக்கென எங்கு போவது ? என அணிவகுத்த ஒரு வண்டிக்கேள்விகளே சவால் # 4 சார்ந்த புள்ளீங்கோ !

உங்களிடம் கேட்டால், சர்வ நிச்சயமாய் 'பாக்கெட் சைஸ்' ; 'ரெகுலர் சைஸ்' என்பதைத் தாண்டி இந்த MAXI சைசுக்கு வோட்டுப் போடவே மாட்டீர்கள் என்பது தெரியும் தான் ! பக்க எண்ணிக்கையென்ற கேள்விக்கு கவிஞர் 'நாலாயிர திவ்ய பிரபந்தம் ' என்று பதில் சொல்லுவார் ; இல்லாங்காட்டி ஆயிரம் பக்கங்களென்றெல்லாம் பரவலாய் பதில்கள் வரும் என்பதுமே யூகிக்க முடிந்தது ! ஆனால் எனக்கோ - இந்த MAXI சைசில், ஒரிஜினல் artwork அதே சைஸ்களில், அமைப்புகளில் பிரம்மாண்டமாய் வந்தால் மட்டுமே ஒரு wow factor சாத்தியமாகிடும் என்பதில் திட நம்பிக்கை இருந்தது ! பக்கங்களுமே 200 என்ற ரீதிக்கு மேலிருந்தால் overkill ஆகிப் போகும் என்று நினைத்தேன் ! ஆனால் அதே சமயம் புக்கும் பார்வைக்கு சொங்கியாய்த் தெரியாது புசு புசுவென்று காட்சி தந்தாக வேண்டும் ! So முழுக்கவே எனது இந்த concepts & visualisation - உங்களின் பொதுவான ஆதர்ஷ சமாச்சாரங்களுக்கு நேர் எதிர் திசையில் தானிருக்கப் போகிறது என்பது புரிந்தது !; ஆனாலும், அதையும் மீறி, உங்களை இந்தத் திட்டத்தினில் பங்கேற்கச் செய்திட வேண்டும் என்பதே பகாசுர சைசிலான சவால் !  

புயல் எச்சரிக்கைச் சின்னங்களைப் போல ஒவ்வொரு சவாலும் எழுந்து நிற்பது புரிந்தாலுமே, எனக்குள் ஒருவித குருட்டு நம்பிக்கை - நிச்சயமாய்  இந்த முயற்சி குடைசாய நீங்கள் அனுமதிக்க மாட்டீர்களென்று ! இன்றைக்கு யோசித்தால் அன்றைக்கு நான் இம்மி கூட தயங்கவில்லை என்பது மட்டுமே நினைவில் உள்ளது ! அதைத் தாண்டி இந்த ரிஸ்க் ரஸ்க் சாப்பிட அன்றைக்கு எனக்குத் தெம்பூட்டிய லாஜிக்கான விஷயமாய் வேறெதுவுமே நினைவுக்கு வர மாட்டேன்கிறது ! முழுக்க முழுக்கவே உங்கள் மீதும், க்ளாஸிக் நாயகர்கள் மீதும், எனது gut feel மீதுமான நம்பிக்கையே இதனுள் என்னை இறக்கி விட்டதென்பது தான் வார்னிஷ் இல்லாத நிஜம் ! 

And ஒற்றை இதழ் + ஒண்ணரை நாட்களின் சிலாகிப்புகள் - கூரை மீதேறிக் கூவிடும் முகாந்திரமாகிடாது என்பது புரிகிறது ! And இப்போது கடந்திருப்பது தான் "வேதாளர்" எனும் சுலபமோ, சுலபமான தேர்வு ; காத்திருப்பன டைனோசர் போல வாய் திறந்து காத்திருக்கும் கடினர்கள் என்பதுமே புரிகிறது ! And இந்த ஒற்றை வெற்றி ஓராண்டின் வெற்றியாகிட இன்னும் மூன்று பங்கு தூரம் கடந்திட வேண்டியுள்ளது என்பதுமே புரிகிறது ! ஆனால் 'a job well begun is half done' என்பதில் தீரா நம்பிக்கை கொண்டவன் நான் ! So ஆண்டவன் கருணையில், அழகாய்த் துவங்கியுள்ள பயணமானது, சீராய்த் தொடர்ந்திடுமென்று நம்புவேன் ; பிரார்த்திப்பேன் !  So இது தான் மாயாத்மாவின் துவக்கப் புள்ளியின் பின்னணி ! பணிகள் பற்றி, இதர சின்னச் சின்ன நுணுக்கங்கள் பற்றி ; முக்கியமாய் இணைப்பாய் வந்துள்ள மேகி பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாமே !! 

Bye guys....have a super sunday ! See you around ! "போர்முனையில் தேவதைகள்" வெயிட்டிங் ! 


Thursday, February 03, 2022

மாயாத்மாவின் மாதம் ! !

 நண்பர்களே,

வணக்கம். ரொம்ப காலத்துக்குப் பின்னே, தாமதப் பேயின் மறுவருகையுடன் பிப்ரவரி புக்ஸ் இன்றைக்குக் கிளம்புகின்றன ! காரணங்களாய் FFS பணிகள், ஆன்லைன் புத்தக விழா இதழ்களின் தயாரிப்பு etc என்று சொல்லலாம் தான் ; ஆனால் பிரதான காரணி - "வேதாளர் ஸ்பெஷல்" சார்ந்த பணிகளின் பளுவினை நான் சற்றே குறைத்து மதிப்பீடு செய்து விட்டது தான் என்பது புரிகிறது. நேர்கோட்டுக் கதைகள் தானே ; பரிச்சயமான நாயகர் தானே ; black & white இதழ் தானே - 200 பக்கங்கள் தானே ; பார்த்துக் கொள்ளலாம் !! என்றதொரு அசட்டை எப்படியோ உள்ளுக்குள் குடிபுகுந்திருந்ததை மறுக்க மாட்டேன் ! ஆனால் பணிகளைக் கையில் எடுத்த பின்னே தான் ஒரு கானகப் புதுமொழி புரிந்தது :

"நடமாடும் மாயாத்மாவினை light ஆக எடுத்துக் கொள்பவன் பிரகாசமான பல்ப் வாங்கியே தீருவான்" 

தவிர, hardcover இதழ் என்பதால் பைண்டிங்கிலும் காலில் வெந்நீரை ஊற்றும் படலம் ஒர்க் அவுட் ஆகிடுவதில்லை ; பொறுமை காத்திட வேண்டியுள்ளது ! Ever so sorry guys for the delay !!

And at this point - ஒரு முக்கிய குறிப்புமே !! தொடரும் காலங்களில் இந்த hardcover புக்ஸ் மீதான லயிப்புக்குக் கொஞ்சம் விடுமுறை தந்திட வேண்டி வரும் போலும் ! எந்த நேரத்தில்  'ஹார்ட்கவருக்கு ரூ.30 to ரூ.35 தான் கூடுதலாய் ஆகுமென்று' சில மாதங்களுக்கு முன்பாக திருவாய் மலர்ந்து தொலைத்தேனோ - தெரியலை ; டிசம்பரில் ஏறியுள்ள செலவினங்களின் கிரயம் நாக்குத் தொங்கச் செய்கிறது ! இறக்குமதி செய்யப்படும் அந்த கனத்த அட்டைகளின் விலைகளில் துவங்கி, அட்டைப்பட நகாசு special effects-களுக்கு நாம் செய்திடும் வேலைகளுக்கான (இறக்குமதி செய்யப்படும்) உட்பொருட்கள் வரை அத்தனையும் ஒரு புது உச்ச விலையினில் குந்திக் கிடக்கின்றன  ! இதோ - இந்த MAXI சைசிலான வேதாளர் புக்கின் hardcover அட்டைக்கென ஆகியிருப்பது குறைந்த பட்சமாய் ரூ.50 இருக்கும் !! இன்னுமொரு முப்பதோ, நாற்பது ரூபாய்களை சேர்த்துச் செலவிட்டால், ஒரு ரெகுலர் லக்கி லூக் மாதிரியான இதழையே உங்களிடம் தந்துவிடலாம் எனும் போது இனியும் இந்த hardcover விரயங்கள் தேவையா ? என்ற கேள்வி எழுகின்றது ! Of course - அறிவிக்கப்பட்டுள்ள எல்லா SMASHING '70s இதழ்களும் ஹார்ட் கவரில் தான் வெளியாகிடும் & தொடரவுள்ள TEX க்ளாசிக்ஸ் 2-ம் தான் ! அவை தவிர்த்து இனி திட்டமிடவுள்ள ஸ்பெஷல் இதழ்களுக்கு ஒரு dust jacket மட்டும் போட்டு விட்டால் போதுமே என்று தோன்றியது ! தாக்குப் பிடிக்க இயலா உச்சங்களில் அத்தனை உட்பொருள்களுமே தெறிக்க விட்டு வரும் நிலையில், இயன்ற இடங்களில் எல்லாம் இனி சிற்சிறு சிக்கனங்கள் அத்தியாவசியமாகிடும் folks ! எல்லா விலையேற்றங்களுக்கும், (நம் தரப்பிலான) இன்னொரு விலையேற்றம் பதிலாகிடாது என்பது எனது எண்ணம் ; so இயன்ற சர்க்கஸ் வேலைகளை செய்திட உங்களின் புரிதல் நமக்கு அத்தியாவசியம்  ! 

Of course, நாமிங்கே அஞ்சு ரூபாய்க்கும், பத்து ரூபாய்க்கும் சட்டையைக் கிழித்துக் கொண்டு திரியும் அதே வேளைகளில் - அசால்ட்டாய் "ரூ.35,000 ஒன்லி ; GST கிடையாது ; பேக்கிங் சார்ஜஸ் கிடையாது" என்று ஸ்டாக்கில் இல்லாத ஸ்பெஷல் இதழ்களில் சகாயமாய்க்  கடைவிரிக்கும் கூத்துக்களும் அரங்கேறி வருகின்றன தான் ! கூட்டணி போட்டு வெவ்வேறு பெயர்களில் அவற்றை அவ்வப்போது மொத்தமாய் வாங்கி வைத்து, ஒரு மூணு, நாலு வருஷங்களுக்குப் பின்னே வெளியே எடுத்து விட்டால், விநாயகர் கடாட்சங்கள் சுபிட்சமாய்க் கிடைக்குமென்பதைப் புரிந்திருக்கும் அசாத்தியர்கள் இருந்திடும் வரையிலும் இரத்தப் படலங்களும், டெக்ஸ் வில்லர் ஸ்பெஷல்களும், LMS-களும் பணம் காய்க்கும் மரங்களாய் இருந்திடவே செய்திடும் ! இதோ லேட்டஸ்ட்டாய் அந்தப் பட்டியலில் இணைந்திடவிருக்கும் வேதாளர் ஸ்பெஷல் இதழினில், வாசிப்புக்கென புக்கிங் ஆகியுள்ளது எவ்வளவு ? அவரவரது எதிர்கால ஷேம நிதிகளுக்கான முதலீடுகள் எவ்வளவு ? என்பதற்குக் காலம் தான் பதில் சொல்லும் ! 

And தொடரும் நாட்களில் SMASHING 70's பெயரைச் சொல்லி கம்பு சுற்றும் படலங்கள் ஆங்காங்கே அரங்கேறிடுவதைப் பார்க்க நேரிட்டால் ஆச்சர்யமே கொள்ள மாட்டேன் - simply becos ஸ்பெஷல் இதழ்களோடு ஏகப்பட்ட மறைமுக agenda-க்கள்  புழங்கிடுவது இப்போதெல்லாம் சகஜமாகியுள்ளது ! 'சந்தா கட்டிப்புடாதீங்க மக்களே ; உங்களுக்கு வேதாளர் மட்டும் வேணும்னா அதை கடைகளில் வாங்கிக்கலாமே ?" என்று கூரையேறிக் கூவி வந்த ஆர்வலர்கள், வேதாளர் புக் மட்டும் தனியா விற்பனைக்கு வரும் நாளை ஆவலோடு எதிர்நோக்கியிருப்பர் என்பதிலுமே no secrets ! Oh yes, வேதாளர் புக் ஏஜெண்ட்களிடமிருந்தும் விற்பனைக்கு வரும் தான் - ஆனால் அவை எல்லாமே, 4 இதழ்களுக்கும் சேர்த்து நம்மிடம் commit செய்திருக்கும் முகவர்களிடமிருந்து மாத்திரமே ! இந்த க்ளாஸிக் நாயகர்களின் தடத்தைப் பொறுத்தவரையிலும், இந்த நடப்பு ஆண்டிற்கு மட்டுமாவது 'all or nothing' என்றே முகவர்களுக்குமே வலியுறுத்தி வந்திருக்கிறோம்  ! இது வரைக்கும் ஆர்டர் செய்துள்ள முகவர்கள் அதற்கேற்பவே முன்பதிவுகள் செய்துள்ளனர் and, இனி தொடரவுள்ள ஆர்டர்களுக்குமே அதுவே template ஆக இருந்திடும் ! Maybe இந்த SMASHING  '70s அட்டவணையிலுள்ள இதழ்களை முகவர்கள் / வாசகர்கள் தேர்வு செய்து மட்டும் வாங்கிட எண்ணும் பட்சத்தில் அது இந்த அக்டொபரில் சாத்தியமே ! 4 இதழ்களும் வெளியான பின்னே, ஸ்டாக் உள்ளவற்றினுள்ளிருந்து தெரிவு செய்து வாங்கிக் கொள்ளும் வாய்ப்புகளும் நிச்சயமாய் இருக்கவே செய்திடும் ! 

அப்புறம் இன்னொரு மாற்றமுமே - விற்பனையாளர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கும் விதமாய், இம்மாதத்தினில் !! "FFS மற்றும் பொங்கல் விடுமுறைகளின் போது வெளியான TEX க்ளாசிக்ஸ் இதழ்களை விற்றுக் கொள்ள கொஞ்சமேனும் அவகாசம் இருந்தால் தேவலாமே ; பின்னாடியே அடுத்த புது டெக்ஸ் இதழ் தொடர்ந்திடும் பட்சத்தில் எங்கள் விற்பனை திணறிடும்..... and ஏற்கனவே வேதாளர் எனும் மாஸ் நாயகரின் ஸ்பெஷல் இதழும் இம்மாதம் வெளியாவதால் கொஞ்சம் மூச்சு விட்டுக் கொள்ள அவகாசம் அவசியம் !" என்பது முகவர்களின் பரவலான அபிப்பிராயமாக இருந்தது. So இம்மாதத்து டெக்ஸ் மார்ச்சுக்கென மாற்றம் காண்கிறார் ; ஆகையால் பார்சலில் டெக்ஸைக் காணோமே - என்று தேடாதீர்கள் ப்ளீஸ் ! Smashing '70s சந்தாவிலோ ; ஜம்போ சீசன் 4 சந்தாவிலோ இல்லாத நண்பர்களுக்கு இம்மாதம் ஒரேயொரு ப்ளூ கோட் இதழ் மட்டுமே கூரியரில் இருந்திடும் ! Sorry guys ; நியாயமானதாய்த் தோன்றிய விற்பனையாளர்களின் கோரிக்கைக்கு இசைவு சொல்ல நேரிட்டதை புரிந்து கொள்வீர்களென்று fingers crossed !! 

And இனி வரும் பொழுதுகளில், இடைச்செருகலான ஸ்பெஷல் இதழ்களை "முன்பதிவுகளுக்கு மட்டும்" என்று கொண்டு சென்றுவிடுவது தான் இதற்கான தீர்வென்றுபடுகிறது ! நடுவாக்கில் உட்புகும் இதழ்களை சமாளிக்க முகவர்கள் திண்டாடுவதைப் பார்க்கும் போது சங்கடமாக உள்ளது ! Next in line - "சுஸ்கி & விஸ்கி" + "உயிரைத் தேடி" தான் எனும் போது அவற்றை எவ்விதம் கையாள்வதென்ற மகா சிந்தனை ஓடிவருகிறது ! யோசிக்கணும்....தெளிவாய் யோசிக்கணும் !

Moving on to brighter stuff, இம்மாதத்து கலர் இதழ்கள் சகலமும் சும்மா தீயாய் மிளிர்வதையும் நாளை நீங்கள் ரசிக்காது போக மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுள்ளது எனக்கு ! அண்டர்டேக்கர் ரொம்ப, ரொம்ப சமீபத்தைய ஆக்கம் எனும் போது அந்த லேட்டஸ்ட் டிஜிட்டல் கலரிங் பின்னிப் பெடல் எடுக்கிறது ! அதே போல ப்ளூகோட் பட்டாளத்தினர் கண்ணைப் பறிக்கும் கலரில் லூட்டியடிக்கின்றனர் ! கதையிலுமே கொஞ்சம் 'கலர்' உண்டு என்பதை நாளை பார்க்கலாம் ! சமீபத்தைய Blue Coats கதைகளுள் இது அட்டகாசமானதொரு addition என்பேன் !  And this is from The Undertaker :

And கறுப்பு-வெள்ளையினில் இருந்தாலுமே 'வேதாளர் ஸ்பெஷல் 'பளிச்' என்று வந்திருப்பதாகப்பட்டது எனக்கு ! Oh yes - நமக்கு 'வெடிக்க மறந்த வெடிகுண்டு' கூட செமையாய்த் தெரிவதுண்டு தான் ; ஆனால் "வே.ஸ்பெ." நிஜமான collector's edition ஆக மிளிர்வதாய்ப்பட்டது ! க்ளாஸிக் கதைகளெனும் போது இவற்றை இந்திரஜாலிலோ ; ராணியிலோ ; வேறெங்கோ நீங்கள் பார்த்து இருக்கக்கூடும் ; but நம்மளவில் அவையெல்லாமே புதியனவே ! அந்த maxi format-ல் வள வள வசனங்களின்றி, ஓவியர் Sy Barry-ன் சித்திரங்களில் ஒரு மெகா தொகுப்பாய் இது ரொம்ப காலத்துக்கு நிலைத்திருக்கும் வாய்ப்புகள் பிரகாசம் என்பது எனது நம்பிக்கை ! And more importantly - பத்து வயதை அனுசரித்த உங்கள் இல்லங்களது ஜுனியர்களுக்கு இவை அற்புதமானதொரு வாசிப்புத் துவக்கப் புள்ளியாய் அமைந்திடக்கூடும் ! சிம்பிளான மொழிநடையில் ; நேர்கோட்டுக் கதைகளை ; ஒரு ஜாம்பவான் நாயகரோடு ; பசங்களை ஈர்க்கும் கானகப் பின்னணியில் சொல்லிடும் இந்த முயற்சியினை உங்களது அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்திட முயற்சியுங்களேன் - ப்ளீஸ் ? And வேதாளரின் இதழோடு ஒரு சின்ன சர்ப்ரைஸ் + ஒரு போஸ்டர் + ஒரு bookmark +  இலண்டனுக்குப் போகவொரு இலவச டிக்கெட்டும் இருந்திடும் ! So பொட்டி, படுக்கையெல்லாம் கட்டி வைத்து ரெடியாக இருங்கோ guys ! பாஸ்போர்ட்டே இல்லாங்காட்டியும், ரேஷன் கார்டையோ ; மண்ணெண்ணெய் கார்டையோ தூசி தட்டி எடுத்து வைத்துக் கொண்டால் கூட ஓ.கே. தான் ! நாளைய பொழுதில் தெரியும் நான் சொல்வதன் பொருள் !

Bye for now !! பார்சல்களை  வாங்கிய கையோடு நாளைக்கு சந்திப்போம் guys ; have a great day !! See you around !!