நண்பர்களே,
வணக்கம். ‘அதோ வருது.... இதோ நெருங்கி விட்டது‘ என்று வெவ்வேறு காரணங்களுக்காக, வெவ்வேறு விதமான எதிர்பார்ப்புகளை நம்முள் விதைத்திருந்த தீபத் திருநாள் இதோ புலர்ந்தும் விட்டது! ‘திடும்‘; ‘திடும்‘ என்று எழும் ஓசைகளும், ‘ஊஊஷ்ஷ்‘ என்ற சீற்றச் சத்தங்களும் சந்து பொந்தையெல்லாம் நிறைத்து உற்சாகமான தீபாவளிக் கொண்டாட்டங்களைப் பறைசாற்றுகின்றன ! நம் பங்குக்கு, இரவுக் கழுகாரும், டீமும் முழுவீச்சில் அதிரடி நடத்தும் தீபாவளி மலரின் மார்க்கமாய் சின்னதொரு சரவெடியைக் கோர்த்துவிட்ட சந்தோஷத்துடன் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்களைச் சொல்லிக் கொள்கிறோம்! Have a wonderful & safe Diwali all!
நல்ல நாளும் பொழுதுமாய், ஆளாளுக்குச் சொந்த ஊர்ப் பயணம்; குடும்பங்களோடு புதுப் பட outing ; டி.வி.யில் பட்டிமன்ற லயிப்புகள் என்று பிஸியாக இருக்கும் இந்த வாரயிறுதியில் - ‘அது வந்துடா பேராண்டி... அந்தக் காலத்தில் எப்படியிருந்தோம் தெரியுமா ?‘ என்ற ரேஞ்சில் இன்னமுமொரு விசாலமான ப்ளாஷ்பேக்கை எடுத்து விட்டு உங்களை நான் கொலையாய்க் கொல்வதாகயில்லை ! மாறாக- நமது இந்த நெடும் பயணத்தின் ஒரு வெகு சமீப மைல்கல் தருணத்தைப் பற்றிச் சொல்லி விட்டு I am ஜுட்!
ஆண்டாண்டு காலமாய் இந்தக் காமிக்ஸ் துறையில் நாமுள்ளோம் தான் ; மூன்று தலைமுறைகளை இந்தப் பயணம் பார்த்து வருகிறது ; வண்டி வண்டியாய் இதழ்களை வெளியிட்டுள்ளோம் தான் ! ஆனால்- நமது முயற்சிகளை “2012க்கு முன்” & “2012க்குப் பின்” என்று வரலாறு (ஹி! ஹி! ஹி!) பிரித்துப் பார்க்குமென்பது உறுதி ! இந்த இரண்டாம் வருகையின் போது - பெரிய சைஸ்; வண்ணம்; தயாரிப்பில் இயன்ற முன்னேற்றங்கள் என்பதோடு கதைக் களங்களிலும் ஒரு புதுத்தேடல் இருப்பதை நாமறிவோம் ! இவற்றிற்கெல்லாம் உங்களது ஆரவாரமான பாராட்டுக்களும், சிலாகிப்புகளும் தொடர்ந்து இருந்து வருவதில் இரகசியமில்லை ! ஆனால் வெகு சமீபமாய் இவற்றிற்குக் கிட்டியுள்ளதொரு அசாத்திய அங்கீகாரம் - நம் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் ரகத்திலானது!
‘ஆலையிலா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை‘ என்ற கதையாக - நமது அந்நாட்களது பாக்கெட் சைஸ்கள் & நியூஸ் பிரிண்டில் b&w கதைகளும் உங்களின் வாஞ்சைகளுக்கு உகந்தவைகளாகவே இருந்து வந்துள்ளன ! நிஜத்தைச் சொல்லப் போனால் - ‘பழசா? புதுசா?‘ என்ற கேள்வியை இன்றைக்கு முன்வைத்தாலும் உங்களுள் ஏராளமானோர் - அந்நாட்களது ஆக்கங்களுக்கே ‘ஜே‘ போடுவீர்கள் என்பதை நானறிவேன் ! ஆனால் நமது குறுகிய காமிக்ஸ் வட்டத்தைத் தாண்டிய வேறு எவரும் அன்றைய நமது இதழ்களுக்கொரு இரண்டாவது பார்வையை நல்க ஆர்வம் காட்டியிருந்ததாக எனக்கு நினைவில்லை ! ‘இவை தான் நாங்கள் வெளியிடும் இதழ்கள் !‘ என்று பந்தாவாய் ஒரு ஸ்பைடரையோ; ஆர்ச்சியையோ நான் நீட்டினால் - படைப்பாளிகளில் முக்கால்பங்கினர் சின்னதொரு செயற்கையான புன்னகையோடே- ‘Nice!’ என்று சொல்லிக் கொள்வார்கள். என் தலை அந்தப் பக்கமாய் அகன்ற மறுகணமே அவற்றைக் குப்பைக்கூடைகளுக்கு அனுப்பியிருப்பார்கள் என்பதில் எனக்குச் சந்தேகங்கள் இருந்ததில்லை ! வெளிநாட்டினர் ஏன் ? - உள்ளுர்களிலேயே ஒரு லேண்ட்மார்க் புக்ஷாப்பிலோ; ஹிக்கின்ம்பாதம்ஸிலோ; இண்டியா புக் ஹவுஸிலோ நமது இதழ்களைப் பார்க்கும் போது ‘ஓஹோ! இது தான் உங்க ‘ஓஹோ புரொடக்ஷனோ?‘ என்ற மாதிரியே ஒரு லுக் விடுவதை நான் பல தடவைகள் அனுபவத்தில் கண்டிருக்கிறேன் ! ஆனால் அத்தனைக்கும் பிறகும் நமது படைப்பாளிகள் நம்மைக் கைவிடாது - தொடர்ந்து கதைகள் தந்து வந்தது எந்தச் சாமியின் புண்ணியமோ- சத்தியமாய்த் தெரியாது ! ஆனால் post 2012- நிலவரமே தலைகீழ் எனலாம்!
வழு வழு ஆர்ட் பேப்பரில் ; பளா பளா வண்ணத்தில் ; ஒரு தெளிவான சைஸோடு நாம் வலம் வரத் துவங்கிய நாள் முதலாய் - காமிக்ஸ் அபிமானமிலா புதியவர்கள் கூட நின்று நமது இதழ்களை ரசித்து வருவதை ஏகப்பட்ட புத்தகவிழாக்களில் கவனிக்க முடிந்துள்ளது ! அதையெல்லாம் விடப் பதிப்பகத்துறையில் பழம் தின்று கொட்டை போட்ட ஜாம்பவான்கள் பலரின் விழிகளிலும் ஒரு ஆச்சர்யம் தெறிப்பதை உள்ளுக்குள் சத்தமில்லாமல் ரசித்திருக்கிறேன் ! நம் மீதும், காமிக்ஸ் ரசனை மீதும் கொண்டுள்ள பிரியத்தின் காரணமாய், சில பல குறைகளை நீங்கள் ஒதுக்கி விட்டு பாராட்டுக்களை அள்ளித் தெளிப்பது இயல்பே ! ஆனால் இதே துறையிலுள்ள - இந்தச் சிரமங்களைப் புரிந்து வைத்திருக்கும் சக பத்திரிகையாளர்கள் வியப்புக் கொள்ளும் போது - அதனை ஒரு மெகா compliment ஆக எடுத்துக் கொள்வேன் ! சரி - நம்மூர் பாணிகளுக்கு இதுவொரு மேல்நோக்கிய மாற்றமே என்றாலும் - மேற்கத்திய நாடுகளின் தரங்கள் முன்பு இப்போதும் கூட ஜுஜுப்பிக்களே என்பதை நிச்சயமாய் மறுக்கப் போவதில்லை நான் ! ஆனால் நமது படைப்பாளிகளே கூட நம்மின் இந்த மாற்றங்களை- ‘அடடே!‘ என்று ரசிக்கத் துவங்கியிருப்பது நமது பயணப்பாதைக்கொரு பெட்ரோமேக்ஸ் வெளிச்சம் என்பேன் ! அத்தகையதொரு தருணத்தில் துளிர் விட்டது தான் இந்தப் பதிவிற்கானப் பின்னணிக் காரணம்!
இந்த ஆண்டின் துவக்கப் பகுதியினொரு மதியப் பொழுது அது ! பாரிசிலிருக்கும் நமது படைப்பாளிகளின் அலுவலகத்தில், அதிசயமாய் ஒரு செம relaxed சந்திப்புக்கு வாய்ப்புக் கிட்டியிருந்தது. பொதுவாகவே நான் ‘விசிட்‘ அடிக்கவிருக்கிறேன் எனில் - என்னென்ன பேசிடத் தேவையிருக்குமோ அவை அனைத்தையும் தயாராக வைத்திருப்பார்கள் ! ‘வாம்மா... மின்னல்‘ என்ற வேகத்தில் நான் ஆஜராகிட, லொட லொடவென மூச்சு வாங்காமல் பேசி விட்டு, திடுபுடுவென புறப்பட்டு விடுவேன் என்பது அவர்களுக்குத் தெரியும் ! நான் அத்தனை ‘ஆணி பிடுங்கும் பிஸி‘ என்பதை விடவும் - நமக்கென மெகாப் பரிவோடு ஒத்தாசை செய்து வரும் படைப்பாளிகளின் நேரத்தைத் தேவையின்றி ஸ்வாஹா செய்த பாவம் வேண்டாமே ! என்ற ஜாக்கிரதையுணர்வு தான் எனது ‘மின்னல் மனிதன்‘ அவதாரத்தின் பின்னணி! ஆனால் அன்றைய பொழுதுதோ அவர்களே ஜாலியாய் கொஞ்சம் அரட்டையடிக்கும் மூடில் இருக்கிறார்கள் என்பது புரிந்தது ! ‘அட்ரா சக்கை‘ என்ற துள்ளலோடு அவர்களைப் பேச அனுமதித்து விட்டுப் பராக்குப் பார்க்கத் தொடங்கினேன் ! ஊர்க்கதை, உள்ளுர்க்கதை என்றெல்லாம் பேசி விட்டு, நமது “இரத்தப் படலம்” மெகா b&w தொகுப்பை தனது மேஜையோரத்திலிருக்கும் ததும்பி வழியும் அலமாரியின் மேலிருந்து எடுத்தார் ! நன்றாகவே பழுப்பேறி விட்டிருந்தது அந்த நியூஸ் பிரிண்ட் இதழ் ! ஆனாலும் அதனை ஒரு சந்தோஷப் பார்வை பார்த்து விட்டு- “ஓவியர் வில்லியம் வான்ஸ் இதனில் 2 பிரதிகள் கேட்டு வாங்கினார் !” என்று ஜாலியாகச் சொன்னார் ! நான் பிரமித்துப் போனது போல முகத்தை வைத்துக் கொண்டேன் - ஏனெனில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இதே விஷயத்தை என்னிடம் ஒரு நாலைந்து தடவைகளாவது சொல்லியிருப்பார் ! ஆனால் இன்னமும் என்னைப் பார்க்கும் போதெல்லாம் அந்தத் தலையணை பருமன் இதழின் ஒரு வசீகரம் அவரையுமறியாது உற்சாகம் கொள்ளச் செய்யத் தவறுவதில்லை ! பேசிய கையோடு நமது “மின்னும் மரணம்” வண்ண இதழையும் அருகில் வைத்துக் கொண்டு- ‘you have come a long distance!” என்றார் ! நான் சட்டி, பெட்டியைக் கட்டிக் கொண்டு வந்திருக்கும் பயண தூரத்தை விடவும், நமது காமிக்ஸ் பயணத்தில் கடந்திருக்கும் தூரத்தைத் தான் அவர் குறிப்பிடுகிறார் என்பதால் வாயெல்லாம் மொச்சைக் கொட்டைப் பற்களானேன் ! கிட்டவே கிடந்த லார்கோ; சுட்டி லக்கி, XIII வண்ண இதழ்களையும் புரட்டிக் கொண்டே “ஆசியா முழுவதுமே தரம் கூடிச் செல்லும் காலத்தில், நீங்கள் மாத்திரமே பின்தங்கி நின்றது சற்றே வருத்தம் தந்தது தான் ; ஆனால் இப்போது தேறி விட்டீர்கள் ! You are doing o.k.!” என்றார். சீனாவில் வெளியாகும் லக்கி லூக் வண்ண இதழ்கள் அவர் மேஜையின் இன்னொரு ஓரத்தில் குந்திக் கொண்டிருந்ததை நான் ஏற்கனவே பார்த்திருந்தேன் ! நாமெல்லாம் பெருமூச்சு மட்டுமே விடக்கூடியதொரு தரத்தில் சீனப் பதிப்பகம் அமர்க்களப்படுத்தியிருந்தது ! அவர்களது விலைகளும் அதற்கேற்ற உச்சத்தில் இருப்பது எங்கள் பரஸ்பர கவனங்களுக்கு ‘டிமிக்கி‘ கொடுத்திருக்கவில்லை ! மெதுவாகப் பேச்சு அந்தப் பக்கமாய் பயணம் செய்தது!
”ஒரு யூரோவுக்கும் குறைவான விலையில், இத்தனை சின்ன சர்குலேஷன் வைத்துக் கொண்டு எப்படித்தான் தாக்குப் பிடிக்கிறீர்கள் ? இந்த சீனப் பதிப்பைப் பாருங்களேன்- விலையும் ஒப்பீட்டில் அதிகம் & they sell much much more than you do !” என்று சொன்னார்கள் ! “அடேய் கடன்காரா... எங்களுக்கு ராயல்டியாக நீ தரும் பணம் இங்கே பேரீச்சம்பழம் வாங்கத் தான் சரிப்படும்! என்ற புகார் வாசிக்கும் தொனியல்ல அது ! மாறாகக் கடந்த 30 வருடங்களாய் அவர்களுக்குப் பரிச்சயமானதொரு முகம் - இன்னும் சற்றே வளமாய் தொழிலில் கால் பதித்து நின்றால் சந்தோஷமாக இருக்குமே என்ற பரிவும், ஆதங்கமும் கலந்ததன் வெளிப்பாடு என்பதைச் சுலபமாய்ப் புரிந்து கொண்டேன் ! மந்தகாசமாய் ஒரு புன்னகையைப் பதிலாக்கி, வழக்கம் போல நமது பக்கத்து விற்பனைச் சங்கடங்களை லேசாகக் கோடி காட்டிவிட்டு நம்மிடமே காலம் காலமாய் அச்சகம் உள்ளதால் தயாரிப்புச் செலவுகளில் மிச்சம் பிடிக்கும் சாத்தியங்கள் ஓரளவுக்கு உண்டு என்பதையும் சொல்லி வைத்தேன் !
லேசாய் சிந்தனை வயப்பட்டவர், “எங்கள் தேசக் கலாச்சார மேம்பாட்டு மையங்கள், உலகின் சிலபல முக்கிய இடங்களில் உள்ளன ! எங்கள் மொழி சார்ந்த படைப்புகளுக்கு அவர்கள் சில சமயங்கள் ஏதாவதொரு விதத்தில் ஒத்தாசை செய்திடக் கூடுமென்று நினைக்கிறேன்!” என்றார் ! “ஓஹோ...?” என்று கேட்டுக் கொண்டு வேறு ஏதோ சமாச்சாரங்களைப் பேசிவிட்டு விடைபெற்றேன் ! அவர் குறிப்பிட்டிருந்த விஷயத்தைப் பற்றிப் பெரிதாய் அதன் பின்னர் சிந்திக்க நேரமும் இருக்கவில்லை ; ஞாபகமும் இருக்கவில்லை ! நாட்களும், மாதங்களும் விறுவிறுவென்று ஓட்டம்பிடிக்க, மே மாதம் புலர்ந்திருந்தது. பொதுவாக ஜனவரியில் உங்கள் சந்தாக்கள் + சென்னைப் புத்தக விழாவின் விற்பனை வரவுகளென்று ஆரோக்கியம் காட்டும் நமது வங்கிக் கணக்கானது, ஆண்டு மலர் வெளியாகும் ஜுலையின் போது டி.பி. பேஷண்ட் போல காட்சி தரத் தொடங்கும் ! ஆகஸ்டில் ஈரோட்டுப் புத்தக விழா கொஞ்சமாய் க்ளுகோஸ் ஏற்றித் தர, அதன் பின்னே கோவை, மதுரை என்று சிறுசிறு வைட்டமின் டானிக்குகளை உள்ளே தள்ளிக் கொண்டே டிசம்பர் வரை வண்டியை தள்ளிக் கொண்டே போன கதையாகயிருப்பது வாடிக்கை ! ஆனால் இம்முறை சென்னை வெள்ளங்கள் ; புத்தக விழாவின் மட்டுப்பட்ட விற்பனை காரணமாய் மே மாதமே நமது வங்கிக் கணக்கு கள் குடித்த குரங்கு போல தடுமாறத் தொடங்கியிருந்தது ! அப்போது தான் பாரிசின் அந்த மதிய வேளையில் எனக்குச் சொல்லப்பட்டிருந்த அறிவுரை லேசாக மண்டையில் பதிவாகத் துவங்கியது. விறுவிறுவென்று அவருக்கே ஒரு ஈ-மெயில் தட்டி விட்டு, இது தொடர்பாய் யாருக்குத் தொடர்பு கொள்வதென்று கேட்டு வைத்தேன் ! தலைநகரத்திலுள்ள பிரெஞ்சுத் தூதரகத்திலேயே மையம் இருப்பதாகப் பதில் கிட்டியது ! என்ன எதிர்பார்ப்பது என்ற ஐடியா துளியும் இல்லை என்றபோதிலும், நமது சமீப ப்ரான்கோ-பெல்ஜிய இதழ்கள் சகலத்திலும் ஒரு பிரதி வீதம் - மொத்தமாய் சேகரித்து ஒரு அழகான பார்சலாக்கினேன். காக்கைக்குத் தன் இளவல்கள் என்றைக்குமே 916 kdm ரகம் தான் என்றாலும் – ஒரு 4 ஆண்டு உழைப்பின் பலன்களை ஒட்டுமொத்தமாய் மேஜைமீது குவித்துப் பார்க்கும் போது எனக்கே லேசான மலைப்பு எழத் தவறவில்லை ! அந்த மெகா கத்தை இதழ்களோடு சின்னதொரு கடிதத்தையுட் இணைத்திருந்தேன் - நமது 1985 முதலான பிரெஞ்சுக் காமிக்ஸ் நேசங்கள் பற்றியும் ; நாமிதுவரை கைகோர்த்து வரும் பிரபல பிரெஞ்சுப் பதிப்பகங்கள் பற்றியும் எழுதி ! “எங்களது இந்தப் பதிப்புகளை உங்களது நூலகத்தில் ஒரு சிறு அங்கமாக்கின் பெருமிதம் கொள்வோம் !” என்றும் எழுதியிருந்தேன் ! DTDC கூரியரில் பார்சலை அனுப்பி விட்டு மாமூலான பணிகளுக்குள் ஐக்கியமாகியிருந்தேன் !
10 நாட்கள் கழித்துப் புதியதொரு முகவரியிலிருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது ! அவ்வப்போது ஐரோப்பியக் காமிக்ஸ் சேகரிப்பாளர்களிடமிருந்து “ரோஜர் இதழ்கள் வேண்டும் ; சுஸ்கி விஸ்கி வேண்டும் !” என்று மின்னஞ்சல்கள் வருவது வழக்கமென்பதால் அந்தப் பிரெஞ்சுப் பெயர் தாங்கிய மின்னஞ்சல் என் புருவங்களை உயரச் செய்யவில்லை ! ஆனால் அதனை வாசிக்கத் தொடங்கிய போது - மின்சார துவாரத்திற்குள் நமது மாயாவிகாரு விரல் விடும் போது என்ன உணர்ந்திடுவாரோ அதனை நானும் உணர்ந்திட முடிந்தது ! "Dear Mr.Vijayan, உங்கள் கடிதமும், அந்தக் காமிக்ஸ் குவியலும் கிடைத்தன ! And we are simply stunned!” என்று துவங்கிய அந்த மின்னஞ்சலின் வரிகளைப் படிக்கப் படிக்க நமது சுட்டிப் புயல் பென்னியைப் போல நாலுமாடிக் கட்டிடங்களைத் தாண்டிக் குதிக்கக் கூடிய ஆற்றல் எனக்கு வந்ததைப் போல உணர்ந்தேன் !! “இந்தியாவின் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு எங்கள் மொழியின் ஒரு அற்புத அங்கமான காமிக்ஸ்களை இத்தனை அழகாய் இத்தனை காலமாய் வெளியிட்டு வருகிறீர்களென்பது just incredible ! எங்களால் இயன்ற விதங்களில் உங்களுக்கு உதவிடத் தயாராகயிருப்போம்!” என்று தொடர்ந்தது அந்த மின்னஞ்சல் ! அந்தத் துறையின் நிர்வாகியே ஒரு காமிக்ஸ் ரசிகை என்பதால் - அவரது பால்யத்தில் பார்த்தும், படித்தும், ரசித்துமிருந்த எண்ணற்ற தொடர்களை ஒட்டுமொத்தமாய் இங்கு தமிழில் பார்க்க நேரிட்டது அவருக்கொரு திகைப்பான அனுபவமென்பது புரிந்தது !
தொடர்ந்த நாட்களில் நமது விற்பனை விபரங்கள் ; நமது இத்தனை கால அனுபவங்கள் ; தமிழக பதிப்புலக நிலவரங்கள் என சகலம் பற்றியும் மின்னஞ்சல்களும், புள்ளி விபரங்களும் குறுக்கும். நெடுக்கும் பயணமாகத் தொடங்கின ! பாரிஸிலிருக்கக் கூடிய அவர்களது தலைமையகத்துக்கும் அந்த மின்னஞ்சல்கள் copy அனுப்பப்பட, நமது நிலை பற்றியதொரு ஆய்வை அவர்கள் மேற்கொண்டார்கள் ! ஒரு சுபயோக சுபதினத்தில்- “உங்களின் புதிய முயற்சிகளுக்கு எங்கள் மையம் இயன்ற உதவிகளைச் செய்திடுவதென்று தீர்மானித்துள்ளது! உங்களது அடுத்த புதிய இலக்கு என்னவோ?” என்று கேட்டார்கள்! அது நமது Million & More ஸ்பெஷல் பற்றிய திட்டமிடலில் நானிருந்த தருணம் என்பதால் - புது நாயகர் JEREMIAH பற்றியும்; நமது வலைப்பதிவின் 20 இலட்சம் + பார்வைகளைக் கொண்டாடும் விதமாய் அதனை வெளியிடவிருப்பது பற்றியும் விளக்கினேன். “தயாரிப்புச் செலவுகளுக்கு உதவிட ; விளம்பரம் செய்திட உதவிட - எங்கள் மையத்தின் சார்பில் ஒரு தொகையினை மான்யம் போல உங்களுக்குத் தருவதென்றுத் தீர்மானித்துள்ளோம்! ஏற்கனவே நீங்கள் செய்து வரும் முயற்சிகள் அதன் போக்கில் பயணிக்கட்டும் ; புதிதாய் / சற்றே பெரிதாய் நீங்கள் திட்டமிடும் போது எங்கள் ஆதரவு உங்களுக்கு நிச்சயம் இருந்திடும் !” என்று அந்த அதிகாரபூர்வமான கடிதம் பாரிஸ் அமைச்சகத்திடமிருந்து கிட்டிய போது - 1985-ல் பச்சைக் குழந்தையாய் இந்தப் பிரான்கோ-பெல்ஜியக் காமிக்ஸ் உலகினுள் கால் பதிக்கக் கர்ணம் போட்டுத் திரிந்த நாட்கள் என் கண் முன்னே நிழலாடின ! சிட்டாயப் பறந்து விட்ட இந்த 30+ ஆண்டுகளில் நாம் பார்த்துள்ள பிரெஞ்சுத் தொடர்கள் தான் எத்தனை- எத்தனை ? அந்த தேசத்தோடும் ; அவர்களது படைப்புகளோடும் நமக்கு உருவாகியுள்ள அந்த ‘சங்கர் சிமெண்ட்‘ பந்தம் இன்றும் தொடர்வது நமது ரசனைகளுக்கொரு ஷொட்டு தானே ? And அதை நமக்குத் தந்திடும் தேசமே நம்மை இன்று அங்கீகரித்திருப்பது நம் அனைவரது தொப்பிகளிலும் ஒரு வண்மையான இறகல்லவா ? நமக்கு சாங்ஷன் ஆகியுள்ள தொகை நவம்பரில் கைக்குக் கிட்டிடும் ! தொகையின் அளவு எத்தகையாகயிருப்பினும்- அதன் பின்னுள்ள அன்பும், நட்பும், பாராட்டுக்களும் ஒரு மில்லியனுக்கும் அதிகமாகிடாதா ? Take a bow people ! இது உங்கள் அனைவரின் ஒட்டுமொத்த ரசனைகளுக்குமான பாராட்டுகளே ! உங்கள் பங்களிப்புகளின்றிப் போனால் - தண்டவாளமேது ? பயணம் தானேது ?
So- ஜெரமையா தொடரை பிரெஞ்சு அரசின் அன்பான உதவியோடு தொடங்கிடவுள்ளோம் ! இந்த ஏற்பாடுகளெல்லாம் பாதி வழியில் நமக்குக் கிடைத்தவை என்பதால் - Super 6-ன் முதல் இதழாக லக்கி லூக் Classics-ஐக் களமிறக்கி விட்டு, அதன் பின்பாக MILLION & MORE SPL-ஐ தயாரிப்பதெனத் தீர்மானித்துள்ளோம் ! ஈரோட்டுப் புத்தக விழாவின் வாசக சந்திப்பின் தருணத்தில் நான் லேசாகக் கோடிட்டுக் காட்டியது இந்த விஷயத்தையே ! எல்லாமே திடமாகி, நடைமுறை காணும் வரை அதைப் பற்றி வாய் திறக்க வேண்டாமென்று இந்தச் சமாச்சாரத்தை ஜுனியர் எடிட்டரோடு மட்டும் பகிர்ந்திருந்தேன் ! சீனியர் எடிட்டருக்கே இந்தப் பதிவைப் படிக்கும் போது தான் விஷயம் தெரிந்திடும் ! பெவிகால் பூச்சை இந்த நல்ல நாளில் களைவதில் தப்பில்லை என்று தோன்றியதால் இந்தப் பதிவு !! ‘ஒத்தாசை செய்திட நாங்க உள்ளோம்!‘ என்று அவர்கள் சொன்னதற்காக - அவர்களது கதவுகளைத் தினமும் தட்டி நின்று ‘ஹி... ஹி‘ என்று மண்டையைச் சொரியப் போவதெல்லாம் நிச்சயமிராது ! அது பிரியத்தையும், மரியாதையையும் அடமானம் வைக்கச் செய்த முயற்சியாகிவிடும் என்பதில் எனக்குள் சந்தேகமில்லை ! So வழக்கமான நமது தடத்தில் வழக்கம் போலப் பயணிப்போம் ! ஏதேனும் புது முயற்சிகளின் தருணங்களில் இத்தகைய ஒத்தாசை கிடைப்பின் அதனையும் கூட பைக்குள் திணித்துக் கொள்ளாது - இது நாள் வரை நமக்குச் சாத்தியமாகிடா விளம்பரங்களின் பொருட்டு செலவிடாமென்றுள்ளோம் ! பார்க்கலாமே !!
Alrite guys !! “சின்னதொரு பதிவு” என்று ஆரம்பித்து விட்டு ஜீனியஸ் ஸ்மர்ஃப் போல நீளமாய், விஸ்தீரணமாய் ; வேகமாய் ; விலாவாரியாய் ; விசாலமாய் ; மூச்சு விடாமல் ; மும்முரமாய் ; முத்தாய்ப்பாய் ; பேசிக் கொண்டே போகிறேன் ! இதற்கு மேலும் உங்களை இந்த வாரயிறுதியில் படுத்தி எடுக்காமல் புறப்படுகிறேன் ! மீண்டும் தீபாவளி வாழ்த்துக்கள் ! உங்கள் “கனவு இதழ்கள்” பற்றியும் ; புது இதழ்களின் விமர்சனம் பற்றியும் தொடரும் நாட்களில் இங்கு தொடர்வோமே?! Have a ball all! Bye for now!
And - இதோ - சந்தா A ஒன்றினை யாருக்கேனும் பரிசளிக்கவொரு வாய்ப்பு !! வழக்கம் போலொரு caption போட்டி !!
And - இதோ - சந்தா A ஒன்றினை யாருக்கேனும் பரிசளிக்கவொரு வாய்ப்பு !! வழக்கம் போலொரு caption போட்டி !!