நண்பர்களே,
வணக்கம். நிமிஷமாய் நாட்கள் கரையும் ஒரு தருணத்தின் வழியே நாமெல்லாம் பயணித்து வருகிறோம் தானே?! இரண்டரை மாதங்களுக்கு முன்பாய் தமிழகம் சந்தித்ததொரு இழப்பை நின்று நிதானமாய் அசைபோடக் கூட நேரமின்றி ஏதேதோ அசாத்திய நிகழ்வுகள் அசுர கதியில் தடதடக்கின்றன ! இந்த நிலையில் 2016-ன் நமது இதழ்கள் பற்றிய review-ஐ கையில் எடுக்க எனக்கே சற்றே மலைப்பாக இருந்தது. ஏதோவொரு மாமாங்கத்தில் அவையெல்லாம் வெளியானது போல்த் தோன்றுவது மட்டுமல்லாது - இடைப்பட்ட வேளைகளில் ஏதேனும் பதிவிலோ ; ஹாட்லைனிலோ the year in review என்று ஏதாச்சும் எழுதியிருக்கிறேனா என்பதே நினைவில் இல்லை. ஓலைப்பாயில் மூச்சா போகும் அல்சேஷனைப் போல சிக்கிய சந்திலெல்லாம் ‘சள சள‘ வென்று எதையாவது பதிவிட்டுத் திரிவதால் ‘மறு ஒலிபரப்பாகிடக்‘ கூடாதே என்ற முன்ஜாக்கிரதை மேலோங்குகிறது. அதுமட்டுமன்றி - சிரத்தையாய் நாங்கள் அனுப்பி வைத்த 2016-ன் ரிப்போர்ட் கார்ட் சிலபல அலமாரிகளுக்குள் சேகரிப்புகளோடு பத்திரமாய் செட்டில் ஆகிவிட்டபடியால் உங்களது பார்வைக் கோணங்களை அறிந்திட அதிகமாய் வாய்ப்பும் இல்லாது போய் விட்டது ! ஆனால் சிறுகச் சிறுக ஜனவரியிலும், பிப்ரவரியிலும் அந்த red & black படிவங்கள் நம்மைத் தேடி வரத் தொடங்க, மெதுமெதுவாய் அவற்றின் மீது பார்வையை ஓடச் செய்தேன் ! தலீவரின் படிவமும் சமீபமாய் நம்மை வந்து சேர - ‘அது என்னாச்சு?‘ என்ற கணையோடு அவரொரு கடுதாசித் தாக்குதலைத் துவங்கும் முன்பாக மேட்டருக்குச் சென்றுவிடல் நலம் என்று தோன்றியது ! So here goes :
ஆண்டினில் 54 இதழ்கள் எனும்போது - இதுவரையிலான நமது சர்வீஸில் ஆகக் கூடுதலான அறுவடை ஆண்டு இதுவே என்பதில் சந்தேகமில்லை ! And - மறுபதிப்புகள் நீங்கலான புது இதழ்ப் பட்டியலுள் 2016-ல் சொதப்பல்கள் எண்ணிக்கையும் மிகச் சொற்பமே என்பதால் இதுவொரு "அறுவை ஆண்டாக" இல்லாது போனதில் நிம்மதியும் கூட !Genre-வாரியாக சந்தாக்கள் பிரிக்கப்பட்ட நாள் முதலாய் - கதைத் தேடல்களில் எங்களுக்குள் சற்றே கூடுதலான தெளிவு பிறந்திருப்பது இதற்கொரு முக்கிய காரணி என்பேன் ! So இந்த review படலத்தையும் இதே genre ரீதியில் / சந்தாவாரியாகக் கொள்வதே தேவலாமென்று பட்டது !
சந்தா A:
ஆக்ஷன் அதிரடிகள் என்ற இந்தக் களத்தில் எனக்கும் சரி, உங்களுக்கும் சரி - உச்சமெது? என்ற தேர்வுக்கு அதிகநேரம் அவசியமாகிடவில்லை என்பது தெளிவாய்ப் புரிந்தது ! என்னதான் ஷெல்டன்... கமான்சே... மாடஸ்டி... டைலன் டாக்... ராபின் என்ற நாயகர்கள் சந்தா A-வில் வலம் வந்தாலும், லார்கோவும் சரி, இரவுக் கழுகாரும் சரி - ஒரு பிரத்யேக அணியில் இருப்பது புரிகிறது ! So 2016-ன் டாப் கதைகளுக்குள்ளான போட்டி சர்வமும் நானே ! vs “கடன் தீர்க்கும் நேரமிது” இதழ்களுக்கு மத்தியினில் தான் என்பது உங்கள் மார்க் ஷீட்களில் பிரதிபலிக்கிறது ! என்னைப் பொறுத்தவரை புது அறிமுகம் ஜேசன் ப்ரைசுமே இந்த ஆட்டகளத்தில் சேரத் தகுதி கொண்டவரே ! For the sheer novelty & intensity - ஜேசனின் "எழுதப்பட்ட விதி" + "மறைக்கப்பட்ட நிஜங்கள்”" 2016-ன் உச்சத் தருணங்களுக்குள் இடம்பிடிக்கத் தகுதியுள்ளவை என்றே நினைத்தேன் ! ஆனால் தொடர் (கதை) எனும் போது அதனை முழுமையாய் எடை போடாது - பாகம் பாகமாய் தர நிர்ணயம் செய்ய முயற்சிப்பது அத்தனை சுகப்படாது என்று பட்டதால் ஜேசனை போட்டியிலிருந்து ஓரம்கட்டி விட்டேன் ! உங்களது மதிப்பெண்களையும் சரி, இதழ் வெளியான வேளையில் கிட்டிய அதகள வரவேற்பையும் சரி, மனதில் கொண்டால் 2016-ன் சந்தா A-வின் டாப் : TEX & கோ.வின் "சர்வமும் நானே"” தான் ! தடதடக்கும் சரவெடி ஆக்ஷன்; ரேஞ்சர்களின் ஒட்டுமொத்த dynamic presence ; பாலைவனத்தில் ; நடுக்கடலில் ; கப்பலில் என்று பரந்து விரியும் கதைக்களம் ; மயக்கும் artwork + வர்ணங்கள் என சிலாகிக்க இதனில் சரக்கு ஏகமாய் உள்ளதால் உங்கள் தேர்வின் பின்னணிகளை யூகிப்பதில் சிரமம் இருக்கவில்லை ! அது மட்டுமின்றி - இது வரையிலான ‘தல‘ கதைகளிலேயே நீளத்தில் முதன்மையானது இது தான் எனும் போது- வாசிப்பின் அந்தத் தூக்கலான லயிப்பையும் இதற்கொரு காரணமாகப் பார்க்கிறேன் !
அதே நேரம் - தனிப்பட்ட முறையில் எனக்கு "பெஸ்ட்" என்றுபட்டது லார்கோவின் ஆக்ஷன் த்ரில்லரே ! “கடன் தீர்க்கும் நேரமிது” வழக்கமான லார்கோ template-ல் சவாரி செய்யுமொரு இதழ் தான் - ஒத்துக் கொள்கிறேன் ! ஆனால் கையில் ஆயுதமேந்தா ஒரு கோடீஸ்வரக் கோமகனைப் போராளியாக்குவது ஒரு சுலபக் காரியமல்ல என்றால் - அவரைக் கொண்டு பிசுனஸ்... பங்குச் சந்தை... எண்ணெய் வளம்... இத்யாதி இத்யாதி என்ற ரீதியில் வறட்சியாய்ப் பயணிக்காது இத்தனை துடிப்பானதொரு ரூட் போடுவது சிரமமோ - மெகாச் சிரமம் ! அதுவும் 'உலகம் சுற்றும் வாலிபன்' படப் பாணியில், ஒவ்வொரு தேசத்துக்கொரு adventure என்ற அந்த யுக்தி இந்தத் தொடரின் ஒரு highlight என்பேன் ! நம்மையும் உடனழைத்துக் கொண்டு பூமியுருண்டையின் ஒவ்வொரு மூலைமுடுக்கையும் ஆராய முற்படுவது சுவாரஸ்யத்துக்குப் பஞ்சம் வைப்பதில்லை ! And இம்முறை ஹாங்காங்கில் நடைபெறும் அந்த ஆக்ஷன் தோரணம் துளியும் தொய்வின்றிப் படபடத்த சாகஸம் என்பதால் எனது ஓட்டு – ‘W’ குழுமத் தலைவருக்கே! So - சந்தா A-வில் top:
உங்கள் சாய்ஸ் : “சர்வமும் நானே”
எனது சாய்ஸ் : “கடன் தீர்க்கும் நேரமிது”
"உச்சம் எது?" என்றான பின்னே ‘தாங்கலைடா சாமி‘ award யாருக்கு என்பதையும் தீர்மானிக்க வேண்டுமல்லவா ? இங்குமே நமது தேர்வுகள் ரொம்பவே சுலபம் என்பேன் - லயனின் 32-வது ஆண்டு மலர் புண்ணியத்தில் !
கேப்டன் பிரின்ஸ் சிறுகதைத் தொகுப்புகள் + பெட்டி பார்னோஸ்க்கி” என்ற கூட்டணி க்ரீன்வேஸ் சாலையின் ஏமாற்றத்துக்கு நிகரானதொரு disappointment-ஐத் தந்திடும் என்பதை நான் நிச்சயமாய் எதிர்பார்த்திருக்கவில்லை ! இன்று நிதானமாய் யோசிக்க அவகாசம் கிடைக்கும் வேளையில் இதனில் நடந்த தவறுகள் ஸ்பஷ்டமாகத் தெரிகின்றன !
* கேப்டன் ப்ரின்ஸ் சிறுகதைகள் வெவ்வேறு கால கட்டங்களில், வெவ்வேறு டீம்களின் கைவண்ணத்தில், Spirou என்ற வாரயிதழில் 1960-கள் முதலாய் வெளிவந்தவை. கேப்டன் பிரின்ஸ் தொடர் limited ஆன இதழ்களோடு நிறைவு பெறுவதே படைப்பாளிகளின் திட்டமிடல் என்பதால் இந்தத் துண்டு + துக்கடாக் கதைகளை ஒருங்கிணைத்து சேகரிப்புக்கென இந்த ஆல்பத்தை அவர்கள் உருவாக்கியிருக்க வேண்டும் ! வெற்றி கண்டதொரு தொடரில் இது ஒன்று மட்டுமே எஞ்சி நிற்கிறதே...? இதையும் போட்டு வைப்போமே ?” என்ற சபலத்திற்கு நாமோ அடிமையாகிட இந்த இதழைக் களமிறக்கினேன் ! சிற்சிறு கதைகள் எனும் போது அரை வரிக்குக் கூடத் தேறாத கதைக்களங்களே வியாபித்து நின்றிட - மொத்த ரிசல்ட் - ‘ஙே‘வாகிப் போனதில் (இப்போது)வியப்பில்லை ! ‘பெட்டி பார்னோவ்ஸ்க்கி‘யைப் பொறுத்தவரைக்கும்- இந்த spin-off ல் அவரது மறுபக்கத்தைச் சித்தரித்திருப்பார்களென்று ஹேஷ்யமாகக் கூட எனக்கு அந்நேரம் தெரிந்திருக்கவில்லை ! XIII Mysteries தொடரில் இதுவும் பிரெஞ்சில் ஹிட்டடித்த இதழ்களுள் ஒன்று என்ற தகவலை மட்டுமே என் கதைத் தேர்வுக்கு மூலதனமாக்கிக் கொண்டதால் இந்தச் சொதப்பலை நான் கணித்திருக்க முடியாது போனது !
So இங்கே நான் கற்றறிந்துள்ள பாடங்கள் இரண்டு :
* கதைகளில் merit இல்லா பட்சத்தில், பெருங்காய டப்பா வாசனைக்கோசரம் இனியும் கொடி பிடிப்பது சரிப்படாது என்பதே பாடம் # 1 ! எத்தனை பெரிய அப்பாடக்கரா இருப்பினும் ; நேற்று வரை எத்தனை வீரியமான சாகஸங்களை விருந்தாக்கியிருப்பினும் - இன்றைக்கு சரக்கில்லையெனில் இதயத்தில் மட்டுமே இருக்கை!
* "ஜப்பான்லே ஜாக்கி சான் கூப்டாகோ; அமெரிக்காலே மைக்கேல் ஜாக்சன் கூப்டாகோ!”" என்று காதில் விழும் சமாச்சாரங்களை “ஓஹோ ?“ என்று மட்டும் இனிமேல் கேட்டு வைத்துக் கொள்ள வேண்டியது ! ஆனால் இங்கே நம்மிடையே கரகாட்டத்தை ஆரம்பிக்கும் முன்பாக- முடிந்தளவுக்கு மொழிபெயர்ப்பு; கதைப் பரிசீலனை இத்யாதிகளை வழக்கம் போலச் செய்து விடுவது சாலச் சிறந்தது என்று பாடம் படித்துள்ளேன்!
So மொக்கை பீஸ் of சந்தா A :
எனக்கும், உங்களுக்கும் : 32-வது ஆண்டு மலர்!
Close second: இரத்தப் படலம் “The End?”
சந்தா B:
2016-ஐ துள்ளிக் குதிக்கும் உற்சாகத்தோடு drive செய்து வந்ததே “மாதமொரு இரவுக் கழுகார்”ஃபார்முலா தான் என்பதில் ஐயமேது ? So பெரும்பான்மை Tex இதழ்களைத் தன்னுள் கொண்ட சந்தா B-ன் டாப் இதழ்த் தேர்வு ரொம்பவே சுலபமாகத் தானிருக்குமென்று நான் அவதானித்திருந்தேன் ! இங்கு பதிவான உங்களின் குரல்களுமே பெரும்பாலும் அதையே பிரதிபலித்தன ! So - போட்டியில் வெற்றி பெறுபவர் அரிசோனா மாநில... டெக்சாஸ் மாவட்ட 18-வது வட்டச் செயலாளர் Tex என்று சுலபமாய் அறிவித்து விட முடியுமென்ற நம்பிக்கையோடே 2016-ன் சந்தா B பட்டியல் முன்னமர்ந்தேன் ! Surprise... Surprise... நான் மாத்திரமன்றி; படிவங்களைப் பூர்த்தி செய்து அனுப்பியிருந்த நண்பர்களுள் கணிசமானோரும் ஆட்டத்தைக் கலைக்க வந்தது போலான "ஜெய மார்ட்டின் பேரவைக்கு" ஆதரவு தெரவித்திருப்பது தெரிந்தது!
"இனியெல்லாம் மரணமே”!" மார்ட்டினின் ஒரு அசாத்தியக் களமென்பதை இதழ் வெளியான அந்த மாதமே நாம் அனைவரும் உணர்ந்திருந்தோம் ! அதன் தாக்கமானது 9 டெக்ஸ் வில்லர் இதழ்களையும் மீறி வீரியமாகத் தங்கியிருக்குமென்பது தான் நான் துளியும் உணர்ந்திருக்கா விஷயம் ! So சந்தா B-ன் சந்தேகமிலா ஹிட் - இந்த விஞ்ஞானம் + வரலாறு + கற்பனை கலந்த க்ளாசிக் கூட்டணி என்பதை அறிவிப்பதில் பெருமையாகவுள்ளது ! இது போன்ற கதைகளையும் நாம் just like that ரசிக்க.. ருசிக்கத் தயாராகி விட்டோமெனும் போது -நமது ரசனைக் கொடிகள் பந்தாவாய்ப் படபடப்பது போலொரு உணர்வு எனக்குள் ! இந்த இதழின் மொழிபெயர்ப்பின் போதும், எடிட்டிங்கின் போதும், நான் போட்ட மொக்கைகளுக்கு இந்தத் தீர்ப்பானது ஒரு பாட்டில் ஜண்டு பாமாகத் தெரிகிறது !
இரவுக் கழுகாரின் பலதரப்பட்ட கதைகளுள் “"விதி போட்ட விடுகதை”" ; “"தலையில்லாப் போராளி”" ; “துரோகத்திற்கு முகமில்லை” போன்ற கதைகள் நிறைவாக ஸ்கோர் செய்துள்ள போதிலும், அந்த TEX ரேசில் முந்தி நிற்பது “"தற்செயலாய் ஒரு ஹீரோ"” தான்! சுலபமான அந்தக் கதைக்களமும், மனிதனின் இயல்பான கோழைத்தனமும் ; அவசியம் எழும் போது அவன் வீறுகொண்டு எழுவதும் சித்தரிக்கப்பட்டிருந்த விதம் இந்த இதழை ஒரு வித்தியாசமான அனுபவமாக்கியுள்ளது என்பது புரிகிறது ! So சந்தா B-ன் டாப் :
எனக்கும், உங்களுக்கும் : "இனி எல்லாம் மரணமே”"
சந்தா B-ன் ஊ. போ. உ. : “"வேதாள வேட்டை”!"
சந்தா C:
வண்டி வண்டியாய் எதையெதையோ எழுதினாலும், கையாண்டாலும்- இந்தக் கார்ட்டூன் சந்தாக்களின் வாயிலாக எனக்குக் கிடைக்கும் திருப்தி அலாதி ரகம் ! So அதனுள் ஒரு தேடலை செய்ய முனைவதும் சுகமோ சுகம் ! கார்ட்டூன் மைதானத்தில் ஜாஸ்தி தெரிந்தவை நீலத் தலைகளே - நமது Smurf-களின் புண்ணியத்தில் ! துவக்கத்தில் இந்தக் குட்டி பசங்கள் உலகமோ ; இவர்களது பாஷைகளோ அத்தனை லயிப்பைத் தந்திடாது போக - நம்முள் ஒரு கணிசமான பகுதியினர் - கூவத்தூர் பக்கமாய் டேரா போடச் சொன்னதைப் போல முகம் சுளிக்கச் செய்ததில் ரகசியமில்லை ! In fact “இன்னமும் கூட என்னால் smurfs கதைகளுக்குள் ஐக்கியமாக முடியவில்லை சார்!” என்று அவ்வப்போது காதைக் கடிக்கும் நண்பர்களுக்கும் பஞ்சமில்லை ! ஆனால் “"ஒரே ஒரு ஊரிலே"” மற்றும் “"வானம் தந்த வரம்"” இதழ்கள் நம்மிடையே ஏகப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது நிதர்சனம் ! சொல்லப் போனால் இந்தக் கதைகள் - Smurfs அறிமுகப் படலத்தின் அங்கமாக இருந்திருப்பின் - தொடக்கமே டாப்கியரில் இருந்திருக்கக் கூடுமென்று அபிப்பிராயம் சொன்னோரும் உண்டு ! So ஆண்டின் தலைமக்கள் பட்டியலுக்குள் இந்தக் குட்டி உருப்படிகள் தாவித் திரிந்தது மறுக்கவியலா நிஜம் ! ஆனால் அன்றும் சரி, இன்றும் சரி, கார்ட்டூன் ராஜ்யத்தின் நிகரில்லா ‘தல‘ நானே என்றபடிக்குக் குரல் கொடுப்பதோ ஜாலி ஜம்பரின் முதலாளி ! “"ஒரு பட்டாப் போட்டி"” சுவாரஸ்யமான கதையே என்றாலும் - ஆண்டின் பிற்பகுதியில் வெளிவந்த லக்கி லூக்கின் “"திருடனும் திருந்துவான்"” a class apart என்பது உறுதி ! எழுதும் போதே இதுவொரு உறுதியான ‘ஹிட்‘ என்பதை உணர முடிந்தது ; இதழின் ஆக்கம், அட்டைப்படம் என சகலமும் ஒத்துழைக்க - 2016-ன் பெஸ்ட் கார்ட்டூன் என்ற பதக்கத்தைத் தட்டிப் பறித்துக் கொண்டது இந்த இதழானது !
‘உச்சம்‘ இது தானென்று அடையாளம் கண்டான பிறகு, சம்பிரதாயப்படி wash செய்து...wash செய்து..pour பண்ண ஒரு இதழையும் தேடிப் பிடித்தாக வேண்டும் தானே ? இழுத்துப் பிடித்து, நாலு குட்டு வைத்திட அந்த சோன்பப்டித் தாடி வாகாக உதவிட - நமது 24/7 விஞ்ஞானி லியனார்டோ தான் சோப்பு டப்பாவை ஈட்டிடும் நாயகர் சந்தா C-ல்!
So, the best of Cartoons :
* லக்கி லூக்கின் “திருடனும் திருந்துவான் ! ஏகோபித்த தேர்வு !
*"the டொங்க்ஸ் of 2016 - கார்ட்டூன்" : “ஜீனியஸ் உறங்குவதில்லை”!
பெர்சனலாக எனக்கு லியனார்டோ தாத்தாவை ரொம்பவே பிடிக்கும் ; அந்த gags-களை நிதானமாய் ரசித்தால், ஓவியரின் கற்பனை பிரவாகமெடுப்பதை உணர முடியும் ! ஆனால் ஏனோ நமக்கு முழுநீள சாகஸங்கள் அல்லாத கதைகள் மீது ஒரு இனம்புரியா துவேஷம் தொடர்வதன் எதிரொலியாக லியனார்டோ உதை வாங்குகிறார் ! So 2018-க்கும் இவர் நம்மிடையே இடம் பிடிக்கப் போகும் வாய்ப்புகள் சொற்பமே என்று தோன்றுகிறது ! Sad !!
சந்தா D:(Reprints)
பெருசுகளின் பட்டியல்” மத்தியில் top எது ? bottom எது ? என்று நான் பட்டிமன்றம் நடத்தினால் நீங்கள் சேரைத் தூக்கிச் சாத்தி விடும் அபாயம் இருப்பதால் - மரியாதையாக அந்த வி்ஷப்பரீட்சையினைச் செய்யாது ஒதுங்கிக் கொள்கிறேன் ! So போட்டியே இன்றி இங்கே தேர்வு காண்பது டெக்ஸ் வில்லரின் “பழி வாங்கும் புயல்” வண்ண மறுபதிப்பே !
என் பெயர் டைகர் :
ரொம்பவே விநோதமானதொரு அனுபவம் இதனில் எனக்கு! சென்றாண்டின் இதே சமயம் சுமாருக்கு ‘சிவனே‘ என்று இந்த இதழுக்குக் ‘கல்தா‘ கொடுத்து விடலாமா? என்ற யோசனை எனக்குள் பலமாகவே ஓடிக் கொண்டிருந்தது ! ஒரு “மின்னும் மரணம்” ; ஒரு “தங்கக் கல்லறை” யுகத்துக்கொரு முறையே நிகழும் அதிசயங்கள் என்பதை மண்டை புரிந்திருந்தாலும், நெஞ்சமானது அங்கேயே சுற்றிச் சுற்றி கண்ணாமூச்சி ஆடி வருவதைத் தவிர்க்க வழி தெரிந்திருக்கவில்லை! வன்மேற்கின் வரலாறு ; அதனில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகள் ; வாழ்ந்த மாந்தர்கள்... இவர்களுக்கு மத்தியில் நமது சப்பை மூக்கார் என்பதே களம் என்ற நிதர்சனத்தை ரொம்ப நேரத்திற்கு என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை ! என்னை விடவும் பெரிய ஓட்டைவாயன்களாய், கதையில் உலவும் அத்தனை ஆசாமிகளும் ஓயாமல் ஏதாச்சும் பேசிக் கொண்டேயிருக்க- வந்தோமா...சலூனின் நட்டநடுவில் நிற்க வைத்து நாலு பேரை நடுமூக்கில் 'பொளேர்' என்று போட்டோமா - என கெத்து காட்டும் டெக்ஸ் வில்லர் பாணிக்காக மனசு ஏங்கத் தொடங்கியது ! “டேய்... எவனாவது, எவனையாவது அடிங்கடா... இல்லை சுட்டுத் தொலைங்கடா!”!! என்று என் மனம் கூவாத குறை தான் ! ஆனால் இப்போதைக்கு இங்கே தோசை கூட யாரும் சுடப் போவதில்லை என்பதை ஒரு மாதிரியாகப் புரிந்து கொண்ட பிறகு 2 நாட்கள் சுத்தமாய் 'பிரேக்' எடுத்துக் கொண்டு,தட்டுத் தடுமாறி திரும்பவும் கதைக்குள் நுழைந்தேன். இம்முறை கூகுள் உதவியோடு வ்யாட் ஏர்ப்; டாக் ஹாலிடே; OK கார்ரல் மோதல் ; கோசைஸ் என்ற பெயர்களையெல்லாம் அலசோ அலசென்று அலச - சிறுகச் சிறுக கதாசிரியர் இங்கு சித்தரிக்க முயன்றிருக்கும் மெகா ஓவியத்தின் பரிமாணம் புலப்படத் தொடங்கியது ! நிஜத்தினுள் ரீலை இணைத்திருப்பதால்,கைபுள்ளெ ரேஞ்சுக்கு டைகர் சலம்பாது, அடக்கி வாசிக்க வேண்டியதன் அவசியமும் புரிந்தது ! அந்தத் தெளிவோடு மீண்டும் பணியாற்றத் தொடங்கிய பின்னரே “"என் பெயர் டைகர்"“ ஜனித்தது! எனக்கு நேர்ந்த அதே கேச சேதாரங்கள் உங்களையும் தாக்கிடலாகாது என்ற முன்ஜாக்கிரதையில் கூகுளில் நான் கண்ட விபரங்கள் சகலத்தையும் முன்னுரைகளாக்கி, அதன் பின்பாய்க் கதைக்குள் நீங்கள் புகுந்திட வழி செய்தேன் ! இயன்ற அத்தனையையும் செய்து விட்டேன்... புனித மனிடோ... இனி உங்களுக்காச்சு ; வாசகர்களுக்காச்சு!” என்ற மனநிலை தான் அதற்குப் பின்பும் ! ஆனால் உங்கள் ரசனைகளின் பன்முகத்தன்மை - என்னையையும், நமது உடைந்த மூக்காரையும் ஒரு மெகா தர்மசங்கடத்திலிருந்து காப்பாற்றி விட்டது தான் நாம் பார்த்த நிஜம் ! கனமான களம் ; இதுவொரு பாலைவனப் பயணம் போல வறட்சியானது என்பதை நொடிப்பொழுதில் புரிந்து கொண்டு - அதற்கேற்ற mindset சகிதம் உள்ளே நுழைந்து, நிதானமாய் பயணம் செய்து, கதையின் முழுமையையும் ரசித்துப் படித்ததே 2016-ன் உச்சபட்ச அனுபவம் என்பேன் ! தலையில்லாப் போராளி” மெகா இதழ் வெளிவந்த நாட்கள் ; “ஈரோட்டில் இத்தாலி” வெளியான தருணம் - என பல ஸ்பெஷல் வேளைகள் இருந்த போதிலும்- “என் பெயர் டைகர்” சாதித்த வேளையே ஆண்டின் மறக்க இயலாத் தருணம் - என்னளவிற்காவது ! Thanks a ton guys !!
கதைகளுக்கு அப்பால் - கடந்தாண்டின் ஒட்டுமொத்த அனுபவங்களை ஒற்றைச் சொல்லில் அடக்குவதெனில் ‘Awesome’ என்று மாத்திரமே சொல்லத் தோன்றுகிறது ! ஈரோட்டில் அரங்கேறிய வாசகர் சந்திப்பும், அது generate செய்து தந்த அசாத்திய உத்வேகங்களும், நட்புக்களும் தான் 2016-க்கு மாத்திரமன்றி, நமது இத்தனை காலப் பயணத்துக்குமேயொரு அர்த்தத்தைப் போதித்த தருணம் என்பேன் ! இன்னமுமொரு முறை அது சாத்தியமாகுமோ? ; இதை விடவும் பெரியதொரு get-together நனவாகிடுமோ ? என்பதெல்லாம் காலத்தின் கைகளிலுள்ள கேள்விகள் - அவற்றினுள் புகுந்திட நான் தயாரில்லை ! ஆனால் 2016 தான் துவக்கப் புள்ளி என்பது என்றைக்கும் மாறப் போவதில்லை என்பதால் 2016 ஒரு lifetime memory ஆகவே எனக்குள் தொடரும் !
மீண்டும் சந்திப்போம் ! Have a wonderful weekend all!
P.S :சில நாட்களுக்கு முன்பாய் நண்பரொருவரிடமிருந்து வந்ததொரு மின்னஞ்சல் இது !! லேசாக பீற்றல் பரமசிவமாய் நான் தெரியக் கூடுமென்றாலும், யதார்த்தத்தை அழகாய் விவரித்துள்ள நண்பரின் மடலை உங்களோடு பகிர்வதில் தவறில்லை என்று பட்டது !! !
ஆசிரியர் அவர்களுக்கு,
கடந்த காலங்கள் எல்லாம் நினைத்து பார்க்கிறேன். அறியா வயதில் குடும்பம், பணி சுமை, உறவுகள், தோல்விகள், ஏமாற்றங்கள் என ஏதும் இல்லா பருவத்தில் மகிழ்ச்சி ஒன்று மட்டுமே மனதில் குடி கொண்டு இருக்கும். அந்த மகிழ்ச்சியை இன்னும் கூடுதலாக்க அப்பொழுது ஒன்றே ஒன்று மேலும் கூடுதலாக காணப்பட்டது. அது “காமிக்ஸ் இதழ்கள்” மட்டுமே.
இப்பொழுது எல்லாமே மாறி விட்டது. பிறரை சார்ந்து நாம், நம்மை சார்ந்து குடும்பங்கள். இதன் காரணமாக பணி சுமை, பணச் சுமை, இது மட்டுமா? இன்று நமக்காக உழைப்பதை விட நம்மை சார்ந்து இருப்பவர்களுக்கு உழைப்பதே பெரும்பாடாகி விடுகிறது. இவற்றின் காரணமாகவும், நம்மை சுற்றி இருக்கும் சிலரின் பொறாமைகள், துரோகங்கள், அதன் காரணமாக வருத்தங்கள் காரணமாகவும் மகிழ்ச்சி என்ற எல்லை கோட்டை கூட கண் காணாத தூரத்தில் தான் குடி இருக்க முடிந்தது.
இப்படிபட்ட சூழலில் தான் மாதா மாதம் இவை எல்லாவற்றையும் மறந்து அந்த டவுசர் போட்டு திரிந்த பால்ய வயதில் எந்த கவலையும் இல்லாத, எந்த வருத்தமும் இல்லாத பட்டாம்பூச்சியாய் சுற்றி திரிந்த காலகட்டத்திற்கு மீண்டும் அழைத்து சென்று கொண்டிருப்பது இப்பொழுது “உங்கள் காமிக்ஸ் இதழ்கள்” மட்டுமே.
இதனால் நமது இதழ்கள் மாதா மாதம் வரும் பொழுதெல்லாம் ஓர் இனம் புரியா கொண்டாட்டம். சிறு வயதில் இரண்டு மாதத்திற்கு முன்பிருந்தே எப்பொழுதா தீபாவளி வரும் ஏங்கிக் கொண்டே இருப்போம். அந்த மகிழ்ச்சிகரமான ஏக்கத்தை இன்று வரை ஒவ்வொரு மாதமும் அளித்துக் கொண்டு இருப்பது உங்கள் காமிக்ஸ் இதழ்கள். புது இதழ்க் வந்தவுடன் அவை மறுபதிப்பு இதழ்களாக இருந்தாலும் அந்த சித்திர உலகத்திற்குள் புகுந்தால் தான் மனம் சிறிதாவது நிம்மதி அடைகிறது.
உண்மையில் தாங்கள் ஒவ்வொரு மாதமும் எங்களுக்கு புத்தகங்களை வழங்கிக் கொண்டு இருக்கவில்லை. எங்களின் வாழ்க்கையின் சுவாரஸ்யத்தின் ஒரு பகுதியை வழங்கி கொண்டு இருக்கிறீர்கள். நிஜத்தில் தரிசிக்கும் மனிதர்களால் கொடுக்க முடியாத மகிழ்ச்சியை நிம்மதியை கற்பனை கதாபாத்திரங்களான டெக்ஸ்... லார்கோ... ஷெல்டன்.. லக்கி... சிக்பில்.... என இன்னும் பலப்பல உறவினர்கள் எங்களுக்கு கொடுத்து கொண்டு இருக்கிறார்கள். உண்மையை சொன்னால் தமிழில் இவர்களை எல்லாம் எங்களுக்கு படைத்த- படைத்துக் கொண்டு இருக்கும் தாங்களும் எங்களுக்கு ஒரு “கதாநாயகரே”.!!!