காமிக்ஸ் குடும்பத்தார்!
-யுவகிருஷ்ணா
இரும்புக்கை மாயாவியை தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் இருக்க முடியுமா? லாரன்ஸ் டேவிட், ஜானி நீரோ, ஸ்பைடர், டெக்ஸ் வில்லர், லக்கிலுக் என்று கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக தமிழ் வாசிப்பில் ரசனையை கூட்டும் காமிக்ஸ் ஹீரோக்கள் அத்தனை பேருக்குமே சிவகாசியில்தான் டப்பிங் கொடுக்கப்படுகிறது.
எழுபதுகளின் தொடக்கத்தில் ‘முத்து காமிக்ஸ்’, எண்பதுகளின் மத்தியில் ‘லயன் காமிக்ஸ்’ என்று தொடரும் இந்த காமிக்ஸ் பயணத்துக்கு முடிவே இல்லை. இப்போது சர்வதேசத் தரத்தில் வழுவழு தாள்களில் முழுவண்ணத்தோடு புதுப்பொலிவோடு பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
தாத்தா சவுந்தரபாண்டியன், ‘முத்து காமிக்ஸ்’ தொடங்கினார். அப்பா விஜயன், ‘லயன் காமிக்ஸ்’ ஆரம்பித்தார். மூன்றாவது தலைமுறையாக இப்போது இத்தொழிலில் புதுமுகமாக களமிறங்குகிறார் விஜயனின் மகன் விக்ரம். ‘முத்து காமிக்’ஸின் 400வது இதழ், ‘லயன் காமிக்’ஸின் 300வது இதழ் என்று ஒரே மாதத்தில் - ஜூலையில் - இரண்டு இதழியல் துறை மைல்கற்களை எட்டியிருக்கிறார்கள்!
‘லயன் காமிக்’ஸின் ஜூனியர் எடிட்டரான விக்ரம் விஜயனை, தீபாவளிக்காக பரபரப்பாக தயாராகிக் கொண்டிருக்கும் கந்தக பூமியான தகதக சிவகாசியில் ஒரு மதியவேளையில் சந்தித்தோம்.
“இருபத்தைந்து வயதை இப்போதான் எட்டப்போறேன். நான் கொஞ்சம் லேட்டு. அப்பா விஜயன், பதினேழு வயசிலேயே ‘லயன் காமிக்’ஸுக்கு ஆசிரியராகி சாதித்தவர். சிவகாசியில் ஸ்கூல் முடிச்சேன். சென்னையில் பி.டெக் படிச்சேன்.
தாத்தா, அந்தக் கால ஐரோப்பிய காமிக்ஸ்களின் பரம ரசிகர். காமிக்ஸ் புத்தகங்களை தமிழில் வெளியிடுவதை ஒரு தொழிலாக இல்லாமல் தன்னுடைய கடமையாகத் தொடங்கினார். அப்பா, அதை விரிவுபடுத்தினார். சின்ன வயசுலே எங்க வீடு முழுக்கவே காமிக்ஸ் நிறைஞ்சி கிடக்கும். காமிக்ஸ் தவிர்த்து கார்ட்டூன் சேனல்கள் பார்த்துக்கிட்டிருப்பேன்.
லக்கிலுக், டின்டின்னு கார்ட்டூன் ஹீரோக்கள் என் மனசுக்குள்ளேயே எப்பவும் வசிக்கிறாங்க. எங்க குடும்பத்துக்கு உலகம் முழுக்க இருக்குற தமிழர்கள் மத்தியில் அடையாளம் கொடுத்தது காமிக்ஸ்தான். அப்படியிருக்க எனக்கு மட்டும் எப்படி இதில் ஆர்வம் வராமல் போகும்?” கேள்வி கேட்கப் போன நம்மையே கேள்வியோடு எதிர்கொண்டார் விக்ரம்.
உங்க ஊரு பட்டாசுகளை வெடிச்சி, காசை கரியாக்குறோம்னு எங்களைத்தான் எல்லாரும் சொல்லுவாங்க. நீங்க காமிக்ஸிலே பெரிய முதலீடு போட்டு காசை கரியாக்குறீங்களே?
கரியாக்குறோம்னு சொல்ல முடியாது. மத்த தொழில் மாதிரி இதுலே பெருசா லாபமெல்லாம் பார்க்க முடியாது. ஆனா, பெரிய முதலீடு தேவைப்படும் தொழில்தான் இது. தமிழில் காமிக்ஸ் வெளியிட, ஒரிஜினல் கதைகளின் அயல்நாட்டு தயாரிப்பாளர்களுக்கு பெரிய ராயல்டி தொகை தருகிறோம்.
அதைத் தவிர்த்து மொழிபெயர்ப்பு, அச்சு என்று நிறைய செலவாகிறது. இதைத் தொழிலாக லாபம் எதிர்பார்த்து செய்வதாக இருந்தால், நிச்சயமாக வாசகர்களுக்கு இவ்வளவு குறைந்த விலையில் எங்களால் காமிக்ஸ் வழங்க முடியாது. என் அப்பாவும், தாத்தாவும் பயங்கரமான காமிக்ஸ் ஆர்வலர்கள். இப்போ தாத்தா ஓய்வில் இருக்க அப்பாவும், சித்தப்பாவும்தான் எங்க தொழில்களை நிர்வகிக்கிறார்கள். சித்தப்பாவுக்கும் காமிக்ஸ் ஆர்வம் உண்டு. அவங்க ரசனை அப்படியே எனக்கும் வந்திருக்கு.
எங்க குடும்பம் பாரம்பரியமா அச்சுத்தொழில் செய்துகிட்டு வருது. அது தொடர்பான நெடிய அனுபவம் எங்களுக்கு இருக்கு. சிவகாசி மாதிரியான தொழில் நகரத்தில் இயங்குறோம் என்பதால் மார்க்கெட் நல்லா அத்துப்படி ஆகியிருக்கு. திடீர் விலையேற்றங்களை எதிர் பார்த்து, அதற்கேற்ப புதிய தொழில் யுக்திகளை கையாண்டு எங்க செலவுகளை கட்டுக்குள் வெச்சிருக்கோம்.
அதனால்தான் மூன்று தலைமுறைகளாக, நாற்பத்தைந்து ஆண்டுகளாக நாங்கள் தொடர்ச்சியா செயல்பட முடியுது. இப்போ எங்க காமிக்ஸ்களில் என் அப்பாவின் ஈடுபாடும், உழைப்பும்தான் நூறு சதவிகிதம். ஆன்லைன் விற்பனையை நிர்வகிப்பது, சமூக வலைத்தளங்களில் மார்க்கெட்டிங் செய்வது போன்றவற்றில் நான் இறங்கியிருக்கிறேன்...
வாசகர்கள் இன்னமும் அதே ஆர்வத்தோடு காமிக்ஸ் புத்தகங்களை வாசிக்கிறார்களா?
அப்பா, தாத்தா காலத்து காமிக்ஸ் வரவேற்பைப் பற்றி நான் நேரடியாக அறியவில்லை. இப்போ அஞ்சு வருஷமாதான் தயாரிப்பு, திட்டமிடல் போன்றவற்றில் அப்பாவுக்கு துணையா இருக்கேன். எண்பதுகளைத்தான் காமிக்ஸ்களின் பொற்காலம் என்று வாசகர்கள் பலரும் சொல்றாங்க.
ஆனா, இப்போ முன்பு எப்போதும் தமிழ் காமிக்ஸ் துறையில் இல்லாத அளவுக்கு புதுமைகளையும், தரத்தையும் எட்டியிருக்கோம். ஆக்ஷன், கெளபாய், கார்ட்டூன், சூப்பர்ஹீரோக்கள், கிராஃபிக் நாவல்கள் என்று வாசகர்களுக்கு வெரைட்டியா விருந்து பரிமாறுகிறோம். எங்களுக்கு வரவேற்பு எப்படியிருக்கிறது என்று நீங்களே புத்தகக் காட்சிகளின்போது எங்க ஸ்டாலுக்கு வந்து பார்க்கலாம். ஒருவேளை இன்னும் இருபது வருஷம் கழிச்சி இப்போதைய காலம்தான் காமிக்ஸ்களின் பொற்காலம் என்றுகூட சொல்லப்படலாம்!
காமிக்ஸ்களுக்கு என்று பிரத்யேகமாக நடத்தப்படும் comic con போன்ற புத்தகச்சந்தை நிகழ்வுகளில் பங்கேற்கிறீர்களா ?
நாங்களும் நம்முடைய தமிழ் காமிக்ஸ்களை எடுத்துக்கொண்டு ஆரம்பத்தில் இரண்டு ஆண்டுகள் பங்கேற்றோம். பெங்களூர், மும்பை, டெல்லி, ஹைதராபாத், பூனே என்று எங்கெங்கோ அவற்றை நடத்துகிறார்கள். சென்னைக்கு மட்டும் வரமாட்டேன் என்கிறார்கள். தமிழர்களுக்கும் நீண்டகால காமிக்ஸ் வாசிப்பு உண்டு என்பதை அவர்கள் அறியவேண்டும். என்றேனும் ஒருநாள் இங்கும் நடத்துவார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. இப்போதைக்கு தமிழகத்தில் நடக்கும் பெரிய புத்தகக்காட்சிகளில் நாங்க பங்கேற்கிறோம். புத்தகக்காட்சி அமைப்பாளர்களும் நாங்க பங்கேற்பதை விரும்பறாங்க...
முன்பெல்லாம் பெட்டிக்கடைகளிலும் கூட ‘முத்து’ / ‘லயன்’ காமிக்ஸ்கள் தொங்கும். இப்போது அப்படியில்லையே..?
சின்ன வாசகர் வட்டம். போதுமான அளவுக்கு விற்பனை என்று நாங்களே எங்களை வரையறைத்து வைத்திருக்கிறோம். பெரியளவில் விளம்பரம் செய்து விற்பனை செய்யும் சக்தி எங்களுக்கு இல்லை. வாட்ஸப் குழுமங்கள், சமூக வலைத்தளங்கள் மூலம் எங்கள் வாசகர்களே எங்களுக்கு விளம்பரம் கொடுக்கிறார்கள். புத்தகக் காட்சிகளின் போது புதிய வாசகர்கள் உருவாகிறார்கள்.
எல்லாத் துறையிலும் ராக்கெட் வேக மாற்றங்கள் நடைபெறுகின்றன. நம் தமிழ் காமிக்ஸ் துறை அந்தளவுக்கு வேகமாக மாறமுடியவில்லை என்றாலும், போட்டி நிறைந்த சூழலில் நாங்களும் எங்களுக்கான ராஜபாட்டையில் கம்பீரமாக நடை போடுகிறோம். இன்டர்நெட் மூலமாவே எங்க வாசகர் வட்டத்தை ஊக்கமாக செயல்பட வைக்கிறோம். வாசகர்களின் ரசனை மாற்றங்களை இப்போ உடனுக்குடன் தெரிஞ்சுக்கவும் இன்டர்நெட் உதவுது.
இன்றைக்கும் முக்கிய நகரங்களில் எங்களுக்கு ஏஜெண்டுகள் இருக்கிறார்கள். எங்களது இப்போதைய வெளியீடுகள் நல்ல ஆர்ட் பேப்பரில், முழு வண்ணத்தில் சர்வதேசத் தரத்தில் உருவாக்கப்படுகின்றன. விலையை தொடர்ச்சியாக ஒரே மாதிரி கட்டுக்குள் வைக்க முடிவதில்லை. ஒரு இதழ் 50 ரூபாய் என்றால் அடுத்த இதழ் 100 ரூபாயாக இருக்கும். எனவே சிறிய கடைகளில் விற்க முடிவதில்லை.
வாசகர்களின் நேரடி சந்தா, ஆன்லைன் விற்பனை, புத்தகக் காட்சிகளில் பங்கேற்பு போன்ற முறைகளில் விற்பனை செய்து வருகிறோம். பல்லாயிரம் ரூபாய் செலவழித்து உரிமை வாங்கும் கதைகளை, இங்கே மிகக்குறைவான வாசகர் வட்டத்துக்குத்தான் கொண்டு செல்ல முடிகிறது என்கிற சங்கடம் எங்கள் குடும்பத்துக்கு உண்டு!
http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=12325&id1=4&issue=20170630
http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=12325&id1=4&issue=20170630
=====================================================
குங்குமம் குழுமத்துக்கும், ஆர்வமெடுத்து இதனை சாத்தியமாக்கிய நண்பர் யுவகிருஷ்ணாவுக்கும் நமது உளமார்ந்த நன்றிகள் !!