Powered By Blogger

Sunday, February 22, 2015

காதலுக்குக் கை எதற்கு ?

நண்பர்களே,

வணக்கம். சீனப் புத்தாண்டு சில நாட்களுக்கு முன்பாய்ப் புலர்ந்துள்ளதென்று படித்தேன் ; இந்தாண்டு அவர்களது நம்பிக்கைகளின்படி செம்மறியாட்டின் வருஷமாம் ! நமக்கும் இது போன்ற நம்பிக்கைகளிருப்பின் இந்தாண்டை குதிரைகளின் ஆண்டென்று அறிவித்திருப்போம் ! அதிலும் இந்த மாதம் - திரும்பிய திசையெல்லாம் குதிரைகள் தலைகாட்டி வருவதால் வீட்டுக்குப் புறப்படத் தயாராகும் போது ஆபீஸ் வாசலில் குதிரைகளைத் தேடாத குறை தான் !! மார்ஷல் டைகர் ஒரு பக்கம் 'லொக்கடி..லொக்கடி..' என்று குதிரையில் வலம் வருகிறார் என்றால்  ; இன்னொரு திசையில் பௌன்சரும் 176 பக்கங்களுக்கு நகர்வலம் வருகிறார் திருவாளர் குதிரை மீதேறி ! 'அட..போங்கப்பா..!' என்று இம்மாதத்து black & white இதழான ராபினின் 'எத்தர்களின் எல்லைக்குள்" தலை நுழைத்தால் - அங்கேயும் கதைக்களம் டெக்சாஸ் மாநிலத்தில் என்பதால் - அட்டைப்படத்திலேயே குதிரை மீதேறிய போலீஸ்காரர் காத்திருக்கிறார் ! So 'அவனின்றி ஓரணுவும் அசையாது ! ' என்பது உலகுக்கே பொருந்துமெனில் - 'குதிரையின்றி ஒரு ஹீரோவும் குப்பை கொட்டலாகாது !' என்பதே நம் காமிக்ஸ் நாயகர்களின் தாரக மந்திரமாய் இருக்க முடியும் போலும் ! கடந்த சாகஸத்தில் லார்கோ கூட குதிரைச் சவாரி செய்தாகி விட்ட நிலையில் - நரைமுடி நாயகரும், பச்சை குத்திய பார்ட்டியும் மாத்திரமே இந்த ஜோதியில் இன்னமும் ஐக்கியமாகாது இருக்கும் ஆசாமிகள் என்று நினைக்கிறேன் !  Correct me if I'm wrong please..? 

Jokes apart, இதோ மார்ச்சின் வண்ண இதழ் # 2-ன் அறிமுகப் படலம் ! நமது கிராபிக் நாவல் வரிசையில் (சந்தா B ) இதழ் நம்பர் 2-ம் இதுவே ! சர்ப்பங்களின் சாபம் - 3 ஆல்பங்களில் பயணிக்கும் ஒரே கதையின் 176 பக்கங்களிலான தொகுப்பு ! கதையின் பக்க எண்ணிக்கை அதிகமென்ற போதிலும், பிரேக் இல்லா எக்ஸ்பிரஸ் ரயிலைப் போல 'தட தட'க்கும் சாகஸமிது  ! பிடரியில் அறையும் வன்முறை பாணிகள் ;  அந்நாட்களது கரடு முரடான வாழ்க்கைகளின் சித்தரிப்புகள்  ; 'ஞே' என்று விழிக்கச் செய்த சில பல பகுதிகள் ; கையில்லாவிடினும் காதல் லீலைகளில் துளியும் சளைக்கா  நாயகன் என்று இந்தக் கதையும் ஒரு சர்ச்சையின் குழந்தையாகவே களம் காணக் காத்துள்ளது ! முதல் இதழைப் போலவே இங்கும் அட்டகாச ஓவிய நுணுக்கங்கள் ; ரொம்பவே rustic கலரிங் பாணி ; அனல் பறக்கும் ஸ்கிரிப்ட் என்று அமைந்திருப்பதால் - இதனில் பணியாற்றுவது ஒரு அக்மார்க் சவாலாகவே அமைந்திருந்தது ! வழக்கமாய் இத்தனை நீளமான கதையெனில் அதனை மொழிபெயர்த்திட குறைந்த பட்சம் 3 வாரங்ககளாவது பிடிக்கும் - வெகு சுலபமாய் ! அதிலும் 'மின்னும் மரணம்' மெகா இதழின் மீது ஒரு கண் சதா நேரமும் இருப்பது அவசியமாகும் இத்தருணத்தில் இன்னமும் கூடுதல் நேரத்தை விழுங்கக் கூடும் என்று தான் எதிர்பார்த்தேன் !ஆனால் இந்த firecracker ரகக் கதை பாணியின் சுவாரஸ்யமும்  ; நிறையப் பக்கங்கள் மிகக் குறைவான வசனங்களோடு பயணிப்பதும் கைக்கோர்த்து ஒரே வாரத்தில் பணியை முடிக்க வழிவகுத்துத் தந்தன ! ஓவரான புலமை இது போன்ற கதைகளுக்கு உபத்திரவமே என்ற பாலிசியை இம்முறையும் மறக்கவில்லை  ; கதையினில் வரும் ஒரு சீனப் பெண்மணியின் வசனங்கள் நீங்கலாக ! அந்தப் பெண் கதை நெடுகிலும் தத்துவங்களாய் பொழியும் ஒரு கதாப்பாத்திரம் என்பதால் அவளுக்கு மட்டும் கலப்படமிலா சுத்தத் தமிழ் ஒதுக்கப்பட்டுள்ளது ! 

இதோ - ஒரிஜினல் டிசைன்களோடு நமது கவர்பேஜ் ! முதல் பாகத்தின் அட்டைப்படம் நமது பின்னட்டையிலும், இரண்டாம் பாகத்து டிசைன் நமது front கவராகவும் வந்திருப்பது மாத்திரமே மாற்றம் என்று சொல்லலாம் ! முன்னட்டையின் ஒரு ஓரத்தில் பாவமாய் நிற்கும் அந்த நாய் இந்த ஆல்பத்தில் மட்டுமன்றி ; தொடரக் காத்திருக்கும் அடுத்த ஆல்பத்திலும் ஒரு முக்கிய பங்கேற்பதால் அதனை நீக்கத் தோன்றவில்லை ! வேதாளனோடு டெவில் (வாலி ?) வலம் வந்த நாட்களுக்குப் பின்னே அட்டைப்படத்தில் மிஸ்டர். நாயார் ஒருவர் இடம்பிடிப்பதும் இதுவே முதன்முறை என்று நினைக்கிறேன்..! Correct me again..if I'm wrong please ?  

பௌன்சர் தொடரினில் தலை காட்டும் வில்லன்கள் அனைவருமே ஒரு மார்க்கமான கொடூரன்கள் என்பதை இம்முறையும் பார்த்திடத் தான் போகிறீர்கள் ! இதோ - துவக்கப் பக்கங்களிலேயே அரங்கேறும் ஒரு பகீர் ஆக்ஷன் sequence ! 
வர்ணக் கலவைகளும் ரொம்பவே ஒரு புராதன காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் விதமாய் - நிறைய pastel  shades + நிறைய dark tones கொண்டிருப்பதைப் பார்க்கப் போகிறீர்கள் ! So பக்கங்களைப் புரட்டும் போதே கதையின் அந்த mood நம்மைத் தொற்றிக் கொள்வது நிகழக் காத்துள்ளது  ! 

என்றேனும் ஒரு கரம் மசாலா நெடியோடு ஒரு சினிமா எடுக்க நம்முள் யாரேனும் தயாராகிடும் பட்சத்தில் இந்த பிரான்கோ-பெல்ஜியக் கையிலா காதலனை மறக்க முடியாதென்று நினைக்கிறேன் ! இப்போதைக்கு இந்த பில்டப் போதும் என்பதால் இந்த டீசர்களோடு பௌன்சர் புராணத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட்டு அடுத்த topic பக்கமாய் நம் கவனத்தைத் திருப்புவோமா?  

"மின்னும் மரணம்" முன்பதிவுகள் நம் இலக்கான 500-ஐத் தாண்டி ; இப்போது 600-ஐத் தொட்டு விடும் தொலைவில் நிற்பது சந்தோஷச் சேதி ! So ஏப்ரலின் மத்தியினில் நமது சப்பை மூக்காரின் இந்த மெகா இதழ் வெளிவருவது உறுதி ! இன்னமும் ஒரே ஒரு பாகம் மட்டுமே டைப்செட்டிங் செய்யப்பட வேண்டிய நிலை என்பதால் அது முடிந்தான பின்னே எடிட்டிங் & பிராசசிங் பணிகளை ஜரூராய்த் துவங்கிடலாம் ! இதுவொரு மைல்கல் இதழின் தொகுப்பு எனும் போது இதனுள் என் 'சவ சவப்புகளோ' ; இன்ன பிற filler pages இடம்பிடிப்பதோ நிகழப் போவதில்லை ! ஆகையால் இதிலும் வழக்கமான நமது பார்முலாவைத் தேடிட வேண்டாமே ! 

ஏப்ரலின் மறுபதிப்புப் படலமானது மி.மி.யோடு நிறைவு பெறுவதாக இல்லை ; துணைக்கு கறுப்பு-வெள்ளையில் நமது இரும்புக்கையாரும் ; லாரன்ஸ் -டேவிட் ஜோடியும் வரவுள்ளனர் - 
 • கொள்ளைக்கார மாயாவி 
 • பிளைட் 731 

மறுபதிப்புகளோடு ! 'அதே ஒரிஜினல் மொழிபெயர்ப்பு போதுமே..!' என்ற கொடி உயரப் பறப்பது தொடரவே செய்கிறது ! In fact நண்பரொருவர் - "பொன்னியின் செல்வன்" எத்தனை மறுபதிப்புகள் கண்டாலும் அதே ஒரிஜினல் நடையோடு தானே வருகிறது ; நீங்கள் மட்டும் அந்த golden  oldie வசனங்களை மாற்ற நினைப்பது ஏனோ ? என்ற ஆதங்கத்தோடு எழுதியிருந்தார் !! பழமை மீது காதல் கொள்வதெல்லாம் ஒ.கே. தான் ; ஆனால் தவழப் படித்துக் கொண்டிருந்த நாட்களில் நம் வீட்டுச் சிறுசுகள் கிறுக்கி வைக்கும் ஆத்தி சூடிகளை - ஒரு காவியத்தோடு ஒப்பிடுவது அபத்தத்தின் உச்சமாகாதா ? அந்த nostalgia factor-ஐ ஓரிரு கணங்கள் கோணிப்பைக்குள் போட்டு மூடி விட்டு நிதானமாய் அந்நாட்களது நமது மொழிநடைகளைப் படித்துத் தான் பாருங்களேன் :"மாயாவி சண்டை செய்தார்"...;  "மாயாவி ஓங்கி ஒரு குத்து விட்டார்" என்ற ரீதியிலான வரிகளைப் படிக்கும் போது பல்லெல்லாம் ஆடுவது எனக்கு மட்டும் தானா ? 'தாக்குப் பிடிக்கவே முடியவில்லை' என்று பட்ட இடங்களில் மட்டும் கொஞ்சமாய் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளேன் ; நண்பர்களிடம் விளக்குமாற்றுப் பூசை வாங்கும் ஆபத்துள்ள போதிலும் ! பிளைட் 731 கூடப் பரவாயில்லை ; கொ.மா.வில் நெருடல்கள் ஏராளமா - ஏராளம் ! 

இனி வரும் நாட்களிலும், முழுசாய் எழுத நேரம் கிட்டுகிறதோ - இல்லையோ ; அவசியப்படும் மாற்றங்களை மட்டும் செய்திடவாவது நிச்சயம் முனைவோம் ! புதிதாய் இன்று இந்த மறுபதிப்புகளைப்  படிக்கும் இள வாசகர்கள் கதையின் புராதனத்தைக் கண்டு பேஸ்த்தடித்துப் போவது பற்றாதென்று - சிலந்திவலை படர்ந்து கிடக்கும் வரிகளாலும் சங்கடத்துக்கு ஆளாகிட வேண்டாமே - ப்ளீஸ் ?! பிளைட் 731 கதையில் ஆஸ்திரேலியாவில் துவங்கும் விமானம் பாயிண்ட் டு பாயிண்ட் பஸ் போல ஊர் ஊராய் நின்று போவதெல்லாம் இன்றைய jet-setting தலைமுறைகளுக்கு தரையில் உருண்டு புரண்டு சிரிப்பை வரவழைக்கும் விஷயமாகிடும் ஆபத்துள்ள நிலையில் - இதிலாவது அவர்களைக் காப்பாற்றி விடும் சாக்கில் நாமும் கொஞ்சம் தலை தப்பிக் கொள்வோமே (பழமை விரும்பிடும்)  நண்பர்களே ! "ஏற்றி விட்ட ஏணியை உதைக்கிறான் " ; "இவன் முத்திரை பழைய கதைகளிலும் இருக்க வேண்டும் என்ற ஆசையில் இதெல்லாம் செய்கிறான் " என்ற அர்ச்சனைகள் வேண்டாமே - please ?! 

அப்புறம் சமீபமாய் வலைக்குள் தலைவிட்டிருந்த வேளையில் கண்ணில் பட்ட சில விஷயங்கள் நமக்கு சுவாரஸ்யம் தந்திடக் கூடுமென்று பட்டது ! அட்டைப்பட டிசைன்களில் படைப்பாளிகள் அதகளம் செய்திடும் பின்னணியைத் தான் சற்றே பாருங்களேன் !! 


இது நாம் சுட்ட தோசை !!
இதே போல நாம் அவ்வப்போது, ஆங்காங்கே சுட்டுள்ள தோசைகள் நிறைய தேறும் ! அவற்றை நேரம் கிடைக்கும் போது எடுத்து விடப் பார்க்கிறேன் !


இப்போதைக்கு சொப்பன உலகிற்கு நடையைக் கட்டுகிறேன்  ! காலையில் நம்மவர்கள் மெல்போர்னில் கலக்கும் போது குறட்டை விட்டுக் கிடக்கக் கூடாதென்பதால் நாலு மணி நேரக் கோழித் தூக்கமாவது போட்டால் தான் உண்டு ! Adios for now all ! See you around ! 

Sunday, February 15, 2015

மார்ச்சின் மார்ஷல்..!

நண்பர்களே,

வணக்கம். நத்தை வேகத்தில் ஊர்ந்திடும் இன்டர்நெட் கொண்டதொரு இடத்தில்  2 நாட்கள் ஜாகை என்றான பின்னே, இன்றைய பதிவுக்கான பைல்களை ஆபீசிலிருந்து வரவழைப்பதே பொறுமையின் சோதனையாகிப் போனது !! பற்றாக்குறைக்கு நம்மவர்கள் அவற்றைப்  பெரிய, பெரிய பைல்களாய் அனுப்பி வைக்க - சிண்டைப் பிய்க்காத குறை தான் ! ஆனால் இன்றைய தினம் ஒரு கிரிக்கெட்   திருவிழாவின் துவக்கமாய் இருப்பதால் - நமது கவனங்கள் டி.வி.யைத் தாண்டி அதிகமிருக்கப் போவதில்லை எனும் போது இந்தப் பதிவை சுருக்கமானதொன்றாக அமைப்பதற்கு எனக்குக் கூடுதலாக ஒரு காரணம் கிட்டியுள்ளது ! So அனல் பறக்கும் அடிலைடில் நம்மவர்களின் ஆட்டத்தை  ரசிப்பதன் மத்தியினில் இங்கே எட்டிப் பார்க்கும் நண்பர்களுக்கு - இதோ மார்ச்சின் மார்ஷல் !! 

ஆகஸ்டில் வெளியான LMS இதழ் # 2-ல் துவங்கிய டைகரின் மார்ஷல் அவதாரத்தின் கிளைமாக்ஸ் பாகங்களே மார்சின் நமது வண்ண இதழின் முதலாவது ! So ஓவியர் வில்லியம் வான்சின் ஒரிஜினல் ஓவியத்தோடு வெளியாகும் "வேங்கைக்கு முடிவுரையா ?" அட்டைப்படத்தின் முதல் பார்வை இதோ :  


 முன்னட்டை + பின்னட்டை டிசைன்களை ஏற்கனவே நாம் முந்தய இதழ்களில் பயன்படுத்தி இருந்தாலும் - ஓவியர் வான்சின் unique ஸ்டைலினை மீண்டுமொருமுறை ரசிப்பதில் தவறிராது என்று நினைத்தேன் ! தவிர, ஓவியர் வான்சின் கைவண்ணத்தில் மிளிரும் டைகரின் முகத்தை நம் ஒவியரென்றில்லை - வேறெந்த ஓவியரும் அப்படியே உல்டா செய்வதும் நடக்கிற காரியமல்ல என்பதால் உள்ளதை உள்ளபடியே விட்டு விட்டோம் !  Hope you like it ! 

மொத்தம் 3 பாகங்கள் கொண்ட இந்த மார்ஷல் டைகர் தொடரின் முதல் பாகம் LMS -ல் வெளிவந்துள்ள நிலையில் - எஞ்சி நிற்கும் பாகம் 2 & 3 -ன் தொகுப்பே இம்மாத இதழ் என்பதை நாம் அறிவோம். இதனில் பாகம் 2-க்கு மட்டுமே ஓவியர் வான்ஸ் சித்திரங்கள் போட்டுள்ளார் ; இறுதிப் பாகத்துக்கு மிஷெல் ரூஜ் ஓவியப் பொறுப்பினை ஏற்றுள்ளார் ! இதோ பாகம் 2-ன் உட்பக்க மாதிரி - வான்சின் அதகள சித்திரத் தரத்தோடு : 


முதல்முறையாய் மழு மழு கன்னத்தோடு காட்சி தரும் டைகரைக் கண் குளிர ரசித்துக் கொள்வோமே...?! மார்ஷல் உடுப்புகளை இந்த இதழோடு தூக்கிக் கடாசி விடும் மனுஷன் மீண்டும் தனது பழைய வாழ்க்கைக்குப் போகவிருக்கிறார் எனும் போது இந்த சவரம் செய்யப்பட வதனத்தை இன்னுமொருமுறை பார்க்க வாய்ப்புக் கிடைக்குமோ - என்னவோ ?! தொடர்வது கிளைமாக்ஸ் பாகமான "ரணகள ராஜ்யத்திலிருந்து" ஒரு டீசர் ! இதன் ஓவியங்களோ மிஷெல் ரூஜ் !  
காரணங்கள் ஏதோ தெரியவில்லை - ஆனால் 1993-ல் "வேங்கைக்கு முடிவுரையா ?" வெளியான நிலையில் - கிளைமாக்ஸ் உருவானது ஏழாண்டுகளுக்குப் பின்னர் தான் !  Limbo -வில் தொங்கிய தொடரை புது ஓவியர் + புது கலரிங் ஆர்டிஸ்ட் துணையோடு 2000-ல் தான்முடித்து வைத்துள்ளார்கள் ! வான்சின் ஓவிய பாணி + அந்தப் பாகத்தின் கலரிங் பொறுப்பை ஏற்றிருந்த பெட்ராவின் பாணியும் - பின்னாட்களில் பாகம் 3-ன் creative டீமின் பாணிக்கு முற்றிலும் வேறுபட்டிருப்பதால்  - இந்த இதழில் இரு contrasting styles களை நாம் பார்க்கவிருக்கிறோம் ! சித்திர பாணிகள் எவ்விதமிருப்பினும், கதாசிரியரும், கதையின் முடிச்சும் ஒன்றே என்பதால் அந்தப் பரபரப்பான flow தொடர்ந்திடுகிறது ! தவிர, நமது சமீபத்திய ராசியோ - என்னவோ இப்போதெல்லாம் முக்குக்கொரு முத்தக் காட்சி அமைந்து போகின்றது கதைகளில் ! இதனிலும் அந்த பாணி தொடர்கிறது - 'தளபதி'யின் 'பச்சக்' சாகசங்களோடு  ! எதெதிலோ 'தலை' - நம் தளபதிக்குக் கடும் போட்டி தரலாம் தான் ; ஆனால் இந்த டிபார்ட்மெண்டில் தளபதியை அடித்துக் கொள்ள வாய்ப்பே இல்லை  என்பது நிச்சயம் !

More of tiger - தொடரும் ஏப்ரலின் இறுதிக்குள் "மின்னும் மரணம்" முழுத் தொகுப்பினையும் நம் சத்துக்கு நாம் வெளியிடத் தயாராகி வரும் நிலையில் - படைப்பாளிகளோ - கடந்த டிசம்பரில் 1456 பக்க ராட்சச டைகர் தொகுப்பு ஒன்றினை 69 யூரோ விலையில் வெளியிட்டுள்ளனர் ! பாருங்களேன் :
இளம் டைகர் கதைகளோடு துவங்கி ; மின்னும் மரணம் கதைகள் பதினொன்றையும் கொண்டு ; அப்படியே மிஸ்டர் ப்ளூபெர்ரி தொடரையும் தழுவிச் செல்லும் ராட்சசப் படைப்பு இது !! இதோ அதன் கதைகளின் பட்டியல் :
காலங்கள் ; ரசனைகள் ; கதைக்களங்கள் என சகலமும் நிறையவே மாறிப் போனாலும் - சில classic கதைகளுக்கு வரவேற்பு இன்னமும் மாறாது இருப்பது நிறைவாய் உள்ளது !  Old is Gold forever I guess...! அடுத்த வாரம் வழக்கம் போலொரு நீண்ட பதிவோடு சிந்திப்போம் ! அது வரை - let's enjoy the cricket...! Bye for now guys ! 

Sunday, February 08, 2015

ரணமும்...களமும்..!

நண்பர்களே,

வணக்கம். 'வலையுலகிற்கும், மாறுபட்ட அபிப்ராயங்களுக்கும், அவற்றைக் கையாளும் விதங்களுக்கும் நாம் செமையாய்த் தயாராகி விட்டோமே - என்னமோ, போடா மாதவா.. !' என்று என்னை நானே முதுகில் தட்டிக் கொள்ளும் போது - பொடெரென்று எங்கிருந்தாவது விளக்குமாற்றுச் சாத்து விழுவதும் கூட இப்போதெல்லாம் பழக்கமாகிப் போய் விட்டது !  எவ்ளோ அடிச்சாலும் "வலிக்கலியே..!" என்று வெளியே பல்லைக் காட்டித் திரியும் கலையிலும் கூட ஓரளவிற்குத் தேர்ச்சி கண்டு விட்டேன் என்றே தான் சொல்ல வேண்டும் ! So 'எனது மேஜையில் நடந்து வரும் 'ரணகள ராஜ்ஜியத்தின்' எடிட்டிங் பணிகள் ஒரு பக்கமெனில் கடந்த நாலைந்து நாட்களாய் இங்கு அரங்கேறி வரும் வேறொரு வகையிலான 'ரணகள ராஜ்யத்தினைப்' பெரிதாய் நான் தலைக்குக் கொண்டு செல்லவில்லை தான் ! ஆனால் நம்  பொருட்டு, நண்பர்களுக்குள் வாத-விவாதங்கள் ஓடி வருவதைப் பார்ப்பது தான் சங்கடமாய் உள்ளது ! 

"2012 போல் இல்லை ; அச்சில் குறைபாடு !"  என்பதே 'சொய்ங்' என பொத்தாம் பொதுவாய் வீசப்பட்டுள்ள கல் ! அதன் பொருட்டு நண்பர்கள் அவரவர்களுக்குத் தெரிந்த விளக்கங்களை முன்வைப்பதை ஆர்வத்துடன் பார்த்தேன் ! ஒவ்வொரு விளக்கத்திலும் சாரமும், விஷய ஞானமும் நிறைந்து இருப்பதை ரசித்த அதே கணத்தில் நிஜமான பின்னணிகளை  விளக்கிட்டால் என்னவென்று தோன்றியது ! இது சொந்தக் காசில் சூன்யம் வைத்துக் கொள்ளும் வேலையாகவும் இருக்கலாம் ; என்னை உதைக்க நானே நயமான BATA பாதணிகளை எடுத்துத் தரும் நிகழ்வாகவும் இருக்கலாம் தான் ! ஆனால் வெளிப்படையாய் இருப்பதே எனக்குத் தெரிந்த ஒரே யுக்தி என்பதால் இதன் பின்விளைவுகள் ; பின்னாத விளைவுகளைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டு எனது கொஞ்ச நஞ்ச உறக்கத்தையும்  தொலைத்துக் கொள்ளப் போவதில்லை ! எனது விளக்கங்களைப் படித்து முடித்த பின்னே -  'நம்புற மாதிரி  இல்லியே" என்றோ - 'சப்பைக்கட்டு கட்டறான்' என்றோ காமிக்ஸ் Whatsapp க்ரூப்களில் சுடச் சுட "ஞாயிறு ஸ்பெஷல்கள்" தடதடக்கும் வாய்ப்புகள் பிரகாசம் என்றும் தெரிகின்ற போதிலும், நிஜத்தைச் சொல்லத் தயங்கிய தவறை நான் செய்வதாகயில்லை ! 

அதே போல இந்த விளக்கங்கள், குரல் உயர்த்திப் "போராட" (!!) முயற்சிக்கும் நண்பரின் பொருட்டு அல்ல - நிச்சயமாய்  ! உயரும் ஒவ்வொரு குரலுக்கும் நடுங்கிப் போய் என் அடிமடியைத்  திறந்து காட்டுவதாக இருப்பின், நாள் முழுவதிலும் வேஷ்டியை சரி செய்வதைத் தாண்டி நான் வேறெதுவும் செய்திருக்க முடியாது ! நம் தரப்பிலும் நிச்சயமாய் நியாயம் இருக்கும் என்ற பொறுமையோடும், நம்பிக்கையோடும், நிஜம் என்னவென்று அறியாது  உள்ளுக்குள்ளே சங்கடப்பட்டுக் கொண்டிருக்கக் கூடிய நண்பர்களின் திருப்திக்காக இந்த விளக்கப் படலம் ! 

2012-ல் வண்ணத்தில் மறுவருகை ; COMEBACK ஸ்பெஷல் என்றெல்லாம் நாம் துவங்கிய நாட்களில் ஆண்டின் சந்தாவே வெறும் ரூ.620 தான் ! அந்தத் தொகையைக் கூட 2012-ன் சென்னைப் புத்தக விழாவினில் நாம் முதல்முறையாக ஸ்டால் போட்டிருந்த தருணத்தில் - 'இனி சந்தா எவ்வளவு சார் ?' என விஷ்வா கேட்ட பின்னர் அங்கேயே வைத்து ஒரு சின்ன மனக்கணக்கைப் போட்டுச் சொன்னேன் !  முதல் இதழை ரூ.100 விலையில் வெளியிடும் போதும், "இந்த விலை வாசகர்களுக்கு எட்டும் தூரத்தில் இருக்குமா ?" ; இந்தக் கதைகள் ஒ.கே.தானா ?" ; "பிரின்சின் கதை சப்பையாக உள்ளதே ; லக்கி லூக்கின் புதுக் கதையில் அந்த லேட்டஸ்ட் கலரின் பாணி சூப்பர்-டூப்பராக   இருந்தாலும் கதை ரொம்ப சுமாராக உள்ளதே !" என்ற ரீதியில் எனக்குள் ஓராயிரம் சந்தேகங்கள் குடியிருந்தன ! "அந்தப் பெயருக்காகவாச்சும் வண்டி ஓடாதா- என்ன ? ; எதற்கும் இருந்து விட்டுப் போகட்டுமே !" என்ற சிந்தனையில் தான் மாயாவியின் நீளமான black & white கதையினை COMEBACK ஸ்பெஷலில் ஓட்டுச் சேர்த்திருந்தேன் ! கலர் வெளியீடுகளுக்குள் கால் பதித்த நாட்களில் நம்மிடமிருந்த திட்டமிடலின் எல்லைகள் அவ்வளவுக்குள் தான் இருந்தன ! COMEBACK SPL ; LARGO ; DOUBLE THRILL ; WILD WEST மற்றும் தங்கக் கல்லறை என ஐந்தே வண்ண வெளியீடுகள் ; மிச்சம் மீதியெல்லாம் பத்து ரூபாய் விலையிலான black & white இதழ்களே என்று தான் முதல் ஆண்டைக் கடக்க திட்டமிட்டிருந்தோம் ! 

இருநூறு ரூபாய்க்கே 852 பக்கங்கள் அவசியமாகியிருந்த அந்த (இரத்தப் படல ) நாட்களில் - தொடர் வண்ண இதழ்கள் ; தொடர் 100 ரூபாய் விலைகள் என்பதெல்லாம் நினைக்கவே பயம் தந்த முயற்சிகள் ! மொத்தமாய் முகவர்கள் நம்மைக் கைவிட்டிருந்த நாட்களவை என்பதையும் ; நமது நம்பகத்தன்மை (!!) லெமூரியாக் கண்டத்தோடு காணாது போயிருந்த சங்கதி என்பதையும் இங்கே நினைவூட்டுகிறேன் ! In fact - 2013-ல் NBS வெளியாகி ; தொடர்ச்சியாய் மற்ற இதழ்களும்  வெளிவரத் துவங்கிய வரையிலும் - ஒரு விரல் கிருஷ்ணாராவை விட  'வரும்..ஆனா வராது' காமெடியில் அதிகம் உருண்டது எனது சொட்டைத் தலையாக தான் இருக்கும் என்பதில் இரகசியமேது ? 'வாசகர்களோடு ஞாயிறுகளில் போன் பேசுகிறேன் பேர்வழி' என நான் ஆர்வக் கோளாறு காட்டிய நாட்களில்,  நண்பரொருவரோடு பேசிக் கொண்டிருக்கும் போதே 'சேர்ந்தார் போல நாலு இதழ்களைப் போட்டுட்டு அப்புறமா இந்த பீலாலாம் விடச் சொல்லு' என்று 'அன்பான' பின்னணிக் குரல்  ஒலித்ததும் உண்டு ! So இதுவொரு make or break சூழ்நிலை என்பதையும், இங்கே சொதப்பினால் மானம் மொத்தமாய்க் கப்பல், ரயில், ராக்கெட் ஏறி விடும் என்பதாலும் - மறுவருகையின் முதல் ஆண்டின் சகல ஸ்பெஷல் வெளியீடுகளுக்கும் நாம் சுத்தமாய்க் கணக்குப் பார்க்கவே இல்லை என்பது தான் நிஜம் ! அந்த COMEBACK ஸ்பெஷலில் சுமார் 300 பக்கங்கள் என்று ஞாபகம் ! வெறும் 1600 பிரதிகள் அச்சிடப்பட்ட அந்த  இதழை அன்றைய விலைவாசிகளில் கூட - ரூ.100-க்கு உற்பத்தி செய்ய துளி கூட வாய்ப்பே கிடையாது ! ஆனால் இனியொருமுறை 'ஹி..ஹி..'  - "இதழ்கள் தாமதம்" ; "விற்பனை மந்தம்" என்றெல்லாம் அசடு வழிந்து நிற்கவே கூடாது என்ற வைராக்கியம் மட்டும் என்னை உந்தித் தள்ள - முதலாண்டின் லாப-நஷ்டக் கணக்கு கணிசமான சிகப்பில் கரை ஒதுங்கிய போதிலும் அதனை நான் மௌனமாய் முழுங்கிக் கொண்டேன் ! "விலை அதிகம் " என்ற சிந்தனை எந்த விதத்திலும் உங்களுக்குத் தோன்றிடவே கூடாது என்ற பயமே பிரதானமாய் நின்றது ! 

சரி..இந்தக் கதைக்கும், அச்சுத் தரம் பற்றிய சர்ச்சைக்கும் என்ன சம்பந்தம் ? என்று நீங்கள் கேட்கத் துவங்கும் முன்னே நானே விஷயத்துக்கு வருகிறேன் ! 

'ஆஹா...பிரிண்டிங் பிரமாதம் !' என்றோ ; "மோசம் ! " என்றோ சொல்லும் வேளைகளில் அந்தப் பெருமையோ / சிறுமையோ அச்சுக்கு ஒரு படி முன்னேயுள்ள PRE-PRESS  என்ற பிராசசிங் பிரிவிற்கும் பெருமளவு சாரும் என்பது நிறைய கவனங்களை ஈர்க்கா  ஒரு விஷயம் ! 2012-ல் அந்த வண்ண இதழ்களை நாம் பிராசசிங் செய்த விதங்கள் சகலமுமே மிக விலையுயர்ந்த பாணிகள் ! அந்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் போது கிடைக்கும் அச்சுத் தரம் சராசரியை விட நிச்சயம் சில பல படிகள் மேலேயிருக்கும் ! அந்த முறையினில் அச்சுக்குப் பயன்படுத்தப்படும் பிளேட்கள் முதற்கொண்டு அயல்நாட்டு இறக்குமதிகள் தான் ! இது பற்றாதென்று அந்த நாட்களில் நம்மிடம் இன்னுமொரு துருப்புச் சீட்டும் தற்செயலாய் கைவசம் இருந்தது ! நமது இன்னொரு தொழில் second hand அச்சு இயந்திரங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்வதும் கூட என்பதால், உயர்விலையிலான மிஷின்கள்  எப்போதாவது  நம்மிடம் கைவசம் இருப்பது உண்டு ! 2012-ல் அது போல் ஸ்டாக்கில் இருந்ததொரு மிஷின் விற்காது மொக்கை போட்டுக் கொண்டு கிடந்ததால் - அதனை install செய்து  trial பார்க்கும் நிலைக்குக் கொண்டு வந்து வைத்திருந்தோம் ! 'சரி..சும்மா நிற்கும் மிஷின் தானே...? விற்கும் வரைக்கும் அதில் அச்சிடுவோமே !' என்ற எண்ணத்தில் நமது வண்ண இதழ்களை அதனில் அச்சிட்டு விட்டு அப்புறம் மூடாக்குப் போட்டு மூடி விடுவோம் !   So - imported paper ; high-end pre-press ; imported plates ; imported inks ; young printing machine என்ற கூட்டணி தற்செயலாய் நமக்குக் கிட்டியிருந்தது என்பதால் அதன் பலன்கள் 'பளிச' ரகத்தில் அமைந்ததில் வியப்பில்லை ! 

2012-ன் இறுதியில் NBS என்ற மெகா இதழை அறிவிக்கும் அளவுக்கு நாம் முன்னேறியிருந்தோம் என்பதால் அந்த இதழுக்கும் அதே pre-press பாணிகள் தொடர்ந்தன ! ஆனால் மாதந்தோறும் அந்த பிராசசிங் பில்களுக்குப் பணம் கொடுக்கும் வேளைகளில் நான் பிச்சை எடுக்காத குறை தான் ! NBS தந்த உற்சாகம் தொடர்ந்து மார்ச் 2013 வரையிலும்  நஷ்டத்தின் பரிமாணங்களை மேஜை விரிப்புக்குக் கீழே பதுக்கிப் பதுக்கி வைக்கச் செய்தது ! ஆனால் என்ன தான் இதுவொரு குடும்பத் தொழில் என்றாலும் - அண்ணனின் வறட்டுப் பிடிவாதம் ஏற்படுத்தும் தொடர் நஷ்டங்களை தம்பி சகித்துக் கொண்டே இருப்பது எத்தனை காலம் தான் தொடர்ந்திட முடியும் ? மார்ச் 31-ல் அந்தக் கணக்காண்டின் முடிவுகளைத் தோராயமாய்ப் பார்க்கும் போதே - செலவினங்களைக் கணிசமாய்க் குறைக்க வழி கண்டுபிடிக்காவிட்டால் கதை கந்தலாகிப் போகும் என்பது தெள்ளத் தெளிவாய்த் தெரிந்தது ! பற்றாக்குறைக்கு ஒரு அமெரிக்க டாலருக்கு 51 ரூபாய் சுமாருக்கு இருந்து வந்த அன்னியச் செலாவணியின் மதிப்பும் பகீர் பகீரென்று உயரத் தொடங்கிய போது நமது பற்கள் இன்னும் அதிகம் ஆட்டம் காணத் தொடங்கின !  கதைகள் ; அச்சுக் காகிதம் ; இன்க் ; பிளேட் என சகலமும் வெளிநாட்டு இறக்குமதி என்பதால், ஒவ்வொரு மாதமும் எனது திட்டமிடல்கள் மண்ணைக் கவ்வத் தொடங்கின ! 

So எங்கெங்கு முடியுமோ - அங்கங்கு செலவுகளுக்குக் கத்திரி போடுவது ; அல்லது விலையைப் 'படக்' கென ஏற்றுவது ...என்பதைத் தாண்டி நம் முன்னே பெரியதொரு choice இருக்கவில்லை ! 'ஆண்டுச் சந்தா' என வசூலித்து விட்டு, சிறுகச் சிறுக நமது இதழ்களுக்கொரு credibility வளர்த்து வரும் வேளையில் - விலையை நடுவாக்கில் கூட்டுவது நிச்சயமாய் அசிங்கமாக இருக்கும் என்பதால் cost cutting என்ற சாலையிலே செல்வதென்று தீர்மானித்தேன் ! திரும்பிப் பார்க்கையில் அது சரியான தீர்மானம் தானா  ? ; அன்றே விலையை ஏற்றி விட்டு அதே தரத்தை தொடர்ந்திருக்க வேண்டுமா ? என்ற கேள்விகளுக்கெல்லாம் சத்தியமாய் என்னிடம் விடையில்லை ! பெரும் பதிப்பகங்களைப் போல திட்டமிடவோ  ; விவாதம் செய்து தீர்மானங்களை எட்டிப் பிடிக்கவோ இங்கு ஆள் ஏது ? நானே ராஜா..நானே..மந்திரி..நானே டவாலியும் கூட எனும் போது என் சக்திக்கு உட்பட்ட தீர்மானங்களே நம் இதழ்களின் பாதைகளைத் தீர்மானிக்கும் சக்திகளாகிப் போகின்றன ! இதுவொரு வரமா ? சாபமா ? ; இந்த நவீன யுகத்தினில் இன்னமும் இது போன்ற archaic நிர்வாக முறைகள் கொண்டு செல்லுமா ? என்பதெல்லாம் சுவாரஸ்யமான விவாதத் தலைப்பாக இருந்திட முடியும் ! ஆனால் முடிந்தளவுக்கு என் சிந்தனைகளை மாறி வரும் ரசனைகளுக்கேற்ப adapt செய்து கொள்ள முயற்சிக்கத் தான் செய்து வருகிறேன் ! அடுத்த தலைமுறைக்கு நான் வழிவிடும் வேளை வாகாகப் புலரும் போது - maybe இது போன்ற குழப்பங்கள் தொடராது போகலாம் ! ஆனால் அது வரையிலும் என்னையும், எனது செயல்முறைகளையும் சகித்தாக வேண்டிப் போகிறது ! 

Getting back on track, பிராசசிங்கில் செய்திடக் கூடிய மாற்றங்கள் தான் முதல் இலக்காகிப் போயின - நமது Operation cost cutting -ல் ! சற்றே அடுத்த லெவல் pre-press பாணி ; இந்திய பிளேட்கள் என்ற தவிர்க்க இயலா மாற்றம் முதலில் நிகழ, பக்கக் குறைப்புகள் தொடர்ந்தன ! சரியாக அதே தருணத்தில், அதுவரையிலும் விற்பனையாகாது கிடந்த நமது உயர்விலையிலான மிஷினும் விற்பனையாகியதால் - நாம் எப்போதும் பயன்படுத்தும் normal இயந்திரத்திலேயே பணிகளைத் தொடரத் துவங்கினோம் - 2013-ன் ஏப்ரல் இதழான "டைகர் ஸ்பெஷல்" முதல் !(நார்மல் இயந்திரமென்ற உடனே இது பேரீச்சம்பழத்தின் ஈடென்று நினைத்திட வேண்டாமே - இதன் விலையே நெருக்கி 30 இலட்சம் !) சற்றே மாறுபட்ட டெக்னாலஜி கொண்ட மிஷினில் அதுவரையிலும் அச்சான நமது வண்ண இதழ்களை, நார்மலான மிஷினில் பிரிண்ட் செய்ய நம்மவர்கள்  தடுமாறத் தான் செய்தார்கள் ! "இரத்தத் தடம்" சொதப்பியது இப்படித் தான் ! தவிர அந்தத் தருணத்தில் பணியாட்களிலும் அனுபவசாலிகள் குறைவாய் இருந்திட 2013-ன் நிறைய இதழ்கள் 'தொட்டுக்கோ-துடைச்சுக்கோ' பாணியில் தான் கரை சேர்ந்தன ! இது தொடர்பாய் அந்நாட்களிலேயே நாமொரு நீண்ட விவாத மேடையை சந்தித்தது கூட நினைவிருக்கலாம் ! ஆனால் "சிப்பாயின் சுவடுகள்" வெளியான தருணம் முதலே புதிய பிரிண்டர் குமார் பணியில் சேர்ந்திட - கொஞ்சம் கொஞ்சமாய் அச்சின் சிக்கல்களை களையத் தொடங்கினோம். 2014-ன் வெளியீடுகளில் "ஆத்மாக்கள் அடங்குவதில்லை" ; "நள்ளிரவு நங்கை" ; "உயரே ஒரு ஒற்றைக் கழுகு" ஆகிய 3 இதழ்களைத் தவிர, பாக்கி எல்லாமே சிக்கல்களின்றி தயாராகின ! இவை மூன்றுமே மாறுபட்ட சைஸ் என்பதால் அதற்கு இன்னமும் கூடுதலாய் கவனம் செலுத்தத் தேவைப்படுகிறது என்பதை ஒத்துக் கொள்கிறேன் ! அதே போல - pre-press பாணியின் மாற்றங்களையும் அச்சுத் தரத்தில் அதிகமாய்ப் பிரதிபலிக்க அனுமதிக்காது இத்துறையில் புத்தம் புது மிஷின்களாய் வைத்திருக்கும் processing நிறுவனங்களையாகத் தேடித் தேடி வேலை கொடுத்து வருகிறோம் இப்போதெல்லாம் !  LMS இதழின் பணிகள் தொடங்கிய போது கூட பிராசஸிங் செய்பவர்களை அதீத கவனம் எடுத்துக் கொள்ளக் கோரி வேலை வாங்கினோம் ! அதன் அச்சுப் பணிகளின் போது நானும் விடிய, விடிய அச்சுக் கூடமே கதியெனக் கிடக்க - நமது நார்மலான மிஷினிலேயே, நம் பணியாட்கள் மிரட்டலான தரத்தை சாத்தியமாக்கினார்கள் ! 'புளுகுகிறான்..!! LMS இதழை உள்ளே அச்சிட்டிருக்க வாய்ப்பில்லை ; நிச்சயமாய் outsource செய்திருப்பார்கள் !" என்று சாதிக்கக் காத்திருக்கும் "அன்பர்களின்" பொருட்டு நான் சூடத்தை அணைத்து சத்தியம் செய்யும் முஸ்தீபுகளில் எல்லாம் இறங்கப் போவதில்லை ! ஆனால் சத்தியமான நிஜம் அதுவே என்பது ஆண்டவனுக்கும் , எங்கள் அணியின் முழுமைக்கும் தெரியும்! 

இதை விடவும் உயர்தர இயந்திரம் வாங்கிட கோடியில் முதலீடு அவசியமாகும் ! சிவகாசியிலும் சரி ; மொத்தத்துக்கே அச்சுத் தொழில் இன்றுள்ள நிலைக்கும் சரி - அத்தகைய முதலீடுகள் மண்ணைக் கவ்வ உறுதியான வழிமுறை என்ற நிலை ! 'சரி - outsource செய்து அச்சிட்டு வாங்க வேண்டியது தானே ? ' என்ற கேள்விக்கான பதில் நமது தற்போதைய ரொக்கப் பணப் புளக்க pattern-ல் உள்ளது ! ஆண்டின் துவக்கத்தில் உங்களிடமிருந்து கிட்டும் சந்தாத் தொகைகளின் 90% ஆண்டின் கதைக் கொள்முதல்களுக்கே சரியாகி விடும் ! பௌன்சர் தொடரா ? - மொத்தமாய் எல்லாக் கதைகளுக்கும் பணம் கட்டியாக வேண்டும் ; மும்மூர்த்திகளின் மறுபதிப்பா ? கட்டுடா மொத்தமாய் ! என்பதே நிலைமை ! So உங்கள் வரவுகளை சேதாரமின்றிப் பத்திரப்படுத்தி படைப்பாளிகளுக்கு அனுப்பினால் தான் சக்கரங்கள் சுற்றவே வழி பிறக்கும் ! இந்தாண்டு சந்தாத் தொகைகளை பிரத்யேகமாய் Sunshine Library கணக்கிற்குக் கொண்டு சென்றதன் காரணமே இது தான் ! தெரியாத்தனமாய்க் கூட அந்தப் பணம் வேறு செலவினங்களுக்குச் சென்று விடக் கூடாதே என்ற முன்ஜாக்கிரதை ! 

அதன் பின்னே டிசைனிங் ; டைப்செட்டிங் செலவுகள் ; காகிதக் கொள்முதல், சம்பளங்கள், நிர்வாகச் செலவுகள் ; பிராசஸிங் செலவுகள் ; கூரியர் கட்டணங்கள் என்று வரும் தவிர்க்க இயலாச் செலவுகளை சமாளிக்க முகவர்கள் வாயிலாக நமக்குக் கிடைக்கும் பணங்களும், இடையிடையே வரும் புத்தக விழாக்களின் சிற்சிறு விற்பனைத் தொகைகளும் ஓரளவுக்கு உதவும். வங்கிக் கடன்களோ ; நமது இதர நிறுவனங்களிலிருந்து நான் கோரிப் பெற்றிடும் தொகைகளோ தான் துண்டு விழும் பட்ஜெட்டை நேர் பண்ண உதவும் கருவிகள் ! பிரிண்டிங் இன்க் வாங்குவது நீங்கலாக  "அச்சுக் கூலி" என்று தனியாக எவ்விதக் கட்டணங்களையோ   ; நான் செய்யும் மொழிபெயர்ப்புகளுக்கு அரையணா சன்மானத்தையோ கூட இந்தக் கணக்கில் நாம் பற்று எழுதுவதில்லை ! இது தான் கலப்படமில்லா நிஜம் ! இந்த சூழலில் நான் மாதா மாதம் வெளியில் அச்சுப் பணிகளை outsource செய்து தான் வாங்க வேண்டுமெனில் - அதற்கான money flow -க்கு வழியில்லையே ! ? Pre-Press யுக்திகளில் 'no compromises ' என்று நான் வீராய்ப்பாய்  மீசையை முறுக்கிக் கொள்ளலாம் தான் - ஆனால் மாதந்தோறும் அதன் பொருட்டு நான் generate செய்திடத் தேவையான தொகை சன்னமானதல்லவே  ! அச்சிடுவதில் 75% பிரதிகளை முதல் 3 மாதங்களுக்குள்ளாவது விற்க சாத்தியமாகும் நாள் புலரும் வரை இந்த ஆடு புலியாட்டத்தைத் தொடர்ந்தே தீர வேண்டும் ! Trust me guys, பணம் புரட்ட நடக்கும் இந்த அதகளம் பர்மா காடுகளில் சைமனைத் தேடிச் செல்வதை விடச் சிக்கலானதொரு பணி ! நாளைக்கே திட்டமிடலில் பலமான இன்னொரு நிறுவனம் காமிக்ஸ் வெளியீட்டைத் துவக்கி நம்மை விட அழகாய் ஒரு product-ஐ வழங்கலாம் தான் ; so நமது பட்ஜெட் / விலையமைப்புகள் சகலமும் மார்கெட்டில் அனைவருக்குமே பொருந்தும் என்றெல்லாம் நான் சொல்லப் போவதில்லை !  நமக்கிருக்கும் ஆற்றல்களுக்குள் ; விலைகளை இயன்றளவு கட்டுக்குள் வைத்தே தீர வேண்டுமென்ற வைராக்கிய வட்டத்துக்குள் உலாவும் அவசியம் நேரும் போது நாம் செய்திடக் கூடியது அதிகம் இருப்பதில்லை என்பது மட்டுமே எனது பதிவு ! 

இந்தாண்டின் பௌன்சர் ; சிறைக்குள் சடுகுடு..;இரத்தப் படலம் இதழ்களெல்லாம் neat என்று சொல்லும் ரகம் என்பதில் சந்தேகம் கிடையாது ! அதே சமயம் சொற்பமானதொரு சர்குலேஷன் ; அச்சிடும் பிரதிகளின் எண்ணிக்கை குறைவு என்பதால் - வேஸ்ட் ஆகும் காகிதங்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதும் நடைமுறை. (அச்சு இயந்திரத்தில் 2000 காகிதங்களை அச்சிட சுமார் 200 தாள்கள் வேஸ்ட் ஆகும் ; அதே சமயம் 200,000 காகிதங்களை அச்சிடும் போது  வேஸ்டின் எண்ணிக்கை 500-ஐத் தாண்டாது !) So அந்த வேஸ்ட் காகிதங்கள் அவ்வப்போது உங்கள் பிரதியினில் நுழையும் வாய்ப்புகள் உண்டு ! இம்மாதம் முதல் அச்சுக் கூடத்திலேயே அந்த வேஸ்ட் தாள்களை தூக்கி வீசிடும் ஏற்பாடுகளை செய்திடப் போகிறோம் என்பதால் தொடரும் மாதங்களில் அதன் பொருட்டு சிக்கல்கள் பெரிதாய் எழுந்திடக் கூடாது என்று நம்புகிறேன் ! அதே போல முகவர்களுக்கு அனுப்பப்படும் பிரதிகளையும் இனிமேல் கால்களில் வெந்நீர் ஊற்றிய பாணிகளில் அனுப்பிடாது  2 நாட்களின் அவகாசத்தின்  பின்னதாக - முழுமையாகக் கை பார்க்கப்பட்ட பின்னரே அனுப்பிடவிருக்கிறோம் !  

ஒரு கொட்டாவியைப் பார்த்த மறுகணம் ஆளாளுக்குக் கொட்டாவி விடும் உணர்வு எழுவது இயல்பு தானே ?! சுமாரான அச்சுத்தரத்தோடு 2013-ல் நிறைய இதழ்களும் , 2014-ல் நடுநடுவே ஒன்றிரண்டு இதழ்களும்  வந்த பின்னே ஒவ்வொரு முறையும் அச்சின் பொருட்டு சிறு கிலேசம் எழுவது இயற்கையே ! ஆனால் - 'இவன் காசு பார்க்கும் பொருட்டு எதையோ சொதப்புகிறான் ; அதனால் இப்போது வரும் அத்தனையும் குப்பையாகத் தானிருக்கும் !' என்ற தீர்மானத்தை  மனதுக்குள் திடமான கோட்டையாய்க் கட்டிக் கொண்டு ஒவ்வொரு மாதமும் பக்கங்களைப் புரட்டும் போது - பௌன்சரின் ஒரிஜினல் rustic coloring கூட நாராசமாய்த் தெரியலாம் தான் ! ஒவ்வொரு மாதமும், இதழைப் பிரிக்கும் போதும்  , பக்கங்களைப் புரட்டும் போதும் குறைபாடுகள் உள்ளனவா ? என்ற தேடலுக்கு முதலிடம் தராது - கதையை ரசிக்க முன்னுரிமை தருவோமே நண்பர்களே ?! குறைகள் இருப்பின், நீங்கள் தேடிச் செல்லாமலே 'பொளேரென்று' உங்கள் முன்னே அவை ஆஜராகி நிற்கும் என்பது நிச்சயம் ! தற்சமயத்து பெரிய சைசில், இந்த ஆர்ட் பேப்பரில் எந்தக் குறைபாடும் கண்ணில் படாது போக வாய்ப்பே இல்லையெனும் போது - why strain to go fault finding ? 

விமர்சனங்களுக்கு நிச்சயமாய் நாம் விரோதியல்ல ; ஆனால் விமர்சனமே   வாசிப்பின் நோக்கமாகிப் போக வேண்டாமே என்பது தான் எனது விண்ணப்பம் ! கடந்த பதிவிற்கு 310+ பின்னூட்டங்கள் உள்ள போதிலும், ஷெல்டனையோ ; நண்பர் XIII -ஐ யோ பற்றிய கருத்துக்கள் / வாசக அபிப்பிராயங்கள் 50-ஐத் தாண்டியிருப்பின் ஆச்சர்யப்படுவேன் ! ரசனைகளில் முதிர்ச்சி வந்திருக்கா பால்யங்களில் carefree மனங்கள் நமக்கொரு வரமாய் இருந்ததனாலோ என்னவோ - அன்றைய கதைகளை கூட நம்மால் மனம் விட்டு ரசிக்க முடிந்துள்ளது - அது ஸ்பைடரின் புஷ்பக் கூடைகளாக இருப்பினும் ! ஆனால் இன்றோ -  பலதரப்பட்ட சிந்தனைகள் வாசிப்பின் அந்த சுலப சந்தோஷங்களை மட்டுப்படுத்தி விடுகின்றனவோ என்று நினைக்கத் தோன்றுகிறது ! எல்லாவற்றிற்கும் மேலாய் - "காமிக்ஸ் வாசிப்பு" என்ற கலப்படமற்ற சந்தோஷ அனுபவத்தை விட - அதன் பின்னணி அலசல்கள் ; விவாதங்கள் ; தேடல்கள் ; கலாய்ப்புகள் ; வலைத்தள ஜாலிகள் இன்றைக்கு நம் மனங்களில் பெரிதாகிப் போய் விட்டனவோ  என்ற பயம் லேசாக என்னுள் வியாபிக்கிறது ! பயண இலக்கை விடப் பயணத்தின் மீதான காதலில் நாம் மெய்மறந்து வருகிறோமா நண்பர்களே ?? 

அதே போல ஏதேதோ காரணங்களால் என் மீதான வருத்தங்கள்.- நமது காமிக்ஸ் மீதான வெறுப்பாய் மாறிடுவதும் நிகழ்கிறதோ என்ற சங்கடம் எனக்குள் உள்ளது ! "என் கருத்துக்கு மரியாதையில்லை : என் பங்களிப்புக்கு அங்கீகாரமில்லை ; இதை நான் இன்னும் சிறப்பாய்ச் செய்திருப்பேனே..' ; போட்டிக்கு ஆள் இல்லை என்பதால் தான் இவன் துள்ளுறான்  ; எனக்குப் பிடிக்காதவருக்கு இந்த சொட்டைத் தலையன் முக்கியத்துவம் தருகிறான் ; ஓவரா  நடிக்கிறானோ ? ; கொள்ளை இலாபம் பார்க்கிறானோ ? ; புக்கில் புரட்டின  பக்கமெல்லாம் இவன் புராணம் தான் " - என்று சில பல மௌன வருத்தங்களைப் பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம் என்பதை அறிவேன்  !  இவையும், இன்ன பிற சலனங்களும் உங்களில் சில மனங்களை அரித்துக் கொண்டிருப்பதை சங்கடத்தோடு உணர்கிறேன் ! அந்த நெருடல்கள் கூட இதழ்களை சந்தோஷமாய் வாசிக்கத் தடையாய்  நிற்கின்றனவோ ? உங்களில் எவரையும் சங்கடப்படுத்தும் நோக்கம் எனக்கு என்றைக்கும் இருந்ததில்லை ! அதே போல உங்களின் எண்ணங்களுக்கு நான் இசைவு தெரிவிக்க இயலாது போவதற்கும் ஓராயிரம் காரணங்கள் இருந்திருக்கலாம் ! எங்கெங்கோ எனது கவனங்கள் சிதறிக் கிடக்கும் நிலைகளில் - உங்களுக்கு ஏற்புடைய விதத்தினில் எல்லா சமயங்களிலும் என்னால் நடந்து கொள்ள முடியாது போயிருக்கலாம் தான் ! அவை அறியாப் பிழைகளே தவிர, உங்களைக் காயம் கொள்ளச் செய்யும் காரணிகளாக ஒரு போதும் இருந்ததே கிடையாது !  அவ்விதம் நேர்ந்திருக்கக் கூடிய உளைச்சல்களை ஒரு 31 ஆண்டு கால நண்பனுக்காகப் பொறுத்தருளக் கூடாதா folks ? 

இப்போது கூட - 'செண்டிமெண்டாகப் பேசிக் காரியம் சாதிக்கப் பார்க்கிறான் டோய்  !' என்ற விமர்சனமோ ;  "ஒரு சின்ன சர்ச்சைக்கு இது ஓவர் ரியாக்ஷன்டா சாமி !" என்ற கலாய்ப்போ ; "அடுத்த விலையேற்றத்துக்கு அண்ணாத்தே அடிப்போட்டுட்டார் !" என்ற கவலையோ எழக் கூடும் தான் ! ஆனால் இது கடந்த பதிவினில் ஏற்பட்ட சலசலப்பின் பிரதிபலிப்போ ; இன்னமுமொரு சப்பைக்கட்டு மூட்டையோ ; விலை அதிகரிப்பின் முன்னோட்டமோ கிடையவே கிடையாது ! கொஞ்ச காலமாகவே எனக்குள் உறுத்திக் கொண்டிருந்த சலனங்களை வெளிப்படுத்த இதனை ஒரு வாய்ப்பாக மட்டுமே எடுத்துக் கொள்கிறேன் ! தூங்கப் புறப்படும் முன்னே - ஒரே ஒரு வேண்டுகோள் மட்டுமே : 

இந்தத் தொழிலில் எங்களுக்குள்ள அனுபவத்தையோ ; கைவசமுள்ள அச்சுக்கூடத்து அமைப்பினையோ ; மொழிபெயர்ப்புத் திறமைகளையோ  ; படைப்பாளிகளிடமுள்ள பரிச்சயங்களையோ எங்களது  பலம் என்று நான் ஒரு நாளும் கருதவில்லை ! எங்கள் பலமே நீங்கள் தான் ! உங்களில் ஒவ்வொருவரும்  எங்களை ஒவ்வொரு விதத்தில் தாங்கி நிற்கும் தூண்கள் எனும் போது - ஒரு தூண் குறைந்தாலும் கூட கட்டிடமே இளைத்திடாதா ? We need each one of you with us folks !! போட்டுத் தாக்குங்கள் ; கலாயுங்கள் ; நிறை-குறைகளை உரிமையோடு சுட்டிக் காட்டுங்கள் - ஆனால் ஒற்றை அணியாய் நமக்குள் பிரிவுகளின்றி நின்று பழகுவோமே ? ரசனைகளில், ஜாகைகளில் ; பழகும் விதங்களில் நமக்குள் வேறுபாடுகள் இருப்பினும், 'காமிக்ஸ் காதலர்கள்' என்ற common அடையாளம் போதாதா விக்கிரமன் படக் கிளைமாக்ஸ் போல நாம் கைகோர்க்க ? Give it some thought folks ?! Bye for now ! See you around ! 

Sunday, February 01, 2015

ஆதலினால் (காமிக்ஸ்) காதல் கொள்வீர் !

நண்பர்களே,

வணக்கம். இங்கே வழக்கமாய் நான் வண்டி வண்டியாய் எழுத, நீங்கள் 'நறுக்' என  நாலு கேள்விகளை முன்வைப்பது வழக்கம் ! ஆனால் கடந்த பதிவில் நான் மல்லாக்கப் படுத்துக் கொண்டே கேட்டு வைத்த கேள்விகளுக்கு - நீங்கள் விரிவாய் பதில் எழுத ஏகப்பட்ட சிரமமும், அவகாசமும் எடுத்துக் கொண்டுள்ளது நீண்டு செல்லும் ஒவ்வொரு பின்னூட்டத்திலும் பிரதிபலித்தது ! எண்ணிக்கையில் இல்லாவிடினும், பின்னூட்ட நீளக் கணக்கில் கடந்த பதிவு தான் நமது ரெக்கார்ட் என்று சொல்லத் தோன்றுகிறது ! இதற்கு முன்பாக வேறு பதிவுகள் ஏதேனும் இத்தனை நீளத்தை அவசியப்படுத்தியுள்ள மாதிரி எனக்கு நினைவில்லை !!  புள்ளி விபரங்களைப் பற்றிய பேச்செனும் போது - பொழுது போகா ஒரு பின்னிரவில் நமது வலைப்பதிவின் சில நம்பர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன் ! இதோ - ஏதேதோ  காரணங்களுக்காக maximum பார்வைகளைப் பெற்ற நம் பதிவுகளின் டாப் 5 பட்டியல் இதோ  :
 • தல'....தளபதி.....திருவிழா..! - 6681 பார்வைகள் 
 • ஒரு பனியிரவின் உரத்த சிந்தனை ! - 5904 பார்வைகள் 
 • எட்டும் தூரத்தில் NBS - 5812 பார்வைகள் 
 • காசு...பணம்..துட்டு..money ..money ..!  - 5772 பார்வைகள் 
பார்வைகளைப் பெற்றதில் முதலிடங்கள் மேற்கண்ட பதிவுகளுக்கெனில் - பின்னூட்ட வருகையில் முன்னணி நிலவரம் இதோ :

 • ஒரு கௌபாய் வானவில்..! - 524 பின்னூட்டங்கள்
 • வரவு எட்டணா..செலவு பத்தணா ! - 518 பின்னூட்டங்கள் 
 • Kaun Banega சாலமன் பாப்பையா ? - 484 பின்னூட்டங்கள் 
 • முயற்சிக்கு மரியாதை ! - 479 பின்னூட்டங்கள் 
 • பதில்களும்..சில உரத்த சிந்தனைகளும்...! - 472 பின்னூட்டங்கள் 

"சரி..இதையெல்லாம் தெரிந்து கொண்டு நாங்கள் இப்போது பறக்க விடப் போகும் ராக்கெட் எதுவோ ??" என்ற கேள்விக்கு என்னிடம் நிச்சயமாய் பதிலில்லை ! வேண்டுமானால் அன்றைக்கு நான் பார்த்துக் கொண்டிருந்த "ரமணா" திரைப்படத்தின் தாக்கமாக  இந்தத் திடீர்   புள்ளிவிபர வாஞ்சையை எடுத்துக் கொள்ளலாம் ! 

Moving on, இதோ இம்மாதத்தைய இரண்டாவது வண்ண இதழின் அட்டைப்பட first look & உட்பக்க டீசர் ! 


ஒரிஜினல் அட்டைப்படத்தையே நம் ஓவியரைக் கொண்டு கொஞ்சமாய் மாற்றியமைத்து வரையச் செய்திருக்கிறோம் ! ஒரிஜினலில் சோகமாய் காட்சி தரும் ஷெல்டன், நம்மவரது சித்திரத்தில் ஒரு groupieபோட்டோவுக்குப் போஸ் கொடுப்பது  போல் காட்சி தருவது மட்டுமே வித்தியாசமாக இருக்கும் ! நரைமுடியும், மாண்ட்ரேக் மீசையுமாய் அட்டகாசம் செய்யும் ஷெல்டனின் one shot ஆல்பம் இது ! So நில்லாமல் பரபரக்கும் கதையும் ...பளீர்..பளீர் வர்ணங்களுமாய் ஓடக் காத்திருக்கும் இந்த இதழ் நிச்சயமாய் உங்களுக்கொரு fast paced வாசிப்பைத் தருமென்பது நிச்சயம் ! 
ஷெல்டனின் கதைகளுக்கு பின்னணி வர்ணச் சேர்க்கைகள் பெரும்பாலுமே அடர் வர்ணங்களே என்பதை இந்த டீசர் பக்கங்களிலேயே நீங்கள் உணர்ந்திட முடியும் ! So கொஞ்சம் அசட்டையாய் இருந்து விட்டால் கூட - ஓவர் 'பளீர்' என்று வர்ணங்கள் பல்லைக் காட்டிடக் கூடும் என்பதால் மிகுந்த கவனத்தோடு இதன் அச்சுப் பணிகளை செய்துள்ளோம் ! இம்முறையும் நம்மாட்கள் அழகாய்ப் பணி செய்துள்ளதாக என் மனதுக்குப் பட்டது ! இதுவரையிலும் மொத்தம் 12 கதைகள் மட்டுமே கொண்ட ஷெல்டனின் கதைத் தொடரின் மத்தியப் பகுதியில் நாம் தற்சமயம் நிற்கிறோம் ! இது ஷெல்டன் வரிசையில் ஆல்பம் # 6 ! இந்தாண்டே நம்பர் 7 & 8 இணைந்த டபுள் ஆல்பமும் வெளியாகவிருப்பதால் - 2015-ன் இறுதியில் ஷெல்டனில் எஞ்சியிருக்கப் போவது 4 ஆல்பங்களே - அதாவது 2 x  ரூ.120 இதழ்களே ! ஷெல்டனை சிருஷ்டித்தது கதாசிரியர் வான் ஹாம்மே தான் என்ற போதிலும், முதல் மூன்று கதைகளுக்கு மட்டும் பணியாற்றியவர் ஆல்பம் 4-8 வரையிலும் ஒரு பிரேக் எடுத்துக் கொண்டுள்ளார் ! பாகம் 9 முதல் அவர் மறுவருகை தந்து இன்று வரை இதன் பொறுப்பைக் கையில் வைத்துள்ளார் !கடையை மூடிடாது - ஆண்டுக்கொரு புது பாகம் என இந்தத் தொடர் பயணித்து வருவதால் - அங்கே அவர்கள் வெளியிட்ட சற்றைக்கேல்லாமே நாமும் பின்தொடரும் நிலையை எட்டிப் பிடித்திருப்போம் ! 2016-ல் லார்கோவுக்கும் கூட இதே கதை / கதி தான் என்பதால் - தொடரும் காலங்களில் புது நாயகர்களுக்கான தேடலை நாம் முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டி வரும் என்பது இப்போதே தெரிகிறது !

காலியாகப் போகும் கதைகள் /  நிறையவே ஸ்டாக் இருக்கும் கதைத் தொடர்கள் - பற்றிய பார்வையை இன்னும் கொஞ்சம் விரிவாக்கினால் இது தான் தற்போதைய நிலவரம் :

 • டெக்ஸ் வில்லர் - 640+ கதைகள் -நாம் வெளியிட்டுள்ளது சுமார் 60 கதைகள் 
 • கமான்சே - மொத்தம் 15 கதைகள் - நாம் 2015-ன் இறுதியில் கதை # 6 ஐ முடித்திருப்போம்  ; so  எஞ்சி இருக்கப் போவது இன்னொரு 3 ஆண்டுகளுக்கு ஓடக் கூடிய ஒன்பது ஆல்பம்கள் !
 • XIII - அடுத்த பாகத்தோடு தொடரே மங்களம் காண்கிறது ! நமக்கும் அதுவே நிலை !
 • கேப்டன் டைகர் - இந்தாண்டின் இறுதியில் - எஞ்சி நிற்கப் போவது இளம் டைகரின் சாகசங்களில் 11 கதைகள் ! இதனை எத்தனை ஆண்டுகளுக்கு கொண்டு செல்வது என்ற தீர்மானம் நம் கையிலேயே !
 • டைலன் டாக் - 400+ கதைகள் ! நாம் இப்போது தான் இந்தத் தொடரைத் துவக்கியுள்ளோம் எனும் போது ஏராளம் எஞ்சி நிற்கிறது !
 • மேஜிக் விண்ட் : 130 கதைகள் ! இங்கும் எக்கச்சக்கமாய் கதைக் களங்கள் காத்துள்ளன நமக்கு !
 • லக்கி லூக் : 75+ கதைகள் ; இன்னமும் நிறைய பாக்கியுள்ளன நமக்கு ! ஒரே பிரச்னை என்னவெனில் துவக்க காலத்து (Morris) classic கதைகளில் நிறையவற்றைப் போட்டுவிட்டோம் ! எஞ்சி நிற்பவை புது கதாசிரியர்களின் ஆக்கங்கள் !
 • சிக் பில் : 58+ கதைகள் - இங்கும் கணிசமாய்க் கதைகள் பாக்கியிருப்பினும், அவற்றிற்கு டிஜிட்டல் கோப்புகள் இன்னும் தயாராகியும் ஆகாமலும் உள்ள நிலை படைப்பாளிகளிடம் ! So இங்கே சற்றே go slow தான் சாத்தியம் !
 • ப்ளூ கோட் பட்டாளம் : 58+ கதைகள் ; we have loads of choices !
 • பௌன்சர் : இந்தாண்டின் இறுதியில் எஞ்சி நிற்கப் போவது 2 புதிய கதைகள் மட்டுமே.
 • ரிப்போர்டர் ஜானி : 78+ கதைகள். நிறைய இடியாப்பங்கள் இன்னமும் waiting !
 • மாடஸ்டி பிளைசி : 100 கதைகள் ! So கதை பஞ்சத்துக்கு வாய்ப்பே இல்லை !
 • சாகச வீரர் ரோஜர்  : 60 கதைகள் !
 • தோர்கல் : 35 கதைகள் !
 • மர்ம மனிதன்  மார்டின் - 200 + கதைகள் ! இன்னமும் நிறையவே சிண்டைப் பிய்த்துக் கொள்ள வாய்ப்புகள் காத்துள்ளன நமக்கு ! 
ஒன்று மட்டும் தெளிவு : இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளுக்குள் நமது தற்போதைய prime நாயகர்களின் முக்கால்வாசிப் பேர்  'சுப மங்களம்' என்ற போர்டை கழுத்தில் மாட்டித் திரியப் போவது நிச்சயம் ! இதே போன்ற கௌபாய் ; டிடெக்டிவ் ரகக் கதைகளைப் புதிதாய்த் தேடித் பிடிப்பது நிச்சயமாய் சுலபமாக இருக்கப் போவதில்லை ! அமெரிக்கக் கரையோரம் ஒதுங்கினால் கப்பல் கப்பலாய் சரக்குக் காத்துள்ளது தான் ; ஆனால் அவர்களது சைஸ்களுக்கு ; கதை நீளங்களுக்கு நாம் மாற்றம் காண வேண்டியது அவசியமாகும். அவர்களது காகித சைஸ்கள் இங்கு மார்கெட்டில் நமக்குக் கிடைப்பதில்லை எனும் போது அவற்றைப் பின்பற்ற நாம் நிறையவே மெனக்கெடத் தேவைப்படும் ! ஆனால் அவர்களது கதை பாணிகள் - பிரான்கோ பெல்ஜியக் கதைகளிலேயே பெரும்பாலும் சுற்றி வந்துள்ள நமக்கொரு fresh change ஆக இருக்கப் போவது நிச்சயம் ! So லார்கோக்களையும், ஷெல்டன்களையும், டைகர்களையும் இன்று சிலாகிக்கும் நாம் கொஞ்ச வருடங்கள் போன பிற்பாடு சூப்பர்மேனையும்  ; பேட்மேனையும் ; ஸ்பைடர்மேனையும் அதே போல் ரசிக்கும் நாள் புலருமோ ?  கௌபாய் கதைகளைச் சீராட்டும் நாம் - sci -fi ரகத்துக்குள்ளும் ரவுண்ட் கட்டி அடிக்கும் நாள் நெருங்கிடுமா ? INCAL தொடர்களையும், METABARON களையும் ஆர்வம் பொங்க புரட்டும் தருணம் காத்துள்ளதா நமக்கு ? "காலம் தான் பதில் சொல்லும்" என்ற cliche பன்ச் டயலாகுக்கு இடம் தராது - "காமிக்ஸ் காதல் தான் பதில் சொல்லும் ! " என்று சொல்லி இப்போதைக்குக் கிளம்புகிறேன் ! 

குடும்பத்து விசேஷம் ஒன்றினில் பங்கேற்க டெல்டா பிராந்தியத்து சிறுநகர் ஒன்றிற்கு வந்துள்ளதால் இங்கு உள்ள செம சுமாரான இன்டர்நெட் இணைப்போடு  காலை 6-00 க்குத் துவங்கிய போராட்டத்தை இதற்கு மேலும் தொடர்ந்திடத் தெம்பில்லை ! நாளைய தினம் பிப்ரவரி இதழ்கள் கூரியரில் கிளம்புகின்றன என்ற சேதியோடு நடையை  கட்டுகிறேன்  ! அதே போல நமது ஆன்லைன் விற்பனைகள் - www.lioncomics.in என்ற புதிய  தளத்தில்   முழுவீச்சில் இருந்திடும் என்பதையும் நினைவூட்டுகிறேன் ! Bye for now !!