நண்பர்களே,
வணக்கம். "எப்படி இருந்த நாம் - இப்படி ஆகி விட்டோமே ....!!"
'கிழிஞ்சது போ....இன்னுமொரு பிலாக்கனப் பதிவா ?' என்று தலைதெறிக்க ஓடத் தயாராகும் நண்பர்களே....hold on ப்ளீஸ் ! Simply because இது ஒரு ஜாலியான unplugged ரகத்திலான பதிவு மாத்திரமே ! வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்போ ; பிரச்னைகள் சகலத்திற்குமான சர்வ நிவாரணியோ இதனில் நிச்சயம் கிடையாது ! மாறாய் பிரச்னைகளின் இரு பக்கங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டு - தீர்ப்பு சொல்லும் நடுவராய் உங்களை மாற்றிடும் முயற்சி இது ! சில, பல சமீப நடுச்சாமங்களின் உரத்த சிந்தனைகளின் தொகுப்பாய் மட்டுமே இதைப் பார்த்திடுங்களேன் ?
கடந்த பதிவினைத் தொடர்ந்த நாட்களின் அனுபவங்கள், இங்கு குற்றால அருவியாய்க் கொட்டிக் கிடக்கும் சிந்தனைச் சிதறல்கள் ; ஏகமாய் வந்துள்ள நீள மின்னஞ்சல்கள் ; கடல் கடந்த நண்பர்களின் அன்பான தொலைபேசி அழைப்புகள் என்று இந்த வாரமே ஒரு eye opener ஆக இருந்துள்ளது எனக்கு ! "அட்டைப்படம் சூப்பர்" ; "ஸ்பைடர் கதை டாப் டக்கர் " ; ஆர்ச்சியும், ஜூனியர் ஆர்ச்சியும் அசத்தல்" என்ற ரீதியில் பழுப்புநிறப் போஸ்ட் கார்டுகளால் போட்டுத் தாக்கி வந்த வாசக வட்டமானது - இன்று customized imprints பற்றியும் ; collector's editions பற்றியும் ; விற்பனை விரிவாக்கத்தின் யுக்திகளைப் பற்றியும் துல்லியமாய்ப் பேசத் துவங்கும் போது - இந்தப் பதிவின் முதல் வரி மெய்யாகிறது தானே ?! So ஒரு சந்தோஷ modulation சகிதம் அந்த வரியை மீண்டுமொருமுறை வாசித்துப் பாருங்களேன் - இப்போது !
போன ஞாயிறின் பதிவின் போது அதற்கான reactions என்ன மாதிரியாக இருக்குமென்று யூகிக்கும் முயற்சிகளுக்கெல்லாம் நான் செல்லவில்லை ! ஆனால் எனக்குள் ஒரு நம்பிக்கை - திரைப்பட ரிலீசுக்கு முன்பாக வரும் ' டைரக்டர் ஹீரோயினை அடித்து விட்டார் ; ஹீரோவுக்கும், நாயகிக்கும், ஒரு 'இது ' என்ற ரீதியிலான gimmick ஆக எனது ஆதங்கங்களை நீங்கள் எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்பதில் ! பதிவைப் படித்த கணங்களில், உங்கள் ஒவ்வொருவரின் reactions-ம் நம் பக்குவங்களின் பரிமாணங்களையும் , காமிக்ஸ் மீது உங்கள் ஒவ்வொருவருக்கும் உள்ள ஆழமான நேசத்தையும் தத்தம் பாணிகளில் பறைசாற்றின ! எல்லாவற்றிற்கும் மேலாக - எந்தவொரு சூழ்நிலையிலும், 'நம்ம வீட்டுப் பிள்ளை லயன்' சிரமங்களை அரவணைக்க நீங்கள் அனுமதிக்கத் தயாராக இல்லை என்பதை emphatic ஆகப் பதிவு செய்திருந்தீர்கள் ! இந்த 30 ஆண்டு கால உறவின் ஒரு அழகான தருணமாய் ; இந்தப் பயணத்தின் ஒரு defining moment ஆக இதைப் பார்க்கிறேன் - பெருமிதத்தோடு ! சரி, செண்டிமெண்டுகளை சற்றே சுண்டல் சாப்பிட விட்டு விட்டு - விஷயத்தை நேராகவே அணுகுவோமே ?
நண்பர்களின் பதிவுகள், என் கவனத்திற்கென வந்துள்ள மின்னஞ்சல்கள் - இரண்டிலுமே ஒரு ஒற்றுமை என நான் பார்த்தது ஒரு தொலைநோக்குப் பார்வையை ! ஒரு கூடுதல் விலையிலான இதழின் விற்பனைச் சுணக்கமாக மட்டுமே இதைப் பார்த்திடாமல் - சரியான முறையில் இதனை அணுகிடாவிட்டால் வரும் நாட்களில் சிக்கல்களுக்கு வழிவகுத்திடக்கூடியதொரு சூழலில் நாம் இருப்பதை நண்பர்களில் பலர் உணர்ந்துள்ளனர் ! எனக்குள் அந்த ஆதங்கம் கொஞ்ச காலமாகவே மையமிட்டிருக்காவிட்டால் 'வரவு எட்டணா...செலவு பத்தணா' என்று பாமா விஜயம் பாட்டை எடுத்து விட்டிருக்கவே மாட்டேன் ! 'நாம் செல்லும் வேகமானது சரி தானா ?' ; சற்றே ப்ரேக்கில் கால் வைத்தல் அவசியமா ? என்ற கேள்வியை ஓரிரு மாதங்களுக்கு முன்பாகக் கூட நான் எழுப்பி இருந்தது நினைவிருக்கலாம் ! காமிக்ஸ்கள் சரிவர , வெளிவரா நாட்களில் பழைய இதழ்களைப் பரணிலிருந்து தூசி தட்டி எடுத்து மீண்டும், மீண்டும் படித்த வந்த அதே ஆர்வமும், அவசரமும் - மாதம் 4 இதழ்கள் வீடு தேடி வரும் இந்நாட்களிலும் தொடர்கிறதா ? என்ற லேசான கேள்வி எனக்குள் எழுந்தது நிஜமே ! ஆனால் இலைநிறைய பதார்த்தங்கள் பரிமாறப்படும் போது - மிகவும் பிடித்தமானவைகளைத் தேர்ந்தெடுத்து விட்டு, நாட்டம் குறைவான சங்கதிகளை 'அப்புறமாய் சுவை பார்ப்போமே !' என்று classify செய்வது இயல்பு தானே ? என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொண்டேன் ! "சூப்பர் 6" அறிமுகத்தின் பின்னணியிலிருந்ததும் இந்தச் சிந்தனையும், நம்பிக்கையுமே !
சரி...தற்போதைய சூழலில் நாம் எங்கே நிற்கிறோம் ?
இங்கும், புத்தக விழாக்களிளின் சந்திப்புகளின் போதும், நண்பர்களின் பரவலான உற்சாகக் குரல்களில் திளைக்கும் வேளைகளில் நமது வெளியீட்டு வேகம் 'சர்'ரென்று கூடிவிடுவதாக ஒருசாரார் கருதுவது எனக்குப் புரியாமிலில்லை ! Yes , கரை புரண்டோடும் சந்தோஷம் - காட்டாற்று வெள்ளம் போலானதே ! அதன் வேக ஓட்டத்துக்கு ஈடு கொடுக்க சில சந்தர்ப்பங்களில் எனது ரத்த ஓட்டமும் முயற்சி செய்வதை நான் நிச்சயமாய் மறுக்கப் போவதில்லை ! ஆனால் சக்கரங்களில் காற்று குறையும் பல நாட்களில் - வண்டியை உந்தித் தள்ளி முன்னே நகற்றுவதே இந்தக் கலப்படமற்ற உத்வேகம் தானே ?! So நமது வெளியீடுகளின் frequency அதிகரித்திட மைய காரணம் நண்பர்களின் 'உசுப்பேற்றலே' என்பது சரியல்ல ! 2012-க்கு முன்பான நாட்களில் வேண்டுமாயின் திட்டமிடல் இல்லா தீர்மானங்கள் மலிந்து கிடந்திருக்கலாம் ! ஆனால் சமீபமாய் அந்தத் தவறைத் தவிர்த்திட நிறையவே முயற்சித்து வருகிறோம் !
பிரதான காரணமாய் கைகாட்ட வேண்டியது நமது நீ-ள-மா-ன நாயகர்கள் பட்டியலை நோக்கியே !
*டெக்ஸ் வில்லர்* ; *லக்கி லுக் * ; *கேப்டன் டைகர்* ; *லார்கோ வின்ச்* ; *ஷெல்டன் * ; *சிக் பில்* ; *XIII * ; *தோர்கள்* ; *கமான்சே* ; *ரிபோர்டர் ஜானி* ; *CID ராபின்* ; *சுட்டி லக்கி*
நமது first choice நாயகர்கள் பட்டியலில் உள்ளது ஒரு டஜன் எனில், "RAC " -ல் காத்திருப்போர் பட்டியலில் அரை டஜனுக்கும் மேலே !
ப்ருனோ பிரேசில் ; மர்ம மனிதன் மார்டின் ; சாகச வீரர் ரோஜர் ; ஜில் ஜோர்டான் ; மதியில்லா மந்திரி ; ச்டீல்பாடி ஷெர்லாக் ; ரின் டின் கேன் : ஜூலியா
இவையும் தவிர, கிரீன் மேனர் ; கிராபிக் நாவல்கள் என்ற ரீதியில் நாம் இடையிடையே முயற்சிக்கும் கதைவரிசைகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும் போது - இவர்கள் கொஞ்சமேனும் சாகசம் செய்திட அனுமதிப்பதெனில் நமக்குத் தேவைப்படுவது விசாலமானதொரு களமே ! ஆண்டுக்கு 12 லயன் ; 12 முத்து காமிக்ஸ் என்ற ரீதியில் ரூ.60 + ரூ.60 விலைகளில் சிரமமின்றி சவாரி செய்யலாம் தான் ; ஆனால் first choice ஹீரோக்களைத் தவிர்த்து புது வரவுகளுக்கோ ; நமது (பரி)சோதனை முயற்சிகளுக்கோ அதனில் பெரிதாய் ஒரு இடமிருக்காது ! சரி...இந்தாண்டு ஒரு நாயகர் கூட்டணி ; மறு வருடம் அவர்களை ஓரம் கட்டி விட்டு விடுபட்டுப் போன அடுத்த batch -கொரு வாய்ப்பு தருவது என்பது பிரச்னைக்குத் தீர்வாக இருக்கலாம் தான் ; ஆனால் அங்கே இடறுவது படைப்பாளிகளிடம் நமக்கிருக்கும் சில குறைந்த பட்ச வியாபார commitments ! ஐரோப்பியத் தராதரங்களை அளவுகோல்களாய்க் கொண்டு நாம் தரும் ராயல்டி தொகைகளை ஒப்பீடு செய்வதாயின் அது பொறிகடலை போலவே தோற்றம் தரும் என்பது உறுதி ! நமது மார்கெட்டின் கட்டுப்பாடுகள் ; சுருக்கமான வாங்கு திறன்கள் ஆகியவற்றைப் படைப்பாளிகள் புரிந்து கொள்வதால் தான் நமக்கென்று வரும் போது அவர்களது எதிர்பார்ப்புகளை மட்டுப்படுத்திக் கொள்கிறார்கள் ! ( ஆனால் அதுவுமே நமக்கு நாக்குத் தொங்கச் செய்யும் ஒரு தொகை என்பது வேறு விஷயம் !!) ஆனால் தொகைகளில் ஏற்படும் குறைச்சல்களை எண்ணிக்கைகளின் மார்க்கமாய் ஈடு செய்ய படைப்பாளிகள் விழையும் போது - அதற்கு இசைவு தெரிவிக்கும் (தவிர்க்க இயலா) சூழல் எழுகிறது ! போனெல்லி குளுமத்திற்கென ஆண்டொன்றுக்கு இத்தனை ஆயிரம் யூரோக்கள் ; லோம்பா குளுமத்திற்கென ஒரு முரட்டுத் தொகை என்ற ஒப்பந்தங்கள் நம்மிடம் உள்ளதால் ஆண்டிற்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கதைகள் வாங்கியே தீர வேண்டிய நிர்பந்தம் நமக்குள்ளது ! கதைகளை வாங்கிவிட்டு அவற்றை பீரோவிற்குள் பூட்டி வைப்பதும் இதற்கொரு விடையாகாது ; ஏனெனில் ஒப்பந்தங்களின் கால அவகாசத்திற்குள் அவற்றை நாம் வெளியிட்டாக வேண்டும்! நமது ஜீவநாடியே நம்மிடமுள்ள அபரிமித கதை range தான் எனும் போது - எப்பாடு பட்டேனும் அதற்கு நியாயம் செய்ய வேண்டியது அத்தியாவசியமாகிறது ! ஆனால் இந்த 'Let's go easy ' பாலிசி இங்கே நெருடலாய் நிற்கிறது !
சரி....வெளிநாட்டில் தான் இதற்கொரு சிக்கல் என்று பார்த்தால் "நிறைய வெளியீடுகள் அவசியமே !" என்ற நிர்பந்தம் இங்கே உள்ளூரிலும் வேறொரு வடிவத்தில் தலைதூக்கி நிற்கிறது ! ஆன்லைன் விற்பனைகளும், புத்தகக் கண்காட்சிகளும் நமது முயற்சிகளுக்கு வலு சேர்ப்பவை என்பதில் ரகசியம் எதுமில்லையே ?! ஈரோடு போன்ற பிரபலமான புத்தக விழாக்களில் பங்கேற்க நாம் எத்தனிக்கும் போது - 'ஒரு பதிப்பகமாஒ உங்களிடம் உள்ள titles எத்தனை ?' என்ற கேள்வி பிரதானமாய்க் கேட்கப்படுகின்றது ! ஸ்டால்களில் குறைச்சலான ராகங்கள் மாத்திரமே வைத்திருக்கும் பட்சத்தில் - வாங்க வரும் பொது மக்களுக்கு ஒரு விரிவான choice இராதே ! என்பது அமைப்பாளர்களின் நியாயமான ஆதங்கம் ! So நமது கேட்லாக்கின் பருமனும், பட்டியலின் நீளமும் ஆரோக்யமாக இருந்தாக வேண்டியது இங்கே அவசியமாகிறது ! தமிழில் எஞ்சி நிற்கும் ஒரே காமிக்ஸ் பதிப்பகம் என்ற பரிவும், காமிக்ஸ் எனும் கலையின் மீதான மரியாதையும் அமைப்பாளர்களுக்கு நிரம்பவே இருப்பதால் தான் நம் தலைதப்பி வருகிறது ! ஆனால் - over a period of timeநமது கையிருப்பின் ரேஞ்சை விசாலமாக்காவிடின் பிரபலமான புத்தக விழாக்களின் வாயிற்கதவுகள் நமக்குத் திறந்திடாதும் போகலாம் ! ஆக 'தம்' பிடிக்கத் திராணி இல்லாத பட்சத்தில் இன்றைய சூழலில் தலை தண்ணீருக்கு மேலே நீடிப்பது சுலபமல்ல என்பது புரிகிறது ! அதே சமயம் இந்த 'தம் பிடிக்கும் படலம்' எத்தனை பெண்டு நிமிர்த்தும் என்பதை நமது அலுவலகத்திற்கு வருகை தரும் நண்பர்கள் அறிவர் ! காற்றாடிக் கொண்டிருந்த நம் கிட்டங்கிகளை கடந்த ஒன்றரை ஆண்டுகளின் வெளியீடுகள் எவ்விதம் ஆக்கிரமித்து நிற்கின்றன என்பதை பார்த்து மிரண்டு போனவர்கள் அவர்கள் ! இப்போதெல்லாம் சந்திலும் ,பொந்திலும் நடைபெறும் புத்தக விழாக்களையும் நாடி நாம் ஓடத் துவங்கியுள்ளது இந்தக் கையிருப்பைக் காசாக்க வேண்டுமே என்ற ஆதங்கத்தினாலேயே !
சரி....'வேக ஓட்டம் ஏன்?' என்ற கேள்விக்கு பரீட்சைக்குப் பாய்ன்ட் பாய்ண்டாக எழுதுவதைப் போலான விளக்கம் தந்து விட்ட பின்னர் - அதன் மறு பரிமாணத்தையும் சொல்லியாக வேண்டுமல்லவா ? நிறைய இதழ்கள் ; பலதரப்பட்ட விலைகள் என்ற தோரணம் தவிர்க்க இயலாது போகும் வேளைகளில் ஏஜண்டுகள் வாயிலான விற்பனை முயற்சிகளில் விழுகிறது முதல் உதை ! 'காமிக்ஸா ? அறுபது ரூபாய்க்கா ??...அடப் போங்க சார் !!' என்று கையை உதறுவதே இன்று ஏராளமான நகரத்து விற்பனையாளர்களின் reactions ! தொண்டைத்தண்ணி வற்ற - 'தரம் ; நிறம் ; திடம்' என்றெல்லாம் நாங்கள் எத்தனை விளக்கம் சொன்னாலும் - '10 ரூபாய்க்கு புக் ஏதும் இல்லியா ?' என்று கோரும் போது தான் காமிக்ஸ் காதலர்கள் உலகைத் தாண்டிய வெளி லோகத்தின் நிஜப் பரிமாணம் புலனாகிறது ! 'கடனுக்கே ஓரிரு மாதங்கள் அனுப்புகிறோம் ; விற்றுப் பார்த்து விட்டுச் சொல்லுங்கள் !' என்று வற்புறுத்தினாலும் - 'இது போணியாகாது !' என்று உதட்டைப் பிதுக்குவோரே அநேகம் ! So - ஒரு குறிப்பிட்ட வெளியீட்டு வேகத்தை நிர்ணயித்து விட்டு, சீராய்த் தொடர்ந்தாலே போதும் ; சந்தாக்கள் , ஆதரவுக் கரம் நீட்டும் முகவர்கள் ; ஆன்லைன் விற்பனைகள் ; புத்தக விழா sales என்று 'மரியாதையாக' வண்டியை ஓட்டிச் செல்வோமே என்பது பட்டிமன்றத்தின் மறு அணியின் பாயிண்ட் # 1 !
சரி...போன வருஷம் ரூ.100 விலையில், ஒவ்வொரு இதழிலும் 2 கதைகள் வந்தன தானே ? அதையே இப்போது ரூ.60 + ரூ.60 என்று இரு தனித்தனி இதழ்களாகப் பிரித்துப் போடும் போது பெரியதொரு வேறுபாடு இல்லையே ?! பின்னர் சென்றாண்டில் எழாத சிரமம் இப்போது ஏன் ? என்ற உங்களின் mind voice -க்குப் பதிலும் ரெடி - பட்டிமன்றத்தின் எதிரணியில் ! 2012 நாம் புனர்ஜென்மம் கண்டதொரு ஆண்டு என்பதால் - அந்த euphoria ; வண்ண இதழ்களின் ஆரம்பப் படலம் என்ற உத்வேகத்தில் 12 மாதங்கள் சிட்டாய்ப் பறந்து விட்டன ! 2013-ல் நமது இரண்டாம் வருகையின் வேகம் டாப் கியரைத் தொட்ட ஆண்டு ! அந்த ஈர்ப்பில் நமது இதழ்கள் அனைத்தையுமே வாசகர்கள் வாங்கி வந்தனர் ! (இங்கே ஒரு சின்ன விஷயத்தை அடிக்கோடிட விரும்புகிறேன்....! அதிதீவிர காமிக்ஸ் ஆர்வலர்களான நாம் 'எதையும், எல்லாவற்றையும் வாங்குவோம் ' என்ற பாலிசியில் இருக்கலாம் ; ஆனால் அந்த die hard வாசக வட்டத்தைத் தாண்டிய அடுத்த நிலை வாசகர்களும் நமக்கு உண்டு என்பதை மறந்திடக் கூடாது ! ) அவர்களிடம் 2014-ல் லேசாய் சில மாற்றங்கள் !! கடைகளில் வாங்கும் இந்த நண்பர்கள் இந்தாண்டில் சற்றே selective -ஆக தமக்குத் தேவையான இதழ்களைத் தேர்வு செய்யத் துவங்கியுள்ளனர் ! டெக்ஸ் வில்லர் ஒரு பிரதி கூட மிஞ்சுவதில்லை ; லார்கோவும் தான் ; ஆனால் தோர்கள் ; ரோஜர் ; சமீபத்திய டைகர் (!!!) ; கிராபிக் நாவல்கள் என்று வரும் போது புத்தகங்கள் மீதம் விழுந்து விடுகின்றன என்பது 2014-ன் நடுப்பகுதியில் நான் அறிந்து வரும் தகவல் ! தத்தம் ரசனைக்கேற்ப இதழ்களைத் தேர்வு செய்வதில் நிச்சயமாய் தவறு ஏதும் இல்லை ; ஆனால் இந்த எதிர்பாரா புது நிகழ்விற்கு நாமும், விற்பனையாளர்களும் பரிச்சயமாகிக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது ! இத்தனை விலை கூடுதலான இதழ்களைத் தருவிக்கும் முகவர்கள் எவ்விதத்திலும் நஷ்டப்படக் கூடாதென்பது நமக்கு ரொம்பவே முக்கியம் ! So - உத்திரவாதமான ஹிட் தரும் ஹீரோக்களை மட்டுமே பயன்படுத்திக் கொண்டு ஒரு சீரான கதியில் பயணிப்பதே சாலச் சிறந்தது என்பது மார்கெட் சொல்லும் அறிவுரையோ ?
சிரமம் # 3 - கையிருப்பின் பளு ! இதனை நான் குறிப்பிடுவது literally & figuratively !! மாதந்தோறும் இதழ்களின் எண்ணிக்கை கூடக் கூட - ஸ்டாக்கும் அதே வேகத்தில் கூடுவது தவிர்க்க இயலாது போகிறது ! நிதி நிலைமையில் அது அழுத்திடும் பாரம் ஒரு பக்கமெனில் - புத்தகங்களின் எடையும், கனமும், நமது கிட்டங்கியின் கொள்ளளவின் மீது உண்டாக்கும் அழுத்தம் மறு பக்கம் ! முன்பு ரூ.10 விலையிலான இதழ்களில் 2000 பிரதிகள் மீதமிருந்தால் 250 கிலோக்கள் எடை இருப்பின் ஜாஸ்தி ! ஆனால் இன்றோ அதே 2000 பிரதிகள் எனில் ஒரு டன் எடை என்றாகிறது ! So நாட்கள் நகர நகர, நமது கிட்டங்கிகையின் விஸ்தீரணம் - ஆடி விருந்துக்கு வரும் புது மாப்பிள்ளையின் இடுப்புச் சுற்றளவுகளைப் போலவே கூடிச் சென்றாக வேண்டும் ! அதையும் விட முக்கியம் - இந்த இதழ்களைப் பத்திரப்படுத்தத் தேவையாகும் கவனமும், அக்கறையும் !
'சரி...இந்த முட்டுக்கட்டைகளை எல்லாம் எதிர்பார்த்திருப்பது தானே உங்கள் வேலை ? இவற்றை எதிர்பாராது செயல்பட்டிருக்க வாய்ப்பில்லையே..? இப்போது திடீரென இவற்றை நீட்டி முழக்க வேண்டிய அவசியம் தான் என்னவோ ? ' ; ' இவை எல்லாமே எங்களது பச்சாதாபத்தைச் சம்பாதிக்கவோ, LMS இதழ்களை எங்கள் சிரங்களில் கூடுதலாய்க் கட்டும் ஜிகினா வேலையாக ஏன் இருக்கக் கூடாது ?' என்று குரலெழுப்ப எண்ணும் நண்பர்களும் (குறைவாகவேணும்) இருந்திடலாம் என்பதால் அதற்கான பதிலையும் முன்வைத்து விடுகிறேனே ? அவர்களது சிந்தனைக் குதிரைகளும் இங்கும், அங்கும் உலாற்றும் அவசியத்தை சிறிதேனும் மட்டுப்படுத்திடலாம் அல்லவா ? 'மாதந்தோறும் நாம் அச்சிடும் பிரதிகளில் ஒரு குறிப்பிட்ட அளவு கையில் தங்கத் தான் செய்யும் ; அது விற்பனையாகிட இத்தனை அவகாசம் அவசியம் ' என்று ஒரு வித அட்டவணைக்கு நாங்கள் இப்போது சிறிது சிறிதாய்ப் பழகியுள்ளோம் ! 'So இதற்குள் நாம் மாதந்தோறும் புகுத்திட வேண்டிய மூலதனம் இது தான் ' என்ற உணர்தலும் எங்களுள் உள்ளது ! ஆனால் - LMS போன்றதொரு one -off முயற்சி ; அசாத்திய முதலீட்டை அவசியப்படுத்தும் ஒரு மெகா இதழ் எனும் போது - எத்தனை கெட்டிக்காரத்தனமான திட்டமிடலுக்கும் 'பெப்பேப்பே' காட்டி விடுகின்றது ! 'புத்தக விழாவில் டிஸ்கவுன்ட் கழித்து வாங்கிக் கொள்ளலாமே ?' என்ற சிந்தனையா .....'இதழ் வெளியான பிற்பாடு வாங்கிக் கொள்ளலாமே ?' என்ற சாவகாசமா ? ; 'சூப்பர் 6-ன் இதழ்களின் பெரும்பான்மை கிராபிக் நாவல் ரகத்திலான unknown entities என்ற தயக்கத்தால் எழுந்த மிரட்சியா ? ; அல்லது 2014-ன் காமிக்ஸ் பிரவாகம் சற்றே ஓவர் ! என்ற அபிப்ராயமா ? - தெரியவில்லை சூப்பர் 6-ன் சந்தா எண்ணிக்கை 310-ல் நின்றிட்டதன் காரணம் ! ( கடந்த வாரத்தில் மேற்கொண்டு ஒரு 30 ஆர்டர்கள் என்பது கொசுறுச் சேதி !)
ஆனால் 3 மாதங்களுக்கான முதலீட்டை ஒட்டு மொத்தமாய்க் கோரும் இது போன்ற மெகா இதழ்களுக்கு ஒரு 30% முன்பதிவாவது இல்லாது போகும் சமயம் தான் சிரமங்கள் சிரத்தை கிறுகிறுக்கச் செய்யத் தொடங்குகின்றன ! 2013-ல் NBS வெளியான சமயம் முன்பதிவுகள் 25%-ஐத் தொட்டிருந்தன என்பதாலும், சென்னைப் புத்தக விழா அச்சமயம் உதவியதாலும் அந்த அக்னிப்பரீட்சையைத் தாண்ட முடிந்தது ! சென்னையின் விற்பனைகளை ஈரோட்டில் எதிர்பார்ப்பது நியாயமாகாது என்பதால் தான் இம்முறை நமது நாடித்துடிப்புகள் சற்றே வேகம் கொள்கின்றன ! ஏதேனும் miracle அரங்கேறி முன்பதிவுகளின் சுணக்கத்தை ஈரோட்டின் விற்பனைகள் ஈடு செய்திடுமா என்பது மில்லியன் டாலர் கேள்வியை இல்லாவிடினும், மில்லியன் ரூபாய் வினாவாகக் கொண்டிடலாம் ! அதற்காக ஈரோட்டுப் பக்கமாய் வரும் நண்பர்களை லைனாய் நிற்க வைத்து 'ஆளுக்கு ரெண்டு' என்று தலையில் கட்டும் உத்தேசமெல்லாம் நிச்சயமாய்க் கிடையாது guys !! பணத்துக்கு ஏராளமான இதர நல்உபயோகங்கள் உண்டேனும் போது - சும்மாவேனும் வாங்கப்படும் உபரி இதழ்கள் சில பல பாரங்களையும், பீரோக்களையும் அலங்கரிப்பதில் நிச்சயமாய் நமக்கு நாட்டமில்லை ! தவிரவும், நான்கே மாதத்துத் தொலைவில் சென்னைப் புத்தக விழாவும் உள்ளதால் இங்கு மிஞ்சும் பிரதிகளை அங்கு போணி பண்ணி விட முடியுமென்ற நம்பிக்கை எங்களுக்குள்ளது ! So LMS -ல் ஒரு தற்காலிகப் பணமுடக்கம் நேர்ந்திட்டாலும் அது நம் பயணத்தை முடக்கிப் போடாது என்பது சர்வ நிச்சயம் !
சரி...எல்லாம் ஒ.கே....'மின்னும் மரணம்' என்னாச்சுப்பா ?' என்ற கேள்வி ஒலிப்பது ஜெர்மனி வரைக்கும் கேட்கிறது ! இரவு விமானத்திலும், பகலின் ரயிலிலும் இந்தப் பதிவை எழுதித் தள்ளிய நோவு ஒரு பக்கமெனில் அதனை லொட்டு லொட்டென்று கம்பியூட்டரில் தட்டிடும் பணியில் மீத ஜீவன் குன்றிப் போய் விட்டது ! So - மி.மி. பற்றிய பட்டிமன்றத்தை இன்னொரு பதிவுக்குக் கொண்டு செல்வோமே என்று என் கண்களும், விரல்களும், பசிக்கும் வயிறும் கூறுவதால் - தற்போதைக்கு ஜூட் விடுகிறேனே ?!
எல்லாவற்றையும் தெளிவாய், நிதானமாய் , தொலைநோக்குப் பார்வையோடு (!!!) சிந்தித்தான பின்னே - தற்போதைக்கொரு தீர்ப்பு சொல்லும் பணியானதை சாலமன் பாப்பையாக்களான உங்களிடம் நிம்மதியாய் விட்டு விடுகிறேன் ! எனது கட்டிலில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாகு டப்பா போலக் காட்சி தரும் LMS மீது எனது பார்வை படருகிறது ! ஓராயிரம் முறைகள் புரட்டிய அதன் ஒவ்வொரு பக்கத்தையும், கதையினையும், வசனத்தினையும் என் கண்கள் மேய்கின்றன ! இத்தனை நேரம் ஓராங் உடான் குரங்கைப் போல இறுக்கமாயிருந்த என் வதனத்தில் (!!!) ஒரு புன்முறுவல் மின்னலாய்ப் பூக்கிறது ! கடந்த 4 மாதங்களாய் ஒவ்வொரு அதிகாலையிலும் , நடுச்சாமத்திலும் எனது சிந்தைகளை ஆக்கிரமித்து நின்ற அந்த இத்தாலிய ; பிரான்கோ-பெல்ஜிய காமிக்ஸ் லோகத்தினுள் "தொபுக்கடீர்" என்று நான் டைவ் அடிப்பது புரிகிறது ! வார்த்தைகளுக்கு அப்பாற்ப்பட்ட இந்தப் புளகாங்கிதத்தை (!!!) உணர்ந்திட இன்னமும் எத்தனை மலைகளையும் தாண்டிடலாமேடா கைப்புள்ளே என்று எனது மைண்ட் வாய்ஸ் ஒலிப்பது என் காதில் விழுகிறது ! உங்களுக்கும் தானா ? Take care folks !
P.S : நிறைய வாசித்தான பின்னே ; நிறையப் புரிந்தது போலவும், ஒன்றுமே புரியாதது போலவும் தோன்றினால் அது நிச்சயம் உங்கள் தவறல்ல ! மீண்டுமொருமுறை படிக்க நீங்கள் முற்படும் நேரத்துக்குள் நாம் வயிற்றுக்குப் பெட்ரோல் நிரப்பி விட்டு - கட்டையைச் சாய்க்கும் வழி தேடுகிறேன் !!