Powered By Blogger

Saturday, July 12, 2025

வருது..வருது..காமிக்ஸ் கேரவன் வருது..!

 நண்பர்களே,

வணக்கம்! இரண்டு நாட்களுக்கு முன்பானதொரு நிகழ்வு..! சென்னையைச் சார்ந்ததொரு மூத்த குடும்பத்தலைவி..! நெய்வே­லி பக்கத்தில் சொந்த ஊர் போலும்...! ஆன்லைனில் டிஜிட்டல் கலரிங் பணிக்கு அநாமதேயமாய் நாம் ஆட்களைத் தேடி வர, அவரும் விண்ணப்பித்திருந்தார்! 

'என்ன மாதிரியான பணி? முழு நேரப் பணியா? என்ன மாதிரி அவகாசம் தருவீர்கள்?' 

என்றெல்லாம் வினவிக் கொண்டிருந்தார்! "மேடம்.. இது காமிக்ஸ் புக்குக்கு கலரிங் செய்யும் வேலை' என்று பதில் சொன்னேன்! "You know.. I recently bought some Tamil Comics... என்ன மாதியான தரம் தெரியுமா? அதும் சின்னப்பிள்ளைகளுக்கென Fairy Tales-லாம் கலரில்.. truly wonderful! அதுமட்டுமில்லாம டின்டின் கூட அற்புதமா தமிழிலே வருது தெரியுமா? Awesome! நீங்க அது மாதிரி try பண்ணுங்க சார்!" என்று சிலாகித்தார்! இந்த ஆட்டோ ஆறுமுகம் தான் அந்த பாம்பே ஆன்டனி என்பதை அவர் தெரிந்திருக்கவில்லை & எனக்குமே "இவன் தான் அவர்ர்ர்ர்ர்ர்.. அவர்ர்ர்ர்ர்ர் தான் இவன்'' என்று அள்ளிவிடத் தோன்றவில்லை! அவர் தெரிவித்த சமாச்சாரங்களை மட்டும் அசை போட்டேன்- மனம் நிறைந்த மகிழ்வுடன்! ஆண்டின் புத்தகவிழா சீஸன் துவங்கியிருக்க, நெய்வேலி­யில் நமது ஸ்டா­லில் தான் மேற்சொன்ன புக்குகளை அந்த இல்லத்தரசி வாங்கியிருக்க வேண்டுமென்பது புரிந்தது! சந்தாக்கள்; ஆன்லைன் கொள்முதல்கள்; மாமூலான கடைகளில் வாங்குவோர் என்ற லி­ஸ்டைத் தாண்டி இத்தகைய முற்றிலும் புது வாசகர்களை எட்டிப் பிடிக்க புத்தக விழாக்கள் தரும் வாய்ப்பானது எத்தனை அற்புதமானதென்பது அந்த நொடியில் இன்னமும் அழுந்தப் புரிபட்டது! தவிர, நம்மிடமுள்ள அந்த sheer variety தான் புத்தகவிழாவுக்கு வருகை தரும் புதியவர்களை(யும்) வசியம் செய்கிறதென்பதுமே புரிந்தது! வாசிக்கத் துவங்கும் வாண்டுகள் முதல் லூட்டியடிக்கும் யூத்கள், ரவுசடிக்கும் பெருசுகள் என இங்கே எல்லோருக்குமே ஏதேனும் இருக்குமென்பது ஒவ்வொரு ஊரிலும் நமக்கான அடையாளமாகி வருகிறது! இதோ- அடுத்த வாரம் துவங்கக் காத்துள்ள கோவை புத்தக விழா தான் நமது காமிக்ஸ் கேரவனின் அடுத்த நிறுத்தம்!

And இந்தாண்டு முதலாய் ஈரோடு & சென்னை விழாக்களுக்கு மட்டுமே ஸ்பெஷல் ரிலீஸ்கள் என்றில்லாது - பெருநகரங்கள் சகலத்திற்கும் ஏதேனும் specials போட்டுத் தாக்குவதெனத் தீர்மானித்துள்ளோம்! So:

கோவை  : 1

ஈரோடு    : 1 

திருச்சி    : 1

மதுரை    : 1

சேலம் : 1

திருப்பூர் : 1

என ஒரு ஸ்கெட்ச் போட்டு வைத்துள்ளோம்! And கோவைக்கு ஒற்றை வாரம் கூட இல்லை எனும் போது- அதற்கான ஸ்பெஷல் ரெடியாகிடாது போகுமா -என்ன?

இதோ: தி டெரர் லைப்ரரி! க்ளாஸிக் திகில் சிறுகதைகளின் தொகுப்பாய்- Black & white-ல் !  இந்த இதழின் ஹைலைட்டே அட்டைப்படம் தான் என்பேன்! நண்பர்களை AI உதவியோடு திகிலாய் ராப்பர் ஒன்றினை டிசைன் செய்து அனுப்பச் சொல்லி­ நமது வாட்சப் கம்யூனிட்டியில் கேட்டிருந்ததும் - தொடர்ந்த மூன்று நாட்களுக்கு கலர் கலராய் கும்மியடித்த கையோடு குஸ்தியும் போட்டுக் கொண்டது நினைவிருக்கலாம்! கடைசியாக பஞ்சாயத்து வேறு மாதிரியான வர்ணமெடுத்துப் போக - ஜமுக்காளத்தை மடிச்சுப்புட்டுக் கிளம்பும்படி ஆகிப் போனது! ஆனால், அன்று கிட்டியதொரு டிசைனிலிருந்து கொஞ்சத்தை மட்டும் சுட்டு, நம்மள் கி AI டிசைனோடு கலந்து கட்டி, அமெரிக்க ஓவியையிடம் ஒப்படைத்தோம்! இதோ அவர் போட்டுத் தந்த ரகளை! And கொஞ்சமாய் இரவல் வாங்கியது யாரது டிசைனிலி­ருந்து யூகிப்போருக்கு குச்சிமுட்டாய்  அடுத்த புத்தகவிழா சந்திப்பின் போது!

ரைட்டு.. கோவை விழா பற்றிப் பேசியாச்சு! அடுத்த சம்பவமானது- வழக்கம் போல பூமியை அதிரச் செய்து Star Sports சேனலை சேலம் நோக்கிப் படையெடுக்கச் செய்திடும் ஒரு ரணகளம்! அது தான் நம்ம மட்டைப்பந்து வீரர்களின் காமிக்ஸ் க்ரிக்கெட் லீக்! வரும் 20-ம் தேதி ஞாயிறு காலையில் சேலத்தையே அது ஸ்தம்பிக்கச் செய்யாட்டியும், ஒரு நாற்பது வூடுகளில் "அப்பாடா... ஒரு நாளைக்கு நிம்மதி!'' என்று விடப்படும் பெருமூச்சுகளால், மாவட்டத்தின் தட்பவெப்ப நிலைகளிலேயே பெரு மாற்றம் நேரிடக் கூடுமென்று வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்! பற்றாக்குறைக்கு மேக்னஸ் கார்ல்ஸனுக்கே "பெப்பே'' காட்டுமொரு செஸ் போட்டியும் அன்று நடக்கவிருப்பதால் சேலம் ஒரே பிஷி! நமக்கு ஒரு வாரம் முன்பாகத் தான் மேற்படி சம்பவங்கள் பற்றித் தெரிய வந்ததென்பதால் 'விலாவை' சிறப்பிக்க பயணம் பண்ணப் பார்க்கணும்! இடைப்பட்ட பொழுதில் நம்ம முழங்கால் சன்னமாய் சண்டித்தனம் பண்ண, ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னே கோவை டாக்டரொருவர் முட்டியில் முறுக்குப் பிழிந்து பார்த்த வைபவங்கள் கண் முன்னே வந்து-வந்து போயிங்! So பார்க்கலாமே என்றுள்ளேன் இந்த நொடியினில்!

நெக்ஸ்ட் ஸ்டாப் ஈரோடு! கடந்த இரண்டு ஆண்டுகளாய் முத்து 50 ; லயன் 40 என்ற மைல்கற்களை ரகளையாய் கொண்டாடியிருந்தோம், ஈரோட்டின் சந்திப்பினில்! இம்முறை அத்தகைய landmarks ஏதும் கிடையாதென்பது ஒருபுறமிருக்க, சீனியர் எடிட்டரின் மறைவு மாமூலான அந்தக் குதூகலங்களுக்குத் தடா போட்டுள்ளது! And நவம்பரில் "சாம்ப­லின் சங்கீதம்'' சேலத்தில் ரிலீஸ் செய்வதாக இந்த நொடியில் திட்டமிருப்பதால் அங்கொரு முறையான வாசக சந்திப்பை ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்று மனசுக்குப்பட்டது! So இப்போதைக்கு ஈரோட்டில் சும்மா ஜாலியாய் ஒரு மீட்டிங்கை மரத்தடியிலோ; ஜுனியர் குப்பண்ணாவிலோ போட்டு ஈரோடு ஸ்பெஷலை ரீ­லிஸ் செய்துவிட்டாலென்ன folks? 

ஆகஸ்ட் முதல் தேதிக்கு புத்தகவிழா துவங்குகிறது & நாம் எப்போதுமே அதன் மறுநாளில் (சனியன்று) சந்தித்திடுவோம்! இந்தவாட்டியும் அதே தேதி ஓ.கே எனும் பட்சத்தில் நானும், ஜுனியரும் ஈரோட்டில் ஆஜராகியிருப்போம்! ஆகஸ்ட் மூன்றாம் தேதி ஞாயிறு- ஆடிப்பெருக்கு என்பதால் அன்று எல்லோருக்குமே வீட்டில் நேரம் செலவிடும் அவசியங்கள் இருக்கக் கூடும்! And எனக்குமே மூத்த சகோதரியின் இல்லத்திலொரு விசேஷம் இருக்கிறது! So ஆகஸ்ட் 2 சனி ஓ.கே என்றால் that will work for us!

சரிதான்டா தம்பி.. ஆனா, ஈரோடுக்கான ஸ்பெஷல் என்னான்றீங்களா? கொஞ்ச மாதங்களுக்கு முன்னே- prime மறுபதிப்பாய் நீங்கள் பார்க்க விழைவது எதையோ? என்று வாட்சப் கம்யூனிட்டியில் கேட்டிருந்தேன்! எதேதோ ரகளை தொடர்ந்தன; And ஒற்றை இதழுக்கு அதிரடியாய் ஆதரவு இருந்தது! அந்த நொடியில் ஏதோ சொல்­லி நான் சப்பைக்கட்டு கட்டியிருந்தேன் தான்; but நிறைய நண்பர்களுக்கு அன்று வருத்தமென்பது புரியாதில்லை! So அன்றே தீர்மானித்தேன் - அமையும் முதல் சந்தர்ப்பத்தில் அதை உங்களிடம் ஒப்படைப்பதென்று! So here Comes "தங்கக் கல்லறை'' MAXI சைஸில்; ஹார்ட் கவர் பைண்டிங்கில் & ரொம்பவே முக்கியமாய் ஒரிஜினல் மொழிபெயர்ப்புடன்!

"அதென்ன 'ஒரிஜினல் மொழிபெயர்ப்புடன்" என்ற அழுத்தம்? மறுபதிப்புகளுக்கு ஒரிஜினல் மொழிபெயர்ப்பு தொடர்வது தானே இயல்பு? " என்று புதியவர்களுக்கு தோணலாம்....! பச்சே 12 வருஷங்களுக்கு முன்னே பிக்னிக் சந்துக்கு பால் காய்ச்சி, வலது காலை எடுத்து வைக்கச் செய்து நம்மளை உள்ளே இட்டுப் போய், பூரணகும்ப மருவாதிகள் நடத்தியதெல்லாம் நம்ம பெருமைமிகு வீர வரலாற்றின் ஒரு மைய அத்தியாயம் என்பதை ஆர்வலர்கள் அறிவர்! So இன்னொரு தபா பிக்னிக் போவானேன்? என்ற முன்ஜாக்கிரதையுடன், தங்கக் கல்லறை இதழின் ஒரிஜினல் மொழிபெயர்ப்பையே கையாண்டுள்ளோம் - பிழைகளை மட்டும் நீக்கி விட்டு! 1990'களில் வெளியான அந்த ஒரிஜினல் தமிழாக்கத்தில் நிறையவே தவறுகள் இருந்துள்ளன தான் ; ஆனால் அந்நாட்களில் அவற்றை நாம் பெருசாய் கவனிக்கலை போலும் & பழசின் மீதான மோகத்தில் 'பெட்ரோமேக்ஸ் லைட்டே தான் வேணும்' என்று பின்னாட்களில் அடமும் புடித்துள்ளது இன்று ஸ்பஷ்டமாய் தெரிகிறது! So ஒரே கதையினை 1990-களில் ஒரு தபா ; 2010-களில் இன்னொரு தபா & 2020-களில் மூணாவது தபாவாய் தலை முதல் தூர் வரை எடிட் செய்துள்ள பெருமை இந்த ஏட்டு ஏகாம்பரத்துக்கே 💪💪...!

இங்கிலீஷில் "you're loco" என்று திட்டுகிறான் ஒரு கௌபாய் - அதாவது "நீயொரு லூசு" என்று பொருள்படும் விதத்தில்! கருணையானந்தம் அங்கிளுக்கு இது புரிந்திருக்கவில்லை ; so "நீயொரு லோக்கோ" என்றே தமிழில் எழுதியிருக்கிறார், அந்த முதல் பதிப்பில் ! அடியேனும் அதைக் கவனித்திருக்கவில்லை and நீங்களுமே தான். So பிழையோடே வண்டி அன்று ஓடியுள்ளது. 2013-ல் வெளியான நமது இரண்டாவது பதிப்பில் இது போலான பிழைகளைத் திருத்தியது மட்டுமன்றி, மொத்தமாகவே ஒரு புது வார்ப்பில் மொழியாக்கத்தை கருணையானந்தம் அங்கிளும், நானும் மாற்றி அமைத்திருந்தோம் ! பொஸ்தவம் வெளியான பின்னே விழுந்தது பாருங்கோ சாத்து மழை - ஆத்தாடி !! ஆயுசுக்கும் மறவாது ! அதிலும் லுங்கியோடு தலைகீழாய் மரத்தில் தொங்கும் ஒரு புனிதர் துவைத்த துவை Surf Excel க்கு tough தரும் ரகம் ! So இன்று பிழைகளைக் களைந்து, மற்றபடிக்கு அதே பெட்ரோமேக்ஸ் லைட்டோடு ஆஜராகிடவுள்ள இந்த சிறப்பிதழின் முதல் பிரதியினை அந்த ஈரோட்டு பவர் ஸ்டாரிடம் ஒப்படைத்தால் தான் நமக்கு நிம்மதி ! So ஆகஸ்ட் 2-ம் தேதிக்கு முயற்சிப்போமா மக்களே ? 

அப்புறம் இதோ - கலரில் 2 விதங்களில் அட்டைப்பட image !! அதே ப்ளூவா ? இல்லாங்காட்டி சிகப்பா ? என்பதைச் சொல்லுங்களேன் please ? அதே போல "தங்கக் கல்லறை" என்ற எழுத்துருவினையும் நண்பர் ஜகத் எழுதி அனுப்பிட்டால் போட்டுத் தாக்கிடலாம் ! திங்களன்று அச்சுக்குச் செல்கிறோம் ; so blue ?  red ? என்ற தேர்வு ஜல்தியாய் ப்ளீஸ் ?


அப்புறம் உங்களுக்கும், எனக்கும் கொஞ்சமாய் நேரத்தை மிச்சப்படுத்த கேள்வியும் நானே ; பதிலும் நானே பகுதி :

1 .எவ்வளவோ மறுபதிப்புகள் பெண்டிங் கீது ! இதை இப்போ அவசரமா கேட்டது யாருய்யா ?

சில ஆண்டுகளின் கோரிக்கை இது சாரே ! And ஒச்சமாகவே நின்று வந்ததொரு குறைப்பாட்டை சரி செய்த நிம்மதி கோரியும் இந்த மறுபதிப்பு !

2 .சூப்பர் மேக்சி சைசில் போடலே...இதெல்லாம் என்னத்த உருப்பட ?

"பயணம்" ஒரு அசாத்தியம் ! So சூப்பர் மேக்சி சைஸ் இலையில் விருந்து ! அதே சைஸ் இலையை ஒவ்வொரு தபாவும் விரிப்பதாய் இருந்தால் அஜீரணமே மிஞ்சும் ! So அஜீஸ் ப்ளீஸ் !

3.இப்டி மறுபதிப்பாய் போட்டு உசிரை வாங்குற நேரத்துக்கு நாலு கி.நா.போட்ருந்தாலாச்சும் போற பாதைக்கு வெளிச்சம் கிடைச்சிருக்கும் ! இதெல்லாம் எங்கே போய் முடிய போகுதோ ?

எங்கேயும் போய் முடியாதுங்கோ ; "பயணம்" out of the blue வந்தது போலவே நமது நெடும் பயணத்தில் இன்னும் நிறைய கி.நா.க்கள் வரவே செய்யும். புத்தக விழா ஸ்பெஷல்ஸ் எப்போதுமே விற்பனைகளின் மீது மையல் கொண்ட முயற்சிகள் என்பதால் - கிடைக்கும் ஒரு சந்தர்ப்பத்தில் ரெண்டணாவாச்சும் பார்த்துக் கொண்டால் தப்பில்லீங்களே ? 

ரைட்டு...டெரர் லைப்ரரி ; அப்பாலிக்கா தங்கக் கல்லறை ; நடுவே டின்டின் என்று அடித்துள்ள பல்டிகளில் ஆகஸ்ட் ரெகுலர் இதழ்களுக்குள் இன்னமும் நுழையவே நேரம் கிட்டியிருக்கவில்லை ! இதோ - சிக் பில் & டாக் புல்லுக்கு குரல் கொடுக்க வாய்ஸ் ரெக்கார்டரோடு வீட்டின் ஒரு பொந்துக்குள் புகுந்திடக் கிளம்புகிறேன் ! பக்கத்து வீட்டில் யாருக்கேனும் கேட்டால் ஏர்வாடிக்கு எத்தினி மணிக்கு பஸ் ? என்ற விசாரிப்பில் இறங்கிடுவர் என்பது உறுதி ! But அதையெல்லாம் பார்த்தா பொழப்பு ஓடுமா ?

Bye folks ..have a cool weekend ! See you around ! 

Saturday, July 05, 2025

ஜாலி ஜூலை!

நண்பர்களே,

வணக்கம்! இந்த முறை மாதத் துவக்கமானது வாரத்தின் துவக்கத்தோடு கைகோர்த்துப் போனதால் டெஸ்பாட்ச் உங்களது பிஸியான பொழுதுகளிலேயே அமைந்திடுவதை தவிர்க்க இயலவில்லை! So உங்களில் நிறையப் பேருக்கு அச்சு மையின் மணத்தை நுகர்ந்திடவும், பக்கங்களைப் புரட்டி- "பொம்ம'' பார்க்கவுமே நேரம் பற்றியிருக்காது தான்! இதோ இந்த வாரயிறுதியினை "தல'' அல்லாததொரு மாதத்தின் படைப்புகளை சுவாசிப்பதனில் செலவிட்டீர்களெனில் நாங்க ஹேப்பி அண்ணாச்சி!

"இந்த மாதத்தின் highlight" என்பதை விடவும், லக்கி லூக் டபுள் ஆல்பத்தினை - "ஆண்டின் hightlight-களுள் முக்கியமானது'' என்று சொல்லவே எனக்குத் தோன்றுகிறது! Becos லக்கி லூக் வெளிவரும் ஒவ்வொரு சந்தர்ப்பமுமே கொண்டாடப்பட வேண்டியதொன்று! தடி தடியாய் கௌபாய்கள்; டிடெக்டிவ்கள், சாகஸ வீரர்கள் என்று உலவிடும் நமது காமிக்ஸ் பிரபஞ்சத்தில் கடந்த முப்பத்தி எட்டு ஆண்டுகளாய் தனது பிரத்தியேக பாணியில் கார்ட்டூன் கொடியினை ஒண்டி ஆளாய் உயரப் பிடித்து நிற்பதென்பது சாமான்யக் காரியமே அல்ல தானே? எண்ணற்ற கார்ட்டூன் நாயகர்கள் இதே வட்டத்தின் முன்னே ஆஜரான வேகத்திலேயே - "ஆட்டம் க்ளோஸ்டா மாப்பு'' என்றபடிக்கே மூட்டையைக் கட்டவுமே செய்துள்ளனர்! ஆனால், வெயிலோ, மழையோ, முதல் இன்னிங்ஸோ, இரண்டாம் இன்னிங்ஸோ- இம்மி கூட "தம்'' குறையாது தாக்குப் பிடித்து நிற்கும் இந்தக் கார்ட்டூன் ஜாம்பவான் in his own rights ஒரு சூப்பர் ஸ்டார் ஆச்சே?! So அவரை ரசித்திடக் கிடைக்கும் ஆண்டின் ஒரே சந்தர்ப்பத்தை உற்சாகமாய் கொண்டாடுவதில் தப்பே இல்லை தானே?!

பெர்சனலாக 40+ ஆண்டுகளுக்கு முன்பாய் "சூப்பர் சர்க்கஸ்' இதழின் ஆங்கிலப் பதிப்பைப் பார்த்த தருணத்தில் எவ்விதம் அகம் மகிழ்ந்ததோ- அதற்குக் கிஞ்சித்தும் குறைவின்றி இன்றளவிற்கும் இந்தத் தொடர் மகிழ்விக்கத் தவறுவதே இல்லை! And கடந்த பத்தாண்டுகளாய் லக்கியின் மொழிபெயர்ப்புகளை முழுமையாய் கையில் எடுத்துக் கொண்ட பிற்பாடு லக்கி- டால்டன்கள்- ஜாலி- ரின்டின் கேன் யூனிவர்ஸில் இன்னமுமே பக்காவாய் ஐக்கியமானது போலொரு உணர்வு உள்ளுக்குள்! Oh yes - துவக்கக் காலகட்டங்களில் லக்கிக்குப் பேனா பிடித்தது நானே; ஆனால், "மாதம் நான்கு புக்ஸ்'' என்று 1988 வாக்கிலேயே இழுத்துப் போட்டுக் கொண்ட பிற்பாடு கருணையானந்தம் அங்கிள் வசம் அந்தப் பொறுப்பு சென்றிருந்தது! இன்று பல லக்கி இதழ்களை மறுபதிப்புக்கென கையில் எடுக்கும் போதெல்லாம் ரொம்பவே சபலம் தட்டும் - முழுசையுமே fresh ஆக இன்னொருக்கா, நம்ம பாணியில் எழுதினாலென்னவென்று! ஆனால், 'அக்டோபர் 2013' அவ்வப்போது மனத்திரையில் நிழலாடிப் போவதால்- "தங்கக் கல்லறை'' ஸ்டை­லில் ஒரு மெகா பிக்னிக் ஸ்பாட்டுக்கு மறுக்கா போக வேணாமே என்று மனசு எச்சரிக்கை பண்ணும்!

இம்மாத Lion ஆண்டுமலர் # 41-ல் உள்ள இரண்டு கதைகளும் அங்கே ஹாட்லைனில் நான் குறிப்பிட்டது போல 2 வெவ்வேறு காலகட்டங்களில் உருவானவை! சித்திரங்களில் மட்டுமன்றி ஸ்டை­லிலுமே மாற்றங்கள் பார்த்திருப்பீர்கள்! முதல் கதையில் லக்கியின் இதழ்களில் ஒரு "தம்'' சதா நேரமும் ஓட்டிக் கிடக்கும்! இரண்டாவதிலோ ஒரு நீளமான புல் மாத்திரமே! "புகை பிடித்தல்'' ஆரோக்கியக் கேடு எனும் போது, ஒரு உலகளாவிய நாயகரை கதை நெடுக சிகரெட்டோடே உலவ அனுமதிப்பது தப்பான முன்னுதாரணமாகிடும் என்ற புரித­லில் படைப்பாளிகளே செய்திட்ட மாற்றத்தை "நல்ல காலம் பிறக்குது'' கதையில் பார்க்கலாம்! 

கதையைப் பொறுத்த வரையில் இரண்டுமே சர்வ நிச்சயமாய் "புரட்சித் தீ''.. "சூப்பர் சர்க்கஸ்''... "பொடியன் பில்லி­'' ரேஞ்சுக்கான cult classics அல்ல தான்! ஆனால், 83 ஆல்பங்களில், கிட்டத்தட்ட 81 ஆண்டுகளாய் ஒரு தொடரினை இட்டுச் செல்லும் போது சில ups & downs சகஜமே! அதிலும் "The Prophet'' என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளியான "நல்ல காலம் பிறக்குது'' புதுயுகக் கதாசிரியரின் கைவண்ணம்! So தொடரின் ஜாம்பவான்களின் ஸ்டை­லில் கதை நெடுக சிரிப்பை அள்ளித் தெளிப்பதில் அவருக்கு அனுபவம் பற்றாது தான்! ஆனாலும், டால்டன்களும், ரின்டின் கேனும் கதை நெடுக வலம் வருவதால் ஆங்காங்கே புடைப்பான நம்ம மூக்கை உட்புகுத்தி humor content-ஐ உசத்திட முயற்சித்துள்ளேன்! Cinebook-ன் இங்கிலீஷ் இதழையும், நமது தமிழ் பதிப்பினையும் படித்திடும் பட்சத்தில், இது நன்றாகவே புலனாகிடும்..!

"ஒரு நாயகன் உதயமாகிறான்'' கதையோ ஜாம்பவான் கோஸினியின் படைப்பெனும் போது, மருவாதியாய் அவர் போட்ட கோட்டிலேயே ரோடைப் போட்டு வண்டியை செலுத்தியிருந்தேன்! இந்த வாரயிறுதியினையும் சரி, தொடரவுள்ள வார நாட்களையும் சரி, நமது கார்ட்டூன் தலைமகனின் அலச­லில் நீங்கள் செலவிட்டால் அட்டகாசமாகயிருக்கும்! Give it a shot folks?

இம்மாத ஆக்ஷன் நாயகரான "டேங்கோ'' செம raw ஆனதொரு அதிரடியில் ரகளை செய்திருப்பதை படங்களைப் புரட்டும் போதே புரிந்திருப்பீர்கள்! வரலாற்றின் சில பல அனாமதேயப் புள்ளிகளைத் தேடிப் பிடித்து, அவற்றோடு நமது கதை நாயகர்களையும் இணைக்கும் விதமாய் கதைகளை உருவாக்குவதெல்லாம் சுலப வேலையே அல்ல! ஆனால், நமது ப்ரான்கோ- பெல்ஜியப் படைப்பாளிகளுக்கோ அது இளவரசர்களின் சமோசா மொசுக்கும் ஆற்றலைப் போல, மெச ஜுஜுப்பி மேட்டரே! Operation Condor!! 1970-களின் மத்தியில் தென்னமெரிக்காவில் கட்டவிழ்க்கப்பட்ட ஒரு இராணுவ நடவடிக்கை போலும்! முதன்முறையாக "வேட்டை மறக்கா மறக்கா வல்லூறுகள்'' ஆல்பத்தில் தான் இந்த ஆபரேஷன் பற்றி வாசித்தேன்! முன்பெல்லாம் இது போலான கதைச் சம்பவங்களைப் பற்றிப் பெருசாய் ஆராய்திட வழியும் இராது; எனக்குத் தோன்றவும் செய்திடாது! ஆனால், திருவாளர் கூகுள் மட்டுமன்றி, அவரது சித்தப்பு, பெரியப்பு என இன்று எண்ணற்ற செயற்கை அறிவுக்கிட்டங்கிகள் ம­லிந்து கிடப்பதால், அரை நொடி செலவிட்டாலே கதாசிரியர்களின் ஆய்வுகளின் ஆழங்கள் புலப்பட்டு விடுகின்றன! So கதையினூடே பணியாற்றும் போது தான் இந்த Operation Condor ஒரு டப்ஸா பெயரல்ல; மெய்யாலுமே நிகழ்ந்ததொன்று என்பது புரிந்தது! அதை அத்தனை லாவகமாக கதைக்குள் புகுத்தி, நமது கதை மாந்தர்களை அதனோடு களமாடச் செய்வதெல்லாம் stroke of genius என்பேன்! நீங்களுமே இந்த டேங்கோ ஆல்பத்தினுள் பயணிக்கும் போது, இந்தப் பின்னணிகளைப் பற்றித் தெரிந்து கொள்ள நேரம் செலவிடுங்களேன் folks? அடுத்தவாட்டி உங்க நட்புக்கள் "இன்னுமாடா மாப்ளே இதையெல்லாம் படிக்கிறே?'' என்று லந்தடிக்கும் போது, "லேடன் தெரியுமா? பின்ன்ன்ன் லேடன்!'' என்ற ரேஞ்சுக்கு கவுண்ட்டர் கொடுக்க புதுசாயொரு மேட்டர் கிட்டியது போலி­ருக்கும்!

Last but not the least- இளவரசி!! காலத்தால் கரையா யௌவனமும், நேர்த்தியும், கீர்த்தியும் கொண்ட நமது பிரதம நாயகியின் MAXI ஆல்பம்! 2 தெறி புது சாகஸங்கள்; இரண்டு அம்மாஞ்சி புது Boyfriends! இது போதாதா- செமத்தியான வாசிப்புக்கு? ஏற்கனவே வாங்கியிருக்கா பட்சத்தில்- இப்போது ஆர்டர் போடுங்கள் மக்கா- you won't regret it for sure! 

Moving on, நம்ம புத்தக விழா கேரவன் இந்த நொடியில் நெய்வேலியில் நிலைக்கொண்டுள்ளது! கூப்பிடு தொலைவில் கோவையும், அதைத் தொடர்ந்து ஈரோடும் வெயிட்டிங் எனும் போது புத்தக விழா ஸ்பெஷல்ஸ் பணியில் இவ்விட ஒரே பிசி! அடுத்த வாரம் அவற்றைப் பற்றிப் பார்க்கலாமா?

இப்போதைக்கு உங்கள் சிந்தனைக்கு இதோ ஒரு picture quiz.... 🥹🥹

Have a wonderful weekend all... முன்கூட்டிய முகர்ரம் வாழ்த்துக்கள்! Bye for now!