நண்பர்களே,
உஷார் : நெம்ப பொறுமையுடையோருக்கு மாத்திரமே இது !! பாக்கிப்பேர் அட்டைப்படங்களையும், preview-க்களையும் பார்த்த கையோடு அமெரிக்க எலெக்ஷன் காமெடிகளை ரசிக்கக் கிளம்பிடலாம் ! Don't tell me that I didn't tell you !!
வணக்கம். மிக்ஸி… க்ரைண்டர்ளோடு மட்டுமே பரிச்சயம் கொண்ட புதிய தலைமுறையினராக நீங்கள் இருந்திடும் பட்சத்தில், அந்தக் காலங்களது ஆட்டுஉரல்களை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்புகள் குறைச்சல் தான் ! Ditto with அம்மிக்கல் ! ஒரு காலத்தில் இவையின்றி சமையலறைகளே இயங்கிடாது ! ரைட்டு… "அது எதுக்குடா அம்பி இப்போ ?” என்ற கேள்வியா ? சின்ன வயதுகளில் தாத்தா-பாட்டி-அப்பச்சி வீடுகளிலோ ; ஏதேனும் படங்களிலோ ; வாசிப்புகளிலோ இந்தக் கனமோ கனமான வஸ்துக்களை நீங்கள் சந்தித்திருந்தால் அந்த நினைவுகளைச் சேகரித்துக் கொள்ளுங்கள் ! அது தான் Step # 1 ! பிடாரியாய்க் கனக்கும் அந்த ஆட்டு உரலை தலைச் சுமையாய் ஏற்றிக் கொள்வது Step # 2. வலது தோளில் அம்மிக்கல்லைக் கட்டித் தொங்கச் செய்வது Step # 3 ! இடது புஜத்தோடு அம்மிக் குழவியைக் கோர்த்து விடுவது Step # 4. "அட… முதுகுப் பக்கம் காலியாத் தானே கீது…? உரலுக்கான உலக்கையைக் கட்டிப்புடலாம் !" என்பது Step # 5. இவை ஐந்தையும் செய்த கையோடு – “டேய் தம்பி… பார்த்துப் பத்திரமா 3 வாரத்திலே இதையெல்லாத்தையும் கொண்டு போய் புள்ளீங்க வூட்டிலே சேர்த்துப்புடணும் ! தீவாளிக்குப் பலாரம் சுடணுமாம் !” என்று ஒரு சுமாரான உடம்புக்காரனை வழியனுப்புவதை visualize செய்து கொள்ளுங்களேன் - Step # 6 பூர்த்தியாகிவிடும் ! And கடந்த 3 வாரங்களாய் இவ்விடம் நான் / நாங்கள் அடித்து வரும் கூத்துக்கள் பற்றி லேசாய் ஒரு ஐடியா கிடைத்திட மேற்படி 6 ஸ்டெப்கள் ரெம்போவே உதவிடும் என்பேன் !
‘ஆரம்பிச்சுட்டான்டா… பீற்றல் படலம் # 774’ என்று தோன்றுகிறதா folks ? On the contrary இது பீற்றல் புராணமேயல்ல… கழன்று போனதொரு புஜம் சார்ந்த புலம்பல் புராணம் ; and ஒரு ஓமக்குச்சி நரசிம்மன் சைசிலான டீம் விஸ்வரூபமெடுத்து சுமோ மல்யுத்த வீர்களின் சாகசங்களை செய்திட்ட பெருமிதக் கதை ! இதன் துவக்கம் மே மாதத்தினில் ஒரு சுபமுகூர்த்த லாக்டௌன் தினத்தில் நமது DTP அணியின் முக்கியச் சக்கரமான கோகிலா திருமணமாகிக் கிளம்பிச் சென்று விட்டதில் இருந்து எனலாம் ! தவிர்க்க இயலா சந்தோஷ வாழ்க்கை முன்னேற்றமது என்பது புரிந்தது ; ஆனால் நமது பணிகளில் ஒற்றை நாளில் விழுந்த சுணக்கங்களின் பரிமாணங்கள் தொடரும் நாட்களில் தெரிந்தனவோ – இல்லையோ - இதோ இந்த தீபாவளியின் நவம்பரின் போது அசுரத்தனமாய், விஸ்வரூபமெடுத்துத் தெரியத் துவங்கி விட்டன ! To her lasting – credit – நமது DTP அணியின் இன்னொரு அங்கமான இவாஞ்சலின், post lockdown பணிகள் மறுதுவக்கம் கண்ட ஜுன் முதலாய் – ஒற்றையாளாய் இத்தனை மாதங்களது பணிகளையும் சமாளித்து வந்திருக்கிறார் ! கிட்டத்தட்ட கடந்த 5 மாதங்களாக அத்தனை ஞாயிறுகளிலும் நமது அலுவலகத்தில் DTP பணிகள் ஓடிவந்துள்ளன…! வாரத்தின் ஏழு நாட்களும் பணிகளே ; மாதத்தின் முப்பது நாட்களும் பிசியே !
And then approached நவம்பர் !!!!
ஒவ்வொரு மாதமுமே ‘இழுத்துக்கோ-பறிச்சுக்கோ‘ என்ற கதையாய் வேலைகள் நிறைவுற்று வந்த நிலையில் – என் அடிமனசில் நவம்பர் சார்ந்த பீதி ஏகமாய்க் குடி கொண்டிருந்தது ! 672 பக்கங்கள் ‘டெக்ஸ் தீபாவளி மலரில்‘ மட்டுமே எனும் போது, இங்கே செமத்தியாய் மாட்டுவோம் என்பதை ஷெரீப் டாக்புல் கூட யூகித்திருக்க முடியும் தான் ! 'ஏன்டா பேமானி - அது தான் தெரியுதுலே ? வேலைக்கு இன்னொரு ஆளை போட்டா என்னவாம் ?" என்ற மைண்ட்வாய்சா ? சிக்கலே வேலைக்குப் புதிதாய் பணியாட்களைத் தயார் செய்வதில் தான் இருந்து வருதுங்கண்ணா ! படித்து முடித்த கையோடு “டிசைனிங் தெரியும் சார்… Photoshop தெரியும் சார்!” என்று ஆர்வமாய் விண்ணப்பிப்போர்க்குப் பஞ்சமேயில்லை தான் ; ஆனால் தமிழில் டைப்பிங் ; வண்டி வண்டியாய் – லோடு லோடாய் டைப்பிங் என்பதைப் பார்த்த கணத்தில் தெறித்து ஓடுபவர்களை உசேன் போல்ட்டால் கூடத் துரத்திப் பிடிக்க இயலாது என்பேன் ! அதற்கு மீறி இரண்டோ – மூன்றோ நாட்களுக்குப் பணி செய்ய வருவோர் – மூணாம் நாளே ‘கண்ணெல்லாம் இருட்டிக்கிட்டு வருது சார்‘ என்றபடிக்கு ஜகா வாங்கிடுகின்றனர் ! “டமில்” “டமில்” என்று எத்தனை மேடைகள் போட்டு ; ஸ்பீக்கர் கட்டிப் பேசினாலும் – நம் புதிய தலைமுறைக்கு அதன் மீதுள்ள பாசம், பரீட்சைகளில் பாஸாவதைத் தாண்டி பரவலாய் இருப்பதில்லை என்பதே என் மட்டிலான observation ! So மேற்கொண்டு ஆள் கிட்டும் வரையிலும் ஒத்தாசை செய்யும்படி கோவையில் செட்டிலான கோகிலாவிடம் குடலை உருவும் படலத்தைப் போன மாதமே துவக்கியிருந்தோம் !
ஆட்டு உரலின் கதை :
தீபாவளி with டெக்ஸ் ! 2 மாக்ஸி நீளத்து டெக்ஸ் ட்ரிபிள் ஆல்பங்கள் – so மொத்தமாய் 640 + பக்கங்கள் !! சரியாக மூன்றரை வாரங்களுக்கு முன்னே இதனைக் கையில் எடுத்த போதே நான் தீர்மானித்திருந்தேன் – புக்ஸ் டெஸ்பாட்ச் இம்முறை நவம்பர் 10-க்கு முன்பாகவே இருந்தி்ட வேண்டுமென்று ! And இது ஹார்ட்கவர் பைண்டிங் எனும் போது, சுத்தமாய் ஒரு வாரம் பைண்டிங்கிற்கே அவசியமாகிடும் ! So நிதரிசனமாய்ப் பார்த்தால் பதினேழு நாட்களிலிருந்தன – நவம்பரின் 906 பக்கங்களையும் டைப்செட் செய்து ; எடிட்டிங் செய்து ; அச்சிட்டு ; பைண்டிங் முடித்து ; மாமூலான மறந்து போன சமாச்சாரங்களுக்கோசரம் ஸ்டிக்கர்களும் ஒட்டி ; டப்பிக்குள் அடைத்து அவற்றை டெஸ்பாட்ச் செய்தி்ட !! And இந்த மொத்தக் கூத்தையும் அரங்கேற்ற நம் வசமிருந்ததோ - 75 அகவைகளைக் கடந்ததொரு மொழிபெயர்ப்பாளர் ; ஒற்றை DTP பணியாளர் ; ஒற்றை ஆல்-இன்-ஆல் அழகுராஜா & ஒற்றை முழியாங்கண்ண எடிட்டர் plus நமது front office !! குட்டிக்கரணங்கள் நமக்குப் புதிதேயல்ல தான் ; ‘மூன்றாம் பிறை‘ கமலஹாசன் பிச்சையெடுக்குமளவுக்கு ரக ரகமாய் ; விதவிதமாய் ; வீதி வீதியாய்க் கரணங்கள் போட்டிருக்கிறோம் தான் ! ஆனால் இம்முறையோ முற்றிலுமே வேறொரு லெவல் !
“இங்கே எல்லாமே நேர்கோடுகளே; பெருசாய் மண்டையைப் பிய்க்க முகாந்திரங்கள் இராது ; உள்ளாற புகுந்திடறோம் ; வூடு கட்டி டெக்ஸ் & கோ அடிக்கிறதை ரசிக்கிறோம் ; அப்டியே அச்சுக்குக் கொண்டு போறோம் !” என்பதே எனது நம்பிக்கையாக இருந்தது - டெக்ஸோடு பணி துவக்கிய தருணத்தினில் ! ஐயகோ.. ஐயகோ... பெரும் தேவன் மனிடோ காமிக்ஸ் காதலர் மட்டுமல்ல ; காமெடிகளின் காதலருமே என்பதைப் புரிந்து கொள்ள பரபரவென சந்தர்ப்பம் வாய்த்தது – எனது எதிர்பார்ப்புகள் ஒவ்வொன்றாய் பொய்த்த நொடிகளில் ! மேலிருந்து ஆட்டுவிப்பவர் சத்தியமாய் சத்தமாய்ச் சிரித்திருப்பார் – எனது முட்டைக்கண்கள் ஆனை முட்டை சைஸுக்கு விரிந்ததைப் பார்த்து !
“யுத்த பூமியில் டெக்ஸ்” – அமெரிக்க உள்நாட்டு யுத்தம் சார்ந்த கதையாக இருக்குமென்பதை யூகித்திருந்தேன் தான் ! இரண்டு பிடிவாதக்கார மீசைமாமா கர்னல்களைச் சாத்துவார் ‘தல‘ ; நாலு எதிரி முகாமில் குண்டு வைத்துத் தெறிக்க விடுவார் என்ற ரீதியில் கதையிருக்குமென்றும் யூகித்திருந்தேன் ! ஆனால்... ஆனால்... அங்கு தான் டெக்ஸின் பிதாமகர் G.L. போனெலியின் கதை சொல்லும் ஆற்றல் விஸ்வரூபமெடுப்பதை உணர முடிந்தது ! நடந்த யுத்தத்தின் வரலாற்றுத் தகவல்களை ; பின்னணிகளைப் பிசகின்றித் தக்க வைத்துக் கொண்டு – நிஜத்தையே பின்புலமாக்கி ; நிஜ மனிதர்களையும் கதைக்குள் பிசிறின்றிப் புகுத்தி ; அவர்களோடு அற்புதமாய் டெக்ஸை sync ஆகச் செய்து களமாடச் செய்துள்ளார் எனும் போது, “ஐயா... தெய்வமே... கூகுள் ஆண்டவா!” என்றபடிக்கே இம்மாதமும் இன்டர்நெட் தேடலுக்குள் ஐக்கியமானேன் - 2 பதிவுகளுக்கு முன்னமே விவரித்திருந்தபடி ! அமெரிக்க யுத்த வரலாறு ; வடக்கு vs. தெற்கு மோதலின் பின்னனி ; யுத்தத்தின் உச்சம் என்று வரிசையாகத் தோண்டித் துருவ வேண்டிப் போனது ! நான் பாட்டுக்கு எதையேனும் புரிதலின்றி எழுதி வைத்துத் தாண்டி விட்டால், அவை factual errors ஆகிடுமென்ற பயம் ! So மின்சார வேகத்தில் பாய்ந்தோடும் கதையோடு ஈடு கொடுத்த படிக்கே ; சைடில் கூகுளின் துணையோடே இந்த 320 பக்க சாகஸத்தோடு நான் உருண்ட உருளை ‘முதல்வன்‘ படத்து சேற்றுக்குள் சண்டை sequence–ல் ஆக்ஷன் கிங் அர்ஜுன் கூட உருண்டிருக்க மாட்டார் ! புரட்டப் புரட்டப் பக்கங்கள்... பார்க்கப் பார்க்க எழுத்துப் பிழைகள் ; தோண்டத் தோண்ட நிஜம் சார்ந்த தரவுகள் என்று நாட்களை சகட்டுமேனிக்கு விழுங்கிய “யுத்த பூமியில் டெக்ஸ்” சாமான்யத்துக்கு எனக்கு மறவாது !
“அச்சா ஹை... சிக்கல் தீர்ந்துச்சு ; இனி காத்திருப்பது நம்பள் கருணையானந்தம் அவர்களின் மொழிபெயர்ப்பிலான “பனிவனப் படலம்” ! இதிலே கூகுளும் தேவைப்படாது ; கும்மிடிப்பூண்டிக்குப் போகவும் தேவைப்படாது !” என்று பரபரவென பணிகளுக்குள் புகுந்தேன் – எடிட்டிங் செய்திட! ஐயகோ... ஐயகோ... இம்முறையும் விண்ணிலிருந்து ஒரு எக்காளச் சிரிப்பு காதில் விழுந்தது ! டெக்ஸ் கதைகளுக்கு அங்கிள் பேனா பிடித்து கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் இருக்கும் ! அவரது க்ளாஸிக் எழுத்துக்கள் டெக்ஸின் ஜனரஞ்சக / கமர்ஷியல் பாணிக்கு சற்றே அந்நியமாய்ப்படுவதாகத் தோன்றியதால் – டெக்ஸைத் தக்க வைத்துக் கொண்டு ; அவரது நடைக்கு suit ஆகிடும் கதைகளை மட்டுமே அவரிடம் ஒப்படைப்பது என்ற policy decision பரஸ்பரப் புரிதலின் பேரில் கொஞ்ச காலத்துக்கு முன்னமே எடுத்திருந்தோம் ! இதுவோ சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பாகவே எழுதி முடிக்கப்பட்ட ஆல்பம் எனும் போது திருதிருவென முழிக்கத் தோன்றியது simply becos ஒரே ஆல்பத்தின் முதல் முன்னூறு பக்கங்களுக்கு சகஜமாகவும் ; தொடரும் முன்னூறு பக்கங்களுக்கு இலக்கிய நடையிலும் ஒரே நாயகர் வாயசைத்தால் ரொம்பவே இடருமே என்ற ஞானோதயம் புலர்ந்தது ! And ரொம்ப காலம் கழித்து இந்த ஆல்பத்தில் கார்சனுக்கு துவக்கம் முதலே வேலைகள் இருப்பதும், மனுஷன் செமத்தியாய் score செய்திட ஏகப்பட்ட டயலாக் வாய்ப்புகள் இருப்பதும் கண்களில்பட்டன ! நடையில் பெரிதாய் நெருடல்கள் தெரியலாகாது ; அதே சமயம் கார்சனின் வரிகளில் நகைச்சுவை + வீரியம் ஏற்றிடல் அவசியம் என்ற 2 point agenda பிடாரியாய் முன்நிற்க – ஏற்கனவே தரையைப் பெருக்கிக் கொண்டிருந்த நாக்கைச் சுருட்டி வாய்க்குள் திணித்த கையோடு - கோட்டை மொத்தமாய் அழிச்சுப்புட்டு இன்னொரு 320 பக்க பரோட்டாவை விழுங்கத் தயாரானேன் !
அங்கே யுத்த பூமி...அரிசோனா..கென்டக்கி...டெக்ஸாஸ் என அமெரிக்க மத்திய மண்டலங்களெனில் - இக்கடவோ அலாஸ்கா ; கனடா ; வட துருவம் - என மெர்சலூட்டும் குளிர்ப்பின்னணி ! அங்கேயோ - 'பீப்ப்பீ " என்றபடிக்கே குழல் ஊதிக்கொண்டு, குதிரைப் பண்ணைகளையே கண்ணில் காட்டியபடிப் பாயும் சிப்பாய்களெனில் - இங்கேயோ மருந்துக்குக்கூடக் குதிரைகள் கிடையாது ! முழுக்கவே ஸ்லெட்ஜ் இழுக்கும் நாய்களின் ராஜ்ஜியமே ! ஆளுக்காள் முரட்டு-முரட்டுப் பனி அங்கிகளோடு - காலில் டென்னிஸ் மட்டைகள் போலான பனிக்காலணிகளோடு வலம் வந்துகொண்டிருந்தனர் ! அங்கே பூம்-பூம் டிக் என்றதொரு மொட்டை பாஸ் தான் டெக்சின் தோழனெனில், இங்கே நமது ஆதர்ஷ வெள்ளிமுடித் தாத்தா ! So முதல் கதைக்கும், தொடர்ந்திட்ட இரண்டாம் கதைக்கும் மத்தியில் தம்மாத்துண்டு ஒற்றுமை கூட லேது !
மௌரோ போசெல்லியின் இந்த த்ரில்லருக்குள் மெது மெதுவாய்ப் புகுந்தபடிக்கே, ரொம்பவே உயர்நடையிலான சொற்களை மாற்றிக் கொண்டே ; டெக்ஸ் & கார்சனுக்கு வரிகளில் வேகத்தையும், கொஞ்சமாய் காமெடியையும் நெடுக நுழைத்துக் கொண்டே போக, பக்கங்கள் முளைத்துக் கொண்டே ; முளைத்துக் கொண்டே வந்தது போலவே தோன்றியது ! எப்போதுமே டெக்சில் பணிகள் சுலபத்தன்மையோடு இருந்திடும் தான் ; ஆனால் அந்த 200 + பக்க நீளங்களோ பணியாற்றும் போது புரட்டியெடுத்திடும் ! இம்முறையோ 320 பக்க ட்ரிபிள் ஆல்பங்கள் எனும் போது - திறக்கத்திறக்கக் குவியும் ஜோ பைடெனுக்கான தபால் ஓட்டுகள் போல - முடிவின்றி நீண்டு சென்றன பணிகள் ! கதை மட்டும் அசுர வேகத்தில் இல்லாது போயின், சத்தியமாய் ஏதாச்சுமொரு கரடி விட்டுப்புட்டு நடுவாக்கில் கம்பிநீட்டிடலாமா ? என்ற சபலம் தலைதூக்கியிருக்கும் ! 320 பக்கங்களுக்குள்ளும் திருத்தங்கள் ; வசன மாற்றங்களை போட்டு விட்டு, 'அக்கடா' என ஓய்ந்திருக்கவும் மார்க்கங்களில்லை - becos உங்கள் கண்களில் தட்டுப்படும் எழுத்துப் பிழைகளின் பெரும்பான்மையே நான் பார்த்துத் தரும் பிழைத்திருத்தங்களினில் விடுதல்கள் + நான் மாற்றி எழுதுவதனை டைப்செட் செய்திடும் சமயங்களில் நிகழும் புதுப் பிழைகளே ! இங்கேயோ ஏகமாய் மாற்றி எழுதும் படலம் அரங்கேறியிருப்பதால் - இந்த வம்பே வேணாமென மறுக்கா 320 பக்கங்களையும் இரண்டாவதுவாட்டியும் வரவழைத்து மூக்குக்கண்ணாடியை மாட்டிக்கொண்டு வாசிக்கும் படலங்கள் அரங்கேறின ! நான் பிழைத்திருத்தம் செய்து முடிக்கும் பக்கங்களை அப்பாலிக்கா ஆபீசில் proof reader சங்கவி பார்த்த பிற்பாடு அச்சுக்கு எடுத்துக் போக ஏற்பாடு ! So கடந்த ஒரு வாரமாய் 'தல' கூடவே முழுக்க முழுக்கக் குப்பைகொட்டியதில் நம் அலுவலகக் கம்பியூட்டர்களுக்கும் சரி ; நமக்கும் சரி - காது, மூக்கு, என நவதுவாரங்களிலும் மஞ்சளாய்ப் புகை வராத குறை தான் !! And தொடர்கதையாய்த் திருத்தங்கள் போட்ட எனக்கே நாக்குத் தொங்கியதெனில் - அவை சகலத்தையும் நடைமுறை செய்த இவாஞ்செலினின் பாடை நினைத்தாலே கிறுகிறுக்கிறது ! இது அத்தனைக்குப் பிறகுமே எழுத்துப் பிழைகள் தலைதூக்கும் போது தான் யாரையாச்சும் 'தல' பாணியில் நடுமூக்கிலேயே குத்தணும் போல் பரபரத்திடும் !
டாஸ்மாக் வாசலில் பரதநாட்டியம் பயிலும் பொறுப்பான குடிமகனைப் போல ஒரு மாதிரியாய் 640 பக்கங்களையும் முடித்து விட்டு ஒரு ஓரமாய்க் கட்டையைக் கிடத்தத் தயாரான போது மைதீனின் நிழல் தெரிந்தது ! 'கிழிஞ்சது போ..! இன்னும் என்ன குண்டைப் போடப்போறானோ ?' என்ற பதட்டத்தோடு நிமிர்ந்தால் - "அந்த 32 பக்க கலர் டெக்ஸ் கதையை எழுதித் தரேன்னு சொன்னீங்களே அண்ணாச்சி !!" என்றபடிக்கே ஒரு கத்தையை நீட்டினான் ! இதுவோ - கலரிலான ஆக்கம் எனும் போது பிராசஸிங் ; அச்சு என சகலத்துக்குமே கொஞ்சமாச்சும் டயம் அவசியப்படும் ! பேஸ்தடித்துப் போய் நான் நின்ற போது இரவு மணி ஒன்பதரை ! 'விடாதே..பிடி..!!' என அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் நம்ம 'தல' தெறிக்க விடும் அந்த 32 பக்கங்களையும் எழுதி இவாஞ்செலினின் வீட்டுக்கு ராவோடு ராவாய் அனுப்பி டைப்செட்டிங் செய்து வாங்கி, அதிகாலையில் திருத்தங்கள் போட்டு - அச்சகம் திறக்கும் நேரத்துக்கு ரெடி செய்திருந்தான் மைதீன் !! 320 + 320 + 32 = 672 பக்கங்கள் கொண்ட ஆட்டு உரலை நாங்கள் சுமந்த கதை இது தான் !!
அம்மிக் கல்லின் கதை !
ஆட்டு உரலைச் சுமந்தது நானும், நம்மவர்களுமெனில், அம்மிக்கல்லை ஒப்படைத்தது நமது கருணையானந்தம் அவர்களிடமே !! போன மாதமே வந்திருக்க வேண்டிய நம்ம கூர்மண்டை சாரின் "சர்ப்பங்கள் சாபம்" சத்தியமாய் ஸ்பைடர் ரசிகர்களுக்கொரு தலப்பாக்கட்டி விருந்து என்பதில் துளியும் ஐயமில்லை எனக்கு ! நண்பர் JSK-ன் tribute ஆக வெளிவந்திடவுள்ள இந்தக் கதை மட்டும் 30 வருஷங்களுக்கு முன்பாய், ஸ்பைடர் மேனியா உச்சத்தினில் இருக்கும் நாட்களில் வெளியாகியிருப்பின்- கூரையைப் பிய்த்துக் கொண்டு போயிருக்கும் சேல்ஸ் ! ஸ்பைடரின் ரகளையான template-ல் ரவுசு விடும் இந்தக் கதையினை நான் ஆங்கிலத்தில் படித்த போதே தீர்மானித்து விட்டேன் - இதற்குப் பேனா பிடிப்பது ஒரு டஜன் கி.நா.க்களை விடவும் சிரமமென்று ! 72 பக்க நீளம் ; and பக்கத்துக்குப் பக்கம் டிரம்ப்பை விடவும் ஜாஸ்தி வசனம் பேசும் கதை மாந்தர்கள் என்பதைக் கவனித்த போதே - 'ஆத்தாடி.... கடைசி நிமிடம் வரைக்கும் ஜவ்விழுக்கும் நமக்கெல்லாம் இது சுட்டுப்போட்டாலும் ஒத்து வராது ! எழுதுவதனில் ஒரு அசாத்திய discipline கொண்ட அங்கிளால் மட்டுமே இதைச் சமாளிக்க முடியும் !" என்பது புரிந்தது ! நிஜத்தைச் சொல்வதானால் அவருக்கே தண்ணி காட்டிப்புட்டான் நம்ம 'எத்தனுக்கு எத்தன்' ! ஒரு முரட்டுக் கத்தைப் பக்கங்களோடு ஸ்பைடரின் தமிழாக்கம் நம்ம ஆபீசுக்கு வந்த சேர்ந்த தருணத்திலோ - இக்கட TEX மேளா செமத்தியாய் ஓடிக்கொண்டிருந்தது ! நிமிர்ந்து பார்க்கக்கூட நேரமில்லை என்ற நிலையில் -வேலையினை outsource செய்திட எண்ணிய நேரத்தில் - சில ஆண்டுகளுக்கு முன்பாய் நமக்கு பணியாற்றியதொரு அம்மணி, " வேலை ஏதாச்சும் உள்ளதா ? வீட்டில் வைத்துப் பணிசெய்து தரலாமா ?" என்று கேட்டிட - எக்குத்தப்பான நிம்மதிப் பெருமூச்சு எனக்கு ! ரைட்டு - ஒரு நோவு தானாய்த் தீர்ந்தது என்று நான் துள்ளிக்குதித்து என்னவோ நிஜம் தான் ! ஆனால் நமது மனிடோ பெரும் தேவனின் திருவிளையாடல்களை அந்த நொடியில் நான் அறிந்திருக்கவில்லை ! முழுசாய் 2 வாரங்களுக்குப் பணியினைக் கையில் வைத்திருந்துவிட்டு - இது இப்போதைக்கு எனக்கு முடியாது போலிருக்கு ! என்று கையை விரித்தே விட்டார் - வெறும் 15 பக்கங்களை மட்டும் முடித்திருந்த நிலையில் ! இவ்ளோ தமிழா ?? என்ற கேள்வி வேறு இந்த அழகில் !! வெறுத்தே போச்சு எனக்கு ! "இந்த மாசமும் இந்த புக்குக்கு பீப்பீ தானா ? அசிங்கமாகிடுமே !!" என்று உள்ளுக்குள் பதறத் துவங்கியது ! என்ன செய்வதென்று கையைப் பிசைந்தபடிக்கே , நமக்கு அவ்வப்போது கொஞ்சம் உதவிடும் குருமூர்த்தியின் கதவுகளைத் தட்டினோம் ! சமீபமாய் ஆர்ச்சி கலரிங் + டைப்செட்டிங் இவரது கைவண்ணமே ! மனுஷன் பிசியாக இருந்த போதிலும் மறுக்காது பணியை ஏற்றுக்கொண்டார் ! So உள்ளே டெக்ஸ் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த அதே தருணங்களில் வெளியே ஸ்பைடரும் ஓடிக்கொண்டிருக்க - உள்ளுக்குள் எனக்கோ - "தேதிகள் ஓட்டமாய் ஓடியவண்ணமுள்ளன ; வேலைகள் இழுத்துக் கொண்டே செல்கின்றனவே" என்ற டென்க்ஷன் ! கூர்மண்டையருக்குப் பிழைத்திருத்தங்கள் போடவும் இக்கட நேரமில்லை எனும் போது - அந்தப் பொறுப்பையும் பேனா பிடித்திருந்த கருணையானந்தம் அங்கிளிடம் மறுக்கா ஒப்படைத்தேன் ! அவரும் இயன்ற மட்டிலும் பார்த்துத் தந்த பக்கங்களுக்கு - 'டமால்..பணால்' என்ற அறிவுபூர்வமான ஓசைகளை இணைத்தது மட்டுமே எனது பொறுப்பாகியது ! வியாழன் மாலை சகலமும் முடிந்து, வெள்ளி காளைக்கு அச்சில் ஏறிட - 2 down ; 2 more to go என்று மண்டைக்குள் ஒலித்தது ! Maybe இந்த இதழினில் பிழைகள் கொஞ்சம் கூடுதலாய்க் கண்ணில்பட்டால் - மன்னிச்சூ ப்ளீஸ் !! And இதோ - நமது பிரிட்டிஷ் ஜித்தரின் அட்டைப்பட முதல்பார்வை :
இந்த அட்டைப்படத்தின்பின்னுள்ள கதையைக் கேட்டால் தெறித்தடித்து ஓடி விடுவீர்கள் என்பதால் I'll make it simple !! துவக்கத்தினில் நாம் தயார் செய்திருந்த டிசைன் இதுவல்ல ; புதிதாய் நமக்கு ஒத்தாசை செய்திடும் சென்னையின் டிஜிட்டல் ஓவியருக்கு நான் வேறொரு ஸ்பைடர் டிசைனைத் தந்திருக்க, அவருமே அதனை நீட்டாக முடித்துத் தந்திருந்தார் ! நானும் குஷியாய் அதனை படைப்பாளிகளின் பார்வைக்கு அனுப்பிவிட்டு, "இது ஜுபரா கீதாங்க சார் ?" என்று கேட்டிருந்தேன் ! ரைட்டு - proceed என்ற பதில் வருமென்று காத்திருந்தால் - வந்ததோ -"ஐயகோ...ஸ்பைடர் ஏதோ பாங்க்ரா டான்ஸ் ஆடுற மாதிரியிருக்கே ; இதையா அட்டைப்படமாக்கப் போறீங்க ? என்ற பதில் ! "இல்லீங்க சார் ; இதுவும் ஸ்பைடரின் ஒரிஜினல் டிசைன் தான் ; பாருங்க - இதோ இருக்கு நாங்க பயன்படுத்திய reference !" என்று நான் அந்த ஒரிஜினலை அனுப்பியிருப்பினும் அவர்களுக்குத் திருப்தியே இல்லை என்பது புரிந்தது ! "ஸ்பைடர் போன்றதொரு ஆக்ஷன் நாயகருக்கு அட்டைப்படத்தில் தெறிக்கும் வீரியம் தென்படணுமே !" என்பது அவர்களது உணர்வாக இருந்தது ! Moreover - இதே சாகசத்தை அவர்கள் வெகு சீக்கிரமே இங்கிலாந்தில் வெளியிட உள்ள நிலையில், நாம் ஏதேனும் சுமாரான ராப்பரோடு களமிறங்கிடக்கூடாதே என்ற பதைபதைப்பும் அவர்களுக்கு ! நொடியும் யோசிக்காது - நமது புது ஓவியரை மறுக்கா தொடர்பு கொண்டோம் சர்ப்பங்களோடு மல்யுத்தம் செய்திடும் இந்த டிசைனோடு ! அவருமே நமது அவசரம் புரிந்து சடுதியில் பணியாற்றித் தர - எனக்கோ அதன் பின்னணி வர்ணத்தில் திருப்தியில்லை ! 'ஓடு...ஓடு...கோகிலாவைப் பிடி !' என்று டிசைனை அவரிடம் ஒப்படைத்து, பின்னணியை மட்டும் இன்னும் glitzy ஆக்கி வாங்கிய கையோடு லண்டனுக்கு மறுக்கா மெயில் அனுப்பினோம் ! இம்முறையோ - "சூப்பர் !!" என்று பதில் கிட்டிட, அடித்துப் பிடித்து அட்டைப்படத்தினை அச்சிட விரைந்தோம் ! இதோ உள்ளது - முதலில் போட்ட பாங்க்ரா டான்ஸ் போஸ் & the others !!
So ரகம் ரகமாய் பல்பு வாங்கிய கதை இதுவே - நமது இஸ்பைடராரோடு !! இதோ - உட்பக்க preview :
அம்மிக் குழவியின் கதை :
புக் # 3 ஆக வந்திருக்க வேண்டியதோ - கார்டூனான "ஹெர்லக் ஷோம்ஸ்" & இதற்குப் பேனா பிடித்திருக்க வேண்டியவன் நானே ! ஆனால் தீபாவளி மலரின் களேபரங்கள் நிறைவுற்ற நொடியில் கன்னித்தீவு சிந்துபாத்துக்கு நாலு வரிகள் எழுதிடும் 'தம்' கூட என்னிடம் எஞ்சியிருக்கவில்லை ! Herlock மறுக்கா எழுத ஆரம்பித்து & டைப்செட்டிங் மண்டகப்படிகளை மறுக்கா அரங்கேற்ற சத்தியமாய் நேரமும் இல்லை என்ற போதே டிசம்பருக்கென நான் திட்டமிட்டிருந்த ஜம்போவின் இதழ் # 5 தயாராகயிருப்பது நினைவுக்கு வந்தது !! And இது நமக்கு ஏற்கனவே பரிச்சயமானதொரு இதழே !! And இதனை நாம் பின்சீட்டிலிருந்து முன்னுக்குக் கொணரத் துணிந்ததற்கு நமது ஜாகஜ வீரர் ரோஜரும் ஒரு காரணமென்பேன் ! Simply becos - ரோஜரின் "நேற்றைய நகரம்" இதழினை நீங்கள் மத்தளம் கொட்டித்தள்ளி விடுவீர்கள் என்ற பயத்திலேயே அதனை ஒரிஜினலாக அறிவித்த தருணத்தில் வெளியிடவில்லை நான் ! இப்போது ஆன்லைன் புத்தக விழாவிற்கு அதனை வெளியிட்ட போதுமே 'மடக்..மடக்;க்கென எச்சிலை கணிசமாய் விழுங்கத்தான் செய்திருந்தேன் ! ஆனால் Surprise ...surprise ....'கதை சூப்பர் ; சித்திரங்களும் சூப்பர் ; கலரில் இதை வெளியிடாமல் சொதப்பிப்புட்டியே !!" என்ற கண்டனங்கள் !! ரொம்பவே பெரியதொரு pleasant surprise என்றே சொல்லுவேன் உங்களின் அந்த ரியாக்ஷன்ஸ் ! நிச்சயிக்கப்பட்ட சப்பல்ஸ் சாத்துக்களின்றித் தலைதப்பியது மட்டுமன்றி, பண நெருக்கடிகளின் மையத்தில் நிற்கும் வேளையில், கொஞ்சமே கொஞ்சமாய் ராயல்டி மீட்பும் சாத்தியமாயிற்றே என்று ஓசையின்றி சந்தோஷப்பட்டுக் கொண்டேன் !
அந்த நொடியில் தீர்மானித்தது தான் "கால வேட்டையர்" இதழினை இனியும் பதுக்கிப் போட வேண்டாமென்பது ! கதையும் வாங்கி ; அச்சைத் தவிர்த்து தயாரிப்புப் பணிகளின் சகலத்தையும் செய்து முடித்து ; பற்றாக்குறைக்கு அட்டைப்படத்தையும் அச்சிட்டு வைத்திருக்கும் நிலையினில் - அதனில் லாக் ஆகிக் கிடக்கும் கணிசமான தொகையானது மனசுக்குள் நெருடலாகவே தொடர்ந்தது ! ரோஜரே தலைதப்பி விட்டார் எனும் போது இந்த மிரட்டும் ஆக்ஷன் த்ரில்லர் நிச்சயமாய் நான் பயந்தது போல் சோடை போகாதென்ற நம்பிக்கை பிறந்தது ! தவிர, ஜம்போ சீசன் 3-ன் சந்தாத் தொகையான ரூ.900-க்கு நாம் வழங்கிட வேண்டியது இன்னமும் ஒரேயொரு அறுபது ரூபாய் புக் மட்டுமே என்பது நினைவில் நின்றது ! (இதுவரை வந்துள்ளவை : பிரிவோம் சந்திப்போம் - ரூ.120 + ஜேம்ஸ் பாண்ட் ரூ.200 + மா துஜே ஸலாம் - ரூ.180 + தனித்திரு..தனித்திரு - ரூ.90 + (காத்துள்ள) Lone ரேஞ்சர் - ரூ.250) அந்த அறுபது ரூபாய் புக்கின் இடத்தினில் ரூ.120 விலையிலான "கால வேட்டையர்" புக்கை வழங்கிடும் பட்சத்தில் - உங்களுக்கு அந்தக்கதை ரசிக்காமலே போய் விட்டாலும் no big deal என்று தோன்றியது ! டைப்செட்டிங் செய்து ; ராப்பரும் ரெடியாக உள்ளதெனும் போது - ஒரேயொரு நாள் எடிட்டிங்கினில் மெனெக்கெட்டால் ஒரு முழு புக் தேறிவிடும் என்று பட்டது ! கண்முழி பிதுங்கிய நிலையில் deadlines உடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தவனுக்கு இந்த டீலை மறுக்க திராணியில்லை ! So அவசரம் அவசரமாய் எடிட்டிங் ; அச்சு & அதே கையோடு அட்டைப்படத்தின் முகப்பில் ஸ்டிக்கர் ; உட்பக்கத்தில் ஸ்டிக்கர் ; கடைசி உட்பக்கத்தினிலும் ஸ்டிக்கர் என்று நம்மாட்கள் புஜங்களையும் இன்றைக்குப் பதம் பார்த்தாயிற்று !! இதோ - பொன்னனின் கைவண்ணத்தில் ஓராண்டுக்கு முன்னமே ரெடியாகிக் காத்திருக்கும் அட்டைப்பட முதல்பார்வை - with the Season 3 sticker :
And இதோ - அசாத்தியச் சித்திரங்களுடனான அதன் உட்பக்க preview !மேற்கொண்டு டைப்படிக்க சத்தில்லை என்பதால் கதை பற்றிய விளக்கங்களை இன்னொரு மழை நாளுக்கென ஒத்திப் போடுகிறேன் guys ! So உங்களின் கூரியர் டப்பிக்கு கனம் சேர்க்கக் காத்திருப்பது இந்த black & white த்ரில்லரே !
உலக்கையின் கதை !!
எஞ்சியிருந்த ஒற்றை இதழ் - ஹி..ஹி..!!!! ."இரவின் மழை" என்ற பொருள்படும் பெயரோடு மச்சான்ஸைச் சந்திக்கக் காத்திருந்த அமாயா தோன்றும் - "வானமும் வசப்படும் !" "புரட்சிப்பெண் ஷீலா" என்று ராணி காமிக்சில் இவர் ஏற்கனவே ஒரு ரவுண்டு வந்துவிட்டார் என்பதை நண்பர்கள் சொல்லியே தெரிந்து கொண்டேன் ! ரைட்டு...தீபாவளி ஜோரில் கூட்டத்தோடு அம்மணியை இறங்கிவிட்டால், எப்படியாச்சும் கரை சேர்ந்திடுவார் என்ற நம்பிக்கையோடு - டைப்செட் செய்யப்பட்டு தயாராக இருந்த 30 பக்கங்களைக் கையில் எடுத்த போது - மூச்சிரைத்தது ! அம்மணி எதனில் புரட்சி செய்கிறாரோ இல்லியோ - கதை நெடுக சிக்கன உடுப்புகளோடு 'சிக்'கென்று வலம் வருவதைக் கச்சிதமாய்ச் செய்து கொண்டிருந்தார் ! பற்றாக்குறைக்கு வசன வரிகள் அனைத்துமே ஒரிஜினலின் அதே அர்த்தங்கள் தொனிக்கும் விதத்தினில் இருந்திட, அவையும் ஏகமாய் விரசத்தில் நெருடின ! So கோகிலாவைக் கொண்டு அமாயாவுக்கு ஆடைதானங்கள் நடத்திய அதே நேரத்தில் - பெருமூச்சோடு மறுக்கா எழுதும் பேடைத் தூக்கி வைத்துக் கொண்டே விரச ஜாடை தொனித்த வரிகள் சகலத்துக்கும் வீரிய வார்னிஷ் பூச ஆரம்பித்தேன் ! படிக்கும் போது பெரிதாய் நெருடாது ; இன்னும் சொல்லப்போனால் சற்றே feminist ஜாடையிலும் டயலாக்குகளை நான் அமைத்து முடித்தது நேற்றிரவினில் ! (வெள்ளியிரவினில்) And சனி பகலில் அச்சாகி, பைண்டிங்குக்கும் புறப்பட்டு விட்டன !! இதோ - அம்மணியின் அட்டைப்பட முதல்பார்வை - நமது சென்னை ஓவியரின் கலரிங்கில் :
இந்தக் கூத்துக்கள் அனைத்தும் ஓடிக்கொண்டிருக்கும் அதே நேரங்களில் - அந்நியன் ரெமோ ஜாடையில் எனக்கு இன்னொரு பணி ராப்பொழுதுகளில் காத்திருந்தது !! And அது தான் நமது புது அட்டவணைக்கான பாம்பன் பாலத்து நீளத்திலான பதிவைத் தயார் செய்து டைப்பிடிக்கும் ராக்கூத்துக்கள் ! அத்தனை பேருமே ஏதேதோ பணிகளில் நம் சார்பில் பிசியே எனும் போது யாரையும் டைப்பிடித்துத் தரச்சொல்ல இயலவில்லை ! And அட்டவணையை ஒத்திப் போடுவோமா ? என்றால் - உங்களை disappoint செய்தது போலாகிடுமே என்று அதற்கும் மனசு ஒப்பவில்லை ! பின்னென்ன - பகலெல்லாம் தயாரிப்பினில் மூழ்கியிருந்தது விட்டு, ராவினில் பதிவுக்குள் உலா வந்தேன் ! அதனில் ஒரு இரவில் எதிர்வீட்டு வாசலில் ராத்திரி 2 மணிக்கு குடுகுடுப்பைக்காரன் நின்று ஜக்கம்மாவை அழைத்துக் கொண்டிருக்க, சத்தமின்றி லைட்டை அணைத்துவிட்டு இருட்டுக்குள் டைப்படித்த கூத்துக்களும் அடக்கம் ! And உங்களின் பின்னூட்டங்களுக்கு இயன்றமட்டிலும் பதில் ; மீதமிருக்கும் நேரத்தில் எடிட்டிங் என இந்தக் கடைசி ஒரு வாரம் கரணங்களின் உச்சமென்பேன் ! And இதோ - இன்று மாலை டெக்சின் தீபாவளி மலர் + கலர் டெக்ஸ் + ஸ்பைடர் + காலவேட்டையர் என 4 புக்குகள் பைண்டிங்கிலிருந்து வந்திறங்கிய நொடியில் - கடந்த 3 வாரங்களது நோவுகள் எல்லாமே போனயிடம் தெரியவில்லை ! பாக்கியுள்ள அமாயா + 2021 கேட்லாக் இரண்டுமே திங்கள் காலை பைண்டாகி வந்து விடுமென்ற நம்பிக்கையில் திங்களன்று despatch செய்திட we are all set !!
ஒரு ஓமக்குச்சி டீம் பாஹுபலி அவதாரமெடுத்திருக்கும் இந்த தீபாவளி வேளையினை சத்தியமாய் சீக்கிரத்துக்குள் மறக்க மாட்டேன் ! அடிக்கடி சொல்லியிருக்கிறேன் - எங்கள் அணியே என் பலமென்று ! அவர்களை எண்ணி நான் பெருமிதம் கொள்ள இதைவிடப் பெரியதொரு வாய்ப்பு சர்வ நிச்சயமாய் அமையாது என்பது உறுதி !! 938 !! இம்மாதத்து output !!! Phew !!! Absolutely remarkable my team !!