நண்பர்களே,
வணக்கம். “வச்சு செய்வது எப்படி ? – ஒரு செயல்முறை விளக்கம்!”
1.முதலில் உள்ளூர் உற்பத்தியில் பெரிதாய் விரிவாக்கம்; நவீனமயமாக்குதல்களில் ஆர்வம் காட்டப்படாது! “இதெல்லாம் செய்யணும்னாக்கா ரொம்போவே மெனக்கெடணும்டா அம்பி...! அது தான் கிட்டக்கவே சீனாக்காரன் இருக்கான்லே – அவன்கிட்டே வாங்கிக்கோ!” என்று கையைக் காட்டிவிட்டு, ஜரூராய் மிக்சர் சாப்பிட வேண்டியது!
2. டொட்டடாய்ங்...! கொரோனா தாண்டவம்! சீனாவுடன் உரசல்! பலனாய் சீன இறக்குமதிகள் ஒரே நாளில் - 'இஸ் கான்... போயிண்டே!!' துறைமுகங்களில் சரக்குடன் காத்துக் கிடக்கும் பல்லாயிரக்கணக்கான கன்டெய்னர்கள் – மறுபடியும் சீனாவுக்கே நடையைக் கட்டுகின்றன!
3. ரைட்டு...இத்தினி காலமாய் மிக்சர் சாப்பிட்டு வந்த உள்ளூர் உற்பத்திக்காரப் பெரிப்பாக்கள் இப்போது என்ன செய்கிறார்கள் ? ஒரே ராவில் துள்ளிக் குதித்து எழுந்து, காலம் காலமாய் செய்யத் தயங்கிய அந்தச் சரக்குகைளை, சீன தரத்துக்கே செய்யும் சூட்சுமத்தைக் “கண்டுபிடித்து விடுகிறார்கள்!” பின்னென்ன? ராப்பகலாய் வேலை வைத்து சரக்கு செய்து, மார்கெட்டில் பூந்து விளையாடுகிறார்கள்!
4. “நில்லு.... நில்லு... நில்லு... சீனாக்காரன் சரக்கை வேணாம்னு சொல்லி விட்டு, அதே தரத்துக்கு நம்மாட்கள் உற்பத்தி ஆரம்பிச்சுட்டாக்கா அதிலே விசனம் ஏன்? கொண்டாட வேண்டிய சமாச்சாரமாச்சே?” இது உங்க மைண்ட் வாய்ஸ்!
5. கொண்டாட வேண்டிய மேட்டரே தானுங்கண்ணா... நம்ம முன்னாள் மிக்சர் பெரிப்பாக்கள் போட்டிக்கு ஆள் இல்லாத காரணத்தால் விலைகளில் இன்றைக்கு சகட்டு மேனிக்குப் போட்டுத் தள்ளாமல் இருந்தாக்கா!! கப்பல் கட்டணங்கள் தந்து, சுங்க வரிகளையும் செலுத்திய பிற்பாடு, சீனாவிலிருந்து இறக்குமதியான சரக்கு 100 ரூபாய்க்கு மார்கெட்டில் கிடைத்தது என்று வைத்துக் கொள்ளுங்களேன்... இன்றைக்கோ அதே சரக்கு உள்ளூரில் கூசாமல் நம்ம பெரிப்பாக்களின் உற்பத்தியில் - ரூ.140-க்கு விற்று வருகிறது!!
6. இத்தனை காலமாய் – சீன சரக்குகளோடு போட்டி போடுவானேன் ? சின்ன லாபத்துக்கு உற்பத்திகளில் ஆர்வம் காட்டுவானேன்?” என்று ஒதுங்கிக் கிடந்த மிக்சர் முதலாளிகள் – இன்று ஆளேயிராத ஆறு வழிச்சாலைகளில் பிய்த்துப் பிடுங்கிப் பறக்கும் ஆம்னி பஸ்களைப் போல தூள் கிளப்பி வருகிறார்கள்!
“அண்ணாச்சி... ரெண்டு டன் வேணும்; உடனே கேஷ்! என்ன ரேட் போடலாம்!” இது வாடிக்கையாளர்!
“போன வாரத்தை விட டன்னுக்கு எட்டாயிரம் சாஸ்திண்ணே! போட்டர்லாமா? இது விற்பனையாளர்!
7. ‘திருதிரு‘வென்று விழி பிதுங்கிக் கிடக்கும் வாடிக்கையாளரைப் பார்த்து அக்கறையாய் விற்பனை அண்ணாச்சி இன்னுமொரு அட்வைஸும் வழங்குகிறார்!
”யோசிச்சிட்டு சனிக்கிழமை சொல்றதானா மேற்கொண்டு ஆறாயிரம் கூடியிருக்கும்ணே... !! மில்லிலிருந்து ஏற்கனவே ஓலை வந்தாச்சு!”
”வச்சு செய்வது” என்பது இதுவில்லையெனில் வேறு எதுவாகயிருக்கக் கூடுமோ தெரியலைடா சாமி!!
வாயோரம் நுரை தள்ள இத்தினி நேரம் நான் பெனாத்தினதெல்லாம் – இன்றைய நமது பேப்பர் மார்கெட் உற்பத்திகள் + விற்பனைகள் சார்ந்த நடைமுறைகளைப் பற்றியே ! அக்டோபர் ’20 முதற்கொண்டே நிலவரம் ஒரு தினுசாய்ப் போய்க் கொண்டிருந்தது பேப்பர் விலைகளில் ! ஆனால் இது ஆண்டுதோறும் வருஷக்கடைசிகளில் நிகழும் டிமாண்டுக்கான மினி விலையேற்றமே; சனவரி பொறந்தா நிதானம் திரும்பிடும் – என்ற நினைப்பில் பெரிதாக நான் எடுத்துக் கொள்ளவில்லை ! தவிர நம்மிடம் ஜனவரி வரைக்குமே தாள் கையிருப்பு இருந்ததால், எவனோ – என்னமோ செய்திட்டுப் போகட்டும் என்று உலாற்றித் திரிந்தேன் ! ஆனால் பிப்ரவரியில் ARS MAGNA விற்குத் துவங்கி, இதர இதழ்களுக்குமான பேப்பர் வாங்கிட முனைந்த போது தான் தலைக்கு மேல் ஏவுகணைகள் ‘சர் சர்ரென்று பறந்து கொண்டிருப்பது புரிந்தது! வேறு வழியே இல்லாமல் - டன் ஒன்றுக்கு சுமார் 30% கூடுதல் விலை தந்து கொள்முதல் செய்த போது கபகபவென எரிந்த வயிற்றில், டில்லிப் பனிக்கு விவசாயிகள் இலகுவாய்க் குளிர்காய்ந்திருக்கலாம் !
“சரி... தொலையுது... அடுத்த மாதம் பார்த்துக்கலாம்!” என்றபடியே அதை மறந்து விட்டு, 2 நாட்களுக்கு முன்பாய் மார்ச் இதழ்களின் purchase-க்குப் போனால் – “வாங்க அண்ணாச்சி...! போன மாசமே சேர்த்து வாங்கியிருக்கப்படாதா ? இன்னும் எட்டாயிரம் கூடியிருக்கே?!” என்று அவர் பூத்த புன்முறுவலுக்கு நான் காட்டிய ரியாக்ஷனை பற்பல சென்சார்கள் செய்தாலுமே, இங்கு ஒலிபரப்பும் நிலையில் இராது! கலாமிட்டி-ஜேன் ஒழுக்கமான, வாய்ச்சுத்தமான அம்மணியாய்த் தென்பட்டிருப்பார் – என்னோடு அந்நொடியில் ஒப்பிட்டிருந்தால்! ஒன்றரை நாட்கள் மறையைக் கழற்றி மரத்தில் தொங்கவிட்ட மந்தியைப் போலச் சுற்றித் திரிந்தேன் - “யாரையாச்சும் மூக்கில் குத்தியே தீரணுமே?” என்ற கடுப்பில்! உள்ளூர்... சென்னை... பெங்களூர் என அத்தனை பேப்பர் ஸ்டோர்களிலும் சொல்லிவைத்தாற் போல அதே விலைகள் ; அதே அனுசரனையற்ற குரல்கள் !! நேற்று வரையிலும், டன் ஒன்றுக்கு ரூ.1500 லாபத்துக்கு வியாபாரம் செய்து வந்தோர் – இன்றைக்குக் கூசாமல் ரூ.10,000 லாபங்கள் பார்த்து வருவது புரிகிறது!
To cut a grossly long story short - அசுரத்தனமான இந்த விலையேற்றத்தைச் சமாளிக்க ஏதேனும் தடாலடியாய்ச் செய்திடாவிட்டால் - புதுச் சந்தாக்கள் துவங்கிடும் ஏப்ரலில், சாணித் தாளில் தான் தோர்கல்களும், ப்ளூகோட்களும் , டெக்ஸ் வில்லர்களும் வலம் வர வேண்டியிருக்குமென்பது புரிந்தது ! அந்த நேரம் தான் நமக்குத் பரிச்சயமானதொரு அச்சக அதிபரின் நினைவு வந்தது !நம்மிடம் முன்நாட்களில் அச்சு இயந்திரம் வாங்கியிருந்தவர் நல்லதொரு நண்பருமே ! அவரது நிறுவனம் எப்போதுமே கையிருப்பில் கணிசமாய் ஆர்ட் பேப்பர் வைத்திருப்பதுண்டு ! சத்தமில்லாமல் போய் அவர் கையைக் காலைப் பிடித்தாவது சகாயம் கேட்பதென்று தீர்மானித்தேன் ! அவரும் நம் இக்கட்டைப் புரிந்து கொண்டவராய், மறுப்புச் சொல்லாமல் நமக்குத் தேவையான சரக்கைத் தர சம்மதித்தார் – மார்கெட்டில் இன்று நிலவும் மரண உச்சங்களில் அல்லாது – சற்றே குறைவாய் ! நாம் வாங்கிப் பழகியிருந்த நார்மல் ரேட்களிலிருந்து இது எக்கச்சக்க அதிகமே என்றாலும் – வெளிமார்க்கெட்டில் அரங்கேறி வரும் “ஏக் மார் – தோ துக்கடா” கசாப்புகளை விடத் தேவலாம் ரகம் ! So கண்ணை இறுக மூடிக் கொண்டு ; அவரிடம் நமக்கு பயன்படக்கூடிய சைசில் இருந்த பேப்பரை அப்போதே லவட்டும் ஏற்பாடுகள் செய்து வைத்தேன் !
அதற்குள் ஜூனியர் தன் பங்குக்கு, இன்னொரு மொத்த இறக்குமதியாளரைத் தேடித் பிடித்து, அவரிடமும் நமக்கு ஆகும் விதமான பேப்பர் இருப்பதை ஊர்ஜிதம் செய்திருந்தார் ! சனிக்கிழமை காலை, தலைவர் பட முதல் ஷோவுக்கு டிக்கெட் வாங்க ஓடுவதை போல அவர்களின் ஆபீசுக்கு ஓட்டமெடுத்தோம் ! மதியத்துக்குள் நமக்கு ஏற்ற சரக்கை இனம் கண்டு ; அவர்களிடமும் கெஞ்சிக் கூத்தாடி சற்றே சகாய விலையில் கையிலிருந்த காசு முழுமைக்கும் பேப்பரை வாங்கித் தள்ளிவிட்டேன்! அநேகமாய் இது நடப்பாண்டின் November இதழ்கள் வரைக்கும் தாக்குப் பிடித்து விடும் ! அதற்குள்ளும், நிலவரம் சீராகியிராது ; விலைகளில் இதே வெறித்தாண்டவங்கள் தொடர்ந்திடும் பட்சங்களில், ஆர்ட் பேப்பருக்கு ஒரு பெரிய கும்பிடைப் போட்டு விட்டு – நார்மல் தாட்களுக்கு மாறுவதைத் தவிர்த்து வேறு வழியே இராது ! நிலவரம் கைமீறி ; கால்மீறி ; மூக்குமீறி ; முகரைமீறிப் பயணித்து விட்டன ! சும்மா சும்மா இந்த மனசாட்சிகளில்லா செலவின விலையேற்றங்களை நமது இதழ்களின் விலையேற்றங்களாக்கிடுவதில் எனக்குச் சம்மதமில்லை ! So தெறிக்கும் உச்சங்களே தொடர்ந்தாலோ ; அல்லது விலைகள் இன்னமும் கூடினாலோ - bye bye ஆர்ட்பேப்பர் என்பதே தீர்மானமாக இருந்திடும் ! We just have no choice !!
And பளா பளா மாப்பிள்ளையான ஆர்ட் பேப்பர் ஒருபக்கமாய் செம கெத்து காட்டி வருகிறாரெனில், ‘நாங்க என்ன இளப்பமா?‘ என்று இன்னொரு பக்கமிருந்து கொடி பிடிக்கின்றன - நாம் அட்டைப்படங்களுக்குப் பயன்படுத்தி வரும் கெட்டியான அட்டை ரகங்ளும் ! இங்கேயும் தலைசுற்றச் செய்யும் விலையேற்றங்கள் அரங்கேறி வருவதால் – இனி தொடரும் நாட்களில் உட்புறத்தில் சற்றே நிறம் குறைச்சலான ரகங்களைப் பயன்படுத்த உள்ளோம் ! வண்ணத்தில் அச்சாகிடும் முன்பக்கங்களில் எவ்வித மாற்றங்களும் இராது; ஆனால் ‘அடுத்த வெளியீடு‘; ‘விரைவில் வருகிறது‘; ‘ஸ்டாக் லிஸ்ட்‘ என்று தாங்கி வரும் உட்பக்கங்கள் இனி வெள்ளையாய் இராது! Please do bear with us on this guys!
இம்மாதிரியான ஸ்திரத்தன்மையற்ற மார்கெட் நிலவரங்களைத் தவிர்க்கும் பொருட்டே இரத்தப்படலம் – வண்ண மறு-மறு-மறுக்கா பதிப்புப் project-ல் சூட்டோடு சூடாய், மூன்றே மாதங்களுக்குள் முன்பதிவுகளை நிறைவு செய்திட ஆசைப்பட்டிருந்தேன்! ஆனால் முன்பதிவு ரயில் எதிர்பார்த்த வேகங்களைத் தொடாது போனதால் - ஒத்திப் போட வேண்டிப் போனது ! இப்போதோ புது விலைகளிலேயே பேப்பர் வாங்க வேண்டிப் போகும் ! Phewww !!!
ரைட்டு... பஞ்சப்பாட்டுக்கள் படலம் போதுமென்பதால் let’s move on!
அர்ஸ் மேக்னா! மினுமினுக்கும் ஹார்ட்கவர் அட்டையுடன், தாட்டியமாய் நிறைய இல்லங்களில் அமர்ந்திருப்பது நிச்சயம் ! And ஒரு சிறு அணியினர் அதற்குள் வாசித்து; சிலாகித்து பட்டையைக் கிளப்பவும் செய்து முடித்து விட்டுள்ளனர்! Taking things to new heights – நமது பல்லடத்து ஆசிரிய நண்பர் இம்மாதம் நம்மிடமிருந்து பெறவுள்ளது மைசூர்பாகு டப்பியாக இருக்கலாம்; ஆனால் அவர் பதிலுக்குச் செய்திருப்பதோ ஒரு அசாத்திய காரியம்! தன் செலவில் அர்ஸ் மேக்னாவின் 20 இதழ்களை வாங்கி, தன் சக ஆசிரியர்களுக்கோ, அன்பர்களுக்கோ விநியோகம் செய்து வருகிறார்!! தான் ரசித்ததோடு நிறுத்திக் கொள்ளாது ரூ.6000 செலவழித்து, அந்தப் படைப்பைத் தனது வட்டத்தினில் உள்ளோரிடமும் கொண்டு சேர்ப்பிக்க அவர் காட்டி வரும் ஆர்வம் – just wow!
And இதுவரையிலான அலசல்களையும், விமர்சனங்களையும் பார்த்திடும் போது – நமது பட்டியலுக்குப் பெருமை சேர்க்கும் ரொம்ப ஸ்பெஷல் இதழாக இது அமையக்கூடுமென்று தோன்றுகிறது! பத்துப் பதினைந்து நண்பர்களது சிலாகிப்புகளால் இதனை "All centers blockbuster ஹிட்" என்று இப்போதே கூத்தாடிக் கொண்டாடிடப் போவதில்லை நான் ; ஆனால் அதற்கான வேளை புலராது போகாது என்ற நம்பிக்கை கணிசமாய் உள்ளது உள்ளுக்குள்! இந்த முப்பாக ஆல்பத்துக்கான உரிமைகளை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாகவே வாங்கி விட்டோம்; ஆனால் கதையின் செம complex ஓட்டத்தை – மொழிபெயர்ப்பில் சமாளிக்க நமது டீமுக்கு சாத்தியமாகிடுமா? பிரதானமாய் ஐரோப்பிய வரலாறு ; மத நம்பிக்கைகள் எனப் பயணிக்கும் கதைக்களத்தை வாசிப்புகளில் சமாளிக்க நம் வட்டத்துக்கு சுகப்படுமா ? என்ற கேள்விகள் ஸ்பீட்-பிரேக்கர்களாய் நின்று வந்தன! In fact மேக்ஸி லயனின் வாண்டு ஸ்பெஷல் இதழ்கள் மட்டும் தள்ளிப் போகாதிருப்பின் அர்ஸ் மேக்னாவை இன்னமுமே ஜவ்விழுத்திருப்பேன் நான்!
கிருஸ்துவத்தின் வரலாறு; அவை சார்ந்த படைப்புகள்; Dan Brown ; Da Vinci Code நாவல்கள் என்றைக்குமே எனக்குப் பெரிதாய்ப் புரிந்ததுமில்லை; பிடிபட்டதுமில்லை! ‘தேவ இரகசியம் தேடலுக்கல்ல‘ பணிகளில் கூட சன்னமான பயங்களோடே நான் பணியாற்றியிருந்தேன்! ஆனால் அர்ஸ் மேக்னாவில் கதாசிரியர் எனது பயங்கள் சகலத்தின் வழியேயுமே சர்ர்...புர்ர்ரென்று வண்டியை ஓட்டோ ஓட்டென்று ஓட்டியிருக்க ‘தம்‘ பிடித்துக் கொண்டு தான் பேனா பிடிக்க நேர்ந்தது. வழிநெடுகிலும் கூகுள் references என்று ஒப்பேற்றியிருந்தாலும், எடிட்டிங்கின் ஒவ்வொரு முறையிலும் புதுசு புதுசாய் என் புரிதலின் குறைபாடுகள் கண்ணில் பட்டுக் கொண்டேயிருந்தன தான்! இன்னமுமே எனது பணி bullet proof ஆனதென்ற நம்பிக்கை முழுசாய்ப் பிறந்த வழியைக் காணோம்; maybe நண்பர்களின் பெரும்பான்மை மூழ்கி எழுந்து புதிதாய் சந்தேகங்களை எழுப்பாத பட்சத்தில் ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம்!
சரி... ஒரு பெரும் பரீட்சையைத் தக்கி முக்கி எழுதியாச்சு; இனிமேல் ‘ஓங்கியடிச்சா ஒண்ணேமுக்கால் டன்; ஓங்காமல் அடிச்சா மூணேமுக்கால் டன்‘ என்ற ஜாலியான பன்ச் டயலாக்குகளோடு கும்மியடிக்கப் போகலாமென்று பார்த்தால் ‘பிரளயம்‘ என்றொரு அசாத்தியம் முன்நிற்கிறது! மீண்டுமொரு முப்பாகத் தொகுப்பு; இங்கோ உலுக்கியெடுக்கும் ரகத்தில் கதைக்களம்!! சொல்லப் போனால் இந்தப் பணியை முடித்து சுபம் போடச் சாத்தியமாகும் வேளையில் – முன்மண்டையானது மொசைக் தளம் போலாகியிருக்கும் போலும்! இங்கே பணியில் சிரமங்கள் இல்லை; அதே போல மொழிபெயர்ப்பில் score செய்திடும் வாய்ப்புகளும் பேனா பிடிப்பவனுக்கு லேது! மாறாக ரொம்பவே disturb செய்திடும் அந்தக் கதையோடு பயணிப்பதில் தான் சவாலே உள்ளது! முதல் அத்தியாயத்தை முடித்த கையோடு இந்தப் பதிவுக்குப் பேனா பிடிக்கப் புறப்பட்டு வந்து விட்டேன்; ஆனால் மனசெல்லாம் எஞ்சியிருக்கும் 2 அத்தியாயங்களைச் சமாளிப்பதிலேயே நிலைகொண்டுள்ளது! And நேற்று பின்னிரவு இதன் இரண்டாம் பாகத்தினுள் பணி துவக்கிய நொடியே ஜெர்க்கோ ஜெர்க் !! அது பற்றி - அடுத்த பதிவினில் !
மார்ச் மாதத்தின் வெளியீடுகள் பற்றிய விளம்பரங்கள் ஏதும் இம்முறை இல்லாது போனதற்கு அர்ஸ் மேக்னாவைச் சிந்தாமல், சிதறாமல் கரைசேர்க்கும் உத்வேகத்தில் இதர சமாச்சாரங்களை மறந்து தொலைத்ததே காரணம்! எனக்குத் தானென்றில்லை; நம் டீமுக்குமே வெண்டைக்காய் அரை லோடு அவசியம் தான் போலும்! And here you go :
So மார்ச்சுக்கு : மேற்படி இதழ்கள் 3 & அத்தோடு 1 கிராபிக் நாவலுமே ! !
And அவற்றோடு 2020-ன் சந்தா முழுமையடைந்திடும் guys - ஏப்ரல் முதலாய் 2021-ன் புதுச்சந்தாக்கள் நடைமுறைக்கு வந்திடும் ! Please do take note !!
அப்புறம் போன வாரயிறுதியில் நான் மும்முரமாய் பொழுதைக் கழித்தது பற்றி! கொரோனாவின் உபயத்தில் உள்ளூர் புத்தக விழாக்கள் மாத்திரமின்றி உலகளாவிய புத்தகத் திருவிழாக்களுமே காணாது போயிருக்க, நமது படைப்பாளிகளோ ஓய்ந்து இருக்கத் தயாரில்லை! தமது படைப்புகளை உலகெங்கும் வெளியிட்டு வரும் இதர மொழிப் பதிப்பகங்களோடு வாரயிறுதிகளில் TEAMS எனும் காணொளி மூலமாய் உரையாடி வருகின்றனர் ! And சென்ற வாரயிறுதியினில் 2 வெவ்வேறு ப்ரெஞ்ச் பதிப்பகங்கள் ஆன்லைன் சந்திப்புகளில் நமக்கு நேரம் ஒதுக்கித் தந்திருந்தனர் – தலா 30 நிமிடங்கள் வீதம் ! ரைட்டு... அதை முடித்த கையோடு blog எழுத ஆரம்பிக்கலாமென்று இருந்தேன் தான்! ஆனால் இரு பதிப்பகங்களுமே தமது புதுப் படைப்புகள், காத்திருக்கும் திட்டமிடல்கள் பற்றி மேலோட்டமாய்ப் பேசத் துவங்க – எனது ஆர்வ மீட்டர் கூரையைப் பிய்த்துக் கொண்டு எகிறத் தொடங்கியது!
பல்வேறு புத்தகவிழாச் சந்திப்புகளிலும் சரி, அலுவலகச் சந்திப்புகளின் போதும் சரி, ஒரு விஷயத்தை நன்றாகவே கவனித்திருக்கிறேன் நான் : இதர மொழிப் பதிப்பகங்களின் பிரதிநிதிகளாய் வருவோர், கோட்டும், சூட்டுமாய் செம professional லுக்குளில் அசத்துவர்! அமர்ந்த மறுகணம் தமது லேப்டாப்களைத் திறந்து வைத்தபடி சுருக்கமாய் எதையோ பேசுவர்; நிறைய மண்டையை ஆட்டுவர்; சத்தம் போட்டு ஓரிருதபா சிரித்து விட்டு லேப்டாப்பை மூடியபடியே எழுந்து நின்று கைகுலுக்கி விட்டுக் கிளம்பி விடுவர்! ஆனால் நம்ம கதையே வேறாக இருக்கும்! அரை மணி நேரம் டயம் தந்திருப்பார்கள்; நானோ பிரான்ஸ் சுதந்திரம் வாங்கிய வருஷத்தில் வெளியானதொரு ஆல்பத்தின் ஒற்றைப்பக்க பிரிண்ட் அவுட்டைக் கையில் வைத்தபடிக்கே ஆரம்பித்தேனென்றால், 2030 வரைக்குமான திட்டமிடல்கள் என்னவாக இருக்கக்கூடமென்பது வரைக்கும் பிடுங்கி எடுத்து, பாடாய்ப்படுத்தி எடுத்து விடுவேன்! ஒரு வண்டி ஆல்பங்களைக் கேட்டு வாங்கி புரட்டோ புரட்டென்று புரட்டி, அவற்றின் கதைச்சுருக்கங்களைக் கேட்டு குடலை உருவுவேன்! So ஆன்லைனோ; ஆஃப்லைனோ எனது பாணி ஒன்றாகவே இருந்திட - அந்த ஞாயிறின் காணொளி மீட்டிங் ஒவ்வொன்றுமே கிட்டத்தட்ட ஒன்றேகால் மணி நேரங்களுக்கு நீண்டு சென்றன! அவர்கள் கண்ணில் காட்டிய புது ஆல்பங்களை சரசரவென்று குறித்துக் கொண்டு இந்தப் பக்கமாய் என் செல்போனிலேயே அவற்றின் மீதான கூகுள் தேடல்களைத் தட்டி விட, நொடியில் சில பின்னணித் தகவல்கள் கிட்டின! அவற்றை வைத்துக் கொண்டே படைப்பாளிகளிடம் மேற்கொண்டு பேசினால் லட்டு லட்டாய் சிலபல புது ஆல்பங்களை அடையாளம் காண முடிந்தது!
- ஒரு செம cute கௌபாய் காமெடித் தொடர்!
- ஒரு ரணகள ஆக்ஷன் கௌபாய் தொடர்!
- முன்னாள் ஜட்ஜ்; இந்நாள் காமிக்ஸ் ஓவியர் என ஒரு வித்தியாசமான படைப்பாளியின் ரொம்பவே வித்தியாசமான கிராபிக் நாவல்!
- ஒரு நிஜ சம்பவப் பின்னணியில் உருவானதொரு after the war ஆல்பம்!
- கார்ட்டூன் ஸ்டைலில் ஒரு ரகளையான கௌபாய் ஆக்ஷன் one-shot!
- கண்ணுக்குக் குளிர்ச்சியானதொரு செம வீரியமான கௌபாய் தொடர் – மொத்தம் 5 பாகங்கள் கொண்டது! இதுவரையிலும் 4 உருவாகி விட்டுள்ளன; இறுதிப் படலம் may be 2022 –ல் ரெடியென்றால் உத்திரவாத அதகளம் ரெடி எனலாம்! சித்திரங்களும் கதையோட்டமும் மின்னும் மரணத்துக்கு tough fight தந்திடுவது போலுள்ளன!
- க்ரைம் த்ரில்லர் – 2 பாகம் – நினைத்தே பார்க்க முடியாததொரு கதைக்கருவோடு! And சித்திரம் + கலரிங் ஸ்டைல் க்ரிஸ் கெய்ல் அடிக்கும் சிக்ஸர்களை விடவும் அசாத்தியமாய் இருக்கின்றன!
- நிஜ வாழ்க்கையில்; வரலாற்றில் சில தெளிவில்லாத அத்தியாயங்கள் மீது வெளிச்சம் போட முனையுமொரு மினி தொடர்! அதன் ஆல்பம், ஒவ்வொன்றுமே ஒவ்வொரு வரலாற்று மர்மத்தையோ; இருளில் கரைந்து நிற்கும் மாந்தர்களையோ அலசிட முனைகிறது! அதனிலிருந்து ஒரு அற்புத அழகியின் கதையைத் தேர்வு செய்துள்ளோம் நமது ஜம்போ சீஸன் 4க்கென! சித்திரங்களும் சரி, கலரிங்கும் சரி – வேறு லெவல்! ஜம்போ சீசன் 4-ன் இதழ் # 3.
ஆக பலகாரக் கடைக்குள் புகுந்த பசித்தவனைப் போல – போன ஞாயிறின் மதியமும், மாலையும் எனக்குக் கரைந்து போயிருந்தன! அன்றைய பொழுதின் தேடல்களின் பலன்களை நாம் காணக் கூடியது 2022-ல் தான் என்றாலும், ஒரு ஸ்பெஷலான வருஷத்துக்கு இப்போதிலிருந்தே தயாராவது தப்பில்லையென்று நினைத்தேன்!
ஓ.கே... வாரயிறுதிக்கு இந்த மொக்கை போதுமென்பதால் – காத்திருக்கும் பணிகளுக்குள் புகுந்திடப் புறப்படுகிறேன்! இந்தப் பதிவை எழுதிக் கொண்டிருக்கும் சனி பகலினில் பேங்க்கில் உள்ள பணத்தின் முழுமையையும் வழித்துத் துடைத்து பேப்பர் கொள்முதலுக்கான பட்டுவாடாக்களைச் செய்து முடித்தும் விட்டாச்சு! So திங்கள் காலை - காற்றோட்டமான வங்கியிருப்போடு தான் பணிகளைத் துவங்கிட வேண்டி வரும் என்றாலும், கிட்டத்தட்ட ஆண்டின் இறுதிவரைக்குமான தாள் உள்ளே வந்து இறங்கி விட்டதில் செம திருப்தி ! அறிவித்த இதழ்களை, அறிவித்த விலைகளிலும், தரங்களிலுமே உருவாக்கிட இனி சிக்கல்களில்லை என்ற நிம்மதி ! அடுத்த 10 மாதங்களுக்காவது எவன் தலையில், பெரிப்பாக்கள் எந்தக் கல்லை போட்டாலும் நமக்கு கவலையில்லை ; நான் மிக்ஸர் சாப்பிடுவேனே மம்மி !
And இன்னொரு பக்கமோ, நடப்பாண்டின் ரெகுலர் இதழ்கள் ; புக்பேர் ஸ்பெஷல்ஸ்; பூனைக்குட்டி ஸ்பெஷல்ஸ் – என சகலத்துக்குமான கதைகளும் வந்து சேர்ந்து விட்டன ! Post கொரோனா நாட்களில், நம் வண்டி குடைசாயாது ஓடிட, படைப்பாளிகள் அவர்களால் இயன்ற சகாயமாய் - கதைகளை இம்முறை கடனுக்கு அனுப்பியுள்ளனர்! So : கதைகள் வந்தாச்சு; பேப்பரும் வந்தாச்சு; பிரெஞ்சு மொழிபெயர்ப்புகள் 2022 வரைக்கும் தயாராச்சு!
இனி egg eyes தமிழாக்கம் பண்றான்... புக் ப்ரிண்ட் பண்றான்... நிம்பள் வாசிக்கிறான்!
And முடிஞ்ச தருணங்களிலே 2021-க்கான சந்தாப் புதுப்பித்தல்களுக்கு நீங்கள் சற்றே மெனெக்கெட்டிட முடிந்தால் - all will be well ! இந்த நொடியில் பாதிக் கிணற்றையே தாண்டியிருக்கிறோம் - 2021 சந்தாப் பரீட்சையினில் !
ஞான் இப்போ முன்கூட்டியே thanks சொல்லிட்டுக் கிளம்புறான்! டாட்டா... பை...பை! See you around folks ! ARS MAGNA அலசல்கள் தொடரட்டுமே - ப்ளீஸ் ?
P.S.: சின்னதொரு வேண்டுகோள் guys : எகிறியுள்ள செலவினங்களின் பொருட்டு விலையேற்றும் எண்ணமெல்லாம் இல்லை ! In fact 2022-க்குமே இதே விலைகளில் தொடர்வது தான் திட்டமிடலும் ! And இரத்தப் படலமும் அறிவித்த விலையினிலேயே மறுக்காப்பதிப்பு கண்டிடும் !
'ரைட்டு - அப்படியானால், வேண்டுகோள் ; வேண்டாதகோள் இன்னா ?' என்கிறீர்களா ? சமீபத்தைய நமது ஆன்லைன் புக் பேர் விழாவின் ஆர்ச்சி + மாயாவி இதழ்களினை இன்னமும் நம்மில் நிறையப் பேர் வாங்கியிருக்கவில்லை ! அவற்றுள் ஏதேனும் ஒன்றையோ ; அல்லது நமது back issues–களில் ஒரேயொரு Smurf or லக்கி லூக் or whatever வாங்க உங்களுக்குச் சாத்தியமாயின் – அதனை உங்களின் மார்ச் கூரியர்களுக்குள் நுழைத்து விடலாம் ! துயில் பயின்று கொண்டிருக்கும் முதலீட்டை சற்றே உயிர்ப்பித்தது போலிருக்கும் ; and தேறிடக்கூடிய தொகையானது, இந்த வேளையில் ரொம்பவே பயன் தரும் ! இயன்றால் முயன்று பாருங்களேன் ப்ளீஸ் ?
And of course – சந்தாப் புதுப்பித்தல்களுமே !! இதோ உங்கள் வசதிக்கோசரம் - சந்தா செலுத்திட ஆன்லைன் லிங்க்ஸ் :
https://lion-muthucomics.com/2021-subscription/643-jumbo-4-falooda-subscription-2021-april-to-december-abce-tamilnadu.html
https://lioncomics.in/product/jumbo-falooda-subscription-2021-april-to-december-abce-tamilnadu-copy/
Bye for now folks !! Have a fun Sunday !!