நண்பர்களே,
வணக்கம். நாட்களும், வாரங்களும் தடதடவென ஓட்டமெடுப்பது போலத் தோன்றுவது எனக்கு மட்டும் தானா ? என்று தெரியவில்லை ! ஆனால் காலெண்டரைப் பார்க்கும் போது வருஷத்தின் ஏழாவது மாதமும் வரலாற்றுக்குள் ஐக்கியமாகிட அதிகத் தொலைவில்லை என்பது புரியும் போது maybe எனது பிரமை நிஜம் தானோ ? என்று தோன்றுகிறது ! ஒற்றை ஞாயிறின் ஊரடங்கும், பால்கனிகளிலிருந்து அடித்த கொட்டுக்களும் மெய்யாலுமே வேறொரு யுகத்து சமாச்சாரங்களாய்த் தென்பட்டிட, நடப்பாண்டின் இதழ்களுமே தூரத்து நினைவுகளாய் உள்ளுக்குள் நீச்சலடிப்பதில் (என்மட்டிற்கு) வியப்பில்லையோ ? And ஜுலையின் புது இதழ்களை உங்களிடம் ஒப்படைத்தது ; உங்கள் அலசல்களை ஆராய்ந்தது ; அக்கடாவென ஒரு சில நாட்களைக் கடத்தியதுமே பத்து நாட்களுக்கு முன்பான சமாச்சாரங்களாகியிருக்க – அடுத்த கத்தை இதழ்களின் பணிகள் எங்கள் பொழுதுகளை மும்முரமாக்கி வருகின்றன ! But அத்தனை சீக்கிரமாய் நடப்பு இதழ்களிலிருந்து பார்வைகளை அகற்றிட இயலாதென்பதால் ஆகஸ்ட் previews will have to wait !
As always – இம்மாதத்து இதழ்களின் making பின்னணிகள் பற்றிய மொக்கைகளே இவ்வாரத்தின் பதிவு ! துவக்கப் புள்ளியாய் நமது லக்கி’s லயன் ஆண்டு மலர் அமைவதில் ஆச்சர்யங்களிராது தான் ! கடந்த சில வருஷங்களாகவே ஆண்டுமலருக்கு நமது பென்சில் ஒல்லி நாயகரையே முதல் தேர்வாக்கிடுவதைக் கவனித்திருப்பீர்கள் ! If I am not mistaken – இது மூன்றாவது லக்கி ஆண்டுமலர் ! எல்லோருக்குமே பிடித்தமான இந்த ஜாலி ஹீரோவை நமது ஆண்டுமலர் நாயகராக இருத்திக் கொள்ள நேர்ந்ததற்கு ஒரு அம்மணிக்கு நன்றிகள் சொல்ல வேண்டுமென்பேன் ! 2016-ன் ஆண்டுமலருக்கென XIII Spin-off தொடரின் பெட்டி பார்னோவ்ஸ்கி & கேப்டன் ப்ரின்ஸின் துவக்க நாட்களின் துக்கடா நீள சாகஸங்களையும் ஒருங்கிணைத்திருந்தது நினைவிருக்கலாம் ! மெய்யாலுமே இந்தக் கூட்டணியை அட்டவணைக்குள் பதித்த சமயம் எனக்குள் ஏகப்பட்ட கற்பனைகள் இருந்தன – இந்த இதழ் ரகளையான வரவேற்பு பெற்றிடுமென்று ! ஆனால் அந்த மே இறுதியில் இந்த 2 ஆல்பங்களுமே எடிட்டிங்கிற்கு என் மேஜையை எட்டிய போதே எனக்கு வயிற்றில் புளியைக் கரைக்கத் துவங்கி விட்டது ! பாதி கட்டிங்கில் சலூனிலிருந்து ஓட்டமெடுத்தவர் போல கேப்டன் ப்ரின்ஸ் அந்தத் துவக்க நாட்களது சாகஸங்களில் தோற்றம் தருவதில் எனக்கு ஆச்சர்யங்கள் இருக்கவில்லை தான் ; துவக்க நாட்களின் அந்த ஓவிய பாணியை ஏற்கனவே நிதானமாய் பார்த்திருந்தேன் தான் ! அதே போல கதைகள் எல்லாமுமே ஜோ டால்டனின் சைசுக்கே இருப்பதும் நானறிந்ததே ! So no surprises there either....ஆனால் நமது சாகஸ நாயகர் இன்டர்போலில் பணியாற்றிய நாட்களைச் சித்தரிக்கும் கதைகளானவை நிச்சயமாய் ‘வெயிட்‘டாக இருக்குமென்று எண்ணியிருந்தேன் ! ஆனால்... ஆனால்... பின்நாட்களின் பிரின்ஸ் கதைகளுக்கு ஏணி வைத்தாலும் எட்டாத ரகத்தில் அவை இருந்து வைக்க, பயங்கர ஏமாற்றம் எனக்கு ! சரி, சித்தப்பூ தான் காலை வாரிப்புட்டாரென்று பெட்டி அத்தாச்சி பக்கமாய்த் திருப்பினால் அவரோ கண்ணீரே வரச் செய்து விட்டார் ! இந்த இதழ் வெளியான நாட்களில் எனது அந்த ஏமாற்றங்கள் பொதுவுடைமை ஆகிப் போயின ! ஜெய் ப்ரின்ஸ்.... ஜெய் ஜெய் பொ.பா ! என்று புறப்பட்ட நிறைய நண்பர்களோ – ‘பே... பே...பே‘ என்று விழி பிதுங்கி நின்ற அந்த நாட்களில் எனக்கு உள்ளுக்குள் வண்டி வண்டியாய் நெருடல்கள் ! 200 ரூபாய்க்கான இதழை மிதமான கதைகள் ஊசலாடச் செய்து விட்டது ஒரு பக்கமெனில், ‘ஆண்டுமலர்‘ எனும் landmark இதழில் இந்தப் பிழை நேர்ந்து போனது குறித்து சங்கடம் இரட்டிப்பானது ! So அன்றைக்குத் தீர்மானித்தேன் - ஆண்டு மலர்களில் இனிமேல் நோ விஷப்பரீட்சைஸ் என்று ! டெக்ஸ் வில்லர் ; கேப்டன் டைகர் ; ட்யுராங்கோ & லக்கி லூக் தான் நமது 2017-ன் அணிவகுப்பினில் சந்தேகத்துக்கு இ்டமின்றிச் சாதிக்கும் கில்லிகள் என்றிருக்க – தொடரும் ஆண்டுமலர்களில் இவர்களுள் யாரையேனும் சுழற்சி முறையில் களமிறக்குவது என்று தீர்மானித்தேன் ! ஆனால்.....
- ட்யுராங்கோ முத்து காமிக்ஸ் நாயகராக வலம் வந்திட..
- கேப்டன் டைகரின் தொடரிலுமே வறட்சி நிலவிட...
-டெக்ஸ் வில்லர் தெறிக்க விடும் பட்டாசுகள் தீபாவளி மலருக்கென ரொம்பவே பொருத்தமாயிருக்க...
எஞ்சியிருந்த லக்கி தான் என் விசாலமான கண்களுக்கு ஆபத்வாந்தவனாய்த் தென்பட்டார் ! சந்தேகமேயின்றி ஹிட்கள் தரவல்ல நாயகர் என்பதோடு ; யாரது விமர்சனங்களுக்குமே ஆளாகிடா மிஸ்டர் க்ளீன் என்ற சமாச்சாரமும் பளிச்சென்று உரைத்தது ! டெக்ஸுக்கு அண்டாக்கள் ; டைகருக்கு குண்டாக்கள் என்பதே நடைமுறையெனும் போது – லக்கி லூக் & ஜாலி ஜம்பரை நினைத்துப் பாருங்களேன் : 1987 முதல் இன்று வரையும் 33 ஆண்டுகளாய் எப்போதும் பச்சையாய், அது தான் evergeen ஆக வலம் வருகிறார்கள் ! So ஆண்டுமலர்களை அலங்கரிக்க who better ? என்று என்னை நானே கேட்டுக் கொண்ட நாளில் பிறந்தது தான் 'ஆண்டுமலர்கள் with அன்பான லக்கி‘ என்ற template ! Thanks a ton Betty !!
ஒவ்வொரு ஆண்டிலும் அட்டவணையினுள் லக்கி லூக் கதைகளை நுழைக்கும் தீர்மானமெடுத்திடும் தருணமானது எனக்கு ரொம்பவே ஜாலியானது ! இவற்றை இங்கிலீஷிலேயே படித்து ரசித்திட முடியுமென்பது செம ப்ளஸ் பாய்ண்ட் எனும் போது என்னிடம் எப்போதுமே ஒரு அரை டஜன் கதைகளாவது short list–ல் இருந்திடுவதுண்டு ! So ஒவ்வொரு வருஷமும், கதைத் தேர்வுக்கான நேரத்தினில் வீட்டில் கிடக்கும் அந்த Cinebook லக்கி ஆல்பங்களை வேக வேகமாய் மேய்வது வாடிக்கை ! மற்ற நாட்களில் வாசிப்பது சும்மாக்காச்சும் எனும் போது – ‘படித்தோம் – சிரித்தோம் – மறுக்கா உள்ளே அடுக்கினோம்‘ என்றிருக்கும் ! ஆனால் கதைத் தேர்வு எனும் கண்ணோட்டம் தொற்றிக் கொள்ளும் போது – ரொம்பவே நுண்ணிய சல்லடையை கையிலெடுத்துக் கொள்ள வேண்டிப் போகும் ! சில கதைகளைப் படிக்கும் போது ‘ஓ.கே. ரகம்‘ என்று மட்டுமே தோன்றும் ! ஆனால் தமிழ்ப்படுத்தும் angle–ல் பார்க்கும் போது வேறு மாதிரித் தெரியும் ! ‘இங்கே – இங்கெல்லாம் கொஞ்சம் நகாசு வேலை செய்தாக்கா இந்தக் கதை நம்மாட்களுக்கு பிடிக்காமல் போகாது!‘ என்று தோன்ற ஆரம்பிக்கும் ! சமீபத்தைய ‘மார்செல் டால்டன்‘ ; ‘உத்தம புத்திரன்‘; ‘திசைக்கொரு திருடன்‘ எல்லாமே எனது original short list-ல் இருந்திடாமல்; மறுவாசிப்பின் / மறுபரிசீலனையின் பலனாய் ‘டிக்‘ பெற்ற ஆல்பங்கள். Of course – என்னளவில் லக்கியின் ஒவ்வொரு படைப்பும் ஒரு masterpiece தான்! கட்டாயங்கள் கழுத்தில் குந்தியிருக்காத பட்சத்தில், 'இன்க்கி-பின்க்கி-பான்க்கி' போட்டுப் பார்த்து சிக்கிய சகலத்தையும் வெளியிட்டு விடுவேன் தான் ! ஆனால் அடகுக்கடை முதலாளியை விடவும் பக்குவமாய் ஒவ்வொரு ஆல்பத்தையும் உரசிப் பார்க்க நம்மிடையே ஏகப்பட்ட நண்பர்கள் இருப்பதனால் – ஒவ்வொரு கதைத் தேர்வின் போதும், ‘சூப்பர் சர்க்கஸ்‘களும்; ‘புரட்சித் தீக்களும்‘; 'அதிரடிப் பொடியன்'களும் என் கண்முன்னே வந்து போவதுண்டு ! So ஒவ்வொரு பக்கத்திலும் உங்களை சிரிக்கச் செய்யும் வாய்ப்புகளுடனான சாகஸங்களாய்த் தேட முனையும் மனசு !
இந்தாண்டில் இடம்பிடித்த 2 ஆல்பங்களுமே எனது ஒரிஜினல் shortlist–ல் இருந்தவைகளல்ல ! ஜுனியர் எடிட்டர் மொழிபெயர்த்திருந்த அந்தக் “கௌபாய் கலைஞன்” கதையைப் போடாமலேயே டபாய்த்து வந்தவன் – சென்றாண்டின் ‘பாரிஸில் ஒரு கௌபாய்‘ இதழினை வெளியிட்ட பிற்பாடு மனசு மாறியது பற்றி போன பதிவின் பின்னூட்டங்களில் பகிர்ந்திருந்தேன் ! So ஒரு நிஜ வாழ்வின் மனுஷனைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு கதைக்கு 'டிக்' அடித்த போதே, அதனுடன் களமிறங்கும் இரண்டாவது கதையுமே இது போன்ற real life பின்னணியுடன் இருந்தால் தேவலாமே என்று நினைத்தேன் ! அந்த மாதிரியான தேடலோடு துளாவிய சமயம் கண்ணில்பட்டது தான் “பொன் தேடிய பயணம்”! ஒன்றுக்கு இரண்டாய், நிஜ வன்மேற்கு மாந்தர்கள் & க்ளோன்டைக் என்ற நமக்குப் புதிதான (காமிக்ஸ்) பிராந்தியம் என்று பார்த்த போது சுவாரஸ்யமாகிப் போனேன் ! பற்றாக்குறைக்கு நமக்கு ஏற்கனவே பரிச்சயமான வால்டோவும், ஜேஸ்பரும் இதனில் தலைகாட்ட, டங்கென்று ‘டிக்‘கடித்தேன் ! Of course – கதைக்களம் திடமாய் இருந்திராவிட்டால் இதர காரணிகளால் கால் காசுக்குப் பிரயோஜனமிருந்திராது தான் ! இங்கே கதாசிரியர் யான் லெடூர்ஜி ஒரு கதையை நிறுவி விட்டு, அதனைச் சுற்றியே நகைச்சுவையைத் தெளிக்க முனைந்திருந்ததால், நிச்சயமாய் சோடை போகாதென்று பட்டது ! And உங்களின் reactions அதனை ஊர்ஜிதம் செய்துள்ளதில் ஹேப்பி அண்ணாச்சி !
இம்மாதத்தின் ‘இளம் தல‘ ஒற்றை இதழானதன் பின்னணி by now நம் எல்லோருக்குமே தெரியும் தான் ! ஆனால் தெரியாத சின்னதொரு கொசுறு – இளவரசி தேஷாவின் பங்கேற்புடனான முழுவண்ண டெக்ஸ் ஆல்பம் நடப்பாண்டின் ஈரோட்டு surprise ஆக வெளிவந்திருக்க வேண்டிய சமாச்சாரம் ! எனது ஒரிஜினல் திட்டமிடலின்படி இளம் டெக்ஸ் – 4 தனித்தனி 64 பக்க இதழ்களாய் சந்தா: D-ல் வெளிவந்திருக்க வேண்டும் ! அது இல்லையென்று ஆன பிற்பாடு – ஒரே குண்டு புக்காய்த் திரட்டி, “எதிரிகள் ஓராயிரம்” இதழை ஆகஸ்டில் வெளியிடுவது தான் திட்டம் ! அதே ஆகஸ்டில் Surprise இதழாய் - டெக்ஸ் # 700 ஆக வெளியான (ஓவியர் சிவிடெலியின்) Pawnee’s Gold ஆல்பத்தையும் கலரில் போட்டுத் தாக்கவே எண்ணியிருந்தேன் ! ஆனால் இது போன்ற முக்கிய தருணங்களில் இரவுக் கழுகாரையே விடாப்பிடியாய் முன்நிறுத்தி வருவதில் இதர கதைரகப் பிரியர்களுக்கு நெருடல்கள் இருப்பதால் – "ஒற்றை நொடி ஒன்பது தோட்டா" ... & "கென்யா" என்று திட்டங்கள் மாற்றம் கண்டன ! ஆனால் இறைவனின் screenplay முற்றிலுமாய் வேறு விதமாயிருக்க – நமது திட்டமிடல்கள் சகலமும் சேவாக்கிடம் சிக்கிய full toss ஆகிப் போய்விட்டன So தேஷாவைக் கலரில் காண 2021 வரை காத்திருக்க வேண்டி வரும் !
அப்புறம் இம்மாதத்தின் இந்த ஒற்றை இளம் டெக்ஸ் தொகுப்பு ஓ.கே. தானா ? அல்லது ஒரிஜினலான போனெலி பாணியில் 64 பக்க மாதாந்திரத் தொடர்களாய் வரும் ஆண்டுகளில் முயற்சிக்கலாமா ? உங்கள் அபிப்பிராயங்கள் என்னவோ ? இதோ – இந்த லின்க்கில் போய் உங்கள் ஓட்டுக்களைப் பதிவிடுங்களேன், ப்ளீஸ் : https://strawpoll.com/b1he7fa8x
இம்மாத இதழ் # 3 – more for nostalgia lovers than current readers ! 'லாரன்ஸ் டேவிட் கதைகள் – அந்த 128 பக்க, துவக்கநாள் முத்து காமிக்ஸ் பாணிகளோடு நிறைவுற்று விட்டன ; மொத்தமே அதனில் 13 ஆல்பங்கள் தான் & சகலத்தையும் முத்துவில் போட்டுத் தள்ளியிருந்தார்கள்' – என்பதே 1985 வரைக்குமே எனது புரிதலாக இருந்தது ! ஆனால் 1985-ல் வீட்டில் கிடந்த Fleetway வாராந்திர LION இதழ்களைத் துளாவிக் கொண்டிருந்த சமயத்தில் கண்ணில்பட்ட இந்தக் கிங் கோப்ரா – சாகஸம் 1 என்னை க்வாட்டர் அடித்த குப்பனாய் ஆனந்தத் தாண்டவமாடச் செய்தது ! மின்சாரத்தைக் கண்டுபிடித்த நொடியிலோ ; அமெரிக்க நிலப்பரப்பைக் கண்ணில் பார்த்த நொடியிலோ – அந்த அசாத்தியர்கள் போட்டிருக்கக்கூடிய குத்தாட்டத்தை விட “Codename Barracuda” என்ற பெயரைத் தாங்கி நின்ற 2 பக்கங்களைப் பார்த்த வேளையில் நான் அடித்த லூட்டிகள் ஜாஸ்தி ! “காணாமால் போன கடல்” 1985 ஜுனில் வெளிவந்த வேளையில் எனக்குக் கொஞ்சமும் சளைக்காத ஆட்டத்தை "அந்நாட்களது நீங்கள்" போட்டதுமே நினைவுள்ளது ! (அன்னிக்கே இதனைப் படித்தோர் யாருங்கண்ணா இங்கே ? And யாரிடம் அந்த இதழ் இன்னமும் உள்ளதோ ?) ஆனால் 35 ஆண்டுகள் கழிந்த பின்னே லா.டே. ஜோடியின் அத்தியாயம் 2 வெளியாகும் போது வரவேற்பு நிச்சயமாய் வேறு மாதிரி இருக்குமென்பதில் எனக்குச் சந்தேகங்களே இருக்கவில்லை ! இம்மாதத்து இதழ்கள் 1&2 ஹிட்டாவது எத்தனை உறுதியோ – அத்தனை உறுதியே இதழ் # 3-ன் பொருட்டு என் தாவாங்கட்டையில் பல பீச்சாங்கைகள் பதிக்கப்படுமென்பதும் ஸ்பஷ்டமாய் (ஹிஹி!!) தெரிந்திருந்தது ! ஆனால் நமது பால்யங்களை மட்டுமன்றி, ஓரிரு தலைமுறைகளின் இளவயது நாட்களையே கலர்புல்லாக்கிய இந்த சாகஸ ஜோடியை one ast time ஒரு சின்ன விலையிலான புக்கில் தரிசிப்பதில்,பெரிதாய்க் குடிகள் எங்கும் மூழ்கிடாதென்று நினைத்தேன் ! Oh yes – இன்னமுமே சிலபல புதுக்கதைகள் லா.டே சாகஸங்களைத் தாங்கி நிற்கின்றன தான் ! But இப்போதைக்கு ; அடுத்த சில ஆண்டுகளுக்காவது இவர்களுக்கு இடங்களை மனதில் மட்டுமே தந்திட நினைத்துள்ளேன் !
So இம்மாத முக்கூட்டணியின் background இதுவே ! இதைக் தெரிந்து கொண்டதால் ஆக்ஸ்போர்டில் அரங்கேறி வரும் கொரோனோதை் தடுப்பூசி ஆய்வுகளில் பங்கேற்கும் ஞானங்களோ, லடாக்கின் ஊடுருவலின் பின்னணி அரசியல்களை கிரகித்துக் கொண்ட திருப்தியோ சத்தியமாய்க் கிட்டப் போவதில்லை தான் ! ஆனால் உங்கள் வாரயிறுதியின் அரை மணி நேரத்தினை நமது தயாரிப்புகள் சார்ந்த trivia உடன் செலவிட்ட சன்னமான குஷி உங்களதாகலாம் !
And before I sign out – இன்னொரு விஷயமும் கூட ! சில தினங்களுக்கு முன்பாய் நமது காமிக்ஸ் குடும்பத்தின் ஒரு அழகான அங்கம் ஆண்டவனிடம் ஐக்கியமாகி விட்டிருந்த தகவலை நாமறிவோம் ! நண்பர் ஜேடர்பாளையம் சரவணக்குமாரை இழந்து வருந்தும் அவரது குடும்பத்துக்கு நமது பிரார்த்தனைகளை மட்டுமே இத்தருணத்தில் நம்மால் முன்வைக்க முடியும் ! “இழப்புகள் இறைவனின் சித்தமே” என்று தத்துவம் பேசுவது சுலபம் தான் ; ஆனால் அதனை upclose பார்த்திட நேரும் போது அதன் தாக்கம் விலக ரொம்பவே நேரமாகிடும் என்பது தெரியாதவர்களல்லவே நாம் ! எனக்கு நண்பர் JSK உடன் மிகப்பெரிய நேரடிப் பரிச்சயம் இருந்ததில்லை தான் ; ஈரோட்டின் வாசக சந்திப்பின் போது அதிர்ந்து பேசத் தெரியாத JSK-ஐ அவரது சகோதரர் குணாவுடன் பார்த்துப் பேசியது நினைவில் உள்ளது ! ஆனால் மெய்யான காமிக்ஸ் நேசத்தில் கட்டுண்ட குடும்பத்தின் ஒரு உறுப்பினர் இன்றைக்கு நம்மோடு இல்லை என்ற நிஜம் கடந்த சில நாட்களாகவே நெருடி வருகிறது ! அதுவும் மாமூலாய் காலன் கூட்டிப் போகும் வயதுமல்ல எனும் போது – இறுதி நாட்களில் நோயோடு போராடிய அந்த நண்பரின் மனவலிகளை ; ரணங்களை ; சூன்யமாய்த் தெரிந்திருக்கக்கூடிய எதிர்காலம் குறித்த சிந்தனைகளை கற்பனை செய்து பார்க்கவே தடுமாறுகிறது ! அவரை அறிந்த நட்புக்கள் அவருக்குச் செலுத்தி வரும் மரியாதைகளைப் பார்க்கும் போது இந்த இழப்பின் நிஜப் பரிமாணம் புரிகிறது! And பல நண்பர்களும், JSK-ன் "ஸ்பைடர் காதல்" பற்றி எழுதியிருந்ததைப் படித்த போது மனதைப் பிசைந்தது ! கடைசி நாட்களில் காமிக்ஸ்களை ரசிக்கக்கூடிய மனநிலையோ / உடல்நிலையோ JSK-க்கு இருந்திருக்குமா ? என்பது கேள்விக்குறி தான் ; ஆனால் பூமியில் அவருக்கு எஞ்சியிருந்த நாட்கள் சொற்பமே என்பதை யூகித்திருக்க வழியிருந்திருப்பின் ; அவரைத் துளியூண்டேனும், ஒற்றைக் கணத்துக்கேனும் மகிழ்வித்திருக்கும் என்று தெரிந்திருப்பின், நிச்சயமாய் ஸ்பைடரின் புது சாகசம் ஏதோவொன்றை வெளியிட்டிருப்பேன் ! Anyways – better late than never !!
JSK இங்கிருந்த போது பார்க்க முடியாது போனதை – அவர் விண்ணிலிருந்து பார்க்கும் போதாவது வெளியிடுவோமே என்று மனதில் பட்டதால் – குற்றச் சக்கரவர்த்தி ஸ்பைடர் மறுவருகை செய்கிறார் – ஒரு புத்தம் புதிய சாகஸத்துடன்!
“சர்ப்பத்தின் சவால் !!”
Black & White-ல்; ஒரு vintage ஸ்பைடர் சாகஸத்துடன் ; பெரிய சைஸில் ரூ.90/- விலையில் ஒரு மினி collector’s இதழாய் – நண்பர் JSK-க்கொரு சன்னமான tribute ஆக வெளிவந்திடும் ! நமது விற்பனையாளர்களுள் ஆர்வப்படுவோர் மட்டுமே இதனை வாங்கிடுவர் ; மற்றபடிக்கு நமது ஆன்லைன் ஸ்டோரிலிருந்து அந்நேரம் நண்பர்கள் ஆர்டர் செய்து கொள்ள வேண்டி வரும் ! சந்தாக்களின் அங்கமாகிடாது இந்த திடீர் இதழ் !
JSK – இது உங்களுக்காக !
Bye all... See you around ! Have a great weekend !