Powered By Blogger

Sunday, June 30, 2024

ஜூலையின் வாசலில் !

 நண்பர்களே,

வணக்கம். இப்போதெல்லாமே இது ஜுன் ரெண்டாவது வாரம்; மூணாவது வாரம் என்ற ரீதியில் ஞாபகங்கள் தங்கிடுவதில்லை! மாறாக – ”இது 1005-ம் பதிவு வாரம்; 1006-ம் பதிவு வாரம்!” என்ற ரேஞ்சுக்கே சிந்தனைகள் ஓட்டமெடுத்து வருகின்றன! And இதோ – பதிவு நம்பர் 1006 சகிதம் yet another வாரயிறுதியினில் அடியேன் ஆஜர்!

புதிதாய் ஒரு மாதம் ; அதுவும் நமது ஆண்டுமலர் மாதம் ; அதுவும் கூப்பிடு தொலைவிலிருக்க, அங்கிருந்து ஆரம்பிப்பது தானே முறையாகிடும் ?! So இதோ – சிலபல ஆண்டுகளாகவே நாம் தொடர்ந்து வரும் அந்த template-ன் பாணியில் லக்கி லூக் டபுள் ஆல்ப சாகசத்துடன் இந்த ஆண்டுமலரைக் கலர்ஃபுல்லாக்கிட வருகிறார்! And as always, இரு புது காமெடித் தோரணங்கள் இம்முறையும் :

- நடுவிலே கொஞ்சம் ஞாபகத்தைக் காணோம்!

&

- களமெல்லாம் கிழம்!

முதல் கதையானது டால்டன் சகோதரர்களுடனான மாமூல் கூத்துப் பட்டறை என்றால், இரண்டாவது கதையோ தலை நரைத்த ஒரு பெருசு கும்பலோடு லக்கி நடத்தும் ஒரு சாகஸப் பயணம்! And இது லக்கி தொடரின் பொற்காலமாய் அறியப்படும் கோசினி & மோரிஸ் கூட்டணியின் காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது. இங்கே சின்னதாக ஒரு விஷயமுமே நமது கவனங்களுக்கு அவசியமென்பேன்!

- லக்கி லூக் தொடர் இன்னமுமே தடதடத்து வரும் ஒரு live தொடரே!

-இது வரையிலும் 82 ஆல்பங்கள் (சீனியர்) லக்கி லூக் தொடரில் வெளிவந்துள்ளன!

- சுட்டி லக்கி ஒரு தனித்தடத்தில் – ஒற்றைப் பக்க gags சகிதம், 5 ஆல்பங்களில் சுமாரான வரவேற்போடு பயணம் செய்திருக்கிறார்!

- இவை தவிர லக்கி லூக்கை கிராபிக் நாவல் பாணியிலும் 4 ஆல்பங்களில் சித்தரித்துள்ளனர்!

- மெயின் தொடரில் நாம் இதுவரையிலும் 48 ஆல்பங்களை வெளியிட்டு முடித்து விட்டோம்! இவற்றில் பெரும் பகுதி, தொடரின் பொற்காலத்து இதழ்கள்!

- எஞ்சியிருக்கும் ஆல்பங்களில் – தொடரின் துவக்க நாட்களில், சுமாரான சித்திரங்களுடன் லக்கி வலம் வரும் கதைகள் ஒரு 40% இருக்குமென்றால் – பாக்கி 60% கதைகளோ புதுத் தலைமுறைப் படைப்பாளிகளின் கைவண்ணங்களில் உருவான ஆல்பங்கள்! என்ன தான் புதியவர்கள் ‘தம்‘ கட்டி முயன்றாலும் கோஸினி & மோரிஸின் கதைத் தரங்களை எட்டிட ரொம்பவே திணறுகின்றனர் என்பது தான் யதார்த்தம்! So இனி வரும் காலங்களில் லக்கி கதைகள் வெளிவரும் வேளைகளில் நமது ஒப்பீட்டு மீட்டர்களை சற்றே ஓரம் கட்ட வேண்டியிருக்கலாம்!

- அதிலும் வெகு சமீபமாய் ஒரு ஜெர்மன் படைப்பாளியின் கைவண்ணத்தில் உருவாகியிருக்கும் லக்கி லூக் கிராபிக் நாவலை நாம் பார்த்தோமேயானால் கிறுகிறுத்துப் போய் விடுவோம் என்பது உறுதி! ஏகமாய் மாற்றங்கள் சித்திர பாணிகளில் மட்டுமன்றி, லக்கியிடமுமே செய்துள்ளனர்! So நாம் 37 ஆண்டுகளாய்ப் பார்த்து, ரசித்து வரும் ஒல்லிப் பிச்சானை காத்திருக்கும் புது யுகத்தில் கணிசமான மாற்றங்களோடே தான் பார்க்க முடியும் போலும்! Sighhhhh!

சரி, நமது ஆண்டுமலருக்கே திரும்பிடுவோமா folks? இதோ – ஒரிஜினல் அட்டை டிசைன்களோடான ராப்பரும், உட்பக்க பிரிவியூக்களும் :



இரு கதைகளுமே தொடரில் இதற்கு முன்பான ஆல்பங்களை நினைவூட்டக் கூடும் தான்; ஆனால் ஜாலியான கதை நகர்த்தலில் அவையெல்லாம் ஒரு பொருட்டாகவே தென்படாது பக்கங்கள் பறக்கின்றன! புதுயுகக் கதாசிரியர்கள் ஸ்கோர் செய்கிறார்களோ, இல்லையோ ; ஓவியர்களும் டிஜிட்டல் கலரிங் ஆர்ட்டிஸ்ட்களும் பட்டையைக் கிளப்பி வருகின்றனர்! இந்த ஆல்பமும், சமீப மாதங்களைப் போலவே ப்ரிண்டிங்கில் தெறிக்க விடுகின்றது! சித்திரங்களையும், ஒவ்வொரு frame-ல் ஓவியர்கள் செய்துள்ள ஜாலங்களையும் ரசித்தபடியே பக்கங்களைப் புரட்டினால் நிச்சயமாய் ஒரு புதுப் பரிமாணம் புலப்படும்!

ஆண்டுமலரின் இரண்டாவது கலர் ஆல்பத்தில் காத்திருப்பது டெக்ஸ்! கதாசிரியர் மௌரோ போசெலியின் கைவண்ணத்தில் உருவாகியுள்ள ஒரு செம breezy read – ”குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை!” பழைய தமிழ் சினிமாவின் தலைப்பைப் போல இந்தக் கதைக்குப் பெயரிட்டிருப்பதற்கொரு காரணமும் உள்ளது! அதை இம்மாத அலசல்களின் சமயத்தில் நீங்களே புரிந்து கொள்ள இயலும்! 


அப்புறம் ஆண்டுமலரில் மலையளவுக் கதையாகத் திட்டமிட்டிராது, மடு சைஸிலான டெக்ஸ் சாகஸத்தை மாத்திரமே slot in செய்திருப்பது தான் டெல்லி விமான நிலையத்தில் கூரை பெயர்ந்து விழுந்தது முதலாய், ரிஷாப் பந்த் மொக்கை போட்டு வருவது வரைக்குமான காரணமென போன பதிவினில் நண்பர் பொரிந்திருந்ததை பார்த்தேன்! பணிப் பளுவினால் அங்கேயே பதிலளிக்க இயலாது போயிருந்தது! So இங்கே கொஞ்சமாய் பதில் சொல்ல நேரமெடுத்துக் கொள்கிறேனே folks ?

ஒரு அட்டவணையினில் 12 மாதங்ளுக்கும் இதழ்களைத் திட்டமிடுவது ஒரு பணியென்றால் – எதை? எங்கே? எப்போது நுழைப்பதென்ற திட்டமிடல் இன்னொரு tough task! ஒரு ஸ்பெஷல் வெளியீட்டினை உட்புகுத்துவதென்றால் அதற்கு முந்தைய மாதத்தில், பிந்தைய மாதத்தில் என்ன வரலாம்? அவற்றின் விலைகள் எவ்விதம் அமையும்? என்பதைக் கணக்கில் எடுக்க அவசியமாகிடும்! சேர்ந்தாற் போல கூடுதல் விலைகளில் இதழ்கள் அணிவகுப்பதை இயன்றமட்டிலும் தவிர்க்க முனைவோம்!

- ஜுலையோ ஆண்டுமலர் மாதம்!  தொடர்ந்திடும் ஆகஸ்ட்டோ ஈரோட்டுப் புத்தக விழா மாதம்! And ஆகஸ்டில் டின்டின் டபுள் ஆல்பம்ஸ் தலா ரூ.300/- விலைகளில் - என்பதை ஆண்டின் ஆரம்பத்திலேயே நிர்ணயித்து விட்டாயிற்று - which means Rs.600 ! ப்ளஸ் ”ஈரோடு ஸ்பெஷல்” என குறைந்தபட்சமாய் ஐநூறு, அறுநூறு ரூபாய் பட்ஜெட்டில் திட்டமிடலும் இருக்கும்! ஆக ஜூலையிலும், ஆகஸ்டிலும், back to back ஆயிரத்துச் சொச்ச பட்ஜெட்கள் போடல் சுலபமல்லவே – moreso ஒன்னரை மாசத்துக்கு முன்பான ஆன்லைன் மேளாவினில் ரூ.999/-க்கு வேட்டு வைத்துள்ளோமெனும் போது!

- எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு மைல்கல் தருணமென்றால் ஒரு முரட்டு இதழ் வெளிவந்தே ஆகவேண்டுமென்பது, நாமே விதித்துக் கொள்ளும் கட்டாயமன்றி வேறென்ன? இதோ – டெக்ஸின் 75-வது ஆண்டிற்கென இத்தாலியில் போனெல்லி என்ன திட்டமிட்டிருக்கிறார்கள்? என்பதை தெரிந்து கொள்ள பேராவலோடு போன வருஷத்தில் எதிர்பார்த்துக் காத்திருந்த நொடி தான் நினைவுக்கு வருகிறது! சிம்பிளாக ஒரேயொரு 120 பக்க கலர் சாகஸத்தோடு முடித்துக் கொண்டார்கள்! And எண்ணற்ற மறுபதிப்புகளை கலரில் அள்ளித் தெளித்து அந்த ஆண்டினை நிரவல் செய்து விட்டார்கள்! மாதமொன்றுக்கு டெக்ஸ் மட்டும் சில லட்சம் பிரதிகள் விற்பனை காணும் ஒரு பிரதம மார்கெட்டில் உள்ள படைப்பாளிகளே “இவ்வளவு போதும்” என்று தீர்மானிக்கும் போது, பெருச்சாளி சைஸிலான நாமோ புல்லெட் சவாரிகளை செஞ்சே தீரணும் என்ற ஒவ்வொரு தபாவும் அடம் பிடிப்பது ஒரு luxury தானேயன்றி – கட்டாயமல்லவே!

- தவிர, வரும் காலங்களில் crisp வாசிப்புக் களங்களே சரிப்படுமென்ற policy decision எடுத்துள்ள ஒரு ஆண்டினில் அதனை இயன்ற தருணத்தில் நடைமுறைப்படுத்த எண்ணிடுவது தெய்வ குற்றமாகுமா – என்ன?

அப்புறம் இந்த 40-வது ஆண்டின் திட்டமிடல் + ஓட்டம் தடுமாறி வருவதாகவும் நண்பர் கருத்துச் சொல்லியிருந்தார்! சின்னதாய் ஒரு தகவல் சொல்கிறேனே நண்பரே :

நமது இரண்டாவது இன்னிங்க்ஸ் துவங்கிய இந்தப் 12 ஆண்டுகளில் – “கொரோனாவுக்கு முன்னே” ; ”கொரோனாவுக்குப் பின்னே” என்று 2 வித காலகட்டப் பிரிவுகளைச் சொல்லலாம்! “கொ.மு.”வில் இருந்த வேகமும், பணப்புழக்கமும் much better ! ”கொ.பி.” காலகட்டத்தில் விலைவாசிகள் தெறிக்கத் தொடங்கியது மட்டுமன்றி, ஏகமான ஒரு தளர்ச்சி மார்க்கெட்டில் விரவிக் கிடந்ததை மறுப்பதற்கேயில்லை! ஆனால் – இந்த 2024, புனித மனிடோவின் அருளால் விற்பனைகளில், உற்சாகங்களில் இதுவரையிலும் கண்களில் காட்டி வரும் சகலமுமே புதுப்புது உச்சங்களையே!

- சென்னைப் புத்தக விழா 2024 – was a chartbuster!

- டின்டின் அதகள வெற்றி;

- லார்கோ; பௌன்சர்; டெட்வுட் டிக்; மார்டின்; மிஸ்டர் நோ; இளம் டெக்ஸ்; சிக் பில்; டேங்கோ; க்ரே தண்டர்; துணைக்கு வந்த மாயாவி – என ஒவ்வொரு மாதமும் சூப்பர் ஹிட் அடித்துள்ள இதழ்களின் எண்ணிக்கையும் much more than before - இது வரையிலுமாவது !

- ஆன்லைன் மேளா – தெறிக்கச் செய்த மெகா வெற்றி!

So நண்பர் குறிப்பிடும் தடுமாற்றமானது இத்தகைய விளைவுகளைத் தருமெனில் “தடுமாற்றம் வருஷா வருஷம் நல்லது” என்பேன்!!

-அப்பாலிக்கா இப்போதெல்லாம் தியேட்டரில்  குலேபகாவலி & மலைக்கள்ளன் சினிமாக்கள் தான் ஓடி வருவதான குற்றச்சாட்டு பற்றி : இது காதில் உதிரம் கசியுமளவிற்கு ஏற்கனவே நாம் அலசிவிட்ட matter தான்! ஆனால் ஒவ்வொரு க்ளாஸிக் தடம் அறிவிக்கப்படும் தருணத்திலும் இந்த விசாரமும் தலைதூக்குவதால். சம்பிரதாயமான அந்த விளக்கத்தையும் தந்திடல் அவசியமாகிறது! 

-  ‘ஜம்‘னு AC தியேட்டர் கட்டியாச்சு ; Dolby Surround சவுண்ட் சிஸ்டமும் போட்டாச்சு! படம் பார்க்க அற்புதமானதொரு களம் ரெடி! ஆனால் எந்தப் படத்தை ஜனம் பார்ப்பது? எதை ஆதரிப்பது? எதை மூலை சேர்ப்பது? என்ற தீர்மானங்களை அந்தத் தியேட்டர் ஓனர் ஒண்டியாளாய் எடுக்கவாவது முடியுங்களா? Oh yes – புதுசாய், ஃப்ரெஷ்ஷாய் ஒரு டைரக்டர் எடுக்கும் படத்தைத் திரையிடலாம் ; ஆனால் end of the day பார்வையாளர்களுக்கு அது ரசித்தாலொழிய – பாப்கார்ன் ஸ்டாலில் கட்டும் கல்லா கூட தியேட்டர்காரருக்கு சாத்தியமாகிடாதே ?! Re-release காணும் ”கில்லி” படம், சமகாலத்துப் புது முயற்சிகளை விடவும் பிரமாதமாய் ஓடினால் அதற்கு தியேட்டரைக் குறைகண்டு பிரயோசனம் தான் இருக்க முடியுங்களா?

- வாசிப்புகளிலும், ரசனைகளிலும் இதுவே தானே நிலவரம்? “எனக்கு MYOMS சந்தா அத்தினி முக்கியமாப் படலேடா தம்பி; ஆல்ஃபாவோ; ப்ளூகோட்டோ; சிஸ்கோவோ எனக்குள் ஒரு பரபரப்பை உண்டு பண்ணலைடா தங்கம்!” என்று நண்பர்கள் சொல்லும் போது, அதை ஏற்றுக் கொள்வதைத் தானே நான் செய்திட இயலும்? அதே நண்பர்கள் – இந்த Electric ‘80s சந்தாவினை மூன்றே வாரங்களுக்குள் MYOMS எண்ணிக்கையினைத் தாண்டச் செய்திடும் போதுமே நான் பராக்கு மட்டும் தானே பார்த்திட இயலும்?! Of course, "இந்தப் பழம் பார்ட்டிகள் எனக்குள் ஒரு கொள கொள பீலிங்கையே உண்டு பண்ணுதுக !" என்ற விசனங்களை மறுக்கவே மாட்டேன் தான் ; ஆனால் இந்த அணி vs அந்த அணி எனும் போது - கெலிப்பது யாரென்பதை ELECTRIC '80s ஈட்டி வரும் முன்பதிவுகளே சொல்லி விடுகின்றனவே  !

- And it’s not like we don't give slots to new heroes! சாதித்துக் காட்டுபவர்கள் நிலைத்திடப் போகிறார்கள் – மிஸ்டர் நோ போல! ஆனால் கிடைக்கும் வாய்ப்புகளைக் கோட்டை விடுவோர் ‘சடக்‘கென்று ஓரம் கட்டப்படுகின்றனர் என்பதே இன்றைய நடைமுறை!

- முன்பெல்லாம் ஒரு நாயகருக்குக் கணிசமான வாய்ப்புகள் தரும் குஷன் நமக்கிருந்தது – அவர் தேறிட மாட்டாரா? என்று பரிசோதித்துப் பார்க்க! கமான்சேவை நாம் ஓரம் கட்ட நேர்ந்தது 9 ஆல்பங்களுக்குப் பின்பாகத் தானே? ஆனால் இன்றோ ஒரு I.R.$ தொடரை அசிரத்தையோடு பார்த்திட ஒரேயொரு ஆல்பமே போதுமென்றாகிப் போச்சே? இது தான் இந்த ஆகச்சிறிய வட்டத்தின் பலமும், பலவீனமுமே! 

- So ஒற்றை வரியில் சொல்வதானால் – டெக்னிகலரில் remaster செய்யப்பட்டு ஓடும் “ஜக்கம்மா” படம் ஈட்டித் தரும் வருவாய்களுக்கும் இந்த தியேட்டரின் ஓட்டத்தினில் ஒரு முக்கிய பங்குள்ளது   !  "தடுமாற்றம் தந்திடாத புதுத் திட்டமிடல்கள்" மாத்திரமே அரங்கை முழுசுமாய் finance பண்ணுவதாகயிருப்பின் – போன வாரம் குப்புசாமி கொட்டிப் போன கோன் ஐஸும் ; பத்து நாட்களுக்கு முன்னே பரிமளம் போட்டுப் போன பாப்கார்னும் அதனதன் இடங்களில் இன்றைக்குமே பத்திரமாய் இருந்திடுமே?! So எனக்குப் பிடித்தாலும், பிடிக்காவிடினும்,  பழமை மோகமற்ற நண்பர்களுக்கு எரிச்சல் மூட்டினாலும், கடுப்பேற்றினாலும் - the classic heroes are very much a part of our journey என்பதே bottomline!

And – போன வாரத்தில் அறிவிக்கப்பட்ட “கபிஷ்” மீள்வருகை கூட இதன் நீட்சியே! And இங்கே முக்கியமாக 2 ஆதாயங்கள் இருப்பதாக நான் நினைத்தேன்!

#1: புத்தக விழா சமயங்களில் மட்டும் வெளிவரக் காத்துள்ள இந்த இதழ்(கள்) சிம்பிளான வாசிப்புக் களங்களை தமது இல்லத்துக் குட்டீஸ்களுக்குத் தந்திட நினைப்போருக்கு ரசிக்கக்கூடுமென்று நினைத்தேன்!

#2: Of course ‘80sகளின் நம்ம தொந்தி வளர்த்த kids-களுக்கு இந்தச் சுட்டிக் குரங்கு செம நோஸ்டால்ஜியா தந்திடும் என்பதிலும் ஐயமில்லை !

ஆனால் இது தேவை தானா? இன்றைய இளம் தலைமுறையினர் எதை ரசிப்பார்களென்று லயோலா மாணாக்கரைக் கொண்டு ஒரு கருத்தாய்வு எடுத்தால் தான் தெரியுமென்று நண்பர் செனா.அனா அபிப்பிராயப்பட்டிருந்தார்! சில தருணங்களில் சிம்பிளான விஷயங்களையுமே நாம் overthink செய்கிறோமோ? என்று எண்ணத் தோன்றியது ! ஏனென்கிறீர்களா ?

Hi-tech ; fast movements கொண்ட CocoMelon போன்ற புது யுக  கார்ட்டூன் வீடியோக்களெல்லாம், சிறார்களின் வளர்ச்சிக் குறைபாட்டோடு சம்பந்தப்பட்டிருக்கின்றன ; நார்மலான துரிதத்தில் பிள்ளைகளுக்குப் பேச்சு வராது போகக் காரணமாகி நிற்கின்றன என்ற சர்ச்சை உலகெங்கும் ஓடி வருகிறது ! So “ஒரு ஊரிலே ஒரு காக்கா இருந்துச்சாம். அது பாட்டிகிட்டே வடை திருடிச்சாம்” என்று இன்றளவும் குட்டீஸ்களுக்கு  கதை சொல்வதில் சிக்கல்களில்லை  ! And பாட்டி கதை சொல்வதாலேயே நாம் பழமையில் ஊறிப் போனதாய் கொள்ள இயலாதே - becos -

இது மாற்றங்களின் யுகம் என்பதற்காக - ”13.0843’‘N, 80.2705.E இலக்கிலே ஒரு அஸடிராக்டா இண்டிகா மேலே ஒரு கார்வஸ் இருந்துச்சாம்! அதுகிட்டேயிருந்த சப்வே பர்கரை ஒரு வுல்பெஸ் உல்பெஸ் ஆட்டையைப் போடப் பார்த்துச்சாம்!” என்று நவீனங்களுடன் யாரும் கதை சொல்லப் போவதில்லியே?!

P.S :

13.0843’‘N, 80.2705.E : சென்னை இருக்கும் இலக்கின் GPS co-ordinates !

"அஸடிராக்டா இண்டிகா"  : வேப்ப மரத்தின் விஞ்ஞானப் பெயர் !

கார்வஸ்  : காக்காயின் விஞ்ஞானப் பெயர் !

உல்பெஸ் உல்பெஸ் : நரியின் விஞ்ஞானப் பெயர் !

So ஒரு வால் நீட்டும் குரங்கை – அதன் intended target audience-ன் பார்வைக் கோணங்களிலிருந்து பார்த்து விட்டுப் போனால் லயோலா மாணாக்கரைத் தொந்தரவு செய்திடத் தேவைகளின்றிப் போகுமே?! ரைட்டு – ஒரு சர்வே எடுக்கவே செய்கிறோம் என்றே வைத்துக் கொண்டு ; அதன் முடிவில் “Manga தான் இன்றைய தலைமுறையின் தேடல்” என்ற பதில் கிட்டுகிறதென்றும் வைத்துக் கொள்வோமே – what next ? நம்மால் வாசிக்க முடியாத அந்தக் கதை பாணிகளை தடாலடியாய் வெளியிட்டு – எங்கே? எவ்விதம் சந்தைப்படுத்த இயலும்? என்ற கேள்வி தொக்கி நிற்குமன்றோ? “நாம படிக்கிறோமோ – இல்லியோ, நம்ம வீட்டு பிள்ளைங்களை இதுக்குள்ளாற இறக்கிவிட்டே தீரணும்! ஆகையால் ஆளுக்கு 2 சந்தா கட்டணும் மக்கா!” என்று நான் அறிவித்தால் - மூத்திரச் சந்தே எனது நிரந்தர ஜாகையாகிடாதா?

கபிஷ் – குட்டிகளுக்கு! நமது நோஸ்டால்ஜியா பிரியர்களுக்குமே அது லயித்திடும் பட்சத்தில் சிறப்பு! Let's keep it simple as that please ! And புரிகிறது - முன்செல்லும் பாதையில் அடுத்த தலைமுறைக்கு இன்னமும் சிறப்பான கதைகளை ஊட்டிட வேண்டியதன் அவசியமும், முக்கியத்துவமும் புரிகிறது ! But கபிஷின் வருகையால் அந்தத் தேடல் ஓய்ந்திடப் போவதும் கிடையாது, வீரியம் குறைந்திடப் போவதும் கிடையாது என்பதை தைரியமாய் நம்பிடலாம் ! இதோ போன வாரம் கூட, வால்ட் டிஸ்னியின் கதைகளை தமிழுக்கு கொணர முடியுமாவென்று முயற்சித்து முரட்டு பல்பு வாங்கியிருக்கிறேன் ! அதற்காக இந்த விக்ரமாதித்தன் ஓய்ந்து மூலையில் குந்திடப் போவதில்லை ; இவனது தேடல்கள் தொடர்கதையாகவே இருந்திடும் - எந்தவொரு சூழலிலுமே !!

ரைட்டு, கபிஷுக்கு வால் நீளுமோ - இல்லையோ; இந்தப் பதிவின் நீளம் செமத்தியாய் நீண்டு விட்டது! So நான் கிளம்பும் முன்பாக இதோ – இம்மாதத்து V காமிக்ஸ் update folks : 

ஏஜெண்ட் ராபினின் சாகஸப் பயணம் தொடர்கிறது – இம்முறையுமே அட்டகாசமான சித்திரங்களுடன் !! And சின்னதொரு நினைவூட்டல் ப்ளீஸ் : இது V காமிக்ஸின் அடுத்த அரையாண்டுச் சந்தாவின் இதழ் ! So அதற்கான தொகையினை அனுப்பியாச்சா? என்று ஒருவாட்டி சரிபார்த்துக் கொள்ளுங்களேன் – ப்ளீஸ்?!


Before I sign out - ஈரோட்டில் காத்துள்ள நமது லயன் 40 கொண்டாட்டம் சார்ந்த news !! குடும்ப சகிதம் ஆஜராகிடவுள்ள நண்பர்களுக்கும், இந்த வருடம் தங்களது நாற்பதாவது பிறந்த நாட்களை கொண்டாடிடும் நண்பர்களுக்கும், தங்கிட ஏற்பாடுகள் நடந்தேறி வருகின்றன ! அது ஈரோட்டுப் புத்தக விழா தருணமும் கூட என்பதால் இப்போதே அங்கே ரூம்கள் கிடைப்பது குதிரைக்கொம்பாய் இருந்து வருகிறது ! So ஏற்கனவே அறிவித்தது போல, ஜூன் 30-ல் நாம் ஏற்பாடு செய்திடவுள்ள புக்கிங்கள் நிறைவு பெறுகின்றன ! 

அப்புறமாய் நமது லயன் சார்ந்த நினைவுகளை, நேரில் வர இயலா நண்பர்கள் பகிர்ந்திடும் testimonials கிட்டத் துவங்கியுள்ளன ! இன்னமும் கணிசமான அவகாசமுள்ளதே என்று எண்ணிடாது, உங்களின் வீடியோக்களை ஜல்தியாய் அனுப்பிட்டால், அவற்றை எடிட் செய்திடவுள்ள நண்பர்களின் பணி சற்றே சுலபமாகிடும் ! Please guys - let's show some speed !! 

அப்புறம் காமிக்-கான் பாணியில் நாமுமே ஒரு Cosplay நடத்தினாலென்ன ? இயன்றோர், பிடித்தமான காமிக்ஸ் நாயக / நாயகியரின் வேஷங்களில் ஆஜராகிடட்டுமே ? என்று நண்பர்களில் சிலர் suggestion தந்திருந்தனர் ! ஒரு ஜீன்ஸையும், டி-ஷர்ட்டையும் போட்டுக்கினு "ஞான் லார்கோவாக்கும் !!" என்று சொல்லாத வரைக்கும் Cosplay ஓ.கே. தானென்றுபட்டது !! So அதனில் ஆர்வம் உள்ள நண்பர்கள் இருப்பின் - most welcome !!

Bye all! See you around! Have a cool Sunday! நாம் உலக சேம்பியன்கள் என்ற குஷியோடு கண்ணயரப் போகிறேன் ! 😍😍😍😍😍😍😍😍

P.S : திங்களன்று புக்ஸ் டெஸ்பாட்ச் இருந்திடும் folks ! 

Saturday, June 22, 2024

ஒரு குட்டிப் புயல் !!

 நண்பர்களே,

வணக்கம். கொஞ்ச நாட்களுக்கு முன்வரையிலுமே சனிக்கிழமையானால் ”எதைப் பற்றி எழுதுவது?” என்ற கேள்வியோடு மோவாயைத் தடவிக் கொண்டிருப்பது வாடிக்கை! ஆனால் என்ன மாயமோ தெரியலை - சமீப வாரங்களாகவே ”எதையெல்லாம் இப்போ எழுதுறது? எதையெல்லாம் அப்பாலிக்காவுக்கா ஒத்தி வைப்பது?” என்ற வினா மாத்திரமே முன்நின்று வருகிறது! இதோ- இந்த வாரத்து மெயின் மேட்டர் கூட ஆயிரமாவது பதிவிலேயே வந்திருக்க வேண்டியது; but ஏகமான அறிவிப்புகளோடு இதுவும் சேர்ந்து கரைந்திட வேணாமே என்று ஒத்திப் போட்டேன்! So ஆஞ்சநேயரின் வால் போல் நீண்டு வரும் அறிவிப்புகளின் லேட்டஸ்ட் அத்தியாயம் என்னவென்று பார்த்துப்புடலாமுங்களா?

அட அது என்ன - குருநாதருக்கு மட்டும் தான் வால் நீட்டிடும் ஆற்றலெல்லாம் இருக்க முடியுமா? ஒரு க்யூட்டான சிஷ்யப்புள்ளைக்குமே அந்த வரம் வாய்க்க வாய்ப்பிராதா? ”இன்னாங்கடா டேய்... நல்ல நாளைக்கே மண்டையன் குழப்புவான் - இன்னிக்கு ரூம் போட்டுக் குழப்புறானே?” என்று தலைக்குள் கேள்வியா? விஷயம் வேறொன்றுமில்லை guys - ஆஞ்சநேயர் பாணியில் வால் நீட்டிடும் ஆற்றல் கொண்ட நமது பால்ய நண்பன் கபிஷ் விரைவில் நம்மிடையே மீள்வருகை செய்திட உள்ளான்! முத்து காமிக்ஸில் filler pages-களாக துவக்கத்தில் தலைகாட்டி; பின்நாட்களில் முத்து காமிக்ஸ் வாரமலரில் ரெகுலராகி; அதன் பின்பாய் பூந்தளிரில் உலா வந்த இந்த சுட்டிப் புயல் நமது புத்தக விழாக்களில் சிறாருக்கான வெளியீட்டு வரிசையில் இணைந்திடவுள்ளான்! நம் மத்தியில் கபிஷ் popular என்பது எனக்குத் தெரியும் தான் - ஆனால் மந்தித் தம்பிக்கு கேரளாவில் ; மலையாள காமிக்ஸ் ரசிகர்களின் மத்தியில் ஒரு tremendous வரவேற்பு இருப்பதை சமீபத்தில் தான் தெரிந்து கொள்ள முடிந்தது - அங்கே கபிஷின் மீள்வருகை செம தலைப்புச் செய்திகளாகியதைப் பார்த்த போது!

பைக்கோ க்ளாஸிக்ஸ் என்ற பெயரில் மலையாளத்தில் காமிக்ஸ் வெளியிட்டு வரும் பாரம்பரியமான பதிப்பகத்தினர் கபிஷுக்கென் exclusive ஆகவொரு இதழை வெளியிட்டிருந்தது மாத்திரமன்றி, பிரதான செய்தித்தாள்கள் அனைத்திலும் அதுவொரு முக்கிய செய்தியாகிடச் செய்திருந்தனர். மலையாளத்தில் மட்டுமன்றி, இங்கிலீஷ் பேப்பர்களிலும் நியூஸ் றெக்கை கட்டிட, நம்ம ஆந்தை விழிகளிலும் அது பட்டிருந்தது ! 

கபிஷ், ராமு-சோமு; காலியா; இன்ஸ்பெக்டர் கருடா இத்யாதி... இத்யாதி என ஒரு கணிசமான எண்ணிக்கையிலான தேசீயப் படைப்புகள் - 1970-களின் மத்தியிலிருந்து, மும்பையில் அமர் சித்ர கதா - டிங்கிள் போன்ற அற்புதங்களின் பின்னணியிலிருந்த திரு.ஆனந்த் பை அவர்களின் கைவண்ணத்தில் உருவாயின ! “அங்கிள் பை” என்று வாஞ்சையாய் அழைக்கப்பட்டவர், இந்த படைப்புகளை திறமையான உள்ளூர் ஓவியர்களைக் கொண்டு உருவாக்கியது மட்டுமல்லாது, அவற்றைப் பிற மொழி காமிக்ஸ் பதிப்பகங்களுக்கு சந்தைப்படுத்திடும் பொருட்டு Rang Rekha Features என்றதொரு நிறுவனத்தையும் மும்பையில் நிறுவியிருந்தார்.

சீனியர் எடிட்டருக்கு அமர் சித்ர கதா வெளியிட்டு வந்த IBH நிறுவனத்தோடு அந்நாட்களில் நல்லதொரு பரிச்சயம் இருந்ததால் - அங்கிருந்து கிளைவிட்டிருந்த Rang Rekha Features நிறுவனத்தோடு கரம் கோர்ப்பது வெகு சுலபமாக அமைந்து போனது! அப்போதெல்லாம் முத்து காமிக்ஸ் ரெகுலராக வெளிவந்து கொண்டிருக்க, வாயு வேக வாசு ; புத்தக பிரியன் பாபு ; சூரப்புலி சுந்தர் ; கபிஷ், கருடா, ராமு-சோமு போன்ற தொடர்கள், சுவையான கேக் மீதான ‘பளிச்‘ icing ஆகிப் போயின! சிம்பிளான கதைகள் ; ஈர்க்கும் நாயகர்கள் ; எளிதான சித்திர பாணிகள் என்ற template நம் அனைவருக்குமே பிடித்துப் போனதில் வியப்பில்லை ! And முத்து காமிக்ஸ் வாரமலரில் இரும்புக்கை மாயாவிக்கும், அதிமேதை அப்புவுக்கும் அடுத்தபடியாக செம popular ஆக இருந்த கோஷ்டி அனைவருமே மும்பைக்கர்ஸ் என்பதில் no doubts !!எக்கச்சக்கமான நாட்களில் மும்பையிலிருந்து வரும் கபிஷ் & கருடா கதைகள் அடங்கிய பார்சல்களை நானே உடைத்து, சகலத்தையும் படித்த கையோடு தமிழாக்கம் செய்யவும் அப்போதே முயற்சித்திருக்கிறேன்! So என்னைப் பொறுத்தவரையிலும் கபிஷ் ஒரு நிஜமான பால்ய நண்பன்!

ஆனால் ‘90களில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்ததைத் தொடர்ந்து Rang Rekha Features நிறுவனமானது கடை மூடும் நிலை நேர்ந்தது! அந்நேரம் நாமும் வேறு தடங்களில் பயணித்துக் கொண்டிருந்ததால் அவர்களோடு பெருசாய் touch-ல் இருந்திருக்கவில்லை ! And ‘90-களின் பிற்பாதிகளிலும், 2000-ன் முழுமைக்கும் நாமும் நொண்டியடிக்கவே செய்தோம் எனும் போது கபிஷ் பற்றிய சிந்தனைகள் பெருசாய் தலைதூக்கியிருக்கவேயில்லை ! 2012...நமது இரண்டாவது இன்னி்ங்ஸ் என்று வண்டி மறுக்கா ஸ்டார்ட் ஆன சமயத்திலோ புதுசு புதுசுாய் தேசங்கள்தோறும் பதிப்பகங்களைத் தட்டியெழுப்பி புதுசு புதுசாய் கதைகளை வாங்கும் மும்முரத்தில் கபிஷ் சுத்தமாய் நமது ரேடாரிலேயே இடம்பிடித்திருக்கவில்லை! So 2023 ஆகஸ்டில் “மலையாளத்தில் கபிஷ்” ஏற்படுத்தியிருந்த தாக்கத்தைப் பார்த்த சமயத்தில் ‘ஆஹா... இது இளம் / புது வாசகர்களுக்கு சுகப்படக்கூடியதொரு தொடராச்சே! சின்னச் சின்ன கதைகளென்றாலும், இவை நம் இல்லத்துக் குட்டீஸ்களுக்கு மாத்திரமன்றி, XL சைஸ் பெர்முடாக்களைப் போட்டுத் திரியும் மனசளவிலான குட்டீஸ்களுக்கும் பிடித்திடக்கூடுமே?!” என்று தோன்றியது!

அந்த நியூஸ் பேப்பர் செய்தியை முழுசாய்ப் படித்த போது தான் தெரிய வந்தது – திரு.ஆனந்த் பை தனது காமிக்ஸ் படைப்புகளின் உரிமைகளை ஆந்திராவிலுள்ள ஒரு அனிமேஷன் + ஊடகக் குழுமத்திடம் விற்பனை செய்து விட்டார் என்பது! சரி ரைட்டு, மும்பையில் கதவைத் தட்டுவதற்குப் பதிலாக இனி ஹைதராபாத்தில் தட்டினால் கபிஷ் & கோவை தமிழ் பரையச் செய்து விடலாமென்று பட்டது! தொடர்ந்த நாட்களில் ஹைதெராபாத்துக்கு ஈ-மெயில்கள் போட்டுத் தாக்கினேன் ! ஊஹும்... லக் இல்லை! அவர்களது ஃபோன் நம்பரைத் தேடிப் பிடித்து மாட்லாடுவோம் என்று நினைத்தால், சான்ஸே இல்லை – இணையத்தில் டெலிபோன் நம்பரைப் பிடிக்கவே முடியவில்லை! இதென்னடா முழியாங்கண்ணனுக்கு வந்த சோதனை – என்றபடியே ஹைதராபாத்தில் தெரிஞ்சவங்க யாராச்சும் இருக்காங்களா? என்று யோசிக்க ஆரம்பித்தேன்! அசாருதீனையும், அம்பத்தி ராயுடுவையும் எனக்குத் தெரியும் தான் – ஆனால் அவர்களுக்கு என்னைத் தெரியாதென்பதால் கொஞ்ச நாட்களுக்கு கபிஷை அந்தரத்தில் விட்டுவிட்டேன்! நமக்குத் தான் மூக்குக்கு முன்னே ஒரு புது வேலை முளைக்கும் நொடியில், முந்தின மணி வரையிலும் செய்து வந்தது மறந்து போயிடுமே... So கொஞ்ச காலத்துக்கு சுத்தமாய் மறந்தே போயிருந்தேன்!

அகஸ்மாத்தாய் ஒரு நாள் நமது வாசகர் குடும்பத்தின் ரொம்பவே பிரியமானதொரு அங்கத்தினர் சமீபத்தில் திருமணமாகி ஹைதராபாத்தில் செட்டிலாகியிருப்பது நினைவுக்கு வந்தது! And அவரது கணவர் கூட மீடியாவில் இருப்பவரே ! ரைட்டு... சஞ்சீவி மலையை ஏந்தி வரும் பொறுப்பை அவர்களிடம் ஒப்படைக்கலாமென்ற எண்ணத்தில் ஃபோன் அடிச்சு “இன்ன மேரி...இன்ன மேரி சுவத்திலே முட்டிகினு கீரேன் இக்கட! நீங்க அக்கட கொஞ்சம் ட்ரை பண்ணிப் பார்த்து – கபிஷ் உரிமைகள் தொடர்பாக யாருகிட்ட பேச வேண்டியிருக்கும்னு மட்டும் locate செய்து தந்தால், மிச்சத்தை நான் பார்த்துக்கிறேன்!“ என்று சொல்லி வைத்தேன்! உற்சாகமாய் அவர்களும் முயன்றார்கள் – and தனது மீடியா தொடர்புகளைப் பயன்படுத்தி நிறுவனத்தோடு அவரது கணவர் பேசியும் விட்டார் ! ஆனால் இந்த உரிமைகள் சார்ந்த சமாச்சாரமெல்லாமே குழுமத் தலைவரின் நேரடி கவனத்தில் மாத்திரமே அரங்கேறிடும் & முதலாளி அமெரிக்கா போயிருக்கிறார்; திரும்ப நாளாகும்! என்ற பதிலே கிட்டியது! ”சரி ரைட்டு... பார்த்துக்கலாமென்று” நான் மறுக்கா எனது பணிகளுக்குள் மூழ்கிப் போனேன் ! ஹைதராபாத்திலிருந்துமே நிறுவனத்தின் தரப்பிலிருந்து மேற்கொண்டு feedback எதுவும் கிட்டியிருக்கவில்லை! ”சரி... ரைட்டு... சந்தர்ப்பம் அமையும் போது பார்த்துக்கலாம்!” என்றபடியே மனசை எல்லோரும் தேற்றிக் கொண்டோம்!

நாட்கள் ஓடின... நடுவே புத்தக விழாவினில் வழக்கம் போல நண்பர்கள் சந்திப்பு அரங்கேறியது ! அப்போது நண்பரொருவர் “கபிஷ் மறுக்கா போடலாமே? மலையாளத்திலெல்லாம் போடறாங்க பார்த்தீங்களா?” என்று வினவினார். ”போடலாம் தான் சார்... ஆனால் நடைமுறையில் சில communication சிக்கல்கள் உள்ளன” என்று நடந்த கதையைச் சொன்னேன்! “நான் ஏதாச்சும் முயற்சித்துப் பார்க்கவா ?” என்று நண்பர் கேட்ட போது, “வந்தால் மாங்காய்... போனா கல்லு தானே?!” என்ற நினைப்பில் “தாராளமாய் முயற்சியுங்கள் சார்!” என்றேன்! இது பேசி கிட்டத்தட்ட ஏழு மாதங்களிலிருக்கும். எந்தவித முன்னேற்றங்களும் இருந்திருக்கவில்லை! நடு நடுவே அவரிடம் வாட்சப்பில் பேசும் போது இது பற்றி ஒருவருக்கொருவர் நினைவூட்டிக் கொள்வோம்! வழக்கமான மார்க்கங்களில் முயற்சித்து முன்னேற்றம் காண முடியாத நிலையில் நமது நண்பர் கேரளாவில் கபிஷை வெளியிடும் நிறுவனத்தின் எடிட்டரிடமே நம் சார்பில் கோரிக்கையினை இறுதி அஸ்திரமாய் சமர்ப்பித்திருக்கிறார்! அவரும் தட்ட முடியாமல், “சந்தர்ப்பம் அமையும் போது ஹைதராபாத்தில் பேசி விட்டு உங்களுக்குச் சொல்கிறேனே!” என்று பதிலளித்திருக்கிறார்! நாட்களும், வாரங்களும், மாதங்களும் மறுக்கா ஓடிய நிலையில், ஒரு அழகான நாளில் நமது நண்பரின் தொடர் நச்சரிப்பு தாங்காதவராய், ஹைதராபாத் குழுமத் தலைவரோடு தொடர்பு கொள்ளத் தேவையான தகவல்களைப் பகிர்ந்திருக்கிறார் - மலையாள கபிஷின் எடிட்டர் அவர்கள் !

”கண்டேன் சீதையை!” என்றபடியே தகவலை என்னிடம் நண்பர் pass on செய்திட, அடுத்த அரை மணி நேரத்திற்குள் கபிஷ் தொடர்பான நமது கோரிக்கையை முறைப்படிச் சமர்ப்பித்திருந்தேன்! மலையாளத்துக்கு அடுத்தபடியாகத் தமிழில் வெளியிடும் ஆர்வம் தெரிவித்து ஒரு பதிப்பகம் முனைப்புக் காட்டியிருப்பதில் ரொம்பவே மகிழ்ச்சி என்றவர் நமது முன்மொழிவை study பண்ணி விட்டுச் சொல்கிறேன் என்றும் அன்போடு பதிலளித்தார்! மீடியாத்துறையில்; அனிமேஷன் துறையில்; அரசியலில்; தொழிலதிபர்கள் வட்டத்தில் அவர் எத்தனை உயரிய இடத்திலிருக்கிறார் என்பதை கூகுளின் புண்ணியத்தில் தெரிந்து கொண்டிருந்தேன் ; மனுஷன் ஆந்திராவின் முக்கியஸ்தர்களின் லிஸ்ட்டில் ரொம்பவே உயரத்தில் இருப்பவர் என்பது புரிந்தது ! ”ஆஹா... தேசத்தின் முதலிரண்டு இடங்களில் இருப்பவர்களோடே கைகுலுக்கும் அன்னியோன்யத்தில் இருப்பவராச்சே?! இவரது அன்றாடப் பணிச்சுமைகளின் மத்தியில், நம்ம பொரிகடலைக் கோரிக்கைகளைப் பரிசீலிக்க அவகாசம் எங்கே கிடைக்கப் போகிறது?” என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டேன்! ஆனால் அற்புதமான பண்பாளர் – சொன்னது போலவே மறுநாளே அவராகவே அழைத்து மேற்கொண்டு கொஞ்சம் தகவல்கள் கேட்டுப் பெற்று தங்களால் என்ன முடியும் – முடியாது என்பதைத் தெளிவாக்கினார். தனது சம்மதத்தை போனிலேயே என்னிடம் தெரிவித்து விட்டு, மேற்கொண்டு ஆக வேண்டிய பணிகளைப் பார்த்துக் கொள்ள தனது உதவியாளரை கோர்த்து விட்டார் ! So மாதங்களாய் ஜவ்விழுத்த முயற்சிகள், உரியவரிடம் பேசிய சற்றைக்கெல்லாம் ஓ.கே.வாகிப் போயிருந்தன !! தொடர்ந்த நாட்களில் அவரது உதவியாளருடன் follow up செய்து ”புராஜெக்ட் கபிஷ்”க்கு ஒரு பிள்ளையார் சுழி போடச் சாத்தியமான நொடியில், விடாமுயற்சிக்காரரான நம்ம நண்பருக்கும், இதன் பொருட்டு நமக்காக நேரம் செலவிட்ட அன்பான ஹைதராபாத் தம்பதியினருக்கும்,  மகிழ்ச்சியோடு தகவல் தெரிவித்தேன்! செம உற்சாகம் அனைவருக்கும் – ஒரு பால்ய நண்பனை மறுக்கா சந்தித்திடும் வாய்ப்பு புலர உள்ளதை எண்ணி! So ஒரு வால் நீட்டும் மந்தியை தமிழ் பேசச் செய்திட அவசியமாகிய கூத்துகளுக்குப் பின்பாக, அதனை அழகாய் நடைமுறைப்படுத்திட வேண்டிய பொறுப்பு இப்போது நம்மிடம்! ‘தம்‘ கட்டிப் பணி செய்தால் ஈரோடு புத்தக விழாவின் போது கபிஷ் ஸ்பெஷல் – 1, ராமு-சோமு etc... சகிதம் தயாராகிட வேண்டும். But இந்த நொடியில் அதனை உறுதிப்படுத்த ‘தம்‘ லேது – டின்டினின் தயாரிப்புப் பணிகள் இடையே காத்திருப்பதால்! So இயன்றமட்டுக்கு முயற்சிப்போம் என்பதே இந்த நொடியின் நிலவரம்!

எல்லாம் ரைட்டு,, அந்த விடாப்பிடி நண்பர் யாரென்கிறீர்களா? அவரெல்லாம் ஆற்று வெள்ளத்துக்குள்ளேயே சாகஸம் செய்து பழகிய ராஜா! வெயிலிலும் மழையிலும் நம்மோடே பயணித்து வருபவர்! அவ்வப்போது ”இதைச் செய்யலாமே; அதைச் செய்யலாமே!” என்று suggestions தந்திடுபவர்! இதோ – ஒரு வாரமாய் ஓடிக் கொண்டிருக்கும் நமது காமிக்ஸ் வாட்சப் community கூட அவரது பரிந்துரைகளில் ஒன்றே! ஏற்கனவே கார்த்திக் சோமலிங்கா இதுபற்றி முந்தைய பதிவு ஒன்றில் பின்னுாட்டமிட்டிருக்க, அதனை நடைமுறைப்படுத்தத் தேவையான சில யோசனைகளைத் தந்தவர் இந்த ரபீக் ராஜாவே தான்! நன்றிகள் பல சார்; கபிஷுக்கு மட்டுமல்ல!! 

நம்மைச் சுற்றிலும் அன்பெனும் அரண் அமைத்திட இவரைப் போலவே எண்ணற்ற நண்பர்கள் இன்றளவும் தொடர்வதாலேயே, இந்தப் பயணம் இன்னமும் வீச்சோடு தொடர்கின்றது ! புனித மனிடோவுக்கு நமது நன்றிகள் - ஒற்றைக்குடும்பமாய் கரம் கோர்க்கும் எண்ணம் கொண்ட நண்பர்களை வாசகர்களாக்கித் தந்தமைக்கு !! 

சரி, ரைட்டு – கூப்பிடு தொலைவில் நமது ஆண்டு மலர் மாதம் காத்திருக்க அவை சார்ந்த previews-ம் முக்கியமாச்சே?! So – இதோ நமது தானைத் தலைவர் ஸ்பைடரின் மெகா சைஸ் வண்ண இதழின் அட்டைப்பட முதல் பார்வை! 

அட்டைப்பட டிசைன் நமது அமெரிக்க ஓவியரிடமிருந்து வந்திருக்க, அதனை மெருகூட்டுவது ; பின்னட்டை டிசைனிங் என நமது கோகிலா பார்த்துக் கொண்டிருக்கிறார் ! கை ; கழுத்து ; காத்து ; மூக்கு - என்று ஒவ்வொரு அவயமும் அளவில் ஒழுங்கா கீதா ? என்று இயன்ற மட்டிற்குப் பார்த்திருக்கிறேன் தான் ; but நம்ம தலைவரின் டிசைன் எனும் போது ஏகமாய் அபிப்பிராயங்கள் வராது போகாதென்பது உறுதி ! ஏதோ, பாத்து பண்ணுங்க மக்கா !! 

Before I sign out, இதோ, நம்ம ஒல்லியாரின் ஸ்பெஷல் ஆல்பத்திலிருந்து : 


And நமது ஈரோட்டில் லயன் 40 தொடர்பாக ஓரிரு கோரிக்கைஸ் folks :

1 .பயண ஏற்பாடுகள் லயனோடு நாற்பதாவது அண்டினைக் கொண்டாடிடும் நண்பர்களுக்கு மட்டுமே guys !! 
*"நேக்கு 30 ஆகுது ; பச்சே ஆகஸ்ட்டில் பொறந்த நாள் கொண்டாடுறேன் - நான் eligible ஆ ?"
*"45 கணக்கில் சேர்த்தியாகுமா ?
என்ற வினவல்ஸ் நம்மாட்கள் சட்டைகளை கிழிக்கச் செய்து வருகின்றன !!

2 .அப்புறம் ரூம் கோரும் குடும்ப சமேத விருந்தினர் கொஞ்சமே கொஞ்சமாய் நேரமெடுத்துக் கொண்டு, உங்களின் பெயர், ஊர் ; செல் நம்பர் போன்ற தகவல்களை மெயிலில் டைப்படித்து அனுப்புங்கள் ப்ளீஸ் ! வெறுமனே போட்டோக்களை இணைத்துள்ளீர்கள் - பெயர்கள் கூட இல்லாது & நம்மாட்கள் பாயைப் பிறாண்டாத குறை தான் !

3 .பிளாக்கில் நாம் சூப்பெர்மென் ; ஜேம்ஸ் பாண்ட் என்றெல்லாம் உலா வரலாமுங்கோ ; ஆனால் ரயில் டிக்கெட்களுக்கோ ; ரூம் புக்கிங்களுக்கோ உங்களின் blog பெயர்கள் உதவிடாதே ? "இது யாரு சார் ??" என்றபடிக்கே பரிதாபமாய் நம்மவர்கள் என்னிடம் வந்து நிற்கிறார்கள் !!

4 .ரூம் புக்கிங் செய்தல் இம்மாத இறுதிக்கு முன்பாய் வருகைகளை உறுதி செய்திடும் குடும்பத்தினருக்கு மட்டுமே சாத்தியமாகிடும் ப்ளீஸ் ! So சற்றே சடுதியாக மெயிலை தட்டி விடலாமே ப்ளீஸ் ?

5 .அப்புறம் அந்த ஈ-மெயில் ID மறுக்கா உங்கள் பார்வைகளுக்கு : lion40erode@gmail.com

Thanks folks in advance !!

மீண்டும் சந்திப்போம் all ; have a beautiful Sunday ! Bye for now !!

Saturday, June 15, 2024

ஈரோட்டில் லயன் !!

 நண்பர்களே, 

வணக்கம். 2 வாரங்களுக்கு முன்பாகக் கேட்டிருந்த 2 கேள்விகளுக்கு நீங்கள் தந்திருந்த விடைகள் 2 பதிவுகளுக்கான content கொண்டிருந்தன! So என்ன எழுதுவதென்று முழிக்கும் அவசியம் இந்த வாரத்துக்கும், அடுத்த வாரத்துக்கும் நஹி!

லயனின் 40-வது ஆண்டு இது என்பதை நாமறிவோம்! இந்த மைல்கல் வருஷத்து வாசகச் சந்திப்புக்கு ஈரோடு சுகப்படுமா? சேலமா? என்று வினவியிருந்தோம்! உங்கள் தேர்வுகளுக்கு வோட்டுப் போடவும் ஏற்பாடாகியிருந்தது! சும்மா சொல்லப்படாது - செம tough போட்டியே நிலவியது. ஆனால் துவக்கம் முதலாகவே ஈரோடு சின்னதொரு முன்னணியோடே தொடர்ந்திட, அதனை இறுதி வரை தக்க வைத்து கெலித்து விட்டது! Truth to tell, சந்திப்பு நவம்பரில், சேலத்தில் அமைந்திடும் பட்சத்தில் - மூச்சு விடக் கொஞ்சம் அவகாசம் கிடைத்துக் கொள்ளுமே என்ற எண்ணம் என்னுள் இருந்தது தான்! ஆண்டுமலருக்கான 3 கலர் புக்ஸ்; அடுத்ததாய் டின்டின் டபுள் ஆல்பம்ஸ்; அதைத் தொடர்ந்து 2025 அட்டவணைக்கான இறுதிக்கட்ட பணிகள், Electric '80s தயாரிப்பு - என கழுத்து வரைக்கும் பணிகள் போட்டுத் தாக்கி வருவதால் கிடைக்கக் கூடிய gap கார்சனின் மனக்கண்ணிலான சுக்கா ரோஸ்ட் போலத் தென்பட்டதை மறுக்க மாட்டேன்! ஆனால் ‘ஆகஸ்டில் ஈரோடு‘ என்பது நம்மில் ஒரு template ஆகப் பதிவாகி விட்டிருக்க, ‘ரைட்டு... நாலு பல்டிகளைக் கூடுதலாய் போட்டால் ஆச்சு!‘ என்றபடிக்கே ரெடியாகி விட்டேன்! என்னையும் உங்களையும் தாண்டி, ஈரோட்டை செம ஆவலாய் எதிர்நோக்கியிருப்பவர் இன்னொருவருமே உண்டு! And - அது வேறு யாருமல்ல - நமது சீனியர் எடிட்டர் தான்! பண்டிகையை எதிர்நோக்கிக் காத்திருக்கும் பாலகனைப் போல ஈரோட்டின் திக்கில் இப்போதே வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கிறார்! So தேரிழுக்கத் துவங்கலாமா folks?

ஈரோட்டில் புத்தக விழா துவங்கிடுவது ஆகஸ்ட் 2ம் தேதி - வெள்ளியன்று! And நாம் வழக்கமாய் அந்த முதல் வாரத்தின் சனியன்று சந்திப்பதே வாடிக்கை! But இந்தவாட்டி சின்னதொரு மாற்றம் செய்து, நமது சந்திப்பை அந்த ஞாயிறுக்குக் கொண்டு செல்ல நினைக்கிறேன் - கீழ்க்கண்ட காணங்களுக்காக:

1. ஆகஸ்ட் 3, சனிக்கிழமை - ஆடி 18-ம் பெருக்கு! ஈரோட்டுப் பகுதிகளில் அது விமரிசையாகக் கொண்டாடப்படுவதை நிரம்ப தடவைகள் பார்த்திருக்கிறேன்! So வீட்டாரோடு நேரம் செலவிட அவசியமாகிடக் கூடிய அதே தினத்தில் நமது காமிக்ஸ் லூட்டிகளை வைப்பது சுகப்படுமா? என்ற சின்னச் சந்தேகம் எனக்குள்!

2. இந்த முறை நமது லயன் டீமையும் ஈரோட்டுக்கு அழைத்து வரும் எண்ணமுள்ளது உள்ளுக்குள்! நீங்கள் மாதா மாதம் பார்த்து வரும் குவியலான புக்ஸின் பின்னே இவர்களது உழைப்பும் விரவிக் கிடக்கின்றதெனும் போது, மாக்கானாட்டம் நான் மட்டுமே ஒளிவட்டத்தை ஆக்கிரமித்துக் கொள்வது உதைக்கிறது! So ஞாயிற்றுக்கிழமைக்கு சந்திப்பை அமைப்பதாயின் அவர்களை அழைத்து வர ஏதுவாக இருக்குமென்று எண்ணினேன்!

3. “காமிக்ஸ் குடும்பம்...” ; ”கமர்கட் குடும்பம்” என்று கணிசமாய்ப் பீற்றித் திரிகிறோம் தான்! ஒரு மைல்கல் ஆண்டினில் அதை நடைமுறையும் படுத்தினால் என்னவென்று தோன்றியது! So இந்த முறை நண்பர்கள் குடும்ப சகிதம் வருகை தந்திட முடிந்தால் ரொம்பவே மகிழ்வோம்! And அதற்கு ஞாயிறு தானே வசதிப்படும்?

So ஆகஸ்ட் 4ம் தேதி - ஞாயிற்றுக்கிழமைக்கு காலை 10 to மாலை 4.30 வரையில்ஈரோட்டில் லயன் 40” அழகாய் அரங்கேறிட புனித மனிடோவிடம் ஆசிகள் கோரிடலாமா folks?

ரைட்டு... தேதியும், கிழமையும் தீர்மானமாகி விட்டதெனில் எஞ்சியிருப்பது - இடம் எது? என்ற கேள்வி தானே? ஈரோட்டுப் புத்தக விழா அந்த V.O.C. பார்க் மைதானத்தில் நடந்து கொண்டிருந்த வரையிலும் அதன் வாசலில் இருந்த Le Jardin ஹோட்டலில் சந்தித்து வந்து கொண்டிருந்தோம். ஆனால் சமீப ஆண்டுகளில் புத்தக விழா இடம் பெயர்ந்திருக்க, நாமோ போன வருஷம் பிரம்மாண்டமான Oasis மஹாலில் முத்து காமிக்ஸின் 50-வது ஆண்டு விழாவிற்கென கூடியிருந்தோம்! மதியச் சாப்பாட்டு ஏற்பாடுகளையும் பொறுப்பேற்றிருந்த மஹால்காரர்கள் 200-க்கும் கூடுதலானோர் வருகை தருவோமென்பதை எதிர்பார்த்திருக்கவில்லை; So லஞ்ச் ரொம்பவே நெளியப் பண்ணியிருந்தது! ஆனால் இடமும், வசதிகளும் அசாத்திய சொகுசு என்பதை மறுப்பதற்கில்லை! கட்டணங்களும் அதற்கேற்ப செம கூடுதலே என்ற போதிலும், தூக்கி வளர்த்த ஒரு பிள்ளைக்கு ஆபட்ஸ்பரியில் கண்ணாலத்த நடத்திப்புட்டு, அடுத்த புள்ளைக்கு முருகன் கோவிலில் வைத்துத் திருமணத்தை நடத்த மனசு கேட்கவில்லை! Moreso இது எனது செல்லப் பிள்ளையான லயனின் moment எனும் போது! So “மேலேயிருப்பவர் பார்த்துக்குவார்” என்ற நம்பிக்கையில் Oasis மஹாலுக்கே thumbs-up தந்திருக்கிறோம்! இம்முறையோ அரங்கத்தை மட்டுமே வாடகைக்கு எடுத்துக் கொண்டு, சாப்பாட்டு ஏற்பாடுகளை நாமே செய்து விட எண்ணியிருக்கிறோம்!

இந்த வரியை எழுதும் போது எனக்கு லஜ்ஜை பிடுங்கித் தின்கிறது – simply becos ஏற்பாடுகளைச் செய்வதில் நமது பங்கு பூஜ்யத்துக்கு மிக மிக அருகில் இருப்பது தான்! தங்கள் வீட்டுக் கல்யாணங்களாய் பாவித்து பேனர் கட்டுவதில் ஆரம்பித்து, ஆடல் – பாடல் நிகழ்ச்சிகளை ரெடி பண்ணுவதிலிருந்து, பந்தி பரிமாறும் வேலை வரைக்கும் சகலத்தையும் இழுத்துப் போட்டுப் பார்த்துக் கொண்டது எல்லாமே நண்பர்கள் குழு தான்! இந்த முறையும் வாய் பார்க்கும் வேலையை மட்டுமே நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க, களத்தில் நண்பர்களே இறங்கிடவுள்ளனர். And இந்த முறை ஆர்வமும், நேரமும் உள்ள நண்பர்கள் விழாவின் ஏற்பாடுகளில் சந்தோஷமாக கலந்து கொள்ளலாம்! ஈரோட்டு விழாவுக்கென பிரத்தியேகமாய் உருவாக்கியுள்ள இந்த ஈ-மெயில் முகவரிக்கு உங்கள் செல் நம்பரோடு ஒரு மெயிலைத் தட்டி விட்டால் – ”டீம் ஈரோட்டில்” ஒரு அங்கமாகிடலாம்! So தேர் இழுக்க, வடம் பிடிக்கச் சாத்தியப்படும் நண்பர்கள் most welcome!

இதோ ஸ்பெஷல் மின்னஞ்சல் முகவரி: lion40erode@gmail.com

ஏற்கனவே சொன்னது போல, குடும்பத்துடன் நண்பர்கள் ஆஜராகிடும் பட்சத்தில் most welcome! And வெளியூர்களிலிருந்து வரும் நண்பர்கள் & families சனி இரவு 7 மணி முதல் ஞாயிறு இரவு 7 மணி வரைக்கும் தங்கிட ரூம் வசதிகள் செய்து தரவிருக்கிறோம்! ஒரே வேண்டுகோள்: குறைந்தபட்சமாய் 2 வாரங்களுக்கு முன்கூட்டியே இது குறித்த தகவல் தந்திட வேண்டும்!

அதே போல – நமது லயனின் இந்த 40-வது ஆண்டினில் – தமது 40-வது பிறந்த நாட்களையும் கொண்டாடிடும் நண்பர்கள் ஈரோட்டுத் திருவிழாவில் நமது ஸ்பெஷல் விருந்தினர்களாக இருந்திடுவர்! அவரவரது ஊர்களிலிருந்து ஈரோடு வந்து போக ரயில் டிக்கெட்ஸ் ; தங்குமிடம் என கம்பேனி பொறுப்பேற்றுக் கொள்ளும்! (வெளிநாட்டிலேர்ந்து யாரும் கையை உசத்திக் காட்டிப்புடாதீங்க சாமீ... கதை கந்தலாகிப் போகும்!) So மேலேயுள்ள அந்தப் பிரத்தியேக ஈ-மெயில் முகவரிக்கு உங்களது ஆதார் அட்டைகளின் நகலோடு, ஒரு மின்னஞ்சல் ப்ளீஸ்! இது மட்டும் இந்த வாரத்திலேயே அவசியமாகிடும் guys – ரயில் டிக்கெட்களை புக் பண்ணிட!

ரைட்டு... அடுத்ததாய் அன்றைய பொழுதின் உங்களது பங்களிப்புகள் பற்றியும் பார்த்துப்புடலாமா?

1. நண்பர்களின் மத்தியில் எக்கச்சக்கமான தனித்திறமைகள் புதையுண்டு கிடப்பதாய் நம்பத்தகுந்த உளவுத்துறை அறிக்கைகள் தெரிவிக்கின்றன! ஆளில்லா டவர்களில் ஏறி, ஆசை தீர சாரீர வளங்களை சரி பார்ப்பதிலிருந்து, டான்ஸ்(!!!) ; மோனோ-ஆக்டிங் ; குறும்படங்கள் தயாரிப்பு என எக்கச்சக்கம் இறைந்து கிடக்கிறதாக CNN-ல் சேதி வந்திருப்பதால் 3 நிமிடங்களுக்கு மிகுந்திடாத மாதிரி எதையேனும் ரெடி பண்ணிடலாம்! ஈரோட்டில் மேடை உங்களுக்காகக் காத்திருக்கும் கலைஞர்களே!!

Again – முன்கூட்டியே தகவல்ஸ் ப்ளீஸ்!

2. தூரத்தில் உள்ள நண்பர்கள் ; தொலைதூர தேசங்களில் உள்ள அன்பர்கள் – விழாவில் கலந்து கொள்ள முடியாது போனாலும், கொண்டாட்டங்களில் பங்கேற்க ஒரு ஏற்பாடு செய்தாலென்னவென்று தோன்றியது! So சின்னதாக ஒரு HD வீடியோ க்ளிப்பில், லயனுடனான உங்களது எண்ண அலைகளைப் பகிர்ந்து  அனுப்பினீர்களேயானால், அவற்றைத் தொகுத்து அன்றைய தினம் ஒரு Audio Visual-ஆகத் திரையிடலாம் folks! முடிந்த மட்டிற்கு ஷார்ப்பாக, நல்ல வெளிச்சத்துடன் (preferably outdoors) எடுத்து அனுப்புங்களேன்!

3. ஈரோட்டுக்கு வருகை தந்திடவுள்ள நண்பர்கள் தங்களது தெளிவான பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோக்களை ஈ-மெயில் செய்திடுங்களேன் ப்ளீஸ்?

4. வழக்கம் போலவே ஒரு காமிக்ஸ் பட்டிமன்றமும் அன்றைக்கு இருந்திடவுள்ளது! And வழக்கம் போலவே நடுவர் சாலமன் பாப்பையாவாக நமது கருணையானந்தம் அங்கிள் செயல்படுவார்! And வழக்கம் போலவே, அந்தத் தகவல் அங்கிளுக்கு இந்தப் பதிவினைப் பார்த்தே தெரிய வருமென்றுமே நினைக்கிறேன் ! பட்டிமன்றத்தின் தலைப்பு வேறெதுவும் இல்லை – நெடுநாள் வாய்க்கா வரப்பு தகராறாய்த் தொடர்ந்திடும் லடாய்க்கு விடை காணும் ஒரு வாய்ப்பு!!

‘தல‘ டெக்ஸ் வில்லரா?

‘தளபதி‘ டைகரா?

- நமது கௌபாய் சாம்ராஜ்யத்தின் சாம்ராட் யார்? –

இரு அணிகளிலும் தலா 4 பேச்சாளர்கள் மேடையேறிடலாம்! And ஒவ்வொருவருக்கும் மூன்று நிமிடங்கள் தரப்படும்! So தர்க்கம் பண்ணத் தயாராகிடும் தங்கங்களே – உங்கள் ஆர்வத்தைத் தெரியப்படுத்தி ஒரு ஈ-மெயில் ப்ளீஸ்!

5. போன வருஷம் போலவே காமிக்ஸ் கிரிக்கெட் லீக்கில்  இந்தாண்டும் அனல் பறக்க மோதிடவுள்ளனர்! ஜுலை 29-ல் அரங்கேறிடவுள்ள போட்டிகளின் பிற்பாடு பட்டி, டிங்கரிங் பார்த்த கையோடு விழாவுக்கு வருகை தந்திடவுள்ள வீரர்கள் அனைவருக்கும் போன வருஷம் போலவே இம்முறையும் மெடல்கள் காத்திருக்கும்! And சுழல் கோப்பையை இம்முறை யார் தட்டிச் செல்லப் போகிறார்களென்றறிய உங்களைப் போலவே நானும் ஆவலாய் காத்திருப்பேன்!

One request வீரர்வாள்ஸ்! விழா நடந்திடவுள்ள ஞாயிறு மாலையில் இன்னொரு மேட்ச் - கீட்ச் என்று திட்டமிட்டிட வேணாமே ப்ளீஸ்!

6. அப்புறம் ஒவ்வொரு ஆண்டின் ஈரோட்டுப் புத்தக விழாவிலும் மரத்தடியில் களைகட்டும் மாலை நேரக் காமிக்ஸ் கும்மியடி செம ஜாலியான அனுபவம்! இப்போதைய புத்தக விழாவில் அதற்கு வசதியில்லை என்பதாலும், விழா முடிந்த கையோடு ஆளாளுக்கு ஊர் திரும்ப வேண்டியிருக்கும் என்பதாலும், அந்த மரத்தடி பஞ்சாயத்தை, நிகழ்ச்சி நிரலிலேயே இணைத்திட எண்ணியுள்ளோம்!

So மதியத்துக்கு மேலாக கேள்வி - பதில் session-ஐ வைத்துக் கொள்ளலாமா folks?

7. அதே போல போன வருஷம் நேரமின்மை காரணமாய் நடத்த முடியாது போன நமது அட்டைப்பட சித்திரக் கண்காட்சியினை இந்த தபா நடத்திடலாமா? “கதை சொல்லும் சித்திரங்கள்” இம்முறை காலை session-ன் முதல் நிகழ்ச்சியாகிடும்! So மறவாது சீக்கிரமே ஆஜராகிடலாமே ப்ளீஸ்!

8. அப்புறம் வருகை தந்திடவுள்ள நண்பர்களுக்கு ஒரு கம்பேனி gift காத்துள்ளது! அது நிச்சயமாய் சரோஜா தேவி பயன்படுத்திய சோப்பு டப்பி ரேஞ்சுக்கு இராதென்று நம்பலாம்!! 

 9. விழா இருக்க ஸ்பெஷல் இல்லாது போகுமா? So போன ஆண்டைப் போல மெகா பட்ஜெட்டில் இதழ்கள் இல்லாவிடினும், அழகான ஸ்பெஷல்ஸ் காத்திருக்கும்! இதோ அதன் முதல் preview!! 


நம்புங்கள் guys - தெறிக்க விடும், செம சுவாரஸ்யமான சாகசங்கள் இம்முறை இந்தத் தொகுப்பின் முழுமையிலும் இடம்பிடித்து நிற்கின்றன !! நிச்சயமாய் மொக்கைக் கதைகள் லேது இங்கே !! And இதற்கோ, இதனுடன் வரக்கூடிய மற்ற ஈரோடு ஸ்பெஷல் இதழ்களுக்கோ முன்பதிவுகள் இப்போதைக்குத் தேவை இல்லை ; ஆகஸ்டில் relaxed ஆக வாங்கிக்கொள்ளலாம் !

அப்புறம், ஈரோட்டில் வெளியாகவுள்ளது - இன்னொரு ஜாலியான இதழுமே !!அது நாமெல்லாம் ரசித்ததொரு கார்ட்டூன் தொடரே & அதன் மீள்வருகைக்குப் பின்னே ஒரு சுவாரஸ்யக் கதை காத்துள்ளது ! அந்தத் தொடர் பற்றியும், அந்தக் கதையின் பின்னணிக் கதை பற்றியும் அடுத்த பதிவினில் !! இப்போதைக்கு லக்கி லூக்கின் தாத்தாக்களோடும், ஒரிஜினல் தாத்தாக்களோடும் பொழுதை ஓட்ட நான் புறப்படுகிறேன் !!  

Bye all...see you around ! Have a lovely Sunday !! And ஈரோட்டுக்கு டிக்கெட்டைப் போட்டுப்புடலாமே ?


😀😀😀😀😀😀😀😀

Saturday, June 08, 2024

கொஞ்சம் சேதிகள் & கொஞ்சம் கேள்விகள்...!!

 நண்பர்களே,

வணக்கம். ”ஆயிரம் வருது... ரண்டாயிரம் வருது” என்ற பொழுதுகளெல்லாம் தாண்டி – இதோ ஆயிரத்திரண்டில் நின்று கொண்டிருக்கிறோம்! And இந்த நொடியிலோ focus அடுத்த முக்கிய இலக்குகள் மீது மையம் கொண்டு நிற்கத் துவங்கியாச்சு! So காத்திருப்பது என்னவென்று ஒரு பட்டியல் போட்டுத் தான் பார்ப்போமா?

1. கூப்பிடு தொலைவில் காத்திருப்பது நமது லயனின் 40-வது ஆண்டுமலர் combo இதழ்கள் :

- டபுள் ஆல்பங்களோடு லக்கி லூக்!

- கலரில் டெக்ஸ் !

ஆங்... அப்புறம்... அது வந்து....

- கலரில், மெகா சைஸில் ”விண்வெளிப் பிசாசு!”

நம்ம தானைத் தலைவர் ஸ்பைடரின் இந்த க்ளாஸிக் மறுபதிப்பானது ஜுலையின் showstealer ஆக அமையக்கூடுமென்று கருத்துக் கணிப்புகள் இல்லாமலே சொல்லத் தோன்றுகிறது! Of course இங்கே நோஸ்டால்ஜியா தான் கோலோச்சும் என்பது புரிகிறது – ஆனால் பழம் நினைவுகளையும், தமிழ் காமிக்ஸ் நண்பர்களையும் பிரித்துப் பார்க்க இயலாதென்பது நிதர்சனமல்லவா ? இதோ – அதற்கான லேட்டஸ்ட் நிரூபணம் – க்ளாஸிக் நாயகர்களின் தனித்தடமான ”ELECTRIC 80's” ஈட்டி வரும் அதிரடி முன்பதிவுகள்! புது இதழ்கள் கொண்ட MYOMS சந்தாவானது இரண்டு மாதங்களில் தட்டுத் தடுமாறித் தொட்ட நம்பரை “ELECTRIC 80's” பத்தே நாட்களில் எட்டி விடும் போலுள்ளது! So ரயிலின் கணிசமான பெட்டிகளில் புளிசாதத்தோடு, ஸ்வெட்டர், மங்க்கி குல்லாவெல்லாம் போட்டுக் கொண்டு ஏறியமர்ந்திருக்கும் க்ளாஸிக் பார்ட்டிகளை நமது பயணத் துணைவர்களாக முழுமனதோடு ஏற்றுக் கொள்வோமே folks?

2. ஜுலையில் ஆண்டுமலர் காத்துள்ளதெனில், அதையும் தாண்டிய ஆகஸ்டை முன்கூட்டியே கூர்ந்து நோக்க வேண்டியுள்ளது – simply becos அது தான் நம்ம டின்டின் சாரின் டபுள் ஆல்ப ரிலீஸ் மாதம்! நிறையவே பேசியுள்ளோம் – டின்டினின் தயாரிப்பு சார்ந்த முஸ்தீபுகள் பற்றி ! And இம்முறையுமே இம்மி கூட மாற்றமில்லை ! சொல்லப் போனால் இம்முறை டபுள் ஆல்பங்கள் எனும் போது, குட்டிக் கரணங்களுமே டபுள்! தவிர, டின்டின் புக்ஸ்களை நாம் தயாரிப்பதில்லை ; இது சார்ந்த இயந்திரங்களை முழுமையாகக் கொண்ட ஒரு பெரும் புத்தக ஏற்றுமதிக்குழுமத்திடமே ஒப்படைக்கிறோம் எனும் போது – கணிசமாக, ரொம்பக் கணிசமாகவே அவர்களுக்கு அவகாசம் தந்திட வேண்டியுள்ளது ! கண்டெயினர் கண்டெயினராய் அவர்களின் இதர ஆர்டர்கள் ஏற்றுமதியாகும் வேளையில், நாமளோ ஒரு 407 லோடு வேனில் ஏற்றும் அளவிலான புக்சிற்கு மட்டும் ஆர்டர் தந்துப்புட்டு, அதட்டி வேலை வாங்க முடியாதில்லையா ? So டின்டின் பணிகளும் தெறிக்கும் துரிதத்தில் நடந்தேறி வருகின்றன ! ஆக, ஆகஸ்டில் டின்டின் உங்கள் கைகளில் மிளிர்ந்தாக வேண்டுமென்றால் இந்த நொடியில் எங்கள் கால்களில் நாங்கள் வெந்நீர் அபிபேஷகம் செய்தாக வேண்டும்! தண்ணீ சுட்ருச்சா மைதீன்?

3. ஆகஸ்டை ஆவலோடு எதிர்நோக்க – as always ஈரோட்டுப் புத்தக விழா என்ற மெகா காரணமும் வெயிட்டிங்!

அதற்கு முன்பாகவே ஜுலை முதல் வாரத்திலிருந்து நகரத் தொடங்கவுள்ள புத்தக விழா circuit பற்றிச் சொல்லி விடுகிறேனே! தமிழகப் பட்டி தொட்டிகளெல்லாமே புத்தக விழாக்கள் கண்டு வரும் இந்த சந்தோஷ, சமீப நாட்களுக்கெல்லாம் முன்னோடிகளாக சில முக்கிய bookfairs இருந்து வந்துள்ளன! அவற்றுள் ஒன்று தான் நெய்வேலியில் அரங்கேறிடும் விழா! NLC-ன்  திட்டமிடலில் நடைபெற்று வந்த இந்த ஜுலை நிகழ்வானது, திருவிழா போல களைகட்டிடும் என்று circuit-ல் பழம் தின்று கொட்டை போட்ட சீனியர்கள் சொல்வதுண்டு! ஆறோ – ஏழோ ஆண்டுகளுக்கு முன்பாக நாம் ஒரேயொரு தபா ஸ்டால் போட்டிருந்தோம் தான்; ஆனால் அவையெல்லாம் கையில் சொற்ப titleகள் சகிதம் நாம் சுற்றி வந்த நாட்கள்! And கொரோனா சள்ளையால் கடந்த 4 ஆண்டுகளாய் களமிறங்கியிருக்காத நெய்வேலி இதோ – ஜுலை 5 to 14 வரை மீள்வருகை செய்திடவுள்ளது! And நமது காமிக்ஸ் கேரவனின் பயணம் அங்கிருந்து தொடங்கிடுகிறது!

நெய்வேலி முடிந்த கையோடு கோவைக்குக் கவனம் திரும்பிடவுள்ளது – எப்போதும் போல கொடீஸியா அரங்கினில் நடைபெற்றிடும் புத்தக விழாவின் ரூபத்தில்! So ஜுலை 19 to 29 வரை கோவை நண்பர்களோடு அன்னம், தண்ணீர் புழங்கிடக் காத்திருப்பர் - நமது நாயகர்கள் அனைவரும்!

And கொங்கு மண்ணில் ஜுலை 30-க்கு சட்டி, பெட்டிகளை பேக் செய்ய ஆரம்பித்தால் அவற்றோடு நேராக ஈரோட்டில் land ஆகிடுவோம் – ஆகஸ்ட் 2-ல் துவங்கவிருக்கும் புத்தக விழாவுக்காண்டி!

ஈரோட்டுப் புத்தகவிழா எனும் போதே – நமது வாசக சந்திப்பு பற்றிய வினாவுமே எழுகிறது! "இம்முறை ஈரோடா? சேலமா? சந்திப்புக்கான உங்கள் சாய்ஸ் எதுவோ?" என்ற கேள்வியை போன வாரப் பதிவில் உங்கள் முன் வைத்திருந்தேன்! And இதோ – இன்று இரவுக்குள் அதற்கான முடிவுகள் வெளியாகி விடும்! உங்களது தீர்ப்புகள் என்னவென்று தெரிந்து கொள்ளும் நொடியில் ஒரு உபபதிவில் அது குறித்து அலசிடலாமா folks?

4. And இந்த நடப்பாண்டு நடைமுறைகளுக்குள் பிஸியாகிடும் வேளைதனில் ரொம்பவே முக்கியமானதொரு பணிக்கான பொழுது புலர்ந்திருப்பதையுமே பளிங்குக் கபாலம் நினைவூட்டுகிறது!

அது தான் காத்திருக்கும் ஆண்டுக்கான திட்டமிடல்!

புத்தாண்டு இன்னமுமே ஐந்தரை மாதங்களின் தொலைவில் காத்திருந்தாலுமே அங்கு களம் கண்டிட வேண்டிய கதை நாயகர்களையும், கதைகளையும் ரெடி செய்திட நிரம்பவே lead time தேவையாகிடும் தானே? So ஆயிரமாவது பதிவை நிறைவு பண்ணின கையோடு 2025-க்கான திட்டமிடலுக்கு ஜுனியர் எடிட்டரும், நானுமாய் ரூம் போட்டு யோசிக்க ஆரம்பிச்சாச்சு! And உங்ககிட்டே கலந்து பேசாமல் ரூம் போட்டோ; திண்ணையில் படுத்துறங்கியோ தம்புடிக்குப் பிரயோஜனம் கிடையாதே? So ”மறுபடியும் ஆரம்பிச்சுட்டானா மொக்கையை??” என்ற புருவ உயர்த்தல்கள் நிகழக் கூடுமென்றாலுமே 'தகிரியமாய்' வினாக்களைத் தொடுக்கிறேன்!

Disclaimer! ரசனைகள் எனும் ரசம் நெதத்துக்கும் ஒரே மாதிரியிருப்பதில்லை தானே? பூண்டு தூக்கலாகிப்புட்டா பூண்டு ரசம்னும்... தக்காளி சல்லிசா கிடைக்கிறச்சே தக்காளி ரசம்னும் பெயரிட்டுக் கொள்வது இயல்பு தானே? So ரசனைகளானவை always subject to change(s) என்ற நம்பிக்கையில் வினாக்கள் தொடர்கின்றன !  இவை பழைய கேள்விகளாகவே இருந்தாலும், கேட்டுத் தெரிந்து ஊர்ஜிதம் செய்வது எனது கடமையாகிறதுங்களே! So here goes!

கேள்வி # 1 : 

டெக்ஸ்! ‘தல‘! இரவுக் கழுகார்! ஆண்டின் அட்டவணையை தயார் செய்யத் துவங்கும் போது பிள்ளையார் சுழிக்கு அடுத்தபடியாக எழுதும் முதல் பெயரிது – 2012 முதலாகவே! So “இவர் வேணுமா? வேணாமா?” என்ற குடாக்குக் கேள்வியெல்லாம் டெக்ஸ் தொடர்பாய் தொடரப் போவதில்லை! மாறாக நமது கேள்வி இதோ :

- “மாதமொரு டெக்ஸ்” – ஏதேனும் மார்க்கத்தில்! இந்த template 2025-க்கும் தொடர்ந்திடல் –

A. காலத்தின் கட்டாயம்!

B. வருஷத்துக்கு 10 இதழ்கள் மதி!

C. நம்பர்களின் மத்தியில் “8“ தான் செம லக்கி என்பது சீனர்களின் நம்பிக்கை! நாமளும் ஓராண்டுக்கு சங்க்கி-மங்க்கி ஸ்டைலுக்கு மாறிப் பார்க்கலாமா டெக்ஸ் கதைகளை பொறுத்தவரை ? ?

என்னைப் பொறுத்தவரையிலோ, நமது முகவர்களைப் பொறுத்த வரையிலோ, நம்ம front desk பெண்களைப் பொறுத்த வரையிலோ – இந்தக் கேள்விக்கு Option A–வைத் தாண்டி வேற பட்டனே இருந்திடக் கூடாது தான் ; அட, ஓட்டெடுப்பே இவருக்கு அவசியம் லேது ! ஆனால் அமெரிக்க ஜனாதிபதிகளே நாலு வருஷங்களுக்கொரு தபா “கும்பிடுறேனுங்க அண்ணாச்சி!” என்று மக்கள் மன்ற ஆதரவை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள வேண்டியிருப்பது தானே ஜனநாயகம்? So நமது காமிக்ஸ் குடியரசிற்கும் அந்த ஜனநாயக மரபு தப்பில்லீங்களே? வோட்டுப் போட வேண்டிய லிங்க் இதோ: https://strawpoll.com/QrgewaMG2yp

கேள்வி # 2:

“முதல் மரியாதை” படத்தில் சாமத்தில் ஒரு பெருசு வந்து “எனக்கொரு உண்மை தெரியணும் சாமி” என்று கதவைத் தட்டும் – ஞாபகமிருக்கா? அந்த ரேஞ்சுக்கான கேள்வியாக இதை எடுத்துக்கோங்களேன்?!

சமீப வருஷங்களாகவே புது வரவுகள் வேகமாய் ஆஜராவதும், வந்த பிற்பாடு கொட்டாவிகளோடு அவர்களை நாம் வழியனுப்பி வைப்பதும் வாடிக்கையாகி வருகிறது! இதோ பாருங்களேன் வந்தோர்-சென்றோர் லிஸ்ட் :

- ரிங்கோ (கௌபாய்)       

- SODA

- C.I.A. ஏஜெண்ட் ஆல்பா

- மேக் & ஜாக்

- ஸ்மர்ஃப்ஸ்

- சுட்டிப் பயல் பென்னி

- ட்யூக்

- ஜெரெமயா

- மேஜிக் விண்ட்

- க்ளிப்டன்

- நெவாடா

- I.R.$

Of course – டெட்வுட் டிக் ; தாத்தாஸ்; டின்டின் ; Mr.நோ போன்ற புது வரவுகளையும் கொண்டாடியுள்ளீர்கள் தான்! டேங்கோவையும் அந்த லிஸ்டில் சேர்த்திருக்கிறீர்கள் தான்! ஆனால் உள்ளே – வெளியே ஆட்டத்தில் more of வெளியே தான் அமலில் இருக்கின்றது ! Oh yes - மறுப்பதற்கில்லை – சரக்கிருந்தால் யாராக இருந்தாலும் சாதிப்பார்களென்பதை! ஆனால் புதியவர்களுக்கான long rope தந்திட இன்றைக்கெல்லாம் நம்மிடம் நேரமும், பொறுமையும் இருக்கின்றதா folks ? இருக்கத் தான் செய்கிறதெனில் – நமது புதுசு சார்ந்த தேடல்கள் எந்த ஜானரில் தீவிரமாக இருந்திட வேண்டுமென்பீர்களோ?

A. கௌபாய்

B. டிடெக்டிவ் / க்ரைம்

C. ஹாரர்

D. கார்ட்டூன்

E. சயின்ஸ் ஃபிக்ஷன்

F. சூப்பர் ஹீரோஸ்

மேற்படிக் கேள்விக்கான வோட்டிங் லிங்க் இதோ: https://strawpoll.com/eJnvVxdGknv

கேள்வி # 3 :

Again சாமக்கோடங்கி ரேஞ்சிற்கொரு கேள்வி :

தாத்தாஸ் கதைகள் கனமான களங்களென்பதில் no doubts! வாழ்க்கையின் அந்திமத்தை அர்த்தமுள்ளதாக்க விளையும் பெருசுகளின் வாயிலாக சுற்றுப்புறச் சூழல் பற்றி கதாசிரியர் நமக்கொரு புரிதல் தர முனைந்து வருகிறார். 

My question is:

தாத்தாக்களின் இதுவரையிலுமான 3 ஆல்பங்களையும் முழுசாகப் படித்து விட்டீர்களா? அவர்கள் கிராபிக் நாவல் தடத்தில் தொடர்வது உங்களுக்கு ஓ.கே. தானா ? அல்லது, ரொம்பவே அடர்த்தியாய் உள்ளதால் உட்புக சிரமமாகிறதா ? Honest replies please !

இதற்கு மட்டும் இங்கேயே பதில் போட்டுப்புடலாமே யூத்ஸ் ?

QUESTION # 4 :

தோர்கல் ?

ஒரே நேரத்தில் ஆளுமை கொண்டதொரு நாயகராகவும், அசாத்திய சாகசங்களின் தலைவனாகவும் மிளிரும் இந்த மனுஷன், ஒரு டஜன் ஆண்டுகளுக்குப் பின்னும் நம் மத்தியிலானதொரு automatic தேர்வாகிடும் வழியைக் காணோம் !! நண்பர்கள் குழுவானது - வருஷா வருஷம் தோர்கல் போட்டிகள் ; அது-இதுவென்று 'தம்' கட்டி நடத்தி, தோர்கல் சார்ந்த விழிப்புணர்வை  உயர்த்திட முயன்று வரினும், உரிமையோடு கான சபாவில் கச்சேரி செய்திடும் பாகவதராய் ஆரிஷியாவின் ஆத்துக்காரர் மாற்றம் கண்ட பாட்டைக் காணோம் ! So - சொல்லுங்களேன் ப்ளீஸ் : 

ரெகுலர் தடத்தில் தோர்கல்  ?

A.டபுள் ஓ.கே.

B.வந்தாலும் ஓ.கே. ; வராட்டியும் ஓ.கே. 

C.நானே Netflix-லே சீரியல் பாக்க நேரமில்லாம அல்லாடிட்டிருக்கேன் - இதிலே தேரைக்குள்ளே கல்லோ ; தவளைக்குள்ளே கல்லோ வர்றது பற்றி விசனப்படுவேனா ? 

இதோ - இந்தக் கேள்விக்கான வோட்டிங் லிங்க் :  https://strawpoll.com/poy9kQbxOgJ

5.QUESTION # 5

நமது மீசைக்கார நாயகர் ஷெல்டன் புதியதொரு ஆல்பத்தோடு பிரெஞ்சில் ஆஜராகியுள்ளார் !! இதுவரைக்கும் தொடரின் சகல ஆல்பங்களையும் போட்டுவிட்டோம் and புக்ஸ் வெளியான வேளைகளில் மனுஷன் சிலாகிக்கப்பட்டாலும், அப்பாலிக்கா இம்மியும் அசையாமல், கிட்டங்கியில் கமான்சேவுக்கு ஜிக்டி தோஸ்தாய் உருமாற்றம் கண்டுவிட்டார் ! But இவரது கதைகளில் விறுவிறுப்புக்குப் பஞ்சமே இருப்பதில்லை என்பது எனது அபிப்பிராயம் ! சொல்லுங்களேன் - ஆல்பம் # 14 வரட்டுமா நம் மத்தியில் ?



ரைட்டு...ஒற்றை நாள் பயணம் காத்திருப்பதால், நடையைக் கட்டுகிறேன் guys !! And போன வாரம் கேட்டிருந்த 2 கேள்விகளுக்கான உங்களின் பதில்கள் (ஓட்டுக்கள்) என்னவென்பது அந்தத் தளத்திலேயே இரவு 10-00-க்கு ஆட்டோமேட்டிக்காக தெரிந்து விடும் ! So உங்களை போலவே நானும் அதனைக் கண்டிட ஆவலாயிருப்பேன் ! Bye all...see you around !


Have a great Sunday !






Wednesday, June 05, 2024

மழைக்கு மறுநாள் !

 ஆயிரத்தார்களே,

வணக்கம் ! பெரும் மழை பெய்து ஓய்ந்தது போலொரு பீலிங்கு உள்ளுக்குள் ! இது வரைக்குமான 999 பதிவுகளுக்குமே, பெருசாய் எதையும் குறித்துக் கொண்டோ, தயாரித்துக் கொண்டோ எழுத அமர்ந்தது லேது ! லேப்டாப்பையோ, பேப்பர்-பேனாவையோ எடுத்துக் கொண்டு சேரில் சாயும் போது என்ன தோன்றுகிறதோ - அதுவே அந்த வாரத்தின் பதிவாக இருந்து வந்துள்ளது ! ஆனால் முதல்முறையாக இந்த ஆயிரமாவது பதிவுக்காண்டி நாலைந்து நாட்களாய் பிட் பிட்டாய் எழுதி, அப்பாலிக்கா கோர்வையாக்கி முழுப் பதிவாக்கினேன் ! இங்கும் சரி, எனக்கான வாட்சப் தகவல்களிலும் சரி, பதிவு # 1000 குறித்தான எதிர்பார்ப்புகள் கணிசமாய் உள்ளன என்ற தகவலைப் பறைசாற்ற, உங்களை disappoint செய்திடக் கூடாதே என்ற பயம் பூரணமாய்த் தொற்றிக் கொண்டது ! And வாகாக ஆயிரம்வாலா அறிவிப்புகளும் பெண்டிங்கில் இருக்க, அவற்றை நிறைவாக நிறைவேற்றிட வேண்டுமே என்ற பதற்றமும் கைகோர்த்துக் கொண்டது ! எல்லாவற்றிற்கும் மேலாக - 'இந்தப் பதிவு எம்மாம் நீளம் இருக்க வேணும் ?' என்பது குறித்த குயப்பமும் இடுப்பில் ஏறிக்கொண்டது ! என்றைக்குமே, எதையுமே நறுக்கென்று சொல்லும் நல்ல பழக்கமெல்லாம் நம்பளுக்குக் கிடையாது என்பதில் ஏது ரகசியம் ? நல்ல  நாளைக்கே கே.பி.சுந்தராம்பாள் பாணியில் இழுப்பது வாடிக்கை எனும் போது, ஆயிரத்திலும் அதே பாணியைத் தொடர்வதா ? அல்லாங்காட்டி 'crisp வாசிப்பு' என்ற நமது புதுத் தாரக மந்திரத்தை, பதிவிலும் இனி அமல்படுத்துவதா ? என்ற யோசனை மிகுந்தது ! நிஜத்தைச் சொல்வதானால் "இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்" கதை தான் நடைமுறை கண்டது ! விசாழகெழமையே பதிவு ரெடி ; ஆனால் எழுதித் தள்ளியதில்  அவசியமான ஆணி எது ? வேஸ்ட் ஆணியெது ? என்று பரிசீலிக்க எனக்கு நானே ரண்டு நாள் அவகாசம் தந்து கொள்ள விழைந்தேன் ! தவிர, எங்கயாச்சும் நம்மையும் அறியாமல் பீப்பீ smurf பாணியிலான வரிகள் நுழைந்துள்ளனவா ? எங்கேயேனும் சம்பந்தா சம்பந்தமில்லாமல் க்வாட்டர் குருசாமியாட்டம் உளறி வைத்திருக்கிறேனா ? எங்கயாச்சும் புது அரசியல்வாதியாட்டம் டூ மச்-த்ரீ மச்சாய் வாக்குறுதிகளை அள்ளி விட்டிருக்கேனா ? அடுத்தாண்டின் அட்டவணையோடு sync ஆகிடக்கூடிய விதமாய் புது அறிவிப்புகள் அமைகின்றனவா ? - என்று நிறையவே கேள்விகளை எனக்கு நானே கேட்டுக் கொள்ள அந்த 2 தினங்கள் பிரயோஜனப்பட்டன ! எல்லாவற்றிற்கும் மேலாக இந்தப் பதிவுப் பக்கத்தின் மீது நீங்கள் ஒவ்வொருவரும் கொண்டிருக்கும் அரூப வாஞ்சைக்கு நியாயம் செய்திட ஒரு மைல்கல் பதிவினில் தவறிடக்கூடாதே, என்ற பயமும் கணிசமாக இருந்தது ! So "இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்" என்ற பலகை வாசகம், வெள்ளிக்கிழமை "நல்ல மீன்கள் விற்கப்படும்" என்றாகி, சனியன்று "மீன்கள் விற்பனையாகிடும்" என்றாகியது ! இதை ஞாயிறு காலை வரைக்கும் நீட்டித்தால், வெற்றுப்  பலகை மட்டுமே மிஞ்சும் என்ற பயம் வந்துவிட, சனி இரவே 'பச்சக்'கென்று publish பட்டனை அமுக்கி வைத்தேன் ! And the rest we know ...... !! 

மனநிறைவோடு...நிறைந்த அன்போடு...நிபந்தனைகளற்ற வாஞ்சையோடு....நீங்கள் இங்கு பதிவிட்ட மனதைத் தொட்ட வரிகள் ஒவ்வொன்றையும் நான் வாசிக்கத் தவறவில்லை ; and அவற்றைப் படித்த நொடியிலேயே நன்றி சொல்லிடவும், பதில்களிடவும் விரல்கள் பர பரத்தன !ஆனால் ஏற்கனவே சொல்லியிருந்தது போல,சித்தப்பா வீட்டில் திருமணம் என்பதால் சகோதரிகளும், பிள்ளைகளும் வந்திருக்க, அவர்களோடு நேரம் ஓட்டமெடுத்து விட்டது ! And ஒரு மாதிரியாய் இங்கு பதிவிடக் கொஞ்சம் அவகாசம் கிடைத்த போதோ, பின்னூட்ட எண்ணிக்கை முன்னூறை நெருங்கி இருந்தது ! எண்ண அலைகளை வரிகளாக்கும் ஏதாச்சுமொரு சூட்சமத்தை சீக்கிரத்திலேயே AI புண்ணியவான்கள் கொண்டு வந்து விட்டார்களெனில், என் வேலை ரெம்போவே சுலபமாகிப் போகும் ; ஸ்டீலுக்கு tough தரும் விதமாய் கவிஞர் முத்துவிசயனாரே களமிறங்கி விட முடியும் ! ஆனால் எண்ணங்களை எழுத்தாக்கிடும் டெக்நாலஜி வந்துப்புட்டா, அதிலொரு சிக்கலும் இல்லாது போகாது ! அவ்வப்போது தலைகாட்டக்கூடிய டப்ஸா கதைகளை நம் மீதான அன்பில்,கொஞ்சூண்டு Pril liquid மட்டும் ஊற்றி அலசிவிட்டு அனுப்பும்  நண்பர்களின் ஆழ்மனசு அபிப்பிராயங்களுமே வரிகளாகிடும் பட்சத்தில் - Scotchbrite போட்டு கர்ரங்-கர்ரங்கென தேய்த்துக் கழுவி ஊற்றியது போலாகி விடக்கூடும் என்பது புரிகிறது ! So கொஞ்சம் மெனெக்கெட்டுனாலும் டைப்படிச்சிட்டுப் போயிடலாமோ ? வம்பு எதுக்கு ?

Jokes apart, இந்தப் பயணத்தின் ஒவ்வொரு நொடியிலும் நமக்கு தோள் கொடுத்து நின்று வருவதற்கும், இந்த ஆயிரமாவது பதிவினை அற்புதமானதொரு அனுபவமாக்கித் தந்துள்ளமைக்கும், அந்தக் குன்றா அன்பிற்கும் கரம்கூப்பிய ஓராயிரம் நன்றிகள் folks ! கம்பெனிக்கு மட்டும் வசதி இருந்தால் - "யாரங்கே..? இந்தப் பதிவில் கலந்துக்கிட்ட அம்புட்டுப் பேருக்கும் ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டை சன்மானமாக்கு !!" என்று கட்டளையிட்டிருப்பேன் ! ஆனால் கஜானாவில் நிதியும் நஹி ; நோட்டில் ஆயிரமும் நஹி என்பதால் - ப்ராமிஸ் செய்தது போல அந்த முதல் 25 நண்பர்களுக்கு மட்டும் ஒரு ஸ்பாஞ் கேக் அனுப்பிட கம்பெனி ரெடியாகி விட்டது ! First 25 comments போட்ட நண்பர்கள்ஸ் - சிரமம் பாராது நமது ஆபீஸ் வாட்சப் நம்பருக்கு (98423 19755) உங்களின் முகவரி ப்ளீஸ் ? அல்லது நமக்கொரு மின்னஞ்சல் ?

ரைட்டு...திருவிழா நிறைவுக்கு வந்துப்புடிச்சி ; so மேக்கப்பை கலைச்சுப்புட்டு பிழைப்பைப் பார்க்கப் போயாக வேணும் தானே guys ? உங்களிடம் பகிர விழையும் முதல் தகவல் - ELECTRIC '80s முன்பதிவில் கொப்பளிக்கும் அசாத்திய ஆர்வமே !!  பஞ்சாயத்துக்கு வரும் சுனா.பானாவுக்குமே புரியும் விதமாய், மொத தபாவா இந்தச் சந்தா குறித்து தெளிவாக விளக்கி விட்டோமோ - என்னவோ,விளக்கங்கள் கோரிய calls ஜாஸ்தி இல்லாது, மட மடவென புக்கிங்ஸ் ஆரம்பித்து விட்டன ! 'இது தீபாவளி 2024 முதல் துவக்கம் காணும்' - என்ற அறிவிப்போடே களம் காண்பதும் maybe இந்த துரிதத்துக்கொரு பின்னணியாக இருந்திடக்கூடுமோ - என்னமோ ? Whatever the reason - பரபரப்பாய் பணிகளை நாங்கள் ஏற்கனவே துவக்கியாச்சு ; and கதைகளின் முக்கால்வாசியும் வந்தாச்சு ! அட்டைப்படங்கள் அமெரிக்காவில் ரெடியாகி வருகின்றன ; so லைட்ஸ்..கேமரா...ஆக்ஷன் !! என்று நவம்பர் 1 தேதிக்கு ரெடியாகிடுவார் நமது தானைத் தலைவர் ஸ்பைடர் !    

And yes, மற்ற பரபரப்புகளின் மத்தியில் ரெகுலர் தடத்தின் இதழ்களை மறந்திடப்படாதில்லையா ? ஒரு குருட்டு யோகம் - இம்மாதத்துக் கூட்டணியின் சகல இதழ்களுமே தவிர்க்க இயலா காந்தங்களாய் in their own ways அமைந்துவிட்டுள்ளன ! இல்லையெனில், சூழ்ந்துள்ள அறிவிப்புகள் படலத்தின் மத்தியில், திருவிழாவில் தொலைந்து போன புள்ளைங்களைப் போல காணாதே போயிருப்பர் ! But இம்மாதத்து மூவருமே செம toughies !! XIII - நதிமூலம் க்யூபா பற்றிச் சொல்லிடவே தேவையில்லை ; தெறிக்க விடுகிறார் ஜேசன் ! டெக்சின்  "சிறைப்பறவையின் நிழலில்" அவரது மறக்கமுடியா அதிர்வேட்டுப் பட்டியலில் இன்னொரு addition and மிஸ்டர் நோ "பாலையில் போராளி" மூலமாக தனது ஆளுமையினை இன்னும் ஷார்ப்பாகப் பதிவு செய்திருக்கிறார் ! So இவர்களே இன்னும் கொஞ்ச நாட்களுக்காவது ஒளிவட்டத்தில் திளைக்க வேண்டியோர் என்பதால் - உங்களது first look ரேட்டிங்ஸ் ; first வாசிப்பு ரேட்டிங்ஸ் ; வாசித்திருப்பின் அலசல்கள் - என்று ஆரம்பிக்கலாமே ப்ளீஸ் ? And of course - "தண்டர் in ஆப்ரிக்கா" பற்றிய உங்களின் எண்ணவோட்டங்களும் ப்ளீஸ் ?

Bye all ; see you around ! நான் ஒரிஜினல் தாத்தாக்களோடும், லக்கி லூக்கில் இம்முறை வந்திடவிருக்கும் ஆராய்ச்சியாளத் தாத்தாக்களோடும் லூட்டியடிக்கக் கிளம்புகிறேன் ! Have a fun week !! 

P.S : வோட்டிங்கில் ஸ்பெஷல் இதழ்கள் மூன்றுக்கு மத்தியிலும் செம tug off war நடந்து வருகிறது !!! ரிசல்ட் என்னவாக இருக்குமென்று நிச்சயமாய் இந்த நொடியினில் கணிக்க இயலவில்லை ! இன்னமும் வாக்களித்திருக்காதோர் - ப்ளீஸ் இங்கே க்ளிக்குங்களேன் : https://strawpoll.com/NPgxeqP9PZ2



Saturday, June 01, 2024

The ஆயிரம் !!!

 நண்பர்களே,

(உஷாரய்யா உஷாரு...பதிவு நீளம் உஷாரு !! கார்த்திக் ; அய்யம்பாளையம் வெங்கடேசன் : ஒரு முக்கால்வாசிப் பதிவுக்குப் பின்பாக வாசிக்க ஆரம்பித்தாலும் சமாச்சாரம் புரிந்திடும் !)

வணக்கம். நம்ம சேலம் குமார் ஞாபகப்படுத்தாமலே இது நமது பதிவு # 1000 என்பது ஸ்பஷ்டமாக புத்திக்குத் தெரிகிறது! மூன்றிலக்க மொத்த எண்ணிக்கையிலிருந்து நான்கு இலக்கத்துக்குள் கால் பதிக்கும் இந்தப் பொழுதில் நம்ம பங்குக்கும் கொஞ்சம் ‘ரமணா‘ புள்ளி விவரங்களைப் போட்டுத்தாக்கா விட்டால் எப்படி?

-ஆயிரமெனும் பதிவு எண்ணிக்கையைத் தொட நமக்கு 4544 நாட்கள் தேவைப்பட்டிருக்கின்றன!

- 649 வாரங்களின் பயணமிது!

- 12 வருஷங்களும், 5 மாதங்களுமாய் தொடர்ந்துள்ள மொக்கை இது!

- On an average, கிட்டத்தட்ட நாலரை நாட்களுக்கு ஒரு தபா - குட்டியோ; பெருசோ ஒரு புதுப் பதிவோடு கதவைத் தட்டி வந்திருக்கிறேன்!

சரி, ரைட்டு.... இந்த நொடியில் உலகத்துக்கே ஏதாச்சும் சேதி சொல்லணும் போல் உள்ளாற தோணுமே...? மார்ட்டின் லூதர் கிங்கின் "I have a Dream" ரேஞ்சுக்கு ஒரு உரையை ஆற்றோ - ஆற்றென்று ஆற்றணும் போல நமைச்சல்லாம் எடுக்குமே ? - என்று நீங்கள் நினைத்திருந்தால் - ஊஹும்! ஒரு பெரிய குக்கர் விடுவதைப் போல 'Phewwwww' என்று பெருமூச்சிட மட்டுமே தோன்றுகிறது ! பெருமூச்சோடு பேந்தப் பேந்த முழித்து வரும் இந்த நொடியில் - என்ன எழுதுவது? எதைப் பற்றி எழுதுவது ? எங்கிருந்து ஆரம்பிப்பது? என்ற கேள்விகள் கபாலத்துக்குள் 'சர்ர் சர்ர்'ரென்று ஸாகோர் வீசும் கோடரிகள் போலப் பாய்ந்து வருகின்றன! அதற்கொரு விடை சொல்வது போலாய் எனக்குள் ஒரு flashback!

2019-ன் நடுவாக்கில் ஒரு பொழுது....! எங்களது பள்ளியில் வெள்ளி விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாய் ஒவ்வொரு வருஷத்து batch-லிருந்தும் இருவரைத் தேர்வு செய்து, விழாவின் விருந்தினராக்கி, அவர்களை ஸ்கூல் பற்றி நினைவு கூர்ந்திடச் செய்யும் திட்டம் அமலில் இருந்தது! நான் எங்கள் ஸ்கூலின் இரண்டாவது batch ! அந்த வருஷம் எங்கள் செட்டிற்கான male பிரதிநிதியாக நானும், பெண்களின் பிரதிநிதியாக ஒரு செம smart வகுப்புத் தோழியும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தோம் ! விழாவில் எங்களது டீச்சர்கள் அத்தனை பேரும் முன்வரிசையில் அமர்ந்திருக்க, குறைந்த பட்சமாய் 200 ஜுனியர்ஸும், எனது செட் பசங்களும், பொண்ணுங்களும் ஆஜராகியிருப்பார்கள் என்பது தெரியும் எனக்கு ! So லைட்டாக சொதப்பிடும் பட்சத்தில் கூட  சிரிப்பாய் சிரித்துப் போய்விடும் என்ற பயத்தோடே விழாவை எதிர்நோக்கியிருந்தேன் ! என்ன பேசலாம் என்பதை மண்டைக்குள் ஒரு மாதிரி ரெடி பண்ணிவிட்டு மேடையேறினால், எனக்கு முன்பாகப் பேச ஆரம்பித்திருந்த தோழி அட்சர சுத்தமாய் நான் பேச நினைத்ததையே பொரிந்து தள்ளிக்கொண்டிருந்தார் !! பேஸ்தடித்துப் போச்சு எனக்கு ! 

அடுத்ததாக நம்ம அண்ணாத்தே பேச வரார்... வரார்” என்று ஜுனியர் பசங்கள் பில்டப் கொடுக்க, மைக் முன்னே நின்ற நொடியில் தான் பளீரென்று எனக்குள் ஏதோ உதயமானது! ஸ்கூல் life பற்றி; ஸ்கூல் கற்பிக்கும் ஒழுக்கம் பற்றியெல்லாம் மாவு அரைக்காமல், நான் நின்று கொண்டிருந்த அந்த - ஸ்டேஜைப் பற்றியே ; பள்ளிநாட்களில் இதே ஸ்டேஜ் எங்களுக்குத் தந்திருந்த அனுபவங்கள் பற்றியெல்லாம் பேசினாலென்ன? என்று தோன்றியது! மெது மெதுவாய் ஆரம்பித்தேன் - இதே ஸ்டேஜில் அந்த நாட்களில் நடந்த பேச்சுப் போட்டிகளைப் பற்றி, நடித்த ட்ராமாக்களைப் பற்றி.... ஏதோ சேட்டை செய்த சமயத்தில் வகுப்புப் பசங்கள் மொத்தமாய் இங்கு பெற்ற punishment பற்றி... பள்ளிக்குத் தடுப்பூசிகள் போட முனிசிபாலிட்டியிலிருந்து சுகாதாரத் துறையினர் இதே ஸ்டேஜில் காத்திருந்த போது ஆளாளுக்குத் தெறித்து ஓடி ஒளிஞ்சது பற்றி!! பேசிக் கொண்டே போக, முன்வரிசைகளில் அமர்ந்திருந்த எங்களது டீச்சர்களெல்லாம் ‘கெக்கே பெக்கே! என்று சிரிப்பு உருட்டத் தொடங்கியது தெரிந்தது! அதிலும் கம்பர் - ஒட்டக்கூத்தர் தமிழ் ட்ராமாவில் நான் ஒட்டக்கூத்தராய் நடித்தது பற்றியும், ஒரு flow-ல் கெத்தாக வசனம் பேசிவிட்டு உரக்கச் சிரிக்கும் கணத்தில், இடுப்பில் செருகியிருந்த வேஷ்டி முடிச்சு அவிழ்ந்து போனது பற்றியும், ட்ராமா முடியும் நிமிஷம் வரை நான் வேஷ்டியைப் பற்றியபடியே திகிலோடு வஜனங்கள் பேசியது பற்றியும் விவரித்த நொடியில், கண்களில் நீர் வராத குறையாகச் சிரித்துக் கொண்டிருந்தனர்! 

And இந்த நொடியில் எனக்கு மிகச் சரியாக அன்றைய நிகழ்வு தான் நினைவுக்கு வருகிறது - simply becos ”ஆயிரமாவது பதிவு” என்ற மேடையில் நிற்கும் வேளையில் ”ஆனை... பூனை..." என்று எதை எதையோ பற்றிப் பேசும் முன்பாக இந்தப் பதிவுப் பக்கத்தைப் பற்றிய சில பகிரப்படாத நினைவுகளைப் பிரதானமாக்கினால் என்ன ? என்றுபட்டது ! 

”ஆங்.... புடலங்காய் சாதனை ! ஆயிரம் புக்ஸ் என்பதைக் கொண்டாடுவதிலாச்சும் அர்த்தம் இருக்கும் ; இதெல்லாம் சும்மா டைம்-பாஸ் தானே?” என்று ஒரு கணத்திற்கு  தோன்றிடலாம் தான்! Well,”ஆயிரம் புக்ஸ்” என்ற நம்பரையுமே கொஞ்ச காலம் முன்னே கடந்திருக்கும் அனுபவத்தில், இரண்டையும் on their merits பரிசீலிக்க நமக்கு சன்னமாகவாச்சும் தகுதி இருப்பதாகப் படுகிறது! Without a doubt - ”ஆயிரம்வாலா புக்ஸ்” என்பது பணிகளின் அளவுகோல்களில், தாக்கத்தின் அளவுகோலில், ஆயுட்காலத்தின் அளவுகோலில், ராட்சஸ முயற்சியே ! குட்டியோ - பெருசோ; ஒரு புக்கை நாமே தயார் செய்வதெனும் போது வண்டி வண்டியாய் பணிகள் அவசியமாவதில் இரகசியங்களில்லை! நம்மிடம் அச்சகம் இருப்பது வசதி தான், but still ஒவ்வொரு முறையும் புதுசு புதுசாய் ஏதாச்சும் பாடம் படிக்க நாம் தவறுவதே இல்லை! And ஒவ்வொரு புக்கின் பின்னேயும் எண்ணற்றோரின் உழைப்பு உள்ளது ! பகுமானமாய் நான் முன்னே வந்து டான்ஸ் ஆடித் திரிந்தாலுமே, கணக்கு வழக்குகளைப் பார்த்து வரும் பெண்களிலிருந்து, பண்டல் போட்டு அனுப்பும் packing staff வரைக்கும் சகலருமே நமக்கு முக்கியம்! So அங்கே ஒளிவட்டத்தை நான் மாத்திரமே ஆட்டையைப் போடுவதென்பது மெய்யாலுமே நெருடிடும் சமாச்சாரம்!

ஆனால் இந்தப் பதிவுப் பக்கமோ - முழுக்க முழுக்க முழியாங்கண்ணனின் பேட்டை ஆச்சே ! மிஞ்சிப் போனால் இந்த ஆயிரத்தில் ஒரு இருநூறு பதிவுகளை டைப் பண்ணித் தந்திருந்த நமது DTP நண்பரின் பங்களிப்பு இங்கு சன்னமாய் இருந்திருக்கலாம்! அது நீங்கலாய் கதை - வஜனம் - பாடல்கள் - நடனம் - முட்டு / மூத்திரச் சந்து விஜயங்கள் - என சகலமுமே நம்மள் கி கைவண்ணமே! So ”ஆயிரம்வாலா தராசில்” - "ஆயிரம் புக்ஸ்" சர்வ நிச்சயமாய் பன்மடங்கு கூடுதல் முக்கியத்துவம் பெற்றிருப்பினும், for sheer entertainment value, இந்தப் பக்கமானதும்  சளைத்தது அல்ல என்று நினைக்கத் தோன்றுகிறது !  And அது மட்டுமன்றி, இந்த ஆயிரத்தை நான் தூக்கிப் பிடிக்க இன்னொரு vital காரணமுமே உள்ளது! 'அது என்னடாப்பா ?' என்று கேட்கிறீர்களா ? சொல்லுறேன் !!

Oh yes, டிசம்பர் 24, 2011ல் ”அலோ... ஆராச்சும் இங்கே இருக்கீங்களா?” என்று நாலு வரிகளில் இங்கிலீஷல் ஒரு பதிவைப் போட்டுப்புட்டு முழிச்சிக்கினு நின்ன சமயத்தில் கணிசமான பரிகாசம் ரவுண்ட் விட்டதைப் பார்க்க முடிந்தது! And பன்னிரெண்டரை ஆண்டுகளுக்கு முன்பான ஆந்தையனுக்கே இந்தக் காமிக்ஸ் புனர்ஜென்மமெல்லாம் எத்தனை காலத்துக்கு நீடிக்குமென்று சத்தியமாய்த் தெரிந்திருக்கவில்லை! இதை எழுதுவதே நான் தான் என்பதை முதலில் உறுதிப்படுத்தவே கணிசமான கால அவகாசம் தேவைப்பட்டதெனில் - இந்த இரண்டாவது இன்னிங்ஸில் முன்நாட்களைப் போல அறிவிக்கப்படா ப்ரேக்குகள் இருந்திடாது; பொஸ்தவங்கள் ‘பிம்பிலிக்கி பிலாக்கி‘ காட்டிடாது ரெகுலராக வெளிவந்திடும் என்பதை நிலைநாட்ட வருடங்கள் அவசியப்பட்டன! Of course இதில் யாரையும் நொந்து பயனில்லை என்பது அன்றைக்கே புரிந்தது - simply becos அது வரையிலான நமது track record அத்தனை பாடாவதியாக இருந்திருந்தது! இந்தவாட்டி சொதப்பினால் அது சங்கு ஊதியதாகி விடும் என்று புரிந்த போது, முன்நாட்களை விடவும் சீரியஸ்னஸ் கணிசமாகவே கூடிப் போனது! ஆனால் இந்தப் பதிவுப் பக்கம் ஒரு communication கருவியாக அமைந்தது மட்டுமன்றி, காமிக்ஸ் மீதும், நம் மீதும் நீங்கள் கொண்டிருக்கும் நேசத்தை ஒலிபரப்பும் ஒரு களமென்பது எனக்குப் புரிந்த நாளில் எனக்குள்ளே நிகழ்ந்த மாற்றங்கள் எக்கச்சக்கம்! 

‘மாதம் ஒரு புக்‘ என்பதே மாதா கோவிலில் மணியடித்து வந்தால் மட்டுமே சாத்தியம் என்றிருந்த நிலை மாறி - “மாதம் இரண்டு“ என்ற அடுத்த கியரைப் போட்டுப் பார்த்தோம்! உற்சாக விசில்களுக்குப் பெட்ரோலை விடவும் வீரியம் ஜாஸ்தி என்பது புரிந்த நொடியில் “மாதம் மூன்று”; அப்பாலிக்கா “மாதம் நான்கு” என்று 'ஜம்ப்' ஜம்புலிங்கமாகினோம்! எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் உங்கள் நிழல்கள் பின்தொடர, இந்தப் பயணத்தை அடுத்த லெவலுக்கு உந்தித் தள்ளிய பெருமை உங்களுக்கும்,இந்தப் பதிவுப் பக்கத்தின் உற்சாகங்களுக்கும்  கணிசமாய்ச் சேரும்!

- க்ளாஸிக் மறுபதிப்புகளா? தாரை, தப்பட்டைகள் கிழிய வரவேற்றீர்கள்!

- புது நாயக / நாயகியரின் வரவுகளா? விசிலடித்தே வரவேற்றீர்கள்!

- கார்ட்டூன்களா? கிராபிக் நாவல்களா? ‘கொண்டு வார்ரே... பார்த்துக்கலாம்!‘ என்று தோளில் கை போட்டீர்கள்!

- நூறு ரூபாய்க்கு ஒரு புக்கை அறிவித்து விட்டு, ஆயிரம் வாட்டி முழி பிதுங்கி நின்றவனுக்கு ஆயிரம் ரூபாயிலேயே புக்கைத் தயாரிக்கும் சிறகுகளைத் தந்தீர்கள்!

- ”ஆயிரமென்ன ஆயிரம்? – we want more எமோஷன்ஸ்” என்ற நொடியில் இரண்டாயிரத்து சொச்சத்துக்கு இரத்தப் படலத்தை இறக்கி விட ஒன்றல்ல – இரண்டு வாய்ப்புகள் தந்தீர்கள்!

- கொரோனா என்னும் அசுரன் உலகையே முடக்கிப் போட்ட நாட்களிலும் இங்கே பன்மடங்கு தூக்கலான உற்சாகத்தோடு நாட்கள் நகர்ந்தோடின! ஒரு கட்டத்தில் ”நெதம் ஒரு பதிவு” என்று அடித்த கூத்துகளெல்லாம் எனது ஆயுட்கால நினைவுகளுள் சேர்த்தி !

- இந்தியாவுக்குள் எந்தவொரு மொழியிலும், எந்தவொரு பதிப்பகமும், எந்தவொரு எடிட்டரும் விரல்நுனிகளால் கூடத் தொடத் துணிந்திடா கதைகளை ; தொடர்களை ; ஆல்பங்களைக் களமிறக்கிடும் தைரியத்தையும் எனக்குத் தந்தீர்கள் - இந்தப் பக்கத்தின் வாயிலாக !! (Oh yes - அதை நினைத்து நீங்கள் சுவற்றில் முட்டிக் கொண்ட சந்தர்ப்பங்களும் இல்லாதிராது தான் !!) 😆😆

ஆக ”ஆயிரம்” என்ற total வெளியீட்டு நம்பரை இத்தனை சடுதியில் எட்டிப் பிடித்ததற்கு முழு முதற்காரணமே இந்தப் பதிவின் வாயிலாக நீங்கள் ஒவ்வொருவருமே தந்து வரும் பூஸ்ட் தான் என்பேன் ! Let me amplify that further with numbers :

நமது Comeback ஸ்பெஷல் வெளியான ஜனவரி 2012-ல் அதுவரையிலான வெளியீட்டு நம்பர்கள் இந்த மாதிரி இருந்தன:

- முத்து காமிக்ஸ்: 311

- லயன் காமிக்ஸ்: 209

-திகில் : 61

-ஜூனியர் லயன்  : 38

-மினி லயன் : 8

இன்றைக்கோ – ஒரு மகாமகக் காலகட்டத்தின் பிற்பாடு நமது நம்பர்கள்:

- முத்து காமிக்ஸ்: 493

- லயன் காமிக்ஸ்: 449

- லயன் லைப்ரரி: 38

- V காமிக்ஸ்: 18

- சன்ஷைன் லைப்ரரி:  Around 25 ??

So முதல் 28 ஆண்டுகளில் வெளியிட சாத்தியமானதைக் காட்டிலும் அடுத்த 12 ஆண்டுகளில் கூடுதலாய் புக்ஸ் வெளியிட முடிந்துள்ளதன் மாயாஜாலம் என்னவென்று எனக்கு ஐயமறத் தெரிகிறது ! தலைமைப் பொறுப்பில் இருந்தவனோ அதே சோம்பேறி மாடன் தான்; ஆனால் தட்டிக் கொடுக்கவும், தட்டி வைக்கவும் தெரிந்திருந்த மேய்ப்பர்களின் கைவண்ணத்தில் இந்த மாடு இந்த வயசிலும் ஆடுகிறது – பாடுகிறது ; "கவிதை" என்ற பெயரில் குடல்களையும் உருவுகிறது! So ”பொஸ்தக ஆயிரம்வாலா” சாத்தியமானதே இந்த ”டைம்பாஸ்” ஆயிரம்வாலாவின் உத்வேகங்களால் தான் என்பதை மறுக்க முடியாதே ? 

இந்தப் பதிவுடனான பயணத்தில் எண்ணற்ற ஞாபகங்கள் என்னுள் இறைந்து கிடக்கின்றன! பதிவுகள்காண்டி நோட்டும், பேனாவுமாய் நான் தேவுடு காத்திராத இரயில்வே ஸ்டேஷனே தமிழகத்தில் பாக்கியிராது! பாஸ்போர்ட்டைத் தொலைத்து விட்டு பெல்ஜியத்திலும், மிலானிலும் குந்திக் கிடந்த நாட்களிலும், இந்தப் பதிவுப் பக்கமே எனது தஞ்சமாகி இருந்தது! அதை விடவும் மறக்க இயலா நினைவென்றால் அது 2019 அக்டோபரில் ஆயிரம் பின்னூட்டங்களிட்டு நீங்கள் செய்த அலம்பல்களின் இரவைத் தான் ! எனது ஞாபகம் சரியாக இருக்கும் பட்சத்தில், கனடாவில் பனிப் புயலில் நான் சிக்கிய அனுபவத்தின் முதல் அத்தியாயத்தைப் பதிவிட்டிருந்தேன். அதன் நீட்சியாக அடுத்த அத்தியாயத்தினை நான் பதிவிடுவதாக வாக்குத் தந்திருந்த விடுமுறை நாளில் என்னால் ஆஜராக முடியாது போக, நீங்களோ ரா முழுக்க அடிச்ச ரகளைகள் வேற லெவல் ! இதோ - அந்த 1028 பின்னூட்டங்கள் கண்ட தெறி பதிவின் லிங்க் : https://lion-muthucomics.blogspot.com/2019/10/blog-post_7.html

But ஆயிரம் பின்னூட்டங்ககளை நீங்கள் போட்டு தூள் கிளப்பிக் கொண்டிருந்த வேளையில் எனது நிலவரமோ சற்றே கலவரமாகயிருந்தது என்பது தான் நிஜம்! ”பின்னொரு நாளில் இந்தப் பதிவுகளின் பின்னணி பற்றிச் சொல்கிறேன்” என்று பின்னூட்டக் குவியல்களுக்கு நான் மத்தியில் எழுதியிருந்தது கூட நினைவில் உள்ளது! Maybe மொக்கையோடு மொக்கையாய் அதைப் பற்றியும் இன்றைக்கே பேசி விடலாமோ ? 

எல்லாம் ஆரம்பித்தது (2019) அக்டோபர் முதல் தேதியன்று! முந்தைய இரவு வரைக்கும் நான் பாட்டுக்கு சுற்றித் திரிந்து விட்டு, எப்போதும் போல் தூங்கி எழுந்த போது, காலையில் வலது கால் முட்டியை அசைக்க முடியவில்லை! நல்ல செட்டிநாட்டு பணியாரம் போல உப்பிப் போயிருந்தது ! காலை ஊன்றவும் முடியலை; மடக்கவும் முடியலை! மூச்சா போய் வரவே உலகத்தில் உள்ள அத்தனை சர்க்கஸ் வித்தைகளையும் அவிழ்த்து விட வேண்டியிருக்க, மிரண்டே போனேன். 'நீர் கோர்த்துள்ளனது; இதை வறுத்து ஒத்தடம் தரலாம்; காலை உசக்கே ஏற்றி வைக்கலாம் ; ஐஸ் கட்டி ஒத்தடம் தரலாம் ; புளிய மரத்தடியில் படுத்தா சரியாகிடும்' என்று ரகவாரியாக யோசனைகள் முன்வைக்கப்பட, சகலத்தையும் முயற்சித்துப் பார்த்தேன்! ஊஹும், பணியாரம் காரவடையாக மறுத்தது! மறுநாள் காந்தி ஜெயந்தி விடுமுறையாக இருக்க, எனது ஆஸ்தான டாக்டரோ குடும்பத்தோடு out of country ! சிவகாசியிலோ பெரியளவிற்கு ஆர்த்தோ ஸ்பெஷலிஸ்டுகள் கிடையாது & அருகாமையிலுள்ள பெரிய நகரமென்றால் மதுரை தான்! அப்போது தான் என் தங்கையின் கணவர் சமீபமாய் கோவையில் ஏதோ ஒரு ஆர்த்தோ நோவுக்கென ஆபரேஷன் செய்து தேறியிருந்தது நினைவுக்கு வந்தது. திருச்சி ரோடில் இருந்த அந்த புத்தம்புது ஹாஸ்பிடலில் பிரமாதமாக சிகிச்சைகள் சாத்தியமென்று அவர் சொன்னது நினைவுக்கு வர, மூன்றாம் தேதி பகலில் கோவைக்குப் பயணமானேன் – மனைவி + ஜுனியர் எடிட்டர் சகிதம்! பொதுவாய் எங்கே புறப்பட்டாலும் அண்ட்ராயரையும், ஆதாரையும் எடுத்து வைக்கும் முன்பாகவே, லேப்டாப்பை பெட்டிக்குள் திணித்து விடுவது வாடிக்கை – பதிவுகளை டைப் செய்வதன் பொருட்டு ! ஆனால் நானிருந்த நிலைமையில் லேப்டாப் மறந்தே போய்விட்டது! தவிர அது ஒரு புதன்கிழமை தான்! வியாழன் காலையில் (அக்டோபர் 4) அப்பாயிண்ட்மென்ட் ! ஏதாச்சும் மாத்திரை, மருந்துகளை தருவார்கள் – வாங்கிப்புட்டு வூட்டைப் பார்த்துக் கிளம்பி விடலாம் என்ற நம்பிக்கை உள்ளுக்குள் இருந்தது! So மிஞ்சிப் போனால் வெள்ளி இரவு வீடு திரும்பி விட்டாலும், சனி, ஞாயிறில் பதிவைப் பார்த்துக் கொள்ளலாம் என்று நம்பியிருந்தேன்!

முட்டிங்காலை மடக்கவே முடியாததொரு சூழலில் காரின் பின்சீட்டில் ஏறுவது கூட என்னவொரு பிரம்மப் பிரயத்தனம் என்பதை கோவைக்குக் கிளம்பும் சமயம் தான் உணர்ந்தேன்! சரி... தக்கி முக்கி ஏறியாச்சு; ஐந்து மணி நேர சாலைப் பயணத்தின் போது, இயற்கையின் உபாதையைக் கழிக்கத் தேவையானால் என்ன செய்வது? என்ற கேள்விக்கான விடை மெய்யாலுமே மிரட்டியது! To cut a long story short – கோவை சென்று சேர்ந்தோம் ஒரு வழியாய் !! மறுநாள் காலையில் மினுமினுத்துக் கொண்டிருந்த ஹாஸ்பிடலுக்குள் நுழைந்த மறுகணமே ஒரு வீல்சேரைக் கொணர்ந்து என்னை அதில் அமர்த்தித் தள்ளிச் சென்றார் ஒரு அட்டெண்டர்! நேராக ஒரு கவுண்ட்டரின் முன்னே சென்று பதிவு செய்த சற்றைக்கெல்லாம் ஒரு நம்பர் தந்து அதை கையில் வளையம் போல மாட்டி விட்டார்கள்! ‘பேஷண்ட் நம்பர் 6‘ என்பது எனது அடையாளமானது! டாக்டரைப் பார்க்கக் காத்திருந்த வேளையில் ஒரே தத்துவங்களாய் தலைக்குள் படையெடுத்தன ! ஞான் எடிட்டராக்கும்; 17 வயசு முதல் தொழிலதிபராக்கும் – என்ற ரேஞ்சுக்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்வரைக்கும் உள்ளாற குடியிருந்த இறுமாப்புகளெல்லாம் போன இடம் தெரியக் காணோம் ! இதோ – வெறும் நம்பராகி, தடதடக்கும் இதயத்தோடு, அடுத்து என்ன? என்று கூடத் தெரியாமல் வீல்சேரில் அமர்ந்திருந்த வேளையில் ,பேஸ்தடித்த ஒரு முழி தான் சாத்தியமானது !

சற்றைக்கெல்லாம் என்னை examine செய்தார் ஒரு சீனியர் டாக்டர்! கூடவே ஒரு மலையாளக் கலவையில் பரைஞ்ச அடுத்த நிலையிலான டாக்டரும், மூட்டை இப்டிக்கா – அப்டிக்கா ஆட்டி கியர் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தார். மூட்டின் அசைவுகளுக்கு உதவிடும் வகையில் உடம்பில் இயல்பாக, தேவைக்கு மட்டுமே சுரந்திடும் Sinovial fluid எதனாலோ மொத்தமாய்ச் சுரந்து தேங்கி நிற்கிறதென்றும், சில ப்ளட் டெஸ்ட்களை எடுத்துப் பார்த்தால் தான் காரணம் புரிபடக்கூடும் என்றார்கள்! பூம்-பூம் மாடு போல மண்டையை ஆட்டியபடியே ‘ஜம்‘மென்று வீல்சேரிலேயே போய் பரிசோதனைக்கு இரத்தம் கொடுத்தேன்! அங்கிருந்து நேராக Day Procedure என்ற ரூமுக்கு தள்ளிக் கொண்டு போய் படுக்கப் போட்ட போது தான், ”சுனா-பானா...ஏதோ சம்பவம் காத்திருக்குடா!” என்பது உரைத்தது! Again to cut a painful story short, அந்த மலையாள டாக்டர் வந்தார். பேசிக் கொண்டே காஷுவலாக பச்சக்-பச்சக்கென்று பணியாரத்தினை இயல்பாக்கும் பணியில் மும்முரமானார்! தடுப்புக்கு மறுபுறமிருந்து டேபிளிலோ வேறு ஏதோவொரு சிகிச்சை உள்ளூர்க்காரர் ஒருவருக்கும் அரங்கேறிக் கொண்டிருந்தது ! தொடர்ந்த கொஞ்ச நேரத்துக்கு எனக்கும் அந்த மனுஷனுக்கும் மத்தியில் – யாரோட எசப்பாட்டுக்கு சுதி சுத்தம் ? என்ற போட்டி நடக்காத குறை தான்! கோவை ஸ்லாங்கில் தெரிந்த கடவுளரையெல்லாம் அவர் அழைக்க, ”மருதக்காரனுங்கன்னா நாங்க இளப்பமா?” என்றபடிக்கே நானும் அவருக்கு tough கொடுத்துக் கொண்டிருந்தேன் ! ஒரு கால் மணி நேரத்திற்குப் பின்பாய் அந்த ரூமிலிருந்து Day Care அறைக்கு என்னை இட்டுப் போக, அங்கே டெய்லர் போல ஒருவர் வந்து வலது காலை முழுசாய் அளவெடுத்தார். இந்நேரத்திற்கு என்ன நடக்கிறதென்று கேள்விகளெல்லாம் கேட்கும் நிலையிலேயே நான் இல்லை; ஆளை விட்டாக்கா 'போற வழியிலே கொஞ்சூண்டு சுண்ணாம்ப வாங்கித் தடவிட்டு ஓடிப் போயிடுறேனே!' என்று நம்ம கவுண்டர் பாணியில் முனகாத குறை தான் ! இடுப்பு முதல் பாதம் வரைக்கும் ‘சபக்‘ என்று பிடித்துக் கொள்ளும் strap போல ஒரு வஸ்துவை டெய்லர் போலான நபர் கொணர்ந்திட, அதை எனது வலது காலில் மாட்டி வெல்க்ரோ ஸ்ட்ராப்களையும் பொருத்தி விட்டு, அடுத்த 10 நாட்களுக்கு இதைத் தவறாது அணிந்திருக்க வேண்டுமென்றும், காலை மடக்கப்படாது என்றும் டாக்டர் சொன்னார்! 

எனக்கோ ஊருக்குத் திரும்பி விடும் நமைச்சல்! ஆனால் தசரா விடுமுறைகள் நடுவே வருவதால் இரத்தப் பரிசோதனைகளின் முடிவுகள் கைக்கு வர 4 நாட்களாகி விடும் ! அது வரைக்கும் கோவையிலேயே இருந்து விட்டால் நல்லது என்றபடிக்கே பிஸியோதெரபி பிரிவுக்கு இட்டுப் போனார்கள்! அங்கேயோ ஒரு சிவகாசிக்காரரே இருக்க, மெதுமெதுவாய் நான் செய்திட வேண்டிய எக்ஸர்சைஸ் பற்றி விளக்கினார்! அத்தனையையும் கேட்டுக் கொண்டு அபார்ட்மெண்டுக்குத் திரும்பிய போது  – நம்ம சட்டித் தலையன் ஆர்ச்சி போல விறைப்பாக மட்டும் எட்டு வைக்க முடிந்தது! ஓய்வாய் பொழுதுகளைக் கழிக்கலாம் என்று கட்டையைக் கிடத்தினால், மறுபடியும் எழுந்திருக்க ஒத்தாசையின்றி முடியாதென்ற நிலை! So, தூக்கம் அசத்துற வரைக்கும் உட்கார்ந்தே இருக்கலாம் என்ற நொடியில் தான் நமது பதிவு பற்றிய ஞாபகம் வந்தது! ”நாசமாய்ப் போச்சு... லேப்டாப் இல்லியே! பதிவை எழுதி, ஊருக்கு அனுப்பி, டைப் செய்து வாங்கினாலும், அதைப் பதிவேற்றம் செய்ய சிஸ்டம் லேது எனும் போது, ஃபோனிலேயே கூத்தடிக்கணுமே!” என்ற கவலை மேலோங்கியது. எப்போதுமே டைப்பாகி வரும் பதிவுகளில் கணிசமான திருத்தங்கள் அவசியமாகிடும் என்பது எனது அனுபவம். So அவற்றை ஃபோனிலேயே செய்வதெல்லாமே நாக்குத் தொங்கச் செய்யும் பணி – at least எனக்காவது !

'சரி... ரைட்டு... எதைப் பற்றி எழுதலாம்?' என்ற மகாசிந்தனையோடு அமர்ந்த போது தான், காலைத் தூக்கி, நாலு எட்டு எடுத்து வைக்கவே, பச்சைப் புள்ளையாட்டம் வாக்கரோடு தடுமாறி வரும் இந்த நேரத்தில், காடு – மேடு – மலை – கனடா - பனி என்று எருமைக்கடாவாட்டம் ரவுண்ட் அடித்த பயண அனுபவத்தைப் பற்றி எழுதினால் செம காமெடியாக இருக்கும் என்றுபட்டது! சப்பாணியாய் முடங்கிக் கிடக்கும் நொடியில் தானே ஆண்டவன் தந்திருந்த சிறகுகளின் முழு மகிமை தெரிகிறது?! So அந்தக் கோவை மாலையில் துவங்கி, மழை இரவின் நிசப்தத்தில் பத்தி பத்தியாய் – பக்கம் பக்கமாய் வண்டி வண்டியாய், எழுதிய பதிவு தான் ”பணியும்... பனியும்” ! எழுத எழுத நீண்டு கொண்டே போன பதிவை சுருக்கமாய் முடிக்கவும் மனசு வரலை ; எதையுமே நறுக்கென்று சொல்லிப் பழக்கமும் கிடையாதென்பதால், crisp ஆக்கிடத் தெரியவுமில்லை !! எழுதினேன், எழுதினேன், ராவின் முக்கால்வாசிக்கு எழுதினேன் ! ஒரே நிலையில் குந்தியிருந்தால் வலி பின்னியெடுக்க, அவ்வப்போது டான்ஸ் ஆடிக் கொண்டே எழுத வேண்டியிருந்தது ! "இதெல்லாம் இப்போ தேவையா ?" என்ற கேள்வி முகம் முழுக்க விரவியிருக்க, "ஆனா இது சொன்னா கேக்கவா போகுது ?? என்ற புரிதலில் ஆத்துக்காரி தூங்கிப் போய்விட, பெய்து கொண்டிருந்த மழையின் தாளம் மட்டுமே துணைக்கு இருந்தது !

காலை புலர்ந்த போது நாலு நாலு பக்கங்களாய் ஃபோட்டோ எடுத்து ஊருக்கு அனுப்பி, மைதீனிடம் அவற்றை DTP செய்து வாங்கி அனுப்பச் சொல்லிக் கோரினேன் ! ஆஞ்சநேயர் வால் நீளத்தினாலான பதிவு என்பதால் பொறுமையாக டைப் செய்து சனிக்கிழமை நள்ளிரவுக்கு ஒட்டிய வேளையில் தான் அனுப்பி வைத்தார்கள் ! அப்போவும் நம்ம தலைக்குள் குடியிருந்த குறளியானது – வந்ததை அப்படியே upload செய்திடவும் சம்மதிக்கவில்லை; திருத்தங்கள் போடச் சொல்லி ஜிங்கு ஜிங்கென்று ஆட்டிப்படைக்க, அடுத்த மூன்று மணி நேரங்களுக்கு ஃபோனில் போட்ட மொக்கை சொல்லி மாளாது! ஒருவழியாய் இரவு மூன்று மணி சுமாருக்கு பதிவு ரெடியாகிட, upload செய்து விட்டு உறங்கப் போனேன் ! 

தொடர்ந்த அந்த ஞாயிறு நமது வலைப்பூவே திருவிழாக் கோலமானது! So ஜாலியான அந்தத் தருணத்தில் போய் ”இன்ன மெரி... இன்ன மெரி... பணியாரமுங்கோ... இன்ன மெரி... இன்ன மெரி ப்ரொசிஜர் பண்ணி... இன்ன மெரி... இன்ன மெரி கோவையிலே தடுமாறிக்கிட்டுக் கீறேனுங்கோ” என்று சொல்லி அந்த உற்சாகங்களுக்கு அணை போட எனக்கு மனம் ஒப்பவே இல்லை! என்ன – முதல் அத்தியாயத்திற்குப் பின்பாக இரண்டாவது பாகத்தை உரிய நேரத்தில் எழுதி உங்களிடம் ப்ராமிஸ் செய்தது போலாகவே அடுத்த சில நாட்களில் upload செய்திருக்க வேண்டும் ! ஆனால் பண்டிகை விடுமுறை ; ஊரில் டைப்படிக்க ஆளில்லை  ; அடுத்தடுத்து ஹாஸ்பிடல் செக்கப்ஸ் - என்ற சுழலின் மத்தியில் கோவையில் இருந்தவரைக்கும் Part 2 சாத்தியமாகிடவில்லை !  ஒருவழியாக ஊருக்குத் திரும்பிய பிற்பாடே இரண்டாம் பாகத்தை டைப் செய்து வாங்க இயன்றது ! அதற்குள் நீங்கள் அடிச்சு துவம்சம் செய்து விட்டீர்கள் ஆயிரத்துச் சொச்ச பின்னூட்டங்களை ! 😍😍😍

சாவகாசமான பின்னாள் ஒன்றினில், அந்தப் பதிவினை எழுதிய சூழலை அசைபோட்ட போதும் சரி, அந்தப் பதிவில் நான் எழுதியிருந்த கனடா சமாச்சாரங்களை மறுக்கா வாசித்த போதும் சரி, இரண்டுமே மறக்க இயலா அனுபவங்கள் என்பது உறைத்தது ! So by far – இந்த ஆயிரத்துள் எனது ஆதர்ஷப் பதிவுகள் இந்த இரண்டு என்பேன்!!

https://lion-muthucomics.blogspot.com/2019/10/blog-post_34.html

https://lion-muthucomics.blogspot.com/2019/10/blog-post_13.html

இவை தவிரவும் எண்ணற்ற memorable moments இந்த அண்டாவாயனின் ஆயிரம் பதிவு மேளாவினுள் புதைந்து கிடப்பதை மறுப்பதற்கில்லை : 

-சுட்டி லக்கி இதழ் வெளியான சமயத்து பின்னூட்ட லூட்டிகள்!

- புது மொழிபெயர்ப்புடன் "தங்கக்கல்லறை" வெளியான நாட்களில், டிரம்மில் ஊறப் போட்டு, தெளியத் தெளிய மொத்திய நாடக்ள்!

- LMS இதழுக்கு முன்பான வாரங்களில், அதன் கதைகள் ஒவ்வொன்றும் preview கண்ட பொழுதுகள்!

- முத்துவின் NBS ரிலீஸைத் தொடர்ந்தான மேளா!

- இரத்தப் படலம் கலர் தொகுப்பின் சமயத்து இரத்தக் களரியான ரகளைகள்!

- “நிஜங்களின் நிசப்தம்“ கி.நா.வின் அலசல்கள் !!

- கொரோனா லாக்டௌனின் போது நெதம் ஒரு பதிவு என்று செய்த குசும்புகள்!

என்று அடுக்கிக் கொண்டே போகலாம்! In fact பழைய பதிவுகளுக்குள் தலை நுழைத்து மேலோட்டமாய் மேய்ந்தாலே, அந்தந்த காலகட்டங்களுக்கு transport ஆகிட முடிகிறது! அப்போதைய சந்தோஷங்கள்; சண்டைகளில் கிழிந்த சட்டைகள்; தொட்ட உயரங்கள்; வாங்கிய குட்டுக்கள்; - என சகலத்தையுமே உணர முடிகிறது! So in many ways, இந்த வலைப்பக்கத்துக்கென ஒரு ஜீவன் இருப்பது ஸ்பஷ்டமாய் புரிகிறது! ஆரவாரமாய் பலரும், ஆக்ரோஷமாய் சிலரும், அமைதியாய் நிறையப் பேரும், அலம்பலாய் கொஞ்சப் பேரும் - இந்தப் பதிவின் பயணத்துக்குத் தத்தம் பங்களிப்புகளைத் தந்திருப்பது புரிகிறது! 

More than anything else, ”ஒரு சும்மானாச்சும் முயற்சியாய்” ஜுனியர் எடிட்டரின் அனற்றலின் பெயரில் ஆரம்பித்த இந்த வலைப்பக்கம் எனது வாழ்க்கையின் ஒரு அங்கமாகி விட்டிருப்பது தான் என்னையே மலைக்கச் செய்யும் சமாச்சாரம்! ஆரவாரமாய் இங்கே ஜாக்கி சான்களாக, ப்ரூஸ் லீக்களாக, ஜெட் லீக்களாக, நாமெல்லாம் உருமாறி கட்டிப் புரண்ட நாட்களிலெல்லாம் – “இது தேவை தானா? உனக்கு இது தேவை தானா??” என்று உள்ளுக்குள் தோன்றியதை மறுக்க மாட்டேன்”! In fact டேபிள்,நாற்காலிகளை எல்லாம் நாம் யு-டர்ன் போட்டு நொறுக்கிய அந்த நாட்களில், ஒட்டு மொத்தமாய் இங்கே பின்னூட்டங்களிடும் வாய்ப்பை க்ளோஸ் பண்ணி விட்டு, வெறுமனே நான் மாத்திரம் எழுதிடும் ஒரு தகவல் பலகையாய் மாற்றிடலாமா? என்ற நினைப்பெல்லாம்  தோன்றியிருக்கிறது! ஆனால் surprise... மறு நாளே கிழிஞ்ச சொக்காய்களை ஒட்டுப் போட்ட கையோடு அம்புட்டுப் பேரும், மறுக்கா ஜாலியாய் கும்மியடித்த நாட்களே தொடர்ந்தன! So in many ways பொதுவெளி சார்ந்த வாழ்க்கைப் பாடமாக இந்தப் பக்கம் எனக்கு அமைந்துள்ளதெனில் அது மிகையாகாது! And சனிக்கிழமைகளாகி விட்டாலே எவ்வளவு பணிகள் தொங்கலில் நின்றாலும், அவற்றை எல்லாம் ஓரம்கட்டி விட்டு எதையாச்சும் கிறுக்கிய கையோடு உங்கள் முன்னே ஆஜராவது part of life என்றாகிப் போச்சு! 

எனது மாளா வியப்பெல்லாமே – இத்தினி காலமாகியும் எனது அந்த ஒற்றைப் பரிமாண எழுத்துக்களில் சலிப்பு ஏற்படாது தொடர்வது எப்படி? என்பதும் – (நமது) காமிக்ஸ் தவிர்த்த வேறு எதன் மீதும் கருத்து கந்தசாமியாகி அபிப்பிராயங்கள் சொல்வதை அறவே தவிர்த்து வரும் சூழலிலுமே இத்தனை பதிவுகளுக்கான சரக்கு எவ்விதம் தேறியதோ ? என்பது குறித்தும் தான்! Anyways முதல் நாள் முதலாகவே இந்தப் பக்கத்தில் காமிக்ஸ் தவிர்த்த வேறு எதைப் பற்றியும் எழுதுவதில்லை என்றான முடிவை, ஆயிரம் பதிவுகளின் ஓட்டத்தோடும் கெட்டியாய் பிடித்துக் கொள்ள முடிந்திருப்பதில் அண்ணாச்சி ஹேப்பி! ரைட்டு... ஆச்சு ஆயிரம் ! சென்டிமெண்டுகளை ஜுஸ் போட்டது போதுமென்றால் கடா வெட்டு பக்கமாய் போகலாமா? 

To start with – கொஞ்சம் சுமாரான சேதி : நடப்பாண்டினில் அந்த Make Your Own Mini சந்தா (MYOMS) பெருசாய் take off ஆகுமென்ற நம்பிக்கை எனக்குக் குறைந்து கொண்டே செல்கிறது! ”மூன்று மாத புக்கிங் அவகாசம்” என்பதில் கிட்டதட்ட இரண்டு மாதங்கள் ஓடியாச்சு – yet முன்பதிவு நம்பர் தத்தா–புத்தாவென்று இப்போது தான் 160-ஐ எட்டியுள்ளது! ”400" என்ற இலக்கு தூரத்தில் – ரொம்ப ரொம்ப தூரத்தில் இருப்பது போல் தென்படுகிறது! நம்மாட்களும் மாங்கு - மாங்கென்று தினப்படி ஃபோனில் இதற்கான நினைவூட்டல்களைத் தந்து வருகின்றனர் தான்; ஆனால் சொல்லிக் கொள்ளும் விதமாய் புக்கிங் நஹி! இதில் தெளிவாகத் தெரியும் / புரியும் ஒரே சமாச்சாரம் – முன்பதிவுகள் / தனித்தடம் என்பனவுமே Star Power இருந்தால் மட்டுமே வேகம் எடுத்திடும் என்பது ! நல்ல கதைகள் தான்; ஆனால் உலகைத் தூக்கி நிப்பாட்டப் போகும் நாயகர்களில்லை‘ என்ற சூழல் எழும் பட்சத்தில், வண்டி தத்தித் தத்தித் தான் ஓடும் போலும்! So தொட்டதுக்கெல்லாம் ”முன்பதிவுத் தனித்தடம்” என்ற திட்டமிடலை முதலில் மூட்டை கட்டியாகணும் என்பது முக்கிய பாடம் ! 

இந்த நொடியில் எனக்குத் தோன்றுவது இதுவே :

- MYOMS சந்தாவுக்கென நாம் உத்தேசித்திருந்த 90 days அவகாசத்தில், எஞ்சி இருக்கும் 30 நாட்களுக்குக் காத்திருப்பது ஒரு பக்கமென்றால், அது பூர்த்தி காண்கிறதா - இல்லையா ? என்ற கேள்விக்கு விடை தெரியாத வரைக்கும், அடுத்த அறிவிப்பினை செய்திடல் சிரமமாக உள்ளது ! தற்போதைய தத்தித் தவழும் துரிதமே தொடர்ந்திடும் பட்சத்தில், முன்பதிவுகள் 225 என்ற எண்ணிக்கையைத் தொட்டாலே பெரிய சமாச்சாரம் என்பதாகவே கணிக்க இயல்கிறது ! அது நடைமுறைக்கு சாத்தியமே தந்திடாத ஒரு நம்பராக இருக்கும் என்பதால், மீசையில் ஒட்டக் கூடிய  மண்ணை தட்டி விட்டுக் கொண்டே, MYOMS முயற்சி பரணுக்கு பார்சலாகிறது என்று அறிவிக்கலாம் தான் ! 

அதற்காக MYOMS-ல் விளம்பரப்படுத்தப்பட்ட ஆல்பங்களை கண்ணை மூடிக்கொண்டு கடாசிடாது, தொடரக்கூடிய 2025 ரெகுலர் அட்டவணையில் பாதியையும், ஆன்லைன் மேளா போலான சந்தர்ப்பங்களில் மீதியையும் - புக்கிங் ; இத்யாதி என எதுவுமின்றி ‘பச்சக்‘கென வெளியிட வேண்டியது ! இவற்றை வாங்கிடப் பிரியப்படும் நண்பர்கள் அந்நேரம் வாங்கிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையுடன் !

- And தற்சமயமாய் ரூ.930/ சந்தா செலுத்தியுள்ள 160 நண்பர்களுக்கும் இரண்டு options முன்வைக்கலாம்!

1. Option # 1 : சுலபமானது – முன்பணத்தைத் திரும்ப வாங்கிக் கொள்வது.

2. Option # 2 : இந்தத் தொகையை காத்திருக்கும் அடுத்த தனித்தடத்தில் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்!

'அக்காங்... அது என்ன புதுத் தனித்தடம்னு' கேட்கறீங்களா? இருக்குதே... Smashing ‘70s; Supreme ‘60s நிறைவுற்ற பிற்பாடு அடுத்த சீஸன் கொஞ்சம் மாற்றங்களோடு வருமென்று சொல்லியிருந்தது ஞாபகமிருக்குங்களா ? So தீபாவளி 2024 முதலாய் துவங்கிடவுள்ளது –

The ELECTRIC ‘80s!!

எண்பதுகளில் நாம் ரசித்து மகிழ்ந்த எக்கச்சக்க நாயக – நாயகியர் இதோ – இந்த மின்சாரமூட்டும் தனித்தடத்தில் ரகளை செய்திடக் காத்துள்ளனர்!

சில பதிவுகளுக்கு முன்பாய் – நம்மத் தானைத் தலைவர் ஸ்பைடர் டைஜெஸ்ட் போடாங்காட்டி, தாரமங்கலத் தலீவரைக் கொண்டு டீக்குடிக்கும் போராட்டத்தில் குதிப்போமென்ற குரல்கள் ஒலித்தன அல்லவா? அவற்றைக் கேட்ட பின்பும் ‘தேமே‘ என்று அமைதி காக்க முடியுமா – என்ன? So இந்த ELECTRIC ‘80s தனித்தடத்தில் ஆட்டத்தைத் தொடங்கப் போகிறவரே நமது கூர்மண்டையர் தான்! ”The சூப்பர் ஸ்பைடர் ஸ்பெஷல்” – இங்கு அவ்வப்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் "பாட்டில் பூதம்" கதையினைப் பிரதானமாகக் கொண்டிருக்கும்! 1990-களில் வெளியாகி, இன்று வரை பல "ஆர்வலர்களுக்கும்" கல்லா கட்ட உதவி வரும் இந்த iconic சாகஸம் மெகா சைஸில் வெளிவந்திடவுள்ளது! அதனோடே “சிகப்புத் தளபதி” & ”வீனஸ் கல் மர்மம்” சிறுகதைகளில் நம்மவர் லூட்டி செய்திடவுள்ளார்! So தீபாவளிக்கு மேற்கொண்டும் மெருகூட்ட உதவியது போலாகவும், நமது லயனின் 40-வது ஆண்டினில் அழுத்தமாகத் தனது இருப்பைப் பதிவு செய்திடும் விதமாகவும் ஸ்பைடரார் மெகா சைஸில் வந்திடவுள்ளார்!

கூர்மண்டையனுக்கு இடம் தந்து விட்டு சட்டித்தலையனுக்கு இடம் மறுக்கவாவது முடியுமா – இந்த லயனின் மைல்கல் ஆண்டினில்? So வால்பிடித்தபடியே இந்தாண்டின் கடைசி மாதத்தில் காத்துள்ளது – The அதிரடி ஆர்ச்சி ஸ்பெஷல் ! நமது லயனின் இஸ்திரி; ஜியாக்ரபி; பயாலஜி; சகலத்திலும் விற்பனை எனும் அளவுகோல்களில் இயன்றளவிற்கும் முதலிடம் பிடித்து நிற்கும் ”புரட்சித் தலைவன் ஆர்ச்சி” தான் இந்த ஸ்பெஷல் இதழின் highlight. அது ஒரிஜினலாய் வெளியான பிப்ரவரி 1987ல் விற்றது 31,000 பிரதிகள்! So ஒரு மறக்கவியலா சாகஸத்தோடு, இன்னொரு காலப்பயண சாகஸமும் இணைந்து ஆர்ச்சி ஸ்பெஷல் வரவிருக்கிறது! Again மெகா சைசில் !

ELECTRIC ‘80s-ன் ஆல்பம் # 3-ல் முற்றிலும் புதுக்கதைகளுடன் ஆஜராகவிருப்பது யாராக இருக்கக் கூடுமென்று தான் guess பண்ணிப் பாருங்களேன்? ஹி! ஹி! ஹி! நமது துவக்கப்புள்ளியை மறந்துப்புட்டு ரங்கோலி, மாக்கோலம் என்றெல்லாம் போட்டுத் திரிந்தால் அது நியாயமாகுமா? So நமது இளவரசி புத்தம் புது இரு அதிரடிகளுடன் கலக்கிடவிருக்கிறார்! இது குறித்து மேச்சேரிகளிலும், டெக்சாஸிலும் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டங்கள் வெளிப்படையாக களைகட்டுமென்ற நம்பிக்கை உள்ளதோ இல்லையோ – அந்த ஸ்லீப்பர் செல்கள் சத்தமில்லாமல் சந்தோஷப்பட்டுக் கொள்வர் என்று நம்பலாம்! So welcome to The ப்ளைசி ஸ்பெஷல் ! Of course - மெகா சைஸிலேயே தான் !! ஹேப்பியா ராஜசேகரன் சார் ? 

So லயனின் 3 துவக்க நாட்களது ஸ்டார்கள் ELECTRIC ‘80s தடத்தினில் பாதி இடத்தை ஆக்கிரமித்திருக்க – மீத 3 ஸ்லாட்கள் முத்து காமிக்ஸில் க்ளாஸிக் கிங்ஸ்களுக்கே !!

வேதாளர், மாண்ட்ரேக், ரிப் கிர்பி, காரிகன், டிடெக்டிவ் சார்லி மற்றும் விங்-கமாண்டர் ஜார்ஜ் – என 6 ஜாம்பவான்கள் இதற்கு முன்பான Smashing ‘70s & Supreme ‘60s தடங்களில் தனித்தனித் தொகுப்புகளாய் ஆஜராகியிருந்தனர்! So இது வரையிலான மெகா இதழ்களில் கிட்டத்தட்ட 19 வேதாளர் கதைகள்; 20 காரிகன் கதைகள் ; 19 ரிப் கிர்பி கதைகள் – என்ற ரேஞ்சுக்கு திகட்டத் திகட்ட  வெளிவந்திருந்தன ! ஐயமேயின்றி இதே பாணியில் தொடர்ந்திட சாத்தியமில்லை என்பதால் – ஆறு நாயகர்களையும் ஒரே தொகுப்புக்குள் குடியேற்றி, கீழ்க்கண்ட விகிதங்களில் சீட்கள் தருவதாக உள்ளோம்!

So காத்திருக்கும் ஒவ்வொரு தொகுப்பிலும் ::

வேதாளர் புதுசு : 2 கதைகள் (Sy Barry ஆர்ட்ஒர்க்)

ரிப் கிர்பி புதுசு : 2 கதைகள்

மாண்ட்ரேக் புதுசு : 2 கதைகள்

சார்லி : 1 கதை

காரிகன் புதுசு  : 1 கதை

விங்-கமாண்டர் ஜார்ஜ் புதுசு  : 1 கதை

ஆக மொத்தம் : 9 கதைகள் (ஒற்றை ஆல்பத்தில்)

இவர்கள் அனைவருமே காமிக்ஸ் ”கிங்ஸ்” என்பது மட்டுமல்லாது – அமெரிக்க King Features-ன் பிள்ளைகள் என்பதால் – The King’s ஸ்பெஷல்ஸ் 1 ; 2 ; 3 என்று மூன்று ஆல்பங்களில் வலம் வந்திடுவார்கள்!

- 3 தொகுப்புகள் :

- ஒவ்வொன்றிலும் 372 பக்கங்கள்!

- ஹார்ட்கவர்

- விலை (தலா) ரூ.450/- (3 x Rs.450 = Rs.1350)

So எந்த நாயகரின் சாகஸமும் overkill ஆக இனி இருந்திடாது என்று நம்பலாம்! And ஒவ்வொரு ஆல்பமும் கதம்பக் கூட்டணியாக இருக்குமெனும் போது, நிச்சயமாய் variety கிட்டிடுமென்றும் எதிர்பார்க்கலாம்! So இதுவே ELECTRIC ‘80s தனித்தடத் திட்டமிடல்!

MYOMS சந்தாவினை நாம் பரணுக்கு அனுப்புவதாயின்  - அதற்கென நீங்கள் செலுத்தியுள்ள தொகைகளை இந்த ELECTRIC ‘80s சந்தாவினில் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்! தமிழகத்தினுள் என்றால் மேற்கொண்டு ரூ.1000 செலுத்தினால் மதி !இல்லேப்பா ராசா... பழைய பார்ட்டிங்க சங்காத்தமே நமக்குத் தோதுப்படாதென்று” நினைத்தால் – சிம்பிளாக GPay-ல் தொகைளைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்! தீர்மானம் எதுவாகயிருப்பினும் நமக்கு ஓ.கே. தான்!

ரைட்டு... வழக்கம் போல பழசைக் கண்டு குதூகலிப்போர் ஒருபுறமிருக்க, முகம் சுளிப்போர் மறுபுறமிருப்பது தெரிந்த விஷயமே! But இந்த ELECTRIC ‘80s தனித்தடத்தில் உங்களை ஆறுதல்படுத்தக் கூடிய விஷயமொன்று இருப்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் : இங்கே சகலமும் மறுபதிப்புகளல்ல!!

- ஸ்பைடர் & ஆர்ச்சி ஆல்பங்கள் நீங்கலாய் பாக்கி நான்கு ஆல்பங்களிலுமே அத்தனையும் புதுக்கதைகளே இடம்பிடித்திடவுள்ளன!

And இயன்றமட்டுக்கு மொக்கையாக அல்லாத கதைகளையும், புராதனம் சொட்டாத களங்களையுமே தேர்வு செய்திட முனைந்து வருகிறோம்! In fact, மாடஸ்டியில் காத்துள்ள கதைகளெல்லாமே தொடரின் கட்டக்கடைசியில் உருவான சாகசங்கள் தான் ! So க்ளாஸிக் சாகஸங்கள் என்றாலும் உங்களை உறக்கம் கிடத்தும் சமாச்சாரங்கள் இராதென்று தகிரியமாய் நம்பலாம்! Ditto with வேதாளர் too : 1980-களில் உருவாக்கப்பட்ட கதைகளுக்குள்ளும் டைவ் அடித்திடவிருக்கிறோம் ! End of the day, க்ளாஸிக் நாயகர்களே கிட்டங்கியைச் சடுதியாய் காலி செய்யும் மனசும், திறனும் கொண்டவர்களாய் இருப்பதால், அவர்களைத் தவிர்ப்பதென்பது இயலாக் காரியமாகிறது! So ஸ்டார் ஹோட்டலின் மெனுவில் கூட தோசைகளும், பொங்கல்களும் இடம் பிடித்திடுவதைப் போல க்ளாஸிக் ஸ்டார்களையும் ஏற்றுக் கொள்வோமே! 

Moving on – இரு ”ஆயிரம்வாலா” தருணங்களுக்குமான ஸ்பெஷல் இதழ்களும் நிலுவையில் நிற்பது நினைவில் உள்ளது :

ஆந்தையன் பொறுப்பேற்ற பிற்பாடு 1000+ இதழ்களை உருவாக்கும் பணியில் பங்கேற்றிருந்ததைக் கொண்டாடும் விதமாய் ஒரு MAGIC MOMENTS ஸ்பெஷல் ! (MMS)

அப்புறம் - இதோ இப்போது 1000 பதிவுகளைத் தொட்டு நிற்பதை ஜாலியாய் நினைவு கூர்ந்திட ஒரு ஸ்பெஷல் !! இந்த 1000 பதிவு ஸ்பெஷலுக்கு நீங்களே ஏதாச்சுமொரு பெயரை முன்மொழிந்தால் சிறப்பாக இருக்குமென்பேன் ! இதன் வெற்றிக்கு முழுமுதற்காரணங்களே நீங்கள் தானெனும் போது, அதற்கொரு பெயரைச் சூட்டுவதும் நீங்களாக இருப்பது தானே பொருத்தமாகிடும் ? வழக்கமான, மாமூலான பாணிகளிலிருந்து விலகி நிற்குமொரு பெயராக இருக்கட்டுமே guys ? (பெயர் எதுவாக இருந்தாலும் அந்த "THE" முக்கியம்னும் மறந்துப்புடாதீங்க !)

And இந்த 2 ஆயிரம்வாலா பட்டாசுகளும் நமக்கு சந்தோஷமான தலைவலிகளை முன்வைக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை !! ஏற்கனவே "ஆன்லைன் மேளா" என ஒரு கத்தை இதழ்கள் சந்தாவிற்கு அப்பாற்பட்டு வெளி வந்துள்ளன & இதோ - ELECTRIC '80s தனித்தடம் சார்ந்த அறிவிப்பும் இதோ - இப்போது செய்தாச்சு ! போதாக்குறைக்கு V காமிக்ஸ் தடத்தின் ஜூலை to டிசம்பர் 2024-க்கான ஆறு மாச சந்தா அறிவிப்பும் பெண்டிங் உள்ளது !! இதோ - அதற்கான announcement !!   

ஏற்கனவே உங்கள் பர்ஸ்களுக்கு கண்ணி வெடிகளை கணிசமாய் இறைத்துள்ள நிலையில், ஆயிரம்வாலாக்களின் பெயரைச் சொல்லி மேற்கொண்டும் டைம்பாம் விதைக்க பயமாகவுள்ளது ! 'ஆங்....அது தான் ஆகஸ்டில் ஈரோடு விழா வருதில்லே...அதுக்கு ரெடி பண்ணிடலாமே ?' என்ற கேள்வி எழலாம் ! ஆகஸ்ட் 2 to 13 தேதிகளுக்கு  ஈரோட்டு புத்தக விழா அரங்கேறிடவுள்ளது ! So நடுவே இருக்கும் இந்த இரண்டே மாத அவகாசத்துக்குள் ஜூலை & ஆகஸ்ட் ரெகுலர் தடத்து 8 இதழ்களை தயாரித்த கையோடு - இந்த ஆயிரம்வாலா ஸ்பெஷல்ஸ்களையுமே ரெடி செய்வதென்பதெல்லாம் நடைமுறை சாத்தியமே அல்லாதவை !! ஒருக்கால் அந்த ஸ்பெஷல்ஸ் "கார்சனின் கடந்த காலம்" போலான மறுபதிப்புகளாய் அமைந்திட்டால் வேலை சுலபம் தான் - ஆனால் நடப்பாண்டுக்கு இதுக்கும் மேலாய் மறுபதிப்புகள் வேணாமே என்பதில் தீர்மானமாய் உள்ளேன் !  

அதே போல இந்தவாட்டி வாசக சந்திப்பை சேலத்துக்கு இடமாற்றம் செய்திடலாமே என்ற கோரிக்கைகளும் ரவுண்டில் உள்ள சூழலில், அதற்கும் செவி தரும் அவசியமுள்ளது ! இரண்டே ஆண்டுகளில் சேலம் புத்தக விழாவானது ஒரு அட்டகாசமான விற்பனைக்களமாக மாற்றம் கண்டிருப்பது நண்பர்களின் கோரிக்கைக்கு பின்னணியாக இருப்பது புரிகிறது ! So சொல்லுங்கண்ணே :

ஆகஸ்டில் ஈரோடா ? நவம்பரில் சேலமா ? 

- எது வசதிப்படுமென்று சொல்லுங்களேன் ? இதோ - அதற்கான ஓட்டிடும் தளம் : https://strawpoll.com/2ayLQJ4wMn4

ரைட்டு....இப்போ முக்கியமான மேட்டருக்கு வருவோமா ? எங்கே - எப்போது ? என்ற கேள்விகள் ஒருபுறமிருக்க - இந்த ஸ்பெஷல்களில் இடம்பிடித்திடப் போவது என்னவென்ற கேள்வி தானே பிரதானம் ?! இந்த இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யும் பொறுப்பை நான் எடுத்துக் கொண்டால், இன்னொன்றைத் தேர்வு செய்யும் வேலையினை நீங்கள் சிறப்பாய் செய்ய மாட்டீர்களா - என்ன ? So MAGIC MOMENTS Special இதழுக்கான தேர்வினை ஞான் செய்யும் - அது ரெம்போவே சுலபமான பணி என்பதால் !! 

**இது வரையிலான இந்தப் பயணத்தில் ; நான் பொறுப்பேற்றுத் தயாரித்திருக்கும் ஆயிரத்து சொச்சத்தில் - யாரது சாகசங்கள் maximum இடங்களைக் கைப்பற்றியுள்ளன ? என்று பார்த்தேன் !! 

**இது வரைக்குமான அனுபவத்தினில் - யாருக்கு maximum ஸ்பெஷல் இதழ்கள் போட்டிருக்கிறோம் ? என்றும் பார்த்தேன் !

**இது வரைக்குமான விற்பனைகளில் யாருக்கு maximum ஹிட்ஸ் அமைந்துள்ளன ? என்றும் ஆராய்ந்தேன் ! 

போக்கிரி பட வசன பாணியில் தான் பதில் கிட்டியது : 'யாரு அடிச்சா பொறி கலங்கி, பூமி அதிருதோ, அவன் தான் டெக்ஸ் !' Oh yes - 1985 முதலாய் நம்முடனான பயணத்தைத் துவக்கி, 39 ஆண்டுகளுக்குப் பின்னேயும் கோலோச்சும் அசாத்தியராய்த் தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டின் அட்டவணையிலும் ஆளாளுக்கு ஒரு ஸ்லாட் ; ரெண்டு ஸ்லாட்டுக்கென சட்டையைக் கிழித்துக் கொண்டிருக்கும் வேளையில் கெத்தாய் - கொத்தாய் 12 ஸ்லாட்களை வாரிக் கொள்ளும் நிகரற்ற இரவுக்கழுகாரைத் தாண்டி வேறு யாரையும் இந்த MAGIC MOMENTS ஸ்பெஷலுக்குப் பரிந்துரைக்க எனக்குத் தோணலை ! So TEX it will be !!

Of course - 'அவுகளையும், இவுகளையும், அப்புச்சியையும், அத்தாச்சியையும்  கோர்த்து NBS மெரி ஒரு கதம்ப குண்டு போடுவேன்னு எதிர்பார்த்தேன்' - என்ற விசனக்குரல்கள் ஒலிக்காது போகாதென்பது தெரியும் தான் - but இந்தக் கூட்டணிகள் சமாச்சாரமானது - King Features & Fleetway க்ளாஸிக் நாயகப்பெருமக்களைத் தாண்டிய வேறு யாருக்குமே இனி சாத்தியமாகிடாது என்பதே bottomline ! மிஞ்சிப் போனால் லக்கி லூக்கையும், ரின்டின் கேனையும் ஒரே இதழில் போட அனுமதிப்பார்களே தவிர, வேறு ஆரும், இனிமேற்கொண்டு ஆரோடும் கூட்டணி போட வாய்ப்புகளெல்லாம் பூஜ்யமே ! போனெல்லி நிறுவனத்திலேயே - அவர்களது நாயகர்களை தனித்தனி தடங்களில் பார்த்திடவே விரும்புகின்றனர் ! So 'இதிலே கொஞ்சம், அதிலே கொஞ்சம்' என்ற மெட்றாஸ் மிக்சர் படலம்ஸ் இனியும் சாத்தியமில்லை folks - so அது குறித்த கோரிக்கைகள் இனி எப்போதுமே வேணாமே ப்ளீஸ் ? கதம்ப இதழ்களை ரசித்தே தீர வேண்டுமெனில் இனி மாயாவி மாமாவையும், ஸ்பைடர் சித்தப்புவையும், ஆர்ச்சி அண்ணாச்சியையும், ஜேன் பாண்ட் அத்தாச்சியையும் - ஒரே இதழில் போட்டுத் தாக்கி மகிழ்வதைத் தாண்டிய options லேது ! 

ரைட்டு...டெக்ஸ் சாகசம் என்பது தீர்மானமாச்சு ; கதை எதுவோ ? என்ற கேள்விக்கு இனி விடை காண்போமா ? பொதுவாய் நம்ம லக்கி லூக் ; சிக் பில் & ரிப்போர்ட்டர் ஜானி கதைகளில் தான் 80+ கதைகள் இருப்பது உண்டு ; so அவற்றுள்ளான தேர்வுகளுக்கு மட்டும் கொஞ்சமே கொஞ்சமாய் வியர்வை சிந்திட அவசியப்படும் ! ஆனால் மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு கால் மணி நேரத்  தேடலில் ஏதேனுமொரு ஆல்பத்தை pick செய்திட இயன்றிடும் ! ஆனால் நம்ம இரவுக்கழுகாரின் கதையே வேறு !! ஒரு சமுத்திரமே காத்திருக்க, அதனுள் குதித்து புதையல் தேடுவதென்பது நாக்குத் தொங்கச் செய்யும் சமாச்சாரம் !! And வண்டி வண்டியாய் தோண்டித், துருவி, தேடி கதைகளைத் தேர்வு செய்தாலுமே கொஞ்சம் பிம்பிலிக்கி-பிலாக்கிக்கள் ஆகிப் போவதை மறுக்க இயலாது தான் ! என்னிடம் டெக்ஸ் கதைக்குறிப்புகள் கொண்டதொரு தனி டயரியே இருக்கும் போதிலும், இந்த MAGIC MOMENTS ஸ்பெஷலுக்கென டெக்ஸ் சாகஸத்தினை shortlist செய்வதற்குள் கிறுகிறுத்து விட்டது !! முதற்காரியமாய் நான் செய்தது - பட்ஜெட் என்னவென்று முடிவு செய்ததைத் தான் ! Year # 40 ; ரூ.400 என்ற விலையே ceiling என்று நிர்ணயித்துக் கொண்டு அதற்கேற்ப தேட ஆரம்பித்தேன் ! And இந்த விலை நிர்ணயத்துக்கு ஒரு காரணம் உள்ளது ; அதை அடுத்த பத்தியில் சொல்லுகிறேன் !

*இருப்பதிலேயே மிக நீளமான டெக்ஸ் சாகசம் - 586 பக்கங்கள் கொண்டது ! அதையோ-அதைப் போலானதொரு மெகா சாகசத்தையோ கலரில் போடுவதாயின் எண்ணூறு-தொள்ளாயிரம் என்று பட்ஜெட் தெறித்து விடும் ! So திடு திடுப்பென அது போலான பட்ஜெட் ரெடி செய்திடல் அசாத்தியம் என்பது உறைத்தது ! அதையே Black & white-ல் போட்டால் ரூ.400 பட்ஜெட்டுக்குள் அடங்கிடும் தான் ; but ஏற்கனவே நவம்பருக்கென 4 பாக, 440 பக்க black & white சாகசம் டெக்ஸ் தீபாவளி மலராக வரவிருக்கும் தருணத்தில், இன்னொரு black & white மெகா இதழ் அத்தனை சோபிக்காதென்று நினைத்தேன் ! தவிர, 440 பக்கங்களின் தீபாவளி special பணி + 586 பக்க Magic Moments பணி = 1026 பக்கங்கள் and அதுவும்  கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் என்றால் - அநேகமாய் வீட்டில் தண்ணி தெளிச்சு டாட்டா காட்டி விடுவார்கள் என்பதும் உதைத்தது ! So கலரே ஜெயம் என்று fix ஆகினேன் !  

*அதன் பின்பாய் தேடினேன் - உருட்டினேன் - துளாவினேன் - அந்த னேன் ; இந்த னேன் ; நடுவாக்கிலே நிறைய நொந்தேன் - but இறுதியில் 2 கதைகளுக்குள் மட்டுமே போட்டி என்று shortlist செய்தேன் ! இரண்டுமே 256 பக்க சாகசங்கள் ; கலரில் ; ஹார்ட்கவரில் ; நம்ம விலைக்குள் அழகாய் set ஆகிடும் என்பதும் புரிந்தது ! 

*இல்லாத கேசத்தை நிறைய பிய்த்தான பின்னே இதோ - இந்த சாகஸத்தினில் zoom in ஆகினேன் - முக்கியமானதொரு காரணத்தினால் !! இந்த ஆல்பத்தில் தான் நமது ரேஞ்சர்களின் முழு டீமும் களமிறங்கிடுகிறது ! So டெக்ஸ் ; கார்சன் ; கிட் & டைகர் ஜாக் கரம் கோர்க்கும் இந்த ஆக்ஷன்   மேளாவே நமது MAGIC MOMENTS Special ஆக இருந்திடவுள்ளது !! நம்மவரை இங்கே பந்தாடுகிறார்கள் ; சவுக்கால் வெளுக்கிறார்கள் ; மரண தண்டனை விதித்து firing squad முன்னே நிறுத்துகிறார்கள் - கிராதகர்கள் ! இறுதியில் வட்டியும், முதலுமாய் தாண்டவமாடுகிறார் 'தல' !! சில ஸ்லீப்பர் செல்களுக்கும் இந்த சாகசம் செம்மையாய் ரசிக்கும் என்பதை இப்போதே உணர முடிகிறது !


*முழு வண்ணத்தில், ஹார்ட் கவர் சகிதம் ; ஒரு 32 பக்க கலர் டெக்ஸ் மினி சாகஸத்தினையும் இணைத்து, ஆக மொத்தம் 288 பக்கங்களுடன் இந்த இதழினை - ரூ.400 விலைக்குள் தந்திடலாம் என்பது திட்டமிடல் !

ரைட்டுங்களா ? கதையைத் தீர்மானித்த பிற்பாடு, எங்கே, எப்போ உங்கள் கண்களில் இதனைக் காட்டுவது ? என்ற கேள்வியோடு மறுக்கா மண்டையை உருட்டினேன் ! "இதை 2025 அட்டவணையில் வைச்சுக்கலாம்" என்று சொல்லும் சபலம் தலைதூக்கியது தான் - ஆனால் குரல்வளையை கடிச்சுப்புடுவீர்களென்ற டர்ரும் தலை தூக்கிட, நடப்பாண்டில் காத்துள்ள பாக்கி ரெகுலர் தடத்து இதழ்களில் பார்வையை படர விட்டேன் ! 

*மேற்கே போ மாவீரா - ரூ.250 விலையில்

&

*எல்லையோர ஓநாய்கள் (TEX) - ரூ.160 விலையில் 

டிசம்பருக்கென ஸ்லாட் ஆகியிருப்பது தென்பட்டது ! அவை இரண்டையும் 2025-க்கு நகற்றி விடும் பட்சத்தில், இந்த MAGIC MOMENTS ஸ்பெஷல் அந்த இடத்தில் சுலபமாய் நுழைந்து விடக்கூடும் ! So தனியாக இன்னொரு முன்பதிவு, இத்யாதி...இத்யாதி என்று உண்டியல் குலுக்கும் அவசியங்களின்றி, இதழை அழகாய் உங்களிடம் ஒப்படைத்து விடலாம் ! What say folks ?

Moving on - இன்னமும் பெயரிடப்பட்டிருக்கா "ஆயிரம் பதிவு ஸ்பெஷல்" க்கென உங்கள் முன்னே 3 choices தந்திட விழைகிறேன் !! மூன்றுமே ஈரோ / ஈரோயினி என்று யாரையும் முன்நிறுத்திடாத படைப்புகள் !! ஒவ்வொன்றுமே அதனதன் பாணியில் மிரட்டும் அதகளங்கள் ! And மூன்றுமே நம் வசமுள்ளன ! இதோ லிஸ்ட் :

1 ."பயணம்" !!! 

கொஞ்ச வருடங்களுக்கு முன்பாய் "நிஜங்களின் நிசப்தம்" என்றொரு கி.நா. வெளியானது மறந்திராதென்று நினைக்கிறேன் ! அசாத்தியமான சித்திரங்களுடன் வந்த அந்த ஆல்பம் நம் மத்தியில் ஏகமான அலசல்களை ஈட்டியிருந்தது ! அந்தப் படைப்பின் ஓவியரான Manu Larcenet - 2 மாதங்களுக்கு முன்பாக இன்னொரு பிரமிக்கச் செய்யும் படைப்பை LA ROUTE என்ற பெயரில் உருவாக்கியுள்ளார் ! பிரெஞ்சில் வெளியாகி அதற்குள்ளாக 140,000 பிரதிகள் விற்பனை கண்டுள்ளது & அதற்குள்ளாக 15 உலக மொழிகளில் வெளியிட முஸ்தீபுகள் ஜரூராய் அரங்கேறி வருகின்றன ! அந்த லிஸ்ட்டில் நாம் # 16 என்பது கொசுறுத் தகவல் !  

Cormac McCarthy என்ற அமெரிக்க நாவலாசிரியர் 2006-ல் THE ROAD என்ற பெயரில் உருவாக்கிய புதினம் உலகளவில் செம வரவேற்பினைப் பெற்றிருந்தது ! அமெரிக்க இலக்கிய உலகின் மிக உயர்ந்த கௌரவமான PULITZER Prize - இந்த நாவலுக்காக 2007-ல் அவருக்கு வழங்கப்பட்டது ! And 2009-ல் இதுவொரு திரைப்படமாகவும் உருவாக்கப்பட்டது ! இந்த நாவலாசிரியரின் ஸ்பெஷாலிட்டியே ஒரு சர்வ நிர்மூலத்துக்கு அப்புறமான apocalyptic உலகினை ஆராய்வதே ! And இந்த நாவலும் அதற்கொரு விதிவிலக்கல்ல : 



பேரழிவிற்குப் பின்பான உலகினில் பறக்கப் பறவைகள் கிடையாது ; சுவாசித்திடும் ஒற்றை மரம் பாக்கி கிடையாது & சர்வமும் தீக்கிரையாகி, திரும்பிய திக்கெல்லாம் சாம்பல் மேடுகளே எஞ்சியுள்ளன ! துளியும் நம்பிக்கை தரா அந்த நிலப்பரப்பில், கொஞ்சமாய் பொருட்களோடு ஒரு வண்டியைத் தள்ளிக் கொண்டு செல்லும் தந்தையும் மகனுமே இந்தப் படைப்பின் மையப்புள்ளிகள் ! உண்ண உணவைத் தேடி, படுக்க ஒரு மூலையைத் தேடி இலக்கின்றிப் பயணம் பண்ணுகிறார்கள் - வெறி கொண்டு பசியோடு அலையும் எஞ்சியிருக்கும் மனித குலத்திடம்  சிக்கிடக்கூடாதென்ற நோக்கத்துடன் ! வெயில்..புயல்..மழை...பனி....என சகலத்தையும் கடந்து செல்லும் இந்தத் தந்தை-தனயன் ஜோடியின் பயணம் வெற்றி கண்டதா ? இது தான் இந்த ஆல்பம் !! இதனை வாசித்துள்ளோரும் சரி, அலசியுள்ளோரும் சரி, கண்களில் நீரின்றி பேசிடவே காணோம் எனும் போதே இந்தக் களத்தின் கணம் புரிகிறது ! ஒரு நாவலை அதிஅற்புதமாய் சித்திரங்களில் கொணர்ந்திருப்பதாக அனைவருமே சிலாகித்துள்ளனர் !! இதோ பாருங்களேன் ஓவியரின் அசாத்தியங்களை : 





இந்த ஆல்பம் உருவாகும் சேதி போன வருடத்தின் ஏதோவொரு வேளையில் அகஸ்மாத்தாய் என் கண்ணில் பட்டது & அப்போதே என்னுள் ஒரு இனம்புரியா ஈர்ப்பு எழுந்தது !! நிச்சயமாய் இது ஒரு dark படைப்பாகத் தானிருக்கும் என்பது புரிந்தது ! நிச்சயமாய் வெகுஜன ரசனைக்கு இது ஒத்துப் போகாதென்பதும் புரிந்தது ! But வெறும் 10 பிரதிகள் விற்றால் கூட பரவாயில்லை - இதனை தமிழுக்குக் கொணர்ந்தே தீரணும் என்ற ரேஞ்சுக்கு மண்டைக்குள் ஒரு குறுகுறுப்பு !! காத்திருந்தேன் - படைப்பு பூர்த்தி காணும் வரையிலும் ! ஜனவரியில் படைப்பின் Work in Progress என்றொரு கோப்பை அனுப்பிய போதே சித்திர மாயாஜாலங்களில் மிரண்டே போனேன் ! To cut a long story short - இதற்கான உரிமைகளை வாங்கியாச்சு - எங்கே, எப்போது,எவ்விதம் வெளியிடுவது ? இதனை நம் வட்டம் கட்டையைக் கொண்டு சாத்துமா ? என்று எதுவுமே தெரியாத நிலையில் ! கி.நா.வே ஆகாதென்ற சூழலில் ; இத்தனை டார்க்கான படைப்பை போணி பண்ணவாச்சும் முடியுமா ? என்ற கேள்வியை போர்வையைக் கொண்டு மூடி விட்டு, ஏதோ ஒரு அசட்டுத் துணிச்சலில் இந்தப் படகில் எறியாச்சு !! 152 பக்கங்கள் ; லக்கி லூக் வெளியாகும் சைசில் ; செம premium edition ஆக இதனை வெளியிட்டதாக வேணும் - ரூ.400 விலையில் !! 

இது Option # 1 

2.ROUTE 66 :

ரொம்ப காலமாய் நிலுவையில் உள்ள க்ரைம் த்ரில்லர் ! 1950-களின் அமெரிக்காவில், அரங்கேறும் ஒரு ஆடு-புலியாட்டம் ; அட்டகாசமாய் 5 அத்தியாயங்களில் தடதடக்கின்றது ! அமெரிக்காவின் ஒவ்வொரு மாகாணமாய் தொடரும் வேட்டை - Cold War நாட்களின் திரைமறைவிலான ரகளைகளை 232 பக்கங்களில் சொல்ல முனைகிறது ! Absolute த்ரில்லர் - ரூ.600 விலை இங்கு அவசியமாகிடும் !!


Option # 3 :

இது நமக்கு நிரம்பப் பரிச்சயமானதொரு வன்மேற்கு !! வருஷமோ 1900 !! ஒரு அழகான யுவதி ரயிலில் சிறு நகரம் ஒன்றில் வந்து இறங்குகிறாள் - கல்யாணம் கட்டிப்பதாய் வாக்குத் தந்தவனைத் தேடி ! இறந்து போன தனது தாயைப் போல உடலை விற்றுப் பிழைக்கும் விதியிலிருந்து தப்புவதே அவளது லட்சியம் ! ஆனால் புது ஊரிலோ வாக்குத் தந்த மணாளனைக் காணோம் & வாழ்க்கைச் சுழல் இளம் அழகியை ஏதேதோ விதங்களில் இழுத்துச் செல்லும் தருணத்தில் செனட்டர் தேர்தலில் போட்டியிடும் அந்த மாகாணத்தின் கவர்னர் அங்கு வருகை தருகிறார் ! அது தற்செயலா ? தொடர்ந்திடும் அதகளங்களுமே தற்செயல் தானா ? அல்லது வன்மேற்கின் பழி தீர்க்கும் அத்தியாயங்களில் இன்னமும் ஒரு புது அத்தியாயத்தினை எழுதும் வேளை புலர்ந்துள்ளதா ? 5 அத்தியாயங்களில் தொடர்ந்திடும் இந்த கௌபாய் / கௌகேர்ள் த்ரில்லருக்கு மொத்தம் 288 பக்கங்கள் ! ஒரிஜினலாக வந்தது போலவே 5 தனித்தனி புக்ஸ்களாய் இவற்றை வெளியிட்டு ஒரு சன்னமான box set-ல் போட்டுத் தந்தால் ரூ.750 ஆகிடும் !! இல்லாங்காட்டி - மாதமொரு அத்தியாயம் என 5 இதழ்களாகவே வெளியிடவும் செய்யலாம் !!  இந்தத் தொடரின் பிரெஞ்சுப் பெயர் "விஷம் !!" 



Phewwwwwww !!! சட்டையைக் கிழித்துக் கொள்ளும் வேலையை ஒரு மாறுதலுக்கு உங்கள் பக்கமாய் தள்ளி விட்ட திருப்தியில், இதோ - வோட்டு போடும் லிங்கை ஜாலியாய் ஒப்படைக்கிறேன் : https://strawpoll.com/NPgxeqP9PZ2

அப்புறம் சொல்ல மறந்துப்புட்டேனே - சனியன்று ஜூன் புக்ஸ் கூரியரில் கிளம்பியாச்சு ! And ஆன்லைன் மேளாவில் விடுபட்டிருந்த "தண்டர் in ஆப்ரிக்கா" இதழும் அதனுடன் பயணிக்கிறது !! அந்த இதழின் கலரிங்கைப் பார்த்து பிரமிக்காதோர் இருப்பின் அவர்கள் Zen துறவிகளுக்கு tough தர வல்லவர் எனலாம் !! Simply awesome !! அப்புறம் இம்மாத V காமிக்சில் மிஸ்டர் நோ சாகசமும் சூப்பர் ரகம் !! இதோ அவரது ரொம்பவே வித்தியாசமான சாகஸத்தின் அட்டைப்படம் & உட்பக்க preview !! 




இதுக்கு மேலும் பதிவை நீட்டித்தால், டைப்படிக்கும் டீம் தெறித்து ஓடி விடுவார்கள் என்பதால், நாலு பதிவுக்கான சமாச்சாரத்தை ஒற்றைப் பதிவுக்குள் திணித்திருக்கும் உணர்வோடு கிளம்பும் வழியைப் பார்க்கிறேன் folks !! விளையாட்டாய் துவங்கியதொரு வலைப்பூவிற்கு இத்தனை நேசமும், ஆதரவும் தந்து இத்தனை தூரம் இட்டு வந்திருக்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் உளமார்ந்த ஒரு கோடி நன்றிகள் !! விரல்கள் ஓய்ந்து போயிருக்காவிடின், உங்களை சிலாகித்திட இன்னமும் கணிசமாய் எழுதியிருப்பேன் ! But  கபிஷின் வாலைப் போல பதிவு நீண்ட பிற்பாடும் நான் நடையைக் கட்டாதிருப்பது சுகப்படாதென்பதால் ஞான் கிளம்புகிறது ! 

Bye all .....see you around !! Have a wonderful weekend !!! And thanks a million again !! 

P.S : இந்தப் பதிவை 'ஏக் தம்'மில் வாசித்தோர் - எவ்வளவு நேரமாச்சு ? என்று சொல்வீர்களா ? Just curious !!!