நண்பர்களே,
வணக்கம். சனியன்று 'தம்' கட்டி அட்டவணைப் பதிவினை போட்ட கையோடு ஞாயிறன்று கிரிக்கெட் மேட்சையும் பார்த்தவன் தான் - நேற்று வரை தலையைத் தூக்கக் கூட திராணியில்லை வைரஸ் ஜுரத்தின் நீட்சியாய் ! வறட்டு இருமலும் நாள் முழுக்க உசிரை வாங்கிட, ஒற்றை வேலையும் பார்த்த பாடில்லை ! என்ன ஒரே அனுகூலம் - நாலு மாசமாய் தொப்பையை சித்தே குறைக்கச் செஞ்சு பார்த்த முயற்சிகளெல்லாம் பப்படமாகியிருக்க, இந்தப் பத்து நாட்களில் ரெண்டரை கிலோஸ் போன இடமே தெரியலை !! அந்த மட்டுக்கு சந்தோஷம் என்றபடிக்கே மெதுமெதுவாய் பணிகளுக்குத் திரும்ப ஆரம்பிச்சாச்சூ !
தீபாவளி இதழ்கள் பைண்டிங்கில் இருக்க, தொடரவுள்ள திங்களுக்கு despatch இருந்திடும் ! Hardcover டைகர் இதழில் ஈரப்பதம் இருக்கலாகாது என்பது மட்டுமே அந்நேரத்து கவனத்தினைக் கோரிடும் ! Anyways இளம் புலியாரின் புக் கலரில் அட்டகாசமாய் வந்துள்ளது ; தீபாவளி வேளையினில், பட்சண துவம்சங்களின் நடுவாக்கில் டைகர் செம கம்பெனியாக இருப்பாரென்று எதிர்பார்த்திடலாம் ! And இளம் தல சாத்திடும் சிக்ஸர் ஸ்பெஷல் இன்னொரு பக்கம் தெறிக்க விடுகிறது ! இளம் டெக்ஸ் தொடரினில் இத்தாலியில் அவர்களது தனித்தடமானது பிய்த்துப் பிடுங்கி கொண்டு # 54-ல் தற்சமயம் நிற்கின்றது ! (என்ன - எல்லா இதழ்களும் 62 பக்கங்கள் மட்டுமே கொண்டவை என்பதால் நெடும் கதைகள் ரெண்டோ, மூணோ, நாலோ - அதிக இதழ்களிலேயே நிறைவுறுகின்றன ! அப்படிப் பார்க்கும் போது இதழ் # 54 என்றாலும், கதைகள் உத்தேசமாய் 25-க்குள் தானிருக்கும்). இந்த மௌரோ போசெல்லி brain child-ன் ஹைலைட்டே நாம் தற்போது வாசித்திடவுள்ள 6 பாக சிக்ஸர் ஸ்பெஷல் கதைச் சுற்று தான் ! போன மாதம் டெக்ஸும், கிட் வில்லரும் பேடகோனியா சென்று அதகளம் செய்ததை ரசித்தோமெனில், இம்முறை ரொம்பவே வித்தியாசமான பிளாரிடா கானகப் பகுதியினில் இளம் டெக்ஸ் தெறிக்க விடுகிறார் ! 384 பக்கங்களில் மூச்சிரைக்கச் செய்யும் ஒரு ஓட்டம் ; ஒரு போராட்டம் ; ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் என்று அரங்கேறுகிறது ! ஏற்கனவே SUPREMO ஸ்பெஷல் வாசிப்பு தேங்கியிருப்பின், அத்தோடு இதனையும் கோர்த்திடாது, இதை இந்தப் பண்டிகையின் வேகத்தில் போட்டுத் தாக்கிடலாமே guys ? இதோ - அட்டைப்பட முதல் பார்வை & உட்பக்க previews :
Moving on, அட்டவணை 2024 !! நண்பர்களில் ஒரு அணியினருக்கு இத்தனை காலமாய் பரிச்சயப்பட்டிருந்த "அந்த ஸ்பெஷல்"....."இந்த ஸ்பெஷல்"" என்ற ரகத்திலான வாணவேடிக்கைகள் இம்முறை கலந்து கட்டி அடிக்காதது குறித்து ஒரு letdown இருப்பதை புரிய முடிகிறது ! Moreso காத்திருப்பது லயனின் 40-வது ஆண்டு எனும் போது எதிர்பார்ப்புகள் ஒரு மிடறு தூக்கலாகவே இருந்திருக்கும் என்பதும் obvious ! ஆனால் உங்களின் இந்த reactions குறித்து எனக்கு கிஞ்சித்தும் வியப்பில்லை - becos இது நான் ஸ்பஷ்டமாய் எதிர்பார்த்ததே !!
உங்களால் எவ்வளவு சாப்பிட முடியுமென்ற தயக்கங்களெல்லாம் இல்லாது, கடந்த 12 ஆண்டுகளாய், நமது ஒவ்வொரு அட்டவணைத் திட்டமிடல்களிலும், மெனுவின் முக்கால்வாசி ஐட்டங்களை மேஜையில் இறக்கி விட்டுக் கொண்டிருந்தோம் ! So ரெண்டு இட்லியும், ஒரு வடையும் சாப்பிட எண்ணி வந்திருந்த நண்பர்களுக்குக் கூட - விருந்தின் பிரம்மாண்டம் "ஏஏஏஏயப்பா!!" என்ற மலைப்பைத் தரத் தவறியிருக்கவில்லை ! ஆக பந்தியில் அமரும் போதே பசியாறும் ஆவலைக் கூட பின்தள்ளிவிட்டு "என்னென்ன காத்திருக்கிறதோ ?" என்று கண்டு ரசிக்கும் அந்த ஆர்வமுமே ஒரு முக்கிய factor ஆகிப் போய்விட்டிருந்ததை உணர்ந்திடுவதில் சிரமங்களே இருக்கவில்லை ! ஆனால் கல்யாண வீட்டுப் பந்தியில் ரொமாலி ரொட்டி ; ஸ்ப்ரிங் ரோல் ; டக்கிலோ ; கபாப் என்று நாங்கள் ரக ரகமாய்க் கூத்தடித்துக் கொண்டிருந்தாலும், அவற்றை வாங்கி ஒரு ஓரமாய் கிடத்தி விட்டு, "சாதம் எங்கேடா தம்பி ? அப்டியே அந்த சாம்பாரை கிண்டி ஊத்து ! கோசும், கிழங்கும் கொண்டு வா !!" என்று காலமாய் விருந்துணவுகளில் நாம் பழகிய ஐட்டங்களை மட்டும் உங்களில் பலரும் போட்டுத் தாக்கிடுவது, சில காலங்களாய் இருந்து வரும் நடைமுறையுமே ! பந்தியில் அமர்ந்திருக்கும் நீங்கள் அதனை முழுசாய் கவனிக்க வாய்ப்பில்லை தான் ; ஆனால் பரிமாறும் போதும், இலையெடுக்கும் தருணத்திலும், கீழே போகும் பதார்த்தங்களைப் பார்ப்பதென்பது செம கஷ்டமான தருணம் ! காசும்...உழைப்பும்....உணவும் யாருக்கேனும் பயன்பட்டால் அற்புதம் ; விடிய விடிய கூட வெறும் கும்மட்டி அடுப்பில் மேல் நோவ சமைத்து விடலாம் தான் ! ஆனால் ஒரு ஆடம்பரத்துக்கோசரம் மட்டுமே மேஜையினை அலங்கரித்து விட்டு, பசியாற்ற உதவிடா பண்டங்களால் பலனேதும் இருந்திடாதே ?!
அந்தப் புரிதலின் பலனே இந்தாண்டின் திட்டமிடல் !!
"சார்....இது சவுத் இந்தியன் பாரம்பரியப் பந்தி ; இங்கே fancy ஐட்டங்கள்லாம் கிடையாது ! ஆனா நீங்க இஷ்டப்பட்டு சாப்பிடற சமாச்சாரங்களுக்கு குறைச்சலே இருக்காது ! திருப்தியா சாப்பிடுங்க !! And சாப்பிட்டு முடிச்சா பிற்பாடு - அதோ அந்தப்பக்கமா ஸ்வீட்சோ ; பாதாம் பாலோ ; பீடாவோ உங்களுக்கு தேவைக்கு ஏற்ப இருக்கும் ! வேணும்னா ருசிச்சிக்கிலாம் !" என்று நிதானமாய் பந்திக்கொரு வரைமுறை தந்துள்ளோம் இம்முறை ! "ஆத்தீ...போச்சு !" என்று குரல் தரும் நண்பர்கள் கொஞ்சமே கொஞ்சமாய் இதனை உள்வாங்கிக் கொள்ள முனைந்தால் புரியும் - இது உங்கள் பணம், உங்கள் வாசிப்புகளாகவும் உருமாறிட வேண்டுமே என்ற ஆதங்கத்தின் பலன் என்பது ! "நா வாங்கி ஊட்டுக்குள்ளே அடுக்கிட்டு போறேன் ; என்னிக்கோ படிச்சிட்டு போறேன் ; இல்லே அப்டியே கிடந்துட்டு போகுது ! உனக்கென்னப்பா ?" என்ற சில உஷ்ணக் குரல்கள் ஒலிப்பது கேட்கிறது தான் ! ஆனால் இடி இடிக்கும் ஒரு மழை நாளில், மரத்தடியில் ஒதுங்கி நின்று கொண்டே , "ச்ச்சே...ச்ச்சே...இடி இங்கெல்லாம் விழாதுப்பா !!" என்று 'தகிரியம்' காட்ட முனைவது எவ்வித விவேகமோ - அதே விவேகமே - "யாரு படிச்சா என்ன..? படிக்காட்டி நமக்கு என்னா ? அதான் காசு தர்றாங்கள்லே ? கேட்டதை போட்டுப்புட்டு போய்க்கிட்டே இருப்போம்!" என்று இந்தச் சூழ்நிலையினைத் தொடர நான் அனுமதிப்பதுமே !!
"இந்த அட்டவணை எனக்கு ஏமாற்றமே" என்று பொங்கிடும் நண்பர்களும் சரி, ஏற்றுக் கொண்ட நண்பர்களும் சரி, நாங்களும் சரி, தொடர்வன - மறுக்க இயலா நிஜங்கள் :
- ஆண்டுக்கு ஆண்டு இந்தச் சிறு காமிக்ஸ் வாசிப்பு வட்டம் சுருங்கிச் செல்கிறது ! ஒவ்வொரு தமிழ் காமிக்ஸ் சார்ந்த FB க்ரூப்பையும் எடுத்துக் கொள்ளுங்களேன் : பத்தாயிரத்துக்கும் ஜாஸ்தி அங்கத்தினர் இருப்பர் ! ஆனால் அவர்களில் வெறும் 10% கூட இன்றைய காமிக்ஸ் இதழ்களைப் பின்தொடர்வோராகவும், ரெகுலர் வாசகர்களாகவும் இருந்தால் ரொம்பவே வியப்பேன் !
- காமிக்ஸ் தான் என்றில்லை ; பொதுவான வாசிப்புகள் சகலமுமே தர்ம அடி வாங்கிடும் நாட்களிவை ! சமீபத்தைய புத்தக விழாவின் பொதுவான விற்பனை நிலவரம் குறித்து "ஹிந்து" நாளிதழில் 2 வாரங்களுக்கு முன்னே வந்திருந்த கட்டுரையைப் படித்தீர்களா - தெரியலை ; but worth a read for sure !! "ஜனம் வர்றாங்க....பாக்குறாங்க...போய்க்கிட்டே இருக்காங்க" என்பதே பொதுவான பதிப்பக ஆதங்கக் குரல்கள் !
- ஆண்டுக்கு ஆண்டு நமது ஓட்டங்கள் கூடிக் கொண்டே செல்கின்றன ! கொரோனா நாட்களில் ஆதாரத்துக்கே ஆட்டம் என்ற நிலையில் இருந்த சமயத்தில் தேவைப்பட்ட ஓட்டம் ஒருவிதமெனில் இந்த Post Covid யுகத்தின் செலவுகளுக்கு ஈடு தர ஓட வேண்டியிருப்பது இன்னொரு மாரத்தான் !
- இன்று நம்மைச் சுற்றிலும் முன்னெப்போதையும் விட உச்சத்தில் உள்ளன - பொழுதுபோக்குக்கான சாளரங்கள் ! மொத்தமாய் ஆண்டொன்றுக்கு ஒரு ரெண்டாயிரம் செலவிட்டாலே - தமிழ், இங்கிலீஷ் ; ஹிந்தி ; etc etc விலிருந்து போஜ்புரி வரைக்குமான திரைக்காவியங்களை (!!) செல்லபோன்களில் நினைத்த நேரத்துக்கெல்லாம் பார்த்துக்கொள்ளலாம் ! "அட, பஸ்ஸில் ஏறினோம் ; ரயிலில் ஏறினோம் - ஒரு புக் படிப்போம் !" என்ற சிந்தனை இன்று முதல் priority ஆக இருப்பதில்லை ! "ஏய்....ப்ளூசொக்கா தாறன் அந்தப் படத்தை தொங்க விட்ருக்காராம் ; ஹெட்போனை போட்டுக்கிட்டு அதை ரசிக்கலாம் ! அட...கோபி-சுதாகர் பரிதாபங்கள் புதுசு வந்திருக்கும்...அதை பாப்போம் !! புதுசா ரீல்ஸ் வந்திருக்குமோ ?" என்றெல்லாம் தானே நாம் மாற்றம் கண்டுள்ளோம் ? இது தகவல் தொழில்நுட்ப யுக முன்னேற்றத்தின் இயல்பான நீட்சி ! Agreed ?
- காலமாய் ஆராதித்து வரும் இந்த பொம்ம புக்குகளை மறந்துப்புடப்படாதே என்ற அன்பு கலந்த வைராக்கியத்தில் இந்தப் பயணத்தினை 'தம்' கட்டிக்கொண்டு தொடரும் நண்பர்கள் கணிசம். அவர்களின் அந்த அன்பிற்கு நாம் செய்திடக்கூடிய கைம்மாறு - இயன்றமட்டுக்கு அந்த வாசிப்பினை அவர்கள் விரும்பும் விதமாய் ; அவர்களது நேரக்கட்டுப்பாடுகளுக்குள் பொருந்தும் விதமாய் அமைப்பதாக மட்டும் தானே இருக்க முடியும் ?
And that's exactly what we are trying to do !
குறைவான நேரமா ? பரவால்லீங்க,,,அலுப்புத்தட்டாம வாசிக்க breezy reads தர முயல்கிறோம் !
"எனக்கு நேரத்துக்கு பஞ்சமில்லேப்பா !" என்கிறீர்களா ?!! சூப்பருங்க...உங்களுக்கு கூடுதலாய் புக்ஸ் வழங்கவும் வழி பண்ணிடலாம் - MYOMS மூலமா !
இதுவே காத்திருக்கும் ஆண்டுக்கு மாத்திரமல்ல ; இனி வரவுள்ள நாட்களுக்குமான templates !! And இதனை உணர்ந்திட எனக்கு உதவிய சின்னதொரு புள்ளிவிபரம் இதோ :
2023 - அது தானுங்கோ நடப்பாண்டு ! சந்தாவில் ; Supreme '60s தனித்தடத்தில் ; ஈரோட்டு ஸ்பெஷலில் ; ஆன்லைன் புத்தக மேளாவினில் என்று மொத்தம் 14 ஹார்ட்கவர் இதழ்கள் இந்த ஒற்றை ஆண்டினில் மட்டுமே !! இனியொரு தபா நாமளே கற்பனை கூட செய்து பார்த்திட இயலா ஒரு எண்ணிக்கை இது ! அட்டகாசமான வாணவேடிக்கை பார்த்த சந்தோசம் நமக்கெல்லாம் இருந்தது தான் ; ஆனால் இந்தப் பதினான்கில் ஸ்டாக் காலியான இரண்டே இதழ்கள் எவையென்று யூகிப்போருக்கு கம்பெனி சார்பில் நயமான கோவில்பட்டி கடலைமிட்டாய் பாக்கெட் ஒன்றினை வழங்கிடலாம் !
காலியாகியுள்ள இரண்டே இதழ்கள் : "கார்சனின் கடந்த காலம்" & "BIG BOYS ஸ்பெஷல் !!"
இந்த ஒற்றை தகவலிலேயே நமது சமீப வாசிப்புகள் pattern அப்பட்டமாய் புலனாகிறது folks - என்மட்டிலாவது !
- இரண்டுமே க்ளாஸிக் மறுபதிப்புகள் !
- இரண்டுமே புதுப்பிக்கப்பட்ட பிரம்மாண்ட formats-களில் வெளியான visual delights !
- இரண்டுமே முற்றிலும் எதிர்பாரா ஒரு நொடியில் வெளியானவை !
- இரண்டுமே உங்களின் நோஸ்டால்ஜியா factors கலந்தவை !
- இரண்டுமே உங்களை நேர நோவுக்கு ஆட்படுத்திடாது "படிக்கணும்னு தோணுறச்சே படிச்சுக்கலாம் !" என்ற ரகத்தில் விழுகின்றவை !
- இரண்டுமே in their own ways - செம breezy reads !
உசிரைக் கொடுத்து உழைத்த பாக்கி 12 ஹார்ட்கவர் இதழ்களும் கிட்டங்கியில், நார்மல் புக்ஸ் பிடிக்கும் இடத்தைப் போல நான்கு மடங்கு இடத்தைப் பிடித்தபடியே துயின்று வருகின்றன ! இது தான் வார்னிஷ் பூசா நிஜம் !
இந்தப் பின்னணியினில் - "அதெல்லாம் எனக்கு தெரியாது !! ஆடலும், பாடலும் தொடர்ந்துக்கிட்டே இருக்கணும் ! மேடையிலே ஜிகு-ஜிகுன்னு இருந்தா தானே திருவிழாவுக்கு வர்றதுக்கே 'ஜிலோ'ன்னு இருக்கும் !" என்ற எதிர்பார்ப்பினை நான் எவ்விதம் கையாள்வதோ - சொல்லுங்களேன் guys ?
20 நாயக-நாயகியர் ரெகுலர் சந்தா தடத்தினில் இடம் பிடித்துள்ளோர் - V காமிக்சின் July டு December லிஸ்டை சேர்க்காமலே !!
குறைந்த பட்சம் இன்னொரு 4 நாயகர் - Make My Own Mini Santha உபயத்தினில் ! ஆக - 12 மாத காலகட்டத்தினில் 24 நாயகர்கள் இடம்பிடிக்கின்றனர் !!
கிஞ்சித்தும் செண்டிமெண்ட் பார்க்காது - உங்களின் பெரும்பான்மையின் ஆதர்ஷ ஆக்கங்களுக்கு மட்டுமே இடமளித்துள்ளோம் - வேறு எவ்வித considerations-ம் இல்லாது ! இதோ - நெவாடாவின் முதல் 3 ஆல்பங்களுக்கு உரிமை வாங்கியிருந்தோம் ; முதல் அத்தியாயமே உங்களுக்கு சுகப்படவில்லை என்ற நொடியில், மீத இரண்டையும் தலையில் திணிக்க முனையவில்லை !
ஸ்பைடர் in கலர் - எனக்கு வேண்டவே வேண்டாம் என்போரா ? No problems உங்க சிரத்தில் கூர்மண்டையரை சவாரி செய்திட அனுமதிக்க மாட்டோம் !
மாதம்தோறும் கனமான பொட்டிகளை உடைத்து அழகாய் ரசித்து விட்டு, ஆங்காங்கே ரெண்டு கமெண்ட்டைப் போட்டு விட்டு, புக்ஸை ஒரு ஓரத்தில் கிடத்தி விட்டு அடுத்த வேலைக்குள் ஈடுபட்டு வரும் நம்மில் பலரது சமீபத்தைய இந்தப் பழக்கத்தை கொஞ்சமாய் மாற்றியமைக்க நாம் செய்திடக்கூடிய ஒரே விஷயம் - வாசிப்பினை நறுக்கென்றும் ; விறுவிறுப்பாக மாற்றிடுவதும் மட்டுமே ! மாறாக என்றைக்கோ காலாவதியாகிப் போன குண்டு புக் template-ஐ இன்னமும் விடாப்பிடியாய் பிடித்துக் கொண்டு, உங்களுக்கு எப்படியாச்சும் நேரம் வாய்ச்சுப்புடும் ; புக்ஸை முன்போலவே படித்து ரசித்து விடுவீர்கள் என்ற நம்பிக்கையில் நாட்களை நகர்த்தியதெல்லாம் போதுமென்று எண்ணினேன் !
அவ்வளவே !
Of course - மாதத்தின் சகலத்தையும் தவறாது கரைத்துக் குடித்து விடும் நண்பர்களும் இல்லாதில்லை தான் ; மறுக்கவே மாட்டேன் ! அவர்கட்கு நான் குறிப்பிடும் சமாச்சாரங்கள் பொருந்திடவே செய்யாது தான் ! But அவர்கள் ஒரு சிறு அணி என்பது யதார்த்தம் என்பதால் தான், தம் கட்டி நமது பயணப்பாதையினை கொஞ்சம் மாற்றியமைக்க விழைந்து வருகிறேன் !
ஆங்கிலத்தில் சொல்லுவார்கள் - why fix something that ain't broken ? என்று ! உடைஞ்சு போயிருக்கா ஒண்ணை சரி பண்ண முயற்சிப்பானேன் ? என்பது நல்ல கேள்வியே ! But உடைந்து போகும் சாத்தியங்கள் கண்முன்னே தென்படும் போது பழமொழி பேசியபடியே குந்தியிருப்பதில் எனக்கு உடன்பாடில்லை folks !
And இங்கு இன்னொரு சத்தமில்லா சமாச்சாரம் பற்றியும் நாம் பேசியாக வேண்டும் ! அது தான் இன்றைக்கு புக்ஸ் அனுப்பிட ஆகிடும் செலவினங்கள் !!
- மாதா மாதத்து அட்டை டப்பிக்கள்
- பாலிதீன் கவர்கள்
- செல்லோ டேப்
- கூரியர் கட்டணம்
'தேமே' என்று காட்சி தரும் இந்த நான்கு ஐட்டங்களுக்குமாய் ஓராண்டினில் ஆகும் செலவென்னவென்று அகஸ்மாத்தாய்ப் பார்த்தோம் ! நம்பினால் நம்புங்கள் guys - GST வரி சேர்த்து மொத்தம் ஆகியுள்ள தொகை ஏழேகால் லட்சம் ரூபாய்கள் !! நம்மவாவது முடிகிறதா ?? அரூபமாய் இத்தனை அசாத்திய தொகை ஆண்டொன்றுக்கு செலவாகிடுவது ஒரு பக்கம் ; ஆனால் அத்தனை காசை செலவிடுவதற்காகவாவது அந்த டப்பிக்களில் பயணிக்கும் புக்ஸ் உங்கள் வாசிப்புக்கு active ஆக பயன்பட்டிட வேண்டாமா folks ?
Moving further ahead - அட்டவணையோடு கேட்டிருந்த அந்த 2 ஓட்டெடுப்பு கேள்விகளுக்கான உங்களின் பதில்களை ரொம்பவே சுவாரஸ்யமாய் பார்த்துக் கொண்டிருக்கிறேன் ! இங்குமே ஸ்பஷ்டமாய் உங்களின் எண்ணவோட்டங்களைப் பார்க்க முடிகிறது !
கி.நா.தேர்வில் உங்கள் choice எது ? என்ற கேள்விக்கு கி.நா.விரும்பாதோர் ஓட்டளிக்க வேணாமே ப்ளீஸ் என்று கோரியிருந்தேன் ! அதற்கேற்ப இது வரைக்கும் வோட்டு போட்டுள்ள மொத்த நண்பர்களில் கிட்டத்தட்ட 25% - "நேக்கு நோ கி.நா.ஸ்" என்று சொல்லாமல் சொல்லியுள்ளனர் ! So கி.நா.க்களை வம்படியாக உங்கள் தலைகளில் கட்டக்கூடாதென்ற எங்களின் தீர்மானம் உருப்படியானதாய் தென்படுகிறது !
And Make My Own Mini சந்தா திட்டமிடலில் 8 இதழ்களுள் நான்கைத் தேர்வு செய்யும் படலம் ரொம்பவே சுவாரஸ்யமான பதில்களைக் கண்ணில் காட்டி வருகின்றது ! அங்கே முன்னணியில் இருக்கும் இதழ்கள் பற்றிப் பேச வாய் துறுதுறுக்கிறது தான் - but அது உங்களின் தேர்வுகளை எவ்விதத்திலும் influence செய்திடக்கூடாது என்பதால் வாயில் பசையைப் போட்டுக் கொண்டு கிளம்புகிறேன் !
இதோ - crisp ஆக சந்தா விபரங்கள் - ஏதாச்சும் புரிதல்களில் சிக்கல் கொண்டிருக்கக்கூடிய நண்பர்களுக்கென :
THE UNIVERSAL சந்தா -
மொத்தம் 30 இதழ்கள் - மூன்று கி.நா.க்கள் சேர்த்து !
The N.G.N. சந்தா -
மொத்தம் 27 இதழ்கள் - மூன்று கிராபிக் நாவல்கள் மட்டும் இல்லாது !
V காமிக்ஸ் சந்தா -
6 இதழ்கள் - ஜனவரி to ஜூன் 2024 ! ஜூலை to டிசம்பர் - பின்னர் அறிவிக்கப்படும் !
M.Y.O.M.S - சந்தா :
"எனக்கு ரெகுலர் சந்தாவின் 30 புக்ஸ் + V காமிக்சின் 6 புக்ஸ் போதாது ; மேற்கொண்டும் வேணும் !" என்று எண்ணுவோரா நீங்கள் ? All you have to do is - நாம் தந்துள்ள 8 இதழ்களுள் உங்களுக்கு பிடித்த 4 எவையென்று வோட்டு போட்டுச் சொல்லி விட்டு ஆராமாய் அமர்ந்திடுவதே ! டிசம்பரின் இறுதியில் கூடுதல் ஓட்டுக்கள் பெற்றிருக்கும் 4 ஆல்பங்கள் எவை என்று பார்த்த கையோடு அவற்றை மட்டும் பிரேத்யேகமாய் ; உங்களுக்கே உங்களுக்காக ஒரு முன்பதிவாய் அறிவிப்போம். And அதனில் ஒரு டீசென்ட் முன்பதிவு கிட்டியான பின்னே, இந்த நான்கு இதழ்களும் உங்களுக்கு மட்டும் அனுப்பிடப்படும் ! இவை முன்பதிவு செய்யாத பிற தளங்களில் கிடைத்திடாது !
Make My Own Mini சந்தா - நீங்கள் தேர்வு செய்திடும் நான்கு இதழ்களுடன் - ஏப்ரல் 2024 முதலாய் !
புத்தாண்டும் புலர்ந்து, அதன் நகர்வோடு மாதா மாதம் நமது இதழ்களும் இணைந்து கொள்ளும் போது, அவை தரக்காத்துள்ள breezy வாசிப்புகள் எனது இன்றைய திட்டமிடலை நியாயப்படுத்திக் காட்டிடும் என்ற நம்பிக்கையில் கிளம்புகிறேன் folks ! Bye all...see you around ! இந்தியாவின் அதிரடிகளை இன்னமும் தொடரவுள்ள நாட்களில் ரசிப்போம் !