வணக்கம். ஆண்டின் "அந்தப்" பொழுதில் குஷியாய் நிற்கிறேன்...! "எந்தப்" பொழுது ? என்கிறீர்களா ? டி-வியில் நிறையவே பார்த்திருப்பீர்களே....கோட் சூட்டையெல்லாம் அந்து உருண்டைகளிலிருந்து தூசு தட்டி எடுத்து வந்து, சேரில் நடுநாயகமாக பந்தாவாய் அமர்ந்தபடிக்கே - "இந்தாண்டின் திரைப்படங்கள்" என்று அலசுவார்கள் அல்லவா ? அதே மாதிரியானதொரு வாய்ப்பு இந்த நொடியில் நேக்கு - "இந்தாண்டின் நமது இதழ்கள்" என்ற அலசல்களுக்குள் புகுந்திட ! என்ன ஒரே வித்தியாசம் - கல்யாணத்துக்கு வாங்கிய கோட்டுக்குள் இப்போது நுழைய முயற்சித்தால் தொந்தியின் விஸ்தீரணம் தடங்கலாய் இருப்பதால் - குளிருக்காகப் போட்டு நிற்கும் குரங்கு குல்லாயோடு அலசல் படலத்தை ஆரம்பிப்பதாகவுள்ளேன் !! So here goes :
ஜம்போவின் சீசன் ஒன்றின் ஓரிரு இதழ்களும் இந்தாண்டில் இடம்பிடித்திட, இரண்டாம் சீஸனின் சில பல இதழ்களும் இக்கட பாய் போட்டிருக்க - திடுமென நுழைந்த MAXI லயன் இன்னொருபுறமிருக்க, ஈரோட்டில் ஸ்பெஷல் இதழ்கள் காரமும், தித்திப்பும் சேர்த்திருக்க - 2019-ன் மொத்த இதழ்களின் எண்ணிக்கை விபரம் இதோ :
ஆண்டின் ஒவ்வொரு இதழையும் நினைவு கூர்ந்து அலசும் வேலையை அந்தந்த மாதங்களிலேயே நீங்களும் செய்துள்ளீர்கள் ; நானும் செய்துள்ளேன் என்ற மட்டில் அதே ரூட்டில் இன்னொருக்கா பயணிக்கப் போவதில்லை ! மாறாக - பணிகளினூடே பயணித்த வேளையினில் நினைவுச் சுவடுகளாய் எதையேனும் விட்டுச் சென்ற இதழ்களைப் பற்றியும் ; இந்தாண்டின் சில memorable moments பற்றியும் அளவளாவ நினைத்தேன் ! As memories go - இந்தாண்டின் ஆரம்பமே தோர்கலின்புண்ணியத்தில் நெட்டுக்கா take off ஆனது மறக்கவியலா ஒரு அனுபவம் ! அது பற்றி நிறையவே அலசி, ஆராய்ந்து தொங்கப் போட்டு விட்டோம் என்ற போதிலும் இன்னமும் என்னுள் ரீங்காரமிடும் சிந்தனை ஒன்றே !! அது தான் - ஒரு குட்டியூண்டு வாசக வட்டமான நாம் அந்த ஸ்பைடர் ; ஆர்ச்சி நாட்களிலிருந்து எத்தனை தொலைவு பயணித்துள்ளோம் என்ற புரிதல் !! Oh yes - இன்னமுமே சட்டித் தலையனுக்கும் , வலைமன்னனுக்கும் கொடிப் பிடிக்க நாம் தயாரே - yet ஒரு ஆழமான / மாறுபட்ட களம் எதிர்நோக்கும் போது நமது ரியாக்ஷன்ஸ் simply stupendous !!
சந்தேகமின்றி நடப்பாண்டின் big story - பராகுடா தொடரின் தாக்கம் சார்ந்ததே ! சொல்லப்போனால் நிறைய வாசகர்களின் ஏடுகளில் இந்தாண்டின் டாப் ஆல்பமாய்த் தேர்வாகக் கூடிய ஆற்றல் இந்தக் கடற்கொள்ளையர் கதைக்கே என்று தோன்றுகிறது ! இந்தத் தொடரின் பின்னணியில் பணியாற்றிய போது எனக்கு கொஞ்சம் தடுமாற்றம் இருந்ததை நான் சொல்லியே ஆக வேண்டும் ! கார்ட்டூன்களில் கூட லாஜிக் ; ஒரு நம்பக்கூடிய கதை இருந்தால் தேவலாமென்று கருதிடும் வட்டம் நாம் ! So கணிசமான புய்ப்பச் சுற்றல் க்ளைமாக்சில் அரங்கேறுவதையும் சரி ; கதையின் நடுவே தமிழ் சினிமா பாணியிலான சென்ட்டிமென்ட் ; காதல் ; காமெடி இழையோடுவதையும் சரி - நீங்கள் எவ்விதம் ஏற்றுக் கொள்வீர்களோ என்ற டர் என்னுள் நிறையவே இருந்தது ! ஆனால் கதை சொன்ன அந்த அசாத்திய பாணிக்கும், சித்திரங்களின் அதகளத்திற்கும் நாம் மயங்காது போக மாட்டோம் என்ற நம்பிக்கையே என்னை உந்தித் தள்ளியது ! கிராபிக் நாவல்கள் என்றதொரு தனித் தடம் மாத்திரம் இல்லையெனில் இத்தகைய கதைகளைக் களமிறக்கும் வாய்ப்பு நமக்கு வாய்த்திருக்குமா ? என்பது சந்தேகமே !! An experience to savour !!
கிராபிக் நாவல் வரிசையிலேயே இன்னொரு இதழும் சுவாரஸ்யமான அலசல்களை ஆண்டின் முற்பகுதியினில் உருவாக்கியதும் இங்கே நினைவு கூர்ந்திட லாயக்கான விஷயம் என்பேன் ! '
முடிவிலா மூடுபனி' தான் நான் குறிப்பிடும் அந்த இதழ் ! இதனை மொழிபெயர்க்கும் சமயம் என்னை தீண்டிய சிந்தனை இன்னமுமே நினைவில் நிற்கிறது ! பொதுவாய் நாம் focus செய்து வந்துள்ள அந்த ஆக்ஷன் ; டிடெக்டிவ் & கௌபாய் ஜானர்களில் கதைக்களங்கள் எல்லாமே உலகின் பெருநகரங்களையோ ; வன்மேற்கின் பாலைகளையோ சுற்றிச் சுற்றி இருப்பதே வாடிக்கை ! நியூயார்க்கும் ; பாரிஸும் ; இலண்டனும் ; அரிஸோனாவும் ; டெக்சாசும் நமக்கு கொட்டாம்பட்டி ; சிலுக்குவார்பட்டி ரேஞ்சுக்குப் பரிச்சயம் தானே guys ? அதே போல கௌபாய் உலகின் மீதான அந்த romance காரணமாய் வரலாற்றின் அந்தப் பக்கங்களைப் புரட்ட சம்மதிக்கும் நாம், பாக்கி நேரங்களில் சமகாலப் படைப்புகளைத் தாண்டி வேறெதெற்கும் வாயிலைத் திறந்து வைத்திருந்ததில்லை ! உலகப் போர் பக்கமாய் வண்டியைத் திருப்ப முனைந்தால் கூட - "
உன் அக்கப்போர் தாங்கலைப்பா சாமி !!' என்று மண்டையில் குட்டு விழுவது தானே வாடிக்கை ?! ஆனால் இன்றைக்கோ - ஒரு பிரெஞ்சுக் குக்கிராமப் பின்னணியோடு ; ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பான புராதனத்தைக் கண்முன்னே கொணரும் கதைகளைக் கூட வரவேற்கும் பாங்கு நம்மிடையே துளிர்விட்டிருப்பதை அகன்ற விழிகளோடு ரசித்தேன் ! Winds of change...!!
அதே நேரம் இன்னொரு வித்தியாசக் காலத்தைக் / களத்தைக் கண்முன்னே காட்டும் முயற்சியைத் தெளியத் தெளிய வைத்துச் சாத்தியதுமே இந்தாண்டெனும் வானவில்லின் இன்னொரு பரிமாணம் ! அது தான் '
ஜெரெமியா' தொடருக்கு எதிராய் நீங்கள் வழங்கியுள்ள, சந்தேகங்களுக்கு இடமிலா thumbs down ! எதிர்காலம் ; ஒரு மகாயுத்தத்துக்குப் பின்பான சேதம் கண்ட பூமி ; அதனில் உலவும் இரு நாடோடி இளைஞர்களின் யதார்த்த சாகசங்கள் எனும் போது நிச்சயமாய் நமக்கு ரசித்திருக்க வேண்டும் தான் ! ஆனால் இனம்சொல்ல இயலா ஏதோவொன்று அந்தக் கதைகளில் குறைவதாக எண்ணம் என்னையுமே ஆட்டிப்படைக்க - உங்களின்அழுத்தமான "NO !!" க்களை நோண்டிப் பார்க்கும் ஆற்றல் எனக்கு சாத்தியப்படவில்லை !! Maybe தொடரும் ஆல்பங்களில் முத்திரை பதிக்கும் கதைகளோடு ஜெரெமியா கோலோச்சக்கூடுமோ என்னவோ - இப்போதைக்கு நாம் விலகி நிற்க தீர்மானித்ததும் இந்தாண்டின் ஒரு முக்கிய தருணம் - என்னளவில் !
நடப்பாண்டின் சொதப்ப்ஸ் பற்றிய தலைப்பில் லயித்திருக்கும் சமயம் முடி நீண்ட
ஜானதன் கார்ட்லெண்டை பற்றிப் பேசாது போக இயலாதே !! சில பல ஆண்டுகளுக்கு முன்பே நம்மிடையே தலைகாட்டியிருக்க வேண்டியவர் இவர் ! ஏதோ ஒரு மாற்றம் நிகழ்ந்திட 'கமான்சே' முந்திக் கொள்ள - கார்ட்லெண்ட் பின்தங்கியிருந்தார் ! சரி, லேட்டாய் வந்தாலும் லேட்டஸ்டாய் சாகசம் செய்யட்டுமே என்ற எண்ணத்தில் இவரையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொண்டேன் ! என் பாணியிலேயே ரொம்பச் சங்கடமானதொரு பகுதி ஒன்று உண்டென்றால் - அது ஓமக்குச்சி நரசிம்மன் என்பது புலனான பின்னேயும் மென்று, விழுங்கி, அவரை WWF பயில்வானாய்ச் சித்தரிக்க முயன்றிட வேண்டிய அவசியத்தையே சொல்வேன் ! சில சுமார் கதைகளின் எடிட்டிங்கினுள் புகுந்திடும் கொஞ்ச நேரத்துக்கெல்லாம் - புது ஆத்துக்காரி செய்த உப்பும், புளிப்பும் ததும்பும் பாயாசத்தைக் குடித்தது போல பேஸ்தடித்துக் கிடப்பேன் தான் !! ஆனால் "
ஆங்...ஜுப்பரப்ப்பு !! இன்னா டேஸ்டு ; இன்னா மணம் !! பேஷா இன்னொரு கிளாஸ் குடிக்கலாமே !!" என்று பில்டப் தரும் கட்டாயம் தவிர்க்க இயலாது போகும் !! அந்தக் கதைகளைப் படித்த பிற்பாடு ஆளாளுக்கு ரூம் போட்டுத் திட்டுவீர்கள் என்பதும் தெரிந்திருந்தாலும் - வேறு வழி இராது எனக்கு !
குளிர்காலக் குற்றங்கள் ; நீரில்லை.நிலமில்லை....நியூட்டனின் புது உலகம் ...விசித்திர உலகமிது (மார்ட்டின்) - டக்கென்று இந்த category-ல் நினைவுக்கு வருகின்றன ! ஏதேதோ காரணங்களின் பொருட்டு, தேர்வுகளின் சமயம் 24 காரட் தங்கமாய்த் தோற்றம் தரும் கதைகளானவை - கிட்டக்கே போய்ப் பார்க்கும் சமயம் 'கல்யாணி கவரிங்' ஆகப் பல்லிளிக்கும் மாயையை தவிர்க்க நானும் ஆனமட்டிலும் முயற்சித்தே வருகிறேன் guys !! Anyways தெரிந்தே கூசாமல் புளுகியுள்ளமைக்கு சாரி guys !!
நடப்பாண்டினில் 'தல' கூட சில பல so so சாகசங்களில் தலைக்காட்டியதையும் மறுப்பதற்கில்லை !!
"சாத்தானின் சீடர்கள்" இதழை ஜனவரிக்கென அவசரம் அவசரமாய்த் தயாரிக்க முனைந்த போது அந்நாட்களது ஹீரோ ஜெய்ஷ்ங்கரும், வில்லன் அசோகனும் மனக்கண்ணில் மாறி மாறி ஆஜராகி, நிஜக்கண்களை வேர்க்கச் செய்ததும் தான் நடந்தது ! அந்நாட்களின் 'துணிவே துணை' படத்தில் டெக்ஸுக்கு ஒரு கவுரவ ரோல் தந்தது போலான கதைக்களம், நிச்சயமாய் உங்களை இம்ப்ரெஸ் செய்திடாது என்பதை யூகிக்க நான் கில்லாடியாய் இருக்க வேண்டும் என்றெல்லாம் இல்லையே ?! அதே போல வண்ண மறுபதிப்பாய் வெளியான "வைகிங் தீவு மர்மம்" கூட என் கேசமிலா கபாலத்தைக் காயச் செய்தது ! பற்றாக்குறைக்கு அந்நாட்களில் black & white-ல் வெளியான இந்த இதழை செம சுமாரானதொரு மொழிபெயர்ப்பில் நாம் சிலாகித்து ரசித்திருப்பதை நினைவு கூர்ந்திட்ட போது அழுகாச்சி அழுகாச்சியாய் வந்தது !
Same அழுகாச்சி - same காரணம் - கேப்டன் பிரின்சின் "
மரண வைரங்கள்" ப்ளஸ் MAXI லயனின் "
பழி வாங்கும் பாவை" இதழ்களில் தொடர்ந்ததைக் குறிப்பிட்டால் தேவலாம் என்றும் நினைக்கிறேன் ! ஒரிஜினலாய் பாக்கெட் சைசில் வெளியாகிய இந்த 2 இதழ்களுமே அந்நாட்களில் runaway hits ! ஆனால் இன்றைக்கோ ஏகப்பட்ட மாஸான கதைகளைப் படித்தான பிற்பாடு இவை ஒரு மாற்றுக் குறைவாய்த் தென்பட்டது எனக்கு மட்டும் தானா - no idea !! ஆனால் எது எப்படியோ - இந்தாண்டின் விற்பனையில் தெறிக்கும் வேகம் காட்டிய வகையில் MAXI லயனின் இரு இதழ்களும் அற்புதமான ஆரம்பங்கள் ! இந்த இதழ்களின் திட்டமிடல்கள் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன் என்பதால் அரைத்த அதே மாவையே மறுக்கா அரைக்கப் ப்ரியமில்லை ! மாறாக - இங்கே ஒரேயொரு கேள்வி மட்டும் !!
2020-ன் MAXI லயன் சந்தாவினில் "கார்ட்டூன் மறுபதிப்பு" என்று அறிவித்துள்ள ஸ்லாட்டுக்குள் உட்ஸிடியின் சிறப்பான சிரிப்புப் போலீசை நுழைக்கலாமா guys ? What say ? அவ்விதம் நுழைப்பதாயின் - நீங்கள் பார்த்திட விரும்பும் சாகசம் எதுவாக இருக்குமோ ?
MAXI லயனோடு கைக்கோர்த்துக் களம் கண்ட "
பிஸ்டலுக்குப் பிரியாவிடை" நடப்பாண்டின் TOP இதழ் என்ற போட்டியில் வேகமாய் ஓடிடும் வேட்பாளர் என்பதிலும் no secrets ! இந்த இதழும் கூட நமது எக்கச்சக்க அலசல்களுக்கு ஏற்கனவே உட்பட்டுள்ளது என்பதால் - அது விட்டுச் சென்றுள்ள நினைவுகளை மாத்திரமே கிளறிப் பார்க்க விழைகிறேன் ! நமக்குத் துளியும் தொடர்பிலா ஒரு தேசத்தின் துப்பாக்கிக் கலாச்சாரம் ; அதற்கு அனுமதி தந்திடும் அரசியல் சாசனம் ; அதனில் அவசியமாகிடும் திருத்தங்கள் - என்பனவே ஒரு 4 பாக ஆல்பத்தின் கதைக்கருவாக சுமார் 20 ஆண்டுகளுக்கு முந்தைய நமது வாசிப்புக்களத்தில் அமைந்திருப்பின், நமது ரியாக்ஷன்கள் எவ்விதம் இருந்திருக்குமோ ? என்று மட்டும் யோசித்துப் பாருங்களேன் ? பற்றாக்குறைக்கு இங்கே அதிரடி ஹீரோ என்று யாரும் கிடையாது ; கோமாளிகள் போன்ற வடிவமைப்பில் வலம் வந்திடும் கதை மாந்தர்கள் மாத்திரமே பிரதானப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் !! அத்தகையதொரு ஆக்கத்தை நாம் கொண்டாடியிருக்கும் வாய்ப்புகள் பூஜ்யத்துக்கு மிக மிக அருகில் என்று தான் இருந்திருக்கும் ! ஆனால் இன்றைக்கோ அதனை ஹார்டகவரோடு, ஒரு மிக முக்கிய தருணத்தின் ஸ்பெஷல் இதழாய் வெளியிடும் தகிரியம் எனக்கு சாத்தியப்படுகிறதெனில் - நாற்கால்ப் பாய்ச்சலில் பயணித்திருக்கும் நமது ரசனைகளை தவிர்த்து வேறெதனை சிலாகிப்பது ?
பிஸ்டலுக்குப் பிரியாவிடை - நம் பயணத்தின் ஒரு HUGE மைல்கல் !
பி.பி.வி. இதழோடு வெளியான
"நித்தமொரு யுத்தம்" கூட மாமூலான stereotypes-களை சன்னமாய் முறியடித்த சாகசம் என்பேன் ! ஆக்ஷன் பின்னணியில் மெலிதான உணர்வுகளோடு பயணித்த இந்த
DAMOCLES டீமானது கண்டுள்ள வெற்றி - நம் காமிக்ஸ் வாசிப்புகளின் பன்முகத்தன்மைக்கு இன்னொரு சான்று !
'நாலு சாத்து சாத்தாமல் இந்தப் பாப்பா என்னமோ வசனமா பேசிட்டே திரியுதே ?" என்ற கடுப்ஸ் காட்டாது அழகாய்க் கதையோடு ஒன்றிட நம் அனைவருக்கும் இயன்றுள்ளது - "காமிக்ஸ் வாசகாள்ஸ் 2.0" எத்தனை மாறுபட்டவர்கள் என்பதை ஊர்ஜிதம் செய்திடும் சமாச்சாரமாய் நான் பார்த்திடுகிறேன் !
2019-ன் சற்றே கவலையான legacy ஒன்றுள்ளதெனில் அது இன்றைய கார்ட்டூன் வறட்சியினை அத்தனை பெரியதொரு சமாச்சாரமாய்ப் பெரும்பான்மை பார்த்திருக்கா அந்தப் பாங்கையே குறிப்பிடுவேன் ! ஆண்டுக்கு ஆறே கார்ட்டூன்கள் என்ற தீர்மானத்தை "எடுத்தேன்" என்பதை விட - "எடுக்கும் நிர்ப்பந்தத்தில் இருந்தேன்" என்பதே நிஜமாக இருந்திருக்கும் ! இந்தத் தீர்மானம் அமலாகும் பொழுதினில் போராட்டங்கள் வெடிக்கும் ; சாலைகளில் உண்ணும் விரதங்கள் அரங்கேறும் ; வேப்பிலையினை மட்டுமே உடுப்பாக்கி தலீவரை உருட்டி விட்டு கண்டனங்களைப் பதிவு செய்வீர்களென்றெல்லாம் எதிர்பார்த்தேன் ! ஆனால் ஒரு இக்ளியூண்டு "கார்ட்டூன் காதலர் கும்பலின்" சன்னமான வருத்தக்குரல்களைத் தாண்டி - மூச் காட்டக் கூட நாதியின்றிப் போனது சோகத்திலும் சோகம் ! கபாப் ; பீட்சா ; டக்கிலோ என்று ஆண்டின் வித விதமான பதார்த்தங்களின் லயிப்பில், சிம்பிளான கேசரியின் சுவையை அவ்வளவாய் யாருமே மிஸ் செய்திடவில்லை எனும் போது - தொடரவுள்ள ஆண்டுக்குமே அதனையே template ஆக்கிடும் சூழலே பலனானது ! இதோ - இந்த நவம்பரின் ஆன்லைன் ஆர்டர்களை பார்த்தால் கூட - கேரட் மீசைக்காரர் நீங்கலாய் பாக்கி இதழ்கள் பெரும்பான்மையான ஆர்டர்களில் இடம் பிடித்திருப்பது புலனாகிறது ! பெருமூச்சு விட்டபடிக்கே கல்யாண வீட்டுப் பந்திகளில் தான் கேசரிகளை ஒரு பிடி பிடிக்க முடிகிறது இப்போதெல்லாம் !! Truly sad..!!
நடப்பாண்டின் இன்னொரு அதிரடி ஹிட் - வெகு சமீபத்தைய "
தீபாவளி மலர்" ! 'தல' வழிநடத்த - போனெல்லியின் இன்ன பிற நாயக / நாயகியர் செய்த அதிரடிகள் ஒற்றை குண்டு புக்காகிடும் போது ரகளைகளுக்குப் பஞ்சமிலாது போய் விடுகிறது ! அதிலும் ஜூலியா + டைலன் டாக் version 2.0 சாதித்துக் காட்டியது சூப்பர் சந்தோஷ நொடிகள் ! இங்கு இடம்பிடித்திருந்த டெக்ஸ் & மார்ட்டின் இன்னமும் ஒரேயொரு மாற்றுக் கூடுதலாய் ஜொலித்திருப்பின் - கச்சேரி இன்னமுமே களை கட்டியிருக்கும் !
நடப்பாண்டின் இன்னொரு highlight தருணமாய் நான் நினைத்தது அகஸ்மாத்தாய் மூன்று மெகா இதழ்கள் ஒரே மாதத்தில் துண்டை விரிக்க நேர்ந்த மே மாதத்தை ! ட்யுராங்கோவின் tight த்ரில்லர் ; தி Lone ரேஞ்சர் + பராகுடா க்ளைமாக்ஸ் பாகம் என 3 பயில்வான்கள் ஒருசேர ஆஜராகிடும் பொழுதில் உடல் சுகவீனமும் என்னைத் தேடி வந்திருந்தது ! ஆஸ்பத்திரிவாசம் உறுதி என்று ஊர்ஜிதம் ஆன நொடியில் இந்த 3 இதழ்களுக்குள்ளும் பணியாற்றும் பிசாசு போன்ற உத்வேகத்தைத் தந்த பெரும் தேவன் மனிடோவை இங்கே நினைவு கூர்ந்திடத் தோன்றுகிறது ! மேஜை முழுக்க கலவையாய் மூன்று இதழ்களையும் பரப்பிப் போட்டுக் கொண்டு ஏப்ரலின் துவக்கத்தில் அடித்த கூத்து - one for the memories !! அதுவும் பராகுடாவின் க்ளைமாக்ஸ் பாகம் + தனியொருவன் இதழ்களின் மொத்த மொழிபெயர்ப்பையும் மூன்றோ / நான்கோ நாட்களில் நிறைவு செய்ததை மண்டையைச் சொரிந்தபடிக்கே நினைத்துப் பார்க்கிறேன் !
As dark as they come - என்பதற்கு அடையாளமாய் இந்தாண்டினில் நின்ற 2 கிராபிக் நாவல்களுமே பேனா பிடித்த தருணங்களில் ரொம்பவே வித்தியாசமான அனுபவங்களைத் தந்தன எனக்கு ! "
நித்திரை மறந்த நியூயார்க்" &
"கதை சொல்லும் கானகம்" - இந்த 2 கதைகளையும் தேர்வு செய்த போதே ஓரளவுக்குத் தெரிந்திருந்தது - இங்கே இறுக்கமும், இருளுமே கோலோச்சப் போகின்றன என்று ! And இரு கதைகளிலுமே காலத்தில் முன்னே & பின்னே பயணிக்கும் கதை சொல்லும் யுக்தி கையாளப்பட்டிருக்க - இத்தாலிய மொழியிலிருந்து மாற்றம் கண்டான அந்த ஆங்கில ஸ்கிரிப்ட்களையும், கூகுள் தேடல்களையும் ஒருங்கிணைத்துப் பணியாற்றியது செம வித்தியாச அனுபவம் ! இரு கதைகளுக்குமே எந்த மாதிரியான தொனியில் வசன நடையினை உருவாக்கினால் ஒரிஜினலுக்கு நியாயம் செய்தது போலிருக்கும் என்பதை யூகிக்கவே மொக்கை போட்டேன் ! And தற்போதைய தமிழாக்கங்களில் எனக்கு நூறு சதவிகிதம் திருப்தி என்றெல்லாம் இல்லையெனினும் - அந்த இருண்ட களங்களுக்குள் தட்டுத் தடுமாறி பணியாற்றிய ராப்பொழுதுகளை அத்தனை சீக்கிரத்தில் மறக்க மாட்டேன் தான் !
இந்தாண்டின் pleasant surprises பட்டியலில் ஜூலியா ; டைலன் தவிர்த்து ட்ரெண்டுக்கும் ஒரு இடமுண்டு என்பேன் ! "
சாலையெலாம் ஜ்வாலைகளே' ஹிட்டடிக்கும் வரையிலும் இந்தச் சிகப்புச் சட்டைக்காரரின் நம்மிடையிலான எதிர்காலம் சின்னதொரு கேள்விக்குறியோடே தொங்கிக்கொண்டிருந்தது ! ஆனால் நடப்பாண்டின் 2
ட்ரெண்ட் சாகசங்களும் செம decent என்ற விதத்தில் இவரை நம்மிடையே ஒரு நிரந்தரமாக்கியுள்ளன !!
"நிரந்தரம்" எனும் போது - நம்மிடையே தற்சமயம் குடிகொண்டுள்ள கிராபிக் நாவல் காதலையும் அந்த "நிரந்தர' பட்டியலினுள் நுழைக்கலாம் என்றே தோன்றுகிறது - "
இருளின் ராஜ்யத்தில்" (அண்டர்டேக்கர்) +
"வஞ்சம் மறப்பதில்லை" இதழ்களின் வெற்றியினைப் பார்க்கும் போது !! இரண்டுமே நேர்கோட்டுக் கதைகள் தான் என்றாலும், கதை சொன்ன பாணியினில் இரு ஆல்பங்களும் மிரட்டியிருந்தது - made for awesome reading !!
"வஞ்சம் மறப்பதில்லை" இதழின் அந்த painted சித்திர பாணிகள் கூடுதலாய் ஒரு ப்ளஸ் தானன்றோ ? அந்த இரத்தப் பொரியல் சற்றே தூக்கலான கோங்குராக் காரமாய்த் தென்பட்டிருக்கலாம் தான் - ஆனால் சில தருணங்களில் காரமும் நலம் தான் என்பதை தெலுங்கானா போலீசார் தான் காட்டு காட்டென்று காட்டியுள்ளனரே ?!! "வஞ்சம் மறப்பதில்லை" என்பதைத் தான் மனசுக்குள் சொல்லிக்கொள்ளத் தோன்றியது செய்தியைப் படித்த போது !!
`லுக்கி லூக்கின் ரெகுலர் சாகசங்கள் ; அவரது not so regular சாகசம் (லக்கி லூக்கைச் சுட்டது யார் ?") ; ப்ளூகோட் பட்டாளம் ; சிக் பில் & கோ. ; க்ளிப்டன் என்று இந்தாண்டை light ஆக்கிட உதவிய சில பல கார்ட்டூன் படலங்களும் நினைவில் ஓடுகின்றன !! அந்த சந்தோஷ நினைவுகளோடே ஓராண்டுக்கு விடை தந்திட எண்ணுகிறேன் - உங்களிடம் எப்போதும் போல் சில கேள்விகளை முன்வைத்தபடிக்கு !! அதற்கு முன்பாய் ஒரு thanksgiving படலம் பாக்கியுள்ளதல்லவா ? என்ன தான் 'அமெரிக்கால சொன்னாகோ...ஆப்ரிக்காலே சொன்னாகோ...சப்பான்லே சொன்னாகோ ' என்று நான் கூரையில் ஏறி நின்று கூவினாலும், அவற்றையெல்லாம் நிதானமாய்ப் பரிசீலித்து ; படித்து ; ரசித்து ; சிலாகித்து ; குட்ட வேண்டிய நேரங்களில் குட்டி ; கைபிடித்துத் தூக்கி விட வேண்டிய வேளைகளில் தூக்கி விட்டு அசாத்தியங்களை சாத்தியமாக்கிக் காட்டும் உங்கள் ஒவ்வொருவருக்கும் yet another பயண ஆண்டின் இறுதியில் கரம் கூப்பிய நன்றிகள் folks !! நீரின்றி இங்கு எதுமில்லை....நீவிரின்றியும் தான் !! Thanks a ton & more...!!
கேள்விகள் இதோ :
1. ஒன்றிலிருந்து பத்துக்குள்ளானதோர் மதிப்பெண் பட்டியலில் 2019-ன் நமது செயல்பாட்டிற்கு உங்களது மார்க்குகள் என்னவாக இருக்குமோ ?
2. 2019-ன் டாப் 3 இதழ்கள் உங்கள் பார்வைகளில் ? மூன்றே மூன்று மட்டும் ப்ளீஸ் ?
3. சொதப்பல்கள் பட்டியலைப் பற்றி இம்முறை கேட்கப் போவதில்லை - simply becos அதற்கான பதில்கள் எனக்கே தெரியும் ! இருந்தாலும் - 'மிடிலே' பட்டியலின் TOP இதழாக எதைச் சொல்வீர்களோ ?
4. உங்களைப் பொறுத்த வரையிலும் இந்தாண்டின் best moment எது ?
5. நடப்பாண்டின் அனுபவங்களிலிருந்து 2020-க்கு நாம் எடுத்துச் செல்ல வேண்டிய பாடமென்று ஏதேனும் இருப்பின் - விளக்குங்களேன் புளீஸ் ?
6. இந்தாண்டின் 5172 பக்கங்களில் நீங்கள் படித்திருப்பது உத்தேசமாய் எத்தனையோ ?
Bye all...இப்போதைக்கு நடையைக் கட்டுகிறேன் - ஜனவரியின் "
மேக் & ஜாக்" கார்ட்டூனுக்குள்ளும்,
ஜேம்ஸ் பாண்டின் "பட்டாம்பூச்சிப் படல"த்தினுள்ளும் கால்பதித்திட ! அடுத்த ஞாயிறின் பதிவில் 2019-ன் எனது ஜாலியான தருணங்கள் பற்றிப் பார்த்த கையோடு இன்னொரு ஜாலியான செய்தியையும் சொல்ல முயற்சிக்கிறேனே !! See you around !! Have a breezy weekend all !!
And சந்தாவினில் இணைந்திடவோ ; புதிப்பிக்கவோ கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்ளுங்களேன் ப்ளீஸ் ?