நண்பர்களே,
என் நினைவாற்றலின் வீரியத்தை நான் முழுவதும் நம்பிடுவதாக இல்லை ; எனினும் இங்கே நான் review செய்திடவிருக்கும் இதழ் வெளியானது மார்ச் 1988 ல் தான் என்று எனக்கு உறுதிபடத் தோன்றுகிறது ! எனது அனுமானம் சரியா ; தவறா என்பதை ஊர்ஜிதப்படுத்திட உங்களில் யாருக்கு முடிகின்றதோ, அவர்களுக்கு எனது நன்றிகள் -முன்னக்கூடியே !
1980களின் பிற்பகுதியில் நான் மெய்யாலுமே ரொம்ம்ப்ப busy என்று தான் சொல்லிடணும் ! லயன் காமிக்ஸ் ; திகில் ; மினி லயன் ; பற்றாக்குறைக்கு முத்து காமிக்ஸ் என்று 4 இதழ்களின் பணிகளில் நான் எப்போதுமே மூழ்கிக் கிடந்திட்ட சமயமது! பட்டாளமாய் ஓவியர்கள் ; 3 அச்சுக் கோர்ப்புப் பணியாளர்கள் ; டெஸ்பாட்ச் செய்திட 4 பணியாளர்கள் ; பிரெஞ்சிலிருந்து, இத்தாலிய மொழியிலிருந்து மொழிபெயர்ப்புச் செய்திட ஆங்காங்கே நண்பர்கள் என்று அது ஒரு பரபரப்பான யுகம் !! 'ஆண்டு மலர்' ; 'கோடை மலர்' ; 'அந்த ஸ்பெஷல் '; 'இந்த ஸ்பெஷல்' என்று ரவுண்ட் கட்டி சிலம்பம் ஆடிய அந்தக் காலத்தில் ; மெய்மறக்கச் செய்த அந்த ராட்டினச் சவாரியில் ; அந்த காமிக்ஸ் பவனியில் பங்கேற்றிட்டவர்கள் உங்களில் எத்தனை பேர் என்பதை தெரிந்திட ஆவல் ! புதுசு புதுசாய் கதை வரிசைகள் ; விதம் விதமான விலைகள் - சைஸ்கள் ; உலகின் பல்வேறு மூலை முடுக்குகளின் திறமையான காமிக்ஸ் படைப்புகள் என தூள் கிளப்பிய அந்த golden age -ல் நம்மோடு பயணித்திருக்க இயலா நம் இளம் நண்பர்களுக்கும் சரி ; அந்த சுவாரஸ்யமான அனுபவங்களில் பங்கேற்ற நம் ஆரம்ப கால வாசகர்களுக்கும் சரி, இது ஒரு engrossing பதிவாக இருந்திடுமென்ற நம்பிக்கையோடு எழுதுகிறேன் !
நாம் ஏராளமான படைப்பாளிகளின் கதைகளை வெளியிட்டு இருப்பினும், உலகப் பிரசித்தி பெற்ற வால்ட் டிஸ்னி (முழு நீளக்) கதைகளை நாம் அதிகம் முயற்சிக்காதே இருந்து வந்தோம் ! வால்ட் டிஸ்னியின் படைப்புகள் சின்னத் திரைக்கும், வெள்ளித் திரைக்கும் அசாத்தியமானவை என்ற போதிலும், நமது காமிக்ஸ் ரசனைக்கு சற்றே juvenile ரகமென்றே நான் நினைத்திட்டது தான் இதற்குக் காரணம் ! எனினும் எனது இள வயது favoriteகளில் ஒருவரான Uncle Scrooge கதைகளை தமிழில் கொணர்ந்திட எனக்குள் எப்போதும் ஒரு நப்பாசை இருந்து கொண்டே வந்தது. So 1987 ல் ஒரு சுபயோக சுபதினத்தில் மும்பையிலிருந்த வால்ட் டிஸ்னியின் Licensing ஏஜெண்ட்களை சந்திக்கப் புறப்பட்டேன் ! அந்த சமயத்தில் விமானப் பயணங்கள் அத்தனை சுலபமான சங்கதிகளல்ல என்பதாலும், அடியேனின் சிக்கன நடவடிக்கைகள் ரயில் பயணத்திற்கு அதிகமாக எதற்கும் செலவிட இடமளிக்காதலாலும் - சென்னை சென்று, அங்கிருந்து Dadar எக்ஸ்பிரஸ்-ல் மும்பை சென்றிடத் திட்டம். ஆனால், கிளம்பும் அன்று மாலை ஆபீசிலிருந்து வீடு திரும்பும் வழியில் எனது கைப்பையை ரோட்டில் எங்கோ தவற விட்டு விட்டேன் - உள்ளே இருந்த ரயில் டிக்கெட்களோடு !
'ஆரம்பமே சரி இல்லியே' என்று மண்டைக்குள் குடைந்திட, பிரயாணத் திட்டங்களை தூக்கிப் போட்டு விட்டேன். அப்போது எங்களது டிரைவர் போன் செய்தார்...'நான் எதையாச்சும் தொலைத்து விட்டேனா ?'என்ற கேள்வியுடன் ! 'இதென்னடா அதிசயமாய் இருக்கே?' என்று நானும் மேற்கொண்டு பேச...அவர் வசிக்கும் தெருவினில் விளையாடிக்கொண்டிருந்த பையன்கள், சாலையில் கிடந்ததொரு handbag ஐ கண்டெடுத்ததாகவும் ; அதனுள் ஆறாயிரம் ரூபாய் பணமும், எனது போடோவும் இருந்ததாக அவர் சொல்லச் சொல்ல எனக்கு "தப்பிச்சோம்டா சாமி' என்ற உற்சாகம் ! அவசரம் அவசரமாய் அங்கே சென்று, பையை பெற்றுக் கொண்டு , அந்தச் சிறுவர்களுக்கும் பரிசாக சின்னதொரு தொகையைக் கொடுத்து விட்டு ஓட்டமும் நடையுமாய் ரயில் நிலையத்திற்கு விரைந்தேன். ஒரு விஷயத்தை நொடியில் புரட்டிப் போடும் ஆண்டவன் அதனை மறு நொடியிலேயே செப்பனிடவும் முடியும் என்பதை உணர்ந்து கொண்டேன் நன்றியோடு !
ஒரு வழியாக மும்பை வந்து சேர்ந்து அந்நிறுவனத்தை சந்தித்தேன் ! நமது இதழ்களின் மாதிரிகளைக் காட்டிட்டேன் ; நம்மால் செலுத்திடக் கூடிய ராயல்டி பற்றியும் தெரிவித்தேன் ! "சரக்கு முறுக்காக இருந்தாலும், செட்டியார் முறுக்காக இல்லியே" என்று சொல்லிடும் விதத்தில்..நமது சர்வதேச காமிக்ஸ் ஸ்டார்களின் அணிவகுப்பைப் பாராட்டிய கையோடு, நமது சுமாரான production தரத்தை விமர்சித்தனர் ! ஒரு வழியாகப் பேசி, சின்னதாய் ஒரு துவக்கத்தை எற்படுத்திடுவோம் ; பின்னர் போகப் போக கூடுதலாய் கதைகள் வாங்கிட முயற்சிப்போமென நான் 'முன்ஜாகிரத்தை முனுசாமி' ஆக இருந்து கொண்டேன். இந்த இதழின் அட்டைப்படத்தில் பந்தாவாய் போஸ் கொடுத்திடும் Uncle Scrooge நம் அணிவகுப்பிற்கு வந்து சேர்ந்திட்டது இவ்விதமே
வழக்கமான black & white வேண்டாமெனத் தீர்மானித்து இரு வண்ணங்களில் மினி லயன் வெளிவந்து கொண்டிருந்த சமயம் அது ! So இந்த 24 பக்க சாகசம் rose red & chrome yellow வர்ணங்களில் வந்திட்டது ! கொஞ்சம் மாயாஜாலம், நிறைய காமெடி ; என்று ஜாலியாய் ஓடிய இந்தக் கதை எல்லோரின் பாராட்டையும் பெற்றிட்டது இன்னமும் நினைவுள்ளது எனக்கு !
தொடர்ந்திட்டது "பரட்டைத் தலை ராஜா"வின் 2 பக்க snippet ; "குண்டன் பில்லியின் " 4 பக்க காமெடி கலாட்டா....விச்சு கிச்சு ; ஜோக்கர் என்று filler pages!
"பிரபல கட்டிடங்கள்" என்ற தலைப்பில் இரு பக்கப் பொது அறிவு சங்கதியும் நடுவினில் ! Fleetway ன் துப்பறியும் ஜார்ஜ் நோலன் - ஒரு நான்கு பக்க குட்டி சாகசத்தில் அசத்திட ; தொடர்ந்தது ரூபாய் 100 பரிசுப் போட்டியானதொரு குறுக்கெழுத்துப் புதிர் ! அவசரம் அவசரமாய் நான் உருவாக்கிய இந்தப் புதிரின் மறுபக்கம் இதற்கு முந்தைய இதழான "வெள்ளைப் பிசாசு" க்கான வாசகர் கடிதம் ! இதில் பிரசுரமான இந்தக் கடிதங்களை அன்று எழுதிட்ட நண்பர்களில் எவரேனும் இப்போது, இங்கே இருந்திடும் பட்சத்தில், பெரியதொரு "ஓஓஓ " போட்டிடலாம் !
தொடர்ந்த பக்கங்களில் "ஏட்டிக்குப் போட்டி" என்றதொரு குட்டிக் கதை ; "வரலாற்றில் விளையாட்டுக்கள்" என்றதொரு 2 பக்க சித்திர /பொது அறிவுப் பக்கம்; மற்றும் "பனிமலை மர்மம்" என்றதொரு 12 பக்க Fleetway படைப்பு !
இதழினை நிறைவு செய்திட்டது அடுத்த வெளியீடான "சம்மர் ஸ்பெஷல் " க்கான இரு பக்க விளம்பரம் ! அன்றும் சரி, இன்றும் சரி நமது கற்பனைகளைத் தட்டி ஓட விட்டிடும் "வருகின்றது" விளம்பரங்கள் நமக்கு மிகவும் பிடித்தமானவை என்பதை நான் சொல்லிடவும் வேணுமா என்ன ??!
குட்டிக் குட்டியாய் கதைகளும், filler page களும் நிறைந்திட்ட இதழ் மட்டுமே இது என்ற போதிலும், இரண்டு ரூபாய்க்கு நிறைய படிக்கக் கிடைத்தது போன்றதொரு உணர்வை ஏற்படுத்திய இதழ் இது என்று எனக்குத் தோன்றியது ! அன்று இரண்டு ரூபாய் என்பது எத்தனை பெரிய சமாச்சாரம் என்பது இன்றைய தலைமுறைக்குப் புரிய வைத்திடுவது சுலபமான பணியல்ல..அதனை நான் முயற்சிக்கவும் போவதில்லை ! மாறாக இந்த இதழ் உங்களில் எத்தனை பேரிடம் உள்ளது என்றும் எத்தனை பேர் படித்துள்ளீர்கள் என்றும் சின்னதாய் ஒரு census எடுத்துப் பார்ப்போமா ?
இன்னொரு பதிவு இவ்வாரக் quotaவில் உள்ளதென்ற வாக்குறுதியோடு இப்போதைக்குப் புறப்படுகிறேன். See you around guys ! Bye for now !