Powered By Blogger

Wednesday, June 27, 2012

ஒரு போராட்டத்தின் கதை !


நண்பர்களே,

என் நினைவாற்றலின் வீரியத்தை நான் முழுவதும் நம்பிடுவதாக இல்லை ; எனினும் இங்கே நான் review செய்திடவிருக்கும் இதழ் வெளியானது மார்ச் 1988 ல் தான் என்று எனக்கு உறுதிபடத் தோன்றுகிறது ! எனது அனுமானம் சரியா ; தவறா என்பதை ஊர்ஜிதப்படுத்திட உங்களில் யாருக்கு முடிகின்றதோ, அவர்களுக்கு எனது நன்றிகள் -முன்னக்கூடியே !


1980களின் பிற்பகுதியில் நான் மெய்யாலுமே ரொம்ம்ப்ப busy  என்று தான் சொல்லிடணும் ! லயன் காமிக்ஸ் ; திகில் ; மினி லயன் ; பற்றாக்குறைக்கு முத்து காமிக்ஸ் என்று 4 இதழ்களின் பணிகளில் நான் எப்போதுமே மூழ்கிக் கிடந்திட்ட சமயமது! பட்டாளமாய் ஓவியர்கள் ; 3 அச்சுக் கோர்ப்புப் பணியாளர்கள் ; டெஸ்பாட்ச் செய்திட 4 பணியாளர்கள் ; பிரெஞ்சிலிருந்து, இத்தாலிய மொழியிலிருந்து மொழிபெயர்ப்புச் செய்திட ஆங்காங்கே நண்பர்கள் என்று அது ஒரு பரபரப்பான யுகம் !! 'ஆண்டு மலர்' ; 'கோடை மலர்' ; 'அந்த ஸ்பெஷல் '; 'இந்த ஸ்பெஷல்' என்று ரவுண்ட் கட்டி சிலம்பம் ஆடிய அந்தக் காலத்தில் ; மெய்மறக்கச் செய்த அந்த ராட்டினச் சவாரியில் ; அந்த காமிக்ஸ் பவனியில் பங்கேற்றிட்டவர்கள் உங்களில் எத்தனை பேர் என்பதை தெரிந்திட ஆவல் ! புதுசு புதுசாய் கதை வரிசைகள் ; விதம் விதமான விலைகள் - சைஸ்கள் ; உலகின் பல்வேறு மூலை முடுக்குகளின் திறமையான காமிக்ஸ் படைப்புகள் என தூள் கிளப்பிய அந்த golden age -ல் நம்மோடு பயணித்திருக்க இயலா நம் இளம் நண்பர்களுக்கும் சரி ; அந்த சுவாரஸ்யமான அனுபவங்களில் பங்கேற்ற நம் ஆரம்ப கால வாசகர்களுக்கும் சரி, இது ஒரு engrossing பதிவாக இருந்திடுமென்ற நம்பிக்கையோடு எழுதுகிறேன் ! 

மினி லயன் இதழ்களினைத் தயாரிப்பதென்பது எப்போதுமே ஒரு ஜாலியான சங்கதி ! எந்த டென்ஷனும் இல்லாமல், எந்த ஒரு set patternம் இல்லாமல், இதழ்களை உருவாக்கிட சுதந்திரம் தந்திட்ட format என்பதால், எனது favoriteகளில் பல மினி லயன் இதழ்களாகவே இருந்து வருகின்றன ! "ஒரு நாணயப் போராட்டம்"  அந்த வரிசையினில் எனக்கு ரொம்பவும் பிடித்த இதழ் - பல காரணங்களின் பொருட்டு !


நாம் ஏராளமான படைப்பாளிகளின் கதைகளை வெளியிட்டு இருப்பினும், உலகப் பிரசித்தி பெற்ற வால்ட் டிஸ்னி (முழு நீளக்) கதைகளை நாம் அதிகம் முயற்சிக்காதே இருந்து வந்தோம் ! வால்ட் டிஸ்னியின் படைப்புகள் சின்னத் திரைக்கும், வெள்ளித் திரைக்கும் அசாத்தியமானவை என்ற போதிலும், நமது காமிக்ஸ் ரசனைக்கு சற்றே juvenile ரகமென்றே நான் நினைத்திட்டது தான் இதற்குக் காரணம் ! எனினும் எனது இள வயது favoriteகளில் ஒருவரான Uncle Scrooge கதைகளை தமிழில் கொணர்ந்திட எனக்குள் எப்போதும் ஒரு நப்பாசை இருந்து கொண்டே வந்தது. So 1987 ல் ஒரு சுபயோக சுபதினத்தில் மும்பையிலிருந்த வால்ட் டிஸ்னியின் Licensing ஏஜெண்ட்களை சந்திக்கப் புறப்பட்டேன் ! அந்த சமயத்தில் விமானப் பயணங்கள் அத்தனை சுலபமான சங்கதிகளல்ல என்பதாலும், அடியேனின் சிக்கன நடவடிக்கைகள் ரயில் பயணத்திற்கு அதிகமாக எதற்கும் செலவிட இடமளிக்காதலாலும்  - சென்னை சென்று, அங்கிருந்து Dadar எக்ஸ்பிரஸ்-ல் மும்பை சென்றிடத் திட்டம். ஆனால், கிளம்பும் அன்று மாலை ஆபீசிலிருந்து வீடு திரும்பும் வழியில் எனது கைப்பையை ரோட்டில் எங்கோ தவற விட்டு விட்டேன் - உள்ளே இருந்த ரயில் டிக்கெட்களோடு ! 

'ஆரம்பமே சரி இல்லியே' என்று மண்டைக்குள் குடைந்திட, பிரயாணத் திட்டங்களை தூக்கிப் போட்டு விட்டேன். அப்போது எங்களது டிரைவர் போன் செய்தார்...'நான் எதையாச்சும் தொலைத்து விட்டேனா ?'என்ற கேள்வியுடன் ! 'இதென்னடா அதிசயமாய் இருக்கே?' என்று நானும் மேற்கொண்டு பேச...அவர் வசிக்கும் தெருவினில் விளையாடிக்கொண்டிருந்த பையன்கள், சாலையில் கிடந்ததொரு handbag ஐ கண்டெடுத்ததாகவும் ; அதனுள் ஆறாயிரம் ரூபாய் பணமும், எனது போடோவும் இருந்ததாக அவர் சொல்லச் சொல்ல எனக்கு "தப்பிச்சோம்டா சாமி' என்ற உற்சாகம் ! அவசரம் அவசரமாய் அங்கே சென்று, பையை பெற்றுக் கொண்டு , அந்தச் சிறுவர்களுக்கும் பரிசாக சின்னதொரு தொகையைக் கொடுத்து விட்டு ஓட்டமும் நடையுமாய் ரயில் நிலையத்திற்கு விரைந்தேன். ஒரு விஷயத்தை நொடியில் புரட்டிப் போடும் ஆண்டவன் அதனை மறு நொடியிலேயே செப்பனிடவும் முடியும் என்பதை உணர்ந்து கொண்டேன் நன்றியோடு !

ஒரு வழியாக மும்பை வந்து சேர்ந்து அந்நிறுவனத்தை சந்தித்தேன் ! நமது இதழ்களின் மாதிரிகளைக் காட்டிட்டேன் ; நம்மால் செலுத்திடக் கூடிய ராயல்டி பற்றியும் தெரிவித்தேன் ! "சரக்கு முறுக்காக இருந்தாலும், செட்டியார் முறுக்காக இல்லியே" என்று சொல்லிடும் விதத்தில்..நமது சர்வதேச காமிக்ஸ் ஸ்டார்களின் அணிவகுப்பைப் பாராட்டிய கையோடு, நமது சுமாரான production தரத்தை விமர்சித்தனர் ! ஒரு வழியாகப் பேசி, சின்னதாய் ஒரு துவக்கத்தை எற்படுத்திடுவோம் ; பின்னர் போகப் போக கூடுதலாய் கதைகள் வாங்கிட முயற்சிப்போமென நான் 'முன்ஜாகிரத்தை முனுசாமி' ஆக இருந்து கொண்டேன். இந்த இதழின் அட்டைப்படத்தில் பந்தாவாய் போஸ் கொடுத்திடும் Uncle Scrooge நம் அணிவகுப்பிற்கு வந்து சேர்ந்திட்டது இவ்விதமே 

வழக்கமான black  & white வேண்டாமெனத் தீர்மானித்து இரு வண்ணங்களில் மினி லயன் வெளிவந்து கொண்டிருந்த சமயம் அது ! So இந்த 24 பக்க சாகசம் rose red & chrome yellow  வர்ணங்களில் வந்திட்டது ! கொஞ்சம் மாயாஜாலம், நிறைய காமெடி ; என்று ஜாலியாய் ஓடிய இந்தக் கதை எல்லோரின் பாராட்டையும் பெற்றிட்டது இன்னமும் நினைவுள்ளது எனக்கு ! 

தொடர்ந்திட்டது "பரட்டைத் தலை ராஜா"வின் 2 பக்க snippet ; "குண்டன் பில்லியின் " 4 பக்க காமெடி கலாட்டா....விச்சு கிச்சு ; ஜோக்கர் என்று filler pages! 

"பிரபல கட்டிடங்கள்" என்ற தலைப்பில் இரு பக்கப் பொது அறிவு சங்கதியும் நடுவினில் ! Fleetway ன் துப்பறியும் ஜார்ஜ் நோலன் - ஒரு நான்கு பக்க குட்டி சாகசத்தில் அசத்திட ; தொடர்ந்தது ரூபாய் 100  பரிசுப் போட்டியானதொரு குறுக்கெழுத்துப் புதிர் ! அவசரம் அவசரமாய் நான் உருவாக்கிய இந்தப் புதிரின் மறுபக்கம் இதற்கு முந்தைய இதழான "வெள்ளைப் பிசாசு" க்கான வாசகர் கடிதம் ! இதில் பிரசுரமான இந்தக் கடிதங்களை அன்று எழுதிட்ட நண்பர்களில் எவரேனும் இப்போது, இங்கே இருந்திடும் பட்சத்தில், பெரியதொரு "ஓஓஓ " போட்டிடலாம் !


தொடர்ந்த பக்கங்களில் "ஏட்டிக்குப் போட்டி" என்றதொரு குட்டிக் கதை ; "வரலாற்றில் விளையாட்டுக்கள்" என்றதொரு 2 பக்க சித்திர /பொது அறிவுப் பக்கம்; மற்றும் "பனிமலை மர்மம்" என்றதொரு 12 பக்க Fleetway படைப்பு ! 
இதழினை நிறைவு செய்திட்டது அடுத்த வெளியீடான "சம்மர் ஸ்பெஷல் " க்கான இரு பக்க விளம்பரம் ! அன்றும் சரி, இன்றும் சரி நமது கற்பனைகளைத் தட்டி ஓட விட்டிடும் "வருகின்றது" விளம்பரங்கள் நமக்கு மிகவும் பிடித்தமானவை என்பதை நான் சொல்லிடவும் வேணுமா என்ன ??! 


குட்டிக் குட்டியாய் கதைகளும், filler page களும் நிறைந்திட்ட இதழ் மட்டுமே இது என்ற போதிலும், இரண்டு ரூபாய்க்கு நிறைய படிக்கக் கிடைத்தது போன்றதொரு உணர்வை ஏற்படுத்திய இதழ் இது என்று எனக்குத் தோன்றியது ! அன்று இரண்டு ரூபாய் என்பது எத்தனை பெரிய சமாச்சாரம் என்பது இன்றைய தலைமுறைக்குப் புரிய வைத்திடுவது சுலபமான பணியல்ல..அதனை நான் முயற்சிக்கவும் போவதில்லை ! மாறாக இந்த இதழ் உங்களில் எத்தனை பேரிடம் உள்ளது என்றும் எத்தனை பேர் படித்துள்ளீர்கள் என்றும் சின்னதாய் ஒரு census எடுத்துப் பார்ப்போமா ?  

இன்னொரு பதிவு இவ்வாரக் quotaவில் உள்ளதென்ற வாக்குறுதியோடு இப்போதைக்குப் புறப்படுகிறேன். See you around guys ! Bye for now !


74 comments:

 1. நான் மிகவும் இரசித்த இதழ்கள் இவை!

  ReplyDelete
 2. அற்புதமான காலகட்டங்கள் அவை. மிகச்சிறியவன் நான் அப்போது என்பதால், சரியாக ஆண்டு நினைவில் இல்லை. ஆனால் - இந்தியப் படையினர் நம் நாட்டில் நிலைகொண்டிருந்த காலம் என்று மட்டும் நினைவில் நிற்கிறது.

  நான் விரும்பி, ரசித்து, லயித்த கதைகளில் (இந்தப் புத்தகத்தின் அத்தனை அம்சங்களுமே!) இதுவும் ஒன்று. பலவருடங்கள் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருந்தேன். 1996 இல் நடந்த இடப்பெயர்வின்பின் வீட்டுக்குத் திரும்பியபோது உடைந்த கூரையின் ஒழுக்கில் மண்ணோடு சேர்ந்து - வெயிலில் காய்ந்து கட்டையாகிப்போன புத்தகங்களில் இதுவும் ஒன்றாகிப்போனது :(.

  ஆனால், இதற்கு முந்தைய இதழான 'வெள்ளைப்பிசாசு' இப்போதும் கைவசம் இருக்கிறது. பின்னட்டை மட்டும் மிஸ்ஸிங்.

  அந்த நாளைய இதழ்களில் வந்த 'ஸ்காம்ப்'பும், மூலிகை இலையை மணந்துவிட்டு அசத்தும் முட்டைக்கண் வீரனும் - அடடா...அடடா... பழைய நினைவுகளை மீட்டும்போது இதயம் மேலெழுந்து தொண்டைக்குள் வருவதாய்ப் பிரமை.

  இந்தப்பதிவுக்காக - ஆசிரியருக்கு ஸ்பெஷல் நன்றி!

  Theeban (SL)

  ReplyDelete
  Replies
  1. இந்த அட்டைப்படத்திலுள்ள சில படங்களை அந்த வயதில் வரைந்து கலர் பண்ணி வைத்திருந்தேன். எங்காவது இருக்கும். கிடைத்தால் பகிரலாம்; பார்ப்போம்.

   Theeban (SL)

   Delete
 3. படித்திருக்கிறேன்! ஆனால் எனக்கு அப்போது 8 வயது என்பதுதான் ஆச்சரியம்! இந்த காமிக்ஸ் உலகத்தை அந்த வயதிலேயே எனக்கு அறிமுகப்படுத்திய என் தந்தைக்கு நன்றி!

  ReplyDelete
 4. அப்பொழுது எனக்கு 12 வயது… படித்ததாக ஞாபகம் இல்லை…

  ReplyDelete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete
 6. It looks like this book was more in the lines of a children's magazine with lot of different sections like comics, history, puzzles, etc.. Didn't know that our comics have released walt disney stories. i can imagine the nostalgia somebody would get out of it (if they had read/have this book).

  ReplyDelete
 7. i have fond memories of this buk, summer special, nadu kadalil eligal etc etc. they remain as a prized possesion every now and then... puthaga priyan

  ReplyDelete
 8. இந்த புத்தகத்தை வாங்கி படித்த காலத்தில் இரண்டு ருபாய் எவ்வளவு பெரிது என்பது புரிகிறது நன்றி எல்லாம் என் தந்தைக்கே இது ஒரு கலக்கல் விருந்து நான் அப்போது முன்றாம் வகுப்பு எனது புத்தக சேமிப்பிற்கு நடுவில் ஒரு கருந்தேள் என்கிரிந்தோ வந்ததனால் இவற்றை அடைகாதே என்று இந்த புத்தகத்தை மட்டுமல்ல அணைத்து புத்தங்களையும் அழுது கொண்டே விலைக்கு போட வேண்டியதாயிற்று, இபோது தான் சமிபத்தில் திரும்ப வாங்க முடிந்தது Uncle Scrooj Duck tales இல் மாறாக முடியாதது போலவே இந்த கதையையும் மறக்கவே முடியாது..

  Very nice Post I am remembering some nostalgic memories when i happened to read this...

  Thanks again for a wonderfull post...

  Shriram...

  ReplyDelete
 9. புனித சாத்தானிடம் இந்த புத்தகம் இருக்கிறது.அங்கிள் ஸ்க்ரூஜை கொல்ல அவரது ஜென்ம விரோதியான மேஜிகா போடும் திட்டங்களும் அதை முறியடிக்க அங்கிள் ஸ்க்ரூஜ் மற்றும் அவரது மருமகன்கள் அடிக்கும் லூட்டிகளும் அற்புதமாக இருக்கும்.அது சரி.எடிட்டர் அவர்கள் வரும் காலத்திலாவது வால்ட் டிஸ்னி கதைகளை (வண்ணத்தில்)வெளி கொணர்வாரா ?

  ReplyDelete
 10. பின்னட்டையிலிருக்கும் சிந்துபாத்தையும் மறக்கமுடியாது!!!

  Theeban (SL)

  ReplyDelete
 11. எங்க சார் நான் முதன் முதலில் கடையில் வாங்கிய லயன் காமிக்ஸ் லயன் சென்சுரி ஸ்பெஷல் தான்.
  என்னிடம் இருக்கும் புத்தகம் எல்லாம் அதன் பின்பு பழைய புத்தக கடையில் வாங்கியதே.
  நான் 1980 கோல்டன் periodai ரொம்ப மிஸ் செய்கிறேன் சார்.
  என்னிடம் இந்த புத்தகம் இல்லை.

  ReplyDelete
 12. I also have this book. Sweet memories. Thanks for sharing your experience on this issue.

  ReplyDelete
 13. விஜயன் சார்,

  சமீபத்தில் கீழ்க்கண்ட ப்ளாக்கை காண நேர்ந்தது! மிகவும் அற்புதமான, வித்தியாசமான சித்திர பாணி இவருக்கு (கார்ட்டூன் பாலா!)
  http://cartoonbala-conceptartist.blogspot.com/2012/06/comics-wip.html

  இவரை போன்ற திறமைசாலிகளின் கைவண்ணங்களை நமது இதழ்களில் பயன்படுத்திடும் எண்ணம் உள்ளதா? இவருடைய பேட்டியை இங்கு காணலாம்! (அவருடைய கைகளில் உள்ள இரத்தப்படலம் இதழை கவனியுங்கள்!)
  http://www.animationxpress.com/index.php/latest-news/showcase-with-qa-bala-murugan

  ReplyDelete
 14. சார்,
  //நான் review செய்திடவிருக்கும் இதழ் வெளியானது மார்ச் 1988 ல் தான் என்று எனக்கு உறுதிபடத் தோன்றுகிறது ! எனது அனுமானம் சரியா ; தவறா என்பதை ஊர்ஜிதப்படுத்திட உங்களில் யாருக்கு முடிகின்றதோ, அவர்களுக்கு எனது நன்றிகள் -முன்னக்கூடியே//

  இந்த இதழ் நீங்கள் சொன்ன்னது போல 1988 இதோ ஊர்ஜிதப்படுத்தும் தகவல் பதிவு: தமிழில் வந்த வால்ட் டிஸ்னி கதைகள் (இந்த பதிவின் கமெண்ட்டுகளை சற்று ஆழ்ந்து படியுங்கள்).

  இது மட்டுமின்றி மற்ற அங்கிள் ஸ்க்ரூஜ் கதைகளை பற்றியும், அவற்றின் டவுன்லோட் லிங்க்கும் இந்த பதிவின் முடிவிலேயே உள்ளன. தேவைப்படுபவர்கள் டவுன்லோடலாம்.

  ReplyDelete
  Replies
  1. டவுன்லோட் லிங்க்குகள் வேலை செயவில்லை, முடிந்தால் சரி செய்யவும்.. அப்படியே இது லீகலா இல்லீகலா என்பதையும் தெரியப்படுத்தவும்..

   Delete
 15. இந்த இதழ் வெளிவந்தபோது நான் பதினொன்றாம் வகுப்பு படித்துகொண்டு இருந்தேன். முழுப்பரிச்சை நேரம் என்று நினைக்கிறேன். பாடப்புத்தகத்தில் என் அண்ணன்களுக்கு தெரியாமல் மறைத்து மறைத்து படித்தது மறக்கமுடியாதது. என் திருமனத்திற்கு பிறகு ஸ்வாகாவான காமிக்ஸ்களில் இதுவும் ஒன்று.

  மினி லயனில் வந்த அங்கிள் ஸ்க்ரூஜ் கதைகளை பற்றி நண்பர் விஷ்வா பதிவில் விரிவாக படித்திருக்கிறேன்
  http://www.tamilcomicsulagam.blogspot.in/2009/05/uncle-scrooge-in-tamil-language-tribute.html

  ReplyDelete
  Replies
  1. Dear Vijyan, could you please put some filter for NOT allowing our comincs lover to post URL here? because it will lead to put some junk and unwanted URL to be placed by WEB HACKERS.

   Delete
 16. வீட்டில் தேடிப்பர்த்தவரை என்கிட்டயும் ஒரு காப்பி இருக்கு சார். எனக்கு மிகவும் பிடித்த புத்தகங்களில் ஒன்று. அங்கிள் ஸ்க்ரூஜ், அலிபாபா கதைகளையும் ரீப்ரின்ட் பண்ணுங்க சார்

  ReplyDelete
 17. சமீபத்தில்தான் ஒரு அண்ணாவிடம் கடன் வாங்கி வாசித்தேன்.. மிகவும் ரசித்த கதைகளில் இதுவும் ஒன்று.. இந்த பதிவை வாசித்த பின்னர் மீண்டும் ஒருமுறை வாங்கி வாசிக்க வேண்டும் போல இருக்குது :)

  ReplyDelete
 18. அந்த காமிக்ஸ் பவனியில் பங்கேற்றிட்டவர்கள் உங்களில் எத்தனை பேர் என்பதை தெரிந்திட ஆவல் !
  நானும் பங்கேற்றிருந்தேன்

  ReplyDelete
 19. Dear Editor, I had my first comics experience started in 1987 I believe, your comics titled "Needhikavalan Spider" Purachi Thalaivan Archie" "Meendum Hitler" are those books. But my effective comics reading started from the year 1988 June. That time my friend Rajesh introduced this comics experience once again.

  As you said, "அன்று இரண்டு ரூபாய் என்பது எத்தனை பெரிய சமாச்சாரம் என்பது இன்றைய தலைமுறைக்குப் புரிய வைத்திடுவது சுலபமான பணியல்ல.." Due to my family background, I could not buy any comics those days.I was lending lion comics from my friend only or I got second hand comics thru book centres, waste Paper marts. I ve bought "Siru Pillai Vilaiyattu" lion comics directly from the bookshop for Rs.2.50 for the first time. I missed "Deepavali Special: Iratha Muthirai" as it was priced Rs.5/- Rani comics tempted me many times due to its low price and more pages(???). I felt ashamed for that and later I realised the super quality stories of our comics. Slowly I managed to regularize my comics purchase with my pocket money. It was very tough those days to get money. All are sweet memories.

  I ve read this "Oru Naanaya Porattam" very later. I love this story for its fun, color and quality. I love all the stories of Uncle scrooge released by Mini Lion. Please try to re release Uncle Scrooge Special in a full color issue. All the Mini Lion comics are my favorite ones.

  ReplyDelete
 20. Now the LION WITH CAKE is there in the New Look Special cover page.

  ReplyDelete
  Replies
  1. Yes. In the printed add. (2nd part of the Jerome's story)

   Delete
 21. I am possibly one of the few who had the opportunity to read the Walt Disney comics published by you in the early years. The Disney Comics are immortal and they are good to read by readers of all ages. I think it would be wonderful for you to revive the Diney Comics by publishing new ones (not reprint)

  tgopalakrishnan

  ReplyDelete
 22. 8ஆம் வகுப்பு படிக்கும் போது வந்த/படித்த கதைகள் இவை. திகில் இரண்டு மற்றும் மூன்றாம் இதழ்களை விட அலிபாபா மற்றும் அங்கிள் ஸ்ரூஜ் கண்டிப்பாக மறுபதிப்பு செய்யலாம்.

  ReplyDelete
 23. நான் படித்திருக்கிறேன் ! என் நினைவில் இருகிறது....என் சிறுவயதை நியாபக வருகிறது......மிக நன்றி விஜயன் அவர்கள்.


  செந்தில்

  ReplyDelete
 24. wt the english name of the sindbad that appear in lion

  ReplyDelete
 25. நான் அப்போது தான் நடக்கவே ஆரம்பித்தேன். :(

  ReplyDelete
 26. என்னுடைய சிறுவயதில் இதை படித்த ஞாபகம். மேட்டுப்பாளையத்தில் என்னுடைய மாமா பையன் வீட்டில் படித்த ஞாபகம். அப்பொழுது எல்லாம் லியன் காமிக்ஸ் இங்குதான் படித்தேன். நிறைய புத்தகம் படித்த ஞாபகம்.ஆனல் எதுவும் நினைவில் இல்லை.. திரும்ப கிடைக்குமா?. 94க்கு பின்புதான் நான் சேமிக்க முடிந்தது.. ஆனால் ஒரு விசயம், ரத்த படலம் முதல் புத்தகத்தில் இருந்து படித்துவிட்டேன்... லியன் காமிக்ஸ் படிபதற்கு என்றே மேட்டுப்பாளையம் செல்வேன். அன்னூரில் இந்த புத்தங்கள் வந்திருந்தால், என் தந்தை வாங்கி கொடுத்திருப்பார். இப்பொழுது நான் வாங்கி கொடுக்கின்றேன் ஆனால் அவருக்கு ஆர்வம் இருகின்றத என்று தெரியவில்லை...

  ReplyDelete
 27. Hi Guys,

  I got the books delivered now (Detective Jerome), i am happy to get hold of the books, i will post comment about our new hero after i finish reading.

  ReplyDelete
 28. அன்பு ஆசிரியருக்கு புத்தகம் இன்று மாலையே வந்துவிட்டது .எனக்கு இப்போ தான் கிடைத்தது .5 பக்கம் படித்து விட்டு எழுதுகிறேன் .அட்டை படம்

  சுத்த வேஸ்ட் என பதிவிட எண்ணினேன் உங்கள் ப்ளோகில் பார்த்த போது.ஆனால் புத்தகத்தில் பார்த்த போது அற்புதமாக உள்ளது .மோசமில்லை .

  நீங்கள் கூறியது போல கதை நன்றாகவே இருக்கும் என நினைக்கிறேன்,துவக்கமே அற்புதமாய் ஆரம்பித்துள்ளது.மீதி கதையை படித்த பின் .........

  ReplyDelete
 29. நான் வில்லிவகாதில் என் பாட்டி வீட்டில் இருந்தேன் புத்தகத்தை என் மாமா வங்கி வந்தார்கள், நான் ரொம்ப அடம் பித்தேன் முதலில் படிப்தற்கு....என் நினைவில் இருகிறது!! :) மேம்ரிஸ்.


  செந்தில்

  ReplyDelete
 30. especialy "குண்டன் பில்லி" gently comedy...இப்பது நினைத்தாள் குட நன்றாக உள்ளது :)

  thankyou very vijayan


  செந்தில்

  ReplyDelete
 31. Jerome Review:

  Nice storyline, decent art work, as our editor said he doesn't have much of work to do in this two part story, we welcome jerome into our comics family, hope to see more of him in our comics in near future.

  ReplyDelete
 32. i rcvd jerome, art work and story line are good like Rip kirby, plz issue more stories in this series.

  if any chance plz consider these - Thupariyum computer, Vindhai manidhan robin, Karate doctor,
  Rambo, Suski wiski, Iratai vetayar, Bheema, Mugamudi Mayavi, Martin mystery, George nolan, Neengalum thupariyungal, Bruno brazil, Saagasa veerar Roger and bill, John master, John west(adhiradi padai), Adhiradi veerar hercules, Eagle man, Uncle scrooge, Robin, Danger diabolik, Jeslong, alibaba, kulal voodhum kannan....

  thank you

  ReplyDelete
  Replies
  1. டியர் ஜோல்னா,,,,,,,,,,,,,,, இத்தனை நாட்கள் எங்கே போய் இருந்தீர்கள் ? நம் கடலின் நாயகன் பிரின்ஸ் வோட்ட பந்தயத்தில் முன்னில் இருப்பதை விஸ்கியுடன் கொண்டாடுவோம் ,,,,,,,,,,,,, சாரி சாரி ,,,,,,,,,,,,, விஸ்கி &சுஸ்கி யுடன் கொண்டாடுவோம் ,,,,,,,,,,,,,,,,,,, appuram ஜெரோம் யை ரிப் யுடன் ஒப்பிடுவது கொஞ்சம் ஓவர் ,,,,,,,,, ரிப் அலடல் இல்லாமல் துப்பறியும் பாணி& மற்றும் எல்லா பெண்களுக்கும் அவர் ஒரு ஆதர்ச நாயகன் ,,,,,,,,,,, பட் ஜெரோம் ஒரு இன்னசென்ட் guy ,,,,,,,,,,,, ரிப் ன் student ஜெரோம் என்று வேண்டுமானால் சொல்லலாம் ,,,,,,,,,,, இன்னும் சில கதை கள் வந்தால்தான் ,,,,,,,, ஜெரோம் first பெஞ்ச் ஸ்டுடென்ட் ஆ ? இல்லை லாஸ்ட் பெஞ்ச் ஸ்டுடென்ட் ஆ என்று தெரியும் ,,,,,,,,,,,,, டேக் கேர் guys ,,,,,,,,,,,,,,

   Delete
  2. ~ @ # # $ % ^ & & ***************((((())))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))%%%%%%%%%%%%%%%%%##########@@@@@@@@@@@@@@@@@@!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

   Delete
 33. i just finished the book in an hour, quite ordinary story. but with some good perspective art work! i really liked it. jerome should be given another chance to prove his worth.

  ReplyDelete
 34. கதை ஓவியம் எல்லாமே நன்றாக உள்ளது.சில இடங்களில் வசனமே இல்லை.ஆனால் ஒரே இடத்தில அவை குவிந்துள்ளன.ஆனால் கதை ரசிக்கும்படி செல்கிறது.இருப்பினும் இக்கதை நமக்கு போதாது.ஏற்கனவே வெளி விட இதை விட சிறப்பான ,புதிய மற்றும் பழைய கதைகள் உள்ள போது இதை பிறகு சாவகசமாக பார்த்து கொள்வோமே .அனால் உங்கள் மொழி பெயர்ப்பும், கதாசிரியரின் கதை திறனையும் பாராட்டியே ஆக வேண்டும்.இது நமக்கு போதாது.விறு விருப்பு குறைவே.அடுத்த ஆண்டு மலர் சொன்ன தேதியில் கிடைக்கும் என நம்பிக்கையுடன்................................மேலும் முதல் புத்தகத்தை பெயர் சூட்டிய நண்பருக்கு தங்கள் கை எழுத்துடன் அனுப்பினால் நன்றாக இருக்கும் என்பது எனது வேண்டு கோளில் ஒன்று .

  ReplyDelete
 35. நாணய போராட்டம் ,எனது நாணயத்தின் மீது போராட்டம் நடந்த காலம் அது .எனது தந்தை அனைத்து புத்தகம் வாங்க காசு கொடுப்பார் .ஆனால் சில நேரங்களில் கிடைக்காது .அப்போது என்னுள் இருந்த வில்லன் வெளி படுவான் ஸ்பைடர் போல. பிறகு என்ன புத்தகம் வங்கி விடுவேன்.இரண்டு ரூபாய் மிக பெரிய தொகை .

  இந்த கதை அறிவிப்பு வந்த போது மிக்கி ,டொனல்ட் ஸ்டிக்கரில் பார்த்து ரசித்து கொண்டிருந்த நான் ,எதிர் பார்த்து இருந்த தவிப்புகள் இப்போதும் நிழலாடுகின்றன .மதியம் ஆனதும் சிறிது தள்ளி இருக்கும் ரோட்டு கடைக்கு படையெடுப்பது எனது வழக்கம் .கோகுலம்,ரத்னபாலா,பூந்தளிர் ,அம்புலிமாமா,

  நமது காமிக்ஸ் ,என பார்த்து அடுத்த நாள் பணத்துடன் செல்வது வழக்கம் .அப்போது யார் அந்த மினி ஸ்பைடர் வெளிவந்த நேரம் ,மிகுந்த எதிர் பார்ப்பு ,அன்று மாலையே திரும்பி வர வேண்டும் என்ற வெறியுடன் நான்,அப்போது சிகரட் அட்டை சேகரித்து விளையாடுவது வழக்கம் ,ரோட்டில் கிடைக்கும் அட்டைகளை சேகரித்த போது எனக்கு கீழே கிடைத்த இரண்டு ரூபாய் கொடுத்த சந்தோசத்தை எதுவும் என் வாழ் நாளில் கொடுத்திருக்காது.ஏன் நண்பர்களிடம் 50 பைசா

  சேகரித்து ,திரும்பி சென்று அந்த புத்தகத்தை வாங்கி சென்று படித்து வியந்தேன் .நாணய போராட்டம் வந்த பிறகு எளிதாக வங்கி விட முடிந்தது .இக்கதைகளை தாராளமாக நீங்கள் மறு பதிவிடலாம் .

  ReplyDelete
 36. அன்பு ஆசிரியருக்கு

  நண்பர் முதலை பட்டாளத்தார் வெளியிட்ட தொகுப்பில் பார்த்தேன் .முத்து காமிக்ஸ்

  கதை எண் 137 திசை மாறிய கப்பல்கள் லிருந்து நான் விடாமல் படித்துள்ளேன்,சில கதைகள் முன்னால் உள்ளவற்றில் கிடைத்தன.ஆனால் எவளவு அற்புதமான அலுக்காத கதை வரிசைகள் ,நிறைய புத்தகங்களை படிக்கவில்லை .இவைகளை மறு பதிப்பிட்டாலே நிறைய ஆண்டுகள் தேவை படுமே...................நாங்கள் அனுபவிக்கிறோம் ஏக்கமாக ............கருணை காட்டுங்கள் ....நண்பர் முதலை பட்டாளத்தார் வெளியிட்ட தொகுப்பில் பார்த்தேன் .முதல் நூறு புத்தகங்களை வெளியிடலாம் எதையும் தவிர்க்காமல் .............

  ReplyDelete
 37. இனி நாணய போராட்டமல்ல புத்தக போராட்டம்தான்

  ReplyDelete
 38. உலகே உன் விலை என்ன எவளவு அழகான அட்டை படம் mmmmmmmmmmmmmmmmmmm ..........(பேரு(பெரு) மூச்சு )

  ReplyDelete
 39. இரண்டு புத்தகங்களும் நேற்று வந்தடைந்தன. அட்டைப்படங்கள் பார்க்க அருமையாக இருக்கிறது (ஸ்கேன் காப்பிகளில் இல்லாத வசீகரம், பிரிண்ட் செய்தபின் வரும் மாயம் என்ன ?).

  பிரிண்ட் செய்யப்பட தாள்களும் சற்றே அதிக வெள்ளை நிறம் கொண்டதால், சித்திரங்கள் நன்றாக வந்திருக்கின்றன.

  ReplyDelete
 40. ஆசிரியர் அவர்களுக்கு, ஜெரோம் நேற்று வந்தடைந்தார்.

  மெல்லிய கதையோட்டம், மிக சில கதாபாத்திரங்கள். பெரிதாக விவரிக்க நிறையோ குறையோ கண்ணில் படவில்லை. இவரை ஒரு முயற்சி என்ற வகையிலே வைக்கலாமோ ஒழிய வெற்றிகரமான முயற்சி என்று சொல்ல முடியவில்லை.

  சார் மேலும் நான் தங்களுக்கு திருப்பூர் நேரடி முகவர் ஒருவருடைய செல்பேசி என்னை மின்னஞ்சல் செய்தேன். அதனை பற்றி மேல் தகவல் ஒன்றும் எனக்கு வரவில்லையே...

  ReplyDelete
 41. ஆசிரியர் அவர்களுக்கு

  புத்தகம் இன்னும் எனக்கு வந்து சேரவில்லை ...

  நாளை கிடக்கும் என நம்புகிறேன் :)

  நாகராஜன்

  ReplyDelete
 42. இந்த புத்தகம் வெளிவந்த போது நன் எனதூரில் ஒரு பிரபல மான "News Agent ".இரயிலில் வந்த பார்சலை, பிறித்தவுடன் எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் (பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை) ஆளுக்கு ஒரு பிரதியை எடுத்து படிக்க தொடங்கினார்கள் அதில் எனக்கு மிகுந்த சந்தோஷம் இருந்தது அந்த காலம் ஒரு மகாத்தான பொற்காலம்தான்.அப்போது நான் வியாபாரியாக மட்டும்! இருந்தேன் புத்தகம் சேர்ப்பவனாக இருந்திருக்க வில்லை.
  அன்புடன்,
  ஹாஜா இஸ்மாயில்.எம்.

  Note அடுத்த முழுநீள மறுபதிப்பாக நீங்கள் பார்த்திட விரும்பும் இதழ் எது ?
  டிராகன் நகரம் (டெக்ஸ் வில்லர்)
  நரகத்தின் எல்லையில் (கேப்டன் பிரின்ஸ்)
  மனித எரிமலை (இரும்புக்கை நார்மன் )

  ReplyDelete
 43. I received this month issues (2books) of muthu comics on 30th June. Not yet read the stories due to work load.

  ReplyDelete
 44. //இன்னொரு பதிவு இவ்வாரக் quotaவில் உள்ளதென்ற வாக்குறுதியோடு இப்போதைக்குப் புறப்படுகிறேன்.//

  புறப்பட்டுப்போனவர்தான். என்ன வேளைப்பளுவோ தெரியவில்லை; இந்தப் பக்கம் வரவேயில்லை. அட்லீஸ்ட், இப்படிச் சொல்லாமலாவது விட்டிருக்கலாம் - நாங்கள் நாளுக்கு நானூறு தரம் ரீஃப்ரெஷ் பண்ணிப் பார்த்துக்கொண்டிருக்காமலிருந்திருப்போம்.

  அடுத்தடுத்த புத்தகங்களை தாமதிக்காமல் சொன்ன தேதிகளில் அனுப்புவதற்கான ஆயத்தப்பணிகளில் ஆசிரியர் ஈடுபட்டிருக்கிறார் என்கிற நம்பிக்கையோடு அமைதி காக்கிறது சங்கம்! :)

  ReplyDelete
  Replies
  1. thalaiva vijayan ayya neenga please ovvvoru sanikilamaiyum vanthu ethavathu sollitu ponga pls
   koranjathu haiiiiiiiiiiiiii
   nanga kathirupom
   please athuku mela ethavathu sollanumna surprice ah irukattum
   just say hai or say what u think on saturday only please
   or friday
   fix ur convenient day ... but should come at particular time
   appo than nanga unga friends ....even if you have something in ur mind to share with us and make it as availlable on particular day... only so that it will be good...
   please try to schedule it ...
   naanga comics padichi kedaikura inbatha vida ungaloda arivipugal .. engaluku santhosama iruku ( athu correct timela varalana kooda romba santhosama iruku)
   please tell ur idea sorry if iam over speaak naanga kathirupathu romba feel panrom .. nan matum thana therila ... enna friends nan solrathu correct ah...oru masam unga release vara varaikum kathirukuratha vida unga reply or blog kaga kathurukurom..
   ungal nanban
   bala
   chennai

   Delete
 45. ஆசிரியர் அவர்களுக்கு,

  ஜெரோம் நேற்று என் கைக்கு கிடைத்தார். கூடுமானவரை நான் புத்தக விமர்சனம் பண்ணுவதை தவிர்த்திடுவேன் - சில காரணங்களுக்காக. ஆனால் ஜெரோம் பற்றி விமர்சனம் பண்ணிடலாம் என்று நினைக்கிறன்.

  பிளஸ்கள்
  1. ஜெரோம் ஒரு ஆர்பாட்டம் இல்லாத இயல்பான கதாநாயகன்
  2. அற்புதமான சித்திரங்கள். குறிப்பாக கதாபாத்திரங்களை சுற்றி தீட்டப்பட்டுள்ள சித்திரங்கள்.
  3. நாம் தினமும் சந்திக்கும், மிகைபடுத்தப்படாத இயல்பான கதாபாத்திரங்கள்
  4. அற்புதமான பொழிபெயர்ப்பு

  மைனஸ்கள்
  1. கொஞ்சம் ஓவராக பயப்படும் சோம்பேறித்தனமான கதாநாயகன்
  2. விறுவிறுப்பு குறைவான அலுப்பூட்டும் கதையின் நீளம்.
  3. நீளமான வசனங்கள்
  4 . கதை ஜவ்வாக இழுப்பதுபோன்ற - தவிர்க்கமுடியாத உணர்வு

  ReplyDelete
 46. // இந்த இதழ் உங்களில் எத்தனை பேரிடம் உள்ளது என்றும் எத்தனை பேர் படித்துள்ளீர்கள் என்றும் சின்னதாய் ஒரு census எடுத்துப் பார்ப்போமா ? //

  நம்மளையும் இதில் சேர்த்துக்கொள்ளுங்கள் விஜயன் சார் :))

  நீங்கள் சொன்னது போல அது ஒரு பொன்னான காலம், அந்த பொன்னான காலம் மீண்டும் திரும்ப வருவது உங்கள் கைகளில் தான் இருக்கிறது விஜயன் சார்

  இவ்வருடத்தின் முதல் பாதியில் புத்தகங்கள் வந்தது போல மீண்டும் உங்கள் அதிரடியை தொடருங்கள் நாங்கள் என்றும் உங்களுடன்
  .

  ReplyDelete
  Replies
  1. நான் நிச்சயம் இந்த [ஸ்க்ரூஜ் ] கதையை படித்திருக்கிறேன்.... நான் முன்பே ஒருமுறை இதே தளத்தில் குறிப்பிட்டது போல அது குழந்தை இதழ்களின் பொற்காலம்.......லயன் வெளியீடுகள் மட்டுமல்லாது பல்வேறு பாலர் மலர்கள் வந்த காலம்....ஹூம் ......காலம் 80 களிலேயே உறைந்திருக்கக்கூடாதா?

   Delete
 47. ஜெரோம் கதை விமர்சனம்: இரத்தின சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் "யானை பசிக்கு சோள பொரி" போல! புத்தக ப்ரியன்

  ReplyDelete
 48. can some one tell me the name of its english original.

  ReplyDelete
  Replies
  1. " Jérôme K. Jérôme Bloche " google this, u'll get the list of Jerome comics released so far(all are french)...and it seems no comics of Jerome been translated in English till date.

   Delete
  2. few front covers in that list are sizzling and lets hope Mr.Vijayan comes off with a fast paced / thrilling story of Jerome next time around :-)

   Delete
 49. டியர் விஜயன் சார்,

  முன்பு நமது lion மற்றும் முத்து காமிக்ஸில் வெளி வந்த ஸ்பெஷல் இதழ்கள் - கௌபாய் ஸ்பெஷல், ஜாலி ஸ்பெஷல் உள்ளிட்ட ஸ்பெஷல் இதழ்கள் இப்போது கிடைக்குமா ? இவ்விதழ்கள் மறுபதிப்பு பெற வாய்ப்பு உள்ளதா?

  எஸ். ஜெயகாந்தன், புன்செய் புளியம்பட்டி

  ReplyDelete
 50. டியர் எடிட்டர் சார்,
  பாருங்க வெளியீட்டாளரான உங்களுக்கே இவ்வளவு குழப்பம் என்றால், உங்களது 4 வெளியீடுகளை வாங்கும் நாங்கள் எவ்வளவு குழம்புவோம் என்று. இதுபோன்ற குழப்பங்களை தவிர்க்க ஒவ்வொரு வெளியீடுகளிலும் தனி அடையாளங்களோடு வெளியீடு நம்பர்களுடன் வெளியிடும் தேதி,மாதம் வருடம் ஆகியவற்றை பிரிண்ட் செய்வதை கட்டாயமாக நடைமுறைப்படுத்துங்கள். 40 வருடங்களாக காமிக்ஸ் துறையில் தனிமுத்திரை பதித்துவரும் ஒரு பப்ளிஷர் இந்த ஒரு நல்ல விஷயத்தை செயல்படுத்த தயங்குவது ஏன்?

  அன்புடன்,
  பாலாஜி சுந்தர்,
  www.picturesanimated.blogspot.com

  ReplyDelete
 51. Dear Vijayan Sir,

  I enjoyed spending time with Mr.Jerome. The story travel path & its presentation, raised my eyebrows in several places. This calm hero seems to be smarter than our Powerful Super Heros.

  Thank You
  P r a s a n n a

  ReplyDelete
 52. லயன் பிறந்த நாளுக்கு அதிரடி அறிவிப்புகள் வருவது போல கனவு கண்டேன் .பலிக்குமா சார் ?

  ReplyDelete
 53. ஒன்றாம் திகதி ஞாயிறு காலை சிகப்புக்கன்னி மர்மம் கிடைக்கப்பெற்றேன்,, முற்றிலும் வேறுபட்ட நல்ல கதை... அந்தி கிறிஸ்து சாத்தான் சபையின் 6 ஆம் ஆண்டு 6 ஆம் மாதம் 6 ஆம் நாள்... 666 என்பதை படிக்கும்பொழுது என்ன இது இதுவும் திகில் ஸ்பெசல் கதை வகையறாவா என்று நினைக்கத்தோன்றியது...

  ReplyDelete
 54. Dear Mr. Vijayan, i enjoyed very much David jerome, and i like this story very much because he is not like super heroes, but character like simple and honest person.

  keep in good work

  ReplyDelete
 55. இன்று 1000 ரூபாய் bank transfer மூலம் அனுப்பி உள்ளேன். இதனை சந்தா நீட்டிப்புக்கும் never before special க்கும் சேர்த்துக் கணக்கில் வைத்துக் கொள்ளுங்கள். இது பற்றி ஒரு e-mail அனுப்பி உள்ளேன்.

  ReplyDelete