Powered By Blogger

Sunday, November 29, 2015

COMIX TIMES !

நண்பர்களே,
     
வணக்கம். ரயில்வே ஸ்டேஷன்களில் ஓரம் கட்டிக் கொண்டும், ஏதாவதொரு நகரத்து ஹோட்டல் பால்கனியில் தொற்றிக் கொண்டும், ஸ்லீப்பர் பஸ்களில் சயனித்துக் கொண்டும் சமீப வாரத்துப் பதிவுகளைத் தயாரித்தே பழகிப் போய்விட்டதால், ரொம்ப நாள் கழித்து வீட்டிலிருந்தபடி ஒரு பதிவை எழுதுவது எனக்கே கொஞ்சம் வித்தியாசமாகப் படுகிறது! நவம்பர் இதழ்களின் அச்சுப் பணிகள் நிறைவேறும் தருணம் என்பதால் அங்கே-இங்கே ஊர் சுற்ற முடியவில்லை; ஒழுங்காய், மரியாதையாய் ஆபீஸிலேயே வாரத்தின் எல்லா நாட்களையும் கழிக்க அவசியமானது !இதோ – 2015-ன் இறுதி இதழின் அட்டைப்பட first look:
இதுவொரு மாடஸ்டி பிளைஸி நாவலின் ராப்பரின் தழுவலே என்பதால், பின்னட்டையில் மட்டுமே நமது கைவண்ணம் சொல்லிக் கொள்ளும் விதமாய் உள்ளது! வசீகரமாய் எனக்குத் தோற்றம் தந்த டிசைன் உங்களையும், நமது மாடஸ்டி பக்தர்களையும் அதே போல கவர்ந்திட்டால் நிச்சயம் சந்தோஷம் கொள்வேன் ! கடைசியாய் வெளிவந்த மாடஸ்டியின் உட்பக்க சித்திர பாணிகள் நிறையவே சர்ச்சைகளுக்கு இடம் தந்தது என்பது மறக்கவில்லை ; இம்முறையோ அதற்கான முகாந்திரம் துளியும் இருந்திடாது என்பது உறுதி! இந்தக் கதைக்கான சித்திரங்கள் ஓவியர் பீட்டர் ரோமெரோவின் கைவண்ணம்! ஏகப்பட்ட ‘ஹிட்‘ மாடஸ்டி சாகஸங்களுக்குத் தூரிகை பிடித்தவர் இவர் என்பதால் artwork-ன் பொருட்டு இந்தத் தடவை நெருடல்களுக்கு வாய்ப்பேயில்லை! And நமது டைப்செட்டிங் & டிசைனிங் பிரிவிலும் சென்ற முறையின் தவறுகள் தொடர்ந்திட வாய்ப்பளிக்கவில்லை என்பதால் கதைக்குள் நீங்கள் ஐக்கியமாகிட சித்திரங்கள் / layout ஓர் சிரமமாய் இருந்திடாது ! அப்புறம் இளவரசி + கார்வின் கூட்டணி அதிரடியாய் வலம் வருவதால் மாடஸ்டி ரசிகர்களுக்கு மாத்திரமின்றி நம் எல்லோருக்குமே ஒரு treat காத்துள்ளது என்று சொல்லலாம் ! அச்சின் பாக்கிப் பணிகள் முடிந்து, பைண்டிங்கும் முடிந்து – வரும் வெள்ளியன்று (டிசம்பர் 4) உங்கள் சந்தாப் பிரதிகள் புறப்படும்! ஆண்டின் இறுதி மாதம் என்பதால் டயரிகள்; planner-கள் என்று ஏகமாய் பைண்டிங்கில் பணிகள் குவிந்து கிடப்பதால் அவர்களுக்கு அவகாசம் தர வேண்டியது அவசியமாகிறது ! So- சற்றே பொறுமை ப்ளீஸ்!

மாடஸ்டியின் பின்னட்டையில் மட்டுமின்றி, இம்மாதத்து சகல வெளியீடுகளின் பின் ராப்பர்களிலும் சின்னதொரு bar code டப்பா இருப்பதைப் பார்த்திடப் போகிறீர்கள்! நமது ஜுனியர் எடிட்டரின் ஓசையில்லா முயற்சிகளின் பலனிது ! நமது கையிருப்பு + வரும் 2016 முதற்கொண்டான விற்பனைகள் என சகலத்தையும் computerize செய்திடும் முயற்சிகளின் ஆரம்பப்படிகள் இந்த bar codes! மழைகாலத்துத் தவளை போல ‘வறக்...வறக்‘ என்று சத்தம் போடுவது என் பாணி எனில் – அதன் மறுமுனை ஜு.எ.! இந்தாண்டின் இறுதிக்கு முன்பாக ஜுனியரின் ஒரு சுவாரஸ்யமான project-ன் பலனை இங்கே அறிவித்திடுவேன்! “புதுசாய் ஒரு காமிக்ஸைத் தொடங்குவது பற்றிய அறிவிப்போ?” ‘ஸ்பெஷல் இதழ் ஏதேனும் தொடர்பான தகவலோ?‘ என்ற யூகங்கள் நிச்சயம் தவறாகிடும் ; ஏனெனில் இது வேறொரு மார்க்கத்தின் படலம் ! இந்தப் புது முயற்சியானது நமது சந்தாதாரர்களுக்கு ஒரு அழகான பரிசினையும் தரக் காத்துள்ளது என்பதை மட்டுமே இப்போதைக்கு சொல்ல முடியும்! நிச்சயமாய் இது உடான்ஸோ; உதாரோ கிடையாது guys ! அது என்னவாக இருக்குமென்பதை இப்போதைக்கு உங்கள் யூகங்களுக்கு விட்டு விடுகிறேன் !

And சென்ற வாரத்து எனது பதிவைத் தொடர்ந்து சந்தா மட்டுமின்றி ‘எ.பெ.டை.‘ முன்பதிவுகளிலும் ஒரு சுறுசுறுப்பைக் கண்டிட முடிகிறது என்பது சந்தோஷமான update! இன்னும் சிலரோ - "சந்தா C " தனை பள்ளிகளுக்கு அன்பளிப்பாக்கிட முனைந்துள்ளனர் !! நிறைய வாசகர்கள் (இங்கே பதிவிடுவோரும் சரி; மௌனப் பார்வையாளர்களாக இருந்து வருவோரும் சரி) அக்கறையாக ஈ-மெயில்கள் அனுப்பி, “இதுவரையில் நாங்கள் சந்தாவைப் புதுப்பிக்காததன் காரணம் இவை ; இந்தத் தேதிக்குள்ளாகப் பணம் அனுப்பி விடுவோம்!” என்றும் ”சென்றாண்டின் நம்பரை எட்ட முடியாது போனால் அந்தக் குறைபடியை நண்பர்களாய் இணைந்து சரி செய்து விடுகிறோம்!” என்றும் தெரியப்படுத்தியுள்ளதைப் பார்க்கும் போது என் முகத்தில் லிட்டர் கணக்கில் அசடு வழியத் தான் செய்கிறது! டெக்ஸ் சந்தா & கார்ட்டூன் சந்தாவென 2016-க்குப் பிரத்யேகமாய் அறிவித்ததைத் தொடர்ந்து சென்னையின் மழைகளைப் போல சந்தா வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுமென்ற கற்பனை எனக்குள் ஒரு ஓரமாய் குடிகொண்டு விட்டது போலத்தான் படுகிறது! அவ்விதமில்லாது – நார்மலான வேகத்தில் வந்து கொண்டிருந்த சந்தாக்கள் என் ஆந்தை விழிகளுக்கு அலாரமடிக்கும் ஆபத்தாய் காட்சி தந்து விட்டது போலும்! இன்னும் ஒரு படி மேலே சென்று – சென்றாண்டின் சந்தா வரவுகளின் pattern-ன் மீது கொஞ்சம் கவனத்தை லயிக்கச் செய்த போது – சந்தாக்களின் 75% டிசம்பரிலும், ஜனவரியின் துவக்கத்திலும் தான் பதிவாகியிருப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது! So- அவசரம் அவசரமாய் புயல் எச்சரிக்கையை துறைமுகத்தில் ஏற்றியது போலான என் அவரசக் குடுக்கைத்தனத்தின் பொருட்டு apologies guys! 

அதே சமயம் – இதிலும் ஒரு நன்மை இல்லாதில்லை என்றே சொல்வேன்! பல தரப்பிலிருந்தும் நண்பர்கள் சந்தாவுக்கென நாம் செய்திடக் கூடிய incentives; ஊக்கங்கள் பற்றிய கருத்துக்களை நம் காதுகளுக்குக் கொணர்ந்துள்ளனர்! அவற்றை ஒரே தம்மில் நம்மால் அமல்படுத்திட இயலாதெனினும் நிச்சயம் நமது cache memory-ல் அவை பதிந்திருக்குமென்ற நம்பிக்கை கொண்டிடலாம் நீங்கள்! “நான் சொல்லும் யோசனைகளை ஏற்றுக் கொள்ள மாட்டேன்கிறீர்கள்!” என்றோ – “என் யோசனைக்குப் பதில் சொல்லக் கூட மாட்டேன்கிறீர்கள்!” என்றோ வருத்தம் கொள்ளும் நண்பர்களுக்கு : உங்கள் ஒவ்வொருவரின் எண்ணங்களுக்கும் ஒவ்வொரு முறையும், ஆங்காங்கே நான் react செய்திடாது போயினும், அவற்றை உள்வாங்கிடத் தவறுவதில்லை guys! அனுதினமும் எனது நேரங்களை காமிக்ஸ் + மற்ற தொழில்கள் என்ற குதிரைகளுக்கு மத்தியில் பங்கிட்டுச் சவாரி செய்வதன் சிரமத்தை – நான் விவரிக்கத் தொடங்கினால் – அதுவொரு பீற்றல் புராணமாகி விடும்! தினமும் இமைகள் மூடும் பொழுது நள்ளிரவைத் தாண்டி நிறைய நேரம் கடந்திருக்குமென்பதே எனது routine என்பதில் தான் இரகசியம் இல்லையே ?! இதனில் உங்களின் எண்ணங்களுக்கு பதிலளிக்காது போவதால் அவை என் கவனத்தை ஈர்க்கவில்லை என்றோ ; அவற்றைப் படித்திட, சீர்தூக்கிப் பார்த்திட நான் நேரம் ஒதுக்கவில்லை என்றோ உங்களின் முயற்சிகளுக்கு / நேரங்களுக்கு மதிப்புத் தரத் தவறியதாகவோ எண்ணிட வேண்டாமே - ப்ளீஸ் ?! உங்களின் ஒவ்வொருவரும் தத்தம் பணிகளில் எத்தனை பிசி என்பதையோ ; நமக்காக நீங்கள் அக்கறையோடு செலவிடும் நேரத்தின் மதிப்பினையோ நாம் நிச்சயம் மறக்கவோ ; உதாசீனம் செய்வதோ  சாத்தியமே கிடையாது ! Rest assured ,சாத்தியமானதொரு suggestion-ஆக இருக்கும் பட்சத்தில் இயன்ற தருணங்களில் உங்கள் ஆலோசனைகளைச் செயல்படுத்தத் தயங்க மாட்டேன் ! 

கடந்த பதிவின் பின்னூட்டங்களில் கூட வாசகர்களுக்கு SMS அனுப்புவது பற்றி நண்பர்கள் எழுதியிருந்தது என் கவனத்துக்கு வராதில்லை! 2016-ன் துவக்கம் முதலாய் இதனை நடைமுறைப்படுத்த எல்லா ஏற்பாடுகளும் ஏற்கனவே செய்யப்பட்டு விட்டன! நமது ஆன்லைன் விற்பனைகளை நிர்வகித்து வரும் Worldmart தளம் இதற்கான ஒரு package ஏற்பாடு செய்துள்ளது ! உங்கள் பின்னூட்டங்களைப் பார்த்தான பின்பு, அதனை டிசம்பருக்குமே செயல்படுத்திட ஜூ.எ.விடம் கேட்டுள்ளேன் ; so அநேகமாய் இம்மாதமே அது நடைமுறைக்கு வந்திடும் ! கம்ப்யூட்டர் சார்ந்த பணிகளிலோ; புதுயுக செயல்பாடுகளிலோ நானொரு டைனோசர் என்பதில் இரகசியமேதுமில்லை எனும் பொழுது – உங்கள் பார்வைகளில் சுலபமாய்த் தோன்றிடும் பல விஷயங்கள் என்னை எட்டிடக் கொஞ்சம் கூடுதலாய் நேரம் எடுக்கவே தான் செய்கிறது! More than anything else – மொழிபெயர்ப்பிலும் தயாரிப்பிலும் எனக்கு அவசியமாகிடும் man hours தவிர்க்க இயலாதொரு விஷயம்! அதற்கென நான் ஒதுக்கிடும் அவகாசத்தை மட்டுப்படுத்திடும் பட்சத்தில் கதை literal ஆகக் கந்தலாகிப் போகும் என்பதால் – அந்தப் பொறுப்புகளை ஜு.எ. ஏற்றிடத் தயாராகும் நாள் புலரும் வரை – ‘எடிட்டர்‘ என்ற தொப்பியே என் வழுக்கை மண்டையை அதிக நேரம் சூழ்ந்து நிற்கும்! அதனைக் கழற்றி விட்டு “வியாபாரி“ என்ற குல்லாவும் அணிதல் காலத்தின் கட்டாயமென்பதை நான் உணராதில்லை guys – but முதலாவது தொப்பியே எனது நேசத்திற்குரியதாக இருந்திடும் – என்றென்றும் ! சரக்கு முறுக்காகவே இருப்பினும் செட்டியாரும் முறுக்காக இருத்தல் அவசியம் என்பதை நீங்கள் புரியச் செய்திருக்கிறீர்கள் ! May be நான் சரக்கு மாஸ்டராகவும்; ஜு.எ. செட்டியாராகவும் இருந்து பார்த்தால் வண்டி எவ்விதம் ஓடுகிறதென்பதைச் சிறுகச் சிறுகப் பார்த்திடலாமே! வளரும் வயதில் என்றைக்குமே என்னை "இதைச் செய்...அதைச் செய்.!".என்று சொல்லி என் தந்தை வற்புறுத்தியதில்லை என்பதால் எனக்கும் ஜூனியரின் தலையில் பொறுப்புக்களை  வம்படியாய்த் திணிப்பதில் ஆர்வமில்லை ! நதி செல்லும் பாதையை இயற்கையே தீர்மானம் செய்யட்டுமே ! 

"சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு ‘டி-ஷர்ட்‘; ஜிப்பா – பைஜாமா என்றெல்லாம் முயற்சிப்பது சுத்த வேஸ்ட்! வாசகர்கள் எதிர்பார்ப்பது இது போன்ற ஜிகினா சமாச்சாரங்களையல்ல!" என்றும் சில நண்பர்கள் மின்னஞ்சல்களில் சொல்லியிருந்தனர் ! இங்கே I beg to differ! டி-ஷர்ட்கள் வழங்கிடும் திட்டமானது நமது சந்தாதாரர்களைக் குஷிப்படுத்திடும் வியாபார நோக்கிலானது அல்ல – அவ்விதம் திட்டமிட்டிருப்பின் சந்தா சார்ந்த விளம்பரங்களில் ; கூப்பன்களில் ; நமது இதழ்களில் அதனை முன்னிலைப்படுத்தியிருக்க மாட்டோமா? புத்தக விழா சந்திப்புகளின் போது நம்மவர்கள் ஒரே மாதிரியாகப் போட்டு வந்து அசத்த இது உதவுமே என்ற நோக்கம் மட்டுமே இந்த அறிவிப்பின் பின்னணி! So இது சந்தாவுக்கான சலுகையோ, ஊக்கப் பரிசோ அல்ல; நம்மவர்களுக்கொரு ஜாலியான gift மாத்திரமே!

ரொம்ப காலமாகவே நான் செய்திட நினைத்து வந்ததொரு விஷயத்தின் நடைமுறைப்படுத்துதலை maybe நமது சந்தாதாரர்களுக்கான ஸ்பெஷல் சமாச்சாரமாகக் கருதிடலாம்! இத்தாலியில் TEX Magazine என்ற பெயரில் ஆண்டுக்கு இரண்டோ – மூன்றோ ஆன்லைன் இதழ்களை போனெல்லி வெளியிட்டு வருகிறதைப் பார்த்த நாள் முதலாகவே அது போலொரு முயற்சியினில் நாமும் கால்பதித்துப் பார்க்க வேண்டுமென்பது எனது தீராத ஆசை! டெக்ஸ் கதாசிரியர்களோடு பேட்டிகள்; ஓவியங்களின் முன்னோட்டங்கள்; கதைகள் தயாரானதன் பின்னணிகள்; புதுசாய் உள்ள திட்டமிடல்கள் என TEX-ன் சகல பேக்கிரவுண்ட் சங்கதிகளையும் உள்ளடக்கிய 64 பக்க ஆன்லைன் இதழ் அது! அத்தனை பெரிதாகவோ; அத்தனை in-depth ஆகவோ நாம் முயற்சிப்பதும் சிரமம்; அதனில் சுவாரஸ்யத்தைத் தங்கச் செய்வதும் சிரமம் என்பதால் – அதன் ஒரு மினி version-ஐ நாம் நிஜ பத்திரிகையாகச் செய்து பார்த்தால் என்னவென்பது கொஞ்ச காலமாகவே எனது ஆசை! அதிலும் TEX-ன் ஆக்கத்தோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாது – இதர பிரான்கோ பெல்ஜியக் கதைவரிசைகளின் பின்னணிகளை; அவற்றின் கதாசிரியர்களைக் கையைக், காலைப் பிடித்தாவது பேட்டி எடுத்து வெளியிடுவது ஒரு variety ஐத் தருமென்று நினைத்தேன்! So - ஒரு வண்ண நியூஸ் பேப்பர் வடிவத்தில் – “COMIX TIMES” என்ற பெயரில் ஆண்டுக்கு 4 முறைகள் ஒரு பிரத்யேகப் பத்திரிகையினைத் தயாரிக்கவுள்ளோம் ! நமது சந்தாதாரர்களுக்கு இதனை ஃப்ரீயாக இதழ்களோடு கூரியரில் அனுப்பிடுவோம்! And சந்தாவில் இணைந்திடா நண்பர்கள் இதனைப் படித்திட வேண்டுமெனில் ஒரு சிறு இடைவெளிக்குப் பின்பாக ஆன்லைனில் நமது தளத்தில் ஒரு லிங்க் தந்து விடலாம்! பேட்டிகள்; முன்னோட்டங்கள்; உலகெங்கும் நடந்திடும் காமிக்ஸ் நிகழ்வுகள்; ஸ்வாரஸ்யமான கார்ட்டூன் பக்கங்கள்; நமது முந்தைய ஹிட் இதழ்களின் review-கள் – என இந்த நியூஸ்பேப்பரை ஒரு சுவாரஸ்யமான படைப்பாக்கிட உங்களின் ஆர்வமான பங்களிப்பும் அவசியமே! இணையத்தினுள் புகுந்தால் வானமே எல்லை எனும் போது – உங்களின் தேடல்களும் நமது COMIX TIMES-க்கு மெருகூட்டுமென்பது நிச்சயம்! ஒரே பாதையில் ஒரே மாதிரியாக ஓடிக் கொண்டிருக்கும் நமது பயணத்திற்கு இதுவொரு சின்ன வித்தியாசமாக இருந்தாலே கூட நமக்கு சந்தோஷமே!


And before I sign off – some updates : 
 • கோவையில் புதியதொரு இளம் முகவரின் ஆர்வமான ஒத்துழைப்பு கிடைத்திருப்பதால் – கண்ணன் டிபார்ட்மென்ட் ஸ்டோர்ஸ் போன்ற ஷாப்பிங் தளங்களிலும் நமது select இதழ்களைப் பார்த்திட முடியும்! நூறு பேரின் பார்வைகளில் பட்டால் ஒருத்தராவது வாங்கக் கூடும் என்ற லாஜிக் workout ஆனால் கூட இது போன்ற பிஸியான இடங்களில் நமது காமிக்ஸ்கள் take off ஆகிடக் கூடும் என்பதால் நம்பிக்கையோடு காத்திருப்போம்!
 • இத்தாலியில் நமது வலைப்பதிவுகளுக்கென ஒரு சிறு ரசிகர் குழு உள்ளதாம் !! டெக்ஸ் பற்றிய நமது பதிவுகளை ; விவாதங்களை google translate துணையுடன்  ஆர்வத்தோடு அவர்களும் ரசித்து வருகிறார்கள் !! 'அட..உங்கள் மண்ணிலும் எங்களவருக்கு இத்தனை வெறித்தன ரசிகர்களா ?' என்ற வியப்பை வெளிப்படுத்தியுள்ளனர் ! அது மட்டுமன்றி இத்தாலியில்   - ALL TEX சந்தாவிற்கு 4 பேர் பதிவு செய்துள்ளனர் !! 
 • 2016-ன் நமது அட்டவணையின் பொருட்டு போனெல்லி நிறுவனம் ஒரு புன்னகை கலந்த thumbs up தந்துள்ளனர் !! அவர்களது படைப்புகளுக்கு நம்மிடையே முக்கியத்துவம் அதிகரிப்பது குறித்து ரொம்பவே சந்தோஷப் பட்டுள்ளார்கள் ! (இதர மார்கெட்களில் அவர்கள் தூள் பறத்துவதை ஒப்பிட்டால் நாம் ஜூஜூபி என்பது வேறு விஷயம் !!)
 • நமது வலைப்பதிவுகளை மூத்த வாசகர்களும் கவனித்து வருகிறார்கள் என்பதை சமீபத்தைய ஒரு வாசகர் கடிதம் மூலம் அறிய முடிந்தது ! எப்போதுமே நெடிய கடிதங்கள் மட்டுமே அனுப்பிடும் இந்த சீனியர் வாசகர் இம்முறை அனுப்பிய கடிதத்தில் இங்கே நம் வலைப்பதிவில் ஓடிடும் current topics பலவற்றையும் துல்லியமாய்க் குறிப்பிட்டு, அதனில் தனது நிலைப்பாடுகளையும் பற்றி எழுதியிருந்ததை ஆச்சர்யத்தோடு படித்தேன் ! ஒவ்வொரு ஞாயிறும் ஆர்வமாய் ; மௌனமாய் இங்கு வருகை புரிவது பற்றி அவர் எழுதியிருந்தது ரொம்பவே நெகிழ்ச்சியாக இருந்தது ! நன்றிகள் சார் !! 
மீண்டும் சந்திப்போம் folks ! Have a fun Sunday ! Bye for now !

Sunday, November 22, 2015

விடை தேடும் வினாக்கள்...!!

நண்பர்களே,
     
வணக்கம். வர்ண பகவான் ஆவேசமாய் செய்த ஆசீர்வாதம் சிங்காரச் சென்னையை வெனிஸ் நகரமாக்கியதை இந்த வாரத்தின் பாதி நாட்களில் பார்க்க முடிந்தது! மழையோடு எப்போதுமே விரோதம் பாராட்டும் எங்களது நகரும் கூட இந்த சில நாட்களாய் மப்பும், மந்தாரமுமாய் காட்சி தர – மழையும் அது கொண்டு வரும் தடங்கல்களையும் தட்டுத் தடுமாறி சந்தித்து வருகிறோம். எப்போதுமே மழைகாலத்து ஈர நாட்கள் அச்சுப் பணிகளுக்கு இம்சையான காலங்களே! காற்றினில் கலந்திருக்கும் ஈரப்பதத்தை காகிதங்கள் உள்வாங்கிக் கொள்ள – அச்சின் போது அவசியமாகும் நீர்க்கலவையும் சேரும் பொழுது பேப்பர் சோளக் கொல்லை பொம்மையைப் போல துவண்டு விடுவதுண்டு. அதிலும் முன்பக்கத்து அச்சு முடிந்த பின்னர் – மறுபக்கத்தை அச்சிட முனையும் போது – பள்ளிக்குப் போகப் பிடிக்காத பிள்ளைகளைப் போல செமையாக சண்டித்தனம் செய்வது வாடிக்கை! அப்படியும், இப்படியுமாய் அவற்றை தாஜா செய்து – ஒரு மாதிரியாக தோர்கலின் பணிகளை இந்த வாரத்தில் துவக்கி விட்டோம்! And நம்மாட்கள் இந்தப் பிரச்சனைகளைச் சமாளிப்பதில் தேர்ச்சி பெற்று விட்டதால் ஆரிஸியாவின் ஆத்துக்காரர் கம்பீரமாய் மூன்றாம் உலகத்தினுள் சாகஸம் செய்து வருகிறார்! தோர்கலின் வர்ணக் கலவைகளும் ஒரிஜினலிலேயே அட்டகாசமாக உள்ளதால் – நமது தமிழாக்கமும் ரம்யமாய் படுகிறது!

டிசம்பரின் ரம்யங்கள் தொடர்வது சென்றாண்டின் கதைத் தொடர்ச்சியின் ரூபத்தில்! வானமே எங்கள் வீதியின் – பாகம் 3 “பாதைகளும்... பயணங்களும் என்ற பெயரோடு தயாராகி வருகிறது! இரண்டே ஆல்பங்களாய் ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டு – கிடைத்த நல்வரவேற்பினைத் தொடர்ந்து முதல் சுற்றில் மூன்று ஆல்பங்கள் ; அதன் பின்னர் ‘பார்த்துக் கொள்ளலாம்‘ என்ற சிந்தனையோடு படைப்பாளிகள் நீ/தீட்டியுள்ள தொடரிது! So- சென்றாண்டு நாம் இதன் துவக்க 2 ஆல்பங்களையும் வெளியிட்டிருக்க – டிசம்பரில் ஆல்பம்    # 3 வருகிறது ! And இதோ – அதன் அட்டைப்பட முதல் look! 
முன்னட்டையும் சரி, பின்னட்டையும் சரி – அட்சர சுத்தமாய் ஒரிஜினல்களின் வார்ப்புகளே! ஒரிஜினலின் டிசைன்கள் பிரமாதமாய் இருந்ததால் அதனில் நமது திருக்கரங்களைப் பிரயோகிக்க முகாந்திரங்கள் ஏதும் எழுந்திடவில்லை ! அழகான ராப்பர் & வண்ணமயமான உட்பக்கங்கள் என இதுவொரு colorful read ஆக இருக்கக் காத்துள்ளது! நல்ல ஞாபகசக்தி ; இல்லையேல் துவக்க பாகங்களைத்  தாங்கிய சென்றாண்டின் பதிப்பு உங்களுக்குத் துணையிருந்தால் நலம் என்பது மட்டுமே சின்னதொரு குறிப்பு! யுத்தப் பின்னணியில், பல நிஜ சம்பவங்கள்; நிஜ மாந்தர்களின் வாழ்க்கைகளைச் சுற்றிப் பின்னப்பட்ட கதை எனும் போது – என்றோ மடிந்தும் – மறக்கப்பட்டும் போன யுத்தத்தின் பலிகடாக்களை நினைவு கூர்ந்திட இதுவொரு வாய்ப்பு எனலாம்! Personal ஆக உலக யுத்தக் கதைகளில் தீரா ரசிகனான எனக்கு இது போன்ற கதைகள் ரொம்பவே பிடிக்கும் ! ஹன்னா & கோ.வை  உங்களுக்கும் பிடித்திடும் பட்சத்தில் – பிரமாதமாக இருக்கும்!
டிசம்பரின் இன்னுமொரு வண்ண மேளா காத்திருப்பது நமது கமான்சேயின் ரூபத்தில்! ஓவியர் ஹெர்மனின் பிடரியில் சாத்தும் சித்திரங்களே இந்தத் தொடரின் ஜீவநாடி என்பதில் இம்முறையும் துளி கூட மாற்றமில்லை! “சீற்றத்தின் நிறம் சிகப்பு” – கமான்சே தொடரின் ஆல்பம் # 7 எனினும் இதன் நிஜ நாயகர் என்ற பட்டத்துக்கு திருவாளர் ரெட் டஸ்ட் 50% பொருத்தமெனில் – ஓவியர் ஹெர்மன் தான் 100% தகுதியானவர் என்று சொல்லலாம்! பிரமிக்கச் செய்யும் ஓவியங்கள், திகைக்கச் செய்யும் சித்திர angle-கள்; அட்டகாசமான கலரிங் என்று ஒன்று சேரும் போது – கதையின் வேகமோ – வேகமின்மையோ ஒரு சமாச்சாரமாகவே தெரிவதில்லை! இம்முறை ஒரு புதுப் பாதையில் கதையும் take off ஆகிடும் போது – விறுவிறுப்புக்குத் துளியும் பஞ்சமில்லை! இதோ பாருங்களேன் – ஆரம்ப நிலையிலிருக்கும் கமான்சேயின் அட்டைப்பட டிசைனின் டீசர்! 
இம்முறையும் ஒரிஜினல் சித்திரங்களே – ஆனால் நமது டிசைனரின் கைவண்ணத்தோடு ! இது இன்னமும் முழுமையாகிடா டிசைன் என்பதால் – நீங்கள் பார்க்கவிருக்கும் final version இதனிலிருந்து நிச்சயமாய் மேம்பட்டிருக்கும்! பின்னட்டை நமது தயாரிப்பே – கதையின் உட்பக்கங்களிலிருந்து எடுக்கப்பட்ட சித்திரங்களோடு ! And இதோ – உட்பக்கத்திலிருந்தும் ஒரு sneak preview ! கலக்கலான கலர்கள் + தடாலடி ஆக்ஷன் + ஹெர்மனின் ஓவியங்கள் என்ற combo-வில் ஒரு கௌ-பாய் விருந்து காத்துள்ளது நிச்சயம்!
On & ahead into 2016 – ஜனவரியில் ஆட்டத்தைத் துவக்கக் காத்திருக்கும் நமது மதிமந்திரியாரின் கதைத் தொகுப்பின் பணிகளுக்குள் மூழ்கிக் கிடக்கிறேன்! பிரெஞ்சிலும் சரி, ஆங்கிலப் பதிப்பிலும் சரி – வார்த்தை விளையாட்டுக்களில் நகைச்சுவையை அள்ளித் தெளிக்கும் அட்டகாசமான ஆக்கங்கள் இவை ! முடிந்தளவு அந்த சித்து விளையாட்டை தமிழிலும் கொணர மொழிபெயர்ப்பினில் கிடந்து உருளோ உருளென்று உருண்டு வருகிறேன்! மாங்கு மாங்கென்று எழுதிவிட்டு – ஆங்கில ஒரிஜினலை மீண்டும் ஒரு முறை புரட்டினால் ‘அடடா.... இதை மாற்றி இப்படி எழுதியிருக்கலாமோ?‘ என்று தோன்றுகிறது ! 26 எழுத்துக்களே கொண்டதொரு மொழிதனில் இத்தனை ஆடுபுலியாட்டம் ஆடிட அந்த மொழிபெயர்ப்பாளருக்கு எப்படித் தான் சாத்தியம் ஆனதோ? என்ற பெருமூச்சோடு என்னால் முடிந்ததைச் செய்து வருகிறேன்! தை பிறக்கும் முன்பே தெரிந்து விடும் என் முயற்சிகளின் பலன் எவ்விதமென்று!! மீசைக்கார ஷெல்டனை எழுதுவது 'குழந்தைப் புள்ள' விளையாட்டெனும் போது – இந்தக் குள்ளவாத்து மீசைக்காரரோ மிஸ்டர் tongue-ஐ மிஸ்டர் தரையாரோடு உறவாடச் செய்கிறார்! Phew!

"ஜனவரியின் சூறாவளி" கிட்டத்தட்டத் தயார் என்றும் சொல்லலாம்! நம்மைப் பொறுத்த வரை மஞ்சள் சட்டை தான் புயலுக்கும், சூறாவளிக்கும் அடையாளம் எனும் பொழுது – நான் குறிப்பிடுவது நமது டாப் ஸ்டாரின் சாகஸத்தைப் பற்றித் தானென்பது புரிந்திருக்கும்! Black & white-ல் ஒரு நீ-ள-மா-ன ஆக்ஷன் அதிரடியோடு இப்போதே பரபரப்பாய்க் காத்திருக்கிறார் டெக்ஸ்! அந்த சாகஸம் எதுவென்பதை டிசம்பர் இதழில் பார்த்திடலாம்!

பரபரப்பான நாயகர்(கள்) பலரும் எங்களைப் பரபரப்பாய் பணியாற்றச் செய்து வரும் வேளைதனில் அதே பரபரப்பு சந்தாப் புதுப்பித்தலில் இருந்திடும் பட்சத்தில் எங்களது சுவாசங்கள் சற்றே சுலபமாகிடும்! Yes of course – ஜனவரிக்கு இன்னமும் நிறையவே அவகாசமுள்ளது தான்; ‘இப்போதே பணம் அனுப்பி என்ன செய்வதாம்?‘ என்ற கேள்வி உங்களுள் எழுந்திடலாம் தான்! ஆனால் ஒரு நெடும்பயணத்துக்கு தேவையான ஏற்பாடுகள் எத்தனை விஸ்தீரணமானவை என்பதை நான் சொல்லித் தானா நீங்கள் தெரிந்திடப் போகிறீர்கள்? தற்போதைய நிலவரம் இதோ:

என் பெயர் டைகர் முன்பதிவு:
வண்ண இதழ் – 207 பிரதிகள்
B & W இதழ் – 65 பிரதிகள்

2016 சந்தா:
A + B + C + D – 91 சந்தாக்கள்
A + B + C – 4 சந்தாக்கள்

ஆன்லைனில் நமது அட்டவணையை வெளியிட்டு ஒரு மாதமாகி விட்ட நிலையில்; 2016-ன் மொத்த இதழ்களின் booklet-ம் உங்களைச் சென்றடைந்து 20 நாட்கள் ஆகிவிட்ட நிலையிலும் இந்தப் பரபரப்பின்மை ரொம்பவே நெருடுகிறது! அதிலும் டெக்ஸ் இதழ்களுக்கு priority; கார்ட்டூன்களுக்கு தனிச்சந்தா என்ற ஜனரஞ்சக பார்முலாவும் இந்தாண்டின் அட்டவணையில் இருக்கும் போதிலும் பெரியதொரு துரிதம் தென்படாது போவதைக் காணும் போது சந்தா Z-ஐ நினைத்தால் கிராபிக் நாவலைப் பார்த்த தலீவரைப் போல என் வதனம் பேஸ்தடித்துப் போயுள்ளது! தீபாவளி ; அப்புறம் அந்த மழையின் இடர்கள் என்று தாமதங்களுக்கு ஏதேதோ காரணங்கள் இருக்கலாமே என்று மண்டை சமாதானங்களை முன்வைத்தாலும் – ‘ஒருக்கால் நம்முள் ஒருவித அயர்ச்சி குடிபுகுந்து விட்டதோ?‘ என்ற சிந்தனையில் நெஞ்சம் லயிக்காதில்லை!! கேட்டும் கிடைக்காத நாட்களில் இருந்த மவுசு – திகட்டத் திகட்டக் கிடைத்து வரும் இந்நாளில் காலாவதியாகி விட்டதோ? என்ற கேள்வி அவ்வப்போது எட்டிப் பார்க்கும் வேளைகளில் என்னிடம் பதிலில்லை!! ஒருக்கால் ஆண்டுக்கு இத்தனை இதழ்கள் என்பதெல்லாம் ரொம்பவே ஜாஸ்தியோ ? ; சந்தாத் தொகை ரூ.4000+ என்பது - எட்டும் தொலைவுகளிலிருந்து காமிக்ஸ்களை அகற்றிச் சென்று வருகிறதோ ? என்ற வினாக்களும் என்னிடம் வெறுமையையே பதிலாகப் பெற்று வருகின்றன ! ஒருக்கால் இவற்றிற்கான பதில்கள் உங்களிடம் உள்ளனவோ folks? இருப்பின் என்னை சற்றே enlighten செய்திடலாமே – ப்ளீஸ்?

‘வியாபார யுக்தியாய் ஏதாவதொரு rare முந்தைய இதழை சந்தா செலுத்துவோருக்கு மட்டும் exclusive அன்பளிப்பாகத் தரலாமே?‘ என்று நண்பரொருவர் மின்னஞ்சலில் அபிப்பிராயத்தைப் பகிர்ந்திருந்தார்! இன்னொருவரோ ஒரு cutoff தேதியை முன்வைத்து விட்டு இதற்குப் பிறகு சந்தாக்கள் ஏற்கப்பட மாட்டாது என்ற ரீதியில் அறிவிக்கலாமே என்றும் கேட்டிருந்தார்! இன்னுமொரு நண்பரோ - "டெக்சின் பிந்தைய மாதத்து இதழ்களுள் ஏதோவொன்றை சந்தாதாரர்களுக்கு மட்டும் ஜனவரியிலேயே வழங்க ஏற்பாடு செய்யுங்களேன் - சந்தா கட்டவொரு incentive ஆக இருக்கும் விதமாய் !" என்று சொல்லியிருந்தார் ! இவையெல்லாம் வியாபார ரீதியில் sound logic என்பதில் ஐயமில்லை தான்; ஆனால் ஸ்கூல் பீஸ் கட்டத் தாமதம் காட்டிடும் பிள்ளைகளை வகுப்புக்கு வெளியே நிற்கச் சொல்வது நம்மால் நினைத்துக் கூடப் பார்க்க இயலா விஷயம்And ஏதோ காரணங்களால் "சந்தா வேண்டாம் - அவ்வப்போது ஆன்லைனிலும், கடைகளிலும் வாங்கிக் கொள்கிறேனே !" என்று எண்ணி இருக்கும் நண்பர்களை அன்னியப்படுத்திடவும் நிச்சயம் மனம் ஒப்பவில்லை !!

சந்தாக்களே நம் ஜீவநாடி ; அவை கடந்த ஆண்டுகளின் எண்ணிக்கைக்குக் குறையாது தொடர்ந்தால் தவிர, பிராண வாயுவின்றி ஆழ்கடல் நீச்சல் அடிப்பது போலாகிப் போகும் நம் பயணம் என்பதில் ஒளிவு மறைவு தேவையில்லை என்பதால் - எப்போதும் போலவே வார்னிஷ் அடிக்கா யதார்த்தத்தை உங்களிடம் சமர்ப்பித்து விட்டேன்! இனி எல்லாமே உங்கள் பக்கமே ! மேஜர் சுந்தர்ராஜன் பாணியில் சொல்வதாயின் - The ball is really in your court folks! எங்கள் தரப்பினில் இதுவொரு அனாவசியப் பதைபதைப்பாகவோ ; ஒரு kneejerk reaction ஆகவோ உங்களுக்குத் தென்படாது இருப்பின் சந்தோஷம் கொள்வேன் !

மீண்டும் சந்திப்போம் guys ! அது வரை, have a great Sunday & a bright week ahead !

Sunday, November 15, 2015

வழக்கம் போலொரு ஞாயிறு !!

நண்பர்களே,

வணக்கம்.'இதோ வருது தீபாவளி ...அதோ வருது விடுமுறை என்று காத்திருந்த நாட்களெல்லாம் கரைந்து செல்ல - தீபாவளியுமே அடித்துத் துவைத்த மழையின் மத்தியில் ஓசையின்றித் தாண்டிச் சென்றது போலத் தோன்றியது எனக்கு மட்டும் தானா - தெரியவில்லை ! ஆனால் மழைத் தூறலின் மத்தியிலும் எங்கள் ஊரில் அந்த சாயங்காலப் பொழுதை பட்டாசுகளால் அதிரச் செய்த ஜனம் ஏராளம் ! So இன்னுமொரு வருஷம்...இன்னுமொரு பண்டிகை நம் நினைவுகளின் பேழைகளுக்குள்ளே பார்சலாகிட - நார்மலான நாட்களின் ராஜ்ஜியம் தொடர்கிறது ! உலகுக்கே இது தான்கதை எனும் போது - கதை சொல்வதே உலகமான நமக்கு மட்டும் மாறுபட்டா இருந்திடும் நிலவரம்? ஆண்டின் இறுதி மாதத்து இதழ்களோடு மல்லுக்கட்ட எப்போதும் போல் தயாராகிக் கொண்டிருக்கிறோம் ! And இம்மாதம் தூள் கிளப்பப் போவது "தோர்கல்" தான் என்பதில் துளியும் சந்தேகமில்லை எனக்கு ! வேற்று மொழியின் ஒரிஜினல்களிலிருந்து மொழிபெயர்க்க வேண்டிய கதைகள் என்றாலோ - சற்றே இடியாப்பமான கதையோட்டம் கொண்ட ஆல்பங்கள் என்றாலோ - முன்ஜாக்கிரதையாய் கொஞ்சம் முன்கூட்டியே எழுதத் தொடங்கிடுவது வழக்கம். ஆனால் Cinebooks புண்ணியத்தில் கண்ணில் ஒற்றிக் கொள்ளும் தரத்தில் தோர்கலின்  ஆங்கில மொழிபெயர்ப்பு நமக்குக் கிடைத்திருப்பதால் சாவகாசமாய் தான் இந்தக் கதைக்குள் மூழ்கினேன் ! வாவ் !!! என்பதைத் தாண்டி எனக்கு வேறு வார்த்தைகள் வரவில்லை - கதையோட்டத்தை ரசிக்க இயன்ற போது !!  இது இது வரையிலான கதைகள் பிரமாதம் எனில் - காத்திருக்கும் 2 சாகசங்களும் சுத்தமாய் புதியதொரு லெவல் என்று தான் சொல்ல வேண்டும் ! கதாசிரியர் வான் ஹாம்மேவை நிறைய நாம் சிலாகித்திருக்கிறோம் ; XIII ; லார்கோ ; ஷெல்டன் போன்ற அவரது சமகால படைப்புகளைக் கண்டு வியந்திருக்கிறோம் - ஆனால் fantasy-ல் மனுஷன் வீடு கட்டி அடிப்பதைப் பார்த்தால் மிரட்சியாக உள்ளது !! கதையை எழுதும் போது அடுத்த knot இதுவாக இருக்குமோ ? - இந்த மாதிரிக் கொண்டு சென்றிருப்பாரோ ? என்ற யூகத்தோடே நானிருக்க - எந்தவொரு guesswork-ம் பருப்பு வேகவில்லை ! ஒவ்வொரு முச்சந்தியிலும் மனுஷன் எந்தப் பக்கம் இன்டிகேடரைப் போடுவாரோ என்ற சுவாரஸ்யத்திலே முதல் பாகம் முடிந்து விட்டது ! "பிள்ளைகளுக்குக் கதை சொல்ல சூப்பரான ஆல்பம் !" என்று நினைத்துக் கொண்டே இதற்குள் மூழ்கினால் - நாமே கொஞ்ச நேரத்தில் கட்டை விரலை வாய்க்குள் செருகி அமர்ந்திருப்பதை உணரலாம் ! This is an absolute crackerjack !!
WORKS IN PROGRESS....
இதோ இன்னுமொரு ஒரிஜினல் ராப்பரின் பயன்பாடு - துளியும் மாற்றங்களின்றி !! இந்தத் தொடருக்குத் தீட்டப்பட்டுள்ள அட்டைப்படங்கள் ஒவ்வொன்றுமே classic ரகத்தினில் இருப்பதால் - இங்கே நமது ஓவியருக்கோ, டிசைனருக்கோ துளியும் வேலையிராது என்பது அப்பட்டம் ! (இந்த முன்னட்டையினில் மட்டும் கொஞ்சமே கொஞ்சமாய் டெய்லர் வேலை செய்யச் சொல்லி நம் டிசைனருக்குச் சொல்லியுள்ளேன் !!)

நவம்பர் இதழ்களின் உங்கள் review களை சுவாரஸ்யமாய்ப் படித்தேன்....! என்னைப் பொறுத்த வரை டெக்சின் டபுள் இதழ் ஹிட் அடித்ததில் ஆச்சர்யமில்லை ...! "டைனோசாரின் பாதையில்" கதைக்கான சித்திரங்கள் மட்டுமே கொஞ்சம் புருவ உயர்த்தல் சமாச்சாரமாகிடும் என்பதை எதிர்பார்த்திடுவதில் அதிக சிரமம் இருக்கவில்லை  ; அது நீங்கலாக பாக்கி சமாச்சாரங்களை 'தல'யின் presence பார்த்துக் கொள்ளுமென்பது தான் தெரியுமே ! So "தீபாவளி with டெக்ஸ் " நமது "புஷ்டியான ஹிட் இதழ்கள்" பட்டியலுக்கொரு புது வரவு என்பது புரிகிறது ! And ஷெல்டனின் சாகசமும் நிச்சயமாய் சோடை போகாதேன்றே எதிர்பார்த்தோம் ! வரலாற்றுப் பின்னணி கொஞ்சம் நிறையவே இருப்பினும், ஒரு டபுள் ஆல்ப கதை நகற்றலுக்கு அது அத்தியாவசியமே என்று தோன்றியது ! கதை 'பர பர' வேகமெனில் சித்திரங்கள் ஆளை விழுங்கும் அழகு என்பதை சொல்லவே தேவையில்லை - was simply awesome ! நவம்பரின் surprise என்று நான் பார்ப்பது சா.வீ.ரோ. சாகசத்தையே !  லாஜிக் பார்க்காத வரையிலும் "மஞ்சள் நிழல்"அழகானதொரு படைப்பே என்பதில் எனக்கு ஐயமிருக்கவில்லை - ஆனால் தட்டுப்படும் புராதனம் + குட்டிப் பிள்ளைகள் crayons கொண்டு கீச்சியது போலான வர்ண சேர்க்கைக்கும் உங்களது reactions எவ்விதம் இருக்குமோ என்பதில் சின்னதாய் ஒரு பயமிருந்தது எனக்குள் ! But 44 பக்கக் கதை தான் எனும் பொழுது "லாஜிக் லங்கேஷ்வரர்களாக" அவதாரமெடுக்க நீங்கள் அதிகம் மெனக்கெடவில்லை என்ற மட்டில் ஒரு நிம்மதிப் பெருமூச்சு !! Last of the lot - மறுபதிப்பான "மூளைத் திருடர்கள்" கொஞ்சம் மொக்கை என்பதில் ஒளிவு மறைவு அவசியமிராது தான் ! இந்தக் கதை முத்து காமிக்ஸில் வெளியான போதே ஜானி நீரோவை ஏன் இத்தனை "ஞே " முழியோடு வெளியிட்டுள்ளனரோ என்று யோசித்தது நினைவுள்ளது - and ஒரு சிவப்புக் கலர் ரயில் ஓடும் ராப்பர் தான் அந்நாட்களது கவர் என்பதும் நினைவில் உள்ளது ! ஜானி நீரோ கதைவரிசைக்கும் சரி ; ஸ்பைடரின் ஆல்பங்களுக்கும் சரி - இடையிடையே கொஞ்சம் கோக்கு மாக்கான ஓவிய பாணி நடைமுறையில் இருப்பதை இப்போது உணர முடிகிறது ! தொடரும் ஆண்டின் மறுபதிப்புகள் அனைத்திலும் இந்தச் சிக்கல் இல்லை என்ற மட்டில் சந்தோஷப்பட்டுக் கொண்டேன் !

இம்மாத highlight என்று சொல்வதாயின் - டெக்சின் வருகையினாலோ என்னவோ 'ஜிவ்'வென்று ஒரு எகிறு எகிறியுள்ள நமது ஆன்லைன் விற்பனையினைத் தான் சொல்ல வேண்டும் !! கடைசியாக CCC வெளியான ஜூலையில் இதே போலொரு ஆன்லைன் பரபரப்பு இருந்தது நம் விற்பனையில் ! அதன் பின்னே இந்த நவம்பரும் ஒரு உற்சாகப் பொழுதாகியுள்ளது ! நம் வாசக வட்டத்தினுள் ஒரு பகுதி - தரம் பிரித்து வாங்குவதை இது காட்டுவதோடு - கார்ட்டூன்கள் + டெக்ஸ் என்ற கூட்டணிக்கு அவர்களது thumbs up இருப்பதும் புரிகிறது ! 2016-ல் இந்த இரு சங்கதிகளுக்குமே நிறைய முன்னுரிமை இருப்பதால் நமது ஆன்லைன் வாசகர்களும் குஷி கொள்ளவொரு சாத்தியம் தெரிகிறது !! Fingers crossed !

சந்தோஷமான இக்கட்டொன்றும் இந்த "highlight " பிரிவினில் சேர்த்தி என்று சொல்லுவேன் ! 2016-ன் நமது அட்டவணையினில் இணைத்திடும் பொருட்டு - ஒரு அழகான கௌபாய் புதுத் தொடருக்கான உரிமைகளைக் கோரியிருந்தேன். ஆனால் அவர்களிடமிருந்து அது தொடர்பான பதில் கிட்டவில்லை எனும் பொழுது தாமதிக்க நம்மிடம் அவகாசம் இருக்கவில்லை ! ஆனால் இந்த வாரம் அவர்கள் சம்மதம் சொல்லி மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர் !! இந்தப் புதியவரை எவ்விதம் - எப்போது - எங்கே நுழைப்பது என இல்லாத கேசத்தைப் பிய்த்துக் கொண்டிருக்கிறேன் !

சந்தா Z தொடர்பான தேடல்களும், சிந்தனைகளும் இன்னொரு பக்கத் தண்டவாளத்தில் ஓடிக் கொண்டு வருகிறது ! அதன் பொருட்டு புதுசு புதுசாய்க் கதைகளைப் படிப்பது ஒரு ஜாலியான வேலையாக இருந்து வருகிறது !! அது ஏனோ தெரியவில்லை - எனக்கு பிரமாதமாகத் தெரியும் கதைகளின் முக்காலே மூன்று வீசம் யுத்தப் பின்னணிக் கதைகளாகவே இருந்து வருகின்றன !! ஆனால் கடும் பிரயத்தனங்களின் பெயரில் இம்முறை அந்தப் பக்கம் பார்வையை ஓட விடப் போவதில்லை என்றொரு தீர்மானம் எடுத்துள்ளேன் ! And டாகுமெண்டரி ரகக் கதைகளையும் தொடுவதில்லை என்று மண்டையில் பதிவு செய்துள்ளேன் ! So புரட்டிய மூன்றாம் பக்கத்திலேயே விட்டம் வரை விரியும் கொட்டாவிகள் இம்முறை ஆஜராகா என்ற தைரியம் கொள்ளலாம் நீங்கள் ! சுவாரஸ்யமான கதைகள் - சொல்லப்பட்டுள்ள பாணிகளில் வித்தியாசம் என்பதே Z -ன் விசிடிங் கார்டாக இருந்திடப் போகிறது !

ஆண்டின் இறுதி மாதம் நம் முன்னே காத்திருக்கும் வேளை எனும் பொழுது - ஆண்டறிக்கை ; இந்த வருஷத்தின் performers ; non -performers பற்றிய சிந்தனைகளும் எனக்குள் மேலோட்டமாய் ஓடத் துவங்கியுள்ளது ! இம்மாத இதழ்களில் வழக்கம் போலொரு கேள்விகள் பகுதி இருந்திடும் என்பதால் அதற்கு உங்களின் பதில்களை ஆவலாய் எதிர்பார்ப்போம் ! இப்போது வரையிலான 2015-ன் BEST எதுவென்ற உங்கள எண்ணங்களை  அறிந்து கொள்ள மாத்திரம் இப்போதைக்கு ஆவல் ! 11 மாதங்களது சுமார் 44 இதழ்களுள் உங்கள் சிந்தையைக் கவர்ந்த இதழ் எதுவோ ? And why ? பதிவிடலாமே இந்த ஞாயிறை சற்றே சுறுசுறுப்பாக்கிட  ?

Before I wind off - கடைசிக் caption எழுதும் போட்டியினில் (முதலைக்கு மேலே கார்சன் + டெக்ஸ் _ அந்த ஆரம்பத்து 'மினி லயன்' இதழின் பரிசைத் தட்டிச் செல்வது  "உருவுது..உருவுது.."நண்பர் சரவணன் ! உங்களின் முகவரியை ஒரு மின்னஞ்சலில் தட்டி விடுங்களேன் நண்பரே !

And இந்த வாரத்துக்கு yet another போட்டி ! இதற்கு ஆரம்பத்து லயன் இதழைப் பரிசாக்கிடுவோமா ?

And before I sign off - சந்தாப் புதுப்பித்தலின் நினைவூட்டல் !!! ப்ளீஸ் - இன்னும் சற்றே வேகம் நண்பர்களே ?!! See you around ! Bye for now !

Tuesday, November 10, 2015

பண்டிகையும்..ஒரு பழங்கதையும்..!

நண்பர்களே,

வணக்கம்! தேசமே ஆர்ப்பரிக்கும் ஒரு அழகான தீபாவளித் திருநாளில் உங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் சந்தோஷம் பெருக்கெடுக்கட்டும்!! பட்டாசுகளோடும், புத்தாடைகளோடும், புது காமிக்ஸ் இதழ்களோடும் இந்தத் தீபாவளியை அற்புதமாக்கிட நமது ஆத்மார்த்தமான வாழ்த்துக்கள்!

தீபாவளி நாளில் நம் எல்லோருக்குமே வயது 10 தான்!‘ என்பதில் போத்தீஸின் உலக நாயகருக்கு மட்டுமின்றி நம் அனைவருக்குமே உடன்பாடிருக்கும் என்பது உறுதி! என்னைப் பொறுத்தவரை அதனில் சின்னதொரு மாற்றம் தீபாவளிக்கு எப்போதுமே என் வயது 17 தான்! அதைப் பற்றிய flashback பதிவிது என்பதால் பட்டிமன்றங்களையும், சுவாரஸ்யமான புதுப்படங்களையும் பாதியில் உதறிவிட்டு இங்கு வந்திருக்கக் கூடிய நண்பர்களிடம் முன்கூட்டியே apologies! ஆ... ஊன்னா தியாகராஜ பாகவதர் காலத்துக்குப் போயிடறான்டா சாமி!‘ என்ற உங்கள் mind voice-கள் கேட்பினும் என் சிற்றறிவுக்குத் தெரிந்த மிகப் பிரகாசமான தீபாவளி புதைந்து கிடப்பது 1984-ல் தான் எனும் போது தமிழ் சினிமாப் பாணி flashback-களைத் தவிர்த்திட முடியவில்லை!

1984ல் ஜுலையில் நமது லயனின் பயணம் துவங்கியது; மாடஸ்டியின் சொதப்பல்கள்; அப்புறமாய் ஸ்பைடரின் வருகை தந்த எழுச்சி என்பதெல்லாம் well documented தானே? அதே போல லயனின் இதழ் # 5 ஆக அக்டோபர் 1984-ன் இறுதிகளில் வெளிவந்த “இரும்பு மனிதன்நமது பல தீபாவளி மலர்களுள் முதன்மையானது என்பதையும் அறிவோம்! அதன் பின்னணியைப் பற்றி “சிங்கத்தின் சிறு வயதில்“ பகுதியில் லேசாக எழுதியிருப்பது நினைவுள்ளது! ஆனால் அதன் பின்னணியில் ஒரு கிராபிக் நாவல் ரகத்திலான ஆக்ஷன் உள்ளதை நான் மட்டுமே அறிவேன்! இந்தப் பதிவு அதன் ஒரு ஜாலியான rewind தான் !  

ஆர்ச்சி நிகழ்ந்தது ஒரு காலத்தின் கட்டாயமென்று சொல்லலாம்...! அந்நாட்களது ஒவ்வொரு Fleetway வருடாந்திர சிறப்பு மலர்களிலும் நமது சிகப்புச் சட்டித் தலையனின் சிறுகதைகள் தவறாமல் இடம்பிடிப்பதுண்டு! அவற்றைப் படித்த நாட்களிலேயே, இந்த இரும்பு மனுஷனுக்கு நானொரு ரசிகன். In fact – மாடஸ்டி சொதப்பிடத் தொடங்கிய கணமே (sorry M.V.sir!!) என் தலைக்குள் தோன்றிய முதல் உருவம் ஆர்ச்சியினுடையது தான்! என்னிடமிருந்த ஒரு மூட்டை fleetway வாராந்திர இதழ்களின் குவியலுக்குள் ஒரு இரும்புக்கை வில்லனோடு ஆர்ச்சி மல்லுக்கட்டும் தொடர்கதையினைப் பார்த்து வாய் பிளந்திருந்தேன்! இரும்புக்கை கொண்ட தேவாங்கு சிக்கியிருந்தால் கூட அதையும் பிடித்து வந்து காமிக்ஸின் அட்டையிலும், விளம்பரத்திலும், போட்டிட நான் மட்டுமன்றி காமிக்ஸ் பதிப்பகங்கள் சகலமுமே காவடி எடுத்துக் காத்திருந்த நாட்களவை! So- "ஆர்ச்சி vs The Iron Fist " என்ற அந்தத் தொடர்கதையின் பெயர் வெளிவந்த மாதம் & வருடம் ஆகிய குறிப்புகளோடு டெல்லியிலிருந்த Fleetway-ன் அந்நாட்களது ஏஜெண்டிடம் ஆர்டர் செய்திருந்தேன். கடுதாசிகள் மூலம் செய்திப் பரிமாற்றங்கள் நடந்து வந்த புராதன நாட்களவை என்பதால் ஆகஸ்டில் நான் போட்ட ஆர்டருக்கு செப்டம்பரில் தான் “கதை வந்து விட்டது“ என்ற பதில் கிட்டியது! அதற்கு முன்பாக நமது கூர்மண்டையர் நமது அணிவகுப்புக்குள் புகுந்திருந்து வெற்றியை ஈட்டித் தந்திருக்க சூப்பர் ஹீரோ ரகக் கதைகள் மீதான எனது அபிமானம் இன்னும் கூடிப் போயிருந்தது! So- டெல்லிக்குப் பயணமான பொழுது ஆசை ஆசையாய் ஆர்ச்சியை புரட்டத் தொடங்கிய போது தான் முதல் ஷாக்! அதுநாள் வரையிலும் நாம் வெளியிட்டுக் கொண்டிருந்த மாடஸ்டி & ஸ்பைடர் ஒரு குறிப்பிட்ட நீளத்துக்குள் அடங்கிடும் விதமாய் இருந்திட ஆர்ச்சியின் இந்த சாகஸமோ நைல் நதியின் நீளத்திற்கு இருந்தது! ‘கதையும் ரெடி உடனே பணம் செலுத்த வேண்டும் ! ‘ என்ற போது யோசிக்க அவகாசமெல்லாம் இருக்கவில்லை! பணத்தைக் கட்டி விட்டு, கதையை வாங்கிக் கொண்டு தமிழ்நாட் எக்ஸ்பிரசில் ஊர் திரும்பிய போது தான் இவ்வளவு நீளக் கதையை இரண்டு பாகங்களாகப் பிரிக்காமல் எவ்விதம் வெளியிடுவது என்ற யோசனை ஓடத் தொடங்கியது! கதை செம உப்மா என்ற போதிலும் அந்நாட்களது நமது வயதுகளுக்கும், Fleetway-ன் சரமாரியான Annuals சிறப்பிதழ்களைப் பார்த்தே வளர்ந்திருந்த எனக்கு அந்த பாணியில் நாமும் ஒரு ஸ்பெஷல் வெளியீடாக ஆர்ச்சியைப் போட்டால் என்ன? என்று தோன்றத் தொடங்கியது. இரயில் போபால் ஸ்டேஷனை எட்டிப் பிடித்த வேளைக்குள் என் தலைக்குள் தீபாவளி மலரின் ஒரு மினி ப்ளு-பிரிண்ட் தயாராகியிருந்தது!

அந்நாட்களில் நான் தனியாகக் கடை போட்டு, ஒரேயொரு ஆர்ட்டிஸ்ட் & ஆபீஸ் பையனோடு வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தாலும் இதழ்களின் தயாரிப்பு வேலைகளின் பொருட்டு என் தந்தையும், அவரது சகோதரர்களும் அச்சகம் நடத்திக் கொண்டிருந்த வளாகத்தினில் தான் பாதி நேரத்தைக் செலவிட்டு வருவேன். தந்தை partnership-ல் ஒரு அங்கமாக இருந்திட , அவர் மூகுக்குக் கீழேயே குந்திக் கொண்டு நான் தனியாக எதையோ கிளறிக் கொண்டிருந்தது - இதர பார்ட்னர்களை அத்தனை சந்தோஷப்படுத்தவில்லை ! அதிலும் அன்றைய நாட்களில் முத்து காமிக்ஸ் நொண்டியடித்துக் கொண்டிருந்த சமயம் - நான் தனி ஆவர்த்தனத்தில் ஏதேதோ ஜிகினா வேலைகளைச் செய்து வந்தது தந்தையின் சகோதரரிடையே புகைச்சலை ஏற்படுத்தி இருந்தது ரொம்பச் சீக்கிரமே என் கவனத்துக்கு வந்து விட்டது ! வெளியாட்களுக்கான அதே ட்ரீட்மெண்ட் தான் எனக்கும்! அச்சிட அதே கூலி தான் ; அங்கிருந்த உபகரணங்களையோ, பணியாட்களையோ பயன்படுத்தினால் அதற்கும் காசு கட்ட வேண்டியிருக்கும் ! இவ்வளவு ஏன் - மாட்டு வண்டியில் அவர்களது காலெண்டர் பண்டல்களோடு நமது காமிக்ஸ் இதழ்களின் பண்டல்கலையும்  சேர்த்து அனுப்பினால் கூட - அதுக்கும் கணக்காகக் காசு தந்து விடும் சூழல் !!!  உச்சக்கட்ட நிதி நெருக்கடியில் தந்தையும், சகோதரர்களும் நடத்தி வந்த அச்சகம் உழன்று வந்த காலம் என்பதால் என் தந்தையிடமே நான் கொஞ்சம் விலகி இருக்க வேண்டிய நாட்களாக அவை அமைந்து போயின! என்னிடம் அப்போது பாங்க்கில் சுமார் ரூ.30,000 இருப்பு இருப்பது வழக்கம்! (அந்நாட்களில் அதுவொரு huge தொகை!! ) அவர்களது அச்சக நிர்வாகத்தில் ஏதேனும் நெருக்கடி எனில் என்னிடமிருந்து கைமாற்று கேட்டு விடுவார்களோ என்ற பயத்தினிலேயே என் தந்தையைத் தவிர்த்து விட்டு அலுவலகத்தின் பணியாட்களோடே நான் பொழுதுகளைக் கழிப்பது வாடிக்கை! 

புத்தக அளவுகள் மாறும் சமயம் தயாரிப்பில் தெரிந்து கொள்ள வேண்டிய நெளிவு சுளிவுகளை எனக்கு அந்நாட்களது முத்து காமிக்ஸின் மேனேஜரும், பைண்டிங் பிரிவின் பணியாளருமே கற்றுத் தந்தனர்! இரும்பு மனிதன்“ பெரிய சைஸில் என்று தீர்மானமான பின்பு அதன் “பிரம்மாண்டத்தைக்“ கூட்டிட கதைக்கு 2 வர்ணங்கள் தருவதென்று தீர்மானமும் செய்தேன்! கம்ப்யூட்டர் இல்லாக் காலங்கள் என்பதால் எல்லாமே பணியாட்களின் processing கைவண்ணத்தில் அரங்கேறியாக வேண்டும். எனக்கோ black & white இதழ்களின் அடுத்த லெவல் பணிமுறைகள் பற்றித் துளியும் தெரியாது! என் தந்தையிடம் கேட்க, ஒரு வித இயலாமை ; சக பார்ட்னர்களின் (சகோதரர்களின்)  கடுப்பை சமாளிக்க வேண்டிய இக்கட்டில் இருந்த என் தந்தைக்கு அடக்கி வாசிக்க வேண்டிய நிர்ப்பந்தம் என்ற நிலையில் எப்படியோ தட்டுத் தடுமாறி இரு வண்ணங்களுக்குரிய நெகடிவ்களை தயார் செய்து விட்டேன். அதன் மீது ரீ-டச்சிங் ஆர்ட்டிஸ்ட்கள் என்ற பணியாளர்கள் வேலை செய்தாக வேண்டும். அடியில் டியூப்லைட் பொருத்தப்பட்ட கண்ணாடி மேஜைகளின் மீது நெகடிவ்களைப் போட்டுக் கொண்டு ‘வறட்‘ ‘வறட்‘ என்று சுரண்ட ஒரு கருவியும்; செங்கமட்டி போன்றதொரு opaque பேஸ்டையும் வைத்துக் கொண்டு தான் அவர்கள் மணிக்கணக்கில் / நாள்கணக்கில் பணி செய்வர்! என் தந்தையின் அச்சகத்தில் காலண்டர்கள் பிரதானமாய் தயாராவது வாடிக்கை என்பதால் இந்த ரீ-டச்சிங் ஆர்ட்டிஸ்ட்கள் 4 பேர் இருப்பதுண்டு! அவர்களைத் தாஜா பண்ணி நமது காமிக்ஸ் வேலைகளைச் செய்யத் தொடங்க வைத்திருப்பேன்; அதற்குள் “வேறு அவசர வேலை“ என்று காலெண்டர்கள் எதற்குள்ளாவது அவர்களை அமுக்கி விடுவார்கள்! “இது வேலைக்கு ஆகாதுடா சாமி!“ என்று என் தலைக்குள் அபாய மணி ஒலிக்க என்ன செய்யலாமென்று யோசிக்கத் தொடங்கினேன்! இந்தியாவிலிருந்து கொண்டு வளைய, நெளியத் தெரியாது இருந்தால் குப்பை கொட்ட முடியுமா என்ன..? அன்று முதல் அத்தனை ஆர்டிஸ்ட்களுக்கு்ம் இரவில் "புரோட்டா-சிக்கன்" விருந்து என் செலவில் என்று காதில் போட்டு வைத்தேன்! ஏற்கனவே என்னைப் பொடியனான நாட்களிலிருந்தே அறிந்து வைத்திருந்த பணியாட்கள் எனக்கு உதவி செய்திட ஆர்வமாகவே இருந்த நிலையில்; "புரோட்டா-சிக்கன் வாக்குறுதி" செம சூப்பராக வேலைகள் நடந்தேறச் செய்தது! ஒவ்வொரு நாளும், பகல்களில் காலெண்டர் வேலைகளைப் பார்த்து விட்டு இரவுகளில் ‘இரும்பு மனிதனோடு‘ பொழுதைக் கழித்தனர். அவர்கள் தூங்காமல் பணி செய்யும் போது நமக்குத் தூக்கம் தான் பிடிக்குமா என்ன? இரவு 2 மணி வரை ஒரு ஓரமாய் உட்கார்ந்து “பாதாளப் போராட்டம்“ கதையின் மொழிபெயர்ப்பில் மொக்கை போட்டுக் கொண்டிருப்பேன். ஒரு மாதிரியாக ஒரு வார இரவு வேலைகளுக்குப் பின்பாக 2 வர்ணத்தில் அச்சிட பிலிம்கள் தயாராகி இருந்தன!

அச்சு இயந்திரங்களில் இரு வகைகள் உண்டு! நியூஸ் பேப்பர்கள்; வாரப் பத்திரிகைகள் போன்றவற்றை பேப்பர் ரீல்களிலிருந்தே அச்சிடுபவை web offset என்று ரகம். மற்றபடிக்கு எண்ணிக்கையில் குறைச்சலான காலெண்டர்கள், டயரிகள், லேபில்கள் etc.. etc.. போன்றவற்றை வெட்டப்பட்ட தனித்தனிக் காகிதங்களிலிருந்து அச்சிடுபவை sheetfed presses. பிந்தையது எக்கச்சக்கமாய் உண்டு; ஆனால் ரீல்களில் இருந்து அச்சிடும் web offsets ரொம்ப ரொம்பக் குறைவே சிவகாசியில்! என் தந்தையின் அச்சகத்தில் அந்நாட்களில் இரண்டுமே உண்டு! So- முன்பக்கமும், பின்பக்கமும் 2+2 ஆக மொத்தம் 4 கலர்கள் அச்சிட வேண்டுமென்பதால் பணியை web offset-ல் செய்தால் ‘ஏக் தம்மில்‘ வேலை முடிந்து விடும்! பற்றாக்குறைக்கு அச்சிட்டு விட்டு பேப்பரை அதுவே கட் பண்ணி, மடித்தும் தந்து விடும்! So- பைண்டிங்கிலும் வேலை சுலபமாகி விடும் என்பதால் இந்த இதழின் திட்டமிடல் தொடங்கிய போதே இதற்கான பேப்பரை ரீலாக வாங்கி விடுவது என்றும் ஊருக்கு சற்றே வெளியிலிருந்த web offset பாக்டரியில் அவற்றை அச்சிட்டு விடுவது என்றும் தீர்மானித்திருந்தேன். என் தந்தைக்கும் தகவல் சொல்லி விட்டதால் ஜரூராக பேப்பரை வரவழைத்து தடித் தடி ரீல்களைக் கொண்டு போய் தந்தையின் அந்த web offset பிரிவில் இறக்கி வந்தேன்!
WEB OFFSET

SHEETFED
Web offset இருந்த பாக்டரியில் பெரிதாய் வேலைகள் இருந்து நான் பார்த்ததே கிடையாது! ‘மாலை மலர்‘ க்ரூப்பிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த “தேவி“ வாராந்திர இதழின் அட்டைப்படம் மட்டுமே ரெகுலராக அங்கே அச்சாக வருவதைப் பார்த்திடுவேன். So- அங்கிருக்கும் பணியாட்கள் சாவகாசமாய்; எனக்கென்ன போச்சு? என்ற ரீதியில் தான் பணி செய்வர்! சரி-இங்கேயும் “புரோட்டா-சிக்கன் டெக்னிக்“ தான் என்று நான் மனதுக்குள் நினைத்துக் கொண்டே வரும் திங்கள் முதல் உங்கள் சாப்பாட்டுப் பிரச்சனைகளை நான் பார்த்துக் கொள்கிறேன்!“ என்று சொல்லி விட்டுக் கிளம்பினேன்! கல்லூரிகளில் படித்துக் கொண்டிருந்த நண்பர்கள் வார இறுதியில் ஒட்டுமொத்தமாய் கொடைக்கானல் புறப்பட்டுக் கொண்டிருக்க இந்தத் “தொழிலதிபரும்“ அவர்களோடு இணைந்து கொள்ள வேண்டிப் போனது! ஜாலியாக 2 நாள் ஊர் சுற்றி விட்டு சட்டுப் புட்டென்று பிரிண்டிங் வேலைகளைப் பார்க்கலாம் என்று ஆபீஸுக்கு திங்கட்கிழமை போனேன்! அங்கே காத்திருந்த ‘ஷாக்‘ இப்போதும் நினைவில் உள்ளது!

பேப்பர் ரீல்களை எப்போதுமே லாரியிலிருந்து இறக்கி அச்சகத்தின் ஓரத்திலுள்ள புல்தரையில் தான் போட்டு வைத்திருப்பார்கள்! நமது பேப்பர் ரீல்களும் அப்படித் தான் கிடந்தன வெள்ளி இரவில் நான் புறப்பட்ட வரைக்கும்! திங்கட்கிழமை காலை புல்தரை பச்சை பசேலென்று காட்சி தந்தது மேலே ஏதுமின்றி! “மழை பெய்திருக்கும் போலும்... உள்ளே தூக்கி அடுக்கியிருப்பார்கள்!“ என்றபடிக்கு சாவகாசமாய் உள்ளே போய் நோட்டம் விட்டால் அங்கேயும் சுத்தம் - எதுவும் கண்ணில் படக் காணோம் ! பணியாட்களிடம் விசாரித்தால் பேப்பரா? ரீலா?“ என்றுப் பேந்தப் பேந்த முழிக்க அங்கிருந்த மேனேஜர் மட்டும் பேய்முழி முழத்துக் கொண்டிருந்தார்! ஆறடி மூன்றங்குல உயரம்; ஆஜானுபாகுவான உடல் ஆனால் ரொம்பவே கீச்சுக் குரல் கொண்டவர் அவர்! வயதிலும் மூத்தவர்! அவரிடம் போய் “அண்ணாச்சி... என்னோட ரீல்லாம் எங்கே?“ என்று கேட்க அவர் தாளம் போடத் தொடங்கிய போது தான் எனக்குள் சைரன் சத்தம் கேட்கத் தொங்கியது! பதினேழே வயதான சுள்ளான் தான் என்ற போதிலும் உண்ணாமல், உறங்காமல் சேர்த்த காசின் மீது எனக்கிருந்த அக்கறை அசாத்தியக் கோபத்துக்கு வழிவகுத்தது! அங்கேயே ஒரு ருத்ர தாண்டவம் ஆடத் தொடங்க அவர் மெதுமெதுவாய் வாயைத் திறந்தார்........! அந்த வாரத்து ‘தேவி‘ இதழின் ராப்பர் அச்சிடத் தேவையான பேப்பர் இன்னமும் வாங்கிடவில்லை; ஆனால் அவர்களது deadline-க்கு நேரமாகி விட்டதால் கைவசம் தயாராகக் கிடந்த நமது (காமிக்ஸ்) பேப்பர் ரீல்களை எடுத்துப் போட்டு அதனில் தேவியின் ராப்பரை அச்சிட்டு விட்டதாகச் சொன்னார் ! 

அவர் சொல்லச் சொல்ல எனக்கு இரத்தம் கொதிநிலைக்குப் பயணமாகி விட்டது! கொஞ்ச நேரத்துக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை ; இது மாதிரியான சிக்கல்களெல்லாம் இதன் முன்னே பார்த்தது கிடையாது எனும் பொழுது - அழுகை அழுகையாய் வந்தது. தோல்வி பயம் தொண்டையை அடைக்க, கண்ணீரோ எந்த நொடியும் பெருக்கெடுக்கக் கூடுமென்ற நிலையில் சைக்கிளை புயல் போல் மிதித்துக் கொண்டு என் தந்தையும், அவரது சகோதரர்களும் இருந்திடும் மெயின் ஆபீஸுக்கு வெறிபிடித்தவன் போல் போய்ச் சேர்ந்தேன்! பகல் வேளை என்பதால் பிசியாக எல்லோரும் இருக்க நடுக்கூடத்தில் நின்று கொண்டு சாமியாட்டம் ஆடத் தொடங்கினேன். இன்று யோசிக்கும் போது அந்த ரௌத்திரம் ரொம்பவே ஓவரோ? என்று தோன்றினாலும் அந்நாட்களில் ஒவ்வொரு ஒற்றை ரூபாய் நோட்டையும் கண்ணில் பார்க்க நான் பட்ட கஷ்டங்கள் எனக்கு நிதானத்தை அந்த நிமிடத்தில் நல்கவில்லை! நெருக்கடியானதொரு சூழலில் தந்தையின் சகோதரர் எடுத்திருக்கக்கூடிய அந்தத் தீர்மானத்தை என் தந்தையால் நிராகரிக்க இயலாது போனதா ? அல்லது என்னை சமாதானம் செய்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் என் தந்தையே எடுத்த தீர்மானமா ? விடை தெரிந்து கொள்ளும் பக்குவத்தில் நானில்லை!தந்தையும் சரி சகோதரர்களும் சரி ஆடித் தான் போய் விட்டார்கள்! “தேவி“யிலிருந்து செக் நாளை வந்து விடும்; நாளைக்கு பேப்பர் வாங்கி replace செய்து விடலாம் !" என்று என் தந்தை சொல்ல நானோ எதையும் காது கொடுத்துக் கேட்கும் நிலையில் இல்லை! 'சந்தைக்குப் போணும்...ஆத்தா வையும்...காசு கொடு..!" என்ற பாணியில் ஒரே பாட்டைத் தான் பாடிக் கொண்டு நின்றேன் !  அந்த ஆபீஸ் முழுவதுமே என்னை விரோதமாய்ப் பார்ப்பது போல் எனக்குத் தோன்றியது. ஆனாலும் எனக்கு என் ரீல்கள் கிடைக்காமல் நான் இடத்தைக் காலி பண்ணப் போவதில்லை என்பதில் உறுதியாக இருந்தேன்.

என்னைப் பொறுத்தவரைக்கும் கற்பனைக்கு அப்பாலானதொரு விலையோடு (ரூ.4!!!) வரவிருக்கும் ஒரு “ஸ்பெஷல் இதழ்“ தாமதமாகி விட்டால் கதை கந்தலாகிப் போகுமே என்ற பயம் தான்!! தவிர, கழுத்து வரை பிரச்சனைகளுக்கள் சிக்கிக் கிடப்பவர்களுக்கு நாளைய பொழுது புலர்ந்து விட்டால் நம் பிரச்சனை எங்கே பெரிதாகத் தெரியப் போகிறது? என்ற கலக்கமும்! விட்டால் அழுதுவிடுவேன் என்ற அளவுக்கு உள்ளுக்குள் கதிகலங்கிப் போயிருந்தேன்; ஆனால் வெளியே அதைக் காட்டிக் கொள்ளக் கூடாதென்ற வீராப்பில் ‘அலெர்ட் ஆறுமுகம்‘ போல  முறையோ முறை என்று முறைத்துக் கொண்டே உட்கார்ந்திருந்தேன்! சரி- இவன் எந்த சமாதானத்துக்கும் சரிப்பட மாட்டானென்று அனைவரும் உணர்ந்திருந்தனர் அந்நேரத்துக்கு! அதன் பின்பாக என்னவோ செய்து பணத்தை எப்படியோ புரட்டி மதுரையிலிருந்து பேப்பர் ரீல்களை ஆர்டர் போட்டார்கள்! ‘இரவு வந்து விடும் !‘ என்று எனக்கு வாக்களிக்கப்பட்டிருப்பினும் யாரையும் நம்பும் மனநிலையில் நானில்லை! சத்தமில்லாமல் மதுரையிலிருந்த லாரி ஷெட் நம்பரை எடுத்து வந்து ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் கூப்பிட்டு அவர்கள், குடலையும் உருவினேன். ஒருவழியாக ‘லோடு ஏறிடுச்சி‘ என்று அவர்களும் சொல்லி வைக்க, அன்றிரவு பேப்பர் சிவகாசி வந்து சேர்ந்தது!

மறுபடியும் இதே கூத்தாகிப் போய்விடக் கூடாதுடா சாமி !!‘ என்ற வைராக்கியத்தில் அடுத்த சில நாட்களுக்கு நமது தக்கனூண்டு ஆபீஸையே இந்த பாக்டரி இருந்த இடத்துக்கு மாற்றினேன். ஆர்ட்டிஸ்டும், நமது ஆபீஸ் பையனும் 5 நிமிடங்களுக்கொரு தடவை ரீல்களை சரிபார்த்து விட்டு... “மைக் 1... மைக் 2...All ok. boss !“ என்று குரல் கொடுக்காத குறை தான்! அவர்களது முழுநேரப் பணி - ரீல்களைப் பத்திரமாகக் காப்பாற்றுவதே !! 

ஒருவழியாக அச்சிட பிளேட்களையும் தயார் செய்து கொண்டு வந்து ஆர்ச்சியின் அச்சுப் பணிகள் தொடங்கிய போது எனக்குள்ளே சொல்ல முடியாததொரு புல்லரிப்பு! முதல் தடவையாகக் கலரில் (!!) அது சவ்வு மிட்டாய் ரோஸாகவோ; கிளிப் பச்சையாகவோ இருந்தால் கூட நமது காமிக்ஸைப் பார்த்த அந்தப் பரவசம் வார்த்தைகளுக்கு அப்பாலானதொரு உணர்வு! அதிலும் முன்னும், பின்னும் ஒரே சமயம் பக்கங்கள் உச்ச வேகத்தில் அச்சாவதைப் பார்த்ததும், சரி; இரும்புக்கை வில்லனோடு ஆர்ச்சி அண்ணாச்சி மோதுவதை உங்களுக்குக் கொணரவிருக்கும் உற்சாகத்தையும் (!!!) இப்போது கூட மறக்க முடியவில்லை !  ஒரு மாதிரியாக அச்சு முடிந்து பைண்டிங்கும் முடிந்து முதல் பிரதியைப் பளபளக்கும் வார்னிஷ் அட்டைப்படத்தோடு பார்த்த சமயம் அதன் பின்னிருந்த பாடுகள் சகலமும் மறந்தே போயிருந்தன! அதிலும் அட்டைப்பட டிசைனுக்கென நமது ஓவியர் காளியப்பா அவர்கள் ஒரே நாளில் போட்டுத் தந்திருந்த டிசைன் மூச்சு வாங்கச் செய்தது!

பிரதிகளைப் பார்த்த போது ஏஜெண்ட்கள் அத்தனை பேருக்குமே செம குஷி! ‘இது உறுதியா வித்திடும் சார்!‘ என்றபடிக்கே அருகாமையிலிருந்தோர் வாங்கிச் செல்ல தொடர்ந்த நாட்களில் ஒரு ஊர் பாக்கியின்றி சகல இடங்களிலும் தீபாவளி மலர் huge hit! வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு சைக்கிளுக்கு அப்பாலாக நான் வாங்கிய இருசக்கர வாகனத்தின் (IND SUZUKI Max 100) முன்பதிவுப் பணமும், லோனின் முதல் தவணைக்கான பணமும் உற்பத்தியானது நமது சட்டித்தலையரின் புண்ணியத்தாலேயே! ஒன்பதாயிரம் ரூபாய் விலையிலான புது வண்டிக்கு (!!) முன்பதிவுக்கு ரூ.2000/- பணம் கட்டிய சந்தோஷத்தோடே முதன்முறையாக என் கையிலிருந்த பணத்தைக் கொண்டு வீட்டிலுள்ளவர்களுக்கு தீபாவளிக்கு சின்னதாய் ஏதோ வாங்கித் தர முடிந்ததும் அன்றைக்குத் தான்! நாட்களும், அகவைகளும் ஏராளமாய் கழிந்து விட்ட போதிலும், வாழ்க்கையில் ஏதேதோ பார்த்து விட்டான பின்பும்  அந்த "முதல் பண்டிகையின்" பரவசம் இது போன்ற சமயங்களில் எப்போதாவது தலைதூக்குவதுண்டு எனக்குள் ! 

இன்றைய உலகில் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படிக்கும் போதே நம் இளைய தலைமுறையினர் செய்திடும் start up ventures விண்ணைத் தொடும் வெற்றியை ஈட்டுவதெல்லாம் பார்க்கும் போது எனது கி.மு. காலத்துக் கூத்துக்களை நினைத்தால் சிரிப்புத் தான் வருகிறது! ஆனால் நினைவுகளுக்குத் தான் லாஜிக் தெரியாதே?! So இது தான் எனது "தலை தீபாவளியின்" கதை !! உங்கள் ஒவ்வொருவரின் பால்யங்களிலும் இது போல் வித்தியாசமான தீபாவளி அனுபவங்கள் நிச்சயம் இருக்கும் ! அவற்றை சமயம் கிட்டும் போது பகிர்ந்திடலாமே folks ? Should be fun for sure !!

அட்டகாசமாய் இந்தத் தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவோமே.. ! மீண்டும் சந்திப்போம்! Bye for now !!

P.S.: நவம்பர் இதழ்களின் விமர்சனங்களை இங்கேயே தொடரலாமே?!

Saturday, November 07, 2015

ஒரு லீவு லெட்டர் !

நண்பர்களே,

வணக்கம். தீபாவளியின் உற்சாகம் உச்சத்தில் இருக்கும் இந்த  வேளையினில் நானிங்கு சின்னதாகவொரு லீவு விண்ணப்பம் போட வேண்டியதொரு நெருக்கடியினை M/s .ஜலதோஷத்தாரும் ; ஜூரத்தாரும் ஏற்படுத்தியுள்ளனர் ! சும்மா எழுத ஆரம்பித்தாலே மூக்கை முன்னூறு தடவை சுற்றும் பழக்கம் கொண்டவன் நான்  ; இந்த அழகில் ஜலதோஷ மாத்திரைகள் தரும் அந்த மிதப்பு சகிதம் எதையாச்சும் எழுத ஆரம்பித்தால் கதை கந்தலாகிப் போய் விடும் என்பதால் மரியாதையாக ஜகா வாங்கிக் கொள்கிறேன் இந்த ஞாயிறுக்கு ! So நவம்பர் இதழ்களின் review-ன் தொடர்ச்சியாகவே இதனையும் பார்த்திடுவோமே ? 

அப்புறம்  - இந்தப் பண்டிகை நாளை உங்களுக்கும், உங்கள் வாட்சப் குழுக்களும் ; ஜாலியானதாக ஆக்கிட ஏதோ எங்களுக்குத் தோன்றிய சிறு உபாயம் இங்குள்ளது ! இவற்றை download செய்து உங்கள் வட்டங்களுக்குள் அனுப்ப முயற்சித்துப் பாருங்களேன்..? இவை சுற்றி வரும் வேளைகளில் - நமது இதழ்கள் இப்போது தொடர்ச்சியாய் வந்து கொண்டிருப்பதை அறிந்திரா நண்பர்கள் யாரேனையும் அவை எட்டிப் பிடித்தாலும் நமக்கு சந்தோஷம் தானே ? (கொஞ்சம் சுமாரான சித்திரத் தரத்துக்கு apologies ; அடைத்த டூக்கோடு, தேட முடிந்தது இவ்வளவே !! ஜூ.எ. இன்னொரு பக்கம் ஜல்ப்போடு மல்லுக் கட்டிக் கொண்டிருப்பதால் அந்தப் பக்கமாயும் சகாயம் சாத்தியமாகவில்லை !) And - இது போல் நண்பர்கள் அழகாய்த் தயாரித்து அனுப்பிடும் பட்சத்தில் most welcome !! அவற்றையும் இது போல் இங்கே வலையேற்றம் செய்து விடுவோம் !! 

மீண்டும் சந்திப்போம் நண்பர்களே ! ஷெல்டன் பற்றிய reviews ஏதேனும் பார்த்தது போலத் தெரியவே இல்லையே..?  Was it ok ?

P.S : இந்த "ஞாயிறு அல்வாவை" ஈடு செய்யும் விதமாய் தீபாவளி தினத்தன்று புதிய பதிவோடு எப்படியும் ஆஜராகி விடுவேன் - ஜல்ப்போ ஜூரமோ - நிச்சயம் தடை போடாது ! ((என் பேனா இட்டுச் செல்லும் திசை எதுவென எனக்கே தெரியாதென்பதால் ஏதேனும் அதிரடி அறிவிப்போ ? என்ற யூகங்கள் வேண்டாமே ப்ளீஸ் ! ) So catch you soon ! Bye till then ! 

Thursday, November 05, 2015

தென்னை மரத்தில்.....!

நண்பர்களே,

வணக்கம். நேற்றைய காலை ஒன்றரைக் கிலோ எடை கொண்ட நமது நவம்பர் இதழ்கள், புஷ்டியான டப்பாக்களில் ஒட்டு மொத்தமாய்ப் புறப்பட்டுள்ளன - உங்களைத் தேடி ! As always , எல்லாப் பிரதிகளும் ஒரே சமயத்தில் தான் கூரியரை நாடிச் சென்றுள்ளன என்பதால் இன்று காலை (வியாழன்) உங்கள் அனைவரின் கைகளிலும் அவை மிளிர்ந்திடுமென்ற நம்பிக்கை எனக்குள்ளது ! 2016-ன் அட்டவணையும் பிரதிகளோடு உள்ளன ! So இந்த தினத்தின் ஒரு பகுதியை நமக்கென ஒதுக்கிடக் கோருகிறேன் !!


அப்புறம் இந்த மினிப் பதிவின் தலைப்பின் பெயர் காரணம் பற்றிச் சொல்லி விடுகிறேன் ! அட்டவவணை 2 வாரங்கள் முன்பாகவே இறுதியான நிலையில் அச்சிடும் பணிகள் மட்டும் பாக்கி நின்றன ! சந்தாக் கட்டணங்களில் கூரியரின் ரேட்களை ஒன்றுக்கு இரு முறைகள் அவரவர் மண்டல அலுவலகங்களோடு உறுதிப்படுத்திக் கொள்வோமே என்ற அக்கறையில் காத்திருந்த பொழுது தான் 'தொபுக்' என படைப்பாளிகளிடமிருந்து வந்ததொரு ஒரு மின்னஞ்சல்...! நாம் திட்டமிட்டிருந்த புது வரவான JOHN TIFANY (நமக்கு ஜான் டைனமைட்) கதைகளை வெளியிட்டு வருவது பெல்ஜியத்திலுள்ள லோம்பா நிறுவனம். இந்தக்  கதைகளின் தொடர்ச்சியை வெளியிடுவது தொடர்பாக அவர்களுக்கும், கதாசிரிய / ஓவியக் கூட்டணிக்கும் மத்தியினில் ஏதோ சலனம் போல் தெரிகிறது ! So தொடரவிருக்கும் ஆல்பம் # 3 & 4 -ஐ லோம்பா வெளியிடுவது சந்தேகம் என்ற நிலை இப்போது எழுந்துள்ளதாம் ! (ஒரு கதைத்தொடர் நடுவிலேயே கைமாறுவது பௌன்சர் விஷயத்தில் கூட நடந்துள்ளது ! அல்பங்கள் 1-7 வரை ஒரு நிறுவனத்திடமும் ; பாக்கி 2 ஆல்பங்கள் இன்னொரு நிறுவனத்திடமும் இருப்பது நாம் அறிந்தது தானே ?) "இந்த நிலையில் JOHN TIFANY-ன் முதல் 2 ஆல்பங்களுக்கான உரிமைகளை விற்பனை செய்யலாமா ? கூடாதா ? என்ற கேள்வி எழுந்துள்ளதால் அந்தக் கதைகளை இப்போதைக்கு ஆறப் போடுங்கள் !" என்று லோம்பா சொல்லியிருந்தனர் - நமக்கு வந்த மின்னஞ்சலில் !! 'போச்சுடா - தொடரை அறிவித்தாச்சு ; முதல் கதையை மொழிபெயர்த்தும் விட்டாச்சே !' என்று கையைப் பிசைந்த வண்ணம் நமது இக்கட்டை லோம்பாவுக்குச் சொன்னோம் ! "ஆனால் இது எங்களால் தீர்வு சொல்ல இயலா பிரச்சனை ; கதாசிரியரும், ஓவியரும் இதனில் எடுக்கும் முடிவே இறுதியானது எனும் பொழுது - ஏதோ ஒருவித சலனம் எழுந்துள்ள இத்தருணத்தில் அவர்களிடமிருந்து உடனடிப் பதில் கிட்டுவது impossible !" என்று முடித்துக் கொண்டனர் ! 

இது என்னடா சோதனை ? தெளிவாய்க் கேட்டு ; எல்லாமே ஒ.கே. என்றான பின்பு தான் கதைகளையும் வரவழைத்து ; மொழிபெயர்க்கவும் செய்தான பின்பு தானே அறிவிப்பை செய்தோம் என்று தலையைப் பிறாண்டத் தொடங்கினேன் ! அதிலும் இந்தக் கூத்து சகலமும் இந்த வாரத்தின் திங்கள்கிழமை மதியம் தான் அரங்கேறியது எனும் பொழுது தலைசுற்றல் இருமடங்கானது ! ஏற்கனவே ஜான் டைனமைட்டின் விளம்பரத்தோடு அச்சாகியிருந்த கேட்லாக்கை கடாசி விட்டு - கடைசி நிமிடப் புது வரவாக இன்னொரு "J" நாயகரைக் களமிறக்குவதெனத்    தீர்மானம் செய்தேன் ! And அந்தப் புதியவர் கூட ஒரு வகையில் நமக்கு பரிச்சயமானவரே !! JASON BRICE  தான் நான் குறிப்பிடும் நாயகர் ! இரண்டாண்டுகளுக்கு முன்பாகவே இவரை நம் அணிவகுப்பினுள் கொணரும் திட்டமிருந்ததும் ; கதைகள் சற்றே முதிர்ந்தோருக்கு ஏற்றார் போல் இருப்பதால் கடைசி நிமிடத்தில் நாம் பின்வாங்கியதும் நினைவிருக்கலாம் ! ஆனால் பௌன்சரைப் பார்த்தான பின்னே - இதெல்லாம் பஞ்சு மிட்டாய்ச் சமாச்சாரம் என்று தோன்றியது ! And இதுவொரு நீண்டு செல்லும் தொடருமல்ல - மொத்தமே மூன்றே ஆல்பங்கள் இதனில் ! நவம்பர் & டிசம்பர் 2016-ல் முதல் இரு ஆல்பங்களையும் வெளியிட்டு விட்டால் - ஜனவரி 2017-ல் final ஆல்பத்தை வெளியிட்டு விட்டால் தொடர்ச்சியாய் இவரது கதைகளைப் படித்த திருப்தி கிடைக்குமே என்று நினைத்தேன் ! So தொலைதூரத்துப் பெல்ஜியத் தென்னையில் படைப்பாளிகளுக்கு மத்தியிலான சலசலப்பானது எங்கோ ஒரு கோடியில் இருக்கும் இந்தப் பனையில் விடிவதை விதி என்றில்லாது வேறேன்னவென்பது ?  Sorry guys - நம் சக்திக்கு மீறிய செயல்கள் எனும்  பொழுது இந்த மாற்றம் தவிர்க்க இயலாததாகிப் போகிறது ! And more than anything else - ஒன்றரை நாள் அவகாசமே எனக்கிருந்த சூழலில் மண்டை இதுக்கு மேல் செயல்படவில்லை ! 

புரிந்து கொள்வீர்களென்ற நம்பிக்கையோடு கிளம்புகிறேன் ! இனி புது இதழ்களைப் பற்றிய உங்கள் எண்ணங்களை அறிந்திடக் காத்திருப்போம் ! Bye for now all !! 

Sunday, November 01, 2015

கனமான தலயும்...."தல" கனமும்..!

நண்பர்களே,

நவம்பரின் வணக்கங்கள் ! உசிலம்பட்டி, ஒட்டன்சத்திரம் - துபாய் என்றெல்லாம் எழுதத் தொடங்கும் முன்பாக இம்மாதத்து இதழ்கள் உங்களை வந்து சேரும் தேதியைப் பற்றிச் சொல்லி விடுகிறேனே...?! இம்மாத இதழ்களின் அணிவகுப்பில் வண்ண இதழ்கள் இரண்டுமே (ஷெல்டன் & சாக வீரர் ரோஜர்) பத்துப்-பதினைந்து நாட்களுக்கு முன்பாகவே தயாராகி விட்டன! தாமதமே இரவுக் கழுகாரின் ‘குண்டு புஸ்கு‘ தீபாவளி மலரினால் தான்! 2013-ன் தீபாவளி இதழ் நாளாசரியாக பைண்டிங் விட்டுப் போய் பக்கங்கள் காற்றில் பறப்பதாகப் புகார் வந்ததைத் தொடர்ந்து இம்முறை அவ்வித அசம்பாவிதங்கள் கூடவே கூடாதென்று தீர்மானித்தோம். So பிரதிகளை முறையாகத் தைத்து அப்புறமாய் ஸ்பெஷல் பெவிகாலைக் கொண்டு ஒட்டி, காய்ந்திட அவகாசம் தந்த பின்பே ஓரங்களை trim பண்ணிட முடிகிறதென்பதால் பைண்டிங்கில் ‘காலில் சுடுநீர் ஊற்றும் படலம்‘ இம்முறை சாத்தியமாகிடவில்லை! நிதானமாய் பணி செய்யட்டுமே என்று விட்டுவிட்டோம் ! ஓரிரு நாட்களின் தாமதம் புத்தகத்தின் ஆயுட்காலத்தை பெரிதும் அதிகரிக்க உதவிடும் என்பதால் இதனை சற்றே பொறுத்துக் கொள்ளக் கோருகிறேன் ! So - வரும் புதனன்று உங்கள் சந்தாப் பிரதிகள் கூரியரில் புறப்படும்! செம புஷ்டியான டப்பாவில் இம்மாதப் பிரதிகள் சவாரி செய்யக் காத்துள்ளன என்பதால் அதை உடைப்பதே ஒரு சாகஸமாக இருக்கப் போகிறது! Sorry for the delay & good luck with the boxes folks!

காத்திருக்கும் டிசம்பரில் தோர்கல், கமான்சே, மாடஸ்டி & வா..வீதி-(3) என்ற பட்டியல் எங்களுக்குப் பணிகளில் பெரும் சுமையைத் தரக்கூடியவைகளல்ல என்பதால் கொஞ்சமாய் 2016-ன் அட்டவணையைப் பற்றிய கற்பனைகளுக்குள் லயித்திட முடிகிறது! ‘மாதந்தோறும் டெக்ஸ்‘ நிஜமாகிடும் நாட்கள் எப்படியிருக்குமென்ற கனவுகளுக்குள் புகுந்திடும் சமயம் வந்ததொரு மின்னஞ்சல் - சிரிப்பதா? அழுவதா? என்ற கேள்வியை எழுப்பியது என்னுள்! மின்னஞ்சலின் தலைப்பு : ‘தலயும்..தலக்கனமும்.!அதனை உங்களுடன் பகிர்வதா-வேண்டாமா? என்ற சிந்தனையோடு படிக்கத் தொடங்க - எனது கருத்துக்கள் மீதொரு சாத்வீகமான (?!!) விவாதத்தை blog-ல் அரங்கேற்ற உங்களுக்கு தைரியமுண்டா?“ என்ற அறைகூவல் வேறு! அசல் தைரியம் இருக்கோ-இல்லியோ - நமக்குத் தான் ‘அசட்டுத் தைரியம்‘ வண்டி லோடுகளில் உண்டெனும் போது  நண்பரின் ஆசையை நிராசையாக்குவானேன் ?மின்னஞ்சலின் துவக்கமும் முடிவும் ரொம்பவே பலத்த பீடிகைகளோடு இருப்பதால் அவற்றை ஓரமாக்கி விட்டு மத்திய பகுதியினை மட்டும் இங்கே தருகிறேன்:
Quote:
தல‘-‘தல‘ என்று ஆளாளுக்கு தூக்கித் திரியும் இந்த மஞ்சள் சட்டை மாவீரரின் சாதனைகள் தான் என்ன சார்?
 • மரியாதை“ என்பது இவரைப் பொறுத்த வரை ‘கிலோ என்ன விலை?‘ தான்யாராகயிருந்தாலும் அடி-உதை-குத்து என்ற ட்ரீட்மெண்ட் அல்லவா?
 • சிக்கும் சந்தில் ஒன்று விடாமல் கார்சனைப் போட்டுப் பிடைத்து எடுப்பது! அந்த தாடிக்கார மனுஷனும், என்னிக்காவது ஒரு நாள் ‘தல‘யின் தலை மீது கல்லைத் தூக்கிக் கடாசாமலா போய்விடுவார்?ஒரு சகாவை போற இடமெல்லாம் இப்படியா அசிங்கப்படுத்துவது ? வறுத்தகறிக்குக் காட்டும் விசுவாசமோ?
 • பெண்களைப் பார்த்தால் தொப்பியைக் கழற்றிட்டு, பவ்யம் காட்டும் ஆசாமி் எந்த ஆணிடம் இது போல் நடந்திருக்கிறார்? ஆண்களிடம் காட்டுவது திமிர்த்தனம் மட்டும் தானே?!
 • எல்லாமே தன் தீர்மானம்; தன் திட்டமிடல் (அப்டீன்னா??) ; தனக்குப் பெயர் வாங்கித் தரும் விதமாய் செயல்கள்! சுயநலத்தின் மறுபெயரே    டெக்ஸ் வில்லரோ?
 • யாராவது படுபயங்கர வில்லனோடு மோதச் சொல்லுங்களேன் பார்ப்போம்? அத்தனை பயலும் தமிழ்; தெலுங்கு சினிமா வில்லன்களையும் விட பாடாவதியான கேஸ்கள்! இவன்களை உதைச்சிட்டு உதார் விடுவது நம்ம ஓமக்குச்சி நரசிம்மனை வடிவேலு பின்னி  எடுப்பதைத் தான் எனக்கு ஞாபகப்படுத்துகிறது!
 • ஏதாச்சும் கொஞ்சமாச்சும் கதையில் ஆழம் இருந்தால் அதற்குள் மனுஷன் காணாமலே போய் விடுவார்! உதாரணம் வல்லவர்கள் வீழ்வதில்லை!ஒரு வெயிட்டான சிச்சுவேஷனில் ‘தல‘ என்ன செய்தார் என்பதைத் தான் பார்த்தோமே? ‘பாட்டி வடை சுட்ட கதை‘ போல லேசான கதையாக இருந்தால் மட்டும் வளைச்சு வளைச்சு சாகஸம் செய்வார்! என்ன ஒரு மொக்கை ஹீரோ ?!!
 • ஐம்பது வருஷம்; அறுபது வருஷம் என்று தொடர் வருவதெல்லாம் கேட்க ‘வெயிட்டா‘ இருக்கிறது தான் ஆனால் இவ்வளவு ஆண்டுகளில் கதை பாணிகளில் ஹீரோவின் ‘அப்ரோச்சில்‘ ஏதாவது முன்னேற்றம் பார்த்திருக்கிறோமா? ஒரு BATMAN 10 வருடங்களுக்குள் எவ்வளவு மாற்றங்களை நமக்குக் காட்டுகிறார்? XIII தொடரில் தான் எவ்வளவு சுறுசுறுப்பு? இந்தாள் இன்று வரைக்கும் அந்த மஞ்சள்; ப்ளு; கறுப்பு யூனிபார்முக்காவது ஓய்வு தருகிறாரா என்று பார்த்தால் no chance! இந்த லட்சணத்தில் கதைகளில், பாணிகளில் மாற்றங்களா? போங்க சார்!
 • ஈகோ“ என்ற வார்த்தைக்கு காமிக்ஸ் அகராதியில் “டெக்ஸ் வில்லர்“ என்று தான் போட்டிருக்கும்! சரி- எல்லா வில்லன்களும் தோற்கப் போகிறார்கள் என்பது தெரிந்த விஷயம் தான்; ஆனால் கொஞ்சமாவது ஹீரோவுக்கு ஈடாக நின்று ஆட வேண்டாமா? ஹீரோவை உச்சாணிக்குத் தூக்கி விட வில்லன்கள் எல்லோருமே உப்பு மூட்டை சுமப்பது தானே ஊரறிந்த ரகசியம்? தன் மகனுக்குக் கூட முக்கியத்துவம் கொடுக்க மனதில்லாதவர் தானே இந்த மஞ்சள் சட்டை மகான்?
 • தல‘ Vs. ‘தளபதி‘ என்று அடிக்கடி அணிகள் பிரிவதும், FB-ல் கலாய்ப்பதும் என்னைக் கேட்டால் வெட்டி வேலை என்பேன் ! நான் டைகரின் பெரிய fan என்றெல்லாம் சொல்லிக் கொள்ள மாட்டேன்; அவரும் கூட ஒரு விதத்தில் ‘கடுப்ஸ்‘ பார்ட்டி தான்! ஆனால் அவரோடு மோதக் கூட லாயக்கு இல்லாதவர் டெக்ஸ் என்பது என் கருத்து!
 • "பாசிட்டிவ் கதை ; படித்தால் வீரம் பொங்குகிறது !" என்றெல்லாம் நிறைய வாசகர்கள் எழுதுவது நானே நிறைய இடங்களில் பார்த்திருக்கிறேன். ஆனால் எவ்வளவு நாள் தான் இதே பல்லவியைப் பாடுவது? கோஷ்டி கோஷ்டியாய் குரல்  கொடுத்து, எல்லாருமாய் சேர்ந்து "வருஷத்திற்கு ஒரு டஜன் புக்" என்று நினைத்ததை சாதித்து விட்டீர்கள... ஆனால் ஒரு XIII தொடருக்கு முன்னால் உங்கள் 650+ கதைகள் கால் தூசுக்குப் பெறுமா? அவர் கதையைப் படித்தால் எவருக்கும் வேகம் வரும் என்பது நிஜமா-இல்லையா? மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் சொல்லுங்கள் பார்ப்போம்எல்லாமே கதை தான்... இதுக்கு ஏன் டென்ஷன் ஆக வேண்டும் ? என்று கேட்கலாம் ஏன் கேட்பீர்கள்! ஆனால் ஒரு கதாபாத்திரத்தை நீங்கள் எல்லோருமாய் தலையில் தூக்கி வைத்து ஆடும் போதும் அது கதை தானே என்பதை எத்தனை பேர் ஞாபகம் வைத்திருக்கிறார்களாம்  ?
 • இன்னும் எவ்வளவோ எழுதலாம் என்று மனசில் சிந்தனைகள் இருந்தாலும் இத்தோடு முடித்து விடுகிறேன்! "டெக்ஸ் வில்லர் நன்றாக விற்கிறார் வாங்குபவர்களுக்கு நன்றாக பிடித்திருக்கிறது " என்றால் போடுங்கள் வியாபார ஆங்கிளில் அதை நான் குற்றம் சொல்ல மாட்டேன் கூடாது. ஆனால் உருப்படியான பல ஹீரோக்களின் இடத்தை தூக்கி மாவீரருக்கு தருவது தான் எரிச்சலாக உள்ளது. 4 ராபின் 4 மர்ம மனிதன் மார்டின் 4 டைலன் டாக் 4 டெக்ஸ் வில்லர் என்று சந்தா B இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? என்னத்த சொல்ல?
 • வாயைத் திறந்து கூப்பாடு போடும் பிள்ளைகளுக்கு தான் எல்லாம் கிடைக்கும் என்பதை புரிந்து கொண்டேன் ! மௌனமாய் என் போல் எத்தனை பேரோ ? அவர்களைப் பற்றி யாருக்கு என்ன வந்தது ? 
Unquote

பின்குறிப்பு‘ என்று போட்டு இன்னும் கொஞ்சம் அர்ச்சனைகள் + அறிவுரைகளோடு மின்னஞ்சல் முடிவுறுகிறது! பற்றாக்குறைக்கு ஒரு குட்டி டெக்ஸ் caricature படமும்!! 

அவ்வப்போது நண்பர்களின் ஆர்வ மிகுதிகள் இது போன்ற வடிகால்கள் காண்பது நிச்சயமாய் நமக்குப் புதிதல்ல! மும்மூர்த்திகள் மறுபதிப்புகள் துவங்கிடும் வரைக்கும் எனக்குக் கிடைத்த சாபங்கள் ஒரு பெரிய கூடை நிறையத் தேறும்! அதே போல கிராபிக் நாவலின் ஆரம்ப நாட்களது அனுபவங்களின் போது மின்னஞ்சல்களிலும், இந்தியத் தபால் துறையின் சகாயத்திலும் நம் திசை நோக்கிப் பார்சலான துடைப்பங்கள் ஏராளம்! அதிலும் ‘க்ரீன் மேனர்‘ வெளிவந்த நாட்களில் ஐயோடா சாமி! So- நண்பரின் இந்த ‘டெக்ஸ் மண்டகப்படி‘ மின்னஞ்சல் பெரியதொரு பூகம்பத்தை நம் பக்கம் ஏற்படுத்தவில்லை! ஆனால் ‘இது மாதிரி அபிப்பிராயம் உள்ள வாசகர்கள் எத்தனை பேரோ? சத்தம் போட்டு டெக்ஸ் வில்லர் ரசிகர்கள் சாதித்துக் கொண்டதால் அவர்கள் வாயை பொத்தி விட்டார்களோ?என்ற கேள்வி தான் லேசான நெருடலாக இருந்தது!

ஒரு கற்பனை வன்மேற்கில் அரங்கேறும் கற்பனைக் கதைகள் தான் சகலமுமே ; அதனைப் படிப்பதிலும்; ரசிப்பதிலும்; துதிப்பதிலும்; தூக்கிப் போடலிலும் யாருடைய நிஜ உலகங்களும் பெரியதாய் மாற்றம் காணப் போவதில்லை என்பதை மின்னஞ்சல் அனுப்பிய நண்பரும் நிச்சயம் அறிந்திருப்பார் தான்! So நமது இரவுக்கழுகாருக்கு நண்பர் தந்துள்ள சாத்து மழையினை வரிக்கு வரி  நான் மறுத்துப்  பேசுவது  பிரதானமாய்த் தோன்றவில்லை ! ஆனால் ‘உரக்கப் பேசுவதால் காரியம் சாதித்துக் கொள்ள முடிகிறது‘ என்ற ரீதியிலான கருத்து மட்டுமே சங்கடத்தை ஏற்படுத்துகிறது! ஒரு சின்ன வட்டம் தான் நமது காமிக்ஸ் வாசகர் கூட்டம்; அதனுள் ஒரு இன்னும் சிறிய வட்டம் தான் சந்தா செலுத்திப் படிக்கும் வட்டம்; அதனுள் இன்னுமும் குட்டியான குழாமே இங்கே பதிவில் உற்சாகமாய் பங்கேற்கும் அணி! மௌனப் பார்வையாளர்களாய் உலவிடும் நண்பர்களே மீதி! இந்நிலையில் இங்கு வேகமாகவோ-மிதமாகவோ சொல்லப்படும் சிந்தனைகளையும் நான் ஈரத்துணியைப் போட்டு அமுக்கி விட்டால் நடக்கப் போவது என்னவாகயிருக்கும்?
 • Feedback என்று ஏதும் இருந்திருக்கா சூழலில் ‘விடாதே-பிடி‘ என்று ஒவ்வொரு யுத்த கிராபிக் நாவலாகத் தேடிப் பிடித்துத் தொடர்ச்சியாய் போட்டுத் தாக்கியிருக்க மாட்டேனா இந்நேரத்துக்கு?
 • அழுகாச்சி காவியங்களை‘ இன்னும் மெருகேற்றுகிறோம் என்று சொல்லி உங்களை வதம் செய்திருப்போமே?
 • தீபாவளி மாதங்களில் ‘பளிச்‘ கதைகளும், அதிரடிக் கதைகளும் இருப்பதே நலம் என்ற உங்கள் அபிப்பிராயங்கள் புகை சமிக்ஞையாய் நம் பக்கம் வராதிருப்பின் தொடரும் தீபாவளிகளை ‘காற்றே....கறுப்பே...அண்டாதே!‘ என்ற கதைகளோடு   ஜமாய்த்திருப்பேனல்லவா?
 • அச்சின் குறைபாடுகள்; மொழியாக்கத்தின் நெருடல்கள்; சில கதைத் தேர்வுகளின் வலுவற்ற மறுபக்கங்கள் என சகலமும் நம் கவனத்துக்கு வருவது உரக்கச் சிந்திக்கும்‘ நண்பர்களின் உபயத்தில் தானே? மின்னஞ்சல்களிலோ ; கடிதங்களிலோ ;  இங்கே பின்னூட்டங்களிலோ ; நேரடிச் சந்திப்பின் சமயங்களிலோ அவர்களது சிந்தனைகளை தெளிவாய்ப் பதிவிடுவது நமக்கொரு உதவி தானே ? அதனொரு பகுதியாய் டெக்சின் "கூடுதல் கோட்டா" வேண்டுகோளும் இருப்பின் - அதை நோவானேன் ? 
 • பௌன்சர்‘ போன்ற கத்தி மேல் நடை போடும் சாகசங்களை வெளியிடுவதற்குண்டான தைரியங்களை தந்திடுவது கூட நண்பர்களின் ஆர்வங்கள் தானே?
 • Yes – I do agree – சில தருணங்களில் நண்பர்களின் கருத்துக்களும், கனவுகளும் நமது ரெகுலர் பாதைகளிலிருந்து சற்றே விலகி நிற்பதும் நடைமுறையே! ஆனால் pooling of thoughts நடந்திடும் வேளைகளில் இவை சகஜமன்றோ?
 • "டெக்ஸ் சந்தாவின்" நிறை-குறைகள் பற்றியோ; "வில்லர்"  என்ற கதாபாத்திரத்தின்  நிறை-குறைகள் பற்றியோ நான் அலட்டிக் கொள்ளப் போவதில்லை! அவ்விஷயங்களைப் பற்றிய ஆராய்ச்சிகளில் என்னை விட நீங்களே கைதேர்ந்தவர்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்! இந்த மின்னஞ்சலை நானிங்கே பகிர்ந்ததன் நோக்கமே ‘வாசகர்களின் பங்களிப்பின்றிச் செல்லும் பயணமானது ரேடாரின்றிச் செல்லும் கப்பலைப் போலாகிடும்‘ என்ற விஷயத்தை வலியுறுத்த மட்டுமே! “எல்லோரும் வாருங்களேன்... ; சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்“ என்று நான் புதியவர்களை நோக்கியும் கோரிக்கைகளை முன்வைத்து வரும் வேளை இது! இந்நிலையில் ஏற்கனவே உள்ள நண்பர்களை அடக்கி வாசிக்கக் கோருவது அபத்தமன்றோ ?  ஒருத்தர் சீனிவெடியாக இருக்கலாம்; ஒருத்தர் ராக்கெட்டாய் இருக்கலாம்; இன்னுமொருவரோ 1000 வாலாவாக இருக்கலாம் மொத்தக் கலவையும் சேர்ந்தால் தானே தீபாவளி களை கட்டும்? அமைதியாய், புஸ்வாணங்களாய் எல்லோரும் இருந்து விட்டால் ‘இது அங்கவை ; இது சங்கவைஎன்று நான்பாட்டுக்கு எதையாச்சும் கொணர்ந்து உங்களுக்கு தலைப்பாகை கட்டிவிடும் ஆபத்து இருந்திருக்காதா ? Your thoughts on the e-mail folks ?
அப்புறம் சமீபத்து caption எழுதும் போட்டிக்கு நிறைய “லூட்டிக்காண்டி“ entries இருந்தபடியால் அவை “லுலாயி போட்டிகளென“ அறிவிக்க வேண்டியதாகிறது! இதோ இங்கேயுள்ள படத்திற்கு உங்கள் கற்பனையிலான டயலாக்குகளை கட்டவிழ்த்துப் பாருங்களேன்? ஆளுக்கு மூன்றே வாய்ப்புகள் மட்டுமே; So அதற்கு மேலாக நோ ரவுண்ட் கட்டிங் ப்ளீஸ்! பரிசு பெறும் entryக்கு மினி-லயனின் ஆரம்ப நாட்களது இதழ்களில் ஒன்று அனுப்பப்படும்!

அப்புறம்  .பெ.டை‘ + நமது 2016-ன் சந்தாப் புதுப்பித்தல்கள் பற்றி! ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் நடந்தேறும் அதே ‘திக்-திக்‘ படலம் தான் இம்முறையும் அரங்கேறி வருகிறது! நெட்டில் சந்தாவை அறிவித்த பிற்பாடு ஒரு மினி வேகம்; விளம்பர booklet கிட்டிய பிற்பாடு ஒரு மித வேகம்; டிசம்பரின் இறுதியில் + ஜனவரியின் பாதி வரை களேபரம் என்பது தான் 2013 முதற்கொண்டு “Operation சந்தாக்களின்“ நிலைமை! இங்கொன்றும் அங்கொன்றுமாய் கிட்டிடும் சந்தாத் தொகைகளை சிந்தாமல், சிதறாமல் பத்திரப்படுத்தி அதனை தொடரும் ஆண்டிற்கெனப் பயன்படுத்திடுவதற்குள் என் மண்டை சஹாராவாகி 'எர்வமடின்' லோடு லோடாய் அவசியப்பட்டுப் போகிறது! சீராய் சந்தாக்களின் புதுப்பித்தல்கள் மட்டும் நடந்து விட்டால் முன்கூட்டியே கதைகளையும், பேப்பர்களையும் வாங்கி ‘ஸ்டாக்‘ வைத்து விடும் எங்கள் கனவு பலித்து விட்டிடும்! கடைசி வாரத்தில் பணத்தை அனுப்பி விட்டு ராத்திரியோடு ராத்திரியாக கதைகளின் ஃபைல்களைக் கோரி மின்னஞ்சல்களால் படைப்பாளிகளின் பிராணனை வாங்குவதை 2016-ல் இருந்தேனும் மாற்றிப் பார்க்க நினைத்தேன்! அதே சமயம் ஓராண்டின் காமிக்சுக்கு  நான்காயிரம் ரூபாயென்பது ஒரு விளையாட்டுத் தொகையல்ல என்பதும் புரிவதால் உங்களை ரொம்பவே நொச்சுப் பிடுங்கவும் சங்கடமாக உள்ளது! பண்டிகை நெருங்கும் வேளைகளில் வீட்டு பட்ஜெட்டோடு நமது காமிக்ஸ் பட்ஜெட்களும் சேர்ந்து உங்களுக்குச் சிரமங்களைத் தருமென்பதும் புரிகிறது So இயன்றளவு துரிதமாய் செயல்படுங்களேன் guys! என்ற கோரிக்கையோடு புறப்படுகிறேன்! 'என் பெயர் டைகரும்' நினைவில் இருக்கட்டுமே - ப்ளீஸ் ? Have a Super Sunday all! மீண்டும் சந்திப்போம்!