நண்பர்களே ,
வணக்கம். மொக்கை போட சும்மா ஒரு வாய்ப்பு கிட்டினாலே மூணு நாளைக்கு 'தம்' கட்டிக் கூத்துக் கட்டுபவனுக்கு, தொக்காய் ஒரு சந்தர்ப்பம் வாய்த்தால் என்னவாகும் ? வேறென்ன ??...நீங்க சட்னி ஆவீங்க...!! இதோ முழியாங்கண்ணனின் (லேட்டஸ்ட்) பயண கட்டுரை நம்பர் 174 !!
எல்லாமே ஆரம்பித்தது நவம்பரின் மத்தியில் ஒரு அனாமதேய வார நாளில் ! நமது மின்னஞ்சலில் - "ஊருக்கு வரத் தோதுப்படுமா ? தோதுப்படாதா ? ஒரு பதிலாச்சும் போடலாமே ?" என்றொரு மெயில் கிடந்தது ! அவ்வப்போது மின்னஞ்சல்களில் - "ஞான் ஆப்பிரிக்காவில் குப்பை கொட்டிய ராசகுமாரரின் பொண்டாட்டியாக்கும் ; எங்க ஊட்டுக்காரர் பொசுக்குன்னு மண்டையைப் போட்டுப்புட்டாப்டி ; ஆனா அவரோட ரகசிய பேங்க் அக்கவுண்டில் ரெண்டாயிரம் கோடி கீது ! அதை உங்க நாட்டுக்கு உன் மூலமா மாற்றல் பண்ண நெனைக்கிறேன் ! டீலா ? நோ டீலா ? டீல்னா உன்ர அக்கவுண்டு விபரங்களை அனுப்பிப் போடு கண்ணு" என்ற ரீதியில் மெயில்கள் வருவதுண்டு ! ஏதாச்சும் பொழுது போகாத நாளாக இருப்பின், எடக்கு மடக்காக நானும் பதில் போட்டு வைப்பேன் ! இந்த நவம்பர் நாளின் இ-மெயில் கூட அந்த ரகம் என்றே எண்ணியபடிக்கு அதனை trash செய்ய முனைந்த போது தான் ஏதோ லைட்டாய் உதைத்தது ! சரி, இன்னா மேட்டர் ? என்று பார்க்கலாமே என்றபடிக்கே மெயிலை ஓபன் பண்ணினால், அதே நபரிடமிருந்து 3 நாட்களுக்கு முன்னே நமக்கொரு மடல் வந்திருப்பதும், அதற்கு பதில் போடாத காரணத்தால் நினைவூட்டலாய் இன்று இதனை அனுப்பியிருக்கிறார் என்பதும் புரிந்தது ! மின்சாரம் தாக்கியவனாய் அரக்கப் பரக்க நமது மெயில் பாக்சில் உள்ள SPAM folder-க்குள் போய் நோட்டமிட்டால், ஆஹா....3 தினங்களுக்கு முன்பான அவரின் ஒரிஜினல் மடல் 'தேமே' என்று கிடப்பது கண்ணில்பட்டது ! அதனை இன்பாக்சுக்கு மாற்றம் செய்து விட்டு மெதுவாய்ப் படிக்க ஆரம்பித்தால் - தலை கால் புரியவில்லை ! 'டேய் ராசப்பா...நான் நான் தானாடா ? நீ நீதானாடா ?' என்ற கவுண்டரின் டயலாக் உள்ளுக்குள் ஓடாத குறை தான் ! மேற்கொண்டும் சஸ்பென்ஸ் வேணாம் என்பதால் மேட்டரை போட்டு உடைக்கிறேன் !
ஆங்குலெம் ! பிரான்சின் தென்மேற்குப் பகுதியில் உள்ளதொரு சிறுநகரம் இது ! அதன் காரண காரியங்களோ ; நதிமூலம்,ரிஷிமூலங்களோ தெரியாது - ஆனால் ரொம்ப ரொம்ப காலமாகவே அங்கே ஆண்டுக்கொரு காமிக்ஸ் விழா ஜனவரி இறுதிவாக்கில் நடப்பதுண்டு ! 50 ஆண்டுகளுக்கு முன்பாய் இங்கு வசித்த கொஞ்சூண்டு காமிக்ஸ் ஆர்வலர்கள் பொழுது போகாத ஒரு தினத்தில், 'இங்கே, நம்மூரிலேயே ஒரு குட்டி காமிக்ஸ் திருவிழா நடத்தினாலென்ன ?' என்று யோசித்தார்களாம் ! சிறுகச் சிறுக காமிக்ஸ் பதிப்பகங்களை இங்கு வரவழைத்து ஸ்டால் போட்டு தங்களது புக்ஸ்களை விற்கவும், ஓரிரு முக்கியமான கதாசிரியர்கள், ஓவியர்களை வரச் செய்து, வாசகர்களோடு கலந்துரையாடச் செய்யவும் அந்தச் சிறு முயற்சி வெற்றி கண்டுள்ளது ! இன்றைக்கு 50 ஆண்டுகளைத் தொட்டு நிற்கும் இந்த முயற்சியானது நம்மூரின் புத்தக விழாக்களை போல ; COMIC CON போல செமையாய் வேரூன்றி நிற்கிறது - பிரெஞ்சு காமிக்ஸ் ரசிகர்களின் கனவு பூமியாய் !பிரெஞ்சு ஓவியர்கள், கதாசிரியர்கள், காமிக்ஸ் வாசகர்கள் என இங்கே சங்கமித்து, காமிக்ஸ் எனும் அபூர்வத்தைக் கொண்டாடுகிறார்கள் ! ஆனால் இத்தனை ஆண்டுகளாய் தெருக்காடெல்லாம் சுற்றியவனுக்கு இங்கே எட்டிப் பார்க்க இதுவரைக்கும் வேளை வாய்த்ததில்லை and எனக்குமே பெரிதாய் ஒரு ஆர்வம் தோன்றியதில்லை ! அதற்குக் காரணங்கள் மூன்று !
முதலாவது : பிராங்கபர்ட் விழாவிலேயே நாம் பார்க்க வேண்டியோரையெல்லாம் பார்த்திருப்போம் எனும் போது ரெண்டு, மூணு மாச இடைவெளியினில் மறுக்கா போய் புதுசாய் என்ன செய்து கிழிக்கப் போகிறோம் ? என்ற எண்ணம் ! தவிர, இது பிராங்கபர்ட் போல முழுக்க முழுக்க தொழில் சார்ந்த விழா என்பதை விடவும், பிரெஞ்சு காமிக்ஸ் உலகின் பிதாமகர்களை வாசகர்கள் நேரில் சந்தித்துக் கொண்டாடும் ஒரு உற்சவம் என்று சொல்லலாம். வண்டி வண்டியாய் குவிந்து கிடக்கும் காமிக்ஸ் ஆல்பங்களை வாங்கிய கையோடு, அங்கேயே, பதிப்பகங்களின் ஸ்டால்களிலேயே, ஓவியர்களை / கதாசிரியர்களைச் சந்தித்து ஆட்டோகிராப் வாங்கிடும் வாய்ப்புக்கு இங்கே பிரெஞ்சு ரசிகர்கள் தவமிருப்பர் ! காரணம் நம்பர் 2 : இது ஒருவித பிரெஞ்சுத் திருவிழா எனும் போது, பாஷை புரியாம நாம போயி பராக்குப் பார்ப்பதைத் தாண்டி, அங்கே என்ன பெருசாய்க் கழட்டிடப் போறோம் ? என்ற நினைப்பு ! And காரணம் # 3 : பல்லெல்லாம் ஆடச் செய்யும் ஜனவரி மாதத்து ஐரோப்பியக் குளிர்காலம் ! பனியோ, குளிரோ நமக்குத் புதுசே அல்ல தான் ; அச்சு இயந்திரங்களை பார்வையிட ஏகப்பட்ட தடவைகள் மைனஸ் பதினைஞ்சு ; -20 என்றெல்லாம் பார்த்தவனுக்கு, குளிர் as such பெருசாய் உதைக்கக் கூடாது தான் ! ஆனாலும் காமிக்சுக்கோசரம் மாத்திரமே குளிருக்குள் ஒரு பயணம் பண்ண, பாக்கெட்டும், மனசும் இசைந்ததில்லை இதுவரையிலுமே !
'சரியப்பா...இந்த பில்டப்பெல்லாம் இப்போ எதுக்கு ? அந்த மின்னஞ்சலில் என்ன தான் இருந்துச்சுன்னு சொல்லித் தொலையலாமே ?' என்கிறீர்களா ? சொல்லிட்டா போச்சு ! The e-mail was as follows :
"ஆங்குலெம் காமிக்ஸ் விழாவின் தலைமை நிர்வாகி நான் ! இந்த வருடம் ஜனவரி 25 முதல் 29 வரையிலும் நமது விழா நடைபெற உள்ளதை நீங்கள் அறிந்திருக்கலாம் ! இது ஆங்குலெமின் 50-வது ஆண்டும் கூட ! இந்தாண்டும் உலகின் பல்வேறு இலக்குகளிலிருந்தும் பிரதானமான காமிக்ஸ் பதிப்பகங்களை எங்களது விருந்தினர்களாய் வரவழைத்து இந்த அனுபவத்தினில் பங்கேற்கச் செய்ய விழைகிறோம் ! And மொத்தம் 10 விருந்தினர்களை வரவேற்கும் விதமாய் ஒரு பட்டியலை தயாரித்த போது, கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாய் பிரெஞ்சு காமிக்ஸ் துறையுடன் கரம்கோர்த்திருக்கும் உங்கள் பெயர் அதனில் பிரதானமாய்ப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது ! ஆகையால் எங்களது அழைப்பை ஏற்று ஜனவரி 24 முதல் ஜனவரி 27 வரையிலும் நீங்கள் ஆங்குலெம் அவசியம் வந்திட வேண்டும் ! பிரெஞ்சு அரசின் சார்பினில் இந்தியாவில் புது டில்லியில் உள்ள எங்களின் தூதரகம் உங்களின் பயண ஏற்பாடுகளை முழுமையாய் ஏற்றுக் கொண்டு விடும். இங்கே பிரெஞ்சு மண்ணில் நீங்கள் கால் பதித்த நொடி முதலாய் உங்களை எங்களது பிரியமான விருந்தாளியாய் நாங்கள் கவனித்துக் கொள்வோம் ! பயண ஏற்பாடுகள் குறித்து டில்லியிலிருந்து இன்னார்-இன்னார் தொடர்பு கொள்வார்கள் ! Please do come !!' என்று அந்த மின்னஞ்சல் பகன்றது ! இப்போ சொல்லுங்களேன் - அந்த "டேய் ராயப்பா...நான் - நான் தானா ?" டயலாக் இங்கே பொருந்துகிறதா - இல்லையா என்று ?
கொஞ்ச நேரம் மண்டை blank ஆக இருந்தது - மெய்யாலுமே இது நம்மைத் தேடி வந்துள்ள கௌரவமே தானா ? என்பதை ஜீரணிக்கத் தடுமாறியதால் ! நிஜத்தைச் சொல்வதானால் இத்தனை காலமான நமது பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலுமே, என்னை ஒரு மிகைப்படுத்தப்பட்ட போஸ்ட்மேனாகவே நான் பார்த்து வந்திருக்கிறேன் ! Trust me - இது அவையடக்கம், ஆட்டுக்குட்டிக்கு அடக்கம் என்ற பீலாவில் சொல்லப்பட்ட வரிகள் அல்ல ! Just the plain truth ! Oh yes - நீங்கள் சிலாகிக்கும் போது உள்ளுக்குள் ஜில்லென்று இருக்கும் தான் ; ஆனால் மொழிபெயர்ப்புக்கோ, தயாரிப்புத் தரத்துக்கோ மட்டுமே ஆன பாராட்டுக்களைத் தாண்டி வேறு எதற்கும் நாம் சொந்தம் கொண்டாட உரிமை லேது என்பதில் எனக்கு ஒரு நாளும் குழப்பங்கள் இருந்ததில்லை ! So பெருசாய் எதையும் சாதித்து விட்டதாக நினைத்துக் கொண்டு திரிய முனைந்ததே இல்லை ! ஆனால் விடா முயற்சிகளுக்கு இத்தனை பெரிய இடத்திலிருந்தும் அரூப அங்கீகாரம் கிட்டியிருக்கும் என்பதை மெது மெதுவாய் மண்டைக்குள் ஏற்றிக் கொண்ட பொழுதினில் ஒரு இனம்புரியா உணர்வு and உங்கள் ஒவ்வொருவரின் நினைப்புகளும் அதே நொடியில் உள்ளாற நிழலாடின ! அடுத்த தினத்தில் என்ன செய்வதென்று தெரிந்திருக்கா குழந்தைப் பையனாய், எங்கோ ஒரு சிறு தொழில் நகரத்து மூலையினில் சுற்றி வந்தவனை, இத்தனை ஆண்டுகளாய் தோள்களில் சுமந்து வரும் உங்கள் ஒவ்வொருவரின் முகங்களும் மனசில் வந்து வந்து போயின ! இந்த அன்பும், ஆதரவும் மட்டும் இல்லையெனில் ஆங்குலெம் என்ன - அதிராமபட்டினத்தில் கூட நம்மைச் சீந்த யார் இருந்திருப்பர் ?
அந்த முதல் நொடியின் ஜிலீர் சற்றே தணிந்த மறு கணமே வேக வேகமாய் அந்த மின்னஞ்சலுக்கு பதில் போட ஆரம்பித்தேன் ! "மேடம்...உங்க மொத மெயில் என்னோட SPAM கூடைக்குப் போயிட்டது ; மறுபடியும் நினைவூட்டி மெயில் போட்டமைக்கு நன்றிகள் ! ஆங்...16 ம் தேதி டெல்லியிலே மாநாடு....20 சேலத்தில் கட்சி மீட்டிங் ! ரொம்ப டெலிகேட் பொசிஷன் ; ஆனாலும் நிச்சயமா ஆங்குலெம் வாரேனுங்க..பஸ்ஸோ அரைபாடி லாரியோ - எதுலே டிக்கெட் போட்டுத் தந்தாலும் வாரேனுங்க...!! " என்று பதில் அனுப்பினேன் ! சற்றைக்கெல்லாம் டில்லி தூதரகத்திலிருந்து நமக்கு ஏற்கனவே பரிச்சயம் இருந்த இளம் நிர்வாகியிடமிருந்து மெயில் ஒன்று வந்தது - "உங்க பெர்சனல் தகவல்களை மீண்டும் ஒருமுறை அனுப்பி வையுங்கள் ப்ளீஸ் ; பாண்டிச்சேரி விசா பிரிவிற்குச் சொல்லி உங்களின் விசாவை அதே தினத்தில், கட்டணங்களின்றி வழங்க ஏற்பாடு செய்கிறோம் !" என்று எழுதியிருந்தார் ! இக்கட இன்னொரு இடைச்செருகல் :
2020 ஜனவரி ! உலகம் கொரோனா எனும் அரக்கனைக் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பரிச்சயம் செய்து கொண்டிருந்த நாட்களவை ! இந்தியாவிலோ, அந்நேரம் வைரசென்றால் வீசம்படி என்னவென்று கூட யாருக்கும் தெரிந்திருக்காது ! அப்போது பிரெஞ்சுத் தூதரகத்திலிருந்து நமக்கொரு மின்னஞ்சல் வந்திருந்தது ! "இந்தாண்டு (அதாவது 2020 ) பாரிசில் நடக்கவுள்ள (பொது) புத்தக விழாவினில் இந்தியாவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி, இந்தியப் படைப்புகளையும், இந்தியப் பதிப்பகங்களை கௌரவிக்க உள்ளனர் ! இந்தியாவின் சார்பில் மொத்தம் 12 பதிப்பகங்களைத் தேர்வு செய்துள்ளோம் ; அவற்றுள் நீங்களும் ஒருவர் ! பாரிஸ் போய் வரும் பயண டிக்கெட் ; தங்குமிடம் - என சகலத்தையும் பார்த்துக் கொள்கிறோம் ; மார்ச் 15 க்குப் பின்னே இன்ன-இன்ன தேதிகளை நீங்கள் இதற்கென ஒதுக்கிக் கொள்ளுங்கள் !" என்று அந்த மெயில் சொன்னது !
அன்றைக்கே அதே 'ராசப்பா ..நீ நீ தானா ? நான்-நான் தானா ?' டயலாக் ரிப்பீட் ஆனது ; இப்போது போலவே அப்போதும் புல்லரித்துப் போய் பதில் போட்டேன் ; and all தயாராகி வந்தது ! But தயாராகி வந்தது கொரோனாவின் சுனாமியும் என்பதை அந்த நொடியில் யாரும் அறிந்திருக்கவில்லை !
வழக்கமாய் நாம் தான் அங்குள்ள பதிப்பகங்களை மெயில் போட்டு காவடி எடுப்பது வாடிக்கை ; ஆனால் இம்முறையோ நிலவரத்தில் சன்னமாய் மாற்றம் இருந்தது ! "இந்தியாவிலிருந்து ஒரு டஜன் முக்கிய(!!) பதிப்பகங்களின் பிரதிநிதிகள் பாரிஸ் புத்தக விழாவிற்கு வருகை தருகின்றனர் ; அவர்களோடு கரம்கோர்க்கும் ஆர்வம் உள்ள பிரெஞ்சுப் பதிப்பகங்கள் நேரடி சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்து கொள்ளலாம்" என அதிகாரபூர்வமான அறிவிப்பு ஒன்றினை விழா அமைப்பாளர்கள் பிரெஞ்சு பதிப்பக சங்கத்தில் வெளியிட்டு வைக்க, ஏகப்பட்ட பிரெஞ்சு நிறுவனங்களிடமிருந்து நமக்கு கோரிக்கைகள் பிரவாகம் எடுக்கத் துவங்கின ! கொஞ்சம் காமிக்ஸ் பதிப்பகங்கள் ; நிறைய சிறுவர் புக்ஸ் பதிப்பகங்கள் - என அந்த லிஸ்ட் இருந்தது ! 1985-ல் நாக்குழற, சங்கோஜத்துடன், பிராங்கபர்ட்டில் ஒரு ஓரமாய் நின்னபடிக்கே, விசிடிங் கார்டை நீட்டிய ஒரு ஒடிசலான பம்பை மண்டையனை நிமிர்ந்து பார்க்கக் கூட நேரமின்றி - "ஜாவ்...ஜாவ்...இந்த வர்ஷம் அப்பாயிண்ட்மெண்ட் ; ஐ-ஆயிண்ட்மெண்ட் எதுவும் நஹி மேன் ; அடுத்த வர்ஷம் வாங்கிட்டு வா..பாப்போம் !' என்று துரத்தியடித்த புஷ்டியான அமெரிக்க அம்மணி தான் அப்போது நினைவுக்கு வந்தார் ! நம்மூரில் மூதறிஞர்கள் திரைக்காவியம்தனில் வடித்த "வாழ்க்கை ஒரு வட்டம் !" என்ற அமர வரியும் மனசில் ஓடியது - moreso becos 38 வருஷங்களுக்கு முன்னே என்னைக் கை தூக்கி விட்டிருந்ததுமே பிரெஞ்சு காமிக்ஸ் தான் ! அன்றைக்கு மட்டும் அன்பாய் மூன்று பதிப்பகங்கள் என்னைத் தாங்கிப் பிடித்திருக்கவில்லையெனில் - இந்தப் பயணம் துவங்கும் முன்னமே மங்களம் கண்டிருக்கும் !
So நம்மிடம் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு வந்த பதிப்பகங்களுக்கு, பெருமாள் கோவில் புளியோதரையை வழங்கும் பாணியில் தயாளத்தோடு நேரம் ஒதுக்கினேன் ! ஆனால்...ஆனால்...இந்த கொடுமைகளெல்லாம் இயற்கைக்கே பொறுக்கவில்லையோ - என்னமோ, பிரான்சிலும் சரி, ஐரோப்பாவிலும் சரி கொரோனா பேய் தாண்டவம் ஆடத் துவங்கியது ! தினமும் நெட்டில் பார்த்துக் கொண்டே இருந்தேன் - இன்னிக்கி எத்தினி கேஸ் அக்கட பதிவாகியுள்ளதென்று ! And ஒரு சுபயோக சுபதினத்தில் அறிவிப்பும் வந்தது - "இல்லீங்கோ ; பாரிஸ் கண்காட்சி ரத்தாகிறது ; அரசு உத்தரவு !" என்று ! 'சர்தான்...இந்த மூஞ்சிக்கி இதுலாம் கொஞ்சம் ஓவர் தான்' என்று அடங்கிப் போனேன், அந்நேரத்துக்கு நமக்குமே லாக்டௌன் இத்யாதி என்ற நோவுகள் துவங்கியதால் ! 2021-ம் வந்தது ; மறுக்கா கொரோனாவுமே சாத்தியெடுத்தது & இம்முறையும் கனவு காணத் துவங்கும் முன்பே உறக்கம் கலைந்து போனது !
Enter 2022 ; கொரோனா கொஞ்சமாய் மட்டுப்பட்டிருக்க, பாரிஸ் திருவிழாவினர் இந்தியப் பதிப்பகங்களை கௌரவித்தே தீருவதென்ற விடாப்பிடி முனைப்பினில் இருந்தனர் ! So இம்முறை ஓமிக்கிரான் வைரஸின் மித வேகத் தாக்குதல்களின் மத்தியில் பயணம் பண்ணிப்புடலாம் என்ற தகிரியத்தில் விசாவிற்கு விண்ணப்பித்தேன் ! எனது செலவுகளை பிரெஞ்சு அரசாங்கம் முழுசாய் பார்த்துக் கொள்வதாக ஏற்பாடு என்பதால், ஜூனியர் எடிட்டரை மட்டும் நம் கம்பெனி செலவில் உடனழைத்துப் போவது என்று தீர்மானித்தேன் ! எனக்கு நெடும் விசாவும், விக்ரமுக்கு ஒரு மாத விசாவும் 'பச்சக்' என்று கிட்டின ! டிக்கெட்டையும் போட்டு ரெடி பண்ணியாச்சு ! ஆனால்...ஆனால்..இம்முறையே பிம்பிலிக்கி பிலாக்கி வேறொரு சிரம ரூபத்தினில் புலர்ந்தது ! ஏற்கனவே நடமாடச் சிரமப்பட்டுக் கொண்டிருந்த அம்மா, இரண்டாவது முறையாக கீழே விழுந்து தொடை எலும்பை முறித்துக் கொள்ள, ஆபெரேஷன் ; இன்னொரு ஆப்பரேஷன் என்றாகிப் போனது ! ரைட்டு...இந்த தபாவுமே வேலைக்கு ஆகாது ! என்றவனாய், பாரிசில் விழா ஏற்பாட்டாளர்களுக்கும் , இங்குள்ள தூதரக நிர்வாகிகளுக்கும் தகவல் சொல்லிவிட்டு பயணத்தை ரத்து செய்தேன் ! ஆனால் அதுகூட நல்லதுக்குத் தானோ என்னவோ - becos பிரான்சில் நாளொன்றுக்கு 5 லட்சம் கேஸ் என்றெல்லாம் ஓமிக்கிரான் அலை ஓடிக்கொண்டிருந்தது ! அதனுள் போய் சிக்கியிருந்தால் வம்பாகிப் போயிருந்திருக்கவும் கூடும் என்பதால் பெரிதாய் மண்டையை பிய்த்துக் கொள்ளவில்லை ! என்ன - டிக்கெட்டை ரத்து செய்த விதத்தில் சுமார் இருபதாயிரம் ரூபாய் பணாலாகிப் போனது தான் சங்கடமே ! Anyways ஒரு விஷயம் நடக்க வேண்டி இருந்தால் அது நடந்திருக்கும் ; ஆம்பூர் பிரியாணி உளுந்தூர்பேட்டை நாய்க்குட்டிக்குக் கிடைக்க விதிக்கப்பட்டிருந்தால் எப்படியேனும் கிடைத்திருக்கும் ! அதே சமயம் - "NO" என்று விதி இருப்பின், தலைகீழாய் நின்றாலும் காரியம் ஆகிடாது என்று செம தத்துவார்த்தமாய் சாக்ரடீசும், அரிஸ்ட்டாட்டிலுமாய், நானும் விக்ரமும், பேசிக் கொண்டோம் !!
Now back again live !! 2022 பாரிஸ் விழாவுக்கென எனக்கு வழங்கியிருந்த விசா இன்னமுமே காலாவதியாகாது இருந்ததால், இன்னொருமுறை விசாவுக்கென படிவங்களை பூர்த்தி செய்ய தேவை இராதென்று டில்லிக்கு சொன்னேன் ! 'அட...வேலை இன்னும் லேசு' என்றபடிக்கே ஜனவரி 23-ம் தேதிக்கு சென்னையிலிருந்து துபாய் வழியாக பாரிஸ் செல்லும் டிக்கெட்டை போட்டு அனுப்பினர் ! ரிட்டர்ன் 27 இரவு கிளம்பி இக்கட 28 இரவு ! "ஓசியில் டிக்கெட்" என்பது எனக்கு இதற்கு முன்பாய் வாழ்க்கையில் ஒரோவொருவாட்டி தான் குதிர்ந்திருந்தது ! சிவகாசியில் ஒரு பெரும் அச்சக முதலாளியின் மகனுக்கு அமெரிக்க தலைநகரில் ஒரு அச்சு இயந்திரத்தைக் காட்ட வேண்டியிருந்தது ! அவரோ ராஜா வீட்டு கண்ணுக்குட்டி ; பிசினஸ் க்ளாசில் வாஷிங்க்டனுக்கு டிக்கெட்டை போட்டு வைத்திருந்தார் ! And surprise ....அவர்களது அலுவலகத்தினரிடம் சொல்லி, என் டிக்கெட்டையுமே அவர்கள் செலவிலேயே போடச் சொல்லியிருந்தார் ! முதலாளிக்குப் போட்டது போலவே இன்னொரு பிசினஸ் க்ளாஸ் டிக்கெட் போட அவர்கள் தயாராகிக் கொண்டிருந்த போது, "ஐயோ...சாமி...காசு உங்களதாக இருந்தாலுமே, இந்த ஆடம்பரம் நமக்குத் தேவையே இல்லாததொன்று ! ஒரு ஓரமாய் புட்போர்டில் தொங்கிக்கொண்டே வர ஏதாச்சும் டிக்கெட் இருந்தாலுமே அது ஓ.கே.தான் என்று எக்கனாமி டிக்கெட்டில் பயணித்திருந்தேன் ! அந்த நினைவு தான் வந்தது - பிரெஞ்சு அரசாங்கத்தின் அன்புடன் வந்த டிக்கெட்டைப் பார்த்த நொடியில் !
மறு நாளோ - ஆங்குலெம் அமைப்பாளர்களின் டிராவல் ஏஜென்சியிலிருந்து பாரிஸ் to ஆங்குலெம் ரயில் பயணத்துக்கான up & down முதல் வகுப்பு டிக்கெட்ஸ் மெயிலில் வந்து விழுந்தன ! இதெல்லாம் போதாதென்று இன்னொரு மின்னஞ்சல் - "VIP விருந்தினரான நீங்கள் தங்க தோதான ஹோட்டல்கள் ஆங்குலெம் கிராமத்தில் இல்லாத காரணத்தால், 10 பேர் கொண்ட உங்கள் குழுவிற்கு 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோனியாக் (Cognac) நகரில் ஒரு 5 நட்சத்திர விடுதியில் அறைகள் ஏற்பாடு செய்துள்ளோம் ! இது தான் ஹோட்டல் விபரங்கள் !" என்று அறிவித்தது ! "சின்னத்தம்பி" படத்தில் மாலைக்கண்ணு வந்த சமையல்காரன் வேஷத்தில் கலக்கிய கவுண்டர் சொல்லுவாரே - "அம்பது ரூவா காசு கிடைக்கும்னா நாள் முழுக்க அடுப்படியில் கிடக்கிற நான் வெள்ளைக்கார பட்லர் பரம்பரையா ?" என்று ; ......அந்த டயலாக் தான் நினைவுக்கு வந்தது ! ஒற்றை புது தொடருக்கு உரிமைகள் கிடைக்குமெனில், 'பாரத் ஜோடோ' யாத்திரைக்குப் போட்டியாய் காஷ்மீர் வரைக்கும் நடந்தே போகத் தயாராகவிருக்கும் இந்த பேமானிக்கு திடு திடுப்பென அம்பானி ட்ரீட்மென்ட் கிட்டினால் மலைக்காது என்ன தான் பண்ணத் தோணும் ? எல்லாமே ஒரு கனவாய் ; யாருக்கோ நடக்கும் மருவாதிகளாய் தோன்றத் துவங்க - சகலத்தையும் வேடிக்கை மட்டுமே பார்த்து வந்தேன் ! உள்ளுக்குள்ளோ ஒரு குறளியோ - "வாய்ப்பில்ல ராஜா...இந்த தபாவும் நீ எப்படியும் போகப் போறதில்லே ! எதுக்கு வீணா ஜொள்ளு விட்டுக்கிணு ? போ...போயி ஆகிற பொழப்ப பாரு !" என்று மட்டும் கடுப்படித்துக் கொண்டே இருந்தது ! டிக்கெட்..hotel ஏற்பாடுகள் - என சகலமும் கொஞ்ச காலம் முன்னேயே ரெடியாகியிருப்பினும், என் ஓட்டைவாயை மூடி வைத்திருப்பதும் ஒரு செம பிரயத்தனமாய் இருந்து வந்தது ! "ஹைய்யோ...இப்போ நான் ஆருக்காச்சும் ஒரு கருத்து சொல்லணுமே ? ஏதாச்சும் ஒரு விளக்கத்தை பூலோகத்துக்கு சொல்லியே தீரணுமே ?!" என்ற நமைச்சல், எங்கள் வீட்டுக்குப் பக்கமாய் மேய்ச்சலுக்கு வரும் மாடுகளைப் பார்க்கும் சமயத்தில் கூடத் தோன்ற ஆரம்பித்தது !
சென்னைப் புத்தக விழாவில் சந்திக்கும் நண்பர்களிடமோ, அல்லது இங்கே நமது பிளாக்கிலோ உளறிக்கொட்டிப்புடப்படாதே - என்ற பயம் உள்ளுக்குள் உடுக்கடித்துக் கொண்டிருந்தது ! பொங்கலும் வந்து போக, சென்னை புத்தக விழாவின் அதிரடிகளும் உரம் சேர்க்க ; பயணம் புறப்பட வேண்டிய ஜனவரி 23 - கூப்பிடு தொலைவில் நெருங்கியிருந்தது ! 'அட...சீனாவிலிருந்து இன்னமும் புச்சாய் ஏதாச்சும் கரடி கிளம்பலியா ? வேறு ஏதாச்சும் நோவு...நொடிக்கு மஞ்சள் மனிதர்கள் அஸ்திவாரம் போடலியா ?' என்ற ரேஞ்சுக்கு நெதமும் நியூஸைப் பார்க்கும் நிலையிலிருந்தேன் அந்நேரத்துக்கு ! பிரிட்ஜில் இருந்த பப்பாளிப் பழத்தை ரெண்டு கவளம் உள்ளே தள்ளும் போதே - 'ஆத்தீ...சளிப்புடிச்சாக்கா கொரோனான்னு சொல்லி உட்கார போட்டுப்புடுவாங்களே ?' என்ற பயம் மேலோங்க....அந்த ராவுக்கே இஞ்சிக் கஷாயம் போடச் சொல்லி மாடு கழனித்தண்ணியைக் குடிச்சா மெரி, அரை லிட்டரைக் குடித்த கையோடு, காப்படி மிளகையும், கிராம்பையும் அரைத்துத் தள்ளி வைத்தேன் ! ஒட்டு மொத்த காட்டமும் கரம்கோர்த்து ஆப்படிக்க, அடுத்த 6 மணி நேரங்களை பாத்ரூமுக்குள்ளேயே செலவிட நேர்ந்த போது - 'மிடிலே....என்னால ஒரு பிரமுகரா (!!!!) இருக்க மிடிலே !' என்று புலம்பவே தோன்றியது !
வீட்டுக்குள்ளேயோ, ஒரு வித பயம் கலந்த குஷியில், BATMAN கதையில் வரும் ஜோக்கரைப் போல வெளுத்துப் போன முகரையில் ஒரு புன்னகையோடே சுற்றித் திரிய - "லூசு ஏதோவொரு கிராபிக் நாவலுக்கு translation பண்ணித்திரியுது போலும் !" என்று ஆத்துக்காரம்மா ஒதுங்கி இருக்கணும் ! இதற்கெல்லாம் இடையே எனக்கிருந்த ஆகப் பெரும் சவாலே - பிப்ரவரியின் பணிகளை இங்கே பூர்த்தி செய்து தந்திட வேண்டுமென்பதே ! நான்பாட்டுக்கு திங்கள் கிளம்பிப் போய், ஞாயிறு வரை மட்டம் போட நேர்ந்தால் - புக்ஸ் பீப்பீ ஊதிடுமே என்ற பயம் சேர்ந்து கொண்டது ! டெக்ஸ் 220+ பக்கங்களில் மிரட்ட, பிளூகோட்ஸ் எடிட்டிங் ; V காமிக்ஸ் மொழியாக்கம் என ஜனவரி 21-ம் தேதி வரைக்குமே பெண்டு கழன்றிட, "கிராபிக் நாவலை மட்டும் கையிலே கொண்டு போறோம் ; அங்கே ஈயோட்டக் கிடைக்கும் வாய்ப்பில் எழுதி, எழுதி வாட்சப் பண்றோம்" என்று தீர்மானித்துக் கொண்டேன் !
இதற்கு மத்தியில் - "ROADMAP FOR THE V.I.P Guests" என்றொரு pdf file மெயிலில் வந்திருந்தது ! "பாரிசில் தரையிறங்கிய பிற்பாடு ஆங்குலெம் ரயிலைப் பிடிக்க Montparnasse ரயில்நிலையத்துக்கு சென்று விடுங்கள் ; அங்கிருந்து இந்த ரயிலைப் பிடித்து ஆங்குலெம் வந்து விட்டால் - உங்கள் பெயர் பொறித்த பதாகையோடு நானே காத்திருப்பேன் !" என்று எழுதியிருந்தது ! பொதுவாகவே அச்சு இயந்திரங்களை பார்வையிட ஐரோப்பிய / அமெரிக்கத் தெருக்காடுகளில் அலைந்திடும் போது அங்குள்ள சப்லையர்கள் பெருசாய் மெனெக்கெடுவதெல்லாம் இல்லை ! 'உனக்குத் தான் ஊர் தெரியும்லே ; இந்த விலாசத்தில் மிஷின் இருக்கு ; போய்ப் பார்த்துக்கோ !' என்று கையைக் காட்டி விட்டு ஒதுங்கிக் கொள்வார்கள் ! ரயிலிலோ ; பஸ்ஸிலோ ; விமானத்திலோ ; அட, ஒருவாட்டி ஆஸ்திரியாவில், வியன்னா நகரின் புறநகர்ப்பகுதியில் சைக்கிளில் கூட சவாரி செய்து போயுள்ளேன் மிஷின்களைத் தேடிப் பிடிக்க ! So நம்மை வரவேற்க அங்கங்கே நாதிகளே இருப்பதில்லை ! ஆனால் இம்முறையோ தலைமை நிர்வாகியே போர்டு பிடித்து நிற்பேன் என்று சொன்னதை வாசித்த போது வயிற்றைக் கலக்கியது ! பற்றாக்குறைக்கு அந்த pdf குறிப்பை வாசிக்க வாசிக்க 'டர்' கூடிக்கொண்டே சென்றது ! 'தினமும் காலை ; மாலை - 2 வேளைகளிலும் உங்களை அழைத்துப் போகவும், திரும்ப ஹோட்டலில் கொண்டு வந்து சேர்க்கவும் எங்களது அமைப்பைச் சார்ந்த கார்கள் காத்திருக்கும் ! உங்களுக்குத் தரப்படும் wristband-களில் உள்ள நம்பரைக் கூப்பிட்டு வண்டிக்கு ஆர்டர் செய்தால் தேவைப்படும் போதெல்லாம் பிரத்யேக கார் வந்திடும் ! அப்புறம் புதன் இரவு ஹோட்டலில் முக்கிய பதிப்பகத் தலைவர்களும், T.V. புரட்யூசர்களும் பங்கேற்கும் ஒரு டின்னரில் நீங்கள் அவசியம் கலந்து கொண்டாகணும் ! வியாழன் மாலை - ஆங்குலெம் அரங்கிலே ஒரு cocktail பார்ட்டி உண்டு !" என்று அடுக்கிக் கொண்டே போனது !
படிக்கப் படிக்க எனக்கு வியர்க்க ஆரம்பித்தது ! பார்ட்டி...cocktail என்பனவெல்லாம் வீசம்படி எவ்வளவு ? என்று கேட்கும் தலைமுறையைச் சேர்ந்தவனுக்கு இவையெல்லாம் எங்கே ரசிக்கப் போகிறது ? ஆனால் மறுக்கக் கூடியதொரு இடத்திலிருந்தா அழைப்பு வந்திருக்கிறது - 'போலாமா ? வேணாமா ? என்றெல்லாம் யோசிக்க ? ரைட்டு...ஆக வேண்டியதை பார்ப்போம் என்றபடிக்கே மண்டையை சொரிய ஆரம்பித்தவனுக்கு - 'பார்ட்டி என்றால் கோட் தேவையாச்சே ?! 30 வருஷத்துக்கு முன்னே கண்ணாலத்துக்கோசரம் வாங்கிய கோட்டுக்குள்ளாற இப்போ பாதி உடம்பு மட்டும் தானே நுழையும் - மீதத்தை என்னா பண்றது ? என்ற யோசனை பிடித்தது ! 'அமேசானில் ஆர்டர் போட்டால் ஜிலோன்னு வந்திடுமே' என்று ஜூனியர் யோசனை சொல்ல, ஒரு பாதி இரவுக்கு அமேசானில் உருட்டினேன் ! விலை சல்லிசாய் இருந்தவற்றுள் ஆர்டர் செய்தால், ஊட்டியில் குதிரை சவாரிக்கு நம்மளை கூட்டிட்டுப் போக வாய்ப்புகள் பிரகாசம் என்று தோன்றியது ! நன்றாக இருப்பவற்றின் விலைகளைப் பார்த்தாலோ - 'இருக்கிற பழைய கோட்டையே தூசு தட்டி, ஏதாச்சும் லைனிங் பிரிச்சு போட்டுக்குறேனே ?' என்று நினைக்கச் செய்தன ! இதற்கு மத்தியில் பீரோவை உருட்டிய ஆத்துக்காரம்மா ஒரு கோட்டை முன்னே நீட்ட - அட, இது சேருமே என்றுபட்டது !! ஒன்று - நடுவாக்கில் எப்போதோ ; எதற்கோ இதனை நான் வாங்கியிருந்திருக்க வேணும் ; அல்லாங்காட்டி ட்ரைக்ளீனிங் புண்ணியவான்கள், ஏதோவொரு மவராசனின் கோட்டை தப்பிதமாய் என்னிடம் தந்திருக்க வேண்டும் ! ரைட்டு...இப்போதைக்குப் பிரச்சனை தீர்ந்தது என்ற கதையாய் அதை பத்திரமாய் பெட்டிக்குள் வைத்துக் கொண்ட நொடியிலேயே - 'ஆஹா...கோட்டுக்கு டை கட்டணுமே ; அதெல்லாம் மறந்து போய் ஒரு மாமாங்கம் ஆச்சே ?!' என்று உதைத்தது ! அப்புறமென்ன, "யூ-டியூபை பார்த்து டை கட்ட படிச்சி, அந்த முடிச்சை சரியா போட்டு, ரெடியா உள்ளாற வைச்சிடும்மா ; நான் அங்கனே போயி அப்டியே கழுத்து வழியா போட்டுக்கினு அந்த முடிச்சை மட்டும் இறுக்கிக்கிறேன் !" என்று சொல்லி விட்டு போய் மட்டையாகி விட்டேன் ! எத்தனை முடிச்சுகள் கொண்ட knot என்றெல்லாம் தெரியாது ; ஆனால் காலையில் பார்த்தால் ஒரு பளீர் சிகப்பு டை சும்மா அம்சமாய் ரெடியாய் இருந்தது ! 'டாங் யூ !' என்றபடிக்கே அதையும் பெட்டிக்குள் அடக்கிக் கொண்டு தேதியைப் பார்த்தால் - ஜனவரி 23 - திங்கட்கிழமை ! இன்னமும் கொரோனாவின் சித்தப்பாரு வைரஸோ ; பெரியம்மா புள்ளை வைரஸோ புதுசாய்க் கிளம்பியிருக்கவில்லை ; அமெரிக்காவின் வானுயர கட்டிடங்களுக்குள் புண்ணியவான் எவனும் பிளைட்டைச் செருகி இருக்கவில்லை ; அட, இன்னமும் பூமி அதே தினுசில் தான் மாற்றங்களின்றிச் சுழன்று கொண்டிருந்தது and மெய்யாலுமே ஊருக்கு கிளம்பிட all is ready என்பது புரிந்தது ! மறுக்கா கவுண்டரின் 'டேய்..ராசப்பா' டயலாக் மண்டைக்குள் ஓட, மதுரைக்குப் புறப்பட்டேன் - சென்னை விமானத்தைப் பிடித்து பாரிஸ் பயணத்தினை மேற்கொள்ள !!
2 மாதங்களுக்கு முன்னே பிராங்கபர்ட் சென்ற வேளையினில் செய்த அதே routine-களே இம்முறையும் என்ற போது ஒருவித deja vu பீலிங்கு ! சென்னையில் கிட்டத்தட்ட 5 மணி நேர தேவுடு காத்தல் என்ற போது அது தான் பெரிய கடியாக இருந்தது ! சோம்பி அமர்ந்திருந்த வேளையில் கிராபிக் நாவலுக்கு பேனா பிடிக்கலாமே ? என்று தோன்றினாலும் வண்டி ஸெல்ப் எடுக்க மறுத்தது ! ஒரு மாதிரியாய் எமிரேட்ஸ் விமானத்துக்கான செக்கின் துவங்கிய போது முதல் ஆளாய் போய் நிற்க, துபாய்க்கும் ; அங்கே 2 மணி நேர இடைவெளிக்கப்பால் பாரிஸுக்குமான விமானங்களுக்கான போர்டிங் பாஸை கையில் தந்தார்கள் ! போனவாட்டி அபு தாபி வழியாய் பயணம் ; பிளேனிலும் நடு சீட் ; கையைக் காலை நீட்ட இடமே போறலை ! ஆனால் இதுவோ கோடீஸ்வர பூமியின் பிரதான carrier என்பதால் நல்ல வசதி ! பற்றாக்குறைக்கு பிரெஞ்சு அரசு டிக்கெட் போட்டுத் தந்திருந்தது Premium Economy என்றொரு வகுப்பில் என்பதால் மாமூலை விடவும் ஒரு மிடறு வசதி தூக்கல் ! இரவு பத்து மணிக்குக் கிளம்பிய விமானம், நாலரை மணி நேரங்களில் துபாயில் இறக்கி விட்ட போது, உறக்கம் அப்பி நின்ற கண்களை மலங்க மலங்கத் தேய்த்தபடிக்கே கீழே இறங்கினால் அங்கே ஏர்போர்ட்டே ஜெகஜோதியாய் காட்சி தந்தது ! ஆளாளுக்கு ஷாப்பிங் ; ஈட்டிங் ; ட்ரிங்கிங் என்று ஏதோவொரு "ங்கிங்'-ல் செம பிஸியாய் இருந்தனர் ! எனக்கோ, 'நம்மூரில் இந்நேரத்துக்கு மணி 2 ! ஒரு ஓரமா எங்கயாச்சும் கட்டையைக் கிடத்த முடிஞ்சா போதுமே !!' என்றிருந்தது !
எனது அடுத்த விமானம் கிளம்பவிருந்த கேட் எங்கிருக்கிறதென்று தேடினால் - நம்ம ராசிக்கு அது பூமியின் கடைசியில் இருப்பது போல, கட்டக்கடைசி கேட்டாக இருந்தது ! மெதுவாக நடந்து போனவரின் கண்களில் ஒரு குட்டி ஸ்டால் தென்பட்டது - "Neck மசாஜ் ; Back மசாஜ்" என்ற போர்டுடன் ! ரெண்டு சேர்கள் ; அதனில் அமர்ந்து கொண்டால் கழுத்தையோ, முதுகையோ பிடித்து விட 15 நிமிடங்களுக்கு இவ்வளவு ; 30 நிமிடங்களுக்கு இவ்வளவு - என்று அமீரக கரென்சியான திர்ஹமில் குறிப்பிடப்பட்டிருந்தது ! அட, கிளம்பும் முன்னே கழுத்து பிடிச்சிருந்துச்சே ; ஒருக்கா மசாஜ் பண்ணிக்கலாமே ?' என்று சபலம் தட்ட, நின்று அந்த போர்டை வாசித்தேன் ! 155 திர்ஹம் என்றிருந்தது 15 நிமிடங்களுக்கு ! அக்கட நின்ற சீன அம்மணி..புன்னகையோடு வரவேற்றார் ! ஆனால் அந்த அரை உறக்க ராப்பொழுதிலும் நம்மூரில் கணக்கு-வழக்குகள் மறந்திருக்கவில்லை ! வேகமாய் போனை எடுத்து அந்த தொகை நம்மூர் பணத்தில் எவ்வளவென்று பார்த்தேன் - தூக்கிவாரிப் போடாத குறையாய் ரூ.3450 என்றது ! 'அடேய் அப்ரசிட்டிகளா..15 நிமிஷத்துக்கு இந்தக் கொள்ளையா ? எங்க ஊரிலே இதே காசை தந்தாக்கா, பத்து நாட்களுக்கு எங்க physiotherapist கிட்டே மிஷினிலே பிரமாதமா ட்ரீட்மெண்ட் கிடைக்குமே !" என்றபடிக்கே "No ..நோ...I come later !!" என்றபடிக்கே ஓட்டம் பிடித்தேன் ! கொஞ்ச நேர உலாற்றலுக்குப் பின்பாய் அடுத்த விமானமும் கிளம்பத் தயாரான போது தான் தெரிந்தது காத்திருந்தது AirBus 380-800 ரக விமானமென்று !
ஒரு நூறு நீர்யானைகளை அணிவகுத்து நிற்கும் நீளத்தையும், விசாலத்தையும் விட இந்த ராட்சச விமானம் அதி மிரட்டலாய் நின்று கொண்டிருந்தது ! ஏற்கனவே இந்த ரக விமானத்தில் பயணம் செய்துள்ளேன் தான் ; ஆனால் இது செம புதுசு போலும் ! உள்ளுக்குள் ஒவ்வொரு அங்குலமும் மின்னியது ! மாடிப்படியேறி மேலே போனார்கள் சில 'மேன்மக்கள்' - business class & first class இருக்கைகளைத் தேடி ! In fact அவர்களுக்கு மேல் மாடியில் தனித்தனி அறைகள் ; பாத்ரூம் & படுக்கை வசதிகளோடும் உண்டென்பது தெரியும் ! சரி, எந்த பேங்க்கில் கடனை வாங்கி ஆட்டையைப் போட்டு வரும் புண்ணியவான்களோ இவர்கள் ? எந்த தேசத்துக்கு என்னிக்கு ஓடப்போகிறார்களோ ? என்ற யோசனையோடே எனது சீட்டுக்குப் போய் அமர்ந்தேன் ! அத்தனை கூட்டமில்லை ; எனக்கு 5 வரிசைகளுக்குப் பின்னிருந்த row-ல் ஒரேயொரு ஆசாமி மட்டுமிருக்க, விமானம் கிளம்பிய சற்றைக்கெல்லாம் ஆராமாய் நீட்டிப் படுத்து விட்டார் ! எனக்கு முன்னிருந்த வரிசையிலும் ஆள் நஹி ; அதற்கு மாறிடலாமா ? என்ற யோசனையில், ஏர்-ஹோஸ்டஸ் அம்மணியிடம் கேட்ட போது - "அவை Paid Seats சார் ; கூடுதலாய் ரூ.7999 தந்தால் அதனில் அமரலாம்' என்றார் ! 'இல்லீங்க சிஷ்டர்...எனக்கு அந்த நம்பர் ராசியே இல்லாதது ; கொட்ட வேண்டிய குப்பையை இங்கேயே கொட்டிப்புடறேன் !' என்று சடுதியில் ஜகா வாங்கினேன் ! Subtitles சகிதம் ஓடிய ஒன்னரை மலையாளப் படமும், உட்கார்ந்தபடியிலான உறக்கமுமாய், அந்த இரவை நகர்த்தி முடித்த போது காலை எட்டு மணி உள்ளூர் நேரத்துக்கு அந்த மொக்கைச்சாமி பிளைட்டை காகிதப் பிளேனாட்டம் விமானி தரையிறக்கியிருந்தார் ! 'Welcome to Paris ...வெளியே உள்ள டெம்பெரேச்சர் மைனஸ் ரெண்டு டிக்ரீ ' என்று அவர் அறிவிக்கும் முன்பாகவே, விமானத்தின் பயணிகள் அத்தனை பேரும் பேங்கைக் கொள்ளையடிக்கத் தயாராகி வருபவர்களைப் போல தலைக்கு குல்லாய் ; கண்ணும், மூக்கும் நீங்கலாய் பாக்கி சகலத்தையும் மொத்தமாய்ப் போர்த்தும் உடுப்புகளுக்குள் புகுந்திருந்தனர் ! 'அடங்கப்பா' என்றபடிக்கே நானும் அதே கூத்தினைச் செய்த கையோடு பாஸ்போர்ட் பரிசோதனை க்யூவில் போய் இணைந்து கொண்டேன் !
வழக்கமாய் 'உங்க பயண நோக்கம் என்னாங்கோ ?' என்று சம்பிரதாயத்துக்குக் கேட்பதுண்டு ! இம்முறையும் கேட்பார்கள் ; "ஆங்...You see ...நான் அரசாங்க விருந்தினனாய் வந்திருக்கேன் - பாருங்க !" என்று உலக நாயகனின் மாடுலேஷனில் டயலாக் பேசி விட்டு, கையிலிருந்த அழைப்பிதழின் நகலை இஷ்டைலாய்க் காட்டத் தயாராக இருந்தேன் ! ஆனால் உள்ளே அமர்ந்திருந்த தம்பியோ - என்னை ஒருவாட்டி ஏற இறங்க மட்டும் பார்த்துவிட்டு, சபக்கென்று பாஸ்போர்ட்டில் சாப்பாவை குத்தித் தந்தது ! "போச்சா..? போச்சா...? இந்த வாய்ப்பும் போச்சா சோணமுத்தா ?" என்றபடிக்கே பெட்டியைத் தேடிப் போனேன் ! ஜல்தியாய் அதுவும் வந்து சேர, அடுத்து என்ன செய்வதென்று தெரியலை - becos ஆங்குலெம் செல்லும் எனது ரயில் மதியம் 2 மணிக்குத் தான் ! ஏர்போர்ட்டிலிருந்து அந்த ரயில்நிலையத்துக்குப் போக ஒரு 45 நிமிடங்கள் ஆகுமென்றாலுமே அதன் பிறகும் 4 மணி நேரங்கள் free தான் ! ஊருக்குள் எங்கேனும் போவதென்றாலோ ; பாரிசில் உள்ள நமது நண்பர்களைக் குடலை உருவுவதென்றாலோ - குளிக்காமல் கொள்ளாமல் ரணகொடூரமாய் போய் நிற்க ரசிக்கவில்லை ! So கொஞ்ச நேரம் ஏர்போர்ட்டில் குப்பை கொட்டி விட்டு ரயில் நிலையத்துக்குப் புறப்பட்டேன் ! குளிர் தான் போட்டுத் தாக்கியது ! இது போலான கிளைமேட்டை அனுபவித்து ஐந்தாறு ஆண்டுகள் இருக்கக்கூடும் ; 'இயமை ஊஞ்சல் ஆடிக்கினே' இருக்கும் இந்த வயசில், 6 வருஷங்களுக்கு முன்பான 'தம்' என்பது ஏதோ ஒரு போன யுகத்து சமாச்சாரம் போல தென்பட்டதில் ஏது வியப்பு ? ஒரு கட்டத்திலெல்லாம் பல்லெல்லாம் ஆட ஆரம்பிக்க, 1 யூரோ காசு தந்து டாய்லெட்டுக்குப் போனவன், அங்கிருந்த கதகதப்பிலேயே இன்னும் கொஞ்ச நேரத்தை ஓட்டினாலும் தேவலாமே என்று நினைக்கும் அளவுக்குப் போயிருந்தேன் ! ஆனால் அங்கிருந்த அம்மணியோ என்னை ஏதோ தீவிரவாதி ரேஞ்சுக்கு பார்வையிட, இது எதுக்குடா வம்பு என்றபடிக்கே பிளாட்பாரமுக்கு சென்று காத்திருந்தேன் ! சற்றைக்கெல்லாம் TGV எனும் அந்த அதி விரைவு டிரெயினும் வந்து சேர, கெத்தாய் முதல் வகுப்புப் பெட்டியில் ஏறினேன் ! கூட்டம் ஜாஸ்தியில்லை ; குளிரும் நடுக்கக் காணோம் ; சும்மா பிய்த்துப் பிடுங்கி கிளம்பிய ரயில், கொஞ்ச நேரத்தில் மணிக்கு 295 கி.மீ.ஸ்பீடில் ஆங்குலெம் நோக்கி பயணிக்க ஆரம்பித்தது ! கசக்கிக் கிடந்த சட்டையினை மேலே அணிந்திருந்த ஸ்வெட்டர் நல்ல காலத்துக்கு மறைத்திருந்தது ! 'பிரமுகரை வரச் சொல்லியிருந்தோம் ; ஒரு பேமானி வந்து சேர்ந்திருக்கானே ?' என்று அவர்களுக்கு நெஞ்சு அடைத்திடக்கூடாதல்லவா ? So ரயிலிலேயே முடிந்தமட்டுக்கு மண்டையைக் கிண்டையை சரி செய்து கொண்டு, நம்ம அழகுக்கு மேற்கொண்டு அழகூட்டி ஆங்குலெமில் நான் இறங்கிய போது மணி மாலை நாலரை !
பிரான்சில் ஏகமாய் ஷண்டிங் அடித்த அனுபவம் எனக்கு உண்டு ; in fact நாங்கள் தங்கவிருந்த கோனியாக் ஊருக்கு ஏற்கனவே போகவும் செய்திருந்தேன் ! Typical சிறுநகர பிரெஞ்சு ரயில்வே ஸ்டேஷன்கள் எவ்விதமிருக்குமோ, அதன்படியே அட்சரசுத்தமாய் ஆங்குலெமும் இருந்தது - சின்னதொரு வேறுபாட்டோடு ! திரும்பிய திக்கிலெல்லாம் காமிக்ஸ் நாயகர்களின் போஸ்டர்கள் ; உருவங்கள் ! அட..ஸ்டேஷனின் கூரையில் கூட ஸ்டைலாக ஒரு காமிக்ஸ் ஹீரோ பொம்மை மல்லாந்து கிடந்தது ! மலர்ந்த முகத்தோடு ஒரு 35 வயதுக்குட்பட்ட பெண்மணியும், உடன் ஒரு நபரும், வைத்திருந்த போர்டுகளை வாசிக்கக் கூட அவசியமின்றியே அடையாளம் தெரிந்திருந்தேன் - இவர் தான் தலைமை நிர்வாகி என்று ! ரொம்ப ரொம்ப நாள் பரிச்சயமானோரை வாஞ்சையோடு நலம் விசாரிக்கும் அதே பாணியில், முற்றிலும் புதியவர்களைக் கூட வரவேற்பதென்பது பிரெஞ்சு மக்களுக்கே உரித்தானதொரு கலை ! அதனில் செம தேர்ச்சி பெற்றிருந்த திருமதி மேரியின் முகத்தில் தவழ்ந்த புன்னகையானது, என்னையும் தொற்றிக் கொண்டது ! உச்சா போகாத கரடியாட்டம் சதா நேரமும் ஒரு முறைப்போடே சுற்றித் திரியும் எனக்கே கூட அந்த வரவேற்பு, அந்த காமிக்ஸ் நகரின் கலகலப்பு செம பூஸ்ட்டைத் தரத் தவறவில்லை !
அதே ரயிலிலில் இன்னொருவருமே விழா அமைப்பாளர்களின் விருந்தினராய் வந்திருப்பதை போர்டிலிருந்த இரண்டாவது பெயரிலிருந்து தெரிந்து கொண்டேன் ! அவர் போர்ச்சுகல் நாட்டைச் சார்ந்தவர் ! மெதுவாய் நடை போட்டபடிக்கே வந்த அந்த 50 வயது மதிக்கத்தக்கப் பெண்மணியும் பரஸ்பர அறிமுகங்களுக்குப் பின்னே ரொம்பவே தோழமையோடு பேச ஆரம்பித்தார் ! In fact இந்தப் பயணத்தினில் எனக்குக் கிட்டிய நட்புக்களில் top of the list என்பேன் ! வரவேற்ற கையோடு ஆளுக்கொரு கனத்த கவரை கையில் தந்தார் மேரி ! 'அட....ஓசியிலே டிக்கெட்டும் போட்டு, சோறும் போட்டுப்புட்டு, செலவுக்கு காசும் தர்றாங்களோ ? அடடடடா...!!' என்று சிலாகித்தவனின் மனசில் 'தண்ணிய போட்டுட்டு துடைடா !' என்று மேலதிகாரி சொல்லக் கேட்டு ஆர்டர்லி வடிவேல் ஒரு டான்சைப் போடுவாரே - அது தான் நினைவுக்கு வந்தது ! ஆனால் கவரைத் திறந்தால் உள்ளாற ஹோட்டல் விபரங்கள் ; ஆங்குலெமில் நடக்கக்கூடிய ஓவியக் கண்காட்சிகள் ; புத்தக விற்பனைக் கூடாரங்கள் ; கதாசிரியர்களின் கலந்துரையாடல் sessions - என சகலத்துக்கும் தங்கு தடையின்றி உட்புகும் அனுமதிகள் இருக்கக் கண்டேன் ! 'கொஞ்சம் ஓவரா பொங்கிட்டோமோ ?' என்ற நெருடலை ஓரம் கட்டிய சமயமே எங்களை ஒரு செம சொகுசான பென்ஸ் வேனிற்கு இட்டுச் சென்றனர் ! பென்ஸ் கம்பெனி ஓனரோ ? என்ற சந்தேகம் வரச் செய்யும் விதமாய் ஒரு நடையைப் போட்டபடிக்கே வண்டியில் ஏறினேன் ! அடுத்த 45 நிமிடங்கள் சுமாரான அந்த கிராமீய சாலைகளில் கூட வழுக்கிக் கொண்டு போனது வண்டி ! அடுத்த batch விருந்தினர்களை வரவேற்கும் பொருட்டு மேரி ஆங்குலெம் அலுவலகத்திலேயே இறங்கிக் கொண்டிருந்தார் என்பதால், நானும் ஆனாவும் (போர்ச்சுகீசிய பதிப்பாளர்) மட்டும் ஹோட்டலுக்குப் போய் சேர்ந்தோம் !
COGNAC (கோனியாக்) என்ற அந்த நகரமானது ஒசத்தியான Remy Martin ; Hennessey போன்ற கோனியாக் ரக சரக்குகளின் தாய்வீடு ! உற்பத்தி செய்திடும் ஊரின் பெயரையே அந்த வகைச் சரக்கின் பெயராக யாரோ ஒரு புண்ணியவாளன் அந்தக் காலத்திலேயே சூட்டியிருக்கிறார் போலும் ! சரக்கு உற்பத்தி தாண்டி வேறு எதுவுமே கிடையாது என்பதால் அந்த குளிர் மாலையில் ஊரே பேய் நகரமாட்டம் காட்சி தந்தது ! ஒரு முரட்டு காம்பவுண்ட் சுவருக்குள் நின்ற பிரமாண்டமான ஹோட்டலுக்குள் வண்டி புகுந்தது ! HOTEL CHAISE MONET & SPA என்ற போர்டை பார்த்த நொடியே, கூகுளில் இங்கே ரூம் வாடகை எம்புட்டு இருக்குமென்று பார்க்கும் ஆவல் பீறிட்டது ! ஆத்தீ...கூசாம ஒரு ராவுக்கு 295 யூரோக்கள் ; அதாவது உத்தேசமாக நம்ம பணத்துக்கு ரூ.26,000 என்று போட்டிருந்தது ! எனக்கு மட்டுமே 3 இரவுகளின் தங்கல் எனும் போது நெருக்கி தொண்ணூறு ஆயிரம் ரூபாய் செலவிட்டுள்ளனர் என்பது புரிந்தது ! கிர்ரென்று சுற்றியது தலை ! என்னையாய் விட்டிருந்தால், இதனில் கால்வாசிக்கும் குறைச்சலான கிரயத்திற்கொரு ஹோட்டலைத் தேடிப் பிடித்திருப்பேன் ! அந்த கொள்ளை ரேட்டைப் பார்த்த நொடியே செம காண்டாகிப் போனதோடு, மவராசன்கள் அப்புடி என்னதான் ஹோட்டலில் தங்கமும், பொன்னுமாய் இழைத்திருப்பார்களோ ? என்ற curiosity எழுந்தது ! உள்ளே கால் வைத்த நொடியே புரிந்தது இது ரொம்பச் சமீபத்தில் கட்டப்பட்ட புத்தம்புது ஹோட்டல் என்பது ! திரும்பிய திக்கிலெல்லாம் செழிப்பின் அடையாளங்கள் ! அறை ரொம்பப் பெருசெல்லாம் கிடையாது தான் ; ஆனால் சொகுசோ சொகுசு ! சரி, நான் என்னிக்கி நியூசிலாந்து பாக்கிறது ? என்று கேட்கும் விவேக்கைப் போல நாமெல்லாம் என்னிக்கி இப்படியான செழிப்புகளைப் பார்ப்பது ? என்சாய் !! என்று மனசைத் தேற்றிக் கொண்டேன் ! 'காலையில் 8 மணிக்கெல்லாம் புறப்பட்டாகணும்' என்று மேரி சொல்லியிருந்தது நினைவிருக்க, ஏதோ கம்மங்களி மாதிரியான ஐட்டத்தை சாப்பிட்டு விட்டு அந்த இலவம்பஞ்சுக் கட்டிலில் விழுந்தேன் ! முதுகுவலி என்பதால் ரொம்ப காலமாகவே தரையில் படுத்துறங்கும் பார்ட்டியான எனக்கு கொஞ்ச நேரத்திற்கெல்லாம் தாக்குப் புடிக்கவே முடியலை ! 'அட..போங்கடா டேய்...'என்றபடிக்கே ஒரு விரிப்பை தரையில் விரித்து, அதில் கட்டையைக் கிடத்தினேன் ! அநேகமாக ரெம்ப காஸ்ட்லீயான தரைத்தூக்கம் ever !!
காலையில் பிரேக்பாஸ்டுக்கு போனால் பிரான்சு நாட்டின் அடையாளமான அந்த வராட்டி மாதிரியான ரொட்டி கம்பீரமாய்க் காத்திருந்தது ! ரொம்பச் சமீபமாய் நம்ம தாத்தாக்களின் கதையில் இந்த பிரெஞ்சு ரொட்டியின் அக்கப்போர்களை பார்த்திருந்து நினைவிருக்கலாம் ! கடா வெட்டும் கத்தி போல ஒன்றையும் ரொட்டியோடே கிடத்தி வைத்திருக்க - மரம் வெட்டுபவனைப் போல 'தம்' கட்டி அறுத்துவிட்டு கடைவாய்க்குள் திணித்தேன் ! ரெண்டே துண்டில் வயிறு நிறைந்துவிடுமென்பதால் சாப்பிட்ட கையோடு ஹோட்டலின் முகப்பினில் சென்று காத்திருந்தேன் ! இன்னொரு பென்ஸ் ; இம்முறை நானும், பிரேசில் மற்றும் ஆர்ஜென்டினாவிலிருந்து வந்திருந்த சிறப்பு விருந்தினர்களோடு பயண ஏற்பாடு ! இருவருமே கிராபிக் நாவல்களை வெளியிடுவோர் & பிரேசில்காரர் வயதில் என்னை விடவும் மூத்தவர் ! ஆர்ஜென்டினாக்காரரோ விக்ரம் வயதினர் தான் ! அவரவரது மார்க்கெட்கள் பற்றி, அங்கங்கே உள்ள ரசனை நிலவரங்கள் பற்றிப் பேசியபடியே மேற்கொண்ட அந்த 45 நிமிடப் பயணம் இந்த ட்ரிப்பின் ஹைலைட்களுள் ஒன்று ! அத்தனை பேருக்குமே எழுந்த முதல் கேள்வி - "இந்தியாவிலே பிரெஞ்சு காமிக்ஸ் வெளியிடறீங்களா ? அதுவும் கிட்டத்தட்ட 40 வருஷங்களாகவா ? " என்பது தான் ! "இதுக்கே வாயை பிளந்தால் எப்புடி - நாங்க போட்டு வரும் காமிக்ஸ் தொடர்கள் என்னவெல்லாம் ? எந்தெந்தப் பதிப்பகங்களோடெல்லாம் கரம் கோர்த்திருக்கிறோம் ? என்பதை கேளுங்களேன் " என்றபடிக்கு நான் விவரித்த போது இருவருமே வாயடைத்துப் போய்விட்டனர் ! கிட்டத்தட்ட இருவருமே என்னை பேட்டி காணாத குறை தான் !!
ஏதேதோ பேசிக் கொண்டே போன போது நாம் வெளியிட்டுள்ள கிராபிக் நாவல்கள் பற்றிய பேச்சும் வந்தது & நான் "நிஜங்கள் நிசப்தம்" பற்றிச் சொன்னேன் ! அந்தக் கதையின் பின்னணி ; அந்தக் களத்திற்கும் ஒரு சராசரித் தென்னிந்திய வாசகனுக்கும் இம்மி தொடர்பு கூட இருக்க வாய்ப்பில்லை ; but still எங்களது வாசகர்களின் மத்தியில் அதுவொரு smash hit என்பதை சொன்னேன் ! கொஞ்ச நேரத்துக்கு வேனின் டயர்கள் சாலையில் சீறுவதைத் தாண்டிய ஓசை ஏதுமில்லை ! "Much respect to your readers !" என்று பிரேசில்காரர் சொன்ன போது எனக்கு மெய்யாலுமே தொண்டை அடைத்தது ! யோசித்துப் பார்த்தேன் : நானிருப்பது காமிக்ஸ் துறையினில் பழம் தின்று கொட்டை போட்டதொரு அனுபவசாலியுடனும், புது யுகத்தின் ஒரு பிரதிநிதியுடனும் ! இடமோ நமக்குக் கிஞ்சித்தும் சம்பந்தமில்லா வேற்று மொழி தேசம் ! பேசுபொருளோ முற்றிலும் தொடர்பே இல்லாததொரு கதைக்களம் பற்றி ! But yet - அங்கு நமது வாசகப் பன்முகத்தன்மை சிலாகிக்கப்படுகிறதென்றால் லேசுப்பட்ட விஷயமா அது ? Take a bow guys !!
ஆங்குலெம் நகருக்குள் வண்டி நுழைந்திருந்தது ! விழா நடக்கவுள்ள அரங்கிருக்கும் சாலையை முனையிலே அடைத்து விட்டார்கள் - NO ENTRY போர்டுடன் ! 'கிழிஞ்சது போ...குளிரிலே நடக்கணுமா ?' என்ற எண்ணம் எனக்குள் ஓட ஆரம்பித்த நொடியே - எங்க வண்டி டிரைவர் முன்கண்ணாடியில் ஒட்டியிருந்த ஸ்டிக்கரைச் சுட்டிக் காட்டினார் ! அதனில் "BD Angouleme V.I.P" என்று எழுதியிருந்ததை பார்த்த மறு நொடியே காவலர்கள் பேரிகேட்களை பரபரப்பாய் அகற்றினர் ! 'ஆஹா...நம்ம ஆபீஸ் வாசலில் நிற்கும் லோடு ஆட்டோவை நகரச் சொன்னாலே பருப்பு வேகாது ; இங்கே என்னடான்னா ஒன்-வே சாலை ஒற்றை நொடியில் திறக்கிறது ! ஒரு பொம்ம புக்குக்கு இத்தினி மகிமையா ? Oh wowww !!' என்று வாயைப் பிளக்க மாத்திரமே முடிந்தது !
நேராக புத்தக விழா நடக்கவிருக்கும் அரங்குக்கு எதிரே இருந்த சிறு அமைப்பின் முன்னே வண்டி நின்றது ! புத்தக விழா அரங்கினில் புக்ஸ் சேல்ஸ் ; படைப்பாளிகளை சந்தித்து ஆட்டோகிராப் வாங்கி, கலந்துரையாடி மகிழும் பொதுமக்கள் பங்கேற்பு இருக்குமெனில், நாங்கள் இறங்கிய சின்னஞ்சிறு அரங்கினில் பதிப்பகப் பிரதிநிதிகள் மட்டும் சந்தித்து உரையாட சின்னச் சின்ன ஸ்டால்கள் இருந்தன ! வெறும் இரண்டே வரிசைகள் தான் ; சின்னவர்களும், பெரியவர்களுமாய் கலந்து கட்டி அங்கே இடம் பிடித்திடுவர் ! நடு நாயகமாய் விழாவின் விருந்தினர்களான எங்கள் 10 பேருக்கும் தனித்தனி booths - அவரவரது நிறுவன லோகோவுடன் ! இந்த ஏற்பாடுகள் சகலமும் நமக்கு முன்னமே தெரிவிக்கப்பட்டிருந்தது என்பதால் முக்கியமாய் யாரையெல்லாம் சந்திக்க வேண்டியிருக்குமோ - அவர்களோடெல்லாம் உரையாட முன்கூட்டியே நேரம் வாங்கி வைத்திருந்தேன் ! அவர்கள் நீங்கலாய் இருக்கக்கூடிய சிறு பதிப்பகத்தினரோ நம்மைத் தேடி வந்து, நமது பூத்தில் நம்மைச் சந்தித்துப் பேசிடலாம் !! இதர பதிப்பக பிரதிநிதிகள் வந்து சேரும் முன்பாகவே, ரொம்பச் சீக்கிரமே அரங்கினுள் நாங்கள் நுழைந்து விட்டிருந்தோம் ! ஆளாளுக்கு கையில் கொண்டு வந்திருந்த மாதிரிகளை அவரவரது பூத்தில் அடுக்க ஆரம்பிக்க - எனக்கோ நமக்கான இடத்தை இமை தட்டாது பார்த்துக் கொண்டே இருப்பதைத் தாண்டி வேறு எதையும் செய்யத் தோன்றவில்லை ! நமது லயன் என்றும் இல்லாத கம்பீரத்துடன், என்னைப் பார்த்து புன்னகைத்து போலவே இருந்தது ! Trust me guys - இது மிகையே இல்லை ; ஆனால் அந்த சிங்கத்தினுள் உங்கள் ஒவ்வொருவரின் புன்னகைத்த, பெருமிதம் பொங்கும் முகங்களே எனக்குக் கண்ணில் தெரிந்தது ! நிறைய வெற்றிகளை பார்த்துள்ளோம் தான் ; நிறைய இருண்ட நாட்களையும் கடந்துள்ளோம் தான் ! தொடரக்கூடிய காலங்களில் இன்னமும் ஏதேதோ சந்தோஷங்களும் நமக்குக் காத்திருக்கலாம் தான் - ஆனால் ஜனவரி 25 -2023 ன் அந்தக் காலைப் பொழுதினை என் ஆயுட்கால நினைவுகளில் உச்சத்தில் அமர்த்திப் பாதுகாப்பேன் ! இந்த சந்தோஷமும், பெருமிதமும் உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் இல்லாத பட்சத்தில் இம்மி கூட சாத்தியமாகிடாது எனும் போது ஓராயிரம் நன்றிகள் all !!
இது வரையிலுமான பதிவு 3 ரயில் நிலையங்களிலும், 2 விமான நிலையங்களிலும் டைப்பியது ! இதோ - தாம்பரத்துக்கு ரயிலைப் பிடிக்க ஓட வேண்டியிருப்பதால், லேப்டாப்பிலும், விரல்களிலும் சார்ஜ் லேது என்பதாலும் பதிவினை நாளை ஊருக்குத் திரும்பிய பிற்பாடு தொடர்கிறேன் folks ? பற்றாக்குறைக்கு "தரைக்கு வந்த வானம்" வேறு அப்படியே முழுசாய்க் காத்துள்ளது ! நாளை எந்நேரமாவது பதிவின் தொடர்ச்சியோடு ஆஜராகிடுகிறேன் ! Thanks for the understanding !
P.S :
முடிந்தால் கொஞ்சம் போட்டோக்களை ரயிலில் ஏறிய பிற்பாடு upload செய்யப் பார்க்கிறேன்!
ஜூனியர் இங்கொரு பணியினால் பிசியாக இருப்பதால், என்னோடு ஆங்குலெம் பயணத்தினில் இடம்பிடித்திருக்கவில்லை !