நண்பர்களே,
வணக்கம். மேலுலகில் தலைவர்களுக்குத் திடீர் தட்டுப்பாடு போலும் – இங்கிருந்து ஒவ்வொரு மூத்தவரையாக இட்டுச் சென்ற வண்ணமுள்ளனர் ! முன்னாள் பிரதமரும், அப்பழுக்கற்ற அரசியல் தலைவருமான திரு.வாஜ்பே அவர்கள் இந்த வலையின் லேட்டஸ்ட் catch ஆகியிருப்பது நமக்கெல்லாம் ஈடு செய்ய இயலாவொரு இழப்பே! மலர்ந்த முகத்தோடு பலருக்கும் இவர் என்றென்றும் அழியா நினைவாய்த் தொடர்ந்திடுவார் என்பது நிச்சயம் ! RIP சார் ! அவருக்கு சற்றே முன்பாய் இன்னொரு பழுத்த அரசியல் தலைவரும், மக்களவை ஸ்பீக்கருமான ; கறையே அண்டிராதவருமான திரு.சோம்நாத் சட்டர்ஜியும் விண்ணுக்குக் கிளம்பியிருக்க - இழப்பின் பட்டியல் நீள்கிறது ! அவருக்கும் நமது மரியாதைகள் & அஞ்சலிகள் !
2018-ன் ஈரோட்டுப் புத்தக விழாவும் – சில தினங்களுக்கு முன்பாய் நினைவுப் பேழைகளுக்குள் இன்னுமொரு அத்தியாயமாய் மாறிப் போயிருக்க – நானோ அதற்கு முன்பாகவே பையைத் தூக்கிக் கொண்டு இன்னொரு திக்கில் பயணமாகிப் போனேன் ! வேலைகளைப் பார்க்க முடிகிறதோ – இல்லையோ, பைக்குள் சட்டை, துணிகளை அமுக்குவதற்கு முன்பாகவே அம்மாதத்து எடிட்டிங் வேலைகள் எஞ்சி நிற்கும் பக்கங்களை எடுத்து அடுக்கி விடும் வாடிக்கை இம்முறையும் தொடர்ந்தது ! அதன் பலனாய் – அவர் அடிக்கடி உலவிய அதே கலிபோர்னிய மண்ணில் “
டைனமைட் டெக்ஸ்” கடந்த சில நாட்களாக மறுபடியும் சுற்றி வருகிறார்! காத்திருக்கும் ஒவ்வொரு விமான நிலையத்திலும், டெக்ஸோடு தான் எனது பொழுதுகள் நகர்கின்றன ! And இதோ – வாரயிறுதி நெருங்குகிறதென்ற அலாரம் தலைக்குள் ஒலிக்க – ஊர் திரும்பும் முன்பாய் பதிவுக்கென அமர்ந்தாயிற்று !
ஒரு விதத்தில் – ஈரோட்டுப் பக்கமாய் நமது கவனங்கள் திரும்பிய முன்பாக நான் வாராவாரம் எழுதி வந்த சமாச்சாரத்தின் நீட்சியே இது ! 2019 அட்டவணையின் ஆக்ஷன் கதைவரிசைகள் பற்றி ; டெக்ஸ் பற்றி ; கார்ட்டூன்கள் பற்றி என்று அலசி விட்டோம் ! உங்கள் எண்ணங்களை எனது ப்ளுப்ரிண்டோடு ஒத்துப் பார்க்கும் வேலைகளும் சரி; மெலிதான பட்டி டிங்கரிங் வேலைகள் செய்வதும் சரி – நடந்து வருகிறது ! இந்த நொடியில் எஞ்சி நிற்பன இரு தனித்தனி தடங்கள் மீதான பார்வைகளே ! And அவை இரண்டுமே தத்தம் விதங்களில் உங்களிடையே ஏராளமான வீரியமான சிந்தனைகளை விளைவிக்க வல்லவை என்பதிலும் no secrets! So பசுபிக் சமுத்திரத்தின் அசாத்திய பிரம்மாண்டம் என் முன்னிருக்கும் கண்ணாடி ஜன்னல் வழியே விரிய – மறுபதிப்புகளெனும் கடலின் பக்கமாயும்; கிராபிக் நாவல்கள் எனும் சமுத்திரம் மீதாயும் பார்வைகளை ஓடவிடுகிறேன்........
இன்னமுமே அந்த நாள் ஞாபகமுள்ளது ! 2015-ன் துவக்கம் முதலாய் மாயாவிகாரு & அவரது கூட்டாளிகள் நம்மிடையே மறுவருகை செய்யவுள்ளனர் என்ற சேதியை அறிவித்ததொரு ஞாயிறு காலைப் பதிவு அது ! அந்த நாள் நிறைவுறும் முன்பாய் 360 பின்னூட்டங்களைப் போட்டு அதகளம் செய்து முடித்திருந்தீர்கள்! And ஜனவரியில் சென்னைப் புத்தக விழாவில் “நயாகராவில் மாயாவி” ரிலீஸான சமயம், தற்போதைய “இரத்தப் படல” உற்சாகத்திற்குச் சிறிதும் குறையிலா reception கிட்டியதும் ஞாபகத்தை விட்டு அகலவில்லை! தினமும் சுமார் எண்பது பிரதிகள் சென்னை ஸ்டாலில் மட்டுமே விற்பனையாகிட; ஒவ்வொரு மாலையிலும் “நயாகராவில் மாயாவி” பஸ்ஸில் பயணமாகினார் சிவகாசி to சென்னைக்கு ! தொடர்ந்த மாதங்களில் / ஆண்டுகளில் மும்மூர்த்தியர் + இஷ்பைடர் சார் என்று மாதாமாதம் ரவுண்ட் கட்ட – வெகு சீக்கிரமே நம்மிடம் ஒரு golden oldies தொகுப்பானது சேர்ந்து விட்டது. ஒவ்வொரு தொடரும் புத்தக விழாவிலும் – ”ஆஆஆ... மாயாவியாாா?... லாரன்ஸ் டேவிட்டாாா? ஜானி நீரோவாாாா?” என்ற அகன்ற விழிகளோடும்; ஜலம் வடியும் வாய்களொடும் இவற்றை நெஞ்சோடு வாரியணைத்துக் கொண்ட மூத்த வாசகர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது !
இத்தருணத்தில் இரண்டு பேரை இதன் பொருட்டு “மறுக்கா” நினைவு கூர்ந்திடல் அவசியம் என்பேன் ! முதலாமவர் ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவரும், ஈரோட்டுப் புத்தக விழாத் தலைவருமான திரு.ஸ்டாலின் குணசேகரன் அவர்களே ! 2013-ல் நம்மிடமிருந்த சொற்பமான title கையிருப்பைப் பார்த்தவர் – “சீக்கிரமே உங்களது புத்தக எண்ணிக்கைகளைப் பன்மடங்காக்க முயற்சிக்கா விட்டால் – வரும் ஆண்டுகளில் ஈரோட்டுப் புத்தக விழாவின் கதவுகள் உங்களுக்குத் திறப்பது கடினமே!” என்று சுட்டிக் காட்டியிருந்தார்! ஆங்கில காமிக்ஸ் இதழ்களை வாங்கி ஸ்டால் முழுக்க அடுக்கி, எண்ணிக்கை மிகுந்திருக்கும் உணர்வை ஏற்படுத்த 2014-ல் மாத்திரம் பெருந்தன்மையோடு அனுமதித்திருந்தார்கள் என்ற போதிலும் – அதே பருப்பு மறு ஆண்டும் செல்லாது என்பது புரிந்தது ! சட்டுப் புட்டென்று title-களின் எண்ணிக்கைகளை அதிகமாக்கிட ஒரே சுலப வழி – மறுபதிப்புகள் பக்கமாய்ப் பிடிவாதமாய் பார்வைகளைப் பதிக்க மறுத்து வந்த எனது மனதை மாற்றிக் கொள்வதே என்பதும் புரிந்தது ! அதற்கு முன்பாகவே என்னைப் பார்க்கும் போதெல்லாம், மறுபதிப்புகளைக் கொண்டு வந்தால் – அதன் மூலமாய் புதுசுகளுக்கும் ஆர்வங்களை வடிகாலாக்கிட முடியுமென்று சிங்கப்பூர் நண்பர் தயாளனும் சொல்லிக் கொண்டேயிருப்பார் ! (ஆனால் நடைமுறையில் பழசை வாங்கினோர் - பழசைத் தவிர்த்து வேறு எதையும் ஏறெடுத்துப் பார்க்கக் கூட முனையவில்லை என்பது வேறொரு விஷயம் !!) எனக்கோ காலாவதியாகிப் போய்விட்ட இனிப்பை மறுக்காவும் கடைவிரிக்கத் தான் வேண்டுமா ? என்றதொரு எண்ணம் ! இறுதியில் title-களின் எண்ணிக்கையை விரிவாக்கம் செய்திடும் அவசியத்தின் முன்னே எனது பிடிவாதம் அடிபணிய – சரமாரியான மறுபதிப்பு மேளா தொடர்ந்தது நமது வரலாறு (!!!) இவற்றிற்கேவென ஒரு பிரத்யேக சந்தாத் தடம் – தனியாக புத்தக விழாக்களில் ஒரு மூலை என்றெல்லாம் அமர்க்களப்பட்டதுமே வரலாற்றின் இன்னொரு பக்கம் ! கோவையில் ஒரு ஆரம்ப நாட்களது முகவர் – மாதாமாதம் மறுபதிப்புகளை மட்டுமே வாங்குவார் - புதுசு எதையும் திரும்பிக் கூடப் பார்க்காது ! And மாதா மாதம் – நடப்பு இதழ்கள் போணியாகின்றனவோ - இல்லையோ; "5 மாயாவி; 2 இஷ்பைடர்; 2 நீரோ" என்ற ரீதியில் ஆர்டர்கள் கிட்டி வந்தன !
ஆனால் – விற்பனையில் தெரிந்த உத்வேகம் – உங்களது அலசல்களில் வேறு மாதிரியாய் தெறிக்கத் துவங்கின நடுவாக்கில் ! தலைகீழ் சிரசாசன SMS-கள்; நியூயார்க்கைத் தர தரவென இழுத்துப் போகும் தில் ; ஜானி நீரோவின் பெர்முடாக்கள் ; ஜுடோ டேவிட்டின் கராட்டே வெட்டுக்கள் என்று முன்பொரு சமயம் நம்மை வாய்பிளக்கச் செய்த சமாச்சாரங்கள் எல்லாமே மறுபடியும் வாய்பிளக்கச் செய்தன தான் – ஆனால் 'கெக்கே பிக்கே' சிரிப்புகளில் ! அந்த நாட்களில், அந்த அகவைகளில் ரசித்த சமாச்சாரங்களை, இன்றைக்கு மீண்டும் அரவணைக்க முயலும் போதுமே, அதே ரீதியிலான தாக்கங்கள் நம்முள் நிச்சயம் நிகழுமென்று ஒரு மூலையில் பதுங்கிக் கிடந்த நம்பிக்கையுடனான எதிர்பார்ப்புகள் தான் சிக்கலின் நதிமூலம் என்பேன் ! அது நிகழாது போகும் போது நம்மை நாமே லேசாய்ப் பதம் பார்த்துக் கொள்ள முனைந்தோம் – எள்ளல்கள் வாயிலாய் ! நாட்கள் நகர நகர, "சுவாரஸ்யமாய் வாசிக்க" என்ற நிலை மாற்றம் கண்டு – ”வாஞ்சையாய் சேகரிக்க” என்ற நிலை பிறந்துள்ளது கடந்த சிலபல மாதங்களாய் ! சரி, நமது பதிவுகளில், அலசல்களில் தான் லேசாய் போரடித்து விட்டது போலும் என்று பார்த்தால் – புத்தக விழாக்களிலும், ஆன்லைன் ஆர்டர்களிலுமே அந்த முதலிரண்டு ஆண்டுகளின் பரபரப்பும், வேகமும் சிறுகச் சிறுக மறைந்து வருகின்றன! முகவர்களுமே இப்போது – “டெக்ஸில் எல்லாத்திலேயும் 2; கிராபிக் நாவல்லே 2” என்று பரிணாம வளர்ச்சி கண்டுள்ளனர் !
இத்தருணத்தில் எனது பிரதம கேள்வி: ”கிடைக்காதிருந்த வரை அலையடித்த ஆர்வமானது – சரளமாய்க் கிடைக்கத் துவங்கிய பின்பாக வடியத் துவங்கி விட்டதா?” என்பதே! இது நாள் வரை கடைகளில்; ஆன்லைனில் வாங்கி வந்த இந்தப் பழமைவிரும்பிகள் கூட சிறுகச் சிறுக காணாது போய் வருவதே இங்கே என்னைச் சலனம் கொள்ளச் செய்யும் விஷயம் ! சகல ஜானர்களையும் வாசிக்கும் இன்றைய current வாசகர்களுக்கு இந்த மறுபதிப்புகளின் புராதன நெடி நெருடலாகியிருக்கும் பட்சத்தில், அதனைப் புரிந்து கொள்ள முடிகிறது! ஆனால் “காமிக்ஸ் என்றாலே மாயாவி & கோ மாத்திரமே !!" என்ற ரீதியிலானோர் அரூபமாகத் துவங்கி வருவதே எனக்கு ஆதங்கத்தைத் தரும் விஷயம் !
So where do we go from here on reprints ? ஓ... யெஸ்... அன்றைக்கு கறுப்பு-வெள்ளையில் நாம் பார்த்த / ரசித்த கேப்டன் பிரின்ஸ்... ரிப்போர்ட்டர் ஜானி... லக்கி லூக்... சிக் பில்... டெக்ஸ் வில்லர் ஆகியோரை இன்றைக்கு வண்ணத்தில் உயர்தரத்தில் பார்ப்பது பாகுபாடின்றி வரவேற்புப் பெற்றுள்ளது ! So அவை தொடரும் ஆண்டிலும் தொடர்ந்திட நாம் ஏகமனதாய் ‘யெஸ்‘ சொல்வோமென்ற நம்பிக்கை எனக்குள் நிறையவே உள்ளது ! அவை நீங்கலாய் – “மறுக்கா ரிப் கிர்பி... காரிகன்... விங் கமாண்டர் ஜார்ஜ் ப்ளீஸ்!” என்ற கோரிக்கைகள் சிதறலாய் ஈரோட்டில் ஒலித்தன தான்! And PHANTOM ?? என்ற கேள்வி இம்முறையுமே உரக்க ஒலிக்காதில்லை !! வேதாளரை மறுபடியும் கொணர வேண்டுமெனில் அதற்கென நாம் எவ்விதம் தயாராகிக் கொள்ள வேண்டுமென்பதைப் பற்றி நிறையவே பேசியிருக்கிறேன் ! That still holds good ! So “இரத்தப் படலம்” எனும் மறுபதிப்புகளிலான இறுதி எல்லையைக் கடந்தான பின்னே பெருசாய் பழசின் பக்கமாய்க் காதல் பார்வைகளை பாய்ச்ச இனி முகாந்திரங்களில்லை என்பதே எனது புரிதல் ! மெயின் நாற்வழிச்சாலையில் புதுக் கதைகள் வெவ்வேறு பாணிகளில் இனி பயணிக்க, ஓரமான சர்வீஸ் லேனில் லக்கி லூக்; டெக்ஸ்; பிரின்ஸ் & கோ.வின் மறுபதிப்புகள் மட்டும் வண்ணத்தில் தொடர்ந்திடுவது யாருக்கும் நெருடலிலா சங்கதியாய் அமைந்திடலாமென்பது எனது அபிப்பிராயம் ! கொஞ்சமோ – நிறையவோ; காசு கொடுத்து வாங்கும் (மறுபதிப்புப்) பிரதிகளை நாலு தபா ஆசையாய்த் தடவிக் கொடுத்து விட்டு பீரோவுக்குள் தஞ்சமாகச் செய்வதை விடவும், அவற்றை பிரியத்தோடு வாசிக்க ஒரு வழி பிறப்பின் – உங்களுக்கும், எங்களுக்கும் மகிழ்ச்சியாகிடாதா ? So ஆசை தீர; திளைக்கத் திளைக்க மறுபதிப்புகளை ருசித்து விட்ட திருப்தியோடு – இனி புதுப் பாதைகளை நோக்கிக் குதிரைகளை விடலாமா? Maybe இன்னமும் ஒரு நூறு மாயாவிகளும் ; வேதாளர்களும் ; லாரன்ஸ்-டேவிட்களும் நாம் பார்த்திரா மூலைமுடுக்குகளில் இருக்கக் கூடுமோ – என்னவோ ? அவர்களைத் தேடிப் புறப்பட முழு மனசாய் நாம் சகலரும் முனைந்தால் அந்த வேட்டையே சுவாரஸ்யமாகிடும் தானே?
சின்னதொரு stat மட்டும் இங்கே :
Post 2015 - கிட்டத்தட்ட இது வரையிலும் ரூ.6500 செலவிட்டிருப்போம் – மறுபதிப்புகளெனும் தடத்தில் ஏதேதோ நாயகர்களோடு சவாரி செய்திட ! மனநிறைவோடே அந்தப் பணத்தை நீங்கள் நம்மிடம் ஒப்படைக்கச் செய்துள்ளீர்கள்! நாங்களும் எங்களால் இயன்ற நியாயங்களைச் செய்ய முனைந்துள்ளோம்! ஆனால் இந்தத் தொகையானது ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் 2 முழு வருடங்களது ஆண்டுச் சந்தாத் தொகைக்கு ஈடானதாக இருந்து வந்துள்ளதெனும் போது – முழுசாய் 2 வருடங்களைப் பழசின் பயணத்துக்கெனச் செலவிட்டுள்ளோம் என்றாகிறதல்லவா ? The best years of a career are still ahead of me என்ற நம்பிக்கையோடு - உத்வேகத்தைத் தக்க வைத்து வருகிறேன் – எஞ்சியிருக்கும் அடுத்த சில ஆண்டுகளிலான எனது ஓட்டத்துக்கு ! ஆனால் பயணத்தின் பாதி நேரம் ரிவர்ஸ் கியரையே போட்டுப் போட்டு வண்டியை ஓட்டுவதனால் – கடக்கக் கூடிய தூரம் அதிகமாய் இராதன்றோ ? இனிமேல் மறுபதிப்புகளைப் பயணத்தின் நொறுக்குத்தீனியாக மாத்திரமே பார்த்துப் பழகுவோமே guys? அதையே சாப்பாடாக்கினால் என்னாகுமென்று தெரியாதவர்களா நீங்கள் ? Full steam ahead!! என்று கூக்குரல் தந்து தான் பாருங்களேன் – கப்பல் எத்தனை சுளுவாய் அலைகளைச் சவாரி செய்கிறதென்று !
ஷப்பா…!! ஏற்கனவே நாடோடி போல காலையொரு ஊர்; மாலையொரு ஊர் என்று திரிந்து வருபவனுக்கு - பயணம்; கப்பல்; ரிவர்ஸ் கியர்; ரயில்; சவாரி; என்று படிக்கப் படிக்க இன்னும் கொஞசம் தலை கிறுகிறுக்கிறது! அந்தக் கிறுகிறுப்போடே – சில கிறக்கம் தரும் சமாச்சாரங்கள் பக்கமாய் பார்வைகளைப் பாய்ச்சுவோமா?
”கி.நா”!! திரும்பிப் பார்க்கையில் ஒற்றை விஷயம் புரிகிறது! இந்த “எதுமாதிரியுமிலாதப் புதுமாதிரி” கதைத் தேடல்களைப் பொறுத்தமட்டில் – எல்லாத் தருணங்களிலும் நாம் எல்லோருமே ஒரே பக்கத்தில், ஒரே ரசனையோடிருப்பதென்பது அதிசயத்திலும் அதிசயம் என்பதே அது! எனக்கு மெலிதான சோகம் பிடித்தால் – அது உங்களுக்கும் பிடித்திருக்குமென்ற எதிர்பார்ப்பு எல்லாத் தருணங்களிலும் நிஜமாகிடாது ! எனக்கு வரலாற்றுப் பரிசோதனைகள் சுவாரஸ்யமானதாய்த் தோன்றலாம் – ஆனால் அதுவே உங்களது வாசிப்புகளுக்கு இசைவானதாய் அமையும் வாய்ப்புகள் 50-50 தான்! தனிமையைப் பிரதிபலிக்கும் களங்கள் என்னளவிற்கு ஓ.கே.யாகிடலாம்; ஆனால் அதுவே உங்களிடமும் thumbs up பெற்றிடுமா ? என்பது கேள்விக்குறியே ! இது வரையிலான ஒவ்வொரு கிராபிக் நாவல் முயற்சியும் உங்களிடையே உற்பத்தி செய்துள்ளவை வானவில்லின் ஒவ்வொரு பரிமாணத்திலுமான, பல்விதமான reaction-களையே எனும் போது எனது மேற்படி statement வலு காண்கிறது ! இங்கொரு முக்கிய இடைச்செருகல் அவசியம் என்பேன் ! நானிங்கு குறிப்பிடுவது “அண்டர்டேக்கர்” போன்றோ – “இரத்தப் படலம்” போன்றோ கொஞ்சமாகவேணும் கமர்ஷியல் சமாச்சாரங்களின் கலப்பிலா hardcore கதைகளைப் பற்றி மாத்திரமே ! இங்கும் கூட - "அண்டர்டேக்கரில் " ஏது commercial சமாச்சாரங்கள் என்று நண்பர்களுள் மாற்றுக் கருத்துக்கள் இருந்திடலாம் ! எனது தற்போதைய கி.நா.சார்ந்த கேள்வியான இதுவே :
2019 -ல் நாம் தனித்தடத்தில் கிராபிக் நாவல்களோடு மீண்டும் பயணிக்க என்னயிருப்பதில் நிச்சயம் பெரியதொரு சிதம்பர ரகசியமெல்லாம் கிடையாது தான் ! அதனில் லேசான commercial பூச்சுடனான ; ஓரளவுக்கேனும் அனைவரும் தலைநுழைக்கக் கூடிய கதைகளாகத் தேர்வு செய்வதா ? அல்லது - கதைகளின் அடர்த்திகளும், ஆழங்களும் மாத்திரமே தேர்வுகளின் காரணிகளாக இருந்து விடட்டுமா ? பின்னது தான் உங்கள் பதிலாக இருக்குமெனில் :
** ஒரு முடியா இரவு...
** என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம்
** கனவுகளின் கதையிது
** நிஜங்கள் நிசப்தம்
போன்ற கதைகளை நோக்கியே நான் தூண்டில்களை வீசிட வேண்டி வரும் ! அதே சமயம் - "ஓவராய்க் கடுங்காப்பி வேண்டாமே ; லேசாய்ச் சக்கரையும் போட்டுக்குவோமே ?" என்று நீங்கள் அபிப்பிராயப்பட்டால் -
** அண்டர்டேக்கர்
** பௌன்சர்
** இரவே..இருளே..கொள்ளாதே !
போன்ற பயணிகளுக்கு நான் 'ஜே' பொட்டாக வேண்டும் ! இரு ரகங்களிலுமே கதைகளை shortlist செய்து வைத்துள்ளேன் என்பதால் - எந்தப் பக்கமாய்ச் சாய்தல் தேவலாம் ? என்ற கேள்வி மட்டுமே உங்கள் முன்னே இப்போது !
அதே போல எனது கேள்வி # 2 – How much is too much? & how much is too little ? என்பதே! நம்மிடமுள்ள பட்ஜெட் அதுவே தான் எனும் போது – அதற்குள்ளாகவே பஞ்சுமிட்டாய்களையும் வாங்கித் தந்திட வேண்டும்; ராட்டினத்திலும் ஏற்றிக் காட்டிட வேண்டும்; டெல்லி அப்பளத்தையும் சுவைக்கச் செய்திட வேண்டும்; கடைகளில் கண்ணில் படும் புது பொம்மைகளையும் வாங்கித் தந்திட வேண்டுமே என்ற பட்ஜெட் பத்மநாப நைனாவைப் போலொரு அங்கலாய்ப்பு எனக்குள் ! So இந்த “கிராபிக் நாவல்” எனும் ஜானருக்கென நாம் ஒதுக்கக் கூடிய slots எத்தகைளாய் இருத்தல் நலம் ? என்ற கேள்வியும் எனக்குள்ளே ! ஈரோட்டில் இம்முறை “கி.நா.”வுக்கு 'ஜே' போட்ட நண்பர்கள கணிசமே ! +2 மாணவனான அகில் கூட இதன் ரசிகன் என்பதை ஆச்சர்யத்தோடு பார்த்தேன்! So 2019-ன் பட்ஜெட் பங்கீட்டில் கி.நா. slots பற்றிய மகாசிந்தனைகளும் புலிக்கேசி ஸ்டைலில் கழிவு அறைகளில் கூடத் தொடர்ந்து வருகின்றன இப்போதெல்லாம் ! Your take on this folks ?
இங்கே சின்னதொரு கருத்துச் சிதறலையும் நினைவில் இருத்திட விழைகிறேன்! ”ஐயா... நான் சராசரியான ரசிகன் தான். எனக்கு அறிவுஜீவிக் குல்லாக்கள் சேருவதில்லை! நாலு சில்லுமூக்குச் சிதறும் அலப்பரைகளும்; நாலு ரவுண்ட் தோட்டாக்கள் தெறிக்கும் அலம்பல்களுமே, காமிக்ஸ் படித்த திருப்தியைத் தரும் ! So இருட்டுக்குள்ளாற 'நொய்-நொய்னு' பக்கம் பக்கமா ; பத்தி பத்தியாப் பேசும் பாணிகள்லாம் சரிப்படாது! அக்காங்... சொல்லிப்புட்டேன்!” என்று சொல்லும் நண்பர்களுமே நம்மிடையே கணிசம் ! So – தனித்தடமே என்றாலும் மெயின்ஸ்ட்ரீம் காமிக்ஸ் ரசிகர்களை ரொம்பவும் அந்நியப்படுத்திடாது இந்தப் பரீட்சார்த்தக் களங்களில் கால்பதிக்கும் அவசியம் நமக்குள்ளது !
”பல நேரங்களில் வாசகர்களிடம் நிறைய தீர்மானம் சார்ந்த கேள்விகளை முன்வைக்கிறீர்களே... இது பலமா? பலவீனமா? என்று நண்பர் ஆதிதாமிரா ஈரோட்டில் என்னிடம் கேட்டது இங்கே நினைவுக்கு வருகிறது ! "பிள்ளையையும் கிள்ளி விட்டுக்கிறான்... தொட்டிலையும் ஆட்டி விட்டுக் கொள்கிறான்!" என்றுமே நண்பர்கள் நிறையத் தருணங்களில் என்னைப் பற்றி அபிப்பிராயப்படுவதுண்டு என்பதை அறியாதவனல்ல நான் ! இதோ இங்கேயே – “கிராபிக் நாவல்கள் நிறையப் போடலாமா?” என்று கேட்ட கையோடே – “மித அணுகுமுறை” பற்றியும் எழுதியுள்ளேன்! இவையெல்லாமே சிந்தனையில் தெளிவின்மையாகவோ; முரண்களின் சங்கமமாகவோ தோன்றிடலாம் தான்! ஆனால் எந்தவொரு முக்கியத் தீர்மானம் சார்ந்த கேள்வியையும் அணுகும் போது எனக்குள் பூரண தெளிவு இருப்பதுண்டு ! அந்தத் தெளிவை நானே உரக்கப் பரிசோதித்துப் பார்க்க யத்தனிப்பதன் பிரதிபலிப்புகளே – பொதுவெளியில் இரு தரப்பு வாசகர்களின் இடங்களிலிருந்தும் அந்த விஷயத்தைக் கேள்விகளாக்கிப் பார்ப்பது!
முன்செல்லும் பயணத்தில் மாறுபட்ட ரசனைகளை சிறுகச் சிறுகத் தான் நுழைத்திட முடியுமென்பது எனக்குப் புரிகிறது ! மாற்றங்களை துவேஷத்தோடு பார்ப்பதே இயல்பு ; moreso ஒருவிதப் பழக்கதோஷத்தில் ஊறிப்போன காமிக்ஸ் வாசிப்புகளில், மாற்றங்கள் சார்ந்த முயற்சிகளுக்கு மெதுமெதுவாய்த் தான் அங்கீகாரம் கிடைக்குமென்பதும் புரிகிறது ! அதே போல நமது தம்மாத்துண்டு வாசக வட்டத்தை – இந்த அடர்த்தியான ரசனையின் காரணமாய் சிதறிட அனுமதிக்கவும் ஆகாது என்பது தலையாய முக்கியத்துவம் பெறுவதும் புரிகிறது ! பல்லாயிரம் சர்குலேஷன் கொண்டதொரு பத்திரிகையின் தலைமைப் பொறுப்பில் குந்தியிருப்பின், விற்பனை நம்பர்களின் ஏற்றங்களையோ – இறக்கங்களையோ வைத்து எடிட்டோரியல் தேர்வு செய்து வரும் மார்க்கமானது சரியா? தப்பா? என்று எடைபோட்டிட முடியலாம் ! ஆனால் நம் கதையோ வேறல்லவா ? ஒரு மரத்தில் கூடு கட்ட வரும் பறவைகளின் எண்ணிக்கையே நமது வட்டமும் எனும் போது – இயன்றமட்டிலும் ஒவ்வொரு பறவையின் கீச்சுக் குரலையும் கேட்டுணர முயற்சிக்க நினைக்கிறேன் ! Of course – எல்லாக் கோரிக்கைகளையும் நிஜமாக்கும் ஆற்றலெல்லாம் யாருக்கும் சாத்தியமல்ல என்பது ஸ்பஷ்டமாகவே புரிகிறது! ஆனால் வார்த்தைக்கு முச்சூடு – “இது ஊர்கூடி இழுக்கும் தேர்” என்று சொல்லி விட்டு திருவிழா நெருங்கும் போது நானாகத் தரத்தரவென இழுக்க முனைவது நியாயமாகாதே?! ”ஏதோவொரு ரூபத்தில் என் நிலைப்பாட்டிலிருந்தும் முட்டைக்கண்ணன் யோசிக்க முனைகிறானே” என்ற திருப்தி நண்பர்கள் மனதில் ஒரு கணமாவது, சன்னமாகவாவது, துளிர்விட விரும்புவதால் தான் – எல்லாத் தடவைகளுமே இரு பக்கங்களின் சார்பாகவும் குரல் தர நானே முயற்சிக்கிறேன்! So என்னைப் பொறுத்தவரையிலும் இந்தச் சமையலில் உப்பையும், மிளகையும், மசாலையும் அளவு பார்த்து குண்டாச்சட்டியில் போடும் சமையல் சங்கரபாண்டி ultimate ஆக நானே ; ஆனால் அவற்றைத் தத்தம் கைகளால் கொஞ்சமாகவாவது எடுத்துத் தரும் வாய்ப்பை வாசகர்களுக்கும் தருவதும் ஒரு ஜாலி தானே ? உப்பு கூடுதலாய்த் தோன்றினால் சத்தமில்லாமல் அதில் ஆளாக்கை யாரும் பார்க்காத வண்ணம் கீழே வீசி விடலாம்; காரம் ஓவரானால் மிளகாயைப் போடுவது போல பாவ்லா காட்டிவிட்டு பைக்குள் அவற்றைத் திணித்துக் கொள்ளலாமல்லவா? Of course – இதற்கொரு flipside-ம் உண்டென்று புரியாதில்லை ! ”நான் தந்த உப்பை கீழே கடாசிட்டான் தடிப்பயல்!” என்று விசனங்கள் எழுவது சாத்தியமே ! ஆனால் பந்தி பரிமாறும் வாய்ப்பு ஒவ்வொரு 30 நாட்களுக்குமே இந்தச் சமையல் சங்கரபாண்டிக்கு வாய்த்திடும் போது – சாப்பாட்டைச் சூடாய், சுவையாய்ப் பரிமாறிடும் கணமே அந்த வருத்தங்கள் காணாமல் போய்விடுமே ! என்ற நம்பிக்கையும் இருப்பதால் தான், பிள்ளையைக் கிள்ளவும் துணிகிறேன்!
பக்கத்து சீட்டிலிருக்கும் வெள்ளைக்காரர் என்னையும், கோழி கூச்சியது போலான எனது கையெழுத்தையும் விநோதமாய் பராக்குப் பார்ப்பது ஒரு மாதிரி இருப்பதால் இப்போதைக்குக் கிளம்புகிறேன் folks ! ஆங்காங்கே நான் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு பதில் தந்திட முனைந்தால் மகிழ்ச்சி ! அப்புறம் சின்னதாயொரு update:
“இரத்தப் படலம்” பாகம் 2-ன் பைண்டிங்கில் குளறுபடிகள் அரங்கேறியுள்ளது புரிகிறது! பைண்டிங் செய்திடும் நமது காண்டிராக்டருமே இந்தப் பிழைகளுக்கான காரணத்தைக் கண்டுபிடிக்கத் தெரியாது தடுமாறி வருகிறார்! வரிசைக்கிரமமான பக்கங்களை லைனாக அடுக்கி வைத்துக் கொண்டு ஒன்றுக்குள் ஒன்றை இணைத்துத் தைப்பது தான் process. அதனில் நேர்ந்துள்ள பிசகு தான் சகலத்துக்கும் மையம் என்பது புரிகிறது ! இதைத் தவிர்க்க foolproof வழியொன்று கண்டுபிடிப்பதே தற்போதைய தலையாய அவசியம் என்று உணர்கிறேன்! சற்றே பொறுத்துக் கொள்ளுங்கள் guys – இது தொடர்கதையாகிடாதிருக்க நிச்சயம் ஆனமட்டிலும் முயற்சிப்போம் ! பிழையான பிரதிகளை கேள்விகளின்றி மாற்றித் தந்திடுவோம்; So தயை கூர்ந்து பொறுமை காத்திடக் கோருகிறோம் !
And கையிருப்பு நிலவரம் இது : மொத்தமே 100 பிரதிகளுக்குள் தான் stock இருக்கும். அவற்றுள் பாகம் 2-ஐ முழுமையாகச் சரிபார்த்த பின்பே இனி விற்பனை செய்திடப் போகிறோம் என்பதால் தற்காலிகமாய் ஆன்லைன் புக்கிங்கை நிறுத்தியுள்ளோம் ! அதே போல ஏஜெண்ட்கள் வாயிலாக வாங்கிட முயற்சிக்கும் நண்பர்களும் சற்றே பொறுத்திட வேண்டி வரலாம்! So வரும் வியாழன் வரைக்கும் இரத்தப் படல dispatch இராது! அதன் பொருட்டு நமது ஆபீஸ் பெண்மணிகளைக் காய்ச்சிட வேண்டாமே – ப்ளீஸ்! பிழை அவர்களல்லது அல்ல!
And சின்னதொரு கோரிக்கையுமே all! மீதமிருப்பது சொற்பப் பிரதிகளே என்பதால் இதுவரையிலும் வாங்கியிருக்கா நண்பர்களுக்கு வாய்ப்புத் தரும் விதமாய் – "
ஒன்று படிக்க – மீதம் சேகரிக்க” என்ற பாலிஸியை இம்முறை மட்டுமாவது விட்டுத் தரக் கோருகிறேன் !
அப்புறம் இன்னொரு சந்தோஷ update கூட :
நம் நண்பர் கார்திகைப் பாண்டியன் அவர்களுக்கு - ஆர்தர் ரைம்போவின் “நரகத்தில் ஒரு பருவகாலம்” என்கிற கவிதைத் தொகுப்பினை மொழிபெயர்த்தமைக்கு - கவிஞர் ஆத்மாநாம் மொழிபெயர்ப்பு விருது வழங்கப்பட்டிருக்கிறது. !! Awesome news !! வாழ்த்துக்கள் நண்பரே !! And உங்களுக்கோர் ஆச்சர்யம் காத்துள்ளது விரைவில் என்று மட்டும் சொல்லி வைக்கிறேன் இப்போதைக்கு !
Bye for now folks…. See you around!! Have an awesome Sunday !!