நண்பர்களே,
வணக்கம். மழை பெய்து ஓய்ந்தது போலுள்ளது - ஐந்தரை மாதங்களாய் தலைக்குள் குந்திக்கிடந்த அட்டவணையினை ஒப்படைத்ததும் ; அதனைத் தொடர்ந்தான உங்களின் அலசல்களோடு பயணித்ததும் ! புனித மனிடோவின் புண்ணியத்தில் சிரத்துக்கு இம்முறை சேதாரம் சொற்பமே என்ற நிம்மதி ஒரு பக்கமும், புதுப் பயணப் பாதை சார்ந்த உங்களின் பாசிட்டிவான எண்ணங்களின் உற்சாகம் இன்னொரு பக்கமும் உரம் சேர்த்திட, விசில் போட காரணங்கள் கணிசமாகவே கிட்டி விட்டுள்ளன ! Anyways நான் தற்சமயத்துக்குச் செய்திருப்பது பணிகளின் சுலபப் பகுதியினை மாத்திரமே ; மெயின் பிக்சரில் தான் சவால்களே காத்துள்ளன என்பதை நான் மறந்திடவில்லை ! "Walking the talk" என்பார்கள் ; வாயால் சுடும் வடைகளை, செயலிலும் சுட்டுக் காட்ட வேண்டிய அவசியத்தினைக் குறிப்பிடும் விதமாய் ! 2022-ன் முழுமையிலும் நான் செய்திட வேண்டியது அதையே எனும் போது, "30 நாட்களில் மொறு மொறு வடை சுடுவது எப்படி ?" என்று ஏதாச்சும் புக் கிடைக்கிறதா என்று தேடிக்கொண்டிருக்கிறேன் ! நம் மத்தியிலுள்ள வடை மாஸ்டர்களும் இயன்ற ஒத்தாசைகளைச் செய்யலாம் !! (பருப்பு வடையா ? உளுந்து வடையா ? உளுந்து வடையெனில் ஓட்டையோடா ? ஓட்டையின்றியா ? எது போட தெரிஞ்சிருக்கணும்னு தெளிவா சொல்லலியேன்னு அலசல்கள் பின்தொடர்ந்திடுமோ ?? )
ரைட்டு....இனி எதை பற்றிப் பேசலாம் ? இந்த 2 இதழ்கள் கொண்ட அட்டவணையினில் உள்ள பின்னணி stats பற்றிக் கொஞ்சம் ரமணா ஸ்டைலில் பார்ப்போமா ?
- கதைகள்னு பார்த்தாக்கா - மொத்தம் 34 !!
- அதிலே அத்தியாயங்கள்னு பார்த்தால் - மொத்தம் 46 !!
- பக்கங்களோட எண்ணிக்கையோ - 3876 !!
- இதிலே கலரிலே ...1980 பக்கங்கள் !!
- Black & White-லே ...1896 பக்கங்கள் !!
- ஆக மாசம் ஒண்ணுக்கு சராசரியா நீங்க படிக்க வேண்டிப் போறது - 323 பக்கங்கள் !!
- இது கூட ஜம்போவோ ; அம்போவோன்னு புக்கு ஒண்ணு வருதே ......அதையும் சேர்த்துக்கிட்டா இந்த நம்பர் இன்னும் எகிறும் !!
- Smashing 70's ன்னு வரப் போறதையும் சேர்த்துக்கிட்டா - இந்த ரமணாவுக்கு கால்குலேட்டரிலே பேட்டரி மாத்தித் தர வேண்டி வரும் !!
- மாசாமாசம் முழுசையும் படிச்சுட்டாக்கா, யாரையாச்சும் நடுமூக்கிலேயே குத்த ரெடியாகிட்டீங்கன்னு அர்த்தம் !!
- பாதி மட்டும் படிச்சாக்கா குப்புறப்படுத்துக் குறட்டை விட ரெடியாகிட்டீங்கன்னு அர்த்தம் !!
- டப்பாவையே ஓடைக்காம மொத்தத்தையும் பரணிலே போட்டு வைச்சாக்கா - ஐஞ்சே வருஷத்திலே சென்னையிலே ஒரு வீடு வாங்க ரெடியாகிடுவீங்கன்னு அர்த்தம் !
Jokes apart, எண்ணிக்கையில் இம்முறை இதழ்கள் குறைவெனினும், அவை முன்னிறுத்தவுள்ள வாசிப்புகள் செம விசாலம் ! And கென்யா, பொலிவியா, மாஸ்கோ ; பாரிஸ் ; பனாமா ; அமெரிக்க மேற்கு மாகாணங்கள் ; என்றொரு செம டூருமே காத்துள்ளது !! அதிலும் ஒற்றை நொடி..ஒன்பது தோட்டாக்கள் ஆல்பத்தின் அமெரிக்க தரிசனம் awesome ரகம் !! முன்னெல்லாம் "இதயம் பேசுகிறது" என்றொரு பத்திரிகையினில் அதன் எடிட்டர் திரு. மணியன் அவர்கள் தேசம் தேசமாய்ப் பயணித்து, அந்த அனுபவங்களை பயணக்கட்டுரையாய் எழுதுவது ரொம்பவே பிரபலம் ! அநேகமாய் அடுத்தாண்டின் இறுதியினில் நீங்களுமே - "எது, நம்ம சிகாகோ போற பஸ்லாம் நிக்குமே, அந்த சான் பிரான்சிஸ்கோ முனையிலே நிக்கிறேன் மாப்பிள்ளை ...யெஸ்...யெஸ்...!!" என்று அலப்பறைகள் விட்டாலும் no ஆச்சர்யம்ஸ் !!
இந்த முறை அட்டவணையினில் எல்லாமே கமர்ஷியல் ரகங்கள் என்றாலும், நான் குறிப்பாய் எதிர்பார்க்கும் கதைகள் சிலவுள்ளன !!
அவற்றுள் முதலானது - நம்ம ப்ளூகோட்ஸ் கும்பலின் "களமெங்கும் காதல் !" யுத்தத்தில் சேதம் ரொம்ப ஆகுது ; சிப்பாய்களை தக்க வைக்க ஏதாச்சும் செய்தாகணுமே என்றெண்ணும் ஜெனெரல் ஒரு அழகான நர்ஸை களப்பணிக்கென நியமிக்கிறார் !! அப்புறமென்ன - நம்ம பயலுக அடிக்கும் லவ்ஸ் லூட்டிகள் வயிற்றைப் பதம் பார்க்கின்றன !! இப்போதெல்லாம் டெக்ஸ் நீங்கலாக பாக்கி உருப்படிகளுக்கெல்லாமே - "ஆண்டுக்கொரு ஸ்லாட் மதி" - எனவொரு mindset க்கு நாம் வந்திருக்க, இது போன்ற திறமையான அணிக்கும் ஸ்லாட்களை ரேஷன் தான் செய்திட வேண்டிப் போகிறது ! இல்லாவிடின் ஸ்கூபி & ரூபி இன்னொரு சீட் பிடித்திருப்பார்கள் !!
அப்புறம் நமது மேக் & ஜாக் ஜோடியின் அந்த "ரீலா..? ரியலா..?" சாகசமுமே பேனா பிடிக்க இப்போவே நமைச்சலை உண்டாக்கும் கதை !! ஒரு ஹாலிவுட் ஈரோ சார் திரையிலே புலி ; நெசத்துலே சுண்டெலி ! அவருக்கு ஒரு ஆபத்தெனும் போது, அவரை மாதிரியே இருக்கும் நம்ம ஜாக்கை கூட்டிப் போய் அவருக்கு டூப் போட வைக்கிறார்கள் ! ஆனால் அந்த ஈரோ சாருக்கு அநியாயத்துக்கு பெண்பிள்ளை ரசிகைகள் இருந்து வைக்க, அம்புட்டும் நம்ம ஜாக்கை மொய்க்க ஆரம்பிக்கின்றன !! செம ஜாலி ஆல்பம் !!
And நம்ம லக்கியின் ஆல்பத்திலுமே அந்த "நில்..கவனி..சிரி"....சும்மா ரவுண்டு கட்டி அடிக்கிறது !! அதிலும் குறிப்பாய் அந்நாட்களின் பல்லை பிடுங்கும் அந்த டெக்னிக் - செமயோ செம ! டாக்டர் சுந்தர் கண்ணில மட்டும் இந்த ஆல்பத்தைக் காட்டப்படாது என்பேன் !!
'தல' என்றென்றும் ரவுசுப் பார்ட்டியே என்றாலும், இம்முறை அவரது ஆல்பங்களில் பல எனக்குள் பரபரப்பை ஏற்றி விட்டுள்ளன !! முதலாவதானது - கலரில் காத்துள்ள "காதல் யுத்தம்" !! Tex வெளியீடு # 575-க்கென உருவான ஆல்பமிது, ஓவியர் சிவிடெல்லியின் கைவண்ணத்தினில் !! காதலி / மனைவி லிலித்துடன் ஒரு பொறியில் சிக்கிடும் நம்மவர், அதனிலிருந்து விடுபட நடத்திடும் அதிரடிகள் தெறி மாஸ் ! And லிலித்துமே ஆக்ஷனில் சளைத்தவரல்ல என்பதை ரசித்திடவுள்ளோம் ! எதிர்பார்ப்பைப் தூண்டிய இன்னொரு ஆல்பம் - "புயலில் ஒரு புதையல் வேட்டை !" ஒரு தங்கத் தேட்டையின் தேடல்...கறுப்பின துவேஷ பூமியில் பயணம் என ஓட்டமெடுக்கும் கதையின் க்ளைமாக்சில், ஒரு சூறாவளியின் மத்தியில் நடக்கும் மோதல்கள் wow ரகம் !!
And of course - தாத்தாக்களுடனான பயணத்தைக் தொடரவுமே ஐ-யா-ம் வெயிட்டிங்க்க்க் !! ஆண்டின் confirmed துடைப்பக் கட்டைச் சாத்து வாய்ப்புகள் கொண்ட ஒரே ஆல்பம் எனும் போது எனது ஆர்வங்களும் இரு மடங்காகின்றன !! ஆண்டின் முதல் காலிறுதியிலேயே பெருசுகளை களம் காணச் செய்தாக வேண்டுமென எண்ணியுள்ளேன் !! பார்ப்போமே !
Moving on, சில updates !!
- SMASHING '70s முன்பதிவுகள் கடைசி வாரத்தினில் செம விறுவிறுப்பு !! And சில நண்பர்களோ, தீபாவளி வரைக்குமாவது இதற்கான அவகாசத்தினை நீட்டித்துத் தரக்கோரி தினமும் போன் செய்து வருவதாய் நம்மாட்கள் சொல்லி வருகின்றனர் ! ரெகுலர் சந்தா அறிவிப்பு அக்டோபர் 15 என்பதால் அதற்கு முன்னமே SMASHING 70's முன்பதிவுக் கடையினை மூடிவிட்டால் தேவலாம் என்ற எண்ணத்தினில் தான் நானிருந்தேன் ; but நண்பர்களின் கோரிக்கை definitely logical ! So நவம்பர் 15 வரைக்கும் SMASHING 70's முன்பதிவு அவகாசத்தினை நீட்டித்துக் கொள்வதில் நிச்சயமாய் சிரமங்களிராது !!
- புதுச் சந்தாக்களை 2 தவணைகளில் செலுத்திட ஏற்பாடுகளும் இப்போது open ! ஆன்லைனில் சந்தா கட்டிடும் நண்பர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் !!
- அப்புறம் ஆச்சர்யமூட்டும் விதமாய் அந்த "இ.ப" மறுக்கா மறுக்கா மறுக்கா தயார் செய்திடும் முனைவிற்கு தம்மாத்தூண்டிலும் தம்மாத்துண்டு கோரிக்கைகளே இதுவரையிலும் வந்துள்ளன ! அந்த எண்ணிக்கையே ஆளாளுக்கு ரெண்டு, மூணு - என்ற ரீதியில் கோரியுள்ளதால் மாத்திரமே தேறியுள்ளது ! அவ்விதமின்றி, ஆளுக்கு "ஒண்ணே ஒண்ணு" என்று ஆர்டர் செய்திருப்பின், இரண்டே பேரின் கைவிரல்களுக்குள் ஒட்டு மொத்தமும் அடங்கியிருக்கும் ! So இன்னும் கொஞ்சம் அவகாசமாளித்து விட்டுப் பார்ப்போம் !! நெட்டில் ஓடி வந்த பத்தாயிரம், எட்டாயிரம் விலைகளெல்லாம் கண்கட்டி வித்தை என்பதாகவே தோணுகிறது ! நிச்சயமாய் 'பன்னு வேணும்..வெண்ணை வேணும்...இ.ப. வேணும்னு' சுற்றித்திரிய பெரும் திரளெல்லாம் இனியும் இல்லவே இல்லை !!
Before I sign out, முக்கியமான சில கோரிக்கைகள் & வினவல்கள் & விண்ணப்பம் !! "என்னப்பு ...பீடிகைலாம் பலம்மா கீதே ? இன்னா மேட்டரு ?" என்று தோன்றுகிறதா ? எல்லாமே காத்திருக்கும் நமது FFS சார்ந்தது !! So here goes :
Here is the கேள்வி :
- FFS இதழின் கதைகள் பாட்டை நான் முழுசுமாய்ப் பார்த்துக் கொள்வேன் தான் ; no worries on that !! ஆனால் இந்த மைல்கல் இதழினில் கதைகளைத் தாண்டி நீங்கள் பார்க்க விரும்பிடும் பக்கங்கள் என்னவாக இருக்குமோ ? இப்போதைக்கு நான் போட்டு வைத்துள்ள பட்டியல் பின்வருமாறு :
- சீனியரின் தலையங்கம்
- நமது கருணையானந்தம் அவர்களின் நினைவலைகள்
- அப்புறம் 2 சர்ப்ரைஸ் flashbacks !
- நமது மறைந்த ஓவியருக்கொரு tribute !
- நமது பழம் ஓவியர் சிகாமணி பற்றி !
- நமது தற்போதைய டீமின் போட்டோக்கள் !
- வாசக நினைவலைகள்
- என் பார்வையில் TOP 5 இதழ்கள் !
- 50 ஆண்டுகளின் புக்ஸ் பட்டியல் 1 to 457
இவை தவிர, வேறென்ன பகுதிகள் சேர்த்தால் சுவாரஸ்யமாக இருந்திடக்கூடுமோ ? Your thoughts ப்ளீஸ் ?
Here is the கோரிக்கை :
- இந்த ஐம்பதாவது ஆண்டுமலர் நெருங்க நெருங்க எனக்கோ பணிகள் சார்ந்த பயத்தில் பட்டாம்பூச்சிகள் வயிற்றில் நாட்டியமாட, சீனியர் எடிட்டரோ - "நான் ஏதாச்சும் கட்டுரை எழுதட்டா ? நான் ஏதாச்சும் கவிதை எழுதட்டா ?" என்ற பரபரப்பில் வீட்டில் கிடக்கும் கோல புக்கின் ஓரஞ்சாரங்களில் கூட -"கண்மணி, அன்போடு - சீனியர் - நான் - எழுதும் கவிதையே !!" என்று எழுதிப் பார்த்துக் கொண்டிருக்கிறார் !! So அவரது ஆர்வத்துக்குத் தீனி போட முத்து காமிக்சின் துவக்க நாட்கள் சார்ந்த கேள்விகளாய் ஏதேனும் உங்களுக்கு இருப்பின், you can ask them !! இங்கே வேண்டாம் ப்ளீஸ் - நமது மின்னஞ்சலுக்கு (lioncomics@yahoo.com) - ASK THE SENIOR EDITOR என்ற தலைப்புடன் உங்கள் கேள்விகளை அனுப்பிடலாம் ! But "இதழ் நம்பர் 48-ல் பக்கம் நம்பர் 37-ல் அந்த படம் ஏன் ?" "புக் நம்பர் 16 க்கு அட்டைப்படம் போட்டது யார் ?" என்ற ரீதியிலான கேள்விகள் வேணாமே - ப்ளீஸ் ? அவரது வயதுக்கும், நினைவுத் திறனுக்கும் மதிப்பளிக்கும் கேள்விகளாய் இருப்பின் great !! சுவாரஸ்யமாய் கேள்விகளும், பதில்களும் அமைந்திடும் பட்சத்தில் அவற்றை FFS இதழினில் வெளியிடப் பார்க்கலாம் !!
And here is the விண்ணப்பம் :
இது பொதுவானதொரு சமாச்சாரம் ! "விமர்சனம்னா காரமா தானிருக்கும் ; இங்கே உனக்கு பல்லாக்கு தூக்குறவங்களுக்கு தான் இடம் !! நல்லதுக்கு சொன்னா உனக்கு காதிலே ஏறாது !! கெட்டு, குட்டிச்சுவராகி தான் போவே " இத்யாதி..இத்யாதி என்ற அபத்தங்களோடு அவ்வப்போது யாரேனும் ஆஜராவது காலமாய் இங்கொரு தொடர்கதையாகவே இருந்து வருவதில் இரகசியங்களில்லை ! ஒரு செயலில் ; ஒரு கருத்தில் உடன்பாடில்லா முதல் நொடியில் ஆளாளுக்கு கண் சிவப்பதென்பது இப்போதெல்லாம் மாஸ்க் போடுவதைக் காட்டிலும் சுலபமாகிப் போய்விட்டுள்ளது ! And "கரடியாய்க் கத்தினாலும், செவிடன் காதிலே ஊதிய சங்காட்டம் இருக்கே !!" என்ற கடுப்பில் இன்ன பிற தளங்களில் போய் தங்கள் ரௌத்திரங்களுக்கு வடிகால் தேடுவதுமே தொடர்கிறது ! ராத்திரியே இது மாறிடவும் போவதில்லை ; ராத்திரியே என்னை யோக்கியனென்று ஏற்றுக் கொள்ளவும் போவதில்லை என்றாலும் ஒரு சின்ன நினைவுப் பகிரல் - இக்ளியூண்டு மாற்றத்தைக் கொணர உதவினாலும் நலமே என்ற எதிர்பார்ப்பினில் :
9 வருடங்களுக்கு முன்னே என்று நினைக்கிறேன் ! நமது மறுவருகை கொண்டாடப்பட்டு ; சமூக வலைத்தள புதியவனான நானும் சிலாகிக்கப்பட்டு, அப்பாலிக்கா பந்தாடவும்பட்ட நாட்களவை ! புள்ளையாண்டான் சென்னையில் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்க, இரண்டாம் ஆண்டின் நடுவாக்கிலிருந்து எனது வீட்டம்மா சிவகாசியில் பாதி நேரம், சென்னையில் மீதி நேரமென்று குப்பை கொட்டிக் கொண்டிருந்த நாட்கள் என்பதால், சிவகாசியில் வீட்டில் நானும், வேதாளங்களும் மாத்திரமே பெரும்பாலும் ஜாகை ! So வெறித்தனமாய் வேலை செய்து வருவேன் - வேளை கேட்ட வேளைகளிலும் !! கொஞ்சம் கொஞ்சமாய் நாம் சிறகுகள் விரித்து - "ஒரு சிப்பாயின் சுவடுகள்" என்ற கிராபிக் நாவலை முயற்சிக்கும் 'தகிரியத்தை' தேற்றியிருந்தோம் !
And எனது அந்நேரத்து அனுபவத்தில் செம complex பணி அது ! கருணையானந்தம் அவர்களே அதற்குப் பேனா பிடித்திருந்தார் & நான் எடிட்டிங் மட்டும் செய்திருந்தேன் - தெரிந்த மேம்போக்குப் பாணியினில் ! இதழும் வெளியாகியது ; நிறைய பேர் டிரௌசருக்குள் பூரான் புகுந்தது போல தெறித்து ஓடியதும், கொஞ்சப் பேர் மெய்மறந்து ரசித்ததும் நடந்தது ! அப்போதெல்லாம் வீட்டிலிருந்த அலுவல் அறையினுள் ஒரு பக்கம் கம்பியூட்டர் ஆன் ஆகியே கிடக்கும் - சதா சர்வ காலமும் ! நம்ம ஸ்டீல் கவிதைகளெல்லாம் பொழிய துவங்கியிரா நாட்களெனும் போது - நான்பாட்டுக்கு தைரியமாய் நமது பிளாக்கில் குடி கிடப்பேன் ; comments வர வர வாசித்தபடிக்கே ! ஒரு கல்யாண வீட்டையே சுத்தம் செய்யத்தேவைப்படக்கூடிய துடைப்பங்களையும் ; ஒரு டஜன் கல்யாண வீடுகளில் ஆட்டையைப் போடக்கூடிய எண்ணிக்கையிலான செருப்புகளையுமே அந்நேரத்துக்கு அடியேன் சேகரித்திருந்தேன் தான் என்பதால் உசிரைக் கையில் பிடித்தபடிக்கே தான் அலசல்களைப் பார்த்துக் கொண்டிருப்பேன் ! ஒரு மாதிரியாய் "சிப்பாயின் சுவடுகள்" பெரும் சேதாரங்களை ஏற்படுத்தாது நீங்கி விட்டதாய் நான் நினைத்துக் கொண்டிருந்த போது தான் - 'காமா சோமா ' என்ற பெயரிருப்பினும் 'தெளிவா - திருத்தமா ' எழுதக்கூடிய அந்த நண்பரின் ஒரு நெடும் பின்னூட்டம் பதிவாகியது ! படித்த நொடியினில் எனது முதல் ரியாக்ஷன் 'சுள்ளென்ற' எரிச்சல் தான் என்பது நினைவுள்ளது ! 'இவருக்கு வேற வேலையே கிடையாது - குறை சொல்றதைத் தாண்டி !' என்றபடிக்கு சிஸ்டத்தை ஆப் செய்து விட்டு போய்ப் படுத்து விட்டேன் ! ஆனால் தூக்கம் பிடிக்கவில்லை ; அந்தப் பதிவினை நான் அரைகுறையாய் மட்டுமே வாசித்திருந்த போதிலும், எனக்குள்ளே ஒரு நெருடலாகவே தொடர்ந்திட, ராத்திரி 3 மணிக்கு எழுந்து சிஸ்டத்தை மறுபடியும் போட்டு விட்டு பின்னூட்டத்தை நிதானமாய்ப் படித்தேன் ! அதன் சாரம் இது தான் :
சிப்பாயின் சுவடுகள் கி.நா.வின் இறுதிப் பக்கத்தினில் - அந்தக் கதையின் பிரதான மனுஷனான அந்த பிரெஞ்சு ஜர்னலிஸ்ட்டை போட்டுத் தள்ள அரசாங்கமே ஆட்களை அனுப்பியிருக்கும் ! ஒரு கார் வந்து நிற்க, கொலையாளி இவரது வீட்டு பெல்லை அடிக்க - அப்புறமாய் மீதத்தை நமது கற்பனைக்கு விட்டுவிட்டு END போட்டிருப்பார் கதாசிரியர் ! ஆனால் - நாமோ அதனை சரியாய் உள்வாங்கியிருக்காது, யாரோ ஒரு ஆள் வந்து பெல் அடிக்கிறான் போல என்ற ரேஞ்சில் கையாண்டிருந்தோம் ! நமது நண்பரோ, இந்தப் பக்கத்தின் ஒரிஜினலை இன்னொரு நண்பரிடமிருந்து வாங்கி, பிரெஞ்சின் அர்த்தத்தை அவருடன் சேர்ந்து அலசி - நாம் செய்திருந்த பிழையைச் சுட்டிக் காட்டியிருந்தார் !
ராத்திரி 3 என்றாலும் எனக்கு தூக்கம் சுத்தமாய் தொலைந்திருந்தது ! பர பரவென எனது மேஜையிலிருந்த அந்த ஆல்பத்தை ; அதன் பிரெஞ்சு to இங்கிலீஷ் ஸ்கிரிப்டை ; அப்புறம் அச்சான நமது புக்கை எடுத்து வைத்துக் கொண்டு - google translator சகிதம் பொறுமையாய் ஆராய்ந்தால் - நண்பரின் குற்றச்சாட்டு 'காமா-சோமா' அல்ல ; சாரம் மிகுந்ததே என்பது புரிந்தது ! கடைசிப் பக்கம் என்பதால் சரி பார்ப்பதில் சிரமம் இருக்கவில்லை ; so பிழை எங்கு நேர்ந்தது என்று தேடுவதும் சுலபமாகவே இருந்தது ! பிரெஞ்சில் இருந்தான ஆங்கில மொழிபெயர்ப்பு துல்லியமாய் இல்லை என்பது முதல் குறையென்று புரிந்தது ! And அதனை தமிழில் மொழிபெயர்க்கும் சமயத்தில் முற்றிலுமாய் கோட்டை விட்டிருப்பதும் புரிந்தது !!
கொஞ்ச நேரத்துக்கு காற்றாடி ஓடும் சத்தம் மட்டுமே எனக்குத் துணை ; நாலு மணிவாக்கிலேயே 'டிங்க டிங்க டிங்க' வென்று மணியடித்துக் கொண்டே பால் வண்டிகள் போகும் சத்தம் கேட்ட போது தான் தெளிந்தேன் ! நான் இதனை எவ்விதம் கோட்டை விட்டேன் ?' என்ற ஆராய்வுக்கு அவசியமே இருக்கவில்லை - simply becos அன்று வரையிலும் ஒவ்வொரு பிற மொழி ஆல்பத்து எடிட்டிங்கின் போதும் மூலத்திலிருந்தான இங்கிலீஷ் ஸ்கிரிப்டை நான் ஒரு நாளும் கையில் வைத்துக் கொண்டிருக்க மெனெக்கெட்டதில்லை ! 'சரியாகத் தான் எழுதியிருப்பார் ; பன்ச் வரிகளில் மாற்றங்கள் ; பிழை திருத்தங்கள் ; காமெடிக்குத் தேவையான மாற்றங்கள் மட்டுமே நம்ம வேலை !' என்பதான நினைப்பில் இத்தனை காலத்தை ஒட்டியிருந்தேன் எனும் போது, சுலப, நேர்கோட்டுக் கதைக்களங்களில் இது போலான புரிதல் சார்ந்த சிக்கல்கள் பெருசாய் எழுந்திருக்கவில்லை ! ஆனால் இதுவோ செம complex கி.நா & நமக்கொரு first எனும் போது, ஒட்டு மொத்தமாய் நமது டீமே சொதப்பியிருந்தது புரிந்தது ! யார் எது செய்திருந்தாலும், செய்யாது போயிருந்தாலும், எடிட்டர் என்ற முறையில் அந்தப் பொறுப்பு முழுக்கவே என்னது ; so அந்த சொதப்பலின் பொறுப்பும் என்னது என்பதை உணர்ந்த போது கீழ்வானம் சிவக்க ஆரம்பித்திருந்தது !
அன்றைக்கு அரம்பித்தவன் தான் ; இதே போலான பிழை இனியொருமுறை நிகழ அனுமதிக்கலாகாது என்ற வெறியில் - இன்றைய நொடி வரையிலும் ஒவ்வொரு பணியின் போதும் ஒரிஜினல் ; english script ; தமிழாக்கம் என அத்தனையையும் தூக்கி வைத்துக் கொண்டு, அவசியப்பட்டால் கூகுள் ட்ரான்ஸ்லேட்டரையும் துணைக்கு அழைத்துக் கொண்டே பணியாற்றி வருகிறேன் ! Not that I have been flawless ; ஆனால் இது மாதிரியான ஜீவநாடிச் சொதப்பல்களுக்கு இடம் தந்திருக்கவில்லை என்ற நம்பிக்கை எனக்குள்ளது ! அன்றைக்கு அந்த நண்பர் தனது பின்னூட்டத்தையுமே 'காமா-சோமா'வென அமைத்திருப்பின், maybe கடுப்பில் தாண்டிப் போயிருந்திருப்பேன் & தொடர்ந்த நாட்களில் அதை விடவும் மட்டமானதொரு குழியில் விழவும் செய்திருப்பேன் ! அன்றைக்கு அவரது பின்னூட்டத்தில் சம அளவிலான சாரமும், காரமும் இருந்ததால் புரிதலில் சிரமம் இருக்கவில்லை & அது இன்று வரையிலும் எனக்கு உதவியுள்ளது !
And அந்தப் பழக்கத்தின் பலனை போன வருஷத்து 2132 மீட்டர் (XIII ஆல்பம்) எனக்கு நிரம்பவே சுட்டிக்காட்டியது ! நமது வழக்கமான மொழிபெயர்ப்பாள மேடம் எழுதியதை ; கருணையானந்தம் அவர்கள் தமிழாக்கம் செய்திருந்தார் ! ஆனால் எனக்கோ நெருட, Cinebook ஆங்கிலப் பதிப்பின் pdf கோரி ஒரு மின்னஞ்சலைத் தட்டி விட்டேன் & லொஜக்கென வந்து சேர்ந்தது ! ஒரு பிரெஞ்சு பிரஜை எழுதுவதற்கும், பிரெஞ்சைக் கற்றுக் கொண்டவர் எழுதுவதற்கும் மத்தியிலான வேறுபாட்டை அன்றைக்குத் தான் பிடரியில் அறைந்தது போல உணர்ந்தேன் ! நமது பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளரின் ஸ்கிரிப்ட் 90% சரியே ; ஆனால் இ.ப. போலொரு complex கதைக்கு நூற்றுக்கு நூறு இன்றிப் போனால் நொண்டியே அடிக்கணும் என்பது புரிந்திட, நான் Cinebook ஒரிஜினலைக் கையில் கொண்டு முழுசையும் மாற்றி எழுத நேரிட்டது ! So இங்கும் நான் உணர்ந்த பாடங்கள் இரண்டு !! ஒரு துளி ஆக்கபூர்வம் ஒரு ஆயுட்கால பலன் தரவல்லது ; அதே சமயம் காதிலே புகை உமிழ்ந்தபடியே கொட்டும் உஷ்ணங்கள் அடுத்த பொழுதில் காற்றோடு போகவல்லது என்பது பாடம் # 1 ! So உங்களின் சுவடுகள் எவ்விதம் தங்கி நிற்பது நலமென்ற தீர்மானத்தை உங்களிடமே விட்டு விடுகிறேன் ! And பாடம் # 2 : இ.ப. புது ஆல்பங்களை பொறுத்தவரையிலும் இனிமேல் Cinebook ஆங்கிலப்பதிப்பு வெளியாகிடும் வரையிலும் நாம் தமிழில் முந்திடும் எண்ணம் நஹி !!
விமர்சனத்திற்கு யாரும் விதிவிலக்கல்ல ; பிழைகளுக்குமே தான் ! ஆனால் என்னைப் பார்த்த நொடியினில் ; என்னோடு உடன்படா முதல் தருணத்தினில் - 'போட்றா தூக்கிலே !' என்று பாய்ந்திடும் முனைப்புகள் தான் சிக்கலே ! ஒரு கொலைக்குற்றவாளிக்குக் கூட சந்தேகத்தின் பலனைத் தரும் தேசத்தில் - ஒரு மாறுபட்ட எண்ணத்துக்கு இத்தனை பகடிகளும், ரௌத்திரங்களும் எழும் போது, அவற்றின் பின்னணியினில் உள்ளது உங்களின் காமிக்ஸ் நேசம் மட்டுமே தானா ? என்பது கேள்வியாகிடுகிறது ! உங்களின் அவாக்கள் மெய்யாகவே நமது நலன் சார்ந்தவைகளாக இருப்பினும், இந்த மூத்திரச் சந்துக்கு இட்டுச் செல்லும் ஆத்திரப்பாய்ச்சல்கள், அவற்றிற்கு வேறு மாதிரியான சாயம் பூசி விடுகின்றன & end of the day - செவிடன் காதில ஊதின சங்கு மட்டுமே பலன் !
இதோ இன்றைக்கும் நண்பர் இங்கு அவ்வப்போது வந்து போகிறார் தான் ; தெரிந்த மார்க்கங்களிலெல்லாம் வாரிடவும் செய்கிறார் தான் ! ஆனால் அவரை யாரும் கடிவதுமில்லை ; அவருக்கும் இங்கு வந்து செல்வதில் நெருடல்களுமில்லையே ? Constructive criticism ; ஆக்கபூர்வமான விமர்சனங்கள் அனைவருக்கும் நலம் பயக்கும் என்பதே இந்தக் கதையின் கருத்து !
And இதோ ஓரிரு தினங்களுக்கு முன்னே கூட நண்பரொருவர் இம்மாதத்து புக் சார்ந்த ஏதோவொரு விமர்சனத்தினில் "சித்தே" ' சித்தே " தொடர்கிறது என்று எழுதியிருந்தது நினைவுக்கு வருகிறது ! எழுத்தென்பது அவரவரது formative years களில் அவரவரது வாசிப்புகள் தாக்கங்களோடு பயணிப்பது என்பது எனது கருத்து ! So maybe நான் அந்நாட்களில் வாசித்த சமாச்சாரங்களுக்குள் இந்த "சித்தே" வார்த்தைப் பிரயோகம் இருந்திருக்கலாம் & அதுவே இன்றைக்கு எனது பேனாவின் வெளிப்பாட்டிலும் பிரதிபலித்திருக்கலாம் ! யோசித்துப் பார்க்கும் போது, இந்த வார்த்தை நமது சிறு வட்டத்துக்கு நெருடும் பட்சத்தில், அதனிடத்தில் வேறொரு பதத்தை நுழைப்பதொன்றும் கம்பு சுத்தும் சிரமமல்ல என்பது புரிந்தது !! ஏற்கனவே கருணையானந்தம் அவர்கள் பயன்படுத்தும் "சாக்கடைப் புழுவே " ; "அப்பனே" ; "பிரமணமாய்" போன்ற வார்த்தைகளை கண்ணில் காட்டுவதில்லை இப்போதெல்லாம் ! அந்த லிஸ்டுக்கு "சித்தே" வையும் pack up செய்தால் போச்சு !So சித்தே பொறுத்துக் கொள்ளுங்கள் நண்பரே ; ஏற்கனவே ரெடியாகி விட்டுள்ள புக்சில் அந்த வார்த்தை தென்பட்டால் சித்தே பல்லைக் கடித்துக் கொள்ளுங்கள் ; இனி வரவுள்ள பணிகளில் அந்த வார்த்தைக்கு பை-பாஸ் போட்டுத் தாண்டிச் செல்ல சித்தே அல்ல ; நிரம்பவே முயற்சிப்பேன் !!
இதையும் வரி விடாமல் படித்து விட்டு, இன்றிரவே க்ரூப்களில் "கெக்கெக்கே.... முழியாங்கண்ணனை கடுப்பேத்த நாளைக்கு உன் turn மாப்பு ; ரெடியாகிக்கோ !!" என்ற பகடிகள் நிகழும் என்பதை அறியாதவனல்ல நான் ! But end of the day - இங்கு நிலவும் சந்தோஷத்தினையும், நட்பினையும் எதுவும் அசைக்காதென்பதை ஆண்டவன் சொல்றான் ; ஆந்தைவிழியன் 'ஆமாம்' போடறான் !! இப்போ நடையைக் கட்டுறான் !! Bye all ...see you around !!
And oh yes - சந்தாக்களை தெறிக்க விடத்துவங்கி விட்டீர்கள் முதலிரு தினங்களிலேயே !!! And surprise ...surprise ....95 சதவிகிதம் :ஒரே நாடு-ஒரே காமிக்ஸ்" சந்தாப் பிரிவுக்கே !! Thanks a ton folks !! விசில் போடுறேன் உங்கள் நேசங்களுக்கு !! Been a fantastic start !!!!