வணக்கம். வீட்டிலிருந்து பணி செய்வோர் ; வீட்டம்மாவுக்கெனப் பணி செய்வோர் ; நாட்டுக்கெனப் பணி செய்வோர் ; நாட்டு நடப்பைப் பேசியே நாக்குத் தள்ளச் செய்யும் பணி செய்வோர் ; மல்லாக்கப் படுத்து டிக்டாக் பார்த்திடும் பணி செய்வோர் ; வாசலில் அமர்ந்தே வாட்சப்பில் வடாம் காயப்போடும் பணி செய்வோர் ; இத்யாதி...இத்யாதி என்று இந்த லாக்டௌன் நாட்கள் பலதரப்பட்ட மனுஷாளை இந்தச் சமூகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி வருகிறது ! நாமோ 'பொம்மை புக் புள்ளிங்கோ' என்ற அடையாளத்தையே மறந்தார்களாய் ஜாலியாய் அரட்டைகளுள் மூழ்கிக் கிடக்க, இந்த வாரத்திலாவது காமிக்ஸ் பக்கமாய் வண்டியைத் திருப்புவோமென்று நினைத்தேன் ! And கடந்த பதிவினில் சொன்னது போல, 2013-ல் வெளி வந்த நமது Hot & Cool ஸ்பெஷல் இதழை அலசுவது மாத்திரமன்றி, நண்பர் காமிக்லவர் ராகவன் suggest செய்த இன்னொரு back in time & behind the scenes படலத்தினுள் குதித்திடவும் முயற்சிக்கலாம் ! அந்தப் பரிந்துரை இதுவே : //start with behind the scenes of Super Circus !// இந்த ரிவர்ஸ் பெடல் போடும் படலங்கள் எல்லாமே நமக்கு மிர்ணா ரசிக மன்றத்தில் சேர்வதுக்கு இணையான குஷி மேட்டர் என்பதால் பின்னோக்கிய அந்தப் பயணத்தோடே ஆரம்பிப்போமே !
1987 ஜனவரி !! கிழக்கிந்தியக் கம்பெனியின் சாம்ராஜ்யத்தை விரிவு செய்து கொண்டே சென்ற வெள்ளைக்கார துரைமார் கூட அந்நாட்களில் அத்தனை கெத்து காட்டியிருப்பார்களா ? என்பது சந்தேகமே !! ஆனால் இந்த 20 வயது தொழிலதிபர் cum எடிட்டர் அந்நாட்களில் ஆபீசுக்குப் பயணமாகும் சமயமெல்லாம், உள்ளுக்குள்
'ஒரேயொரு எடிட்டர் வரார் ; ஒரேயொரு எடிட்டர் வரார் !' என்ற சைரன் அலறாத குறை தான் ! ஏன் என்கிறீர்களா ? ஒன்றல்ல - இரண்டல்ல - மூன்றல்ல - மொத்தம் நான்கு இதழ்களை மாதா மாதம் வெளியிடும் வாய்ப்பு ஒரு குழந்தைப் பையனுக்குக் கிடைத்திட்டால், லோகமே ஒரு சுந்தர பூமியாய்த் தென்படாது போகுமா - என்ன ? அந்நாட்களில், நமது பிரின்டிங் பிரிவினில் 2 ஷிப்ட்களில் விடிய விடிய வேலைகள் ஓடிக்கொண்டிருக்கும் என்பதால், ஞாயிறு மதியம் வரைக்கும் நமது அலுவலக ஷட்டர்கள் உசக்கேயே தான் நிலைகொண்டிருக்கும் ! நிறைய இரவுகளில் ஆர்டிஸ்ட்கள் ; அச்சுக் கோர்க்கும் பிரிவினருமே ஓவர்டைம் வேலை செய்து கொண்டிருப்பார்கள் என்பதால், சதா நேரமும் திருவிழாக்கோலத்திலிருக்கும் அந்த ஆபிசிலிருந்து தூக்கம் சொக்கும் வரையிலும் கிளம்பவே மனம் வராது ! So ஒவ்வொரு நாளுமே ராக்கூத்துக்களை 2 மணி வரைக்கும் அடித்த பிற்பாடு தான் வீட்டுக்கே திரும்புவேன் ! அதன் பலனாய் காலைகளில் 11 மணி வரையிலும் கண் திறக்காது ! என் தம்பி, தங்கை எப்போதோ ஸ்கூலுக்குக் கிளம்பிப் போயிருக்க, அப்பாவும், தாத்தாவும் வெவ்வேறு நேரங்களில் ஆபீசுக்குக் கிளம்பியிருக்க, நானோ பிடாரியாட்டம் தூக்கத்தில் லயித்துக் கிடப்பேன் ! நமக்கோ வீட்டில் எப்போதுமே ராஜமரியாதை தான் ; இரு பெண்பிள்ளைகளுக்குப் பின்னே பிறந்த ஆண் வாரிசு என்பதில் துவங்கி, அந்நாட்களில் இங்கிலீஷ் மீடியத்தில் படித்த முதல் புள்ளையாண்டான் என்பதில் தொடர்ந்து ; பள்ளியிலும் topper ஆக இருந்து வந்த கெத்தும் கைகோர்க்க - என்றைக்குமே வீட்டில் நமக்கு மருவாதி ஒரு மிடறு ஜாஸ்தியே ! அதுவும் டூ டைம்ஸ் கடல் கடந்து பயணித்திருக்கும் எடிட்டர்ஜீ என்ற அடையாளமும் புதுசாய் ஒட்டிக்கொண்டிருக்கும் சமயம் கேட்கவும் வேண்டுமா - என்ன ? இடியே விழுந்தாலும் பகாசுரனாய்த் தூங்கும் புள்ளையின் தூக்கம் கெட்டு விடக்கூடாதென்று அந்த அறைக்கதவைச் சாற்றி வைத்தே வீட்டுக்குள் அம்மா மாத்திரம் வேலை செய்து கொண்டிருக்க, சாவகாசமாய்க் குளித்துக், கிளம்பி, நண்பகலுக்குக் கொஞ்சம் முன்னே ஆபீசுக்குள் என்ட்ரி ஆவது வழக்கம் !
ஆபீசே மின்சாரம் பாய்ந்தது போல் பரபரத்துக் கிடக்கும் அந்நேரத்துக்கு ! ஏஜெண்ட்கள் பொறுமையாய்க் காத்துக் கிடப்பர் - புதுசாய் மலர்ந்திருந்த ஜூனியர் லயன் & மினி லயனுக்கு டெபாசிட் கட்டி புக்குகளை வாங்கிச் செல்ல ! ஏற்கனவே ஏஜென்சி கொடுத்திருக்கும் நகர்களிலிருந்துமே போட்டி ஏஜெண்ட்கள் வந்திருப்பார் - '
நான் அவரை விட ஜாஸ்தி புக் வாங்கிக்குறேன் ; எனக்கு ஏஜென்சியை மாத்தி விடுங்க !' என்ற கோரிக்கையோடு ! மதுரையில் 1800 பிரதிகள் விற்றுக் கொண்டிருந்த நிலையில், புதுசாயொரு முகவர் வந்திருந்தார் அவ்விதமாய் ! நானோ குசும்புக்கு "
ஏற்கனவே இருக்கிறவர் 2500 புக் எடுக்கிறார் சார் ; மாத்துறதா எண்ணமில்லை !" என்று அள்ளி விட்டேன் ! அவரோ துளியும் திகைக்காமல், "
அதனாலென்ன ? நான் 3000 எடுக்குறேன் !" என்றபடிக்கே பைக்குள் கைவிட்டு, அதற்கான டெபாசிட் தொகையினை எடுத்து மேஜையில் வைத்ததெல்லாம் நேற்றைக்குப் போலுள்ளது !! மதுரை மாநகருக்கு மட்டுமே 3000 பிரதிகள் விற்ற நாட்களையெல்லாம் இன்றைக்கு நினைவு கூர்ந்தால், பெருமூச்சு ; சிறுமூச்சு ; நடுமூச்செல்லாமே விடத் தோன்றுகிறது !! Those were the days !!
4 இதழ்களை அந்த ஜனவரியில் கட்டவிழ்த்திருப்பினும், என்னைப் பொறுத்தவரைக்கும் அவற்றுள் சிகரமாய் எனக்குத் தென்பட்டது - இரண்டே ரூபாய் விலையில் முழு வண்ணத்தில் வெளி வந்திருந்த
ஜூனியர் லயன் காமிக்சின் முதல் இதழான
லக்கி லூக்கின் "சூப்பர் சர்க்கஸ்" தான் ! லக்கி லூக்குடனான எனது முதல்ப் பரிச்சயமே -
WESTERN CIRCUS என்ற பெயரில் 1970-களின் ஏதோவொரு பொழுதில் EGMONT என்ற பெரும் குழுமம் வெளியிட்ட ஆங்கில இதழ் தான் ! In fact லக்கியின் தொடருக்கு நாம் உரிமைகள் வாங்கிடும் வரையிலும் நான் படித்திருந்தே ஒரே லக்கி சாகசமும் அதுவே ! ஏதோவொரு வடநாட்டுப் பயணத்தின் போது, ஏதோவொரு பழைய புத்தகக் கடையில் என் தந்தை 1980-களில் வாங்கி வந்த புக் அது ! இன்றைய CINEBOOK ஆங்கிலப் பதிப்புகளில் மொழிபெயர்ப்பு அட்டகாசம் என்றால், அந்நாட்களின் EGMONT-ல் கொஞ்சமும் குறைவிலா அதகளம் தான் ! டெக்ஸ் வில்லரை ஒரு சீரியஸான ; ஆக்ஷன் கௌபாயாய்ப் பார்த்திருந்தவனுக்கு - கார்டூனில் கலக்கும் இந்த ஒல்லிக்குச்சிக் கௌபாய், செம கில்லியாய்த் தென்பட்டார் ! அந்த ஒரே புக்கை திரும்பத் திரும்பப் படித்தவனுக்கு அந்த வசனங்களெல்லாம் உறக்கத்தில் கூட நினைவிருக்கும் என்ற அளவுக்கு மனப்பாடம் ! அதிலும் சினம் கொண்ட அந்த சர்க்கஸ் யானை ஊருக்குள் அந்த வைரப்பல் வில்லனை விரட்டிப் போகும் sequences அசாத்தியமாய் உள்ளுக்குள் குடியேறியிருந்தன ! So பின்னாட்களில் எடிட்டர் எனும் குல்லாயும் சாத்தியமாகி ; பிரான்க்கோ-பெல்ஜியக் கதைக் கதவுகளும் நமக்குத் திறக்கும் வாய்ப்பும் கிட்டிய பின்னே, இந்த கார்ட்டூன் சூப்பர் ஸ்டாரை தமிழ் பேசச் செய்யும் ஆசை ஏகமாய் உள்ளுக்குள் பிரவாகமெடுத்தது !
ஆனால் மிட்டாய்க் கடைக்குள் புகுந்த பச்சைப் புள்ளையாய் 1985-ல் கண்ணில் பட்ட அத்தனை ஆக்ஷன் கதைகளுமே ஒன்றுக்கொன்று போட்டி போடுவதாய்த் தென்பட, கதைத்தேர்வுகளில் அவற்றிற்கே முன்னுரிமை தந்திடத் தோன்றியது - அந்த முதல் வருஷத்தில் ! And let's not forget : அந்த நாட்களில் கபிஷ் ; விச்சு & கிச்சு ; ராமு & சோமு போன்ற பக்க நிரப்பிகள் மட்டுமே நமக்குக் கார்ட்டூன்களின் அடையாளங்கள் என்பதால் முதல் ஆண்டுக்கொள்முதலில் லக்கி லூக்குக்கு இடமிருக்கவில்லை ! இத்தனைக்கும் பாரிசில் தலைமையகம் கொண்டு செயல்பட்டு வந்த Dargaud Editeur நிறுவனமே லக்கியின் உரிமைகளை வைத்திருந்தனர் & அவர்களோடு ஏற்கனவே ஒப்பந்தங்கள் ஓடிக்கொண்டிருந்தன ! ஆனால் அவர்களிடம் நாம் செய்த முதல் கொள்முதல்களோ - XIII தொடர் + ஜாகஜ வீரர் ரோஜரின் தொடர் ! So 1986-ல் இரண்டாவதுவாட்டி பொட்டிகளைத் தூக்கிக் கொண்டு பிராங்பர்ட் புறப்பட்ட சமயம் எனது இலக்குகளாய்ப் பிரதானமாய்த் தென்பட்ட நாயகர்கள் 4 பேர் !
*இரும்புக்கை உளவாளி வில்சன்
*BATMAN
*கராத்தே டாக்டர்
*லக்கி லூக்
அந்நாட்களில் லக்கி லூக் ஹிந்தியிலும் வெளி வந்து கொண்டிருந்தார் - வண்ணத்தில் ; நமது தற்போதைய MAXI சைசில் ! டில்லியில் இருந்த கோவர்ஸன்ஸ் பதிப்பகம் இதனைச் செய்து கொண்டிருந்ததால் - நாமும் அதே பாணியில், கலரில் முயற்சிக்கத் தயாரெனும் பட்சம் - லக்கி லூக்கைத் தமிழ் பேசச் செய்ய அனுமதி கிட்டிடும் என்பது பிராங்பர்ட் சந்திப்பின் போது புரிந்தது ! ஆனால் எனக்கோ அந்தப் பெரிய ஸைஸைப் பார்த்த மறுகணமே பேதி எடுக்காத குறை தான் - becos 1986-ல் திகில் காமிக்ஸின் முதல் 3 இதழ்களையும் அந்தப் பெரிய சைசில் போட்டு விட்டு, நான் வாங்கிய சாத்துக்களை 'கைப்புள்ளை' கூட கட்டதுரையிடம் வாங்கியிருக்க முடியாது ! So பெரிய சைசுக்கு வாய்ப்பே இல்லை என்ற தீர்மானத்தில் அன்றைய இரவு ரூமில் அமர்ந்து லக்கியையும் பாக்கெட் சைசுக்குள் அடைக்க வழியுண்டா ? என்று தேடினேன் ! பின்னாட்களில் அந்தக் கொடுமைகளையும் ஓரிரு சந்தர்ப்பங்களில் நிகழ்த்தினோம் என்றாலும், அந்த முதல் ஆல்பத்துக்குப் பாக்கெட் சைஸ் என்ற திட்டமிடலோடு படைப்பாளிகளிடம் போய் நின்றால், பிய்ந்த விளக்குமாற்றால் தான் சாத்துவார்கள் என்று உள்ளுக்குள் உடுக்கையடித்தது ! So 'பெருசும் ஆகாது ; சிறுசும் சுகப்படாது ; விலையும் அந்நாட்களின் அந்த ரூ.2 என்ற வரம்பினைத் தாண்டிடக்கூடாதென்ற' நிர்ப்பந்தங்கள் இருக்க - ஏதோவொரு குருட்டுத்தனமான கணக்கைப் போட்டு அந்த மீடியம் சைசில் முழு வண்ணம் என்ற முயற்சிக்கு டிக் அடித்தேன் ! மறு நாள் மதியம் Dargaud ஸ்டாலுக்குப் போன சமயம், எனது திட்டமிடலைச் சொன்ன போது பொறுமையாய்க் கேட்டுக் கொண்டார்கள் ! அவர்கள் மட்டும், அந்த MAXI சைசில் தான் லக்கியை அனுமதிப்போமென்ற பிடிவாதம் காட்டியிருக்கும் பட்சத்தில் - 'ஊரு
க்குப் போய் கலந்து பேசி கடுதாசி போடுறேன்' என்று தான் நடையைக் கட்டியிருப்பேன் என்பது உறுதியே ! ஏனெனில் லக்கியின் மீதிருந்த மையலைக் காட்டிலும், பெரிய சைஸ் மீதிருந்த 'டர்' ஜாஸ்தி அப்போது ! அந்நாட்களில் டார்கோ நிறுவனத்தின் உரிமைகள் விநியோகத் தலைமைப் பொறுப்பில் இருந்த திருமதி ஆந்த்தியா ஷாகிள்டன் நமது மார்க்கெட்டின் விசித்திர பாக்கெட் சைஸ் மோகம் பற்றியறிவார் ! So கொஞ்ச நேர சிந்தனைக்குப் பின்னே சம்மதமென்று சொன்னார் நமது கோரிக்கைக்கு ! ஒரு வேளை முட்டைக்கண்ணன் மனசு -கினசு மாறியவனாய் மறு நாளைக்கு வந்து ஏதாச்சுமொரு மூக்குப் பொடிடப்பி சைசுக்குப் புக்கைப் போடட்டுமா ? என்று கேட்டு வைப்பதற்கு முன்பாய் இசைவைச் சொல்லி வைத்தால் தேவலாமென்று நினைத்திருப்பாரோ என்னவோ !! நான் செம குஷியாய் கைகுலுக்கி விட்டுக் கிளம்பினேன் !
ஆனால் ஸ்டாலில் இருந்து நாலு எட்டு வைப்பதற்குள் இன்னொரு விஷயம் மண்டைக்குள் உறைக்க, திரும்பவும் ஓடினேன் அவரிடம் ! முந்தைய வருடம் இப்படித் தான் XIII தொடரின் இரண்டாவது ஆல்பத்தைப் பார்த்து மெய் மறந்து போனவனாய், அதெல்லாம் ஒரு நெடும் தொடரின் பாகம் # 2 என்பதை அறியாமலே, அதனிற்கு ஆர்டர் செய்திருந்தேன் ! ஆனால் 3 மாதங்கள் கழித்து "இரத்தப் படலம்" ஆல்பம் # 1-ன் போட்டோ பிரிண்ட்கள் ஏர்மெயிலில் வந்து சேர்ந்த போது பேய் முழி முழித்தது ; அப்புறமாய் தான் இது 13 பாகங்களாய் ஓடவிருக்கும் மெகா தொடர் என்பதைக் கேட்டறிந்து வாய் பிளந்தது, என்று சகலமும் அப்போது நினைவுக்கு வந்தது ! So இம்முறையும் அப்படியே விட்டு, அவர்களும் லக்கி தொடரின் முதல் ஆல்பத்தைத் தூக்கி அனுப்பி வைத்தால் எனது WESTERN CIRCUS கனவு இதழ் சொதப்பிடுமே என்ற பயத்தில் -
"I want WESTERN CIRCUS....only WESTERN CIRCUS !!" என்று திருமதி ஷாகிள்டனிடம் சொல்லி வைத்தேன் ! அவருமே புன்னகையோடு தலையசைக்க, அடுத்த பிட்டைப் போடும் வேலையையும் ஆரம்பித்தேன் - தயக்கத்தோடே !
"
அது வந்து....பிராங்பர்ட் புத்தக விழா முடிஞ்ச பிற்பாடு நானும் பாரிசுக்கு வர்றதா இருக்கேன் ; அங்கே வச்சு இந்தக் கதைக்கான ஒரிஜினல்களை நான் வாங்கிக்க ஏதாச்சும் வழி பண்ண முடியுமா ?" என்று கேட்ட போது அவர் முகம் மாறிப் போனது !! கம்பியூட்டர் ஏதும் இல்லாத அந்த நாட்களில், அத்தனையுமே Manual Typing தான் எனும் போது, ஊர் திரும்பிய பின்னே அவர்களுக்கு குறுக்கைக் கழற்றும் அளவுக்கு வேலைகள் குவிந்திருக்கும் என்பது தெரியாதில்லை தான் ! அது மட்டுமன்றி, அந்நாட்களில் நமக்கு வழங்கப்படும் black & white பிரோமைட் போட்டோ பிரிண்ட்களை அவர்களது Archives பிரிவிலிருந்து வரவழைப்பதென்பது பொறுமையைச் சோதிக்கும் சமாச்சாரம் என்பதையும் அறிவேன் தான் ! புளியோதரையைக் கட்டிக் கொண்டு ஸ்டூடியோ வாசலில் தேவுடா காக்காத குறையாய்த் தான் அவற்றைச் சேகரிக்க வேண்டி வரும் !! இதில் கொடுமை என்னவெனில், அந்நாட்களில் இந்தக் கதைகளையெல்லாம் black & white-ல் வெளியிடத் தீர்மானித்த மாங்காய் மடையன் அநேகமாய் நான் மாத்திரமே ! இதர மொழிகளில் வெளியிடும், இதர தேசத்துப் பதிப்பகங்கள் அனைத்துக்குமே கலர் தான் template என்பதால், ஒரு பெரும் தொகையினை டெபாசிட்டாய் வாங்கி வைத்துக் கொண்டு அவர்கள் அனைவருக்குமே 4 கலர்களுக்கான பாசிட்டிவ் பிலிம்களை அனுப்புவார்கள் பாரிஸிலிருந்து ! அந்தந்த தேசங்களில் அச்சுப் பணிகள் முடிவுற்ற பின்னே பிலிம்களை ரிட்டர்ன் செய்தும் விடுவார்கள் ! முறைப்படிப் பார்த்தால் - லக்கி லூக்கை கலரில் வெளியிடுவதென்ற தீர்மானம் எடுத்த பிற்பாடு, இந்த வழிமுறைகளைத் தான் நாமும் பின்பற்றியிருக்க வேண்டும் ! மற்ற எல்லோரையும் போல ஒரு வைப்புத் தொகையை டெபாசிட் செய்து விட்டு, Air Cargo-வில் Freight Collect-ல் வந்திடும் பாசிட்டிவ் பிலிம்களுக்கு வாடகை தந்து க்ளியர் செய்து, அச்சிட்ட பிற்பாடு, மறுக்கா வாடகை தந்து இங்கிருந்து அனுப்பியிருக்க வேண்டும் ! ஆனால் ஒரே கோவணத்தை துவைத்துக் காயப்போட்டு, மறுநாளைக்கும் அணியும் நமக்கெல்லாம் இதைக் கேட்ட போதே கேராகிப் போனது !!
- டெபாசிட் கட்ட வசதி லேது !
- Air Cargo கட்டணமென்றால் காதில் பிளட் வருது !
- அச்சிட்ட பிற்பாடு பிலிம்களைத் திருப்பி அனுப்பிட இரண்டாவது கட்டணமென்றால் பயத்தில் மூச்சா வருது !
- எல்லாவற்றிற்கும் மேலாய் - அந்நாட்களில் பாசிட்டிவ் பிலிம்களிலிருந்து அச்சிடுவதெனில், அதற்குப் பயன்படுத்த வேண்டிய பிராசசிங் வழிமுறைகள் காஸ்ட்லீயான விஷயம் ! நாம் பயன்படுத்தியதோ நெகட்டீவ்களிலிருந்து ப்ராசஸிங் செய்திடும் சஸ்தாவான யுக்திகள் ! So அந்த கூடுதல் செலவை நினைத்தாலே வியர்த்துக் கொட்டுது !
என்பதை ஏற்கனவே அவர்களிடம் ஒப்பித்திருந்தேன் என்பதால், எனது கோரிக்கையைக் கேட்ட்டவர் உதட்டைப் பிதுக்கினார் ! "குறைந்த பட்சம் ஒரு வாரமாச்சும் ஆகுமே - bromide prints ஆர்டர் செய்து வரவழைக்க ! நாங்கள் ஊருக்குத் திரும்பும் மறுநாளே நீயும் வந்து நின்று, பிரிண்ட் வேண்டுமென்றால் எப்படி முடியும் ?" என்ற போது எனக்கு முகம் தொங்கிப் போனது ! அந்நாட்களில் இந்த ஒரிஜினல்கள் கனமான பிலிம் டப்பிக்களில் பேக் செய்யப்பட்டு Sea Mail வாயிலாகத் தான் வந்திடும் - சாவகாசமாய் இரண்டரை மாதங்கள் கழித்து ! நானோ, 'ஊருக்குப் போறோம் ; அலப்பரையைக் குடுக்கிறோம் ; ஜனவரியில், கலரிலே புது வரிசையிலே லக்கியைக் களமிறக்குறோம் !' என்ற கனவில் இருந்தேன் ! இது போன்ற திரும்பிப்பார்க்கும் தருணங்களில் தான் புரிகிறது, அந்நாட்களில் நம்மைக் கைதூக்கி விட ஒவ்வொரு படைப்பாளி நிறுவனமும் எத்தனை பரிவைக் காட்டியுள்ளனர் என்பது !! என்ன நினைத்தாரோ, தெரியாது - தரையை தொடும் நீளத்துக்குத் தொங்கிக் கிடந்த எனது முகரைக்கட்டையைப் பார்த்தவர், "அடுத்த வெள்ளி மாலைக்குள் எப்படியேனும் பிரிண்ட்களுக்கு ஏற்பாடு செய்து விடுகிறேன் ! சனிக்கிழமை நாங்கள் பணியாற்றுவதில்லை என்பதால் ஆபீசுக்கு வந்து அவற்றைச் சேகரித்துப் போக உனக்கு வசதிப்படாது ; ஆனாலும் அவற்றைக் கையோடு வீட்டுக்கு எடுத்துப் போய் விட்டு, சனிக்கிழமை பகலில் உன்னை பாரிஸின் ஏதேனுமொரு இடத்தில் சந்தித்துத் தந்து விடுகிறேன் ! ஹாப்பியா ?" என்று கேட்டார் ! எனக்கோ தலீவர் படத்தின் முதல் நாள் ஷோவுக்கு டிக்கெட் கிடைத்த பீலிங்கு !! ஒரு நூறு நன்றிகளை சொல்லி விட்டு கிளம்பினேன் !
Looking back - அத்தனை மெனெக்கெடலுக்கு நாம் சத்தியமாய் ஓர்த்தே கிடையாது தான் - அவர்கள் வெறும் வியாபாரக் கண்ணோட்டத்தில் பார்த்திருக்கும் பட்சத்தில் என்பது புரிகிறது ! அவர்கள் நாட்டில் கொஞ்சம் பட்டாணிச் சுண்டலும், கொஞ்சம் பொறிகடலையும் வாங்கும் காசைத் தான் நாம் ராயல்டி என்ற பெயரில் எல்லாப் படைப்பாளிகளுக்குமே தந்து கொண்டிருந்தோம் ! தவிர, நம்மை விடவும் மெகா மெகாப் பதிப்பகங்களுக்கு ஒதுக்கிட வேண்டிய நேரங்களை எவ்வித சங்கடங்களையும் காட்டிடாது நமக்குத் தர ஒருத்தர் பாக்கியின்றி அத்தனை பேருமே முன்வந்தார்கள் ! அன்றைக்கு திருமதி.ஷாகிள்டனின்பார்வையில், கிடாவெட்டுக்குப் பறக்கும் இந்தக் கவுண்டரின் கொப்பளிக்கும் ஆர்வம் மட்டுமே பிரதானமாய்த் தெரிந்திருக்க வேண்டும் ; என்னால் நேர்ந்திட்ட சுமைகள் ஒரு பெரும் சிக்கலாய் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை ! 'இல்லே...முறைப்படி அடுத்த ஒரு மாசத்துக்குள்ளாற தான் காண்டிராக்ட் ரெடி பண்ண முடியும் ; அதுக்குப் பின்னே நீ காசை அனுப்பிய பிற்பாடு தான் ஒரிஜினல்களை அனுப்ப வசதிப்படும் !' என்று அவர் கறாராய்ச் சொல்லியிருந்தால், நிச்சயமாய் அதனில் தவறேதும் இருந்திராது ! என்ன - "1987 ஜனவரியில் ரிலீஸ்" என்ற எனது கலர் கனவுகள் மெய்யாகிடுவது மட்டும் ரொம்பவே தள்ளிப்போயிருக்கும் ! So நிறைய அலுவலகச் சம்பிரதாயங்களை byepass செய்து, நம் ஆர்வங்களுக்கு உதவிட அவர் அன்றைக்குக் காட்டிய பரிவே கார்ட்டூன் தடம் போட உதவிய முதல் தண்டவாளம் என்பேன் !
இந்த தயாளங்கள் இன்றளவிற்கும் தொடர்கதைகளே ! இதோ இந்த மார்ச் மாதத்தில் கூட அதற்கொரு 'பளிச்' நிரூபணம் கிட்டியது ! '5 நிமிட வாசிப்பு ; படித்த நொடியே என்னைக் கட்டுண்டு போகச்செய்ததொரு பொம்மை புக் ; மார்ச்சில் சர்ப்ரைஸாக வருகிறதென்று' நான் சொன்னது நினைவிருக்கலாம் ! அந்தப் புது ஆல்பம் என் கண்ணில் பட்டதே இந்த மார்ச் ஒன்பதாம் தேதி தான் ! அன்றைக்கே மின்னஞ்சலைத் தட்டி விட்டேன் - "இந்த ஒரு ஆல்பத்தை மட்டும் fasttrack செய்து உடனே கைக்குக் கிடைக்கச் செய்ய ஏதேனும் வாய்ப்புள்ளதா ?" என்ற கோரிக்கையோடு ! இந்த கொரோனா கொடூரம் ஐரோப்பாவில் நங்கூரமிடத் துவங்கி, ஒவ்வொரு தேசத்தையும் தெறிக்க விட்டுக் கொண்டிருந்த அந்தத் துவக்க நாட்களிலும், மார்ச் 10 தேதிக்கே மின்னஞ்சலில் காண்டிராக்ட் வந்தது ! மறு நாளே நாம் பணம் அனுப்பிட, அதிலிருந்து இரண்டாவது நாளில் டிஜிட்டல் கோப்புகள் மின்னஞ்சலில் காத்துக் கிடந்தன !! இந்த ஹை-டெக் யுகத்தில் கூட மொத்தமே மூன்றே நாட்களில் ஒரு புத்தம் புதுக் கதைக்கு ஒப்பந்தம் செய்து, வைரஸின் தாக்கத்துக்கு மத்தியிலும் கதையினை வரவழைப்பது என்பது nothing short of a miracle !!
Exit பிராங்பர்ட், பாரிசுக்கு கிளம்பியது ; அந்தப் பயணத்தின் போது ஒரு பிரவுன் பூதத்திடம் சிக்கித் தெறித்தது ; தப்பிப் பிழைத்து ஓட்டமெடுத்தவன், மறு நாள் "கராத்தே டாக்டர்" ; "சூப்பர் பைலட் டைகர்" & "மறையும் மாயாவி ஜாக்" கதைகளை வெளியிட்டு வந்த Vaillant Miroir Sprint Publications எனும் நிறுவனத்தைச் சந்தித்தது ; அவர்களது ஆபீசில் கொக்கோ கோலா டின்னை ஸ்டைலாய்த் திறக்கிறேன் பேர்வழியென்று வெள்ளை நிறப் பேண்ட் முழுக்க ஊற்றிக் கொண்டது ; அந்தத் தொடர்கள் மிதமான உப்மாக்களே என்பதை அறியாதவனாய் அவற்றிற்கு நமது சம்மதத்தைச் சொன்னது ; பெருசாய் எதையோ சாதித்த உற்சாகத்தில் ரயில் மூலமாய் ஸ்விட்சர்லாந்தின் தலைநகர் ஸ்யூரிக் நகருக்கு பராக்குப் பார்க்கப் புறப்பட்டுச் சென்றது ; அழகோவியமான அந்த பூமியில் வரிசை வரிசையாய் அணிவகுத்து நின்ற புகழ்பெற்ற சுவிஸ் பேங்குகளை தவிர்த்து அங்கே வேறு எதையும் காணோமே என்று விழித்தது ; 'ரைட்டு...நானும் பார்த்துட்டேன்லே சுவிச்சர்லாந்தை' என்று பீற்றிக் கொள்ளும் பொருட்டு, சிலபல போட்டோக்களை எடுத்து விட்டு, மறுபடியும் பாரிசுக்குத் திரும்ப ராத்திரி ரயிலைப் பிடித்தது - என்று எல்லாமே வேக வேகமாய் நடந்தேறிய நிகழ்வுகள் !
"வெள்ளியிரவு ரயில் ஏறினால், நடுச்சாமத்தில் ஏதோவொரு ஸ்டேஷனில் மாறி, சனி அதிகாலையில் பாரிஸ் ; அங்கே ஒரு ரூமைப் போட்டுப்புட்டுத் தங்கறோம் ; பகலிலே WESTERN CIRCUS ஒரிஜினல்களை திருமதி.ஷாகில்டனைச் சந்திச்சு வாங்கிடறோம் ; அப்பாலிக்கா ஊரில் இருப்போர்க்கு ஆளுக்கொரு பென்சில், ரப்பர், குச்சி முட்டாய் என்று ஏதேனும் souvenirs வாங்கிவிட்டால் மூட்டையைக் கட்டிவிட்டு, ஞாயிறு காலையில் இந்தியாவுக்குத் திரும்புறோம் !" என்ற திட்டமிடல் தலைக்குள் தெளிவாக இருந்தது ! ரயிலையும் பிடித்தேன் ; காலையில் ஆறரை மணிவாக்கில் பாரிஸின் Gare Du Lyon ஸ்டேஷனையும் எட்டிப் பிடித்தேன் ! அதிகாலையில் சிலு சிலுவென்ற காற்றோடு பாரிஸ் ரொம்பவே ரம்யமாகத் தென்பட்டது எனக்கு ! மூன்றே நாட்களுக்கு முன்னே, பூதத்துடனான இக்கட்டின் போது, அதே நகரத்தை தெரிந்த அத்தனை கெட்ட வார்த்தைகளாலும் கழுவிக் கழுவி ஊத்தியிருந்தேன் தலைக்குள் ! ஆனால் காட்சிகள் மாறும் போது ; சூழல்கள் மாறும் போது, சிந்தனைகளும் மாறிடும் என்பது புரிந்தது ! 'அன்பே வா' தலைவரைப் போல துள்ளிக் குதித்தபடிக்கே ஸ்டேஷனை விட்டு வெளியேறியவன் கண்ணில் "லாட்ஜ்" என்ற போர்டுகள் தென்படுகின்றனவா என்று பார்த்தேன் ! ஐரோப்பாவின் ஒவ்வொரு முக்கிய நகரிலும் ரயில் நிலையம் ஊருக்குள்ளே மையமாய் இருப்பது வாடிக்கை & அவற்றைச் சுற்றியே குறைச்சலான வாடகையிலான லாட்ஜ்களும் இருக்குமென்பதை இந்நேரத்துக்குத் தெரிந்து வைத்திருந்தவனாய் எதிரே போன தெருவினுள் விறு விறுவென்று நடக்க ஆரம்பித்தேன் ! சற்றைக்கெல்லாம் ரோட்டின் ரெண்டு பக்கங்களுமே தங்கும் விடுதிகள் கண்ணில் படத் துவங்கின !
ரொம்பவே டப்ஸாவாகவும் தெரியாத, அதே சமயம் ரொம்பவே பாக்கெட்டுக்கு வெடி வைக்காத மாதிரியான ஹோட்டலைத் தேடியபடியே நடந்தவன் ஏதோ ஒன்றினுள் புகுந்தேன் ! மேஜைக்குப் பின்னே புல் மீல்ஸை ரெண்டாய் அடிக்கக்கூடிய தோரணையில் ஒரு தாட்டியமான பிரெஞ்சு ஆசாமி தூங்கி வழிந்து கொண்டிருந்தார் ! என் பின்னேயே ஒரு இளம் வெள்ளைக்கார ஜோடியும் ரூம் கேட்டு வர, அவர்கள் பிரெஞ்சில் கொடுத்த குரலுக்கு ரிசப்ஷனில் இருந்த மனுஷன் கண்விழித்துக் கொண்டார் ! முதலில் போனவன் நானே என்ற உரிமையில் 'ஒரு சிங்கிள் ரூம் வேண்டும்' என்று கேட்டேன் ! என்னை ஏற-இறங்கப் பார்த்தவர் எனக்குப் பின்னே நின்ற ஜோடியைக் கூப்பிட்டு மட மட வென புக்கிங் செய்து சாவியைக் கையில் தந்து அனுப்பி வைத்தார் ! ராவினில், ரயிலில் தொலைத்த தூக்கத்தை ரூமில் கொஞ்ச நேரமேனும் தொடரும் ஆசையில் இருந்த எனக்கோ எரிச்சலாய் இருந்தது ! மறுபடியும் கொஞ்சம் குரலை உசத்தி "ரூம் ?" என்று கேட்டேன் ! "பாசப்போர்ட் ?" என்று கையை நீட்டியவரிடம் தயாராகயிருந்த எனது பாஸ்போர்ட்டை தந்தேன் ! கையில் வாங்கிப் புரட்டி ,அங்குலம் அங்குலமாய் எழுத்துக்கூட்டி வாசிக்க ஆரம்பித்தவர் ஏனோ தெரியலை - என்னை நிமிர்ந்து பார்க்கவும், மறுபடியும் பாஸ்போர்ட்டினுள் மூழ்கவுமாய் இருந்தார் ! எனக்கு லைட்டாக நெருட ஆரம்பித்தது ! சர்வதேச டூரிஸ்ட்கள் மிகுந்ததொரு நகரே என்றாலும், பாரிசில் பிரெஞ்சு ஞானமின்றிக் குப்பை கொட்டுவது அத்தனை சுலபமல்ல என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்தேன் ! 'இந்த மொக்கைச்சாமி புதுசாய் என்ன கேட்கப் போகிறானோ ?' என்றபடிக்கே காத்திருந்தவனிடம் - "டமில் ?" என்று கேட்டான் ! 'அட..பரவாயில்லையே..... மொக்கைச்சாமியும், மூளைச்சாமி தான் போலும்' என்று நினைத்துக் கொண்டே "Yes ...from Tamilnad .." என்று பதில் சொன்னேன் ! டப்பென்று பாஸ்போர்ட்டை மூடி, கையில் தந்து விட்டு - "சாரி..நோ ரூம் !" என்று அவன் மொட்டைக்கட்டையாய்ச் சொன்ன போது எனக்கு செம கடுப்பாக இருந்தது !
'உனக்கு என்ன தான்ப்பா பிரச்சனை ?' என்று நான் இங்கிலீஷில் கேட்க, அவன் இங்கிலீஷும், பிரெஞ்சும் கலந்த பாஷையில் ஏதோ பதில் சொல்ல சுத்தமாய் எதுவும் புரியவில்லை ! '
ஒரே ஒரு நாளுக்குத் தான் ரூம் வேணும் ; நாளை காலை கிளம்பிடுவேன்" என்று அவனிடம் வாதம் பண்ணிக்கொண்டிருந்த நேரத்துக்கு, எனக்குப் பின்னே வந்து, எனக்கு முன்னமாய் ரூம் பெற்றுச் சென்றிருந்த ஜோடி நாஷ்டாவுக்கென கீழே இறங்கி வந்திருந்தனர் ! நாங்கள் பாஷை புரியாது போட்டுக்கொண்டிருந்த மல்யுத்தத்திற்கு தீர்வு காணும் விதமாய் அந்தப் பெண்மணி குறுக்கிட்டு ரிசப்ஷன் மொக்கையிடம் பேசிவிட்டு என்னிடம் அழகான மழலை இங்கிலீஷில் பேச ஆரம்பித்தாள் !
அப்புறம் தான் புரிந்தது சிக்கல் என்னவென்று ! 1983-ன் கலவரங்களைத் தொடர்ந்து ஸ்ரீலங்காவிலிருந்து நம்மவர்கள் ஏகமாய்ப் புலம் பெயர்ந்து ஐரோப்பாவில் தஞ்சம் அடைய முயற்சித்தது வரலாறு ! 1986 வாக்கில் அவர்களில் ஒரு கணிசமான எண்ணிக்கை பிரான்சில் ; குறிப்பாய் பாரிஸில் குடியேற முயற்சித்துக் கொண்டிருந்துள்ளனர் போலும் ! கலவர மண்ணிலிருந்து வருவோரும் கலவரப் பார்ட்டிகளாகவே இருப்பர் என்பது அப்போதைய பிரெஞ்சுப் பிரஜைகளின் சிந்தனையாக இருந்திட, இந்த ரிசப்ஷன் பீம்பாயும் ஒத்த எண்ணத்துக்காரனாக இருந்திருக்கிறான் ! கோழி திருடியவனைப் போல அதிகாலையில் நான் முட்டைக் கண்களை உருட்டிக் கொண்டு நின்றது பற்றாதென, எனது பாஸ்போர்ட்டில் "Tamilnadu" என்று எழுதியிருப்பதை பார்த்த அந்தச் சூரப்புலி, நானுமே புலம் பெயர்ந்திட முயற்சிக்கும் 'டமில்' மக்களுள் ஒருவன் என்று நினைத்து விட்டிருக்கிறான் ! அடுத்த வரியில் INDIA என்று எழுதியிருப்பதைக் கவனிக்கக் கூட விட்டிருக்கவில்லை - அவனுக்குள் குடியிருந்த துவேஷம் ! அந்தப் பெண்ணிடம் நான் நிலவரத்தை விளக்கிட, அவள் பிரெஞ்சில் அவனுக்குப் பாடம் எடுக்க, அப்படியும் அவனுக்கு முழுசாய்த் திருப்தி வந்த மாதிரித் தெரியலை ! அரை மனசாய் முனகிக் கொண்டே என் பாஸ்போர்ட்டை மறுபடியும் வாங்கிக் கொண்டவன் - "No Luggage ?" என்று கேட்டான் ! "
இருக்கே..இதோ இருக்கே !"- என்று என் பெட்டியை முன்னே தள்ளினேன் ! "அதை இப்படிக் கொடு !" என்கிற மாதிரி அவன் ஏதோ சொல்ல, பெட்டியை நகற்றி வைத்தேன் ! சரி, லிப்ட் ஏதும் இல்லாத அந்தப் புறாக்கூட்டு ஹோட்டலின் மேல்தளத்துக்குப் பெட்டியைச் சுமந்து போக ஒத்தாசை செய்யப் போகிறான் போலும் என்று நான் நினைத்துக் கொண்டேயிருந்த நொடியில், அந்தக் குரங்கன் அப்படியே பெட்டியைத் திறந்து தலைகீழாய் அங்கிருந்த மேஜை மீது கவிழ்த்தினான் ! வடிவேலு பாஷையில் சொல்வதானால் "
அத்தினியையும் அல்லா சல்லையாக்கிபுட்டானே நன்னாரிப்பய !!" என்று தான் கொதித்திருக்க வேண்டும் ! எனக்கு ரத்தம் தலைக்கேறி விட்டிருந்தது ; '
நீ ரூமும் தர வேண்டாம், புண்ணாக்கும் தர வேண்டாம் ! பெட்டியை திரும்ப அடுக்கிக் கொடு, நான் கிளம்புகிறேன் !" என்று கத்தினேன் ! ஆனால் அவனோ புரியாதது மாதிரி என் பெட்டிக்குள் பார்வையை ஓட விடுவதிலேயே குறியாய் இருந்தான் ! அந்தப் பட்டாணிக்கடலை மூளைக்குள் என்ன ஓடியிருக்குமோ - ஆண்டவனுக்கே வெளிச்சம் ; ஆனால் பெட்டிக்குள் ஏதேனும் துப்பாக்கியோ ; வெடி குண்டோ வைத்திருக்கிறேனா ? என்று தடியன் சோதனை செய்வதாக எனக்குப்பட்டது ! அவன் கையைப் பட்டென்று விலக்கி விட்டு, வெளியே கிடந்த துணிமணி ; இத்யாதிகளை பர பரவென்று அள்ளி பெட்டிக்குள்ளே திணித்த கையோடு, அவனிடமிருந்த பாஸ்போர்டையும் பிடுங்கி கொண்டே நடையைக் கட்டினேன் ! பாவப்பட்ட அந்தப் பெண்ணிடம் ஒரு தேங்க்ஸ் சொல்லக்கூட அந்த நொடியில் எனக்குத் தோன்றவில்லை !
வெளியே வந்தவனுக்கு அந்த நொடியில் யாரையாச்சும் செவிளோடு அறையணும் போலிருந்தது ! அரை அவருக்கு முன்னே வரையிலும் 'பாரிஸ்..பியூடிபியுல் பாரிஸ் !' என்று பாடத் தோன்றிய வாயிலோ இப்போது நுரை தள்ளாத குறை தான் ! அடுத்து எதிர்ப்பட்ட ஹோட்டலுக்குள் நுழைந்து ரூம் கேட்டேன் ; நிமிர்ந்து பார்த்தபடிக்கே உதட்டை மட்டும் பிதுக்கி விட்டுக் குனிந்து கொண்டார் அங்கிருந்த பெண்மணி ! அடுத்த 20 நிமிடங்களுக்கு இதுவே தொடர்கதையானது ; சொல்லி வைத்தார் போல அடுத்தடுத்த ஹோட்டல்கள் எல்லாமே full என்கிற மாதிரியான பதிலையே சொன்னர் ! ஆனால் எனக்கோ அந்தச் சிக்கலின் நதிமூலம் நம் தோலின் நிறம் என்பதாகவேபட்டது ! 'அடப் போங்கடா டேய்...!' என்றபடிக்கு பாரிஸின் YMCA விடுதியைத் தேடிப் போவோமா ? என்ற நினைப்பு உள்ளுக்குள் எழுந்தது ! ஆனால் விரல் நுனியில் கூகுள் இல்லாத அந்நாட்களில், பாஷை தெரியா புதியதொரு ஊரில், விசாரித்து, ஒரு இடத்தைத் தேடிக் கண்டுபிடிப்பதென்பது மொட்டைத்தலையில் முடி முளைக்கச் செய்வதற்குச் சமமான சிரம காரியம் ! மறுக்கா பெட்டியைத் தூக்கிக் கொண்டே Gare du Lyon ஸ்டேஷனுக்கு நடந்து போய், அங்கே இருக்கக்கூடிய டூரிஸ்ட் ஆபீஸ் திறக்கும் வரைக் காத்திருந்து, அவர்களிடம் இடத்தைக் கேட்டுத் தெரிந்து கொண்டு, அப்பாலிக்கா மெட்ரோ ரயிலேறி அங்கே போக வேண்டுமென்பதை நினைக்கும் போதே - ஸ்டீலின் கவிதை வரிகளை படிக்கப் போகும் பீதி உள்ளுக்குள் எழுந்தது ! '
ரைட்டு...ஆனது ஆச்சு , இங்கே கண்ணில்படும் மிச்சசம்மீதி ஹோட்டல்களிலும் விசாரித்து விட்டு தீர்மானம் பண்ணலாம் !' என்றபடிக்கே நடக்க ஆரம்பித்தேன் !
ஒரு வழியாய் அடுத்த ஹோட்டலில் இருந்த புண்ணியவாளனுக்கு நான் அவனது ஹோட்டலைத் தரைமட்டமாக்கிடப் போகும் டெர்ரர் பார்ட்டியாய்த் தென்படவில்லை போலும் ! '
ரூம் இருக்கு....ஆனாக்கா சுத்தம் பண்ணி ஒப்படைக்க ஒரு அவராச்சும் ஆகும் ; அது வரைக்கும் காத்திருக்கணும் !' என்றார் ! (
அப்போல்லாம் இந்த 12 noon செக் அவுட் வாடிக்கையெல்லாம் கிடையாது !!) அதைக் கேட்ட பிற்பாடு தான் தலைக்குப் போயிருந்த இரத்தம் சற்றே சமனப்பட்டது ! '
பரால்லே.....இந்த ஊரிலே இருக்கிற அத்தினி பேரும் டொமருங்க இல்லே தான் போலும் !!' என்று தோன்றியது ! தம்மாத்துண்டு ரிசப்ஷன், அந்தப்பக்கமாய்ப் போனால் மாடிக்குப் போகும் படிக்கட்டு ; இந்தப் பக்கம் காலை பிரேக்பாஸ்ட் கூடம் என்றிருக்க, அக்கடாவென அமர்ந்து காத்திருக்க இடமேதும் இல்லை ! '
சரி, ஒரு மணி நேரத்தில் திரும்புகிறேன் !' என்றபடிக்கே வெளியே நடந்தவனுக்கு அடுத்த ஒற்றை மணி நேரத்தைக் கழிக்க எங்கே போவதென்று தெரியவில்லை ! அதே தெருவில் சற்றே தள்ளித் தென்பட்டதொரு பெஞ்சில் திருவாளர் பொதுஜனத்தில் ஒருவர் சுருண்டு படுத்திருந்தார் ! ரைட்டு...ரொம்ப யோசிப்பது வேலைக்கு ஆகாதுடா சாமீ என்றபடிக்கே அவரது கால்பக்கமாய் மீதமிருந்த இடத்தில் அமர்ந்து கொண்டேன் ! அடுத்த ஒரு மணி நேரம் நகர்வேனா என்று அடம்பிடிக்க, எனக்கோ உள்ளுக்குள் லைட்டாய் வேறொரு பயம் ! படுத்துக் கிடக்கும் உள்ளூர் பார்ட்டியின் அப்ரஸிட்டியாக என்னைப் பாவித்து சாலையில் போவோர்-வருவோர் சில்லறையைப் போட்டுப் போனால் மானக்கேடாகிடுமே என்று !! குனிந்த தலையை நிமிர்த்த திராணியின்றி, அடுத்த 60 நிமிடங்கள் கரைய அங்கேயே காத்திருந்தேன் ! ஒரு வழியாய் ரூம் கிடைத்த பிற்பாடு தான் திருமதி.ஷாகில்டனுக்கு போன் செய்திட ஜீவன் வந்தது ! உற்சாகமாய்ப் பேசியவர், பிரோமைட் பிரிண்ட்கள் முந்தைய இரவே வந்து விட்டதாகவும், நான் எங்கே தங்கியிருக்கிறேனோ, அங்கேயே கொணர்ந்து ஒப்படைத்து விடுவதாகவும் சொன்ன போது தான், நான் தங்கியிருந்த புறாக்கூட்டின் பொருட்டு லைட்டாய் தர்மசங்கடமாய் இருந்தது ! ஆனால் வேறு வழி ? அட்ரஸையும், ஹோட்டல் பெயரையும் சொன்ன கையோடு அவசரம் அவசரமாய்க் குளித்து ரெடியாகிக் காத்திருந்தேன் !
அடுத்த 45 நிமிடங்களில் ஸ்நேகமான புன்னகையோடு ஹோட்டலின் வாசலில் ஆஜரானவரின் மார்போடு அணைத்து நின்றது ஒரு ஆரஞ் நிறப் பெட்டி ! லக்கியின் black & white ப்ரிண்ட்ஸ் அவற்றுள் தான் சுடச் சுடக் காத்திருந்தன !! அதைக் கையில் தந்து விட்டு, "Good Luck ..Safe trip !!" என்று கிளம்பியவரை அதன் பின்னே நான் பார்த்திடவே இல்லை ! அடுத்த எட்டுப் பத்து வருடங்களுக்கு மத்தியில் ஐரோப்பா செல்லும் அவசியங்களும் எழவில்லை & Dargaud நிறுவனம் இன்னொரு ஜாம்பவான் நிறுவனமான LOMBARD உடன் இணைந்த பிற்பாடு, முற்றிலும் புதுசாய் அதிகாரிகள் பொறுப்பேற்றனர் ! So திருமதி ஷாகிள்டன் பற்றி தகவல்கள் இல்லை !
ரூமுக்குத் திரும்பியவன், ஏதோ புதையலைப் பார்ப்பது போல அந்த ஆரஞ் பொட்டியைத் திறந்து black & white-ல் மினுமினுத்த ஒவ்வொரு பக்கத்தையும் அடுத்த அரை மணி நேரத்துக்கேனும் ரசித்துக் கொண்டிருந்தேன் ! ஊருக்குத் திரும்பியது ; இந்தக் கதையை நானே தான் மொழிபெயர்ப்பேன் என்று வைராக்கியமாக மொக்கைகளுக்கு மத்தியில் முயற்சித்தது ; black & white பக்கங்களில் படு ஸ்பீடாய்த் தயாரான பக்கங்களை அப்புறமாய் 4 கலர்களுக்கான நெகட்டிவ்களாய் எடுத்து, அதனில் பிராசசிங் பணியாளர்கள் 10 நாட்களாய்ப் பணியாற்றிய பின்னர் ஒரு சுபயோக சுபதினத்தில் அச்சிடத் துவங்கியது - என்று எல்லாமே கலர் கனவுகளின் அங்கங்களாய் அமைந்து போயின ! அதன் மத்தியில் நமது ஓவியர் மாலையப்பனிடம் சொல்லி, ஒரிஜினல் டிசைனைப் போலவே ஒரு ஓவியத்தை, colorful ஆகப் போட்டு வாங்கி, அட்டைப்படத்தையும் பிரிண்ட் செய்து மொத்தமாய்க் கையில் ஏந்திப் பார்த்த நொடியில் டென்சிங்காவது, இலெவென்சிங்காவது - இமய மலையை நான் ஓட்டமாகவே ஏறிப்பிடித்து கொடி நட்டியது போலான பீலிங்கு ! Yes of course - 6 மாதங்களுக்கு முன்பே 1986 கோடை மலரின் முதல் 64 பக்கங்கள் (?? maybe more / maybe less) முழு வண்ணத்தில் வெளியிட்டிருந்தோம் தான் ! ஆனால் இம்முறை புக்கே முழுசுமாய் கலர் என்பதோடு, முற்றிலுமே புதிதானதொரு ஜானரை அறிமுகம் செய்திடப்போகிறோம் என்ற குஷியும் இணைந்து கொள்ள - "
சூப்பர் சர்க்கஸ்" - சூப்பரோ சூப்பராகவே தென்பட்டது எனக்கு ! காமிக்ஸ் வாசிப்புகளுக்கோ ; ரசனைகளுக்கோ அப்பாலான எனது தாத்தா கூட, கலரிலான அந்த புக்கை ஆர்வத்தோடு புரட்டுவதைப் பார்த்த போது ரொம்பப் பெருமையாக இருந்தது ! And விற்பனையிலும் அந்த ஜனவரி 1987 ஒரு மைல்க்கல் மாதமாய் அமைந்து போக, எனது சந்தோஷங்களை விவரிக்கவும் வேணுமா ?
சிறுவயதுக் கனவு ; கண்முன்னே கலரில் மெய்யாகிக் கிடக்க ; லக்கி லூக் எனும் அந்த iconic character உங்களின் ஏகோபித்த பாராட்டுக்களையும் ஈட்டியிருக்க ; கார்ட்டூன் எனும் புதுத் தடமும் துவக்கம் கண்டிருக்க ; icing on the cake ஆக - ரூ.2 விலையில் இந்தக் கனவு சாத்தியமாகியதில் மகிழாது இருக்க முடியுமா - என்ன ? அப்புறமாய் ஏதேதோ குட்டிக்கரணங்கள் ; குரங்கு பல்டிக்கள் ; ஆயிரம், ரெண்டாயிரம் விலைகளுக்கெல்லாம் கலர் மேளாக்கள் என்று நிறைய பார்த்து விட்டோம் தான் !
ஆனால் -
லோகத்திலேயே எந்தவொரு பேமானிப் பதிப்பகமும் செய்ய நினைத்திருக்கா ஒரு குடாக்குச் செயலாக இரண்டு ரூபாய் விலையில் லக்கியை அறிமுகம் செய்திட சாத்தியமான அந்த நாட்களும், அந்த இதழும் very very dear to my heart !!
அதே போல -
பக்கம் பக்கமாய், பத்தி பத்தியாய் ஏதேதோ ஹாட்லைன்கள் ; காமிக்ஸ்டைம்கள் ; வலைப்பதிவுகள் என்றெல்லாம் எழுதிக் கிழித்துள்ளேன் தான் ! ஆனால் இருபது வயதில், பூமிக்கே (!!!!) ஒரு சேதி சொல்லும் வேகம் உள்ளுக்குள் துளிர் விட்டதன் பலனாக, இந்த இதழின் முதற்பக்கத்தில் நான் எழுதிய தலையங்கம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல் ! அந்தச் சுள்ளான் வேளையில் எனக்கு கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டு அனுபவம் இருந்ததெல்லாம் நிஜமே ; ஆனால் எனது பேனாமுனை ரொம்ப ரொம்ப raw-ஆக இருந்த நாட்களவை ! (
இன்றைக்கு என்ன வாழுதாம் ? என்று கேட்டால் 'ஹி..ஹி..' தான் பதிலுங்கோ !!) அன்றைய பொழுதில் என் மனதில் பட்டதை அழகாய்ச் சொன்னது போலொரு ஞாபகம் எனக்கு ! என்னிடம் இப்போது அந்த புக்கும் இல்லை ; அந்தத் தலையங்கமும் லேது ; but ரெண்டோ / மூணோ ஆண்டுகளுக்கு முன்னே தற்செயலாய் அந்த புக்கைப் புரட்ட வாய்ப்புக்கு கிட்டிய போது படித்தேன் & I felt good !!
Thus ends - நிறையாக காரணங்களின் பொருட்டு எனக்கு மறக்கவியலா இதழாகிப் போன அந்த
சூப்பர் சர்க்கஸ் பற்றிய மலரும் நினைவுகள் ! Ufff !! ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாள் ஆக்குவது நமது ஸ்பெஷாலிட்டி என்று கேள்விப்பட்டிருப்பீர்கள் ; ஆனால் இம்முறையோ ஒரு பெருச்சாளியையே மடியில் ஏற்றிவிட்டிருக்க, அது டைனோசராய் விஸ்வரூபம் எடுத்ததில் ஆச்சர்யமேது ? வேறு எதற்காக இந்த லாக்டௌனை அகற்றுகிறார்களோ, இல்லியோ : இந்த LIC உசரத்துப் பதிவுகளிலிருந்து உங்களை மீட்கவாவது பணிகளை மறுக்கா துவக்கினால் தேவலாம் போலும் ! எனக்கே மிடிலே !!
அதற்கு மேலும் டைப்ப தெம்பு லேது என்பதால் -
Hot & Cool ஸ்பெஷல் பற்றிய மீள்பார்வை அடுத்த பதிவினில் ! ஆங்காங்கே பலப்பல மைக்கேல் ஜாக்க்சன்களும், பிரபு தேவாக்களும் at a time ரெண்டு கால்களையும் உசத்திப் போடும் steps சகிதம் நடனப் போட்டிக்குத் தயாராகி வரும் வேளைகளுக்கு மத்தியில், இதற்குப் பதிவிடவும் முயற்சியுங்களேன் folks ?
1. சூப்பர் சர்க்கஸ் ஒரிஜினல் 1987 இதழை முதன்முறையாக நீங்கள் படித்த நாட்கள் நினைவுள்ளதா ? என்ன வயதுகளோ உங்களுக்கெல்லாம் அன்றைக்கு ?
2. இன்னமும் அந்த ஒரிஜினல் பிரதிகளை பத்திரமாய் வைத்திருப்போர் - உங்களுள் எத்தனை பேரோ ? உங்கள்வசம் அது இருப்பின், ஒரு selfie ப்ளீஸ் - with the book of course !!
3. முதல்வாட்டி படித்த போது அந்த கார்ட்டூன் ஜானர் ரசித்ததா ? அல்லது - ஆக்ஷனிலேயே வண்டியோட்டி வந்த அந்நாட்களில் இது ஏமாற்றத்தைத் தந்ததா ?
And lastly :
4.
லக்கியின் all time best TOP 3 ல் இந்த இதழ் இடம்பிடித்திடுமா - உங்களின் தேர்வுகளில் ?
Bye guys....see you around !! Stay Home & Stay Safe !!
P.S :
சிங்கத்தின் சிறுவயதில் கட்டுரையினில் ஏதோவொரு பாகத்தில் XIII தொடரின் முதல் ஆல்பம் + லுக்கி லூக்கின் ஒரிஜினல் files சேர்ந்து வந்ததாய் எழுதியிருப்பேன் ! அது தவறு ; அன்றைக்கு வந்தவை XIII & ரோஜரின் மர்மக் கத்தி ஒரிஜினல்ஸ் !
|
1986-ல் ------ பாரிஸின் பிரசித்தி பெற்ற அம்மணியோடு ! |