Powered By Blogger

Sunday, August 30, 2020

சீக்கிரமே செப்டெம்பர் !

 நண்பர்களே,

வணக்கம். நாடும், ஜனமும் ஏதேதோ இக்கட்டுகளில் சிக்கி நிற்க, 'நாட்கள்' எனும் ஓடம் மட்டும்,  'ஏலேலோ ஐலசா' என தன்பாட்டுக்கு  ஓட்டமாய் ஓடிச் செல்வதும், பிரபஞ்சப் புதிர்களுள் ஒன்று போலும் ! இதோ - லாக்டௌன் ; வைரஸ், கை கழுவு,  காய் கழுவு ; மாஸ்க் போடு ; சானிடைசருக்கு 'O' போடு... இத்யாதி இத்யாதி, என்பெனவெல்லாமே சுத்தமாய் 5 மாதங்களை விழுங்கியிருக்க - ஆண்டின் இறுதிக் க்வாட்டரை எதிர்நோக்கி நிற்கின்றோம் ! வேறொரு க்வாட்டரை வாங்கி, தம் சனநாயகக்  கடமைகளை  ஆற்றிடும்  குடிமக்களின் ஆர்வங்களை, இந்த 'பொம்மை புக் க்வாட்டர் மோகத்தால்' மிஞ்சிட இயலாது தான் என்றாலுமே, 'செப்டெம்பர் to டிசம்பர்' என்ற இந்த 4 மாதங்களில் காத்திருப்பன செம சுவாரஸ்ய ஆல்பங்கள் எனும் போது the interest quotient is bound to be high for us too !

So இதோ - தொடரவுள்ள செப்டெம்பரின் வெளியீடுகளின் பிரிவியூ படலத்தின் துவக்கம் ! ஆண்டின் அடுத்த  MAXI மாதம் இதுவே, என்பதால் லக்கி லூக்கின் "பிசாசுப் பண்ணை" - முழு வண்ணத்தில், மெகா சைசில் மினுமினுக்கத் தயாராகி விட்டது !  இந்தப் பெரிய சைஸ் அத்தனை ரசிக்கவில்லை என சில நண்பர்கள் முணுமுணுத்திருந்ததைக் கவனித்திருந்தேன் தான் ; ஆனால் வண்ணத்தில் இந்த சைசிலான பக்கங்கள் ஒவ்வொன்றையும் பார்த்திடுவது, கழுதை வயசான எனக்கே இன்னமும் ஒரு உற்சாகமூட்டும் அனுபவமாகவே உள்ளது ! Maybe புதுசாய் பல்டிகளை முயற்சிக்கும் மாறாக் குணம் என்னை ஒருவிதமாகவும், 'பழகியதைத் துறப்பானேன் ?' என்ற உங்களின் பாரம்பரியப் பிரியங்கள் வேறொரு விதமாகவும் சிந்திக்கச் செய்கின்றனவோ - என்னவோ ! Whatever the reasons might be - அட்டவணையினில் அறிவிக்கப்பட்டிருந்த 6 MAXI ஆல்பங்களுள் 2 ஏற்கனவே வெளியாகி விட்டன & ARS MAGNA இன்னொரு 2 ஸ்லாட்களை ரெகுலர் சைசில் எடுத்துக் கொள்ளவுள்ளது ! So எஞ்சியுள்ள இரண்டினில் - இதோ வெளியாகிடவுள்ள  'பிசாசுப் பண்ணை' ஒரு ஸ்லாட்டையும், இன்னொரு மறுபதிப்பு அந்த இறுதி ஸ்லாட்டையும் எடுத்துக் கொள்வதோடு நடப்பாண்டின் MAXI சைஸ் புராஜெக்ட்ஸ் நிறைவுற்றிடும் ! ஏற்கனவே அடுத்த வருஷமானது - 'வவுரைச் சுத்தித் துணிங்கோ ; துணி முழுக்க ஈரமுங்கோ' என சிக்கன சிங்காரவேலனாய் வலம் வரவுள்ளதால் - there will be no MAXI sizes - at least for 2021 !!   முத்துவின் ஐம்பதாவது வருஷமாகிடக்கூடிய 2022 - நமக்கு என்ன கொணரக்கூடுமோ - அதனை அப்போது பார்த்துக் கொள்வோமே ! 


ஆண்டின் துவக்கத்திலேயே தயாராகி விட்ட ராப்பர் என்பதால் - அந்தப் பெயரினைக் கையால் எழுதிட ஓவியர் சிகாமணியும் ; ஒரிஜினல் டிசைனை சித்தே effects கொடுத்து தூக்கலாக்கிட நமது DTP அணியில் கோகிலாவும் இருந்தனர் ! So ஒரு நார்மலான ராப்பரை - என் கண்களுக்கேனும் 'பளிச்' ஆக்கிட்ட புண்ணியம் அவர்களை சாரும் ! Maybe உங்களுக்குமே இது ரசித்திடும் பட்சம் - உங்களின் kudos அவர்களைச் சார்ந்திடட்டும் ! வெவ்வேறு மினி லயன் இதழ்களில் பிரித்துப் பிரித்து வெளியான லக்கி சிறுகதைகளின் தொகுப்பு இது என்பது உங்களுள் எத்தனை பேருக்குத் தெரியுமோ ; எத்தனை பேருக்கு நினைவுள்ளதோ - not very sure ! ஆனால் இதன் ஒரிஜினல் பதிப்பு வெளியான நாட்களை (early '90s ??) எனக்கு நினைவில் இருத்திட ஒரு குட்டி சம்பவம் இல்லாதில்லை ! அநேகமாய் கரைவேட்டி மேடைப்பேச்சாளர்களுக்கு அப்பாலிக்கா, தொட்டதுக்கெல்லாமே  ஒரு குட்டிக்கதையினை ஸ்டாக்கில் வைத்திருக்கக்கூடியது அநேகமாய் இந்த ஆந்தை ஆண்டியப்பனாகத் தானிருக்க முடியும் என்று தோன்றுகிறது !! 

1990-க்குப் பின்னேயான ஏதோவொரு வருஷத்தின் பிப்ரவரி அது ! மாமூலாய் புது டெல்லியின் பிரகதி மைதானில், மெகா உலகப் புத்தக விழா பிப்ரவரிகளில் நடைபெறுவது வழக்கம். நடு நடுவே நேரம் கிடைக்கும் ஆண்டுகளில் நான் அதற்கொரு விசிட் அடிப்பதுண்டு ! டெல்லியில் இருக்கும் Fleetway -ன் ஏஜெண்ட்களைப் பார்த்த மாதிரியும் இருக்கும், புத்தக விழாவினில் நமக்கு art reference-க்கு புக்ஸ் வாங்கியது போலவுமிருக்கும்  ; வடஇந்தியப் பதிப்பகங்களின் புதுத் தயாரிப்பு யுக்திகளைக் கொஞ்சம் பார்வையிட்டது போலவும் இருக்குமே - என்பதே எனது பயணங்களின் பொதுவான பின்னணி ! கரோல் பாக்கில் கிடைக்கக்கூடிய அந்தப் பஞ்சாபி சமோசாக்களும், ரசகுல்லாக்களும் ஒரு உபரி காரணமென வைத்துக் கொள்ளுங்களேன் ! இன்டர்நெட்கள் இல்லாத அந்த நாட்களில், இங்கிலீஷ் நியூஸ்பேப்பர்களில் மட்டும் இந்தப் புத்தக விழா பற்றிய விளம்பரங்கள் வெளிவந்திடுவதுண்டு ! So ஜனவரியின் நடுவாக்கினில் ஹிந்து நாளிதழில், அந்த வருஷத்துப் புத்தக விழாவினைப் பற்றிய விளம்பரத்தை பார்த்த போது, ரயிலுக்கு டிக்கெட்டைப் போட்டுவிடத் தீர்மானித்தேன் ! அன்றைக்கெல்லாம் லொஜக்-மொஜக் என டிக்கெட்டை நொடியில் போட்டுத் தரும் app-கள் கிடையாது ! ரயில்வே ஸ்டேஷனில் போய் , கிருஷ்ணாயில்  வாங்கும் ரேஷன் கடை க்யூவை ஒத்த வரிசையினில் தேவுடா காத்தே டிக்கெட் வாங்கிட வேண்டி வரும் ! அதற்கெல்லாம் நமக்கு மேல் வலிக்கும் பட்சங்களில், டிக்கெட் எடுத்துத் தரும் புரோக்கர்கள் இருப்பர் ! நமக்கோ அந்நாட்களில் தினமுமே ரயிலில் ஏஜெண்ட்களுக்கான பார்சல்கள் புக்கிங் ஆவதுண்டு & so அவற்றிற்கான பாஸ் அடித்து மாலையில் ஆபீசுக்கு கொணர்ந்து கொடுத்துச் செல்லும் புரோக்கர் ஒருவர் உண்டு ! பகல் முழுக்க ரயில்வே ஸ்டேஷனிலேயே இருப்பவர் என்பதால் விபரங்களை மட்டும் சொல்லி வைத்தால், மாலையில் ஆபீசில் டிக்கெட்டைப் பட்டுவாடா செய்துவிடுவார்  ! So மறு நாள் அவரிடம் விபரத்தைச் சொல்லிட, டாண்னென்று டிக்கெட்டும் வந்து விட்டது ! So பிப்ரவரி முதல் வாரத்தில் மூட்டையைக் கட்டிக் கொண்டு சென்னைக்கு ரயிலேறி, அங்கிருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸைப்  பிடித்து தலைநகருக்குப் பயணமானேன். 

சிலு சிலுப்பான இரண்டாவது நாள் அதிகாலையில், டில்லி ரயில்நிலையத்தில், ஸ்வெட்டரை மாட்டிக்கொண்டு இறங்கிய போது உற்சாகம் பீறிட்டது - நோவுகள் ஏதுமின்றிய 3 நாட்களின் பணிகளை முன்னிட்டு ! தங்கிட இம்முறை ஹோட்டலில் ரூம் போட்டிருக்கவில்லை ; கன்னாட் பிளேஸில் இருந்த  YMCA -வில் ஒரு சிங்கிள் ரூம் சொல்லி வைத்திருந்தேன் ! அவர்களோ காலை 8 மணிக்கு தான் செக்கின் செய்வார்கள் எனும் போது - கொள்ளை போகுதென அந்த அதிகாலைக்கே அங்கே ஓட்டமெடுப்பதில் அர்த்தம் இருக்காதென்றுபட்டது ! So பிளாட்பாரத்தில் இருந்த பெஞ்சில் சாவகாசமாய்க் குந்தியபடிக்கே சோம்பல் முறித்துக் கொண்டிருந்தேன் ! நியூஸ்பேப்பர் கட்டுக்கள் அப்போது வந்திறங்க, எனக்குப் பின்னேயிருந்த கடையில் உடைத்து அடுக்க ஆரம்பித்தார்கள் ! ஒரு பேப்பரை வாங்கிப் புரட்ட ஆரம்பித்தேன் - ஸ்போர்ட்ஸ் பக்கத்திலிருந்து ! சாவகாசமாய் மூன்றாம் பக்கத்தை எட்டிய போது - டெல்லி புத்தக விழாவின் விளம்பரம் முரட்டு சைசில் கண்ணில் பட்டது !  யாரேனும் மந்திரி அல்லது M.P. - புத்தக விழாவினைத் துவக்கி வைக்கும் விளம்பரமாக இருக்குமென்று தோன்றியது ! 'அடாடாடாடா....இந்த அரசியல்வாதிங்க தொல்லை தாங்கலைடா சாமீ !' என்றபடிக்கே விளம்பரத்தைப் பார்த்தால் - நான் நினைத்தபடிக்கு எதையும் காணோம் ! மாறாக - "இன்னும் எட்டே நாட்கள் தான் !!" என்பது போல என்னவோ எழுதியிருந்தார்கள் ! ஊசிப்போன மசால்வடையை உள்ளே தள்ளியதை போல லைட்டாக அடிவயிறு கலங்கும் உணர்வு தலைதூக்க - அவசரம் அவசரமாய் விளம்பரத்தை நிதானமாய் வாசிக்க ஆரம்பித்தேன் ! சரியாக மறுவாரத்தில் விழா ஆரம்பித்து, பதினைந்தோ-இருபதோ நாட்களுக்கு ஓடவுள்ளதாய் கொட்டையெழுத்துக்களில் அச்சிடப்பட்டிருந்தது ! நான் ஊரில் டிக்கெட்டைப் போட்ட சமயத்தில் தேதியை சரியாய் உள்வாங்கியிருக்காது - ஒரு வாரத்துக்கு முந்தின தேதியில் டிக்கெட்டைப் போட்டு வைத்துத் தொலைத்திருப்பது மெது மெதுவாய்ப் புரிந்த போது, சாயா விற்றுக்கொண்டிருந்த பசங்கள் கூட என்னைப் பார்த்துச் சிரிப்பது போலிருந்தது ! 

Up 3 நாட்கள் ; Down 3 நாட்கள் பயணம் + 3 நாட்கள் டில்லியில் ஜாகை : ஆக மொத்தம் 9 நாட்கள் அரையணாவுக்குப் பிரயோஜனமில்லா விரயம் என்பது புரிந்த போது துக்கம் தொண்டையை அடைத்தது !! சில நிமிடங்களுக்கு முன்வரையிலும் காந்தக்கண்ணழகியாய்த் தென்பட்ட டெல்லி - திடுமென கறுப்புக் கிழவியாகத் தெரியத் தொடங்கிட -  எத்தனை காசு கோவிந்தா ஆகிவிட்டுள்ளது என்ற கணக்கு மனசுக்குள் கிடு கிடுவெனஓட ஆரம்பித்தது ! ரயிலில் வாங்கிய சிக்கன்மீல்ஸ் கூட அந்த நொடியில் ஒரு அவசியமில்லாச் செலவாய்த் தோன்றிட, 'ஊருக்குத் திரும்பும் வரையிலும் மவனே...உனக்கு ரொட்டிப் பாக்கெட் மட்டும் தான் !' என்று யாரோ சொல்வது போலிருந்தது ! தளர்நடைபோட்டு ரயில் நிலையத்தின் முகப்பில் ஆட்டோக்காரர்களோடு கொலைவெறியில் பேரம் பேசியது ;  YMCA-வுக்குப் போனது ; மலர்ந்த முகத்தோடு செக்கின் செய்த அம்மணியைப் பார்த்துப் பேஸ்த்தடித்ததொரு சிரிப்பை ஒப்புக்குச் சிரித்து வைத்தது ; ரூமில் போய் பெட்டியைப் போட்டு விட்டு கட்டிலில் சாய்ந்த போது - "இன்னிக்கு இன்னா பண்றது ? நாளைக்கு ? நாளான்னிக்கு ??" என்று உலுக்கிய கேள்விகளுக்கு விடை தெரியாது பேந்தப்பேந்த முழித்தது - என சகலமும் 30 வருஷங்கள் கழிந்தும் நினைவில் நிலைத்து நிற்கின்றன ! 

வெந்நீர் காலியாகிப் போகும் முன்பாய்க் குளிப்போமென்ற ஞானோதயம் ஒரு மாதிரியாய் புலர, குளித்து விட்டு Fleetway ஏஜென்ட்கள் ஆபீசை நோக்கி நடந்தேன் ! அன்றைக்கெல்லாம்  செல்போன்களோ ; மின்னஞ்சல்களோ லேது என்பதால் கடுதாசிப் போக்குவரத்துக்கள் மாத்திரமே ! 'புத்தக விழாவுக்கு வர்றேனுங்கோ ; அந்நேரத்துக்கு உங்களையும் பாத்துப்போட்டு அப்பீட் ஆகிக்கிறேனுங்கோ !' என்று லெட்டர் எழுதியிருந்தது நினைவில் இருந்தது ! 'தெய்வமே...இந்த மனுஷனாச்சும்  ஆபீசில் / ஊரில் இருந்தாத் தேவலாம் !' என்றபடிக்கே அவரது ஆபீஸ் இருந்த கட்டிடத்தின் படிக்கட்டுக்களை ஏறிய போது - ஒரு பரிச்சயமான முகம் எதிர்ப்பட்டது ! பாலக்காட்டைச் சேர்ந்ததொரு தமிழர் ; கிருஷ்ணன் என்று பெயர் - டெல்லியில் அரைநூற்றாண்டாய் வசித்து வருபவர் - Fleetway ஏஜெண்டின் அலுவலகத்தில் மேனேஜராய்ப் பணியாற்றும் முதியவர் அவர் ! என்னை விடவும் வயதில் ரொம்பவே மூத்தவர் என்ற போதிலும் - 'வாங்கோ ; போங்கோ !' என்றே மரியாதையாய்ப் பேசுவார் ! "அடடே....விஜயன் !! என்ன திடீர் விஜயம் ? பாஸ் கூட ஊரில் இல்லியே ? அடுத்த வாரம் தானே வர்றதா இருந்திங்க ? " என்று குண்டைத் தூக்கிக் கடாசினார் ! எனக்கோ - 'இன்ன மெரி.. இன்ன மெரி.. டிக்கெட் தேதியில் சொதப்பிட்டேனுங்க ; 3 நாளைக்கு டெல்லியிலே மாடு மேய்க்கிறது தான் வேலையுங்கோ !' என்று சொல்ல முடியாதில்லையா - 'தத்தா-புத்தா ' என்று எதையோ உளறிக் கொட்டினேன் ! 'சரி வாங்க....வந்து ஒரு Thumbs Up குடிச்சிட்டுப் போங்க" என்றவரிடம், "இல்லை சார் ; அப்புறமாய் வாரேன் ; இன்னும் 3 நாளைக்கு இருப்பேன்லே  !" என்றபடிக்கே கீழே இறங்கி ஆட்டோவைப் பிடித்து YMCA வுக்கே திரும்பினேன் ! கொஞ்ச நேரமாச்சு ; ஏதோ ஒரு வித நிதானத்துக்குத் திரும்ப ! 

டிக்கெட்டை தேதி மாற்றி, முன்கூட்டியே ஊருக்குக் கிளம்பிட வேணுமெனில், ரயில்வே ஸ்டேஷன் சென்று, அங்கு சதா சர்வ காலமும் நிற்கும் க்யூவில் குறைந்தது ஒன்றரை மணி நேரமாவது காத்திருத்தல் அவசியமென்று புரிந்தது ! அந்நாட்களில் தற்போதைய RAC ; WL ; தட்கல் முறைகளெல்லாம் கிடையாது ! டிக்கெட் உறுதியாகிடா பட்சத்தில், ரயிலில் தொற்றிக் கொண்டு - TT பின்னே காவடியெடுத்து, சரிக்கட்டி, பெர்த் வாங்குவதற்குள் பிராணனில் பாதி போய் விடும் ! நமக்கு இந்தச் சரிக்கட்டும் யுக்திகள் அத்தனை சுகப்படாது ; so உறுதி செய்யப்பட்ட டிக்கெட்கள் இல்லாத பட்சத்தில், ரயிலில் ஏறிடும் வேலையே வைத்துக் கொள்வதில்லை ! And invariably மறுநாளைக்கு, அதன் மறுநாளுக்கு என்றெல்லாம் confirmed tickets இருக்கவே இருக்காது என்பது தெரியும் ! So ஒன்றரை மணி நேரங்களை க்யூவில் கழித்து விட்டு - "நை ..நை..டிக்கெட் நை" என்ற வசனத்தைக் கேட்பதற்குப் பதிலாய் 3 நாட்களை டெல்லியில் எப்படியேனும் ஓட்டி விடுவதே மேல் என்று தோன்றியது ! 'புண்பட்ட மனத்தைக் குறட்டை விட்டு ஆத்து' என்ற அற்புதச் சிந்தனை அந்நொடியில் தலைகாட்ட - காலை பதினோரு மணிக்கெல்லாம் தூங்கிவிட்டேன் ! 

இரண்டரை சுமாருக்கு பசித்த வயிறு எழுப்பி விட, சாப்பிடக் கீழே இறங்கிச் சென்ற சமயம் புத்தி லேசாய் செயல்படத் துவங்கியிருந்தது ! நேராய் ரிசெப்ஷனுக்குப் போய், காலையில் சீக்கு வந்த கோழியாட்டம் சிரித்து வைத்திருந்த பெண்மணியிடம் இம்முறை சித்தே சுரத்தோடு சிரித்து விட்டு,  டெலிபோன் டைரெக்டரியைக் கேட்டு வாங்கினேன் ! இரு ஆண்டுகளுக்கு முன்னமே டெல்லி புத்தக விழாவுக்குச் சென்றிருந்த சமயம், ஒரு பிரெஞ்சு புக் ஷாப்பின் பெயர் எங்கேயோ கண்ணில்பட்டிருந்தது !  'அடுத்தவாட்டி வர்றச்சே பாத்துக்கலாம்' என்று கிளம்பியிருந்தேன். அது மண்டைக்குள் ஒரு ஓரமாய்த் துயின்று கொண்டிருக்க, வேலை வெட்டியே இல்லாத அத்தருணத்தில் நினைவுக்கு வந்தது. டெலிபோன் டைரக்டரியில் அதன் அட்ரஸைத் தேடினால் Ring Road - Defence காலனி என்று சொன்னது ! நானிருந்த இடத்திலிருந்து சுமார் 11 கி.மீ. தொலைவு  என்று ரிசப்ஷன் அம்மணி சொல்லிட, மண்டைக்குள் கால்குலேட்டர் குலேபகாவலி கணக்குப் போடத் துவங்கினார் ! "சரியாய் இடம் தெரியாது...ரிங் ரோடுங்கிறப்போ நிச்சயம் அவுட்டர் தான் ; நீபாட்டுக்கு ஆட்டோவில் ஏறினால், தாஜ் மஹால் வரைக்கும் ரவுண்ட் அடிச்சுக் காட்டி மீட்டரைப் பழுக்க வைச்சுப்புடுவாங்களே !!" என்ற பயம் தலைதூக்கியது. ச்சீ..ச்சீ..ஆட்டோ புளிக்கும் என்றபடிக்கே - பஸ்ஸில் போவதாயின் ரூட் எது ? ; எங்கே மாறணும் ? என்றெல்லாம் கேட்டுக் கொண்டு டபாரென்று பஸ்ஸைப் பிடித்து விட்டேன் ! மதிய நேரமென்பதால் அவ்வளவாய் நெரிசல் இல்லை ; ஆனால் பராசக்தி படத்தில் நடிகர் திலகம் பேசிய வசனத்தை அந்த பஸ் டிரைவர் ரசித்திருப்பாரோ - என்னவோ ? என்றே சந்தேகமே வந்துவிட்டது எனக்கு ! 'போனார்..போனார்..வாழ்க்கையின் ஒரத்துக்கே பஸ்ஸை ஒட்டிக்கினே போனார் !'  சுத்தமாய் ஒரு மணி நேரம் எங்கெங்கோ நெளிந்தும், வளைந்தும் சென்ற பஸ் ஒரு மாதிரியாய் ரிங் ரோட்டில் ஏதோவொரு ஸ்டாப்பில் நின்றது. 'இறங்கி, விசாரிச்சு, நடந்தே இனி போய்க்கலாம் !' என்று தீர்மானித்தவனாக சட்டென்று இறங்கிவிட்டேன் ! 

பஸ் புகை கக்கியபடிக்கே நகன்ற போது பார்த்தால் - மழு மழுவென ஷேவிங் செய்யப்பட்ட கன்னம் போலான இரட்டைச் சாலையில் இங்கிட்டும், அங்கிட்டுமாய் வண்டிகள் மட்டுமே சீறிப் போய்க்கொண்டிருந்தன ! வழி விசாரிக்க ஒரு ஆட்டோ ஸ்டாண்டோ ; டீக்கடையோ ; பொட்டிக்கடையோ கண்ணுக்கு எட்டினமட்டுமே தெரியவில்லை ! இப்போ நேரா போணுமா ? ரிவர்ஸில் போணுமா ? என்றெல்லாம் எதுவும் தெரியாத நிலையில் குத்து மதிப்பாய் ஒரு திக்கில் நடக்கத் துவங்கினேன். 'நெடுஞ்சாலையில் ஒரு பேமானி !' என்ற ரீதியில் கார்களில் போகும் ஜனம் அத்தனையும் என்னையே பராக்குப் பார்ப்பது போலொரு பீலிங்கு எனக்கு ! To cut a long story short - அரை மணி நேரம் தொண்டையை அடைக்கும் தாகத்தையும், துக்கத்தையும் அடக்கிக் கொண்டே நடந்தவனுக்கு - ஒரு மாதிரியாய் நெடுஞ்சாலையில் ஒரு சிறு சாலை பிரிந்து, வீடுகளும், ஆபீஸ்களுமாய் இருந்ததொரு பகுதிக்கு இட்டுச் செல்வது தெரிந்தது ! ஏற்கனவே வாங்கும் மூச்சோடு, பெருமூச்சும் கலந்து கொள்ள - அங்கே தெரிந்த முதல் குடியிருப்பின் வாட்ச்மேனிடம்  விசாரித்தேன் ! அப்புறம் தான் புரிந்தது - நான் இறங்கிய பஸ் ஸ்டாப்பிற்கு 2 ரோடுகள் parallel தான் நான் செல்ல வேண்டிய defence காலனி என்று ! நானோ மாக்கானாய் நேராய் நடந்து சென்றிருக்கிறேன் ! 

இன்னொரு 20 நிமிட தட்டுத் தடுமாற்றத்துக்குப் பின்னே THE FRENCH BOOK CENTRE என்ற கடையைக் கண்ணில் பார்த்த போது மாலை மணி 5 ஆகவிருந்தது ! அடிச்சுப் பிடிச்சு உள்ளே போனவனுக்கு கொஞ்சம் ஏமாற்றமே ; தடி தடியாய் பிரெஞ்சு இலக்கியம் ; நாவல்ஸ் என்ற ரீதியில் குவிந்து கிடந்தது ! நான் எதிர்பார்த்துப் போயிருந்த காமிக்ஸ் எதுவும் கண்ணில் படக்காணோம் ! இத்தனை பாடும் இதுக்குத் தானா ? என்ற எரிச்சலில் அங்கிருந்த ஆளிடம் Comics ? என்று கேட்க - கையைக் காட்டினார் இன்னொரு கோடிக்கு ! அங்கே போய்ப் பார்த்த நொடியில், வடிந்திருந்த உற்சாகங்கள் அதிசயமாய் ஊற்றடித்தன ! ஒரு சிறு ரேக் முழுசுமாய் பிரான்க்கோ-பெல்ஜிய காமிக்ஸ் இதழ்கள்    குமிந்து கிடந்தன ! நான் முன்னமே பார்த்திருந்த தொடரின் ஆல்பங்கள் கொஞ்சம் ; பார்த்திராத தொடர்களின் ஆல்பங்கள் ஏகம் - என இறைந்து கிடக்க, புரட்டத் தொடங்கினேன் ஒவ்வொன்றாய் ! அந்நாட்களில் இன்டர்நெட் கிடையாதெனும் போது படைப்பாளிகளின் கேட்லாக்குகளில் உள்ள சமீபத்தைய படைப்புகளைத் தாண்டி, முந்தைய இதழ்கள் பற்றிய அலசல்களுக்கெல்லாம் வழியே இராது ! அது மட்டுமன்றி, நாம் வெளியிட்டு வரும் ஒரு தொடரிலேயே - 'எது நல்ல கதை ? எது சுமாரான கதை ?" என்ற ஆராய்ச்சிகளுக்குமே பெருசாய் வாய்ப்புகள் இராது ! படைப்பாளிகளிடம் கேட்டால் ஏர்-மெயிலில் புக்ஸை அனுப்பிடுவார்கள் தான் ; ஆனால் ஓவராய்த் தொல்லையும், செலவும் வைக்கப் பயம் மேலோங்கும் !  So கண்முன்னே கிடந்த இந்தப் புதையல் was too good to be true ! கையில் என்னிடமிருந்த பணத்தைக் கணக்கிட்டு, அதற்குள் அடங்கிடும் அளவில் ஷாப்பிங் செய்திட வேணுமென்பதும் மண்டையில் தோன்ற, ரொம்பவே selective ஆகத் தேர்வுகளைச் செய்ய ஆரம்பித்தேன் ! அந்தப் பட்டியலில் சிக்கியது தான் லக்கி லூக்கின் இந்த "பிசாசுப் பண்ணை" ஆல்பம் - அதுவும் இங்கிலீஷில் !! அதுவரைக்கும் predominant ஆக முழுநீளக்கதைகளை மட்டுமே லுக்கியின் தொடரில் வெளியிட்டு வந்திருந்தோம் ; இத்தகைய சிறுகதை format என் தேர்வுகளுக்கு பெரிதாய் உட்பட்டிருக்கவில்லை ! அந்நேரமோ நாம் மினி லயனில் கலவையாய்க் கதைகளை வெளியிட்டு வந்த நேரம் ! So இந்த லக்கி சிறுகதைகள் அந்த template-க்கு செம்மையாய் உதவிடும் என்ற வகையில் எனக்கு செம குஷி ! பற்றாக்குறைக்கு இங்கிலீஷ் ஆல்பம் கிட்டியதால், பிரெஞ்சிலிருந்து  மொழிபெயர்ப்புக்கெனச் செலவழிக்க வேண்டிய ஆயிரத்துச் சொச்சம் மிச்சம்டோய் !!  என்று உள்ளம் கூவியது ! "வந்து - போற டிக்கெட் காசு மிச்சம் பண்ணியாச்சு !!' என்ற நினைப்பே கொஞ்சம் குளிர்வித்தது ! லக்கியின் அந்த ஆல்பத்தையும்  இன்னும் அரை டஜன் பிரெஞ்சு ஆல்பங்களையும் பில் போட்டு வாங்கி விட்டு வெளியேறிய போது இருட்டத் துவங்கியிருந்தது ! அப்போது தான் - 'ஆஹா.திரும்பப் போக பஸ்ஸை எங்கே பிடிப்பதோ ?' என்ற கேள்வி எழுந்தது எனக்குள் ! 

சத்தியமாய் அந்த அந்தியினில் ரிங் ரோட்டை மறுக்கா அளவெடுக்க ஜீவனில்லை எனக்கு ! வேறு வழியின்றி, வேண்டா வெறுப்பாய் ஒரு ஆட்டோவில் ஏறி அமர்ந்தேன் - 'லொடக்-லொடக்' என மீட்டர் ஏறும் போதெல்லாம் என் நாடித்துடிப்பும் ஏறியபடிக்கே ! சிங்ஜி வந்த பாதையிலேயே கூட்டிக்கினு போறாரா ? இல்லாங்காட்டி ஊரெல்லாம் சுற்றிக் காட்டப் போறாரா ? என்ற பயம் வேறு உள்ளுக்குள் ! ஆனால் சுருக்கமான ரூட் எதையோ பிடித்து மனுஷன் அரை மணிநேரத்தில் ;  ஏழுமணிவாக்கில் YMCA-வில் கொணர்ந்து இறக்கி விட்டிருந்தார்   ! கையிலிருந்த ஆல்பங்கள், ப்ளஸ் மொழிபெயர்ப்புச் செலவு மிச்சம் என்ற சந்தோஷங்கள் - மீட்டரின் கட்டணத்தை மறக்க உதவியிருந்தன ! ரூமுக்குப் போன உடனே லக்கியின் இந்த ஆல்பத்தைப் படிக்க ஆரம்பித்த போதே - 'இந்தச் சிறுகதையை இந்த மாசத்துக்கு வைச்சுக்கலாம் ; அதை - அந்த மாசத்துக்கு' என திட்டமிடலானேன் ! தொடர்ந்த மாதத்தினில் ஒரு பளீர் பச்சைப் பின்னணியில் இதே அட்டைப்பட டிசைன் சகிதம் ; 2 வண்ணத்திலான உட்பக்கங்கள் நியூஸ்பிரிண்ட்டில் பல்லைக்காட்ட  "பிசாசுப் பண்ணை"யின் ஒரிஜினல் பதிப்பு வெளிவந்தது ! யாரிடமேனும் அது இன்னமும் உள்ளதா ? என்றறிய ஆவல் folks ! இருப்பின், அதனோடு ஒரு selfie எடுத்து அனுப்புங்களேன் - இதே பதிவினில் இணைத்து விடலாம் ! And இதோ - உட்பக்கங்களின் preview : 



'ரைட்டு....ஒரிஜினலாய் இது நமது கருணையானந்தம் அவர்கள் எழுதினது.....மொழிபெயர்ப்பில் நோண்டும் வேலை இந்தவாட்டி வேணாம் ; அப்டியே திருத்தங்களை மட்டும் போடுறோம் ; அச்சுக்கு அனுப்புறோம் !' என்றபடிக்கே 7 நாட்களுக்கு முன்னே அமர்ந்தேன் ! முதல் சிறுகதையும் ஒரு மாதிரி ஓடிவிட்டது - ஜாலி ஜம்ப்பரின் வசனங்களில் மட்டும் கொஞ்சம் திருத்தங்களை போட்ட கையோடு ! ஐயகோ - காத்திருப்பது சுலபப்பணியே என்ற எனது எதிர்பார்ப்பு சுக்கலானது அடுத்த கதையையும் ; அதற்கடுத்ததையும்; அதற்கும் அடுத்ததையுமே படித்த போது ! முதல் சிறுகதை மட்டுமே லக்கிக்கென இப்போதெல்லாம் நாம் பிசகின்றிக் கையாளும் பேச்சு வழக்குத் தமிழ் இருந்தது ஒரிஜினல் மொழிபெயர்ப்பினில். பாக்கி 3 கதைகளிலும் ஜாலி ஜம்ப்பர் முதற்கொண்டு தூய தமிழில் செப்பிக்கொண்டிருக்க - எனக்குப் பகீரென்று ஆகிப்போனது ! நடைமுறையினை மாற்றிடக்கூடாதென்பது ஒருபக்கமிருக்க, ஒரே ஆல்பத்தில் இரு தின்சுகளில் மொழியாக்கம் இருப்பின் ரொம்பவே நெருடும் என்று தோன்றியது ! அப்புறமென்ன ? ஏலேலோ-ஐலசா தான் - பக்கத்துக்குப் பக்கம் ரணமாகிய சிகப்பு மசித்திருத்தங்களோடு ! ஒரிஜினல் பாணியை கிஞ்சித்தும் மாற்றிடாது, நடையை ; அவசியப்பட்ட வசனங்களை + ஜாலி ஜம்ப்பரின் டயலாக்குகளை மட்டுமே திருத்திய போதிலும், அந்தப்பணியானதே முழுசுமாய் போன வாரத்தினை விழுங்கிவிட்டது !  நேற்றைக்கு அச்சுக்குச் சென்று பணிமுடிந்த பக்கங்களை பார்த்த போது தோன்றிய இளிப்பில்  அந்த  வாரத்தின் பல்டிகள் மறந்தே போச்சு ! புதுசாய்ப் படிப்போர்க்கும், பழசையே தேடுவோர்க்கும் இம்முறை எவ்வித ஏமாற்றங்களுமிராது ! பிழையிருந்த ஈக்களை மட்டுமே அடிக்காது, பாக்கி ஈக்கள் அனைத்தையுமே அட்சர சுத்தமாய்க் கொணர்ந்துள்ளேன் ! So கிட்டக்கவே முந்தைய இதழ்களையும் வைத்துக் கொண்டு ஒப்பீடு செய்தாலும் நெருடாதென்ற நம்பிக்கை நிறையவுள்ளது ! 

ஆக அடுத்த தெருவினில் இருக்கக்கூடிய  நாலு சிறுகதைகளின் பின்னணியை விளக்கிட, திருத்தணி வரைக்கும் பாதயாத்திரை போய்ச் சொல்லும் படலம் இனிதே நிறைவுறுகிறது ! இந்தப் பதிவின் மொக்கை நிச்சயமாய் இந்த இதழினில் இருக்காது என்ற நம்பிக்கையைத் தந்த கையோடு கிளம்புகிறேன் - 'தல' கூட "பந்தம் தேடிய பயணம்" மேற்கொள்ள ! And before i sign out - here you go with another cover preview :


அடுத்த பதிவினில் இது பற்றி இன்னும் கொஞ்சம் எழுதுகிறேன் ! Bye for now !! See you around ! 

251 comments:

 1. ஆத்தாடி எம்மாம்பெரிய பதிவு. படிச்சுட்டு வாரேன்

  ReplyDelete
  Replies
  1. எம்மாம் பெரிய மாத்திரை 😂😂😂😂

   Delete
  2. ஏழு மணிக்கு டைப்படிக்க ஆரம்பிச்சது !! Pheww !!

   Delete
  3. இன்றை நைட்ஷிப்ட் அட்டகாசமா போகுது உங்களுடன் டெல்லியில்....

   Delete
 2. பிசாசு பண்ணையின் அட்டை உண்மையில் கண்ணை கவரும் விதத்தில் அமைந்துள்ளது....அபாரம்👏👏👏👏👏

  ReplyDelete
 3. இந்த maxi சைஸ் அவ்வளவாக பிடிக்காத நபர்களின் லிஸ்டில் அடியேனுழ் ஒருவன்..தோல் போர்த்திய எலும்புக்கூடாக காட்சி அளிக்கிறது. .இதுவே இந்த சைஸில் குண்டு புக் வந்தால் ஆசையாக சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பதும் அடியேன் தான்.....maxi சைஸ் எல்லாம் பாக்கெட் சைஸில் தர முடியுமா என்று யோசிங்களேன்....அப்படியாவது குண்டு சைஸ் கிடைக்கும்..

  ReplyDelete
  Replies
  1. கதைகளை கதைகளுக்காக ரசிப்பதன்றோ ஆரோக்கிய அணுகுமுறை ?

   ஒல்லி - குண்டு என்பன, ஒரு கதையின் விதியை நிர்ணயிக்கும் காரணிகளாய் இருப்பது ஒகே தானா ?

   Delete
  2. நம்ம எத்தனுக்கு எத்தனே ..பாக்கெட் சைஸ் தானே சார் .....நம்ம லயனின் தலையேழுத்தே மாற்றி அமைத்தது.....கதை மட்டுமா என்று நம்புகிறீர்கள்....சைஸையும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாதே சார்......

   Delete
  3. 36 ஆண்டுகளுக்கு முந்தைய சைஸ் இன்னமும் ரசிக்கும் பட்சத்தில், அந்தக் கால கட்டத்தின் கதைகளையும் ரசிப்பது தானே லாஜிக் ? நியாயப்படிப் பார்த்தால் ஸ்பைடரை தானே இன்னமும் நாம் முன்னிறுத்திட வேண்டும் ?

   Delete
  4. சபாஷ்!! சரியான விவாதம்!!

   நடூ ஜாமத்திலும் அனல் பறக்குது!!

   Delete
  5. ##நியாயப்படிப் பார்த்தால் ஸ்பைடரை தானே இன்னமும் நாம் முன்னிறுத்திட வேண்டும் ?###

   ஆமாம் சார்..
   அதனால பாக்கெட் சைஸ்ல ஸ்பைடர் ஸ்பெஷல் குண்டு போடுங்க..

   Delete
  6. ஆமா சார் முன்னிற்பார் அடுத்த மாத இறுதியில்...விளம்பரப் படங்க மிரட்டுதே...சிறு வயதில் ஸ்பைடர் இல்லையா என ஏங்கிய போது ...கிடைக்காதது பேரிழப்பே....ஆனாலும் இவ்விளம்பரங்க அள்ளுது மனதை என்பதுகளின் சாளர வழியே

   Delete
  7. வசிஷ்டர் வாயாலே ஸ்பைடர் பற்றி சொல்லி விட்டீர்கள்...பிறகென்ன ஸ்பைடரை புதிய கதைகளில் அடிக்கடி காண செய்யுங்களேன்..ப்ளீஸ்

   Delete
 4. பிசாசு பண்ணை படித்த மாதிரி ஞாபகம் இல்லை! எனவே அடுத்த மாதம் முதலில் இந்த கதையுடன் சிரிக்க ஆரம்பித்து விட வேண்டியது தான்!

  ReplyDelete
 5. கதைக்குள் கதை சொல்வதில் மிகவும் பிரமாதம் படுத்தி கொண்டு இருக்கிறீர்கள்...வாழ்த்துக்கள் (பழைய தெய்வீக பாடங்களில் இப்படி தான் கதைக்குள் கதை போய் கொண்டே இருக்கும்)....தங்களின் அனுபவங்களை படிக்கும்போது மனதில் இனம்புரியா மகிழ்ச்சி வந்து செல்கிறது...தொடரட்டும் தங்களின் பணி....நன்றி சார்🙏🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏

  ReplyDelete
  Replies
  1. இதுவுமே தெய்வீகம் சார் - தெய்வீக மொக்கை !!

   Delete
  2. மொக்கையா...!!!!!!..இந்த மொக்கை என் இறப்பு வரை தொடர ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன் (என்ன ஒரு சுயநலம்)....

   Delete
  3. 'இதயம் பேசுகிறது' மணியன் அவர்களுக்குப் பிறகு, வெளிநாட்டு, வெளியூர் பயணக்கதைகைளை சில பல சிறப்பான சம்பவங்களுடன் சொல்பவர் நீங்கள்தான் ஆசிரியரே.
   அந்நாளைய குமுதம் இதழில்' ஜெய் விஷால் பத்ரி, ஜெய் கேதார் மகராஜ்' என்றொரு பயணத் தொடர் கட்டுரை காமெடி கலந்து வந்து ஹிட்டடித்தது. உங்களது டெல்லி பயணப் பதிவு எனக்கு அதை நினைவு படுத்துகிறது.
   அருமையான பதிவு.

   Delete
 6. அட நம்ப ரின்-டின்-கேன் அட்டையில், அப்படி என்றால் இந்த கதையில் ரின்-டின்-கேன் தலை காட்டுகிறார் என தெரிகிறது; வீட்டில் குழந்தைகளுக்கு ரின்-டின்-கேனை மீண்டும் பார்க்க ஒரு வாய்ப்பு + பிசாசு கதை என்றால் காமெடிக்கு பஞ்சம் இருக்காது! மகிழ்ச்சி!

  ReplyDelete
 7. // இந்தப் பெரிய சைஸ் அத்தனை ரசிக்கவில்லை என சில நண்பர்கள் முணுமுணுத்திருந்ததைக் கவனித்திருந்தேன் //

  தவறாக எண்ணவேண்டாம் சார்...டெக்ஸ்வில்லர் மறுபதிப்புக்கு மட்டுமே..மற்றபடி
  ஒருதலைவன் ஒரு சகாப்தம்
  தலையில்லா போராளி அருமையாகத்தானே வந்துள்ளது... இப்பொழுதும் டிராகன் நகரம் ஹார்டுபைண்ட் ரெகுலர் சைஸ் பட்டையைகிளப்புகிறதே சார்....! மறுபதிப்பு டெக்ஸை மட்டும் வழக்கம்போல் ரெகுலர் சைஸ் ஹார்டுபவுண்ட் என தொடரலாமே சார்... இது எனது வேண்டுகோள்....

  ReplyDelete
  Replies
  1. சரியாக சொன்னீர்கள்..நண்பரே👏👏👏👏👏

   Delete
  2. நடப்பாண்டில் திட்டமிடல்கள் அறிவித்தபடியே தொடரும் பழனி ! மாற்றங்கள் ஏதும் இந்தாண்டு சாத்தியமாகாது !

   Delete
  3. இந்தாண்டின் டெக்ஸ் மறுபதிப்புதான் வந்துவிட்டதே சார்...நீங்கள் கூறியதுபோல் கழுகு வேட்டை அல்லது மரணமுள் அல்லது வேறு எந்த டெக்ஸ் மறுபதிப்பு வந்தாலும் ரெகுலர் சைஸ் ஹார்டுபவுண்ட் மின்னும் அட்டைப்படம் என அட்டகாசப்படுத்துங்கள் சார்....நாங்கள் காலமெல்லாம் பாதுகாக்கப்போகும் பொக்கிஷம் அல்லவா சார்....!!

   Delete
  4. டிராகன் நகரம் - ஹார்டுபவுண்ட் புக் - மிக அருமையான தயாரிப்பு.. நேற்று ஒரு முறை மீண்டும் மறுவாசிப்பு செய்தேன்.. கைக்கு அடக்கமாக, பார்க்க செமையா இருக்கு.. டேபிளிலேயே வைத்திருக்கிறேன்..

   Delete
  5. உண்மை...நல்ல கதைக்கு ஏற்ற ஹூரோ நடிக்கும் போது எப்படி பட்டையை கிளப்புகிறதோ...அதுபோல் கைக்கு அடக்கமாக சூப்பரான கதை அமையும் போது அடிக்கடி அந்த கதை மீள்வாசிப்புக்கு வருகிறது...

   Delete
 8. எடிட்டர் சார்..

  பொதுவாகவே பயணக் கட்டுரைகள் எனக்கு/எங்களுக்குப் பிடிக்கும்! அதுவும் எழுதியிருப்பது நீங்களென்றால் பிடியோ பிடியென்று பிடிக்கும்!

  90களில் இந்தப் 'பிசாசுப் பண்ணை'யை நீங்கள் டெல்லியில் கைப்பற்றிய அனுபவம் அருமை!! வெளிநாடுகளில் நீங்கள் அல்லபட்டதை எழுதும்போது எங்களுக்குக் கிடைக்கும் அதே பரபரப்பான வாசிப்பு அனுபவம் இப்போதும் கிட்டியது! கூடவே நிறைய கெக்கபிக்கேகளையும் கொடுத்தது!

  நிச்சயமாக மொக்கை இல்லை!! ஒருவேளை இதை நீங்கள் மொக்கையாகக் கருதினால், நாங்கள் விரும்புவது இன்னும் நிறைய மொக்கைகளையே!

  எங்களுக்காண்டி இதைப் பகிர்ந்துகொள்ள விரல்கள் நோக டைப்படித்த உங்களின் உழைப்பையும் ஆர்வத்தையுமே நாங்கள் எங்களுக்குக் கிடைத்த பெருமையாய் கருதுகிறோம்!!

  வீ வான்ட் மோர் மொக்கைஸ் ப்ளீஸ்!!

  ReplyDelete
  Replies
  1. // எங்களுக்காண்டி இதைப் பகிர்ந்துகொள்ள விரல்கள் நோக டைப்படித்த உங்களின் உழைப்பையும் ஆர்வத்தையுமே நாங்கள் எங்களுக்குக் கிடைத்த பெருமையாய் கருதுகிறோம்!! //

   True!

   +1

   Delete
  2. // நிச்சயமாக மொக்கை இல்லை!! ஒருவேளை இதை நீங்கள் மொக்கையாகக் கருதினால், நாங்கள் விரும்புவது இன்னும் நிறைய மொக்கைகளையே! // +1

   Delete
 9. அப்புறம் 'பிசாசுப் பண்ணை' அட்டைப்படம் எல்லாத்தரப்பினரையும் கவரப்போவது உறுதி!!

  ஓவியர் சிகாமணிக்கும், DTP கோகிலாவுக்கும் நம் பாராட்டுகள்!!

  மீண்டும் ஒரு கறுப்பின துவேஷம் பற்றிக் கதை சொல்லயிருக்கும் 'தணித்திரு.. தணிந்திரு' அட்டைப்படமும் ஆர்வத்தைக் கிளப்புகிறது!!

  சீக்கிரம் வா செப்டெம்பரே!

  ReplyDelete
  Replies
  1. கருப்பினமக்களின் கதை எப்போதுமே நெஞ்சை கணம் ஆக்கும்.

   Delete
 10. // சீக்கிரம் வா செப்டெம்பரே //

  ஆமா நண்பரே 5ந்தேதியே புத்தகங்கள் வந்தால் நல்லாருக்கும்....

  ReplyDelete
 11. பிசாசுப் பண்ணை அட்டைப்படம் மிக அருமை

  ReplyDelete
 12. அருமையாக 1990 காலகட்டத்திற்கு ஒரு time travel செய்த உணர்வு இந்த பதிவை படித்தபின் ஏற்படுகிறது. புத்தகஙகள் எப்போது எங்கள் கைகளில் கிடைக்கும் சார்?

  ReplyDelete
 13. ஒரு வழியாக 2432m படித்து முடித்து விட்டேன்.அருமையான ஆல்பம். அடுத்த பாகமான memory recharge படிக்க அடுத்த ஆண்டு வரை காத்திருக்க வேண்டுமே!

  ReplyDelete
 14. // காந்தக்கண்ணழகியாய்த் தென்பட்ட டெல்லி - திடுமென கறுப்புக் கிழவியாகத் தெரியத் தொடங்கிட //

  Lol

  // 'நெடுஞ்சாலையில் ஒரு பேமானி //

  Rofl

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா!! நானும் (நடூ ராத்திரியில்) வாய் விட்டு சிரித்த வரிகள் இவை!! :))))))

   Delete
 15. தனித்திரு..தணிந்திரு...!
  ஏனோ ஆவலைக்கூட்டுகிறது...

  ReplyDelete
 16. வீவாண்ட் மோர் மொக்கைஸ் ப்ளீஸ் ஸார். பாட்டாவே பாடீர்ரமே. சிங்கத்தின் சிறுவயதில்சீக்கிரமே அறிவிப்பு சார் ப்ளீஸ்.

  ReplyDelete
 17. சார்.. டெக்ஸின் மொபிஸ்டோ கதைக்கு முன்பதிவு எப்ப சார் அறிவிக்க போறீங்க.. ???


  ( இப்ப நிம்மதியா தூங்கலாம்...!!! )

  ReplyDelete
  Replies
  1. // சார்.. டெக்ஸின் மொபிஸ்டோ கதைக்கு முன்பதிவு எப்ப சார் அறிவிக்க போறீங்க.. ??? //
   இது ஒரு நல்ல கேள்வி சரோ ஜி....!!!!

   Delete
  2. //
   சார்.. டெக்ஸின் மொபிஸ்டோ கதைக்கு முன்பதிவு எப்ப சார் அறிவிக்க போறீங்க.. ??? //

   ஆவலுடன் காத்திருக்கிறோம் சார் 🙏🏼😍😍😍
   .

   Delete
  3. சார்.. டெக்ஸின் மொபிஸ்டோ கதைக்கு முன்பதிவு எப்ப சார் அறிவிக்க போறீங்க.. ???


   ( இப்ப நிம்மதியா தூங்கலாம்...!!! )

   Delete
  4. இனி எங்கே தூங்குவது. ..அதுதான் கொளுத்தி போட்டுட்டிங்களே😭😭😭😭

   Delete
 18. பொன் தேடிய பயணம் நேற்றுதான் படித்தேன், முதல் பக்கத்தில் மட்டும் சிரிக்க வைக்க எத்தனை content.
  Frame-2: குண்டுமணி சைசில் தங்கம் எடுத்தவரின் பின்னே‌ வரும் ஓநாய்...
  Frame-3: ‌ஓநாய்யின் "கை-பீஸ்" மீல்சாக மார ஒற்றை ‌கையுடன் பாவமாக ஒவியத்திற்க்குபோஸ் தரும் தங்க வேட்டையர்
  Frame-4: 23ம் புலிகேசியின் வரலாற்று சிறப்பு மிக்க ஒவியம் போல குண்டுமணி தங்கம் பாராங்கல் போல மாற, வைத்திருப்வரும் கம்பீரமாக மாற..‌ ஒரு பத்திரிகை நியூஸ்
  Frame-5 & 6: கலிபோர்னியாவில் கிளம்பும் கப்பல் ஒரு சின்ன லாடத்தின்‌ weight தாங்காமல் மூழ்குவது (அந்த அளவுக்கு அதிகமான மக்கள் கூட்டம்) என ஓவியர் பட்டையைக கிளப்பியள்ளார்.
  லக்கி லூக் நமக்கு இந்த அளவுக்கு பென்ஞ்மார்க் செட் பண்ணியதால்தான் மற்ற கார்டூன் காமிக்ஸ் எல்லாம் நம்மிடம் பல்பு வாங்குதோ???

  ReplyDelete
  Replies
  1. மிகச்சரி நண்பரே!

   Delete
  2. @Giridharasudarsan

   அருமையாக கவனித்துப் படித்திருக்கிறீகள் நண்பரே! கெக்கபிக்கே வசனத்தின் மூலம் அந்த அதிர்ஷ்ட லாடத்தின் 'அதிர்ஷ்டத்தை'யும் பகடி செய்திருப்பார்கள்!

   ஒரே ஒரு ஃபிரேமில் சார்ளிசாப்ளினை பின்புலத்தில் காட்டியிருப்பார்கள்! சாப்ளினை அடையாளம் தெரிந்தாலும் 'இவரை எதற்கு இங்கே காட்டியிருக்காங்க?' என்பது படிக்கும்போது புலனாகவில்லை! பிற்பாடு நம் நண்பர் கிட்ஆர்டின் சொல்லித்தான் 'கோல்டு ரஷ்' சினிமாவில் இடம்பெற்ற அதே இடம் இதுவென்பது புரிந்தது!! கிடைத்த கேப்பிலும் கூட ஒரு வரலாற்று உண்மையை பதிக்கத் தவறவில்லை படைப்பாளிகள் என்பது ஆச்சரியத்தில் ஆழ்த்தியது!

   கார்டூன்களில், குறிப்பாக லக்கி கதைகளில் ஆராதிக்க ஆயிரம் சமாச்சாரங்கள் உண்டு!! அதனால்தான் விற்பனையில் தொடர்ந்து முன்னணி வகிக்கிறது போலும்!!

   Delete
  3. ஜாக் லண்டன்'னும் நிஜ நாவலாசிரியர்தான்
   https://en.m.wikipedia.org/wiki/Jack_London
   கிளான்டைக் கோல்ட் ரஷ் பற்றி இரண்டு நாவல்களும் எழுதியுள்ளார்.
   லக்கி லூக் கதைகளில் பல வரலாற்று செய்திகளை அப்படியே ஊத்தாப்பத்தின் மேல் மழைச்சாரல் போல தூவப்பட்ட வெங்காயத்தை மாதிரி... தெரிந்தவை சில, தெரியாதது எத்தனையோ!!!

   Delete
  4. அருமை அருமை!!👏👏👏👏

   Delete
 19. நியாயப்படிப் பார்த்தால் ஸ்பைடரை தானே இன்னமும் நாம் முன்னிறுத்திட வேண்டும் ?// Ennadhu namba editoraa ippadi pesaradhu?!!! Wow

  ReplyDelete
 20. சிரிப்பு சிரிப்பு சிரிப்பு...

  மனசு விட்டு...

  ReplyDelete
 21. கிரிதர் சார் உண்மையாவே லக்கி லூக் ஒரு சகாப்தம். இவரளவு நம்மிடையே ஒன்றிப் போன ஒருஹிரோ இதுவரையாரும் இல்லை. இனிவரப்போவதும் இல்லை. லக்கியின் ஒவ்வொரு பிரேமும் ஓராயிரம் கதைசொல்லும். அந்த உழைப்பு ஒரு சகாப்தம். கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
  Replies
  1. ///லக்கியின் ஒவ்வொரு பிரேமும் ஓராயிரம் கதைசொல்லும். அந்த உழைப்பு ஒரு சகாப்தம்.///

   சூப்பரா சொன்னீங்க ஜி!

   Delete
 22. அதிர்ஷ்ட்ட லாடத்தின்எடைதாங்காமல் கப்பலே முழுகுவது துரதிர்ஷ்டம். அருமையான பகடி. கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
  Replies
  1. நல்லா கவனிச்சு படிச்சிருக்கீங்க ராஜசேகர் ஜி!

   Delete
 23. ###இந்தப் பெரிய சைஸ் அத்தனை ரசிக்கவில்லை என சில நண்பர்கள் முணுமுணுத்திருந்ததைக் கவனித்திருந்தேன் தான்###

  Maxi இதழ்கள் அளவில் மட்டுமே பெரிதாக இருக்கிறது,
  உள்ளே பேனல்கள் ஒன்பது & பத்து என்ற எண்ணிக்கையில் இருப்பதால் ரெகுலர் சைஸ் புத்தகங்கள் படிப்பதான உணர்வே எழுகிறது சார்..
  தலையில்லா போராளியில் பேனல்கள் பெரிதாக இருந்ததால் சித்திரங்கள் வழியாக ஒரு பிரமாண்ட வாசிப்பு அனுபவம் கிடைத்தது..
  மனதில் உறுதி வேண்டும் & பழிவாங்கும் பாவை போன்ற மேக்ஸி இதழ்களில் கதையுடன் மட்டுமே பயணிக்க முடிகிறது..
  மேக்ஸி என்றால்
  (என் பார்வையில் )சித்திரங்களின் முழு பரிணாமும் & பட்டாசான ஒரு கதையும் இருந்தால் அதிரிபுதிரி ஹிட்டடிக்கும் சார்.
  அடுத்த 2022 ஆண்டில் மேக்ஸிக்காக எங்கள் கோரிக்கையை பரிசீலியுங்கள் சார்.

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. அருமையான கருத்து மற்றும் கோரிக்கை சிவா!! என்னுடைய ஆதரவும்!!

   Delete
  3. தெளிவான கருத்துகள் சிவா...

   Delete
  4. நன்றி சகோதரர்களே ஆதரவிற்கு..

   நமது கோரிக்கையை ஆசிரியரிடம் அடிக்கடி ஞாபக படுத்துவோம்..

   Delete
 24. எடிட்டர் சார் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பயணப்பதிவு. மிகவும் ரசித்த பதிவு. பல இடங்களில் உங்கள் நகைச்சுவை அருமை.

  பிசாசுபண்ணை எதிர் பார்க்க வைக்கிறது. நான் ஏற்கனவே படித்த ஞாபகம் இருக்கிறது.

  மேலே நண்பர் சிவா சொன்னது போல Maxi இல் ஒரு புதிய சாகசம் முயற்சிக்கலாம் சார்.

  ReplyDelete
 25. // முத்துவின் ஐம்பதாவது வருஷமாகிடக்கூடிய 2022 - நமக்கு என்ன கொணரக்கூடுமோ - அதனை அப்போது பார்த்துக் கொள்வோமே ! //
  சார் இதுக்கெல்லாம் சமரசமே கூடாது,50 ஆவது வருட வெளியீட்டை மிக பிரம்மாண்டமாக கொண்டாடனும்....
  NBS மாதிரி கதம்ப குண்டு ஸ்பெஷல் பெருசா ஒன்னே ஒன்னு போடுங்க அது போதும்...
  அந்த இதழை பார்த்து பிரம்மித்தது இன்றும் நினைவில் உள்ளது...

  ReplyDelete
  Replies
  1. யெஸ் யெஸ் யெஸ்!! அந்த குண்டு சைசுல - புத்தகத்துக்கு மேல் சொக்காய் எல்லாம் போட்டு - பளபளன்னு கையில் வாங்கின அந்தப் பரவச அனுபவமும், பிரம்மிப்பும் வார்த்தைகளில் விவரிக்க இயலாதவை!!

   Delete
  2. அது விட பிரம்மாண்டமான குறைந்த பட்சமாய் 5000விலையில் பிரம்மாண்ட பவளவிழாவோ தங்கவிழாவோ...அதற்க்கான மலரை தாருங்கள்...இப்பவே திட்டமிடனுமே....ஐம்பதாண்டு காலத்தை ஒரே நாள்ல சுருக்கி கொண்டாடனுமே .

   Delete
  3. வி வாண்ட் மெகா குண்டுபுக்கு 💪🏼💪🏼💪🏼💃🏻💃🏻💃🏻
   .

   Delete
  4. // 5000விலையில் பிரம்மாண்ட பவளவிழாவோ தங்கவிழாவோ //
   ஓராண்டு சந்தா ஒரே இதழுக்கா,இதைக் கேட்டா ஆசிரியரே மயக்கம் போட்டுடுவாரே...
   எனக்கு அவ்வளவு ஆசையெல்லாம் இல்லை,இதில் பாதி விலையில் முழுவதும் வண்ணத்தில் ஹார்ட் பைண்டிங்கில் செமையா ஒரு தொகுப்பை வெளியிட்டால் கூட போதும்....

   Delete
  5. ///அது விட பிரம்மாண்டமான குறைந்த பட்சமாய் 5000விலையில் பிரம்மாண்ட பவளவிழாவோ தங்கவிழாவோ..///

   யாரோ சம்பளம் கொடுத்து வரைக்கும் தெரியல! இப்ப தான் தெரியுது 5000/- ரூவா எவ்ளோ பெரிய தொகைனு! ஹிஹி!

   Delete
  6. // இதில் பாதி விலையில் முழுவதும் வண்ணத்தில் ஹார்ட் பைண்டிங்கில் செமையா ஒரு தொகுப்பை வெளியிட்டால் கூட போதும்.... // மீ டூ. குறைந்தது ஒரு 1000 ரூபாயில் எப்போதும் நினைவில் நிற்பது போல ஒரு இதழ் சார்.

   Delete
  7. சார் முன்பாகவே பிளான் செய்து ஒரு அட்டகாசமான இதழ் ஒன்றை தயார் செய்யலாம் சார். இந்த ஒரு முறை பட்ஜெட் என்று எந்த தடையும் வேண்டாம் சார். நீங்கள் நினைத்ததை புத்தகமாக கொண்டு வாருங்கள்.

   Delete
  8. ஆயிரம் என்பது மின்னும் மரணத்துக்கு பின் சாதாரணம்....3000இபக்கு பின் சாதாரணம்...அடுத்து 5000தானே...பாத்து கேளுங்க நண்பர்களே....50 ஆண்டு கால நினைவ போன்ற நச் கதைகளா...தோர்கள் போல ஒரே தொகுப்பா...இத நல்லாருந்தா அந்த ஆயிரம் பக்க கௌபாய்....அல்லது விதவிதமா வேணும்னா நவரசமும் கலந்த ஒன்பது கதைகள் ஒன்பது சுவைகள் என (ஈர்ப்பான கதைகள் மட்டும் )ஸ்லிப் கேர்ல் தொகுப்பா

   Delete
  9. //சார் முன்பாகவே பிளான் செய்து ஒரு அட்டகாசமான இதழ் ஒன்றை தயார் செய்யலாம் சார். இந்த ஒரு முறை பட்ஜெட் என்று எந்த தடையும் வேண்டாம் சார். நீங்கள் நினைத்ததை புத்தகமாக கொண்டு வாருங்கள்.//
   கதைகள தயாரா வச்சிருப்பார் குமார்

   Delete
  10. // இந்த ஒரு முறை பட்ஜெட் என்று எந்த தடையும் வேண்டாம் சார். நீங்கள் நினைத்ததை புத்தகமாக கொண்டு வாருங்கள். //
   அதே,அதே குமார்...
   நினைக்கும் போதே உற்சாகம் பிறக்கிறது....

   Delete
 26. லாக்டவுன்

  காலை வணக்கம் சார் 🙏🏼🙏🏼🙏🏼

  நண்பர்களே 🙏🏼🙏🏼🙏🏼
  .

  ReplyDelete
 27. // அப்புறம் தான் புரிந்தது - நான் இறங்கிய பஸ் ஸ்டாப்பிற்கு 2 ரோடுகள் parallel தான் நான் செல்ல வேண்டிய defence காலனி என்று ! நானோ மாக்கானாய் நேராய் நடந்து சென்றிருக்கிறேன் ! //
  ஏகப்பட்ட பல்பு வாங்கியிருப்பிங்க போல சார்,எல்லாமே காமிக்ஸ்காண்டி எனும் போது அவையெல்லாம் சுகமான பல்புகளாகவே இருக்கும்...
  பேசாம இந்த பதிவுக்கு பல்பு வாங்கும் படலம்னு பெயர் வெச்சிருக்கலாமோ !!!???

  ReplyDelete
 28. சார் அருமையான பதிவு . அட்டைப் படங்க அழகு. உங்க வாழ்க்கைப் போராட்டம் வியக்க வைக்குது.உங்க துணிச்சல் அசரடிக்குது .

  ReplyDelete
 29. அதற்கு ஈடுசொல்ல இன்றுவரை எதுவும் இல்லை. 400 பக்கம். 400 ரூபாய். இன்றைய விலைவாசியில் பெருமூச்சு மட்டுமே விடலாம். என்ன ஒருதரம். என்ன ஒரு அச்சு நேர்த்தி. இன்றைக்கு அதை கையில் எடுத்தாலும் ஒருவித பரவசம் உள்ளுக்குள் ஓடுவது உண்மை. ஹும்ம்..
  ஐம்பதாவது ஆண்டு அதை விட சிறப்பாக, '500 பக்கம்/ 500 ரூபாய்' (ஹி..ஹி..) என்ற அறிவிப்புடன் வகுமாயின் மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்போம்.
  (ஆசிரியர் : தோள்ல துண்டு போடுறாறேன்னு பார்த்தா மனுஷன் தலையிலேல்ல போடுறாரு.)

  ReplyDelete
  Replies
  1. 500 ரூபாய்க்கு 500 பக்க இதழ் வரும் ஆனா அது சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் 2.0 வாக இருந்தால் பரவாயில்லையா????

   Delete
  2. கருப்பு வெள்ளை போதாதே...ஆனா கருப்பு வெள்ளை பழங்காலத்த மீட்டெடுக்குமே....மிக மிகச் சிறந்த கதைகள மட்டும் முதல் நூறுக்குள் மறுபதிப்பிடா கதைகள தனியா

   Delete
 30. // ஒரு வாரத்துக்கு முந்தின தேதியில் டிக்கெட்டைப் போட்டு வைத்துத் தொலைத்திருப்பது மெது மெதுவாய்ப் புரிந்த போது, சாயா விற்றுக்கொண்டிருந்த பசங்கள் கூட என்னைப் பார்த்துச் சிரிப்பது போலிருந்தது ! //
  என்னதான் நாம விவரமா இருந்தாலும்,இருக்கறோம்னு நாம நம்பிகிட்டு இருந்தாலும் சில சமயங்களில் சிறு விஷயங்களில் கூட கோட்டை விட்டு விடுவோம் சார்...
  யாரும் இதற்கு விதிவிலக்கில்லை போல...

  ReplyDelete
  Replies
  1. // என்னதான் நாம விவரமா இருந்தாலும்,இருக்கறோம்னு நாம நம்பிகிட்டு இருந்தாலும் சில சமயங்களில் சிறு விஷயங்களில் கூட கோட்டை விட்டு விடுவோம் சார்...
   யாரும் இதற்கு விதிவிலக்கில்லை போல... // உண்மை உண்மை

   Delete
  2. /// என்ன தான் நாம விவரமா இருந்தாலும்,இருக்கறோம்னு நாம நம்பிகிட்டு இருந்தாலும் சில சமயங்களில் சிறு விஷயங்களில் கூட கோட்டை விட்டு விடுவோம் சார்...
   யாரும் இதற்கு விதிவிலக்கில்லை போல ///

   ஆமாங்க ஜி..கரெக்டு தான்..எனக்கு கல்யாணமாகி 30 வருஷமாயிடுச்சி.

   Delete
  3. பத்து சார்..🤣🤣🤣🤣🤣

   Delete
  4. ஆமாம் ஈ.வி. தப்ப தப்பாவே பண்ணியிருந்தாலும் தப்புதான்கிறத நாலு பேர் எடுத்துச் சொல்லும் போது ஒப்புக்கொள்ளத்தானே வேண்டியிருக்கு

   Delete
 31. கையை பிடித்து கூடவே கூட்டுச்சென்றா மாதிரியான விவரிப்பு

  வீட்டை விட்டு வெளியே போக இயலாத
  எங்களை அப்படியே இந்த லாக்டவுன் நாளில் டெல்லிக்கு கூட்டிச்சென்று சுற்றிக்காட்டிய உங்களுக்கு

  நன்றியோ நன்றி சார் 🙏🏼🙏🏼🙏🏼
  .

  ReplyDelete
  Replies
  1. // எங்களை அப்படியே இந்த லாக்டவுன் நாளில் டெல்லிக்கு கூட்டிச்சென்று சுற்றிக்காட்டிய உங்களுக்கு //
   சும்மா எல்லாம் சுத்திக் காட்டி முடியாதுங்கோ...

   Delete
  2. சரி

   அப்போ ஒரு டீலிங் வச்சிக்கலாம் 🤷🏻‍♂️

   மெபிஸ்டோவோட குண்டு புக்கு வரச்சே

   நானு உங்களுக்கு ஆர்டர் பண்ணிடுறேன்

   பதிலுக்கு

   நீங்க எனக்கு ஆர்டர் பண்ணிடுங்கோ🤷🏻‍♂️

   அம்புட்டுதேன்

   டீல் ஓகேவா பாசு 🙏🏼😇
   .

   Delete
  3. ஆஹா செம்ம ஃபார்ம் ல இருக்காரே சித்தர். 🏃🏃🏃🏃

   Delete
 32. சார் செப்டம்பர் இதழ்களை 5 ஆம் தேதிக்குள் எதிர்பார்க்கலாமா ???

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக செப்டம்பருக்குள் எதிர்பார்க்கலாம் 🤷🏻‍♂️
   🏃🏻‍♂️🏃🏻‍♂️🏃🏻‍♂️
   .

   Delete
  2. ///சார் செப்டம்பர் இதழ்களை 5 ஆம் தேதிக்குள் எதிர்பார்க்கலாமா ??///

   நீங்க நாளைக்கே கூட எதிர்பார்க்கலாம் அறிவரசு அவர்களே! ஆனா அவர் அனுப்பும்போதுதான் அனுப்புவார்! (ஹீஹீ.. பழிக்குப்பழி! 🤪🤪 கூப்பிடுங்க உங்க சேலத்துச் சின்னத்தம்பியை!)

   Delete
  3. // நீங்க நாளைக்கே கூட எதிர்பார்க்கலாம் அறிவரசு அவர்களே! ஆனா அவர் அனுப்பும்போதுதான் அனுப்புவார்! // ஹிஹிஹி செம்ம EV

   Delete
 33. 50 வதுஆண்டுமலருக்கு லக்கிandடெக்ஸ்வில்லரின்ஆல்டைம்பெஸ்ட்ஆகநீங்கள்நினைக்கும் கதைகளை இப்போழுதே தேர்ந்தெடுத்து இருப்பில்வைத்து விடுங்கள் ஆசிரியர்சார்.நம்மகொண்டாட்டத்துக்கு.
  நம்மசந்தோசத்துக்குவேறுயார். விலை மற்றும் தயாரிப்புதரம்பிற்ப்பாடுநீங்கள்முடிவெடுங்கள்சார் எப்பொழுதும்போல் உடன்வரநாங்கள் இதோகிளம்பியாச்சு. கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
  Replies
  1. ///எப்பொழுதும்போல் உடன்வரநாங்கள் இதோகிளம்பியாச்சு. ///

   இன்னிக்கு லாக்டவுன்'றதை மறந்துட்டீங்க போலிருக்கே ஜி?! நாளைக்குக் கிளம்புவோம்!!😝😝

   Delete
 34. சார் இன்னிக்கு நம்ம இரும்பு தெய்வம், KS உள்ளிட்ட நண்பர்கள் பலரும் இங்கே ஆரவாரமாக குழுமியிருப்பதால், இன்று மாலையே ஒரு உப பதிவுக்குத் தயாராகும்படி தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்!

  (இந்தப் பதிவின் இறுதி வரியில் நீங்கள் குறிப்பிட்டிருந்ததைச் செயல்படுபடுத்தும் வாய்ப்பு இன்னிக்கே ஏற்பட்டதைப் பற்றி நீங்க என்ன நினைக்கறீங்க? 😜😜)

  ReplyDelete
  Replies
  1. நம்ம இரும்புக் கவிஞர் இப்போதெல்லாம் டயப்பர் மாற்றும் கலையில் பிசியாக இருப்பதால் நான் இங்கே காலாட்டிக் கொண்டிருக்க முடிகிறது !

   Delete
 35. எங்க ஊர்ல அவ்வளவு ஸ்ட்ரிக்ட் எல்லாம் இல்ல ஜி நீங்ககிளம்பச்சொன்னா கொஞ்சம் ஷெல்டன் எடுத்துக்கிட்டு கிளம்பிரவேண்டியதுதான். கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
 36. லக்கி சிறுகதைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

  ஏதோ ஒரு காமிக்ஸ் ல ஒரு சைனிஸ் பேசிகிட்டே இருப்பான். லக்கி ஒரு வார்த்தை பேசினால் அவன் பெரிய பலுன் அளவுக்கு பெரிய வசனம் பேசுவான். அந்த ஊர் ஷெரிப்பாகி சுடமலே ஒன்டி ஒன்டி ஜெயிப்பான். அது எந்த காமிக்ஸில் உள்ளது??.

  அதே காமிக்ஸ் ஸில் பாதிரியார் ஒருவர் செவ்விந்தியர்களிடம் மதத்தை பரப்புரேன் போய் செம காமெடி பன்னுவாரு.

  மொழிபெயர்ப்பு சூப்பரா இருக்கும். எந்த காமிக்ஸ் ன்னு யாராவது சொல்றிங்களா?

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. @Ganesh kumar 2635

   அது 'ரிப்போர்டர் ஜானி ஸ்பெஷல்'!

   முன்னதை நானும், பின்னதை கார்த்திக் சோமலிங்காவும் மொழிபெயர்த்திருந்தோம்! 'போட்டிக்காண்டி' செய்த மொழிபெயர்ப்பு அது!

   Delete
  3. உங்களுக்கும் கார்த்திக் சோமலிங்காவுக்கும் ஸ்பெஷல் நன்றி.

   Delete
 37. ஸ்டீல் ஜி. அதுயாருங்க கோவை லதா அவுகளப்பத்தியும் ஒரு கவிதை ப்ளீஸ். கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹி வேண்டாம் நீங்க சிங்கத்தை எட்டி உதைகிறீர்கள்.

   Delete
  2. ///அதுயாருங்க கோவை லதா அவுகளப்பத்தியும் ஒரு கவிதை ப்ளீஸ். ///

   ராஜசேகர் ஜீ.. செம்ம செம்ம!!🤣🤣🤣🤣🤣

   Delete
  3. என்னது? கோவைலதா வழுக்கிட்டுதா? புடிச்சீங்களா இல்லியா?

   Delete
 38. எனக்கு மேக்ஸி சைஸ் ரொம்ப பிடிக்கும். அடுத்த வருடம் மேக்ஸி வராமல் போவது எனக்கு வருத்தமே.

  ReplyDelete
 39. Sir,

  வாரமலர் இதழில் வாசகர்களை ஆசிரியர் அந்துமணியுடன் சேர்த்து வருடம் ஒருமுறை குற்றாலம் Tour அழைத்துச் செல்வார்கள்,

  அதுபோல் தங்கள் பயணக்கட்டுரைகளை படிக்கையில் தங்களுடன் பயணம் செல்ல வாசகர்களாகிய எங்களுக்கும் ஆர்வமாக உள்ளது,

  சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் போல,காமிக்ஸ் முக்காயத்துவம் வாய்ந்த இடங்களுக்கு வாசகர்களை அழைத்துச் செல்ல முயற்சிக்கலாம், ( சிவகாசியே எங்களுக்கு Ok தான்)

  ReplyDelete
  Replies
  1. சூப்பர் ஐடியா!! 👏👏👏👏

   Delete
  2. Good Idea sir - first tour to sivakasi and then annual tours to Europe sir - Vikram can plan and both of you can be guides !!

   Even if we get 20 folks per year - it would be a super tour !!

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
  4. முத்து காமிக்ஸ் ஐம்பதாவது ஆண்டு கொண்டாட்டத்தை சிவகாசியில் மூன்று தலைமுறை ஆசிரியர்களுடன் ஒரு நாள் கொண்டாடலாமா? ஒரு மண்டபம் பிடித்து மூன்று நேர சாப்பாடு மற்றும் காமிக்ஸ் உரையாடலுடன் கொண்டாடுவோமா நண்பர்களே?

   Delete
  5. முத்து 50க்கு டெக்ஸ் 75 க்கு இத்தாலி.

   Delete
  6. முத்து காமிக்ஸ் ஐம்பதாவது ஆண்டு கொண்டாட்டத்தை சிவகாசியில் மூன்று தலைமுறை ஆசிரியர்களுடன் ஒரு நாள் கொண்டாடலாமா? ஒரு மண்டபம் பிடித்து மூன்று நேர சாப்பாடு மற்றும் காமிக்ஸ் உரையாடலுடன் கொண்டாடுவோமா நண்பர்களே?//

   அட்டகாச ஐடியா நண்பரே...👌👌👍👍👍

   Delete
 40. நான் கிளம்பியநேரம் நல்லநேரம்போலஎல்லாரும்பயணம் போலாங்கராங்களேசிவகாசி சலோ.

  ReplyDelete
 41. ஜிநீங்க மொழி பெயர்த்திருந்தீர்களா. சரித்திரத்தின் மறுபக்கம்தெரியாமப் போயிருச்சே கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
  Replies
  1. என்ன இப்படிக் கேட்டுட்டீங்க ஜி!! அதுக்கப்புறம்தானே லக்கிலூக் உலக அளவுல ஃபேமஸ் ஆச்சு?!!😝😝

   தவிர, நானே ஒரு நடமாடும் சரித்திரம் தானே!! 😇😇 (யாராவது 'தரித்திரம்'னு படிச்சு வச்சீங்களோ.. பிறாண்டிப்புடுவேன்.. சொல்லிட்டேன்!😼😼)

   Delete
  2. வித்தியாச நடைல பின்னியிருப்பார் ஈவி...நா மிகமிக ரசித்த மொழி பெயர்ப்பு

   Delete
  3. ஸ்டீல்... உங்க அக்கவுண்ட் நம்பர் அனுப்பிட்டீங்க தானே ?

   Delete
  4. ஆங்! க்ரெடிட் ஆன SMS பார்த்துட்டுத்தான் கமெண்ட்டே போட்டிருக்காரு சார்!😌😌

   Delete
  5. இது எல்லாம் கூட நடக்குதாலே :-)

   Delete
 42. மறுமறுக்கா வாசிப்பு!

  பொன் தேடிய பயணம்!!

  11.00 மணிக்கு ஆரம்பிச்சது இப்போ மணி 2.00 ஆயிட்டு..

  ஆனாக்கா அதிரடி, ஆக்ஷன் கதைலாம் அரைமணி நேரம், முக்கால் மணிநேரத்தில் முடிஞ்சுறுதே!

  ReplyDelete
 43. Lion comics subscription 2020
  5250 +900

  ஏற்கனவே செலுத்தியாச்சு சார்....

  மாக்ஸி லயன்
  ஸ்பைடர்

  இதில் அடங்குமா இல்லை

  தனியாக பணம் ஏதேனும் அனுப்ப வேண்டுமா... சார்...

  ReplyDelete
  Replies
  1. ப்ளீஸ் any body small help....😊

   Delete
  2. மாக்ஸி லயன் மற்றும் அர்ஸ்மேக்னா அடங்கும். எதுக்கும் அடங்காத ஸ்பைடர் சந்தாவிலும் அடங்க மாட்டார்.

   Delete
  3. ////எதுக்கும் அடங்காத ஸ்பைடர் சந்தாவிலும் அடங்க மாட்டார்////

   MP...🤣🤣🤣🤣🤣

   Delete
  4. மகேந்திரன் @ எப்படி இப்பூடி :-)

   Delete
  5. ஹா ஹா

   மிக்க நன்றி....

   ஆனால் ஸ்பைடர் ரின் விலை அடக்கமாகவே உள்ளது...

   Delete
  6. ////எதுக்கும் அடங்காத ஸ்பைடர் சந்தாவிலும் அடங்க மாட்டார்////


   :-)))))

   Delete
 44. This comment has been removed by the author.

  ReplyDelete
 45. சென்ற மாத டயபாலிக் புக்கில் வந்த ரிப்கெர்பியின் விளம்பரம் *ஒரு சிண்ட்ரெல்லாவை தேடி* முன்னர் முத்து காமிக்ஸ் இல் வந்த *வாரிசு யார்* கதைதானே சார்? Reprint ஆகிறதா???

  ReplyDelete
 46. 50வது ஆண்டு மலரருக்கு டெக்ஸ vs மெபிஸ்டோவை விட மேலானது என்ன இருக்கிறது???
  ஒரு ஓட்டெடுப்பு நடத்தலாமே ;)

  ReplyDelete
  Replies
  1. அது வான்னா வந்ரப்போவுது....சும்மா நச்சுன்னு இது வந்ததில்லன்னு மெரட்ற மாதிரி வரனும்

   Delete
 47. வேணுமினா அடுத்த டெக்ஸ் மறுபதிப்புக்கே மந்திர மண்டலத்தை போட்டர்ல்லாமே மெபிஸ்டோவும் வந்தமாதிரி டெக்ஸ்சும் வந்தமாதிரி... ஆச்சுல்ல...

  ReplyDelete
 48. முத்து காமிக்ஸ் ஐம்பதாவது ஆண்டு கொண்டாட்டத்தை சிவகாசியில் மூன்று தலைமுறை ஆசிரியர்களுடன் ஒரு நாள் கொண்டாடலாமா? ஒரு மண்டபம் பிடித்து மூன்று நேர சாப்பாடு மற்றும் காமிக்ஸ் உரையாடலுடன் கொண்டாடுவோமா நண்பர்களே?//

  செமையான ஐடியா திட்மிட்டால் 2022 ல் பட்டைய கெளப்பியர்ல்லாம்... நம்ம லயன் ஆபீஸ் குடோன் ல் உள்ளதை அள்ளிக்கொண்டு குடோனை காலி செய்ய ஒரு வாய்ப்பு....

  ReplyDelete
  Replies
  1. // நம்ம லயன் ஆபீஸ் குடோன் ல் உள்ளதை அள்ளிக்கொண்டு குடோனை காலி செய்ய ஒரு வாய்ப்பு.... //

   :-)

   Delete
 49. அப்படியே அந்த சந்திப்பின் போது இதுவரை வந்த இதழ்களின் அட்டைப்படங்களின் தொகுப்பை ஒரு புத்தகமாக வெளிவர நண்பர்கள் அனைவரும் முயற்ச்சில்தால் சாத்தியப்படும்....

  ReplyDelete
 50. சார், லக்கி பின்னட்டை படமாக ஒன்றையே அண்மைய வெளியீடுகளில் பயன்படுத்துகிறீர்கள். அடுத்த வெளியீடுகளில் மாற்றுவதற்கு வாய்ப்புண்டா?

  ReplyDelete
 51. அன்பின் ஆசிரியருக்கு, உங்கள் கொலக்க்ஷனில் அந்த லக்கி லூக் ஆங்கில பதிப்பு இருந்தால் அதன் அட்டையை பதிவிட முடியுமா? ஆங்கிலத்தில் வந்த "The Cursed Ranch" பற்றி எந்த தகவலும் இணையத்தில் தேடியும் எமக்கு கிடைக்கவில்லை. நன்றி

  ReplyDelete
  Replies
  1. இதோ நண்பரே... https://drive.google.com/file/d/11RGPt6HM5WwRhWuOiKsugDBSue9Rg6Gr/view?usp=drivesdk

   Delete
  2. நீங்கள் அனுப்பிய Link வழி தரவிறக்கம் செய்ய இயலவில்லை. எனினும் நன்றி. சமீபத்தில் வந்த Cinebooks(Issue - 62) விபரங்கள் உள்ளன. ஆசிரியர் வாங்கியது பல்லாண்டு முன்னர் வாங்கியது. அதனை கேட்டேன்.

   Delete
 52. ////முத்து காமிக்ஸ் ஐம்பதாவது ஆண்டு கொண்டாட்டத்தை சிவகாசியில் மூன்று தலைமுறை ஆசிரியர்களுடன் ஒரு நாள் கொண்டாடலாமா? ஒரு மண்டபம் பிடித்து மூன்று நேர சாப்பாடு மற்றும் காமிக்ஸ் உரையாடலுடன் கொண்டாடுவோமா நண்பர்களே?////

  சிவகாசியில் கொண்டாடுவது தான் பொருத்தமாக இருந்திடும்! எனக்கும் இதில் சம்மதமே!

  ஆனால், வெளியூர்/வெளிமாநில/வெளிநாடு வாழ் நண்பர்கள் வந்துசெல்ல சிவகாசி சுகப்படுமா என்பதே மனதிலிருக்கும் ஒரே கேள்வி!

  நாட்கள் இன்னும் நிறைய உண்டு என்றபோதிலும் இப்போதிருந்தே இது குறித்த கருத்துகள் (ஒரு தெளிவை ஏற்படுத்தவாவது) தேவை!

  இது குறித்து எடிட்டர் சமூகத்தின் கருத்துகளும் ஆவலாக எதிர் பார்க்கப்படுகின்றன!

  ReplyDelete
  Replies
  1. சிவகாசி யில் கொண்டாடுவது தான் பொருத்தமாக இருக்கும். இதுவே எனது கருத்தும்.

   Delete
  2. பின் குறிப்பு: நான் எல்லாம் எப்போ நம்ம லயன் ஆஃபீஸ் ஸை நேரில் பார்ப்பது.

   Delete
  3. பின் குறிப்பு: நான் எல்லாம் எப்போ நம்ம லயன் ஆஃபீஸிலிருக்கும் பழங்காமிக்ஸுகளை ஆட்டையை போடுவது.🤪🤪

   Delete
  4. ஆனால், வெளியூர்/வெளிமாநில/வெளிநாடு வாழ் நண்பர்கள் வந்துசெல்ல சிவகாசி சுகப்படுமா என்பதே மனதிலிருக்கும் ஒரே கேள்வி! //

   நிச்சயம் சாத்தியமே நண்பரே... சாத்தூருக்கு இந்தியாவில் எந்த மூலையில் இருந்தும் ரயில்வசதி உண்டு அதனால கவலை வேண்டாம்...

   Delete
  5. அருகே மதுரை விமானநிலையமும் கூட... வேலை முடிஞ்சுது...

   Delete
  6. அட எல்லா ஊருக்கும் பஸ்ஸையும் திறந்துவிட்டாங்க.. அறிவிப்ப மட்டும் கொடுங்க . நான் பைக்லயே வந்திடுவேன்....

   Delete
  7. சிவகாசிக்கு எனது ஓட்டு...

   Delete
  8. சிவகாசிக்கு எனது ஓட்டு...
   +1

   Delete
  9. சிவகாசிக்கு எனது ஓட்டு.

   முத்து 50 நமது ஆசிரியர் அலுவலகம், மற்றும் ஆசிரியர் குடும்பம் இருக்கும் இடத்தில் நடப்பதே சிறப்பானதாக இருக்கும்! நண்பர்கள் உலகில் எந்த திசையில் இருந்தாலும் சிவகாசி வருவதே இது போன்ற தருணத்தில் சரியாக இருக்கும்!

   Delete
  10. மதுரை மற்றும் விருதுநகர் ரயில் நிலையம் சிவகாசிக்கு அருகே தான் :-)

   Delete
 53. லக்கியின் குட்டிக்கதைகளின்தொகுப்பு. மெய்யாலுங்காட்டியுமே இதுதான் வாண்டுஸ்பெஸல் லக்கி பொருப்பேற்றுக்கொள்ளும் ஒரு வாண்டு ஒரேஒர செவ்விந்தியரிடம் சேட்டை பண்ணிசெவ்விந்தியர்படையேபோருக்கு வரும்சூழலைஏற்படுத்தும்கதைஇருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
 54. அரியர்ஸ் இல்லாமல் டெஸ்ட்...

  ReplyDelete
 55. பிசாசு பண்ணை அட்டைப்படம் செம கலக்கலாக அமைந்முள்ளது ..சூப்பர்..ஆனால் இந்த கதையை சிறுகதை போல் படித்த நினைவு.

  ReplyDelete
  Replies
  1. ஆனாலும் இன்னும் சிறுகதைகள் உண்டு என்று ஆசிரியர் அறிவித்த படியால் இதுவும் "வாண்டு ஸ்பெஷலே.."...

   எனவே வாக்கெடுப்பில் (?) வென்ற இதழ் அடுத்த மாதமே வருகிறது என்பதே மகிழ்வான செய்தி தான்..:-)

   Delete
  2. வாக்கெடுப்பில் வென்ற இதழ் அடுத்த மாதமே வெளிவருகின்றதா,சொல்லவேயில்லை.

   Delete
 56. வாக்கெடுப்பு என்றவுடன் தான் போன பதிவுகிளில் ஏற்பட்ட கலவரங்கள் நினைவுக்கு வருகிறது..அந்த சமயத்தில் ஆஜராக முடியா நிலைமை...ஆனால் ஆசரியருக்கு ஒன்று இந்த வாக்கெடுப்பு முறை சிறந்த ஒன்றே சார்..எனவே இதை தாங்கள் தொடரவேண்டும்..

  ReplyDelete
 57. This comment has been removed by the author.

  ReplyDelete
 58. ஆகஸ்ட் 2020 இதழ்கள் பற்றி கொஞ்சமாக...

  1. 2132 மீட்டர்

  இந்த மாதத்தின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பையும் ஈடுசெய்யும் கர்த்தாவாக XIII ஆகி விட்டிருக்கிறார். இந்த கதைக்காகவே தங்களின் அறிவுரைப்படி, 2-ம் சுற்றின் 5 பாகங்களையும் 2 நாட்களில் மாங்கு மாங்கென்று சுறுசுறுப்பாக படித்து முடித்தேன். அந்த மெனக்கெடலை கொஞ்சமும் வீணாக்காமல் முன்னோக்கி இழுத்துச் சென்றார் ஜேஸன்.... ஜேஸன் ப்ளை.... Really Flying HiGH with கடைசிப் பக்கத்தில் வெளியேறிய தோட்டா... (ஜோன்ஸை நினைத்தால் தான் கவலையாக இருக்கிறது...)

  2. நில் கவனி கொல்
  ஜேம்ஸ்பாண்ட் 2.0-வில் வந்த எல்லா கதைகளுமே ஹை-டெக் மற்றும் வண்ணத்தின் அதகளம். ஒவ்வொன்றும் ஒரு தினுசு. ஆனாலும் இந்த மாதத்தின் நில் கவனி கொல் என்னை நிறையவே டச் பண்ணி விட்டது. அதிலும் ஜேம்ஸின் குணத்தைப் பற்றி எடுத்துச் சொல்லும் அந்த வரிகள் என்னை திரும்பத் திரும்ப படிக்கத் தோன்றியது உண்மை. நேற்று உங்களுடன் நடந்த கூகுள் மீட்-ல் கூட இந்த கருத்தையே சொல்லியிருந்தேன். ஆத்மார்த்தமாக அந்த பாத்திரத்தை உள்வாங்கியிருந்தால் மட்டுமே இவ்வளவு ஆழமான வரிகளில் வெளிப்படுத்த முடியும். மொழிபெயர்ப்பில், ரசனையில் நீங்கள் ஒரு ஆசான் என்பதை நிரூபித்து விட்டீர்கள் நன்றி.

  இந்த கதையைப் பொறுத்த வரையில் வில்லனும் ஸ்ட்ராங், கதையின் வண்ணங்களும் ஸ்ட்ராங், ஹீரோவும் ஸ்ட்ராங், அடிக்கடி ஹீரோவையே காப்பாற்றும் அந்த அக்காவும் இஸ்ட்ராங்... நின்று, கவனித்து படித்தேன்...

  3. துரோகம் ஒரு தொடர்கதை
  டேஞ்சர் டயபாலிக் ஏன் இத்தாலியில் இன்னமும் கோலோய்ச்சுகிறார் என்பதற்கு இந்த மாதிரி கதைகளே விளக்கமாக இருக்கும். பக்கத்திற்கு பக்கம் துரோகம்... கட்டத்துக்கு கட்டம் மனமாற்றம்... முகமூடிக்குள் இருக்கும் நாயகர் எத்தனை பேரின் முகமூடிகளை களைந்தெறிகிறார் இங்கே. டயபாலிக்கை கொலைக்கும் அஞ்சாத திருடனாக காட்டியது கொஞ்சம் மனதை உறுத்தியது உண்மை. ஆனாலும், டயபாலிக் எதற்கும் அஞ்சாதவன் என்பதை இறுதியாக காரிலிருந்து குதிக்கும் போது நறுக்கென புரிய வைத்தது இந்த கதை..

  4. பனியில் ஒரு குருதிப்புனல்
  இந்த கதையை படித்துக் கொண்டே 80 பக்கங்கள் வரை சென்று விட்ட பின்னரும் யார் வில்லன், அப்படி ஏதாவது இருக்கா என மண்டை குழம்பியது தான் மிச்சம். காப்பாற்றிய அழைத்து வந்த ரஷ்ய பெண்மணி உண்மையில் கவர்ந்திழுக்க வைக்கப்பட்ட இரை என்பதை நம்ப முடியவில்லை. அடுத்ததாக, உறக்கத்திலிருந்த பிசாசுகள் / தேவதைகள் எல்லாம் உதிரத்தினால் உயிர்த்தெழுந்தன என்பது உளவியல் ரீதியில் மிகவும் ஏற்க வேண்டிய வாதம். எதுவோ, எப்படியோ போகட்டும் என்று இறுதி வரையிலும் நெஞ்சை நிமிர்த்தி போராட்டம் காட்டிய தலைவர் லோசர் கட்சி ஆரம்பித்தால் நான் சேர்ந்து கொள்வேன். என்னே ஒரு தலைமைப் பண்பு, என்ன ஒரு மனோதிடம்... இப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்த போது, கதையை சொல்லி வரும் கார்ப்பொரல் கனவான் மட்டும் எப்படி தப்பிச்சு என கேள்வி வர... இறுதி 2 பக்கங்களில் அதுவும் பணால்... இந்த கதை முடிந்து விட்டதா, இல்லை அந்த கடைசி பக்கத்தில் தான் தொடங்குகிறதா என ஒரு கன்பீஸன்...

  இது போன்ற தரமான வுட்டலக்கடி கதைகளை போட்டுத் தாக்கும் வரை கிராபிக் நாவல் வாழும்... என்னுடைய ஆதரவு தொடரும்... நன்றி

  ReplyDelete
  Replies
  1. சூப்பர் விமர்சனம்!!

   ////ஆத்மார்த்தமாக அந்த பாத்திரத்தை உள்வாங்கியிருந்தால் மட்டுமே இவ்வளவு ஆழமான வரிகளில் வெளிப்படுத்த முடியும்///

   உண்ம!

   ///பக்கத்திற்கு பக்கம் துரோகம்... கட்டத்துக்கு கட்டம் மனமாற்றம்... முகமூடிக்குள் இருக்கும் நாயகர் எத்தனை பேரின் முகமூடிகளை களைந்தெறிகிறார் இங்கே.///

   அட!! இதுகூட நல்லாயிருக்கே!!!

   Delete
  2. பூபதி அருமையாக விமர்சித்து இருக்கீங்க. நீங்களும் எல்லா கதைகளையும் அருமையாக உள்வாங்கி இருக்கீங்க என்று உங்கள் விமர்சனத்தில் இருந்தே தெரிகிறது. ஆகஸ்ட் அட்டகாசமான மாதம் இப்படியே அடுத்த மாதமும் தொடருங்கள் சார்.

   Delete