நண்பர்களே,
வணக்கம். நாடும், ஜனமும் ஏதேதோ இக்கட்டுகளில் சிக்கி நிற்க, 'நாட்கள்' எனும் ஓடம் மட்டும், 'ஏலேலோ ஐலசா' என தன்பாட்டுக்கு ஓட்டமாய் ஓடிச் செல்வதும், பிரபஞ்சப் புதிர்களுள் ஒன்று போலும் ! இதோ - லாக்டௌன் ; வைரஸ், கை கழுவு, காய் கழுவு ; மாஸ்க் போடு ; சானிடைசருக்கு 'O' போடு... இத்யாதி இத்யாதி, என்பெனவெல்லாமே சுத்தமாய் 5 மாதங்களை விழுங்கியிருக்க - ஆண்டின் இறுதிக் க்வாட்டரை எதிர்நோக்கி நிற்கின்றோம் ! வேறொரு க்வாட்டரை வாங்கி, தம் சனநாயகக் கடமைகளை ஆற்றிடும் குடிமக்களின் ஆர்வங்களை, இந்த 'பொம்மை புக் க்வாட்டர் மோகத்தால்' மிஞ்சிட இயலாது தான் என்றாலுமே, 'செப்டெம்பர் to டிசம்பர்' என்ற இந்த 4 மாதங்களில் காத்திருப்பன செம சுவாரஸ்ய ஆல்பங்கள் எனும் போது the interest quotient is bound to be high for us too !
So இதோ - தொடரவுள்ள செப்டெம்பரின் வெளியீடுகளின் பிரிவியூ படலத்தின் துவக்கம் ! ஆண்டின் அடுத்த MAXI மாதம் இதுவே, என்பதால் லக்கி லூக்கின் "பிசாசுப் பண்ணை" - முழு வண்ணத்தில், மெகா சைசில் மினுமினுக்கத் தயாராகி விட்டது ! இந்தப் பெரிய சைஸ் அத்தனை ரசிக்கவில்லை என சில நண்பர்கள் முணுமுணுத்திருந்ததைக் கவனித்திருந்தேன் தான் ; ஆனால் வண்ணத்தில் இந்த சைசிலான பக்கங்கள் ஒவ்வொன்றையும் பார்த்திடுவது, கழுதை வயசான எனக்கே இன்னமும் ஒரு உற்சாகமூட்டும் அனுபவமாகவே உள்ளது ! Maybe புதுசாய் பல்டிகளை முயற்சிக்கும் மாறாக் குணம் என்னை ஒருவிதமாகவும், 'பழகியதைத் துறப்பானேன் ?' என்ற உங்களின் பாரம்பரியப் பிரியங்கள் வேறொரு விதமாகவும் சிந்திக்கச் செய்கின்றனவோ - என்னவோ ! Whatever the reasons might be - அட்டவணையினில் அறிவிக்கப்பட்டிருந்த 6 MAXI ஆல்பங்களுள் 2 ஏற்கனவே வெளியாகி விட்டன & ARS MAGNA இன்னொரு 2 ஸ்லாட்களை ரெகுலர் சைசில் எடுத்துக் கொள்ளவுள்ளது ! So எஞ்சியுள்ள இரண்டினில் - இதோ வெளியாகிடவுள்ள 'பிசாசுப் பண்ணை' ஒரு ஸ்லாட்டையும், இன்னொரு மறுபதிப்பு அந்த இறுதி ஸ்லாட்டையும் எடுத்துக் கொள்வதோடு நடப்பாண்டின் MAXI சைஸ் புராஜெக்ட்ஸ் நிறைவுற்றிடும் ! ஏற்கனவே அடுத்த வருஷமானது - 'வவுரைச் சுத்தித் துணிங்கோ ; துணி முழுக்க ஈரமுங்கோ' என சிக்கன சிங்காரவேலனாய் வலம் வரவுள்ளதால் - there will be no MAXI sizes - at least for 2021 !! முத்துவின் ஐம்பதாவது வருஷமாகிடக்கூடிய 2022 - நமக்கு என்ன கொணரக்கூடுமோ - அதனை அப்போது பார்த்துக் கொள்வோமே !
1990-க்குப் பின்னேயான ஏதோவொரு வருஷத்தின் பிப்ரவரி அது ! மாமூலாய் புது டெல்லியின் பிரகதி மைதானில், மெகா உலகப் புத்தக விழா பிப்ரவரிகளில் நடைபெறுவது வழக்கம். நடு நடுவே நேரம் கிடைக்கும் ஆண்டுகளில் நான் அதற்கொரு விசிட் அடிப்பதுண்டு ! டெல்லியில் இருக்கும் Fleetway -ன் ஏஜெண்ட்களைப் பார்த்த மாதிரியும் இருக்கும், புத்தக விழாவினில் நமக்கு art reference-க்கு புக்ஸ் வாங்கியது போலவுமிருக்கும் ; வடஇந்தியப் பதிப்பகங்களின் புதுத் தயாரிப்பு யுக்திகளைக் கொஞ்சம் பார்வையிட்டது போலவும் இருக்குமே - என்பதே எனது பயணங்களின் பொதுவான பின்னணி ! கரோல் பாக்கில் கிடைக்கக்கூடிய அந்தப் பஞ்சாபி சமோசாக்களும், ரசகுல்லாக்களும் ஒரு உபரி காரணமென வைத்துக் கொள்ளுங்களேன் ! இன்டர்நெட்கள் இல்லாத அந்த நாட்களில், இங்கிலீஷ் நியூஸ்பேப்பர்களில் மட்டும் இந்தப் புத்தக விழா பற்றிய விளம்பரங்கள் வெளிவந்திடுவதுண்டு ! So ஜனவரியின் நடுவாக்கினில் ஹிந்து நாளிதழில், அந்த வருஷத்துப் புத்தக விழாவினைப் பற்றிய விளம்பரத்தை பார்த்த போது, ரயிலுக்கு டிக்கெட்டைப் போட்டுவிடத் தீர்மானித்தேன் ! அன்றைக்கெல்லாம் லொஜக்-மொஜக் என டிக்கெட்டை நொடியில் போட்டுத் தரும் app-கள் கிடையாது ! ரயில்வே ஸ்டேஷனில் போய் , கிருஷ்ணாயில் வாங்கும் ரேஷன் கடை க்யூவை ஒத்த வரிசையினில் தேவுடா காத்தே டிக்கெட் வாங்கிட வேண்டி வரும் ! அதற்கெல்லாம் நமக்கு மேல் வலிக்கும் பட்சங்களில், டிக்கெட் எடுத்துத் தரும் புரோக்கர்கள் இருப்பர் ! நமக்கோ அந்நாட்களில் தினமுமே ரயிலில் ஏஜெண்ட்களுக்கான பார்சல்கள் புக்கிங் ஆவதுண்டு & so அவற்றிற்கான பாஸ் அடித்து மாலையில் ஆபீசுக்கு கொணர்ந்து கொடுத்துச் செல்லும் புரோக்கர் ஒருவர் உண்டு ! பகல் முழுக்க ரயில்வே ஸ்டேஷனிலேயே இருப்பவர் என்பதால் விபரங்களை மட்டும் சொல்லி வைத்தால், மாலையில் ஆபீசில் டிக்கெட்டைப் பட்டுவாடா செய்துவிடுவார் ! So மறு நாள் அவரிடம் விபரத்தைச் சொல்லிட, டாண்னென்று டிக்கெட்டும் வந்து விட்டது ! So பிப்ரவரி முதல் வாரத்தில் மூட்டையைக் கட்டிக் கொண்டு சென்னைக்கு ரயிலேறி, அங்கிருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸைப் பிடித்து தலைநகருக்குப் பயணமானேன்.
சிலு சிலுப்பான இரண்டாவது நாள் அதிகாலையில், டில்லி ரயில்நிலையத்தில், ஸ்வெட்டரை மாட்டிக்கொண்டு இறங்கிய போது உற்சாகம் பீறிட்டது - நோவுகள் ஏதுமின்றிய 3 நாட்களின் பணிகளை முன்னிட்டு ! தங்கிட இம்முறை ஹோட்டலில் ரூம் போட்டிருக்கவில்லை ; கன்னாட் பிளேஸில் இருந்த YMCA -வில் ஒரு சிங்கிள் ரூம் சொல்லி வைத்திருந்தேன் ! அவர்களோ காலை 8 மணிக்கு தான் செக்கின் செய்வார்கள் எனும் போது - கொள்ளை போகுதென அந்த அதிகாலைக்கே அங்கே ஓட்டமெடுப்பதில் அர்த்தம் இருக்காதென்றுபட்டது ! So பிளாட்பாரத்தில் இருந்த பெஞ்சில் சாவகாசமாய்க் குந்தியபடிக்கே சோம்பல் முறித்துக் கொண்டிருந்தேன் ! நியூஸ்பேப்பர் கட்டுக்கள் அப்போது வந்திறங்க, எனக்குப் பின்னேயிருந்த கடையில் உடைத்து அடுக்க ஆரம்பித்தார்கள் ! ஒரு பேப்பரை வாங்கிப் புரட்ட ஆரம்பித்தேன் - ஸ்போர்ட்ஸ் பக்கத்திலிருந்து ! சாவகாசமாய் மூன்றாம் பக்கத்தை எட்டிய போது - டெல்லி புத்தக விழாவின் விளம்பரம் முரட்டு சைசில் கண்ணில் பட்டது ! யாரேனும் மந்திரி அல்லது M.P. - புத்தக விழாவினைத் துவக்கி வைக்கும் விளம்பரமாக இருக்குமென்று தோன்றியது ! 'அடாடாடாடா....இந்த அரசியல்வாதிங்க தொல்லை தாங்கலைடா சாமீ !' என்றபடிக்கே விளம்பரத்தைப் பார்த்தால் - நான் நினைத்தபடிக்கு எதையும் காணோம் ! மாறாக - "இன்னும் எட்டே நாட்கள் தான் !!" என்பது போல என்னவோ எழுதியிருந்தார்கள் ! ஊசிப்போன மசால்வடையை உள்ளே தள்ளியதை போல லைட்டாக அடிவயிறு கலங்கும் உணர்வு தலைதூக்க - அவசரம் அவசரமாய் விளம்பரத்தை நிதானமாய் வாசிக்க ஆரம்பித்தேன் ! சரியாக மறுவாரத்தில் விழா ஆரம்பித்து, பதினைந்தோ-இருபதோ நாட்களுக்கு ஓடவுள்ளதாய் கொட்டையெழுத்துக்களில் அச்சிடப்பட்டிருந்தது ! நான் ஊரில் டிக்கெட்டைப் போட்ட சமயத்தில் தேதியை சரியாய் உள்வாங்கியிருக்காது - ஒரு வாரத்துக்கு முந்தின தேதியில் டிக்கெட்டைப் போட்டு வைத்துத் தொலைத்திருப்பது மெது மெதுவாய்ப் புரிந்த போது, சாயா விற்றுக்கொண்டிருந்த பசங்கள் கூட என்னைப் பார்த்துச் சிரிப்பது போலிருந்தது !
Up 3 நாட்கள் ; Down 3 நாட்கள் பயணம் + 3 நாட்கள் டில்லியில் ஜாகை : ஆக மொத்தம் 9 நாட்கள் அரையணாவுக்குப் பிரயோஜனமில்லா விரயம் என்பது புரிந்த போது துக்கம் தொண்டையை அடைத்தது !! சில நிமிடங்களுக்கு முன்வரையிலும் காந்தக்கண்ணழகியாய்த் தென்பட்ட டெல்லி - திடுமென கறுப்புக் கிழவியாகத் தெரியத் தொடங்கிட - எத்தனை காசு கோவிந்தா ஆகிவிட்டுள்ளது என்ற கணக்கு மனசுக்குள் கிடு கிடுவெனஓட ஆரம்பித்தது ! ரயிலில் வாங்கிய சிக்கன்மீல்ஸ் கூட அந்த நொடியில் ஒரு அவசியமில்லாச் செலவாய்த் தோன்றிட, 'ஊருக்குத் திரும்பும் வரையிலும் மவனே...உனக்கு ரொட்டிப் பாக்கெட் மட்டும் தான் !' என்று யாரோ சொல்வது போலிருந்தது ! தளர்நடைபோட்டு ரயில் நிலையத்தின் முகப்பில் ஆட்டோக்காரர்களோடு கொலைவெறியில் பேரம் பேசியது ; YMCA-வுக்குப் போனது ; மலர்ந்த முகத்தோடு செக்கின் செய்த அம்மணியைப் பார்த்துப் பேஸ்த்தடித்ததொரு சிரிப்பை ஒப்புக்குச் சிரித்து வைத்தது ; ரூமில் போய் பெட்டியைப் போட்டு விட்டு கட்டிலில் சாய்ந்த போது - "இன்னிக்கு இன்னா பண்றது ? நாளைக்கு ? நாளான்னிக்கு ??" என்று உலுக்கிய கேள்விகளுக்கு விடை தெரியாது பேந்தப்பேந்த முழித்தது - என சகலமும் 30 வருஷங்கள் கழிந்தும் நினைவில் நிலைத்து நிற்கின்றன !
வெந்நீர் காலியாகிப் போகும் முன்பாய்க் குளிப்போமென்ற ஞானோதயம் ஒரு மாதிரியாய் புலர, குளித்து விட்டு Fleetway ஏஜென்ட்கள் ஆபீசை நோக்கி நடந்தேன் ! அன்றைக்கெல்லாம் செல்போன்களோ ; மின்னஞ்சல்களோ லேது என்பதால் கடுதாசிப் போக்குவரத்துக்கள் மாத்திரமே ! 'புத்தக விழாவுக்கு வர்றேனுங்கோ ; அந்நேரத்துக்கு உங்களையும் பாத்துப்போட்டு அப்பீட் ஆகிக்கிறேனுங்கோ !' என்று லெட்டர் எழுதியிருந்தது நினைவில் இருந்தது ! 'தெய்வமே...இந்த மனுஷனாச்சும் ஆபீசில் / ஊரில் இருந்தாத் தேவலாம் !' என்றபடிக்கே அவரது ஆபீஸ் இருந்த கட்டிடத்தின் படிக்கட்டுக்களை ஏறிய போது - ஒரு பரிச்சயமான முகம் எதிர்ப்பட்டது ! பாலக்காட்டைச் சேர்ந்ததொரு தமிழர் ; கிருஷ்ணன் என்று பெயர் - டெல்லியில் அரைநூற்றாண்டாய் வசித்து வருபவர் - Fleetway ஏஜெண்டின் அலுவலகத்தில் மேனேஜராய்ப் பணியாற்றும் முதியவர் அவர் ! என்னை விடவும் வயதில் ரொம்பவே மூத்தவர் என்ற போதிலும் - 'வாங்கோ ; போங்கோ !' என்றே மரியாதையாய்ப் பேசுவார் ! "அடடே....விஜயன் !! என்ன திடீர் விஜயம் ? பாஸ் கூட ஊரில் இல்லியே ? அடுத்த வாரம் தானே வர்றதா இருந்திங்க ? " என்று குண்டைத் தூக்கிக் கடாசினார் ! எனக்கோ - 'இன்ன மெரி.. இன்ன மெரி.. டிக்கெட் தேதியில் சொதப்பிட்டேனுங்க ; 3 நாளைக்கு டெல்லியிலே மாடு மேய்க்கிறது தான் வேலையுங்கோ !' என்று சொல்ல முடியாதில்லையா - 'தத்தா-புத்தா ' என்று எதையோ உளறிக் கொட்டினேன் ! 'சரி வாங்க....வந்து ஒரு Thumbs Up குடிச்சிட்டுப் போங்க" என்றவரிடம், "இல்லை சார் ; அப்புறமாய் வாரேன் ; இன்னும் 3 நாளைக்கு இருப்பேன்லே !" என்றபடிக்கே கீழே இறங்கி ஆட்டோவைப் பிடித்து YMCA வுக்கே திரும்பினேன் ! கொஞ்ச நேரமாச்சு ; ஏதோ ஒரு வித நிதானத்துக்குத் திரும்ப !
டிக்கெட்டை தேதி மாற்றி, முன்கூட்டியே ஊருக்குக் கிளம்பிட வேணுமெனில், ரயில்வே ஸ்டேஷன் சென்று, அங்கு சதா சர்வ காலமும் நிற்கும் க்யூவில் குறைந்தது ஒன்றரை மணி நேரமாவது காத்திருத்தல் அவசியமென்று புரிந்தது ! அந்நாட்களில் தற்போதைய RAC ; WL ; தட்கல் முறைகளெல்லாம் கிடையாது ! டிக்கெட் உறுதியாகிடா பட்சத்தில், ரயிலில் தொற்றிக் கொண்டு - TT பின்னே காவடியெடுத்து, சரிக்கட்டி, பெர்த் வாங்குவதற்குள் பிராணனில் பாதி போய் விடும் ! நமக்கு இந்தச் சரிக்கட்டும் யுக்திகள் அத்தனை சுகப்படாது ; so உறுதி செய்யப்பட்ட டிக்கெட்கள் இல்லாத பட்சத்தில், ரயிலில் ஏறிடும் வேலையே வைத்துக் கொள்வதில்லை ! And invariably மறுநாளைக்கு, அதன் மறுநாளுக்கு என்றெல்லாம் confirmed tickets இருக்கவே இருக்காது என்பது தெரியும் ! So ஒன்றரை மணி நேரங்களை க்யூவில் கழித்து விட்டு - "நை ..நை..டிக்கெட் நை" என்ற வசனத்தைக் கேட்பதற்குப் பதிலாய் 3 நாட்களை டெல்லியில் எப்படியேனும் ஓட்டி விடுவதே மேல் என்று தோன்றியது ! 'புண்பட்ட மனத்தைக் குறட்டை விட்டு ஆத்து' என்ற அற்புதச் சிந்தனை அந்நொடியில் தலைகாட்ட - காலை பதினோரு மணிக்கெல்லாம் தூங்கிவிட்டேன் !
இரண்டரை சுமாருக்கு பசித்த வயிறு எழுப்பி விட, சாப்பிடக் கீழே இறங்கிச் சென்ற சமயம் புத்தி லேசாய் செயல்படத் துவங்கியிருந்தது ! நேராய் ரிசெப்ஷனுக்குப் போய், காலையில் சீக்கு வந்த கோழியாட்டம் சிரித்து வைத்திருந்த பெண்மணியிடம் இம்முறை சித்தே சுரத்தோடு சிரித்து விட்டு, டெலிபோன் டைரெக்டரியைக் கேட்டு வாங்கினேன் ! இரு ஆண்டுகளுக்கு முன்னமே டெல்லி புத்தக விழாவுக்குச் சென்றிருந்த சமயம், ஒரு பிரெஞ்சு புக் ஷாப்பின் பெயர் எங்கேயோ கண்ணில்பட்டிருந்தது ! 'அடுத்தவாட்டி வர்றச்சே பாத்துக்கலாம்' என்று கிளம்பியிருந்தேன். அது மண்டைக்குள் ஒரு ஓரமாய்த் துயின்று கொண்டிருக்க, வேலை வெட்டியே இல்லாத அத்தருணத்தில் நினைவுக்கு வந்தது. டெலிபோன் டைரக்டரியில் அதன் அட்ரஸைத் தேடினால் Ring Road - Defence காலனி என்று சொன்னது ! நானிருந்த இடத்திலிருந்து சுமார் 11 கி.மீ. தொலைவு என்று ரிசப்ஷன் அம்மணி சொல்லிட, மண்டைக்குள் கால்குலேட்டர் குலேபகாவலி கணக்குப் போடத் துவங்கினார் ! "சரியாய் இடம் தெரியாது...ரிங் ரோடுங்கிறப்போ நிச்சயம் அவுட்டர் தான் ; நீபாட்டுக்கு ஆட்டோவில் ஏறினால், தாஜ் மஹால் வரைக்கும் ரவுண்ட் அடிச்சுக் காட்டி மீட்டரைப் பழுக்க வைச்சுப்புடுவாங்களே !!" என்ற பயம் தலைதூக்கியது. ச்சீ..ச்சீ..ஆட்டோ புளிக்கும் என்றபடிக்கே - பஸ்ஸில் போவதாயின் ரூட் எது ? ; எங்கே மாறணும் ? என்றெல்லாம் கேட்டுக் கொண்டு டபாரென்று பஸ்ஸைப் பிடித்து விட்டேன் ! மதிய நேரமென்பதால் அவ்வளவாய் நெரிசல் இல்லை ; ஆனால் பராசக்தி படத்தில் நடிகர் திலகம் பேசிய வசனத்தை அந்த பஸ் டிரைவர் ரசித்திருப்பாரோ - என்னவோ ? என்றே சந்தேகமே வந்துவிட்டது எனக்கு ! 'போனார்..போனார்..வாழ்க்கையின் ஒரத்துக்கே பஸ்ஸை ஒட்டிக்கினே போனார் !' சுத்தமாய் ஒரு மணி நேரம் எங்கெங்கோ நெளிந்தும், வளைந்தும் சென்ற பஸ் ஒரு மாதிரியாய் ரிங் ரோட்டில் ஏதோவொரு ஸ்டாப்பில் நின்றது. 'இறங்கி, விசாரிச்சு, நடந்தே இனி போய்க்கலாம் !' என்று தீர்மானித்தவனாக சட்டென்று இறங்கிவிட்டேன் !
பஸ் புகை கக்கியபடிக்கே நகன்ற போது பார்த்தால் - மழு மழுவென ஷேவிங் செய்யப்பட்ட கன்னம் போலான இரட்டைச் சாலையில் இங்கிட்டும், அங்கிட்டுமாய் வண்டிகள் மட்டுமே சீறிப் போய்க்கொண்டிருந்தன ! வழி விசாரிக்க ஒரு ஆட்டோ ஸ்டாண்டோ ; டீக்கடையோ ; பொட்டிக்கடையோ கண்ணுக்கு எட்டினமட்டுமே தெரியவில்லை ! இப்போ நேரா போணுமா ? ரிவர்ஸில் போணுமா ? என்றெல்லாம் எதுவும் தெரியாத நிலையில் குத்து மதிப்பாய் ஒரு திக்கில் நடக்கத் துவங்கினேன். 'நெடுஞ்சாலையில் ஒரு பேமானி !' என்ற ரீதியில் கார்களில் போகும் ஜனம் அத்தனையும் என்னையே பராக்குப் பார்ப்பது போலொரு பீலிங்கு எனக்கு ! To cut a long story short - அரை மணி நேரம் தொண்டையை அடைக்கும் தாகத்தையும், துக்கத்தையும் அடக்கிக் கொண்டே நடந்தவனுக்கு - ஒரு மாதிரியாய் நெடுஞ்சாலையில் ஒரு சிறு சாலை பிரிந்து, வீடுகளும், ஆபீஸ்களுமாய் இருந்ததொரு பகுதிக்கு இட்டுச் செல்வது தெரிந்தது ! ஏற்கனவே வாங்கும் மூச்சோடு, பெருமூச்சும் கலந்து கொள்ள - அங்கே தெரிந்த முதல் குடியிருப்பின் வாட்ச்மேனிடம் விசாரித்தேன் ! அப்புறம் தான் புரிந்தது - நான் இறங்கிய பஸ் ஸ்டாப்பிற்கு 2 ரோடுகள் parallel தான் நான் செல்ல வேண்டிய defence காலனி என்று ! நானோ மாக்கானாய் நேராய் நடந்து சென்றிருக்கிறேன் !
இன்னொரு 20 நிமிட தட்டுத் தடுமாற்றத்துக்குப் பின்னே THE FRENCH BOOK CENTRE என்ற கடையைக் கண்ணில் பார்த்த போது மாலை மணி 5 ஆகவிருந்தது ! அடிச்சுப் பிடிச்சு உள்ளே போனவனுக்கு கொஞ்சம் ஏமாற்றமே ; தடி தடியாய் பிரெஞ்சு இலக்கியம் ; நாவல்ஸ் என்ற ரீதியில் குவிந்து கிடந்தது ! நான் எதிர்பார்த்துப் போயிருந்த காமிக்ஸ் எதுவும் கண்ணில் படக்காணோம் ! இத்தனை பாடும் இதுக்குத் தானா ? என்ற எரிச்சலில் அங்கிருந்த ஆளிடம் Comics ? என்று கேட்க - கையைக் காட்டினார் இன்னொரு கோடிக்கு ! அங்கே போய்ப் பார்த்த நொடியில், வடிந்திருந்த உற்சாகங்கள் அதிசயமாய் ஊற்றடித்தன ! ஒரு சிறு ரேக் முழுசுமாய் பிரான்க்கோ-பெல்ஜிய காமிக்ஸ் இதழ்கள் குமிந்து கிடந்தன ! நான் முன்னமே பார்த்திருந்த தொடரின் ஆல்பங்கள் கொஞ்சம் ; பார்த்திராத தொடர்களின் ஆல்பங்கள் ஏகம் - என இறைந்து கிடக்க, புரட்டத் தொடங்கினேன் ஒவ்வொன்றாய் ! அந்நாட்களில் இன்டர்நெட் கிடையாதெனும் போது படைப்பாளிகளின் கேட்லாக்குகளில் உள்ள சமீபத்தைய படைப்புகளைத் தாண்டி, முந்தைய இதழ்கள் பற்றிய அலசல்களுக்கெல்லாம் வழியே இராது ! அது மட்டுமன்றி, நாம் வெளியிட்டு வரும் ஒரு தொடரிலேயே - 'எது நல்ல கதை ? எது சுமாரான கதை ?" என்ற ஆராய்ச்சிகளுக்குமே பெருசாய் வாய்ப்புகள் இராது ! படைப்பாளிகளிடம் கேட்டால் ஏர்-மெயிலில் புக்ஸை அனுப்பிடுவார்கள் தான் ; ஆனால் ஓவராய்த் தொல்லையும், செலவும் வைக்கப் பயம் மேலோங்கும் ! So கண்முன்னே கிடந்த இந்தப் புதையல் was too good to be true ! கையில் என்னிடமிருந்த பணத்தைக் கணக்கிட்டு, அதற்குள் அடங்கிடும் அளவில் ஷாப்பிங் செய்திட வேணுமென்பதும் மண்டையில் தோன்ற, ரொம்பவே selective ஆகத் தேர்வுகளைச் செய்ய ஆரம்பித்தேன் ! அந்தப் பட்டியலில் சிக்கியது தான் லக்கி லூக்கின் இந்த "பிசாசுப் பண்ணை" ஆல்பம் - அதுவும் இங்கிலீஷில் !! அதுவரைக்கும் predominant ஆக முழுநீளக்கதைகளை மட்டுமே லுக்கியின் தொடரில் வெளியிட்டு வந்திருந்தோம் ; இத்தகைய சிறுகதை format என் தேர்வுகளுக்கு பெரிதாய் உட்பட்டிருக்கவில்லை ! அந்நேரமோ நாம் மினி லயனில் கலவையாய்க் கதைகளை வெளியிட்டு வந்த நேரம் ! So இந்த லக்கி சிறுகதைகள் அந்த template-க்கு செம்மையாய் உதவிடும் என்ற வகையில் எனக்கு செம குஷி ! பற்றாக்குறைக்கு இங்கிலீஷ் ஆல்பம் கிட்டியதால், பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்ப்புக்கெனச் செலவழிக்க வேண்டிய ஆயிரத்துச் சொச்சம் மிச்சம்டோய் !! என்று உள்ளம் கூவியது ! "வந்து - போற டிக்கெட் காசு மிச்சம் பண்ணியாச்சு !!' என்ற நினைப்பே கொஞ்சம் குளிர்வித்தது ! லக்கியின் அந்த ஆல்பத்தையும் இன்னும் அரை டஜன் பிரெஞ்சு ஆல்பங்களையும் பில் போட்டு வாங்கி விட்டு வெளியேறிய போது இருட்டத் துவங்கியிருந்தது ! அப்போது தான் - 'ஆஹா.திரும்பப் போக பஸ்ஸை எங்கே பிடிப்பதோ ?' என்ற கேள்வி எழுந்தது எனக்குள் !
சத்தியமாய் அந்த அந்தியினில் ரிங் ரோட்டை மறுக்கா அளவெடுக்க ஜீவனில்லை எனக்கு ! வேறு வழியின்றி, வேண்டா வெறுப்பாய் ஒரு ஆட்டோவில் ஏறி அமர்ந்தேன் - 'லொடக்-லொடக்' என மீட்டர் ஏறும் போதெல்லாம் என் நாடித்துடிப்பும் ஏறியபடிக்கே ! சிங்ஜி வந்த பாதையிலேயே கூட்டிக்கினு போறாரா ? இல்லாங்காட்டி ஊரெல்லாம் சுற்றிக் காட்டப் போறாரா ? என்ற பயம் வேறு உள்ளுக்குள் ! ஆனால் சுருக்கமான ரூட் எதையோ பிடித்து மனுஷன் அரை மணிநேரத்தில் ; ஏழுமணிவாக்கில் YMCA-வில் கொணர்ந்து இறக்கி விட்டிருந்தார் ! கையிலிருந்த ஆல்பங்கள், ப்ளஸ் மொழிபெயர்ப்புச் செலவு மிச்சம் என்ற சந்தோஷங்கள் - மீட்டரின் கட்டணத்தை மறக்க உதவியிருந்தன ! ரூமுக்குப் போன உடனே லக்கியின் இந்த ஆல்பத்தைப் படிக்க ஆரம்பித்த போதே - 'இந்தச் சிறுகதையை இந்த மாசத்துக்கு வைச்சுக்கலாம் ; அதை - அந்த மாசத்துக்கு' என திட்டமிடலானேன் ! தொடர்ந்த மாதத்தினில் ஒரு பளீர் பச்சைப் பின்னணியில் இதே அட்டைப்பட டிசைன் சகிதம் ; 2 வண்ணத்திலான உட்பக்கங்கள் நியூஸ்பிரிண்ட்டில் பல்லைக்காட்ட "பிசாசுப் பண்ணை"யின் ஒரிஜினல் பதிப்பு வெளிவந்தது ! யாரிடமேனும் அது இன்னமும் உள்ளதா ? என்றறிய ஆவல் folks ! இருப்பின், அதனோடு ஒரு selfie எடுத்து அனுப்புங்களேன் - இதே பதிவினில் இணைத்து விடலாம் ! And இதோ - உட்பக்கங்களின் preview :
'ரைட்டு....ஒரிஜினலாய் இது நமது கருணையானந்தம் அவர்கள் எழுதினது.....மொழிபெயர்ப்பில் நோண்டும் வேலை இந்தவாட்டி வேணாம் ; அப்டியே திருத்தங்களை மட்டும் போடுறோம் ; அச்சுக்கு அனுப்புறோம் !' என்றபடிக்கே 7 நாட்களுக்கு முன்னே அமர்ந்தேன் ! முதல் சிறுகதையும் ஒரு மாதிரி ஓடிவிட்டது - ஜாலி ஜம்ப்பரின் வசனங்களில் மட்டும் கொஞ்சம் திருத்தங்களை போட்ட கையோடு ! ஐயகோ - காத்திருப்பது சுலபப்பணியே என்ற எனது எதிர்பார்ப்பு சுக்கலானது அடுத்த கதையையும் ; அதற்கடுத்ததையும்; அதற்கும் அடுத்ததையுமே படித்த போது ! முதல் சிறுகதை மட்டுமே லக்கிக்கென இப்போதெல்லாம் நாம் பிசகின்றிக் கையாளும் பேச்சு வழக்குத் தமிழ் இருந்தது ஒரிஜினல் மொழிபெயர்ப்பினில். பாக்கி 3 கதைகளிலும் ஜாலி ஜம்ப்பர் முதற்கொண்டு தூய தமிழில் செப்பிக்கொண்டிருக்க - எனக்குப் பகீரென்று ஆகிப்போனது ! நடைமுறையினை மாற்றிடக்கூடாதென்பது ஒருபக்கமிருக்க, ஒரே ஆல்பத்தில் இரு தின்சுகளில் மொழியாக்கம் இருப்பின் ரொம்பவே நெருடும் என்று தோன்றியது ! அப்புறமென்ன ? ஏலேலோ-ஐலசா தான் - பக்கத்துக்குப் பக்கம் ரணமாகிய சிகப்பு மசித்திருத்தங்களோடு ! ஒரிஜினல் பாணியை கிஞ்சித்தும் மாற்றிடாது, நடையை ; அவசியப்பட்ட வசனங்களை + ஜாலி ஜம்ப்பரின் டயலாக்குகளை மட்டுமே திருத்திய போதிலும், அந்தப்பணியானதே முழுசுமாய் போன வாரத்தினை விழுங்கிவிட்டது ! நேற்றைக்கு அச்சுக்குச் சென்று பணிமுடிந்த பக்கங்களை பார்த்த போது தோன்றிய இளிப்பில் அந்த வாரத்தின் பல்டிகள் மறந்தே போச்சு ! புதுசாய்ப் படிப்போர்க்கும், பழசையே தேடுவோர்க்கும் இம்முறை எவ்வித ஏமாற்றங்களுமிராது ! பிழையிருந்த ஈக்களை மட்டுமே அடிக்காது, பாக்கி ஈக்கள் அனைத்தையுமே அட்சர சுத்தமாய்க் கொணர்ந்துள்ளேன் ! So கிட்டக்கவே முந்தைய இதழ்களையும் வைத்துக் கொண்டு ஒப்பீடு செய்தாலும் நெருடாதென்ற நம்பிக்கை நிறையவுள்ளது !
ஆக அடுத்த தெருவினில் இருக்கக்கூடிய நாலு சிறுகதைகளின் பின்னணியை விளக்கிட, திருத்தணி வரைக்கும் பாதயாத்திரை போய்ச் சொல்லும் படலம் இனிதே நிறைவுறுகிறது ! இந்தப் பதிவின் மொக்கை நிச்சயமாய் இந்த இதழினில் இருக்காது என்ற நம்பிக்கையைத் தந்த கையோடு கிளம்புகிறேன் - 'தல' கூட "பந்தம் தேடிய பயணம்" மேற்கொள்ள ! And before i sign out - here you go with another cover preview :
அடுத்த பதிவினில் இது பற்றி இன்னும் கொஞ்சம் எழுதுகிறேன் ! Bye for now !! See you around !