நண்பர்களே,
வணக்கம். ஒரேயொரு ஞாயிறு அக்கடாவென்று ஓய்ந்து கிடக்க வாய்ப்புக் கிடைத்தால் - அடடா...சொர்க்கமாய் இருக்காதா ? என்று நினைத்துப் பெருமூச்சு விட்ட நாட்கள் ஏராளம் ; ஆனால் இதோ - அடுத்த மூன்று வாரங்களுக்கு பிட்டம் முழுக்க பெவிகாலைத் தடவிக்கொண்டு வேலைக்குப் போகும் அவசியங்களின்றி வீட்டுக்குள்ளே சோம்பல் முறிக்க ஒரு சந்தர்ப்பம் அமைந்துள்ளது - ஆனால் surprise..surprise....இந்த ஓய்வினில் சும்மா கிடக்க மனசு சண்டித்தனம் செய்கிறது !! நித்தமும் வேலைக்குப் போய், அங்குள்ள பிடுங்கல்கள் ஒரு நூறுக்கும் பதில் சொல்லிவிட்டு,கிடைத்த ஐநூறையோ, ஆயிரத்தையோ பைக்குள் திணித்த கையோடு உராங்குட்டான் போல மூஞ்சை வைத்துக் கொண்டே ஸ்கூட்டரில் வீடு திரும்பி, மேஜையில் காத்திருக்கக்கூடிய உப்மாவையோ ; கிச்சடியையோ மூச்சைப் பிடித்துக் கொண்டே அவசரம் அவசரமாய் விழுங்கிவிட்டு, சங்கு மார்க்கோ ; நண்டு பிராண்டோ - ஏதேனும் ஒன்றுக்குள் காற்றோட்டமாய்ப் புகுந்து கொண்டே, வாட்சப் எனும் மாய லோகத்தினுள் நுழைந்து, பெயரைத் தாண்டி பாக்கி எதுவும் அவ்வளவாய் நினைவில்லாத நண்பர்களிடம் கூட - "
என்ன பிழைப்புடா சாமீ இது ?" என்று புலம்பும் அந்த வாடிக்கைகளின் அருமை மல்லாக்கப்படுத்து விட்டத்தை முறைக்கும் இன்றைக்குத் தான் புரிகிறது !! ஆனால் மாண்புமிகு பிரதமரின் அதி முக்கிய அறிவிப்பு நம் நலனும், நாட்டின் நலனும் கருதியுமே எனும் போது அதைக் கிஞ்சித்தும் மீறாது, வீட்டில் தவம் செய்வது நமது தலையாய கடமையாகிப் போகிறது ! Let's Stay Home...and Stay Safe folks ! எனக்கோ மளிகைக்கடையில் பெவிஸ்டிக் கிடைத்தால், ஒரு டஜனை சேர்த்துப் போட்டு வாங்கி வரத் தீர்மானித்துள்ளேன் !!
எது எப்படியோ - எனது பணிகளின் பெரும்பான்மை எங்கிருந்துமே செய்திடக்கூடியது எனும் போது - நாட்கள் பிஸியாகவே நகர்ந்து வருகின்றன ! கை கடுக்கும் வரையிலும் "
ஒற்றை நொடி..ஒன்பது தோட்டாவின்" மூன்றாம் பாகத்தில் பணி......அப்புறமாய் தோர்கல் (கோடை மலர்) இதழ்களில் கொஞ்ச நேரம் ஜாகை ; பின்னே நமது படைப்பாளிகளின் குடல்களையும் இயன்றமட்டுக்கு உருவி, லேட்டஸ்ட் கதைகள் சார்ந்த அளவளாவலை நடத்திடுவது ; அதன் பலனாய்க் கிட்டி வரும் புதுப் புதுக் கதைகளைப் படம் பார்ப்பது - என ஓட்டமெடுத்து வருகின்றன ! பற்றாக்குறைக்கு ஏப்ரலில் வரவிருந்த "5 நிமிட வாசிப்பு" புக்கின் ஓவியையோடு மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும் ஒரு சந்தர்ப்பம் அமைய, நமக்கென பிரேத்தியேகமாய் நாலு வரிகளில் ஒரு "ஹலோ" message அனுப்பியுள்ளார் ! அதுவும் அந்த புக்கில் இடம் பிடித்திடும் - whenever that happens !
அப்புறம் நாம் இங்கிருந்து இத்தாலிய, பிரெஞ்சு, பிரிட்டிஷ் படைப்பாளிகளிடம் நலம் விசாரித்த காலங்கள் மலையேறி, அவர்கள் இப்போது நாம் ஓ.கே.வா ? என்று விசாரித்து வருவதற்கும் பொறுப்பாய்ப் பதில் போட்டு வருகிறேன் !! "
அநேகமாய் மே 4 வரையிலுமே எங்க பிழைப்பு இப்டி தான் போலும் " என்று சொல்லும் ஒரு பிரெஞ்சு நிறுவனத்து அதிகாரி, வீட்டிலிருந்தே பணி செய்வதால் - நமக்கு வித விதமான கதைகளின் மாதிரிகளை அனுப்பி உதவி வருகிறார் ! So பலவிதங்களில் மிஷின்களாய் மாறிப் போயிருந்த நாமெல்லாம் இழந்த பலவற்றை மறுபடியும் மீட்டெடுக்கும் வேளையோ - என்னவோ இது ?!ரைட்டு...நான்லாம் ஓவராய் சித்தாந்தம் பேசித் திரிந்தால் சிரிப்பாய் சிரிச்சுப் போயிடும் என்பதால் வேறு பக்கமாய் வண்டியை விடலாமா ?
இன்றைக்கு கண்ணுக்குத் தெரியா ஒரு வைரஸைக் கண்டு ஆளாளுக்குத் தெறித்து ஓடிவரும் சூழலில், 34 ஆண்டுகளுக்கு முன்னேயே நான் இதே போலொரு ஓட்டம் எடுத்த தருணம் தான் இன்றைக்கு நினைவுக்கு வருகிறது ! அதே சமயம் இந்த அனுபவத்தை ஏற்கனவே பகிர்ந்து விட்டேனா - இல்லியா ? என்ற சந்தேகமும் உள்ளுக்குள் லைட்டாக உள்ளது - becos நிறையவாட்டி இதை பற்றி எழுத நினைத்திருக்கிறேன் - ஆனால் கடைசி நிமிடத்தில் '
சிரிப்பாய் சிரிச்சுப் போயிடும்' என்ற பயத்தில் பின்வாங்கவும் செய்திருக்கிறேன். Maybe....just maybe இதுவொரு மறு ஒலிபரப்பாகவும் இருந்திடக்கூடும் தான் ; அவ்விதமிருப்பின் காமிக்ஸ் மறுபதிப்புகளைப் போல இதுவொரு "பதிவு மறுஒலிபரப்பு" என்று எடுத்துக் கொள்ளுங்களேன் ப்ளீஸ் ?
வாழ்க்கையின் இரு ஆண்டுகள் எனக்கு திளைக்கத் திளைக்க சந்தோஷங்களும், வெற்றிகளும் வாரி வழங்கின என்றால் அது 1985 & 1986 தான் ! அதன் பின்பாய் சொந்த வாழ்வில், பணம் ஈட்டலில் ; நமது காமிக்ஸ் முயற்சிகளில் என்று நிறைய highlight தருணங்களை தாங்கிய வருஷங்கள் வந்து போயிருக்கின்றன ; ஆனால் '85 & '86 முற்றிலுமாய் வேறொரு லெவல் ! ஒற்றை வருஷத்துக்கு முன்பு வரை அடையாளம் ஏதுமின்றி, கையில் பத்தணாவுமின்றி, எதிர்காலம் குறித்து துளியும் நம்பிக்கையின்றித் திரிந்தவனுக்கு, எங்கிருந்தோ சகலத்தையும் ஏக் தம்மில் பெரும் தேவன் வழங்கி திக்குமுக்காடச் செய்திருந்தார் ! அதன் ஒரு ரம்யமான உச்சத்தை ரசித்துக் கொண்டிருந்த 1986 -ன் செப்டெம்பர் மாதம் அது !
லயன் காமிக்ஸ் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்க, திகில் காமிக்ஸ் துவக்கத்துத் தடுமாற்றத்துக்குப் பின்பாய் சற்றே நிதானம் கண்டிருந்த நாட்களவை ! புது சைஸ் ; ரூ.2 .25 விலை (!!) ;
ஜூனில் XIII ; ஜூலையில் சாகச வீரர் ரோஜரின் "மர்மக் கத்தி" ; ரிப்போர்ட்டர் ஜானியின் "இரத்தக் காட்டேரி மர்மம்" ஆகஸ்டிலும் ; "சைத்தான் வீடு" செப்டெம்பரிலும் என்று வெளியாகி விற்பனையை ஓரளவுக்குத் தாங்கிப் பிடித்திருந்தன ! தொடரும் மாதங்களில் கேப்டன் பிரின்சின் "பனிமண்டலக் கோட்டை" ; ப்ருனோ பிரேசிலின் மர்மச் சவப்பெட்டிகள் என்று பிரான்க்கோ-பெல்ஜிய அட்டகாசங்கள் சார்ந்த தட புடத் திட்டமிடல் கையிலிருந்ததால், உலகமே ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவைப் போல இனிப்போ இனிப்பாய்த் தென்பட்டதில் வியப்பில்லை தான் ! லயனில்
ஸ்பைடர் ; ஆர்ச்சி ; இரட்டை வேட்டையர் ; இளவரசி ; இரும்புக்கை நார்மன் என்று பிரிட்டிஷ் track ஓடிக்கொண்டிருந்தது ! So நிஜத்தைச் சொல்வதானால் மாதம் 2 இதழ்களென்ற அந்நாட்களது நமது அட்டவணைக்கு, அடுத்த 10 வருஷங்களுக்காவது கதைப்பஞ்சம் நேர்ந்திட வாய்ப்பே கிடையாது தான் ! ஆக வீட்டிலிருந்து ஆபீஸ் ; ஆபீசிலிருந்து வீடு என்ற routine-ல் வண்டி நிம்மதியாய் ஓடிக்கொண்டிருந்தது ! ஒரே மாற்றம் - ஹெர்குலிஸ் சைக்கிளுக்குப் பதிலாய் Ind -Suzuki என்றதொரு 100 cc பைக்கில் சவாரி (
ஒன்பதாயிரத்துக்குக் கொஞ்சம் கம்மிங்கோ - புத்தம் புது வண்டி !!)
எனது தாத்தாவுக்கு என் தாயார் ஒரே பிள்ளை என்பதால், 1983 -ன் இறுதியில் பாட்டி காலமான பிற்பாடு எங்களோடே வசிக்கத் துவங்கியிருந்தார் ! எனக்கு நிதியுதவி ; மதியுதவி என சகலமும் அவரே ; and வீட்டிலிருக்க போரடிக்கும் என்பதால் ரெகுலராய் என்னோடு ஆபீசுக்கு வந்து விடுவது வழக்கம் ! அங்கே பகல் பொழுதில் நான் செம பிசியாக இருக்கும் வேளைகளில் தாத்தா எனக்கெதிரே ஒரு சேரைப் போட்டு அமர்ந்தபடிக்கு நடப்புகளை வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருப்பார் ! அவரது அச்சு இயந்திரத்தையும் என்னிடம் ஒப்படைத்திருக்க, அப்போதைய சிவகாசியின் நடைமுறைக்கேற்ப 2 ஷிப்ட்டில் விடிய விடிய வேலைகள் ஓடிக்கொண்டிருக்கும் ! So ஞாயிறு மதியம் வரைக்குமே ஆபீஸ் 'ஜே-ஜே ' தான் ! மாலைகளில் ஆபீஸின் வாசலில் அக்கடாவென இரு சேர்களை போடச் செய்து - "போதும்டா வேலை பார்த்தது ; வா - வந்து உட்கார்!!" என்று ஏதேனும் பேசிக் கொண்டிருப்பார் ! வண்டி இந்த routine-ல் ஓடிக்கொண்டேயிருந்தது ஆகஸ்டில் கடைசி வரையிலும். செப்டெம்பர் பிறந்த போதே விண்ணஞ்சலில் கடுதாசிகள் வரத்துவங்கின - ஐரோப்பாவிலிருந்தும், இங்கிலாந்திலிருந்தும் ! (
இன்டர்நெட் ; செல்போன் ; பேக்ஸ் ; என்று எதுவுமே இல்லாத அந்த வேளைகளில் கடுதாசிகளில் தான் தகவல் பரிமாற்றங்களே !!)
"
போன வருஷம் (1985) பிராங்பர்ட் புத்தக விழாவுக்கு வந்திருந்தாயே....இந்த வருஷமும் வருவாய் தானே ? உறுதி செய்தால் அப்பாயிண்ட்மெண்ட் தருகிறோம் !" என்று அந்தக் கடுதாசிகள் அனைத்துமே சொல்லின ! அந்நாட்களில் எனது பணியின் நிமித்தம் மிஞ்சிப்போனால் ஆண்டுக்கு ஒருவாட்டி டில்லிக்கோ ; மும்பைக்கோ போவதைத் தாண்டி பெருசாய் வெளியூர்களுக்குப் போகும் அவசியங்கள் இருந்ததில்லை ! So ஊரைச் சுற்றியே ; வீடு-ஆபீஸ் கூட்டணியைச் சுற்றியே - நாட்கள் ஓடிய வேளைகள் அவை ! திடு திடுப்பென இந்தக் கடுதாசிகள் வந்த சேர்ந்த போது மறுக்கா புத்தக விழாவின் பெயரைச் சொல்லி ஐரோப்பாவுக்கு ட்ரிப் அடிக்கும் ஆசை மெது மெதுவாய்த் துளிர் விட்டது மண்டைக்குள் ! அப்போதெல்லாம் விசா எடுப்பது ; ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெற்று செலவுக்கு டாலரோ ; பிராங்கோ ; மார்க்கோ வாங்குவது என்பதெல்லாம் பிராணனை வாங்கும் வேலைகள் ! So ஒரு மாதம் முன்கூட்டியே திட்டமிடல்களை ஆரம்பிக்கா பட்சத்தில் எதுவும் தேறாது ! வீட்டினில் அலமாரிக்குள் தூங்கி கொண்டிருந்த 2 கோட்-சூட்களும் சரி, பிடாரி சைசிலானதொரு சூட்கேஸும் சரி, என்னைப் பார்த்துக் கண்ணடித்து போலவே தோன்ற, அவற்றை மறுபடியும் உபயோகத்திற்கு கொணர ஆசை ஆசையாய் இருந்தது ! என் தந்தைக்கு உலகம் சுற்றுவதென்பது ஜாங்கிரி சாப்பிடுவது போலான விஷயம் ; விட்டால் இன்றைக்குமே எங்கேயேனும் கிளம்பத் தயாராகி விடுவார் ! So அவரிடம் "
இன்னொருவாட்டி பிராங்பர்ட் போக நினைக்கிறேன் " என்று சொல்வதில் சிக்கல் இராதென்பது எனக்குத் தெரியும் ! ஆனால் அந்தக்காலத்து ஆளான என் தாத்தாவுக்கு விமானப் பயணங்கள் ; அயல்நாடுகள் என்றாலே சுத்தமாய் ஆகாது ! "
இவையெல்லாமே ஆபத்தான சமாச்சாரங்கள் ; தூர விலகி நிற்பதே சாலச் சிறந்தது !" என்பதே அவரது அபிப்பிராயம் ! ஆகையால் நிச்சயமாய் அவருக்கு இதனில் உடன்பாடிராது என்பதை யூகிக்க முடிந்தது ! முதலீடு முழுக்கவே அவரது பணம் தானென்றாலும், எதுவானாலும் "என்னைக் கேட்டுக் கொண்டு தான் செலவழிக்கணும்" என்ற ரீதியில் அவர் ஒரு நாளும் முட்டுக்கட்டை போட்டதே கிடையாது ! "சிக்கனமாய் ; சரியாய்ச் செலவிட்டுக் கொள்" என்பதைத் தாண்டி எனக்கு வேறெந்த கட்டுப்பாடுகளும் இருந்ததில்லை ! இருந்தாலும், அவரை எப்படியேனும் சம்மதிக்க வைத்து விட்டுப் பயணம் போவதே எனக்கு சரியென்றுபட்டது !
என்ன சொல்லி சம்மதிக்கச் செய்யலாமென்று யோசித்துப் பார்த்த போது, இரும்புக்கை தான் என்னைக் கைதூக்கி விட்டது !! ஆனால் இதுவோ நம்ம லூயி கிராண்டேல் அல்ல ! மாறாக - இரும்புக்கை உளவாளி என்ற பெயரில் நாம் வெளியிட்ட DC Thompson பதிப்பகத்தின் ஏஜெண்ட் வில்சனின் இரும்புக்கையே ! சமாச்சாரம் என்னவென்றால், இரும்புக்கை மாயாவி அந்நாட்களில் முத்து காமிச்சிலேயே தான் இருந்தார் & அந்நேரத்துக்கு முத்து காமிக்ஸ் என் பொறுப்பாகி இருக்கவில்லை ! So போட்டிக் கம்பெனியின் flagship hero என்ற கடுப்போடே தான் மாயாவியை நான் பார்த்திடுவதுண்டு ! ஸ்பைடர் ; ஆர்ச்சி ; ரிப்போர்ட்டர் ஜானி என்று என்ன தான் நான் கர்ணம் போட்டாலும் - "இரும்புக்கை" என்ற பெயரைக் கேட்டவுடனேயே முகவர்கள் முத்து காமிக்ஸுக்குப் படையெடுப்பதுண்டு ! And அங்கே ஆர்டர் செய்து விட்டுத் திரும்பும் போது அடுத்த வாசலான நமது ஆபீசுக்கு வந்து "
முத்து காமிக்ஸுக்கு ஆர்டர் குடுக்க வந்தேங்க சார் ; நல்லா இருக்கீங்களா ?" என்று குசலம் விசாரித்துப் போக, எனக்கோ யாரையாவது நடு மூக்கில் அதிகாரியின் ஸ்டைலில் குத்தணும் போலிருக்கும் ! தாத்தாவுக்கும், காமிக்ஸ் வாசிப்புக்கும் தூரம் ஜாஸ்தி என்ற போதிலும், விற்பனை சமாச்சாரங்களில் இரும்புக்கை சாதித்து வருவதை நன்கு அறிவார் தான் ! ஏற்கனவே DC Thomson காமிக்ஸ் நிறுவனத்திலிருந்து அந்த இரும்புக்கை ஏஜெண்டை வாங்கிட நான் போட்ட மொக்கைகளும் அவருக்கு நன்றாகவே தெரியும் ! So இரண்டாவது தபா ஜெர்மனிக்குப் பயணம் போயிட அந்த "இரும்புக்கை" மேட்டரையே மூலதனமாக்கிடத் தீர்மானித்தேன் !
"
இந்த வருஷம் பிராங்பர்ட் புத்தக விழாவுக்கு போய் சந்தித்துப் பேசினாக்கா அந்த உரிமைகளை வாங்கிடலாம் போலத் தெரியுது தாத்தா !!" என்று ஒரு சாயந்திர அரட்டையில் போது மெதுவாய் பிட்டைப் போட்டேன் ! "
இங்கிருந்தபடிக்கே முடியலியோடா ?" என்று கேட்க, "முடியலியே !!" என்று பஞ்சப்பாட்டொன்றைப் பாடினேன் ! அப்புறமென்ன ..? "
சரி..போனவாட்டி போல 22 நாள்லாம் வேணாம் ; போயிட்டு சீக்கிரமா திரும்பிடணும் !" என்றபடி கேட்டைத் திறந்து விட,
'அத்துச்சாம் கழுதை ; எடுத்துச்சாம் ஓட்டம்' என்ற ரீதியில் மட மடவென்று விசா & இன்ன பிற பணிகளைத் துவக்கினேன் ! அந்நேரத்துக்கு முந்தைய ஆண்டின் பயண அனுபவம் இருந்ததால், எல்லாமே சுலபமாய் நடந்தேறின ! முதல் வருடம் ஜெர்மனி ; பெல்ஜியம் & லண்டன் என்று சுற்றியிருக்க, இந்தவாட்டி ஜெர்மனியிலிருந்து பிரான்ஸ் போய்ட்டு வரும் ஆசை தலை தூக்கியது !
அந்நாட்களில் பாரிஸ் என்பது செம exotic இலக்கு அனைவருக்குமே !! ஐபெல் டவர் ; மோனா லிசா ; இன்ன பிற உலகப்பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தளங்களும் புக்குகளில் ; சினிமாக்களில் அட்டகாசமாய்க் காட்சி தருவதுண்டு ! பற்றாக்குறைக்கு Berlitz Guide to Paris என்றதொரு சின்ன புக்கை எங்கேயோ வாங்கியிருக்க, அது பாரிஸின் ஒவ்வொரு மார்க்கெட் ; ஒவ்வொரு வீதி என்று விளக்காத குறை தான் ! So
"இம்மாம் தொலைவு போறச்சே அங்கேயும் எட்டிப் பார்த்திடுவோமே !" என்ற ஆசைக்கு அங்கே நமது முக்கிய படைப்பாளிகள் இருவர் இருப்பதும் உரமூட்டியது ! So அவர்களை நேரில் சந்திக்கும் திட்டத்தையும் ஊர்ஜிதம் செய்து கொண்டு பிரெஞ்சு விசாவும் போடச் செய்தென் ! அதற்குள் நண்பன் எவனோ, "
ஸ்விட்சர்லாந்து போகாமே திரும்பினாக்கா புளிய மரத்துக்கும், முருங்கை மரத்துக்கும் தான் பின்னாளில் படையெடுக்க நேரிடும் !!" என்று திரிக்கொளுத்திப் போட, 3 நாள் ஜெர்மனி ; மூணு நாள் பிரான்ஸ் ; ஒன்றரை நாள் சுவிட்சர்லாந்த் என்று திட்டமிட்டுக்கொண்டேன் !
இன்றைக்கு யோசித்தால் அந்நாட்களில், அந்த வயதில், வருமான வரி கட்டுவதென்றால் வீசம்படி எவ்வளவு ? என்ற தொழில் பின்னணியுடனான எனக்கு, ஐரோப்பியத் தூதரகங்கள் விசாக்களை எப்படித் தான் வழங்கினார்களோ ? என்று மலைப்பாக உள்ளது ! இன்றைக்கு ஒரு வண்டி பேப்பர்கள் ; ஒரு வண்டி Income Tax காகிதங்கள் என்று ஒப்படைத்து விட்டும் "வரும்...ஆனா வராது" என்று காத்திருப்பதே நடைமுறை ! ஆனால் அந்நாட்களில் என் முகரையைப் பார்த்து "
இவனும் ஒரு எடிட்டர் தான் !" என்று சில மகானுபாவர்களுக்குத் தென்பட்டிருக்கிறது போலும் ; பெரிய மனது பண்ணி விசா வழங்கியிருந்தனர் !
So அக்டோபர் 9 1986-க்கு புத்தக விழா துவங்கிட, அந்நேரத்துக்கு ஆஜராகியிருந்தேன் ! சென்றாண்டு தங்கிய அதே ஊருக்கு வெளியிலான ஹோட்டல், இம்முறையோ ரொம்பச் சுலபமாய் எட்டிட முடிந்தது போலப்பட்டது ! பிராங்கபர்ட்டுக்கு இரும்புக்கை உளவாளியைக் காரணம் காட்டிய கையோடு பயணம் செய்திருந்தேன் என்பதால், அவர்கள் கையில், காலில் விழுந்தாவது உரிமைகளை வாங்கிடும் முனைப்பிலிருந்தேன் ! So D.C.Thompson அப்பாயிண்ட்மெண்ட் இருந்தது ! அதுமட்டுமன்றி BATMAN உரிமைகளுக்கென DC Comics நியூயார்க்கின் சந்திப்புக்கும் நேரம் வாங்கி வைத்திருந்தேன் ! மூன்றே தினங்களில் முக்கிய வேலைகள் அனைத்தையுமே பிசிறின்றி முடித்திட படைப்பாளிகள் அனைவரின் சகாயங்களும் ஏகமாய் உதவியிருந்தன ! "
சின்ன பையன் ; எடுத்தேறி இத்தினி தொலைவு வந்திருக்கான் ; பிழைச்சுக்கட்டும் !" என்ற ஒற்றை சிந்தனையைத் தாண்டி, அவர்கள் யாரிடமும் வியாபார அணுகுமுறை கிஞ்சித்தும் இருந்ததில்லை என்பதில் சந்தேகமே கிடையாது ! அந்த தயாளமும், பெருந்தன்மையும் மாத்திரமில்லாது போயிருப்பின், சுட்டிக்குரங்கு கபிஷ் ; ராமு & சோமு என்ற ரேஞ்சைத் தாண்டிய புக்ஸ் எதுவுமே எனக்குச் சாத்தியப்பட்டிராது !
எல்லாமே அட்டகாசமாய் நடந்தேறிய சந்தோஷத்தை ஊருக்கு போன் செய்து பகிர்ந்த கையோடு, பிராங்கபர்ட்டுக்கு டாட்டா சொல்லிவிட்டு பயணத்தின் அடுத்த கட்டத்துக்குத் தயாராக துவங்கினேன் ! அந்நேரத்துக்கு பிராங்பர்ட் நம்ம உசிலம்பட்டி ரேஞ்சுக்கு நட்போடு காட்சி தந்து கொண்டிருக்க, சிரமங்கள் ஏதுமின்றி, பாரிஸ் போகும் காலை விமானத்தைப் பிடிப்பதற்கோசரம் சீக்கிரமே ஏர்போர்ட்டுக்குக் கிளம்பிவிட்டேன் ! அதிகாலை முதலே உள்ளுக்குள் ஒரு விதப் பட படப்பும், மெல்லிய பயமும் துளிர் விட்டிருப்பதை உணர முடிந்தது ! ஜெர்மனியும் ஒரு மேற்கத்திய ஐரோப்பிய தேசமே ; பிரான்சும் அதுவே என்ற போதிலும் இரண்டுக்கும் மத்தியில் ஏகப்பட்ட கலாச்சார வித்தியாசங்கள் ; மொழி பேசுவதில் சிக்கல்கள் ; ஊருக்குள் பயமின்றிச் சுற்றி வருவதில் சில வேறுபாடுகள் இருப்பதாகவே ஒவ்வொரு பயண கைடும் சொல்லியது !
"பிரான்சில் பல தேசத்து ; பல இனத்து மக்கள் வசிப்பதால் இக்கட சூதானமா இருந்துக்கோ தம்பி" என்று எனது டிராவல் ஏஜெண்டுமே சொல்லியிருந்தது காதில் ஒலித்துக கொண்டிருந்தது ! இன்டர்நெட்டுக்கு முந்தைய காலங்களில் முன்னே பின்னே போயிரா ஊர்களில் ஒரு ஹோட்டல் ரூம் புக் செய்வது என்பது ரொம்பவே கம்பு சுற்றும் வேலை தான் ! பாரிஸ் ஏர்போர்ட்டிலிருந்து ஊருக்குள் போவது எப்படி ? என்று அந்தக் கையேட்டில் பார்த்தால் "டாக்சி தான் தேவலாம் ; சுலபம் ; அதற்கான கட்டணம் இத்தனை " என்று இருந்தது ! ஆயிரம் ரூபாய் சுமாருக்கு போடப்பட்டிருந்த அந்தக் கட்டணத்தைப் பார்த்து மிரண்டு போனேன் !
"எங்க ஊரிலேர்ந்து இவ்ளோ தூரம் வந்து போறதுக்கே ஒன்பதாயிரம் தான் ; உங்க ஊர் டேக்சிக்கு மட்டுமே இவ்ளோவா ?" என்ற கடுப்பில், பஸ்ஸைக் கிஸ்ஸைப் பிடித்து ஊருக்குள் போய் விட வேண்டியது தான் என்று தீர்மானித்துக் கொண்டேன் ! அந்நாட்களில் பாரிஸ் விமான நிலையத்திலிருந்து நகரின் மையத்துக்கு பயணமாகிட ரயில் இருந்ததாயும் எனக்குத் தோன்றவில்லை ; so பஸ்ஸே மார்க்கம் என்ற தீர்மானத்துக்கு வந்திருந்தேன் ! ஊருக்குள் போன பிற்பாடு எந்தப் பகுதியினில் தங்குவது என்று பெரிதாய் ஐடியா ஏதுமில்லை ! பொதுவாய் ரயில் நிலையத்தின் அருகே பட்ஜெட் ஹோட்டல்கள் நிரம்ப இருக்குமென்பது எனது அனுபவப்பாடம் ! ஆனால் அந்த தயாளப் பிரபுக்களின் ஊரிலோ சல்லிசாய்க் கொத்தனார்களும், தண்டவாளங்களும் கிடைத்ததாலோ, என்னவோ - மொத்தம் ஆறோ, ஏழோ ரயில்வே ஸ்டேஷன்களை கட்டி விட்டிருந்தனர் ! So அதிலும் செம குழப்பம் ! ஆனால் வெளியே எதையுமே காட்டிக்கொள்ளாமல் கோட் சூட் போட்ட லார்ட் லபக்தாஸ் ரேஞ்சுக்கு, பிராங்பர்ட் விமான நிலையத்தினில் எனது பெட்டிகளை செக்கின் செய்து விட்டு, பாரிஸ் செல்லும் விமான கேட்டுக்கு நடையைக் கட்டிய போது காலை எட்டரை தான் !
முக்கால் மணி நேரமோ - என்னவோ தான் பாரிசுக்கான பயண நேரம் எனும் போது "
இன்னும் கொஞ்ச நேரத்திலேயே பாரிசில் மொக்கை போடும் படலம் ஆரம்பிச்சிடுமோ ?" என்ற பயம் உள்ளுக்குள் குடைந்து கொண்டிருந்தது ! விமானத்துக்கான கேட்டைச் சென்றடைந்த போது நல்ல கூட்டம்...! கண்ணாடித் தடுப்புக்கு மறு பக்கம் முரட்டு முரட்டு Lufthansa விமானங்கள் நின்று கொண்டிருக்க - அதையொட்டிய வரிசையில் ஒரேயொரு சீட் மட்டுமே காலியாய் இருந்தது ! விதியானது அடியேனின் பிட்டத்தில் தரவிருந்த முரட்டுக் குத்தலுக்கு அது தான் முதற்படி என்பதை அந்நேரம் அறிந்திருக்க வழியேது ? ஸ்டைலாய்ப் போய் அங்கே அமர்ந்தேன்....!
தூக்கத்தில் செருகும் கண்ணிமைகளும் , டைப்படித்தே நோவும் விரல்களும் ஓய்வினைக் கோருவதால் பின்னே தொடர்ந்த நிகழ்வுகள் பற்றி...........அடுத்த பதிவினில் எழுதுகிறேனே guys !! Bye for now !! See you around !!