Powered By Blogger

Sunday, April 12, 2020

ஒரு விருட்சத்தின் கதையிது...!

நண்பர்களே,

வணக்கம். இன்னமும் வைரசுக்கு டாட்டா காட்டிய பாடைக் காணோம் எனும் போது மேற்கொண்டும் நம் மனைவாசங்கள் தொடர்வது காலத்தின் கட்டாயமாகவே தெரிகிறது ! இரண்டு வாரங்களா ? மூன்று வாரங்களா ? என்ற கேள்வி தானே  இப்போதைக்கு அனைவரின் மனங்களிலும் ?! So அரசின் தீர்மானம் எதுவாயிருப்பினும் அதற்கு முழுசாய் இசைவு சொன்ன கையோடு, புதுசாயொரு தம் கட்டிக்கொண்டு, பாத்திரம் கழுவும் படலம் 2-குத் தயாராகிக்கொள்வோமே ! ஆங்காங்கே பூரி போடும் நண்பர்களும், துவைத்துக் காயப்போடும் நண்பர்களும், துடைப்பங்களோடு வீறுநடை போடும் அன்பர்களும் சீக்கிரமே தத்தம் பொறுப்புகளை பூர்த்தி செய்த பூரிப்போடு, இங்கே எட்டிப்பார்த்தால் அவ்வப்போது ஜாலி மொக்கைகளைத் தொடர்ந்திடலாம் !   சூழ்ந்து நிற்கும் இறுக்கங்களிலிருந்து நண்பர்களின் சங்கமத்தின் புண்ணியத்தில் நிவாரணம் கிட்டிட்டால் சூப்பர் என்பேன் ! என்ன எழுதுவதென்ற என்னுள்ளான கேள்விக்கு பதிலாய், சில பல கேள்விகளே கைதூக்கி நிற்க, இதோ இந்த ஞாயிறை ஒப்பேற்ற முனைகிறேன் அவை சார்ந்த இன்னொரு பதிவோடு ! 

And before I go into it - சின்னதாயொரு வேண்டுகோள் ப்ளீஸ் : 

Flashback mode-க்குள் புகுந்து துவக்க நாட்களை பற்றி நான் விவரிக்கும் போதெல்லாம் தடித்தாண்டவராயன் போல் நான் மாத்திரமே அதனுள் தென்படுவது தவிர்க்க இயலா சங்கடமாய் நெருடுகிறது எனக்கு ! நிறையப் பேரின் பங்களிப்புகளின்றி இந்தப் பயணம் சாத்தியமாகாது என்பதை பறைசாற்றும் முதல் ஆள் நானே ! So இதுபோன்ற பதிவுத்தருணங்கள் முழுசுமாய் என்னைச் சார்ந்த புராணங்களாகவே இருப்பது தர்மசங்கடத்தையே ஏற்படுத்துகிறது ! என்னைத் தெரிந்து வைத்திருக்கும் நண்பர்களுக்குப் பதிவின் ஓட்டத்தைத் தாண்டி வேறெதுவும் இடறிடாது போகலாம் ! ஆனால் தொலைவிலிருந்து வாசித்து விட்டு நடையைக் கட்டும் நண்பர்களுக்கும் சரி ; நம் மேல் "பாச மழை" பொழியும் அன்பர்களுக்கும் சரி, "ஓவராய் அலம்புராண்டோய் !" என்று தோன்றின், பிழை அவர்கள் மீதிராது தான் ! நிச்சயமாய் பீப்பீ smurf எனது favorite கிடையாது ; இந்த முந்தைய நினைவுப் பகிரல்கள் அனைத்துமே நமது காமிக்ஸ் சார்ந்தவைகள் என்ற விதத்தில், வாசிப்பினில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துவதால் மாத்திரமே நான் இந்த வாடகைச் சைக்கிள் படலத்தைக் கையிலெடுக்க நேரிடுகிறது அவ்வப்போது ! So please bear with me !!

ரைட்டு, பின்னாட்களில் கல்வெட்டுக்களில் பொறிக்கப்படவுள்ள கேள்வியும் ; அதற்கான எனது பதிலும் இதோ ! முந்தைய பதிவினைப் போல இதனில் காமிக்ஸ் சார்ந்த சமாச்சாரங்கள் சொற்பமே ; and நிறைய விதங்களில் இதுவொரு பெர்சனல் பதிவுமே ! ஆனால் சொல்ல வேண்டியதொரு கதையிது என்பதால் நீங்கள் புரிந்து கொள்வீர்களென்ற நம்பிக்கையோடு எழுதுகிறேன் ! நிறைய பொறுமை இருந்தால் மாத்திரமே படிக்க முனையுங்கள் ப்ளீஸ் :  

* நீங்கள் விடிய விடிய பேசிட விரும்பும் நபர் யார்.....? (பேச்சு மட்டுமே ! ) :

இந்தக் கேள்விக்கு சற்றே கிளுகிளுப்பான பதிலை எதிர்பார்த்திருப்பின், நிச்சயமாய் ஏமாற்றமே மிஞ்சிடப் போகிறது ! Simply becos நான் விடிய விடியப் பேசிட எண்ணிடுபவர் இங்கு இப்போது இல்லை ! அவர் விண்ணுலகம் சென்று வருஷங்கள் 22 ஓடி விட்டன ! நிறையப் பேருக்கு எனது இந்தத் தேர்வு இந்தத் தருணத்தில் விநோதமாய்த் தோன்றிடலாம் தான் ; ஆனால் இதனை முழுசுமாய்ப் படிக்கும் பொறுமை உங்களுக்கு இருப்பின், பதிவின் இறுதியில் எனது தேர்வுக்கு 200 மார்க்குகள் போடுவீர்களென்பது உறுதி ! 

S.V.A.கந்தசாமி நாடார் என்பதே எனது தாய்வழித் தாத்தாவின் பெயர் ! அந்நாட்களில் ஜாதியினையும் பெயரோடு இணைத்துக் கொள்வது வழக்கமோ, என்னவோ - தெரியாது, ஆனால் அவரை நினைவுறும் போதெல்லாம் அந்தப் பெயரினை முழுசாய் உச்சரிக்கவே தோன்றிடும் !  அந்தக் கடைசிப் பகுதியினை நீக்கிவிட்டு அவரைக் குறிப்பிடுவது ஏதோ மரியாதைக் குறைவு என்பது போலொரு அபத்த சிந்தனை என்று வைத்துக் கொள்ளுங்களேன் ! தாத்தாவுக்கு என் தாயார் ஒரே பிள்ளை & சொந்த அக்காவின் மகனுக்கே அவரை மணமுடித்துக் கொடுத்ததால் மருமான் - மருமகப்பிள்ளையாகிப் போனார் ! ஒரே பிள்ளை என்பதால் தாத்தாவுக்கு உலகம் சுழன்றதே என் தாயாரைச் சுற்றியே !! So சிவகாசிக்கு அச்சுத் தொழில் துவங்கிடும் நோக்கில் சீனியர் எடிட்டர் குடிபெயர்ந்த போது, தாத்தா செய்த முதல் வேலை - அவரது வீட்டுக்கு நேர் எதிரிலிருந்ததொரு வீட்டை வாடகைக்குப் பிடித்து அங்கேயே குடியேறச் செய்தது ! எனது பால்ய நினைவுகள் முழுவதுமே நாங்கள் வசித்த அந்தச் சின்னஞ்சிறு வீட்டோடும், எதிர்க்கே குடியிருந்த தாத்தாவின் வீட்டோடுமே !! வீட்டில் நான் மூன்றாவது பிள்ளை ; எனக்கு முன்னே 2 சகோதரிகள் !  கொடுமை என்னவெனில் இரண்டே அறைகள் கொண்ட அந்த வாடகை வீட்டில் குடியிருந்தது நான் + அம்மா + அப்பா மட்டுமே ! சகோதரிகள் இருவருமே தாத்தாவின் வீட்டில் தான் முழுக்க முழுக்கக் குடியிருப்பர் ! எங்கள் வீட்டில் அத்தனை பேருக்கும் இடம் பற்றாதென்று அந்த ஏற்பாடா ? அல்லது தாத்தாவுக்கும், பாட்டிக்கும் துணையாய் சகோதரிகள் அங்கே இருந்தனரா ? என்பதெல்லாம் எனக்குத் தெரியாது ! ஆனால் நினைவு தெரிந்த நாள் முதலாய் சின்னஞ்சிறு குருவிக்கூடுகள் எதிர் எதிரே இருக்க, அதனுள் இங்கும் அங்குமாய் சந்தோஷங்களை பரிமாறி வளர்ந்தோம் நாங்கள் ! 

அப்போதெல்லாம் சீனியர் எடிட்டரின் அச்சுத் தொழில் பிசுனஸ் ஊருக்குள் TOP 3 என்றவிதத்தில் சும்மா தெறிக்க விட்டுக்கொண்டிருந்தது ! காலண்டர்கள் & ரெடிமேட் நோட்புக் ராப்பர்களின் உருவாக்கத்தில் வியாபாரம் திகுடுமுகுடாய் ஓடிக்கொண்டிருக்க, தந்தை + அவரது சகோதரர்கள் சினிமாவில் வரும் தொழிலதிபர்கள் ரேஞ்சுக்கு பிசியோ பிசி ! நூறு பேருக்கு குறையாது பணி செய்வார்கள் அந்நாட்களிலேயே என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் ! So அப்போதெல்லாம் ஆர்டர் ; வசூல் ; காலெண்டர்களுக்கான படம் வரையும் வடஇந்திய ஓவியர்களை சந்திக்கவென தந்தை டூர் கிளம்பிப் போனால் ஊர் திரும்ப சுத்தமாய் ஒரு மாசமோ, 40 நாட்களோ, ஆகி விடும் ! ஆனால் எதிர்வீட்டில் தாத்தா & பாட்டி குடியிருந்ததால் பயம் தெரியாது ; எங்கள் வண்டி அதுபாட்டுக்குப் பயணிக்கும் ! ரொம்பவே சிரமப்பட்டு வாழ்க்கையில் முன்னுக்கு வந்தவர் என்ற முறையில் தாத்தா ரொம்பவே சிக்கனமானவர் ; ஆனால் ரொம்பவே தொலைநோக்குப் பார்வை கொண்டவர் ! அவசியமின்றி ஆடம்பரச் செலவுகள் செய்திட மாட்டார் ; ஆனால் பேரப்பிள்ளைகளுக்கென எதையும் செய்யத் தயாராக இருப்பார் ! விடுமுறைகளில் சென்னைக்குப் போனால் எங்களை அந்நாட்களது மூர் மார்க்கெட்டிலோ ; ஊருக்குள்ளேயே இருந்த zoo -விலோ இறக்கிவிட்ட கையோடு அப்பா கிளம்பிவிடுவார் - சென்னையிலுள்ள காலெண்டர் விற்பனையாளர்களைச் சந்திக்க ! பொழுது சாயும் நேரத்துக்குத் தான் திரும்புவார் என்றால் கூட முழுநேரமும்  தாத்தா உடனிருப்பார் என்பதால் பயமின்றித் திரிவோம் ! So சின்ன வயதிலிருந்தே எங்களின் வாழ்க்கைகளில் தாத்தா ஒரு constant இருப்பாகவே தொடர்ந்திட்டார் ! 

சுதேசி காங்கிரஸ் அமைப்பில் அவருக்கு ஈடுபாடுண்டு என்பதாலோ என்னவோ, வெள்ளை வெளேர் கதர் வேஷ்டி & கதர் ஜிப்பா தான் தாத்தாவின் உடை எப்போதுமே ! நல்ல உயரம் ; ஆஜானுபாகுவான உருவம் ; நெற்றியில் குங்குமப் பொட்டு ; மீசையில்லா மழுமழு முகம் ; பிரமாதமான பேச்சாற்றல் ; அந்தக் கதராடை என்ற தோரணை - அவரைப் பார்த்த நொடியே, புதியவர்களிடம் கூட  ஒருவித மரியாதையை உருவாக்கிடுவதை எண்ணற்ற முறைகள் நான் பார்த்திருக்கிறேன் !  அவருமே ஒரு சிறு அச்சகம் நடத்தி வந்த போதிலும், காலையில் கொஞ்ச நேரம் ஆபீசுக்குப் போய் விட்டுத் திரும்பிட்டால் - ஊருக்குள் உள்ள பொதுக்காரியங்களின் முன்னணியில் செயலாற்றிடுவார் ! பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உயர்பொறுப்பு ; பில்டிங் சொசைட்டியில் தலைவர் பதவி ; அச்சக சங்கத்தின் தலைவர் பொறுப்பென எதை எதையோ இழுத்துப் போட்டுக் கொண்டு பணியாற்றுவார் ! ஜவஹர்லால் நேரு அவர்கள் பிரதமராக இருந்த பொழுது, சிவகாசியிலிருந்து அச்சக சங்கத்து முக்கியஸ்தர்களை அழைத்துக் கொண்டு டில்லி சென்று பிரதமரைச் சந்தித்து எடுத்துக் கொண்ட போட்டோ தாத்தா வீட்டில் மெகா சைசில் சுவற்றில் தொங்குவது எனது ஆயுட்கால நினைவுகளுள் ஒன்று ! பொதுக்காரியங்களுக்கென நேரத்தை ஒதுக்கிய பிற்பாடு முழுக்க முழுக்க வீட்டில் எங்களோடு நேரம் செலவிடுவதே தாத்தாவின் ஆதர்ஷப் பொழுதுபோக்கு ! யாருக்கேனும் உடம்புக்கு முடியவில்லையா ? டாக்டரிடம் இட்டுப் போவது தாத்தாவாகத்தானிருக்கும் ! அவர் ரொம்பவே பயந்த சுபாவம் என்ற போதிலும், அந்தத் தோரணை அதை மறைத்து விடுவதுண்டு ! And எங்களுக்கும் தாத்தா ஒரு larger than life figure ! 

எல்லாமே மாறியது 1981-ன் இறுதியினில் ! சகோதரிகளுக்குத் திருமண வயதுகள் நெருங்கிடும் என்பதால் பெரியதாய் ஒரு சொந்த வீட்டைக் கட்ட 1978-ல் திட்டமிட்டார் தந்தை ! ஆனால் அந்த வீடு வளர்ந்த வேகத்தை விட தந்தையின் தொழிலினில் வளர்ந்த சிக்கல்கள் ஜாஸ்தி வீரியத்துடன் இருந்ததால், ஜவ்வாய் இழுத்து கிட்டத்தட்ட மூன்றரை ஆன்டுகளாயிற்று வீடு முடிவுற ! So நினைவு தெரிந்த நாள் முதலாய் எதிர் எதிர் வீட்டில் வசித்து வந்த நாங்கள் டிசம்பர் 1981-ல் மூட்டை முடிச்சுகளைத் தூக்கிக் கொண்டு (அப்போது) ஊருக்கு வெளியே இருந்த வீட்டுக்கு குடி மாறினோம் - சகோதரிகளுடனும் ! So திடு திடுப்பென டவுணுக்குள் இருந்த தாத்தா & பாட்டிக்கு தனிமையும், வெறுமையுமே துணையாகிப் போயின ! வாரத்தில் பாதி நாட்கள் காலையில் கிளம்பி எங்கள் வீட்டுக்கு வந்து விட்டு, பொழுது சாயும் போது தான் டவுணுக்குத் திரும்புவார்கள் என்ற போதிலும், உள்ளங்கைக்குள் பேரப்பசங்களும், மகளும் வசித்த அந்த நாட்கள் திரும்பிடாது தானே ?! 

பாட்டிக்கு என்றைக்குமே ஆரோக்கியம் துணை இருந்ததில்லை ! சர்க்கரை வியாதி ; ஆஸ்துமா ; சிறுநீரகப் பாதிப்பு என்று ஏதேதோ படுத்தி எடுக்கும் அவரை  ! நாள்தோறும் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ள அவர் ஆஸ்பத்திரிக்குப் போய்வருவது அப்போதே கஷ்டமாக இருக்கும் ; ஆனால் எதையும் காட்டிக் கொள்ளாது சிரித்த முகத்தோடு சுற்றி வருவார் ! பாட்டிக்கும் அம்மா மேல் வாஞ்சையுண்டு என்ற போதிலும், தாத்தாவைப் போல "anything for the daughter" ரகமெல்லாம் கிடையாது ! தாத்தாவின் ஆபீசில் பின்னே ஒரு ஏக்கரில் ஒரு பெரிய வயல்வெளி இருக்கும் ; அங்கே பால்மாடுகளும் வளர்த்திடுவார்கள் ! So தினமும் வீட்டுக்குப் பால் அங்கிருந்து வந்துவிடும் ! ஆனால் அதெல்லாம் பாட்டியின் டிபார்ட்மெண்ட் என்பதால் - லிட்டருக்கு இவ்வளவு என்ற கணக்குக்கேற்ப காசு கொடுத்துத் தான் நாங்களே வாங்கிக்கொண்டாக வேண்டும் ! தினசரி ஐம்பது காசோ என்னவோ (!!!) எடுத்துக் கொண்டு போய் எதிரே இருக்கும் பாட்டி வீட்டிலிருந்து பால் வாங்கி வருவேன் ! என்றைக்கேனும் காசு கொண்டு போகாது போனால், "அம்மாட்ட சொல்லி, நாளைக்கு சேர்த்து வாங்கிட்டு வந்திரனும் கண்ணா...சரியா ?!" என்று ஞாபகப்படுத்தி அனுப்புவார்கள்  ! தாத்தா இந்தக் கூத்தைப் பார்த்துத் தலையிலடித்துக் கொண்டாலும் - 'தாயும் பிள்ளையுமா இருந்தாலும், வாயும் வயிறும் வேற !!' என்று இந்த ஒற்றைச் சமாச்சாரத்தில் பாட்டி பிரேக் போட்டுவிடுவார் ! சினிமா தியேட்டருக்குப் போனால் டிக்கெட் காசையும், கரீட்டாய்ப் பிரித்துக் கொள்வோம் !! ஹோட்டலுக்குப் போனாலும் அதே கதை தான் ! 

ஆனால் 1981-ல் நாங்கள் ஒட்டுமொத்தமாய் கிளம்பிப் போய்விட்டதில் பாட்டியும் எத்தனை சோர்வுற்றுப் போனார்கள் என்பதைத் தொடர்ந்த நாட்களில் பார்க்க முடிந்தது ! அடிக்கடி சுகவீனங்கள் ; ஆஸ்பத்திரிவாசங்கள் என்று பொழுதுகள் சென்றன ! நாங்கள் டவுணுக்குள் குடியிருந்த வீட்டின் மிக அருகில் தான் சிவகாசியில் செஸ் க்ளப் இருந்தது ! 1979-ல் எனக்குத் தொற்றிக்கொண்ட செஸ் பைத்தியம் அசாத்தியமானது ! ஒவ்வொரு ஞாயிறின் காலையிலும் அங்கே போனால், பொழுது சாயும் போது தான் வீடு திரும்புவேன் ! ஜூனியர் பிரிவுகளில் போட்டிகள் நடந்தால், கப்பில் முதலிலேயே என் பெயரைப் பொறித்து விடும் அளவுக்கு  அய்யா பெரிய பிஸ்தா அப்போதெல்லாம் ! +2 பரீட்சைகளின் மத்தியில் கூட சத்தமில்லாது பக்கத்து ஊரான விருதுநகரில் நடந்துகொண்டிருந்த மாநில அளவிலான செஸ் போட்டியில் கலந்துகொள்ளும் அளவுக்கு அந்த craze முற்றியிருந்தது ! So 1981-ல் நாங்கள் தூரமாய்க் குடி போய்விட்டாலும் ஞாயிறு பிறந்துவிட்டால் காலை எட்டரை மணிக்கே நான் தாத்தா வீட்டில் ஆஜராகியிருப்பேன் ! சைக்கிளை ஸ்டான்ட் போட்டு நிறுத்தும் போதே அசைவ விருந்தின் வாசனை நாசியைத் துளைக்கும் ! தாத்தாவும் சரி, பாட்டியும் சரி, அந்த ஒற்றை நாளினில் என்னைக் கவனிக்கும் விதத்தினை, ப்ரூனே சுல்தானின் அரண்மனையில் கூட எதிர்பார்த்திட இயலாது ! சாப்பிட்ட மறுநிமிஷம் ஓட்டம் பிடிப்பவன், மறுக்கா மதியத்துக்குத் தான் வீட்டுக்குத் திரும்புவேன் - வயிற்றை ரொப்பிக் கொள்ள ! மாலை சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பும் முன்னே வேறெதாச்சும் ரெடியாக இருக்கும் ! வாரத்தின் அந்த ஒற்றை நாளை வேறெதெற்காகவும் தாத்தாவோ, பாட்டியோ செலவிட்டதாய் எனக்கு நினைவே இல்லை ! இந்நேரத்துக்கு வீட்டின் பிள்ளைகளுள் தாத்தாவுக்கும், பாட்டிக்கும் ரொம்பவே வேண்டப்பட்ட பேரப்பிள்ளையாய் நான் மாறியிருந்தேன் ! எப்போதும், எதெற்காகவும் அவர்களது கதவுகள் எனக்குத் திறக்காதிருந்ததில்லை !1983 -ன் பிப்ரவரியிலோ, மார்ச்சிலோ  தட்டுத் தடுமாறி ஒரு மழை நாளிரவினில் அவர்கள் வீட்டுக் கதவைத் தட்டி நின்ற போது எனக்கு பள்ளியின் கடைசி மாதத்து fees கட்டப் பணமிருக்கவில்லை ! அறுபது ரூபாய்கள் monthly fees + exam fees என நூற்றிச்சில்லறை ரூபாய்களை புரட்டவே நாக்குத் தள்ளி, கையேந்தி நின்ற நாட்களவை ! தாத்தா அழுது நான் பார்த்த முதல் தருணம் அது தான் ! தொடர்ந்த நாட்களில் அந்தக் கண்ணீர் முகத்தை மீண்டும் பார்க்கும்  துரதிர்ஷ்டம் நிகழ்ந்தது - பாட்டியின் மரணத்தைத் தொடர்ந்து ! 

All good things have a shelf life  தானே ? 1983-ன் ஏப்ரலில் CBSE தேர்வுகள் முடிந்த கையோடு விடுமுறைகள் என்று சுற்றித் தெரிந்ததை விடவும், அடுத்து என்ன ? என்ற கேள்விக்கு விடை தேடிய நாட்களே ஜாஸ்தி ! சக மாணவர்கள் ஆங்காங்கே அப்ளிகேஷன் போட்டு காலேஜ்களில் சேரத்துவங்க, ஸ்கூல் topper ஆன நானோ திரு திருவென்று முழித்துக் கொண்டிருந்தேன் ! அந்நேரத்துக்கு எனது மூத்த சகோதரிகள் இருவருக்குமே திருமணமாகியிருக்க, சிக்கல்களில் விழி பிதுங்கியிருந்த தந்தையால் ஏதும் உதவிடும் சூழலில்லை ! "இருக்கும் மிஷின்களில் கொஞ்சத்தை விற்றுக் கடனடைத்த பிற்பாடு ஒரு மிஷினை மட்டும் சென்னைக்கு கொண்டு சென்று, அங்கே ஆபீஸ் போடப்போகிறோம் ; நீ அதைப் பார்த்துக் கொண்டே மாலை நேரக்கல்லூரியில் சேர்ந்து படித்துக் கொள்ளலாம் !" என்று தந்தை சொன்னபோது அதுவும் ஓ.கே. தானே என்று என்னை நானே தேற்றிக் கொண்டேன் ! ஆனால் கடனெனும் எமன் மிச்சம் மீதமின்றி அத்தனை மிஷின்களையும் வட்டியெனும் சித்திரகுப்தனின் துணையோடு இழுத்துப் போனது என் துரதிர்ஷ்டம் ! பாட்டிக்கும் உடல்நிலை மோசமாகிக் கொண்டிருக்கும் நிலையில், வீட்டுக்கும், மருத்துவமனைக்குமாய் அலைந்து கொண்டிருந்த தாத்தாவிடம் - "காலேஜில் என்னைச் சேர்த்து விடப் பணம் தர்றீங்களா ?" என்று கேட்க எனக்கு நா வரவில்லை ! ஏற்கனவே ஒருமுறை நான் கையேந்தி நின்றதைக் கண்டு கண்கலங்கிய மனுஷனை மறுபடியும் படுத்தியெடுக்க எனக்கு தில்லும் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்களேன் ! So எனக்குள் நானே புதையுண்டு போனவனாய் - "தொழில் பண்ணப் போறேன் ; புக் போடப் போறேன் !" என்று ஏதேதோ பெனாத்தித் திரிந்தேன் ! டிசம்பரில் பாட்டி காலமானார் - தாத்தாவின் தோள்களிலேயே !  

சகோதரிகள் ஆளுக்கொரு ஊரில் செட்டில் ஆகியிருக்க, பாட்டியும் திடு திடுப்பென மறைந்திருக்க - பெரியதொரு குருவிக்கூடு திடீரென சூன்யமாய்த் தெரியத்துவங்கியது ! வெட்டி ஆபீசராய்ச் சுற்றித் திரிந்தவன் நானே என்பதால், பாட்டியின் வீட்டை ஒதுக்குவது ; தாத்தாவின் அச்சகப் பொறுப்புகளைக் கவனிப்பது என்று அந்த டிசம்பரை நகற்றிய நாட்கள் இன்னமும் நினைவில் நிற்கின்றன ! டவுணுக்குள் அந்தப் பூர்வீக வீட்டில் தாத்தா மட்டும் தனித்திருக்க வேண்டாமென்று தீர்மானித்து எங்கள் வீட்டுக்கு அவரை அழைத்து வந்தோம் ! எதெற்கென்று மறந்து விட்டது - ஆனால் டிசம்பரின் ஒரு இரவில், பூட்டிக் கிடந்த தாத்தாவின் வீட்டிலிருந்து எதையோ எடுத்து வரும் பொருட்டு என்னை அனுப்பினார்கள் ! நினைவு தெரிந்த நாள் முதலாய் அந்தச் சந்துக்குள் போகும் போதெல்லாம் மனம் நிறைந்திருக்கும் சந்தோஷம் அன்றைக்கு முற்றிலுமாய்க் காணாது போயிருந்தது ! நாங்கள் ஓராயிரம் நாட்கள் சிரித்து, மகிழ்ந்து, விளையாடிய அந்த முற்றமும், தாத்தாவின் அந்த வீடும் இருளில் மூழ்கிக் கிடப்பதைப் பார்த்து எனக்குள் பயமே மிஞ்சியது ! கதவைத் திறக்கும் போதே பாட்டியின் குரல் காதில் கேட்பது போலிருந்தது ; அவர் வழக்கமாய் அமர்ந்து காப்பி குடிக்கும் அந்த இடத்தில அவரைப் பார்ப்பது போலவே தெரிகிறது ! போனது எதெற்கென்றே மறந்து போய் தலை தெறிக்க வீடு திரும்பியவனுக்கு அன்றிரவு முதலாய் புதிதாயொரு அத்தியாயம் துவங்கியது - தாத்தாவின் அண்மையின் வடிவத்தில் ! 

பெரிய வீடே என்றாலும், இரண்டே படுக்கையறைகள் தான் அந்த விசித்திரத் திட்டமிடலில் ! So ஒரு அறையில் அப்பா, அம்மா, தங்கை & தம்பி தூங்கிட, இரண்டாவது அறையை ஆக்கிரமித்திருந்த என்னோடு தாத்தாவும் ஒரு மடக்குக் கட்டிலைப் போட்டுப் படுத்துக் கொண்டார் அன்று முதலாய் ! பாட்டியின் இழப்பு தந்த வலியினை தாத்தா மறைக்க முயன்றாலும், அந்த நிசப்த இரவுகளில், நான் தூங்கிவிட்டேனென்ற நினைப்பிலிருக்கும்  தாத்தாவின் விசும்பல்கள் காட்டிக் கொடுத்திடும் ! நாட்கள் தான் எத்தனை பெரிய இழப்புகளையும் கபளீகரம் செய்து ஏப்பமிடும் சக்தியைத் தந்திடுமே ? சிறுகச் சிறுக பாட்டி நினைவுகளில் மாத்திரமே என்றாகிப் போக, கண்முன்னே தத்தளித்துக் கொண்டிருக்கும் மூத்த பேரனைக் கரைசேர்க்க முனைந்தார் ! எனது சென்னை குடிமாற்றலோ ; தந்தையின் சென்னைக் கிளையோ ; மாலைநேரக் கல்லூரிப் படிப்போ கானல்நீராய் மாத்திரமே இருந்திடவுள்ளதை புரிந்து கொண்டவராய் என்னை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைதூரப் படிப்புத் திட்டத்தில் சேர்த்து விட்டார் - B.Com படித்திட ! அதனில் சேரும் பொருட்டு, ஒரிஜினல் +2 மார்க் ஷீட் & TC-களில் பச்சை மசிக்கையெழுத்து வாங்கிடும் பொருட்டு, தாத்தாவுக்கு ரொம்பவே நெருங்கிய நண்பரான அரசுப் பள்ளியின் தலைமைஆசிரியரிடம் போன அந்த நாள் இன்னமும் நினைவுள்ளது ! நான் படித்தது வேறொரு பள்ளியில் தான் என்றாலும், எங்கள் பள்ளியின் சார்பில் நான் பேச்சுப் போட்டி ; கட்டுரைப் போட்டி என்று அத்தனையிலும் சுற்றி வருவதை அறிந்திருக்கிறார் அவர் ! "இவனை ஏன் காலேஜில் சேர்க்கவில்லை ? நன்றாகக் படிக்கும் பையனை தொழிலுக்குள் இழுத்து விட்டு இப்படிப் பாழாக்குகிறீர்களே !" என்று அவர் தாத்தாவிடம் ஒரு ருத்திரதாண்டவமே ஆடியது மறக்காது ! ஏதோ சொல்லிச் சமாளித்துக் கையெழுத்து வாங்கிவிட்டுக் கிளம்பிய போது தாத்தாவுக்கு என்னை எப்படியேனும் தூக்கி நிறுத்த வேண்டுமென்ற வைராக்கியம் கூடிப் போனது போலும் ! 

அன்று முதலாய் எங்களின் இரவு நேரங்கள் நள்ளிரவு வரையுமே ஏதேதோ பேசிடும் படலங்களாய் மாறிப் போயின ! தான் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் பற்றி ; அரசாங்க உத்தியோகத்தில் இருந்தது பற்றி ; குட்டிக்கர்ணமடித்து தொழில் துவங்கியது பற்றி ; தனது சகோதரிகளை, அவர்களது பிள்ளைகளை படிக்க வைத்து ஆளாக்கியது பற்றி, என்று ஏதேதோ பேசுவார் ! கல்லூரி படிக்க வாய்ப்புக் கிட்டாது போனது தான் எனக்கு - ஆனால் வாழ்க்கை எனும்  பல்கலைக்கழகத்தில் எனக்கு ஒவ்வொரு இரவிலும் கிடைத்த பாடங்கள் அசாத்தியமானவை ! பேசுவோம்..பேசுவோம்..பேசுவோம்... தாத்தா தூக்கத்தில் அசரும் வரைப் பேசுவோம் ! இருளிருப்பின், சீக்கிரமே கதிரவனின் கதிர்கள் ஒளியையும் கொணர்வதே இயற்கையின் நியதியல்லவா ? "லயன் காமிக்ஸ்" எனும் ஒரு கனவு மெதுமெதுவாக உருவம் பெற்றிட, "காதலிக்க நேரமில்லை" நாகேஷ் போல திரிந்து வந்தேன் ! "கதை ரெடி...ஹீரோ / ஹீரோயின் ரெடி...பைனான்ஸ் மட்டுமே தேவை" என்ற நிலையில் அந்தக்குறையையும் நிவர்த்தி செய்தார் தாத்தா ! தடுமாற்றத்தோடு கிளம்பிய வண்டி, ஸ்பைடரெனும் புண்ணிய ஆத்மாவின் சகாயத்தில் டாப் கியரைத் தொட - வாழ்க்கையே திடீரென இளையராஜாவின் மெலடியாய் இனிக்கத் துவங்கியது ! எங்களது இரவு அளவளாவல்களோ இப்போது வேறொரு லெவெலில் தொடர்ந்தன ! தாதாவுக்குத் தொழில்ரீதியான technical stuff ஏதும் பரிச்சயம் கிடையாது ; அவை எல்லாமே சீனியர் எடிட்டரிடமும், அங்கே அந்நாட்களில் பணியாற்றிய பாலசுப்ரமணியன் எனும் மேலாளரிடமும் தான் கற்றுக்கொண்டேன் ! ஆனால் பணம் சார்ந்த விஷயங்களில் ; தொழிலை அணுக வேண்டிய விதங்களில் தாத்தாவின் அறிவுரைகள் அற்புதமானவை ! ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ராவினில் பேப்பரும் கையுமாய் அமர்ந்திருப்பேன் - Lion Comics கம்பெனியின் Balance sheet தனைப் போட்டுப் பார்க்க !! தாத்தா கொடுத்த 40,000 பணம் எந்த ரூபத்தில் கையில் உள்ளதென்பதை நான் எழுதிக் காட்டிட வேண்டும் ! அந்த நாற்பதாயிரம் பணமானது  - பேப்பர் இருப்பாய் ; கதைக் கொள்முதலாய் ; புத்தக ஸ்டாக்காய் ; வங்கிக்கையிருப்பாய் இருப்பதை நான் பட்டியலிட்டு எழுதிக் காட்டி, ஒரு ஆயிரம், இரண்டாயிரமாவது லாபம் சம்பாதித்திருக்கிறேனா ? இல்லையா ? என்பதை ஊர்ஜிதம் செய்து கொள்ளாது தூங்க மாட்டார் ! ஒருமுறை தொள்ளாயிரம் ரூபாய்க்கு கணக்கு உதைக்கிறதென்று ராத்திரி ஒரு மணி வரைக்கும் இந்த இளம் அம்பானி உட்கார்ந்திருக்க நேரிட்டது என்றால் நம்புவீர்களா ? இறுதியில் அது எனக்கு புதிதாய் வாங்கிய ஹெர்குலிஸ் சைக்கிளுக்குச் செலவானதென்ற புரிதல் வந்த பின்தான் தூக்கம் பிடித்தது - எங்கள் இருவருக்குமே ! 

கதைக்கொள்முதல் செய்திட டில்லியில் இருந்த அப்போதைய Fleetway ஏஜெண்ட்களைச் சந்திக்கும் அவசியம் 1984-ன் இறுதியில் எழுந்த போது டிக்கெட் போட்டது, எங்கள் இருவருக்குமே ! அதுவரைக்கும் தமிழ்நாட்டைத் தாண்டியதில்லை எனும் போது "டில்லி வரைக்கும் தனியாவா ??? நானும் வாரேன் !!" என்று தாத்தா கூட வந்தார் ! வெளி மாநிலப் பயணம் என்றவுடன் தாத்தாவின் கெட்டப்பே மாறிடும் ! ஒரு இளம் மஞ்சள் நிற முழுக்கைச் சட்டையும் ; ஒரு பிரவுன் பேண்டும் போட்டுக் கொண்டு வரும் தாத்தாவோடு டில்லியில் சுற்றிய நாட்களில் எனக்கு கொஞ்சம் விநோதமாயிருக்கும் - அந்தக் காதரின் கம்பீரம் குறைகிறதே என்று !! ஆனால் horses for the courses என்று தெரிந்திருந்தார் ! ரயில் பயணத்தின் போது அரட்டை ; சிலுசிலுக்கும் டில்லியில் பேரனுக்கு ஸ்டைலாக ஸ்வெட்டர் வாங்கித் தந்த பின்னே அரட்டை ; கதைக்குவியலோடு ரூமுக்குத் திரும்பியவன் திறந்த வாய் மூடாது ஸ்பைடரையும், ஆர்ச்சியையும் சிலாகித்த போதும் அரட்டை - என்று தொடர்ந்தது கச்சேரி ! 

1985-ல் ஐரோப்பிய பயணம் ன்று தீர்மானமான பின்னே தாத்தாவுக்கு கொஞ்சம் பயம் ; கொஞ்சம் உற்சாகம் ! ஆயுசுக்கும் கடல்கடந்திரா ; விமானத்தை அண்ணாந்து கூடப் பார்க்கப் பிரியம் கொண்டிரா மனுஷனுக்கு - ஒரு  18 வயசுக்கோமாளியை 23 நாட்களுக்கு கண்ணுக்குத் தெரியா தேசங்களுக்கு அனுப்பவுள்ளதை எண்ணி பயம் ! அதே நேரம் தன் கற்பனைகளில் கூடச் சாத்தியப்படா ஒரு சமாச்சாரத்தினை பேராண்டி செய்ய முனைவதில் உற்சாகம் ! பதட்டத்தோடும், பரிவோடும் கலந்த அரட்டைகளில் அந்தச் சமயங்களின் ஒவ்வொரு ராத்திரியும் கடந்திட்டன ! ஒரு மாதிரியாய் பயணமும் கிளம்பி ; எல்லாம் ஒழுங்காய் நடந்தேறி ; மூன்று வாரங்களின் முடிவில், முழுசாய், ஒழுங்காய், வெள்ளைக்காரி யாரையும் கையோடு கூட்டி வராது, கதைகளை மட்டும் பேரன் கைபிடித்துக் கொண்டு வந்ததில் தாத்தா அடைந்த சந்தோஷம் தொடர்ந்த மாதம் முழுவதும் பிரதிபலித்தது எங்களின் அரட்டையில் ! முதல்வாட்டி பாரின் போய்விட்டு வரும் எவருக்கும், கதை கேட்க மட்டும் வாகாய் ஒரு ஆள் சிக்கினால், காதில் தக்காளிச் சட்னி கசியும் வரை போட்டுத் தாக்கும்  ஆசை பொங்கோ பொங்கென்று பொங்கும் ! நான் மட்டுமென்ன விதிவிலக்கா ? "ஜெர்மனி எப்படி இருந்துச்சு தெரியுமா தாத்தா ? லண்டன் தெரியுமா ? ஸ்காட்லாந்து தெரியுமா ? பெல்ஜியம் தெரியுமா ?" என்று கொலையாய்க் கொல்ல, அத்தனையையும் சந்தோஷமாய்க் கேட்டுக் கொள்வார் ! அந்நாட்களில் கடுதாசித் தொடர்புகளே மார்க்கம் எனும் போது, வேலை சார்ந்த progress பற்றிய விஷயங்கள் அத்தனையையும் சீனியரிடம் பகிர்ந்திடுவேன் ; தாத்தாவிடமோ, பொதுவாய் ஷேம நலன்களை பற்றி மட்டுமே ! 

1984-ல் துவங்கிய இந்த ரணகள ராத்திரிகள் - 1987 வரைக் குறையின்றித் தொடர்ந்தன ! அந்நேரத்துக்குள் நமது தொழிலுமே சிரமங்கள் ஏகமாய்க் குடியேறியிருந்தன - தந்தையின் நிறுவனத்துக்கு 1986-ல் மூடுவிழா நடத்தியதைத் தொடர்ந்து, அவர் பங்குக்கு மிஞ்சியதொரு முரட்டுக் கடன்தொகையினால் ! அந்தக் கடன்களுக்கு வட்டி கட்டியே என் குறுக்கு கழன்று போகத்துவங்கிட, 1987 / 88  முதலே மொக்கைகளின் மத்தியில் தான் வண்டி ஓடத்துவங்கியது ! அந்நாட்களிலுமே எங்களின் இரவு அரட்டைகள் விடாது தொடர்ந்தன - சிக்கல்களிருந்து விடுபடும் வழிகள் தேடி ! ஆண்டுகள் நகர்ந்திட, ஆபீசில் சிக்கல்களோ குரல்வளையை நெறிக்கும் ரேஞ்சுக்கு முன்னேறியிருந்தன ! ஆனால் நான் அவற்றை முழுசுமாய்த் தாத்தாவிடம் சொல்லாது தவிர்த்தே வந்தேன் - அவர் நிம்மதியைக் கெடுப்பானேன் என்று !

1992 புலர்ந்தது ; and அந்தாண்டே தான் தாத்தாவுக்கு மாரடைப்பின் முதல் அத்தியாயத்தை அறிமுகமும்  செய்து வைத்தது ! திடகாத்திரமாய் இருப்போருக்கு நோவே வராதென்ற அந்நாட்களது அசட்டுச் சிந்தனைகளா ? அல்லது பொதுவாய் அப்போதைய ஆயுட்காலங்கள் ஜாஸ்தி என்ற நிதரிசனத்தின் மீதான நம்பிக்கையா ? - சொல்லத்தெரியவில்லை ; ஆனால் எவ்வித மருத்துவ செக்கப்புகளும் செய்து கொள்ள அந்நாட்களில் தோன்றவேயில்லை யாருக்கும் ! So ஒரு கோட்டையின் சுவர்களில் விரிசல் விழுவதை ஆயுசில் முதன்முறையாகப் பார்க்க முடிந்தது !  மாரடைப்பு எத்தனை தாட்டியமான மனுஷாளையும் உலுக்கி விடுமென்பதை அந்நாட்களில் மௌனமாய் நான் பார்த்தேன் ! ஒய்வு அவசியம்  ; தூக்கம் அவசியம் ; நிம்மதி அவசியம் என்றான பின்னே அந்த ராத்திரி அரட்டைகள் குறையத் துவங்கின ; மாத்திரைகளில், எதிர்காலம் சார்ந்த பயங்களிலும் கரையத் துவங்கின !இதற்கு மத்தியில் எனக்கு அந்த வருஷமே கல்யாணம் செய்து வைக்கத் தீர்மானித்தனர் ! ஆபீசை ஓட்டவே திணறும் அழகில், இப்போதைக்கு கல்யாணமா ? என்று நான் தயங்கினாலும், தாத்தா பிடிவாதமாய் இருந்தார் ! So ஒரு சுபயோக சுபதினத்தில் குடும்பஸ்தனானேன் !  

மற்ற எல்லோரையும் விட, அவரோடு ஜாஸ்தி நேரம் செலவிட்டவன் நானே என்ற முறையில் தாத்தாவின் முடக்கம் உள்ளுக்குள் ஒரு இனமறியா பயத்தை உருவாக்கியிருந்தது ! நினைவு தெரிந்த நாள் முதலாய் தாத்தா உடம்புக்கு முடியாது படுத்ததாய் ஞாபகமே கிடையாதெனும் போது அவரொரு சூப்பர்மேன் என்று நான் நம்பியிருந்தேனோ - என்னவோ ; அவரைப் படுக்கையில் தளர்ந்து பார்ப்பது உள்ளுக்குள் பிசைந்தது ! அதுமட்டுமன்றி, சிக்கல் எதுவானாலும், ஒரு தைரியம் சொல்லவாச்சும் அவர் இருக்கிறாரே என்ற எனது அடிமனது நம்பிக்கை ஆட்டம் கண்டிருந்ததும் புரிந்தது !  நாட்கள் ஓடிட, தாத்தா கொஞ்சமாய்த் தேறியிருந்தார் ! அவரது பூர்வீக வீட்டுக்கே திரும்பிடத்  தீர்மானித்தவராய் அங்கே அவர் இடம்மாறிய சமயம், நமது காமிக்ஸ் அலுவலகம் அங்கு தான் செயல்பட்டுக் கொண்டிருந்தது ! In fact - 1989 முதலே காமிக்ஸ் அலுவலகத்தை அங்கே மாற்றியிருந்தேன் ! நாள் முழுக்க அங்கே ஓவியர்கள் ; டைப்செட்டிங் ஆட்கள் ; டெஸ்பாட்ச் staff என்று ஜெ ஜெவென இருப்பதை ரொம்பவே ரசிப்பார் ! மையமாய் ஒரு சேரைப் போட்டு அமர்ந்து கொண்டு ஜாலியாய் ஒவ்வொருவருடனும் அரட்டையடிப்பதில் அவரது நாட்கள் உற்சாகம் காணும். நானோ  பிரஸ் இருக்கும் இடத்தில பெரும்பான்மை நேரத்தைச் செலவிட்டு விட்டு அங்கே காமிக்ஸ் பணிகளைக் கவனிக்க வேளை கெட்ட வேளையில் போனாலும், தவறாது என்னோடு பேசிக்கொண்டிருப்பார் !

நான் வரும் போது என் முகரையில் தெரியும் சோர்வைக்கொண்டே கணித்து விடுவார் - தம்புடு பையில் தம்படி லேதுவென்று ! கடன்கள் சிறுகச் சிறுக அழுத்துவதை இயன்றமட்டும் வெளிக்காட்டிக் கொள்ளாது நான் சுற்றி வந்தாலும், எனது ஒவ்வொரு எட்டையும் உடனிருந்து பார்த்தவருக்குத் தெரியாதா - என் சிரமங்கள் பற்றி ?  நிலைமை கொஞ்சம் கொஞ்சமாய்க் கைமீறத் துவங்கிய சமயம் அவரிடம் நிலவரத்தைச் சொல்லாது இருக்க முடியவில்லை ! என்ன நினைத்தாரோ தெரியாது - தொடர்ந்த 90 நாட்களுக்குள் அவர் வாங்கிப் போட்டிருந்த சொத்துக்களின் பெரும்பான்மையை விற்று, எனது தலைக்கு மேல் கத்தியாய்த் தொங்கிக்கொண்டிருந்த கடன் தொகையின் முழுமையையும் தீர்க்கும்  பணத்தைப் புரட்டியிருந்தார் ! இருந்த கடன்கள் சகலத்தையும் 1994-ல் தீர்த்து முடித்த போது என்னுள் இருந்தது நிம்மதியா ? நன்றியுணர்வா ? ஒவ்வொரு பள்ளத்தில் கால்விடும் போதும் காப்பாற்றும் இவரின்றி வாழ்க்கைச் சக்கரங்கள் ஓடத்தான் செய்யுமா ? என்ற கேள்வியா ? - தெரிந்திருக்கவில்லை ! தொடர்ந்த நாட்களில் பிடுங்கல்கள் இல்லாது, தொழில் செய்யும் சுதந்திரத்தை ரசித்தவனாய், மிஷினரி இறக்குமதித் தொழிலுக்குள் மெதுவாய்க் கால்பதித்தேன் !

அதுநாள் வரைக்கும் அந்த ஆரம்பத்து 2 ஐரோப்பியப் பயணங்களுக்குப்  பின்னே, கடல்கடந்து செல்லும் அவசியம் எழுந்திருக்கவில்லை ! ஆனால் இந்த இறக்குமதித் தொழிலின் நிமித்தமோ, உலக வரைபடத்தை அடிக்கடி பயணப்பட்டியலில் கொணர வேண்டிப் போன போது தாத்தாவுக்கு சொல்லி மாளா வியப்பு ! எங்கெங்கோ பயணங்கள் ; ஏதேதோ வியாபார முயற்சிகள் என்பதில்  அளவிட இயலா மகிழ்ச்சி ! ஆனால் என்ன கூத்தடித்தாலும், தாத்தாவைப் பார்த்துப் பேசாது இருந்த நாட்கள் குறைவே ! 1998-ல் ஒரு டிசம்பரின் அதிகாலையில், ஏற்கனவே ஆஸ்பத்திரியில் இருந்தவரை மாரடைப்பின் மூன்றாம் அத்தியாயம் காலனிடம் காணிக்கையாக்கிய  தகவல் வந்த போது நானும், என் தம்பியுமே அவரை வீட்டுக்கு கொண்டு வர ஓடினோம் ! சின்ன அந்த அறையின் தரையில் விழுந்து கிடந்தவரை தூக்கிப் படுக்க வைக்கக் கூட அங்கு யாருக்கும் தோன்றியிருக்கவில்லை ; மாரடைப்பு தாக்கிய நொடியில் கீழே விழுந்ததில் நெற்றிப்பொட்டில் இரத்தம் கட்டியிருக்க, தரையில் face down கிடந்தார் ! ஆயுளெல்லாம் எங்கள் ஒவ்வொருவரையும் தூக்கி நிறுத்துவதையே தன் லட்சியமாய்க் கொண்டிருந்தவரை அந்தக் காலையில் தரையிலிருந்து தூக்கிட வேண்டிப் போனது தான் விதியின் வினோதம் !

இன்றைக்கு ஆண்டுகள் 22 ஓடிவிட்டன ; தலைமுறைகள் மாறி விட்டன ; காலங்கள் மாறி விட்டன ; காட்சிகளும் மாறி விட்டன ; வாழ்க்கையின் ஏற்றங்களையும் பார்த்தாச்சு ; பள்ளங்களையும் உணர்ந்தாச்சு ! நிறைய விஷயங்கள் இன்றைக்கு மறந்தும் விட்டன ; நிறைய வலிகளைக் கடந்தும் விட்டாயிற்று ! யார் வாழ்வில் தான் இழப்புகளில்லை ? யாரிடம் தான் வலிகள் இல்லை   ? அன்றைக்கு தூரத்துக் கனவாய்த் தோன்றிய பல விஷயங்கள் இப்போது சுலபமாய்த் தொட்டு விடும் தொலைவில் இருக்கின்றன தான் ! இன்றைய நமது காமிக்ஸ் முயற்சிகளும், இந்த வாசகச் சந்திப்புகளும், இந்த சந்தோஷங்களும், அவர் இருந்த நாட்களிலெல்லாம் சாத்தியப்பட்டிருப்பின், அவர் அடைந்திருக்கக்கூடிய குதூகலத்துக்கு எல்லைகளே இருந்திராது ! என்றைக்கேனும் ஏதேனும் மனதை நெருடிடும் சமயமெல்லாம் தாத்தாவுடன் கழித்த அந்த அரட்டை ராத்திரிகளைத் தான் நினைத்துக் கொள்வேன் ! இந்தப் பதிவின் துவக்கத்தில் என் முன்வைக்கப்பட்ட அந்தக் கேள்வியை வாசித்த போது - 900 ரூபாய்க்கென முக்கால் ராத்திரி முழித்திருந்த அந்த ஒற்றை வேளையை மட்டுமேனும் மறுக்கா வாழ்ந்து அனுபவிக்கும் பொருட்டு, தாத்தாவை கூப்பிட முடிந்தால் தப்பில்லையே என்று நினைத்தேன் ! சொல்லுங்களேன் guys - எனது தேர்வு ஓ.கே.வா ? என்று ?! இதை நான் டைப்படித்து முடிக்கும் போது மணி மூன்று !! கிட்டத்தட்ட அந்த இரவினைப் போலவே என்பதை நினைத்துக் கொண்டே தூங்கப் செல்கிறேன் !! 

Bye all & thanks for reading this !!  I know this has been one huge rambling....ஆனால் மனதில் பட்டத்தை எடிட் செய்ய முனையாது பகிர்ந்துள்ளதன் பலனிது ! ஓவராய் படுத்தியிருந்தேனெனில் sorry !! See you around !!
மாரடைப்புக்குப் பின்னான போட்டோ என்பதால் தாத்தாவின் சவரம் செய்திரா முகத்தில் தளர்ச்சி தென்படக்கூடும் ! 1992 ...நவம்பர்... என் திருமணத்துக்கு முந்தைய நாள் இரவினில்  எடுத்த போட்டோ ! 

Thursday, April 09, 2020

ஒரு பட்டாம்பூச்சியின் பரிணாமம் !

நண்பர்களே,

வணக்கம். திருப்பும் சேனல்கள் ஒன்று பாக்கியில்லாமல் கிலோக்கணக்கில் புளியைக் கரைப்பதும், வாசிக்கும் ஒவ்வொரு  வாட்சப் தகவலும் டன் கணக்கிலான பேதி மாத்திரைகளாய் செயல்பட்டு வருவதும் , ட்விட்டரில் தாண்டவமாடும் குறுஞ்செய்திகள் ஒட்டுமொத்தமாய் 'சோலி முடிஞ்சது மாப்பு' ரகத்திலிருப்பதும் நடைமுறை என்றாகி விட்டுள்ளது ! இந்தச் சூழலில் நமது குட்டியூண்டு வட்டத்துக்காச்சும்  - சன்னமானதொரு கபச்சுரக்குடிநீர் பந்தலாய் இருந்துவிட்டுப் போவோமே என்று தோன்றுகிறது எனக்கு ! Of course - "தாடி பற்றியெரிந்து கொண்டிருக்கும் போது கூட, உனக்கு புத்தி வராதாப்பா ?" என்ற கேள்வி எழக்கூடும் தான் ; ஆனால் 'நித்தமும் யுத்தம்' என்றாகிப் போன தினங்களில் - "எதிர்காலம் எனதே" என்று சொல்லிட முனைவதே நமது நிலைப்பாடாக இருந்திடும். So எப்போதும் போல ஜாலியாய் அரட்டை ; மொக்கை என்றே இந்த மினி-பதிவும் இருந்திடும் !

என்ன எழுதுவதென்ற கேள்வி எழும் போதே -  நேற்றைக்குப் பின்னூட்டப் பகுதியினில் கேட்கப்பட்டிருந்த "உலகை உலுக்கிடும் ரக வினாக்கள்" கைதூக்கி நிற்பதைக் காண முடிந்தது ! போடப்போவது மொக்கை என்றான பின்னே, அது ஈரோட்டைச் சார்ந்ததா ? சிவகாசியைச் சார்ந்ததா ? என்பதில் பெருசாய் என்ன வேறுபாடு இருந்திடப்போகிறது ? So அவற்றிலிருந்தே ஆரம்பிப்போமே ? 

* ஒரு ரம்மியமான மாலைப் பொழுதில் அதிக கூட்டமில்லாத ஒரு காபிஷாப்பில் சூடாய் ஒரு கப் காபி சாப்பிடபடியே பேசிட நீங்கள் அழைப்பு விடுக்க நினைக்கும் VIP யாராக இருந்திடும் ?

காபி-டீ குடிக்கும் பழக்கம் அறவே லேது என்பதால் சில பல VIP-க்கள் தப்பித்தார்கள் என்று சொல்வது எனது லேசான பதில் ! ஆனால் அதனில் ஏது சுவாரஸ்யம்  ? So கொஞ்சமாய் யோசிக்கிறேன் - யாரை வரவழைத்துக் குடலை உருவலாமென்று !! "ட்ரம்பைக் கூப்பிட ஆசை ; பில் கேட்ஸைக் கூப்பிட ஆசை" என்ற ரீதியில் பீட்டர் விட்டால், நானே கெக்கே பிக்கே என்று சிரித்து வைத்து விடுவேன் ; so நிதானமாய் யோசிக்கிறேன் !

கழுதை கெட்டால் குட்டிச் சுவரு - நமக்கு அடையாளமே இந்த பொம்மை புக் லோகம் மாத்திரமே எனும் போது அதைத் தவிர்த்து வேறெங்கே சிந்தனைகள் ஓட்டமெடுக்கக்கூடும் ? வளையம் வளையமாய் அந்தக்காலத்து சினிமாக்களின் flashback பாணியில் எனது சிந்தனைகளும் பயணமாகிடும் போது ஒரு மலர்ந்த முகத்துப் பெண்மணியிடம் சென்று தஞ்சமடைந்து நிற்கின்றன !

வருஷம் 1985 ! பிராங்கபர்ட் புத்தக விழாவின் முதல்நாள் காலைப் பொழுது ! (செத்தாண்டா சேகரு..மறுபடிக்கும் அங்கே தான் !!) தக்கி முக்கி முந்தைய தினம் நகரத்தோடு லேசாயொரு பரிச்சயத்தை வளர்த்து வைத்திருக்க, பயணத்தின் மைய நோக்கங்கள் அரங்கேறிட வேண்டிய தருணம் புலர்ந்திருந்தது ! கோட்டையும், சூட்டையும் போட்டுக்கொண்டு , பர்மா பஜார் பிரீஃப் கேஸையும் தூக்கிக் கொண்டு, புத்தக விழா அரங்கிருக்கும் இலக்கிற்குச் செல்ல டிராமைப் பிடிக்கப் போன போது மூச்சு அடைக்காத குறை தான் - அங்கே நின்ற திருவிழாக் கூட்டத்தைப் பார்த்து ! (இன்றைக்கு அந்தப் பரபரப்பு கணிசமாகவே குன்றி விட்டுள்ளது தான் ; மின்னஞ்சல்களில் தொடர்பு கொண்டு ; skype-ல் பேசி  வியாபாரங்களை முடிப்பதும் சாத்தியமே எனும் போது அத்தனை தூரம் பயணம் பண்ணி மெனெக்கெடவெல்லாம் முன்போல அவசியங்கள் இருப்பதில்லை !) ஆனால் எல்லாமே கடுதாசிப் போக்குவரத்தை மட்டுமே நம்பியிருந்த அந்நாட்களில், பதிப்புலகின் ஜீவநாடியே இது போன்ற நேரடிச் சந்திப்புகளுக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் புத்தக விழாக்கள் தான் ! And அவற்றுள் தலையாயது, ஜெர்மனியின் இந்த விழா தான் எனும் போது சர்வதேசப் பதிப்புலகின் அத்தனை பேரும் அங்கே  சங்கமிப்பது வாடிக்கை ! டிராம் ஸ்டாப்பில் நின்றிருந்த அத்தனை பேருமே industry professionals என்பது நெற்றியில் ஒட்டியிருக்காத குறை தான் !  ஏதோ முச்சூடும் இது போன்ற பயணங்களுக்கும், பணிகளுக்கும் நானுமே பழக்கப்பட்டவனைப் போல கூட்டத்தோடு கூட்டமாய் நின்று, அந்த டிராமுக்குள் முண்டியடித்து ஏறிய போது பெருமையாய் இருந்தது ! ஆனால் மைய ரயில்நிலையத்திலிருந்து மூணோ / நாலோ ஸ்டாப் தொலைவே எனும் போது ஐந்தே நிமிடங்களில் ஒரு பிரம்மாண்ட அரங்கின் முன்னே திபு திபுவென ஜனம் முழுக்க இறங்கிய போது தான் எனக்கு காத்திருந்த பணிகளின் முழுப் பரிமாணமும் ஜிலீரிடும் பீதியுடன் புரியத்துவங்கியது ! மொத்தம் 8 ராட்சச அரங்குகளில் , பதிப்பகங்களின் ஜானர்கள் அல்லது பதிப்பகங்களின் தேசங்கள் என்ற ரீதியில் பிரித்து பல்லாயிரக்கணக்கான ஸ்டால்களில், பல்லாயிரக்கணக்கான பதிப்பகப் பிரதிநிதிகள் செயல்பட்டு வருகின்றதை முன்தினமே கொள்முதல் செய்திருந்த கேட்லாக் வாயிலாகப் புரிந்து வைத்திருந்த போதிலும், அதன் அசாத்திய பிரம்மாண்டத்தை நேரில் , நிஜத்தில் பார்த்த போது மூச்சா வராத குறை தான் ! விட்டால் அப்படியே ஊரைப் பார்த்து ஓட்டம் பிடித்திருப்பேன் சர்வ நிச்சயமாய் ! ஆனால் பயணத்தின் பொருட்டு கிட்டத்தட்ட நாற்பத்திஐந்தாயிரம் ரூபாயை தாத்தா செலவிட்டிருந்தது தலைக்குள் ராட்சஸத்தனமாய் என்னை மிரட்டிக் கொண்டிருந்தது !

1984  ஜுனின் பத்தணாவிற்கு கூட   நம்பிக்கையே இல்லாததொரு சூன்யமான காலையில் என் கையில் தாத்தா தந்த நாற்பதாயிரம் ரூபாய் பணம் தான் இன்றைய இந்த சகலத்துக்கும் விதைநெல் ! அந்த முதலீட்டில் தான் எனது கனவுகளின் அஸ்திவாரங்களே போடப்பட்டிருந்தன ! அவ்விதமிருக்க, சும்மா 2 வாரம் ஐரோப்பாவில் சுற்றித் திரியும் பொருட்டு வாழ்க்கையிலேயே விமானத்தினுள் காலடி கூட வைத்திருக்காத, சிக்கனமான, சிறுகச் சிறுக பணம் சம்பாதித்திருந்த தாத்தா அத்தனை காசை செலவிட்டிருந்தது என்னுள் ஒரு அரூப சுமையை ஏற்றிவிட்டிருந்தது ! இன்றைக்கும் 45,000 என்பது சிறு தொகையல்ல எனும் போது 35 ஆண்டுகளுக்கு முன்னே அதன் மதிப்பை யோசித்துத் தான் பாருங்களேன் ? ஒரு பம்பைத்தலை 18  வயதுப் பேராண்டியை நம்பி அத்தனை பணத்தை தூக்கித் தந்திருந்த அந்த முதியவரின் பொருட்டாவது எதையேனும் உருப்படியாய்ச் செய்து காட்ட வேண்டிய நெருக்கடி இருப்பதாய் எனக்குள் டர் ! தவிர, சொந்தக்காரர்களெல்லாம் மதுரை விமான நிலையம் வரைக்கும் வந்திருந்து மாலை-கீலையெல்லாம் போட்டு வழியனுப்பி வைத்திருக்க, ஊருக்குத் திரும்பும் போது உருப்படியாய் எதையேனும் சாதித்த திருப்தி இல்லாங்காட்டி கள்ளத்தோணியில் தான் ஊர் திரும்ப வேண்டியிருக்கும் என்ற பயமுமே சேர்ந்து கொண்டிருந்தது !

யார் யாரைச் சந்திப்பது ? என்று எனது டயரியில் முந்தைய நாளே கொஞ்சமாய்க் குறிப்புகள் எடுத்துக் கொண்டிருந்ததால், அதை கையில் வைத்துக் கொண்டு பரக்கப் பரக்க முழித்துக் கொண்டு ஏதோவொரு வரிசையின்முன்னே நின்றபடிக்கே எட்டிப் பார்த்தால் அந்த வரிசையில் அமெரிக்காவின் Marvel Comics நிறுவனத்தின் பிரமாண்டமான ஸ்டால் கண்ணில்பட்டது ! நம்மிடம் ஏற்கனவே இஸ்பய்டர் இருந்திருக்க, அவர்களிடமுள்ள SPIDERMAN தொடருக்கென பேசுவதாக திட்டமிட்டிருந்தேன் ! So விறு விறுவென அவர்களது ஸ்டால் முன் சென்று நின்ற போது திக்கென்றது ! காலை பத்தே கால் தானென்ற போதிலும், அவர்களது அரங்கினுள்ளோ, திருநெல்வேலி இருட்டுக்கடை முன்னே அல்வா வாங்க குவிந்திருக்கும் ஜனத்தைப் போலொரு திரள் ! அத்தனை பேரும் வெள்ளைக்கார மகராசர்கள் & மகராணியர் ! எனக்கோ உள்ளுக்குள் சொல்லி மாளா தயக்கமும், பயமும் ! சரி, 'கடவுள் விட்ட வழி' என்றபடிக்கே, எனது விசிட்டிங் கார்டை தூக்கிக் கொண்டு அவர்களது front desk மாதிரியான அமைப்பிலிருந்த பெண்மணியிடம் நீட்டியபடியே - "ஐ இந்தியா கமிங் ; ஸ்பைடர்மேன் டிஸ்கஷன் !" என்றேன் திக்கித் திணறி ! நிமிர்ந்து பார்த்தவர் - "do you have an appointment mister ?" என்று கேட்க - "நை..நை...நோ அப்பாய்ண்ட்மென்ட் ; நோ ஐஆயிண்ட்மென்ட் !" என்ற ரீதியில் ஏதோ சொல்லிய மறு கணம் அவர் முகம் அஷ்டகோணலானது ! வீட்டில் பூனை வளர்க்கும் போது,அது எப்போதாச்சும் பல்லியையோ, பாச்சானையோ பிடித்து கவ்வியபடிக்கே வீட்டுக்குள் நுழையும் போது "ஐயே" என்றொரு பார்வை பார்ப்போமே - அதுக்குச் சமானம் அந்தப் பார்வை ! "We are totally booked for the entire fair ; try & see us with an appointment next year !" என்று குனிந்து கொண்டார் தன் வேலைகளைக் கவனிக்க ! எனக்கு தலையே சுற்றாத குறை தான் ; இது தான் இங்கு பொதுவான நடைமுறையெனில், அத்தனை பதிப்பகங்களுமே இதையே தான் சொல்லப் போகிறார்களெனில் கதை கந்தல் என்று அழுகை அழுகையாய் வந்தது ! தலையைத் தொங்கப்போட்டபடிக்கே நடந்தவனுக்குள் காற்றுப் போன பலூன் போலானதொரு உணர்வு !

அடுத்து யாரைச் சந்திக்க முனைந்தேன் என்பது இன்றைக்கு நினைவில்லை ! ஆனால் அந்த முதல் நாள் சந்திப்பின் பிரதானமானது Editions Du Lombard S.A என்றதொரு ஜாம்பவான்ப் பதிப்பகமே  ! பிரான்க்கோ-பெல்ஜிய காமிக்ஸ் உலகின் அசுரர்கள் ; இவர்களை சந்தித்தே தீர வேண்டுமென செம ஆசை இருந்திருந்தது உள்ளுக்குள் ! ஆனால் மார்வெல்லில் வாங்கியிருந்த பல்ப் இன்னமுமே ஜக ஜோதியாய் உள்ளுக்குள்ளே எரிந்துகொண்டிருக்க, அரைச் சீவனில் அவர்களது ஸ்டாலை நோக்கி நடந்தேன் ! மீண்டுமொரு பிரமாண்ட ஸ்டால் கண்ணில் பட்டது ; அங்குமே திருப்பதியில் லட்டு வாங்க நிற்பதைப் போலொரு கூட்டம் ! 'ரைட்டு...ஓரமா நின்னு பராக்குப் பாத்துப்புட்டு ஊரைப் பார்த்து ஓட வேண்டியது தான் ; இதுலாம் நம்ம சத்துக்கு மீறின சமாச்சாரமாத் தெரியுது !' என்று நினைத்துக் கொண்டு பூனை போல அவர்களின் ஸ்டாலுக்குள் நுழைந்து அவர்கள் display-க்களில் வைத்திருந்த கலர் கலரான ஆல்பங்களை 'ஆவென்று' பராக்குப் பார்த்து நின்றேன் ! அவர்களிடம் receptionist போல யாருமே இருக்கவில்லை என்பதால், யாரிடம் போய்ப் பேசுவது என்று கூட தெரிந்திருக்கவில்லை எனக்கு ! சும்மா புக்குகளைப் பராக்காவது பார்த்துக் கொள்வோமே என்றிருந்தேன் ! பிராங்கபர்ட்டின் கடைசி நாள் தவிர்த்து பாக்கி நாட்களில் தொழில்சாரா பொதுஜனத்துக்கு அனுமதி கிடையாது ! So உள்ளே சுற்றித் திரியும் எவரேனும் வெட்டி ஆபீசராய் இருக்க வாய்ப்பே கிடையாது ! அவ்விதமிருக்க, திருட்டு முழியோடு ஒரு பயல் உள்ளே நுழைந்து புக்குகளை வாய் பார்த்துக் கொண்டுள்ளானே ? என்று நினைத்தார்களோ - என்னவோ ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி என்னிடம் வந்து, பிரெஞ்சு மொழிக்கே உரித்தான அந்த சங்கீத உச்சரிப்போடு - "Hello ...looking for someone ?" என்று கேட்டார் ! என்னை விட குறைவான உசரம் ; நல்ல சிரித்த முகம் ; கண்களில் ஒரு உற்சாகம் என்று காட்சி தந்தவரிடம் தயங்கித் தயங்கி எனது விசிட்டிங் கார்டை நீட்டினேன் ! 

எனது விசிட்டிங் கார்டுக்கும், அந்நாட்களது லெட்டர் பேடுக்கும் ஒரு குட்டிப் பின்னணி உண்டு !! கம்பியூட்டர் டிசைனிங் ஏதும் சாத்தியமில்லாத அந்நாட்களில் மாமூலான எழுத்துருக்களில் மொக்கை மொக்கையாய் விசிட்டிங் கார்டுகளும், லெட்டர் பேடுகளும் இருப்பதே வாடிக்கை ! ஆனால் அந்நேரம் எனது தந்தையின் ஆபீசில் ஒரு பைபிள் அச்சுக்கென கோவையிலிருந்து வந்திருந்தார் ஒரு லெட்டெர்பிரெஸ்  உரிமையாளர் ! பெயர் ஜெயபாண்டியன் ! கப்பல்படையில் பணியாற்றியிருந்தவர் ; ஓய்வுக்குப் பின்னே கோவையில் சின்னதாயொரு பிரெஸ் நிறுவி அதனில் சிற்சிறு பணிகளை மாத்திரம் செய்து வருவது ; பாக்கி பெரிய ஆர்டர்களுக்கு சிவகாசிக்கு பயணமாகி அச்சிட்டு வாங்கிச் செல்வது என்பதே அவரது நடைமுறை ! என்ன செய்வதென்ற புரிதல் துளியும் இல்லாது நான் 1984 -ன் துவக்கங்களில் சுற்றித் திரிந்த நாட்களில் தினமும் தந்தையின் ஆபீசுக்குப் போவது வழக்கம். அப்போது அறிமுகமானவர் தான் ஜெயபாண்டியன். நாசரேத்க்காரர் ; கோவையில் செட்டில் ஆனவர் ; ஆனால் கப்பல்படைப் பணிநிமித்தம் நிறைய சுற்றி வந்தவர் என்பதால் ரொம்பவே உலக அன்பவமும், அதற்கேற்ற பேச்சுத் திறமையும் உண்டு அவருக்கு ! கோவையில் அவர்களது அச்சகம் மிகச் சிறியது என்றாலும், அவர் செய்து வந்த பணிகள் ரொம்பவே பிரத்யேகமானவை ! சிவகாசிக்கு வரும் போது நாலைந்து நாட்கள் தங்கியிருந்து அச்சிட்டு வாங்கிப் போவார் என்பதால் தினமும் அடிக்கடி ஆபீசில் அவர் தலை தென்படும் ! பள்ளிநாட்களிலிருந்தே  தந்தையின் ஆபீசுக்கு நான் ரெகுலராய் விசிட் அடிப்பதுண்டு என்பதால் அங்கு பணியாற்றும் எழுபது / எண்பது பணியார்களுக்கும் என்னை நன்றாகவே தெரியும். "சௌந்தர் அண்ணாச்சி பையன்" என்பதைத் தண்டி எனக்கு இன்னொரு அடையாளமும் உண்டு அவர்கள் மத்தியினில் ! அப்போதெல்லாம் ஊருக்குள் இருந்த பள்ளிகளின் பெரும்பான்மை தமிழ் மீடியம்களே என்ற நிலையில், லயன்ஸ் கிளப்பின் புண்ணியத்தில் துவக்கப்பட்ட முதல் இங்கிலீஷ் மீடியப்பள்ளியின் ஆரம்ப பேட்ச் நான் ! தவிர மூன்றாம் வகுப்பு முதலே ஹிந்தியும் உண்டு என்பதால் ரொம்பச் சீக்கிரமே தத்து பித்தென்றாவது ஹிந்தியும் பேச வரும் எனக்கு ! அப்போதெல்லாம் காலெண்டர் தயாரிப்பில் கொடிகட்டிப் பறந்த தந்தையின் ஆபீசில், இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் யாரையேனும் பார்க்க முடியும் ! காலெண்டர்கள் கொள்முதல் பண்ணிப் போக வட இந்தியாவின் அத்தனை மாநிலத்தவர்களும் வருகை தந்திருப்பார்கள் ! So ரொம்ப சின்ன வயசிலேயே அவர்களிடம் பேசும் வாய்ப்பு எனக்கிருக்கும் ; 'ஜாத்தா ஹை...ஆத்தா ஹை...பாத்தா ஹை.." என்று உளறினால் கூட ஆபீஸிலுள்ள பணியாட்களுக்கு வியப்பே மிஞ்சும் ஐயாவின் புலமையினைக் கண்டு ! So 'இங்கிலீஷ் மீடியம்" என்ற கெத்தும் உண்டு ஐயாவுக்கு ! ஆக நான் வெட்டி ஆபீசராய்ச் சுற்றி வந்த போதிலும் ஆபீசுக்கு வந்து-செல்லும் அத்தனை போரையும் அறிந்து வைத்திருந்தேன் ! அந்தப் பட்டியலில் ஜெயபாண்டியன் அவர்களும் இணைந்து கொள்ள, என்னிடம் ஜாலியாகப் பேசிக்கொண்டிருப்பார் ! ஒரு நாள் அவரது விசிட்டிங் கார்டைப் பார்த்த போது அதன் அட்டகாசத் தரத்தைக் கண்டு வாயடைத்துப் போனேன் ! அத்தனை நேர்த்தியாய் இருந்தது ! நான் "பிரகாஷ் பப்ளிஷர்ஸ்" என்றதொரு பெயரை மட்டும் தேங்காய்ச் சிரட்டையைப் போல கவ்விக் கொண்டு, பூந்தளிர் பாணியில் ஒரு இதழை உருவாக்கும் கனவில் இருந்த நாட்களவை ! என்னை நினைத்தாரோ தெரியாது, அடுத்தமுறை சிவகாசி வந்த பொழுது என்னிடம் ஒரு சின்ன டப்பியை நீட்டினார். உள்ளே பார்த்தால் செம ரசனையோடு சில்வர் + கருப்பு வர்ணங்களில் செம classy ஆகவொரு விசிட்டிங் கார்டு கத்தை இருந்தது - "S.VIJAYAN" என்ற பெயர் போட்டு ! அன்றைக்கு இரவு வீட்டுக்குப் போய் அத்தனை பேரும் உறங்கிய பிற்பாடு அந்த கார்டை எடுத்து வைத்து எத்தனை நேரம் அழகு பார்த்திருப்பேனோ - ஆண்டவனுக்கே வெளிச்சம் !  தொடர்ந்த பத்தாண்டுகளுக்கு நான் உபயோகித்து வந்தது அவர் அச்சிட்டுத் தந்த அந்த விசிட்டிங் கார்டுகளையே ! என்னைப் பார்த்து முழித்தவர்கள் கூட,நான் நீட்டும் விசிட்டிங் கார்டை இமை தட்டாது ரசிப்பதை எண்ணற்ற தருணங்களில் கவனித்திருக்கிறேன் !

Back to the story, எனது கார்டை வாங்கி பொறுமையாய் வாசித்தவர் - "Oh from India !!"என்று முகம் முழுக்க பூரிப்போடு சொன்ன போது எனக்குள் நம்பிக்கை வாணவேடிக்கை போடத் துவங்கியது ! அடுத்து என்னை கேட்பாரென்பதை இந்நேரத்துக்கு யூகிக்காது போக முடியுமா - என்னை ? முந்திக் கொண்டு - "திடீர் புரோக்ராமாய் கிளம்பி வந்துட்டேன் மேடம் ; என்னிடம் அப்பாயிண்ட்மெண்ட் ஏதும் இல்லை ! அடுத்த 5 நாட்களுக்குள் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் எனக்கென கொஞ்சூண்டு நேரம் ஒதுக்க முடிஞ்சால், நீங்கள் சொல்லும் நேரத்துக்கே நான் ஓட்டமாய் ஓடி வந்து நிற்கிறேன் !" என்றேன் ! மாறாத புன்னகையோடு, தன்னருகே இருந்த இன்னொரு பெண்ணிடம் ஏதோ சொல்லியபடியே ஒரு planner போல இருந்த அட்டவணையை மேஜை மேலே போட்டு விட்டு ஏதோ பேசினார் அவரிடம் ! பிராங்கபர்ட்டில் அவர்கள் முன்கூட்டிய சந்திப்புகளுக்கென செய்து வைத்திருந்த ஏற்பாடுகள் அவை என்பதை புரிந்து கொள்ள முடிந்தது ! "கடையைப் பூட்டுறதுக்கு 5 நிமிஷங்களுக்கு முன்னே தான் பார்க்க முடியும் தம்பி !" என்று சொல்வாரென்ற எதிர்பார்ப்பில் நின்று கொண்டிருந்தவனின் ஆந்தைக் கண்களோ சுற்றிலும் குவிந்து கிடந்த காமிக்ஸ் சொர்கத்தின் மீது பசியோடு மேய்ந்து கொண்டிருந்தன ! அதுவரையிலும் அமெரிக்க / பிரிட்டிஷ் பதிப்பகங்களின் இங்கிலீஷ் காமிக்ஸ்களைத் தவிர்த்து நான் பார்த்திருந்தவை டின்டின் ; ஆஸ்டெரிக்ஸ் ; டெக்ஸ் வில்லர் & லக்கி லூக் மட்டுமே ! ஆனால் அவர்களிடம் குவிந்து கிடந்தது என்னவோ அலிபாபா குகையின் பொக்கிஷங்களை போலான சமாச்சாரங்கள் ! இவை அத்தனையையும் அள்ளிக் கொண்டு ஊருக்குப் போய் நின்றால் இந்தப் பயணத்துக்கென்ன, ஜென்மத்துக்கே ஒரு பாலன் கிட்டியிருக்குமே என்ற பரபரப்பில்  உள்ளுக்குள் நெஞ்சு 'டம்மு டம்முவென்று' அடித்துக் கொண்டிருப்பதை உணர முடிந்தது ! சில நிமிடக் கலந்தாலோசனைக்குப் பின்னே என்னிடம் வந்தவர் சொன்னதைக் கேட்ட போது, றெக்கை முளைத்தது போலிருந்தது எனக்கு ! 'பிரேசிலில் இருந்தோர் பதிப்பகத்தாரை சந்திக்க காலையில் ஸ்லாட் தந்திருந்த்தாகவும், அவர்களை இதுவரைக்கும் காணோம் என்பதால், எனக்கு ஓ.கே.வெனில் இப்போதே பேசலாம்' என்றார் !!

எனக்கு ஓ.கே.வா ?????????  பீட்சாவில் என்ன டாப்பிங் வேண்டுமென்று தேர்வு செய்யும் வாய்ப்பு ஒரு அன்னக்காவடிக்குக் கிடைத்தது போலிருந்தது !! பிசாசு நடமாடும் நள்ளிரவில் தான் நேரம் தர முடியும் என்று சொல்லியிருந்தாலுமே கொலைபட்டினியாகக் கூடக் காத்திருக்கத் தயாராக இருந்தவனுக்கு அந்த ஜாக்பாட்டை மறுக்கவாச்சும் தோன்றுமா ? வேக வேகமாய் சம்மதமென்று மண்டையை ஆட்ட, ஒரு ஓரத்திலிருந்த மேஜைக்கு என்னை இட்டுச் சென்று அதன் முன்னே அமரச் செய்தார் ! Display-ல் இருந்த ஆல்பங்களில் ஒரு அரை டஜனைக் கைகளில் ஏந்தியபடியே என்முன்னே குவித்தவர், மிட்டாய்க்கடைக்குள் புகுந்திருக்கும் பச்சைப் புள்ளை நான் என்பதைக் கணித்திருந்தார் ! நிதான ஆங்கிலத்தில் பேசத்துவங்கியவர் Lombard நிறுவனம் பற்றி ; அதன் பாரம்பர்யம் பற்றி விளக்கத் துவங்கினார் !  பெல்ஜிய தூதரகத்திலிருந்து சில மாதங்களுக்கு முன்னே கிட்டியிருந்த காமிக்ஸ் உருவாக்கங்கள் தொடர்பான புக்கில் Lombard நிறுவனத்தைப் பற்றி நான் ஏகமாய் வாசித்திருந்ததால், அவர் சொன்ன தகவல்கள் எல்லாமே எனக்கு மறுஒலிபரப்பாகவே இருந்தன ! மெது மெதுவாய் அவர் சொல்லத் தவறிய தகவல்களையும் நான் எடுத்துத் தந்த போது அவருக்கு ஆச்சர்யம் ! மெது மெதுவாய் நம் பின்னணி பற்றி ; பிரான்க்கோ-பெல்ஜிய காமிக்ஸ் உலகினைப் பற்றி நான் தெரிந்து கொண்ட விதம் ; ஏதோவொரு குருட்டு தைரியத்தில் ஐரோப்பிய பதிப்பகங்களை சந்திக்கத் திட்டமிட்டது பற்றியெல்லாம் நான் சொல்லிக்கொண்டே போக உற்சாகமாய்க் கேட்டுக் கொண்டிருந்தார் ! 'நமது வெளியீடுகள்' - என்று நான் பந்தாவாய்த் தூக்கி நீட்டிய பாக்கெட் சைஸ் இதழ்களையும் ஆவலோடு வாங்கிப் புரட்டி, தனது சகாவிடமும் காட்டி பிரெஞ்சில் ஏதோ சொன்ன போது எனக்கு உள்ளுக்குள் நிலாவில் கொடியை நட்டிய பெருமிதம் ! 'கடலைமுட்டாய் சைசில் தான் இவர்களது புக்கே உள்ளது - பாரேன் !' என்று அவர் சொல்லியிருக்கவுமே வாய்ப்பிருந்தது தான் ; ஆனால் லோகத்தில் இல்லாத எதையோ நாம் பாக்கெட் சைசில் சாதித்துக் கொண்டிருப்பதான utopia-வில் குடியிருந்த எனக்கு எவ்வித எதிர்மறை நினைப்புகளும் குறிக்கிடவே இல்லை ! சற்றைக்கெல்லாம் அவர்களது தொடர்கள் ; ஒவ்வொன்றின் ஜானர்கள் ; ஒவ்வொன்றின் வெற்றிகள் பற்றியெல்லாம் சொல்லத்துவங்க, நானோ அத்தனையையும் புரட்டு புரட்டென்று புரட்டிக் கொண்டிருந்தேன் ! அவை எல்லாமே நாம் டிடெக்டிவ்களோடு மட்டுமே காதல் கொண்டிருந்த நாட்கள் என்பதால் அதற்கேற்ற கதைகளையாய்க் கேட்டேன் ! ரிப்போர்ட்டர் ஜானி ; புருனோ பிரேசில் ; அப்புறம் இன்னொரு one shot - என கலர்கலரான ஆல்பங்களை என்முன்னே நீட்டினார் ! அப்போது கண்ணில்பட்ட கீச்சல் ஓவியங்களுடனான கேப்டன் பிரின்ஸ் ஆல்பங்களும் என்னை ஏதோவொரு விதத்தில் கொக்கி போட்டு இழுத்தன ! "எங்க ஊரில் செம popular கதாசிரியரும், ஓவியரும் இணைந்து உருவாக்கியுள்ள தொடர் இது..இதுவும் வேணுமா ?" என்று கேட்ட போது பூம் பூம் மாடாகினேன் ! நிதானமாய் நமது விலைகள் ; நமது விற்பனை எண்ணிக்கை ; நாம் தற்சமயம் Fleetway கதைகளுக்குத் தந்து கொண்டிருக்கும் ராயல்டி பற்றியெல்லாம் முகச்சுளிப்பின்றிக் கேட்டுக் கொண்டார் ! இன்னொரு அப்பாயிண்ட்மென்டில் மேற்கொண்டு பேசலாம் என்று குறிப்பெடுத்துக் கொண்டவர் மறு நாளுக்கோ என்னவோ ஒரு மதிய பொழுதினில் நேரம் ஒதுக்கியும் தந்தார் ! 'இந்த சாம்பிள்கள் எடுத்துக்கலாமா ?' என்று கோமாளியைப் போல நான் கேட்டேன் - ஆர்வமிகுதியில் ! விழாவின் முதல் நாளிலேயே அவர்கள் கொணர்ந்திருக்கும் சொற்ப மாதிரிகளை நான் வாங்கி கொண்டு போய் விட்டால், தொடரும் நாட்களில் அவர்களுக்கு சிரமமாகிப் போகுமே என்ற ஞானம் கூட அந்த உற்சாக நொடியில் இருக்கவில்லை எனக்கு ! சிரித்த முகத்தோடே - "ஏதேனும் ஒன்றை மட்டும் இப்போதைக்கு எடுத்துக் கொள் ! பாக்கியினை கடைசி தினத்தன்று வாங்கிக்கொள்ளலாம் !" என்றார் ! நான் அன்றைக்குச் சுமந்து சென்றது பின்னாட்களில் நாம் "பனிமண்டலக்கோட்டை" என்ற பெயரில் வெளியிட்ட கேப்டன் பிரின்ஸ் சாகசமே !

தொடர்ந்த நாட்களில் மறுபடியும் சந்திப்பு ; அப்புறம் கடைசி நாளன்றைக்கு மீத புக்குகளை வாங்கிகொள்ளச் சந்திப்பு என்று நிகழ்ந்த சமயத்துக்குள் ஒரு பட்டாம்பூச்சியின் பரிணாம வளர்ச்சியே என்னிடம் நடந்திருந்தது ! கூமுட்டையோ, நல்லமுட்டையோ என்றே தெரியா நிலையில் ஆஜராகி ; சிறுகச் சிறுக ஒரு larva வாக உருமாறி, 5 நாட்களின் இறுதியில் தம்மாத்துண்டு பட்டாம்பூச்சியாகவே நான் மாறியிருந்தேனெனில் அதற்கு பிரதான காரணம் அன்றைய Lombard நிறுவனத்தில் சர்வதேச உரிமைகள் சார்ந்த பொறுப்பினில் இருந்த திருமதி விவியன் ரூஸி தான் ! பிராங்கபர்டில் எனது காவடிகள் சகலத்துக்கும் அன்போடு அனுசரணை காட்டி, நமக்கும் எட்டாக்கனியாகிப் போயிடாது ; அவரது நிறுவனத்துக்கும் நஷ்டமாகிப் போயிடா விதமாய் ஒரு ராயல்டியினை நிர்ணயம் செய்ய உதவி - பிரான்க்கோ பெல்ஜிய உலகினுள் அடியெடுத்து வைக்க வாயிலைத் திறந்து விட்டவர் அவரே ! "சரி, ஊருக்குப் போய் காண்டிராக்ட் அனுப்புகிறோம் " என்றவரை அத்தோடு விடாது - "இல்லீங்க மேடம் ...நானும் வரும் திங்களன்று பெல்ஜியம் வர்றேன் ! நீங்க சம்மதித்தால் உங்கள் அலுவலகத்திற்கே வந்து கான்டிராக்ட்டில் கையெழுத்துப் போட்டு விடுகிறேனே ?" என்ற போது அவர் சத்தம் போட்டுச் சிரிக்க ஆரம்பித்து விட்டார் !! நானோ பேந்தப் பேந்த முழித்த வண்ணமிருக்க - எண் கையைக் குலுக்கியபடியே - "See you in Brussels then" என்று கிளம்பினார் ! பின்னாட்களில் தான் தெரிய வந்தது - ஒவ்வொரு புத்தக விழாவின் முடிவிலும் ஒட்டு மொத்த சந்திப்புகளுக்கும் பதில் போட்டு, அவரவர் கோரிக்கைகள் மீதான தீர்மானங்கள் எடுக்கவே ஒரு மாதம் சுமாருக்கு பிடிக்குமென்று ! அப்புறமாய்த் தான் அவர்களது legal department போய் வந்து காண்டிராக்ட், கத்திரிக்காய் எல்லாமே தயார் ஆகிடுமாம் ! நானோ 'காது குத்தியாச்சு ; ஆனைகிட்டேயும் ஆசீர்வாதம் வாங்கியாச்சு ; கிடாவை வெட்டிப்புடலாமே ?" என்று மாக்கானாய்ப் பறந்து தொலைத்திருக்கிறேன் ! எனக்கோசரம் அவர்களது அலுவல்கள் சகலத்தையும் தாமதப்படுத்திவிட்டு , ப்ரஸ்ஸல்சில் நான் திங்களன்று அவர்களது பிரம்மாண்டமான ஆபீசிற்குச் சென்ற வேளையில் கான்டிராக்டைத் தயாராக வைத்திருந்தார் ! ஆயுசில் நான் கையெழுத்திட்ட முதல் ஒப்பந்தம் - கேப்டன் பிரின்ஸ் தொடருக்கும் ; "Cannonball Carmody " என்ற பெயரில் வெளியாகியதொரு oneshot கதைக்குமே ! ("அதிரடிவீரர் ஹெர்குலஸ் " என்ற பெயரில் வெளியான சாகசம் அது)

So இன்றைக்கு, இத்தனை காலம் கழிந்த பின்னே யாரேனுமொரு VIP-ஐ நான் சந்திப்பதாயின் - எனது தேர்வு திருமதி.விவியன் ரூஸியாகவே இருந்திடும் ! அவரது தற்போதைய நிலவரம் பற்றி எனக்கு ஏதும் தெரியாது தான் ; Lombard நிறுவனம் Dargaud நிறுவனத்தோடு இணைந்த பின்னே முற்றிலும் புது டீம் பொறுப்பிலிருக்கத் துவங்கியது ! So காலவோட்டத்தில் அப்படியே மறந்தும் போய்விட்டது ! இன்றைக்கு அவரை மீண்டும் சந்திக்க மட்டும் வாய்ப்புக் கிட்டின் - எனது வாழ்க்கைப்பயணத்திற்கு ஒரு வழிகாட்டியாய் நின்றமைக்கு அன்று சொல்ல மறந்த நன்றிகளை சொல்லிட முனைவேன் ! அதே போல, 'எந்த நம்பிக்கையில் ஒன்றரையணா பெருமானமில்லா ஒரு சுள்ளானை நம்பி உங்கள் நேரங்களை அத்தனை செலவிட்டீர்களோ ?' என்ற கேள்வியும் கேட்க என்னுள் நிச்சயம் ஆர்வமிருக்கும் !

Yes of course - அவர் தவிர்த்து Dupuis நிறுவனத்தின் அன்பு ; Dargaud நிறுவனத்தின் ஆதரவு ; Fleetway-ன் பரிவு என என்னை அன்று தூக்கி நிறுத்திய விஷயங்கள் ஏராளம் தான் ! ஆனால் என்றென்றும் என்னுள்ளே திருமதி ரூசிக்கொரு உச்ச இடமிருக்கும் !! Maybe அன்றைக்கு அவருமே நம்மை நிராகரித்திருக்கும் பட்சத்தில், ரொம்பவே துவண்டு போயிருப்பேனோ - என்னவோ ; தெரியாது ! பறக்க உத்வேகம் தந்தது மாத்திரமன்றி, கனவு காண்பதில் தவறுமில்லை எனப் புரியச் செய்தவரும் அவரே எனும் விதத்தில் நான் சந்திக்க விரும்பும் VIP-யாக அவரே இடம் பிடித்திடுவார் !! ரைட்டு...எதைப் பேச ஆரம்பித்தாலும் அதைக் காலட்சேபம் ரேஞ்சுக்கு இழுக்கும் பாணி லேசுக்குள் விட்டுப் போகாதென்பது புரிகிறது ! இதற்கு மேல் இழுத்தால் ஸ்டீல் கவிதைத் தொகுப்புக்குப் போட்டியாகி விடுமென்பதால் நடையைக் கட்டுகிறேன் ! Bye all !! See you around !!
பி.கு; அவரவர் சந்திக்கவிரும்பும் VIP பற்றியும் இங்கே பகிரலாமே ? Work from Home என்றில்லாத வெட்டி ஆபீசர்கள் நாமெல்லாம் இந்நேரத்துக்கு பாத்திரங்களைக் கழுவித் தந்து, வீட்டையெல்லாம் பெருக்கி முடித்திருப்போம் தானே ?  

* நீங்கள் விடிய விடிய பேசிட விரும்பும் நபர் யார்? (பேச்சு மட்டுமே!)

NEXT பதிவினில்...! 

Tuesday, April 07, 2020

ஒரு நள்ளிரவுத் தீர்ப்பு !

நண்பர்களே,

வணக்கம். கொரோனா வைரசுக்குத் தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க முனையும் ஆய்வாளர்கள் கூட இத்தனை பரபரப்பாய் பணியாற்றிட வாய்ப்பில்லை என்பேன் ! இரு வேறு கண்டங்களில் அமர்ந்திருந்தாலும், விடிகாலையில் காத்திருக்கக்கூடிய  பெரும் கண்டத்திலிருந்து நம்மையெல்லாம் காத்திடும் பொருட்டு ஜட்ஜார்கள் அவதி அவதியாய்த் தங்களின் தீர்ப்பினை அனுப்பியுள்ளமைக்கு இந்த காமிக்ஸ் சமுதாயமே கடமைப்பட்டுள்ளது என்பேன் ! கும்புட்டுகிறோம்ங்கண்ணா !!

முதன்முறையாக 2 ஜட்ஜ் கொண்ட பெஞ்ச் தீர்ப்பில் ஒரு split verdict ; அதாவது ஒன்றுக்கொன்று மாறுபட்ட தீர்ப்பு ! ஆகையால் மேற்முறையீட்டுக்கு அந்த இரும்பு மனுஷன் கவிதையாலேயே பெட்டிஷன் போட முனையும் முன்பாகவே வழக்குக்குத் தீர்ப்புச் சொல்லி, தள்ளுபடியும் செய்யவிருக்கிறேன் !! 
------------------------------------------------------------------------------------------------------------

இதோ - டெக்சாஸ்காரவுகளின் தீர்ப்பு :

நண்பர் பிளைசி பாபு அனுப்பிய கீழ் கண்ட கவிதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சந்தா பரிசுக்குரிய கவிதையாக இதைக் கருதுகிறேன்.

அமைதியாய் இரு ; ஆகக்கூடியது அதுவே!
இல்லத்தில் இரு; ஈனமாய் வதந்தி பரப்பாதே!
உறவுகளோடு பேசு; ஊர் சுற்றாதே!
எண்ணம் போல் புசி; ஏழைக்கும் கொடு!
ஐயமின்றி நம்பு;தூய்மையே நன்மை என!
ஒன்றுபட்டு ஓய்வெடு;ஔடதம் அறியும் வரை!

ஸ்டீல் க்ளா அடித்த லூட்டிகளுக்காக என்னுடைய அன்புப் பரிசாக அவருக்கு ஆகஸ்ட் சிறப்பிதழ்களை நான் வழங்கி விடுகிறேன்.

வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றிகள் சார்.


Thanks,
Mahendran 
------------------------------------------------------------------------------------------------------------

And இது பாரிஸ்காரவுகளின் தீர்ப்பு :

எடிட்டர் சார்,

இரண்டு பதிவில் உள்ள அனைத்து கவிதை (?)களையும் படித்தப் பிறகு கம்பெனி ரூல்ஸ்சை மீறாமல் இருந்த கவிதைகளில் எனக்குப் பிடித்தது. (மகிஜி  Blizybabu கவிதையை தேர்ந்தெடுத்தாகச்  சொன்னார்)

நான் தேர்ந்தெடுத்தது இதுதான் :


KiD ஆர்டின் KannaN

செவ்வாயில் நீருண்டா
கண்டுவர சூத்திரம் சொன்னாய்..
ஒற்றை நொடியில் ஊரை அழிக்க ஓராயிரம் ஆயுதங் கண்டாய்..
அணுவைப்பிளந்து ஆயுதங்கொண்டு பகைமிரட்டும் பலங் கண்டாய்..
கண்ணுக்குத் தெரியாத கிருமியொன்று உன்னைப்பார்த்து எள்ளி நகையாடுகிறது இன்று..
இனியாவது உணர்வாயா எது முக்கியமென்று..


இரண்டில் ஒன்றை நீங்கள் முடிவு செய்யுங்கள்.

இரண்டாவதாக தேர்வானதற்கு எனது சார்பில் நீங்கள் அறிவித்த அதே பரிசை கொடுக்க விரும்புகிறேன் !

அன்புடன்
ராட்ஜா
------------------------------------------------------------------------------------------------------------

ஆக 2 நாட்களின் அதகளத்துக்கு ஒரு வழியாய் விடை கண்டு விட்டோம் ! ஜட்ஜ்களின் தீர்ப்புகளில் எது உசத்தி ; எது குறைச்சல் என்ற தேடலைச் செய்திடும் அவசியத்தை எனக்கு வைக்காது - அறிவிக்கப்பட்ட அதே பரிசினை ராட்ஜா இரண்டாவதாய்த் தேர்வாகும் கவிதைக்கும் (!!) வழங்க முன்வந்திருப்பதால் - அதே பெருந்தன்மையோடு 2 கவிதைகளையும் joint winners என்று தீர்மானிக்கிறேன் ! Of course இது சட்டப் புத்தகங்களை புரட்ட வேண்டியதொரு தருணமாயிருப்பின், எனது இந்தத் தீர்மானத்தினில் நெருடல்கள் இருக்கலாம் ! ஆனால் இதுவோ ரசனைசார் விஷயமெனும்  போது "JOINT WINNERS " என்பதே இந்த கேசமில்லா நாட்டாமையின் தீர்ப்பு !!  ஆக Blizybabu & Kid ஆர்டின் Kannan நமது சபையின் அதிகாரப்பூர்வப் புலவர்களாய்த் தேர்வு செய்யப்படுகிறார்கள் !!

And மகிஜியின் தயாளத்தின் உபயத்தில் இங்கே உருண்டு, புரண்டு ரணகளம் செய்த ஸ்டீலுக்கும் ஒரு அங்கீகாரம் கிடைக்கிறது ; இனிமேல் அவர் "கவிஞர் பாணபத்திரர்" என்று அன்போடு அறியப்படுவராக !!

அப்புறம் வரும் காலங்களில் ஜட்ஜ் பொறுப்பேற்க வருவோரின் காதுகளுக்கு மாத்திரமன்றி, பாக்கெட்டுகளுக்கும் சேதாரம் இருக்கும் போலத் தெரிகிறது - இதுவரைக்குமான 2 + 2 ஜட்ஜ்களின் தயாள முன்னுதாரணங்களைக் கொண்டு பார்க்கும் போது !! Thanks a ton all !! எது எப்படியோ - கேப்ஷன் போட்டியின் புண்ணியத்திலும், இந்தக் 'கவித' போட்டியின் புண்ணியத்திலும், சில நாட்களேனும்  குறைவான இறுக்கத்தோடு நமக்கு கழிந்திருப்பின் - awesome !! உற்சாகப் பங்கேற்ற நண்பர்கள் அனைவருக்கும் ஒரு பெரிய டாங் யூ !!

ரைட்டு...பஞ்சாயத்து இத்தோடு முற்றுப் பெறுகிறது ! 2 நாட்களாய் நான் கொத்துக் கொத்தாய்ப் பிய்த்துக் கொண்ட கேச இழைகளை மறுக்க ஓட்ட ஏதாச்சும் பெவிக்காலோ ; எர்வாமாட்டினோ கிடைக்குதா ? என்று கண்டறிய Zaroff அண்ணாச்சிக்கு போன் அடித்த கையோடு அமேசானுக்குப் புறப்படுகிறேன் ! அடுத்த ஆறு மாசம் கழிச்சு வரேனுங்கோ ! இப்போதைக்கு டாட்டா....பை..பை...காலையிலே காத்திருக்கும் கச்சேரிக்கு இப்போதே முன்வரிசையில் இடம் போட்றவங்கோ போட்டுக்கலாம் ! 

P.S : அடுத்த ஞாயிறு ஆடலோடு - பாடல் போட்டி !! ரெடியாகிக்கோங்க !! கைலாஸாவிலேர்ந்தாச்சும் போட்டியை நடத்திப்புடுவேன் ! அமேசானிலேர்ந்து பக்கம் தானாம் !

Sunday, April 05, 2020

கடல் கடந்த காதுகள் !

நண்பர்களே,

வணக்கம். சாயந்திரமாய் சேனலுக்கு சேனல் குதித்து, மொக்கையோ ; மத்திமமோ - கண்ணில்பட்ட அத்தனை படங்களையும் கொஞ்சமாய் பார்த்த கையோடு, வீதியெங்கும் விரவிக் கிடந்த இருளின் மத்தியில்  'டொம்மு...டொம்மு' என்று போட்டுத் தாக்கிய வாணவேடிக்கைகளைப் பார்த்து லைட்டாய் மண்டையைச் சொரிந்தபடியே இங்கு ஆஜரானால் பின்னூட்ட எண்ணிக்கை 341 !! ஆத்தாடியோவ்...இத்தினி புலமையை இத்தினி நாளாய் உள்ளுக்குள் அடக்கிக் கிடந்ததொரு கூட்டத்தை தமிழ் பேசும் தரணி கண்டுக்காமல் விட்டு விட்டதே என்ற ஆதங்கத்தோடு உள்ளுக்குள் புகுந்தால், நம்ம செந்தூர் கவிஞர் களமிறங்கத் தயாராக இருப்பது கண்ணில்பட்டது ! இனியும் தாமதித்தால் தீர்ந்தோம்டா சாமி !! என்ற புரிதலோடு போட்டியினில் வெற்றி கண்டோரைத் தீர்மானிக்கும் ஜட்ஜ்களை அறிவிக்கலாமென்ற அவசரத்தில் ஆஜராகியுள்ளேன் !

இம்முறையும் ஜட்ஜ்கள் இருவரே ! இருவருக்குமே காதுகள் கொஞ்சம் தாட்டியம் தான் ! And இருவருமே கடல்கடந்தோரே ! Welcome to the stage - Radja from  பாரிஸ் & மகேந்திரன் பரமசிவம் from டெக்சாஸ் ! இதோ இந்த உப பதிவினில் "100" எனும் பின்னூட்ட எண்ணிக்கையை cut-off ஆகக் கருதி, மொத்தமான பின்னூட்டங்களுள், பட்டையைக் கிளப்பிய கவிதையைத் தேர்வு செய்திட நேரங்களை ஒதுக்கிட சாத்தியப்படுமா - ப்ளீஸ் ? இரு தேசங்களிலுமே இன்னமும் பல வணிகத்துறைகள் இயங்கியே வருவதால், நீவிர் இருவருமே எங்களைப் போல வெட்டி ஆபீசர்கள் அல்ல என்பது தெரிகிறது ; but still - ஓரிரண்டு நாட்கள் எடுத்துக் கொண்டேனும் இந்தப் பொறுப்பினை நிறைவேற்றிட முயற்சியுங்களேன் சார்ஸ் ? (அது SARS இல்லீங்கோ !!)

அப்புறம் ஜட்ஜ்களை "கரீட்" பண்ண பள்ளிப்பாளைய சிக்கென்களையோ ; இன்ன பிற கிடா வெட்டுக்களையோ யாரேனும் கையில் எடுக்க முனைந்ததாய்க் காற்றுவாக்கில் சேதி கசிந்தால் கூட - அடுத்த 14 நாட்களுக்கு ஸ்டீலின் "கவிதை"களுக்குப் பொழிப்புரை எழுதும் blog quarantine காத்துள்ளது என்பதை இங்கே கொசுறுச் செய்தியாக்கிய கையோடு கிளம்புகிறேன் ! Bye புலவர்ஸ்  ! See you around ! Stay Safe !!

பி.கு. அடுத்த வாரயிறுதியில் கவிதைகளை பாடலாகப் பாடும் போட்டி அரங்கேறிடும் வாய்ப்புகள் பிரகாசம் ! So கானக் குரலோன்கள் இப்போவே சுக்கு..மிளகு..திப்பிலி...எல்லாம் வாங்கி வைத்து தொண்டைகளைத் தயார்படுத்திக்கலாமோ ? 

விரல் போன போக்கிலே...பதிவு போகலாமா ..?

நண்பர்களே,

வணக்கம். ஜிலோவென்று வீசும் காற்றானது சும்மா இருக்கும் காத்தாடிகளை விசையோடு சுற்றி வரச் செய்யும் போது மின்சாரம் உருவாவதை நாகர்கோவில் ; கன்னியாகுமரி பக்கம் பார்த்திருப்போம் !  G.D நாயுடுவின் சிஷ்யர் எவரேனும், கொஞ்சமே கொஞ்சமாய் மெனெக்கெட்டு, வீட்டுக்கு வீடு நாம் தற்சமயமாய் விட்டுத் தள்ளிக் கொண்டிருக்கும் குறட்டைகளையும், இன்ன பிற ஓசைகளையும் மின்சாரமாக்கிடவொரு வழி மட்டும் கண்டுபிடித்திடும் பட்சத்தில், அடுத்த நூறாண்டுகளுக்கு இங்கே மின்சாரத் தட்டுப்பாடென்ற பேச்சுக்கே இடமிராது என்பேன் ! அதுவும் மொச்சைப் பயிற்றுக் குழம்புகளும் ; தட்டான்பயிற்றுக் குழம்புகளும் சமைக்கப்படும் இல்லங்களுக்கு அருகாமையிலேயே மின்சாரத்தைத் தேக்கிப் பிடிக்கவொரு grid போட வேண்டிவந்தாலும் ஆச்சர்யப்பட மாட்டேன் ! ஷப்பா ...!! சோம்பிக்கிடப்பது தான் எத்தனை சிக்கலான சமாச்சாரம் ?! Anyways, 'இதுவும் கடந்து போகும்' என்று சொல்லிக் கொண்டே நாட்களை கடத்துவோம் - எல்லாம் நலமாகிடும் தருணத்தில் இருமடங்கு வீரியத்துடன் பணியாற்றுவோமென்ற உறுதியோடு ! 

ரைட்டு... ஒரு வாடகை சைக்கிளை எடுத்துக் கொண்டு 34 வருடங்களுக்கு பின்னே பயணம் போய், போன வாரத்தை ஒப்பேற்றியாச்சு ! இந்த வாரம் எதைப் பற்றி எழுதுவதென்று மண்டையைச் சொரிந்து கொண்டிருக்கிறேன் ! சீனியர் எடிட்டரோ, பீரோவுக்குள் அடைந்து கிடந்த அந்நாட்களது சில பல பிராங்கபர்ட் கடுதாசிகளைத் தூசி தட்டி எடுத்து எனக்கு அனுப்பி - 'இதைப் போடு ; அதைப் போடு !' என்ற suggestions சகிதம் அனுப்பியிருந்தார் ! சும்மா சும்மா அதே ரம்பத்தைப் போடுவதன் பலனாய் என் காதிலேயே தக்காளிச் சட்னி வழிந்தோடும் நிலையில், உங்களையும் அதே இம்சைக்கு ஆளாக்க மனசில்லை ! So அந்த மார்க்கம் நஹி இப்போதைக்காவது ! ஏப்ரலின் இதழ்களைப் பற்றி வழக்கம் போல முன்னோட்டம் ; பின்னோட்டம் ; சைடோட்டம் என்று எழுதுவோமா ? என்று யோசித்தால் மனம் ஒப்பவில்லை ! 'இறுக்கமே அன்றாடம்' என்றாகிப் போயிருக்கும் நிலையில், சும்மா ஜாலியாய், லைட்டாய் போடக்கூடிய மொக்கைகளே இன்றைய பொழுதிற்கு சுகப்படும் என்றுபட்டது ! So இஷ்டத்துக்கு விரல் போகும் unplugged பதிவிது guys !  

நெட்டுக்குள் புகுந்தால், இந்த ஊரடங்கின் போது படிக்க உருப்படியான டாப் நாவல்கள் ; டாப் இலக்கிய படைப்புகள் இத்யாதி என்ற பட்டியல்களாய்க் கண்ணில் பட்டன ! (நம்ம கண் இருக்கும் சைசில் ஏதும் தப்பாது தான் !!) இந்தச் சமாச்சாரங்களைப் படிக்க நமக்கு பொறுமை லேது எனும் போது, வேறொரு சிந்தனை தோன்றியது !! சும்மா கட்டையைக் கிடத்திக் கொண்டு  'பஜ்ஜி கிடைக்குமா ? பிரெட் ஆம்லெட் கிடைக்குமா ?' என்று ஆத்துக்காரியின் உசிரை வாங்கும் தருணங்களுக்கு மத்தியில் கண்ணுக்குச் சிக்கும் புது காமிக்ஸ்களையெல்லாம் வாசித்தாலென்னவென்று தோன்றியது ! அந்த வாசிப்பில் சிக்கிய சில சமாச்சாரங்கள் காத்திருக்கும் காலங்களில் நமக்கு செமையாய் உபயோகப்படக்கூடும் என்பதில் ஐயமில்லை எனக்கு ! அவை எல்லாமே  2021-லேயே களம் காணுமா ? என்பதை இந்த நொடியில் அறுதியிட்டுச் சொல்லத் தெரியவில்லை எனக்கு ! இப்படி வைத்துக் கொள்வோமே - நடப்பாண்டின் அட்டவணையின் இதழ்களை நடப்பாண்டிலேயே பூர்த்தி செய்யும் யோகத்தை பெரும் தேவன் அருளினால், நான் தற்போதைக்குக் கும்மியடித்து வரும் இந்தப் புதுச் சரக்கானது  2021-ல் தமிழ் கரையோரங்களில் நிச்சயமாய் ஒதுங்கிடும் !

வாசிப்பு 1:

செக்கு மாட்டை எங்கே அவிழ்த்து விட்டாலும் அது அந்த வட்டத்தை நாடியே வருமாம் ; அதே கதை தான் இங்கேயும்  ! 'வித்தியாசமாய்த் தேடணும்டோய் !' என்று முனைப்பாய்த் தேடி,  உருட்டித் திரிந்தால், சித்தே நேரத்தில் அந்த கௌபாய் உலகுக்குள்ளேயே என்னையும் அறியாது ஐக்கியமாகி நிற்பதே நிகழ்கிறது ! ஆனால் இம்முறையோ சின்ன மாற்றம் !! இதுவரையிலும் நான் புகுந்து குடைந்து வந்துள்ள சாகசங்கள் அனைத்துமே one shots !! And அவை சகலமுமே 90 to 130 பக்கங்களுக்குள்ளான கதைகள் ! So ஒரு அதிகாரியையோ ; பிகிலூதும் கண்ணனையோ ; சத்தமின்றி சங்கறுப்பவரையோ தேடாதும் கௌபாய் உலகுக்குள் உலாற்றுவதில் உங்களுக்கு  no ஆட்சேபணை எனும் பட்சத்தில், குறைந்த பட்சம் அரை டஜன் டிக்குகள் போட்டு விடுவேன் எனது கதைக்குறிப்பு டைரியில் !!

அதிலொன்று முழுக்க முழுக்க கௌகேர்ள்களுடன் தடதடக்கும் ஆல்பம் ! மா டால்டன் & கலாமிட்டி ஜேனைத் தாண்டி இதுவரைக்கும் வன்மேற்கில் நாம் dominant பொம்மனாட்டிகளை அவ்வளவாய்ப் பார்த்ததாய் எனக்கு நினைவில்லை ! இந்த ஆல்பத்தை நாம் தேர்வு செய்திடும் பட்சம் பூரிக்கட்டைகளை ஏந்தும் கரங்கள், பிஸ்டல்களையும் பிடிக்கும் லாவகத்தை ரசிக்கலாம் ! இன்னொரு ஆல்பமோ ஆரம்பிக்கும் போதே ஈரக்குலையை நடுங்கச் செய்கிறது - தெறிக்கும் வன்முறையோடு ! இந்தப் பக்கம் 2 குதிரைகள் ; அந்தப் பக்கம் 2 குதிரைகள் ....அவற்றின் நடுவே கைகளும், கால்களும் ஒவ்வொரு குதிரையோடு கட்டப்பட்டுக் கிடக்கும் வெள்ளையன் ! நொடிப்பொழுதில் குதிரைகளில் குந்தியிருக்கும் செவ்விந்தியர்கள் வெவ்வேறு திசைகளில் குதிரைகளை விரட்ட, அந்த ஆசாமி கண நேரத்தில் அக்கக்காய் பிய்ந்து விழுகிறான்பாலைவன மண்ணில் ! தொடரும் பக்கங்களில், "Wild West" என்ற பெயருக்குத் துளி கூட வஞ்சகம் செய்திடா விதத்தில் கதை காட்டுத்தனமாய்ப் பறக்கிறது ! Maybe இது தான் அந்நாட்களின் நிஜ முகமோ - என்னவோ ; இதனைப் படிக்க நமக்கு நிச்சயம் 'தில்' தேவை ! மூன்றாவதான தொடரோ, வன்மேற்கின் நிஜ மனிதர்களைக் கொண்டு மிக மெலிதான கற்பனைக் கலவையோடு உருவாகியுள்ள தொடர் ! இதுவரைக்கும் ஆங்காங்கே நம் (கடிபடா) காதுகளில் விழுந்திருக்கக்கூடிய பெயர்களுக்குரியவர்கள் அனைவரையுமே நிஜத்தில் சந்திக்கவொரு வாய்ப்பு இது ! What say folks ? கீழ்க்கண்ட மூன்றுள் நீங்கள் டிக் அடிப்பதாயின் எவற்றை விலக்குவீர்களோ ?

* முழுக்க கௌகேர்ள் ?
* தெறிக்கும் violence ?
* வன்மேற்கின் நிஜ மனிதர்கள் ?

வாசிப்பு 2 :

கையில் / கண்ணில் சிக்கிய அடுத்த தொகுப்போ - துணிகளோடு தீரா பகை கொண்டிருக்கும் AXA அம்மணியின் SAGA 1 !   முன்னே இருக்கும் கிளாஸை உறுத்துப் பார்த்தபடிக்கே - டீயைக் குடிப்பதா ? வாணாமா ? என்ற ரோசனையில் மூழ்கிக் கிடக்கும் செந்திலைப் போல, இவரது தொடரில் ஏற்கனவே ஒரு கதையை வாங்கி, கையில் வைத்துக் கொண்டு, நான் ரோசித்துக் கொண்டிருக்க, இந்த 196 பக்க ஆக்ஷன் அதிரடி ஆல்பமானது ரொம்பவே குழப்பி விட்டுள்ளது ! மாடஸ்டியின் பெரும்பான்மை சாகசங்களுக்குச் சித்திரம் போட்ட Enric Badia Romero-வின் கைவண்ணம் இங்கும் அட்டகாசம் செய்கிறது ! 'பச்சக் பச்சக்கென்று' மேலாடையைக் கிழித்துக் கொள்வதில் சல்மான் கானுக்கும், ஆக்ஷன் கிங் அர்ஜூனுக்கும் செம tough தர இந்த பாப்பா தயார் என்பது தெரிந்த விஷயமே !  ஒரு நல்ல டெய்லராய் ஏற்பாடு செய்துவிட்டு, AXA-வை நமது சந்தா D தடத்தில் ஓட்டமெடுக்க வைக்கலாமா ? (இதற்கென நம் நண்பர்களுள் ஒருவர் ஏற்கனவே ஆர்வமும் தெரிவித்து கொஞ்சமாய் மாதிரிகளும் அனுப்பியிருந்தார் - தனது கலைநய டெய்லரிங் திறனுக்கு சாட்சியாக) அல்லது இது நமக்கு சரிப்படாத விஷயமாக பார்த்திடுவீர்களா ? இதனை ராணி காமிக்சில் எவ்விதம் கையாண்டார்கள் என்று எனக்குத் தெரியவில்லை ; but நம்மளவில் இதனில் பணி செய்வதாயின் how to go about it என்பதில் லைட்டாய்க் குழப்பம் ! 'பட்'டென்று பதில் ப்ளீஸ் !

வாசிப்பு 3 :

படித்த / படம் பார்த்த அடுத்த அல்பமோ ஹிந்தியில் அமீர்கான் நடிப்பில் வெளியான PK போன்றதொன்று ! வெளிகிரஹத்திலிருந்து வரும் ஜீவனொன்று இங்குள்ள ஒரு சாமான்ய மனுஷனுடன் நட்பாகிப் போகிறது ! அடிக்கடி வந்து போகும் அந்த வேற்றுலகவாசிக்கு நம் லோகத்தின் கோமாளித்தனங்களை பார்க்கும் போது வியப்போ-வியப்பு ! வாழ்க்கையின் யதார்த்தங்களைக் கதாசிரியர் ஒரு வேறுபட்ட பார்வையில் பார்த்திட முனையும் இந்த முயற்சிக்கு, செம different சித்திர அமைப்பு ! If at all இதுவும் நம் வாசிப்புகளின் அங்கமாகிடுவதில் தப்பில்லை என்று நீங்கள் நினைத்தால், நான் ரெடி !!

வாசிப்பு 4 :

அப்புறம் ஜில் ஜோர்டன் பணியிலானதொரு டிடெக்டிவ் ! கொஞ்சம் ஹியூமர் ; நிறைய ஆக்ஷன் என்று பயணிக்கும் இந்த டிடெக்டிவின் கதைகளில் ஜில்லாரின் அளவுக்கு சுலபத்தனம் கிடையாது ! இந்தப் புது டிடெக்டிவ் கையாள நேரிடும் கேஸ்கள் அனைத்துமே ஜில் ஜோர்டனின் பணிகளை விடவும் சற்றே கூடுதலான லெவல் ! கடும் டிடெக்டிவ் வறட்சிக்கு மத்தியில் இருக்கும் நமக்கு இவர் சுகப்படுவாரா ? அல்லது out & out ஆக்ஷன் நாயகராய் இருக்கா எந்த ஆசாமியையும் நாம் டீ வாங்கி வரக்கூடப் பயன்படுத்த மாட்டோம் என்பீர்களா guys ? I repeat - இவர் சற்றே சீரியஸான ஜில்லார் எனலாம் ; நிச்சயமாய் CID ராபினோ ; ஜேம்ஸ் பாண்டோ கிடையாது ! ஓ.கே. எனும் பட்சத்தில் இவரது தொடரில் கணிசமாகவே கதைகள் உள்ளன ; அடுத்த 10 வருஷங்களுக்கேனும் இவரோடு குப்பை கொட்டலாம் ! What say ?

வாசிப்பு 5 :

முன்னெப்போதோ இது பற்றிப் பேசியுள்ளது நினைவிருக்கிறது தான் ; ஆனால் நமது ரசனைகள் என்பது தினப்படிக்கான  கொரோனா எண்ணிகையினைப் போல முன்னேறிக் கொண்டேயிருக்கும் ஒரு  fluid சமாச்சாரமாச்சே ?! So 'அது நேற்றைக்கு ; இது இன்றைக்கு !' என்று நீங்கள் சொல்லிடும் வாய்ப்புகள் இருந்திடக்கூடுமென்ற நம்பிக்கையில் இந்தக் கேள்வியினை மறுக்கா முன்வைக்கிறேன் ! ZOMBIE !!! மிருதன் ! ("லட்சுமி மேனன்" என்ற பெயரையும் சேர்த்து உச்சரித்தால் சிலபல "வாலிப" உள்ளங்களில், ஒரு ரசாயன மாற்றத்துடன், பிரகாச ஒளியுடன் கூடிய நினைவுகூர்தல் நிகழும் என்று நினைக்கிறேன் !!) செத்தும் , அதே உடலில் பிசாசாய் , காட்டேரியாய் வாழ்ந்திடும் இந்த திகில் பார்ட்டிக்களைக் கொண்டு தெறிக்கும் artwork கொண்டொரு நூற்றிச் சில்லரைப் பக்க ஆல்பம் மறுக்கா என் கண்ணில் பட்டது ! அந்த சித்திரங்களும், வர்ணக்கலவைகளும் வேறொரு லெவல் ! இந்தக் கதை பாணியினை நமது கிராபிக் நாவல் தடத்தில் பரிசீலிக்க நீங்கள் தயாரெனில் அடியேனும் ரெடி ! 'ஐயே...வேணாமே இந்தக் கண்றாவி !' என்று நீங்கள் ஓட்டமெடுப்பதாயின், மிருதன்களை அன்னம், தண்ணீரின்றி நமது நெடுஞ்சாலைகளில் நடக்க விட்டு விடலாம் ! இளைப்பாற இடம் தரலாமா ? இல்லாங்காட்டி நடராஜாவா ? Thoughts please ?

இந்த புத்தம்புது வாசிப்புப் படலங்களினூடே வீட்டில் கிடந்த நமது இதழ்களுள் ஒன்றிரண்டைப் புரட்டவும் அவகாசம் கிடைத்தது ! அவற்றுள் ஒன்று சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்னே வெளியான "மில்லெனியம் சூப்பர் ஸ்பெஷல்" ! Maybe இதனை ஏதேனுமொரு பதிவில் ஏற்கனவே review செய்திருக்கலாம் தான் ; ஆனால் அது சார்ந்த ஞாபகமோ ; இந்த இதழ் குறித்து பெரிதாய் நினைவுகளோ இல்லாத நிலையினில், புக்கைப் புரட்டும் போது ரொம்பவே சுவாரஸ்யம் எழுந்தது என்னுள் !! உங்களில் எத்தனை பேரிடம் இந்த இதழ் இன்னமும் உள்ளதென்றறிய ஒரு சிறு ஆவல் !! அடுத்த பதிவினில் இந்த இதழையும், வீட்டில் கிடந்த இன்னொரு ஸ்பெஷல் இதழையும் பற்றிய மலரும் நினைவுகளோடு ஆஜராகிடுவேன் !
Before I sign out, ஒரு குட்டியான விஷயம் ! போன வாரம் SMURFS படைப்பாளிகளிடமிருந்து வந்ததொரு மின்னஞ்சலைப் பார்த்த போது, அதனிலிருந்த சித்திரங்கள் கண்ணையும், கருத்தையும் கவர்ந்தன ! And ஏற்கனவே நான் எச்சரித்திருந்த அந்த விஷயம் அந்த நொடியில் நிகழ்ந்தே விட்டது ; Oh yes ...எந்த நொடியும் பீறிட்டுப் புறப்படக்கூடிய கவிஞர் முத்துவிஜயனாரின் "கவிதை வெறி" அதற்கு மேலும்  கூடைக்குள் அடைந்து கிடக்க மறுத்தே விட்டது !  

மதியமே ஒரு மினி கவிதையுடன் (!!) அந்தச் சித்திரங்களை நமது FB பக்கத்தில் பதிவாக்கினேன் ! இப்போது விஷயம் அது தொடர்பானதே :

### கேப்ஷன் எழுதிய களைப்பு தீரும் முன்பாய், உங்களுக்குள் துடித்துக் கொண்டிருக்கும் மதன் கார்க்கிக்களையும், தாமரைகளையும் வெளியே உலவச் செய்ய இதுவொரு சந்தர்ப்பம் !

### ஆறே வரிகளுக்கு மிகுந்திடாது இன்றைய சூழலுக்கு ஏற்ற விதமான 'கவித' சொல்லும் போட்டியிது - உங்களுக்கு !

### எவ்விதத்திலும் , யாரையும் புண்படுத்திடா கவனத்துடன், தற்போதைய நிலவரத்தினைத் தழுவிடும் பாடல்களோடு புலவர்கள் களமிறங்கலாம் !

### இயன்றால் நமது காமிக்ஸ் நாயக / நாயகியரையும் உங்கள் கவிதைகளில் தொட்டுக்கொள்ளலாம் !

### மண்டபத்தில் யாரேனும் எழுதித் தரும் பாடல்களையோ  ; நெட்டிலிருந்து சுடச் சுடச் சுட்ட பாடல்களையோ  நமது பாணபத்திரஓணாண்டிகள் கொணர மாட்டார்கள் என்ற நம்பிக்கையோடு இந்தப் போட்டி ஆரம்பிக்கிறது !

### இந்தப் போட்டியில் ஒரேயொரு விதிமுறை மாத்திரமே உண்டு : and அது திருச்செந்தூரில் உறையும் வாசகர்கட்கு மாத்திரமே பொருந்தும் : அந்தப் பெருந்தகையினர் உச்ச வரம்பாய் 2 கவிதைகளோடு நிறுத்திக் கொண்டாக வேண்டும் ! அதற்கு மேலெனில் பூமியும், நடுவர்களும் தாக்குப் பிடிப்பது சந்தேகமே !

### And தற்போதைய வழக்கப்படி, செழுமையான காதுகளுடனான 2 ஜட்ஜ்களை நானே தேர்வு செய்து அறிவிப்பேன் - கதவை இறுக்கமாய்த் தாழிட்ட பிற்பாடு ! எங்கேயும் தப்பியோட வழியின்றி, தம் கடைசி ஆசைகளை எங்கேனும் பதிவிட்ட பிற்பாடு, கவிதைகளை ரசித்து ; ருசித்து ; தீர்ப்பைச் சொல்வார்கள் அந்த ஜட்ஜார்கள் !

### வெற்றி பெறும் புலவருக்கு பொன்முடிப்போ ; காணி நிலமோ கிடையாது ; மாறாக ஒரு ஏப்ரல் to டிசம்பர் 2020 சந்தா நம் அன்புடன் உண்டு ! அதனை தாமே பயன்படுத்திக் கொள்ளவும் செய்யலாம் ; யாருக்கேனும் அன்பளிப்பாக்கிடவும் செய்யலாம் ; முன்னெடுத்துச் செல்லவும் செய்யலாம் ! So get cracking please - புலவர்ஸ் !

Bye all ; have a safe sunday !! See you around !

Saturday, April 04, 2020

ஜெய் ஜம்போ !!

நண்பர்களே,

வணக்கம். இன்று காலை கண்விழித்த போது கண்ணில்பட்ட மின்னஞ்சல் நமது ஜட்ஜ்களின் தாக்கீதே !! புண்ணியத்துக்கு அதன் "மொழிபெயர்க்கப்பட்ட' படிவம் எனக்கு அனுப்பப்பட்டுள்ளதால் நானும், நீங்களும் தப்பித்தோம் ! Anyways - இரட்டை பெஞ்சின் தீர்ப்பு இதோ : 
========================================================================

Dear Vijayan sir,



நானும் ஸ்டீலும் சேர்த்து சிறந்த caption ஆக இந்த மூன்று நண்பர்கள் எழுதியதை தேர்வு செய்துள்ளோம்.



படம்1:  

Puthagapriyan0

B & C. டேய் டைலன் ஓடாத நில்லு நில்லு!!!

A. (ஓடியவாறே) அடேய் கரோனா மண்டையனுங்களா,  நம்ம கவர்மெண்ட் ரூல்ஸ் படி social distancing ஒரு மீட்டர் மெயின்டெய்ன் பண்ணிகிட்டே தொரத்துங்கடா... எஸ்கேப்...



படம்2:

saravanan

கேப்ஷன் இரண்டு;

டைகர்:ஏம்பா டெக்சு சாப்பிட ரவா உப்புமா வேணுமா ,கோதுமை உப்புமா வேணுமா?

டெக்ஸ்; ஹூம்...போற உயிர் கொரானாவாலே போகட்டும்!!



படம்3: 

இவர் எழுதிய இந்த மூன்றும்  ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று போட்டி போடுவதாக இருந்தது! 



Partheeban

A.ஆனாலும் இந்த எடிக்கு ரொம்ப தான் குசும்பு..

B.ஏன் நண்பா?

A.நான் பேசற டயலாக்குக்கு மட்டும் "A" போட்டு ரவுண்ட் பண்ணிருக்கார் பாரேன்.



A.நாம இருக்கறது எமனின் எல்லையிலா டெக்ஸ்?

B.எமனே எல்லைய தாண்டி வந்து பஞ்சராக்குனதுக்கப்புறம் இந்த பஞ்ச்செல்லாம் தேவைதானா



A.கொரோனாவுல இருந்து தப்பிக்க மக்களுக்கு அழகா ஒரே ஒரு வாக்கியத்துல ஏதாவது சொல்லு நண்பா

B.கரம் சிரம் புறம் நீட்டாதே


SPECIAL PRIZE CATEGORY:

எனக்கு இந்த இரண்டும் பிடித்து இருந்தது, ஆனால் பரிசு மூன்று பேருக்கு மட்டும்தான் என்பதால் இவர்கள் இருவருக்கும் தலா ஒரு  ஜம்போ சந்தா எனது சார்பில் பரிசு அளிக்க விரும்புகிறேன்! 



Govindaraj Perumal

படம்2:  

டைகர் : நலந்தானா? நலந்தானா? உடலும் உள்ளமும் நலந்தானா.?

டெக்ஸ் :உனக்கென்னப்பா வருஷத்துக்கு ஒரு வாட்டிதான் தலையைக் காட்டுவே.என் கதை அப்படியா? நான் மாச மாசம் வந்தேதான் ஆகணும்.அதான் திக் திக்னு இருக்கு.



Padmanaban.R



கேப்டன் :



டைகர் : டெக்ஸ். என்ன யோசிக்கிற.


டெக்ஸ் : கொரோனாவ பரவாம கட்டுப்படுத்த மாஸ்க் நிறையே வேணுமாம். நம்ம டயபாலிக்கோட கான்டாக்ட் நெம்பர கொடுக்கலாமான்னு யோசிக்கிறேன். அவருதான் நிமிசத்துல விதவிதமா மாஸ்க்கு ரெடி பண்ணிடுவாரே.

டைகர் : சூப்பரப்பு.



Thanks, Steel Claw & Parani from Bangalore

========================================================================

ஒரு வரலாற்றுச்சிறப்புமிக்க தீர்ப்பை (!!) வழங்கியதோடு நிறுத்திக் கொள்ளாது, மேற்கொண்டு பரிசுக்குரிய 2 தேர்வுகளையும் செய்துள்ளனர் நமது ஜட்ஜ் மக்கா !! அடுத்த சம்மருக்கு  ஆளுக்கொரு நொங்கு பதனி எக்ஸ்டரா லே !! 
And now - தேர்வு பெற்றிருக்கும் நண்பர்கள் தம் முகவரிகளை, செல் நம்பர்களை குறித்தொரு மின்னஞ்சலைத் தட்டி விட்டால் - ஜம்போவின் சீசன் 3 சந்தாப் பட்டியலில் இணைத்திட ஏதுவாயிருக்கும் ! Just in case இங்கே வெற்றி பெற்றுள்ள நண்பர்கள் ஏற்கனவே ஜம்போ சீசன் 3-க்கு சந்தா செலுத்தியிருப்பின், இந்தத் தொகையினை (ரூ.999) வேறெதெற்கேனும் முன்னெடுத்துச் சென்று கொள்ளலாம் ; அல்லது நண்பர்கள் வேறு யாருக்கேனும் சந்தா அன்பளிப்பாகவும் செய்திடலாம் ! அது குறித்தும் மின்னஞ்சலிலேயே கூட தகவல் சொன்னால் மதி !


And இதுவரையிலும் ஜம்போ சீசன் 3-ன் பயணத்திற்கும் சரி ; நடப்பாண்டின் ரெகுலர் சந்தாவிற்கும் சரி, enrol செய்திரா நண்பர்கள் இயலும் பட்சத்தில் இப்போது இணைந்திட முனைந்திடலாமே - ப்ளீஸ் ? ஏப்ரல் to டிசம்பர் 20 என ரெகுலர் சந்தாவில் புதிதாயொரு ஏற்பாடே செய்துள்ளோம் உங்கள் வசதிகளின் பொருட்டு ! http://lioncomics.in/2020-subscription/692-2019-abcde-tn.html


Bye guys....See you around ! Have a Safe weekend & more !! புதிய பதிவோடு ஞாயிறு காலை சந்திக்கிறேன் ! 

Monday, March 30, 2020

நாயகர் பேச நினைப்பதெல்லாம்.....!

நண்பர்களே,

வணக்கம். அத்தியாவசியப் பணிகளில் பிஸியானதொரு precious, சிறு அணி களத்திலிருக்க, அதனில் அல்லாத பெரும்பான்மை, வீட்டில் குந்தியபடியே WFH தவிர்த்த மற்ற நேரங்களில் tiktok & வாட்சப் ஆய்வுகளில் பூமியைத் தாங்கிப் பிடிப்பதில் ஒரே பிஸி என்பது புரிகிறது ! இடைப்பட்ட அவகாசங்களில், கறி காய் நறுக்கும் கலைகள் ; துடைப்பத்தின் மறு முனையோடு பரிச்சயமிருக்க, இப்போதோ சரியான முனையைப் பிடிக்கக் கற்றிடல் ; 'வசந்தகால நதிகளிலே' என்று உள்ளுக்குள் தலீவர் பட டியூனை இசைத்துக் கொண்டே வீட்டின் கூடங்களை mop செய்திட முனைதல் என்று ஆங்காங்கே புதுப் புதுக் கற்றல்களும் அரங்கேறுவது புரிகிறது !! Never too old to learn என்று சும்மாவா சொன்னார்கள் ?! வாழ்க்கைப் பாடங்களின் இன்னொரு பக்கம் !! 

எது எப்படியோ - வியாழன் + ஞாயிறின் பதிவுகளுக்கு மாங்கு மாங்கென்று எழுதியவன் சற்றே ஓய்வெடுக்க, இனி நீங்கள் கொஞ்சம் எழுதிடலாமே ?

இதோ உ.ப.வுக்கென ஒரு caption போட்டி !! அதிகாரி மீதான துவேஷத்தையோ ; பட்டாளத்தில் பிகில் ஊதும் அண்ணாச்சி மீதான கடுப்சையோ வெளிக்காட்டிட இதனை ஒரு வாய்ப்பாக்கிக் கொள்ளாது, இந்த iconic நாயகர்களை தரமான நகைச்சுவை வரிகளோடு கலகலக்க விட முயற்சித்திடலாமே guys ? வெற்றி பெரும் ஒவ்வொரு கேப்ஷனுக்கும், ஒரு ஜம்போ சீசன் 3 சந்தா பரிசு - நம் அன்புடன் !! 


Bye all !! Stay home....Stay Safe !! See you around !!

பி.கு : இவை எல்லாமே படைப்பாளிகள் ஏதேதோ தருணங்களில் உருவாக்கிய பகடிகளே !!