நண்பர்களே,
வணக்கம். கோவில்பட்டிக்கு கடலைமிட்டாய் ; சாத்தூருக்கு சேவு ; நெல்லைக்கு அல்வா என்பது போல் எங்க ஊரில் (ஒரு காலத்தில்) பக்கோடா செம famous ! பெரியதொரு ஆடம்பரமோ, பந்தாவோ இல்லாமல் பஜாருக்குள் இருக்கும் அந்தக் கடையின் முன்னே எந்நேரமும் மொய்யென்று கூட்டம் அப்பி நிற்கும் ! ராத்திரிக்கு பால்சோறு - பக்கோடா கூட்டணியில் தான் இக்கட ஆயிரக்கணக்கான வீடுகளில் இன்னமும் வண்டி running ! அதைக் கொறித்துப் பழகிப் வளர்ந்த பிள்ளைகள் திருமணமாகி வெளியூர்களுக்கு சென்று விட்டாலும், இங்கிருக்கும் தகப்பன்மார்கள் தவறாது பார்சல்கள் வாங்கி கூரியர்களில் போட்டுத் தாக்குவதுண்டு ! பக்கோடா famous என்றாலும், அந்தக் கடையின் இனிப்புகள், காரங்கள் சகலமுமே செமையாக இருக்கும் - so மூத்த பிள்ளை வீட்டுக்கு ; அடுத்த பிள்ளை வீட்டுக்கு ; கடைக்குட்டிக்கு என்ற ரீதியில் பிரித்துப் பார்சல் வாங்க வருவோரை வேடிக்கை பார்ப்பதே ஒரு அனுபவம் !! "ஆங்...ஒரு கிலோ பக்கோடா - மூணு பார்சல் அண்ணாச்சி ; அந்த மொத பார்சல்லே அரை கிலோ ஜிலேபி சேர்த்து வைச்சிருங்க ; ரெண்டாவதுலே பூந்தி லட்டு ; மூணாவதிலே மைசூர்பாகு ! அப்டியே அந்த ஜிலேபி பார்சலோட முக்கா கிலோ சிப்ஸ் போட்ருங்க ; பூந்தி லட்டு கூட ஓமப்பொடி ; மைசூர்பாகோட பாதுஷா ! இந்த சிப்ஸ் வைச்ச பார்சல் இருக்கில்லியா - அதோட கால் கிலோ கருப்பட்டி முட்டாய் ஜீரா ஊத்தாதது வேணும் ; பாதுஷா பார்சல்லே ஜீரா ஊத்தின கருப்பட்டி முட்டாய் ; அப்புறமா ஓமப்பொடி பார்சல்லே கோதுமை அல்வா அரை கிலோ !!" என்று ஒவ்வொரு பிள்ளைக்கும், மாப்பிள்ளைக்கும், பேரப்பிள்ளைக்கும் பிடித்தமான சமாச்சாரங்களை மாய்ஞ்சு மாய்ஞ்சு ஆர்டர் செய்வதை கிட்டக்க இருந்து கேட்கும் போதே, தலீவரின் கடுதாசிகளைப் படிச்சா மாதிரி நமக்கு கேரா இருக்கும் ; ஆனால் கடையில் நிற்கும் சிப்பந்திப் பசங்களோ செம அசால்ட்டாய் அதைக் கையாள்வார்கள் ! இன்றைய பகலில் நமது ஆபீசுக்குள் நுழைந்த போது எனக்கு அந்தப் பக்கோடா கடை ஞாபகமே தான்......!
"Smashing 70s-க்கு அவர் சந்தா கட்டியிருக்காரு....அதுக்கான free புக்கை வைச்சிருங்க ; புக்மார்க் மறந்திராதீங்க ! அவரே ரெகுலர் சந்தாவிலேயும் இருக்கார் - ஆனா டெக்ஸ் வில்லர் இல்லாத சந்தா - அதனாலே தோர்கல் புக் மட்டும் வைக்கணும் ! அது கூடவே 'கைப்புள்ள ஜாக்' இலவச புக் மறந்திடப்படாது ! ஊஹூம்....அவர் சுஸ்கி-விஸ்கிக்கு பணம் இன்னும் கட்டலே....அதை வைக்க வாணாம் ; ஆனா அதுக்கான அந்த செகப்பு கலர் புக்மார்க் மட்டும் வைச்சு விடலாம் !!"......" இல்லே - இது சுஸ்கி-விஸ்கி மட்டும் ஆர்டர் பண்ணுன சாருக்கு ; ஹே.. அது "காமிக்ஸ் எனும் கனவுலகம்" FB க்ரூப்பிலேர்ந்து பணம் கட்டுனவங்களுக்கு - மறக்காம அந்த ஸ்டிக்கர் போட்ட புக்கான்னு பார்த்து வைக்கணும் ! ஆமா...அவங்க ரெகுலர் சந்தாவிலே இருக்காங்க தான் ; ஆனா Smashing-க்கு கட்டலை ; சுஸ்கி-விஸ்கி, தோர்கல் , டெக்ஸ் மட்டும் அனுப்பணும்,,,ஒரு free புக் மட்டும் தான் !!" என்ற ரீதியில் அங்கே நடந்து கொண்டிருந்த களேபரங்களை வாசலில் நின்றபடிக்கே பார்த்தும், கேட்கவும் செய்த எனக்கே கிறு கிறுவென்று வந்தது ! ஆனால் நம்மாட்கள் அந்தப் பக்கோடாக் கடையின் தேர்ந்த சிப்பந்திகளைப் போல, டெஸ்பாட்ச்சை அசால்ட் அறுமுகங்களாய்க் கையாண்டு கொண்டிருந்தனர் ! உள்ளே கால்வைத்தால் எனது அறைக்குள் போகவே பாதையில்லை - நெடுக பார்சல்கள் / டப்பிகள் / புக்குகள் என்ற ஆக்கிரமிப்புகள் !! அது என்ன கதை, ஏது கதை என்பதோ, மாண்ட்ரேக் யார் - மயிலாடுதுரைக்காரரா - மதுராந்தகத்தாரா ? என்றோ நம்மாட்களுக்குத் தெரியாது தான் ! ஆனால் ஒவ்வொரு மாதத்தின் இறுதியிலும் இவற்றை உங்களிடம் கொண்டு சேர்ப்பது எத்தனை முக்கியம் என்பதை அழகாகத் தெரிந்து வைத்திருப்பவர்கள் ! நான் வித விதமாய் வடைகளைச் சுட்டுத் தள்ளினாலும், மறையைக் கழற்றிக் கையில் தர டிசைன் டிசைனாய்த் திட்டமிட்டாலும், அத்தனைக்கும் செவி சாய்த்து நடைமுறைப்படுத்தும் ஆற்றலாளர்கள் ! Of course - அங்கே இங்கே என சிற்சிறுப் பிழைகளுக்கு விதிவிலக்குகள் ஆகிட மாட்டார்கள் தான் ; ஆனால் இந்தப் பயணத்தின் ஒரு understated அங்கம் இவர்கள் என்பதில் எனக்கு ஐயங்களே கிடையாது ! முகம் சுழிக்க முகாந்திரங்கள் தராமல் இயன்றமட்டுக்கு அனைவருக்கும் பணியாற்றிட எண்ணும் இந்தச் சின்ன டீமுக்கு அவ்வப்போது கிடைப்பது என்னவோ விளக்குமாற்றுச் சாத்துக்களுமே - like yesterday !! ஈரோட்டிலிருந்து ஒரு வாசகர் ; Smashing '70s க்கு மாத்திரம் சந்தா + சுஸ்கி-விஸ்கி முன்பதிவு என்று செலுத்தியுள்ளவர்.....போன் செய்து - "மாண்ட்ரேக் புக் இங்கே எல்லா இடத்திலேயும் வித்துக்கிட்டு இருக்கு ; எனக்கு தான் அனுப்பலை நீங்க !!" கத்தித் தீர்த்திருக்கிறார் ! இங்கிருந்து யாரேனும் களவாடி புக்ஸை கொண்டு சென்றிருந்தால் தவிர, அதற்கு வாய்ப்பே இல்லை என்று அவரைப் புரியச் செய்ய முயன்றாலும் கூச்சல் மட்டுமே மறுமுனையிலிருந்து ! புரிந்து கொள்ளவே முடிவதில்லை - நமது பொறுமைகளுக்கு, சில தருணங்களில் இத்தனை சன்னமான திரிகள் தானா ? என்பதை ! Phewww !!
டெக்ஸ் வில்லர் புக்ஸ் ரெடியாகிட ஒரு நாள் கூடுதலாய் அவசியமாகிட்டதால் இதர புக்ஸும் காத்திருக்க வேண்டிப் போனது ! இது தான் நிலவரம் எனும் போது எங்கோ-யாரோ சொன்னதைக் கேட்டுக்கொண்டு இவர்களைக் காய்ச்சி எடுப்பானேன் ? இது போலான பஞ்சாயத்துக்களுக்கு இடம் தர வேண்டாமே என்பதால் தான், ரெடியாகிக் காத்திருந்த சுஸ்கி-விஸ்கி புக்ஸைக் கூட இன்று வரைக்கும் கோவைப் புத்தக விழாவில் விற்பனைக்கு வெளியே எடுத்திடவில்லை ! சற்றே முன்கூட்டி அவற்றை விழாவில் கண்ணில் காட்டியிருந்தால், நிச்சயமாய் விற்பனைக்குக் கைகொடுத்திருக்கும் தான் ; ஆனால் ஒரே சமயத்தில் அனைவருக்கும் கிடைக்கட்டுமே என்று எண்ணி, ஸ்டாலில் உள்ள பண்டலை இந்த நொடி வரைக்கும் உடைக்க அனுமதி தந்திருக்கவில்லை நான் ! And we get this !! 😑😑😑
நாளை கடைசி தினம் காணும் கோவை விழாவினை இந்த சு&வி.ரெட்டையர் சிறப்பிப்பார்கள் ! And இது வரைக்குமான கோவை அனுபவம் - செமத்தியோ செமத்தி !! வார நாட்களில் கூட பின்னிப் பெடலெடுத்துள்ள விற்பனைகள் ! By far - நமது இது வரைக்குமான கோவைப் புத்தக விழாக்களுக்குள், இந்த நடப்பாண்டே டாப் !! இந்த வாரயிறுதியும் அதே வேகத்தில் தொடர்ந்திடும் பட்சத்தில் புனித மனிடோ நம்மை ஜம்மென்று கரை சேர்த்திருப்பார் !! அப்புறம் கவிஞரே..ஞாயிறுக்கு கோவையில் மழை என்று forecast காட்டுகிறது ; உங்க கவிதைகளில் ஒண்ணை எடுத்து விட்டு அதை சித்தே தள்ளிப் போட முடியுதான்னு பாருங்களேன் ?!
Moving on, உடனடியாய் காத்திருக்கும் அடுத்த இதழ் - நம்ம கதை சொல்லும் காமிக்ஸ் வரிசையின் இதழ் # 2 - சின்ட்ரெல்லா !! இதோ - அதன் அட்டைப்பட preview & உட்பக்க preview க்களை உங்களிடம் காட்டும் சமயமே, மண்டைக்குள் யோசனைகள் பல குறுக்கும், நெடுக்கும் ஓட்டமெடுத்து வருகின்றன : 'ஆஹா....இதிலே எடுத்த உடனேயே ரெண்டு பெருசுக ரெண்டாம் கண்ணாலம் கட்டிக்குதுங்க ; இளவரசருக்கு (கதையிலே வர்றவருக்கு தான் !!) பொண்ணு பாக்கிறச்சே அழகான பாப்பாக்களா தேடுறாங்க ; இறுதியிலே இளவரசருக்கு பச்சக்குனு சின்டி பாப்பா இச்சு கொடுக்குது !!' இவற்றையெல்லாம் காரணம் காட்டி இந்தக் கதைக்குக் கட்டம் கட்ட வேண்டி வருமோ ? Go Back சின்டி !! என்று பலூன்கள் பறக்குமோ ? என்று பயந்து பயந்து வருது !
நிறையவே கனவுகளோடு துவங்கிய இந்தக் கதை வரிசையானது பெரிதாய் take off ஆகவில்லை என்பதே நிலவரம் ! Yes - கோவை புத்தக விழாவில் இதற்கு "பரவாயில்லை" ரக response கிட்டியுள்ளது தான் ; ஆனால் in general - ஜாக் கையில் ஒரு பிஸ்டலோ ; பிச்சுவாவோ இருந்திருந்தால் தலை தப்பியிருக்கும் போலும் ! நமது யூத் வாசக வட்டத்து இல்லங்களில் குட்டீஸ்கள் குறைவோ ; அல்லது அவர்கட்குக் கதை சொல்லிடும் மெனெக்கெடல்களுக்கு நம் மத்தியில் அவகாசம் குறைச்சலோ ; அல்லது ஒன்லி இங்கிலீபீஷ் என்ற எண்ணங்களோ ; அல்லது கரிச்சட்டிகளுக்குள் தலைகளை முக்கி எடுத்து யூத்தாய்க் காட்சி தரும் வட்டத்தின் இல்லங்களில் மிகுந்திருப்பது வளர்ந்த பிள்ளைகளோ- காரணங்கள் எதுவாக இருப்பினும் the response has been very lukewarm ! பிறந்தநாள் பரிசளிக்க, நூலகங்களுக்கு அன்பளிப்பாக்கிடக் கூட இவை பயன்தரவில்லை எனும் போது மண்டையைச் சொரிய மட்டுமே முடிகிறது ! அடுத்த சீசனுக்கு இந்த முயற்சி தொடர்ந்திடும் பட்சத்தில் - இடைப்பட்ட நாட்களில் எனக்கு சிக்கிம் லாட்டரியில் ஒரு கோடி விழுந்திருக்க வேணும் தான் !! சிக்கிமுக்கு எந்த பஸ்னு வேற தெரிலியே...!
Next in line, ஈரோட்டுப் புத்தக விழா காத்திருக்க, "அங்கே என்ன இஸ்பெஷல் ?" என்ற கேள்வி எழுவது இயல்பே ! ஆனால் சின்னச் சின்ன சில நிகழ்வுகள் நமது திட்டமிடல்களுக்கு சற்றே நிதானங்கள் தேவை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளன ! 50 ஆண்டுகளைத் தொட்டாச்சு ; வெளியீடுகளின் எண்ணிக்கை ஆயிரத்தை நோக்கிப் பயணிப்பதையும் பார்க்கிறோம் - ஆனாலும் இத்தனை காலமாய் நமது கிட்டங்கிகளில் உருப்படியான ரேக்குகள் கூட இருந்ததில்லை ! பலகைகள் மீது இங்கும் அங்குமாய் புக்ஸ் குந்தியிருப்பதே அரை நூற்றாண்டின் வாடிக்கை ! ஆனால் சமீப பொழுதுகளில் நமது வெளியீட்டு எண்ணிக்கைகளும், இதழ்களின் கையிருப்புகளும் உசக்கே பயணித்துக் கொண்டேயிருக்க, 'கிட்டங்கியில் இடம் இல்லா சாரே ; இனி புக்ஸ் வந்தால் பக்கத்து பொட்டலில் தான் இறக்கி வைக்கணும் !" என்று நம்மாட்கள் தாக்கல் சொன்ன போது 'திரு திருவென்று' முழிக்கவே முடிந்தது !
"பொட்டலில் பொம்ம புக் !!" டைட்டில் சிறப்பாய் இருந்தாலும், அந்த இடத்துக்காரர் நாயை விட்டுக் கடிக்கப் பண்ணுவார் என்ற புரிதலோடு, தொப்புளை சுற்றி 16 ஊசிகள் போட்டுக் கொள்ளவும் திராணி தேறவில்லை ! So தீர்வு என்ன ? என்ற யோசனைக்கு - புத்தக ரேக்குகள் செய்து வாங்குவதே வழி ; ஒவ்வொரு ரேக்கிலும் 5 தட்டுக்கள் இருக்கும் பட்சத்தில் ஒன்றன் மீது ஒன்றாய் அடுக்கி இடத்தை manage செய்து கொள்ளலாம் என்று பட்டது ! தொடர்ந்த சுபயோக சுப ஜூன் மாதத்தினில், மதுரையிலிருந்து ரேக் செய்யும் நிறுவனத்தினர் வந்து நமது கிட்டங்கியை அளவெடுத்து இந்த முனையிலிருந்து அந்தக் கோடி வரைக்கும் எத்தனை ரேக்குகள் போட முடியும் என்ற கணக்குடன் ஒரு வரிசைக்கு ரூ.50,000 என்ற எஸ்டிமேட்டும் தந்தனர் ! மொத்தம் 4 வரிசைகள் அதே போல போடலாம் என்றும் சொன்ன போது 'கைத்தாங்கலாக யாராச்சும் என்னைப் பிடிங்கப்பா !!' என்று சொல்லாத குறை தான் ! வேற வழியே இல்லை என்றான பின்னே, first "ஒரேயொரு வரிசை போட்டுப்போம்ணே....சரியாய் வந்தா மேற்கொண்டு செஞ்சுக்குவோம் !" என்றேன் ! நாலாவது தினமே வந்தார்கள், மாட்டினார்கள், பில்லை நீட்டினார்கள், உடனடி பேதிக்கு மருந்தென்ன ? என்று என்னைத் தேட விட்டார்கள் ! ஒரு மாதிரியாய் புக்ஸை தட்டுக்களில் அடுக்கி, ஒவ்வொன்றின் பெயரையும் எழுதி ஒட்டிய போது, "இதே மாதிரி மேற்கொண்டு செஞ்சு வாங்கி குடுங்க சார் ; வசதியா இருக்குது !" என்று நம்மவர்கள் கோரிக்கை வைக்க "ஜெய் கோவைப் புத்தக விழாவாய நமஹ !!" என்ற நம்பிக்கையில் ரேக் # 2-க்கு ஆர்டர் செய்தோம் !
வந்தாங்க..மாட்டுனாங்க..பில்லு தந்தாங்க ..பேதி..!! ரிப்பீட்டு !! 3 நாட்களுக்கு முன்னே மாட்டி முடித்த ரேக்கினில் இதுநாள் வரைக்கும் அட்டைப்பெட்டிகளுக்குள் துயில் பயின்று கிடந்த hardcover இதழ்களை எடுத்து அடுக்கிக் கொண்டிருந்த சமயமாய் உள்ளே போய் பராக்குப் பார்த்தவனுக்கு சில பல ஷாக்குகள் !! இதுநாள் வரைக்கும் sold out என்ற நம்பிக்கையில் கடையைச் சாத்தியிருந்த நம்ம ஜெரெமியா ஆல்பம் # 2 "பயணங்கள் முடிவதில்லை" கணிசமான எண்ணிக்கையில் ஒரு அட்டைப்பெட்டிக்குள் கிடந்தது ! அடங்கொன்னியா...என்றபடிக்கே கொஞ்சம் முன்னே நகர்ந்தால், செமத்தியாய் டாலடிக்கும் "பிஸ்டலுக்குப் பிரியாவிடை" ரேக்கில் குதூகலமாய்க் குந்திக்கிடந்தது ! இத்தனை காலமாய் டப்பாக்களுக்குள் துயில் பயின்று வந்ததால் பெரிதாய்க் கண்ணில்பட்டிருக்கவில்லை ; ஆனால் இப்போது உடைத்து வெளியே எடுத்து அடுக்கும் போது தான் யதார்த்தம் பிடரியில் அறைகிறது ! "இந்த இதழில் ஸ்டாக் தங்கியது எவ்விதம் ? சூப்பர் ஹிட் இதழாச்சே ?" என்று யோசித்த போது தான், இது சந்தாவின் அங்கமே நஹி ; ஈரோட்டு ஸ்பெஷல் என 2018-ல் தயார் ஆனது என்பது புலனானது ! ஆக சந்தாவிலோ, முன்பதிவிலோ இடம்பிடிக்கா ஸ்பெஷல் இதழ்கள், அந்நேரத்து euphoria-வில் பரபரப்பாய் விற்பனையாவதைத் தாண்டி பெரிதாய் சாதிப்பதில்லை என்பதே நிஜம் ! இதற்கு ஒரே விதிவிலக்கு நம்ம மஞ்சள்சட்டை மாவீரரின் ஸ்பெஷல் இதழ்கள் ! அட்டவணையில் இடம்பிடித்தாலும் சரி, out of syllabus பாடமாய் இருந்தாலும் சரி, இவை கரைசேர்ந்து விடுகின்றன !
So மறுக்கா ஈரோடு..மறுக்கா ஸ்பெஷல்...மறுக்கா அட்டவணையில் இடம்பிடிக்காத ஸ்பெஷல் இதழ்...ரிப்பீட்டு !!! என்ற S.J சூர்யாவின் மாடுலேஷனில் தலைக்குள் குரல் கேட்டது !! இன்றைக்கு காகிதம் விற்கும் விலைகளில் புக்ஸை அச்சிட்டு கிட்டங்கியில் அடுக்கி அழகு பார்க்கும் 'தம்' - அதானி ஓனருக்கு மட்டுமே சாத்தியம் என்பதால் நம் முன்னே இருப்பன இரண்டே options :
***Zagor எனும் இந்தப் புதுவரவை முன்பதிவுக்கு அறிவித்திடல் ; with maybe 2 months time for the booking !!
அல்லது
***2023-ன் அட்டவணையினில் ஜனவரி இதழாய் இந்தச் சிகப்பு பனியன்காரரை களமிறக்கல் !
So சொல்லுங்களேண்ணே - இரண்டில் எது சுகப்படக்கூடுமென்று ?