நண்பர்களே,
வணக்கம். சுமார் பத்தாண்டுகளின் இந்தப் பதிவுப் பயணத்தினில் - 'என்ன எழுதுவது ?' என்ற கேள்வியோடு பேந்தப் பேந்த முழித்த நாட்கள் கொஞ்சமே கொஞ்சமாய் உண்டு தான் ! ஆனால் பகிர்ந்திட சமாச்சாரங்கள் நிறையவே இருக்கும் போதிலும், பேனா நகர மறுத்துச் சண்டித்தனம் செய்வது இதுவே முதன்முறை !
நம்மைச் சுற்றிலும் ஒரு பேரலையாய் பெரும் அழிவு தலைவிரித்தாடி வருவதை நித்தமும் பார்த்து வரும் நாட்களில் ; நேற்று வரைக்கும் ஓராயிரம் கனவுகளோடும், பொறுப்புகளோடும் உலவி வந்த முகமில்லா சக மனுஷர்கள், இன்றைக்கு காக்காய்-குருவிகளைப் போல செத்து விழுந்து காலனிடம் ஐக்கியமாகும் அகோரத்துக்கு சாட்சி நிற்கும் நாட்களில் - 'மாதம் மும்மாரி மழை பொழிகிறது நண்பர்களே !' என்ற ரீதியில் எழுதிவிட்டு நகர கூசுகிறது ! ஒவ்வொரு இழப்பின் பின்னேயும் உள்ள அந்தக் குடும்பங்களின் வலிகளை எண்ணிப் பார்க்கவே தடுமாறும் போது - அந்த ரணங்களோடே வாழ்க்கையைத் தொடர வேண்டிய நிலையில் உள்ளோரின் மனங்கள் எத்தனை பாடுபடும் ? போன வருஷத்து இதே தருணங்களிலும் இதே ஊழித் தாண்டவங்களைப் பார்த்திட்டோம் தான் ; ஆனால் பாதிப்புகளின் பரிமாணங்களில் 2021 காட்டி வரும் உச்சங்கள் ஈரக்குலையை நடுங்கச் செய்கின்றன ! இது அத்தனைக்கும் மத்தியில் வழக்கம் போல தேர்தல் ; IPL ; மேளா எனும் கூத்துக்களும் தொடரும் போது - நமது இன்றைய பொழுதுகளை என்னவென்று வர்ணிப்பதென்றே தெரியலை !! இறைவனின் அருளோடு இந்தக் கொடும் நாட்களை நாமெல்லாம் முழுசாய், திடமாய்த் தாண்டிடும் பட்சங்களில் - ஒரு தூரத்து எதிர்கால நாளினில், இதுவும் கடந்து போயிருக்குமோ - தெரியலை !! Maybe எல்லாமே சகஜத்துக்குத் திரும்பியிருக்கக்கூடிய அந்தத் தருணத்தில் - மறுக்கா 'BIG BOSS புடலங்காய் ஆர்மி' ; 'வலிமை அப்டேட்ஸ்' ; 'பச்சைக்கு விசில் போடு' என்று நாமெல்லாம் திரிவோமோ என்னவோ ?! ஆனால் இன்றைய பிரளயப் பொழுதுகளை மறப்பது - ஒரு வரலாற்றுக் குற்றமாகிடும் என்று ரொம்பவே உறுத்துகிறது ! "Those who forget history are condemned to relive it..." என்று போலந்தின் ஆஷ்விட்ஸ் நாஜி வதைமுகாமின் மியூசியத்துச் சுவற்றில் 20 வருஷங்களுக்கு முன்னே வாசித்த இந்த வரி தான் மனசுக்குள் ஓடிக்கொண்டே உள்ளது ! In fact "வரலாற்றை மறக்கும் தவறைச் செய்வோர், அதன் ரணங்களை மறுக்கா உணர்ந்தே பாடம் படிப்பர் !" என்ற அந்த வரிகள் நம் தேசத்தின் இன்றைய நிலையினையும் சுட்டிக் காட்டுவதாகவே படுகிறது ! ஆற்றமாட்டாமை விஞ்சும் இந்த நாட்களின் மத்தியில், அவரவர் பாடுகளை பார்த்திட வேண்டிய சுயநலங்களும் முன்னுரிமை பெறுவதை குனிந்த தலையோடே ஒத்துக் கொள்ள வேண்டியுள்ளது தான் ! So குதூகலமாய் இல்லாவிடினும், கடமையுடன் நமது வாரயிறுதி relax pill ஒன்றினை போட்டுக்கொள்ளும் முயற்சியினுள் புகுந்திடுகிறேன் !
மூன்றே புக்ஸ் இம்மாதம் ; அவற்றுள் ஒன்று மாயாவியாரின் மறுபதிப்ஸ் எனும் போது எனது பணிகள் கணிசமாய்க் குறைந்திருக்க வேண்டும் தான் ! ஆனால் ட்யுராங்கோ சார்ந்த 3 பாகப் பணிகள் செம்மையாய் சுளுக்கெடுத்த காரணத்தினால் பெருசாய் ஒய்வு கிட்டவில்லை & as always - டெக்ஸ் வில்லரின் பக்க நீளமானது அங்கேயும் பெண்டை நிமிர்த்தி விட்டது தான் ! ஆனால் புண்ணியத்துக்கு இம்மாதப் பணிகளை ரொம்பவே சீக்கிரம் ஆரம்பித்திட்டதால், இதோ - மூன்று இதழ்களுமே அச்சு பூர்த்தி கண்டு, பைண்டிங் புறப்பட்டு விட்டுள்ளன ! And மூன்று இதழ்களின் previews-ம் இங்கே நாம் பார்த்தாச்சு எனும் போது, புதுசாய் அவற்றைப்பற்றி பேசிட சமாச்சாரங்கள் நஹி !
So நேரடியாய் போன வாரத்தினில் நான் கேட்டிருந்த கேள்வி பக்கமாய் கவனத்தைத் திருப்பிடலாம் guys ! "கென்யா" மற்றும் "ஒற்றை நொடி..ஒன்பது தோட்டா" மெகா இதழ்களுள் நிறைய பணமும், உழைப்பும் முடங்கிக் கிடப்பது வாஸ்தவம் தான் ! இரண்டுமே சூப்பரான கதைகள் என்பதும் வாஸ்தவம் தான் & அவற்றை உங்களிடம் ஒப்படைக்கும் ஆவல் அலையடிக்கிறதுமே வாஸ்தவம் தான் ! ஆனால் ஏகப்பட்ட ஜீவனங்களே கேள்விக்குறியாகி நிற்கும் இன்றைய பொழுதினில், இந்தக் கதைச் சுமைகளை இன்னும் கொஞ்ச காலத்துக்குச் சுமப்பதில் தப்பே இல்லை தான் என்ற தீர்மானத்துக்கு வந்துள்ளேன் ! இதன் பின்னணியில் சமீபத்தைய சில சம்பாஷணைகளுக்கும் ஒரு பங்குண்டு ! புதுச் சந்தா ஏப்ரல் 2021 முதலாய்த் துவக்கம் கண்டிருக்க, சென்றாண்டின் சந்தா உறுப்பினர்கள் அனைவரையுமே இம்முறையும் சந்தா ரயிலில் இணையச் செய்திட முயற்சிக்கும்படி நம்மவர்களைப் பணித்திருந்தேன் ! சந்தா புதுப்பிக்காதோரின் பெயர்களையும், செல் நம்பர்களையும் ஒரு பட்டியலாய்ப் போட்டபடிக்கு, ஒவ்வொருவருக்கும் அழைத்துப் பேசிய கையோடு, அவர்களின் பதில்களையும் அதனிலேயே ஓரத்தில் குறிக்கச் சொல்லியிருந்தேன் ! And தினமும் மாலையில் வேலை முடித்துச் செல்லும் முன்பாய் அன்றைய தினத்தில் பேசியோர் பற்றி, அவர்களின் பதில்கள் பற்றிய updates எனக்குத் தந்திடவும் சொல்லியிருந்தேன் ! பரவலாய் 60% நண்பர்கள் - "மறந்து போச்சு ; இதோ பண்ணிடறோம் ; வாரயிறுதியில் பண்ணிடறோம் !" என்ற ரீதியில் சொல்லி, அதற்கேற்ப புதுப்பித்தல்களையும் செய்து விட்டிருந்தனர் ! ஆனால் எஞ்சிய சில நண்பர்களின் சூழல்கள் நிஜமாகவே கண்களைப் பனிக்கச் செய்தன !
"பையன் வெளிநாட்டிலே வேலைக்குப் போயிருக்கான்மா ; அவன் போன் பண்றப்போ இந்த வருஷத்துக்கு சந்தா கட்ட பணம் அனுப்ப சொல்லிக் கேட்டுப் பாக்குறேன் !"
"மாசத்தின் ஆரம்பத்திலே பென்ஷன் பணம் வரும்மா ; வந்த உடனே கட்டிடறேன் !"
"ரெண்டு இடத்திலே பணம் கேட்ருக்கேன்மா ; கிடைச்ச உடனே கட்டிடறேன் !"
"இந்த வருஷம் கொஞ்சம் கஷ்டமா இருக்கு ; மாசா மாசம் தேவையான புக்ஸ் மட்டும் வாங்கிக்க முயற்சி பண்றேன்மா !"
"மே மாசத்தில் ஒரு தவணையா சந்தா கட்டிடறேன் !"
"சொந்த ஊருக்கே போய்ட்டேன்மா ; கொஞ்ச நாளிலே பணம் தேற்றி அனுப்பிடறேன் !'
என்ற ரீதியில் நிதரிசனங்களின் நிஜ முகங்களை தரிசிக்க முடிந்தது ! இடர்களுக்கு மத்தியிலும் இந்த காமிக்ஸ் நேசத்தைக் கைவிட மனமின்றித் தட்டுத் தடுமாறிடும் நண்பர்கள் ஒரு சிறுபான்மையாக இருந்தாலுமே, நடப்பாண்டில் அவர்கள் சிரங்களில் கூடுதல் பாரத்தை ஏற்றி வைக்க மனம் மறுக்கிறது ! Of course - எனது தீர்மானமானது கொரோனாவைத் துரத்தியடிக்கப் போகும் அருமருந்துமல்ல தான் & இதன் புண்ணியத்தில், விக்ரமன் படத்து நிறைவு சீனைப் போல அத்தினி பெரும் கைகோர்த்தபடிக்கே சந்தோஷ குடும்பப்பாட்டை பாடிடவும் போவதில்லை தான் ! ஆனால் இந்த நொடியிலாவது பளுவினை ஏற்றாது கொஞ்சம் ப்ரீயா விடுவோமே என்று நினைத்தேன் !
"கென்யா" - 5 பாகத் தொகுப்பினை 2022-ன் சந்தாவுக்குள் நுழைக்க வழி கண்டுபிடித்து விட்டேன் ! And "ஒற்றை நொடி..ஒன்பது தோட்டா" ஆல்பத்தினை நடப்பாண்டின் தீபாவளித் தருணத்தில் புகுத்திட ஒரு சிறு வாய்ப்பும் கண்ணில்படுகிறது ! ஆனால் அதற்கு முன்பாய் நான் கொஞ்சம் துடைப்பக்கட்டைச் சாத்துக்கள் வாங்கிட வேண்டி வரலாம் :
நடப்பாண்டின் தீபாவளிக்கு தளபதியாரின் 2 பாக புது ஆல்பம் வெளிவந்திடவுள்ளதாய் நமது அட்டவணையில் அறிவித்திருந்தேன் ! Of course - அந்த விளம்பரப் பக்கத்திலேயே - "இந்தக் கதையின் இரண்டாம் பாகம் பிரெஞ்சில் உருவாவதைப் பொறுத்தே இந்த இதழ் அமைந்திடும்" என்றும் கொஞ்சம் முன்ஜாக்கிரதையோடு குறிப்பிட்டிருந்தேன் ! முதல் பாகம் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னமே வெளியான நிலையில், அதன் க்ளைமாக்ஸ் பாகமானது பிரெஞ்சில் ஜூன் 2021-ல் வெளிவந்திட வேண்டியது அவர்கள் தந்திருந்த அட்டவணை ! And ஜுனில் வெளியாகிட வேண்டிய படைப்பெனில், ஏப்ரல் வாக்கிலேயே நமக்கு டிஜிட்டல் கோப்புகள் வந்து விடும் & நாம் பணிகளை ஆரம்பித்து, சாவகாசமாய் நடப்பாண்டின் தீபாவளி வேளைக்கு ரெடி செய்துவிடலாம் என்பதே எனது திட்டமிடல் ! ஆனால் எதுவுமே நிலையில்லா இந்த நடப்பு ஆண்டில், டைகரின் புதிய படைப்பாளிகளிடமிருந்து இதுவரைக்கும் எவ்விதத் தகவல்களும் இல்லை ! நமது பதிப்பகத்தினில் இது குறித்துக் கேட்டுள்ளேன் ; and அவர்களிடமிருந்தும் இன்னும் பதில் இல்லை ! So ஒருக்கால் அந்த க்ளைமாக்ஸ் பாகத்தின் உருவாக்கம் இன்னும் கூடுதல் நேரமெடுக்கும் எனில், நாம் ரூ.200 விலையில் அறிவித்துள்ள டைகரின் தீபாவளி ஸ்லாட் காலியாகிடும் ! Of course - "கொள்ளை போகுதுன்னு அறிவிப்பை ஏன் செஞ்சே ?" என்ற கேள்விகளோடு டைகர் ரசிகர்கள் அன்போடு நீட்டிடக்கூடிய துடைப்பங்கள் கண்ணில்பட்டிடும் என்பது புரிகிறது தான் ; ஆனால் நவம்பர் 2019-ல் முதல் பாகம் வெளியான நிலையில், 2021 மத்தியில் பாகம் 2 உறுதிபட வந்திடுமென்று அவர்கள் தந்திருந்த நம்பிக்கையிலேயே நான் "தல-தளபதி தீபாவளி" என்று திட்டமிட்டிருந்தேன் ! இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் நிலவரம் குறித்த தெளிவு கிட்டிவிட்டால் - what next ? என்று யோசிக்கலாம் ! டைகர் அங்கே ரெடியாகி விட்டால், மாற்றங்களின்றி அதுவே தீபாவளிக்கு மெருகூட்டிடும் ! மாறாக அது தாமதம் காணும் எனில், maybe அந்த ஸ்லாட்டினில் "ஒற்றை நொடி ஒன்பது தோட்டா" இதழினை நுழைத்திடலாம் தான் - ஆனால் ரூ.200 விலையிலான இடத்தினில் ரூ.600 விலையிலான இதழ் புகுந்திடும் பட்சத்தில், சந்தா நண்பர்கள் அனைவரையுமே மேற்கொண்டு ரூ.400 அனுப்பப் சொல்லி உசிரை வாங்க வேண்டி வரும் ! நடைமுறையில் அது எத்தனை தூரத்துக்குச் சாத்தியமென்றும் இந்த நொடியில் சொல்லத் தெரியவில்லை !
So இப்போதைக்கு மே 31 வரை "இரத்தப் படலம்" முன்பதிவுகளில் மட்டுமே கவனம் செலுத்துவது ; மேற்கொண்டு எதுவாயினும் ஜூன் முதல் தேதியில் பார்த்துக் கொள்ளலாமென்ற தீர்மானத்தில் உள்ளேன் ! "இரத்தப் படலம்" முன்பதிவுகள் ஸ்டெடியாய் முன்னேறி வருவதை இந்த நொடியில் குறிப்பிட்டாக வேண்டும் ! இன்றைய நிலவரப்படி முன்பதிவு 230-ஐத் தொட்டுள்ளது ! Considering the times we now live in, இதுவே நிச்சயம் ஒரு பெரிய விஷயம் தான் !
ஒருக்ககால் "டைகர் தீபாவளி மலர்" தள்ளிச் செல்ல நேரிடின், அதனிடத்தில் என்ன இட்டு நிரப்புவது ? என்ற யோசனையும் என்னுள் எழாதில்லை !
OPTION # 1 : மேலே சொன்னது போல - "ஓ.நொ.ஓ.தோ" ஒரு option ஆக இருந்திடலாம் ; ஆனால் மேற்கொண்டு பணம் அனுப்பச் சொல்ல அவசியமாகிடுவது ஒரு நெருடலாகத் தென்படுகிறது !
OPTION # 2 : வழக்கம் போல தீபாவளியினைத் தெறிக்க விட, 'தல' தாண்டவத்தை வீரியமாக்கிடலாம் ! தற்போதைய திட்டமிடலான TEX & TESHA ஸ்பெஷல் வண்ண இதழோடு, மேற்கொண்டு ரூ.200 பெறுமானமான டெக்ஸ் கதையினை b&w-ல் இணைத்து, ரூ.325 விலையில் ஒரே தீபாவளி மலராக்கிடலாம் !
OPTION # 3 : தோர்கல் ஆல்பங்களுக்கு நடப்புச் சந்தாவினில் ஒற்றை (சிங்கிள்) ஆல்பம் மட்டுமே தரப்பட்டிருக்கும் நிலையில், இன்னும் 2 சாகசங்களை ஒன்றிணைத்து - "தோர்கலோடு தீபாவளி" கொண்டாடிடலாம் ! ஆனால் தோர்கலின் appeal நம்மிடையே ஏகோபித்ததாக உள்ளதா ? என்ற கேள்விக்கு விடை சொல்ல தெரியவில்லை எனக்கு ! Maybe you can enlighten me on this folks ?
OPTION # 4 : அடுத்த ஆண்டிற்கான தேடல்களின் பொருட்டு எக்கச்சக்க புதுக் கதைகளை உருட்டிக் கொண்டிருக்கிறேன் என்பதை ஏற்கனவே சொல்லியுள்ளேன் ! Maybe முற்றிலும் புதிதாயொரு டபுள் ஆல்பத்தை ரூ.200 விலைக்கு வெளியிட்டால் - like for like மாற்றமாக இருந்திடக்கூடும் !
OPTION # 5 : Given a choice - எனது தேர்வு இந்த ஆப்ஷன் # 5 ஆகத்தானிருக்கும் ; ஆனால் இது ஜாம்பவான்களோடு மோதும் சுயேச்சையாகவே இருந்திடும் என்பதும் புரிகிறது : இருப்பினும், முன்மொழிகிறேன் : ஒரு கார்ட்டூன் ஸ்பெஷல் ! (சுஸ்கி-விஸ்கி என்று பாய்ந்திட வேணாமே ப்ளீஸ் - அதற்கு நிறையவே அவகாசமும், திட்டமிடலும் தேவைப்படும் !)
OPTION # 6 : ஹி...ஹி...ஹி...ஒரு மாயாவி + ஆர்ச்சி இடம்பிடிக்கும் "இரும்பு பெசல் ? சும்மா அதிராதா ?
உங்களின் தேர்வுகள் எதுவாயிருப்பினும் OPT 1 ; OPT 2 என்ற ரீதியில் அவற்றின் நம்பரைப் போட்டுத் தெரிவிக்கக் கோருகிறேன் ! உங்கள் தேர்வுகளுக்கான காரணங்களையும் விளக்கிட முற்படின் - இன்னும் சூப்பர் ! அப்புறம் சிலபஸிலேயே இல்லாத பதில்களாய் - "மெபிஸ்டோ ஹார்ட்கவரில் போட்டா பிய்ச்சிக்கும் " ; "வைரஸ் X & ரோஜா மாளிகை ரகசியம்" போட்டா அத்துக்கும் " - என்ற ரீதியில் suggestions வேணாமே ப்ளீஸ் ?
எது எப்படியிருப்பினும், டைகர் ரசிகர்களிடம் நான் சொல்லிக்கொள்ள விழைவது இது ஒன்றே :
அடுத்த 60 நாட்களுக்குள் டைகரின் க்ளைமாக்ஸ் பாகம் பிரெஞ்சில் வெளியாகிடுமென்ற சேதி கிட்டினாலும் கூடப் போதும், தளபதியே நமது தீபாவளித் தேர்வாக இருந்திடுவார் ! பாகம் 1 செமையாய் இருப்பதாக நமது மொழிபெயர்ப்பாளர் ஏற்கனவே சர்டிபிகேட் தந்திருப்பதால், உங்களை போலவே இந்த இதழினைக் காண நானும் ஆவலாக உள்ளேன் ! So நான் இங்கு கேட்டுள்ள கேள்விகள் - தளபதியின் உருவாக்கம் இன்னும் லேட்டாகிடும் என்ற ரீதியில் பிரான்சிலிருந்து தகவல்கள் கிட்டிடும் பட்சத்தில், என்ன செய்வதென்று prepared ஆக இருந்திடும் பொருட்டு மட்டுமே ! So we'll still wait to know more.......and a big SORRY தளபதி ரசிகர்களிடம் ! அந்த க்ளைமாக்ஸ் பாகம் என்றைக்கு பிரெஞ்சில் தயாரானாலும் சரி, அங்கே வெளியாகும் சமயத்தை ஒட்டியே இங்கே நாம் வெளியிடவும் என்ன பல்டிக்கள் அவசியப்பட்டாலும் அடிக்கத் தயாராகயிருப்பேன் ! So "கவுத்திப்புட்டே ; ஏமாத்திப்புட்டே !" என்ற ரீதியில் துடைப்ப ஆலிங்கனங்களைத் தவிர்க்க இயன்றால், மனிடோவுக்கு நன்றி சொல்லுவேன் !
Bye all ..see you around ! Have a safe sunday !!
பி.கு. : இது நடப்புச் சந்தா சார்ந்த முக்கிய கேள்வியென்பதால், உங்களின் பதில்கள் எனக்கு ரொம்பவே அவசியமாகிடும் folks ! மௌன வாசகர்களாய் இதுநாள் வரை இருந்திருந்தால் கூட, இந்தவாட்டி, "OPT __" என்று பதிவிட மட்டுமாச்சும் நேரம் எடுத்துக் கொண்டால் மகிழ்வேன் !