நண்பர்களே,
வணக்கம். சொல்லாமல் கொள்ளாமல் வாரயிறுதியினில் காணாமல் போனதற்கு காரணங்கள் இரண்டு ! இப்போதெல்லாம் எனக்கும் சரி, எனது சகோதரனுக்கும் சரி, பொழுதுகளில் கணிசம் செலவாவது ஹாஸ்பிடல்களில் அல்லது கோவில் குளங்களில் ! எதற்கு-எப்போது அவசியம் எழுமென்றே தெரியாத நிலை இந்த வாரயிறுதியிலும் ; so இங்கே அட்டெண்டன்ஸ் போட இயலா இக்கட்டு !! காரணம் # இரண்டோ - நமது பணிகள் சார்ந்தது ; and அதுவே இந்த வாரநாளின் மினி பதிவின் சாரமுமே !!
டின்டின் ! இந்த ஜாம்பவானின் தமிழ் உரிமைகளை நாம் பெற்றிருப்பது பற்றியும், காத்திருக்கும் மாதங்களில் அவரது ஆல்பங்கள் வெளியாகிடும் என்றும் அறிவித்திருந்தது நினைவிருக்கும் ! ஒரு அறிவிப்பை பந்தாவாய் பண்ணுவது சுலபம் ; ஆனால் அதனை நடைமுறை காணச் செய்வது செம tough என்பதை ஏகப்பட்ட முறைகள் அனுபவத்தில் உணர்ந்துள்ளேன் தான் ! ஆனால் அவற்றுள் எதுவுமே இந்த "டின்டின் அனுபவத்துக்கு" கிட்டே கூட வர இயலாதென்பதை கடந்த சில வாரங்களில் புரிந்து வருகிறேன் ! "தமிழில் டின்டின்" என்பது ஒரு நெடுங்கனவு என்றும், அதனை நனவாக்கிப் பார்த்திட 2016 முதலே மொக்கை போட்டு வருவதைப் பற்றியுமே முந்தைய பதிவினில் எழுதியிருந்தேன் ! இதில் கொடுமை என்னவென்றால்,படத்துக்கு பைனான்ஸ் ; கதை என்றெல்லாம் எதுவுமே தயாராகி இருக்காத நிலையிலும், கழுத்தில் ஒரு ஸ்டில் கேமராவை தொங்கவிட்டுக் கொண்டு ஈரோயினி செலெக்ஷனுக்குள் பிஸியாகிடும் "காதலிக்க நேரமில்லை" நாகேஷ் போல, டின்டினுக்கான உரிமைகளை வாங்குவதற்கு முன்பாகவே கதைத் தேர்வு மட்டுமல்லாது, அதன் பூர்வாங்க மொழிபெயர்ப்புப் பணிகளையும் துவங்கியிருந்தேன் - 2016-ன் மத்தியப் பொழுதினில் ! "பிராங்க்பர்ட் போறோம் ; படைப்பாளிகளை சந்திக்கிறோம் ; ரைட்ஸ் வாங்குறோம் ; மொழிபெயர்ப்பெல்லாம் முன்கூட்டியே ரெடியாகிப்புட்டால் நல்லது தானே" என்ற 'தொலைநோக்குப் பார்வை' தான் அதன் பின்னணி ! ஆனால் பிராங்க்பர்ட்டும் புலர்ந்து ; சந்திப்பும் நிகழ்ந்து ; நமது மெய்யான உசரம் என்னவென்றும் புரிந்து ; டின்டின் எனும் ஜாம்பவானைத் எட்டிப் பிடிக்க நாம் கணிசமாய் காம்பிளான் குடித்து ஏகமாய் வளர்ந்திட வேண்டிய அவசியத்தினையும் உணர்ந்தபடியே ஊர் திரும்பிய பிற்பாடும் - அந்த டின்டின் மொழிபெயர்ப்பின் நோட்டை மட்டும் கடாசிடாது பத்திரமாகவே வைத்திருந்தேன் ! In fact - 7 வருடங்களுக்குப் பின்னேயும் அது எனது மேஜையின் ஓரத்தினில் உறங்கி வருகிறது !
Cut to the present : உருண்டு, புரண்டு உரிமைகளை வாங்கி விட்டு, முதல் ஆண்டினில் வெளியிடுவதற்கென நாம் தேர்வு செய்துள்ள கதைகள் 4 :
மாயப் பந்துகள் 7 (7 Crystal Balls)
&
கதிரவனின் கைதிகள் (Prisoners of the Sun)
திபெத்தில் டின்டின் (Tintin in Tibet)
எரிநட்சத்திரத்தைத் தேடி...! (The Shooting Star)
So டபுள் ஆல்ப சாகசமான "மாயப் பந்துகள் 7" + "கதிரவனின் கைதிகள்" கதையிலிருந்து பயணத்தினை துவக்கலாம் என்றே திட்டமிடவும் செய்திருந்தோம் ! பொதுவாய் அத்தனை சுலபமாய் வளையாத மேல், அவசரம் என்றால் மட்டும் டாப் கியரை போட சம்மதிப்பது கொஞ்ச காலமாகவே நடைமுறை ! So மெய்யான அவசரமெனில் ஒரு 44 பக்க பிராங்கோ-பெல்ஜிய ஆல்பத்தை இரண்டோ, மூன்றோ நாட்களில் போட்டுச் சாத்தி விட இயலுமென்ற நம்பிக்கை எனக்கு நிரம்பவே உண்டு ! அதுவும் இது டின்டின் ; ஒரு ஆயுசின் கனவு - எனும் போது "வேட்டியை மடிச்சு கட்டிக்கினு உள்ளே புகுறோம் ; அட்ச்சு ஒரு வாரத்திலே தூக்குறோம் !" என்ற தெனாவட்டே மிகுந்திருந்தது ! வீட்டில் என்னிடம் டின்டின் முழு கலெக்ஷனும் உண்டு & in fact ஜூனியர் எடிட்டர் அதனை வாரம் ஒரு தபா மனப்பாடம் செய்யாத குறையாய் மேய்ந்து தள்ளுவதால், கைக்குள்ளும், காலுக்குள்ளும் டின்டின் ஆல்பங்கள் கிடப்பதுண்டு ! So ஒரு சுபயோக சுப தினத்தினில் டபுள் ஆல்பத்தின் முதல் பாகத்தை எடுத்து வைத்துக் கொண்டு புரட்டினேன் ! ஏற்கனவே இதனிலிருந்து 4 பக்கங்களை 2016-ல் மொழிபெயர்த்து வைத்திருந்ததையுமே எடுத்துக் புரட்டினேன் ! முதல் நொடியிலேயே இரண்டு விஷயங்கள் புரிபட்டன : ஒவ்வொரு ஆல்பமும் 61 பக்கங்கள் கொண்டவை எனும் போது - நமது மாமூலான 44 பக்க பிரான்க்கோ-பெல்ஜிய அளவீடுகள் இங்கே செல்லுபடியாகாது - என்பது புரிதல் # 1. And புரிதல் # 2 - இங்கே பக்கமொன்றுக்கு குறைந்த பட்சமாய் 13 or 14 பிரேம்கள் இருக்கின்றன என்பதும், ஒவ்வொன்றிலும் இரண்டு பேர் குட்டியாய் டயலாக் பேசுவதாக வைத்துக் கொண்டாலும் பக்கத்துக்கு சுமார் 25 to 30 டயலாக்குகள் எழுத வேண்டியிருக்கும் என்பது !! கொஞ்சமாய் வியர்த்து விட்டது - என் முன்னே காத்திருக்கும் பணியின் பரிமாணத்தை முழுசாய்ப் புரிந்த போது ! And டபுள் ஆல்பம் என்றால், 122 பக்கங்கள் ; தோராயமாய் 2500 to 3000 வசனங்கள் !! ரைட்டு, இதையெல்லாம் உருண்டு, புரண்டு தாண்டி விடலாமென்றால் கூட - காத்திருந்த இன்னொரு அசுரத்தனமான சவால் கண்களை அ-க-ல-மா-ய் விரியச் செய்தன !
And அது தான் படைப்பாளிகளின் மொழிபெயர்ப்பு approval குழு ! பொதுவாய் நமது மொழிபெயர்ப்பாளர்கள் அத்தனை பேருக்குமே என்னைக் கண்டால் டர்...கடுப்ஸ்...காண்டு...பீதி என்று அலையடிப்பதுண்டு ! ஒவ்வொரு கதையிலும் முதல் 10 பக்கங்களை எழுதி அனுப்பிடச் சொன்ன பிறகே, மேற்கொண்டு தொடர்ந்திட அனுமதிப்பேன் & அந்தப் பத்துப் பக்கங்களில் பத்தாயிரம் நொரநாட்டியம் சொல்வேன் ! அதிலும் சென்னையில் இருக்கும் ஒரு சகோதரிக்கெல்லாம் நான் வாட்சப்பில் பதில் டைப் செய்ய ஆரம்பித்து விட்டாலே குளிர் ஜுரம் வராத குறை தான் ! ஆனால்....ஆனால்...மொத வாட்டியாய் இந்த ஆந்தையனுக்குமே ஒரு litmus test காத்திருப்பது பல்ஸ் ரேட்டை கொஞ்சமாய் எகிறச் செய்தது ! டின்டின் ஒவ்வொரு உலக மொழியினில் வெளியாகிடும் போதிலும், அந்த முழுமையான மொழிபெயர்ப்பினை, அந்தந்த மொழியின் 5 திறன் வாய்ந்த வல்லுநர்கள் கொண்டதொரு குழுவின் ஒத்தாசைகளோடு பரிசீலித்து, மாற்றங்கள் / திருத்தங்கள் செய்திடப் பரிந்துரைப்பர் ! இது அவர்களின் உலகளாவிய பழக்கம் என்பது சிறுகச் சிறுகத் தெரிய வர, எனது மலைப்பு மீட்டர் எகிற ஆரம்பித்தது ! ரைட்டு, டின்டினின் உலகுக்குள் புகுந்து, அங்கே அன்னம் தண்ணீர் புழங்கிப் பழகிப் பார்த்துக் கொண்டு, அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு நியாயம் செய்திடும் ஆற்றல்களை நாம் வளர்த்துக் கொள்ளும் வரைக்கும் அடக்கி வாசிப்பதே உத்தமம் என்று புரிந்தது ! So எடுத்தயெடுப்பிலேயே டபுள் ஆல்பத்துக்குள் தலை நுழைப்பதற்குப் பதிலாய், சிங்கிள் ஆல்பத்தினுள் புகுந்தால் பணியும் சற்றே சுலபம் ; அவர்களின் எதிர்பார்ப்புகள் சார்ந்த புரிதலும் கிட்டிடும் என்று பட்டது ! So எனது alltime favorite ஆன "திபெத்தில் டின்டின்" இதழினை தமிழாக்கம் செய்திட அமர்ந்தேன் - 1980-ல் டில்லியில் வாங்கி, இங்கே காலிகோ பைண்டிங் போட்டு வைத்த அதே இதழுடன் !! "This book belongs to M.S.Srikanth Muthuvijayan" என்று அதன் index பக்கத்தில் எழுதியிருந்தது, 43 ஆண்டுகளுக்குப் பின்னேயும் தெளிவாய் புன்னகைக்க, கொஞ்ச நேரம் பழைய நினைவுகளுக்குள் நீந்தியபடியே புக்கை வெறிக்கப் பார்த்துக் கொண்டே இருந்தேன் ! And 3 வாரங்களுக்கு முன்பானதொரு இரவில் துவங்கினேன் பணியினை !
மனதுக்கு நெருக்கமானதொரு நண்பர் குழாமோடு பயணிக்கும் உணர்வே மேலோங்க, பரபரவென உட்புகுந்தேன் ! சுத்தமான உரைநடை பாணியா ? பேச்சு வழக்கு பாணியா ? - இந்தத் தொடருக்கு எது சுகப்படும் என்ற கேள்வி முதலில் எழுந்தது ! டின்டினுக்கு இரண்டுமே செட் ஆகும் தான் ; ஆனால் கேப்டன் ஹேடாக்குக்கு தூய தமிழ் அந்நியப்பட்டுத் தெரியும் என்று மனசு சொல்லியது ! But இரண்டையுமே முயற்சித்துப் பார்ப்போமே, என்றபடிக்கே முதல் 5 பக்கங்களை, இரண்டு பாணிகளிலுமே எழுதிப் பார்த்தேன் ! எனது gut feel சரி தான் என்றே புரிந்தது ; கரடு முரடான கேப்டனுக்கு தூய தமிழில் வசனங்கள் சுத்தமாய் ஒட்டவே இல்லை ! ரைட்டு, பேச்சு நடை, but without crude language என்று தீர்மானித்துக் கொண்டு பேனாவை பறக்க விட்டேன் !
ஒரு நூறு தடவைகள் படித்த அதே கதை தான் ; மனப்பாடமாய் அதன் வசனங்களும் தெரியும் தான் ; yet - அதே கதைக்குள் பணியாற்றும் போது தான் கதாசிரியர் Herge எத்தனை எத்தனை layer-களை இங்கே கட்டமைத்திருக்கிறார் என்பது புரிந்தது ! And ஒவ்வொரு கதாப்பாத்திரத்துக்கும் அவர் தந்திருக்கும் ஜீவன் எத்தகையது என்பதும் ஸ்பஷ்டமாய்ப் புரிந்தது ! உலகெங்கும் தலைமுறைகளைத் தாண்டி, கோடிக்கணக்கானோரின் மார்க்குகளை பெற்ற சாகசம் என்பதால் இங்கே கதைக்கு நாம் மார்க் போட முகாந்திரங்களே கிடையாது என்பது அப்பட்டம் ; நூறுக்கு நாலாயிரத்து நானூற்று எழுபது மார்க்குகள் போடலாம் ! சித்திரங்களுக்கும், கலரிங்குக்கும் அதே ; அதே - 4470 /100 ! So மொழிபெயர்ப்பெனும் ஜீவநாடியினை மட்டும் படைப்பாளிகளின் வழிகாட்டலோடு அழகாய் அமைத்து விட்டால், ஒரு பாகுபலி பாணியிலான அசாத்தியத்தை கண்முன்னே கொண்டு வர வாய்ப்பிருப்பது பணிக்குள் போகப் போக புரிந்தது ! And truth to tell - முன்னெப்போதும் நாமோ, வேறு யாருமோ, தமிழில் முயற்சித்திரா ஒரு எவரெஸ்ட் சிகரமிது என்பதுமே புரிந்தது ! நமது இதுவரையிலுமான சூப்பர் ஹிட்ஸ் பற்றி சிந்தித்துப் பார்த்தேன்.....மாயாவி...லக்கி லூக்....டெக்ஸ் வில்லர்...டைகர்....XIII ...என்ற ஜாம்பவான்கள் கண்முன்னே வந்து போயினர் ! ஆனால் அவர்களையெல்லாம் தாண்டிய இன்னொரு பரிமாணத்தில் டின்டின் இருப்பதாக எனக்குப்பட்டது ! Of course - இந்த அபிப்பிராயத்தில் உங்களுக்கு முரண்களிருக்கலாம் தான்... but trust me இதுவரைக்கும் நாம் பறந்திருக்காத ஒரு உசரம் டின்டினின் விமானத்துக்குத் தேவை என்பதை சீக்கிரமே நீங்களும் ஏற்றுக் கொள்வீர்கள் !
நகரும் ஒவ்வொரு பக்கத்தோடும், பிரெஞ்சில் இந்த ஸ்கிரிப்ட் கொண்டுள்ள ஆழத்தினையும், இங்கிலீஷ் மொழிபெயர்ப்பினில் அந்நாட்களில் அந்த ஜாம்பவான்கள் செய்திருக்கும் ஜால வித்தைகளையும் உள்வாங்கிட முடிந்தது ! டின்டின் கதைகள் சகலமும் இங்கிலீஷில் சரளமாய் கிட்டினாலுமே, ஒரிஜினல் பிரெஞ்சில் உள்ள ஏதேனும் குட்டி நுணுக்கத்தையும் மிஸ் செய்திடலாகாதே என்று நமது மொழிபெயர்ப்பாளரிடம் சொல்லி, பிரெஞ்சிலிருந்துமே எழுதி வாங்கியிருந்தோம் ! So இந்தாண்டை ஆங்கிலப் பதிப்பு...அந்தாண்டை ஆங்கில ஸ்கிரிப்ட்...and நடுவாக்கில் நான் என்று நாட்கள் ஓட்டமெடுத்தன !
கேப்டன் ஹேடாக் ! டின்டின் தொடரினை ஆராதிக்கும் அனைவருக்குமே தெரியும் - இந்த கடாமுடா கப்பல் கேப்டன் தான் இத்தொடரின் செல்லப்பிள்ளை என்பது ! முணுக்கென்றால் கோபம் கொள்ளும் மனுஷன் ; வாயைத் திறந்தாலே வசவுகள் அருவியாய் கொட்டினாலும், உள்ளுக்குள் சொக்கத் தங்கம் ! வெறும் வாசகனாய் இவரை ஓராயிரம் தபா ரசித்திருப்பினும், இப்போதொரு கோமுட்டித் தலை எடிட்டனாய் ; முழியாங்கண் மொழிபெயர்ப்பாளனாய் தரிசிக்கும் போது, இந்தக் கதாப்பாத்திரத்தினை செத்துக்கிட Herge அவர்கள் எத்தனை மெனெக்கெட்டிருப்பார் என்பதை எண்ணி மலைக்காது இருக்க இயலவில்லை ! And இந்த மனுஷனின் வரிகளை ஒவ்வொரு உலக மொழியிலும் அமைத்திட,ஆங்காங்கே உள்ள மொழிபெயர்ப்பாளர்கள் எத்தனை அண்டா தண்ணீர் குடித்திருப்பார்கள் என்பதையும் எண்ணி மிரளாது இருக்க இயலவில்லை !
டின்டின் ரசிகர்களுக்குத் தெரியும் - அவரது Billions of blue blistering barnacles ; Thundering typhoons ...இத்யாதி இத்யாதிகளின் தாக்கம் என்னவென்று ! இவைகள் ஒரு மாலுமியின் கரடுமுரடான மொழியின் பிரதிபலிப்பு ; கோபத்தின் வெளிப்பாடு ; அதே சமயம் துளியும் நிஜ அர்த்தம் கொண்டவை அல்ல ! இவற்றை தமிழாக்கம் செய்ய ஆரம்பித்த போது தான் தலைவர் ரஜினி அடிக்கடி இமய மலைப்பக்கம் ஏன் போய்க்கொண்டிருந்தாரென்பது புரிந்தது ! ஒரு தனி நோட்டே போட்டேன் - கேப்டனின் இந்த கூக்குரல்களுக்குப் பொருந்தக்கூடிய தமிழ் வரிகளை எழுதி வைக்க ! கதைக்குள் போகப் போக, நேபாலிலும், பனிபடர்ந்த திபெத்திலும் டின்டின் & கேப்டன் & ஸ்நோயி செய்யும் பயணமானது என்னையும் இணைத்துக் கொண்டது போலவே தோன்றத் துவங்கியது ! Trust me guys - மூச்சா போக மூணு மணிக்கு எழுந்த கையோடு, கேப்டனின் வரிகளில் பட்டி டிங்கரிங் செய்த இரவுகள் கடந்த 3 வாரங்களில் அநேகம் ! நாட்கள் ஓட ஓட - இதுவொரு வித obsession போலானது ! லேமினேஷனுக்கோ, பிரின்டிங் இங்குக்கோ பேமெண்ட் கேட்டு மனுஷர்கள் என் முன்னே அமர்ந்திருக்க, என் மண்டைக்குள்ளேயோ கேப்டன் ஹேடாக் "இப்புடி திட்டுவாரோ..? அப்புடி சவுண்டு விடுவாரோ ?" என்ற எண்ணம் ஓடிக்கொண்டிருக்கும் ! மைண்ட்வாய்ஸ் என்று எண்ணி நான்பாட்டுக்கு அவற்றை உரக்க உச்சரித்திருப்பின், பணம் கேட்டு வந்தவர்கள் என் சில்லுமூக்கை சிதறடித்திருப்பது நிச்சயம் ! போகப் போக, கதைக்குள் பயணிக்கப் பயணிக்க, கேப்டனோடு ரொம்பவே நெருங்கிடுவதாய் ஒரு பீலிங் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை ! And ஆங்காங்கே colorful வசவுகளை உருவகப்படுத்திட கொஞ்சம் கொஞ்சமாய் இயன்ற மாதிரிப் பட்டது ! சுத்தமாய் 18 நாட்கள் எடுத்தது - 61 பக்கங்கள் கொண்ட இந்த சாகசத்தினை எழுதி முடிக்க ! And நான் எழுதும் வேகத்துக்கே DTP பணிகளும் முடிந்திட, முந்தைய பொழுதின் பணியினை மறுநாளே திருத்துவது சாத்தியமானது ! ஒவ்வொரு நாளும் புதுசு புதுசாய் திருத்தங்கள் தலைக்குள் தோன்றும் and நம்மாட்களும் தினம்தோறும் corrections போட்டுப் போட்டே இளைத்துப் போகாத குறை தான் ! நம்பினால் நம்புங்கள் guys - இன்று மாலை என் மேஜைக்கு வந்திருப்பது டின்டினின் 7-வது செட் பிரிண்டவுட் ! இவ்வார இறுதி வரையிலும் பொறுமையாய் பரிசீலனை செய்தான பிற்பாடு, படைப்பாளிகளுக்கு ஒப்புதலுக்காக அனுப்பிட திட்டமிட்டுள்ளேன் ! And அங்கே தான் நீங்க வரீங்கோ - பிக்ச்சருக்குள் !
உங்களில் எத்தனை பேர் TINTIN fans என்பது எனக்குத் தெரியாது தான் ; இதோ - இந்த சந்தர்ப்பத்தில் அதனை தெரிந்து கொள்ளலாம் என்று தோன்றுகிறது ! நீங்களொரு TINTIN ரசிகராக இருந்து, அவரது ஆல்பங்களை (சு)வாசித்திருக்கும் பட்சத்தில் - இக்கட கைதூக்கிக் காட்டுவதோடு, கேப்டன் ஹேடாக்குக்கு பொருத்தமான அந்த க்ளாஸிக் வரிகளை மட்டும் வடிவமைத்தும் காட்டிடலாமே ப்ளீஸ் ? "அட...இது கூட செமையா இருக்கே !" என்று எண்ணச் செய்திடும் வரிகள் இங்கே கிட்டிடும் பட்சத்தில், ஓசையின்றி அவற்றை எனது ஸ்கிரிப்டில் இணைத்து, படைப்பாளிகளுக்கு அனுப்பிடுவேன் ! Once அவர்களின் approval கிட்டியான பின்னே - உங்கள் வரிகளில் எவையேனும் பயன்பட்டிருப்பின், அதனை இக்கட அறிவிக்கலாம் ! So டின்டின் fans...உங்களின் கற்பனைக் குதிரைகளை சித்தே கிளப்பி விடுங்களேன் ? And டின்டினுக்கு இதுவரையிலும் புதியவர்களான நண்பர்கள் - எனது இந்த பில்டப்பை பார்த்து, லைட்டான புன்சிரிப்பொன்றை உதிர்த்தபடிக்கே தூங்கப் போகலாம் !
Bye folks....காத்திருப்பது டின்டினின் உலகம் ! என் மேஜையினில் நடுநாயகமாய் சலசலத்துக் கொண்டிருக்கும் இந்த 61 பக்கங்களை இது வரைக்கும் எத்தனைவாட்டி படித்திருப்பேன் ; இன்னமும் எத்தனைவாட்டி படிக்கப் போகிறேன் என்று சொல்லத் தெரியவில்லை ! But இந்தக் காக்கைக்கு பொன்குஞ்சாகவே இப்போது வரை தென்பட்டிடும் இந்த ஸ்கிரிப்ட் படைப்பாளிகளிடமும் ஒரு thumbs up பெற்று விட்டால் - ஒரு லோடு ரவுண்டு பன்களோடு, ரெண்டு லோடு ஸ்பாஞ் கேக்குகளையும் ஈரோட்டுக்கு இறக்கி விடலாம் ! Fingers crossed & God be with us !! See you around ! Have a great week !
And TINTIN fans - உங்களின் சிந்தனைக் குல்லாக்களை போட்டுக் கொள்ளலாமே - ப்ளீஸ் ? இங்கே அனுப்பிட வேண்டாமே என்று எண்ணினால் lioncomics@yahoo.com க்கு மின்னஞ்சலிலும் அனுப்பலாம் ! Thanks in advnce !
And மே மாத ரெகுலர் இதழ்கள் சார்ந்த அலசல்களும் இங்கே தொடரட்டுமே - ப்ளீஸ் ?














