நண்பர்களே,
வணக்கம். மாதங்களில் 12 நிறைவு கண்டிருந்தாலும் நமது சந்தா இதழ்களின் கோட்டா நிறைவுற்றிருக்கவில்லை தான் ! ஆனாலும் ஒரு புதிரான, பளுவான ஆண்டின் மத்தியினில் ஆண்டவன் அருளால் தலைதப்பியிருக்கும் நாமெல்லாம் சற்றே திரும்பிப் பார்க்க இந்தத் தருணம் பொருத்தமானது என்பேன் ! So 2020-ன் இதுவரையிலான நமது இதழ்கள், நமது பதிவுகள் என ஒரு overall கணக்கெடுப்பே இந்த வாரயிறுதியின் பதிவு !
சென்றாண்டின் இதே வேளையினில் உலகமே ஒரு பிரளயப் பயணத்தினை அனுபவிக்கவுள்ளது தெரியாமல் அத்தனை பேருமே ஒரு புது தசாப்தத்தின் வருகையை வரவேற்க வழிகள் தேடிக் கொண்டிருந்தோம் தானே folks? நம் ஆபீஸிலோ ஜனவரியின் சென்னைப் புத்தக விழா ஏற்பாடுகள்; ட்யுராங்கோ ஹார்ட்கவர் இதழ் சார்ந்த பணிகள் ; என ஏதேதோ லயிப்புகளில் பிஸியாக ஓடிக் கொண்டிருந்தன பொழுதுகள் ! டபுள் ஸ்டால் என்பதால் சற்றே கையைக் காலை நீட்டிப் புழங்கலாம் என்ற குஷியும் – விற்பனையும் சற்றே கூடுதலாய் இருக்க வாய்ப்புண்டு என்ற எதிர்பார்ப்பும் கைகோர்த்திட – ஜனவரி எப்போது பிறக்குமென்ற எதிர்பார்ப்பில் காத்துக் கிடந்தோம் !
புலர்ந்தது புது வருஷம்... பிறந்தது ஜனவரியும்... And நமது “முதல் தேதிக்கு புக்ஸ்” என்ற பழக்கத்தின்படி ஆஜரான 5 இதழ்களை நினைவில் வைத்திருப்போருக்கு ஒரு ஆளுயர வெண்டைக்காய் மாலை நம் சார்பில் ! அவற்றை நினைவுக்குக் கொண்டு வர என்னைப் போலவே குட்டிக்கரணங்கள் அடிக்கும் அணியினருக்கு ஒரு லோட்டா வெண்டைக்காய் சூப் ப்ளஸ் இந்த நினைவூட்டல் !
ஜனவரிகளுக்கும், முத்து காமிக்ஸ் ஆண்டுமலர்களுக்கும் ட்யுராங்கோ ஸ்பெஷல் இதழ்களுக்குமிடையே ஒரு செமத்தியான கெமிஸ்ட்ரி உண்டென்று தான் சொல்ல வேண்டும்! And இந்த ஜனவரியின் ”ஆறாது சினம்” ஹார்ட்கவர் இதழுமே அந்த கெமிஸ்ட்ரியில் இன்னொரு அடையாளம் என்பேன்! பிரமாதமான அட்டைப்படம் ; ட்ரேட்மார்க் template கதைகள் & புத்தக விழாவினில் brisk sales என ஜனவரியை சுறுசுறுப்பாய் ஆரம்பித்துத் தந்தது இந்த இதழ்! சிக்கல்களில்லா நேர்கோட்டுக் கதைகளே எனும் போது இவற்றில் பணியாற்றுவது என்றைக்குமே சவால்களாய் இருந்ததில்லை தான் – and was no different this time too! இன்னும் கொஞ்சமே கொஞ்சமாய் கதைகளில் காரமும், களங்களில் ஆழமும் அமையப் பெற்றிருந்தால் ட்யுராங்கோவை இன்னமுமே அற்புதமாய் சிலாகித்திருக்கலாம் என்ற நினைப்பு மட்டும் ஆண்டுக்கொரு தபா எட்டிப் பார்ப்பதுண்டு; and இம்முறையுமே அதனில் மாற்றமில்லை தான்! என் ஆந்தைவிழிகளின் பார்வையில் 7/10.
ஜனவரியில் நான் பெர்சனலாக ரொம்பவே எதிர்பார்த்திருந்த 2 இதழ்கள் MAXI சைஸிலான டெக்ஸின் “இருளின் மைந்தர்கள்” தான்! பெரிய சைஸ்; அழகான layout என்று எனக்கு இந்த MAXI தடத்தில் டெக்ஸை சவாரி செய்ய விடுவது ரொம்பவே பிடித்திருந்தது! And சென்னைப் புத்தக விழா; ஆன்லைன் விற்பனைகள் என எதிர்பார்த்த வெற்றியும் சாத்தியப்பட்டிருந்தது! ஆனால் – ஆனால் கதைக்களத்தைச் சுத்தமாய் மறந்திருந்த எனக்கு – அந்த ‘பிம்பிலிக்கா பிலாபி‘ பாணியிலான ஓட்டத்தை ஜீரணிக்க ரொம்பவே சிரமமாகயிருந்தது என்பதே நிஜம்! சற்றேர 30 ஆண்டுகளுக்கு முன்பு இதே கதையை வாய் பிளந்தபடிக்கு ரசித்த ஞாபகம் அவ்வப்போது தலைதூக்கினாலும் – அரை வேக்காட்டில் இறக்கிய சாதத்தைச் சாப்பிட்டது போலவே இப்போது தோன்றியது எனக்கு மட்டும் தானா ? – தெரியலை! ‘திடமாக, தாட்டியமாக, கால்களைத் தரையில் ஊன்றித் திரியும் எதிராளிகளே டெக்ஸுக்கு சுகப்படுவர்! என்ற எண்ணத்தைப் பலப்படுத்திய இதழ்கள் ! 6.5/10.
ஜனவரியின் முழுத்திருப்தி தந்த இதழ்கள் lightweight பார்ட்டிகளே! வண்ணத்தில், கார்ட்டூன் சந்தாக்களின் முதல் இதழாய் களமிறங்கிய மேக் & ஜாக்கின் “கதவைத் தட்டிய கே(ா)டி” சிரிப்பு மேளாவைச் சிறப்பாய்ச் செய்தது என்று பட்டது எனக்கு! ஒரு வரலாற்று வில்லனான அல் கபோனை வாரு வாரென்று வாரி முழுநீள entertainment தந்த இந்த இதழ் என் ரேட்டிங்கில் 8/10.
ஜனவரியின் ஐந்தாவது இதழும் lightweight தான் – பருமனில்! ஆனால் 007 என்றொரு அதிரடி ஆட்டக்காரர் – க்ளாஸிக் கதைகளோடு தந்த மீள்வருகை; அழகான அட்டைப்படத்துடன்; சன்னமான விலையுடன் என்று அமைந்திட – விற்பனையில் பட்டையைக் கிளப்பியது! இது போன்ற ஆல்பங்களில்; மீள்வருகைக் கதைகளில் – பெருசாய் ரிஸ்க் ஏதும் கிடையாதெனும் போது உருப்படியாய்ப் பணி செய்தால் உத்தரவாதமான ஹிட் பலனாகிடும் என்பதை இன்னொரு தபா புரிந்து கொள்ள வாய்ப்பானது! “பட்டாம்பூச்சி படலம்” – பழைய கள்ளாகவேயிருந்தாலும் ‘கிக்‘ ஏற்றத் தவறவில்லை! 7.5/10.
பிப்ரவரி 4 இதழ்களோடு துவங்கியதை இதோ இந்தச் சித்திரம் நினைவூட்ட உதவிடும்!
And ஆண்டின் முதல் black & white டெக்ஸ் சாகஸம் வெளியானதும் இம்மாதமே! And தெறிக்க விட்ட இதழாய் அது அமைந்து போனதில் செம குஷி எனக்கு! “ஒரு துளி துரோகம்” ஒரு திருப்தியான ஞாயிறு மதியத்து விருந்தாய் அமைந்திட்டதில் பாயாசப் பார்ட்டிகளுக்குமே வருத்தங்கள் இருந்திராது என்பேன் ! 9/10 என் பார்வையில்!
பிப்ரவரியின் b&w படலம் தொடர்ந்தது “தனியே... தன்னந்தனியே” கிராபிக் நாவலுடன் ரொம்ப காலம் கழித்தான ஒரு முழுநீள ஹாரர் ஆல்பம்; நிறைய open ends சகிதம் என்பதால் இதற்குப் பேனா பிடித்தது ஒரு விறுவிறுப்பான அனுபவமாக இருந்ததெனில் – தொடர்ந்த உங்களின் அலசல்களும் சோடையே போகவில்லை! கறுப்புக்கிழவி கதைகளின் தரத்தில் இல்லாவிடினும் அந்த கறுப்பு-வெள்ளைச் சித்திரங்களில் தொனித்ததொரு ஓசையில்லா திகில் இந்தக் கதையினை well above average என்று சொல்லச் செய்தது ! 7.5/10 என் மட்டில்!
பிப்ரவரியின் b&w இதழ் # 3 – ஒரு டாலடிக்கும் அட்டைப்படத்துடன் அதிரடியாய் ஆஜரான ஆர்ச்சி அண்ணாத்தேயை showcase செய்திட்டது – ஒரு fleetway சாகஸத்துடன்! புய்ப்பத் தோட்டாக்கள் ஆர்ச்சியின் ஒரு இன்றியமையாத அங்கமே என்பது தெரிந்திருந்தாலுமே – இந்தவாட்டி ஒரு புய்ப்ப எஸ்டேட்டே கண்முன்னே விரிந்திட மடக் மடக் என எச்சிலை விழுங்கினேன்! ஜாம்பவான்களோ மதிப்பீடுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதால் ஜிலோவென்று அடுத்த இதழ் பக்கமாய்ப் பார்வைகளைத் திருப்பிடலாமா ?
பிப்ரவரியில் வண்ணத்தில் வெளியான ஒரே இதழ் ஜம்போ சீஸன்-2ன் “அந்தியின் ஒரு அத்தியாயம்”! ஒரு கிழ மார்ஷலின் கௌபாய் ஒன்ஷாட் – ஒரு மெலிதான சோகத்துடன் என்ற template நிச்சயமாய் நம்மை லயிக்கச் செய்யுமென்ற எதிர்பார்ப்பு இந்தக் கதையை ‘டிக்‘ அடித்த போதே இருந்திருந்தது என்னுள்! And துளியும் பிசகி்ன்றி இந்த ஆல்பம் எனது / உங்களது எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்தது பிப்ரவரியின் சந்தோஷ ஹைலைட்! கதையில் மட்டும் இன்னும் கொஞ்சம் அழுத்தம் கூடியிருந்தால் நெடுநாள் நினைவில் நிற்கவல்ல இதழயாகியிருக்குமென்பேன்! எனது ரேட்டிங்: 7.5/10.
மார்ச் மாதமோ கலரில் 3 ; b&w-ல் 1 என்று உல்டாவான மாதம் !
And ஆகஷன் சந்தா A-வின் சார்பிலான “பிழையில்லா மழலை” (டெமக்லீஸ் டீம்) பிரமாதமானதொரு த்ரில்லரை – நவீன உலகின் பின்னணியில் சொல்லவிருந்த பாணி நமக்கெல்லாம் ‘நச்‘சென்று பிடித்திருந்தது! செம crisp கதைசொல்லல் எனும் போது இதனில் பணி செய்ததும் உற்சாகமான அனுபவமாக அமைந்தது எனக்கு! நான் போடும் மார்க் : 8/10.
மார்ச்சின் கார்ட்டூனே கோட்டாவினில் களமிறங்கிய “ஆர்டின் ஒரு ஆச்சர்யக்குறி” அத்தனை பிரமாதமான ஆக்கமாய் திருப்தியளிக்கவில்லை என்பதே எனது அபிப்பிராயம்! சிக் பில் தொடரின் அந்த க்ளாஸிக் கதாசிரியர்களின் கைவண்ணத்திலான கதைகளின் முன்னே பின்நாட்களின் கதைகள் அத்தனை சோபிப்பதில்லை என்பதை மறுக்கா புரிய நேரிட்டது எனக்கு! அதன் பலனாய் 2021க்குத் தேர்வு செய்துள்ள உட்சிட்டிக் கோமாளிகளின் ஆல்பமானது செம க்ளாஸிக் கதையே! ஆர்டின் ஒரு ஆச்சர்யக்குறி... வாங்கும் மார்க்குகள் 6.5/10.
சந்தா D சார்பில் ‘நச்‘சென்ற அட்டைப்படத்தோடு நளினமாய் ஆஜரான நமது இளவரசியை சற்றே ‘ஹிஹிஹி‘ ரேட்டிங்குகளோடு அணுக வேண்டிப் போனது நிஜமாய் நெருடிடும் ஒரு விஷயமே! வேற்றுமொழிக் கதைகளில் எனது தேர்வுகள் சற்றே இப்படியும் – அப்படியுமாய் இருக்கும் போதாவது அதற்கொரு சால்ஜாப்பு சாத்தியமே! ஆனால் இங்கிலீஷில் உள்ள கதைகளின் தேர்வினில் இத்தகைய சாக்குப் போக்குகள் சொல்வது சுகப்படாது என்பது புரிகிறது! “எதிர்காலம் எனதே” – வாய் நிறைய பூந்தியை எதிர்பார்த்து, கணிசமான அல்வாவை வாங்கி வந்த அனுபவம் !
மார்ச்சின் ஒரு மறக்கவியலா ஹைலைட் – ஜம்போ சீஸன் 2-ன் இறுதி இதழான “நில்... கவனி... வேட்டையாடு!” Zaroff என்ற பெயரில் இந்த ஆல்பம் ப்ரெஞ்சில் வெளியான வெகு சீக்கிரமே என் கண்ணில் பட்டிருக்க – அந்தச் சித்திர அதகளத்தினில் மெய்மறந்து, நொடியில் ‘டிக்‘ அடித்திருந்தேன்! And பிசகின்றி இதழின் தயாரிப்புத் தரமும் அமைந்து விட, அமேசான் கானகத்துப் பதற வைக்கும் பின்னணியில் தெறித்த ஆக்ஷன் த்ரில்லர் – கதையின் சுலபத்தன்மையையும் தாண்டி ஒரு அசாத்திய அனுபவத்தை நமக்குத் தந்தது! கதை அந்நாட்களது டூரிங் டாக்கீஸ் படங்களது பாணியில் இருந்தாலுமே அந்த exotic பின்னணி + சித்திர & கலரிங் அற்புதங்கள் இந்த இதழை 8.5/10 வாங்கிடச் செய்கிறது எனது பார்வையில்!
ஏப்ரலுக்குள் அடியெடுத்து வைக்க சகலமும் தயாராகி வந்த நிலையில் திடுதிப்பென ஆட்டத்தின் அத்தனை விதிகளையும் நமக்கு மட்டுமன்றி, தேசத்துக்கே புரட்டிப் போட்டது கொரோனா எனும் கொடும் வரவு! இது ஏதோ பன்றிக் காய்ச்சல் மாதிரி; SARS மாதிரி ஆங்காங்கே பீடித்த கையோடு ஓடிப் போய் விடுமென்ற அரைவேக்காட்டு நம்பிக்கையில் குந்திக் கிடக்க – கொரோனா விஸ்வரூபம் சிறுகச் சிறுக திக்பிரமையடையச் செய்த நாட்களை நம்மில் யாருமே ஆயுசுக்கும் மறக்கவியலாது தான்! முழுக்கடையடைப்பு; திரும்பிய திக்கெல்லாம் நோயின் தடங்கள்; தினப்படி ப்ளாஷ் நியூஸ் ரணகளம் என மார்ச்சின் இறுதியும், ஏப்ரலின் முழுமையும் நகர்ந்தது இன்றைக்கொரு தொலைதூரக் கனவாய்த் தோன்றினாலும் அவை கொணர்ந்துள்ள உயிர்ச்சேதங்கள்; வாழ்வாதாரச் சேதங்கள் வரலாற்று வடுக்களாகிடும் தானே? ஈயோட்டிய அந்நாட்களைச் சற்றே சுவாரஸ்யப்படுத்தியவை நமது பதிவுப் நாட்களும், ஜாலியான அரட்டை மேளாக்களுமே – என்னளவிற்காவது! அது நாள் வரைக்கும் பிசாசு போலப் பணியாற்றி வந்தவனு்ககு அந்த 45+ நாட்களில் லேப்டாப் மட்டுமே ஆத்ம நண்பனாகியிருந்தான்! மறுக்கா எப்போ வாழ்க்கை நார்மலாகிடுமோ? எப்போது விற்பனைகள் நார்மலாகுமோ? என்ற கேள்விக்குறிகளின் பின்னால் மாமூலான நமது பணிகள் எவையுமே முக்கியமாய்த் தென்படவில்லை! இன்றளவிற்கும் தேடிடுகிறேன் – pre lockdown நாட்களின் அந்த அசாத்திய வேகத்தினை! தவிர, இந்த வைரஸின் உபயத்தால் எனக்கும், நமது இதழ்களுக்கும் தட்டிப் போனதொரு வாய்ப்பை எண்ணி சித்தே feelings of India வாகவும் இருந்தது ! அது பற்றி பின்னொரு நாள் சொல்கிறேன் !
மெது மெதுாய் இயல்பு நிலைகள் மறுதுவக்கம் கண்ட மே மாதம் நாம் வண்டியை ஓட்டியது இதோ – இந்த இதழ்களுடன்!
மறுபடியும் ஆபீஸ் திறக்கச் சாத்தியமாகி, புக்ஸ் அனுப்பும் வேளையும் புலர்ந்த போது ஆளாளுக்கு டேஞ்சர் டயபாலிக் பாணிகளில் மாஸ்க் அணிந்து கொண்டு நடமாடும் கூத்துக்களின் மத்தியிலும் – ஐயாவுக்கு வசதியாகவே இருந்தது! முகரையில் இரண்டு கண்கள் மட்டுமே தெரியக் கூடுமெனும் போது நம்மை யாரும் அடையாளம் கண்டுகொள்ளாது போக வாய்ப்பே இல்லை தானே? So ஆபீஸ் முழுக்க பூச்சாண்டிகளாய்ச் சேர்ந்து மே மாதத்தின் நடுவாக்கில் அனுப்பிய புக்ஸ் கீழ்க்கண்ட 5 :
ட்ரெண்ட் – தனது அலட்டலில்லா பாணியில், தெளிந்த நீரோடை போலான கதையுடன், சுவையான பட்சணம் தொந்தியைத் தொடு்ம் வேளையில் பரவும் ரம்யத்தைத் தந்திடும் சித்திரங்களுடன் வலம் வந்த “கனவே... கலையாதே!” ஒரு ரிஸ்க் இல்லாத ஜாக்கி ஜான் டப்பிங் படம் மாதிரி என்பேன்! யாருக்கும் கையைக் கடிக்காது; யாருக்கும் போர் அடிக்கவும் செய்யாது – எனும் போது ட்ரெண்ட் எப்போதுமே எனக்கு ஆத்ம தோஸ்தே! So கொஞ்சம் பாரபட்சமாகத் தெரிந்தாலும் 8/10 போட்டு வைக்கிறேன் .
‘தல‘ ஒரு அலட்டலில்லா அவதாரிலுமே அசத்திடும் ஆற்றலுடையவர் என்பதை pleasant ஆனதொரு அட்டைப்படத்துடனான “வானவில்லுக்கு நிறமேது?” நிரூபித்தது என்பேன்! As stories go – ஆரம்பம் சூப்பர்; ஆனால் finishing மிதமே! ஆனாலும் ஆனை சும்மாக்காச்சும் குனிந்து நிமிர்ந்தால் கூட குதிரைகளை விட உசரம் தானே? அந்த ஸ்பஷ்டமான சித்திரங்களும் ஒரு added plus என்பதால் எனது ரேட்டிங் 7.5/10.
இத்தாலிய முகமூடிக்காரர் பெரிய சைஸில், கலர்புல்லான அட்டைப்படத்தோடு “அலைகடலில் அதகளம்” செய்ய முனைந்தது அந்த மாதத்தின் ஒரு குட்டியான ஹைலைட்! அநேகமாய் உலகத்தில் டயபாலிக் சார் இந்தப் பெரிய சைஸில் வெளியானது இதுவே முதல் முறை என்பதே எனது யூகம்! ஆனால் சைஸிலும், அட்டையிலும் ஸ்கோர் செய்த மனுஷன் கதையினில் தடுமாறியது தான் நெருடலே! ரொம்பவே நேர்கோட்டுக் கதை எனும் போது நிஜங்களின் நிசப்தங்களையெல்லாம் ஏப்பம் விட உங்களிடம் மனுஷன் சுணங்கி நிற்க நேரிட்டதால் 6/10 எனது பார்வையில்!
அம்மாதத்தின் surprise package அந்த க்ளாரா குட்டிப்பாப்பாவுடனான “கண்ணான கண்ணே” கிராபிக் நாவல்! Again ரொம்பவே எளிய; ரொம்பவே லீனியரான கதை சொல்லல்! In fact இதைக் கதை சொல்லல் என்பதை விடவும், வாழ்க்கை மீதான ஒரு பார்வை; சிறுமியின் விழிகள் வாயிலாக என்று எடுத்துக் கொள்ளலாம்! நிச்சயமாய் இதற்கு mixed reactions இருக்குமென்பது இதைத் திட்டமிட்ட கொரோனா தாண்டவ நாட்களுக்கு முன்பே யூகித்திருந்தேன் தான்; but still இதையும் முயற்சித்திடும் ஆர்வம் குறைந்திருக்கவில்லை! So ஆக்ஷன் கதைகளே காமிக்ஸ் வாசிப்புகளின் ஜீவநாடியெனக் கருதும் நம் சிறுவட்டத்தின் பெரும்பான்மையினை இந்த பொம்மை ஸ்டைலிலான பொம்மை புக் ‘ஙே‘ என்று விழிக்கச் செய்ததில் எனக்கு வியப்பே இருந்திருக்கவில்லை! சிராபிக் நாவல் தனித்தடத்தில் இது வெளியானதால் தர்ம அடிகள் மிகுந்திருக்கவில்லை என்பது எனது யூகம்! And வெகு காலமாய் நண்பர் மகேந்திரன் பரமசிவம் பதிவிட்டிருந்தது போல – நம்மைச் சார்ந்தோருக்கு நமது ஆயுள்களும், ஆரோக்கியங்களும் எத்தனை முக்கியம் என்பதை இந்த பொம்ம புக் அடிக்கோடிட்டு, அதன் நீட்சியாய் அவரவரது ஆரோக்கியங்கள் மீது துளியூண்டு அக்கறைகளாவது கூடியிருப்பின் அதுவே இந்த இதழின் வெற்றி! என் பார்வையில் 8.5/10.
அந்த மாதத்தின் இன்னொரு surprise ஜம்போ சீஸன் 3-ன் துவக்கப் புள்ளியின் உபயத்தில்! “பிரிவோம்... சந்திப்போம்” கூட Zaroff போலவே ஒரிஜினலாய் வெளிவந்த சற்றைக்கெல்லாம் கண்ணில் பட்டதொரு இதழ் என்பதால் – பிரெஞ்சுத் தொகுப்பு களம் கண்ட ஓரிரு மாதங்களிலேயே தமிழிலும் வெளிவந்து விட்டது! என் கவனத்தை ஈர்த்ததே மழைநீர் சிந்தும் அந்த கௌபாயின் profile shot கொண்ட அந்த அட்டைப்படம் தான்! சித்திரங்கள் + கலரிங் வேறொரு லெவலில் இருப்பதைப் பார்க்க முடிந்த போது – கதை பற்றிய அலசல்களுக்கெல்லாம் புகுந்திட ரொம்ப மெனக்கெடவே தோன்றவில்லை! And நடப்பாண்டின் தெறிக்க விட்ட ஹிட் இதழ்களுக்குள் இந்த ஆல்பமும் நிச்சயம் உருப்படியானதொரு இடம்பிடிக்குமென்ற நம்பிக்கையை உங்களின் சிலாகிப்புகள் ஊர்ஜிதம் செய்தன! ஒவ்வொரு மனிதனுள்ளும் உள்ள grey shadows களை வெளிச்சம் போட்டுக் காட்டிய “பிரிவோம் சந்திப்போம்“ gets 9/10 in my books!
அப்பாலிக்கா வந்த மாதத்தின் கூட்டணி இருந்தது இவ்விதமாய்!
எப்போதுமே ஒருவித இருண்ட பின்புலங்கள் கதை சொல்லலுக்கு உதவிடும் என்பதும்; வாசிப்புகளில் ஒரு வித ஈர்ப்பை ஏற்படுத்தும் என்பதும் எனது அபிப்பிராயங்கள்! இரண்டையுமே “சரி தான் என்ற ரீதியில் ஆதரித்தவர் நடப்பாண்டின் அறிமுக நாயகரான SODA ! ஒண்டிக்கட்டை; கையில் 2 விரல்கள் கிடையாது; குற்றங்களுக்குப் பஞ்சமிரா நியூயார்க்கில் போலீஸ் பணி; ஆனால் வீட்டிலோ பாஸ்டராக வேஷம் என்று பலவித layer களுடன் ஆஜரான இந்தப் புதியவரின் “திசை மாறிய தேவதை” செம ஹிட்! விற்பனையிலுமே ஒரு ‘பேஷ்‘ போட வைத்த இந்த மனுஷன் தொடரவுள்ள புது அட்டவணையினில் ஆளுக்கு முந்தி இடம் பிடித்ததே இவரது வெற்றிக்கு ஒரு நிரூபணம்! பணியாற்றவும் இது போன்ற ஆல்பங்கள் சுவாரஸ்யமாய் அமைவதால் my rating would be 8/10.
சிங்கிள் ஆல்பமாய் வெளியான ”கைதியாய் டெக்ஸ்” என்னைச் சற்றே நெளியச் செய்த இதழே! “ப்ராடியெஸ்” என்ற டெரர் வில்லன் பில்டப்களோடு சரி; செயலில் கந்துவட்டி கோவிந்தனை விடவும் சுமாரான பார்ட்டி தான் என்பதைப் “பச்சோந்திப் பகைவன்” கோடிட்டுக் காட்டியதெனில் “கைதியாய் அதிகாரி” மண்டையில் தட்டிப் புரியச் செய்தது! Average stuff – 6/10.
கார்ட்டூன் பட்டியலில் தெறிக்க விட்ட இரண்டாவது இதழ் – ப்ளுகோட் பட்டாளத்தின் “போர்முனையில் ஒரு பாலகன்”! உருப்படியான கதை; அதனை நகைச்சுவை + பகடி கலந்து கச்சிதமாய்ச் சொன்ன விதம் என்று கணிசமான plus points இந்த வண்ண ஆல்பத்தினில்! துளித் தயக்கமுமின்றி 9/10 தருவேன் நான்!
And நான்காவது இதழாய் வெளியான ஜேம்ஸ் பாண்ட் 007ன் “விண்ணில் ஒரு வேதாளம்” மறுபடியும் அந்தப் பெரிய சைஸ்; vintage பாணி அட்டைப்படம்; க்ளாசிக் கதை என்று ஆஜராகியிருந்தது! நிஜத்தைச் சொல்வதானால் ரொம்ப காலம் பூட்டிக் கிடந்த மச்சி அறையைத் திறந்தது போல் பகீரென பழமையின் நெடி தூக்கலோ தூக்கல்! சமகாலத்து ஜேம்ஸ் பாண்ட் 2.0 அவதாரில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்க, இந்த நெற்றியில் சுருள்முடி 007 பரணின் பண்ட பாத்திரங்களையெல்லாம் இறக்கிப் போட்டு புளி சாதம் செய்ய முனையும் பீலிங்கு மேலோங்கியது! 6/10!
மறு மாதம் :
நமது லயனின் ஆண்டுமலர் மாதமாகவும் அமைய நேரிட்டதால் லக்கி லூக்கின் ஆட்டகளம் பிரமாதமாய்த் தயாராகக் காத்திருந்தது! And ஒரு சூப்பர் ஆல்பம் + ஒரு not bad ரக ஆல்பத்தோடு வந்த “லக்கி’s லயன் ஆண்டுமலர்” நடப்பாண்டின் செம decent விற்பனை கண்ட இதழ்களுள் ஒன்று! ஹார்ட்கவர் என்றாலே வாங்கும் போது value for money என்ற எண்ணம் தலைதூக்குமோ – என்னவோ தெியலை; ஆனால் சொதப்பிக் கிடந்த மார்கெட்டில் கொஞ்சமாய் விறுவிறுப்பை விதைக்க உதவினார் நமது ஒல்லியார்! 8/10 overall I’d say!
அதே மாதம் பரபரவென டைனமைட்டின் திரியைப் போல பாய்ந்தோடி உற்சாகமூட்டிய இதழ் இளம் டெக்ஸின் “எதிரிகள் ஓராயிரம்”! 4 பாகங்களின் தொகுப்பு; மௌரோ போசெலியின் அழகான கதை நகர்த்தல் + crisp ஆன சித்திரங்கள் என்று இங்கே ஏகமாய் நிறைகள் நிரம்பி ஓடியதால் – வெற்று அண்டாவைச் சுரண்டவே சிலருக்குச் சாத்தியமானது! A thumping 8.5/10!
அப்புறமாய் வந்த b&w இதழில் நமது பால்ய நாயகர்களான CID லாரன்ஸ் & டேவிட் ”மீண்டும் கிங் கோப்ரா”வை வேட்டையாட முனைந்தனர் சந்தா D இதழில்! இந்த vintage சாகஸங்கள் இன்றைய நமது அகவைகளோடு அதிகம் பொருந்திப் போவதில்லை என்பதால் – “அன்றைக்கு ரசிக்க முடிந்தது; இன்னிக்குத் தடுமாறுது” என்றே தீர்மானம் கண்டது! அவை உருவாக்கப்பட்டது வேறொரு காலகட்டத்தில்; வேறொரு வயதினரை மனதில் கொண்டே எனும் போது இங்கே படைப்பின் மீதோ; படைப்பாளிகளின் மீதோ பிழையில்லை என்பேன்! And on the same coin – வாசகர்கள் மீதுமே பிழை நஹி; அந்த target audience-ன் வயதுகளில் நாமில்லை என்பதே நிலவரம்! Again ஜாம்பவான்களுக்கும்; நம்மை மேலேற்றி விட்ட ஏணிகளுக்கும் மார்க் போடல் அபச்சாரம் என்பதால் I’ll pass this by!
ஆக ஆண்டின் 6 set இதழ்கள் மீதான அடியேனின் unbiased பார்வை இது! தொடரும் பதிவில் மீத sets பற்றிப் பார்க்கலாம் ! இடைப்பட்ட இந்த நாட்களில், உங்களின் ஆதர்ஷ இதழ்கள் பற்றி; கொரோனா லாக்டௌன் நாட்களின் நினைவலைகளைப் பற்றிப் பகிர்ந்திடலாமே folks? பொழுது ஜாலியாய் நகன்றது போலிருக்குமல்லவா ? தவிர, சில கேள்விகள் உங்களுக்கு :
1. க்ளாஸிக் ஜேம்ஸ் பாண்ட் கதைகளை தற்போது எவ்விதம் பார்த்திடுகிறீர்கள் ? ஓ.கே. தானா ?
2. லக்கி லூக் நமது கார்ட்டூன்கள் undisputed king - சர்தான் ! அவருக்கு அடுத்த ஸ்தானத்தை சிரிப்புப் பார்ட்டிகளில் யாருக்குத் தருவீர்களோ ?
3. மேலே நாம் review செய்துள்ள இந்த 25 இதழ்களில் உங்களின் TOP தேர்வு எதுவோ ? Just 1 please ?
ஒரு பெரும் கத்தையாய் ARS MAGNA-வின் 3 பாகங்களும், “பிரளயம்” கிராபிக் நாவலின் 3 பாகங்களும் மொழிபெயர்ப்பிற்கெனக் காத்துள்ளதால் இப்போதைக்கு I am நடையைக் கட்டறேன்! இந்த 2 மெகா இதழ்களின் பணிகளைப் பூர்த்தி செய்து விட்டால் அப்பாலிக்கா 2021ன் சற்றே சுலபக் களங்களே காத்திருக்கும்! So ஜெய் பாகுபலி...! Bye all... See you around... முன்கூட்டிய கிருஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்!













