Powered By Blogger

Sunday, March 24, 2024

தற்செயலாய் ஒரு (காமிக்ஸ்) எடிட்டர் !

 நண்பர்களே,

வணக்கம். 160 பக்க நீள பெளன்சர் செமத்தியாகவே வேலை வாங்கி விட்டார் - கடந்திருக்கும் வாரத்தின் பெரும்பகுதிக்கு ! எப்போதுமே Bouncer கொஞ்சம் வித்தியாசமான கதைக்களங்களோடு இருப்பது வாடிக்கை என்பதால் ஓரளவுக்குத் தயாராகவே இருந்தேன் தான் - yet இம்முறை புது மாதிரியான 2 காரணங்களால் வேலை இழுத்து விட்டது ! 

காரணம் # 1 : ஒரிஜினலாக வரிகளை எழுதியவர் ! Yes - பிரபல திரைப்பட டைரக்டரும், கதாசிரியருமான Jodorowski தான் பௌன்சர் தொடரின் பிதாமகர் ! ஆனால் இந்த ஒற்றை சாகசத்துக்கு மட்டும் அவர் பேனா பிடித்திருக்கவில்லை ; கதை பொறுப்பினையுமே ஓவியர் Boucq ஏற்றுக் கொண்டிருந்தார் ! So மைய  கதாப்பாத்திரத்தினில் ஒரு சன்னமான மாற்றத்தினை அவர் செய்திருப்பதை கதைக்குள் புகுந்த பின்னே தான் புரிந்து கொள்ள இயன்றது ! முன்பை விட ஒரு மிடறு நல்லவராய், வல்லவராய், பக்குவமானவராய் பௌன்சர் வலம் வர, அதனைப் பிரதிபலிக்கும் விதமாய்  மொழிநடையினிலும் மாற்றம் செய்ய வேண்டியது அவசியமாகியது ! 

And காரணம் # 2 - இக்கட பேனா பிடிக்கச் செய்திருந்த புது மொழிபெயர்ப்பாளர் ! Behind the scenes - மொழிபெயர்ப்பினில் உதவிட, புதியவர்களுக்கான தேடல்கள் நம் தரப்பினில் சதா நேரங்களிலும் ஓடிக்கொண்டிருப்பது வாடிக்கையே & அந்த முயற்சிகளில் சமீபத்தில் கிட்டியதொரு சகோதரி, சிறப்பாகச் செயல்படுவதாகத் தோன்றியிருந்தது ! So அவரிடம் பௌன்சர் பணியினை ஒப்படைத்திருந்தேன் - of course நிறைய வெள்ளோட்டங்களைத் தொடர்ந்தே ! பொதுவாய் புதியவர்களின் பணிகள் மிதமாய் இருப்பதும், அவற்றுள் மண்வெட்டியைத் தூக்கிக் கொண்டு போய் ரிப்பேர் வேலைகள் செய்வதும்  அவசியமாகிடும் ! ஆனால் இம்முறையோ வேறொரு விதத்தில் பட்டி-டிங்கரிங் அவசியமாகிப் போனது ! புது மொழிபெயர்ப்பாளர்களுக்கு பொதுவாய் நாம் நடத்தும் பாடங்களில் ஒரு பகுதி - சற்றே சுதந்திரமாய் எழுத முனைவது சார்ந்தது ! உள்ளதை உள்ளபடிக்கே ஈயடிச்சான் காப்பியாக எழுதிட பல இடங்களில் அவசியமாகிடும் & maybe சில இடங்களில் நாமாய் சற்றே improvise செய்திட வாய்ப்புகளும் அமைந்திடும் ! பிந்தைய வாய்ப்புகள் வரும் போது அவரவரது கைவண்ணங்களைக் காட்டிட நான் எப்போதுமே ஊக்குவிப்பதுண்டு ! அதே போலவே இம்முறையும் செய்திருந்தேன் ! ஆனால் சிக்கலாகிப் போனது எங்கென்றால், புதிதாய் பேனா பிடித்திருந்த சகோதரி, just about everywhere சுயமாய் வரிகளை அமைத்திருந்தார் ! And அவற்றின் ஒரு பகுதி மெய்யாலுமே வித்தியாசமாய் ; ரசிக்கும் விதமாய் ; மாமூலான சொற்பிரயோகத்தினைத் தவிர்த்திருந்தது ! ஒரிஜினலின் ஸ்கிரிப்ட் கையில் இல்லாது, இந்த மொழிபெயர்ப்பினை மட்டும் படித்திருந்தால், 'அட....இது கூட நல்லாத்தான் இருக்கே ?' என்று தோன்றியிருக்கும் ! But ஒரிஜினலின் ஸ்கிரிப்ட் இல்லாது எடிட்டிங் சாத்தியமே ஆகிடாது என்பதால், ஒரு கத்தையிலான பிரெஞ்சு to இங்கிலீஷ் மொழியாக்கத்தினையும் பக்கத்திலேயே வைத்துக் கொண்டு பணியினைத் துவக்கினேன் ! ரொம்பச் சீக்கிரமே புரிந்தது - தமிழ் ஸ்கிரிப்ட் ஒரு இணைத்தடத்தில் தனித்து ஓடிக்கொண்டிருப்பது !! ஒரிஜினல் வரிகள் பாந்தமாய் இருக்கும் இடங்களில் கூட சகோதரி தனது improvisations-களைக் களமிறக்கி இருந்தார் ! And அந்த முயற்சியினில் கதையோட்டத்துக்கு அவசியமான சிற்சிறு தகவல்கள் குறைவது போலவும் பட்டது ! 'ஆஹா...சுமாரா இருக்கென்று இதுவரையிலும் எத்தனையோ ஸ்கிரிப்ட்களை மாற்றி எழுதியுள்ளோம் ; but நல்லா இருந்தும் மாற்ற வேண்டிய அவசியம் இந்த தபா நேர்ந்துள்ளதே !' என்று நெருடியது ! ஆனால் கதைக்கு நியாயம் செய்வதாயின் - இயன்றமட்டிற்கு அதனோடே டிராவல் செய்திடல் அத்தியாவசியம் என்பதால், வேறு வழியே இன்றி மாற்றி எழுதத் துவங்கினேன் - and அது பெண்டைக் கழற்றும் பணியாய் மாறிப் போனது ! மாற்றி எழுதியதில் வரிகள் மிகுந்து போவதையுமே சகோதரி கவனிக்கத் தவறியிருந்தார் and as a result - ஒவ்வொரு கட்டத்திலுமே படங்களைப் பின்னுக்குத் தள்ளும் அளவிற்கு வரிகள் நிறைந்து கிடந்தன ! 'ஆத்தீ...இதைப் பார்த்தாலே நம்மாட்கள் காண்டாகிப்புடுவாங்களே !!' என்ற டர் சேர்ந்து கொள்ள, கிட்டத்தட்ட முக்கால்பங்கு மொழியாக்கத்தினை மாற்றியமைக்க வேண்டிப் போனது & மறுக்கா DTP செய்திடவும் அவசியமாகிப் போனது ! 

ஒரு வழியாய் 2 நாட்களுக்கு முன்னே மொத்தப் பணிகளும் நிறைவுற, நேற்றைக்கு அச்சுக்குப் புறப்பட்டிருந்தார் நம்ம ஒற்றைக்கரத்தார் ! And boy - oh boy - அந்த வித்தியாசமான கலரிங் பாணியில் அள்ளு விடுகிறது ஒவ்வொரு பக்கமும் ! லார்கோ பாணியில் இங்கே டாலடிக்கும் கலர்சேர்க்கைகளை படைப்பாளிகள் செய்திருக்கவில்லை ; மாறாக நாம் எப்போதுமே பார்த்திருக்கும் பௌன்சர் கதைகளின் டிரேட்மார்க்கான சற்றே rustic கலர்களில் பூந்து வெளயாடியுள்ளனர் !! And இம்முறை அச்சிலும் செம துல்லியம் சாத்தியப்பட்டுள்ளது - ஒவ்வொரு பக்கத்தினையும் அதற்காகவே ரசிக்கலாம் போலுள்ளது ! ஒற்றை வரியில் மொத்த இதழையும் விவரிப்பதாயின் - கோடை தெறி ! Of course - கதையின் ஓட்டத்தில் ஒவ்வொருவருக்கும் ஒருவிதக் கருத்திருக்கலாம் தான் ; but கொஞ்ச கால இடைவெளிக்குப் பின்பாய் ஒரு குண்டு புக் சாகஸத்தினை அசத்தலான கலரில் ரசிப்பது நிச்சயமாய் ரம்யத்தைத் தராது போகாதென்றே தோன்றுகிறது ! இனி பைண்டிங்கில் கவனம் செலுத்தும் பொறுப்பு காத்துள்ளது & ஏப்ரலின் இரண்டாவது hardcover இதழும் மிரட்டும் என்ற நம்பிக்கையில் காத்துள்ளோம் ! (காரிகன் புக் - சும்மா தீயாய் அமைந்துள்ளது !!)

குண்டு புக்குகள் ஒன்றுக்கு இரண்டாய் வெளியாகியுள்ள இந்த மாதத்தில் நம்ம சேலம் ஸ்டீல்ஸ் பார்ட்டியின் 'ஆயிரம்வாலா' ஒரிஜினல் கவிதையின் வாலைப் பிடித்துக் கொண்டு கோவை ஸ்டீல் கவிஞர் - "ஆயிரம் தாமரை மொட்டுக்களே !!" என்று எசப்பாட்டைப் பாடி பீதியலைகளை தமிழகம்  முழுக்கப் பரப்பிக் கொண்டிருப்பதை flash news-ல் பார்க்க முடிந்தது !! 'ஆஹா...விட்டாக்கா இந்த பாணபத்திர ஓனாண்டிப் புலவர் - கதை, வசனம், டைரெக்ஷன் என சகலத்தையும் தானே பண்ணி, நமக்கே காதிலே மலர்வளையத்தை செருகிப்புடுவார் என்று தோன்றியது ! So அது பற்றியும் கொஞ்சம் பார்ப்போமே !! 

2018-ன் ஏதோவொரு பொழுதினில் நம்ம STV இந்தத் தகவலை இங்கே blog-ல் பதிவிட்டிருந்திருக்கிறார் ! And அதற்கு நான் பதிலும் கீழ்க்கண்டவாறு போட்டிருக்கிறேன் போலும் !! நம்மளுக்கெல்லாம் அன்றைய பொழுதுக்குப் போட்டிருக்கும் சொக்காய் என்ன கலரென்று கேட்டாலே கண்ணாடியைப் பார்த்துச் சொல்ல மட்டுமே முடியும் ; but நண்பர் ஒரு வண்டிப் பின்னூட்டங்களுக்கு மத்தியில் இதையெல்லாம் தோண்டி / தேடிப் பிடிப்பது எவ்விதமோ - புரியில்லா !! 


MY REPLY

Vijayan26 August 2018 at 18:43:00 GMT+5:30
Tex விஜயராகவன் & friends: ரூம் போட்டே தான் யோசித்தார்கள் என்பது அப்பட்டமாய்த் தெரிகிறது!! வாழ்த்துக்கள் & கனிவான வார்த்தைகளுக்கு நன்றிகளும்!! 

கொஞ்ச காலம் முன்பாய் "காமிக்ஸ் பாஸ்போர்ட்" என்றதொரு இலவச இணைப்பை வழங்கிய சமயமே எல்லா வெளியீ டுகளின் எண்ணிக்கையினையும் ஒரு பொழுது போகா நாள ில் போட்டுப் பார்த்தேன்! ஆனால் நான் அந்தக் கணக்குகளை அணுகிய விதம் சற்ற மாறுபட்டது! ஏன் கைக்கு முத்து காமிக்சின் பொறுப்பு மாறியது - " கடல் பூதம்" இதழ் துவக்கத்திலிருந்தே ! அதன் வெளியீட்டு நம்பர் : 167 என்று நினைக்கிறேன்! So 166 இதழ்கள் + வாரமலர் இதழ்கள் என சகலமுமே எனக்கு முந்தைய அணிகளின் உழைப்பின் பலன்களே! அதையும் எனது பட்டியலோடு கோர்த்துக் கொள்ள மனம  ஒப்பவில்லை! அவை நீங்கலாய் நான் மாத்திரமே அடித்த பல்டிகளை மட்டும் கணக்கில் எடுத்தால் சுமார் 760 தொட்டிருப்போம் என்று நினைக்கிறேன் - தற்சமயமாய ்! தொடரும் அடுத்த சிலபல ஆண்டுகளுக்கு உழைத்திடும் ஆற்றலை ஆண்டவன் கொடையாக அருள்வாரின் - இன்னொர் 5 ஆண்டுப் பொழுதில் ஆயிரம் என்ற நம்பரைத் தொடும்  சாத்தியமுண்டு என்பேன்!! If & when we get there - we will celebrate it for sure guys!!

அட - காரணங்களுக்கா பஞ்சம் - நமக்கொரு புது குண்டு  புக்கை முன்மொழிய ? ஒன்றுமே சிக்காவிட்டால் - "JUST LIKE THAT Special" என்றொன்றை அறிவித்தால்ப் போச்சு!!

Phew !!! ஆறு வருஷங்களுக்கு முன்னே 'அப்பாலிக்கா பாத்துக்கலாம் !' என்ற தகிரியத்தில் அள்ளி விட்டதொரு வாக்குறுதி இன்றைக்கு மீண்டும் உயிர்பெற்று முன்னிற்கிறது ! Truth to tell, போன வருஷத்தின் ஏதோவொரு பொழுதிலேயே  "ஆயிரம்" என்ற இந்த மைல்கல்லை தாண்டியிருப்போம் என்பது எனக்குத் தெரிந்திருந்தது ! But சும்மாவே அறுபது-எழுபது இதழ்களைப் போட்டு, போன வருஷத்தினை தெறிக்க விட்டுக் கொண்டிருந்த சூழலில், இதையும் சேர்த்துக் கொண்டால் வம்பாகிப் போகுமே என்று டிக்கியை க்ளோஸ் செய்தே வைத்திருந்தேன் ! But கொஞ்சம் லேட்டானாலும், லேட்டஸ்ட்டாய் பட்டியல் போட்டு வந்துள்ளனர் நண்பர்கள் !! இன்னுமொரு Phewwwww !! 

1000 !! ஆயிரம் !! மிரட்டலானதொரு நம்பர் தான் ! And மறக்க முடியாதோர் நெடும் பயணத்தின் பலனும் தான் ! ஆனால் இது எண்ணற்றோரின் கூட்டு முயற்சிகளின் பலனே எனும் போது - இதற்கான பெருமையினை, வேதாளரின் அடர்கானகக் குகை போலான எனது சொட்டைக் கபாலத்தில் மட்டும் ஏற்றிக் கொள்வது பொருத்தமாகாது என்பேன் ! 'இது லயனின் ஆயிரமாவது இதழ் ; முத்து காமிக்சின் இதழ் # 1000" என்ற மைல்கல்களைத் தொட்டிருப்பின்  - தாரை தப்பட்டை கிழியக் கொண்டாடியிருக்கலாம் தான் ! But இதுவோ தனிமனித நம்பர் தானே மக்கா ? இதுக்கு தடபுடலெல்லாம் தேவை தானா ? 

ஸ்பெஷல்களோ ; இல்லியோ - முப்பத்தி ஒன்பது ஆண்டுகளில் 1000 என்பது ஒரு சுலப நம்பர் அல்ல தான் - moreso ஒரு பொம்ம புக் வரிசைக்கு ! And இதில் கூத்தென்னவென்றால் - தோராயமாய் முதல் 27 ஆண்டுகளில் எம்புட்டு புக்ஸ் போட்டிருப்போமோ - அதனை தொடர்ந்த 12 ஆண்டுகளிலேயே தொட்டிருப்போம் ! Comeback ஸ்பெஷல் இதழின் 2012 க்குப் பின்பான நமது வேகம் பிசாசுகளின் வேகம் என்பதில் no doubts ! இந்த வேகமோ ; 1988 களின் வாக்கில் - லயன் ; திகில் ; ஜூனியர் லயன் ; மினி லயன் ; முத்து காமிக்ஸ் என்று சுளுக்கெடுத்துக் கொண்டிருந்த பொழுதுகளின் வேகமோ - துவக்கம் முதல் நமது மொத்தப் பயணத்துக்குமே இருந்திருப்பின் - இந்நேரத்துக்கு ரண்டாயிரம் ; மூவாயிரம் - என ஏலம் போட்டுக்கொண்டிருந்திருக்க முடிந்திருக்கும் ! And "வாரமலர்" இதழ்களை ஸ்கேன் பண்ணி, பிரிண்ட் போட்டு "Only 2500 மக்கா" என இன்று ஏலம் போடுவதைப் போல ஏகப்பட்ட சேவையாற்றிடும் பெரும் கடமைகளும், ஆர்வலர்களின் பொறுப்பான தோள்களில் விழுந்து வைத்திருக்கும் ! (By the way - வாரமலர் இதழ்களை மறுபதிப்பு செய்திட முயற்சிப்போம் guys ; சீக்கிரமே சொல்கிறேன் !)

Second wind என்று சொல்வார்கள் - நெடும் தூர ஓட்டத்தில் பங்கேற்போர் ! முதலில் ஒரு stretch ஓடுவதிலேயே நாக்குத் தொங்கிவிட்டது போல் தோன்றுவதும், ஆனால் கொஞ்ச நேரத்தில் எங்கிருந்தோ அதிசயமாய், புதுசாய் 'தம்' கிட்டிட, மறுக்கா செம வேகமெடுப்பார்கள் ! அது போல் தான் பார்க்கத் தோன்றுகிறது - இந்த 2012-க்குப் பின்பான நமது மறுவருகையினையும், அதன் நீட்சியான உத்வேகத்தையும் ! 1984-ல் வேறு வழி தெரியாமல் காமிக்ஸ் போடப் புகுந்தவன் தான் நான் என்பதை என்றைக்குமே ஒளித்ததில்லை ; if things had gone to plan - கோகுலம் போல ; பூந்தளிர் போல ஒரு சிறார் மேகஸினுக்கு எடிட்டராய் குப்பை கொட்டியிருந்திருப்பேன் - for God knows how long ! ஆனால் பெரும் தேவன் மனிடோ தீர்மானித்திருந்தது வேறு விதமாய் ! And அவரது கொடையில் தான் இன்றும் வண்டியோட்டிக்  கொண்டிருக்கிறேன் - ஒரு காமிக்ஸ் எடிட்டராய் ! So டெக்ஸ் வில்லர் சாகசத்தை தலைப்பைப் போல "தற்செயலாய் ஒரு காமிக்ஸ் எடிட்டர்" எனலாம் !   

And இந்தத் தற்செயலான காமிக்ஸ் எடிட்டருக்கு Post 2012 - அந்த "ரெண்டாவது மூச்சு" கிடைக்காது போயிருப்பின், ரிட்டையராகும் தருணம் வரைக்கும் ஆயிரம்-ரண்டாயிரம் என்ற மைல்கல்களெல்லாம் சாத்தியமே ஆகியிராது ! 'தேமே' என ஆண்டுக்கு 20 புக்ஸ் போல போட்டு விட்டு, நிதான நடை போட்டிருந்திருப்போம் ! ஆனால்...ஆனால்....அந்த second wind என்ற மாயாஜாலம் தான் 2012 to இதுவரையிலுமான 2024-ல் பல அசாத்திய நம்பர்களை ; அசாத்திய நண்பர்களை சந்திக்க வாய்ப்புத் தந்துள்ளது ! எத்தனை எத்தனை புக்ஸ் ; எத்தனை குண்டு புக்ஸ் ; எத்தனை ஸ்பெஷல்ஸ் ; எத்தனை பக்கங்கள் ; எத்தனை ஜானர்கள் ; எத்தனை அனுபவங்கள் - லேசாய் அசை போடும் போதே கண்ணைக்கட்டுகிறது !! And இம்மி கூட யோசிக்க அவசியமே லேது - இந்த ராட்சஸ ஆற்றலெல்லாம் எங்கிருந்து வந்ததென்று ; becos அதன் விடை நமக்கு ஸ்பஷ்டமாய்த் தெரியும் ! நீங்களே ; இங்குள்ள ஒவ்வொருவருமே - இந்தப் புத்துணர்ச்சிக்கும் ; உத்வேகத்துக்கும் காரணகர்த்தாக்கள் ! 

எப்படி என்கிறீர்களா ? சொல்கிறேனே : 

1984 முதல் 2011 வரையிலான பயணத்தில் நான் ஈட்டியிருந்தது ஏகப்பட்ட நற்பெயரையும் ; கணிசமான நாறப்பெயரையுமே ! So 2012-ல் மறுக்கா கடை போட நான் முனைந்த போது - 'ஹி ..ஹி...தம்பி நாலு மாசம் ஒட்டுமா வண்டிய ?' என பகடியோடு என்னைப் பார்த்திருக்கலாம் தான் ! Oh yes - கெக்கலிப்போடு என்னிடம் பேசியோரும் அன்றைக்கு ஒரு சிறுபான்மையில் இருந்ததை மறுக்க மாட்டேன் தான் ; ஆனால் பெரும்பான்மையினர் நெடுநாளாய் தொலைந்து போன்றதொரு நண்பனை சந்தித்த வாஞ்சையோடு அரவணைத்துக் கொண்டது தான் highlight ! இந்த இரண்டாவது இன்னிங்சில் உங்களிடமிருந்த பக்குவமும், நிதானங்களும் சிறுகச் சிறுக என்னிடமும் தொற்றிக் கொண்டன ! மூ.ச.க்களை ஒரு பயணத்தின் தவிர்க்க இயலா அங்கமாய்ப் பார்த்து விட்டு, அங்கிருந்துமே முழுசாய் மீண்டு, பயணத்தைத் தொடர்வது எப்படியென்று கற்றுத் கொள்ள முடிந்தது ! இதோ - இந்த 2024-ல் ஒரு குட்டியூண்டு சர்குலேஷனிலுமே உலகத்தரத்தில் டின்டின் ஆல்பங்களை வெளியிடும் சூட்சமங்களைக் கற்றுத் தந்திருப்பதும் நீங்களே ! எல்லாவற்றிற்கும் மேலாய் - அந்த ஈரோ ; இந்த ஈரோயினி ; அந்த பெசல் ; இந்த பெசல் - என்ற கணக்கு வழக்குகளையெல்லாம் தாண்டி - உருப்படியானதொரு பயபுள்ளையாய் ; நல்லதொரு நண்பனாய் இருப்பதே பிரதானம் என்ற புரிதலைப் புலரச் செய்தீர்கள் ! இம்புட்டு போதாதா - கைமாறாக சிக்கின, சிக்கின பல்டிக்களையெல்லாம் அடித்து - சமீப ஆண்டுகளை ஒரு காமிக்ஸ் மேளாவாக்கிடும் வைராக்கியம் என்னுள் பிறப்பதற்கு ? 

And இங்கே - நமது இந்த blog-ன் பங்களிப்பையும் மறுப்பதற்கில்லை ! அமைதியாய் வாசிப்போரும் சரி, ஆரவாரமாய் பின்னூட்டமிடுவோரும் சரி, மாயாவி மாமாவுக்கான மின்சாரத்தைப் போல் என்றால் மிகையாகாது ! ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு மாதமும், உங்களிடமிருந்து ஏற்றிக் கொள்ளும் சார்ஜ் தானே இந்த Version 2.0-ன் எரிபொருளே ? So இங்கு நீங்கள் முன்வைத்திருக்கும் இந்த 'ஆயிரம்வாலா' கோரிக்கையினை மறுக்கவாச்சும் முடியுமா - simply becos இது எனது தனிமனித மைல்கல்லே அல்ல ; ரயில்பெட்டிகள் ஒன்று சேர்ந்து எஞ்சினை முடுக்கி விடும் ஒரு அதிசயத்தின் கொண்டாட்டம் எனும் போது !

JUST LIKE THAT ஸ்பெஷல் !!!! போட்டுத் தாக்கிடலாமா guys ? ஆயிரம் பக்கம் ; ஆயிரத்து சொச்சம் பக்கம் என்றெல்லாம் கப்பைகளைப் பிளக்காமல் - ரூ.400 to ரூ.500 விலைக்குள் இருப்பது போல் ஏதேனும் ஒன்றைத் திட்டமிடுவோமே ? எதை போடலாமென்று any suggestions மக்கா ?   

Bye all ; see you around ! Have a lovely Sunday ! இளம் டெக்ஸ் வில்லர் பணிகளுக்குள் குதிக்கப் புறப்படுகிறேன் ! 

257 comments:

  1. Replies
    1. இந்த வாரம் முதலாய் "மீ தி first"க்கு ஒரு ரவுண்டு பன் அனுப்புவதென்ற தீர்மானத்தை - அடுத்த வாரம் முதலாய் அமல்படுத்தத் தீர்மானித்துள்ளேன் - செயலர் டயட்டில் இருப்பதாக தலீவர் தகவல் சொல்லியுள்ளதால் !

      Delete
    2. சார் நான் 'பன்னு சாப்பிடும் டயட்'டில் இருக்கேனுங்க சார்..

      பன்னு பெட்டிகளை அனுப்பவேண்டிய முகவரியை ஈமெயில் அனுப்பி வைக்கிறேனுங்க சார்!😋💦

      Delete
    3. இது போங்காட்டம் 😭😭😭

      Delete
    4. எஸ் சார் ...அடுத்த வாரம் முதல் தான்...இந்த வாரம் வேண்டாம்...

      Delete
    5. அதற்கு முந்தைய வாரத்துக்கான
      ரவுண்ட் பன் இன்னும் வரலை...

      Delete
  2. அனைவருக்கும் வணக்கம்

    ReplyDelete
  3. # (By the way -வாரமலர் இதழ்களை மறுபதிப்பு செய்திட முயற்சிப்போம் guys ; சீக்கிரமே சொல்கிறேன் !) #
    ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் சார்!

    ReplyDelete
  4. அனைவருக்கும் வணக்கம்...

    ReplyDelete
  5. ///JUST LIKE THAT ஸ்பெஷல் ///

    ஜூஊஊஊப்பர்!!

    ////எதை போடலாமென்று any suggestions மக்கா ///

    'தல'யை விட தகுதியானவர் வேறு யார் இருக்க முடியும் சார்?!!

    ReplyDelete
  6. @Edi Sir..😍😘

    10 கதை ..
    பாதி கிளாசிக்..😘
    பாதி புச்சு..😍

    பாதி கலர்..😍😃
    மீதி க.வெ..😃😍

    போட்டு தாக்கிடுவோம்..💐

    ReplyDelete
  7. Just like special! வெடிய போடு moment

    ReplyDelete
  8. சிறப்பான பதிவு .. சிறப்பான அறிவிப்பு சார்...
    ஆனால் பெயர் மட்டுமே இந்த மைல்கல் தருணத்திற்க்கு பொருத்தமாக இல்லை..

    ReplyDelete
  9. வணக்கம்.. Just Like That..ii

    ReplyDelete
  10. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  11. சரிங்க ஆசிரியே
    புத்தகம் நல்லா குண்டா இருந்தா சரிதான் ஆசிரியரே

    யாரை கேக்கிறது
    தல எப்போதும் வருவாரு
    அவரு வேண்டாம் இந்தவாட்டி

    ReplyDelete
  12. வந்துட்டேன் வந்துட்டேன்...
    "சைவ" வணக்கம் நண்பர்களே🙏

    ReplyDelete
  13. வணக்கம் நண்பர்களே!!!

    ReplyDelete
  14. ஒரு அழகான TWIST AND TURN உள்ள ஒரு அருமையான திரைக்கதையை வாசித்த திருப்தி. JUST LIKE THAT SPECIAL க்கு SUGGESTIONS சொல்லும் அளவுக்கு எனக்கு பழைய நம் புத்தகங்கள் குறித்த அறிமுகம் இல்லை. ஆகையால் நம் நண்பர்கள் பெரும்பான்மையாக வெளியிடும் கருத்துக்கு ஓகே சொல்வேன். ஆனா ஓரத்துல புதுசா ஏதாவது பேட்மேன் கதையை தமிழில் பேச வைக்க முடியுமா என்று நப்பாசை ஓடிக் கொண்டே தான் இருக்கிறது.

    ReplyDelete
  15. (By the way - வாரமலர் இதழ்களை மறுபதிப்பு செய்திட முயற்சிப்போம் guys ; சீக்கிரமே சொல்கிறேன் !)💪💪💪💐💐💐

    ReplyDelete
  16. Dear Editor
    I wish just like that special to be 1000 pages, Tex willer normal book size, and to have specific hot titles of spider like neethikkavalan spider, yaar antha mini spider and Also our beloved Archie.Plus Tex titles which came as Rs 10 series Thuyil ezhuntha pisasu etc.Also some karuppu kizhavi stories .Add some more tiles suggested by blog friends.
    Just my wish.
    Regards
    Arvind

    ReplyDelete
    Replies
    1. துயில் எழுந்த பிசாசு ? ஆத்தாடியோவ் - அந்நாட்களில் வாங்கிய பூசைகளே இன்னமும் மரங்களை நண்பரே !!

      Delete
  17. // JUST LIKE THAT ஸ்பெஷல் !!!! போட்டுத் தாக்கிடலாமா guys ? ஆயிரம் பக்கம் ; ஆயிரத்து சொச்சம் பக்கம் என்றெல்லாம் கப்பைகளைப் பிளக்காமல் - ரூ.400 to ரூ.500 விலைக்குள் இருப்பது போல் ஏதேனும் ஒன்றைத் திட்டமிடுவோமே ? //

    Yes. Please

    ReplyDelete
  18. @Edi Sir..😍😘

    (By the way - வாரமலர் இதழ்களை மறுபதிப்பு செய்திட முயற்சிப்போம் guys ; சீக்கிரமே சொல்கிறேன் !)..😍😘😃😀

    PVSS..😍😘😃😀

    அசத்தலான அறிவிப்பை வெளியிட்டு..
    (பாலை வார்த்ததற்கு சந்தோசமோ சந்தோசம்)..😍❤💛💙💚💜🏆

    ReplyDelete

  19. ஆயிரம் பக்கங்களாக வெளியிடலாம் சார். வண்ணத்தில் 500-600 பக்கங்கள். கறுப்பு & வெள்ளையில் 400- 500 பக்கங்கள்.
    1000 - சிறப்பிதழ்களாக 3 மாத இடைவெளியில் இரண்டு சிறப்பிதழாக வெளியிடலாம் .முகவர்களுக்கும், வாசகர்களுக்கும் வாங்க எளிதாக இருக்கும்.
    கொண்டாட்ட தருணம் என்பதால் இதைச் செய்யலாம்.

    வாரமலர் ஆர்வமில்லை. வாங்கத் தவறப் போவதுமில்லை.

    ReplyDelete
    Replies
    1. அடடா அருமை செனா அனா சார். இரண்டு இதழ்கள் அருமையான idea

      Delete
    2. நல்ல ஐடியா பொருளர் ஜி...

      Delete
    3. சார் - வண்ணத்தில் 500 to 600 பக்கங்கள் என்றாலே விலை ஆயிரத்து ஐநூறுக்கு ஓடிப்புடும் சார் ; அதன் பின்னே ஒரு b & w இதழ் என்றால் அதுவொரு ஐநூறு !! ஆக மொத்தம் ரண்டாயிரம் !!!

      Delete
  20. சூப்பர் சார்....வார மலர் ஒன்னக் கூட கண்ணால் கண்டதில்லை...சென்ற பதிவில் நண்பர் கோரிய ஒற்றைக் கண் மர்மத்தை அதே சைசுல விடுங்க....



    என்னதானிருந்தாலும் ஆயிரம் கண்டது சாதாரணமல்லவே...இதக் கொண்டாட நிச்சயமா பிரம்மாண்டம் வேண்டும்...யாரும் நினைத்துப் பார்க்க இயலா கதையொன்ன போட்டுத் தாக்குங்க ஆயிரம் பக்க அளவில் அல்லது ஆயிரம் விலையில்...அடுத்த வருடம் வேணும்னா குண்டுகள குறச்சி இதுக்கு ஈடு செய்வோமே

    ReplyDelete
  21. எடிட்டர் சார்,

    ஆல்டபரான் தொடரை வெளியிடலாமே!! நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறேன். பரிசீலிக்கவும். நன்றி!

    ReplyDelete
  22. சார் ஆரம்பிக்கலாம் சார். Just like that special. 500 ரூபாய் விலையில் நீங்களே பார்த்து ஏதாவது கென்யா போல அர்ஸ் மேக்னா போல ஏதாவது ஒன்று போட்டு விடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. +10000, மறு பதிப்பு மற்றும் கிளாசிக் கதைகளை தயவு செய்து தவிர்த்து விடுங்கள்.

      Delete
  23. By the way - வாரமலர் இதழ்களை மறுபதிப்பு செய்திட முயற்சிப்போம் guys ; சீக்கிரமே சொல்கிறேன்✓

    ReplyDelete
  24. J.l..t .spl தல தான் சார் வேண்டும். சாரி கடல் சகோ.

    ReplyDelete
    Replies
    1. போதும் நண்பரே..பரகுடா போல கடல் மறைத்திருக்கும் முத்துக்களை தேடுவோமே...அலை ஓயாமல் வந்து கொண்டுதானே இருக்கும்

      Delete
    2. இதுக்கு எதுக்கு சகோ சாரி எப்படியும் வந்து விடுவாருனு தெரியும் சகோ 😊😊😊

      Delete
  25. ///தற்செயலாய் ஒரு (காமிக்ஸ்) எடிட்டர் !///

    செம டைட்டில் சார்.... பதிவில இந்த டைட்டில் எங்கே பொருந்தும்னு பார்த்தா பிச்சிட்டீங்க..

    ஒரு படம் பார்த்த திருப்தி பதிவை வாசித்ததில்....

    இத்தோடு 3முறை வாசித்திட்டேன், விசயங்களை கனெக்ட் செய்துள்ள விதம், சான்ஸே இல்ல சார்..
    "எடிட்டர் விஜயன்"-- சும்மா மிரட்டுகிறார் கெத்தாக...!!!

    ReplyDelete
  26. ///160 பக்க நீள பெளன்சர் செமத்தியாகவே வேலை வாங்கி விட்டார் - கடந்திருக்கும் வாரத்தின் பெரும்பகுதிக்கு//

    வாஆஆஆஆஆஆவ்.... 160பக்கங்கள்.. போடு வெடியை... வழக்கமான 2ஆல்பங்கள் எனில் 100பக்கங்கள்... இது 3ஆல்பங்களை தாண்டி ஓடுது...
    காத்திருக்கும் விருந்து எத்தகையதுனு புரிகிறதுங் சார்..

    அந்த விலை ரூ400ஏன்னும் இப்ப தெரிஞ்சிட்டது.
    அறிவிப்பை பார்த்துட்டு நண்பர் ஒருவர் வினவியிருந்தார், ரூ400சற்றே விலை அதிகமாக உள்ளதே என...நான் எனக்கு தெரிந்த காரணங்களை சொல்லி இருந்தேன்.அவரும் வாங்கிட தயாராகிட்டார்.. இப்பதான் நிஜ காரணம் புலனாகிறது..

    பெளன்சர் சும்மாவே பொளப்பாரு..160பக்கங்களில் சும்மா தெறிதான்...

    ReplyDelete
    Replies
    1. அட்டவணையில் பக்க நம்பர் குறிப்பிட்டிருப்போமே சார் ?

      Delete


  27. ///ஒற்றை வரியில் மொத்த இதழையும் விவரிப்பதாயின் - கோடை தெறி ! Of course - கதையின் ஓட்டத்தில் ஒவ்வொருவருக்கும் ஒருவிதக் கருத்திருக்கலாம் தான் ;//

    பெளன்சர்னா எப்பவுமே இப்படிதானேங் சார்.... மீண்டும் அரங்கேரப்போகும் அந்த விவாதங்களுக்கு காத்துள்ளேன்..

    தோழனின் கதைக்கு பிறகு இப்ப மீண்டும் அந்த நாட்கள் திரும்ப போகுதா.....ஊய்..ஊய்!!!

    ReplyDelete
  28. வாழ்த்துகள் விஜய(ராகவ)ன் சார்!

    முன்னவர் 1000+ புத்தகங்களை வெளியிட்டு சாதனை படைக்கிறார் என்றால், பின்னவர் அவற்றைப் பற்றிய குறிப்புகளை மெனக்கெட்டு நோட்டில் எழுதி வைத்து, பொறுமையாக புள்ளிவிவரங்கள் அலசி ஆராய்ந்து சாதனை படைக்கிறார்! 

    @விஜயராகவன்:
    ஒரு வேண்டுகோள்! உங்களுடைய உழைப்பு அனைவருக்கும் பயன்படுமாறு, நீங்கள் எழுதி வைத்திருக்கும் லயன்/முத்து நிறுவன வெளியீடுகள் பற்றிய குறிப்புகளை விக்கிபீடியாவில் ஏற்றினால் பயனுள்ளதாக இருக்கும்!

    எனக்குத் தெரிந்து லயன்/முத்து நிறுவன வெளியீடுகள் குறித்த மிக விரிவான தகவல்களை (வெளியான மாதம், ஆண்டு, தலைப்பு, விலை, கதை/பக்க எண்ணிக்கை, மறுபதிப்பு, இலவச இணைப்புகள் - இவை போன்ற கூடுதல் விவரங்கள்) இதுவரை யாரும் இணையத்தில் பகிர்ந்ததில்லை. நண்பர்கள் சிலரிடம் இத்தகவல்கள் இருந்தாலும், அவற்றை ஏதோ ஒரு ராணுவ ரகசியம் போல, இரகசியமாக வைத்திருக்கிறார்கள்! :-D

    இணையத்தில் முறையாக அட்டவணைப் படுத்தினால், அந்த data-வை மென்மேலும் analyze செய்து, இன்னும் பல சுவாரசியமான புள்ளி விவரங்களைக் கண்டுபிடித்து, எடிட்டரை அலற விடலாம்! :D செய்வீர்களா?!

    //ரூ.400 to ரூ.500 விலைக்குள் இருப்பது போல் ஏதேனும் ஒன்றைத் திட்டமிடுவோமே ?//
    Batman: The Killing Joke

    ReplyDelete
    Replies
    1. I was about to suggest this after reading today's blog - read your comment and .. Bingo !!

      @Editor Sir,

      The Killing Joke in Black and White Hardbound please

      Delete
    2. Inside flap variant art with Dhigil emblem - Lion Library outside !!

      Delete
    3. தேங்யூ கார்த்திக்....

      "பதிவெழுத பத்து கட்டளைகள்"- போட்டு பலருக்கும் இன்ஸ்பைரேசன் ஆக இருந்த கார்த்திக்கோட வேண்டுகோளை மறுக்கத்தான் இயலுமா!!!

      விக்கிபீடியாவில் எப்படி பதிவேற்றலாம் என்பதை நம்ம நண்பர்கள் உடன் கலந்து பேசி செய்திடலாம்....மிகப்பெரிய வேலை அது, கொஞ்சம் கொஞ்சமாக விசயங்களை சேகரித்து வலையேற்றிடலாம்.. யாராவது செய்தால் தான் அதை அடிப்படையாக கொண்டு திருத்தங்கள் செய்ய ஏதுவாகும்...

      Delete
    4. நடந்தால் சரவேடி தான், ++++++++

      Delete
    5. Excellent suggestion Karthik. Good work Vijayaragavan; kudos to you.

      Delete
    6. BATMAN நம்ம கூட்டத்தோடு கலந்து "உள்ளேன் ஐயா !" போடக்கூடிய ரேஞ்சில் இப்போதெல்லாம் இல்லை கார்த்திக் !

      ஒரு தனித்தடத்தினில், ஆண்டு முழுக்க exclusive ஆக எக்கச்சக்க பேட்மேன் புக்ஸ்களை, நல்ல விலைகளில், பல காலத்துக்கு தொடர்ச்சியாய் வெளியிட நாம் ரெடியாகிக்க வேணும் - அவர் இருக்கும் தெரு பக்கமாவது அண்டிட முயற்சிக்கும் முன்பாக ! டின்டினில் மொத்தமே 23 கதைகள் ; ஆஸ்டெரிக்சில் 50 சொச்சம் ; so வருஷத்துக்கு மூன்றோ, நாங்கோ,ஐந்தோ நம் வசதிக்கேற்ப தேர்வு செய்திட அனுமதிக்கிறார்கள் ! ஆனால் பேட்மேனில் அவ்விதமில்லையே !! வண்டி வண்டியாய் கதைகள் கொண்ட டாப் நாயகர் ; ஹாலிவுட் கண்ட வெற்றியாளர் எனும் போது அவரது உயரங்கள் ரொம்பவே.....ரொம்ப ரொம்ப ரொம்பவே உசரத்தில் !!

      Delete
  29. வாரமலர் ...மறுபதிப்பு



    அட்டகாசம் சார்...ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்..

    ReplyDelete
  30. இப்படி ஒரு சர்ப்ரைஸ் இதழை எதிர்பார்க்க வில்லை சார்..சூப்பர்...

    டெக்ஸ் அவர்களுக்கு நன்றி...

    ReplyDelete
  31. ஓ...............
    தந்தனன தந்தனதந்தன
    தந்தனதந்தன தந்தனதந்தன
    ஹோஹோஹோஹோ தந்தனன
    ஹோஹோஹோஹோ தந்தனன
    ஹோஹோஹோஹோ தந்தனன
    ஹோஹோஹோஹோ தந்தனன

    F: ஆயிரம் காமிக்ஸ் மொட்டுக்களே-வந்து
    ஆனந்த கதைகளை கொட்டுங்களேன்
    ஆயிரம் காமிக்ஸ் மொட்டுக்களே-வந்து
    ஆனந்த கதைகளை கொட்டுங்களேன்
    இங்கு ரெண் டாயிர சாதனை
    தொட்டுக்கொள்ளும் காமிக் பண்டிகை
    புத்தகத்தில் காதல் தொழுகை
    ஆயிரம் காமிக்ஸ் மொட்டுக்களே-வந்து
    ஆனந்த கதைகளை கொட்டுங்களேன்….




    M: ஓ..ஒ.. ஓஒர்...கொத்து கதையே
    அமுதம் கொட்டும் மலரே
    இங்கு முத்தை ஊற்று இது லயனின் ஊற்று…
    F: ஓ..ஒ.. ஓஒர்...கொத்து கதையே
    அமுதம் கொட்டும் மலரே
    இங்கு முத்தை ஊற்று இது லயனின் ஊற்று
    M: உள்ளிருக்கும் வியும்
    வந்து கதை வார்க்கும்ம்ம்ம்
    F: புல்லரிக்கும் புக்கு எங்கும்
    பூப்பூக்கும்ம்ம்ம்....
    M: அடிக்கடி தாகம்-வந்து
    கதையைக்குடிக்கும்ம்ம்...
    F: ஆயிரம் காமிக்ஸ் மொட்டுக்களே-வந்து
    ஆனந்த கதைகளை கொட்டுங்களேன்….



    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
    ஆஆஆஆஆஆஆஆஆ.....


    M: ஏ...உலகக்க் கதையே
    வலையை விட்டு தாண்டி வந்தியே..
    ஒரு கலையின் பாரம் இரு தோளில் ஏறும்..
    F: ஏ...உலகக்க் கதையே
    வலையை விட்டு தாண்டி வந்தியே..
    ஒரு கலையின் பாரம் இரு தோளில் ஏறும்...
    F: விசயனொளி வீச ரெண்டு பூமாலை…..
    ஒன்றை ஒன்று சூடும் இது பொன்வேளை
    M: ஜொல் வடிக்கும் நாங்கள் எங்கள்
    உலகை மறக்கும்ம்ம்...
    F: ஆயிரம் காமிக்ஸ்...
    F: நன நன
    F: ஆயிரம் காமிக்ஸ்...
    F: நனனன நனனன நனனன
    F: ஆயிரம் காமிக்ஸ் மொட்டுக்களே-வந்து
    ஆனந்த கதைகளை கொட்டுங்களேன்….
    F: இங்கு ரெண்டு ஆயிர சாதனை/
    தொட்டுக்கொள்ளும் காமிக் பண்டிகை
    புத்தகத்தில் காதல் தொழுகை/
    ஆயிரம் காமிக்ஸ் மொட்டுக்களே-வந்து
    ஆனந்த கதைகளை கொட்டுங்களேன்......

    ReplyDelete
    Replies
    1. யோவ் க்ளா பிச்சிட்டயா.... தொடர்ந்து 3வது பாட்டாக கொளுத்தி எடுத்திட்டாய்..!!

      Delete
  32. சின்ன தல ஒரு குண்டு ஸ்பெஷல் போடுங்க சார்.

    ReplyDelete
    Replies
    1. வழக்கமான இதழ் போலத் தானே அது அமைந்திடும் சார் - புதுசாய் என்ன ஈர்ப்பு இருந்திடப் போகிறது ?

      Delete
  33. Just Like That Special

    காமெடி+ஆக்ஷன்+த்ரில்லர் கி.நா கிடைக்குமா ஆசிரியரே

    அல்லது தரமான ஒரு கி.நா ஸ்பெசல்

    ReplyDelete
    Replies
    1. ஆஹா அருமை கடல்....

      வழக்கமான தல, டிடெக்டிவ், க்ளாசிக்னு போகாம இதுவும் நல்ல ஐடியா...

      +1000

      Delete
    2. //காமெடி+ஆக்ஷன்+த்ரில்லர் கி.நா கிடைக்குமா ஆசிரியரே//

      அநேகமாய் நீங்க குறிப்பிடும் ஐட்டங்களுக்கு ஸ்பைடரின் Sinister 7 தான் சரிப்படும் !! பரால்லியா ரம்யா ?

      Delete
    3. அது வேணாம்ங்க ஆசிரியரே

      சாய்ஸ் உங்களுடையதாகவே இருக்கட்டும்ங்க

      எப்போதும் போடிம் 'தல' ஸ்பெசலிலிருந்து ஒரு மாற்றம் இருந்தால் போதுங்க ஆசிரியரே

      Delete

  34. // JUST LIKE THAT ஸ்பெஷல் !!!! போட்டுத் தாக்கிடலாமா guys //
    இதெல்லாம் கேட்கனுமா சார்...

    ReplyDelete
  35. //நண்பர் ஒரு வண்டிப் பின்னூட்டங்களுக்கு மத்தியில் இதையெல்லாம் தோண்டி / தேடிப் பிடிப்பது எவ்விதமோ - புரியில்லா !! //

    ஆமாங்க ஆசிரியரே
    இவரு தகவல்களே போடும் போதெல்லாம் ஆச்சரியபடுவேன்
    செம ஆர்வம் சகோவுக்கு
    அந்த enthusiasm சூப்பர்

    இவரும், ஸ்டீல் சகோவும் Enthusiasm-க்கு பெயர் போனவர்கள்

    ReplyDelete
    Replies
    1. தேங்யூ கடல் சகோ....

      நட்புகள் நீங்க எல்லாம் அளிக்கும் வரவேற்பும் உற்சாகப்படுத்தலுமே காரணம்....

      சிற்சில குறைபாடுகள் இருந்தாலும் அவற்றை பொறுத்துக் கொண்டு நீங்கள் அனைவரும் அளிக்கும் உத்வேகம் பன்மடங்கு உற்சாகம் தரவல்லது...

      Delete
    2. // இவரு தகவல்களே போடும் போதெல்லாம் ஆச்சரியபடுவேன்
      செம ஆர்வம் சகோவுக்கு
      அந்த enthusiasm சூப்பர்

      இவரும், ஸ்டீல் சகோவும் Enthusiasm-க்கு பெயர் போனவர்கள்
      //

      Me tooo 👏🏻👏🏻👏🏻👏🏻

      Delete
  36. தெளசண்ட்வாலா Spl.
    1000 பக்கங்களில் இரண்டு ஹார்டு பவுண்டு இதழ்களாக, இரண்டு மாத வெளியீடாக , ஒன்று கருப்பு வெள்ளையிலும், மற்றொன்று கலரிலும் வெளியிடலாம் . (அ) இரண்டும் கலந்த இதழ்களாகவும் வெளியிடலாம்.
    ஒரு புத்தகம் டெக்ஸ் புக் சைஸில் மற்றொன்று இரத்தப்படலம் சைஸில் ஒன்று மறுபதிப்புகள் கலந்தது. மற்றொன்று புதிய கதைகள்.
    அவ்ளோ தாங்க சார்...

    ReplyDelete
    Replies
    1. சார்....எதைப் போடுவது ? என்பதல்லவா கேள்வி ?

      அது தீர்மானமாகி விட்டால், நீங்கள் குறிப்பிடும் "எப்படிப் போடலாம் ?" சமாச்சாரம் தானாய் sort out ஆகிடுமே ?!

      Delete
  37. // எதை போடலாமென்று any suggestions மக்கா ? //
    எதுவும் தோணலை சார்,எப்படியும் உங்களுக்கு ஒரு யோசனை இருக்கும்,நல்லதா எதையாவது போட்டுத் தாக்குங்க சார்...

    ReplyDelete
  38. ஒரு சிறப்பு இதழுக்கு நீங்கள் தயாராகி இருப்பதே எங்களுக்கு சிறப்பான செய்திதான் சார்!!!

    ReplyDelete
  39. புதிய இதழ் தானே சார் ?!
    டைட்டிலே ஜஸ்ட் லைக் தட் ஸ்பெஷல்னு இருக்கறதால "The Bomb" ஸ்பெஷல் கேட்க வழியில்லை...
    கேட்டா ஜஸ்ட் லைக் தட்டா இருக்காது...

    ReplyDelete
  40. யாரைக் களமிறக்கலாம் என்பதையும் நீங்களே முடிவு செய்யுங்கள் சார்!! லேட்டாகாமல் உடனே வந்தால் சரி! ரீ பிரிண்ட்டும் கிளாசிக் நாவல்களும் தயவு செய்து வேண்டாமே! கருப்பு வெள்ளையில் வந்தால் பக்கங்கள் இரட்டிப்பாகக் கிடைக்கும் என்பதால் என் ஓட்டு கருப்பு வெள்ளைக்கே!!!!

    ReplyDelete
  41. // (By the way - வாரமலர் இதழ்களை மறுபதிப்பு செய்திட முயற்சிப்போம் guys ; சீக்கிரமே சொல்கிறேன் !) //

    I jolly. Super news. I am happy

    ReplyDelete
  42. ஆயிரம் இதழ் கண்டஆசிரியருக்கு அன்பும் வாழ்த்துக்களும்!! பிடியுங்கள் பூங்கொத்தை!
    760 லிருந்து 1000 த்தை இன்னும் ஐந்து ஆண்டுகளில் கடப்போம் என்றால் வருடத்துக்கு 48 இதழ்கள் என்றாகிறது.. திகட்டத்திகட்ட இனிப்புத்தான்!! பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கே!!

    ReplyDelete
  43. ///
    JUST LIKE THAT ஸ்பெஷல் !!!! போட்டுத் தாக்கிடலாமா guys ? ஆயிரம் பக்கம் ; ஆயிரத்து சொச்சம் பக்கம் என்றெல்லாம் கப்பைகளைப் பிளக்காமல் - ரூ.400 to ரூ.500 விலைக்குள் இருப்பது போல் ஏதேனும் ஒன்றைத் திட்டமிடுவோமே ? எதை போடலாமென்று any suggestions மக்கா ? ///

    ஆயிரம் பக்க கெளபாய் கதை ஒன்று உள்ளதாக முன்பு தெரிவித்து உள்ளீர்கள் சார் ,அதைக்கேட்கலாம் தான்...ஆனா விலையும் கட்டுக்குள் இருப்பதான அவசியம் புரிகிறது...

    திகிலுக்கு தான் கம்பேக்கிற்கு பின்பு முக்கித்துவம் குறைவாக உள்ளது போலவே காணப்படுது..
    நண்பர்கள் தெரிவித்துள்ளது போல பேட்மேனை ரீலாஞ் பண்ண இந்த வாய்ப்பை பயன்படுத்தினால்,
    Just Like that பெரிய ஹீரோஸ்களை வளைச்சிப்போடும் நம்ம சமீபத்திய ட்ரென்டுக்கு மேட்சிங்கா இருக்கும் சார்...

    வவ்வாளையும் பறக்க விட்டுத்தான் பார்ப்போமே!!!

    ReplyDelete
    Replies
    1. 'திகில' நினைச்சாலே திகிலா இருக்கு.. ட்ரெண்டிங்கா இல்லையே பாஸ்!! பேக் டு ஸ்கொயர் ஒன்னுக்கு இழுத்து விட்டுறாதீங்க 😇

      Delete
    2. வவ்வா மனுசன் அப்படி ஏமாத்தலாம் மாட்டாருங்க..இவன் வேறு மாதிரி... பெயர்தான் திகில்.. அக்மார்க் லயன் காமிக்ஸ் ஹீரௌ அவரு.. திகில் பேனருக்கு வெயிட் வேணும்னு அந்த காலத்தில் அவரை அங்கே போட்டாங்க. மற்றபடி அவரு மற்றோரு டாப் ஹீரௌவாகத்தான் இருப்பார்

      Delete
    3. ஆயிரம் பக்க கௌபாயா???? அட்ரா சக்க!அட்ராசக்க!!அட் ராசக்க!!! இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே😋

      Delete
    4. ஏற்கனவே பேட்மேன படிச்சு மண்ட காஞ்சு போய் புத்தகத்தை எடுத்து பத்திரமா
      அலமாரியில் அடியில சொருகி வச்சு மாமாங்கம் ஆயிப்போச்சு!!

      Delete
    5. டெக்ஸ் ஆசிரியர் கடைசியாக நா கேட்டப்ப ஏதோ காரணம் சொன்னதா ஞாபகம்...இந்த ஆயிரத்துக்கு அதை சாரி கதை விடப் பொருத்தமேது

      Delete
    6. பேட்மேன்னா சும்மாவா...அதா ஐபிஎல் மலர்னு தனியா அடிச்சு ஆட்டும்...ஐபிஎல் ஸ்பெசலா

      Delete
    7. "LSES" ன்னு ஒண்ணு கவிஞரே ? Lok Sabha Elections பெசல் ?

      Delete
    8. LSES ன்னு சொல்லவும், நான் கூட லோக்சபா எலக்ஷன் சாங்குன்னு நெனச்சு பதறிப்புட்டேன்.

      Delete
  44. 400 or 500 விலையில இல்லாமல் ஒரு மைல்கல் இதழானது 400-500 பக்கங்களில் வந்தால் என்றும் நினைவில் நீங்கா இடம் பெறும்.

    ஒரு காம்போ இதழாக வந்தால் (ஈரோட்டில் இத்தாலி மாதிரி) மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. ஈரோட்டில் இத்தாலி ஸ்பெஷல் மாதிரி ரொம்ப வருஷம் குடோனில் வசிக்காமல் இருக்கனும்...

      Delete
    2. காம்போவுக்காக ஒரு உதாரணம் தான்

      Delete
    3. படிக்க ஒரு ஈர்ப்பினைத் தரும் கதைகளாக இருந்திட வேணும் சார் ; பிரதம அளவுகோல் அதுவே !

      Delete
  45. டியூராங்கோ மாதிரி ஒரு கௌபாய் இருக்கிறார் என்று நீங்கள் சொன்னதை ஞாபகப்படுத்துகிறேன் சார்!!Just like that!!

    ReplyDelete
    Replies
    1. ட்யுராங்கோவில் ஒரு பெரிய புக் அளவுக்கு புதுக் கதைகள் இன்னமுமில்லை சார் !

      Delete
  46. 'எல்லாம் எடிட்டர் மயம்' ஸ்பெஷல்!!

    ReplyDelete
  47. ஆயிரமாவது பொஸ்தகத்தை ஆயிரம் ரூபாய்க்காவது போடக்கூடாதா சார்? இந்த மாதிரி மொமெண்ட்டை எப்படி சார் மிஸ் பண்றது? இதுஎங்களுக்கு வரலாறு எடி சார்..

    ReplyDelete
    Replies
    1. ஆயிரம் ரூபாய்க்கு ஒரு இதழை ரெடி பண்ணுவதற்குள் ரெண்டாயிரம் ரூபாய்க்கான டவுசர் கிழிஞ்சிடுமே சார் !!

      Delete
    2. ஏலே மக்கா ; இன்னும் படிக்காம அங்கே குவிச்சு வைச்சிருக்க பொஸ்தவங்களை படிக்கிற வழியை மொத பாப்போமா ? இங்கே பாட்டெழுதுற வேகத்திலே, பாதியாச்சும் படிக்கிறதிலேயும் இருக்கப்போ ஆயிரம்-ரண்டாயிரம் பட்ஜெட்லாம் போடலாம் !

      Delete
    3. அப்போ எல்லா புக்ஸையும் படிச்சு முடிச்சிட்டு, அடுத்த புக் வர்ற வரைக்கும், பழைய புக்ஸையெல்லாம் Re Read பண்றவங்களுக்கு ?

      Delete
  48. ரொம்ப நாளைக்கு அப்புறமா,சுவாரசியமா இருந்தது இந்த பதிவு!! இப்படியே இருந்தா சனிக்கிழமை இரவு வெயிட்டிங் லிஸ்ட் கூடிரும்!

    ReplyDelete
  49. 'எடிட்டர் 1000' ஸ்பெஷல் அப்படிங்கிற பேரு நல்லா இருக்குமோ? ஜஸ்ட் லைக் தட் தோணிச்சு!!

    ReplyDelete
    Replies
    1. ஏற்கனவே "Blog 1000" வேறு வெயிட்டிங் சார் ; so ஆயிரம்வாலா சீசன் இது போலும் !!

      Delete
    2. டபுள் தமாக்கா...

      Delete
  50. Varamalar , great idea sir. Please do it asap.

    ReplyDelete
  51. 500 ரூபாய் விலையில் நீங்களே கென்யா போல அர்ஸ் மேக்னா போல ஏதாவது ஒன்று போட்டு விடுங்கள் SIR .. (அ) ZAGOR ONE SHOTS ஆக இல்லாமல் முதல் இதழ் மாதிரி ஒரு FULL FLEDGED STORY , 5 TO 6 ALBUMS சேர்த்து HARDBOUNDல போடுங்க சார் ..

    ReplyDelete
    Replies
    1. ஸாகோரை இன்னும் கொஞ்ச முழுநீள சாகசங்களில் மிளிரச் செய்தாகணும் நண்பரே - அவரை ஸ்டார் அந்தஸ்தில் வைத்துப் பார்த்திட ! நடப்பாண்டு அதனைச் செய்து விடும் !

      Delete
    2. ஹப்பாடி சந்தோசம் சார்.

      Delete
    3. //ஸாகோரை இன்னும் கொஞ்ச முழுநீள சாகசங்களில் மிளிரச் செய்தாகணும் நண்பரே - அவரை ஸ்டார் அந்தஸ்தில் வைத்துப் பார்த்திட ! நடப்பாண்டு அதனைச் செய்து விடும் !//

      சூப்பர் ஆசிரியரே

      Delete
  52. 💥நண்பர் ஒரு வண்டிப் பின்னூட்டங்களுக்கு மத்தியில் இதையெல்லாம் தோண்டி / தேடிப் பிடிப்பது எவ்விதமோ - புரியில்லா !! 💥
    *இப்படியும் ஒருத்தர் வேணுங்களே சார்...
    ஏதோ வந்தோம்,படித்தோம்,போனோம் என்றிருப்பவர்களுக்கு மத்தியில் அத்திபூத்த மாதிரி.
    இது ஏதோ பெருமைக்காகவோ, மற்றவர்கள் முன் தனித்து நிக்க வேண்டும் என்ற தலைக்கர்வமோ இல்லாது, ஒரு "காமிக்ஸ் நேசிப்பாளர்" என்ற முறையில் அவர் இதை
    செய்துள்ளது மகிழ்ச்சியான விசியம்.
    அருமை சகோ விஜயராகவன்.👏👏👏👏👌❤️.*

    💥இம்மி கூட யோசிக்க அவசியமே லேது - இந்த ராட்சஸ ஆற்றலெல்லாம் எங்கிருந்து வந்ததென்று ; becos அதன் விடை நமக்கு ஸ்பஷ்டமாய்த் தெரியும் ! நீங்களே ; இங்குள்ள ஒவ்வொருவருமே - இந்தப் புத்துணர்ச்சிக்கும் ; உத்வேகத்துக்கும் காரணகர்த்தாக்கள்💥.

    "உங்கள் வெளியீடுகள் ஒவ்வொன்றும் எங்களுள் இன்னொரு உத்வேகத்தை கொடுத்தவைகள் சார்.
    அடுத்த கட்ட வாசிப்புக்கு,
    வெளியுலக தொடர்புக்கு,
    எங்கள் மனதில் தோன்றும் மட்டற்ற மகிழ்ச்சிக்கு,
    எங்களின் தனிமையை போக்கிய உற்ற நண்பனாக இருந்தது உங்க காமிக்ஸ்கள் தான் சார். இதற்கெல்லாம் காரணகர்த்தாவாக இருந்ததும் நீங்களே.
    இன்னமும் பழைய வாசகர்கள் தங்களுடன் இணைந்திருந்தால் காமிக்ஸ் வளர்ச்சியில் இன்னுமொரு உயரத்தை தொட்டிருக்கலாம்.
    அந்த வகையில் 90,95 களுக்குபின் இணைந்த வாசகர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருந்தது பெரும் மகிழ்ச்சி.
    இன்னும் 1500,2000, 5000 என அடுத்தடுத்த வெற்றிகளை குவிக்க அனைவரின் சார்பாக வாழ்த்துக்கள் 💐 சார்.

    //(By the way - வாரமலர் இதழ்களை மறுபதிப்பு செய்திட முயற்சிப்போம் guys ; சீக்கிரமே சொல்கிறேன் !)//

    அதி விரைவில் இந்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என்ற வாசகர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன் சார்.
    மேலும் கூடிய மட்டிலும் முத்து காமிக்ஸ் க்ளாசிக் பாதிப்புக்களையும் மறுபதிப்புக்களாக விரைந்து வெளியிட வேண்டும் தாங்கள்.

    நன்றி🙏.

    ReplyDelete
    Replies
    1. // வந்தோம்,படித்தோம்,போனோம் என்றிருப்பவர்களுக்கு மத்தியில் அத்திபூத்த மாதிரி.
      இது ஏதோ பெருமைக்காகவோ, மற்றவர்கள் முன் தனித்து நிக்க வேண்டும் என்ற தலைக்கர்வமோ இல்லாது, ஒரு "காமிக்ஸ் நேசிப்பாளர்" என்ற முறையில் அவர் இதை
      செய்துள்ளது மகிழ்ச்சியான விசியம்.
      அருமை சகோ விஜயராகவன். //

      Totally agreed

      Delete
    2. கிளாசிக்சில் இன்னமும் எதுவும் மிச்சம் இருப்பதாய் எனக்குத் தோணலை சார் !
      மாயாவி - டிக்
      லாரன்ஸ்-டேவிட்- டிக்
      ஜானி நீரோ - டிக்
      ரிப் கிர்பி - டிக்
      வேதாளர் - டிக்
      மாண்ட்ரேக் - டிக்
      சார்லீ - டிக்
      காரிகன் - டிக்
      விங்-கமாண்டர் ஜார்ஜ் - டிக்
      செக்ஸ்தான் பிளேக் - டிக்
      கேப்டன் டைகர் - டிக்

      இவை தவிர்த்து சந்திலிருந்தும், பொந்திலிருந்தும் ஏதேனும் இதழ்களை இழுத்து வந்து, ஆங்காங்கே, அவ்வப்போது வெளிச்சம் போடுவதெல்லாம் சும்மானாச்சும் சார் ! மறுபதிப்புக்கு முத்துவின் பழைய இதழ்களுள் பெருசாய் எதுவும் மீதமிருப்பதாக எனக்குத் தோணவில்லை !

      Of course - "ஒற்றைக்கண் மர்மம்" ; "இயந்திரப்படை" ; "பிளாக்மெயில்" போன்ற மாயாவி கதைகள் இன்னமும் மறுபதிப்பு கொண்டிருக்கவில்லை தான் ; but அவை உரிய வேளைகளில் தொடர்ந்திடும் !

      Delete
  53. Sir புதுசா ஏதாவது. டெ க்ஸ் வேண்டாம். Congrats for reaching 1000 milestone. எல்லா புகழும் டெக்ஸ் விஜய்க்கு தான்.. so இதுக்கு விஜய் ஸ்பெஷல் பேரு வைக்கலாம். இரண்டு விஜய்க்கும் பெருமை.

    ReplyDelete
    Replies
    1. ஊர் கூடி இழுத்துள்ள தேருக்கான கொண்டாட்டமிது சார் ! So தனிமனித வெளிச்சம் இங்கு பொருத்தமாகிடாது !

      Delete
    2. ஆம் சார்.... TVTS-- Team Vijayan Thousand Special மாதிரி ஏதாவது பெயர் வைத்தால் அனைவரையும் அது ஐக்கியப்படுத்திடும்....

      EVTS- Editor Vijayan Thousand Specialனு வெச்சாதான் தனிதனித வெளிச்சமாகிடக் கூடும்..

      ஆனா எங்களை கேட்டா ரேர் ஆக வரும் எண்ணிக்கை இது.. தங்கள் பெயர்லயே வெளியிடலாம் தான்...

      ரயில் பெட்டிகள் அத்தனையும் சமாளித்து இழுத்து வரும் ஒற்றை என்ஜின் அல்லவா தாங்கள்...!!!

      Delete
  54. Very emotional post Sir .. Just like that special எடிட்டர் ஸ்பெஷலாக வரட்டும் :)

    ReplyDelete
    Replies
    1. நண்பர்களின் பரிந்துரைகளை முதலில் கேட்டுக் கொள்வோம் நண்பரே !

      Delete
  55. சார் 1000 இதழ்களை கடந்து மேலும் அடுத்த 1000 இதழ்களை தர ஓடிக்கொண்டிருக்கும் உங்களுக்கு மனதார பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறிக்கொள்கிறேன்

    @விஜய் உங்களது புள்ளிவிவரங்கள் எப்போதும் ஆச்சர்யப்படுத்திக்கொண்டே இருக்கின்றன நானும் கார்த்திக் சொன்னதை வழிமொழிகிறேன்

    இப்போதைக்கு கலீல் அவர்களின் தளமே புத்தக விவரங்கள் லிஸ்ட் பார்க்க உதவுகிறது அதே போல இன்னும் பலரை சென்று அடைய விக்கி ஒரு நல்ல இடம் முயற்சி.

    சார் சிறப்பு புத்தகத்திற்கு எனது விருப்பம் சமீப ஸ்பைடர் கதை போல இரு வண்ணத்தில் அதே பெரிய சைசில் ஏதாவது கதை ஒன்று ப்ளீஸ்.

    அடுத்து மீண்டும் ஒரு முறை தங்ககல்லறை காரசனின் கடந்த காலம் தரத்தில்

    பேட்மேன் நமக்கு கட்டுபடி ஆகுமா தெரியவில்லை முன்பே ஒருமுறை இது பற்றி நீங்கள் கூறியதாக நினைவு

    ReplyDelete
    Replies
    1. ஹை....நம்ம ஸ்பைடருக்கு இங்கே ஒரு வோட்டு கீது !!

      Delete
  56. வன்மேற்கின் அத்தியாயங்களின் அடுத்த சுற்றை நுழைக்க இது வாகானா தருணம் இது. விலையை பற்றி யோசிக்காமல் 1000 பக்கங்கள் வேண்டுமானாலும் போடலாம். அளவான பட்ஜெட்டில் 500 ரூபாய்க்கும் போடலாம். 70+ கதைகளை கொண்ட இந்த தொடரை எப்போது நாம் படித்து முடிப்பது.

    இது போன்ற ஸ்பெஷல் தருணங்களில் அவ்வப்போது வெளியிட்டால் தான் இந்த அசாத்திய தொகுப்பை நாம் முழுமையாக படிக்க/ரசிக்க முடியும்.

    நண்பர்கள் கொஞ்சம் நிதானமாக யோசித்து இந்த காமிக்ஸ் பொக்கிஷத்துக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்

    ReplyDelete
  57. சார்,

    ஆயிரமாவது புத்தக ஸ்பெஷல் கண்டிப்பாக...

    "இனிய இளவரசி தொகுப்பு"

    ...ஆக மட்டுமே இருக்க முடியும் என இந்த ஆன்றோர் சபையில் கூறிவிட்டு... அமர்கின்றேன்...

    ReplyDelete
    Replies
    1. அப்டிக்கா ஒரு தானைத் தலைவர் ஸ்பைடர் பெசல் சார் ?

      Delete
    2. ஆன்றோர் சபை - "ஆ"என்று வாயைப் பிறந்தோர் சபை ஆகிடப்படாதே சார் ?

      Delete
    3. 😄😄😄.. ஆமாம் சார்.. அமெரிக்க மாப்பிள்ளை.. ஆ ஆஆ ஆஆ... ன்னுருவார்
      சகோ..🤭😄😄. நமக்கு வேண்டியது... விங் ஜார்ஜ்
      ஸ்பெஷல் மாதிரி வடிவத்தில ஒரு " இளவரசி
      ஸ்பெஷல் "... என்னைக்காவது ஒரு நாளைக்கி நடக்கும் ன்னு
      நம்பறேன்... ❤️❤️❤️❤️...

      Delete
  58. எடிட்டர் - என்ற அடைமொழியைத்தந்த பிரின்ஸஸை (இளவரசியை) எப்படி மறப்பார்.. ii

    ReplyDelete
    Replies
    1. மறப்பதையே பிடித்தமான பொழுதுபோக்காய்க் கொண்டிருக்கும் நாயகரை நமக்கெல்லாம் ரொம்பப் பிடிக்கும் தானே நண்பரே ? So சில சமயங்களில்...

      மறதி நல்லது !

      Delete
    2. ஆஹா... இளங்கோ... சூப்பர் ஆ சொன்னீங்க..
      இளவரசியை... மறக்கவே
      மாட்டார்... ❤️❤️❤️👍..

      Delete
  59. விஜயன் சார் ,
    வணக்கம் சில வருடங்களுக்கு முன்னால வந்து நீங்க வந்து நமது காமிக்ஸ் அட்டவணையை முழுவதும் புதிய கதைகளை கொண்டு உருவாக்கணும் அப்படிங்கிற மாதிரி உங்களது ஆசையை தெரிவித்து இருந்தீங்க அந்த ஆசை வந்து இதுவரை நிறைவேறுன மாதிரி தெரியல அதை ஏன் நம்ம இந்த ஆயிரம் இதழ் ஸ்பெஷல் உபயோகப்படுத்தி பார்க்கலாம் முழுக்க முழுக்க உங்களோட சாய்ஸ்ல ஒரு தொகுப்பை எங்களுக்கு வெளியிடலாமே.

    ReplyDelete
    Replies
    1. சார்...நான் குறிப்பிட்டது ஒரு முழுச் சந்தாவினை புத்தம் புது இதழ்களால் உருவாக்குவது பற்றி ; நாமிங்கே அலசி வருவதோ ஒற்றை ஸ்பெஷல் இதழ் பற்றி !

      Delete
    2. Yes sir. Sub part of idea can be implemented here sir. The special issue contains only the books of your choice sir.

      Delete
  60. 1000 books is no mean feat; we should raise the roof and let the good time roll...

    @STV @KOK

    ReplyDelete

  61. //வண்ணத்தில் 500 to 600 பக்கங்கள் என்றாலே விலை ஆயிரத்து ஐநூறுக்கு ஓடிப்புடும் சார் ; அதன் பின்னே ஒரு b & w இதழ் என்றால் அதுவொரு ஐநூறு !! ஆக மொத்தம் ரண்டாயிரம் !!!//

    Price you pay; value you get . என்பதே நிலவரம் சார். தொடர்ந்து க& வெ இதழ்கள் ஒருவித sultry உணர்வைத் தருகின்றன. டெக்ஸ் , டெட்வுட் போன்றவை தவிர க& வெ இதழ்கள் கொஞ்சமாகவேனும் அயர்வைத் தருகின்றன. அதுவும் டின் டின் ,லார்கோவுக்கு அப்புறம் இந்த அயர்வு கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.

    எனவே பக்கங்களை குறைத்துக் கொண்டாலும் வண்ண இதழாக வெளியிட முயற்சிக்கவும். ஒரு கொண்டாட்ட இதழ் வண்ணங்களில் ஜொலிக்கட்டும். பௌன்சருக்குப் பிறகு அதிக பக்கங்களில் க & வெ இதழாக இருப்பின் அது பரிமளிக்குமா என்பதில் சிறிதளவு சந்தேகம் உண்டு. கதைத் தேர்வு அற்புதமாகச் செய்வீர்கள் என்பதில் சந்தேகமில்லை.
    அது வண்ண இதழாக இருந்தால் மகிழ்வே!

    ReplyDelete
  62. ஜேம்ஸ் பாண்ட் 2.0 க்கு வாய்ப்பு ஏதேனும் உண்டா சார்?

    ReplyDelete
  63. Doctor AKK அந்த Valerian னு ஒரு காமிக்ஸ் குறித்து அடிக்கடி கேப்பீங்களே.. அத கேக்கலாமா

    ReplyDelete
  64. 1000 ஸ்பெஷலை தள்ளி வச்சுட்டிங்க,சிங்கத்தின் சிறுவயதில்,காமிக்ஸ் ஹீரோக்களின் அறிமுகம் ஆகியவற்றை ஒரு தொகுப்பாக வெளியிடலாமே!

    ReplyDelete
  65. மாடஸ்திக்கு ஜே

    ReplyDelete
  66. பெரிசா ஒன்னும் ஆசையில்லிங்க சார்... முதன் முதலாக ஆயிரம் விலையில் வந்த தங்க தலைவனின் புத்தகத்தையே போடனும் ஆயிரம் ரூவா விலையிலே..இது தேடப்படும் குற்றவாளி மற்றும் ஆணவ அதிகாரி இருவருக்கும் பாடம் புகட்டிய மாதிரி இருக்கும்..

    ReplyDelete
  67. This post was so touching. In 90s and 2000s I was searching many old book stalls for lion muthu comics, and buying from shops whenever available. Slowly it got dried out. Till 2012, there was only a few books and they come with lots of delays.

    In late 2012, I was simply browsing in internet and I think I typed lion comics and this blog came. I was not sure it's real and I think I commented, is this the same lion muthu comics which was out from market for so long. And people responded yes. I never thought editor vijayan s writings which can be read only in holiness and comics rime, can be easily read now. I searched for old blogs and became a subscriber from 2013.

    The second innings was much much greater and grander than the first innings. And when I came to know editor can be seen in comic con 2012, I can't believe myself(even though i couldnt make it). First time I saw editor s photo was like looking at rajinikanth.

    The new comics readers can't understand what I am saying here. Only 80s kids and 90s kid can understand the yearning. Nowadays everything is easy. My son is a Naruto fan and he is been reading manga for just one year and today I bought him naruto playing cards. Also many manga souvenirs available in nearby stationaries. That's how easy it has become.

    ReplyDelete
  68. Vaaramalar I think bad decision. Only nostalgia lovers and collectors will buy.

    Last month I re read all of tiger s comics, rathapadalam, pistolukku piriyavidai, otrai nodi and some other gundu graphic novels. I have more than 100 tex gundu books and never re read them in last 7 to 8 yrs. It's coming every month.

    So my choice would be a gundu book of some interesting graphic novel like Kenya or like barracuda. Pazhasellam pothum. We have saturated oldies with Supreme sixties and seventies subscription.

    As u told second innings keeps us still in the field, let's respect that and enter uncharted new territories.

    Sorry. I am typing in English. Tamil typing in my phone not possible.

    ReplyDelete
  69. //By the way - வாரமலர் இதழ்களை மறுபதிப்பு செய்திட முயற்சிப்போம் guys ; சீக்கிரமே சொல்கிறேன் !)//

    PLEASE....

    ReplyDelete
  70. சார் டைலன் டாக், பேட்மேனுடன் இணைந்து கலக்கும் கதைகள் குறித்து நீங்க என்ன நினைக்கிறீங்க?

    ReplyDelete
  71. சார் மினி லயன் ஜுனியர் லயன் போல ...எதிர்பார்ப்பு அள்ளித் தந்த ..நிறைவேற்றிய கதைகள் போல ஓர் அதிரடி தொகுப்பு ஆயிரம் பக்க அளவில் தாருங்கள்

    ReplyDelete
    Replies
    1. அதில் முழு வண்ணக் கதைகள்....இரு வண்ணக் கதைகள்....கருப்பு வெள்ளைன்னு கலந்து கட்டி அடிங்க

      Delete
  72. புத்தகவிழா ட்ரெண்டுக்கு ஏற்றமாதிரி ஒரு ஹாரர் ஸ்பெஷலை போட்டுத் தாக்குங்க சார்!! ஒரு திகிலான அட்டைப்படத்தோட...🥶🥶

    ReplyDelete
  73. கருப்பு/வெள்ளை கதைகளில்
    ஓர் பத்தும்,
    கலர் கதைகளில் ஓர் ஐந்தும் என
    புது ஹீரோக்களை நீங்கள் கண்ணில் காட்டினால்,
    அறிமுகப் படுத்தினால்,
    நாங்கள் "இங்கி ...பிங்கி..."
    போட்டு சொல்லி விடுவோம்
    எடிட்டர் சார்.

    ReplyDelete