நண்பர்களே,
வணக்கம். ஸ்டேஷனில் ஏட்டையா வடிவேல் இருக்கும் போது ஒரு இளம் ஜோடி மாலையும், கழுத்துமாய் ஓடி வரும் - "வீட்டுக்கு தெரியாம கண்ணாலம் கட்டிக்கினோம் ஆபீசர் ; நீங்க தான் காப்பாத்தணும் !" என்றபடிக்கே ! பின்னாடியே வருசையாய் கடாமாடு சைசில் ஆட்கள் அணிவகுக்க - "இவனுங்கல்லாம் யாருமா ?" என்று ஏட்டையா கேட்க, "இது என் புருஷன் ; அது அவருக்கு முந்தினவரு ; இவரு நம்பர் 3 " என்று அடுக்கிக் கொண்டே போக, கிறுகிறுத்துப் போகும் வடிவேல் இறுதியில் சீட்டுக் குலுக்கிப் போட்டு பாப்பாவுடன் போகப்போகும் புருஷன் யாரென்று தீர்மானிப்பார் ! கிட்டத்தட்ட அந்த ஏட்டையா நிலைமை தான் எனக்கு இந்த வாரத்தினில் !!
ஜம்போவின் "உளவும் கற்று மற" பணிகளே ஏப்ரல் இதழ்களின் last ! கோடை மலர் அச்சாகி, பைண்டிங்கில் இருக்க, டெக்ஸ் சிங்கிள் ஆல்பமும் பிரின்டிங் முடிந்து விட்டது ! ரைட்டு, இந்த ஜம்போ one shot உலகை உலுக்கியதொரு பெண் உளவாளியான மாட்டா ஹாரியின் கதை ; செமையா இருக்கப் போகுது ; ஏற்கனவே கருணையானந்தம் அங்கிள் மொழிபெயர்ப்பு செய்தது DTP எல்லாம் முடிந்து கிடப்பதால் - போறோம்...எடிட்டிங் முடிக்கிறோம், ஏப்ரல் பணிகளுக்கு 'சுபம்' போடுறோம் என்ற கனவில் திரிந்தேன் ! பணியினை எடுத்துக் கொண்டு, இன்னொரு பக்கத்தில் பிரெஞ்சு to இங்கிலீஷ் மொழிபெயர்ப்பின் கத்தையையும் தூக்கிக் கொண்டு அமர்ந்தேன் ! 'அடடா...சித்திரங்கள் அள்ளுதே ; ஓஹோஹோ...கலரிங் பின்னுதே...!!' என்றபடிக்கே மெதுமெதுவாய் நகர்ந்தேன் ! மொழிபெயர்ப்பினில் கணிசமாகவே கை வைக்க வேண்டியிருப்பது புரிந்தது - becos இது வரலாறு இணைந்ததொரு ஆல்பம் என்பதால் கூகுள் துணையுடன் நிறையவே தேடல்களை நடத்தி, அதற்கேற்ப தமிழாக்கத்தை அமைத்தாலன்றி, புரிதலில் சிக்கல்கள் எழுந்திடும் என்று தோன்றியது !
But ஏழோ, எட்டோ பக்ககளைத் தாண்டுவதற்குள் மண்டைக்குள் லைட்டாய் ஒரு குறுகுறுப்பு எழத் துவங்கியிருந்தது - "இந்த மாட்டா ஹாரி அக்கா எப்போ உளவு பாக்க கிளம்புவாங்க ? அதுக்கான அறியும் காணோமே, குறியும் காணோமே "? என்ற ரீதியில் ! இன்னும் லைட்டாய் தட்டுத் தடுமாறி முன்னேற - ஸ்டேஷனில் ஏட்டையா வடிவேலின் இக்கட்டுக்குள் புகுவது போலவே எனக்கும் பீலிங்கு மேலோங்கியது ! ஊஹூம்....இது வேலைக்கு ஆகாது ; முதலில் இந்த மாட்டாக்கா பற்றி ஓரளவுக்காவது தெளிவாய் கூகுளில் தெரிந்து கொள்ளாமல் இந்தப் பணியினை கையில் எடுப்பது கதைக்கு ஆகாது ! என்று தீர்மானித்தேன் ! அதன் பின்னே விக்கிப்பீடியாவையும், இன்ன பிற தகவல் தளங்களையும் browse செய்த போது தான் புரிந்தது, எனக்குக் காத்திருப்பது சாட்சாத் சீட்டுக் குலுக்கிப் போடும் பொறுப்பே தான் என்று !! Simply becos - "மாட்டா ஹாரி ; பெண் உளவாளி ; ஜேம்ஸ் பாண்டுக்கு அத்தாச்சி முறை ; சும்மா உளவு பாத்து பின்னியெடுத்து ஒலக போரையே one hand-லே நிறுத்திப்புட்டாங்க !" என்ற ரீதியிலான மாயைகளெல்லாம் எத்தனை பெரிய டுபாக்கூர் என்பது சிறுகச் சிறுகப் புரிந்தது ! ஒரு பெண்ணை firing squad முன்னே நிறுத்தி சுட்டுத் தள்ளிய பிரெஞ்சு அரசாங்கத்துக்கு - "அவ பயங்கர சொர்ணக்கா ; ஆக்ஷன் கிங் அர்ஜூனே நம்ம நாட்டைக் காப்பாத்த வந்தா கூட, அவருக்கே tough தரக்கூடிய பிஸ்தா இவள் ; மாடஸ்டி பிளைசிக்கும் , ஜேம்ஸ் பாண்டுக்கும் தூரத்து பங்காளிமுறை !" என்ற ரீதியிலான கதைகளைக் கட்டி விட்டு, தங்கள் செயலை நியாயப்படுத்தும் அவசியம் இருந்துள்ளது ! எதிரி நாடான ஜெர்மனியோ - "ஊஹூம்..இந்த அக்கா எங்களுக்குலாம் உளவு பாக்கலை ; இதோட ஜகவாசமே எங்களுக்கு நஹி !" என்று மறுப்புத் தெரிவிக்கும் முனைப்பில், மாட்டா ஹாரி பற்றிய பிம்பத்தை ஊதிப் பெருசாக்கிட உதவியுள்ளனர் ! And உலக யுத்தப் பின்னணி ; ஒரு கவர்ச்சி பாம் ; ஜெர்மனி ; பிரான்ஸ் ; ஹாலந்து, ஸ்பெயின் ; இங்கிலாந்து ; ஆஸ்திரியா என்று றெக்கை காட்டாத குறையாய் சுற்றித் திரிந்ததொரு மர்ம அழகி - என்ற template கிடைத்தால் ஊடகங்கள் விட்டு வைத்திருப்பரா ? "குற்றம்...நடந்தது என்ன ?" என்ற ரேஞ்சுக்கு பில்டப் தந்து, உலகுக்கே Mata Hari என்றால் ஒரு உளவாளிப் புலி என்ற மாயையை ஏற்படுத்தி விட்டனர் !
ஆனால் நிஜத்தினில் இந்த அம்மணி செய்த ஜாகஜங்களின் முக்காலே மூன்று வீசம், விதவிதமான ஐரோப்பியக் கட்டில்களில் மாத்திரமே ! டோக்கன் போடாத குறையாய், ஐரோப்பிய மேல்வர்க்கத்து ஆண்களின் மோகங்களை தன் வீட்டு வாசலில் குவிந்திடச் செய்ததொரு ஜாலக்காரியே என்பது புரிந்த போது கவுண்டர் ஸ்டைலில் ரொம்பவே 'டெலிகேட் பொஷிஷன்' எனக்கு !! சும்மா சூப்பராய் அட்டைப்படமெல்லாம் ரெடி பண்ணி, பின்னட்டையினில் "உலகை உலுக்கிய பெண் உளவாளி" என்ற ஸ்டைலான tagline வேறு போட்டாச்சு !! சரி, கதைக்குள் புகுந்திட இந்த ஞானமே போதும்டா சாமீ ; என்றபடிக்கே ஒரு பேப்பரை எடுத்து நோட்ஸ் எடுக்கத் துவங்கினேன் ! "ஆங்..இந்த மீசைக்காரன் ஜெர்மனி டாவு ; இந்த ஹாலந்து தாத்தா அப்பாலிக்கா குத்தகைக்கு எடுத்திருக்காரு ; இந்த பிரெஞ்சு ஆபீசர் மிக்ஸர் பார்ட்டி ; இந்த இசைக்கலைஞர் தாத்தாக்கு முன்னாடி, ஆனா மீசைக்காரனுக்குப் பின்னாடி !" என்ற ரீதியில் நோட்ஸ் தொடர்ந்தது ! ஒரு மாதிரியாய் சனியிரவே இந்த அம்மணியின் பஞ்சாயத்தெல்லாம் முடிந்து - இன்றைக்கு நம்மாட்கள் திருத்தங்களை செய்து திங்களன்று அச்சுக்குத் தயாராக்கிடவுள்ளனர் ! Phewwww !! இயன்றமட்டுக்குப் புரிதல்களில் சிக்கல்கள் நேரா வண்ணம், அவசியமற்ற பெயர்களை, நபர்களை ஓரம்கட்ட முனைந்து, இயன்றமட்டுக்கு கதையினை (!!) நகற்றிச் செல்ல முயற்சித்துள்ளேன் ! மாட்டாவின் இஸ்திரி ; ஜியாகிரபி என சகலத்தையும் தெரிந்து கொண்டான பிற்பாடு, எடிட்டிங்கும் செய்தான பின்னே, இரண்டாவது வாசிப்பின் போது கொஞ்சம் தேவலாம் போலிருந்தது ! MATA HARI விஷயத்தினில் நிஜத்துக்கும், மிகைக்கும் மத்தியினில் உள்ள வித்தியாசங்களை சமீப காலங்களில் தான் துகிலுரிந்துள்ளனர் வரலாற்று ஆய்வாளர்கள் ! சரி, ஐரோப்பிய வரலாற்றின் ஒரு மாயையைப் பற்றி நாமுமே தெரிந்து கொள்வோமே இம்மாதம் !
இதோ - நமது சென்னை ஓவியரின் கைவண்ணத்திலான அட்டைப்படத்தின் முதல் பார்வை :
உட்பக்கத்து preview இதோ :
And இம்மாதத்து 'தல' ஆல்பத்தின் preview க்கு முன்பாய் - "பழனிவேல் ஸ்பெஷல்" இதழாய் வந்திடவுள்ள TEX க்ளாசிக்ஸ் # 2-ன் முதல் பார்வை இதோ :
முழுக்கவே க்ளாஸிக் கதைகளிலான இந்த ஆல்பத்துக்கு, அதே ஒரிஜினல் (ஓவியர் மாலையப்பன்) சித்திரங்கள் முன் + பின் அட்டைப்படங்களாகியுள்ளன ! And உட்பக்கங்களில், ஓவியர் சிவிடெல்லியின் ஜாலங்கள் வண்ணத்தில் மிளிர்வது செம அனுபவம் !! இன்னமும் இந்த ஆல்பத்துக்கு முன்பதிவு செய்திரா நண்பர்கள், இன்றைக்கு இதற்கென கொஞ்சமாய் நேரம் ஒதுக்கிட முனைந்திடலாமே - ப்ளீஸ் ? இது சந்தாக்களின் அங்கமல்ல என்பதை இங்கொருமுறை அடிக்கோடிட்டு விடுகிறேனே !!
Moving on from classic TEX to regular TEX - இதோ "சிகாகோவின் சாம்ராட்" சிங்கிள் ஆல்பத்தின் previews :
Before I sign out, ஒரு சின்னதான மஹாசிந்தனை ! நீளமான பதிவுகள் ; அவற்றிற்கு வாசிக்கத் தேவையாகிடும் நேரங்கள் ; பின்னூட்டமிடும் நோவுகள் - என்பனவற்றை தொடரும் காலங்களில் உங்களுக்கு மட்டுப்படுத்திட, 'சிவனே' என்று நாமளும் ஒரு வாட்சப் க்ரூப்பினை உருவாக்கி, இந்தக் கும்மிகளை அதற்குள் வைத்துக் கொண்டாலென்ன guys ? வாசிக்கவும், பதிவிடவும், உங்களுக்கு ஈஸியாகிடாதா ? மாறி வரும் காலங்களில் நாமளுமே மாறிப்போமே ?
Bye all...ரிப் கிர்பியோடு அன்னம், தண்ணீர் புழங்கப் புறப்படுகிறேன் ! Have a fun Sunday ; see you around !