நண்பர்களே,
வணக்கம். 2020-ன் அட்டவணையின் இறுதி மூன்று மாதங்களுக்கென - தோர்கல் ; அர்ஸ் மேக்னா & பிரளயம் - என மூன்று மெகா இதழ்களை ஒதுக்கி வைத்தருந்தது பற்றி ஏற்கனவே எழுதியிருந்தேன் ! அவ்வப்போது பணியாற்றச் சோம்பல் என்பதுமே அவற்றை ஒத்திப் போட்டே பயணித்ததன் பின்னணிக்கொரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை ! But எது எப்படியோ, நாட்காட்டிகளின் சருகுத் தாட்கள் - 'க்றிஸ் ஆப் வல்நாரை' விடவும் இரக்கமற்றவை என்பதை ஆண்டின் துவக்கம் முதலாகவே உணர்ந்து வருகிறேன் ! 'லொடக் லொடக்' என சாவகாசமாய் பயணமாகும் பேஸஞ்சர் ரயிலைப் போல மாதத்தின் 10 தேதிகளிலும், 15 தேதிகளிலும் ஆஜராகிக் கொண்டிருந்த இதழ்களை மறுக்கா முதல் தேதிக்கென சீரமைக்க தோர்கல் & கோ.வோடு அடிக்க நேர்ந்த அந்தர்பல்டிக்களின் கிறுகிறுப்பே ஓய்ந்திருக்கா நிலையினில் - பிப்ரவரியின் கத்தை மேஜை மீது குவிந்து கிடக்க, அதற்குமிடையே - "ஆன்லைன் புத்தக விழாவுங்கோ ; நாங்க அதுக்கோசரம் தயாராக வேணும்ங்கோ !" என்று புதிதாய் ஒரு இடைச்செருகல் ! என்ன பண்ணுகிறோமோ இல்லையோ - இப்போதெல்லாம் பிரிண்ட் அவுட்களை எடுத்துக் குவிக்க நாங்கள் வாங்கித் தள்ளும் A4 பேப்பர் பாக்கெட்டுகளை - அந்நாட்களில் கடுதாசிக் கணைகள் தொடுக்க நம்ம தலீவர் கூட வாங்கியிருக்க மாட்டார் என்பேன் ! So பிப்ரவரியின் முதல் தேதிக்கென வந்திடவுள்ள இன்னொரு ஹார்ட்கவர் மெகா இதழ் & அதன் கூட்டணி மீதொரு கண் ; இடைப்பட்டுள்ள நமது ஆன்லைன் விழாவுக்கான 3 இதழ்கள் மீது இன்னொரு கண் - என all கண்ஸ் ஒரே பிசி ! இதுக்கோசரமே புனித மனிடோ தாராமுட்டை சைசுக்கு கண்களைத் தந்திருப்பாரோ ?
ஜனவரியின் முக்கூட்டணியின் இதுவரையிலான உங்கள் அலசல்கள் + விற்பனைகளைக் கொண்டு பார்க்கும் போது - the real surprise என்பது "கோழைகளின் பூமி" தான் ! தோர்கல்அடிக்கவுள்ளது சிக்ஸரே என்பது எப்போதோ தெரிந்த சேதியே ; என்மட்டில் புக்கின் தயாரிப்பு நயமாய் அமைகிறதா ? என்ற பயம் மாத்திரமே குடியிருந்தது ! அதுவும் பெருசாய் பிசகுகளின்றித் தயாராகி நின்ற போதே - " ரைட்டு...ஆண்டின் துவக்கம் சார்ந்த கவலைகள் அனாவசியம் !" என்று புரிந்து விட்டிருந்தது ! ஹெர்லக் ஷோம்ஸ் பற்றியும் என்னுள் ஒரு புரிதலிருந்து - கூரையிலேறிக் கூவிடும் வெற்றியாக இது இராது ; ஆனால் ஒரு 20 நிமிட வாசிப்பினில் மனதுகளை refresh செய்திட நிச்சயம் தவறிடாது என்று ! And அது கச்சிதமாய் நிறைவேறியுள்ளதாய்த் தோன்றுகிறது - at least கார்ட்டூன் ஆர்வலர்களின் மத்தியினில் ! அநேகமாய் 2021 -ல் வெளியாகவுள்ள ஹெர்லக் ஆல்பத்துக்குப் பிற்பாடு, ஒரேயொரு சிங்கிள் சாகசம் மட்டுமே எஞ்சியிருக்கும் இத்தொடரினில் என்று நினைக்கிறேன் ! "கோழைகளின் பூமி" நிச்சயமாய் பேசப்படுமென்று யூகித்திருந்தேன் தான் ; ஆனால் விற்பனையிலுமே அது சாதித்திடுமென்பது நான் எதிர்பாரா ஒன்று ! And again - எனக்குள் கொஞ்சமாய் நெருடல்களிருந்தன - 'நிறைய loose ends தொங்கிக் கொண்டுள்ளனவே - அவற்றைக் கொண்டே இந்தக் கதையின் கழுத்துக்கு சுருக்கு மாட்டி விடுவீர்களோ ?' - என்று ! ஆனால் இந்தக் கருப்பு வெள்ளை கி.நா. பாணிகளுக்கு நீங்கள் செமையாய் sync ஆகி விட்டுள்ளீர்கள் என்பது ஸ்பஷ்டமாய்ப் புரிஞ்சூ ! So எதிர்நோக்கியுள்ள ஆண்டுகளில் ஏதேனுமொன்றில் - ஆறுக்கு ஆறு கி.நா. தேர்வுகளையும் இந்த போனெல்லி வரிசையிலிருந்தே அமைத்திடும் வாய்ப்பும் பிரகாசமோ ?
And on the topic of கி.நா.ஸ் - ஒரு கனவு உள்ளுக்குள் கடந்த சில வாரங்களாகவே துளிர் விட்டு வருகிறது ! ஒரு ரொம்ப ரொம்ப வித்தியாசப் படைப்பு கண்ணில் பட்டது ! பணியினில் பெண்டை நயமாய்க் கழற்ற வல்லது என்பது பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்தது ! ஆனாலும் அதை எப்படியேனும் தமிழுக்கு கொணரும் ஆசை ததும்புகிறது ! ஒரே சிக்கல் : இதனில் பணி செய்வதெனில் ஒரு ரெண்டோ / மூணோ வாரங்களுக்கு பாக்கி சகலத்துக்கும் டாட்டா காட்டி விட்டு, இதற்குப் பேனா பிடிப்பதில் முழுமூச்சாய் இறங்கிட வேண்டியிருக்கும் ! அந்த மாதிரியொரு அவகாச luxury வாய்க்கும் தருணத்தில் சத்தமின்றி இதனை நனவாக்கிட முனைய நினைத்துள்ளேன் ! Could be 2021 ..or 2022 ...or ....!! Fingers crossed !
இம்மாத தோர்கல் சிக்ஸர் ஒருபக்கமிருக்க ; காமெடிக்கோசரம் "கானகமே காலடியில்" இதழும் இருக்க - நிஜ காமெடி துவங்கியது வேறொரு ரூபத்தில் ! வரிசையாய் நமது ஏஜெண்ட்களுக்கு போன் போட்டு ஜனவரியின் பட்டியலை நம்மவர்கள் வாசித்தால் - "ம்ம்..அப்புறம் ?..அப்புறம் ?" என்ற கேள்விகளே ! "அப்புறம் ஒன்னும் இல்லேங்கண்ணா ; இந்த மாசம் மூணே புக் தான் !" என்று பதில் சொல்ல - "இன்னாது ? டெக்ஸ் கிடையாதா ? வருஷத்திலே மொத மாசத்திலேயே டெக்ஸ் கிடையாதா ? " என்ற கண்சிவத்தல்கள் மறுமுனைகளிலிருந்து !! "இல்லீங்க ; இந்த மாசம் தோர்கல்ன்னு பெரிய புக் ரெடியாகிருக்கு ; இது நல்லா இருக்கும் !" என்றால் - "என்னமோ போங்க !!" என்ற சலிப்புகளே ! இப்போதெல்லாம் நம்மவர்களே - அந்த மாதத்து புக்ஸ் என்னவென்று என்னிடம் கேட்க வரும் போது "டெக்ஸ் கிடையாதா சார் ?" என்று பீதியோடே வினவுகின்றனர் ! இன்னமும் 2 டெக்ஸ் வறட்சி மாதங்கள் காத்திருக்க, செத்தார்கள் நம்மவர்கள் !! இது தான் யதார்த்தம் ; இது தான் ஒரு மெய்யான தல தாண்டவம் என்பதை சிலபல அண்டா ஓனர்கள் புரிந்திட புனித தேவனிடம் கோரிக்கை வைப்போம் !
And இந்தத் தல தாண்டவங்களின் இன்றைய தலைமகனுடன் இத்தாலியில் நிகழ்ந்துள்ளதொரு அளவளாவலின் தமிழாக்கமே இவ்வார பதிவின் highlight ! டெக்ஸ் வில்லரின் நடப்பு எடிட்டரும், அநேகமாய் அவரது தொடரின் maximum hits தந்திடும் ஜாம்பவானுமான திரு மௌரோ போசெல்லி அவர்கள் இணையத்தில் மனம் திறந்துள்ளார் !
டெக்ஸ் வில்லர் : ஆற்றலின் மறு உருவம் ; நேர்மையின் சின்னம் ; விவேகம் ; வீரம் ; வேகம் என சகலத்திலும் முதல்வன் ! உருவில் இவர் அசுரனல்ல ; ஆனால் உணர்வுகளுள் கலந்து 72 ஆண்டுகளாய் உலகெங்கும் ஏகமாய் காமிக்ஸ் ரசிகர்களின் மனதில் கோலோச்சும் அசாத்தியன் !! 1948-ன் செப்டெம்பர் 30 முதலாய்த் துவங்கிய இவரது அதிரடிகள் - பல லட்சம் சித்திரங்களோடு ; பல நூறு சாகசங்களோடு கலக்கி வந்தாலும், இதன் பின்னணியில் உள்ள கதாசிரியர்கள் சொற்பமே ! பிதாமகர் போனெல்லி துவக்கியதை தமையன் செர்ஜியோ தொடர்ந்திட, இன்று அந்த ஜோதியைக் கையில் ஏந்தி நிற்கும் மௌரோ போசெல்லி பேசுகிறார் :
முதல் கேள்வி : டெக்ஸ் தொடரின் கதாசிரியர் ஆவது எப்படி ? அதற்கென என்ன மாதிரியான முன்னேற்பாடுகள் ; முஸ்தீபுகள் அவசியப்படும் ?
போசெல்லி : அடிப்படையில் நமது கதாநாயகனை உள்வாங்கிக் கொள்ள - அவரைப் படைத்த பிதாமகரின் ஆக்கங்களை ஒன்று விடாமல் வாசித்திட வேண்டியது அத்தியாவசியம் ! ஷெர்லாக் ஹோம்ஸின்புதுக் கதைகளை எழுதிடுவதானால் - சர்.ஆர்தர் கோனன் டாயில் எழுதியவற்றை மனப்பாடமாய் அறிந்திருக்க வேண்டிவரும் தானே ? டெக்ஸைப் பொறுத்தவரை - பிதாமகரின் படைப்புகளை உள்வாங்கிய பின்னே, தொடர்ந்திட்ட முக்கிய கதாசிரியர்களின் சுவடுகளை நாம் பின்பற்றிடவும் வேண்டி வரும் ! இன்றைக்கு டெக்ஸுக்குப் புதிதாய்க் கதை எழுதுவோர் க்ளாடியோ நிஸ்ஸியின் படைப்புகளையோ ; எனது கதைகளையோ உதாசீனப்படுத்திட இயலாது ! தற்போதைய டெக்ஸ் கதை டீமில் உள்ளோர் : நான், பஸ்க்வாலே ருஜு ; ஜியான்பிராங்கோ மான்பிரெடி ; ஜாக்கோபோ ரவ்ச் ; கிளாடியோ நிசி மற்றும் எனது உதவியாளன் ஜியோர்ஜியோ கியூஸ்ப்ரெடி மட்டுமே ! ஒரு விதத்தில் எனது சகாக்களை விட எனக்கு இந்தப் பணி சுலபமே - ஏனெனில் நான் அவர்களை விட வயதில் மூத்தவன் (நிஸ்ஸி நீங்கலாக) ! ஆகையால் டெக்ஸ் கதைகளுடனான பரிச்சயம் எனக்கு நீண்டு செல்கின்றது ! எலிமெண்டரி ஸ்கூலில் இருக்கும் நாட்களிலிருந்தே எனக்குப் பெரியவர் G.L. போனெல்லியைத் தெரியும் ! எனது மதியப் பொழுதின் பெரும்பான்மை அவரது பணிக்கூடத்திலேயே கழிந்திருக்கின்றன ; அவரது மகன் என்நண்பன் என்பதால் - அவனோடு ஒட்டித் திரியும் சாக்கில் பெரியவர் டெக்ஸ் கதைகளில் பணியாற்றுவதை ஏகப்பட்ட நாட்கள் தரிசித்திருக்கிறேன் ! So எனக்குள்ளே டெக்ஸ் ஆழமாய் வேரூன்ற அது உதவியது ! கதை சொல்லும் பாணியினில் நான் அவரிடமிருந்து மாறுபட்டிருந்தாலும், அடிப்படையில் அவர் உருவாக்கிய அந்தக் கதாப்பாத்திரத்தை நன்றாகவே புரிந்திருந்தேன் ! நாம் செல்லவுள்ள கதையின் நாயகன் நமக்குள் குடியிருக்க வேண்டியது தான் அடிப்படைத் தேவை !
கேள்வி # 2 : டி-வி. தொடர்களில் ஒவ்வொரு எபிசோடுக்கும் கதை எழுதுவோர் ஒருவித wiki-யை ; தொடரும் ஆசிரியர்கள் தவறாது பின்பற்ற வேண்டிய தகவல்கள் அடங்கிய ஒரு களஞ்சியத்தை உருவாக்கிக் கொள்வர் என்று கேள்விப்பட்டுள்ளோம் ! கதையின் ஓட்டம் ; அதை உருவகப்படுத்திய விதங்கள் ; கதாப்பாத்திரங்களின் தன்மைகள் என்றெல்லாம் அதில் குறிப்பெடுத்திருப்பார்கள் என்று கேள்விப்பட்டுள்ளோம் ! டெக்ஸுக்கு அது போல் ஏதேனும் "களஞ்சியம்" உண்டா ? உங்களது கதாசிரிய டீமின் உபயோகத்துக்கு என ஏதேனும் பிரேத்யேகமாய் உண்டா ?
உண்டு ! டெக்ஸுக்கென ஒரு குட்டியான களஞ்சியம் உண்டு ! ஒரு மதியப்பொழுதில் நான் எழுதிய அந்த நாலோ ஐந்தோ பக்கங்களை மற்ற கதாசிரியர்களும் கையில் வைத்திருப்பர் ! ஒரு டெக்ஸ் கதையின் உருவாக்கத்தில் எவையெல்லாம் மீறிடக் கூடா மரபுகள் ? என்பது பற்றி அதனில் இருக்கும் !
டெக்ஸ் கதைகளுக்குப் பேனா பிடிப்பேன் என்றெல்லாம் நான் கற்பனை கூடக் கண்டதில்லை ! காமிக்ஸ் உருவாக்கிட எண்ணியிருந்தேன் தான் ; ஆனால் இது எதிர்பாராது எனக்கு கிடைத்த வாய்ப்பு ! எனக்கு 30 வயதான போது வாழ்க்கையில் ரொம்பவே சிரமப்பட்டுக் கொண்டிருந்தேன் ; அப்போது பெரியவர் போனெல்லி என்னைத் தனது உதவியாளராக ஏற்றுக் கொண்டு எனக்குப் பெரும் சகாயம் செய்திருந்தார் ! பின்னாட்களில் அவரது மனைவிக்குச் சொந்தமான போனெல்லி நிறுவனத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிட்டியது ! பெரியவருடனான எனது நெருக்கம் டெக்ஸை உயிர்ப்போடு வைத்திருக்க எனக்கு ரொம்பவே உதவியது ! எனக்கு முந்தய டெக்ஸ் எடிட்டரான கிளாடியோ நிஸ்ஸிக்கு எனக்கு கிட்டியிருந்த அதிர்ஷ்டங்கள் வாய்த்திருக்கவில்லை ! ஆகையால் அவர் அத்தனை டெக்ஸ் கதைகளையும் நெட்டுரு போட வேண்டியது அவசியமாகியிருந்தது ! ரொம்பவே கடினமான காரியம் தான் ; ஆனால் அதனை பிரமாதமாகச் செய்து காட்டினார் நிஸ்ஸி ! அவரது டெக்ஸ் கதைகளுமே இந்த நாயகரை எவ்விதம் முன்னெடுத்துச் செல்வது ? என்பதற்கான உதாரணங்கள் ! நானும் அவரும் கதை சொல்லும் விதங்களில் நிரம்பவே வேறுபட்டோர் என்றாலும் - கதாநாயகனை அழகாய், எவ்வித நெருடல்களுமின்றி நடத்திச் செல்வதில் இருவருக்குமே வெற்றி என்பேன் !
கேள்வி # 3 : சரி, நடைமுறைகளின் பக்கமாய் இனி நகர்வோம் ! லாக்டௌன் நாட்களில் பதிவொன்றைப் பார்த்த போது - நீங்கள் டைப்ரைட்டரில் கதையை டைப் செய்வது போலிருந்தது ! முழுக்கவே டிஜிட்டல் யுகமாகி விட்ட இந்நாட்களில் நீங்கள் இன்னமும் டைப்ரைட்டர் பார்ட்டி தானா ?
பெரியவர் போனெல்லி காலத்துக்கு ஏற்ற தொழில் நுட்பங்களோடு பயணித்தவர் ; ஒலிவெடி லெட்டரா 33 என்ற டைப்ரைட்டரை பயன்படுத்துவார் டெக்ஸ் கதைகளை டைப் அடிக்க ! அவரைப் பார்த்து நானுமே அதில் பழகிப் போனேன் ! கம்பியூட்டர்களில் டைப் அடிப்பதை விட இது கொஞ்சம் சுலபமாய் இருப்பதாய் எனக்குத் தோன்றுகிறது ! இதில் அடிப்படையில் உள்ள வசதி - முந்தைய பக்கங்களை ; கதையின் துவக்கங்களை நான் review செய்திட நினைத்தால் பக்கங்களைத் தரையில் போட்டு நொடியில் படித்து விட முடியும் ! கதை வளர வளர, கதாபாத்திரங்கள் அந்த நொடியில் எங்கிருக்கிறார்கள் ; என்ன மாதிரியான மாற்றங்களுக்கு கதையின் ஓட்டத்தில் ஆளாகியிருக்கிறார்கள் ? என்பதையெல்லாம் எனக்கு நானே நினைவூட்டிக் கொள்ள இது ரொம்பவே உதவிடுகிறது ! உதாரணத்திற்கு நானிப்போது பக்கம் 130 -ல் இருந்தாலுமே, துவக்கங்களை நினைவு கூர்ந்துகொண்டே தான் எழுதுவேன் !
அப்புறம் எழுதுவதில் இன்னொரு சூட்சுமமும் உண்டு !! வழக்கமாய் எந்தவொரு தருணத்திலும் நான் 15 முதல் 20 கதைகள் வரைக்கும் ஒரே வேளையில் துவக்கி எழுதிக் கொண்டிருப்பது வாடிக்கை ! GL போனெல்லி இந்த பாணியைக் கடைபிடித்துப் பார்த்துள்ளேன் - ஒரே சமயத்தில் 4 வெவ்வேறு டெக்ஸ் சாகசங்கள் ஓடிக்கொண்டிருக்கும் அவரிடத்தில் ! டைலன் டாக் கதைகளைக் கையாண்ட கதாசிரியர் டிஸியானோ ஷ்லாவியும் இதைச் செய்திடுவார் ! கடந்த 30 ஆண்டுகளாய் நான் இந்த பாணியையே கடைப்பிடித்து வருகிறேன் ! சில சமயங்களில் எனக்கே இது எவ்விதம் சாத்தியமாகிறதென்ற மலைப்பு இருப்பதுண்டு ; ஆனால் என்னுள் உள்ள எழுத்தாளனை உயிர்ப்போடு வைத்திருக்க உதவிடுவது இதுவே !
அப்புறம் ஒரு கதையை நான் நேரடியாய் முடித்திடுவதும் கிடையாது ! இது கூட ஷ்லாவியிடம் நான் கற்றுக் கொண்டதே ! கதையை க்ளைமேக்ஸுக்கு அருகாமையில் நிறுத்திக் கொள்வேன் - மேற்கொண்டு எவ்விதம் நகரலாம் என்ற எனது யோசனைகளை நோட்ஸ்களாக மட்டும் எழுதி வைத்துக் கொண்டு ! ஆர்டிஸ்டும் படம் போடத்துவங்கி - க்ளைமாக்ஸ் வரைக்கும் முடித்து விட்டு - "மீதம் எப்போ ரெடியாகும் ?" என்ற கேட்பார் ! அதன் பின்னே பணியைத் தொடர்வேன்; அதற்குள் என்னுள் அந்தக் கதையினை நேர்த்தியாய் முடிக்கும் தெளிவு இருக்கும் !
இந்த பாணி அத்தனை பேருக்கும் ஒத்துப் போவதில்லை தான் ! க்ளாடியோ நிஸ்ஸி நிதானமாய் எழுதுபவர் ; ஒட்டு மொத்த ஸ்கிரிப்ட்டையும் கத்தையாக என்னிடம் ஒப்படைப்பார் ! ஆனால் ஓய்வுக்குள் புகும் முன்னே, டெக்சின் தீவிர கதாசிரியராக அவர் இருந்த நாட்களை எண்ணெய் போலவே ஒரே தருணத்தில் ஏகப்பட்ட கதைகளுக்குள் தலை நுழைத்தே கிடப்பார் ! 20 வருடங்களாய் இவ்விதம் பணியாற்றியது, அவரது ஆரோக்கியத்துக்கு பங்கம் ஏற்படுத்தியதை வாசகர்கள் அறிவர் !
பஸ்க்வாலே ருஜு கூட இந்த பாணிக்காரர் தான் ; ஆனால் ஒரு நேரத்துக்கு நாங்கோ ; ஐந்தோ கதைகளுக்கு மேலாய் துவங்கிட வேண்டாமே என்று என்னிடம் அடிக்கடி சொல்லுவார் ! அதற்கு மேலாய் இழுத்து விட்டால் குழம்பிப் போய்விடுவோம் என்பது அவரது பயம் ! அவர் Ipad களில் எழுதுபவர் என்பதால், எங்கேனும் பயணம் செல்லும் போதுமே எழுதுவதைத் தொடர்வதுண்டு ! ஆனால் எனக்கு என் ஸ்டுடியோவில் இருந்தால் தவிர எழுத சாத்தியப்படாது ! ஒரு கதைக்குள் ஊன்றி ; கவனம் தந்து ; கானை நகர்த்த எனக்கு என் பணிக்கூடமே சுகப்படும் ! வீட்டுக்கு மாளிகைகளை வாங்கிப் போக மறந்து, திட்டுக்கள் வாங்கிய நாட்கள் நிறைய ; ஆனால் ஒரு டெக்ஸ் கதையின் முடிச்சைத் தவற விட்டதில்லை !
எழுத்தென்பது பழகப் பழக மெருகேறும் சமாச்சாரம் எனும் போது - நாட்களின் ஓட்டத்தோடு நமக்கே ஒரு வேகம் கிட்டி விடும் ! இன்றைக்கு டெக்ஸுக்கு கதை எழுத வரும் புதியவர்களின் ஸ்கிரிப்ட் என்னிடம் எடிட்டிங்கிற்கு வரும் போது - ஒவ்வொரு வசனத்துக்குமே அவர்கள் நிரம்ப நேரம் எடுத்து, யோசித்து எழுதியிருப்பது புலப்படும் ! நானோ, போனெல்லியோ ; மர்ம மனிதன் மார்டினின் கதாசிரியராக காஸ்டெல்லியோ இவ்விதம் யோசிப்பதில்லை ; கதாப்பாத்திரங்கள் எங்களோடு நேரடியாய்ப் பேசுவது போல் உணர்வோம் ; நேரடியாய் அடித்துக் கொண்டே போவோம் !
ஒருமுறை ஒரு டெக்ஸ் மினி சாகசத்துக்கு கதை எழுதிக்கொண்டிருந்தேன் ; அதற்கான ஆர்ட்டிஸ்ட் ரொம்பவே மெதுவாய் படம் போட, எனக்குப் பொறுமையின்றி பக்கம் 10 -ல் நிறுத்தி விட்டு வேறு பணிக்குள் புகுந்து விட்டேன் ! ரொம்ப காலம் கழித்து ஆர்ட்டிஸ்ட் மீத ஸ்கிரிப்ட்டைக் கேட்ட போது - "ஆண்டவா - இவ்வளவு காலம் கழித்து அந்தக் கதையை எப்படிக் கையாள்வதோ ?" என்ற கலக்கத்தோடு அமர்ந்தேன் ; ஆனால் எனது உள்ளுணர்வுகள் அந்தக் கதையை அடுத்த 2 மணி நேரங்களுக்குள் எடுத்துச் சென்று பூர்த்தியடையச் செய்தன ! என்னையும் அறியாமலே கதாபாத்திரங்கள் தாமாகவே கதையை வழிநடத்திடுவதை உணர்ந்தேன் ! எனக்காக வேறு யாரோ எழுதித் தந்தது போல் அன்றைக்கு உணர்ந்தேன் ! கலைவடிவங்களில் ; குறிப்பாய் இசைத்துறையில் உள்ளோருக்கு இது நன்றாகவே புரியும் என்பேன் ; ஒவ்வொரு நோட்ஸிலும் இசையமைப்பாளர் யோசித்துக் கொண்டிருக்க மாட்டார் ; திடீரென தோன்றும் inspiration வழிநடத்திடும் அவரை ! எங்களை போல காமிக்ஸ் உருவாக்கும் சாமான்யர்களுக்கும் இதுவே நடைமுறை ; கதைகள் திடீரென தாமரை உயிர் கொண்டு ஓட்டமெடுப்பதுண்டு !
கேள்வி # 4 : டெக்ஸ் கதைகள் உற்பத்திச் சங்கிலி பற்றிச் சொல்லுங்களேன் ?
ஒரு கதாசிரியர் டெக்ஸுக்கு புதிதாய் கதை துவக்குகிறாரெனில், அதன் மையத்தை விவரித்து எனக்கு அனுப்பிடுவார் ; என் பார்வையிலான அதன் சாதக-பாதகங்களை அலசுவோம் ! ஏதேனும் நெருடல் எனக்கிருந்தால், கலந்து பேசி அவற்றை நேர் செய்வோம் ! அப்புறமாய் அவர் எழுத ஆரம்பித்து, சில மாதங்களுக்குப் பின்னே பூர்த்தி கண்ட ஸ்கிரிப்ட்டை எனக்கு அனுப்பிடுவார் ! அப்போது ஏதேனும் இடறினால், நானாகவே மாற்றி அமைத்திடுவேன் ! ஆனால் பொதுவாய் அவ்விதம் அதிகம் நேர்வதில்லை ; பேனா பொடிப்போர் எல்லோருமே இன்று ரொம்பவே ஆற்றல் நிரம்பியவர்கள் எனும் போது !
ஒரு வருஷத்துக்கும் முன்னேயே கதைகளில் நாங்கள் பயணித்து வருவோம் ; ஆர்டிஸ்ட்களுக்குத் தான் கூடுதலாய் அவகாசம் தேவைப்படும் ! ஒரு 350 பக்க டெக்ஸ் MAXI ஆல்பமேனில் அதற்கு வழக்கமாய் 3 வருஷங்களுக்கு மேலாகிடும் ! ஏற்கனவே சொன்னது போல நான் 'ஏக் தம்மில்' எல்லாம் இதனை எழுதிட மாட்டேன் ; மூன்றாண்டுகளின் ஓட்டத்தோடு எனது கதையும் சிறுகச் சிறுக மலர்ந்து செல்லும் ! ஒரு யோசனையை 36 மாதங்களுக்கும் அதிகமாய் தலைக்குள் அசை போடும் போது அது ரொம்பவே அழகாய் மெருகேரிடுவதை உணர முடிகிறது எனக்கு !
சில தருணங்களில் ஒரே மாதிரியான கதைக்கருக்களை வெவ்வேறு கதாசிரியர்கள் கையில் எடுத்திருக்கவும் கூடும் ; ஆனால் கூடிய மட்டுக்கு அதனைத் தவிர்க்க முனைவோம் ! புதுசு புதுசாய் கருக்களை கண்டறியும் ஆற்றல் இல்லாதோர் எங்களது டீமில் இருக்க இயலாதே ! சில கதாசிரியர்களுக்குள், குறிப்பிட்டதொரு எண்ணிக்கைக்கு மேலாய் கதைகள் இராது ; ஒரு கட்டத்துக்கு மேல் வறட்சியில் ஒதுங்கி விடுவார்கள் ! ஆனால் என்னைப் போலவும் எழுத்தாளர்கள் உண்டு ; உலகத்தை உலுக்கும் விதமாய் இல்லாவிட்டாலும், ஏதேதோ புது உத்திகளைக் கண்டறிந்து தொடரை நகற்றிப் போய்க் கொண்டேயிருப்போம் !
தொடர்கிறது !!
ரொம்ப காலத்துக்கு டெக்ஸ் கதைகள் மாதாந்திர கதைவரிசையில் மட்டுமே வெளிவந்து கொண்டிருந்தன ! எழுபதுகளின் காமிக்ஸ் உச்ச நாட்களில், இத்தாலியெங்கும் தழைத்திருந்த சிறு புத்தக ஸ்டால்களின் உபயத்தில் பல தச்சத்தில் நின்றது விற்பனை ! ஆனால் காலப்போக்கில் விற்பனைகள் அந்த உச்சத்தைத் தக்க வைத்திடத் திணறிட, டெக்ஸ் மேலும் சில பாணிகளில் களமிறங்குவது அவசியமானது ! இந்த சூட்சமங்கள் செர்ஜியோ போனெல்லிக்கு அத்துப்படி ; மாக்ஸி டெக்ஸ் ஆல்பங்கள் ; டெக்ஸ் ஸ்பெஷல்ஸ் ; சிறுகதைகள் - என ரவுண்டு கட்டி அடிக்கும் வித்தைகளை அவிழ்த்து விட்டார் ! சிறுகதைகள் கொண்ட COLOR டெக்ஸ் பரீட்சர்த்தமும் செர்ஜியோவுடனானதொரு முயற்சியே ! புதுக் கதாசிரியர்களையும் ; ஸ்கிரிப்ட் ரைட்டர்களையும் கண்டறிய அந்தக் களம் எங்களுக்கு உதவியது ! பிரெஞ்சு ஹார்ட்கவர் ஆல்பங்களின் பாணிகளையுமே பரிசோதிக்க முனைந்தோம் - கதைகளுக்கும் புது லே-அவுட் ; புது கதைசொல்லும் யுக்திகளென்று வழங்கி !
இளம் டெக்ஸ் கதைகளைப் பிரதானப்படுத்தும் யோசனையானது - தற்போதைய போனெல்லி GM சிமோன் ஐரோல்டியினது!"டெக்சின் கதையை துவக்கத்திலிருந்து சொன்னாலென்ன ? " என்று ஒரு நாள் என்னிடம் கேட்டார் ! நான் ஏற்கனவே இளம் டெக்சின் கதைகளில் அந்நேரத்துக்கு பணியாற்றியிருந்தேன் தான் (காற்றுக்கென்ன வேலி ? சிங்கத்தின் சிறுவயதில்) ; ஆனால் இளம் டெக்ஸை ஒரு மாதாந்திரத் தனி இதழாய் கொண்டு செல்வதென்பது நட்வாக் காரியமாய் எங்களுக்கு துவக்கத்தில் தென்பட்டது ! ஆனால் ஒரு ஓய்வான மத்திய சிந்தனையில் அதை நனவாக்கிட இயலும் தான் என்று தீர்மானிட்டேன் ! ரொம்பவே விறுவிறுப்பான ; பரபரப்பான கதை சொல்லும் பாணியோடு, இளம் டெக்ஸை துள்ளிப் பாயும் சிறுத்தையாய் அமைக்க முடிந்தது ! பெரியவர் போனெல்லி மெது மெதுவாய்த் தொட்டுச் சென்றிருந்த டெக்சின் இளம் பிராயங்களை சிதைத்திடாது - அதையொட்டியே கதைகளை அமைக்கும் தீர்மானமானது டெக்ஸ் பாரம்பரியத்தை மதித்ததாகவும், புது வாசக ரசனைகளுக்கு தீனி போட்டதாகவும் இருக்கக் கண்டோம் ! இளம் டெக்சில் கொஞ்சம் பழமையும் உண்டு ; புதுமையும் உண்டு !
கேள்வி # 5 : இளம் டெக்ஸ் கதையின் ஓட்டத்தோடு நாயகர் முதிர்ச்சியடைவதையும் காட்ட முற்படுகிறீர்கள் ! இளம் டெக்ஸ் - யதார்த்த டெக்ஸை சந்திக்கும் புள்ளி வரைக்கும் இத்தொடரைக் கொண்டு செல்ல உத்தேசித்துள்ளீர்களா ?
இளம் டெக்சின் முடிவினில், என்னுடைய முடிவும் கலந்திருக்கக்கூடும் ! ஒரு குறிப்பிட்ட வயது வரைக்கும் தானே எனது பணிக்காலம் இருந்திட சாத்தியம் ? அதே சமயம், இந்தப் புதுத் தொடரானது காலாகாலத்துக்கும் பயணிக்கவும் கூடும் ! முதல் 6 வருஷங்களுக்கான கதைகளை நான் தயார் செய்து வைத்துவிட்டேன் ! போக்கிரியாய்த் துவங்கிடுபவர், மெது மெதுவாய் சட்டத்துக்கு உதவிடும் ஆற்றலாளராய் இளம் டெக்ஸ் பரிணாம வளர்ச்சி காண்பதை கதைகளின் போக்கில் உணர்ந்திட இயலும் ! நடுவே கிட் கார்சனுடனான சந்திப்பு ; ரேஞ்சர் ஆகிடுவது என்ற முக்கிய மைல்கல்களும் இடம்பிடித்திடும் ! ரெகுலர் டெக்ஸ் கதைகளில் வந்து சென்றுள்ள வில்லன்களை இளம் டெக்ஸ் சந்திப்பதும் நிகழும் !
பெரியவர் GL போனெல்லி - டெக்சின் இளம் பிராய நாட்கள் பற்றி விரிவாய்ச் சொல்ல முனையவில்லை எனும் போது - இத்தொடரை கணிசமாய் நீட்டிச் செல்ல நிறையவே வாய்ப்புகள் உண்டு ! ரெகுலர் தொடரில் ஆரம்ப ஆல்பங்களில் இளம் டெக்ஸ் சர சரவென முதிர்ந்து, பெரியவராவதாய் சித்திரத்திருப்பார் GL போனெல்லி ! அந்த கேப்பில் இளம் டெக்ஸ் கதைகளுக்கானதொரு தங்கச்சி சுரங்கமே இருப்பதாய் நான் உணர்கிறேன் ! ஆகையால் இளம் டெக்ஸுக்கு நீண்ட எதிர்காலம் இருக்கலாம் தான் ; ஆனால் எல்லாமே விற்பனைகளைப் பொறுத்தது ! தற்சமயத்துக்கு விற்பனை செம வேகம் !
2020 முதலாய் டெக்ஸுக்கென கிருஸ்துமஸ் ஸ்பெஷல் இதழ்களும் திட்டமிட்டுள்ளோம் ! 2020 டிசம்பரில் வெளியாகியுள்ள இந்த ஆல்பம் சோலோவாய் டெக்ஸுக்கு கவனம் தந்திடுகிறது ! 2021 க்கென நான் திட்டமிட்டுள்ள ஸ்பெஷலில் 2 முக்கிய போனெல்லி கதாப்பாத்திரங்கள் சந்தித்துக் கொள்வர் ! ஆனால் "புதுமையைப் புகுத்துகிறேன் ; மாற்றங்களைச் செய்கிறேன் பேர்வழி !" என்று நொண்டிக் கொண்டே இருப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது ! ஓவர் அலம்பல் ஆரோக்கியத்துக்கு நல்லதில்லை !
கேள்வி # 6 : கதைகளில் தொடரும் உப பாத்திரங்கள் ; வில்லன்கள் பற்றிச் சொல்லுங்களேன் ?
எந்தவொரு தொடருக்குமே - தொடர்ந்திடும் கதை மாந்தர்கள் முக்கியம் ; ஒருவித பிணைப்பை வாசகர்களுக்கு ஏற்படுத்த இவர்கள் உதவிடுவர் ! 1960-களில் மெபிஸ்டோ மீள்வருகை செய்வது உற்சாகத்தைக் கொணரும் சம்பவங்களாய் அமைந்தன ! கடைசியாய் 2002-ல் க்ளாடியோ நிஸ்ஸியின் கைவண்ணத்தில் வந்த மெகா மெபிஸ்டோ சாகசமானது ஆல்பம் 501 to 504 வரை ஓடியது ! அதற்கொரு தொடர்ச்சியை வழங்குவது அத்தனை சுலபமான காரியமல்ல ! ஆகையால் மெபிஸ்டோவின் மைந்தன் யமாவை களமிறக்கும் யோசனை உதித்தது எனக்கு ! "யமாவின் முத்திரை" ஓவியர் சிவிடெல்லியின் கைவண்ணத்தில் சமீபமாய் உருவானது இந்தப் பின்னணியில் தான் ! தொடரும் காலத்துக்கென ஒரு கதையை உருவாக்கி வருகிறோம் ; அது பட்டையைக் கிளப்புகிறதோ - இல்லையோ ; நீ-ண்-டு செல்லவிருப்பது உறுதி ! தோராயமாய் 6 அல்லது 7 பாகங்கள் கொண்டிருக்கவுள்ள இந்த மெபிஸ்டோ கதைக்கு சிவிடெல்லியும், இன்னொரு ஓவியக்கூட்டணியும் பணியாற்றவுள்ளார்கள் !
சற்றே இரண்டாம் நிலையிலான கதை மாந்தர்களும் தொடர்வதுண்டு ; சிறு நகர ஷெரீஃகள் ; மிஸ்டர் P போல ! இது போல நிறைய தொடரும் உபபாத்திரங்கள் இருப்பது - கதைத்த தேடல்களில் எங்களுக்குப் பெரிதும் உதவுவதையும் நான் குறிப்பிட்டாக வேண்டும் தான் !
கேள்வி # 7 : டெக்சுக்கோ, அவரது துணைகளுக்கோ வயதாவது போல் தெரிவதே இல்லை ! ஆனால் அவ்வப்போது நிஜ வான்மேற்கு வரலாற்றினில் இங்கும் அங்கும் அவர்கள் உலா செல்வதைக் காண்கிறோம் ! வெவ்வேறு கால கட்டத்துக்கு இவர்கள் பயணமாகினாலும், நெருடல்களின்றி அவர்களை சித்தரிக்க முடிவது எவ்விதம் ?
ஒரு கற்பனைக் கதாப்பாத்திரம் எனும் போது ஆங்காங்கே கொஞ்சமாய் லாஜிக்கின் எல்லைகளை தொட்டுப் பயணிப்பது நிகழ்வதுண்டு ! கதைகளின் தேவைக்கேற்ப சில நிஜ வரலாறுகளை கொஞ்சமாய் முன்னேயும், பின்னேயும் இழுத்துக் கொள்வோம் தான் ! டெக்சின் சாகசங்கள் அரங்கேறுவது தோராயமாய் 1880 வாக்கில் ! ஆனால் கோச்சைஸ் அதற்கு முன்பாகவே இரண்டு விட்டிருந்தார் ; so அவரை கதைகளுக்குள் புகுத்திட விழைந்திடும் வேளைகளில் வரலாற்று timeline -ஐ சற்றே மாற்றிக் கொள்ள வேண்டி வரும் ! அதே போல 1880 வாக்கில் கமான்சே இன மக்களோ ; செயன்னீ இன மக்களோ ஒரு ஆபத்தாக இருந்ததில்லை - அடக்கிடப்பட்டிருந்தனர் ! ஆனால் டெக்ஸ் சாகசங்களில் நாங்கள் அந்த வரையறைகளை லேசாய் மாற்றிக் கொள்வோம் ! இன்றைக்கு, இயன்ற மட்டிலும் வரலாற்றோடு ஒன்றிடும் முயற்சிகளை மேற்கொள்கிறோம் ! முன்னாட்களில் ஜில் போனெல்லி உருவாக்கிய கதைகளுள் ஒரே யுத்தத்தில் இரு வெவ்வேறு வயதிலான டெக்ஸ் வில்லர்கள் இடம் பிடிக்கும் முரணெல்லாம் அரங்கேறியிருந்தது ! இன்றைக்கு கூடியமட்டும் அவற்றைத் தவிர்க்க முனைகிறோம் !
எங்கேனும் ஒரு நகருக்கு டெக்ஸ் ரயில் ஏறிப் போவதாய்க் கதை அமைக்கும் முன்பாய் - அந்நாட்களில் அந்த ஊருக்கு ரயில் வசதி இருந்ததா ? என்பதை அறிந்திட முயற்சிக்கிறோம் ! ஆனால் எல்லா நேரங்களிலும் அது வேலைக்கு ஆவதுமில்லை தான் ! உதாரணத்துக்கு, டெக்ஸை அலாஸ்காவில் சாகசம் செய்திட இட்டுப் போகும் முயற்சியில் அவரை ஸ்காக்வே நகர் வழியாகப் பயணிக்கச் செய்திருந்தோம் ! ஆனால் தங்க வேட்டை சூடு பிடித்த பிற்பாடே ஸ்காக்வே நகரே பிறந்திருந்தது ! ஆகையால் சில முரண்களுக்கு நாங்கள் கண்களை மூடிடவே தேவைப்படும் !
கேள்வி # 8 : டெக்ஸ் இதர மீடியாவினில் தலைகாட்டும் வாய்ப்புகள் பற்றி ? சின்னத்திரையிலோ ; வெள்ளித்திரையிலோ 'தல' தலைகாட்டுவாரா ?
இதனைத் தீர்மானிக்க போனெல்லியில் ஒரு தனிப் பிரிவு உள்ளது ! ஆனால் இங்கு சிக்கல்கள் நிறையவே ! டெக்ஸ் ஒரு வெஸ்டர்ன் கதை ஜானர் ! காமிக்ஸ் அல்லாத இன்றைய மீடியாவினில் இந்த ஜானருக்குப் பெரிதாய் வரவேற்புகள் கிடையாது ! சில பல முயற்சிகள் நடந்துள்ளன தான் ; ஆனால் வெற்றி கிட்டியிருக்கவில்லை ! என்னைப் பொறுத்தவரைக்கும் ஒரேயொரு விஷயம் தான் பிரதானமானது ! ஒவ்வொரு திரைப்பட டைரக்டருமே, தனது படத்தின் கதாப்பாத்திரத்தை தன் பார்வையில் பார்த்திடவே விழைவார் ! அதனை கூட்டுவது, குறைப்பதும் தனது சுதந்திரமாய் அமைந்திட வேண்டுமென்று விரும்புவார் ! ஆனால் டெக்சின் கதாசிரியர்களான நங்கள், எங்களின் டெக்ஸாகவே அவர் எப்போதும் இருந்திட விரும்புகிறோம் ! திரைக்கு வந்த பின்னே, இத்தனை காலமாய் நாம் பார்த்து ரசித்திரா ஒரு புது டெக்ஸ்சாக பார்க்க நேர்ந்தால், அது நெருடும் தானே ? 1985-ல் இந்த சங்கடம் நேர்ந்திடவே செய்தது - "TEX and The Lord of the Abyss" திரைப்படத்தினில். ! GL போனெல்லியே இதற்கு திரைக்கதையில் இணைந்து பணியாற்றியிருந்தும், எதிர்பார்த்தது கிட்டவில்லை !
கேள்வி # 9 : ஒரே நேரத்தில் ஏகப்பட்ட கதைகளை எழுதி வருவது பற்றிச் சொன்னீர்களே ; தற்சமயமாய் உங்கள் மேஜையில் குவிந்து கிடப்பன என்னவோ ?
தற்போதைக்கு டெக்ஸ் மாதாந்திரத் தொடர் + இளம் டெக்ஸ் + Dampyr கதைத்தொடர்களில் நான் ஈடுபட்டுள்ளேன் ! அனைத்திலுமாய்ச் சேர்ந்து - 20 கதைகள் ஓடிக்கொண்டுள்ளன ; டெக்ஸுக்கு 15 ; பாக்கி Dampyr-க்கென ! அப்புறம் மற்ற டெக்ஸ் கதாசிரியர்கள் அனுப்பிடும் ஸ்கிரிப்ட்களை நானும், எனது அசிஸ்டண்டுமாய் வாசித்து, சரி பார்த்து, சரி செய்து வருகிறேன் !
ஆர்டிஸ்ட்கள் தரும் பென்சில் ஸ்கெட்ச்களும் என் மேஜையை நிறைத்துள்ளன ! ஓவியர் நமது கதை மாந்தர்களை சரி வர புரிந்து கொண்டிருக்கிறாரா ? நாம் உருவாக்கப்படுத்தியுள்ள விதங்களில் கதை பயணிக்கிறதா ? என்பதையெல்லாம் சரி பார்த்திட வேண்டிவரும் !ஒவ்வொரு பிரேமுமே ஒரு கதையின் வெற்றிக்கு ஜீவநாடியெனும் போது எங்கும் கோட்டை விடலாகாதில்லையா ? சித்திரங்களும் ; கதையும் கச்சிதமாய்க் கைகோர்க்கும் வேளையில் ஒரு கதை சுலப ஹிட்டாகிறது !
கேள்வி # 10 : ஓவியர்களை பற்றி பேசுவோமா ? டெக்சின் ஓவியராகிட என்ன தகுதிகள் தேவையோ ?
இதற்கான பதில் + இன்னும் கேள்விகள் + இன்னும் பதில்கள் - என போசெல்லி அதகளம் தொடர்ந்திடும் - உபபதிவினில் or அடுத்த பதிவினில் ! இதற்கு மேலாய் டைப்படிக்க இப்போதைக்கு திராணி நஹி ! ஒன்று மட்டும் சொல்லிடலாம் - ஈ ஆள் மனுஷன் அல்லா ; தேவுடு !! Phewwwwww !!
Bye folks...see you around ! அர்ஸ் மேக்னா அழைக்கின்றது ! Have a fun Sunday !!