நண்பர்களே,
வணக்கம். தாமதமான தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !! சகோதரியின் வீட்டிலொரு சுப காரியம் ; அதனைத் தொடர்ந்தொரு திடீர் பயணம் ; அதனையும் தொடர்ந்தொரு நெடும் பயணத்தின் ரத்து - என்று இந்த வாரத்தின் நாட்களே வித்தியாசமான கலவையாய்ப் பயணிக்க, இங்கே ஆஜராக சாத்தியப்படவில்லை ! And இங்கேயுமே சமீப வாரங்களில் பலமாய் ஈ ஒட்டி வருவதே நிலவரம் எனும் போது - ஒரு அரூப சோம்பலும் என்னைத் தொற்றிக் கொண்டிருப்பதையும் மறுக்க மாட்டேன் ! இங்கு நிலவிடும் பரபரப்போ ; ஆயாசமோ வண்டிக்குக் காற்றேற்றுவதும், பிடுங்கி விடுவதுமே நடைமுறை எனும் போது, தற்சமயத்து குறைச்சலான காற்றோடு லொடக்கடி..லொடக்கடி என்ற உருட்டலிலேயே பயணிக்க வேண்டியுள்ளதே !
பணிகளின் பக்கத்திலோ - SMASHING '70s இதழ் # 2 சார்ந்த இறுதிக்கட்ட வேலைகள் அட்சர சுத்தமாய் பெண்டுகளைக் கழற்றிக் கையில் தந்து விடுகின்றன ! ரிப் கிர்பி தான்....செம சுலபக் கதைகள் தான்... குழப்படிகள் லேது தான்....கருணையானந்தம் அங்கிளின் ஸ்கிரிப்டில் மேலோட்டமாய்த் திருத்தங்கள் + பட்லர் டெஸ்மாண்டுக்கு ஆங்காங்கே டப்பிங் குரல் தருவதென்ற பணிகள் மாத்திரமே தான் எனக்கு ....ஆனாலும் - அந்த மெகா சைசில் 200 பக்கங்களெனும் போது- ஒன்றன்பின் ஒன்றாய்த் தொடர்ந்திடும் குட்டிக் குட்டி வேலைகள் செம intense ரகங்களாகவே அமைந்து போகின்றன ! ஒரு வழியாய் அவற்றை நிறைவு செய்து விட்டு செவ்வாயன்று அச்சுக்கு அனுப்பிட all is set ! இதோ - நமது சென்னை ஓவியரின் அட்டைப்பட உருவாக்கத்தின் முதற்பார்வை ! இதன் மேலே ஒரு வண்டி நகாசு வேலைகளும் இடம்பிடித்திட, கையில் ஏந்திப் பார்க்கும் வேளையில் செமையாய் ஜிலுஜிலுக்கின்றது !

ரிப்பும், அவரது டாவும் ராப்பரில் ஒயிலாய்ப் போஸ் கொடுக்க, நம்ம டெஸ்மாண்ட் மாத்திரம் பின்னணியில் கோழித்திருடுனாட்டம் முழித்துக் கொண்டு நிற்பதை நிவர்த்திக்க நேரம் இருக்கவில்லை ! நிஜத்தைச் சொல்வதானால் "ரிப்பின் ராப்பர் - நடந்தது என்ன ?" என்றொரு புரோக்ராமே பண்ணி விடலாம் என்றிடும் அளவுக்கு அத்தனை மொக்கைகள் அட்டைப்படத்தில் பின்னணியினில் இம்முறை உள்ளன ! சிக்கல் என்னவெனில், நமது ஜென்டில்மேன் டிடெக்டிவ் ரிப்புக்கு எந்தவொரு மொழியிலும் , பிடரியில் அறையும் பாணியினில் யாருமே அட்டைப்படங்களினை உருவாக்கியிருக்கவில்லை - at least எனக்குக் கண்ணில்பட்ட வரைக்குமாவது ! ஒரு தெளிவான reference இருந்தால் அந்த டிசைன் அழகாகிடும் என்பது பால பாடம் ! ஆனால் நானும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நெட்டில் உருட்டோ-உருட்டென்று உருட்டியும், உருப்படியாய் எதுவும் கிடைத்தபாடில்லை !
சரி ரைட்டு...வேலைன்னு வந்துப்புட்டா வெள்ளைக்காரன் தான் இதுக்கு சுகப்படுவான் ; என்ன தான் நம்மாட்கள் கில்லியாய் நமது நாயகர்களின் முகங்களை வரைய முயற்சித்தாலும், வினு சக்ரவர்த்திக்குச் சித்தப்பாரு ஜாடை அவற்றினில் எட்டிப் பார்ப்பதை தவிர்க்க நிரம்பவே பிரயாசைப்படுவது கண்கூடு ! ஆனால் அங்கன வாழும் வெள்ளைக்கார தொரைமாருக்கோ அவுக ஆட்களை வரையுறதுன்னா சொலபமா இருக்குமில்லீங்களா ? So அந்த மாபெரும் சிந்தனையோடு கடல் கடந்த தேசத்தினில் recruit செய்த நமது ஓவியரிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்தேன் ! ஒரு வண்டி reference களையும் தந்திட, 'இம்புட்டு காசு ஆகும் நைனா ; அதிலே முன்கூட்டியே இம்புட்டு தரணுமாக்கும் !" என்றெல்லாம் கண்டிஷன் போட்டார் ! 'சரிங்க ஆபீசர் !' என்றபடிக்கே அவர் கேட்டதை செய்து தந்தேன் ! "சரியா 24 மணி நேரம்....ஒரு அவர் கூடேயும் புடிக்காது ; அரை அவர் கம்மியாவும் ஆகாது - டிசைன் உம்மே கையிலே இருக்கும் !" என்று அவர் தகவல் தந்த நேரம் முதற்கொண்டு கடிகாரத்தையே பார்த்தபடி இருந்தேன் ! ஆச்சு...24 மணி நேரமும் ஆச்சு ; ஆனா டிசைனையும் காணோம், திரட்டுப்பால் பால்கோவாவையும் காணோம் ! 'ஏனுங்னா....நம்ம ஊரிலே கடியாரம் சித்தே மொள்ளமா ஓடுதோங்கண்ணா ? - இன்னும் மெயில் எதையும் காங்கலியே ?' என்று வினவினேன் ! ஒருக்கால் நாம் தந்த அட்வான்ஸ் காசில் அந்த ஊர் டாஸ்மாக்கில் க்வாட்டரைப் போட்டுப்புட்டு மனுஷன் அப்பீட் ஆகியிருப்பாரோ ? என்ற சந்தேகமும் உள்ளுக்குள் எட்டிப் பார்த்தது ! "இதோ ஆச்சு ப்ரோ ; அல்லாம் ரெடி...மீத காசு ரெடியா கீதா ?" என்று பதில் கேள்வி கேட்டார் அவர் ! "ஏமண்டி...நாங்க இக்கட 50 வருஷமா குப்பை கொட்டற கம்பெனியாக்கும் ; டிசைனைக் கண்ணிலே காட்டுமய்யா !" என்று லைட்டாய்க் குரலை ஒசத்தினேன் ! சற்றைக்கெல்லாம் வந்த file இது தான் !!

நான் தந்திருந்த references ; குறிப்புகள் ; பின்னணிக்கான details மொத்தத்தையும் அச்சிட்டால் - ஒரு கோடீஸ்வரர் வூட்டுக் கல்யாணவீட்டுப் பலசரக்குச் சிட்டை நீளத்துக்கு வந்திருக்கும் ! 'இந்த கலரில் background ; இந்தந்த கலர்களில் பில்டிங்குகள் ; அவற்றில் இன்னன்ன மாதிரி lighting effect ; ஓரமாய் வெடிக்கும் effect இந்த மாதிரி ; ஈரோ சாரின் டிரஸ் இன்ன கலர் ; ஈரோயினி இன்ன கலர்' என்றெல்லாம் ஒரு வண்டிக்கு நீட்டி முழக்கியிருந்தேன் ! ஆனால் நம்ம அமெரிக்க ஓவியரோ, கொரோனா காலத்துக் கல்யாணவீட்டு பந்தியாட்டம் சகலத்தையும் பிம்பிலிக்க பிளாக்கி ஆக்கி இருந்தார் ! And ரிப் image + ஹனி image என இரண்டையுமே நெட்டிலிருந்து சுட்டு அப்படியே ஒட்டியிருந்தார் மேலே ! அது பற்றாதென - "ஏலே மக்கா ...ஆப்பியாலே இப்போ ? என் மிச்ச காச ஒடனே போட்டு விடுதியாலே ? நமக்கு பல சோலிகள் இருக்குதுலே " என்று கேட்க, எனக்கு காதிலிருந்து புகை வராத குறை தான் ! சுக்காவைக் கருக விட்டு எடுத்து வரும் வெயிட்டரை மண்டகப்படி செய்திடும் கார்சனைப் போல என் கடுப்பை மொத்தமாய்ப் பகிர்ந்திட்டேன் ! பச்சக்கென்று எனது நம்பரை ப்ளாக் செய்து கிளம்பிவிட்டார் "ஓவியர்" !
அடச் சை ! "நம்ம ஊரே நமக்கு உதவி !" என்றபடிக்கே நமது சென்னை ஓவியரை தொடர்பு கொண்டு - எங்கிருந்தோ தேற்றியதொரு reference தந்து சித்திரம் போடக்கோரினேன் ! அவரும் கச்சிதமாய் பென்சில் ஸ்கெட்ச் போட்டுத்தந்தார் ! ஆனால் எனக்கோ உள்ளுக்குள் பட்சி சொல்லிக்கொண்டே இருந்தது - இது நிச்சயம் தேறாதென்று !! But ஓவியர் நாம் தந்திருந்த concept-ல் பிழையின்றிப் பணியாற்றியிருக்க, கலர் செய்திடச் சொன்னேன் ! And ஜெமினி கணேசன் ஜாடையில் நம்மவர் வந்து சேர்ந்ததே பலனாகியது ! நிறைய மாற்றங்கள் செய்து பார்த்தோம் ; ஆனால் 'மச்சானை பாத்தீகளா ? மலைவாழை தோப்புக்குள்ளே ?" என்ற அன்னக்கிளி பாட்டுத் தான் மண்டைக்குள் ஓடியது ! 'போதும் சார்...இதுக்கு மேலே உங்களை பெண்டைக் கழற்றலை ! தப்பு உங்க மேலே இல்லை இதில் !' என்றபடிக்கே அவருக்கான ஊதியத்தினை அனுப்பி விட்டு, மேற்கொண்டு ஏதாச்சும் reference தேடி உருட்டலைத் தொடர்ந்தேன் ! Here are those images :


'ரைட்டு...புதுசாயத் தேடறோம் ; புதுசாய் படம் போடறோம் !' என்றபடிக்கே லோகமெல்லாம் தேடினேன் ! இன்னொரு concept சிக்கியது போலிருக்க, அதை ராவோடு ராவாய் நமது ஓவியருக்கு அனுப்பி, அதனில் பணியாற்றக்கோரினேன் ! இம்முறையோ ரிப் கிர்பி - பத்தியம் இருந்து எழுந்து வந்தவராய் எனக்குக் காட்சி தர - "வேண்டாம் சார்; இதை பென்சில் ஸ்கெட்சோடு ஊத்தி மூடிடுவோம் ; இதனைத் தொடர்ந்தால் சத்தியமாய் திருப்தியாய் வராது !" என்றபடிக்கே அவரது ஊதியத்தில் பாதையினை இதற்குத் தந்து விட்டு அவசர அவசரமாய் அடுத்த reference தேற்றினேன் ! இதோ - அந்த பாதியில் கைவிட்ட முயற்சி :
'முக்கா முக்கா மூணாட்டை !' என்றபடிக்கே இம்மி கூட முகம் சுளிக்காது, நமது சென்னை ஓவியர் போட்டுத் தந்த மூன்றாவது பென்சில் ஸ்கெட்ச்சைப் பார்த்த போது எனக்கு வாயெல்லாம் பல் !
And அதனில் தொடர்ந்த output தான் நீங்கள் பார்த்திடவுள்ள அட்டைப்படம் ! எனக்கு ஓவியங்கள் சார்ந்த சமாச்சாரங்களில், சுட்டுப் போட்டாலும் திறன்கள் தேறாதென்பதே இத்தனை மொக்கைகளின் பின்னணி ! கதையிலிருந்து படங்களை ஒன்று திரட்டி ஒரு collage effect-ல் ரெடி செய்து, அதனிலிருந்து அட்டைப்பட டிசைனை வரைந்திடலாம் தான் ; ஆனால் அதற்கான ஞானமும் நமக்கு நஹி ; அவ்வித ஞானம் கொண்ட சிகாமணியும் கைக்கெட்டும் தூரத்தில் நஹி எனும் போது மொக்கை படலங்கள் தொடர்கதைகளாகின்றன ! Anyways - நகாசு வேலைகளோடு டாலடிக்கும் ரிப்பை இப்போது பார்க்கும் போது பின்னணிக் கூத்துக்கள் மறந்து விடுகின்றன ! For sure அடுத்த ஆண்டினில் ரிப் கிர்பி ஸ்பெஷல்-2-க்கு அட்டைப்படம் போடும் சமயத்திலும் கூரை மேலேறி மண்டையைப் பிய்த்துக் கொண்டிருப்பேன் தான் - but அதற்குள்ளாக ஏதேனும் உருப்படியான references கிட்டும் என்று நம்புவோமாக !


Moving on, TEX க்ளாசிக்ஸ் 2 பைண்டிங் ஆகி வருகின்றது ! இந்த வாரத்தின் முழுமையிலுமே பின்மதியங்களில் வெளுத்து வாங்கி வரும் மழையானது பைண்டிங்கை ரொம்பவே சுணங்கச் செய்து வருகிறது ! அச்சான காகிதங்கள் காய்ந்திட சிரமம் ; அவற்றை இயந்திரங்களில் மடிப்பதில் சிரமம் ; புக்கை ஓட்டினால் அட்டையினில் உள்ள ஈரப்பதம் காய்வதில் சிரமம் - என்று வர்ணபகவானின் எதிர்பாராக் கோடைக் கொடை நம்மை வாட்டி வருகின்றது ! அடுத்த சில நாட்களில் அவை டெஸ்பாட்ச் ஆகிடும் & திருப்பூரில் நடந்து வரும் புத்தக விழாவின் ஸ்டாலுக்கும் அனுப்பிடப்படும் ! And நண்பர்கள் இதுவரையிலும் பேரன்புடன் பழனியின் குடும்பத்துக்கென அனுப்பியுள்ள தொகையுடன் நமது பங்களிப்பையும் இணைத்து, இம்மாதத்து இறுதியினில் பழனியின் மனைவி + மழலைகளைச் சந்தித்து அதனை ஒரு வங்கி வைப்புத் தொகையாக ஒப்படைத்திட உள்ளோம் ! Of course நமது டாக்டர் AKKR அவர்கள் இதனில் நம்மை வழிநடத்திடுவார் ! அதற்கு முன்பாக - சின்னதாகவும், பெரிதாகவும் நண்பர்கள் அனுப்பியுள்ள தொகைகளுக்கு ஒற்றை ரூபாய் விடுதலின்றி நம்மவர்கள் ரசீதுகள் போட்டு அனுப்பிடுவார்கள் ! பழனியின் குடும்பத்துக்குச் சென்றடையவுள்ள தொகையினைப் பற்றி பொதுவெளியினில் பேசுவது முறையாகாது என்பதோடு, "நன்கொடையாளர்கள் பட்டியல் இது" - என்று வெளியிட்டு, உதவிடும் நிலைகளில் அல்லாத நண்பர்களை தர்மசங்கடங்களில் ஆழ்த்திடுவதும் ஆரோக்கியமானதாகிடாதே ?! தவிர, பழனியின் இல்லத்திலும் தொகைகள் சார்ந்த வெளிப்பாடு தேவையற்ற மனத்தாங்கல்களுக்கு வழிவகுக்கக் கூடும் என்பதால் இதனில் ஓசைகளின்றிச் செயல்படுவதே நலமென்று நினைத்தேன் ! Rest assured - நண்பருக்கென நீங்கள் அனுப்பியுள்ள தொகைகள் சிந்தாமல், சிதறாமல் அவரது வாரிசுகளைச் சென்றடைந்திடும் guys !
அப்புறம் திருப்பூரில் 14-ம் தேதி முதலாயத் துவங்கியுள்ள புத்தக விழாவினை சிறப்பித்து வரும் நமது நண்பர்களின் அன்புகளைப் பற்றிக் குறிப்பிட்டே தீர வேண்டும் ! 80 ஸ்டால்கள் மட்டுமே & முதல்நாள் மாலையில் வெளுத்தெடுத்த மழையில் அரங்கில் குளம் கட்டாத குறை தான் ! ஆனால் மறு நாளே அதனை நிவர்த்தி செய்து விட்டனர் அமைப்பாளர்கள் ; and கொங்கு மண்டலத்து வாசக உற்சாகங்கள் கடந்த 2 ஆண்டுகளில் கிட்டத்தட்ட நாம் மறந்தே போயிருந்த புத்தக விழா விற்பனைகள் சார்ந்த உற்சாகங்களை நமக்கு நினைவூட்டி வருகின்றன ! Not by a long shot - இங்கன ஆகிடக்கூடிய விற்பனைகள் சென்னையின் அளவுகளை தொடக்கூட இயலாது தான் ; ஆனால் வெள்ளி & சனியின் விற்பனைகள் தொடரும் நாட்களிலும் தொடர்ந்திடும் பட்சங்களில் - இந்த மண்ணுக்கு ஒரு மெகா சலாம் வைக்கும் கடமை நமக்கிருக்கும் ! Has been silently brilliant !!! And இதற்கான பங்கு, ஆர்வமாய் ஏதேதோ போட்டிகளை ; சந்திப்புகளை அக்கட திட்டமிட்டுள்ள நண்பர்களைச் சார்ந்திட வேண்டும் !
இதோ - அவர்களின் முன்னெடுப்பு :
திருப்பூர் புத்தக விழா 2022 கொண்டாட்டம்*
திருப்பூர் புத்தக விழாவில் *"லயன்-முத்து"* ஸ்டாலில் புத்தகங்கள் வாங்கும் *"திருப்பூர் புத்தக விழா2022" வாட்ஸ்ஆப் குழு* நண்பர்களுக்கு மட்டுமே...
*தினந்தோறும் பரிசு& மெகா பரிசு* காத்திருக்கிறது..
தினந்தோறும் பரிசு:- *உயிரைத்தேடி*
*11நாட்கள்..... 11பரிசுகள்.....*
லயன்- முத்து ஸ்டாலில் ஏப்ரல் 14 முதல் 24வரை ரூ700 & அதற்கு மேல் புத்தகங்கள் வாங்கும் நண்பர்களில் குலுக்கள் முறையில் தினம் ஓருவருக்கு உயிரைத்தேடி பரிசளிக்கப்படவிருக்கிறது. அதை அடைய நீங்கள் செய்ய வேண்டியது என்ன???
*லயன்-முத்து ஸ்டாலில் ரூ700க்கு மேல் புத்தகம் வாங்கும் நண்பர்கள் தங்கள் பில்லை போட்டோ எடுத்து இங்கே பதிவிடவேணும்...! ஒருவர் மட்டுமே எண்ட்ரி ஆகி இருந்தால் அவருக்கே பரிசு. ஓன்றுக்கு மேற்பட்ட நண்பர்கள் பதிந்து இருந்தால் அவர்களில் இருந்து குலுக்கள் முறையில் ஒருவருக்கு பரிசு...*
தினம் பரிசளிக்க *திருப்பூர் வாசகர் வட்டம்* ரெடி; வாங்க நீங்க ரெடியா நண்பர்களே????
*மெகா பரிசு:-*
தினம் ஓரு புத்தகம் மட்டுமா??? காத்திருக்கிறது *அதிரடி Super60 சந்தா ஒருவருக்கு....*
தினம் தங்களின் பில்லை இங்கே பதிவிடும் நண்பர்கள் அனைவரும் குறித்துக்கொள்ளப்பட்டு, புத்தகவிழாவின் கடைசி நாளில் அதில் இருந்து ஒருவர் குலுக்கல் முறையில் தேர்த்தெடுக்கப்பட்டு அவருக்கு *2023ன் Super 60 சந்தா*(Smashing 70-சீசன்2) பரிசளிக்கப்படவிருக்கிறது....
மெகா பரிசையும் தினந்தோறும் பரிசையும் அள்ளிக்கொள்ள அனைவரையும் திருப்பூர் புத்தக விழா வருக வருக என *திருப்பூர் வாசகர் வட்டம்* அன்போடு அழைக்கிறது🙏🙏🙏🙏🙏
அனைவரும் கலந்து கொள்ளுங்கள்; பரிசுகளயும் அள்ளிச்செல்லுங்கள் நண்பர்களே!
https://chat.whatsapp.com/Fs50U1MCKy6LNc1X1LqcAG
*பரிசுகளை வெல்ல இப்போதே இணையுங்கள் திருப்பூர் புத்தகவிழா 2022வில்...*
நம் வீட்டுச் சரக்கை விற்றுத் தர, தம் நேரங்களையும், பணத்தையும் செலவிட முன்வரும் நண்பர்களுக்கு ஒரு பெரும் நமஸ்காரத்தை செய்து கொள்வதோடு - அறிவிக்கப்பட்டிருக்கும் அந்தப் பரிசுகளை நாமே வழங்கிடும் வாய்ப்பினையும் ஏற்றுக்கொள்ள விழைகிறோம் ! Guys - உங்களின் ஆர்வங்களும், உழைப்புகளும், நேரங்களுமே போதும் - குறைந்த பட்சமாய் அந்த சன்மானங்களை நாங்கள் செய்திட அனுமதியுங்கள் !
Before I sign out - ஒரு சிறு சேதி - நமது புத்தக விழா ஸ்டால்களில் நிரந்தரராய் இடம்பிடித்து வரும் மூத்த பணியாளர் அண்ணாச்சி ராதாகிருஷ்ணன் பற்றி ! திருப்பூர் புத்தக விழா ஆரம்பித்த இரண்டாவது மணி நேரத்துக்கெல்லாம் அவரிடமிருந்து போன் - தனது வயோதிக மாமனார் இயற்கை எய்தி விட்டாரென்று !! எனக்கோ கையும், ஓடவில்லை ; காலும் ஓடவில்லை becos நம்மிடம் பணியாற்றி வந்த இன்னொரு புத்தக விழா ஊழியரான பரமசிவம் சொந்தமாய்த் தொழில் செய்யும் பொருட்டு ரொம்ப சமீபத்தில் விலகிக் கொண்டிருந்தார் & தற்போதைக்கு நாம் ஏற்பாடு செய்திருக்கும் புது வரவு க்ளிண்டன் ஒரு தற்காலிக ஊழியர் மாத்திரமே ! So வந்த வேகத்திலேயே அண்ணாச்சி ஊருக்குத் திரும்பிடுவதில் தீவிரமாய் இருந்திருப்பின், மாற்று ஏற்பாடுகளுக்கு வழியோ, அவகாசமோ இருந்திராது ! ஆனால் நமது இக்கட்டைப் புரிந்து கொண்டவராய் - "திருப்பூரில் வேலை முடிந்த பிற்பாடு நான் வந்துக்கிறேன் ; ஆக வேண்டியதை நீங்களே பார்த்துக்கோங்க !" என்று சொல்லி விட்டு, எப்போதும் போலான ஈடுபாட்டோடு திருப்பூரில் ஸ்டால் பணிகளைக் கவனித்து வருகிறார் ! இத்தகைய அஸ்திவாரங்களே இந்த 50 ஆண்டுகால பொம்ம புக் பயணத்தின் அடிநாதங்கள் என்பதை எண்ணிப் பார்க்கும் போது பெருமிதமாய் உள்ளது !!
Bye all...see you around !! Have a pleasant Sunday !