Saturday, October 21, 2023

விலகு..விலகு...வேங்கை வெளியே வருது...!!

 நண்பர்களே.

வணக்கம். தமிழ் செப்பும் நல்லுலகிற்கு கவுண்டர் ; வடிவேலார் ; சந்தானம் ; பரோட்டா சூரி போன்ற மூதறிஞர்கள் நிறையவே 'நச்' கருத்துக்களை கல்வெட்டில் பதிக்காத குறையாய் விட்டுச் சென்றுள்ளதை நாமறிவோம் ! "நாகூர் பிரியாணியானது உளுந்தூர்பேட்டையிலிருக்கிற மிஸ்டர் நாயாருக்கு போணும்னு விதி இருந்தாக்கா - அது கிடைக்காம போகாது !" என்பது அந்தப் பொன்மொழிகளில் ஒன்றல்லவா ? அதன் நிஜத்தன்மையை கடந்த 10 தினங்களில் இந்த ஆந்தையன் உணர்ந்து வர்றான் ! 

இந்தப் பொன்மொழிப் புரிதலின் நதிமூலம் கிட்டத்தட்ட ஆறேழு ஆண்டுகளுக்கு முந்தையது ! பிரான்க்கோ-பெல்ஜிய காமிக்ஸ் சாகரத்தின் ஒரு Alltime Top 10-க்குள் இடம்பிடிக்கக்கூடிய தொடர் தான் கேப்டன் டைகரின் (ஒரிஜினல்) தொடர் என்பதை நாம் மட்டுமல்ல - இந்த உலகமே அறியும் ! அத்தனை அசாத்திய உச்சத்தினை கண்ணில் காட்டிய ஒரிஜினல் படைப்பாளிகள் இயற்கை எய்திய பிற்பாடு - ஒரு வெற்றிடம் உருவானதை மறுப்பதற்கில்லை ! சக்கை போடு போட்டு வந்த ஒரு நாயகனை எந்தவொரு பதிப்பகமும் அம்போவென மறந்து விடாதென்பதால் - புதுப் புது creative டீம்களோடு 'தங்கத் தலைவனுக்கு' புதுசாய் ஒரு ஜென்மம் தந்திட முனைந்தனர் - with mixed results ! புதுசாய் ஆட வரும் ஒரு பிள்ளையாண்டனை ஒரு சராசரியான ஆட்டக்காரரோடு ஒப்பிட்டால் தப்பில்லை ; ஆனால் ஒப்பீடுகள் சச்சின் டெண்டுல்கருடன் செய்ய நேரிட்டால், யாராய் இருந்தாலுமே டப்பா டான்ஸ் ஆடத்தானே செய்யும் ?! நடந்ததும் அதுவே ! அதிலும் அந்த 'இளம் டைகர்' தனித்தடத்தினை 1975 to 2015 என்ற முப்பதாண்டு காலகட்டத்தில் வெவ்வேறு கதாசிரியர் / ஓவியர்களைக் கொண்டு 21 ஆல்பங்களுடன் பயணிக்கச் செய்யும்  முனைப்பில் ரொம்பவே தடுமாறியிருந்தனர் ! நாமும் தொடரினை ஆரவாரமாய் ஆரம்பித்து விட்டு, ஆல்பம் நம்பர் ஒன்பதோடு தள்ளாடி நின்று விட்டிருந்தோம் ! 2014-ல் "அட்லாண்டாவில் ஆக்ரோஷம்" டபுள் ஆல்பம் தான் இத்தொடரினில் நாம் வெளியிட்டிருந்த கடைசி ஆல்பம் ! அந்த 'வடக்கு vs தெற்கு' என்ற உள்நோட்டு யுத்தப் பின்னணியிலேயே கதை விடாப்பிடியாய் பயணித்ததில் நீங்களும் சரி, நாங்களும் சரி அடைந்த அயர்ச்சியினில் இளம் த.த.க்கு ஒரு பிரேக் தந்திட எண்ணியதில் no secrets ! ஆனால் அந்த பிரேக் கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு நீடித்திடுமென்று அன்றைக்கு நான் சத்தியமாய் யூகித்திருக்கவில்லை தான் ! Maybe ஓரிரு ஆண்டுகளுக்குப் பிற்பாடாய் வண்டி மறுக்கா புறப்பட்டு விடும் என்றே நம்பியிருந்தேன் ! ஆனால் தொடர்ந்த பொழுதுகளில் த.த.வின் "மின்னும் மரணம்" ; "இரத்தக் கோட்டை" ; "தோட்டா தலைநகரம்" போன்ற க்ளாஸிக் மறுபதிப்புகளில் நாம் பிஸியாகிட, அந்த மும்முரத்தில் கொஞ்ச காலம் ஓடியது ! அப்பாலிக்கா "என் பெயர் டைகர்" & மார்ஷல் டைகர் தொடர்களுக்குள் U-டர்ன் அடிப்பதில் கைப்புள்ள வடிவேலு ரேஞ்சுக்கு என் பச்சைச் சொக்காயெல்லாம் கந்தலாகிட்டதிலும் ஜாலியாய் பொழுது போச்சு ! அந்தப் பின்னணியில் மறுக்கா இளம் டைகர் தொடரினுள் புகுந்திட 'தம்' சுத்தமாய் இருந்திருக்கவில்லை தான் ! பற்றாக்குறைக்கு நமது பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர் மேடமும் தொடரின் அடுத்த சில ஆல்பங்களைப் படித்துப் பார்த்து விட்டு "ப்ச்" என்று உதட்டைப் பிதுக்கியிருக்க - ஓசையின்றி 'த.த.வுக்கு ஒய்வு தந்திருந்தோம் ! 

கொஞ்ச காலம் கழித்து "தனித்தடத்திலாவது ; only for முன்பதிவுஸ்" என்று வெளியிடலாமே ? என்ற கோரிக்கை வலுப்பெற்ற நாளில் - "ரைட்டு...முயற்சிப்போம் !" என்றபடிக்கே மொழிபெயர்ப்பாளர் மேடமை 'தம்' கட்டி எழுதச் செய்தோம் ! அவருமே கணிசமான நேரம் எடுத்துக் கொண்டாலும், 4 அத்தியாயங்களையும் கத்தையாக முடித்துத் தந்துவிட்டார் ! அதை தமிழாக்கம் செய்திட அப்டிக்கா கருணையானந்தம் அங்கிளுக்கு பார்சல் பண்ணி அனுப்பின இரண்டாவது தினமே, நம் கதவைத் தட்டிக்கொண்டு கூரியர் ரிட்டன் வந்திருந்தது ! 'இல்லேப்பா...கதை ரொம்ப நீளமா போகுது ; செரியா புரியவும் மாட்டேங்குது ! எனக்கு இது தேறாது !" என்று சொல்லிவிட, மலங்க மலங்க முழித்தபடிக்கே அந்த 184 பக்க குவியலோடு அமர்ந்திருந்தேன் ! "ஆங்...நம்மளே எழுதிப்புட வேண்டியது தான் !!" என்றபடிக்கே இங்கிலீஷ் ஸ்க்ரிப்ட்டை தூக்கினால் - சுத்தமாய் ரெண்டு கிலோ தேறக்கூடிய அந்தக் காகிதக்கத்தை கொடூரமாய் முறைப்பது போலிருந்தது ! 

அடிக்கடி நான் சொல்லியுள்ள விஷயம் தான் இது : கதையோட்டத்தில் ட்விஸ்ட்களும், மொழிமாற்றத்தில் பல்ட்டிகளுக்கான அவசியங்களையும் கொண்டிருக்கும் கதைகள் - எப்போதுமே பணிசெய்திட சுவாரஸ்யமானவைகள் - at least என்னளவிற்கு ! ஆனால் நேர்கோட்டுக் கதைகள் ; routine கதைகளுக்குள் என்னை இறக்கி விட்டால், கொரில்லா செல்லுக்குள் அடைக்கப்பட்ட நாய் ஷேகர் போல டான்ஸ் ஆடித் தள்ளிவிடுவேன் ! So ஸ்பஷ்டமாய்த் தெரிந்தது - இந்த மொழிபெயர்ப்புப் பணி எனக்கு சுகப்படவே செய்யாத ஒன்றென்று ! என்ன செய்வதென்று கையைப் பிசைந்து கொண்டே முழித்த வேளையில் தான் "முன்பதிவில் சுரத்தே நஹி சார் ; மொத்தமே முப்பதோ என்னவோ புக்கிங்ஸ் தான் வந்துள்ளன !" என்ற சேதி காதுக்கு வந்தது ! ஒரு புராஜெக்ட் சொதப்பியதைக் கண்டு நான் உள்ளூர நிம்மதிப் பெருமூச்சு விட்டது அன்றைக்குத் தான் ! So கண்ணைக் கசக்கியபடியே உங்களிடம் வந்து, புக்கிங் சொதப்பலின் பின்னணியினைச் சொல்லி விட்டு கழன்று கொண்ட போது...."ஷப்பா...கிரேட் யெஸ்கேப் !" என்று உள்ளுக்குள் ஒலிப்பது புரிந்தது ! 

இதெல்லாம் அரங்கேறி வருடங்கள் கொஞ்சம் உருண்டோடியான பின்னே - 'த.த.' முயற்சிக்கலாமே ? என்ற கோரிக்கை மறுபடியும் வலுப்பெற -  "தமிழாக்கம் செய்ய ஆளில்லை தெய்வங்களா ; எச்சூஸ் ப்ளீஸ் !" என்று இம்முறை கைகளைத் தூக்கி சரண்டராகியிருந்தேன் ! "நான் எழுதித் தரேன் சாரே !!" என்றொரு குரல் ஒலிக்க, "யாரு...யாரு..யாரந்த ஆபத்பாந்தவன் ?" என்று சுற்றுமுற்றும் பார்த்தால், அசலூரில்லே, அசல்நாட்டிலிருக்கும் நம்மள் கி ஷெரீப்ஜி தான் கைதூக்கி நிற்பது புரிந்தது ! அவர்பாட்டுக்கு மனசு மாறி ரிவர்ஸ் கியரை போட்டுப்புடக்கூடாதே என்று 'பச்சக்' என்று துண்டை தோளில் போட்டு லாக் பண்ணிவிட்டிருந்தோம் ! And சூட்டோடு சூடாய் 2023 அட்டவணையிலும் "The தளபதி ஸ்பெஷல்" என்ற அறிவிப்பை ரெகுலர் தடத்திலேயே போட்டும் விட்டோம் !

கையில் இருந்த, கையால் எழுதப்பட்ட ஸ்கிரிப்ட் முழுசையும் நம்மாட்களைக் கொண்டு ஸ்கேன் செய்யச் செய்து ; படங்களையும் மெகா பைல்களாக இல்லாது compress செய்யச் சொல்லி பாகம் பாகமாய் அமெரிக்காவுக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்தோம் ! முதல் பாகம் ஈ.வி.ரவுண்டு பன் சாப்பிடும் வேகத்தில் செம வேகமாய் எழுதி வந்தது ; ரெண்டாவது பாகம், பொழுது சாயத் துவங்கும் சமயத்தில் தலீவர் கொட்டாவி விடும் ஸ்பீடுக்கு வந்தது ; பாகங்கள் மூன்றும், நான்கும் - தலீவரின் வேப்பிலைப் போராட்டத்தின்  வேகத்திலேயே வந்தன ! But எனக்கோ இம்மி கூட அதில் சிக்கலிருக்கவில்லை ! இதழினை நாம் அறிவித்திருந்தது நவம்பர் 2023-க்குத் தான் & எங்களது பக்கப் பரிமாற்றங்களெல்லாம் அரங்கேறியது கணிசமான மாதங்களுக்கு முன்பாகவே ! So அவரது அலுவலக / சமையலகப் பணிகளுக்குக்  குந்தகங்களின்றி, ரிலாக்ஸாக எழுதி அனுப்பிட வேண்டி எவ்வித பிரஷரும் போடவில்லை ! And பணியின் கடுமை குறித்து எனக்குக் கிஞ்சித்தும் ஐயங்களிருக்கவில்லை என்பதால் அவரை தொந்தரவு செய்ய மனம் ஒப்பவுமில்லை !

"ரைட்டு...முன்னக்கூடி எழுதி வந்திருச்சு ; கையிலே கதைக்கான கோப்புகளும் ரெடியாக உள்ளன ; முன்கூட்டியே DTP முடிச்சு ; புக்கையும் நம்மள் சீக்கிரமே முடிக்கிறான்" என்று சொல்லிக்கொண்டேன் ! நம்மாட்கள் DTP வேலைகளை போட்டுத் தாக்கி மூன்றே வாரங்களில் முழுசையும் குவித்து விட, பிழைதிருத்தம் பார்ப்பதில் நமக்கு உதவிக் கொண்டிருக்கும் 2 நண்பர்களுக்கு பக்கங்களை அனுப்பி வைத்தோம் ! நான்கு பாகங்களையும் இருவருமே ரெண்டு தபா பார்த்து முடிக்க, "கரெக்ஷன்லாம் போட்டாச்சு அண்ணாச்சி ; பிரிண்டிங்குக்கு ரெடி பண்ணிடலாமா ?" என்று மைதீன் வினவினான் ! அம்மா இயற்கையோடு கலந்திருந்த வேளை அது என்பதால்,  இம்மாம் நீள கதைக்குள் முழுசாய் புகுந்து எடிட்டிங் செய்யும் 'தம்'மெல்லாம் எனக்கிருக்காதென்று சரியாகவே யூகித்திருந்தான் ! ஒரு கணம் யோசித்தேன் - "சரி...form போட ஆரம்பிக்கச் சொல்லு மைதீன் ; எழுதினதும் நம்மாளுங்கதான்...கரெக்ஷன் பாத்திருக்கதும் நம்மாட்கள் தான் ! பெருசா ஏதும் நோண்ட தேவை இருக்காது...சட்டுன்னு பிரின்டிங் முடிச்சா நல்லது தான் " என்று சொல்லிவிட்டு வந்திருந்தேன் ! உள்ளுக்குள் ஒரு சன்னமான நிம்மதியும் இருந்தது - காலமாய் என்னை மிரட்டிக் கொண்டிருந்ததொரு சிக்கலான பணியினை நண்பரின் சகாயத்தில் இம்மி நோவு கூட இன்றி முடித்து விட்டோமே !! என்று ! ஆனால் ராவில் மோட்டைப் பார்த்துக் கொண்டு படுத்துக் கிடந்த வேளையில் மனசு கேட்கவில்லை ; ஒருக்கா மேலோட்டமாய் வாசிச்சு மட்டும் விட்டுப்புடுவோம் என்று தீர்மானித்தேன் ! காலையில் - "மொத பாகத்தை மட்டும் கொண்டு வா மைதீன்..லைட்டா பாத்திட்டு தந்திடறேன் !" என்று சொல்ல, கொஞ்ச நேரத்தில் 46 பக்கங்கள் என் கைகளில் இருந்தன ! இங்கே லைட்டா scroll செய்து மேலே போய், அந்த "சந்தானப் பொன்மொழியினை" மட்டும் ஒருக்கா வாசியுங்களேன் folks !!  

டைகர் கதைகளில் என்றைக்குமே படங்களும் அதிகம் ; வசனங்களும் அதிகம் ! மின்னும் மரணம் 18 பாகங்களும் கொண்ட முழுக்கதையிலெல்லாம் உள்ள டயலாக் பலூன்களை எண்ணினாலே கிறுக்குப் பிடித்துவிடும் தான் ! And இங்கேயும் அதனில் இம்மியும் மாற்றங்கள் இருக்கவில்லை என்பதை துவக்கப் பக்கங்களே நினைவூட்டின ! பொறுமையாய் மஹிஜி பணியாற்றியிருப்பதை படித்துக் கொண்டே பக்கங்களை மெதுவாய் புரட்டும் போதே, அந்தப் பரிச்சயமான பட்டாம்பூச்சிக் குத்தாட்டம் வயிற்றுக்குள் அரங்கேறுவதை உணர முடிந்தது ! ஆங்காங்கே சில இடங்களில் கதைப் புரிதலில் சிற்சிறு இடைவெளிகள் இருப்பது போல்பட்டது ! மலரை நான் 'புய்ப்பம்' என்று எழுதலாம் ; நண்பர் "பூ" என்று எழுதலாம் - அதனில் இம்மியும் சிக்கல்கள் லேது ! ஆனால் கதையின் புரிதல்களில் சமரசங்கள் சுகப்படாதென்றுபட்டது ! அதிலும் ரொம்பவே பிரயாசைகளுக்குப் பின்பாய் மறுக்கா ஸ்டார்ட் ஆகியிருக்கும் இந்த டைகர் எஞ்சினுக்கு, எனது சோம்பலால் எவ்வித சிறு இடர்களும் இருந்திடலாகாதே என்று நெருட ஆரம்பித்தது ! 

"இங்கிலீஷ் ஸ்கிரிப்ட் இருந்தா அதையும் எடுத்திட்டு வாப்பா...!" என்று மைதீனுக்கு போன் செய்த போதே அவனும் புரிந்து கொண்டான் - 'வேதாளம் முருங்கை மரம் ஏறிப்புடிச்சி ; இந்த மண்டகப்படி இனி அடுத்த 10 நாட்களுக்காவது நீடிக்கும்" என்று ! பாக்கியிருந்த 3 பாகங்களையுமே மொத்தமாய் தூக்கிக் கொண்டு வந்து ஒப்படைத்துவிட்டான் !  வேறு வழியின்றி முழுமூச்சாய் உள்ளுக்குள் புகுந்த போது தான் நண்பரின் பணியின் பரிமாணம் முழுசுமாய்ப் புரிந்தது ! For the sheer length of the dialogues - இந்த 184 பக்கங்களுக்குப் பேனா பிடிப்பதென்பது ஒரு 250 பக்க நார்மலான கதைக்கு சமானம் என்பேன் ! And பொதுவாக இத்தனை பெரிய கதையினில் பணியாற்றும் போது ஒரு சீரான flow கிடைப்பது அரிதென்பது எனக்கு அனுபவத்தில் தெரியும். ஒரு தெளிவான மூடில் இருக்கும் போது வரிகளில் அந்தத் தெளிவு பிரதிபலிப்பதுண்டு ! அதே சமயம் வூட்டிலே பூரிக்கட்டைகள் சந்திராயன்களாய் உருமாற்றம் கண்டிடும் நாட்களில் - பேனாவுமே தடுமாறுவதுண்டு ! So நண்பரின்  ஐந்தாறு மாத உழைப்பெனும் போது, அதனில் சில  ups & downs இருப்பது தவிர்க்க இயலா இடர் என்பது புரிந்தது ! ஆங்காங்கே பட்டி-டிங்கரிங் என்று துவங்கிய எனது படலம், திருத்தங்கள், கொஞ்சமாய் மாற்றி எழுதல், அப்பாலிக்கா மறுக்கா proof reading என்று கடந்த 10 நாட்களாய் தொடர்ந்து வருகிறது & இன்றைக்குத் தான் பாகம் 3-க்கு சுபம் போட முடிந்துள்ளது ! எஞ்சியிருக்கும் 44 பக்கங்களை தக்கி-முக்கி இந்த ஞாயிறுக்குள் முடித்து விட்டால் - நாகூர் பிரியாணியை இந்த சிவகாசி ஆந்தையன் குட்டிக்கரணம் அடித்து முயன்றாலுமே தவிர்க்க வழியே நஹி என்பது மெய்யாகியிருக்கும் ! ஜெய் சந்தான பாஹுபலி !

And கதைக்குள் புகுந்து பணியாற்றிய போது தான் புரிந்தது - இளம் த.த.வை இத்தினி காலம் பரணில் பாய்போட்டுப் படுக்கச் செய்தது பிசகென்று !! ஒரிஜினல் கதாசிரியரின் படைப்புகளோடு ஒப்பீடு செய்யும் தவறை நானுமே செய்திருப்பது மண்டைக்கு உரைக்கிறது ! ஒரு நார்மலான கௌபாய் சாகசமாக மாத்திரமே பார்த்திருப்போமெனில் இந்தக் கதைகள் எப்போதோ கரை சேர்ந்திருக்கும் என்பது obvious ! இப்போவுமே மஹிஜி துணிந்து தண்ணிக்குள் இறங்கியிருக்காவிடின், நானாக இறங்கியிருக்கவும் மாட்டேன் & காலத்துக்கு இளம் டைகர் பரண்வாசியாகவே தொடர்ந்திருப்பார் ! So இந்த முயற்சிக்கொரு துவக்கம் தந்தமைக்கும், இயன்ற best-ஐ தந்துள்ளமைக்கும் thanks a ton மஹிஜி ! இதழ் வெளியாகி நண்பர்களின் கைகளில் தவழும் வேளைக்கே உங்களாலும் பார்க்க முடியாதென்பது ஒரு சிறு நெருடல் தான் - ஆனால் இங்கும், க்ரூப்களிலும் அரங்கேறப் போகும் அலசல்களை எனக்கு முன்பாய் நீங்கள் பார்த்து விடுவீர்களென்பது உறுதி !  

இதோ - அட்டைப்படம் + உட்பக்க previews :




அப்புறம் ஓவிய ஆர்வல அண்ணாஸ் : முன்னும், பின்னும் ஒரிஜினல் ஓவியங்களே ! கலரிங் மாத்திரமே மாற்றியுள்ளோம் ! So ப்ளீஸ் - கொஞ்சம் பாத்து பாஸ் மார்க் போட்டு விடுங்க ! 

So ரொம்ப ரொம்ப காலம் கழித்து ஒரு 'தல vs தளபதி' திருவிழாவுக்கு களம் தயாராகி வருகிறது ! In fact இது "இளம் தல vs இளம் தளபதி" !! தளபதியுடனான பயணம் நாளைக்குள் முடிந்திடும் பட்சத்தில் 'தல' தெறிக்க விடும் சிக்ஸர் ஸ்பெஷல் பக்கமாய் பார்வையினை ஓட விட வேணும் ! And அங்குமே நம்ம ஷெரிஃப்காருவின் பங்களிப்பு வேறொரு விதத்தில் உள்ளது ! அது பற்றி 'சிக்ஸர் ஸ்பெஷல்' பிரிவியூவின் போது !! Bye guys !! அட்டவணைப் பதிவுக்கு ஓக்கே ஓக்க வாரம் தான் என்பதால் டைப்படிக்க இப்போதே விரல்களுக்கு உரம் ஏற்றிக் கொள்ளக்கிளம்புகிறேன் !  See you around ! Have a great long weekend !!

முன்கூட்டிய சரஸ்வதி பூஜை & விஜயதசமி நன்னாள் வாழ்த்துக்கள் ! அக்டோபர் இதழ்களை இன்னமும் வாசிக்க இயன்றிருக்கா நண்பர்கள் இந்த விடுமுறைகளை பயன்படுத்திக் கொள்ளலாமே ப்ளீஸ் ? 

And before I forget - ஒரு அவசரக் கோரிக்கையும் !! இளம் டைகர் தொடரின் முந்தைய பாகம் வெளியாகி கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகப் போவதால் முன்கதையினை நினைவுபடுத்திக் கொள்ள ஒரு மினி-கதைச்சுருக்கம் தேவை ! ஒற்றைப் பக்கத்துக்கு மிகாமல் crisp ஆக யாரேனும் எழுதிக் கொடுத்தால் - சிலை வைக்கிறோமோ இல்லையோ ; அரை டஜன் ரவுண்டு பன்களை கூரியரில் அனுப்பிடுவோம் !! Please guys ? இந்த விடுமுறைகளின் போதே இயன்றால் சிறப்பு !

Saturday, October 14, 2023

ஒரு புளிசாதப் பதிவு !

 நண்பர்களே,

வணக்கம். புரட்டாசி என்பதால் கொஞ்சம் புளிசாதத்தை கட்டிக்கினு, கொறிக்க கொஞ்சம் சிப்ஸையும் அள்ளிக்கினு, தொண்டையை நனைச்சுக்க கொஞ்சமா லைம் சூசையும் போட்டுக்கினு, ராவிலே மேட்ச் பாக்கலாம்னு திட்டம் போட்டா - பரமபிதாவும், பாகிஸ்தானும் வேறு திட்டம் வைத்திருந்திருக்கின்றனர் ! இன்னிக்கி பச்சை சட்டை போட்டு வந்த அம்புட்டு பேரும் படித்துறை பாண்டி ரேஞ்சுக்கே ஆடி வைக்க, நாலு சிப்ஸை மொசுக்கும் நேரத்துக்குள்ளாற - "மேட்ச் முடிஞ்சிடுச்சி ; ஊட்டுக்குப் போங்கப்பான்னு" ஸ்டேடியம் கதவை அறைஞ்சு சாத்திப்புட்டதால், புளிசாதத்தோடே டைப்ப கிளம்பி வந்தாச்சூ ! Phew....talk about an anti-climax !!

அட, anti-climax மேட்சிலே தான் என்றில்லையே - இம்மாதத்து நமது இதழ்களிலும் தானே - at least இந்த முதல் வாரத்திலாவது ! 

* 724 பக்கங்கள் சுப்ரீமோ ஸ்பெஷலில் மட்டுமே !!

*120 பக்கங்கள் "விதி எழுதிய வெள்ளை வரிகள்" - கிராபிக் நாவலில் !

*64 பக்கங்கள் "எல்லாம் கிழமயம்" - தாத்தாஸ் கிராபிக் நாவலில் !

*128 பக்கங்கள் - சாம் வில்லரின் கதையில் (சகோதரனின் சகாப்தம்)

*32 பக்கங்கள் - டைலன் டாக் குறும் கதையில் !

1072 பக்கங்களின் வாசிப்பு காத்துள்ள இம்மாதத்தினில், புக்குகளைப் புரட்டிப் பார்ப்பதைத் தாண்டி வேறெதெற்கும் நேரம் ஒதுக்க நண்பர்களின் பெரும்பான்மைக்கு இப்போது வரை நேரம் கிட்டியிருக்கவில்லை என்பது obvious ! So "குண்டு புக்" என்ற concept எல்லாம் இந்த நொடியில் ஷாஹீன் அப்ரீதியின் பந்து வீச்சைப் போலவே சற்றே தட்டையாய் தென்பட, என்னுள் கலவையான சிந்தைகள் ! And காத்திருக்கும் புது அட்டவணையினில் இந்த நொடியின் பாடங்களை உட்புகுத்த வேண்டிய அவசியமும் புரிகிறது !! 

எது, எப்படியோ - இம்மாதத்தின் ஆன்லைன் ஆர்டர்களும் சரி, ஏஜெண்ட் ஆர்டர்களும் சரி - literally தெறி தான் ! Of course - 'தல' ஸ்பெஷலும், V காமிக்ஸ் இதழும் தான் இம்மாதத்தின் வேகப் பயணிகள் ; கி.நா.க்களின் takers சொற்பம் தான் ! "அட போவியா - வூட்டிலுள்ள பெருசுகளை சமாளிக்கவே தாவு தீருது ; இந்த அழகிலே கதையிலேயுமே மூணு பெருச்சாளிப் பெருசுகளின் வாழ்க்கைப் பயணம்லாம் எங்களுக்குத் தேவையா ?" என்று நண்பர்கள் நினைத்திருக்கலாம் என்பது புரிகிறது ! "வாசிப்பில் நொய்யு நொய்யென்ற கதைபாணிகளெல்லாம் நேக்கு ரசிக்காது !!" என்போர் தாத்தாக்களிடமிருந்து காத தூரம் விலகி இருப்பர் என்பதை யூகிக்க பெரும் சிரமமெல்லாம் இருக்கவில்லை தான் ; but yet இந்த தாத்தாக்கள் அழுகாச்சிப் பார்ட்டிகளே கிடையாது என்பதால் தான் என்னுள் ஒரு சிறு ஆதங்கம் - நண்பர்கள் இன்னும் கொஞ்சம் பரவலாய் இவர்களோடு பழகிப் பார்த்திருக்கலாமே ?! என்று !!  

In fact - வாழ்க்கையின் அந்திமத்தில் மூவரும் இருந்தாலுமே, தத்தம் பாணிகளில் தம்மைச் சுற்றியுள்ளோரின் வாழ்வுகளுக்கொரு அர்த்தம் கற்பிக்க முயலும் பார்ட்டிகள் தானே - ஒவ்வொரு தாத்தாவும் ?! ஒரு பெருசு சதா நேரமும் கார்பரேட்களுக்கு எதிரான போராட்டங்களில் பிசி ; இன்னொரு தாத்ஸ் - யூனியன் ஆட்களோடு பிசி ; மூணாவதோ - பேத்தியின் பொம்மலாட்ட ஷோவில் ; குழந்தைகளை மகிழ்விப்பதில் பிசி ! So இதனை ஒரு அழுகாச்சிப் படைப்பென்று நண்பர்கள் ஒதுக்கியிருக்கக்கூடுமோ என்பது தான் உதைக்கிறது உள்ளுக்குள் !! Far from it - இந்தத் தொடரே பாசிட்டிவான பல சமாச்சாரங்களை நமக்குச் சொல்லிட முனையும் ஒரு முயற்சி அல்லவா ? பல் போன காலத்தில் காலனின் வருகையினை எண்ணிப் பதறிக் கிடப்பதற்குப் பதிலாய் தில்லாய் நடை போடும் இந்தப் பெரியவர்களை நம் சிறுவட்டம் தயக்கங்களின்றி ஏற்றுக் கொண்டால் இன்னும் குஷியாக இருக்கும் !  

தாத்ஸ் ஜாலி கி.நா. என்றால் "விதி எழுதிய வெள்ளை வரிகள்" அந்த வானவில்லின் மறுமுனை !! டார்க்கான கதை பாணி ; மிரட்டும் பின்புலங்கள் ; சோகமான முடிவு என்று பயணிக்கும் இந்த ஆல்பத்தின் முதல் தூணே அந்தச் சித்திரங்கள் தான் ! சித்திரங்களையும் உள்வாங்கியபடியே கதையோடு டிராவல் செய்வோராய் நீங்கள் இருப்பின், இது நிச்சயமாய் உங்களை மெய்ம்மறக்கச் செய்யும் என்பேன் ! என்ன - துணையாய் வரும் ஆட்களில் யார் யாரென்று அடையாளம் கண்டு கொள்ள நான் மொக்கை போட்டேன் ! அந்தச் சிரமம் உங்களுக்கு வேணாம் என்பதாலேயே கதை மாந்தரை அறிமுகம் செய்திடும் ஒரு பக்கத்தையும் உருவாக்கியிருந்தோம் ! லைட்டாக சந்தேகம் எழும் இடங்களில் மட்டும் 'பச்சக்' என அந்தப் பக்கத்துக்கு ஒரு தாவு தாவினீர்களெனில் - பணியில் பயணம் சுளுவாய் தொடர்ந்திடும் ! நாம் பார்த்திரா ஒரு பூமியில் ; நாம் அறிந்திரா ஒரு காலகட்டத்தில் அரங்கேறிய வாழ்க்கையின் yet another இருண்ட அத்தியாயத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதுமே ஒரு வித சுவாரஸ்யமாய் இருக்கக்கூடும் என்பேன் ! Why not give it a try folks ?

Of course - இன்றில்லாவிடினும் நேரம் கிட்டும் ஒரு பொழுதினில் சுப்ரீமோ ஸ்பெஷலுக்குள் புகுந்திடுவீர்களென்பதில் எனக்கு ஐயங்களில்லை ! And இங்கு உள்ள 724 பக்கங்களுள் - PATAGONIA என்ற பெயருடன் வெளியான மௌரோ போசெல்லியின் படைப்பான "வந்தார் வென்றார்" சாகசத்தினை நீங்கள் (சு)வாசிக்கப் போகும் வேளைக்கென ஆவலாய் காத்திருப்பேன் ! முற்றிலுமாய் ஒரு புது மண்ணில் ; முற்றிலுமாய் ஒரு புது அவதாரில் ; முற்றிலுமாய் ஒரு புதுப் பொறுப்பில் நம்மவர் தெறிக்க விடுவதை நீங்கள் எவ்விதம் ரசித்தீர்களென்று தெரிந்து கொள்வதில் கிடைக்கக்கூடிய ஒரு சின்ன திருப்தியினை எதிர்நோக்கியே அந்த ஆவல் ! Oh yes - 'இன்னாபா கதை இது ? வழக்கமான பாணி இல்லாம இந்த எக்ஸ்டா நம்பர்லாம் தேவை தானா ??' என்று நண்பர்களில் ஒரு அணியினர் கேட்டாலும் வியப்பு கொள்ள மாட்டேன் தான் ; but still உங்களின் எண்ணவோட்டங்களை அறிந்திட முயல்வதும் எனது பணிகளின் ஒரு அங்கம் எனும் போது - சிலாகிப்புகளோ ; சிராய்ப்புகளோ they'd all be welcome !!

















ரைட்டு....இந்த மாதத்துக் கத்தையையே கையாள நீங்கள் தடுமாறி வரும் வேளையினில் தீபாவளிக்கென காத்துள்ள 'தல' vs தளபதி battle க்கு நான் தயாராகி வருகிறேன் ! அதற்குள் ஐக்கியமாகிடப் புறப்படும் முன்பாய், உங்களுக்கு ஒரு சின்ன exercise !! 2024-க்கான அட்டவணை இன்னும் 2 வாரங்களில் ரிலீஸ் என்பதை நாமறிவோம் ! என்னிடத்தில் நீங்களிருப்பின், 2024-ன் அட்டவணையினை எவ்விதம் அமைத்திருப்பீர்களென்று காட்டுங்களேன் ப்ளீஸ் ? 

இவற்றை வழிகாட்டிகளாய் வைத்துக் கொள்ளுங்கள் :

  • +டெக்ஸ் டபுள் ஆல்பங்கள் நடப்பைப் போலவே தலா ரூ.160 விலைகளில் !
  • +லக்கி லூக் ; சிக் பில் போலான 48 பக்க கலர் இதழ்கள் தலா ரூ.120 விலைகளில் !
  • +ஏஜெண்ட் சிஸ்கோ ; ஆல்பா போலான டபுள் ஆல்பமெனில் ரூ.250 வீதம் !  
  • +Supreme '60s தனித்தட திட்டமிடலை இந்த ரெகுலர் சந்தாவோடு சேர்த்திட வேண்டாம் ; அதனை ஏப்ரலில் தனியாய் அறிவிக்க உள்ளோம் !
  • +V காமிக்ஸ் சராசரியை ரூ.90 அல்லது ரூ.100 என்ற விலையில் போட்டுக் கொள்ளுங்கள் !
  • +வழக்கம் போல மொத்த சந்தா தொகையினை ரூ.5750 என்றோ ரூ.5850 என்று வைத்துக் கொள்ளுங்கள் !

மேற்படி hints சகிதம் - யார் அட்டவணைக்கு உள்ளே ? யார் நம் மனசுகளின் உள்ளே ? என்று திட்டமிட்டு இங்கே உங்களின் அட்டவணைகளாகப் போடுங்களேன் guys ? ரெடியாகியுள்ள நமது அட்டவணையோடு நெருங்கிச் செல்லும் திட்டமிடலுக்கு 2024-ன் சகல இதழ்களும் நம் அன்புடன் அனுப்பிடப்படும் ! So why not give it a shot all ?

Bye all...see you around ! Have a cool Sunday !! 

And அக்டொபர் இதழ்களுக்கு கொஞ்சம் நேரம் தந்திட முயற்சிக்கலாமே - ப்ளீஸ் ?

P.S : மதுரை புத்தக விழாவில் நமக்கான விற்பனை 🔆🔆🔆பின்னிப் பெடலெடுத்து வருகிறது ! இம்முறை பள்ளி மாணாக்கரை அவ்வளவாய் அழைத்து வரக்காணோம் என்றாலும், overall response செம !! அடுத்த ஞாயிறு வரை தொடரும் விழாவினில் வர்ண பகவான் மட்டும் கலந்து கொள்ளாதிருந்தால் சூப்பராக இருக்கும் ! Fingers crossed !! 







Saturday, October 07, 2023

The SUPREMO is here !

 நண்பர்களே,

வணக்கம். 'தல' தாண்டவம் starts !! அக்டோபர் மாதத்தின் அத்தனை இதழ்களோடும் நேற்று உங்களின் கூரியர்கள் புறப்பட்டு விட்டன ! And துளியும் ஐயங்களின்றி இம்மாதத்தின் ஒளிவட்டத்தை கபளீகரம் செய்திட நம்ம SUPREMO ரெடி !! (நன்றி நண்பர் MKS ராம் !!) ஒண்ணே முக்கால் கிலோவுக்கு கொஞ்சமே கொஞ்சம் குறைவான எடை - இது 'தல' மெகா இதழின் வெயிட் மாத்திரமே ! இதோ - இதுவரைக்கும் கண்ணில் காட்டிடாது வைத்திருந்த அட்டைப்படம் :

இதன் பின்னணியினில் அவசியமாகிய உழைப்பும், மெனெக்கெடலும் பற்றி எழுத ஆரம்பித்தால் அதற்கே ஒரு முழுநீளப் பதிவு தேவைப்படும் ! இந்த நொடியினில் spotlight இருந்திட வேண்டியது 75 வது அகவையினுள் அடியெடுத்து வைக்கும் நமது இரவுக்கழுகாரின் ஆதர்ஷ டீம் மீதே என்பதால் - வேறெது பற்றியும் நீட்டி முழக்கப் போவதில்லை ! Let's wish the boys a wonderful 75-th with many many more to follow !!!

And இதோ - இந்தத் தருணத்துக்கென உருவாக்கிய குட்டி வீடியோ கிளிப்புமே !!

ஆன்லைன் லிஸ்டிங்கும் இதோ ரெடி : https://lion-muthucomics.com/monthly-packs/1134-october-pack-2023.html

இரவின் பதிவில் மீண்டும் சிந்திப்போம் folks ! அதுவரையிலும் சுப்ரீமோவுடனான உங்களின் செல்பிக்களை போட்டுத் தாக்கினால் - மொத்தமாய் இத்தாலிக்கு அனுப்பிடலாம் ! இதோ STV ஆரம்பிச்சாச்சு !

Bye all...see you around ! Have a fun Saturday !!

Sunday, October 01, 2023

இதுவும் கடந்து போகட்டுமே !

நண்பர்களே, 

வணக்கம். ஏப்ரலில் ஒரு இரவுப் பொழுது அது ! எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், ஹாஸ்பிடலில் ரொம்பவே சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார் சீனியர் எடிட்டர் ! வீட்டிலோ அம்மாவும் எக்கச்சக்க சுகவீனங்களோடு படுத்த படுக்கையாய் கிடக்கிறார் ! நிலமையைச் சமாளிக்க தம்பியும், நானும் ரொம்பவே நாக்குத் தள்ளிப் போயிருந்த நாட்கள் அவை ! இரவு எட்டு மணிவாக்கில் டாக்டர் ரவுண்ட்ஸ் வருவதற்காகக் காத்திருந்த வேளையில், கொஞ்ச நேரமாச்சும் வெளியே போய் காற்று வாங்கினால், மண்டைக்குள்ளான இறுக்கம் சற்றே தளருமென்று தோன்றியது ! படியிறங்கி, வாசலில் போய் நின்றால், ஜெகஜோதியாய் ஒளிவெள்ளம் என்னை வரவேற்றது ! உள்ளூர் அம்மன் கோவில் திருவிழாவுக்கு சொற்ப நாட்களே எஞ்சியிருக்க, சாலையின் இரு தரப்புகளிலும் வெளிக்கடைகள் கனஜோராய் வியாபாரம் பண்ணிக் கொண்டிருப்பது தெரிந்தது !! சிவகாசியின் மையத்திலிருந்த அந்த சாலையில் அப்படியொரு ஜனத்திரளும், உற்சாகமும், பரபரப்பும் அலையடித்துக் கொண்டிருப்பதை உணர முடிந்த போது, எல்லாமே வேறொரு உலகில் நடப்பது போலவே எனக்குத் தோன்றியது ! இங்கே மண்டைக்குள் எனக்கு இம்மியும் வெளிச்சமில்லை ; ஆனால் கண்ணெதிரே ஊரே மினுமினுத்துக் கொண்டிருந்தது ! சிந்தையில் என்னிடம் துளி கூட மகிழ்வில்லை ; ஆனால் ஊரே உற்சாகத்தில் ஓடியாடிக் கொண்டிருந்தது ! Sci-fi கதைகளில் வருவது போலான ஒரு இணைத்தடப் பிரபஞ்சத்தில் உலாவுவதான பீலிங்குடனே கொஞ்ச நேரம் அங்கே நிலைகொண்டிருக்க, கொஞ்சம் கொஞ்சமாய் தலைக்குள் நிதானம் திரும்பியது ! 'உன் வீட்டு இன்னலுக்கோசரம் உலகமே ஸ்தம்பிக்காது கண்ணா ; சந்தோஷங்களும், சங்கடங்களும் மாறி மாறிக் கதவைத் தட்டும் சமாச்சாரங்கள் and இன்று பிந்தையது உனது கதவைத் தட்டி நிற்கின்றது - அவ்வளவே ! இது வரையிலுமாவது சந்தோஷ நாட்களை மிகுதியாயும் ; சங்கட தினங்களை சன்னமாகவும் தந்துள்ள ஆண்டவனுக்கு நன்றி சொல்லிவிட்டு நகரும் வழியைப் பாரு !' என்று உள்ளுக்குள் யாரோ சொல்வது போலிருந்தது ! படியேறி திரும்பவும் ஹாஸ்பிடலில் அப்பாவின் ரூமுக்குச் சென்ற போது அப்பாவை நிற்க வைக்க டாக்டர் முயன்று கொண்டிருந்தார் ! 'இன்னும் ஓரிரு நாட்களில் வாக்கரோடு நடக்கலாம் ; எல்லாம் ஓ.கே' என்றபடிக்கே அவர் புறப்பட்ட போது மனதின் பாரம் கொஞ்சமே கொஞ்சமாய் மட்டுப்பட்டிருந்தது போலிருந்தது !  

அம்மா விடைபெற்றுச் சென்று ஒரு வாரமாகப் போகும் இந்த வேளையில் அந்த ஏப்ரலின் இரவு தான் என் சிரத்தினுள் ஓடிடுகிறது ! அத்தனை நோவுகளோடு அம்மா செய்த யுத்தம் மட்டுமன்றி, அவரது வேதனைகளுமே முற்றுப் புள்ளி கண்டிருப்பதை ஏற்றுக்கொண்டு அவர் சென்றுள்ள இடத்தில் அமைதியும், நிம்மதியும் கிட்டிடுமென்று வேண்டுவதே முன்செல்லும் வழியென்று தலைக்குள் ஒலிக்கிறது ! So இதுவும் கடந்து போயாகிட வேண்டும் ! R.I.P. அம்மா !

Back to reality, 'தல'யின் மெகா இதழ் பைண்டிங்கில் ஒட்டி ரெடியாக உள்ளது ! தொடரவுள்ள 3 நாட்களுக்கு ஈரம் காய்ந்திட மட்டும் அவகாசம் தந்துவிட்டால் - செமத்தியான ஒரு இதழாய் உங்களை வந்து சேர்ந்திடுவதில் சிரமங்களிராது ! And தாத்தாஸ் கதையும் பைண்டிங்கில் உள்ளது ; விடுமுறைகள் முடிந்த மறு நாள் தயாராகிடும் ! இந்த ஆல்பத்தை எதெற்காக நினைவு கூர்ந்திடுவேனோ - இல்லையோ ; இதனுள் பணியாற்றிய அனுபவம் நிச்சயம் அகன்றிடாது ! வியாழன் இரவு முதலே அம்மா வென்டிலேட்டரில் இருக்க நேரிட, இனி பெரிதாய் நம்பிக்கை கொள்ள ஏதுமில்லை என்பதை ICU பிரிவினர் ஞாயிறு இரவன்று தயங்கியபடியே சொல்லியிருந்தனர் ! காலையில் வீட்டுக்கு கூட்டிப் போய் விடுங்களென்று ஹாஸ்பிடலில் சொன்ன  போதே காத்திருந்தது என்னவென்பது புரிந்தது ! வெளியூர்களில் இருந்த சகோதரிகளையும், அவர்களது பிள்ளைகளையும் அவசரமாய் புறப்பட்டு வரச் சொன்ன கையோடு, தொங்கிக் கொண்டிருக்கும் பணிகளையும் அவசரமாய் முடித்தாக வேண்டுமே என்பது உறைத்தது ! 62 பக்கங்கள் கொண்ட தாத்தாஸ் கதையிலோ, பத்தோ பன்னிரெண்டோ பக்கங்கள் வரை தான் அந்நேரத்துக்கு எழுதியிருந்தேன் ! பாக்கியினை ராவோடு ராவாய் முடிக்காவிடின் அம்போவாகிப் போகும் என்பது புரிந்தது ! தாத்தாஸ் கதைகளின் பாணி மாத்திரமன்றி, வசனங்களின் மிகுதியுமே எப்போதும் ஒரு சவாலாய் இருப்பதுண்டு !! பக்கங்களில் கட்டங்களும் ஜாஸ்தி ; பேசிடும் மாந்தர்களும் ஜாஸ்தி & ஏகப்பட்ட இடங்களில் கூகுளின் சகாயங்கள் அவசியமாகிடுவதுமுண்டு ! எப்படி 'தம்' கட்டி எழுதினேன் என்பது இப்போது புதிராக உள்ளது ; ஆனால் திங்கள் காலை புலர்ந்த தருணத்தில், என் கண்கள் சிவந்திருந்தன ; விரல்கள் கழன்று விழாத குறை தான் ;  ஆனால் தாத்தாக்களுடனான பயணத்தினை முடித்திருந்தேன் ! Maybe பகலில் காத்திருந்ததை தாற்காலிகமாகவாவது மறக்க எனக்கு அந்தப் பணிகளின் கடுமை அன்றிரவுக்கு அவசியமானதோ - என்னவோ ! குரங்கு பல்டிகள் நமக்குப் புதிதே அல்ல தான் ; but still இது அவற்றுள் ஒரு புது அத்தியாயம் என்பேன் - simply becos of the circumstances ! 

And முன்கூட்டியே இன்னொருவாட்டி சொல்லி விடுகிறேன் guys - தாத்தாக்களின் இந்த ஆல்பமானது ஒரு வாழ்க்கைப் பயணத்தின் சித்தரிப்பே ! இங்கே பெரியதொரு கதை ; க்ளைமாக்ஸ் என்ற மாமூலான சமாச்சாரங்கள் துளியும் கிடையாது ! மூன்று பெருசுகளும், பேத்தி சோபியுமாய் வாழ்ந்திடும் ஒரு வாழ்க்கையினுள் எட்டிப் பார்த்திட நமக்கு வாய்ப்பளிக்கின்றனர் & that's about it ! இங்கே மாமூலான காமிக்ஸ் entertainment புள்ளிகளைத் தேடினால் ஏதும் தேறாது !  முன்கூட்டியே இன்னொருவாட்டி சொல்லி விடுகிறேன் guys - இதுவொரு வாழ்க்கைப் பயணத்தின் சித்தரிப்பே ! இங்கே பெரியதொரு கதை ; க்ளைமாக்ஸ் என்ற மாமூலான சமாச்சாரங்கள் துளியும் கிடையாது ! மூன்று பெருசுகளும், பேத்தி சோபியுமாய் வாழ்ந்திடும் ஒரு வாழ்க்கையினுள் எட்டிப் பார்த்திட நமக்கு வாய்ப்பளிக்கின்றனர் ; so இங்கே மாமூலான காமிக்ஸ் entertainment புள்ளிகளைத் தேடினால் ஏதும் தேறாது ! "ரைட்டு...இத்தனை ஸ்பீடு பிரேக்கர்களுடனான ஒரு தொடர் நமக்கு இந்த நொடியில் அவசியம் தானா ? இந்த ஸ்லாட்டில் இன்னொரு லக்கி லூக்கையோ ; ஒரு ரிப் கிர்பியையோ ; ஏதேனுமொரு கமர்ஷியல் நாயகரை இறக்கிப்புட்டா குன்சா இருக்குமே ?" என்ற கேள்வி எழலாம் தான் ! But அதற்கான பதிலை நீங்களே போன வாரத்து வாக்கெடுப்பில் சொல்லியுள்ளீர்கள் folks !! இதோ அதன் முடிவுகள் : 



இது வரைக்குமான வோட்டெடுப்புகளில் இத்தனை நண்பர்கள் ஓட்டளிக்க மெனெக்கெட்டதில்லை ; 221 என்ற இந்த நம்பர் தான் இது வரையிலுமான பெஸ்ட் ! So அத்தகையதொரு வோட்டெடுப்பில் "புதுசு சார்ந்த தேடல்கள் என்றென்றும் அவசியமே !" என்ற தீர்ப்பு கிட்டியிருப்பதை கண்களைத் தேய்த்தபடிக்கே பார்த்திடுகிறேன் ; நிஜத்தைச் சொல்வதானால் Option # 2-க்கே மெஜாரிட்டி ஓட்டுகள் விழுந்திடுமென்றே எதிர்பார்த்திருந்தேன் ! தாறுமாறாய் இண்டிகேட்டரைப் போட்டபடிக்கே நானெல்லாம் ஆட்டோ ஓட்டும் சாலையில், நீங்களெல்லாம் JCB ஓட்டும் வித்வான்கள் என்பதை yet again நிரூபித்துள்ளீர்கள் ! பதிலிட நேரம் செலவழித்துள்ள நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் ஒரு நூறு ; நிச்சயமாய் உங்களின் அவாக்களுக்கு உரிய மதிப்பளிக்கப்படும் ! And of course, புதுசு என்பதற்காகவே எதையும் இனி தேர்வு செய்திடாது - நீங்கள் எதிர்பார்த்திடும் அளவுகோல்களுக்கேற்ப சாரமும் அவற்றுள் இருக்கின்றதா? என்பதை கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றியபடியே பார்த்திடவும் செய்வோம் ! 

இதோ - இந்தப் புது "கமர்ஷியல் கி.நா." தேர்வினைப் போல !! 

"இதென்ன புது உருட்டா இருக்கே ?" என்கிறீர்களா ! Yes - இது நமக்குப் பிடித்தமான வன்மேற்குக் களத்தினில் அரங்கேறிடும் ஒன்-ஷாட் சாகஸம் - ரொம்பவே வித்தியாசமான கதையோட்டத்துடன் ! கண்ணைக் கசக்கச் செய்யும் சமாச்சாரங்கள் இராது ; மாறாய் கண்களை அகல விரியச் செய்யும் சித்திரங்களும், கலரிங்கும் மிரட்டிடும் ! 78 பக்கங்களில் அரங்கேறும் இந்த western சாகஸத்தில் கமர்ஷியலான அடையாளங்களும் இருந்திடும் ; "கி.நா." என்று வகைப்படுத்திட வித்தியாசமான storyline-ம் இருக்கும் ! So இதனை ஒரு கமர்ஷியல் கி.நா. என்று விழிப்பதில் தவறில்லை என்று நினைத்தேன் ! 

அதே சமயம் ஒரு கனத்த "கி.நா."வுமே உங்களை நோக்கி வெகு சீக்கிரமே வந்திடவுள்ளது ! இதோ - "விதி எழுதிய வெள்ளை வரிகள்" black & white ஆல்பத்தின் பிரிவியூ :


ஒரிஜினல் அட்டைப்படம் அப்படியே வருகிறது - கதையின் அந்த mood-ஐ பிரதிபலிக்கும் விதமாய் !! நெப்போலியன் படையுடனான மோதலைத் தொடர்ந்து ரஷ்யப் பனிக்காட்டில் உயிர்தப்பியோடும் ஒரு சிறு அணியின் ஜீவ மரணப் போராட்டத்தினை மிரளச் செய்யும் சித்திரங்களுடன் சொல்லியுள்ளனர் ! And கதைக்களம் கனமானதே என்பதால் again இதுவொரு இலகுரக வாசிப்பின் இதழாய் இராது guys ! 

தொடரும் நாட்களில், தொடரவுள்ள புத்தாண்டினில் கமர்ஷியல் குருதையில் எறியபடியே, புதுசு சார்ந்த தேடல்களையும் செய்திட எண்ணியுள்ளோம் ! So காத்துள்ள 2024 அட்டவணை மாத்திரமன்றி, காத்துள்ள பயணத்தின் template கூட ரொம்பவே சுவாரஸ்யமானதாக இருந்திடவுள்ளது ! Not too long a wait ; இம்மாதத்து இறுதி வாரப் பதிவினில் ரூட் 2024 பற்றிப் பார்த்திடலாமே !!

Bye all...see you around ! அம்மாவுக்காக, எங்களுக்காக பிரார்த்தித்த அத்தனை அன்புள்ளங்களுக்கும் எங்களது நன்றிகள் உரித்தாகட்டும் ! Have a good week ahead !

P.S : V காமிக்ஸும் பைண்டிங்கில் வெயிட்டிங் ! இங்கே சின்னதாயொரு திருத்தம் folks !! ஸாம் வில்லர் டெக்சின் அண்ணார் என்று போன பதிவில் ஏதோ ஒரு ஞாபகத்தில் தவறாகக் குறிப்பிட்டிருந்தேன் ! டெக்ஸ் தான் மூத்தவர் ; ஸாம் இளவலே ! கதாசிரியர் போசெல்லியின் கைவண்ணத்தில் ஸாம் வில்லர் ரொம்பவே மதிக்கத்தக்க மனிதராய் மிளிர்கிறார் ! நிச்சயமாய் 'தல' ரசிகர்களுக்கு இதுவொரு மிஸ் செய்திட இயலா இதழாய் இருந்திடுமென்பது உறுதி

Wednesday, September 27, 2023

ஒரு சங்கடச் செய்தி !

 நண்பர்களே,

வணக்கம். சுகவீனங்களுடனான நெடியதொரு போராட்டத்தினில் தோல்வியை ஒத்துக் கொண்டு அம்மா இயற்க்கையோடு ஒன்றாகிப் போய் விட்டார்கள் ! கடந்த வியாழனன்று நள்ளிரவுக்கு மேல் எதிர்பாரா நோவுகள் சுனாமியாய் தாக்கிட, அன்று தப்பிய நினைவு இறுதி வரைக்கும் திரும்பவேயில்லை ! ஏதேதோ முயற்சித்தும் இனி செய்வதற்கு ஏதுமில்லை என டாக்டர்களும் திங்களன்று கைவிரித்திட, வீட்டுக்கு அழைத்துச் சென்ற  பத்தாவது நிமிடத்தில் அம்மாவின் மூச்சு அடங்கிப் போனது ! கண்ணெதிரே ஒரு ஜீவன் விடைபெறுவதை பார்க்கும் கொடுமையோடு துவங்கிய இந்த வாரம், சடங்குகள், சம்பிரதாயங்கள் என தொடர்ந்த தினங்களில் நீண்டு வந்துள்ளது ! And சகல காரியங்களும் முடிந்த கையோடு இங்கே இப்போது ஆஜராகியுள்ளேன் ! 

மரணம் இயற்கையின் நியதியே என்றாலும், அதனை மிக நெருக்கத்திலிருந்து பார்ப்பது ஒரு மிரளச் செய்யும் அனுபவமாய் இருப்பதை மறுக்க மாட்டேன் ! கடந்த ஐந்தாண்டுகளாகவே ஊர் ஊராய், ஆஸ்பத்திரி, ஆஸ்பத்திரியாய் அலைவதே அம்மாவின் விதி என்றாகிப் போயிருந்தது. அந்த 5 ஆண்டுகளில் 9 ஆபரேஷன்கள் என்ற ரணகளங்கள் அரங்கேறிய பொழுதுகளில் - 'இந்த வேதனைக்கு ஒரு நிரந்தர விடுதலை கிட்டினால் தேவலாமே ?' என நினைக்கத் தோன்றியது நிஜமே ! ஆனால் அம்மாவின் விரல் தொடும் அண்மையில் அந்த விடுதலை நின்ற போது, அதனை வரவேற்க எங்களுக்குத் திராணியே இருக்கவில்லை தான் ! But அனுமதி கேட்டுப் பெற்றுவிட்டெல்லாம் காலன் தனது கடமைகளைச் செய்வதில்லையே ?! வந்தார் & 2 தினங்களுக்கு முன்வரையிலும் ரத்தமும், சன்னமான சதையுமாய் இருந்ததொரு ஜீவனை இன்று போட்டோவில் புன்சிரிக்கும் நினைவாய் உருமாற்றிவிட்டு தன்னோடு அழைத்துச் சென்றுவிட்டார் !   கடைசி காலத்தில் நிறைய கஷ்டப்பட்டு விட்டார்கள் -  இனியாவது இன்னல்களின்றி நிம்மதியாய் துயில்வார்கள் என்ற பிரார்த்தனைகளுடன் வழியனுப்பியுள்ளோம் ! புனித மனிடோ காத்தருள்வாராக ! 



October புக்ஸ் வரும் வாரத்தில் பெரிய தாமதங்களின்றிப் புறப்பட்டு விடும் ! கொஞ்சமாய்ப்  பொறுத்துக் கொள்வீர்களென்ற நம்பிக்கையுடன் கிளம்புகிறேன் all ! God be with us all !