Friday, December 11, 2020

கனவுகள்...இன்னும் கொஞ்சம் கனவுகள்..!

நண்பர்களே,

வணக்கம். 'சடுதியில் டாட்டா சொன்னால் தப்பே இல்லை' - என்றதொரு ஆண்டுக்கு விடைதரும் டிசம்பர் மாதத்து இதழ்களுடனான டப்பிக்கள் நேற்று மதியமே கிளம்பிவிட்டன !  So இன்றோ / நாளையோ  உங்கள் வீட்டு வாசல்களில் கூரியர் நண்பர்கள் தவறாது ஆஜராகிட DTDC &  ST மனது வைப்பார்களாக !! And ஆன்லைன் லிஸ்டிங்குகளுமே போட்டாச்சு என்பதால், சந்தாக்களில் இல்லாத நண்பர்கள் தேவையான இதழ்களை வாங்கி கொள்ளும் வாய்ப்பும் ரெடி ! கார்ட்டூன்களை ஒரு collector's special ஆக வெளியிடலாமே ? என்ற கேள்வி எழுந்து நிற்கும் இந்தத்தருணத்தினில் மாதாந்திரக் கார்ட்டூன்களை  கரிவேப்பிலையாய் ஓரம்கட்டாது, உங்கள் வாசிப்புகளில்  அதனையும் சேர்த்துக் கொண்டீர்களென்றாலே அதுவே ஒரு கார்ட்டூன் புனர்ஜென்மத்துக்குப் பெரும் பூஸ்ட்டாக இருந்திடும் ! Fingers crossed !!


100 !! இது நடப்பாண்டின் பதிவு நம்பர் 100 !! And வருஷம் முடிய இன்னமும் 3 வாரங்கள் பாக்கி உள்ளன எனும் போது - வாரத்துக்கு தோராயமாக 2 பதிவுகள் என்றாகிறது - இந்த வருஷத்தினில் ! இதுவரைக்கும் ஒற்றை ஆண்டினில் இத்தனை மொக்கைகள் போட்டதில்லை  எனும் போது உங்களின் பொறுமைகளை எண்ணி வியக்காதிருக்க முடியவில்லை தான் ! For sure கொரோனாவின் பெயரைச் சொல்லி முழு அடைப்பினில் அடைந்து கிடந்த அந்த ஏப்ரல் / மே மாதங்களில் அடித்த லூட்டிகளே இந்த மூன்றிலக்கத்துக்குக் காரணம் என்பது புரிகிறது !! But still - ஒரே பாணியிலான எழுத்துக்களுடன் ; ஒரே மாதிரியான topic -களிலான இத்தினி பதிவுகளை, இந்த மட்டிற்கு சகித்து வருவதென்பது நிச்சயமாய்ப் பெரியதொரு விஷயமே ! Thanks a ton folks ; அரையணா செலவின்றி எனது கச்சேரிகளை உங்களின் நிறையப் பேர்களது செவிகளிடம் கொண்டு சென்று சேர்ப்பதற்கும்  ; உங்களது இசைமழைகளை என் காதுக்குள் புகுத்திடவும்  இது செம effective கருவியாய் அமைந்திருப்பது நிஜமான வரமே ! தொடரும் காலங்களிலும் இந்தப் பரிமாற்றப் பாலம் பழுதின்றித் தொடர்ந்திட பெரும் தேவன் மனிடோ ஆசீர்வதிப்பாராக ! 

And அந்த மூன்றிலக்க ரவுண்ட் நம்பரைப் பார்த்த நொடியே - "இதுக்கொரு ஸ்பெஷல் சாயா ஆத்திடலாமே ?" என்ற ஆர்வம் உங்களில் பலரிடமும் ததும்பிடலாம் தான் ! "கார்ட்டூன் ஸ்பெஷல் ; முன்பதிவுக்கு மட்டும்" என்ற ரீதியிலான பேச்சு லைட்டாகத் துளிர்விட்டிருக்கும் இந்த நொடியில் - நூறாவது பதிவினை நான் அது மாதிரியானதொரு அறிவிப்புக்குப் பயன்படுத்திடுவேன் என்ற எதிர்பார்ப்புமே சன்னமாய் இருந்திடலாம் தான் ! ஆனால் வயசின் ஓட்டத்தின் நீட்சியோ - என்னமோ ; இப்போல்லாம் வாய்க்குள் கட்டைவிரலைத் திணிக்கும் முன்பாக 'நிதான நித்தியானந்தா' ஓட்டமும் நடையுமாய்ப் பிரசன்னமாகி விடுகிறார் ! இந்த மனுஷன் காவி, கீவியோ, கழுத்தில் அரை டன்னுக்குச் சங்கிலிகளோ அணியாதவர் எனும் போது தைரியமாய்க் கொஞ்சம் காது கொடுத்துக் கேட்கத் தோன்றுகிறது !  

இந்த நொடியினில் நம் முன்னே பிரதான முக்கியத்துவம் பெற்று நிற்பது 2021-க்கான சந்தா சேகரிப்புகளே ! And புது இதழ்கள் துவக்கம் காணவுள்ளது ஏப்ரல் முதற்கொண்டே எனும் போது நிதானமாகவே "ச.சே." இருந்திடும் என்பதை யூகித்திடலாம் ! Of course - எனது யூகத்தைத் தவறென்று ஆக்கிடுவீர்களெனில் சூப்பர் தான் ! 

காரணம் # 2 - ஏற்கனவே பாதிக் கிணற்றைத் தாண்டிய நிலையில் நின்றுவரும் நமது ஞாபகமறதிக்காரப் பார்ட்டி XIII ! ஏப்ரல் & மே மாதங்களை மேற்படியாரின் பொருட்டு ஒதுக்கிப் பார்த்தால் மட்டுமே இந்த முயற்சி கெலிக்குமா ? கவுந்தடித்துப் படுத்து விடுமா ? என்பது புரியும் ! So அந்தத் தெளிவு பிறக்கும் மே இறுதிவரைக்கும் புதுசாய் எதையும் நுழைக்கும் சாத்தியங்கள் நஹி !

காரணம் # 3 -  இத்தகைய கார்ட்டூன் தொகுப்பு + பாக்ஸ் செட் என்ற திட்டமிடல் 2015-ல் ஆண்டுமலராய் களம் கண்டு தடுமாறிய பழைய track record  ! Smurfs + க்ளிப்டன் + சிக் பில் + சோன்பப்டி தாடித் தாத்தா லியனார்டோ - என்ற செம variety கார்டூன்களோடு வெளியான இந்த இதழ் takeoff ஆகவே இல்லை !

காரணம் # 4 - லக்கி லூக்கைத் தாண்டிய பாக்கி கார்ட்டூன் நாயகர்கள் அனைவருமே 'வருஷத்துக்கு ஒற்றை ஸ்லாட்டுக்கு வந்துப்புட்டுப் போகட்டுமே' என்ற ரீதியிலேயே வண்டியோட்டி வருவோர் என்பதில் எது இரகசியம் ? So ரெகுலர் தடத்தினிலேயே தொட்டுக்கொ-துடைச்சுக்கோ என்று நடைபோடுவோரை ஒரு மெகா இதழில் ; கூடுதல் விலையினில் இறக்கி விட்டு வேடிக்கை பார்த்திடுவது அத்தனை ரசிக்க மாட்டேனென்கிறது ! Diehard கார்ட்டூன் ரசிகர்களின் தீவிரம் எத்தகையதோ - அதே வீரியமே  "வேண்டாமே கார்ட்டூன்ஸ்' என்போரின் வேகங்களும் ! So ஏற்கனவே அந்தரத்தில் XIII தொங்கிக்கொண்டிருக்க, இன்னொரு பரீட்சார்த்தமும் இந்த நொடியின் அவசியமா ? என்ற கேள்வி என்னுள் ! 

Of course - நாலு லக்கி லூக் கதைகளை ஒருங்கிணைத்து ஒரு செம classy தொகுப்பினை திட்டமிடலாம் தான் ; அதன் வெற்றி சார்ந்த சந்தேகங்கள் பெரிதாய் இராதும் தான் ! ஆனால் இக்கட பிரச்சனையோ வேறு விதமானது !! லக்கியின் தொடரினில் அந்த ஆரம்பத்துக் கதைகளின் artwork ரொம்பவே மொக்கை & லக்கியின் கதாப்பாத்திரமுமே முழுசுமாய் develop ஆகியிராதது போலவே தோன்றும் ! பின்னாட்களது, கலவையான கதாசிரியர்களின் ஆக்கங்களும் மித ரகங்களே ! So இடைப்பட்ட அந்த classic கதைகள் தான் காலமாய் நம் ரசனைகளை உயிர்ப்போடு வைத்திருப்பவை ! Classic படைப்புகளுக்கும், பின்னாட்களின் படைப்புகளுக்கும் மத்தியிலான வேற்றுமை  செம அசாத்தியமானது ! இதோ, நடப்பாண்டினில் வெளியான "கௌபாய் கலைஞன்" ஆல்பமே அதற்கொரு சான்று என்பேன் ! Taking it even further - ரொம்பச் சீக்கிரமே வெளியாகவுள்ள லக்கியின் புது ஆல்பத்தின் ஆங்கிலப் படிவங்கள் போன வாரமே நமக்கு வந்தாச்சு - 'சூட்டோடு சூடாய் தமிழில் இந்த ஆல்பத்தை வெளியிட ஆர்வமிருக்குமா ?' என்ற கேள்வியோடு ! கோசினியும் ; மோரிஸும் நம்மைப் பழக்கப்படுத்தி விட்டிருக்கும் அந்த உச்சங்களின் முன்னே - சமகாலத்து ஜாம்பவான்களின் ஆக்கங்கள் கூட தண்ணீர் குடிக்கவே செய்கின்றன  என்பதை yet again புரிந்து கொள்ள முடிந்தது ! So ஒல்லியாரின் தொடரினில் உள்ள classy & classic கதைகளை, மண்டையில் எஞ்சியிருக்கும் ஓரிரண்டு கற்றைகளை போல, பொக்கிஷமாய்ப் பொத்திப் பொத்தி வைத்தபடிக்கு அடுத்த சில ஆண்டுகளையாச்சும் ஓட்ட நினைப்பவனுக்கு - 'ஏக் தம்மில்' 4 க்ளாசிக்சை ஒரே ஆல்பத்தினில் போட்டுத் தாக்குவது என்பது தயக்கங்களையே கொணர்கிறது ! 

So கார்ட்டூன்களென்பது கனவாக மாத்திரமே இனி தொடரணுமா ? என்ற உங்களின் மைண்ட்வாய்ஸ் கேட்கிறது ! Maybe, நிலவரங்கள் சற்றே சீராகி ; புத்தக விழாக்களும் முன்போல நடைமுறை காணும் பட்சங்களில் - ஏற்கனவே முன்பதிவுப் பட்டியலில் முன்னே நிற்கும் "ஒற்றை நொடி...ஒன்பது தோட்டா" ; "கென்யா" ; ரூட் 66  ஆகியவற்றைச் சடுதியில் க்ளியர் செய்தான பின்னே இந்த கார்ட்டூன் தொகுப்பினை சீரியஸாய்ப் பரிசீலிக்கலாம் ! 

அப்புறம் பிரான்க்கோ-பெல்ஜியப் படைப்புகளுள் கார்டூன்களைத் தாண்டியும் light reading-க்கான படைப்புகள் கணிசமாகவே உள்ளன ! அவை எல்லாமே தொடர் நாயகர்களென்று இல்லாது - ஜாலியாய் டிராவல் செய்யும் ஒன்-ஷாட்ஸ் ! பூனைகள் நாயகர்களாய் ; நாய்கள் ; நரிகள் ஹீரோக்களாய் கலக்கும்  கதைவரிசைகள் ; பொடுசுகள் டிடெக்டிவ் அவதார் எடுக்கும் கதைகள் ; fantasy-ல் கார்ட்டூன்ஸ் ; விழி பிதுங்கும் குடும்பத்தலீவர்களின் கதைகள்  என்று நிறையவே இருக்கவும் செய்கின்றன தான் ! Maybe அவற்றின் பக்கமாய் ஒருவாட்டி கவனங்களைத் தந்தும் பார்க்கலாம் - ஆக்ஷனே போதுமென்று எண்ணிடும் நண்பர்களையும் ஈர்த்திட முடிகிறதா ? என்ற நப்பாசைகளோடு ! 

வாக்குத் தந்தபடியே லக்கியின் "கௌபாய் எக்ஸ்பிரஸ்" அடுத்த சில மாதங்களுக்குள் ஏதேனுமொரு திடும் ஸ்பெஷலாகக் களம்காணும் ! And டெக்சின் வண்ண மறுபதிப்பு MAXI-யின் கடைசி ஸ்லாட்டை எடுத்துக் கொள்ளும் ! இத்தாலியிலும், பிரான்சிலும் இன்னமும் கொரோனா நிலவரங்கள் சீராகவில்லை என்பதால்,  நமது புது வேண்டுகோள்களை படைப்பாளிகள் பரிசீலித்து, டிஜிட்டல் கோப்புகளை அனுப்பி வைக்க நிச்சயமாய் அவகாசமெடுக்கும் ! So அதன் வரையிலும்  பொறுமையே பெருமை சேர்க்கும் நமக்கு !

ரைட்டு.......கார்ட்டூன் தொகுப்பு தான் கானல் நீராய்த் தொடர்கிறதெனில், வேறெதாச்சும் செய்திடலாமா ? என்ற கேள்வி என்முன்னே ஆஜராகிறது ! இதற்கு பதிலாய் - எனது ரொம்ப கால ஆசை ஒன்றினை சொல்லிவைக்கட்டுமா folks ? அதனை அசை போட்டுத் தான் பாருங்களேன் - கொஞ்ச காலம் கழிந்த பின்னே நிஜமாக்கிடலாமா ? என்று :

நமது இதழ்களில் எப்போதுமே ஒரு striking feature ஆகத் தென்படுவது அந்த variety  என்பதில் உடன்பாடிருக்கும் என்று நினைக்கிறேன் ! Variety ஆக நாயகர்கள் என்பதை விடவும், variety ஆன ஜானர்களுடன் ஒரு Box set தொகுப்பினை யோசித்துத் தான் பாருங்களேன் :

1 ஹ்யூமர் ஆல்பம்

1 லவ் ஸ்டோரி 

1 அமானுஷ்யம்

1 Sci -fi ஆல்பம் 

1 த்ரில்லர் 

5 வெவ்வேறு சுவைகளோடு - 5 oneshots - ஒரே பாக்ஸ் செட்டில் ! முன்பதிவுகளுக்கு மட்டும் - 500 என்ற இலக்கு நிர்ணயதோடு ! எல்லோருக்கும் ரசிக்க இதனுள் ஏதோ ஒன்றோ, இரண்டோ, மூன்றோ - இல்லாதா போய் விடும் ? என்ற நப்பாசையில் இந்தக் கனவு நெடுநாளாய் என்னுள் தொடர்ந்து வருகிறது ! Maybe இது ஒர்க் அவுட் ஆகுமென்று பட்டால் 2021-ன் பின்பகுதியினில் முயற்சிக்கலாம் தான் ! Your thoughts folks ?

அப்புறம் நமது சந்தா D-ல் தலைகாட்ட வரும் அந்த மர்ம மண்டல மேக்சின் ஆல்பத்தின் அட்டைப்பட பிரிவியூ இதோ !! இன்றைக்கு புக்கே உங்களை எட்டிவிடும் என்பதால் பெரிதாய் பில்டப்பின்றி நடையைக் கட்டுகிறேன் !! Bye all...see you around ! Happy Reading !

Sunday, December 06, 2020

ஆப்பய்யா ரெடி !!

 நண்பர்களே,

வணக்கம். ஒரே நாளில் பதிவு - உபபதிவு என்பதெல்லாம் நாம் நிறைய பார்த்துவிட்டோம்  ; so இன்றைய ரவுசு மேளா பெரியதொரு ஆச்சர்யத்தினை எனக்கு ஏற்படுத்திடவில்லை தான் ! ஆனால் மெய்யான வியப்பு எழுந்தது -  இன்றைய லூட்டிகளின் வீரியத்தையும் ; முன்வைக்கப்பட்ட for & against வாதங்களில் மிளிர்ந்த லாஜிக்கையும் பார்த்திட்டே போதே  ! பொதுவாய்த் 'தென்னைமரத்திலே ஒரு குத்து ; பனமரத்திலே ஒரு குத்து' என்று ஜாலி தேர்தல் நிகழ்வதே வாடிக்கை என்று எண்ணியிருந்தேன்  - பிரின்சா ? ரிப்போர்ட்டர் ஜானியா ? என்ற தேர்தலைப் போல ! ஆனால் இம்முறையோ வேட்பாளர்கள் - டிரம்பும், பைடனும் ரேஞ்சுக்கு heavyweights என்பதை  நான் கணிக்கத் தவறி விட்டேன் தான் ! So தொடர்ந்த அதகளங்களை செம சுவாரஸ்யமாய் வேடிக்கை பார்த்தேன் - வெள்ளை மாளிகைக் கூத்துக்கள் அளவுக்கு இல்லாவிடினுமே !!

எல்லாக் கேள்விகளுக்கும் ஒரு பதில் இருந்தாக வேண்டும் ; எல்லாப் போட்டிகளுக்கும் ஒரு வெற்றியாளர் இருந்தாக வேண்டுமெனும் போது, ஆப்பைத் தேடிப் போய் அமரும் சாலமன் ஆப்பய்யா அவதார் எடுக்கும் அவசியமும் இருந்தாக வேண்டும் தானே ?! உபபதிவினில் சொன்னது போல - பழைய பண்ணீர்செல்வமாய் (கொஞ்சம் அழுத்தி சொல்லிப்பாப்போமேன்னு தான் !!) நானிருந்திருக்கும் பட்சத்தில் - 'தென்னைமரத்தையும் நட்டிடலாம் ; பனையையும் நட்டிப்புடலாமென்று' சுருக்க தீர்ப்பைச் சொல்லி வைத்திருப்பேன் தான் ! ஆனால் இதுவோ 'நிதான நித்தியானந்தம்' அவதாருக்கான வேளை எனும் போது - எதையுமே எடுத்தோம்-கவுத்தோமென்று தீர்மானிக்க வழியில்லை ! 

அரங்கேறிய ஆரவார அலசல்களுக்கு மத்தியினில், லக்கியின் கார்ட்டூன் தரப்பின் சார்பினில் 'ஆமாம்லே !' என்று தலையை பிரதானமாய் ஆட்டியது 2 பாய்ண்ட்களின் பொருட்டு :

1.2020-ன் அட்டவணையின் அறிவிப்பினில் கார்ட்டூன் இதழ்கள் வெறும் ஆறாக இருந்தது நினைவிருக்கலாம் தான் ! அப்போது நான் எழுதிய வரிகள் இவை :

//"கார்ட்டூன் சந்தா : C : நடப்பாண்டைப் போலவே இம்முறையும் இங்கே 6 இதழ்களே – ஆனால் அந்த கார்ட்டூன் வறட்சியை நிவர்த்திக்க MAXI லயனும் ; இன்னுமொரு புதுத் திட்டமிடலும் காத்திருப்பதால், கார்ட்டூன் ரசிகர்கள் ஜாலியாய் வாசிப்பைத் தொடரலாம் ! "//

"புதுத் திட்டமிடல்" என நான் குறிப்பிட்ட  MAXI லயனில் 1 லக்கி மறுபதிப்பு + 2 வாண்டு ஸ்பெஷல்ஸ் + 1 கார்ட்டூன் மறுபதிப்பு + 2 டெக்ஸ் மறுபதிப்புகள் - ஆக மொத்தம் 6 இதழ்கள் என்பதே திட்டமிடலாய் இருந்தது ! So 4 கார்ட்டூன்ஸ் + 2 டெக்ஸ் என்பதே நான் தந்திருந்த வாக்குறுதி ! 

ஆனால் நடப்பாண்டின் கொரோன தாண்டவம் திட்டங்களைப் பப்படமாக்கியிருக்க, கார்ட்டூன் அணிக்கு (என்னையும் சேர்த்தே தான்) ஒரு சட்டி நயம் அல்வாவே கிட்டியுள்ளது ! என்ன தான் சூழலின் தன்மைகளை அவர்கள் புரிந்து கொண்டு கார்ட்டூன் கல்தாக்களை ஏற்றுக் கொண்டிருப்பினும், அந்தப் பெருந்தன்மை பாராட்டுக்களின்றிப்  போகலாகாதே என்ற நெருடல் உள்ளுக்குள் !! 

2.சந்திலும், பொந்திலும், இண்டிலும், இடுக்கிலும், சாலையிலும், புறவழியிலும், ஆறுவழி சாலையிலும், ஒற்றையடிப் பாதையிலும் பயணம் செய்யவல்ல All Terrain  Vehicle என்று சொல்லலாம் நமது இரவுக்கழுகினையும், அவரது டீமையும் ! புத்தக விழா ஸ்பெஷலா ? தீபாவளி மலரா ? காதுகுத்து ஸ்பெஷலா ? அல்லாத்துக்கும் எவ்வித முணுமுணுப்புகளுக்கும் இடம்தராது கச்சிதமாய்க் காரியமாற்றும் ஆற்றல் டெக்ஸுக்கு உண்டு என்பதை நாமறிவோம் ! ஆனால் காலாவதியாகிவரும் ஒரு டைனோசர் இனத்தைப் போல இன்றைக்கு சிறுகச் சிறுக fade out ஆகி வரும் கார்ட்டூன்களின் எந்தவொரு பிரதிநிதிக்கும் - 'எங்கேயும் ; எப்போதும் ' என்ற லைசென்ஸ் சத்தியமாய் நஹி - அது லக்கி லூக்காகவே இருந்தாலுமே !! So அவர்களுக்கென உருவாக்கப்படும் சொற்ப வாய்ப்புகளும் தட்டிச் செல்லும் சங்கடங்கள் ஒரு நெருடும் சமாச்சாரமாகிடாதா ?

These were my concerns !

ரைட்டு - மறு தரப்பின் ஜாம்பவான் அணியின் வாதங்களைப் பரிசீலித்த போதும் 3 விஷயங்கள் striking ஆக எனது கவனத்தை ஈர்த்தன !!

1.ஒரு இதழின் வெற்றி ; ஒரு நாயக / நாயகியின் வெற்றியின் ultimate அளவுகோல் அவற்றின் விற்பனை வெற்றிகள் தான் என்பதில் மாற்றுக கருத்துக்களே இருக்க இயலாது ! அதிலும் தொடர்ச்சியாய் ; consistent ஆக ஈட்டப்படும் வெற்றிகள் அந்த நாயகரின் ஆளுமைக்கு ; நம் மனங்களில் அவர் வீற்றிருக்கும் சிம்மாசனங்களின் கம்பீரத்துக்கு ஒரு அசைக்க இயலா சான்றாகிடும் தானே ? அந்தப் பார்வைக் கோணத்தினில் பார்த்திடும் போது - பஞ்சாயத்தைக் கூட்டும் அவசியமே இன்றி, hands down அத்தினி பேரையும் தூக்கிச் சாப்பிட்டு விடும் திறன் படைத்தவர் 'தல' தான் ! 2012-ல் துவங்கி இன்று வரைக்கும் ஒவ்வொரு ஆண்டின் 'டாப் ஹிட்ஸ் ; டாப் சேல்ஸ் ; டாப் புத்தக விழா வரவேற்பு' என டாப் சகலத்தையும் அக்குளுக்குள் செருகி நிற்பவர் இந்த திடகாத்திர மஞ்சள் சட்டைக்காரரே ! ஒரு பேரிடர் காலத்திலும், நூற்றாண்டுக்கு ஒருவாட்டி நிகழவல்ல ஒரு அசாத்திய பிரளய காலத்திலும் - ரூ.450 என்ற விலை இமயத்தையும் ; 672 பக்கங்கள் என்ற தாட்டியத்தையும் ஆனாயாசமாய் சுமந்து ; ஒற்றை மாதத்திற்குள் கிட்டத்தட்ட 90% விற்பனையினை கண்ணில் காட்டுவது ஒரு அசாத்தியனின் அடையாளமாகிடாவிடின் - வேறென்ன தான் ஆகிட முடியும் ? 

தவிர, இதுவரையிலுமான கலர் டெக்ஸ் இதழ்களுள் நம்மிடம் ஸ்டாக் இருப்பதே இரண்டே titles என்பதாக ஞாபகம் ! 700 ரூபாய் டைனமைட் ஸ்பெஷல் எப்போதோ காலி ; டிராகன் நகரம் காலியோ - காலி ;  சர்வமும் நானே அனல்பறந்த ஹிட் - என்று சொல்லிக்கொண்டே செல்லலாம் ! So நார்மலாய் அல்லாத ஒரு மார்க்கெட் சூழலை எதிர்கொள்ள பந்தயக் குதிரையன்றி வேறேது சுகப்படக்கூடும் ? 

2."நிஜ வெற்றி" என்பதை விட - "முழுமையான வெற்றி" என்றொரு சமாச்சாரமும் உள்ளதை இங்கே சுட்டிக்காட்ட அனுமதியுங்கள் நண்பர்களே ! Oh yes - நமது பதிவுப் பக்கத்துக்கு 550+ followers உள்ளனர் தான் ; ஏகமாய் மௌன வாசகர்களும் உண்டு தான் ! ஆனால் இங்கே active ஆகக் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளும் நண்பர்களின் எண்ணிக்கை ஒரு நூறு இருக்குமா ? Maybe 125 ? இந்த நண்பர்களுள் அரங்கேறிடும் அலசல்கள் ; விவாதங்கள் பிரதானமாய் இங்கு centerstage எடுத்துக் கொள்கின்றன என்பதால் அவர்களின் மெஜாரிட்டி குரலே லாஜிக்கின்படி வெற்றியின் குரலாய்ப் பார்க்கப்படுகிறது ! And thats perfectly understandable too !

ஆனால் ஒரு முழுமையான வெற்றியானது வலைக்கு அப்பாலுள்ள நண்பர்களும் தங்கள் குரல்களை ஒலிக்கச் செய்திடும் போது தானே கிட்டுகிறது folks ? அவ்விதம் பார்த்தால் - நெட்டுக்குள் தலை நுழைக்கிறார்களோ, இல்லையோ - 'பிடிச்சதை வாங்கிப் படிச்சிக்குவேன் ; அம்புட்டுத்தேன் !!' என்ற ரீதியில், ஆன்லைனிலோ, முகவர்களிடமோ, சந்தாக்களிலோ  புக்ஸை வாங்கித்தள்ளி -  விற்பனை ஹிட்ஸ் வாயிலாய் -  நமது ஒட்டுமொத்த சிறுவட்டமும் ஒன்றிணைந்து அனுப்பிடும்  மௌனப் புகை சிக்னல்களை நாம் கொண்டாடுவது தானே முழுமையான வெற்றியாகிடும் ? அவ்விதம் பார்த்தால் நடப்பாண்டின் தீபாவளி மலர் again a striking example !! ஜூலையில் வந்த லக்கி ஆண்டுமலரும் ஒரு செம ஹிட் இதழே ; ஆனால் தீபாவளி மலரோ மெகா மாஸ் ஹிட் !! So முழுமையான வெற்றிக்கு உரித்தானவரை acknowledge செய்திட இதுவொரு வாய்ப்பன்றோ ?

3.Simple & Sheer numbers !! வோட்டுப் போடச்சொல்லிப்புட்டு ; அப்பாலிக்கா புரிந்தும், புரியாமலும் மய்யமாய் பேசி, வேறேதேனும் தீர்மானத்தினை நான் எடுப்பின், அது உங்கள் ஓட்டுக்களை பிம்பிலிக்கா பிளாக்கி செய்தது போலாகிடும் அன்றோ ? 

ஆக மேற்படி 3 காரணங்களின் காரணமாய் இன்றைய போட்டியின் ஏகோபித்த வெற்றியாளராக தல டெக்சினை அறிவிக்கிறேன் !! தொடரும் நாட்களில் உங்கள் அவாவினைப் பூர்த்தி செய்திடும் விதமாய்  TEX வண்ண மறுபதிப்பினைக் கொணரும் முயற்சிகளைத் துவக்கிடுவேன் - எந்தக் கதை என்ற அறிவிப்போடு ! 

அதே சமயம் கார்ட்டூன் காதலர்களுக்குமே கொஞ்சமாச்சும் உற்சாக பானம் தருவது எனது தலையாய கடமையாகிடும் ! கொஞ்சமே கொஞ்சமாய் திட்டமிட அவகாசம் எடுத்துக் கொள்கிறேன் guys - உங்களை ஜிலீரெனக் குளிப்பாட்டும் அறிவிப்போடு ; இயன்றமட்டிலும் விரைவாய் ஆஜராகிடுவேன் - and thats a promise !! மஞ்சள்சட்டை ஒல்லியாரே தான் ; அட்டகாசமாய் வண்ணத்தினில் தான் ; ரொம்பச் சீக்கிரமேவும் தான் ! 

Bye all & Thanks for a wonderful Sunday ! இன்று கெலித்தது காமிக்ஸ் நேசம் மாத்திரமே என்ற சந்தோஷத்தோடு நடையைக் கட்டுகிறேன் !! See you around !



வாதங்கள் தொடரட்டுமே புலவர்களே ..!

 நண்பர்களே,

வணக்கம். "மஞ்சள்" என்றாலே டாப்கியர் தான் என்பதை yet again நிரூபித்து விட்டீர்கள் ! 

லக்கியா ? டெக்சா ? என்ற கேள்வியினை வெறும் வோட்டெடுப்பாய் அமைத்திருந்தால் அந்த மிஷினைப் பஞ்சராக்கியதோடு ஜோலி முடிந்திருக்கும் ! ஆனால் இப்போதோ - கார்ட்டூன்களுக்கும் / எதிரானதற்குமிடையிலான ஒரு பட்டிமன்றம் போல அடித்துக் கிளப்பி வருகிறீர்கள் ! ரைட்டு...பதுங்குகுழித் தலீவரை தீர்ப்புச் சொல்ல கோர்த்து விட்டுப்புடலாமென்று பார்த்தால், அவர் மஞ்ச தண்ணியை ஊத்துவதற்கு முன்பாகவே "டெக்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..." என்று கதறி வைத்து விட்டார் ! So புதுசாய் ஒரு பலியாடைத் தேடுவதா ? அல்லது அந்த மாலையும், மஞ்சத்தண்ணியும் நமக்கே நமக்கா ? என்ற யோசனையில் இந்தப் பகலைக் கழிக்கவுள்ளேன் !

எது எப்படியோ - நமது வாசிப்புகளின் big guns யாரென்பதில் துளியும் இனியும் சந்தேகங்கள் இராது தான் ! பழைய மாதிரி சூழலுமிருந்து ; பழைய பன்னீர்செல்வமாய் நானுமிருந்திருந்தால் - இந்நேரத்துக்கு முட்டிங்காலுக்குக் கீழுள்ள பகுதியினை மொத்தத்துக்கு வாய்க்குள் திணித்திருப்பேன் தான் ! ஆனால் அடக்கி வாசிப்பதே order of the day எனும் போது இன்றிரவு வரையிலும் காத்திருப்பேன் - தீர்மானத்தினை அறிவித்திட ! So பிரியாணிகளையும், குட்டித்தூக்கங்களையும் ஒரு பிடி பிடித்த கையோடு உங்கள் வாதங்கள் தொடரட்டும் !

One thing's for sure !! இன்றைய உங்கள் ரவுசுகளை நமது எதிர்காலத் திட்டமிடல்களில் ஏதேனுமொரு விதத்தில் எதிரொலிக்காது போகாது தான் ! Carry on folks !! See you around !!


 


Saturday, December 05, 2020

ஒரு டிசம்பர் தோரணம் !

 நண்பர்களே,

வணக்கம். எங்களைப் பொறுத்தவரையிலுமாவது 2020 ஒரு முற்றுக்கு வந்து விட்டது ! Yes- டிசம்பரின் இதழ்கள் நான்கும் தயாராகி, பைண்டிங்கில் குடியேறியுள்ளன ! வரும் வியாழனன்று டப்பிகளுக்குள் ஐக்கியமாகி வெள்ளி / சனிக்கு உங்கள் இல்லத்துக் கதவுகளை அவை தட்டிட வேண்டும் ! So அட்டவணை பூர்த்தி கண்டுள்ளதோ - இல்லையோ ; ஒரு வரலாற்று நிகழ்வான ஆண்டிலும், நம் தலை தண்ணீருக்கு மேலே தட்டுத்தடுமாறித் தொடர்ந்திட்ட அதிசயத்துடன் இந்த வருடத்துக்கு விடை தந்திட முனைந்துள்ளோம் ! சன்னமானதொரு பெருமூச்சும், விசாலமானதொரு நன்றி கூறும் பிரார்த்தனையும் இந்த நொடியினில் ரொம்பவே தேவையெனத் தோன்றுகிறது ! Boy..oh boy !!

எது எப்படியோ – இந்தாண்டின் ரெகுலர் அட்டவணை மார்ச் வரை நீண்டு போவதால் 3 மெகா இதழ்கள் இன்னமும் பெண்டிங் உள்ளன !

- ஜனவரியில் முத்து 49-வது ஆண்டுமலராய் தோர்கல் 5 பாக ஆல்பம் !

- பிப்ரவரியில் MAXI லயனின் 3 பாக ARS MAGNA !!

- மார்ச்சில் 3 பாக அசாத்தியமான “பிரளயம்” கிராபிக் நாவல்!

So தொடரவுள்ள ஒவ்வொரு மாதத்திலுமே ஒரு மெகா ரகளையான வாசிப்பனுபவம் காத்துள்ளது என்பேன் ! And கேக்கின் மீதான ஐஸிங்காகச் சொல்லக்கூடியது - மூன்று இதழ்களுமே தெறிக்க விடச் செய்யும் ஹிட்களாக அமைவதில் ஐயங்களில்லை என்ற ஜாலி சேதியே ! தோர்கல் பில்டப்களுக்கு அப்பாற்பட்டவராகி விட்டார் ! ARS MAGNA ஒரு க்ளாஸிக் என்பது நம்மில் பலருக்கும் தெரியும் & “பிரளயம்” பிடரியில் அறையவுள்ளதிலும் சந்தேகங்களில்லை ! So டிசம்பருக்கு டாட்டா சொன்ன கையோடு, தொடரவுள்ள மாதங்களுக்கான எனது planner-ஐப் பார்த்திடும் போது ஒரு மெல்லிய இளிப்பு குடிகொள்வதைத் தவிர்க்க .இயலவில்லை ! ஆண்டின் பெரும்பகுதிக்கு இஞ்சி தின்ற எதுவோ போலவே பொழுதுகளைக் கடத்தி வந்தவனுக்கு இப்போது home stretch-ஐப் பார்த்தது போலான உணர்வு !

மெகா இதழ்கள் தவிர்த்து நான் எதிர்பார்த்திருப்பது MAXI லயனின் இறுதி ஸ்லாட்டை நிரப்பிடப் போகும் ஆல்பத்தை எண்ணியே ! அறிவிக்கப்பட்டவை 6 MAXI இதழ்கள் ! அவற்றுள் MAXI-க்களாகவே இதுவரை வெளியாகியுள்ளவை மூன்று :

- இருளின் மைந்தர்கள் TEX – பாகம் 1

- இருளின் மைந்தர்கள் TEX – பாகம் 2

- பிசாசுப் பண்ணை லக்கி லூக்

பிப்ரவரியில் காத்துள்ள ARS MAGNA' வாண்டு ஸ்பெஷல்களின் 2 ஸ்லாட்களையும் ஒன்றிணைத்து ரூ.300 விலையிலான ஆல்பமாய் வரவுள்ளதால் MAXIs # 4 & 5 ஓவராகிடும் ! So எஞ்சி நிற்பது அந்த இறுதி ஸ்லாட் ! அதனை MAXI சைஸிலேயே லக்கி லூக்கின் “கௌபாய் எக்ஸ்பிரஸ்” or “சூ…மந்திரகாளி” மறுபதிப்புகளோடு நிறைவு செய்திடலாம் ! Or – அந்தக் களத்தினில் நமது ‘தல‘யின் வண்ண மறுபதிப்பில் ஏதோவொன்றை (டெக்ஸ்) ரெகுலர் சைஸிலேயே போட்டுத் தாக்கிடலாம் ! எந்த மஞ்சள்சட்டையார் அந்த ஆறாவது ஸ்லாட்டை ஆக்ரமித்தாலுமே உத்தரவாதமான ‘ஹிட்‘ என்பதில் ஏது ஐயம் ? So எந்த மஞ்சளுக்குக் கைதூக்கிடப் போகிறீர்கள் guys?

- MAXI சைஸில் லக்கி லூக்

or

- ரெகுலர் (டெக்ஸ்) சைஸில் ; கலரில் இரவுக்கழுகார் !

ஒல்லிப்பிச்சானுக்கே உங்கள் ஓட்டெனில் – அதை குதிரை மீதே சவரம் செய்து பயணம் செய்யும் சாகஸத்துக்கா ? அல்லது விரல் நீண்ட மாயாஜாலக்காரர் கதைக்கா ? என்பதையும் சொல்லி விடுங்களேன் ப்ளீஸ் ? திட்டமிடலில் தொக்கி நிற்பது இந்த ஒற்றை இதழ் மட்டுமே என்பதால் – இது குறித்து ஜல்தியாய் ஒரு தீர்மானத்துக்கு வந்தோமெனில் மேற்கொண்டு ஆக வேண்டிய வேலைகளைப் பார்த்து விட்டு புது அட்டவணைப் பணிகளில் சிறுகச் சிறுக விரல் நனைக்கத் துவங்கி விடுவேன் !

நடப்பாண்டின் ஒரு நகைமுரணைப் பற்றியும் இங்கே சுட்டிக்காட்ட நினைக்கிறேன்! ஆரவாரமாய் ஜனவரியில் துவங்கிய ரெகுலர் அட்டவணையானது ஜானவாசக் கார் போல ஆடியசைந்து பயணித்து வரும் நிலையில், ஏப்ரலில் துவக்கம் கண்ட ஜம்போ சீஸன் 3 இதோ- இந்த டிசம்பரோடு சுபம் காண்கிறது ! லேட்டாய் ஆரம்பித்தாலும் லேட்டஸ்டாய்த் தாக்குவது தானே தமிழகத்துத் தற்போதைய trend ? So அந்த பாணியில் நடப்பாண்டினில் சடுதியாய் சீஸன் 3-ன் ஆறு இதழ்களுமே களம் கண்டுவிட்டுள்ளன !!

- பிரிவோம் சந்திப்போம்

- ஜேம்ஸ் பாண்ட் 007 – நில்… கவனி… கொல்!

- தனித்திரு… தணிந்திரு… (Old Pa Anderson)

- மா துஜே சலாம் (ரஷ்ய செச்சன்ய யுத்தகளம்)

- கால வேட்டையர்

 &

- தி Lone ரேஞ்சர் – தகிக்கும் பூமி

பிப்ரவரியிலும், மார்ச்சிலும் களம் கண்ட ஜம்போவின் சீஸன் 2 இதழ்களான “அந்தியில் ஒரு அத்தியாயம்” (மார்ஷல் சைக்ஸ்) & “நில்…கவனி…வேட்டையாடு” (Zaroff) இதழ்களையுமே கணக்கில் சேர்த்துக் கொண்டால் 2020-ன் ஜம்போ count மொத்தம் 8 ஆகிடும் ! “சூப்பர் 6” என்று ரெகுலர் தடம் சார்ந்த நாயகர்களோடே முயன்றிட்ட எக்ஸ்ட்ரா இதழ்களின் தடத்தினை சற்றே tweak செய்து, one-shots களுக்கான பிரத்யேகத் தடமாக்கினாலென்ன ? என்ற மகாசிந்தனை ஒரு ரயில்ப் பயணத்தின் அப்பர்பெர்த்தில் துளிர்விட்ட போது, ஒற்றை ஆண்டின் ஆர்வக்கோளாறாக மாத்திரமே இது அமைந்திடக் கூடுமென்றே நினைத்திருந்தேன் ! ஆனால் இஷ்டப்பட்ட ஜானர்களையெல்லாம் வரம்புகளின்றி முயற்சிக்கும் சுதந்திரம் ரொம்பவே பிடித்துப் போனதால் சீஸன் 2-க்கு பிள்ளையார் சுழி போடும் ‘தகிரியம்‘ துளிர் விட்டது ! And உங்களுக்கும் இந்த freewheeling பாணி பிடித்திருந்ததால் – ஜம்போ இனி ‘அம்போ‘வாகிடாதென்ற நிச்சயம் பிறந்துள்ளது ! And இந்த 2020-ல் நாம் பார்த்துள்ள ஜம்போ இதழ்கள் ஒவ்வொன்றுமே ஒரு விதமல்லவா ?

- மார்ஷல் சைக்ஸ் – ஒன் ஷாட் கௌபாய்… சற்றே pathos சகிதம் !

- Zaroff – Pure thrills; ஒரு exotic பின்புலத்தில் ; மலைக்கச் செய்யும் சித்திரங்களுடன் !

- பிரிவோம்… சந்திப்போம் – மறுபடியுமொரு ஒன் ஷாட் கௌபாய் இதழ்! ஆனால் இதனிலுள்ள கதைமாந்தர்கள் ஒவ்வொருவரும் a different shade of grey ! மனித மனதைத் தோலுரித்துக் காட்ட முயன்ற முயற்சி!

- ஜேம்ஸ் பாண்ட் 2.0 – நவீன யுக espionage பற்றிச் சொன்ன ஒரு old school spy ! Again – ஜப்பானின் வித்தியாசப் பின்புலத்தில் !

- தனித்திரு … தணிந்திரு – ஒன் ஷாட்! ஹெர்மனின் அதகளத் தூரிகையோடு ! சொல்லப்பட்டது கதையல்ல… நாகரீகத்தின் ஒரு அவலப் பக்கமே !

- மா…துஜே…சலாம் – பார்த்திரா புதுக்களம்… படித்திரா புதுப் பாணி ! ஒரு கிழவியும், ஒரு புள்ளைத்தாச்சி நாயும் 96 பக்கங்களுக்கு நம்மைக் கட்டுண்டு செய்ய  மடியுமென்று நிரூபித்த கதை!

- கால வேட்டையர் – மெதுமெதுவாய் Sci-fi பக்கமாய் அடிவைத்திட ஒரு முதற்படி ! காதுல கணிசமான புய்ப்பமே என்றாலும், காமிக்ஸ் உலகின் ஒரு மெகா அங்கத்தின் பக்கமாய்ப் பாராமுகமாய் நாம் இருந்திட முடியாதென்பதற்கு ஒரு சிறு நினைவூட்டல் !

- தி Lone ரேஞ்சர்             -  டிசம்பர் 2020

Looking ahead – காத்திருக்கும் சீஸன் 4-ம் ‘திக்குக்கொரு தினுசு‘ என்றே அமைந்திடவுள்ளது ! சில நேரங்களில் கதாநாயகர்கள் / நாயகிகள் / தொடர்கள் / சீரான கதைவரிசைகள் என்பதையெல்லாம் தூக்கிக் கடாசி விட்டு, சிக்கிய சிக்கிய சுவாரஸ்யங்களையெல்லாம் படிப்பதும் ஒரு ரம்யமே என்பதை நாம் சிறுகச் சிறுக உணர்ந்து வருகிறோம் ! எனது கதைத் தேர்வுகள் மட்டும் சோடை போகாது தொடர்ந்திடும் பட்சத்தில், ஆனையார் ஆண்டுக்குப் பன்னிரெண்டு தபா பிளிறும் சாத்தியங்களும் இல்லாது போகாது – maybe in the distant future !

இதோ – நடப்பு மாதத்து ஜம்போவின் அட்டைப்பட preview & உட்பக்க previews ! 



ஒரிஜினல் அட்டைப்படமே ; லேசான வர்ண மெருகூட்டலுடன் ! கதையைப் பொறுத்தவரையிலும் “தனியொருவன்” ஆல்பத்தின் மெலிதான தொடர்ச்சியாகவும் இதைப் பார்த்திடலாம் ! அதற்காக அந்தக் கதையை மறுக்கா மனப்பாடம் செய்தாக வேண்டும் என்றெல்லாம் சொல்ல மாட்டேன் ; but துவக்கப் புள்ளியைப் பற்றிய ஞாபகம் இருப்பின், இந்த இறுதி புள்ளியினைப் புரிந்திட சுலபமாகிடும் ! And மாமூலான டமால்-டுமீல் சமாச்சாரங்கள் இம்முறையுமே ஜாஸ்தி இராது ! வன்மேற்கின் ஒரு யதார்த்த முகத்தோடே தொடர் பயணிக்கிறது ! சொல்லப் போனால் அமெரிக்க வரலாறு ; அரசியல் என்றெல்லாமே கூட கதாசிரியர் தொட்டுச் செல்கிறார் ! So வழக்கமான வெஸ்டர்ன் கதை பாணிகளில் அல்லாது, இங்கே மொழிபெயர்ப்பில் நிறையவே சிரத்தை தர அவசியப்பட்டுள்ளது ! என்ன – கலரிங் செம டார்க் வண்ணங்களில் இருப்பதால், பக்கத்துக்குப் பக்கம் அமாவாசை இருட்டுக்குள் ஆளாளுக்குச் சுற்றித் திரிவது போலவே உள்ளது மட்டுமே நெருடியது ! 

தனியொருவன்” தொடர வேண்டிய ஒருவனா ? ‘அப்பாலிக்கா பார்த்துக்கலாம்‘ என சொல்லப்பட வேண்டியவனா ? என்பதை இனி நீங்களே தீர்மானித்தாக வேண்டும் folks!

And இதோ- போன வாரம் தலை மட்டும் காட்டிய க்ளிப்டனின் உட்பக்க preview :

IMAGE COMING SHORTLY 

As cartoons go – இது பக்கத்துக்குப் பக்கம் உங்களை விலா நோகச் செய்யப் போகும் கதையெல்லாம் நஹி ! மாறாக ஒரு ஜாலியான ஆக்ஷன் கதையை பிரிட்டிஷ் வாழ்க்கைமுறை சார்ந்த பகடிகளோடு, கார்ட்டூன் சித்திரங்களுடன் சொல்லிட முனையும் முயற்சியாய் இதைப் பார்த்திட்டால் no disappointments for sure ! பரபரவென படித்துக் கொண்டே போகாது, சித்திரங்களையும் கர்னலின் முகபாவனைகளையும் நிதானமாய் ரசித்துக் கொண்டே போனால் அந்நாட்களது மூத்த நகைச்சுவையாளர் திரு.பாலையா அவர்களின் ஜாடைகள் தென்படலாம் !

And இம்மாதத்தின் இதழ் # 3 – நமது ‘தல‘ சிங்கிள் ஆல்பமான “ஒரு கசையின் கதை!” போன மாதம் திகட்டத் திகட்ட 672 பக்கங்களுக்கு ரவுசு செய்திருக்கும் நம்மவருக்கு இந்தாண்டின் இறுதி slot அத்தனை பெரிதில்லை தான்! In fact 86 பக்கங்கள் மட்டுமேயான இந்தக் குட்டிப் பட்டாசு போன மாதத்து ஆயிரம்வாலாவின் முன்னே வெங்காய வெடியாகத் தோன்றக்கூடும் தான்! ஆனால் 12 மாதத் திட்டமிடலை 15 மாதங்களுக்கு நீட்டிக்க நேரிடும் போது இது போன்ற எதிர்பாரா வறட்சிகளும் தலைகாட்டக்கூடும் தான்! In fact காத்திருக்கும் 64 பக்க கலர் டெக்ஸ் தொகுப்பானது மட்டுமே, புது அட்டவணை வரையிலான டெக்ஸ் சாகஸம்! Maybe நீங்கள் MAXI லயனின் அந்தக் கடைசி ஸ்லாட்டுக்கு இரவுக்கழுகாரையே தேர்வு செய்திடும் பட்சத்தில் இடையே ஒரு quick ஜாக்பாட் அடித்திட வாய்ப்புள்ளது! Depends on எந்த மஞ்சளுக்கு ‘ஓ‘ போடவுள்ளீர்கள்!! இதோ இந்த சிங்கிள் ஆல்பத்துக்கான அட்டைப்பட முதல்பார்வை! And இது சில காலம் முன்பாகவே நமது ஓவியர் மாலையப்பன் வரைந்தது! Probably நடப்பாண்டின் ஒரே அட்டைப்படம் நம் ஆஸ்தான ஓவியரின் கைவண்ணத்தினில்!


Looking ahead, ஜனவரியின் சென்னைப் புத்தக விழா சார்ந்த தீர்மானத்தினை அரசும், BAPASI-ம் எடுத்திட்ட பின்னரே நமக்கு ஏதேனும் தெளிவு பிறக்கும்! விழா இம்முறை நடந்திட்டால்; நமக்கு ஸ்டால் கிடைத்திடும் பட்சத்தில் சென்னைக்கு நமது கேரவன் உருண்டோடி வரும்! அவ்விதம் நிகழ வாய்ப்பின்றிப் போகும் பட்சத்தில் ஜனவரியில் நமது ஆன்லைன் புத்தக விழா இருந்திடும்! And போன தபா போலவே இம்முறையும் out of the blue இதழாய், இதழ்களாய் எதையேனும் களமிறக்க முடிகிறதா ? என்று பார்த்திட வேண்டும்!

Before I sign out – இரத்தப் படலம் வண்ண முன்பதிவுகள் சார்ந்ததொரு quick note ! "157" என்ற நம்பரில் புக்கிங்குகள் நிலை கொண்டிருக்க, ஏப்ரல் 2021 & மே 2021 என்ற 60 நாட்களது slot மட்டுமே மேற்கொண்டான புக்கிங்களுக்கு அவகாசமாய்த் தந்திடவுள்ளோம் ! And எண்ணிக்கை 250-ஐ தொட்ட கணமே பணிகளைத் துவக்குவதாகவுள்ளோம் – மீதம் 50+ புக்கிங்குகள் எப்படியும் தேறிவிடும் என்ற நம்பிக்கையினில் ! So ஈரோடு 2021 நடைமுறையாகிடும் பட்சத்திலும் சரி, நிகழாது போனாலும் சரி - ஆகஸ்ட் 2021-ல்  இந்த மறுக்கா-மறுக்கா-மறுக்கா மெகா இதழ் வெளிவந்திடும் ! இதுவே திட்டமிடல் ! And மே 31 2021க்குள் வண்டி பிக்கப்பே ஆகவில்லையெனில் ஜுன் முதல் தேதிக்கு அவரவரது முன்பணங்கள் வாபஸ் செய்திடப்படும் - முழுமையாய் ! There will be no further time extensions at all !! 

இதற்கிடையே அவ்வப்போது ‘எனக்கு 6 மாசம்லாம் காத்திருக்கப் பொறுமை லேது ; பணத்தைத் திருப்பியனுப்புங்க !‘ என்ற ஓரிரு கோரிக்கைகள் வராமல் இல்லை ! So ஏதேனும் காரணங்களின் பொருட்டு இந்த முன்பதிவுகளிலிருந்து நீங்கள் பின்வாங்கிட விரும்பிடும் பட்சத்தில் – your last date to do that will be December 15, 2020 ! இந்தத் தேதிக்குப் பின்பாய் வாபஸ் கோரிக்கைகள் வரவேற்கப்பட மாட்டாது என்பதைத் தெளிவாக்கிடுகிறேன் folks ! இது பணம் சார்ந்த விஷயமாக மட்டுமே இருந்திடும் பட்சத்தில் 157 பேருமே நாளையே காசைத் திரும்பக் கேட்டாலும், அந்தக் கோரிக்கையின் மசி உலரும் முன்னமே பைசா சுத்தமாய் திரும்ப ஒப்படைக்கும் ஏற்பாடுகள் ரெடியே ! ஆனால் இந்தத் திட்டமிடலின் எதிர்காலமே உங்கள் ஒவ்வொரு புக்கிங்குகள் என்ற செங்கல்களின் மீது அமர்ந்திருப்பதால் இடையிடையே செங்கல்களை உருவிட அனுமதித்தால் கட்டிய மொத்தமும் சரிந்தது தான் பலனாகிடும்! So back out செய்ய நினைத்திடும் பட்சத்தினில் டிசம்பர் 15க்கு முன்பே செய்திட்டால் – தயாராகியிருக்கும் கட்டுமானத்தின் பலத்தை நானும், நீங்களும் சரியாய்க் கணித்த புண்ணியம் கிட்டும்! So டிசம்பர் 15-க்குப் பின்பாய் இது குறித்து நம்மவர்களிடம் குரலை உசத்திட வேண்டாமே ப்ளீஸ் !

And while on the topic of இரத்தப் படலம் - இந்தப் புது ஆல்பங்களுடனான இரண்டாம் சுற்று இன்னும் எத்தனை தொலைவுக்கு நீண்டிடும் ? எப்போது நிறைவு கண்டிடும் ? என்ற தகவல்களும் படைப்பாளிகளிடமிருந்து கிட்டியுள்ளன ! சுவாரஸ்யமான அதனை வாகான நேரத்தில் பகிர்ந்திடுவேன் folks !

ஒரு கத்தை தோர்கல் பக்கங்கள் எடிட்டிங்கோசரம் காத்திருப்பதால் அடியேன் அங்கு நகர்கிறேன் folks ! இந்த வாரத்தினில் டெஸ்பாட்ச் இருக்குமென்பதால், அடுத்த ஞாயிறின் பதிவுப் படலத்தை உங்கள் முதற்பார்வைகள் ; நடுப்பார்வைகள் ; சைடுப் பார்வைகள் என ஏதோவொன்றால் நகர்த்திடுவோம் ! So கொஞ்சமாய் நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுங்களேன் - please ! Bye for now ! See you around !

Saturday, November 28, 2020

படைத்தவருக்கும்....நம்மைப் படித்தவர்களுக்கும் ...!!

 நண்பர்களே,

வணக்கம். நிறைய விஷயங்களைப் பகிர்ந்து ஒரு பெரிய பதிவை உருவாக்கலாம் தான் – இத்தனை நாட்களாய் நான் செய்து வந்ததைப் போல ; God willing தொடரும் நாட்களிலும் நான் செய்யப் போவதைப் போல ! அதே சமயம் பெரிய விஷயங்களைச் சுருக்கமாய்ப் பகிர்ந்துமே நிறைவானதொரு பதிவை உருவாக்க முடியுமா ? முடியும் என்பேன் ! Read on please...!!

ரொம்பச் சமீபத்தில் எனக்கொரு வாட்சப் சேதி :

ஸ்பைடரின் “சர்ப்பத்தின் சவால்” புக்கில் நண்பர் JSK-க்கு நீங்கள் எழுதியிருந்த tribute--ஐப் படித்த கையோடு இதை எழுதத் தோன்றுகிறது !” என்று ஆரம்பித்தது அந்த மெசேஜ் ! 

ரொம்பவே பரிச்சயமான நண்பரே எனும் போது - ‘அட... என்ன சொல்ல வருகிறாரோ?‘ என்று அறியும் ஆவலில் தொடர்ந்து படித்தேன் ! 

மறைந்த நண்பருக்கென ஒரு ஸ்பெஷல் இதழ் போட்டிருப்பது பிரமாதம் ; ஆனால் அவரது குடும்பத்துக்கென ஏதேனும் செய்திட சாத்தியப்பட்டுள்ளதா ?" என்று நண்பர் வினவினார் ! 

சின்னதொரு தயக்கத்துக்குப் பின்னே- "பெரிதாய் எதுவும் நடைமுறை கண்டிருக்கவில்லை சார் ! ஏற்கனவே JSK-ன் மருத்துவ சிகிச்சைக்கென நண்பர்கள் இயன்ற சிறு பங்கினை செய்திருக்கும் நிலையில், அவர்களை மேற்கொண்டும் சங்கடப்படுத்த நான் விழையவில்லை!” என்றேன்!

அதுவும் சரி தான்; இந்தக் கொரோனோ காலத்தில் யாரது நிலவரமும் சொல்லிக் கொள்ளும் விதமாய் இருக்கலை தான் ! என்று நண்பரின் பதில் வந்தது !

ஆமாம் சார் ! மேலோட்டமாய் இது குறித்து நான் பேசி விட்டு நண்பர்களது பிரியங்களுக்கு விட்டு விட்டேன் !” என்றேன் !

இழப்பைச் சந்தித்திருக்கும் அந்தக் குடும்பத்துக்கு நம் காமிக்ஸ் குடும்பத்தின் சார்பாக ஏதாச்சும் செய்யணுமே சார் !” என்று தொடர்ந்தது நண்பரின் அடுத்த மெசேஜ் !

எனக்கும் அந்த அவா உள்ளது தான் சார் ! Maybe ஒரு வாகான சந்தர்ப்பத்தில் நம்மிடமிருக்கக்கூடிய ஒருசில அட்டைப்பட பெயிண்டிங்குகள் ; முந்தைய artwork போன்றவற்றை நம்மவர்கள் மத்தியில் ஒரு ஏலம் போல நடத்தி, அதனில் கிடைக்கும் தொகைகளையும், நமது பங்களிப்பையும் இணைத்து நண்பரின் குடும்பத்துக்குத் தரலாமா ? என்ற ரீதியில் எண்ணமுள்ளது சார்!” என்றேன்!

”போச்சு போங்க – நீங்களும் கடைவிரிச்சு விற்க ஆரம்பிச்சாசா...? நாங்க விற்றா குற்றம்... நீங்க வித்தா மதர் தெரசாவா..? ன்னு  அதுக்கும் உங்களைத் துவைத்து தொங்க விடுவாங்க சார் ! வேண்டாமே அந்த எண்ணம் !” என்றார் !

அட... நம்மளைத் துவைப்பதுலாம் துவையல் அரைக்கிறதை விடச் சுளுவாச்சே சார்...?! தவிர நான் விற்கலாம் என்று நினைப்பவையுமே அட்டைப்படங்கள் ; ஆர்ட்வொர்க் என collector’s value கொண்டவை மாத்திரம் தானே ? அதில் பெருசாய் என்ன சர்ச்சை நேரக்கூடும் ?” என்றேன் !

"வேண்டாம் சார்! ஒரு நல்ல காரியத்துக்கு எதையேனும் செய்யப் போய் அதுவுமே விவாதப் பொருளாகிட வேண்டாமே ! மாறாக – ஏதேனும் ஒத்தாசை செய்திட ஆண்டவன் அருளால் நல்ல நிலையில் உள்ள மிகச் சிறிய வட்டத்திடம் நானே கேட்டுப் பார்க்கட்டுமா ? இந்த ”சர்ப்பத்தின் சவால்” புக்கின் மூலமாய் உங்களுக்குக் கிடைக்கக்கூடிய லாபத்தை உங்கள் பங்களிப்பாக வைத்துக் கொள்ளலாம் ; நான் உட்பட இன்னும் இருவர் – ஆக மொத்தம் 3 வாசகர்கள் அதே அளவுத் தொகையினை அவரவரது பங்களிப்பாகச் செய்திடுகிறோம் ! ஆக 4 பங்குத் தொகையினையும்  லயனின் அன்புடன் JSK-ன் குடும்பத்துக்கு வழங்கிடலாமே சார் ?! என்ற மெசேஜைப் படித்த போது எனக்கு விக்கித்துப் போனது !

“இல்லை சார்! யாரையும் தர்மசங்கடத்தில் ஆழ்த்திட வேண்டாமே... ஏற்கனவே சிரமத்திலுள்ள நண்பர்களின் சந்தாக்களுக்கு ; ”கழுகு வேட்டை” விலையில்லா இதழுக்கென ஏகமாய் தயாள முகங்களைக் காட்டியுள்ள நிலையில் மேற்கொண்டும் சிரமப்படுத்த வேண்டாமே ?!” என்றேன்!

அப்படியில்லை சார்; நான் மனதில் வைத்திருக்கும் இருவருமே துளி கூடத் தயக்கமின்றி உதவத் தயாராக இருப்பார்கள் ! இழப்பின் வலியானது முதல் ஆண்டில் தான் ரொம்பவே ரணமாய்ப் படுத்திடும் அந்தக் குடும்பத்தை ! இந்தச் சமயத்தில் ஏதேனும் உதவிட முடிந்தால் அது அவர்களுக்கு ஏதேனுமொரு விதத்தினில் பிரயோஜனப்படக்கூடும் !” என்றார் ! 

தொடர்ந்த சேதிப் பரிமாற்றத்தில் தொகைகள் ; யார்-யாரிடமிருந்து ஒத்தாசை கோரிடவுள்ளார் ? எப்போது பணம் அனுப்புவது ? என்ற தகவல்கள் பரிமாறிடப்பட்டன !

And இது நடந்து ஒரு வாரம் பின்பாய் – இந்த புதனன்று மீண்டும் வாட்சப் சேதி ! ”சார்... மூவரது பங்களிப்பும் உங்கள் அக்கவுண்டில் சேர்ப்பித்தாயிற்று !!” என்று ! 

ஏற்கனவே வங்கியிலிருந்து வந்திருந்த குறுந்தகவலும் அதை ஊர்ஜிதப்படுத்தியிருக்க – கரம் கூப்பும் படங்களை அனுப்பி வைப்பதைத் தாண்டி வேறெதுவும் செய்யத் தோன்றவில்லை !

அப்புறம் ஒரு சின்ன வேண்டுகோள் சார் ! தயவு செய்து மூவரது பெயர்களையும் வெளியிட வேண்டாம் ! இது லயனின் ஒத்தாசையாகவே களம் காணட்டும் !” என்று...!

மறுபடியும் தொண்டை அடைத்தது எனக்கு !! ”சார்... தெருமுனையில் ஒரு கேன் கபசுரக்குடிநீர் தருவோரே 40 அடி உசரத்துக்கு பேனர் வைக்கும் நாட்களிவை ! இந்த வேளைகளில், அனாமதேயர்களாய் நீங்கள் தொடர்ந்திட விரும்புவது வேண்டாமே ?! இந்த அன்புகள் அங்கீகாரம் காண வேண்டுமே !” என்றேன் !

நொடியும் தாமதமின்றி வந்த பதில் இது தான் : 

Lion is a family sir !!

சுருக்கமாய் கிட்டிய நண்பரது பதில் என்னைச் சாய்த்து விட்டது ! 

உடன்பிறந்தோருக்குச் செய்யவே கணக்குப் பார்க்கும் உலகமிது...! நம் குடும்பம்... நம் பிள்ளைகள்... நம் வட்டம் ! என சகலமுமே ஒரு சிறு வளையத்தினுள் அடங்கிப் போயிருப்பது யதார்த்தம் ! And இதன் பொருட்டு சத்தியமாய் யாரையும் குறை சொல்வதில் அர்த்தமும் கிடையாது என்பதை இந்தப் பேரிடர் காலமும் உணர்த்தியுள்ளது ! ஒற்றை வைரஸின் வருகையால் தடம்புரண்ட தொழில்கள் ; உத்தியோகங்கள் ; பிழைப்புகள் தான் எத்தனை – எத்தனை ? என்பதை நாம் தான் நித்தமும் பார்த்து வருகிறோமே ?! So ‘தனக்குப் போகவே தர்மம்‘ என்பது ஒரு எழுதப்படா விதியாகிவிட்டிருக்கும் இந்தக் காலகட்டத்தினில் – ஒரு பொம்மை புக் மீதும், அதன் குறுகிய வாசக வட்டத்தின் மீதும் இத்தனை நேசமும், அபிமானமும் கொண்டிட சாத்தியப்படுகிறதெனில் அதனை விளக்கிட வார்த்தைகள் பற்ற மாட்டேன்கின்றன ! And to top it all இப்போது உதவியுள்ள 3 நண்பர்களுக்கும் நண்பர் JSK உடன் நேரடிப் பரிச்சயம் இருந்திருக்க வாய்ப்புகள் ரொம்ப ரொம்ப சொற்பம் ! Makes it all the more awesome !!

இந்தக் காமிக்ஸ் பயணத்தை ஒருங்கிணைக்கும் பொறுப்பிலிருக்கும் எனக்கு, “காமிக்ஸ் குடும்பம்” ; ”வாசகக் குடும்பம்” என்ற பதங்களைப் பயன்படுத்துவது பழகிப் போனதொரு சமாச்சாரமே ! ஆனால் – அதனை மெய்ப்பிக்கும் இத்தகைய தருணங்கள் இந்த ஒட்டுமொத்தப் பயணத்துக்குமே ஒரு புது அர்த்தத்தை வழங்குகின்றன ! ஒரு பேரிடரின் மத்தியிலும் ; மழையும் ; புயலும் வதைக்கும் நாட்களிலும் கூட, வாழ்க்கை தனது சந்தோஷப் பரிமாணத்தைக் காட்டுவது ஆண்டவனின் அசாத்தியத் திட்டமிடல்களை yet again புரியச் செய்கிறது ! கரம் கூப்புகிறேன் - படைத்தவருக்கும் ; நம் முயற்சிகளைப் படிப்பவர்களுக்கும் !

நிதியாய் உதவிடும் சூழலில் இல்லாத நமது இதர நண்பர்களுமே இந்தச் சந்தோஷங்களின் ஒரு இன்றியமையாப் பங்கென்பதில் எனக்குக் கிஞ்சித்தும் சந்தேகங்களில்லை ! ஒவ்வொரு ஓவியத்திலும், ஒவ்வொரு வர்ணமும் சமஅளவில் முக்கியம் தானே guys ? நீங்கள் ஒவ்வொருவரும் இணைந்திடும் போது தானே "லயன்" எனும் கோலம் பூர்த்தி காண்கிறது ?!! So உங்கள் ஒவ்வொருவரின் சார்பிலும் modest ஆன அந்தத் தொகையினை நண்பர் JSK–ன் குடும்பத்துக்கு வரும் புதனன்று  அனுப்பிடவுள்ளோம் – ஏதோ ஒரு சிறு விதத்தில் அது அவர்களுக்கு உதவிடக்கூடுமென்ற நம்பிக்கையில் ! நண்பர் கரூர் குணா – விபரங்களை ஈ-மெயிலில் அனுப்பிடுங்கள் ப்ளீஸ் !

So முன்னோட்டங்கள்; பின்னோட்டங்கள்; சைடு ஓட்டங்கள் என்ற எந்தச் சமாச்சாரமுமில்லாத ஒரு பதிவை நிறைவுக்குக் கொணர்வதில் முதன்முறையாய் முழு நிறைவு எனக்குள் !

‘இதுவும் கடந்து போகும்...!‘ என்பது நாமெல்லாம் உணர்ந்துள்ள வேதவரிகள் ! ஆனால் கடப்பது துயர்களாக மட்டும் இருந்திடும் ; மனிதமாக ஒருபோதும் இருந்திடாது என்பதை நிலைநாட்டிய அன்புகளுக்கு சிரம் தாழ்த்திடுகிறேன் !

Bye all... See you around !

ஆங்...அப்புறம் பதிவோடு ஏதாச்சும் படம் வந்திட வேண்டுமல்லவா ? Surprise entry தரவிருக்கும் நமது கேரட் மீசைக்காரரின் அட்டைப்பட preview இதோ !