Friday, April 24, 2020

அத்திந்தோம்....!!

நண்பர்களே,

வணக்கம். இதோ ஜட்ஜ் 'J ' அவர்களின் தீர்ப்பு !!

------------------------------------------------------------------------------------------------------------

முதல் பரிசு:

செல்வம் அபிராமி மற்றும் பார்த்தீபன் பகிர்ந்து கொள்கிறார்கள்.

இரண்டாம் பரிசு

பத்மநாபன்.

மூன்றாம் பரிசு: அனு மற்றும் குமார் சேலம் பகிர்ந்து கொள்கின்றனர்.

ஐவருக்கும் வாழ்த்துக்கள்.

எதிர்வரும் ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஐவருக்கும் எம் சார்பில் பரிசளிக்க உள்ளோம் என்பதை பணிவோடு சமர்ப்பிக்கின்றேன்.

J
------------------------------------------------------------------------------------------------------------

போகிற போக்கில் அரசவையில் நம்ம வித்வான்கள் அனைவரையும் அமரச் செய்யவே ஒரு புது மண்டபம் கட்ட வேண்டி வரும் போலும் !! அப்புறம் ஒவ்வொரு தீர்ப்பின் போதும், நமது ஜட்ஜமார்கள் காட்டி வரும் பரோபகாரமும் மிரளச் செய்கிறது !!  நன்றிகள் J சார் ; நன்றிகள் முந்தைய ஜட்ஜ் சார்ஸ் !! 

ரைட்டு...பாட்டெழுதப் புலவர்கள் ரெடி ; கவி பாட ஒரு க்ரூப் ரெடி ; இனி அடுத்து டான்ஸ் போட்டி ஒண்ணை போட்டு விட வேண்டியது தானோ ? '' So பயிற்சியை ஆரம்பிக்கிறீர்களா கலைஞர்களே ? அத்திந்தோம்....!! Open Kangnam style !!!

Bye all for now !!
ஏ.இ.பி.கு.

அப்புறம் டான்ஸுக்கும் தோழிமார்  இருந்தாக்கா முன்கூட்டியே கம்பெனிட்டே சொல்லி பெர்மிஷன் வாங்கிக்கணும் அப்பு ! திடு திடுப்புன்னு வீடியோ -கீடியோ அனுப்பி சில பல பிஞ்சு மனசுகளை இங்கே பஞ்சர் ஆக்கிடப்படாது !! 

Monday, April 20, 2020

லாக்டவுன் உ.ப.

நண்பர்களே,

வணக்கம். இன்றைக்கு நம்முள் எத்தனை பேர் பணிக்குத் திரும்பியுள்ளனரோ, தெரியலை - ஆனால் நாலே ஆட்களைக்கொண்டு பணியாற்ற முயன்ற நமது பைண்டிங் பிரிவினைப் பூட்டச் சொல்லி அதிகாரிகள் வலியுறுத்திவிட்டதால், இக்கட no பணி ! இன்னொரு 2 வாரங்களுக்கேனும்  வரிசையில் நின்று ரவுண்ட் பன்னை வாங்கும் போட்டிகளில் தான் பொழுதைக் கழித்தாக வேண்டும் போலும் ! நாட்களை நகர்த்துவது பெரும் பிரயத்தனமாய் இருக்கும் இந்த வேளையினில், ஆங்காங்கே நிறையவே பதிவுகளை பார்க்க முடிந்தது - காமிக்ஸ் வாசிப்பென்பது மெய்யானதொரு stress-buster ஆக உதவிடுவதாய் ! நமது தீவிர காமிக்ஸ் வாசகரும், முத்து நகரின் ஒரு மெகா தொழிலதிபருமானதொரு நெருங்கிய உறவினர் நேற்றைக்கு எனக்கு வாட்சப்பில் அனுப்பிய குறுந்தகவல் இது : 

"Annachi, I must have read at least 50 comics including Rathap Padalam in the lockdown. I have not read a single book otherwise ; no Sashi Tharoor ; no Bill Bryson ; no Frederick Forsyth. Thank you for keeping us us sane in this crazy time !"

ஆங்காங்கே FB -ல் ; வாட்சப் குழுக்களில் எதிரொலிக்கும் இது போன்ற பதிவுகளையும் சில நண்பர்கள் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பியிருக்க - இந்த இருண்ட நாட்களிலும் ஒரு வெள்ளிக்கீற்றை இனம் காண முடிந்த சன்னமான மகிழ்ச்சி உள்ளுக்குள் ! "இவை என்றென்றும் சாஸ்வதமான சமாச்சாரங்களே ; என்றைக்கும் படிக்கவல்ல களங்களே"  - என்று நாம் அடிக்கடி  டமாரம் அடித்து வந்தாலுமே, நானே அதையெல்லாம்  - "உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக "  ரக விளம்பர யுக்திகளாகவே தான் பார்த்திடுவதுண்டு ! Yes of course - சில எவர்க்ரீன் கதைகளை நீங்கள் முச்சூடும் படிப்பதுண்டு என்பதில் ரகசியங்கள் இல்லை தான் ; ஆனால் இயந்திரகதியிலான நமது வாழ்க்கை ஓட்டங்களின் மத்தியில், வாசிப்புக்கென நேரம் ஒதுக்குவதே குதிரைக்கொம்பு ; இந்த அழகில், மீள்வாசிப்புக்கெல்லாம்  யாரிடம் இருக்கப் போகிறது நேரம் ? என்ற எண்ணமே மேலோங்கும் ! But lo behold - இதோ இந்த லாக்டௌன் நாட்கள் காமிக்ஸின் நிரந்தரத்தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டி வருவதை மகிழ்வோடு பார்த்திடும் போது, நமது காமிக்ஸ் தான் என்றில்லை - பொதுவாய் எந்தவொரு  'பொம்மை புக்' பரிச்சயமும்  இல்லாதோர் மீது அனுதாபமே தோன்றுகிறது ! எத்தனை ரம்யங்களை அவர்கள் நுகர்ந்திட இயலாதே போகிறது ? 

ரைட்டு....இந்த உ.ப.வின் முதல் கேள்வியானது : இந்த லாக் டௌன் நாட்களில் - ஜாலியான அரட்டை ; கும்மி, என்பதைத் தாண்டி, காமிக்ஸ் வாசிப்புக்கென உங்களுள் எத்தனை பேருக்கு நேரம் ஒதுக்க முடிந்துள்ளது guys ? இது சும்மா டைம்-பாஸ் கேள்வியே ; ஆகையால் பீலாக்களுக்கு அவசியமிராது ! Yes ; படித்தீர்களெனில் -

அதனுள் கார்ட்டூன்களுக்கு இருந்த இடம் கூடுதலா : கம்மியா ? 

அதிகாரிக்கென ஒதுக்கிய வாசிப்பு நேரம் கம்மியா ? கூடுதலா ?

என்னிடம் இன்னொரு கேள்வியுமே உண்டு :

இங்கு குழுமிடும் நீங்கள் சகலருமே காமிக்ஸ் ஆர்வலர்கள் ; 'பொம்ம புக் புரவலர்கள்' என்பதில் no doubts !! உங்கள் இல்லங்களில் ; உங்கள் நட்பு வட்டங்கள் மத்தியினில் உங்களது இந்த வாசிப்புப் பழக்கத்தை எவ்விதம் பார்த்திடுகிறார்களோ ? மாசா மாசம் கூரியரில் 'கொயந்த புள்ளே பொஸ்தவம்' வந்து சேரும் போது ; வாரயிறுதிகளின் ராப்பொழுதுகளில், பின்னூட்டமிட 'புளியாம்..புளியாம்' என்று போன் பொத்தான்களை அமுக்கிக் கிடக்கும் போது ; புத்தகவிழா நேரங்களில், ஈரோட்டு வாசக சந்திப்புத் தருணங்களில், மூட்டைகளைக் கட்டிக்கொண்டு 'ஜாலிலோ ஜிம்கானா' என்று நீங்கள் டாட்டா சொல்லிவிட்டுக் கிளம்பிட எத்தனிக்கும் போதெல்லாம் வீட்டில் கிட்டுவது என்னவாக இருக்கும் ?

Option A : கலாமிட்டி ஜேனின் #@*%&(@ பாணியில் 'அன்பான' குசல விசாரிப்புகள்  ?

Option B : " நான் ஒரேயொரு காக்ரா-சோளி கேட்டா அதுக்கு நொள்ளைன்னுட்டு இங்கே காசைக் கரியாக்க என்ன வேலைலாம் பாக்குது பாரேன் ?" என்ற முணுமுணுப்புஸ் ?

Option : C : 'இது பூட்ட கேஸ் ; என்னமோ பண்ணித் தொலைச்சுக்கட்டும் !'

Option D : "ஹை...புக் வந்துருச்சா ? வந்துருச்சா ? எனக்கு ஒண்ணு ?"


Option E : ச்சை...எனக்கு புக்கே பிடிக்காது ! 

தகிரியமாய்  நிஜமான பதில்கள் ப்ளீஸ் ?

Before I sign out - FB-ல் கண்ணில்பட்டதென தம்பி செந்தில் சத்யா அனுப்பியிருந்ததை இங்கே பகிர்ந்திடுகிறேனே :

Bye all...see you around !! Stay Home & Stay Safe !!

ஏ.பி.கு. (ஏக்கம்லாம் இல்லாத பின்குறிப்பு) 

போன பதிவில் தந்திருந்த அந்த 'இங்கிலீஷ் கவிதை' மொழிபெயர்ப்புப் போட்டிக்கு வியாழன் வரை டைம் உண்டு ! அது வரையிலும் முயற்சிக்கும் நண்பர்களின் ஆக்கங்களை ஜட்ஜ்  செய்திடாய் போகிறவரை, வியாழன் காலையில் நான் உங்களுக்கு அறிமுகம் செய்திடுவேன் !

அப்புறம் இனி வரும் இந்த லாக்டௌன் நாட்களின் ஒவ்வொரு பதிவிலும் ஜாலியாய் ஏதேனுமொரு backissue பற்றிய மீள்பார்வைகளை நடத்திடலாமா guys ? பொழுது போனது போலவும் இருக்கும் ; பழைய நினைவுகளை அசைபோட்டது போலவும் இருக்கும் ; அந்த இதழ்கள் வெளியான நாட்களில் இங்கே நம் வலைப்பதிவில் அரங்கேறிய லூட்டிகளை revisit செய்தது போலவும் இருக்கும் அல்லவா ? Hot & Cool ஸ்பெஷல் இதழ் நினைவுள்ளதா guys ? அதனிலிருந்து ஆரம்பிப்போமா அடுத்த பதிவு முதலாய் ? உங்களிடம் அந்த புக் இருக்கும் பட்சத்தில், தூசி தட்டி எடுத்து அதை இஷ்டைலாய் கையில் ஏந்தியபடிக்கு ஒரு selfie அனுப்புங்களேன் - அவற்றை post செய்த கையோடு அந்த இதழை மறுக்கா அலசிடலாம் !  

Saturday, April 18, 2020

ஜெய் பாகுபலி !!

நண்பர்களே,

வணக்கம். குகைப் பாதைக்குள் தவண்டு செல்லும் ரயிலுக்கு, தொலைவினில் லேசாய் வெளிச்சக் கீற்று தென்படுவதால்  - இருட்குகைக்கொரு முடிவுரை சீக்கிரமே கண்ணில்படுமென்ற நம்பிக்கை பிறக்கிறது ! Yup ...இந்தப் பதிவை டைப்படிக்கும் வேளையினில் தமிழகத்தினுள்ளே கொரோனா பாதிப்புகளின் வேகம் சற்றே மட்டுப்பட்டுத் தென்படுகிறது !  அதன் பலனாய்,  வரும் 20-ம் தேதி முதலாய், பாதி ஆட்பலத்துடன், பஞ்சாயத்துப் பகுதிகளில் உள்ள தொழில் கூடங்கள் செயல்படலாம் என்பதால் - ஊருக்கு வெளியிலுள்ள நமது பைண்டிங் அலுவலகம் திங்கட்கிழமையிலிருந்து இயங்கத் துவங்குமென்ற நம்பிக்கை உள்ளது ! இன்னமும் 1 புக் அச்சிடும் பணிகள் பாக்கியுள்ளது  & in any case டெஸ்பாட்ச்சின் பொருட்டு நாம் ஆபீஸைத் திறப்பதற்கும் அனுமதி கிடையாதென்பதால், ஏப்ரலின் இதழ்களை இந்த ஊரடங்கு நீட்டிப்பின் முடிவுரையின் நொடியினில் உங்களிடம் ஒப்படைத்து விடலாமென்று தோன்றுகிறது !! கடந்த 8 ஆண்டுகளாய், அடித்துப் பிடித்து, தாமதப் பேயைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும் வாடிக்கையை கற்று வந்திருந்தோம் ! நாமெல்லாம் ஓவர் நல்ல பிள்ளைகள் ஆவதெல்லாம் இயற்கைக்கே கொஞ்சம் டூ டூ மச்சாய்த் தோன்றியது போலும் ; 'சித்தே ஓய்வெடுங்கோ மக்கா !' என அமரச் செய்து விட்டுள்ளது ! எல்லாம் அவர் செயல் எனும் போது go with the flow என்பதே நமக்கிருக்கும் மார்க்கம் !

எது எப்படியோ - கிட்டத்தட்ட மூன்றரை வாரங்களாக தின்ன ; தூங்க ; நெட்டை நோண்ட ; மறுக்கா தூங்க ; நெட்டை நோண்ட ; தின்ன என்று நாட்களைக் கடத்திய பிற்பாடு, பணிகளுக்குள் திங்கள் முதலாய் முனைப்போடு புகுந்திட எண்ணியுள்ளேன் ! துவக்க வாரத்தில் "ஒற்றை நொடி..ஒன்பது தோட்டா" மொழியாக்கம் உச்சஸ்தாயியில் ஓடியது என்னவோ நிஜம் தான் ! இந்த ஆல்பத்தின் மொழியாக்கம் ஒரு செம சுவாரஸ்யச்சவாலாய் முன்னின்றதன் பலனாய், கவிஞர் பாணபத்திரரின் பின்னூட்ட  வேகத்தில் முதல் 3 பாகங்களின் பணிகள் பிய்த்துப் பிடுங்கிச் சென்றன ! ஆனால் ஒருவித அசாதாரண சூழல் உலகெங்கும் நிலவும் நிலையில், குன்றா முனைப்போடு வேலைகளுக்குள் கவனம் செலுத்த இயலாதே போயிற்று ! பற்றாக்குறைக்கு நகராட்சியினர் ஒரு நாள் காலையில் வீட்டுக் கதவைத் தட்டி, "இக்கட வைரம் ஆனந்த் விஜயன் யாரு சார் ?" என்று கேட்க, அப்படி யாரும் இல்லியே சார் இங்கே" என்றேன் ! ஆனால் "விலாசம் இது தானென்று" உடன் வந்திருந்த நகராட்சி சுகாதார இன்ஸ்பெக்டர் சொல்ல, "விக்ரம் அரவிந்த் விஜயன் என்று தான் என் பையன் இருக்கிறான்  !" என்று சொன்னேன் ! "அவர் எங்கேயும் இப்போதைக்கு பாரின் போயிட்டு வந்திருக்காரா  ?" என்று கேட்டார்கள் !  "ஆமாம் சார் , பிப்ரவரி பத்தாம் தேதிவாக்கிலே ஐரோப்பா போயிட்டு வந்திருந்தான் !" என்று சொன்னேன் ! அப்புறம் பேசியதில் தான் தெரிய வந்தது - பிப்ரவரி 14-ம் தேதிக்கு இத்தாலியிலிருந்து டில்லி வழியாக ஜூனியர் ஊர் திரும்பியிருந்த தகவல், பிழையாய்  மார்ச் 14 என்று உள்ளூர் அதிகாரிகளிடம் பதிவாகியிருந்த சமாச்சாரம் ! "இதோ பாருங்க சார் தேதிகளை ! விசாவே மார்ச் 8 க்கு முடிந்துள்ளது ; இதில் எப்புடி மார்ச் 14-க்கு அவன் திரும்பியிருக்க முடியுமென்று" விளக்கம் சொல்ல முயன்ற போதிலும்  - "சாரி சார்...எங்களுக்கு வந்த தகவலின்படி home quarantine உங்களுக்கு " என்று சொல்லி, வாசலில் ஸ்டிக்கரை ஒட்டியும் விட்டார்கள் ! தேசத்துக்கே ஊரடங்கு என்பது சீக்கிரமே அறிவிக்கப்பட்ட நிலையில், ஸ்டிக்கர் இல்லாவிடினும் நாங்கள் எங்கேயும் போயிருக்க வாய்ப்பில்லை தான் ; இருந்தாலும், வாசலிலிருந்த ஸ்டிக்கர் நெருடலாகவே இருக்க, வேலைகளுக்குள் முழு மனசாய்ப் புகுந்திட இயலவில்லை ! பற்றாக்குறைக்கு தினத்துக்கும் கிரிக்கெட் ஸ்கோர் போல ஏறி வந்த தேசத்தின் / மாநிலத்தின் பாதிப்பு எண்ணிக்கையுமே புளியைக் கரைக்க, "வேலைகளை நேரம் வர்றச்சே பாத்துக்கலாம் !" என்று மண்டைக்குள் தோன்றியது ! So அதன் தொடர்ச்சியாய் இங்கே நமது வலைப்பதிவிலும் ஊர்க்கதை ; உலகக்கதை என்ற ஏதேதோ அரட்டைகள் சூடு பிடித்ததைத் தொடர்ந்து, இந்தக் கும்மிகளில் பங்கேற்பதிலேயே எனது பொழுதுகள் கரைந்து விட்டன !

நாட்களின் ஓட்டத்தோடு, ஏதோவொரு விடுமுறையில் இருப்பது போலாய் Eat..Sleep..Repeat என்ற வாடிக்கையே தொடர, அவ்வப்போது தொழிலின் எதிர்காலம் சார்ந்த கவலைகள் தலைதூக்கும் போதெல்லாம், அவற்றை மறக்க எதையேனும் வாய்க்குள் போட்டு ரைஸ் மில்லாய் அரைக்கத் துவங்கும் வழக்கம் தொற்றிக் கொண்டது ! எண்ணற்ற கடலை மிட்டாய்கள் ; ரவுண்டு பன்கள் ; வாழைப்பழங்கள் ; கேரட்கள் உள்ளுக்குள் போய் தொந்தியை சமன் செய்தது நிகழ்ந்திட, அதன் பலனாய் தற்காலிகமாய் உறக்கமும், அதன் பலனாய் பிடுங்கல் பற்றிய சிந்தனைகளிலிருந்து விடுதலையும் கிட்டியதென்னவோ நிஜமே ! ஆனால் காத்திருக்கும் 2 வாரங்களுக்குப் பின்னான திங்கட்கிழமை முதலாய், எத்தினி நொறுக்குத்தீனிகளை நொங்கியெடுத்தாலும் - no running away from reality என்பது புரிகிறது !  தொடர்ந்திடும் இந்த 40 நாள் முடக்கம் ஒட்டுமொத்தமாய் தேசத்தை ; லோகத்தை எத்தனை உலுக்கி எடுத்துள்ளதென்பது ஊருக்கே தெரியும் ! ஒவ்வொரு துறையினரிடமும் பேசும் போதெல்லாம் முந்திக் கொண்டு அவர்கள் வைக்கும்  ஒப்பாரிகளில் ; புலம்பல்களில், காய்ந்து போகும் கபாலமானது, நாம் சொல்ல வந்ததையே மறந்து விடுகிறது ! So மறுபடியும் சீட்டில் அமர்ந்து பணிகளைத் துவக்கிட முற்படும் போது தான் இந்த இக்கட்டின் நிஜப் பரிமாணமும் புரிந்திடும் என்று தோன்றுகிறது !  71 ரூபாயாக இருந்ததொரு அமெரிக்க டாலர் தற்சமயமாய் ரூ.77-ஐ தொட்டுப் பிடிக்க 'தம்' கட்டிக்கொண்டுள்ளது ! 77 ரூபாயாக இருந்த யூரோ இன்று ரூ.84 ! பேப்பர் கொள்முதலில் துவங்கி, அச்சிடும் உட்பொருட்கள் ; ராயல்டி பட்டுவாடாக்கள் என அத்தனையுமே இனி கழுத்தைச் சுற்றி எவ்விதம் இறுக்கக் காத்துள்ளன என்பதை மே 5 முதலாய் நெஞ்சைப் பிடித்துக் கொண்டே தான் கண்டுபிடித்தாக வேண்டும் ! அப்புறம் காத்திருப்பதோ -  ஏஜெண்ட்களிடம் முன்பாக்கிகளை வசூல் செய்திட முற்படும் "செருப்புத் தேய்க்கும் படலங்கள்" ! இந்தப் பிரளயத்துக்குப் பின்னே எத்தனை பேர் தொழிலில் எஞ்சியிருக்கப் போகின்றனர் ? எஞ்சிடுவோரில் கடன்களை பைசல் செய்யும் சூழலில் எத்தனை பேர் இருக்கப் போகின்றனர் ?  அவர்கள் நல்லெண்ணங்களோடு இருந்தாலுமே இந்தப் பணமுடை காலத்திலிருந்து விடுபட்டு, கொஞ்சமாய்ப் பணம் புரட்டியனுப்ப அவர்களுக்கு எத்தினி நாழி ஆகிடுமோ ? என்பதெல்லாம் anybody's guess ! And it's not like - "விலைவாசி ஏறிப்புடிச்சி மகா ஜனங்களே ; ஆகையால் விலை கூட்டணும் !" என்று ஒற்றை வரியை முதல்பக்க மேற்கோடியில் பதித்த கையோடு விலையேற்றிட முடியும் என்ற சூழல் இன்றைக்கு இல்லை - at least for us ! 'பொம்மை புக்' ரேஞ்சுக்கு நமது இன்றைய விலைகளே ஜாஸ்தி எனும் போது, இதற்கு மேலும் விலையினை இந்த நொடியில் உசத்தி, ஒட்டகத்தின் முதுகை முறித்த மடமையைச் செய்யத் துணிவில்லை ! So கடிப்போம் பற்களை ; தொந்திகளைச் சுற்றிக் கட்டத்  தேடுவோம்  தண்ணீரில் முக்கிய துண்டுகளை ; என்பதே இப்போதைக்கான watchwords ஆக இருந்திட முடியும் !

இதையெல்லாம் இங்கே நான் பஞ்சப்பாட்டாய்ப் பாடிடுவது உங்கள் ஜோப்பிகளை ஏதேனுமொரு ரூபத்தில் பஞ்சராக்கும் நோக்கில் அல்ல folks ! இன்றைய பொழுதில் யாரிடம் தானில்லை ஒரு பஞ்ச புராணம் ? டியூன்கள் மாறிடலாம் தான் ; சுதிகள் மாறிடக்கூடும் தான் ; ஆனால் எல்லோரது பாடல்களின் வரிகளிலும்   புதைந்திருக்கக்கூடிய வலிகளில் மட்டும் இந்த நாட்களில் பெரிதாய் மாற்றங்கள் இராதென்பேன் !   On the contrary - இந்தச் சிரமப் பகிரல்களை உங்களிடம் ஒப்பிப்பதோ - ஓரிரு கோரிக்கைகளை முன்வைக்கும் முகாந்திரங்களாய் மட்டுமே :

1 நல்ல நாளைக்கே வாசிப்பினில் "அத்தியாவசியம்" என்ற சொகுசுகளெல்லாம் கிடையாது நமக்கு ! 'பொம்ம புக் ' என்ற அடையாளமும், அதன் பலனாய் 'அப்டிக்கா ஓரமாய் போயி விளையாண்டுக்கோ கண்ணு !' என்ற உபதேசங்களுமே நமக்கான gifts ! இந்தச் சூழலில் இந்தச் சின்னஞ்சிறு வாசக வட்டம் தொடர்ந்து தோள் கொடுப்பது மாத்திரம் இல்லாது போயின் - இந்நேரத்துக்குப் பஞ்சு மிட்டாய் தான் விற்றுக் கொண்டிருந்திருப்போம் - "லயன் மார்க் முட்டாய் " என்ற லேபிலில் இஸ்பைடரையோ ; சட்டிதலையனையோ போட்டபடிக்கு ! My request at this point of time is : சந்தாக்களில் சேர்ந்திட நிதிநிலைமை இடம் கொடுக்காது போயினும் - இந்த ஊரடங்கு அத்தியாயங்கள் முற்றுப் பெற்றான பின்னே, மாதம்தோறும் ஒன்றோ / இரண்டோ இதழ்களையாவது ஆன்லைனில், அல்லது உங்களுக்கு அருகாமையில் இருக்கக்கூடிய கடைகளில் தொடர்ந்து வாங்கிடுங்களேன் ப்ளீஸ் ? எல்லாமே ஒரு habit தான் எனும் போது - தொடர் வாசிப்பும் பழகிப் போய் விடும் ; அதனிலிருந்து விலகி நின்றோமெனில் அந்த வாடிக்கையுமே பழகிடும் ! காமிக்ஸ் வட்டத்தினுள் ஒரு சிறு அங்கமாகவேணும் நீங்கள் ஒவ்வொருவருமே தொடர்ந்திட  வேண்டுமென்பதே எனது வேண்டுகோள் ! 

2 நிறைய பாக்கெட்டுகளுக்குள் தற்சமயம் நிறைய வெற்றிடம் இருப்பின் வியப்பேதும் நஹி அதன் பொருட்டு ! அதனாலென்ன guys - உங்களால் இன்றைய சூழலிலும் நமக்கு ஒத்தாசை செய்திட மார்க்கமுண்டு தான் ! நேரம் கிடைக்கும் போது உங்களின் வாட்சப் குழுக்களில் ; FB பக்கங்களில் ; ட்விட்டர் ; இன்ஸ்டாகிராம் கணக்குகளில் காமிக்ஸ் பற்றி ஏதேனும் எழுதலாமே - ப்ளீஸ் ? கைவசம் உள்ள முந்தைய இதழ்களைப் பற்றியோ ; நமது தற்போதைய நாயகர்களைப் பற்றியோ பதிவிட்டீர்களெனில், ஒவ்வொன்றும் ஒரேயொரு புது வாசகரை உருவாக்கித் தந்தாலுமே சிறப்பு தானே ? So பணமல்ல இங்கே அவசியமாகிடுவது ; மனமே ! 

3 இன்றைக்கு பூமிக்கே தேவை நம்பிக்கையும், பாசிட்டிவ் சிந்தனைகளும் தான் ! நிஜம் அதுவே எனும் போது, அந்த பூமியின் ஒரு தம்மாத்துண்டு மூலையில் ; ஒரு தம்மாத்துண்டு தொழிலில் அமர்ந்துள்ள நமக்கும் அவை தேவைப்படாது போயிடுமா - என்ன ? So நம் மீதான வருத்தங்கள் ; விமர்சனங்கள் ; நெருடல்கள் என்னவாயிருப்பினும் - அவற்றை பொதுவெளிகளில் அலசிக் காயப்போடும் routine-களுக்கொரு குட்டி பிரேக் ப்ளீஸ் ? மகிழ்ச்சியோ ; இகழ்ச்சியோ - அவை ராபின் நீலம் போலவே என்பேன் !! ஒற்றைச் சொட்டு விட்டால்  ஒரு வாளித் தண்ணீரும் அதன் நிறமாகிப் போகும் தானே ? So பாசிட்டிவ் சொட்டு நீலம் கொஞ்ச காலத்துக்கேனும் ப்ளீஸ் ? 'ஓஹோ.....உன் போக்குக்கு ஜால்றா போட்டுக்கிட்டே வரச் சொல்றியாக்கும்  ? என்ற கேள்வி எழலாம் தான் ! ஒவ்வொரு இதழிலும் குறைகளே இல்லை என்று நான் சொன்னால் அது எத்தனை பெரிய டூபாக்கூராய் இருக்குமோ, அத்தனை பெரிய பீலாவே - ஒவ்வொரு இதழிலும் நிறைகளே இல்லையென்று சொல்லிடும் பட்சத்திலும் ! So நான் தற்காலிகமாய்க் கோருவதெல்லாமே அந்த நிறைகளை focus செய்யுங்களேன் என்று மட்டுமே ! அப்புறம் திட்ட வேண்டிய விஷயங்கள் மறந்து போய்ட்டா என்ன பண்றது ? என்ற யோசனையா ? No worries....ஒரு 48 பக்க கோடு போட்ட நோட்டுப் போட்டு அதனில் எழுதி வைத்திருந்து ஞாபகமாய் அப்புறமாய்க் கூடத் திட்டிக்  கொள்ளலாமில்லையா ? 

4 .நிறைய தருணங்களில் அவற்றின் நெடும் காலப் பாதிப்பென்னவென்று அறியாமலே, ஆர்வக்கோளாறுகளில் கொஞ்சப் பேர் செய்திடும் இந்த back issues pdf விநியோகத்தை இந்தத் தருணத்திலாவது மூட்டை கட்டிடலாமே guys ? இரண்டு நாட்களுக்கு முன்னே கூட "மினி லயன் முதல் 2 இதழ்கள் " என்று பெருமையாய் ஸ்கேன் செய்து சுற்றில் விட்டுள்ளார் வாசகர் ஒருவர் ! அது நமது மறுபதிப்புப் பட்டியலில் உள்ள இதழ் எனும் போது ஒற்றை நொடியில் அதன் எதிர்காலத்தை துவம்சம் செய்த புண்ணியத்தை ஈட்டியுள்ளார் அந்த வாசகர் ! இன்றைய பொழுதில் விற்கும் ஒவ்வொரு புக்கும், இந்தப் பயணத்தின் ஆயுட்காலத்தை ஒவ்வொரு நிமிட அளவுக்கு நீட்டிக்கும் ஆற்றல் கொண்டதெனில் ; இது போன்ற "கடைத் தேங்காய்-தெருப் பிள்ளையார் முயற்சிகள்" அதே பயணத்தின் ஆயுளை ஒவ்வொரு மணி நேர அளவுக்கு நசுக்கும் திறன் கொண்டவை ! தெரிந்தே குரல்வளை மீது கால்வைக்கும் பழக்கங்களை இப்போதேனும் உதறிட முயற்சியுங்களேன் ப்ளீஸ் ? பழைய புக்குகளை கோடி ரூபாய் கூட சொல்லிக் கொள்ளுங்கள் ; அதனை வாங்கும் சக்தியோடு உங்களிடம் யாரேனும் சிக்கினால் அது உங்கள் இருவருக்கும் மட்டுமே பொதுவானதொரு சமாச்சாரமாகிடும் ! அதனில் தலைநுழைக்க யாருக்கும் உரிமை இராது ! ஆனால்  pdf ஆக்கி ஊருக்கு விநியோகிக்கும் இந்த பரோபகாரம் வேண்டாமே ? You are making life more difficult for us !!

5 The next request : சற்றே தர்மசங்கடத்தை ஏற்படுத்துவது : உடனே இல்லையென்றாலும், வாய்ப்பு அமையும் போது ஆளாளுக்கு ஒரேயொரு முந்தைய இதழையேனும் வாங்கி உங்கள் நண்பர்களுக்கோ ; பள்ளிக்கூட / ஆபீஸ் / அபார்ட்மெண்ட் லைப்ரரிக்கோ பரிசாகத் தந்திடுவது பற்றி யோசித்துப் பாருங்களேன் - ப்ளீஸ் ? Each book that travels out from our stock will now mean more than it ever did !! யதார்த்தமாய்ப் பேசுவதெனில் இந்தாண்டின் புத்தக விழாக்களின் நிலவரம் எவ்விதமிருக்கும் ? அங்கே என்ன மாதிரியான விற்பனைகளை இந்தாண்டின் முழுமைக்கும் எதிர்பார்த்தல் சரிப்படும் ? என்பதெல்லாம் பதிப்பகத் துறையின் ஜாம்பவான்களையே தடுமாறச் செய்து வரும் கேள்விகள் ! அட, ரெகுலர் புத்தகக் கடைகளிலேயே கூட அடுத்த 6 மாதங்களுக்கு வியாபாரம் எவ்விதம் இருக்குமென்பதை யூகிக்க வழியில்லை ! So ஆன்லைன் விற்பனையின் வேகத்தை  நாம் வளர்த்தல் எப்போதையும்  விட  இப்போது முக்கியத்துவம் பெற்று நிற்கின்றது ! Just a request guys !! அதற்காக, நாளையேவோ ; அல்லது ஊரடங்கு முடிவுற்ற மறு நாளேவோ, உங்கள் ஆர்டர்களை எதிர்பார்ப்போம் என்றெல்லாம் இல்லை !! வாழ்க்கையில் இந்த நொடியில் பொம்மை புக்குகளைத் தாண்டிய முக்கிய சமாச்சாரங்கள் ஒரு நூறு உண்டென்பதை ஏற்றுக் கொள்ளும் முதல் ஆசாமி நானே ! ஏதேனும் பிறந்த நாள்கள் ; திருமண நாட்கள்,பண்டிகைகள் போன்ற வேளைகளில் காமிக்ஸ்களை ஒரு பரிசாக்குவது பற்றிய சிந்தனைகள் எழுந்தாலுமே சூப்பர் ! 

6. சந்தாவின் லாயல்டி பாயிண்ட்ஸ் மீட்பதன் பொருட்டு, சட்டித் தலையன் ஆர்ச்சியின் வண்ண இதழ் மே மாதம் நம் அன்புடன் கிட்டிடும் என்று அறிவித்திருந்தேன் அல்லவா ? அதனை ஆண்டின் மூன்றாம் க்வாட்டருக்கு நகற்றிட எண்ணுகிறேன் ! நிச்சயமாய் அல்வா கிண்டும் முயற்சியல்ல இது ; கலரிங் செய்யப்பட்டு டிஜிட்டல் கோப்புகள் தயாரே ! ஆனால் குடலை வாய்க்குக் கொண்டு வரப்போகும் தற்போதைய பேப்பர் விலைகள் கொஞ்சமே கொஞ்சமாய் நிதானத்துக்குத் திரும்பினால் தேவலாமே என்றதொரு சிறு ஆசையே ! Hope you will be o.k. with it !

7.இடைப்பட்ட 40 நாட்கள் எதிர்பாரா விதத்தில் கபளீகரமாகிப் போவதால், ஒரு நாலைந்து இதழ்களை நடப்பாண்டில் இனிவரவுள்ள மாதங்களுக்குள் பகிர்ந்திட வேண்டி வரும் ! ஆகையால்  நடப்பு மாதத்திலேயே 5 இதழ்கள் இருந்திடும் ! இது போன்ற மாதங்கள் இன்னும் சில இருந்திடும் நடப்பாண்டில் ! So - "overkill" என்ற விமர்சனங்கள் வேண்டாமே - ப்ளீஸ் ?

8. Last but not the least - சந்தா !! ரெகுலர் சந்தாவின் ஏப்ரல் to டிசம்பர் திட்டமிடலிலோ  / ஜம்போவின் சீசன் 3 சந்தாவிலோ  இணைந்திரா நண்பர்கள் வசதிப்படும் போது முயற்சிக்கலாமே - please ?  

இவற்றையெல்லாம் சொல்லி, உங்களின் தலைகளுக்குள் ஏற்கனவே இருக்கும் நோவுகள் பற்றாதென, புதுசாய் ஒரு பாட்டத்தை ஏற்றிடுவதில் எனக்குப் பெரிதாய் ஆர்வம் இல்லை தான் ! கட்டையோ-நெட்டையோ, நாமாகவே சமாளிப்பதே உசிதமென்றிருந்தேன். ஆனால் நேற்றைக்கு காமிக்லவர் ராகவன் அனுப்பியதொரு அமெரிக்க பத்திரிகை செய்தியைப் படித்த போது, காமிக்ஸ் உலக ஜாம்பவான்களே என்னமாய் ஆட்டம் கண்டுள்ளனர் என்பது புரிந்தது ! அப்புறமே இந்தப் பதிவினை டைப் செய்யத் தீர்மானம் செய்தேன் ! அமெரிக்கா முழுசுக்கும் பிரதான காமிக்ஸ் இதழ்கள் சகலத்தையும் விநியோகிக்கும் Diamond Book Distributors நிறுவனமானது நிலைமை நார்மலாகும் வரை யாரும், எதையும் அனுப்ப வேண்டாமெனச் சொல்லி கேட்டை ஒட்டுமொத்தமாய்ப் போட்டு விட்டார்கள் - April 1 முதலாய் ! Dark Horse Comics திடு திடுப்பென வெளியீடுகளை நிறுத்திக் கொண்டுள்ளது ; IDW நிறுவனமுமே ! மார்வெல் காமிக்ஸ் மூன்றில் ஒரு பங்குக்குக்  கத்திரி போடும் தீர்மானத்தை அறிவித்துள்ளது ! ஜூலையில் தவறாது அரங்கேறிடும் உலகின் நம்பர் 1 காமிக்ஸ் திருவிழாவான (அமெரிக்காவின்) San Diego காமிக் கான் இந்தாண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது ! நியூயார்க்கில் நடைபெறும் BookExpo-வுக்கும் இந்தாண்டு பூட்டுப் போட்டு விட்டார்கள் ! ஏற்கனவே பாரிஸ் புத்தக விழா ; லண்டன் விழா & இத்தாலியின் போலோனியா விழாக்கள் காலி ! So உலகக் கோடீஸ்வரர்களுக்கே இந்த கதி எனும் போது, கர்சீப்பால் கோவணம் கட்டித் திரியும் நாமெல்லாம் எம்மாத்திரம் ?

ஆனால் இங்கொரு சின்ன வெள்ளிக்கீற்றுமே (அட...அது தான் silver lining-ங்க) உண்டென்பதை நான் சொல்லியாக வேண்டும் ! வெகுஜன விற்பனைக்கு உட்படும் mega இதழ்கள் பெரும்பாலும் யானைகள் போலென்று வைத்துக் கொள்ளுங்களேன் ; தடுமாறினால் எழுந்து கொள்வது சுலபமே அல்ல  ! ஆனால் குண்டுச் சட்டிக்குள் 'குருதே' ஓட்டும் நம் போன்றோரெல்லாமே பூனைகள் மாதிரி ! மதிலில் இருந்தே பல்டியடித்தாலும் - 'வியாவ் !!' என்று ஒரு சவுண்டைக் கொடுத்து விட்டு நொண்டிக்கொண்டேனும் நடையைக் கட்டியிருப்போம் ! So பூமியில் ஆளுக்கொரு சவால் என்றான சூழலில், நம் முன்னே நிற்பதை எவ்விதம் சமாளிக்கவுள்ளோம் என்பதில் தான் இந்த எருமைக்கடா வயசுக்கான அனுபவம் கைகொடுக்கிறதா ? என்று பார்த்தாக வேண்டும் ! So the game's well & truly on !! ஜெய் பாகுபலி ! Wish us luck guys !!

And இந்த 'கொரோனாவுக்குப் பின்னே" என்ற காலகட்டத்தினில் நாம் முன்னெடுக்கக் கூடிய முயற்சிகள் பற்றிய ஆக்கபூர்வமான யோசனைகளும் வரவேற்கப்படுகின்றன!! "டிஜிட்டல் காமிக்ஸ்" என்பது நமக்குச் சாத்தியமல்ல என்பதால், அது சார்ந்த பரிந்துரைகள் நீங்கலாய் everything else under the sun is welcome indeed !! அப்புறம் இது ஜீவிக்க முனையும் ஒரு survival தருணம் என்பதால், "ரெண்டாயிரம் பக்கம் ; ரெண்டாயிரம் ரூபாய் ; ரெண்டு மெபிஸ்டோ கதைகள்" என்ற ரீதியிலான முன்மொழிவுகள் வேண்டாமே - ப்ளீஸ் ?

Moving on, ஒரு வழியாய் இதோ - காத்திருக்கும் 'தல' சாகஸ அட்டைப்படத்தில் முதல்பார்வை ! ஒரிஜினல் டிசைனே ; வர்ண மாற்றங்கள் மட்டுமே நமது உபயம் !
உட்பக்க கோப்புகள் கையில் இல்லை என்பதால் artwork பற்றித் தெரிந்து கொள்ள பின்னட்டையைப் பார்த்துக் கொள்ளுங்களேன் ? அட்டகாச சித்திர பாணியில் ஓவர் அலம்பல் இல்லாதொரு அதிகாரியின் தரிசனத்துடன் நேர்கோட்டில் ஓடும் சாகசமிது ! So சில பல பாயச விரும்பிகள் வேறொரு தருணத்துக்குக் காத்திருக்க வேண்டி வரலாம் !

அப்புறம் காலேஜ் வாசலின் பானிப்பூரிவாலாக்கள் போல், நம் மத்தியில் புலவர்களும், கவிஞர்களும்  கணிசமோ, கணிசமாய்  இருந்தாலும், பாடகர்களின் எண்ணிக்கையோ கொரோனா தடுப்புக்கான PPE கையிருப்பைப் போலவே சொற்பம் என்பது புரிகிறது ! நண்பர் மிதுனனும், நண்பர் மேச்சேரி ஜெயகுமாரும் தலைகாட்டியுள்ளது தவிர்த்து - குருவும், சிஷ்யரும் மட்டுமே செவிகளை மிரட்டியுள்ளனர் ! இதில் டூயட் வேறு !!! இந்த இசைமழையில் நனைந்து தீர்ப்புச் சொல்ல நானும் ஜட்ஜ்களை நியமித்து அவர்கள் யாருக்கேனும் ஜல்ப்புப் பிடித்துக் கொண்டால் வம்பாகிப் போய் விடுமென்பதால் நானே தீர்ப்புச் சொல்லி விடுகிறேன் - செயலர் வெற்றி பெற்றாரென்று ! ஆக இனி அரசவையில் ஸ்டீல் குந்தியிருக்கும் ஸ்டூலுக்குக் கிட்டக்கே இன்னொன்னை போட்ட கையோடு - அவர் இயற்றும் (!!!) பாடல்களை பாடும் பொறுப்பு சங்கத்துச் செயலருக்கே ! அந்த மட்டுக்கு இந்தப் போட்டியில் பாணபத்திரரே கலந்து கொள்ளாதது அந்தச் செந்தூர்வேலனின் கருணையே என்பேன் ! அரோகரா !! https://youtu.be/TnA_kb0-QvY : இந்த லிங்க்கை க்ளிக் செய்து ஒரு இசை மழையில் நனைய தயாராகும் முன்பாய் உங்கள் இஷ்ட தெய்வங்களை நினைத்துக் கொள்ளுங்களேன் folks !!

ரைட்டு...கவிதை இயற்ற புலவர்ஸ் ரெடி ; பாடிட வித்வானும் ரெடி ; இனி எழுத்தாணி பிடிக்கத்  திறன் கொன்டோரைத் தேடுவதே அடுத்த பணி ! இதோ - சமீபத்தில் எனக்கு கிட்டிய பல நூறு வாட்சப் forward சேதிகளுள் இடம்பிடித்திருந்ததொரு சிம்பிள் ஆங்கிலக்கவிதை ! படிக்கும்போது இன்றைய யதார்த்தத்தை அழகாய், மிகையின்றிச் சொல்லியிருந்தது போலப்பட்டது ! உங்களது task : இதனை தமிழில் அழகாய் மொழிபெயர்த்துப் பதிவிட வேண்டியதே !
உங்களுக்குள் புதைந்து கிடக்கும் அந்த சிங்கத்தை  கட்டவிழ்த்து விடுங்களேன் guys ! Full steam ahead !!

கிளம்பும்  முன்பாய் சில உலக நடப்புகள் ; இன்றைய சூழலுக்கேற்ற சேதிகள் :

  • சென்னையின் கண்ணகி நகரில் வசிக்கும் சிறார்களின் துணையோடு UNICEF அமைப்பு  இந்த கொரோனா வைரஸ் பற்றியொரு 8 பக்க காமிக்ஸ் இதழை உருவாக்கியுள்ளது ! தமிழ் ; இங்கிலிஷ் & மலையாளத்தில் அது தயாராகியுள்ளது ! https://www.thehindu.com/news/cities/chennai/a-comic-book-on-covid-19-from-childrens-sketches/article31283642.ece
  • ஏப்ரல் 13 முதல் இத்தாலியில் புத்தகக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர் ! 'தல' துளி பாதிப்புமின்றித் தொடர்ந்து வருகிறார் - இந்தச் சிரம நாட்களுக்கு மத்தியிலும் ! 
  • இங்கிலாந்திலும், ஐக்கிய அரபு தேசங்களிலும் ஆன்லைன் புத்தகவிழாக்கள் துவங்கவுள்ளன !! ஊரடங்கு நாட்களிலும் ஒரு புத்தக விழாவின் variety வாசகர்களுக்குக் கிடைக்கவுள்ளது ! Seems an awesome idea !!
  • அமெரிக்காவில் ஏகப்பட்ட புக் ஸ்டோர்கள் தள்ளாட்டம் கண்டு கொண்டிருக்கும் நிலையில், ஆன்லைனில் crowd funding மூலமாய்ப் பணம் புரட்டும் முயற்சிகள் கைகொடுத்து வருகின்றன ! 

  • சிறார் புக்ஸ் முன்னுரிமை பெறுகின்றன U.K. அமேசானின் பட்டுவாடாப் பட்டியலில் ! 

Bye all ; have an awesome weekend ! See you around !! STAY HOME & STAY SAFE !!

Tuesday, April 14, 2020

வணக்கம் சார்வரி !

நண்பர்களே,

வணக்கம். மனைவாசம் இன்னமும் நீள்வது ஊர்ஜிதம் ஆயாச்சு ! நாள் என்ன ? கிழமை என்ன ? பொழுதென்ன ? என்ற  கணக்கெல்லாம் மறந்தாச்சு ! பொழுது புலர்ந்து, பொழுது சாய்வதற்குள் ஓராயிரம் சிந்தனைகள் ; தடுமாற்றங்கள் ; குழப்பங்கள் என்று தலைமுடியில் மிச்சம் மீதியையும் பறிகொடுத்தாச்சு ! வாட்சப்பிலும், ட்விட்டரிலும், FB பக்கங்களிலும் அட்லாண்டா முதல் அமிஞ்சிக்கரை வரை லோகத்தின் அத்தனை மண்டலங்களின் சேதிகளையும் உள்வாங்குவதே அன்றாடம் என்று தலையெழுத்தாகிப் போச்சு !  ஆனால் நடப்பதெல்லாம் நம் நன்மைக்கே என்று அப்பட்டமாய்த் தெரிவதால், நாளைய இடுக்கண்களைத் தவிர்க்கும் பொருட்டு இன்றே சற்றே நகுகிக் கொள்வோமே ? கடந்த 3 வாரங்களாக இங்கே நாம் செய்து வருவது கூட அதையே தான் என்பதை இந்தத் தளத்தின் புள்ளிவிபரங்கள் சொல்கின்றன !! பகல் பொழுதில் நேற்றைக்கு "ரமணா" படம் பார்த்தவன் இதைக் கூடச் சொல்லாவிட்டால் கோலிவுட்டுக்கே இழுக்காகிடாதா ?

*பாரிசில் நான் ஒரு பிரவுன் பூதத்திடம் தப்பித்த கதையினைப் பதிவிட்ட தினத்தின் பார்வைகள் : 3190.

*கேப்ஷன் போட்டியும், தெற்கத்திய ஜட்ஜமார் அதற்கான தீர்ப்பையும் சொன்ன  2 பதிவுகள் வெளியான தினங்களின் பார்வைகள் தலா 2865 & 2754 !

*கவிதை  இங்கு ஆறாய் ஓடிய பதிவும், ஸ்டீல் நம்மையெல்லாம் துவம்சம் செய்து கொண்டிருந்த வேளையினில் அசல்நாட்டு ஜட்ஜஐயாக்கள் குறுக்கே புகுந்து தீர்ப்புச் சொன்ன பதிவுகளும் வெளியான தினங்களின் பார்வைகள் again ஒரு high : 2843 & 2906 !

*போன வாரம் 'நான் சந்திக்கவிரும்பும் VIP " என்ற பதிவு வெளியாகிய தினம் ஈட்டியதும் ஒரு மெகா நம்பரிலான பார்வைகள் : 3219 !

*இரு தினங்களுக்கு முன்போ - "விடிய விடிய பேசிட விரும்பும் நபர்" என எனது தாத்தா பற்றிய பதிவின் ஞாயிறிலோ ஒரு peak : 3467 !!

Of course , இந்தப் பதிவு நம்பர்களின் ஒரு பாதிக்கு கவிஞர் பாணபத்திரரும், சேலத்து குமாரரும் பொறுப்பேற்பர் என்பது புரிகிறது ! ஆனால் அந்த எண்ணிக்கையை நீக்கிப் பார்த்தாலுமே, இந்த லாக்டௌன் தினங்களின் இறுக்கமான பொழுதுகளை சற்றே இலகுவாக்கிக் கொள்ள இங்கு நீங்கள் தலைகாட்டும் தருணங்கள் உதவிடுவது புரிகிறது ! So எப்போதையும் விட இப்போது நட்புக்களின் அண்மை ; மனதை இலகுவாக்கிடும் அரட்டைகள் ; ஒரு பாசிட்டிவ் சூழலின் ஆதர்ஷம், இத்யாதிகள், நமக்கெல்லாம் எத்தனை அவசியம் என்பது புரிகிறது ! எட்டரை ஆண்டுகளுக்கு முன்னே "blogging" என்ற விஷயத்தைக் கையில் எடுத்த போது - புத்தாண்டு வைராக்கியங்கள் போலவே இதன் ஆயுளும் மிஞ்சிப் போனால் சில  வாரங்களுக்கோ / மாதங்களுக்கோ தானிருக்கும் என்றே நினைத்திருந்தேன் ! ஆனால் உங்கள் உற்சாகம் எனும் நீரோட்டம் எனது சோம்பல்களைக் கரைத்து, இந்தப் பதிவையும் சரி, அதன் பலனாய் நமது இதழ்களையும்  சரி,இத்தனை நேர்த்தியாய் முன்னெடுத்துச் செல்லுமென்பது சத்தியமாய் நான் எதிர்பார்த்திரா ஒன்று ! Moreso today - காமிக்ஸ் பற்றிப் பெரிதாய் எதையும் எழுதாமலுமே, கடந்த மூன்று வாரங்களாய் இங்கே வண்டி ஓடுகிறதைப் பார்க்கும் போது, இங்கு துளிர்க்கும் நட்புக்களின் வலிமையை எண்ணி வியக்காதிருக்க முடியவில்லை !  Take a bow all !

ரைட்டு...! காமிக்ஸ் பற்றிய previews தந்திட, அட்டைப்படங்களோ, உட்பக்கங்களோ கைவசமில்லை என்பதால், சமீப வழக்கத்தைத் தொடர்வதே வழி என்றாகிறது ! உலகைப் புரட்டிப் போடும் முக்கியத்துவம் வாய்ந்த சிலபல கேள்விகளை ஒரேயொரு குருக்களின், ஒரேயொரு உள்ளூர் சிஷ்யர் கேட்டிருந்தது ஐ.நா.சபை வரைக்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது நினைவிருக்கலாம் ! சபையினர் இப்போதைக்கு சித்தே பிசி என்பதால் அந்த மஹாப் பொறுப்பை நான் கையில் எடுத்துக் கொள்கிறேன் ! இதோ - காத்திருக்கும் கணைகள் :

* இன்னும் 24 மணிநேரத்தில் உலகம் அழிந்துவிடும் என்ற நிலையில் உங்களுக்கு ஒரே ஒரு புத்தகம் மட்டும் மறுவாசிப்புக்கு அனுமதிக்கப்பட்டால் உங்கள் தேர்வு எதுவாக இருந்திடும் ?

ஈரைப் பேனாக்கி ; பேனைப் பெருமாள் ஆக்குவதில் நம்ம கீர்த்தி எட்டுத் திக்கும் பிரசித்தம் என்பதால், மேற்படித் தம்மாத்துண்டுக் கேள்விக்கு, வணிகவியல் பரீட்சைக்கான answer sheets போல வண்டி நீளத்துக்கொரு பதில் கிட்டினால் என்னைத் திட்டாதீர்கள் - நம்ம டிசைனே அப்படியென்று வைத்துக் கொள்ளுங்களேன் !

கேள்வியிலேயே "மறுவாசிப்புக்கு" என்றிருப்பதால், அது ஏற்கனவே படித்ததொரு  புக்காய் மட்டுமே இருக்க முடியும் என்றாகிறதல்லவா ? So யோசிக்கிறேன் ...இதுவரைக்கும் படித்ததில் செம ஸ்பெஷல் எதுவாக இருக்கக் கூடுமென்று ! நினைவு தெரிந்த நாள் முதலாய், எனது புத்தகத் துணைகளென்று பார்த்தால் - அவை வண்டி வண்டியாய் காமிக்ஸ் இதழ்களாகவே இருந்துள்ளன ! அமெரிக்காவில் அப்போது வெளியான Gold Key Comics எனும் அட்டகாச கார்ட்டூன் இதழ்கள் இறக்குமதி செய்யப்பட்டு, ஒற்றை ரூபாய்க்கோ ; இரண்டு ரூபாய்களுக்கோ (!!!) விற்பனையாகிடும் ! சென்னை ; மும்பை ; டில்லி ; கொல்கத்தா போன்ற பெருநகரங்களில் மட்டுமே இவை கிடைக்கும் என்பதால், தனது உள்நாட்டு ரவுண்டுகளின் போது, என் தந்தை மறக்காமல் கத்தை கத்தையாக வாங்கி வருவார் ! அவற்றினில் வெளியான கதைகள் / கார்ட்டூன் நாயகர்கள் / நாலுகாலர்கள் எல்லோருமே அந்நாட்களில் அமெரிக்க டி-வி.ஷோக்களின் ஹிட்ஸ் என்பது எனக்கு ரொம்பவே பின்னாட்களில் தான் தெரியும் ! Baby Snoots என்றொரு ப்ளூ கலர் யானை ; Chip & Dale எனும் 2  குட்டி அணில்கள் (chipmunks ) ; Beep Beep The Road Runner எனும் தீக்கோழி மாதிரியான 4 பறவைகள் ; Super Goof எனும் ஒரு மங்குனி சூப்பர் மேன் ; வால்ட் டிஸ்னியின் டொனால்டு டக் ; அங்கிள் ஸ்க்ரூஜ் ; அப்புறம் Beagle Boys எனும் 3 ஜெயில் பறவைகள் ; Porky Pig எனும் மொழுக் மொழுக் பன்றி ; Daffy Duck எனும் வாயாடி வாத்து ; Yosemite Sam எனும் ஆரஞ்சு தாடிக் கொள்ளைக்காரன் ; Tweety & Sylvester எனும் குருவி + பூனை ஜோடி ; Bugs Bunny எனும் சமர்த்து முசல் ; Gyro Gearloose எனும் லியனார்டோ மாதிரியான விஞ்ஞானிக் கொக்கு - என்று அதனில் அவர்கள் போட்டுத் தாக்கிய கதைவரிசைகளை இன்றைக்கு முழுவதும் சிலாகித்துக் கொண்டே போகலாம் ! இன்று நாம் பழகியுள்ள லக்கி லூக் பாணிகளோ ; smurfs பாணிகளோ இந்தக் கார்ட்டூன் தொடர்களில் கிடையாது ! ஆறோ / எட்டோ / பத்தோ பக்கங்கள் ஓடக்கூடிய செம ஜாலியான ; செம சிம்பிளான ; செம ரகளையான கதைகள் அவை ஒவ்வொன்றுமே ! காத்திருக்கும் நமது "வாண்டு ஸ்பெஷல்" இதழில் வெளியிட இவற்றுள் எந்தத் தொடருக்கு உரிமைகள் கிடைத்தாலுமே கும்பிடு போட்டு வாங்கிடுவேன் தான் ; ஆனால் இவை அனைத்துமே கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு முன்பான சமாச்சாரங்கள் என்பதால் பெரும்பான்மைக்கு டிஜிட்டல் கோப்புகள் இல்லை !  எல்லாம் முறையாய் உள்ள வால்ட் டிஸ்னியின் உரிமைகளைப் பெற்றிடும் மார்க்கமோ நமக்கு சாத்தியமற்றது ! So எப்போதாவது அந்த இதழ்களை எண்ணி, கனவு கண்டு கொள்வதோடு சரி ! 

ரகளை செய்த எனது அந்நாட்களது காமிக்ஸ் சேகரிப்பினுள் இன்னொரு முக்கிய இடம் பிடித்திருந்தவை டெக்ஸ் வில்லரும் ; வேதாள மாயாத்மாவும் ; மாயாஜால மன்னன் மாண்டிரேக்கும் தான் ! டெக்சின் black & white சாகசங்கள் கொண்ட பத்தோ, பன்னிரண்டு இதழ்கள் ஒரு பக்கமும், வேதாளம் + மாண்டிரேக்கின் கலரிலான இந்திரஜால் காமிக்ஸ் இதழ்கள் இன்னொரு பக்கமும் குவிந்து கிடக்க நான் இங்கி-பிங்கி போட்டு எதை படிப்பதென்று தேர்வு செய்யாத குறை தான் !  அதிலும் டெக்சின் "டிராகன் நகரம்"  ஆங்கில இதழை காது வழியே வெளியேறக்கூடிய அளவிற்கு இருநூறு முறையேனும் வாசித்திருப்பேன் ! அந்தக் கதை மட்டும் தான் என்றில்லை ; டெக்சின் திடரிலிருந்து முத்துக்களையாய்த் தேர்வு செய்து Topsellers எனும் பிரிட்டிஷ் பதிப்பகம் வெளியிட்டிருக்க, அவை சகலத்தையுமே மேயோ மேயென்று மேய்வது வாடிக்கை !  வேதாளனின் கதைகளோ இன்னொருபக்கம் எனக்குள்ளே 'பச்சக்' என ஒட்டியிருக்க, அவர் போட்டிருப்பது போலொரு தம்மாத்துண்டு ஜட்டியை மாட்டிக் கொண்டு, போகும் ஒவ்வொரு சித்திரைப் பொருட்காட்சிக் கடைகளிலும் அவர் வைத்திருப்பது போலான முத்திரை மோதிரம் கிடைக்குமாவென்று ஆவலாய்த் தேடியதும் அந்நாட்களது ஞாபகங்களுள் ஒன்று ! அந்நாட்களது இந்திரஜால் காமிக்ஸ் வாராவாரம் கலரில் பின்னியெடுப்பார்கள் எனும் போது வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் புஸ்தகக்கடையில் தவறாது அவற்றை வாங்கிடுவேன் ! ரிப் கிர்பி ; சார்லி போன்ற அமெரிக்க நாயகர்களோடு அறிமுகம் வளர்ந்தது அப்படித் தான் !

Growing up, காமிக்ஸ்களிலிருந்து துப்பறியும் சிறுவர் நாவல்கள் பக்கமாய்  ஐந்தாப்போ என்னமோ படிக்கும் போது கவனங்கள் திரும்பியது - The Three Investigators எனும் 15 + கதைகள் கொண்ட தொடரின் உபயத்தில் ! மூன்று விடலைப் பசங்கள் ; அமெரிக்காவின் சான் டியேகோவில் (??) பள்ளிப்படிப்பின் மத்தியில் ரகளையான பல மர்மங்களை விடுவிப்பதே இந்தத் தொடர் ! ஒவ்வொன்றுமே அந்த வயதினரை கட்டுண்டு போகச் செய்யும் அதகளங்கள் !! அவற்றின் hardcover பதிப்புகள் அந்நாட்களது முத்து காமிக்ஸ் அலுவலகத்து மாடியின் லைப்ரரியில் கிடக்கும் ! ஒன்றுபாக்கியின்றி அத்தனையையும் வீட்டுக்கு லவட்டி வந்து வெறியோடு வாசிப்பேன் ! தொடர்ந்து The Hardy Boys எனும் 50 + கதைகள் கொண்ட கதை வரிசை என்னைப் பைத்தியமாக்கிய நாட்கள் !! ஒவ்வொரு வடஇந்திய டூருக்கு முன்னேயும் அந்தத் தொடரிலிருந்து எந்தெந்த புக்குகள் வேண்டமுமென்று ஒரு தாளில் நான் குறித்துக் கொடுத்தால், தவறாது அவற்றை வாங்கி வந்து விடுவார் தந்தை ! ரயிலிலிருந்து அவர் வீடு திரும்பும் போது கையிலிருக்கும் ரசகுல்லா டின்னையும்,  சூட்கேசில் மேல்வாக்கில் இருக்கும் Hardy Boys புக்குகளையும் எதிர்பார்த்தே முந்தைய ராத்திரியிலிருந்தே தூக்கம் பிடிக்காது பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கும் !! Enid Blyton எனும் பிரிட்டிஷ் பெண் எழுத்தாளரின் The Famous Five ; The Five Findouters போன்ற சிறார் நாவல்களும், அந்நாட்களில் பள்ளிக்கூட லைப்ரரியில் நிறைந்து கிடக்கும் ! அவற்றை எடுத்துக் போனால் ஒரே நாளில் வாசித்து விட்டு மறுநாள் அடுத்த புக்கைக் கோரி நின்றதுண்டு !

ஆனால் மறுக்கா காமிக்ஸ் பக்கம் உன்மத்தம் கொள்ளச் செய்தது எட்டாவது படிக்கும் சமயத்திலானதொரு பயணமே !  முழுப்பரீட்சை விடுமுறைகளின் போது, என் தந்தையின் டில்லி + மும்பை ட்ரிப்பில் என்னையும் அழைத்துப் போயிருந்தார் ! நாள் முழுக்க அவரது பணிகளைக் கவனிக்க இங்கும் அங்கும் ஓடும் போது என்னையும் உடன் அழைத்துப் போவார் ! "சீய்" என்றிருக்கும் - பழைய டில்லியின் சாந்தினி சவுக் சதுக்கத்தின் அழுக்குப் படிந்த சந்து பொந்துகளுக்குள் குந்திக் கிடக்கும் காலெண்டர் விற்பனையாளர்களை சந்திக்க விதியே என நானும் அப்பாவோடு போகும் போது ! இப்போது போல அன்றைக்கெல்லாம் ஒலாக்களும் லேது ; கொக்கோ கோலாக்களும் லேது என்பதால் லொட லொடக்கும் ஆட்டோக்களிலும், டாப் இல்லாத கைவண்டி ரிக் ஷாகளிலும் தான் பிளக்கும் அந்த மே மாதத்து வெயிலில் பவனி வந்தாக வேண்டும் !  நடுவாக்கில் எப்போதேனும் , ஏதேனும் புஸ்தகக் கடைக்கு கூட்டிப் போவார்கள் என்ற ஒற்றை கேரட் செழுமையாய் மூக்குக்கு முன்னே தொங்கிக்கொண்டிருக்க, நானும் கழுதையாய் ஓடிக் கொண்டிருப்பேன் ! ஒரு வழியாய் அந்தக் கேரட்டும் வாய்க்கு எட்டியது - Janpath பகுதியில் இருந்ததொரு செமையான புக் ஷாப்பில் ! அந்தக் கடை ஓனருக்கு என் தந்தை லேசாய்ப் பரிச்சயம் போல ; என்னை அங்கேயே கொஞ்ச நேரம் விட்டுச் செல்லலாமா ? என்று கேட்டதுக்கு  ஓ.கே. சொன்னார் ! 'தோ..வந்துடறேன்..' .என்றபடிக்கு மாலை 4 மணிவாக்கில் கிளப்பியவர் திரும்ப வந்த போது மணி இரவு எட்டேமுக்கால் !! மூஞ்சி பெயர் தெரியாத புது ஊர் ; செல்போன்  இல்லாத நாட்கள் ; தட்டுத் தடுமாறும் ஹிந்தி மட்டும் தெரிந்ததொரு  பன்னிரெண்டோ / பதின்மூன்றோ வயதுப் பிள்ளையாண்டனை தகிரியமாய் ஏதோவொரு புக் ஷாப்பில் தனியாக விட்டுக் கிளம்பிட எப்படி முடிந்தது ? என்று இப்போது யோசித்துப் பார்க்கிறேன் நான் ! "சர்தான்...வீட்டில் தான் 5 உருப்படி உள்ளதுல  ; ஒண்ணு குறைஞ்சாலும் 4 மிச்சமிருக்குமே !" என்ற தைரியமாகத் தானிருந்திருக்குமோ ? ஆனால் அந்த நாலரை மணி நேரத்திற்குள் கண்ணில்படும் காமிக்ஸையெல்லாம் தனியாய் அடுக்கி வைக்கத் துவங்கிய என்னைப் பார்த்து அந்த ஓனர் குஷியாகி விட்டாரோ, என்னவோ - "ஒரு mezzanine தளம் போலிருந்த மத்திமமான மாடியில் இன்னமும் நிறைய புக்ஸ் ஸ்டாக் உள்ளது ; போய்ப் பார்க்க இஷ்டமா ?" என்று கேட்டார் ! நம்ம 'ஆத்தா ஹை...ஜாத்தா ஹை' ஹிந்தி அங்கே கைகொடுக்க, ஒரு பணியாளோடு என்னை அந்தத் தளத்துக்கு ஏணியில் ஏற்றி அனுப்பி வைத்தார் ! உள்ளே நான் பார்த்ததொரு புத்தக சொர்க்கம் என்றே சொல்ல வேண்டும் ! விற்காது கிடந்த காமிக்ஸ் குவியலாய் ஒரு பக்கம் ; புதிதாய் வந்திருக்கும் காமிக்ஸ் இன்னமும் டப்பிகள் உடைக்காத நிலையில் இன்னொரு பக்கம்  ; அட்டை கிழிந்து / முனைகள் கசங்கி - என்றிருந்த காமிக்ஸ் வேறொரு திக்கில் என்று இறைந்து கிடந்தன ! இன்னிக்குக்  கிட்டங்கி குப்பை முழுசையும்  இந்த முட்டைக்கண்ணனிடம் போணி பண்ணிடலாமென்று அந்த ஓனருக்குத் தோன்றியதோ, என்னவோ - ஐஸ் காபி ஒன்றை  வரவழைத்துக் கொடுத்தார் ! அதைச் சப்பியபடியே நான் எடுத்து வைத்த புக்குகளின் எண்ணிக்கை அறுபதோ / எழுபதோ இருக்கும் ! 

எட்டேமுக்காலுக்குத் திரும்பிய தந்தை எதுவுமே சொல்லாது, அத்தனைக்கும் பணம் கொடுக்க, மொத்தத்தையும் அள்ளிக் கொண்டு ரூமுக்குத் திரும்பிய போது அந்த சாந்தினி சவுக் அப்படியொன்றும் கலீஜாய்த் தெரியக் காணோம் எனக்கு ! அன்றைக்கும் சரி, பின்னாட்களில் தொழில் தள்ளாட்டம் கண்டு கிடந்த போதிலுமே சரி, புத்தகக் கொள்முதல்களில் ஒரு நாளும் தந்தை குறை வைத்ததே இல்லை ! எங்கு பயணம் போனாலுமே வீடு திரும்பும் போது ஒரு வண்டி புக்ஸ் சர்வ நிச்சயமாய் இருந்திடும் அவரது சூட்கேஸினுள் ! அன்றைக்கு நான் டில்லியில் அள்ளிப்போட்டிருந்த  அந்தக் கத்தையில் இருந்த புக்குகளுள் TINTIN in TIBET - பிரான்க்கோ-பெல்ஜிய ஆல்பத்தின் ஆங்கிலப் பதிப்பும் இருந்தது ! அதற்கு முன்பாய் ஒரேயொரு TINTIN இதழை கண்ணில் பார்த்திருந்தேன் - மதுரையின் அந்நாட்களது திருவள்ளுவர் பஸ் ஸ்டாண்டில் இருந்த புக் ஷாப்பில் ! Flight 731 என்ற அந்த ஆல்பத்தின் விலை அப்போதே எண்பது ரூபாய் ! அந்நாட்களில் அதெல்லாம் செம பெரிய தொகை என்பதால் மூன்று நாட்களாய் பேச்சுவார்த்தை நடத்தி, அம்மாவிடம் காசு வாங்கிப் போய் அதனை வாங்கியிருந்தேன் ! (அப்பா மதுரைக்கு வந்திருக்கவில்லை அப்போது) அந்த புக்கை ஐம்பது முறையேனும் வாசித்திருப்பேன் என்பதால் TINTIN மீது செம பைத்தியம் ! அதற்குப் பின்பாய் TINTIN கண்ணில்பட்டது அங்கே டில்லியில் தான் என்பதால் செம ஆசையாய் அந்த ஆல்பத்தை வாங்கியிருந்தேன் ! 

ரூமுக்குத் திரும்பிய பிற்பாடு, அவசரம் அவசரமாய் கட்டிலில் மொத்த புக்குகளையும் அடுக்கிய கையோடு அந்த டின்டின் சாகசத்தை வாசிக்க ஆரம்பித்தவன் மெய் மறந்து போனேன் ! ஹிமாலய சிகரங்களில் விபத்திற்கு உள்ளாகிடும் விமானத்தினில் தங்களுக்கு ரொம்பவே வேண்டப்பட்ட சாங் எனும் சீனப் பையன் உயிர் தப்பியிருப்பதாகவும், தன்னைக் காப்பாற்றும்படி மன்றாடுவதாகவும் டின்டின்னுக்கு திடீரென கனவில் தோன்றிட,  கேரட் மண்டைக்கார ரிப்போர்ட்டர் டின்டின் திபெத்துக்குப் பயணமாகி, கேப்டன் ஹெடாக்கின் துணையோடு பனியில் தேடலைத் துவக்குவதே கதை !! இந்திய விஜயம் ; இமாலய சிகரங்களோடு அறிமுகம் ; நெடிதுயர்ந்த பனிமலைகளில் Yeti எனப்படும் ராட்சஸப் பனிமனிதனைப் பின்தொடர்தல் என்று இந்த 54 பக்க ஆல்பம் செய்த ஜாலங்கள் என்னை கட்டிப்போட்டது ! இறுதியில் சாங்கை அந்தப் பனிமனிதனிடமிருந்து மீட்டு அழைத்துப் போக, அது சோகத்தில் ஓலமிடுவது போல் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பார் கதாசிரியர் ஹெர்ஜ் ! ஒரு அற்புதமான ஆக்ஷன் த்ரில்லரை இத்தனை அழகாய் ; காமெடி கலந்து, மனதை உருக்கும் செண்டிமெண்ட் கொண்டு சொல்ல முடியும் என்பதை நான் உணர்ந்த முதல் தருணம் அதுவே ! அன்று இரவே அந்த புக்கை 2 வாட்டி படித்தும் எனக்குப் போதவில்லை ! டில்லியிலிருந்து மும்பை செல்லும் ரயிலில் மட்டுமே அரை டஜன்வாட்டியாவது  படித்திருப்பேன் !

மின்சார ரயிலின் பிழிந்தெடுக்கும் கூட்டங்களைக் கண்டு மிரண்டபடிக்கே மும்பையிலும் அப்பாவோடு ஓட்டம் ; மாதுங்கா ; மாஹிம் ; தாதர் ; போர்ட் பகுதிகளில் இருந்த எண்ணற்ற பழைய புத்தகக் கடைகளில் வேட்டை என்று நாட்கள் ஓடினாலும், எக்கச்சக்க Gold Key Comics கிடைத்திருந்தாலும், எனக்குள்ளே ஜெகஜோதியாய் நிறைந்து நின்றது டின்டின்னின் அந்த சாகசமே ! மும்பையில் மேற்கொண்டு சில secondhand டின்டின் புக்குகளும்  கிடைத்திட, அத்தனையையும் பொக்கிஷங்களாக்கி ஊர்திரும்பிய பின்னேயும் தினமும் பாராயணம் செய்யாத குறை தான் ! ஸ்கூல் லைப்ரரியில் ஆஸ்டெரிக்ஸ் கதைகளை வாய் பிளந்து வாசித்த நாட்கள் ; ஷெர்லாக் ஹோம்ஸ் நாவல்கள் ; பெரி மேசன் நாவல்கள் ; அப்புறமாய் அலிஸ்டர் மக்ளீன் த்ரில்லர்கள் ; ஜேம்ஸ் பாண்ட் நாவல்கள் ; தமிழில் துப்பறியும் சாம்பு ; சுஜாதாவின் அசாத்தியங்கள் என்று ஏதேதோ வாசிக்கும் பழக்கம் தொடர்ந்த போதிலும், டின்டின் என் நெஞ்சுக்கும், என் தலைமாட்டிற்கும் அருகிலேயே தான் தொடர்ந்தார் ! 1984 -ல் எடிட்டர் குல்லாவை மாட்டிய நாள் முதலாய் காமிக்ஸ் தவிர்த்து வேறெதுவும் பெருசாய் வாசிக்கும் நேரங்களும் கிட்டவில்லை ; அது சார்ந்த முனைப்பும் தோன்றிடவில்லை என்பது தான் நிஜமே ! கிடைக்கும் முதல் ஓய்வான தருணத்தில், புதுசாய் எந்த காமிக்சைப் போட்டுத் தாக்கி உங்களை மிரட்டலாம் ? என்ற எண்ணமே ஊற்றடிக்கும் !  So இலக்கியங்கள் ; இதிகாசங்கள் என்றெல்லாம் நம் நண்பர்களில் பலரைப் போல் கரைத்துக் குடிக்கும் ஆர்வம் எனக்குத் தோன்றியதே கிடையாது ! Maybe எவ்வித இலக்கிய பரிச்சயங்களும் கிடையாதென்பதாலோ, என்னவோ, இன்றைக்கும் எனது எழுத்து நடையில் குறிப்பிட்ட அந்த set of words நீங்கலாய்ப் புதுமைகள் எட்டிப் பார்ப்பதில்லை ! இன்றைய நாட்களிலோ கண்ணாடியை மாட்டிக் கொண்டு, குண்டாய் ஏதேனும் புக்கைக் கையில் தூக்க முனையும் பத்தாவது நிமிஷத்திலேயே  எத்தனை தொலைவிலிருந்தாலும் செல்வி நித்திரா தேவி ஷேர் ஆட்டோவாச்சும் பிடித்து,  திடு திடுவென ஓடியாந்து "வந்துட்டேன் மாமா !!" என்று அரவணைத்துக் கொள்கிறார் ! So இனி கொட்டப் போகும் குப்பையினுள், காமிக்ஸ் தவிர்த்து வேறேதேனும் இடம்பிடிப்பதாக இருப்பின், அது VRS க்குப் பின்னான நாட்களில் நடந்தால் தான் ஆயிற்று ! So ஒற்றை நாளில் லோகம் அழியப் போவது உறுதி என்றாகிப் போயிடும் பட்சத்தில், Tintin in Tibet இதழைத் தான் கையில் தூக்கிக் கிளம்புவேன் ; வெறித்தனமாய் வாசிப்பதோடு மட்டுமல்லாது - maybe அதனில் லயித்து காலனும் நம்மை ரட்சித்து விடுவாரென்ற நம்பிக்கையிலும் ! Without a doubt my all-time ; all-weather favorite !!

இந்தத் தருணத்தில் நீங்கள் ஒவ்வொருவருமே உங்களின் all time best புக் பற்றிப் பேசிடலாமே guys - சின்னதொரு மாற்றத்துடன் ? "ஒரேயொரு காமிக்ஸ் எடுத்துக்கலாம் ; அது போக வேறேதேனும் புக் ஒன்றையும் எடுத்துக்கலாம் !" என்ற நிலையில் உங்கள் தேர்வுகள் எவையாக இருக்குமோ ? எழுதுங்களேன் ப்ளீஸ் ?

அப்புறம் ஒரேயொரு குருக்களின் ஒரேயொரு சிஷ்யரின் இன்னொரு கேள்விக்குமே பதில் சொல்லிடலாமென்று நினைக்கிறேன் : 

* இதுவரை நிறைவேறாத உங்கள் லட்சியம் ?

டின்டின்னை இதுவரையிலும் தமிழுக்கு கொணர முடிந்திடாது இருப்பதே "நிறைவேறா லட்சிய லிஸ்டின்" உச்சியினில் இருந்திடும் சமாச்சாரம் ! நிறையவே முயற்சித்திருக்கிறேன் ; முயற்சித்துக் கொண்டுமிருக்கிறேன் ! ஆனால் பெல்ஜியத்தின் அடையாளச்  சின்னங்களுள் ஒன்றாய்க் கருதும் அளவுக்கு டின்டின் அங்கே வாழ்க்கையின் ஒரு அங்கம் எனும் போது - அவரைத் தாரை வார்த்துத் தர  ரொம்பவே தயங்குகிறார்கள் ! வேதாளம் & விக்கிரமாதித்தன் கதையாய் தொடர்ந்து முயற்சிக்கணும் !! ஹ்ம்ம்ம்...!!

சிஷ்யகோடியின் இன்னும் சிலபல கேள்விகள் எஞ்சியிருப்பினும், அவற்றை டைப்படித்தே நாக்குத் தொங்கியிரா இன்னொரு வேளைக்கென ஒத்திப் போடுகிறேன் ! இப்போதைக்கு நடையைக் கட்டும் முன்பாய்,  புலர்ந்துள்ள இந்தத் தமிழ்ப் புத்தாண்டை இரு கரம் கூப்பி வரவேற்ற கையோடு - நம் மத்தியில் நடமாடும் எக்கச்சக்கக் கலைஞர்களிடம்  ஊற்றெடுக்கும் லோடு லோடான திறமைகளை இறக்கி வைக்க ஒரு வழி தேடுவோமே என்றுபடுகிறது ! கொலைவெறி கொண்டதொரு அரசவைப் புலவரை அடையாளம் கண்டாயிற்று என்றான பின்னே - பாடல்களை பாடிட  ஒரு கானக்குரலைத் தேடுவதன்றோ அடுத்த வேலை ? So 60 நொடிகளுக்கு மிகாதவாறு, உங்களுக்குப் பிடித்தமான பாடல் எதையேனும் பாடி ஒரு வீடியோ க்ளிப்பை அனுப்பினால், அவற்றை நமது YouTube சேனலில் upload  செய்து கொரோனாவையே மிரட்டிடலாம் என்றுள்ளேன் ! ஹைட்ரொக்ளோரோக்வின் மருந்தெல்லாம் வேலை பார்க்குதோ இல்லியோ - ஸ்டீல் எழுதிய (!!!) பாட்டு ரேஞ்சுக்கு உங்களின் தொண்டைகளில் உதயமாகும் கானங்களும் இருப்பின், செத்தாண்டா கொரோனா சேகரு !!

அப்புறம் request # 3 : லாக் டவுன் நீடித்திருக்கும் இந்நிலையில் வீட்டில் கடமைகளை மிக சிறப்பாய்ச் செய்து வரும் நண்பர்கள் ஒரு selfie எடுத்து அனுப்பினால், அதனை இங்கே சரமாரியாக post செய்திடுவேன் ! அது சர்.ஜடேஜா வாளைக் கையாளும் லாவகத்தோடு நீங்கள் துடைப்பத்தைக் கையாளும் அழகாய் இருந்தாலும் சரி ; 'புசு புசு'வென உப்பும் பூரி போட்டுத் தரும் பொன்னான காட்சியாக இருந்தாலும் சரி ; 'உன்னைச் சொல்லிக் குற்றமில்லை !!" என்ற பாடலோடு பாத்திரம் துலக்கும் பண்பான படப்பிடிப்பாய் இருந்தாலும் சரி - you can send them all !! போட்டோக்கோசரம், வேலை செய்வது போல் பிம்பிலிக்கா பிலாக்கி காட்டும் போங்கு வேலைகள் இல்லாது - மெய்யாலுமே பணி செய்தால் மட்டுமே கம்பெனி விதிமுறைகளுக்கு உட்பட்டதாகிடும் ! lioncomics@yahoo.com என்ற மின்னஞ்சலுக்கு "லாக் டௌன் நாட்கள்" என்ற header தந்து போட்டோக்களை அனுப்பிடலாம் ! கானக்குரலோன்களின் கச்சேரி கிளிப்களையுமே !!

அரசவைப் பாடகர் யாரென்பதை தேர்வு செய்திட 2 ஜட்ஜ்கள் as usual நியமனம் செய்யப்படுவர் ! ஹெட்செட்டை மாட்டிக் கொண்டு ஸ்டீல் பாடக்கூடிய பாடலுக்கு செவிகொடுக்கும் அந்த அனுபவத்தை சித்தே யோசித்துப் பாருங்களேன் - அடடடடாடா !!! யாருக்கு அந்தப் புளகாங்கிதங்களெல்லாம் காத்துள்ளனவோ - தெய்வமே !!

அனைவருக்கும் நமது தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் !! இன்னல்களுக்கு மொத்தமாய் விடைதந்து அனுப்பி வைக்கவொரு  அருமருந்தாய் இந்த சார்வரி நமக்கெல்லாம் அமையட்டும் ! Bye all ! See you around !! Have an awesome day & a lovely year ahead ! 
பி.கு : தேர்வாகும் அரசவைக் கவிஞருக்கு கூடுதலாய் ஒரு ரவுண்ட் பன் என்பதோடு, அடுத்த வாசக சந்திப்பின் போது ஒரு பாட்டுப் பாடும் வாய்ப்பும் வழங்கப்படும் - ஒரு ஜம்போ சீசன் 3 சந்தாவோடு ! 


THE LOCKDOWN DAYS !!!!
விடுகதையோஓஓஓஓ...இந்த வாழ்க்கை !!!
தீர்ப்புச் சொன்ன டெக்சாஸ் ஜட்ஜய்யா - மகேந்திரன் பரமசிவம் !!



ஊருக்கு உழைப்பவன் !! 
தம்பி செந்தில் சத்யா !
ஆங்...எடுத்தாச்சா ? எடுத்தாச்சா ? எடுத்தாச்சா ?
சரவணன் குமார், சின்னமனுர் 
தீயா வேலை செய்யணும் கொமாரு !!
 சேலம் டெக்ஸ் விஜயராகவன்

ஷப்பா..மல்லாக்கப் படுத்து விட்டத்தைப் பாக்குறது என்னா சுகம் ?ஷல்லூம்  பெர்னாண்டஸ் & பெபினா குட்டி !


இங்கே ஒரே பிஷி !! 
திருப்பூர் ப்ளூபெர்ரி & ஜூனியர் 


படாதே......தரையிலே தூசியே படாதே !!
தரையில் தூசி படாதிருக்க லேட்டஸ்ட் டெக்னீக்கை பயன்படுத்தும் அதிகாரியின் அன்பர் ரம்மி !

மூன்றெழுதில் என் மூச்சிருக்கும்...! "கடமை" அது...கடமை !!
சோதனைச் சாவடி ட்யூட்டியில் நண்பர் கணேஷ்குமார் 



சட்னி மீது சட்னி வந்து என்னைச் சேரும் !
அதை ஆட்டித் தந்த பெருமையெல்லாம் தம்பி சிவாவைச் சேரும் ! 
.......திருப்பூர் சிவாவைச் சேரும் ! 




ரம்-பம்-பம்.....ஆ-ரம்-பம்.....அ-ரம்-பம்-பம்....பே-ரி-ன்-ப-ம் !! 
ஏழு எட்டு வாரமாச்சு கண்ணே..சோறு வடிக்கப் படிக்கலைடி கண்ணே !!
கரூர் P.சரவணன் 


அங்கே என்ன சத்தம்மா......... ? 
சமையல் பண்ணிட்டிருக்கேன் மாமா !! 
நண்பர் சிபி..திருப்பூர் ! 


'தல'...ஊன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க...ஊர்லேர்ந்து லாரி லாரியா ஆளுகளை இறக்கிப்புடலாம் ! 
கைப்புள்ளை கிட் ஆர்டின் & டெரர் ஜூனியர்ஸ் 

Sunday, April 12, 2020

ஒரு விருட்சத்தின் கதையிது...!

நண்பர்களே,

வணக்கம். இன்னமும் வைரசுக்கு டாட்டா காட்டிய பாடைக் காணோம் எனும் போது மேற்கொண்டும் நம் மனைவாசங்கள் தொடர்வது காலத்தின் கட்டாயமாகவே தெரிகிறது ! இரண்டு வாரங்களா ? மூன்று வாரங்களா ? என்ற கேள்வி தானே  இப்போதைக்கு அனைவரின் மனங்களிலும் ?! So அரசின் தீர்மானம் எதுவாயிருப்பினும் அதற்கு முழுசாய் இசைவு சொன்ன கையோடு, புதுசாயொரு தம் கட்டிக்கொண்டு, பாத்திரம் கழுவும் படலம் 2-குத் தயாராகிக்கொள்வோமே ! ஆங்காங்கே பூரி போடும் நண்பர்களும், துவைத்துக் காயப்போடும் நண்பர்களும், துடைப்பங்களோடு வீறுநடை போடும் அன்பர்களும் சீக்கிரமே தத்தம் பொறுப்புகளை பூர்த்தி செய்த பூரிப்போடு, இங்கே எட்டிப்பார்த்தால் அவ்வப்போது ஜாலி மொக்கைகளைத் தொடர்ந்திடலாம் !   சூழ்ந்து நிற்கும் இறுக்கங்களிலிருந்து நண்பர்களின் சங்கமத்தின் புண்ணியத்தில் நிவாரணம் கிட்டிட்டால் சூப்பர் என்பேன் ! என்ன எழுதுவதென்ற என்னுள்ளான கேள்விக்கு பதிலாய், சில பல கேள்விகளே கைதூக்கி நிற்க, இதோ இந்த ஞாயிறை ஒப்பேற்ற முனைகிறேன் அவை சார்ந்த இன்னொரு பதிவோடு ! 

And before I go into it - சின்னதாயொரு வேண்டுகோள் ப்ளீஸ் : 

Flashback mode-க்குள் புகுந்து துவக்க நாட்களை பற்றி நான் விவரிக்கும் போதெல்லாம் தடித்தாண்டவராயன் போல் நான் மாத்திரமே அதனுள் தென்படுவது தவிர்க்க இயலா சங்கடமாய் நெருடுகிறது எனக்கு ! நிறையப் பேரின் பங்களிப்புகளின்றி இந்தப் பயணம் சாத்தியமாகாது என்பதை பறைசாற்றும் முதல் ஆள் நானே ! So இதுபோன்ற பதிவுத்தருணங்கள் முழுசுமாய் என்னைச் சார்ந்த புராணங்களாகவே இருப்பது தர்மசங்கடத்தையே ஏற்படுத்துகிறது ! என்னைத் தெரிந்து வைத்திருக்கும் நண்பர்களுக்குப் பதிவின் ஓட்டத்தைத் தாண்டி வேறெதுவும் இடறிடாது போகலாம் ! ஆனால் தொலைவிலிருந்து வாசித்து விட்டு நடையைக் கட்டும் நண்பர்களுக்கும் சரி ; நம் மேல் "பாச மழை" பொழியும் அன்பர்களுக்கும் சரி, "ஓவராய் அலம்புராண்டோய் !" என்று தோன்றின், பிழை அவர்கள் மீதிராது தான் ! நிச்சயமாய் பீப்பீ smurf எனது favorite கிடையாது ; இந்த முந்தைய நினைவுப் பகிரல்கள் அனைத்துமே நமது காமிக்ஸ் சார்ந்தவைகள் என்ற விதத்தில், வாசிப்பினில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துவதால் மாத்திரமே நான் இந்த வாடகைச் சைக்கிள் படலத்தைக் கையிலெடுக்க நேரிடுகிறது அவ்வப்போது ! So please bear with me !!

ரைட்டு, பின்னாட்களில் கல்வெட்டுக்களில் பொறிக்கப்படவுள்ள கேள்வியும் ; அதற்கான எனது பதிலும் இதோ ! முந்தைய பதிவினைப் போல இதனில் காமிக்ஸ் சார்ந்த சமாச்சாரங்கள் சொற்பமே ; and நிறைய விதங்களில் இதுவொரு பெர்சனல் பதிவுமே ! ஆனால் சொல்ல வேண்டியதொரு கதையிது என்பதால் நீங்கள் புரிந்து கொள்வீர்களென்ற நம்பிக்கையோடு எழுதுகிறேன் ! நிறைய பொறுமை இருந்தால் மாத்திரமே படிக்க முனையுங்கள் ப்ளீஸ் :  

* நீங்கள் விடிய விடிய பேசிட விரும்பும் நபர் யார்.....? (பேச்சு மட்டுமே ! ) :

இந்தக் கேள்விக்கு சற்றே கிளுகிளுப்பான பதிலை எதிர்பார்த்திருப்பின், நிச்சயமாய் ஏமாற்றமே மிஞ்சிடப் போகிறது ! Simply becos நான் விடிய விடியப் பேசிட எண்ணிடுபவர் இங்கு இப்போது இல்லை ! அவர் விண்ணுலகம் சென்று வருஷங்கள் 22 ஓடி விட்டன ! நிறையப் பேருக்கு எனது இந்தத் தேர்வு இந்தத் தருணத்தில் விநோதமாய்த் தோன்றிடலாம் தான் ; ஆனால் இதனை முழுசுமாய்ப் படிக்கும் பொறுமை உங்களுக்கு இருப்பின், பதிவின் இறுதியில் எனது தேர்வுக்கு 200 மார்க்குகள் போடுவீர்களென்பது உறுதி ! 

S.V.A.கந்தசாமி நாடார் என்பதே எனது தாய்வழித் தாத்தாவின் பெயர் ! அந்நாட்களில் ஜாதியினையும் பெயரோடு இணைத்துக் கொள்வது வழக்கமோ, என்னவோ - தெரியாது, ஆனால் அவரை நினைவுறும் போதெல்லாம் அந்தப் பெயரினை முழுசாய் உச்சரிக்கவே தோன்றிடும் !  அந்தக் கடைசிப் பகுதியினை நீக்கிவிட்டு அவரைக் குறிப்பிடுவது ஏதோ மரியாதைக் குறைவு என்பது போலொரு அபத்த சிந்தனை என்று வைத்துக் கொள்ளுங்களேன் ! தாத்தாவுக்கு என் தாயார் ஒரே பிள்ளை & சொந்த அக்காவின் மகனுக்கே அவரை மணமுடித்துக் கொடுத்ததால் மருமான் - மருமகப்பிள்ளையாகிப் போனார் ! ஒரே பிள்ளை என்பதால் தாத்தாவுக்கு உலகம் சுழன்றதே என் தாயாரைச் சுற்றியே !! So சிவகாசிக்கு அச்சுத் தொழில் துவங்கிடும் நோக்கில் சீனியர் எடிட்டர் குடிபெயர்ந்த போது, தாத்தா செய்த முதல் வேலை - அவரது வீட்டுக்கு நேர் எதிரிலிருந்ததொரு வீட்டை வாடகைக்குப் பிடித்து அங்கேயே குடியேறச் செய்தது ! எனது பால்ய நினைவுகள் முழுவதுமே நாங்கள் வசித்த அந்தச் சின்னஞ்சிறு வீட்டோடும், எதிர்க்கே குடியிருந்த தாத்தாவின் வீட்டோடுமே !! வீட்டில் நான் மூன்றாவது பிள்ளை ; எனக்கு முன்னே 2 சகோதரிகள் !  கொடுமை என்னவெனில் இரண்டே அறைகள் கொண்ட அந்த வாடகை வீட்டில் குடியிருந்தது நான் + அம்மா + அப்பா மட்டுமே ! சகோதரிகள் இருவருமே தாத்தாவின் வீட்டில் தான் முழுக்க முழுக்கக் குடியிருப்பர் ! எங்கள் வீட்டில் அத்தனை பேருக்கும் இடம் பற்றாதென்று அந்த ஏற்பாடா ? அல்லது தாத்தாவுக்கும், பாட்டிக்கும் துணையாய் சகோதரிகள் அங்கே இருந்தனரா ? என்பதெல்லாம் எனக்குத் தெரியாது ! ஆனால் நினைவு தெரிந்த நாள் முதலாய் சின்னஞ்சிறு குருவிக்கூடுகள் எதிர் எதிரே இருக்க, அதனுள் இங்கும் அங்குமாய் சந்தோஷங்களை பரிமாறி வளர்ந்தோம் நாங்கள் ! 

அப்போதெல்லாம் சீனியர் எடிட்டரின் அச்சுத் தொழில் பிசுனஸ் ஊருக்குள் TOP 3 என்றவிதத்தில் சும்மா தெறிக்க விட்டுக்கொண்டிருந்தது ! காலண்டர்கள் & ரெடிமேட் நோட்புக் ராப்பர்களின் உருவாக்கத்தில் வியாபாரம் திகுடுமுகுடாய் ஓடிக்கொண்டிருக்க, தந்தை + அவரது சகோதரர்கள் சினிமாவில் வரும் தொழிலதிபர்கள் ரேஞ்சுக்கு பிசியோ பிசி ! நூறு பேருக்கு குறையாது பணி செய்வார்கள் அந்நாட்களிலேயே என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் ! So அப்போதெல்லாம் ஆர்டர் ; வசூல் ; காலெண்டர்களுக்கான படம் வரையும் வடஇந்திய ஓவியர்களை சந்திக்கவென தந்தை டூர் கிளம்பிப் போனால் ஊர் திரும்ப சுத்தமாய் ஒரு மாசமோ, 40 நாட்களோ, ஆகி விடும் ! ஆனால் எதிர்வீட்டில் தாத்தா & பாட்டி குடியிருந்ததால் பயம் தெரியாது ; எங்கள் வண்டி அதுபாட்டுக்குப் பயணிக்கும் ! ரொம்பவே சிரமப்பட்டு வாழ்க்கையில் முன்னுக்கு வந்தவர் என்ற முறையில் தாத்தா ரொம்பவே சிக்கனமானவர் ; ஆனால் ரொம்பவே தொலைநோக்குப் பார்வை கொண்டவர் ! அவசியமின்றி ஆடம்பரச் செலவுகள் செய்திட மாட்டார் ; ஆனால் பேரப்பிள்ளைகளுக்கென எதையும் செய்யத் தயாராக இருப்பார் ! விடுமுறைகளில் சென்னைக்குப் போனால் எங்களை அந்நாட்களது மூர் மார்க்கெட்டிலோ ; ஊருக்குள்ளேயே இருந்த zoo -விலோ இறக்கிவிட்ட கையோடு அப்பா கிளம்பிவிடுவார் - சென்னையிலுள்ள காலெண்டர் விற்பனையாளர்களைச் சந்திக்க ! பொழுது சாயும் நேரத்துக்குத் தான் திரும்புவார் என்றால் கூட முழுநேரமும்  தாத்தா உடனிருப்பார் என்பதால் பயமின்றித் திரிவோம் ! So சின்ன வயதிலிருந்தே எங்களின் வாழ்க்கைகளில் தாத்தா ஒரு constant இருப்பாகவே தொடர்ந்திட்டார் ! 

சுதேசி காங்கிரஸ் அமைப்பில் அவருக்கு ஈடுபாடுண்டு என்பதாலோ என்னவோ, வெள்ளை வெளேர் கதர் வேஷ்டி & கதர் ஜிப்பா தான் தாத்தாவின் உடை எப்போதுமே ! நல்ல உயரம் ; ஆஜானுபாகுவான உருவம் ; நெற்றியில் குங்குமப் பொட்டு ; மீசையில்லா மழுமழு முகம் ; பிரமாதமான பேச்சாற்றல் ; அந்தக் கதராடை என்ற தோரணை - அவரைப் பார்த்த நொடியே, புதியவர்களிடம் கூட  ஒருவித மரியாதையை உருவாக்கிடுவதை எண்ணற்ற முறைகள் நான் பார்த்திருக்கிறேன் !  அவருமே ஒரு சிறு அச்சகம் நடத்தி வந்த போதிலும், காலையில் கொஞ்ச நேரம் ஆபீசுக்குப் போய் விட்டுத் திரும்பிட்டால் - ஊருக்குள் உள்ள பொதுக்காரியங்களின் முன்னணியில் செயலாற்றிடுவார் ! பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உயர்பொறுப்பு ; பில்டிங் சொசைட்டியில் தலைவர் பதவி ; அச்சக சங்கத்தின் தலைவர் பொறுப்பென எதை எதையோ இழுத்துப் போட்டுக் கொண்டு பணியாற்றுவார் ! ஜவஹர்லால் நேரு அவர்கள் பிரதமராக இருந்த பொழுது, சிவகாசியிலிருந்து அச்சக சங்கத்து முக்கியஸ்தர்களை அழைத்துக் கொண்டு டில்லி சென்று பிரதமரைச் சந்தித்து எடுத்துக் கொண்ட போட்டோ தாத்தா வீட்டில் மெகா சைசில் சுவற்றில் தொங்குவது எனது ஆயுட்கால நினைவுகளுள் ஒன்று ! பொதுக்காரியங்களுக்கென நேரத்தை ஒதுக்கிய பிற்பாடு முழுக்க முழுக்க வீட்டில் எங்களோடு நேரம் செலவிடுவதே தாத்தாவின் ஆதர்ஷப் பொழுதுபோக்கு ! யாருக்கேனும் உடம்புக்கு முடியவில்லையா ? டாக்டரிடம் இட்டுப் போவது தாத்தாவாகத்தானிருக்கும் ! அவர் ரொம்பவே பயந்த சுபாவம் என்ற போதிலும், அந்தத் தோரணை அதை மறைத்து விடுவதுண்டு ! And எங்களுக்கும் தாத்தா ஒரு larger than life figure ! 

எல்லாமே மாறியது 1981-ன் இறுதியினில் ! சகோதரிகளுக்குத் திருமண வயதுகள் நெருங்கிடும் என்பதால் பெரியதாய் ஒரு சொந்த வீட்டைக் கட்ட 1978-ல் திட்டமிட்டார் தந்தை ! ஆனால் அந்த வீடு வளர்ந்த வேகத்தை விட தந்தையின் தொழிலினில் வளர்ந்த சிக்கல்கள் ஜாஸ்தி வீரியத்துடன் இருந்ததால், ஜவ்வாய் இழுத்து கிட்டத்தட்ட மூன்றரை ஆன்டுகளாயிற்று வீடு முடிவுற ! So நினைவு தெரிந்த நாள் முதலாய் எதிர் எதிர் வீட்டில் வசித்து வந்த நாங்கள் டிசம்பர் 1981-ல் மூட்டை முடிச்சுகளைத் தூக்கிக் கொண்டு (அப்போது) ஊருக்கு வெளியே இருந்த வீட்டுக்கு குடி மாறினோம் - சகோதரிகளுடனும் ! So திடு திடுப்பென டவுணுக்குள் இருந்த தாத்தா & பாட்டிக்கு தனிமையும், வெறுமையுமே துணையாகிப் போயின ! வாரத்தில் பாதி நாட்கள் காலையில் கிளம்பி எங்கள் வீட்டுக்கு வந்து விட்டு, பொழுது சாயும் போது தான் டவுணுக்குத் திரும்புவார்கள் என்ற போதிலும், உள்ளங்கைக்குள் பேரப்பசங்களும், மகளும் வசித்த அந்த நாட்கள் திரும்பிடாது தானே ?! 

பாட்டிக்கு என்றைக்குமே ஆரோக்கியம் துணை இருந்ததில்லை ! சர்க்கரை வியாதி ; ஆஸ்துமா ; சிறுநீரகப் பாதிப்பு என்று ஏதேதோ படுத்தி எடுக்கும் அவரை  ! நாள்தோறும் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ள அவர் ஆஸ்பத்திரிக்குப் போய்வருவது அப்போதே கஷ்டமாக இருக்கும் ; ஆனால் எதையும் காட்டிக் கொள்ளாது சிரித்த முகத்தோடு சுற்றி வருவார் ! பாட்டிக்கும் அம்மா மேல் வாஞ்சையுண்டு என்ற போதிலும், தாத்தாவைப் போல "anything for the daughter" ரகமெல்லாம் கிடையாது ! தாத்தாவின் ஆபீசில் பின்னே ஒரு ஏக்கரில் ஒரு பெரிய வயல்வெளி இருக்கும் ; அங்கே பால்மாடுகளும் வளர்த்திடுவார்கள் ! So தினமும் வீட்டுக்குப் பால் அங்கிருந்து வந்துவிடும் ! ஆனால் அதெல்லாம் பாட்டியின் டிபார்ட்மெண்ட் என்பதால் - லிட்டருக்கு இவ்வளவு என்ற கணக்குக்கேற்ப காசு கொடுத்துத் தான் நாங்களே வாங்கிக்கொண்டாக வேண்டும் ! தினசரி ஐம்பது காசோ என்னவோ (!!!) எடுத்துக் கொண்டு போய் எதிரே இருக்கும் பாட்டி வீட்டிலிருந்து பால் வாங்கி வருவேன் ! என்றைக்கேனும் காசு கொண்டு போகாது போனால், "அம்மாட்ட சொல்லி, நாளைக்கு சேர்த்து வாங்கிட்டு வந்திரனும் கண்ணா...சரியா ?!" என்று ஞாபகப்படுத்தி அனுப்புவார்கள்  ! தாத்தா இந்தக் கூத்தைப் பார்த்துத் தலையிலடித்துக் கொண்டாலும் - 'தாயும் பிள்ளையுமா இருந்தாலும், வாயும் வயிறும் வேற !!' என்று இந்த ஒற்றைச் சமாச்சாரத்தில் பாட்டி பிரேக் போட்டுவிடுவார் ! சினிமா தியேட்டருக்குப் போனால் டிக்கெட் காசையும், கரீட்டாய்ப் பிரித்துக் கொள்வோம் !! ஹோட்டலுக்குப் போனாலும் அதே கதை தான் ! 

ஆனால் 1981-ல் நாங்கள் ஒட்டுமொத்தமாய் கிளம்பிப் போய்விட்டதில் பாட்டியும் எத்தனை சோர்வுற்றுப் போனார்கள் என்பதைத் தொடர்ந்த நாட்களில் பார்க்க முடிந்தது ! அடிக்கடி சுகவீனங்கள் ; ஆஸ்பத்திரிவாசங்கள் என்று பொழுதுகள் சென்றன ! நாங்கள் டவுணுக்குள் குடியிருந்த வீட்டின் மிக அருகில் தான் சிவகாசியில் செஸ் க்ளப் இருந்தது ! 1979-ல் எனக்குத் தொற்றிக்கொண்ட செஸ் பைத்தியம் அசாத்தியமானது ! ஒவ்வொரு ஞாயிறின் காலையிலும் அங்கே போனால், பொழுது சாயும் போது தான் வீடு திரும்புவேன் ! ஜூனியர் பிரிவுகளில் போட்டிகள் நடந்தால், கப்பில் முதலிலேயே என் பெயரைப் பொறித்து விடும் அளவுக்கு  அய்யா பெரிய பிஸ்தா அப்போதெல்லாம் ! +2 பரீட்சைகளின் மத்தியில் கூட சத்தமில்லாது பக்கத்து ஊரான விருதுநகரில் நடந்துகொண்டிருந்த மாநில அளவிலான செஸ் போட்டியில் கலந்துகொள்ளும் அளவுக்கு அந்த craze முற்றியிருந்தது ! So 1981-ல் நாங்கள் தூரமாய்க் குடி போய்விட்டாலும் ஞாயிறு பிறந்துவிட்டால் காலை எட்டரை மணிக்கே நான் தாத்தா வீட்டில் ஆஜராகியிருப்பேன் ! சைக்கிளை ஸ்டான்ட் போட்டு நிறுத்தும் போதே அசைவ விருந்தின் வாசனை நாசியைத் துளைக்கும் ! தாத்தாவும் சரி, பாட்டியும் சரி, அந்த ஒற்றை நாளினில் என்னைக் கவனிக்கும் விதத்தினை, ப்ரூனே சுல்தானின் அரண்மனையில் கூட எதிர்பார்த்திட இயலாது ! சாப்பிட்ட மறுநிமிஷம் ஓட்டம் பிடிப்பவன், மறுக்கா மதியத்துக்குத் தான் வீட்டுக்குத் திரும்புவேன் - வயிற்றை ரொப்பிக் கொள்ள ! மாலை சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பும் முன்னே வேறெதாச்சும் ரெடியாக இருக்கும் ! வாரத்தின் அந்த ஒற்றை நாளை வேறெதெற்காகவும் தாத்தாவோ, பாட்டியோ செலவிட்டதாய் எனக்கு நினைவே இல்லை ! இந்நேரத்துக்கு வீட்டின் பிள்ளைகளுள் தாத்தாவுக்கும், பாட்டிக்கும் ரொம்பவே வேண்டப்பட்ட பேரப்பிள்ளையாய் நான் மாறியிருந்தேன் ! எப்போதும், எதெற்காகவும் அவர்களது கதவுகள் எனக்குத் திறக்காதிருந்ததில்லை !1983 -ன் பிப்ரவரியிலோ, மார்ச்சிலோ  தட்டுத் தடுமாறி ஒரு மழை நாளிரவினில் அவர்கள் வீட்டுக் கதவைத் தட்டி நின்ற போது எனக்கு பள்ளியின் கடைசி மாதத்து fees கட்டப் பணமிருக்கவில்லை ! அறுபது ரூபாய்கள் monthly fees + exam fees என நூற்றிச்சில்லறை ரூபாய்களை புரட்டவே நாக்குத் தள்ளி, கையேந்தி நின்ற நாட்களவை ! தாத்தா அழுது நான் பார்த்த முதல் தருணம் அது தான் ! தொடர்ந்த நாட்களில் அந்தக் கண்ணீர் முகத்தை மீண்டும் பார்க்கும்  துரதிர்ஷ்டம் நிகழ்ந்தது - பாட்டியின் மரணத்தைத் தொடர்ந்து ! 

All good things have a shelf life  தானே ? 1983-ன் ஏப்ரலில் CBSE தேர்வுகள் முடிந்த கையோடு விடுமுறைகள் என்று சுற்றித் தெரிந்ததை விடவும், அடுத்து என்ன ? என்ற கேள்விக்கு விடை தேடிய நாட்களே ஜாஸ்தி ! சக மாணவர்கள் ஆங்காங்கே அப்ளிகேஷன் போட்டு காலேஜ்களில் சேரத்துவங்க, ஸ்கூல் topper ஆன நானோ திரு திருவென்று முழித்துக் கொண்டிருந்தேன் ! அந்நேரத்துக்கு எனது மூத்த சகோதரிகள் இருவருக்குமே திருமணமாகியிருக்க, சிக்கல்களில் விழி பிதுங்கியிருந்த தந்தையால் ஏதும் உதவிடும் சூழலில்லை ! "இருக்கும் மிஷின்களில் கொஞ்சத்தை விற்றுக் கடனடைத்த பிற்பாடு ஒரு மிஷினை மட்டும் சென்னைக்கு கொண்டு சென்று, அங்கே ஆபீஸ் போடப்போகிறோம் ; நீ அதைப் பார்த்துக் கொண்டே மாலை நேரக்கல்லூரியில் சேர்ந்து படித்துக் கொள்ளலாம் !" என்று தந்தை சொன்னபோது அதுவும் ஓ.கே. தானே என்று என்னை நானே தேற்றிக் கொண்டேன் ! ஆனால் கடனெனும் எமன் மிச்சம் மீதமின்றி அத்தனை மிஷின்களையும் வட்டியெனும் சித்திரகுப்தனின் துணையோடு இழுத்துப் போனது என் துரதிர்ஷ்டம் ! பாட்டிக்கும் உடல்நிலை மோசமாகிக் கொண்டிருக்கும் நிலையில், வீட்டுக்கும், மருத்துவமனைக்குமாய் அலைந்து கொண்டிருந்த தாத்தாவிடம் - "காலேஜில் என்னைச் சேர்த்து விடப் பணம் தர்றீங்களா ?" என்று கேட்க எனக்கு நா வரவில்லை ! ஏற்கனவே ஒருமுறை நான் கையேந்தி நின்றதைக் கண்டு கண்கலங்கிய மனுஷனை மறுபடியும் படுத்தியெடுக்க எனக்கு தில்லும் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்களேன் ! So எனக்குள் நானே புதையுண்டு போனவனாய் - "தொழில் பண்ணப் போறேன் ; புக் போடப் போறேன் !" என்று ஏதேதோ பெனாத்தித் திரிந்தேன் ! டிசம்பரில் பாட்டி காலமானார் - தாத்தாவின் தோள்களிலேயே !  

சகோதரிகள் ஆளுக்கொரு ஊரில் செட்டில் ஆகியிருக்க, பாட்டியும் திடு திடுப்பென மறைந்திருக்க - பெரியதொரு குருவிக்கூடு திடீரென சூன்யமாய்த் தெரியத்துவங்கியது ! வெட்டி ஆபீசராய்ச் சுற்றித் திரிந்தவன் நானே என்பதால், பாட்டியின் வீட்டை ஒதுக்குவது ; தாத்தாவின் அச்சகப் பொறுப்புகளைக் கவனிப்பது என்று அந்த டிசம்பரை நகற்றிய நாட்கள் இன்னமும் நினைவில் நிற்கின்றன ! டவுணுக்குள் அந்தப் பூர்வீக வீட்டில் தாத்தா மட்டும் தனித்திருக்க வேண்டாமென்று தீர்மானித்து எங்கள் வீட்டுக்கு அவரை அழைத்து வந்தோம் ! எதெற்கென்று மறந்து விட்டது - ஆனால் டிசம்பரின் ஒரு இரவில், பூட்டிக் கிடந்த தாத்தாவின் வீட்டிலிருந்து எதையோ எடுத்து வரும் பொருட்டு என்னை அனுப்பினார்கள் ! நினைவு தெரிந்த நாள் முதலாய் அந்தச் சந்துக்குள் போகும் போதெல்லாம் மனம் நிறைந்திருக்கும் சந்தோஷம் அன்றைக்கு முற்றிலுமாய்க் காணாது போயிருந்தது ! நாங்கள் ஓராயிரம் நாட்கள் சிரித்து, மகிழ்ந்து, விளையாடிய அந்த முற்றமும், தாத்தாவின் அந்த வீடும் இருளில் மூழ்கிக் கிடப்பதைப் பார்த்து எனக்குள் பயமே மிஞ்சியது ! கதவைத் திறக்கும் போதே பாட்டியின் குரல் காதில் கேட்பது போலிருந்தது ; அவர் வழக்கமாய் அமர்ந்து காப்பி குடிக்கும் அந்த இடத்தில அவரைப் பார்ப்பது போலவே தெரிகிறது ! போனது எதெற்கென்றே மறந்து போய் தலை தெறிக்க வீடு திரும்பியவனுக்கு அன்றிரவு முதலாய் புதிதாயொரு அத்தியாயம் துவங்கியது - தாத்தாவின் அண்மையின் வடிவத்தில் ! 

பெரிய வீடே என்றாலும், இரண்டே படுக்கையறைகள் தான் அந்த விசித்திரத் திட்டமிடலில் ! So ஒரு அறையில் அப்பா, அம்மா, தங்கை & தம்பி தூங்கிட, இரண்டாவது அறையை ஆக்கிரமித்திருந்த என்னோடு தாத்தாவும் ஒரு மடக்குக் கட்டிலைப் போட்டுப் படுத்துக் கொண்டார் அன்று முதலாய் ! பாட்டியின் இழப்பு தந்த வலியினை தாத்தா மறைக்க முயன்றாலும், அந்த நிசப்த இரவுகளில், நான் தூங்கிவிட்டேனென்ற நினைப்பிலிருக்கும்  தாத்தாவின் விசும்பல்கள் காட்டிக் கொடுத்திடும் ! நாட்கள் தான் எத்தனை பெரிய இழப்புகளையும் கபளீகரம் செய்து ஏப்பமிடும் சக்தியைத் தந்திடுமே ? சிறுகச் சிறுக பாட்டி நினைவுகளில் மாத்திரமே என்றாகிப் போக, கண்முன்னே தத்தளித்துக் கொண்டிருக்கும் மூத்த பேரனைக் கரைசேர்க்க முனைந்தார் ! எனது சென்னை குடிமாற்றலோ ; தந்தையின் சென்னைக் கிளையோ ; மாலைநேரக் கல்லூரிப் படிப்போ கானல்நீராய் மாத்திரமே இருந்திடவுள்ளதை புரிந்து கொண்டவராய் என்னை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைதூரப் படிப்புத் திட்டத்தில் சேர்த்து விட்டார் - B.Com படித்திட ! அதனில் சேரும் பொருட்டு, ஒரிஜினல் +2 மார்க் ஷீட் & TC-களில் பச்சை மசிக்கையெழுத்து வாங்கிடும் பொருட்டு, தாத்தாவுக்கு ரொம்பவே நெருங்கிய நண்பரான அரசுப் பள்ளியின் தலைமைஆசிரியரிடம் போன அந்த நாள் இன்னமும் நினைவுள்ளது ! நான் படித்தது வேறொரு பள்ளியில் தான் என்றாலும், எங்கள் பள்ளியின் சார்பில் நான் பேச்சுப் போட்டி ; கட்டுரைப் போட்டி என்று அத்தனையிலும் சுற்றி வருவதை அறிந்திருக்கிறார் அவர் ! "இவனை ஏன் காலேஜில் சேர்க்கவில்லை ? நன்றாகக் படிக்கும் பையனை தொழிலுக்குள் இழுத்து விட்டு இப்படிப் பாழாக்குகிறீர்களே !" என்று அவர் தாத்தாவிடம் ஒரு ருத்திரதாண்டவமே ஆடியது மறக்காது ! ஏதோ சொல்லிச் சமாளித்துக் கையெழுத்து வாங்கிவிட்டுக் கிளம்பிய போது தாத்தாவுக்கு என்னை எப்படியேனும் தூக்கி நிறுத்த வேண்டுமென்ற வைராக்கியம் கூடிப் போனது போலும் ! 

அன்று முதலாய் எங்களின் இரவு நேரங்கள் நள்ளிரவு வரையுமே ஏதேதோ பேசிடும் படலங்களாய் மாறிப் போயின ! தான் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் பற்றி ; அரசாங்க உத்தியோகத்தில் இருந்தது பற்றி ; குட்டிக்கர்ணமடித்து தொழில் துவங்கியது பற்றி ; தனது சகோதரிகளை, அவர்களது பிள்ளைகளை படிக்க வைத்து ஆளாக்கியது பற்றி, என்று ஏதேதோ பேசுவார் ! கல்லூரி படிக்க வாய்ப்புக் கிட்டாது போனது தான் எனக்கு - ஆனால் வாழ்க்கை எனும்  பல்கலைக்கழகத்தில் எனக்கு ஒவ்வொரு இரவிலும் கிடைத்த பாடங்கள் அசாத்தியமானவை ! பேசுவோம்..பேசுவோம்..பேசுவோம்... தாத்தா தூக்கத்தில் அசரும் வரைப் பேசுவோம் ! இருளிருப்பின், சீக்கிரமே கதிரவனின் கதிர்கள் ஒளியையும் கொணர்வதே இயற்கையின் நியதியல்லவா ? "லயன் காமிக்ஸ்" எனும் ஒரு கனவு மெதுமெதுவாக உருவம் பெற்றிட, "காதலிக்க நேரமில்லை" நாகேஷ் போல திரிந்து வந்தேன் ! "கதை ரெடி...ஹீரோ / ஹீரோயின் ரெடி...பைனான்ஸ் மட்டுமே தேவை" என்ற நிலையில் அந்தக்குறையையும் நிவர்த்தி செய்தார் தாத்தா ! தடுமாற்றத்தோடு கிளம்பிய வண்டி, ஸ்பைடரெனும் புண்ணிய ஆத்மாவின் சகாயத்தில் டாப் கியரைத் தொட - வாழ்க்கையே திடீரென இளையராஜாவின் மெலடியாய் இனிக்கத் துவங்கியது ! எங்களது இரவு அளவளாவல்களோ இப்போது வேறொரு லெவெலில் தொடர்ந்தன ! தாதாவுக்குத் தொழில்ரீதியான technical stuff ஏதும் பரிச்சயம் கிடையாது ; அவை எல்லாமே சீனியர் எடிட்டரிடமும், அங்கே அந்நாட்களில் பணியாற்றிய பாலசுப்ரமணியன் எனும் மேலாளரிடமும் தான் கற்றுக்கொண்டேன் ! ஆனால் பணம் சார்ந்த விஷயங்களில் ; தொழிலை அணுக வேண்டிய விதங்களில் தாத்தாவின் அறிவுரைகள் அற்புதமானவை ! ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ராவினில் பேப்பரும் கையுமாய் அமர்ந்திருப்பேன் - Lion Comics கம்பெனியின் Balance sheet தனைப் போட்டுப் பார்க்க !! தாத்தா கொடுத்த 40,000 பணம் எந்த ரூபத்தில் கையில் உள்ளதென்பதை நான் எழுதிக் காட்டிட வேண்டும் ! அந்த நாற்பதாயிரம் பணமானது  - பேப்பர் இருப்பாய் ; கதைக் கொள்முதலாய் ; புத்தக ஸ்டாக்காய் ; வங்கிக்கையிருப்பாய் இருப்பதை நான் பட்டியலிட்டு எழுதிக் காட்டி, ஒரு ஆயிரம், இரண்டாயிரமாவது லாபம் சம்பாதித்திருக்கிறேனா ? இல்லையா ? என்பதை ஊர்ஜிதம் செய்து கொள்ளாது தூங்க மாட்டார் ! ஒருமுறை தொள்ளாயிரம் ரூபாய்க்கு கணக்கு உதைக்கிறதென்று ராத்திரி ஒரு மணி வரைக்கும் இந்த இளம் அம்பானி உட்கார்ந்திருக்க நேரிட்டது என்றால் நம்புவீர்களா ? இறுதியில் அது எனக்கு புதிதாய் வாங்கிய ஹெர்குலிஸ் சைக்கிளுக்குச் செலவானதென்ற புரிதல் வந்த பின்தான் தூக்கம் பிடித்தது - எங்கள் இருவருக்குமே ! 

கதைக்கொள்முதல் செய்திட டில்லியில் இருந்த அப்போதைய Fleetway ஏஜெண்ட்களைச் சந்திக்கும் அவசியம் 1984-ன் இறுதியில் எழுந்த போது டிக்கெட் போட்டது, எங்கள் இருவருக்குமே ! அதுவரைக்கும் தமிழ்நாட்டைத் தாண்டியதில்லை எனும் போது "டில்லி வரைக்கும் தனியாவா ??? நானும் வாரேன் !!" என்று தாத்தா கூட வந்தார் ! வெளி மாநிலப் பயணம் என்றவுடன் தாத்தாவின் கெட்டப்பே மாறிடும் ! ஒரு இளம் மஞ்சள் நிற முழுக்கைச் சட்டையும் ; ஒரு பிரவுன் பேண்டும் போட்டுக் கொண்டு வரும் தாத்தாவோடு டில்லியில் சுற்றிய நாட்களில் எனக்கு கொஞ்சம் விநோதமாயிருக்கும் - அந்தக் காதரின் கம்பீரம் குறைகிறதே என்று !! ஆனால் horses for the courses என்று தெரிந்திருந்தார் ! ரயில் பயணத்தின் போது அரட்டை ; சிலுசிலுக்கும் டில்லியில் பேரனுக்கு ஸ்டைலாக ஸ்வெட்டர் வாங்கித் தந்த பின்னே அரட்டை ; கதைக்குவியலோடு ரூமுக்குத் திரும்பியவன் திறந்த வாய் மூடாது ஸ்பைடரையும், ஆர்ச்சியையும் சிலாகித்த போதும் அரட்டை - என்று தொடர்ந்தது கச்சேரி ! 

1985-ல் ஐரோப்பிய பயணம் ன்று தீர்மானமான பின்னே தாத்தாவுக்கு கொஞ்சம் பயம் ; கொஞ்சம் உற்சாகம் ! ஆயுசுக்கும் கடல்கடந்திரா ; விமானத்தை அண்ணாந்து கூடப் பார்க்கப் பிரியம் கொண்டிரா மனுஷனுக்கு - ஒரு  18 வயசுக்கோமாளியை 23 நாட்களுக்கு கண்ணுக்குத் தெரியா தேசங்களுக்கு அனுப்பவுள்ளதை எண்ணி பயம் ! அதே நேரம் தன் கற்பனைகளில் கூடச் சாத்தியப்படா ஒரு சமாச்சாரத்தினை பேராண்டி செய்ய முனைவதில் உற்சாகம் ! பதட்டத்தோடும், பரிவோடும் கலந்த அரட்டைகளில் அந்தச் சமயங்களின் ஒவ்வொரு ராத்திரியும் கடந்திட்டன ! ஒரு மாதிரியாய் பயணமும் கிளம்பி ; எல்லாம் ஒழுங்காய் நடந்தேறி ; மூன்று வாரங்களின் முடிவில், முழுசாய், ஒழுங்காய், வெள்ளைக்காரி யாரையும் கையோடு கூட்டி வராது, கதைகளை மட்டும் பேரன் கைபிடித்துக் கொண்டு வந்ததில் தாத்தா அடைந்த சந்தோஷம் தொடர்ந்த மாதம் முழுவதும் பிரதிபலித்தது எங்களின் அரட்டையில் ! முதல்வாட்டி பாரின் போய்விட்டு வரும் எவருக்கும், கதை கேட்க மட்டும் வாகாய் ஒரு ஆள் சிக்கினால், காதில் தக்காளிச் சட்னி கசியும் வரை போட்டுத் தாக்கும்  ஆசை பொங்கோ பொங்கென்று பொங்கும் ! நான் மட்டுமென்ன விதிவிலக்கா ? "ஜெர்மனி எப்படி இருந்துச்சு தெரியுமா தாத்தா ? லண்டன் தெரியுமா ? ஸ்காட்லாந்து தெரியுமா ? பெல்ஜியம் தெரியுமா ?" என்று கொலையாய்க் கொல்ல, அத்தனையையும் சந்தோஷமாய்க் கேட்டுக் கொள்வார் ! அந்நாட்களில் கடுதாசித் தொடர்புகளே மார்க்கம் எனும் போது, வேலை சார்ந்த progress பற்றிய விஷயங்கள் அத்தனையையும் சீனியரிடம் பகிர்ந்திடுவேன் ; தாத்தாவிடமோ, பொதுவாய் ஷேம நலன்களை பற்றி மட்டுமே ! 

1984-ல் துவங்கிய இந்த ரணகள ராத்திரிகள் - 1987 வரைக் குறையின்றித் தொடர்ந்தன ! அந்நேரத்துக்குள் நமது தொழிலுமே சிரமங்கள் ஏகமாய்க் குடியேறியிருந்தன - தந்தையின் நிறுவனத்துக்கு 1986-ல் மூடுவிழா நடத்தியதைத் தொடர்ந்து, அவர் பங்குக்கு மிஞ்சியதொரு முரட்டுக் கடன்தொகையினால் ! அந்தக் கடன்களுக்கு வட்டி கட்டியே என் குறுக்கு கழன்று போகத்துவங்கிட, 1987 / 88  முதலே மொக்கைகளின் மத்தியில் தான் வண்டி ஓடத்துவங்கியது ! அந்நாட்களிலுமே எங்களின் இரவு அரட்டைகள் விடாது தொடர்ந்தன - சிக்கல்களிருந்து விடுபடும் வழிகள் தேடி ! ஆண்டுகள் நகர்ந்திட, ஆபீசில் சிக்கல்களோ குரல்வளையை நெறிக்கும் ரேஞ்சுக்கு முன்னேறியிருந்தன ! ஆனால் நான் அவற்றை முழுசுமாய்த் தாத்தாவிடம் சொல்லாது தவிர்த்தே வந்தேன் - அவர் நிம்மதியைக் கெடுப்பானேன் என்று !

1992 புலர்ந்தது ; and அந்தாண்டே தான் தாத்தாவுக்கு மாரடைப்பின் முதல் அத்தியாயத்தை அறிமுகமும்  செய்து வைத்தது ! திடகாத்திரமாய் இருப்போருக்கு நோவே வராதென்ற அந்நாட்களது அசட்டுச் சிந்தனைகளா ? அல்லது பொதுவாய் அப்போதைய ஆயுட்காலங்கள் ஜாஸ்தி என்ற நிதரிசனத்தின் மீதான நம்பிக்கையா ? - சொல்லத்தெரியவில்லை ; ஆனால் எவ்வித மருத்துவ செக்கப்புகளும் செய்து கொள்ள அந்நாட்களில் தோன்றவேயில்லை யாருக்கும் ! So ஒரு கோட்டையின் சுவர்களில் விரிசல் விழுவதை ஆயுசில் முதன்முறையாகப் பார்க்க முடிந்தது !  மாரடைப்பு எத்தனை தாட்டியமான மனுஷாளையும் உலுக்கி விடுமென்பதை அந்நாட்களில் மௌனமாய் நான் பார்த்தேன் ! ஒய்வு அவசியம்  ; தூக்கம் அவசியம் ; நிம்மதி அவசியம் என்றான பின்னே அந்த ராத்திரி அரட்டைகள் குறையத் துவங்கின ; மாத்திரைகளில், எதிர்காலம் சார்ந்த பயங்களிலும் கரையத் துவங்கின !இதற்கு மத்தியில் எனக்கு அந்த வருஷமே கல்யாணம் செய்து வைக்கத் தீர்மானித்தனர் ! ஆபீசை ஓட்டவே திணறும் அழகில், இப்போதைக்கு கல்யாணமா ? என்று நான் தயங்கினாலும், தாத்தா பிடிவாதமாய் இருந்தார் ! So ஒரு சுபயோக சுபதினத்தில் குடும்பஸ்தனானேன் !  

மற்ற எல்லோரையும் விட, அவரோடு ஜாஸ்தி நேரம் செலவிட்டவன் நானே என்ற முறையில் தாத்தாவின் முடக்கம் உள்ளுக்குள் ஒரு இனமறியா பயத்தை உருவாக்கியிருந்தது ! நினைவு தெரிந்த நாள் முதலாய் தாத்தா உடம்புக்கு முடியாது படுத்ததாய் ஞாபகமே கிடையாதெனும் போது அவரொரு சூப்பர்மேன் என்று நான் நம்பியிருந்தேனோ - என்னவோ ; அவரைப் படுக்கையில் தளர்ந்து பார்ப்பது உள்ளுக்குள் பிசைந்தது ! அதுமட்டுமன்றி, சிக்கல் எதுவானாலும், ஒரு தைரியம் சொல்லவாச்சும் அவர் இருக்கிறாரே என்ற எனது அடிமனது நம்பிக்கை ஆட்டம் கண்டிருந்ததும் புரிந்தது !  நாட்கள் ஓடிட, தாத்தா கொஞ்சமாய்த் தேறியிருந்தார் ! அவரது பூர்வீக வீட்டுக்கே திரும்பிடத்  தீர்மானித்தவராய் அங்கே அவர் இடம்மாறிய சமயம், நமது காமிக்ஸ் அலுவலகம் அங்கு தான் செயல்பட்டுக் கொண்டிருந்தது ! In fact - 1989 முதலே காமிக்ஸ் அலுவலகத்தை அங்கே மாற்றியிருந்தேன் ! நாள் முழுக்க அங்கே ஓவியர்கள் ; டைப்செட்டிங் ஆட்கள் ; டெஸ்பாட்ச் staff என்று ஜெ ஜெவென இருப்பதை ரொம்பவே ரசிப்பார் ! மையமாய் ஒரு சேரைப் போட்டு அமர்ந்து கொண்டு ஜாலியாய் ஒவ்வொருவருடனும் அரட்டையடிப்பதில் அவரது நாட்கள் உற்சாகம் காணும். நானோ  பிரஸ் இருக்கும் இடத்தில பெரும்பான்மை நேரத்தைச் செலவிட்டு விட்டு அங்கே காமிக்ஸ் பணிகளைக் கவனிக்க வேளை கெட்ட வேளையில் போனாலும், தவறாது என்னோடு பேசிக்கொண்டிருப்பார் !

நான் வரும் போது என் முகரையில் தெரியும் சோர்வைக்கொண்டே கணித்து விடுவார் - தம்புடு பையில் தம்படி லேதுவென்று ! கடன்கள் சிறுகச் சிறுக அழுத்துவதை இயன்றமட்டும் வெளிக்காட்டிக் கொள்ளாது நான் சுற்றி வந்தாலும், எனது ஒவ்வொரு எட்டையும் உடனிருந்து பார்த்தவருக்குத் தெரியாதா - என் சிரமங்கள் பற்றி ?  நிலைமை கொஞ்சம் கொஞ்சமாய்க் கைமீறத் துவங்கிய சமயம் அவரிடம் நிலவரத்தைச் சொல்லாது இருக்க முடியவில்லை ! என்ன நினைத்தாரோ தெரியாது - தொடர்ந்த 90 நாட்களுக்குள் அவர் வாங்கிப் போட்டிருந்த சொத்துக்களின் பெரும்பான்மையை விற்று, எனது தலைக்கு மேல் கத்தியாய்த் தொங்கிக்கொண்டிருந்த கடன் தொகையின் முழுமையையும் தீர்க்கும்  பணத்தைப் புரட்டியிருந்தார் ! இருந்த கடன்கள் சகலத்தையும் 1994-ல் தீர்த்து முடித்த போது என்னுள் இருந்தது நிம்மதியா ? நன்றியுணர்வா ? ஒவ்வொரு பள்ளத்தில் கால்விடும் போதும் காப்பாற்றும் இவரின்றி வாழ்க்கைச் சக்கரங்கள் ஓடத்தான் செய்யுமா ? என்ற கேள்வியா ? - தெரிந்திருக்கவில்லை ! தொடர்ந்த நாட்களில் பிடுங்கல்கள் இல்லாது, தொழில் செய்யும் சுதந்திரத்தை ரசித்தவனாய், மிஷினரி இறக்குமதித் தொழிலுக்குள் மெதுவாய்க் கால்பதித்தேன் !

அதுநாள் வரைக்கும் அந்த ஆரம்பத்து 2 ஐரோப்பியப் பயணங்களுக்குப்  பின்னே, கடல்கடந்து செல்லும் அவசியம் எழுந்திருக்கவில்லை ! ஆனால் இந்த இறக்குமதித் தொழிலின் நிமித்தமோ, உலக வரைபடத்தை அடிக்கடி பயணப்பட்டியலில் கொணர வேண்டிப் போன போது தாத்தாவுக்கு சொல்லி மாளா வியப்பு ! எங்கெங்கோ பயணங்கள் ; ஏதேதோ வியாபார முயற்சிகள் என்பதில்  அளவிட இயலா மகிழ்ச்சி ! ஆனால் என்ன கூத்தடித்தாலும், தாத்தாவைப் பார்த்துப் பேசாது இருந்த நாட்கள் குறைவே ! 1998-ல் ஒரு டிசம்பரின் அதிகாலையில், ஏற்கனவே ஆஸ்பத்திரியில் இருந்தவரை மாரடைப்பின் மூன்றாம் அத்தியாயம் காலனிடம் காணிக்கையாக்கிய  தகவல் வந்த போது நானும், என் தம்பியுமே அவரை வீட்டுக்கு கொண்டு வர ஓடினோம் ! சின்ன அந்த அறையின் தரையில் விழுந்து கிடந்தவரை தூக்கிப் படுக்க வைக்கக் கூட அங்கு யாருக்கும் தோன்றியிருக்கவில்லை ; மாரடைப்பு தாக்கிய நொடியில் கீழே விழுந்ததில் நெற்றிப்பொட்டில் இரத்தம் கட்டியிருக்க, தரையில் face down கிடந்தார் ! ஆயுளெல்லாம் எங்கள் ஒவ்வொருவரையும் தூக்கி நிறுத்துவதையே தன் லட்சியமாய்க் கொண்டிருந்தவரை அந்தக் காலையில் தரையிலிருந்து தூக்கிட வேண்டிப் போனது தான் விதியின் வினோதம் !

இன்றைக்கு ஆண்டுகள் 22 ஓடிவிட்டன ; தலைமுறைகள் மாறி விட்டன ; காலங்கள் மாறி விட்டன ; காட்சிகளும் மாறி விட்டன ; வாழ்க்கையின் ஏற்றங்களையும் பார்த்தாச்சு ; பள்ளங்களையும் உணர்ந்தாச்சு ! நிறைய விஷயங்கள் இன்றைக்கு மறந்தும் விட்டன ; நிறைய வலிகளைக் கடந்தும் விட்டாயிற்று ! யார் வாழ்வில் தான் இழப்புகளில்லை ? யாரிடம் தான் வலிகள் இல்லை   ? அன்றைக்கு தூரத்துக் கனவாய்த் தோன்றிய பல விஷயங்கள் இப்போது சுலபமாய்த் தொட்டு விடும் தொலைவில் இருக்கின்றன தான் ! இன்றைய நமது காமிக்ஸ் முயற்சிகளும், இந்த வாசகச் சந்திப்புகளும், இந்த சந்தோஷங்களும், அவர் இருந்த நாட்களிலெல்லாம் சாத்தியப்பட்டிருப்பின், அவர் அடைந்திருக்கக்கூடிய குதூகலத்துக்கு எல்லைகளே இருந்திராது ! என்றைக்கேனும் ஏதேனும் மனதை நெருடிடும் சமயமெல்லாம் தாத்தாவுடன் கழித்த அந்த அரட்டை ராத்திரிகளைத் தான் நினைத்துக் கொள்வேன் ! இந்தப் பதிவின் துவக்கத்தில் என் முன்வைக்கப்பட்ட அந்தக் கேள்வியை வாசித்த போது - 900 ரூபாய்க்கென முக்கால் ராத்திரி முழித்திருந்த அந்த ஒற்றை வேளையை மட்டுமேனும் மறுக்கா வாழ்ந்து அனுபவிக்கும் பொருட்டு, தாத்தாவை கூப்பிட முடிந்தால் தப்பில்லையே என்று நினைத்தேன் ! சொல்லுங்களேன் guys - எனது தேர்வு ஓ.கே.வா ? என்று ?! இதை நான் டைப்படித்து முடிக்கும் போது மணி மூன்று !! கிட்டத்தட்ட அந்த இரவினைப் போலவே என்பதை நினைத்துக் கொண்டே தூங்கப் செல்கிறேன் !! 

Bye all & thanks for reading this !!  I know this has been one huge rambling....ஆனால் மனதில் பட்டத்தை எடிட் செய்ய முனையாது பகிர்ந்துள்ளதன் பலனிது ! ஓவராய் படுத்தியிருந்தேனெனில் sorry !! See you around !!
மாரடைப்புக்குப் பின்னான போட்டோ என்பதால் தாத்தாவின் சவரம் செய்திரா முகத்தில் தளர்ச்சி தென்படக்கூடும் ! 1992 ...நவம்பர்... என் திருமணத்துக்கு முந்தைய நாள் இரவினில்  எடுத்த போட்டோ !