நண்பர்களே,
வணக்கம். ஜனவரி நமக்கு அதிரடியாகத் துவங்கியதெனில் பிப்ரவரி அழகானதொன்றாக அமைந்துள்ளது என்று சொல்லலாம் ! வழக்கமாய் நமது இரவுக் கழுகார் முன்நிற்க- அவரது பரந்த தோள்களுக்குப் பின்னே மற்ற நாயகர்கள் பதுங்கி நிற்பது நடைமுறை. ஆனால் ஜனவரியையும் சரி, இம்மாதத்தையும் சரி- புதியவர்களும், சற்றே விளிம்புநிலை நாயகர்களும், தமதாக்கிக் கொண்டுள்ளது ஒரு ‘பளிச்‘ மாற்றம் என்பேன் ! சத்தமின்றி மிரட்டிச் சென்ற ட்யுராங்கோவும் ; சத்தமாய் தங்கள் இருப்பைப் பதிவு செய்து வைத்த ப்ளுகோட் பட்டாளமும் ஜனவரியின் highlights எனில், ஜேசன் ப்ரைஸ் & மதி மந்திரியாரே பிப்ரவரியின் ஒளிவட்டத்தைப் பகிர்ந்திடுவோர் ! கதைகளென பார்த்தால் ஜேசனும், மோடி மஸ்தானும் - வானவில்லின் இரு எதிரெதிர் முனைகள் ! முன்னது இருண்ட, முரட்டு, மிரட்டல் களமெனில், பின்னது ஜாலியான, ‘பளிச்‘சென்ற சிரிப்பு உருட்டல் களம் ! “ஆனால் இதையும் ரசித்திடுகிறோம்- அதனையும் அமர்க்களப்படுத்திடுகிறோம் !” என்ற ரீதியில் உங்களது ரசனைகள் flexible ஆக அமைந்திருப்பது- இந்தக் காமிக்ஸ் பயணத்தில் நாம் கடந்து வந்துள்ள தூரத்தை ஸ்பஷ்டமாகச் சுட்டிக் காட்டுகிறது ! So ‘ரசனைகளின் பரிணாம வளர்ச்சி‘ என்பதே இந்த ஞாயிறின் மகா சிந்தனையின் பலனான பதிவு !
முப்பது ஆண்டுகளுக்கு முன்பாய் இதே வேளையில் தான் நமது லயன் காமிக்ஸின் ஒரு மைல்கல் நிகழ்வு நிஜமாகியது ! Yes- இதுவரையிலான எனது 33 ஆண்டுகால அனுபவத்தில் நமது லயன் / முத்து காமிக்ஸ் இதழ்களுள் ஆகக் கூடுதலான printrun பார்த்திட்ட இதழான “புரட்சித் தலைவன் ஆர்ச்சி” வெளியானது 1987-ன் பிப்ரவரியில் தான் ! 31,000 பிரதிகள் அச்சிட்டோமென்பது நினைவுள்ளது & மொத்தமுமே 6 மாதங்களுக்குள் விற்றும் தீர்ந்து விட்டது ! So முப்பதாண்டுகளுக்கு முன்னே நாம் வாஞ்சையாய்ச் சவாரி செய்து கொண்டிருந்தது சட்டி மண்டையன் ஆர்ச்சியோடும் ; கூர்மண்டையன் ஸ்பைடரோடுமே ! ரசனைகளில் ‘இது உசத்தி; அது கம்மி !‘ என்ற பாகுபாடுகள் இருந்திடத் துளியும் அவசியம் கிடையாது தானே ? So நமது அந்நாளைய tastes இந்த ‘காதுல புய்ப்பம்‘ கதைகள் பக்கமாகயிருப்பின் அதன் பொருட்டு இன்றொரு ஏளனச் சிரிப்பை உதிர்த்திடப் போவதில்லை நான் ! மாறாக- ஏணியில் ஏறும் படலத்தின் முதல் படியாக அதனை வகைப்படுத்திப் பார்க்க நினைக்கிறேன் ! “பாதாளப் போராட்டம்” கதையை மொழிபெயர்க்க இன்றைக்கு அமர்ந்தேனெனில் கைப்புள்ளையின் பச்சைச் சட்டையை விடவும் எனது சொக்காய் கந்தலாகிப் போகுமென்பது உறுதி ! ஆனால் 1984-ல் அதை எழுத உட்கார்ந்த சமயம் எனக்கு உடம்பெல்லாம் புல்லரிக்காத குறை தான் ! ஆர்ச்சியின் முதல் இதழான “இரும்பு மனிதன்” இன்றைக்கு என் கையில் சிக்கியிருப்பின், ஒரு இருட்டான மூலையில் அதைப் பதுக்கி விட்டுப் பீரோவைப் பூட்டி, சாவியைக் கிணற்றுக்குள் தூக்கிப் போட்டு விட்டிருப்பேன் ! ஆனால் அன்றைக்கோ அது எனக்கு (& உங்களுக்கு) நல்கிய புளகாங்கிதம் (!!!) டண்டணக்கா ரகம் ! So அன்றைய நமது வயதுகளுக்கு ; நமது முன்னிருந்த பொழுதுபோக்கு சாதனங்களுக்கு இந்தக் கதைரகங்கள் அழகாய் ஈடு கொடுத்துள்ளன என்பது புரிகிறது ! (இன்னமும் ‘அண்ணன் ஆர்ச்சிக்கு‘ ஆளுயரக் கட்-அவுட் வைக்க ஏங்கும் நண்பர்களும் உண்டென்பதை நானறிவேன்!)

இந்த fantastic சூப்பர் ஹீரோக்கள் பாணிகளிலிருந்து விலகி நின்று யதார்த்தக் கதைக் களங்களை நாம் ரசிக்க ரோடு போட்டு வைத்தவர் நமது இளவரசியும், வில்லி கார்வினுமே என்பேன் - லயனைப் பொறுத்த மட்டிலாவது ! கலர் கலரான காஸ்ட்யூம்கள் கிடையாது ; ஹெலிகார் ; காலப் பயணக் கோட்டை‘ என்றெல்லாம் புய்ப்பச் சூட்டல்கள் ஏதும் கிடையாது ; இரத்தமும், சதையுமான தடித் தடி வில்லன்கள் மட்டுமே இங்கே......அவர்களைப் பந்தாடும் இந்த சாகஸ ஜோடியும் போலீஸோ, டிடெக்டிவ்களோ, நீதிக் காவலர்களோ கிடையாது ! அமெரிக்காவும், ரஷ்யாவும் உலக வல்லரசுகளாகவும்; நிரந்தரப் பகையாளிகளாகவும் லயித்திருந்த Cold War நாட்களில் ஜேம்ஸ் பாண்ட் கதைகள் செம ஹிட் ! அந்த பாணியைக் கொஞ்சமாய் இரவல் வாங்கிக் கொண்டு ரஷ்ய வில்லன்கள்... உளவுத் துறை... டபுள்ஏஜெண்ட் etc... etc... என்று மாடஸ்டியின் கதைகளின் ஒரு பகுதியை அமைக்கத் தொடங்கியதால் அந்நாட்களில் இந்தப் பெண் புலியும் ஒரு வெற்றிகரமான (காமிக்ஸ்) நாயகியாக வலம் வந்ததில் வியப்பில்லை ! Of course- “கண்ணுக்குக் குளிர்ச்சியான” அந்த சித்திர பாணிக்கும் இந்தத் தொடரின் வெற்றியிலொரு பங்குண்டு தான்! So நமது ரசனை ஏணியின் இரண்டாவது படியில் பிளைஸி & கார்வினின் அந்த maverick ஆக்ஷன் பாணியினைச் சொல்லலாம் !
1985-ன் தீபாவளி - நமது காமிக்ஸ் வாசிப்புகளை நிறைய விதங்களில் மாற்றியமைத்த புண்ணியம் சேர்த்துக் கொண்டதொரு திருநாள் என்று சொல்லலாம் ! என் பேரன் காலத்திலும் அந்த மஞ்சள்சட்டை மாவீரரை நாம் சிலாகித்துக் கொண்டிருப்பது ஓயப் போவதில்லை என்பதால் - டெக்ஸ் வில்லரின் 32 ஆண்டுகளுக்கு முன்பான அறிமுகத்தை ஒரு gamechanging moment என்று பார்த்திடலாம் தானே ? அதற்கு முன்பாகவும் உதிரியான one-shot கௌ-பாய் நாயகர்களென நாம் பார்த்திருப்போம் தான் ! ஆனால் - கௌபாய் ரசனைகளை நம் மனங்களில் ஆணியடித்து நிரந்தரமாக்கியது இரவுக்கழுகார் தானே ? தொடர்ந்த காலங்களில் கேப்டன் டைகர் அந்த genre-ஐ இன்னுமொரு புது உயரத்துக்கு இட்டுச் செல்ல சாத்தியமானதுமே 1985-ல் போடப்பட்ட சாலையின் மீது தானே ? இன்றைக்கு கமான்சே ; பவுன்சர் ; ட்யுராங்கோ என்ற பெயர்களெல்லாம் நமக்கு ராமசாமி...முனியாண்டி.....நடராஜன் என்ற ரேஞ்சுக்கு ரொம்பவே பரிச்சயமான பெயர்களாய் மாறியிருப்பின், எல்லாப் புகழும் கௌபாய் ரசனைகளையும் நேசிக்கக் கற்றுத் தந்த அந்த இத்தாலிய மின்னல் மைந்தனுக்கே தானே ? So அந்த ஏணியின் படி # 3 – நமது கௌபாய் ரசனைகளின் வேரூன்றல் என்பேன் !
1986-ன் ஜனவரியும் - நம்மளவில் ஒரு புதுப் பூங்கா மலர்ந்திட வித்துக்களை விதைத்த மாதமென்பேன் ! Yes - ‘திகில்‘ அறிமுகமான பொழுதல்லவா அது ? கதைகளில் ஹாரர் என்ற genre-ஐ நமக்குக் காட்டியது மட்டுமன்றி, “முழுநீளக் கதைகள் தவிர்த்த சகலமுமே filler pages-க்கு மட்டுமே லாயக்கு !” என்பதான நமது mindset-க்கு மாற்றத்தின் அவசியத்தை சுட்டிக்காட்டிய வேளையது ! அன்றைய தினம் அந்தப் பரிசோதனை சொதப்பலில் தான் முடிந்தது என்பதை நான் மறுக்கப் போவதில்லை ! ஆனால் ஒரு புது ஆரம்பத்துக்கு வழிகாட்டியாக நின்ற அந்தத் ‘திகில்‘ இதழ் நமது பயணத்தினில் ஒரு முக்கிய இதழே ! அமானுஷ்யங்கள் சார்ந்த கதைகள் ; “பதிமூன்றாம் மாடி” போன்ற முற்றிலும் மாறுபட்ட களங்கள் ; (பின்நாட்களில்) “கறுப்புக் கிழவியின் கதைகள்” என ஏகப்பட்ட ‘ஹிட்‘கள் இந்த ஹாரர் genre-ல் கூட சாத்தியமே என்ற புரிதலோடு ஏணிப்படியின் step # 4 ஆக அந்த ரசனையைச் சொல்லி வைப்போமா?
1986-ன் ஜனவரியில் இன்னமுமொரு புதுப் பாதைக்குப் பிள்ளையார் சுழி போடப்பட்டிருந்தது ! யுத்தக் கதைக்களத்தை நமக்கு (லயனில்) முதன்முதலாகக் கண்ணில் காட்டியவர் இரும்புக்கை நார்மன் தானே ? “மனித எரிமலை” அந்த இறுக்க முக ஆக்ஷன் நாயகரின் memorable hit என்ற போதிலும், அந்நாளில் எனது மையல் அவரது உலோகக்கை மீதே பதிந்து கிடந்தது ! கையில் உலோகமிருந்தால் லோகத்தையே வாங்கி விடலாமென்ற சிந்தனை எனக்கு மாத்திரமன்றி, ஒரு நூறு காமிக்ஸ் பதிப்பகங்களுக்கும் இருந்த நாட்களன்றோ அவை ? “அட்ரா சக்கை... எங்ககிட்டேயும் ஒரு இரும்புக்கைப் பார்ட்டி இருக்காரே!” என்று முத்து காமிக்ஸை நோக்கிப் பழிப்புக் காட்டிடத் தான் அப்போதைக்குத் தோன்றியது எனக்கு. யுத்த கதைகளை நமக்கு மேற்கொண்டும் பரிச்சயம் செய்து வைக்க அதிரடிப்படை ; பெருச்சாளிப் பட்டாளம் ; மின்னல் படை சார்ஜெண்ட் தாமஸ் என்று நிறையப் பேர் மெனக்கெட்டுள்ளனர் ! இவை சகலமும் இங்கிலாந்தின் தயாரிப்புகள் எனும் போது - உலக யுத்தத்தில் வெற்றி கண்ட அவர்களது பார்வைக் கோணங்களே எல்லாக் கதைகளின் அடித்தளமும் என்பதாலோ, என்னவோ ஒருவித stereotyped பாணியிலேயே பெரும்பாலான கதைகள் அமைந்து போயின ! Maybe இன்னும் சிறிது காலம், விடாமுயற்சியாய் அந்தக் கதைகளை வெளியிட்டிருந்தால், இன்றைக்கு “விண்ணில் ஒரு வேங்கை” பாகம் 2; 3 ஆர்வமாய் போணியாகியிருக்கக் கூடும் ! Just miss !!! எது எப்படியோ- ரசனைகளில் யுத்தக் கதைகளையும் நாம் விட்டு வைக்கவில்லை என்ற திருப்தி மிஞ்சுகிறதே - ஏணியின் படிக்கட்டு நம்பர் 5 -ல் !
அதே 1986-ல் நமது ரசனைகள் மேற்கொண்டுமொரு புது திசையில் take-off ஆனதை மறக்கத் தான் முடியுமா ? ‘ஙே‘ என்ற முழியோடும், மொட்டையடித்த தலையோடும், பெயரின்றி நின்ற அந்தப் புதுமுகத்தை நாம் எவ்விதம் ஏற்றுக் கொள்ளப் போகிறோமோ ? என்று 1986-ன் மே மாதம் என் வயிற்றில் கரைந்த புளியைக் கொண்டு ஒரு சின்ன கல்யாணப் பந்திக்கே ரசம் செய்திருக்க முடியும் !
தலை எது? தூர் எது ? எங்கே துவங்கி - எத்தனை தூரம் பயணித்து - எங்கே நிறைவு காணும் ? என்பதை யூகிக்கக் கூட வாய்ப்பில்லாத அன்றைய தினத்திலும் - “
இரத்தப் படலம்” கொண்டிருந்ததொரு இனம்புரியா ஈர்ப்பு - கிராபிக் நாவல்கள் திசையிலான நமது முதல் எட்டு ! டிடெக்டிவ்கள் மட்டுமே எடுபடுவர் ; சூப்பர் நாயகர்களுக்கு மட்டுமே வெகுஜன வரவேற்பிருக்கும் என்றதொரு எழுதப்படா விதியினை முதலில் டெக்ஸ் வில்லரும், அப்புறமாய் நமது நண்பர் XIII-ம் முறியடித்தது நமது ரசனைகளின் பரிணாம வளர்ச்சியல்லவா ? So - ஏணியின் படி # 6 கிராபிக் நாவல்களின் ரசனை ! இதில் கொடுமை என்னவெனில் இன்றைக்கு "
கி.நா.க்களா ?" என்று அலறிடும் நண்பர்கள் கூட, அது என்னவென்றே தெரியாத நாட்களிலேயே இரத்தப் படலத்தை மாங்கு மாங்கென்று ஆதரித்து வந்துள்ளனர் !
பூ கூட டூ... புய்ப்பம் கூடப் பழம் !!! இரத்தப் படலத்தின் மறு மாதமே வெளியான ரோஜரின் “
மர்மக் கத்தி” கூட ஒரு கிராபிக் நாவலுக்கான தகுதிகள் கொண்ட கதையே என்பேன் ! அந்நாளில் அதனையுமே - வாஞ்சையோடு அரவணைத்துக் கொண்டவர்கள் தானே நாமெல்லாம் ?
பரந்து விரிந்த கடல்... அதில் அலையாடும் சிறு படகு ; படகினுள் ஒரு பரட்டைத் தலையன் ; டாஸ்மாக்கைக் குத்தகைக்கு கேட்கும் ஒரு குடிகாரக் கிழம் ; ஒரு அரை டிக்கெட் பொடியன் - என்ற கூட்டாளிகள் ! இவர்களுக்கு வரையப்பட்டிருந்த சித்திரங்களோ – ஒரு பண்ணைக் கோழிகள் ஒட்டுமொத்தமாய் கீச்சி வைத்திடக் கூடிய தடங்களுக்கு நிகரானது ! இந்த combo-வில் ஒரு கதைத்தொடர் ; அதனைத் தமிழில் நாம் ரசிப்போம் என்பதை
கேப்டன் பிரின்ஸின் "பனிமண்டலக் கோட்டையின்" வெற்றிக்கு முன்பாக சத்தியமாய் நம்மில் யாரும் நம்பியிருக்க முடியாது தான் ! ஆனால் உளவுத்துறைகள் இல்லாமலே ; ஜேம்ஸ் பாண்ட் பாணி நாயகர்கள் இல்லாமலே ; டமால்-டுமீல் தோட்டாப் பாய்ச்சல்கள் இல்லாமலே கூட ஒரு தொடர் mass ஹிட்டாகிட முடியுமென்று நிரூபித்த இந்தத் தொடர் - நமது ரசனைகளின் நாற்கால் பாய்ச்சலில் ஒரு முக்கிய தருணம் ! ஓவியர் ஹெர்மனின் அசுர ஆற்றலுக்கொரு பறைசாற்றலும் கூட என்பேன் ! பின்நாட்களில் களமிறங்கிய பீட்டர் பாலண்டைன்; வன்ரேஞ்சர் ஜோ போன்றோரும் - இயற்கையோடு இணைந்து சாகஸங்கள் செய்திடும் பாணியை விசாலப்படுத்தியவர்களே ! So - ‘எது மாதிரியுமிலாப் புது மாதிரி‘ என்ற விதத்தில் இதுவும் கூட ஒரு ரசனைப் படிக்கட்டு தானே ? Number 7!
1987-ன் ஜனவரியும் ஒரு ground breaker நமக்கு ! ஜுனியர் லயன் காமிக்ஸ் தீர்க்கமான ஆயுள் கொண்டிருக்கவில்லையெனினும், அது விட்டுச் சென்ற legacy இன்றளவும் நமது கார்டூன்களில் தொடர்ந்திடுகிறதல்லவா ? ஒரு தலைவாங்கிக் குரங்கைத் தேடிப் புறப்பட்டதொரு ஆக்ஷன் கௌபாய் 1985 முதல் நம்மைக் கட்டுண்டு வைத்திருப்பது ஒரு பக்கமெனில், ரௌத்திரத்தில் தெருவில் விரட்டி ஓடும் யானையையும், காய்கறி சூப் குடிக்கும் சிங்கத்தையும், சமாளிக்கவொரு ஒல்லிப்பிச்சான் கௌபாய் களமிறங்கியது 1987-ல் தானே ? விச்சு & கிச்சு; கபிஷ் ; அதிமேதை அப்பு போன்ற துண்டுத் துக்கடாக்களைத் தாண்டியும் ஒரு பரந்த காமிக்ஸ் உலகம் காத்துள்ளது ; அதனைப் படித்திடவும், ரசித்திடவும் மனதளவில் சுட்டிகளாக இருந்தால் கூடப் போதுமென்பதையும் நமக்குப் புரியச் செய்த புண்ணிய ஆத்மா லக்கி லூக் தான் ! அவர் திறந்து வைத்த கதவு தான் - பின்னர் சிக் பில் ; Smurfs ; க்ளிப்டன் ; பென்னி ; மதியில்லா மந்திரி ; ஹெர்லக் ஷோம்ஸ் என்று ஏகப்பட்ட சிரிப்புப் பார்ட்டிகளுக்கு சுலபமாய் என்ட்ரி தந்திட உதவியதல்லவா ? So ஏணியின் முக்கியப் படிகளுள் இந்த கார்ட்டூன் genre ஒன்றல்லவா ? Step # 8 !
1980-களின் இறுதியில் சத்தமின்றி வெளியானதொரு லயன் இதழானது Fantasy கதைகளுக்கு நம்மை இட்டுச் சென்ற முன்னோடி !
சாம்ஸன் என்ற ஜடாமுடிப் போர்வீரனின் சாகஸங்களைத் தாங்கிய “
மந்திர ராணி” இன்றைய தோர்கல்களுக்கெல்லாம் ரொம்பவே சீனியர் ! சில மாதங்கள் கழித்து “
தங்க நகரம்” என்ற இதழில் தலைகாட்டிய பின்னே hibernate mode-க்குள் புகுந்து விட்டாலும், நமது ரசனைப் படிகளில் ஒரு சின்னப் பங்கு இவருக்குண்டு ! "மோசமில்லை" என்ற வரவேற்பைப் பெற்றிருப்பினும், அந்நாட்களில் இந்தத் தொடரினை நான் தொடராது போனதன் காரணம் நினைவுக்கு வர மறுக்கிறது ! Anyways படிக்கட்டு எண் 9 !
டிடெக்டிவ் Z என்றொரு ரோபோ நாயகர் நமது கதைவரிசையில் ஒரு குட்டித் தலைகாட்டலைச் செய்திட்டதை நமது துவக்க நாட்களது வாசகர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை ! இவருமே 1980 களின் பின் பகுதியில் திடுமென என்ட்ரி தந்தவர் ! அந்நாட்களில் FLEETWAY வார இதழ்கள் சகலத்துக்கும் நான் சந்தா செலுத்தியிருந்தேன் என்பதால், அங்கே அவர்கள் தும்மல் போட நினைக்கும் தருணமே எனக்கும் மூக்கு குறுகுறுத்து விடும் ! அவ்விதம் தான் மிஸ்டர் Z எனக்குப் பரிச்சயம் ! EAGLE என்ற அவர்களது வார இதழில் இந்த எதிர்காலத்து போலீஸ்காரர் தலைகாட்டி மறு மாதமே துண்டைப் போட்டு வைத்து விட்டேன் - இந்த சீட் நமக்குத் தானென்று ! So sci -fi ரகக் கதைகளை மேம்போக்காகவேணும் நமக்கு காட்டிய இந்த நாயகரும் ரசனை ஏணியில் படி # 10 -குத் தகுதி வாய்ந்தவரே !!
So என்றைக்கோ இத்தனை படிகளையும் தாண்டிய "பழங்கள்" என்ற பெருமை நமக்கிருப்பதாலோ என்னவோ - ஜேசனையும், மந்திரியாரையும் ஒரே மூச்சில் ஊதித் தள்ளிட சாத்தியமாகிறது போலும் !! நிஜமாய் பெருமிதப் பெருமூச்ச்சொன்று வெளிப்படுகிறது நமக்கு கிட்டியுள்ள வாசகர்களின் பன்முகத்தன்மையினை நினைத்திடும் போது!! Salute to this ultimate bunch of comics lovers !!
அப்புறம், திருப்பூரில் நடந்து வரும் புத்தக விழா அதிரடி ரகத்தில் இல்லா விட்டாலுமே, decent ஆனா விற்பனையைக் கண்ணில் காட்டியுள்ளது முதலிரு நாட்களிலுமே !! அடுத்த 10 நாட்களுமே இந்த அதிர்ஷ்டம் தொடரின், 2017 -ன் பயணம் பிசிறின்றி வேகம் பிடித்திட வைட்டமின் "ப' கிட்டிடும் !! அப்புறம் இந்த ஊர் சுற்றும் படலம் தொடரவிருப்பது "பெரம்பலூர் BAPASI புத்தக விழாவின் " மார்க்கத்தில் ! தேதிகள் தெரியவில்லை இன்னமும் ; ஆனால் நாமங்கு இருப்பது உறுதி !!
பிப்ரவரி இதழ்களின் விமர்சனங்களைத் தொடர்ந்திடுங்கள் guys !! ரொம்பவே சுவாரஸ்யமாய் உள்ளது - உங்கள் ஒவ்வொருவரின் பார்வைக் கோணங்களையும், அவரவரது பிரத்யேக எழுத்துப் பாணிகளில் ரசித்திடும் போது !! Keep writing please !! மீண்டும் சந்திப்போம் !! அது வரை - happy reading !! Bye for now !!
திருப்பூரிலிருந்து சுடச் சுட !!