Powered By Blogger

Tuesday, February 20, 2024

பல்லடத்துப் படலம் !

நண்பர்களே,

வணக்கம். காமிக் கான் ஞாயிறு ....!! எழுந்த போதே கொட்டாவியோடு ஒரு சன்னமான பரபரப்பும் தொற்றிக்கொண்டிருந்தது ! 'இன்னிக்கி தானே டின்டின் கூப்பன்களின் லக்கி டிரா ; நேபாளம் செல்லவிருக்கும் அதிர்ஷ்டசாலியைத் (!!) தேடிப் பிடிக்கவிருக்கும் நாள் !!' என்ற எண்ணம் உள்ளுக்குள் வேகம் எடுத்துக் கொண்டிருந்தது ! ஆனால் இன்னொரு பக்கமோ லைட்டாய் ஒரு கலக்கமும் ! ஒரு பேமிலி தோசையை மடக்காமல் அப்படியே வைக்கக்கூட சிரமப்படும் அளவிலானதொரு புறாக்கூடு ஸ்டால் ; எதிர்த்தாப்லே பாதையில் நின்னால் குச்சைக் கொண்டு குத்தும் தன்னார்வலர் குழு ; பற்றாக்குறைக்கு இந்த தொள்ளாயிரம் ரூபாய் நுழைவுக்கட்டணம் மிரட்டுவதில் ரொம்பச் சொற்பமாகவே நமது ரெகுலர் வாசகர்கள் வருகை தந்திடும் நிலவரம் !! இவற்றினூடே குலுக்கலை நடத்துவது எவ்விதம் ? சிவனேன்னு ஊருக்குப் போய் சீனியர் எடிட்டரை சீட்டெடுக்கச் சொல்லிப்புட்டு அதை லைவில் காட்டிடலாமா ? என்றெல்லாம் நினைக்கத் தோன்றியது ! ஆனால் "அம்புட்டு சீட்டிலேயும் ஒரே பெயரை எழுதிப்புட்டானுங்க ! எந்த சுவிட்சை அமுக்கினாலும் மேற்படிக் கட்சிக்குத் தான் ஓட்டு விழுகுதுடோய் !" என்ற ரீதியில் நம்மை மு.ச.க்குள் பிதுக்க ரெடியாகி விடும் காட்சி மனக்கண்ணில் ஓட, அந்த எண்ணத்தை சடுதியில் டிராப் செய்து விட்டேன் ! ஒண்ணும் இல்லாங்காட்டி - ஸ்பைடர்மேனாய், அனிமே கதாப்பாத்திரங்களாய் டிரெஸ் பண்ணிக்கொண்டு போற வார குட்டீஸ்களில் யாரையாச்சும் ஸ்டாலுக்குள் கூட்டியாந்து டப்பிக்குள் கைவிட்டு ஒரு சீட்டை எடுக்கச் சொல்ல வேண்டியது தானென்று தீர்மானித்திருந்தேன் !

காமிக் கானில் என்ன எதிர்பார்ப்பதென்று முதல் தினத்தின் உபயத்தில் நன்றாகவே புரிந்திருக்க, அது சார்ந்த குறுகுறுப்பு என்னுள் இல்லை ! முதல் நாளின் விற்பனையில் மாயாவி ஹெவியாய் ஸ்கோர் செய்திருந்தார் ; இத்தனைக்கும் நாம் லேட்டஸ்ட்டாய் மறுபதிப்பிட்ட இரண்டே title-களைத் தான் கொண்டு போயிருந்தோம் ! And டெக்சிலுமே லேட்டஸ்ட்டாக வெளிவந்திருந்த மூன்றே டைட்டில்களைத் தான் சென்னைக்குப் பயணமாகியிருந்தது ! So அவசரம் அவசரமாய் மாயாவியில் மேற்கொண்டு புக்ஸ் ; டெக்சில் இன்னும் சில டைட்டில்ஸ் என்று சிவகாசியிலிருந்து போட்டு விடச் சொல்லியிருக்க, அவற்றை நமது staff சரவண கணேஷ் எடுத்தும் கொணர்ந்து ஸ்டாலில் சேர்த்த சற்றைக்கெல்லாம் நானுமே அங்கே ஆஜராகியிருந்தேன் ! 

மணி 11 ஆன நொடியே முதல் நாளைப் போலவே விசிட்டர்ஸ் சுனாமியாய் உட்புகுந்தனர் !! சனிக்கிழமையைப் போலவே ஓட்டமாய்ப் போய் பொம்மை கடைகளில் தொங்கிக்கொண்டிருந்த நீள நீளமான சாமுராய் கத்திகளையும், டி-ஷர்ட்களையும் ரவுண்டு கட்டத் துவங்கினர் ! நான் கூட அந்தக் கத்தி ஒரு நானூறு, ஐநூறு இருக்குமென்று நினைத்திருந்தேன் - அது விற்பனையாகும் துரிதத்தைப் பார்த்து ! ஆனால் சாமுராய் வாளும் கையுமாய்,  தனது ஜூனியரோடு ஸ்டாலுக்கு வந்திருந்த ரெகுலர் வாசக நண்பரிடம் கேட்ட போது - "விலை 2500 சார்" என்றார் !! "சர்தான் - இவுகளுக்குலாம் மூ.ச.கிடையாது போல...நல்லா வருவீங்கடா டேய் கடைக்காரனுங்களா !!" என்று நினைத்துக் கொண்டேன் ! டி-ஷர்ட்களிலும் இதே கூத்தே நடந்து கொண்டிருந்தது ! ஈரோட்டுச் சந்தையிலோ ; திருப்பூரின் எக்ஸ்போட் மீதங்களிலோ, அம்பது ரூபாய்க்கு அள்ளிக்கினு, இன்னொரு முப்பது-நாப்பது ரூபாய்க்கு அவற்றின் மீது பிரிண்ட் போட்டுக்கினு - அவற்றை "ONLY 599 ; ரெண்டா வாங்குனா ரூ.999 " என்று ஓட்டிக்கொண்டிருந்தார்கள் ! இதையெல்லாம் பார்த்து விட்டு நம்மாட்களும் - "சார்...நாமளும் பொம்மை போடுவோம் ; டி-ஷர்ட் போடுவோம் ; போஸ்டர் போடுவோம் !" என்று பொங்காதில்லை ! ஆனால் இந்தக் கடைக்காரர்களுக்கு போணியாகும் சரக்குக்கும், நாம் இதனில் மெனெக்கெட்டால் ரெடி செய்திடக்கூடிய சரக்குக்கும் பெரும் வித்தியாசம் இல்லாது போகாதென்பதை பொறுமையாய்ப் புரிய வைத்தேன் ! இந்த காமிக் கான்  தலைமுறை தேடித் தேடி ; ஓடி ஓடி சேகரிப்பவை சகலமும் ஜப்பானிய மங்கா, அனிமே தொடர்களின் நாயக உருவங்கள் & இத்யாதிகளே ! அந்தப் பரிச்சயமற்ற நமக்கோ - "யார்டா இந்தப் பூச்சாண்டிகள் ?" என்று தான் கேட்கத் தோன்றும் ! "லக்கி லூக் டி-ஷர்ட்கள்" என தயாரித்தோமென்று வைத்துக் கொள்ளுங்களேன் - இந்த 2k கிட்ஸுக்கு பெருசாய் ஈர்ப்பெல்லாம் இருக்குமா ? என்பதில் பலத்த சந்தேகமுண்டு எனக்கு ! ரைட்டு, நம்ம ரெகுலர் வாசகர்கள் மத்தியில் அவற்றை விற்றிடலாமென்றால் - ஆன்லைன் மட்டுமே அதற்கான வாய்ப்பாக இருந்திடக்கூடும் - simply becos புக்ஸ் அல்லாத எதையுமே  காமிக் கான் தவிர்த்த ரெகுலர் புத்தக விழாக்களில் விற்பனை செய்திட அனுமதிக்க மாட்டார்கள் ! And ஆன்லைனில் இங்கிலீஷ் காமிக்ஸ் விற்கும் ஆமை வேகத்தில் இவையும் நகர்ந்திடும் பட்சத்தில் - காசை முடக்கியதே மிச்சமாகும் ! தவிர இதற்கெனவென்று ஊர் ஊராய் நடக்கும் காமிக் கான்களிலெல்லாம் நாம் பங்கேற்பதும் நடைமுறை சாத்தியமற்ற சமாச்சாரம் ! So கண்ணெதிரே யூத் பட்டாளம் அடிக்கும் ரகளைகளை ரசிப்பதோடு போய்க்கினே இருப்பதே இப்போதைக்காவது நலமென்று எனக்குத் தோன்றியதை நண்பர்களிடம் விளக்கினேன் ! But still - பார்க்கலாமே.......மாறும் நாட்களில் இந்த merchandise தடத்தினுள் நியாயமான விலைகளோடு, நாமும் புகுந்திட வாய்ப்பேதாச்சும் அமையுமாவென்று ! அப்டிக்கிப்பிடி நாமுமே பெரூசாய் கத்தியெல்லாம் போட்டோமென்றால். நம்ம சேலத்து டாக்டர் சுந்தர்லாம் - "மர்மக்கத்தி சார் " என்றபடிக்கே ஒரு ஆடறுக்கும் சைசிலான சாமுராய் பொம்மைக்கத்தியோடு போஸ் கொடுப்பாரோ - என்னவோ ?!  

இங்கிலீஷ் கிராபிக் நாவல்களைக் குவித்துக் கொணர்ந்திருந்த ஓரிரு புத்தகக்கடைகளுக்குள் கூட்டம் பொங்குவதற்கு முன்பாய் புகுந்தால் கொஞ்சம் பார்க்கலாமே ? என்று தோன்றியதும், விறுவிறுவென்று அங்கே நடந்தேன் !  ஜிலு-ஜிலுவென்று காட்சி தந்த அமெரிக்கப் படைப்புகள் ; அவ்வளவும் ஹார்ட் கவர்களில் & அவ்வளவும் 1600 ; 2000 என்ற ரேஞ்சிலான விலைகளில் ! இன்னும் ஆறாயிரம் ; எட்டாயிரம் விலைகளுக்குமே box sets ; தொகுப்புகள் என்றிருந்தன ! சுற்றிச் சுற்றி வந்து விலைகளை பார்த்தபடிக்கே 'ஆவென்று' வாய்பிளந்து கொண்டிருந்த ஜனம் மத்தியில் - "இப்போ தெரியுதுடா லயன்-முத்து காமிக்ஸ் விலைகளோட அருமை !" என்றொரு குரல் ஒலித்ததும் காதில் விழுந்தது ! சின்னதொரு புன்னகையோடு, நான் தேர்வு செய்திருந்த சில புக்ஸுக்கு ஏழாயிரத்து சொச்சம் காசைக் கட்டிவிட்டு நம்ம ஸ்டாலுக்குத் திரும்பினேன் ! 

அதற்குள் நமது ரெகுலர் நண்பர்கள் ஒவ்வொருவராக எட்டிப் பார்க்கத் துவங்கியிருந்தனர் ! முன்னாள் அய்யம்பாளையத்தாரும், இந்நாள் சென்னைப்பட்டினத்தாருமான வெங்கடேஸ்வரன் சார் தனது மகளுடன் ஆஜராகியிருந்தார் - "இது என்ன சார் கூத்தா இருக்கு - காமிக்ஸ் கான்னு பேர போட்டுப்புட்டு புக்ஸ் தவிர பாக்கி எல்லாத்தையும் விக்குறாங்களே ?" என்ற கேள்வியுடன் ! "ப்ரீயா விடுங்க சார் ; இதுவொரு யூத் உலகம் !" என்றபோதே தலைக்குள் தீர்மானித்திருந்தேன் - நண்பரின் மகளைத் தான் லக்கி டிரா சீட்டை எடுக்கச் சொல்லணுமென்று ! சற்றைக்கெல்லாம் பல்லடம் சரவண குமார் சார் ; நம்ம செந்தில் சத்யா ; சேலத்திலிருந்தும், திருவண்ணாமலையிலிருந்தும் சேலம் குமார் சார் with ஜூனியர் ; நண்பர் ஸ்ரீராம் ; சுரேஷ் தனபால் சார் ; ஆத்தூர் மாதேஸ்வரன் சார் ; நண்பர் ரபீக் ராஜா என்று கூடியதும், "ரைட்டு...குலுக்கிப்புடுவோமா ?" என்றபடிக்கே டின்டின் டப்பியினை வெளியே எடுத்தேன். மொத்தம் 312 நண்பர்கள் அனுப்பியிருந்த கூப்பன்கள் உள்ளே இருந்தன ! 'நம்ம இந்த பொட்டியின் பக்கத்திலே கூட போகப்படாதுடா சாமி !' என்றபடிக்கே லைவ் வீடியோ எடுக்கும் பொறுப்பை பல்லடத்தாரிடம் ஒப்படைத்திருந்தேன் & அவரும் முன்னாடி நின்றபடிக்கே வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார் ! 

டப்பிக்குள் கையை விட்டு செமையாகக் கிளறிவிட்டு ஒரேயொரு சீட்டை எடுக்கும்படி ஹரிணியிடம் சொன்னேன் & அவரும் அதை அழகாய்ச் செய்தபடிக்கே ஒரு சீட்டை நீட்டினார் ! நீயே பிரிச்சு காட்டும்மா" என்றவுடன் அதனை ஓபன் பண்ணி என்னிடம் காட்டிய நொடியில் தூக்கிவாரிப் போட்டது எனக்கு !! "சரவணகுமார் பல்லடம்" என்றிருந்தது அந்தச் சீட்டில் !!!! வெற்றி பெற்று நேபாளம் செல்லவிருப்பவரின் பெயரை நண்பர்களுக்குக் காட்டிய நொடியில் அதே இடமே ஒரு சந்தோஷக்களேபர பூமியானது ! முன்னே மஞ்சள்சட்டை மாவீரராய் நின்றபடிக்கு வீடியோ எடுத்துக் கொண்டிருந்தவரின் முகத்திலோ ஓராயிரம் குழப்ப ரேகைகள் ! ஒரு மாதிரியாய், ஜெயம் கண்டு, நேபாளம் செல்லவிருப்பது நீங்களே தான் சார் - என்று அவருக்கு உணர்த்திய போது அவரது முகத்தில் நவரசங்களும் நாட்டியமாடின ! வெற்றி பெற்ற வியப்பு ஒரு பக்கம் ; மகிழ்வு இன்னொரு பக்கம்....அப்புறம்  'என்ன மட்டும் வீட்டிலே தனியா போக உடமாட்டாங்களே சார் - நீங்க ஒரு டிக்கெட் போட்ருவீங்க ; நானோ வீட்டார் 3 பேருக்கு மேற்கொண்டு போட்டாக வேண்டி வருமே !!' என்ற கவலை இன்னொரு பக்கமென்று புலம்ப ஆரம்பித்திருந்தார் ! அதற்குள் க்ரூப்களில் ; FB-ல் என தகவலை நண்பர்கள் பதிவிட்டிருக்க, நெடுக வாழ்த்துக்கள் மழை ! 'இந்த நொடியினை வயிற்றுக்குப் பெட்ரோல் போட்டபடிக்கே கொண்டாடுவோம் !'  என்றபடிக்கே அனைவரோடும் Food Court பக்கமாக நடையைப் போட்ட சமயத்தில் - பார்த்திபனுக்கு ஜாமீன் கையெழுத்துப் போடக் கிளம்பிய பலிகடா ஆடைப் போலவே சரவணகுமார் சார் தோற்றமளித்தது எனக்கு மட்டும் தானென்றில்லை ! 

சந்தோஷ உரையாடல்களோடே அங்கே பீட்சாக்களை வாங்கி, தரையிலேயே அமர்ந்து, பசியாறிய பின்னே, நண்பர்களில் சிலர் அங்கிருந்த Gaming சென்டரில் பொழுதைக் கழிக்கக் கிளம்பினர் & மீதப் பேர் ஸ்டாலுக்குத் திரும்பினோம் ! ஸ்டாலில் விற்பனை ஜரூராய் ஓடிக்கொண்டிருப்பது ஒரு சன்னமான மனநிறைவினைத் தந்து கொண்டிருந்தது ! ஆரம்பத்தில் நம்மை ஏதோ டைனோசார்களைப் போல் பார்த்து வந்த பாங்கு மாறியிருந்தது & காமிக் கானில் பொஸ்தவங்களும் வாங்கலாம் போலுமென்ற புரிதலுடன் மக்கள் ஆர்வமாய் புக்ஸ் வாங்கினர் ! எத்தனை மிரட்டலான களம் நம்மைச் சுற்றி இருந்தாலுமே,  வாஞ்சைகளிலும், விற்பனைகளிலும் நமக்கென ஒரு ஸ்பெஷலான இடத்தினை நீங்கள் ஒதுக்கித் தருவதை yet again தரிசிக்க இயன்றது ! காமிக் கானில் மட்டும் தானென்றில்லை ; கோவையில் துவங்கி, ஈரோடு, மதுரை, விருதுநகர்,  சேலம், சென்னை, திருப்பூர், நெல்லை என சமீபத்தைய எல்லா விழாக்களிலுமே நம் முத்திரையினை அழுந்தப் பதிவிட நீங்கள் ஒவ்வொருவருமே ஏகமாய் பங்களித்துள்ளீர்கள் guys ! 'விக்கவே இல்ல...கூட்டமே வரலே...மந்தம்...டல்..!' என இதர விற்பனையாளர்களும், பதிப்பகங்களும் புலம்பிடும் ஸ்தலங்களில் கூட நம்மை கம்பீரமாய் புன்னகைக்க அனுமதித்துள்ளீர்கள் ! Of course இந்த அன்பு ஒற்றை நாளிலோ, ஆண்டிலோ கிட்டியிருக்கவில்லை தான் ; அந்த ஒட்டுமொத்த 52 ஆண்டுக் காலத்தின் எத்தெத்தனையோ பேர்களின் உழைப்புகளுக்கு இன்று சிறுகச் சிறுகவொரு அங்கீகாரம் கிட்டி வருவதாகவே பார்க்கத் தோன்றுகிறது ! Oh yes - பார்க்கும் அம்புட்டுப் பேரும் நம்மை வாரியணைத்துக் கொள்கிறார்களென்றெல்லாம் அள்ளி விட மாட்டேன் ; நவநாகரீகம் என்ற கனாவில் - 'ஓ..டாமில்லே காமிக்ஸ் தானா ? You don't have anything in English ?" என்று கேட்டுப் போகும் டாம்பீக அம்மணியருக்கு இன்னமும் பஞ்சமே கிடையாது தான் & "இதுலாம் நான் சின்னப் பிள்ளையிலே படிச்சது" என்றபடிக்கு நடந்து போய்க்கினே இருக்கும் பெரிய பிள்ளைகளுக்கும் குறைவே கிடையாது தான் ! ஆனால் "தமிழில் காமிக்ஸ்" என்பது தீண்டத்தகா ஒரு சமாச்சாரமே அல்லவென்று உணர்ந்திருப்போரின் மத்தியில், நமது தரங்களுக்கும், variety-களுக்கும் சந்தோஷமான வரவேற்பு சின்னச் சின்ன அளவுகளில் பெருகி வருவது pretty much obvious ! In fact - நமது ஸ்டாலுக்கு வருகை தந்தவொரு ஹிந்தி பதிப்பகத்தவர் மிரண்டே போனார் நமது களங்களைக் கண்டு !! அதன் நீட்சியாய் காமிக் கானின் விற்பனையும், இங்கு நமக்குக் கிட்டிய விளம்பரங்களையும் பார்த்திட முடிந்தது ! 

"குறுக்கு கழன்றே போச்சு சார் ; நாங்க கிளம்புறோம்' என நண்பர்கள் கிளம்பிட, நானுமே புறப்படத் தயாரான போது, முக்கியமான இரு நபர்களோடு கொஞ்சம் பேசிட வாய்ப்பொன்று அமைந்தது ! அவற்றிற்கு பலனேதும் இருக்குமா ? என்பதை வரும் நாட்களில் புரிந்திட சாத்தியமானால் மேற்கொண்டு சொல்கிறேன் அவை பற்றி ! 

கிளம்பும் முன்பாக இந்த மங்கா ; மாங்கா என்று ஆளாளுக்கு அடிச்சுக்குறாங்களே இளசுகள் மத்தியில், அது எப்படித்தான் இருக்குடா சாமீ ? என்ற குறுகுறுப்பில் ஹிக்கின்பாதம்ஸ் ஸ்டாலில் போய்ப் பார்த்தேன் ! பொறுமையாய்ப் புரட்டி, புக்கை  பின்னேயிருந்து முன்னே என்று கொஞ்சமாய் வாசிக்க முயன்றேன் ! இதுநாள்வரை நாம் காமிக்ஸ் வாசிப்பில் செய்துள்ள சகலத்தையுமே உல்டாவாய் செய்திட வேண்டியிருந்தது & ரெண்டு நிமிஷத்துக்குள்ளேயே பாயைப் பிறாண்டலாம் போலிருந்தது எனக்கு. தவிர கதைக்களங்களுமே இன்னிக்கு ஆரம்பித்தால் நமது கொள்ளுப்பேரப் பிள்ளைகள் காலத்தில் நிறைவுறும் என்பது போல் தென்பட்டன ! கதைபாணிகளுமே ஒருதினுசாய் எனக்குத் தோன்றியது ! ஆனால் ஜூனியர் எடிட்டரிடம் கேட்டால் ஒவ்வொரு தொடர் பற்றியும் ஒரு விளக்கம் தந்தான் ! ஊஹூம்....மாங்கா தின்னாலே பல்லெல்லாம் கூசும் நம்ம வயசுக்கு இந்த மங்கா புடிபடாது என்று தீர்மானித்தேன் ! ஆனால் இளைய தலைமுறைக்கு இது ரசிக்குமெனில், ஜூனியரின் பொறுப்பில் இக்கட தனித்தட சவாரி செய்து பார்க்கலாம் ! எனது கேள்வியெல்லாம் இது தான் : 

இது முழுக்கவே ஒரு புதிய வாசக வட்டத்தை நோக்கியான பயணம் ; தற்போதைய நமது வட்டத்திடம் இதனைத் தந்தால் தொண்ணூறு சதவிகிதத்தினர் மலங்க மலங்கத் தான் முழிப்பர் என்பதில் எனக்கு ஐயங்களில்லை ! அந்தப் புதுசாக, யூத்தான வாசக வட்டமானது மங்கா, அனிமே என்பதையெல்லாம் தமிழில் படிக்கவும், ரசிக்கவும் செய்யுமா ? நெட்பிலிக்சிலோ, வேறெதிலோ டப்பிங் செய்த தமிழில் கேட்டுப் பழகியிருக்கும் இளைஞர் அணி கூட தமிழ் வாசிப்பினை அங்கீகரிக்குமா ? என்பதே எனது ஐயம் ! அதைச் சரிவரத் தீர்த்து வாய்க்கு உதவிடுங்கள் புலவர்களே !! 

இப்போதைக்கு பல்லடத்தாருக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டு, அவரை நேபாளத்திலிருந்து blog எழுத்தாக கோருவோமா ? "பல்லடத்துப் படலம் !" ரெடியா all ?  Bye guys...see you around ! நாளை தங்கை மகனுக்குத் திருமணம் ; so தாய்மாமா கடமைகளில் நேற்றிலிருந்தே கொஞ்சம் பிஸியாகிவிட்டேன் ! அதனால் தான் பதிவினை நேற்றைக்கே முடிக்க இயலவில்லை ! Sorry !

Have a great week ahead !!

108 comments:

  1. காலை வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  2. வணக்கம் நண்பர்களே!!

    ReplyDelete
  3. அனைவருக்கும் வணக்கம்.

    ReplyDelete
  4. காமிக்கான் 

    இதை நடத்தும் நிறுவனம் ஒரு வெற்றிகரமான வியாபாரி என்றால் அது மிகையல்ல. 80ஸ் 90ஸ் கிட்ஸ்க்கு பரிச்சயமான காமிக்ஸ். அதை ஒட்டி அவர்களை உள்ளே இழுப்பது. ஆனால் அவர்களின் டார்கெட் அந்த 80ஸ் 90ஸ் கிட்ஸ்களின் கிட்ஸ் தான். இவர்களின் குழந்தைகளுக்கு எதை கொடுத்தால் போணியாகும் என்று நன்றாக உணர்ந்து அதை வியாபாரம் செய்கிறார்கள். 

    இதை நாம் பாசிட்டிவாக எடுத்துக் கொள்வதாக இருந்தால், நம் குழந்தைகளை காமிக்ஸுக்கு அடிமையாக்க இதைவிட ஒரு சந்தர்ப்பம் அமையவே அமையாது. ஒரு கட்டத்தில் இவர்கள் வாசகர்களாகி விடுவார்கள். அடிக்க அடிக்க அம்மியும் நகரும் என்பது தானே பழமொழி. 

    ஆனால் வெளியே மால்களில் கிடைக்கும் டிஷர்ட் மற்றும் பொம்மைகளின் விலை காமிக்கானில் டபுள் விலை. இங்கே 2000 கொடுத்து வாங்கும் பொருட்கள் அமேசானில் பாதி விலைக்கு கிடைக்கிறது. அது தெரிந்திருந்தும் மக்கள் வாங்கி செல்கிறார்கள். இவர்களின் psychology நம் generation க்கு பிடிபடமாட்டேங்குது. 

    புதிதாக ஒரு நிறுவனம் ஒரு காமிக்ஸ் புத்தகத்தை வெளியிட்டிருந்தார்கள். அவர்கள் செலவு செய்த கணக்கை எடிட்டர் சார் சொல்லிய பொழுது தலை சுற்றிப் போனது. காமிக்ஸ் பணக்காரர்களுக்கான பண்டமாக மாறி வருகிறது. அந்த வகையில் விலையை கட்டுக்குள் வைத்திருக்கும் லயன் காமிக்ஸ் நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டால் மட்டுமே காமிக்ஸ் என் போன்ற நடுத்தர வர்க்கத்துக்கும் எட்டும் கனியாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. // அந்த வகையில் விலையை கட்டுக்குள் வைத்திருக்கும் லயன் காமிக்ஸ் நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டால் மட்டுமே காமிக்ஸ் என் போன்ற நடுத்தர வர்க்கத்துக்கும் எட்டும் கனியாக இருக்கும். //

      True! It is possible by our comics only!

      Delete

  5. 💥//கோவையில் துவங்கி, ஈரோடு, மதுரை, விருதுநகர், சேலம், சென்னை, திருப்பூர், நெல்லை என சமீபத்தைய எல்லா விழாக்களிலுமே நம் முத்திரையினை அழுந்தப் பதிவிட நீங்கள் ஒவ்வொருவருமே ஏகமாய் பங்களித்துள்ளீர்கள்//💥.
    கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக தொடர்ந்து,
    இந்த இயந்திர உலகத்திலும் "காமிக்ஸ்"
    என்ற பொம்மை புக்கால் எங்களை மகிழ்ச்சி குறையாமல் உற்சாகப்படுத்துவதற்கும்,
    நல்ல நண்பர்களையும் அறிமுகப்படுத்திய உங்களுக்கு வேறு என்ன கைமாறு செய்வது சார்?.
    ❤️

    ReplyDelete
  6. என் மகன் சிறந்தது எனக் கருதும் அனைத்து அனிமேக்களையும் பார்த்து விடுவான், அனிமே ஆக்கப் படாத தொடர்களை மங்காவில் ஆங்கிலத்தில் படித்து விடுவான். ஆனால் ஏற்கனவே படித்து விட்ட புத்தகத்தை மறுவாசிப்பு செய்ய மாட்டேன் என்கிறான். ஆகையால் ஆங்கிலத்தில் வெளி வந்த மங்கா காமிக்ஸ்கள் இங்கு தமிழில் போட்டாலும் போனியாகாது என்பதே உண்மை. ஆனால் நம்பிக்கை தானே வாழ்க்கை மற்றும் அடுத்த கணம் ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்களும் ஏராளம்.
    ஒரு வேளை மங்கா காமிக்சில் வெளியாகும் ஒன் ஷாட் கதைகளில் ஏதோ ஒன்றை முதலில் வெளியிட்டு பாருங்களேன் என்பதே என் எண்ணம்  

    ReplyDelete
  7. //முன்னே மஞ்சள்சட்டை மாவீரராய் நின்றபடிக்கு வீடியோ எடுத்துக் கொண்டிருந்தவரின் முகத்திலோ ஓராயிரம் குழப்ப ரேகைகள் !//

    ஒன்றுமே புரியலீங்க சார் அப்போது... நீங்க பெயரைப் பார்த்துட்டு வேகமாக நகர்ந்துட்டீங்க... வீடியோ எடுத்துக்கிட்டே யார்னு தெரிஞ்சிக்க முன்னாடி வந்தபோதுதான் ஜோதி மேடம் பல்லடம் சரவணகுமார்னு வாசிக்க.. என்னைக் கூப்பிடறாங்கன்னுதான் நினைச்சேன். அப்பறம்தான் தெரிஞ்சது அந்த சீட்டில இருந்தது என் பெயர்தான்னு... நான் வீடியோ எடுத்ததும் மறந்து போயிடுச்சு. நல்லவேளையா ரபீக் எனக்கு பின்னாடி நின்னு கச்சிதமா FBலைவ் போட்டிருந்தார்... அந்த நேரத்தில என்ன தோனுச்சு என்பதையே சொல்ல முடியலை. ஆனா மறக்கவே முடியாத கணமா அது மாறிப்போயிருந்தது..

    ReplyDelete
    Replies
    1. Perfect gift for the deserving person.

      Delete
    2. அன்றைய தினம் நீங்கள் உடனிருந்தது மிகப்பெரிய சப்போர்ட்டாக இருந்தது நண்பரே. ஒரு மாதிரியான நெர்வஸ்னெஸ் என்னுடன் இருந்தது. நீங்கள் கூடவே இருந்தது நான் சமனப்பட உதவியாக இருந்தது. உங்களோடு ஈரோட்டில் நிறைய பேச முடியவில்லை என்ற வருத்தமும் நீங்கிவிட்டது. நன்றி நண்பரே!!

      Delete
  8. Dr.Strange @ Rajesh kumar மங்கா

    ஒரு சிம்பிளான மங்கா காமிக்ஸ்சை லயனில் வெளியிட்டு பார்க்கலாம். நண்டு சிண்டுகள் வெறித்தனமாக படிக்கின்றன. இந்த பக்கமா அதுங்கள இழுக்க வசதியா இருக்கும்.. அதையும் விட்டுவைப்பானேன் - Dr.Strange @ Rajesh kumar

    ReplyDelete
  9. லயன் முத்து வின் மதிப்பு எங்களுக்கு ஏற்கனவே தெரியும்.

    ReplyDelete
  10. Dr.Strange @ Rajesh kumar requesting BUDDY LONGWAY CHINOOK books in TAMIL. Is it possible sir?

    ReplyDelete
  11. வணக்கம் நண்பர்களே🙏

    ReplyDelete
  12. ஒரு வழியா தேர்வாகி இருப்பது என் பெயர்தான்னு புத்திக்கு முழுசுமா புரிந்த பின்னாடிதான் எவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்கு என்பதை ஒருவாரா உணரமுடிந்தது... யப்பா... நான்தானா? நானேதானா? ன்னு திரும்ப திரும்ப கேட்டுகிட்டேன். யாரோ ஒருத்தர் அவரைப் பிடிச்சு கிள்ளுங்கப்பான்னு சொன்னது காதில விழுந்தது. எடிட்டர் பக்கத்தில வந்து அந்த சீட்டில் இருந்த பெயர், ஊர், போன் நம்பர்னு சகலத்தையும் காட்டி நீங்கதான்னு சொல்ல குபீர்னு ஒரு சந்தோஷம்... என்னால விவரிக்க முடியலை!!

    ReplyDelete
  13. @Edi Sir..😍😘

    @Suryajeeva & @ஸ்ரீ.. ஆகியோரின் கருத்து வரவேற்கதக்கது ..💐💐

    நடுத்தர வர்க்கத்தினருக்கும் எட்டும் விலையில் முத்து-லயன் காமிக்ஸ்களை 52 வருடங்களாக தந்து வரும் எடிட்டர் சார் குடும்பத்திற்கு கோடானுகோடி நன்றிகள் ..🙏🙏🙏

    #Feelings after hearing price of manga comics in CCC#

    ReplyDelete
  14. சுற்றியிருந்த நண்பர்களோட வாழ்த்துகள், கைகுலுக்கல்கள், கட்டியணைப்புகள் எல்லாத்தையும் ஒருவித பிரமிப்பு அடங்காமலேயே ஏற்றுக் கொண்டிருந்தேன். அங்கிருந்த ஒவ்வொருவரும் அவர்களே தேர்வான மாதிரி சந்தோஷத்தோடும் உற்சாகத்தோடும் வாழ்த்துக்களை சொல்லியபோது எத்தகையதொரு பிரமிப்பான தருணத்தில நான் நின்னுட்டிருக்கேன்னு புல்லரிச்சு போச்சு.ஓ கடவுளே! அந்த நொடியில நண்பர்களோட உற்சாகத்தையும் ஆரவாரத்தையும் பார்க்கும்போதுதான் எப்படி ஒரு நட்பு வட்டத்துக்குள்ள நான் இருக்கேன்னு புரிஞ்சது.

    ReplyDelete
  15. MYOMS சந்தா அறிவிப்பு எப்போது வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் சார் ..

    ReplyDelete
  16. மெதுமெதுவாக ஒரு நிலைக்கு வர முயற்சி பண்ணிட்டிருந்தேன். வீட்டம்மினிக்கு போன் செஞ்சு இந்தமாதிரி நேபாள் டூருக்கு என் பெயர்தான் செலக்ட் ஆயிருக்குன்னு சொன்னேன். பையன் சாப்பிடாமல் அடம்பிடிச்சிட்டு இருக்கான். உங்க விளையாட்டுக்கு நான் வரலைன்னு சொல்றாங்க... நான் திரும்ப சொல்லியும் ஒன்னும் நடக்கலை. நான் அவங்களை டீஸ் பன்றதாகவே நினைச்சிட்டு நம்பவே இல்லை. கடைசியில எடிட்டரிடமே போனைக் கொடுத்துட்டேன். அவர் பேசினதுக்கு அப்புறமாத்தான் நம்பினாங்க... ரொம்ப ஆச்சர்யமா... நிசமாவா? நிசமாவா? ன்னு கேட்டுகிட்டே இருந்தாங்க...

    ReplyDelete
  17. பரவசநிலை முடிந்து எல்லாம் நார்மலுக்கு வந்த பின்னாடி புத்தியோட இன்னொரு பகுதி முழுச்சுகிடுச்சு. சரி! ஒரு டிக்கெட் கிடைச்சிருச்சு. ஒற்றை ஆளா அந்த பனிதேசத்தில போய் என்ன பண்ண? அதுவுமில்லாம... வீட்டம்மினியும் அந்த மூன்று கூப்பன்களை நான்தான் எழுதிக் கொடுத்தேன், அதனால உங்க பெயர் செலக்ட் ஆனாலும் அந்த என்னோட அதிர்ஷ்டம்தான்னு சொன்னாங்க...

    அதுவும் உண்மைதான். இந்த அதிர்ஷ்டத்துக்கும் எனக்கும் ஏதோ போனஜென்மத்து பகை போல சின்ன வயதிலிருந்தே அந்த 25பைசா சீட்டுல கூட பரிசு விழுந்ததில்லை. குலுக்கல் சீட்டிலகூட என் பெயர் சீட்டு கடேசிமாதத்தில எடுக்க ஆளே இல்லாம தனியா நிக்கும். அப்பேர்பட்ட அதிர்ஷ்டசாலிதான் நான். ஒரே ஒரு முறை கனவுலகம் குழுவில ஒருசின்ன அதிர்ஷ்ட போட்டியில என் பெயர் வந்ததுதான் முதல் தடவை! ஆக இந்த நேபாள டூருக்கு செலக்ட் ஆனது முழுக்க முழுக்க வூட்டம்மினி அதிரஷ்டமேன்னு முடிவுக்கு வந்திருந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. // நேபாள டூருக்கு செலக்ட் ஆனது முழுக்க முழுக்க வூட்டம்மினி அதிரஷ்டமேன்னு முடிவுக்கு வந்திருந்தேன். //

      Super!

      Delete
  18. போனா இரண்டு பேர் இல்லைன்னா குழந்தைகளோட நாலுபேர் போகனும்னு நினைச்சுகிட்டேன். சுற்றியிருந்த நண்பர்களும் கலாய்க்க ஆரம்பிக்க ஒருமாதிரி சுத்திவிட்ட நிலையிலதான் நான் இருந்தேன். மண்டைக்குள்ளே கிர்ருன்னு எதுவோ ஓட ஆரம்பிக்க அதுக்குள்ளே எடிட்டர் எல்லாரையும் சாப்பிடலாம்னு கூட்டிட்டு போயிட்டார். காமிக் கானில் சாப்பிட எது வாங்கிறதா இருந்தாலும் அவங்க கொடுத்த கார்டில ரீசார்ஜ் பண்ணிதான் செலவு பண்ணனும் போல... ஒவ்வொன்னும் யானை, குதிரை விலை, எடிட்டர் அவர்பாட்டுக்கு டப்பா டப்பாவா வெரைட்டியா பீட்ஸாக்களை வாங்கி அடுக்கிவிட நண்பர்கள் எல்லாரும் பீட்ஸா பார்ட்டி கொண்டாடியாச்சு.

    ReplyDelete
  19. மாங்கா படிப்பவர்கள் Englishல படிக்கவே விரும்புவார்கள் என்பது என் என்னம், தமிழை விட அவர்களுக்கு அது இலகுவாக இருக்கும்.

    ReplyDelete
  20. சனிக்கிழமை நைட் காமிக் கான் 2024க்கு கிளம்பும்போது எப்படி இருக்குமென்கிற ஒரு ஐடியா எதுவும் இல்லாமல்தான் புறப்பட்டேன். நம்ம லயன்-முத்து காமிக்ஸ் ஸ்டால் இருக்கிறதுங்கற ஒரே காரணத்தால்தான் கலந்துகிட்டேன். நண்பர்களை பார்ப்போம்ங்கிற ஆர்வம் மட்டுமே மிகுதியா இருந்தது. ஆனால் ஒரு வாழ்நாள் நினைவுத் தருணம் எனக்காக காத்திருந்து அதை பரிசளிக்கவே இங்கே அழைத்திருந்ததை உணர்வுப் பூர்வமாக அறிய இயன்றது. நான் நேசிக்கும் சித்திரக்கதை, அதை வெளியிடும் லயன் நிறுவனம், எனக்காய் குதூகலித்து கொண்டாடும் நண்பர் கூட்டம்!! நான் உணர்ந்து கொண்டேன். இந்த நாள் எனக்கான நாள் என்று!! அதை எனக்கு பரிசளித்த லயன் முத்து நிறுவனத்திற்கும், எடிட்டர் விஜயன் சாருக்கும், என் பிரிய நண்பர்களுக்கும், இதை தன் கரங்களால் சாத்தியமாக்கிய அருமைச் செல்வி ஹரிணிக்கும், என்னருமை மனைவி மற்றும் குடும்பத்தாருக்கும் அர்ப்பணிக்கிறேன்!!

    நன்றிகள் சார்!! நன்றி நண்பர்களே!!

    ReplyDelete
    Replies
    1. குடும்பத்தினருடன் இனிமையான பயணமாக அமைய வாழ்த்துகள் சரவணகுமார் ஜி

      Delete
    2. நன்றி சத்யா ஜி! அந்த நேரத்தில் நீங்கள் உடனிருந்து ஆரவாரம் செய்தீர்கள்... உங்கள் கொண்டாட்டமும் உற்சாகமும் என்னை திக்குமுக்காடச் செய்துவிட்டது.

      Delete
  21. லயன் காமிக்ஸ் சார்பாக பரிசு வாங்குவதில் உள்ள சந்தோஷம் ஈடு இனையற்றது நான் ஈரோட்டில் குலுக்கலில் இரண்டாம் பரிசாக ஜம்போ ஸ்பெஷல் ஆசிரியரின் கைகளினால் பெற்றேன் அந்த நிமிடங்களை என்றென்றும் மறக்க இயலாது

    ReplyDelete
  22. அருமையான நண்பருக்கு அற்புதமான பரிசு...

    வாழ்த்துகள் SK சார்..😍😍💐💐💐

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க நண்பரே! அன்றைய கணம் முதல் இதுவரையிலும் அலைப்பேசி அழைப்புகளிலும், தனிச்செய்திகளிலும் நண்பர்களின் வாழ்த்துகளைப் பெறும்போது நெஞ்சம் திக்குமுக்காடிப் போகிறது. நான் இதுவரை பேசியிராத நண்பர்களும் அலைபேசியில் அழைத்துப் பேசி வாழ்த்தும் போதும் அவர்களின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொளுளும் போதும் கிடைத்தற்கரிய பேறு கிடைத்தாற்போலவே பூரிப்படைகிறேன்.

      Delete
  23. பல்லடத்து சரவணகுமார் சகோவுக்கு வாழ்த்துகள்💐💐💐💐💐
    தாங்கள் வென்றதில் மகிழ்ச்சிகள் சகோ

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ! தங்கள் வாழ்த்தை வாசிக்கும் போது உங்கள் உற்சாகமான முகமே நினைவில் வருகிறது.💐💐

      Delete
  24. சென்னை காமிக் கான் எனது அனுபவம்...

    ஒரு முறையாவது காமிக் கான் சென்று விட வேண்டும் என்பதே எனது எண்ணமாக இருந்தது. ஆனால் துணைக்கு யாராவது வேண்டுமே என்ன செய்யலாம் என்று யோசித்த போது கிடைத்த நண்பர்கள் இருவர் ஶ்ரீராம், யுவா கண்ணன்.

    ReplyDelete
  25. Congrats saravanakumar

    Manga in tamil? If it is cheaper than english Mangas, children may buy. We can try titles which is not available in English first. Direct Japanese to tamil.

    Also collectors may buy in decent quantities.

    Anyway, future of tamil comics cannot be without mangas

    ReplyDelete
  26. மங்கா தமிழில் எடுபடுவது சிரமமே. இன்றய காலகட்டத்தில் 90 சதவிகித நகர்ப்புற குழந்தைகளுக்கு தமிழ் எழுத படிக்க இயலவில்லை என்பதே வருந்தத்தக்க உண்மை. இருப்பினும் மாற்றம் என்பது மாறாததே எனும் நம்பிக்கையில் சிறு அளவில் முயற்சித்து பார்த்திடலாம் சார்

    ReplyDelete
  27. சூப்பர் சார்....தம்பதிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களும்....


    பல்லடத்தார் நேபாளக்கட்டுரய இப்பவே தொடங்கலாம்



    நம்ம மாங்கா புளிக்கும்னு பாத்து சொல்லாம...சாப்ட்டு பாத்து சொல்வோமே

    ReplyDelete
  28. அன்புள்ள எடிட்டர் அவர்களுக்கு, மங்காவும் , அனிமேவுக்கும் முன்னோடி வெகு நாட்களுக்கு முன்னால் " நாடோடி ரெமி" மூலமாக சுருக்கி தந்து உள்ளீர்கள். அது ஒரு டெலிவிஷன் serial. You tubeil உள்ளது.

    ReplyDelete
  29. மீண்டும் வாழ்த்துகள் சரவணக்குமார் சார்...
    சிறப்பான நிகழ்வு, சிறப்பான பதிவு...

    ReplyDelete
  30. மாங்கா போடும்போது நல்ல மாங்காவா பார்த்து போடுங்க டெத் நோட் ரொம்ப நல்லா இருக்கும்

    Death note

    ReplyDelete
  31. இன்னொரு நல்ல மாங்கா All you need is kill

    ReplyDelete
  32. வாழ்த்துக்கள் Palladam Saravanakumar அண்ணா அன்புடன் inigo

    ReplyDelete
  33. 'நேபாள்' நண்பர் SKக்கு..

    டூர் முடித்துத் திரும்பும்போது பனிமனிதனையும் கையோடு அழைத்து வரவும். அடுத்த காமிக் கானில் மற்ற ஸ்டால் பயபுள்ளைகள ததக்கா பிதக்காவென்றூ Cosplay செய்துகொண்டிருக்க; நாமோ நிஜ பனிமனிதனையே நமது ஸ்டாலின் முன் கொண்டுவந்து நிறுத்தி எல்லோரையும் வாய்பிளக்கச் செய்துவிடலாம்!
    பனிமனிதனுக்கு ஃப்ளைட்டிலோ, ரயிலிலோ அனுமதி மறுக்கப்பட்டால் பிரச்சினையில்லை - 'ரயிலின் பின்னால் ஓடுவது எப்படி' என்று புத்தகம் போடுமளவுக்கு அனுபவம் கொண்ட ஒருவர் இங்கே இருப்பதால் - அவரிடம் டிப்ஸ் கேட்டு எளிதாகச் செயல்படுத்திவிடலாம்!

    வெற்றி உங்களதே! ஜெய் தோர்கல்!!

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம் மைக்ரோசைஸ் பனி மனுஷியாக இருந்தாலும் பரவாயில்லை . கூட்டிட்டு வாங்க! :-)

      Delete
    2. மங்கா எனக்கு சரிப்பட்டு வரலை. One piece கூட முழுக்க படிக்காமலே கிடக்கு.

      Delete
    3. டாக்டருக்கு....
      சாப்பாட்டுக்கு பின் நாடோடி ரெமிங்ற மல்கோவாவ நறுக்காம சாப்பிடவும் தண்ணி குடிக்காம...

      Delete
    4. ///மைக்ரோசைஸ் பனி மனுஷியாக இருந்தாலும் பரவாயில்லை . கூட்டிட்டு வாங்க!///

      இங்கே சாதா மனுஷிகளின் சலம்பல்களையே சமாளிக்க முடியாமல் சின்னாபின்னப்பட்டுக் கிடக்கிறோமாம்... இதுல பனி மனுஷி வேற!!

      @NSK (நேபாள் சரவணகுமார்)
      பனிமனுசனா இருந்தா பத்து நாள் குகையிலயே தங்கியிருந்து பக்கத்துச் சிகரங்களையெல்லாம் சுத்திப் பார்த்துட்டு திரும்ப வரும்போது பனிமனுசனையும் கூட்டிட்டு வந்துடுங்க. ஒருவேளை பனிமனுஷியா இருந்தா திரும்பிப் பாக்காம ஓடிவந்துடுங்க. ரயில் பின்னாடியே ஓடி வந்தாலும் சரிதான்!

      Delete
    5. சொந்த சுமைய தூக்கி, தூக்கி சோர்ந்து போனேன்...

      Delete
  34. Sir, are there any issues in COLOR reprints of ILAMAIYIL KOL part 2, &3 .....

    ReplyDelete
  35. @NSK (நேபாள் சரவணகுமார்)

    பனிமனிதனைச் சந்தித்தவுடன் ஒரு செல்ஃபி எடுத்து எங்களுக்கு அனுப்பவும். நாங்கள் அதிகம் குழப்பிக் கொள்ளாதிருக்க பனிமனிதனை அம்புக்குறியிட்டுக் காட்டவும்! நன்றி!

    ReplyDelete
  36. This comment has been removed by the author.

    ReplyDelete
  37. .அவசியம் EV க்கு அனுப்புங்க ஜி. அவருக்கு குழப்பம் வந்திடக்கூடாது. நாம தான் இங்கே இருக்கோமே. அப்ப பல்லடத்துக்காரர் கூட இருக்கிறது யாருன்னு... அதுக்குத்தான் அந்த அம்புக்குறியும் ...

    ReplyDelete
    Replies
    1. பத்து சார்...
      பனி மனிதனுடன் செல்ஃபி - ஒரு முன்னோட்டம் - காண - 'இங்கே கிளிக்குங்க பாஸு'

      Delete
    2. அடுத்து ஒரு போட்டி வைச்சு அதிலேயும் சீட்டு குலுக்கி......நம்ம பல்லடத்தாரை ஏர்போர்ட் போய் வழியனுப்ப நாலு பேரை தேர்ந்தெடுத்தா செம குன்சா இருக்கும் போலிருக்கே ?

      Delete
    3. சார்.. திரும்ப வரும்போது வரவேற்க ஒரு நாற்பது-ஐம்பது பேர் கொண்ட கும்பலை குலுக்கல்ல தேர்ந்தெடுத்தீங்கன்னா.. பனிமனிதனுக்குப் பொன்னாடை போர்த்தி, மாலை-மரியாதை மேளதாளத்தோடு அழைத்துவந்து நம்ம கம்பேனி குடோன்ல விட்டுடுவோம் சார்..

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. ஈரோடு விஜய் @ செம‌ காமெடி

      Delete
  38. வெற்றி பெற்ற பல்லடம் சரவணக்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... ஒரு பனிமலைப் பல்லடம்!

    @விஜயன் சார்:
    //"சார்...நாமளும் பொம்மை போடுவோம் ; டி-ஷர்ட் போடுவோம் ; போஸ்டர் போடுவோம் !" என்று பொங்காதில்லை ! ""//

    பத்திரிகை/தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்யலாமே...?, மாவட்ட நூலகங்களுக்கு காமிக்ஸ் புத்தகங்களை அனுப்பலாமே...?, டின் டின் டி-ஷர்ட் போடலாமே...?, silaii.com-இல் இரும்புக்கை பொம்மை செய்ய ஆர்டர் கொடுக்கலாமே...? மார்வல்/டிசி கதைகளை வெளியிடலாமே...?, அம்பது ரூபாய்க்கு புக்கு போடலாமே...?, One Piece ஒட்டு மொத்த சீரிஸையும் ஒரே புக்காக போடலாமே, இரும்புக்கை மாயாவிக்கான திரைப்பட உரிமைகளை பேசாமல் நீங்களே வாங்கி விடலாமே...?, ஹீரோவாக நடிக்க, வாசகர்களிடையே  "கோன் பனேகா இரும்புக்கை மாயாவி" போட்டியை நடத்தலாமே...??. - இப்படி எல்லாம் நாங்கள் "மே... மே..." என்று குண்டக்க மண்டக்க அட்வைஸ் மழை பொழிந்து கொண்டே தான் இருப்போம்... :-) நீங்கள் இதற்கெல்லாம், "திரும்பத் திரும்ப பேசுற நீ..." ரீதியில் டென்ஷன் ஆகிக் கொண்டிராமல், எல்லாவற்றிக்கும் தனித்தனியே டெம்பிளேட் பதில்களை யூடியூபில் பதிவு செய்து வைத்துக் கொண்டு, கேட்பவர்களுக்கு லிங்க் கொடுத்து விடலாமே...?! :-)

    ReplyDelete
    Replies
    1. டின்டின் டி-ஷர்ட் போட்டோம்னா அதுக்கான ராயல்டி கட்டி நம்ம டவுசரை இழக்க வேண்டிப் போகுமே !!

      சிலை.காம் வசம் இரும்புக்கை செஞ்சு வாங்குற செலவு ப்ளஸ் ராயல்டியுமே - நம்மளை செஞ்சுப்புடுமே !!

      One piece மொத பாகம் படிக்கிற முயற்சியிலேயே நாம பல பீஸாகிப் போயிடுவோமே ?

      டி-வீயிலே ; பேப்பரிலே விளம்பரம் பண்ணுற காசிலே நாலு கோயில்களின் உண்டியலை நிறைச்சால் போற வழிக்கு புண்ணியமாச்சும் கிடைக்குமே !

      "மே"க்கு "மே மே"ன்னு பதில் சொல்லியே மேலோட்டோமா போயிட்டா - மே மாசத்து அக்னி நட்சத்திரம் வரைக்குமாச்சும் மேனேஜ் பண்ணிப்பாங்க நம்மாளுங்க !

      Delete
  39. கண்ணதாசன் பாட்டுல
    மே, மேன்னு முடியற மாதிரி எழுதி ரசிக்க வெச்சார்.
    நீங்க கமெண்ட்டுல
    மே , மேன்னு முடியற மாதிரி எழுதி சிரிக்க வெச்சுட்டீங்க.
    இனியெல்லாம் ரணகளமே..
    பொறுப்பதில்லை ஒரு கணமே ..
    கவிதைகளால்
    தளமே, அதிருமே..
    waiting for Steel ..

    ReplyDelete
  40. இரவின் எல்லையில்,
    பிரமாண்டமான ஆக்‌ஷன் படைப்புன்னு சொல்வாங்களே,அது இதான் போல,கண்முன்னே தரமான ஹாலிவுட் ஆக்‌ஷன் த்ரில்லர்,அசத்தலான ஓவியங்களும்,கலக்கும் வர்ணஜாலங்களுமாய் கலக்குகிறது...
    லார்கோவிற்கும்,ஜேரட்டிற்குமான நட்பு மலரும் அந்த தருணம் அழகானது,இருவருமே பில்லியனர்களாகவும்,மெகா கார்ப்பரேட்டுகளாகவும் உலாவரினும் அவர்களின் இலட்சியங்கள் சிறப்பானது, கார்ப்பரேட்டுகள் என்றாலே இயற்கைக்கு விரோதமானவர்கள் என்ற கட்டமைப்பு இந்த படைப்பில் உடைக்கப்பட்டிருப்பது சற்றே நிம்மதி அளிக்கிறது,...
    அறிவியல்,விண்ணியல் சார் தகவல்கள் பொழுது போக்கு அம்சங்களுடன் போரடிக்காமல் கலந்து கட்டி கொடுக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு...
    ஜேரட் எனும் இலட்சிய கிறுக்கனும் ஈர்த்து விட்டார்...
    குறை சொல்ல தோன்றாத படைப்பு...

    ReplyDelete
  41. வீரனுக்கு மரணமில்லை,
    கலரில் வேதாளர்....
    புதிதாய் வீடு கட்டும் சிலர் கண்திருஷ்டிக்காக வீட்டிற்கு வெளியே கண்கள் கூசுமளவிற்க் டாலடிக்கும் கலர்,வாஸ்து கலர்னு விதவிதமா,கலர்கலரா வர்ணம் அடிச்சி வெச்சிருப்பாங்க, அந்த மாதிரி ஆகிட்டார் வேதாளர்...
    வாசிப்பிலும் வண்டியை கொஞ்சம் தம் கட்டிதான் இழுக்க வேண்டி இருந்தது...
    பின்னாடி இருந்து யாரோ கையை பிடிச்சி இழுக்கற மாதிரியே ஒரு உணர்வு...

    ReplyDelete
  42. கண்ணீருக்கு நேரமில்லை,
    தலைப்புதான் சோகம்,கதையோ வேகமோ வேகம்,தல பிறந்ததில் இருந்தே அதிரடிதான் போல...
    தோட்டாத் தோரணம் என தலைப்பு வெச்சிருந்தா கூட பொருத்தமாவே இருந்திருக்கும்,ஒரே தோட்டா மழைதான்..
    கதைக்குள் போனா ஸ்பீட் பிரேக்கரே இல்லாமல் கதை வேகமா போய்கிட்டே இருக்கு...
    என்ன குறைன்னா கதை சட்டென முடிஞ்சாமாதிரி தோணுச்சி,இளம் டெக்ஸ் இருபாக சாகஸமெல்லாம் நமக்கு பத்தாது சார்,குறைந்தபட்சம் ஐந்துபாக சாகஸமாவது இருந்தாதான் நமக்கெல்லாம் திருப்தி....
    கன்னீபில் நினைவில் நிற்கும் பாத்திரபடைப்பு...
    வசனங்கள் நச்,
    "உன் பிஸ்டல் உன் கரத்தின் நீட்சியாக இருக்க வேண்டும்"
    "மரணத்திற்கு நேரம் காலமெல்லாம் தெரியாது பையா".
    "கிளம்பு,கிளம்பு பூமிக்குப் பாரம் குறையட்டும்".

    ஷெரீஃப் மல்லோரியை லாடம் கட்டும் அடுத்த சாகஸத்திற்காக வெயிட்டிங்..

    ReplyDelete
  43. திபெத்தில் டின்டின்,
    எவ்வளவு சலம்பினாலும் கடைசி வரைக்கும் கூடவே வரும் கேப்டன் ஹேடாக்,இறுதி வரை துணையாய் வரும் தார்கே என நினைவில் நிற்கும் பாத்திர படைப்புகள்...
    நாய்க்குட்டி ஸ்நோயியின் சேட்டைகளை பார்க்கும்போது ரின் டின் கேனின் ஞாபகம்தான் வந்தது...
    தன் வசம் இருக்கும் "சேங்" மீது யெட்டி@மிகெள காட்டும் அன்பானது நம்மை வசப்படுத்துகிறது, கல்லுக்குள் ஈரம்...
    2005 இல் வெளியான கிங்காங் மூவியில் கிங்காங் படப்பிடிப்பிற்கு வரும் நடிகையை கொண்டுபோய் வைத்துக் கொண்டு நாயகியிடம் அன்பையும்,மற்றவர்களிடம் ஆக்ரோஷத்தையும் கொட்டிக் கொண்டிருக்கும்,அந்த காட்சி நினைவிற்கு வந்து போனது...
    டின்டின் ரொம்ப முந்தைய படைப்பு என்பதால் அதன் பாதிப்பு இவற்றில் வந்திருக்கலாம்...
    டின் டின் தரமான படைப்பு,நிறைவான வாசிப்பு...

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் விமர்சனம் அண்ணா. உங்கள் விமர்சனம் எப்போது வந்தாலும் அருமை தான்.

      Delete
  44. தற்சமயம் அமர் சித்திரக் கதையை எழுத்துக்கூட்டி வாசிக்கும் நிலையில் தான் எனது மகள் இருக்கிறார். சென்னை புத்தகக் கண்காட்சியில் எடிட்டரை சந்தித்த எனது மகள் நமது குழும இதழ்களின் மேல் சற்றே ஆர்வம் காட்டினார். அதனை ஊக்குவிக்கும் நோக்கில்தான் அவரை காமிக்கானுக்கு அழைத்து வந்தேன். அங்கு அவருக்கு எடிட்டரும் மற்ற நண்பர்களும் அளித்த அங்கீகாரத்தில் லயன் குழும இதழ்களில் அவரது ஆர்வம் கூடியுள்ளது. எனது காமிக்ஸ் சொத்துகளை பாதுகாக்க, படிக்க ஒரு வாரிசு கிடைத்த மகிழ்ச்சி எனக்கு!

    ReplyDelete
  45. அறிவரசு ரவி சார் சீக்கிரம் படிச்சிட்டு விமர்சனம் எழுதுங்க சார் முதல் வாரத்திலேயே வந்திருக்க வேண்டிய அருமையானவிமர்சனங்கள்.

    ReplyDelete
  46. சார் இன்று பதிவுக் கிழமை...

    ReplyDelete
  47. மங்கா தொடர்ந்து வந்து கொண்டிருப்பவைகள் வாரம் வாரம் ஆன்லைனில் சுடசுட படித்தாலிம், சில மங்கா app - கள் ஆப்லைனில் படிக்கவும் வசதிகள் இருந்தும்
    மங்காவின் அத்தியாயங்கள் ஒன்றாக இணைத்து பகுதி பகுதியாக அச்சிட்டு விற்கும் போது சல்லா சேல்ஸ் ஆகின்றன

    யங்கர் ஜெனெரேஷன்க்கு அதில் ஆர்வமுண்டு
    நாம் ஒன் ஷாட் ஆக்ஷன் கதைகளங்கள் அல்லது குறைந்து அத்தியாயங்கள் கதைகளங்கள் (அதுவும் ஆக்ஷன்) கொண்ட மங்காவை முயற்சித்து பார்க்கலாம் ஆசிரியரே

    ReplyDelete
    Replies
    1. இன்னும் சில நண்பர்களும் சிலாகிக்கின்றனர்...
      ஏதேனுமோராகச் சிறந்த சில கதைகளை கதைக்குப் செய்துதான் பாப்போமே....மேக்கு

      Delete
    2. சார் மாங்கா வரவேண்டியது காலத்தின் கட்டாயம். நாம் குறைந்த பட்சம் 2 அல்லது 3 குறுந்தொடர் ஆவது வாங்கி வெளியிட வேண்டும். அதற்கு கிடைக்கும் வரவேற்பு மற்றும் விற்பனையை பொருத்து முடிவு செய்யலாம். என்பது எனது கருத்து.

      Delete
    3. ஒரு மங்கா ட்ரை பண்ணுங்க பரணி சகோ 😁😁😁

      Delete
    4. //சார் மாங்கா வரவேண்டியது காலத்தின் கட்டாயம். நாம் குறைந்த பட்சம் 2 அல்லது 3 குறுந்தொடர் ஆவது வாங்கி வெளியிட வேண்டும். அதற்கு கிடைக்கும் வரவேற்பு மற்றும் விற்பனையை பொருத்து முடிவு செய்யலாம். என்பது எனது கருத்து.//

      +9

      Delete
  48. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)

    ReplyDelete