Powered By Blogger

Sunday, February 18, 2024

சென்னையில் ஒரு வாரயிறுதி !

 நண்பர்களே,

வணக்கம். நான் நிறைய முறை சொல்லியுள்ள சமாச்சாரம் தான் - ஆனால் மறுக்கா ஒரு தபா ஒப்பிப்பதில் தப்பில்லை என்றே தோன்றுகிறது ! அது வேறொன்றுமில்லை folks - நமக்கான ஸ்கிரிப்டை எழுதுவது மேலே இருப்பவர் தான் என்பதே நான் சொல்ல விழைந்தது !  நாமே திட்டமிட்டாலும் உருப்படியாய் ஸ்லாட்டில் விழ சண்டித்தனம் பண்ணிடும்   சமாச்சாரங்கள்,  தாமாகவே ஆகச் சரியான தருணத்தில் அரங்கேறிடுவதை ஒன்றல்ல, இரண்டல்ல, எக்கச்சக்க முறைகள் பார்த்தாச்சு ! And இந்த வாரயிறுதியுமே அதற்கு yet another உவமை என்பேன் ! 

நிஜத்தைச் சொல்வதானால் "COMIC CON சென்னை" என்ற அறிவிப்பு வந்த சமயம் நான் ரொம்பவெல்லாம் துள்ளிக்குதிக்கவில்லை ! இந்த முயற்சி துவங்கிய பத்துப்பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்னே, இதனை காமிக்ஸ் வெளியிடுவோருக்கொரு தனித்துவமான தளமாகப் பார்க்கத் தோன்றியது ! ஆனால் இன்றைய இளம் தலைமுறையினை என்ன செய்தால் கவர்ந்திட இயலும் ? என்பதை இந்த காமிக் கான் நிறுவனமானது காலவோட்டத்தோடு கச்சிதமாய்க் கற்றுத் தெரிந்திருக்க, இப்போதெல்லாம் இதுவொரு 2 நாள் இளமைத் திருவிழாவாக மாற்றம் கண்டுள்ளது என்பதே யதார்த்தம். தில்லியிலும், மும்பையிலும், பெங்களூருவிலும் இவர்கள் தெறிக்கச் செய்து வருவதை நெட்டில் வருஷங்களாய்ப் பார்த்து வந்ததன் புண்ணியத்தில் - இக்கட நம் போன்ற மாமூலான பதிப்பகங்களுக்கு அவ்வளவாய் பொருத்தமான இடமிராது என்றே தீர்மானித்திருந்தேன் ! தவிர இந்த இருநாள் மேளாவுக்கான ஸ்டால் வாடகையில் ஒரு ஆறோ-ஏழோ சிறுநகர ரெகுலர் புத்தக விழாக்களில் பத்துப் பத்து நாட்களுக்காச்சும் கடை போட்டிருக்க முடியும் ! So தலைகீழாய் நின்று தண்ணீரல்ல ; சரக்கே அடிச்சாலும், இங்குள்ள கட்டணம் - விற்பனை என்ற சமன்பாடு நமக்கு சாதகமாகவே சுகப்படாதென்பது தெளிவாய்ப் புரிந்தது ! 

ஆனால் இந்தத் தலைமுறையின் பிள்ளையாச்சே - ஜூனியர் எடிட்டர் தான் வலுக்கட்டாயமாய் நம்மை இந்த காமிக் கான் சாகரத்துக்குள் இறக்கி விடக் காரணமானவர் ! 'அம்பது வருஷமா இருக்கோம்....எம்பது வருஷமா இருக்கோம்னு கெத்தா சொல்லிப்புட்டு, அம்பத்தூர் வரைக்கும் கூட தூரைத் தூக்கிக்கினு கிளம்பாட்டி எப்புடி ?' என்று கேள்வியைப் போட்ட போது - 'ஆமால்லே...துட்டு சமாச்சாரத்தைக் காட்டிலும் நமக்குள்ள பொறுப்பினை தட்டிக்கழிக்காது நடந்து கொள்வது முக்கியம்' என்பது உறைத்தது ! அதைத் தொடர்ந்து, மூஞ்சியை சிரிச்சா மெரி வைச்சுக்கிட்டே காமிக் கான் பங்கேற்புக்கான கட்டணத்தினை கட்ட முனைந்தேன் ! 

அவுக கட்டண விபரங்களை வாங்கிப் பார்த்த நொடியில்,  நிலநடுக்கத்தை அடிக்கடி அனுபவிக்கும் ஜப்பான் ஜனம் எப்படி உணர்வார்களென்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது ! லட்சங்களில் ஆரம்பித்த ஸ்டால் வாடகைகள்,  பல்லாயிரங்கள் வரைப் பயணித்து பச்சக்கென்று முடிந்து விட்டன !  உள்ளாற பொங்கிக்கொண்டிருந்த டென்ஷனை மறைக்க முயற்சித்தபடிக்கே  - "Pdf லே இன்னொரு பக்கம், கிக்கம் இருக்க போகுது....பாத்து முழுசா பிரிண்டை போடுங்கம்மா !" என்றேன் ! கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துவிட்டு நம்மாட்கள் - "ஒரே ஒரு பக்கம் தான் இருக்கு சார் !' என்றார்கள் ! 2 மீட்டருக்கு 2 மீட்டர் புறாக்கூடு தான் ஆகக் குறைந்த கட்டணம் கொண்ட ஸ்டால் & அதற்கான கட்டணத்தைக் கட்டவே ஒரு தனிச்சந்தா போடணும் போலிருந்தது ! 'இதை விடவும் சிறுசா ; ஏதாச்சும் ஓரம் சாரமா ; புட்போர்ட் அடிக்கிறா மாதிரி இடம் இருந்தாலும் பரால்ல - சமாளிச்சுக்குவோம் ! ஏதும் வாய்ப்பிருக்குமா ?' என்று கேட்டுப்பார்த்தேன் ! "வாய்ப்பில்ல ராஜா'ன்னு பளிச்சென்று பதில் வந்தது ! "நாங்க சொப்பு சாமான் ; டி-ஷர்ட் ; பொம்மலாம் விக்குறவங்க இல்லீங்கோ - அக்மார்க், ஒரிஜினல்,சுத்தமான பப்ளீஷர்ஸ் மட்டும் தானுங்கோ - அந்த ரூட்டிலே ஏதாச்சும் சலுகை சாத்தியாமாகுமா ?" என்று அடுத்த கேள்வியையும் மின்னஞ்சலில் கேட்டு வைத்தேன் ! மறுக்காவும் 'வாய்ப்பில்லே ராஜா'ன்னு பதில் வர, எந்தப் பக்கமா போனாலும் கேட் போடறாங்களே !! என்ற ஆதங்கத்தில் ஆழ்ந்தேன் ! So ஒரு சுபயோக சுபதினத்தில் அதற்கான புக்கிங்கை செய்த கையோடு - டின்டினின் நேபாளப் பயண lucky draw குலுக்கல் அன்றைக்குத்தான் என்றும் பகுமானமாய் அறிவித்து விட்டேன் ! அதைப் பார்த்த ஜூனியர் உள்ளுக்குள் ஒரு சிரிப்புச் சிரிச்சிருப்பது நிச்சயம் என்பேன் - அப்பனை சம்மதிக்கச்செய்ய என்ன பாடு பட வேண்டியிருந்ததென்பது அவனுக்குத் தானே தெரியும் ! 

இடைப்பட்ட ஜனவரி நாட்களில் சென்னையின் பபாசி புத்தக விழாவானது சும்மா பட்டாசாய்ப் பொரிந்து தள்ளிக்கொண்டிருக்க, காமிக் கான் சார்ந்த நினைவுகள் கூடுதல் வேகத்தில் பின்னுக்குச் சென்று விட்டன ! ரூ.899 நுழைவுக்கட்டணம் ; ஊரின் தென்கோடியிலிருக்கும் அரங்கில் விழா எனும் போது, உள்ளூரில் இருக்கக்கூடிய நண்பர்களுக்கே இது சிரமம் என்பது புரிந்தது ! So வெளியூர் நண்பர்களை இதற்கென வரச்சொல்வதெல்லாம் ரொம்பவே டூ மச்சாக இருக்கும் என்றுபட்டதாலும் பெருசாய் காமிக் கான் சார்ந்த எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொள்ளவில்லை !  தவிர, நமக்கான ஸ்டாலும் மைசூர் மஹாராஜா அரண்மனையோடு போட்டியெல்லாம் போடப்போகும் சைசில் இராதென்பதால், சன்னமான டைட்டில்களில் தமிழ் புக்ஸையும், கைவசமிருக்கும் இங்கிலீஷ் புக்சில் கணிசத்தையும் எடுத்துக் போகச் சொன்னேன் ! டெக்ஸ் ; லக்கி லூக் ; மாயாவி ப்ளஸ் கடந்த 2 மாத புக்ஸ் - என சிக்கனமாய் பேக் செய்து விட்டு, Asterix ; BlueCoats ; Damocles ; Barracudda போன்ற இங்கிலீஷ் டைட்டில்களோடு நம்மாட்களும் புறப்பட்டனர் ! செல்லும் நம்மாட்கள் இருவருக்குமே இங்கிலீஷ் அல்லது தற்போதைய இன்றியமையா மொழியாய் மாறிக்கொண்டிருக்கும் ஹிந்தியும் தெரியாதென்பதால் நானும் முதல்நாள் மதியமே சென்னையில் ஆஜராக வேண்டியிருந்தது ! 

உள்ளே நுழைந்த நொடியே தெரிந்தது - 'ஆத்தீ...இது ஏதோவொரு செம சம்பவம் பண்ணக் காத்திருக்கு - நம்ம சென்னைக்கு !' என்று புரிந்தது ! எதிர்பார்த்தபடிக்கே செக்யூரிட்டியில் துவங்கி, அமைப்பாளர்களில் இருந்து, நம்ம ஸ்டாலில்  ஆசாரி வேலை செய்ய வந்த ஆட்களும் சரி, மின்னிணைப்பு தர வந்தோரும் சரி - நாங்க இங்கிலீஷ் அல்லது ஹிந்தி மட்டும் தான் மாட்லாடுவோம் என்று செப்ப, நான் தான் சமாளிக்க வேண்டிப்போனது ! சுற்றுமுற்றும் பார்த்தால் - அத்தனை கடைக்காரர்களும் இந்த காமிக் கான் circuit-க்கு ரெகுலர்கள்கள் என்ற முறையில் பர பரவென ஸ்டாலை ரெடி செய்து கொண்டிருந்தனர் ! அம்புட்டு கடைகளிலும் ஆளை வகுந்தெடுக்கும் சைசில் சாமுராய்க் கத்திகள் ; இன்னாரென்றே அடையாளம் தெரியாத ஜப்பானிய மங்கா காமிக்ஸ் கதாப்பாத்திரங்களின் பொம்மைகள் ; போஸ்டர்கள் ; டி-ஷர்ட்கள் - என்று அடுக்கிக் கொண்டிருந்தார்கள் ! இன்னொரு ஓரத்தில் ஹிக்கின்பாதம்ஸ் புத்தக நிறுவனமும், பென்குவின் நிறுவனமும் கிராபிக் நாவல்களை டன் டன்னாக இறக்கி அடுக்கிக் கொண்டிருந்தார்கள் ! நமது ஸ்டாலுக்கு முன்னே மையமாய் நின்னு, மையமாய் முழித்துக் கொண்டிருந்த என்னைப் பார்த்து ஒரு யுவதி...'ஹல்லோ சார்...புதுசா தெரியுறீங்களே காமிக் கானுக்கு - என்ன விக்குறீங்க ?' என்று வினவினார் ! "காமிக்ஸ் விக்குறோம்" என்றேன் அமைதியாய் ! நாமளும் ஹிக்கின்பாதம்ஸ் போல புக்ஸ் வாங்கி விற்க கடை போட்டிருக்கிறோம் போலும் என்றெண்ணியவர் - நமது ஸ்டாலில் இருந்த டின்டின் போஸ்டரை பார்த்து விட்டு - "நீங்களே சொந்தமா பப்லிஷ் பண்றீங்களா ?" என்று கேட்டார் ! "52 வருஷங்களா !" என்றேன் ! 'பச்சக்' என்று அவர் பார்வையும், குரலும் மாறிப் போயின ! ரொம்பவே ஆர்வமாய், நம்மைப் பற்றி, நமது முயற்சிகளைப் பற்றி அதன் பின்னே கேட்டார் ! சொல்லச் சொல்ல விரிந்த விழிகளோடு கவனித்தவர், "எங்க டீமிடம் உங்களை பற்றிச் சொல்லுறேன் சார்" என்றபடிக்கே விடைபெற்றார் ! ரைட்டு....சனி காலையில் என்ன தான் கூத்து அரங்கேறுது என்று பார்த்துக்கலாம் என்றபடிக்கே கிளம்பினேன் !

சனியும் புலர்ந்தது...நம்மாட்கள் முன்னே போயிருக்க, நான் பத்தரைவாக்குக்கு உள்ளே புகுந்தேன் ! நமது ஸ்டால் தயாராய் இருந்தது ; நமக்கு அடுத்த ஸ்டாலிலோ ஒண்ணோ - ரெண்டோ இங்கிலீஷ் காமிக்ஸ் மட்டும் வைத்துக் கொண்டு, ஓரத்தில் ஏதோ பாக்கெட்களை அடுக்கிக் கொண்டிருந்தனர் ! 'பாவத்த....நம்ம கட்டணத்தையே கட்டிப்புட்டு இதை வித்து கரை சேர நினைக்குதுகளே - யார் பெத்த பிள்ளைகளோ - பாவம் !' என்று நினைத்துக் கொண்டேன் ! மணி பதினொண்ணு அடிச்சது தான் தெரியும் - அதன் பின்னே நிகழ்ந்ததெல்லாமே ஒரு தோராய நினைவுகளாய் மாத்திரமே உள்ளன !! "ராயப்பா...நான் நான்தானா ? நீ நீதானா ?....இது நம்ம சென்னை தானா ?" என்று கவுண்டரின் வியப்பு கலந்த மாடுலேஷனில் என்னை நானே கேட்டுக்கொள்ள வேண்டியிருந்தது - simply becos சென்னையின் 2k  கிட்ஸ் மாத்திரமன்றி, 1.5k ; 1k புராதனங்கள் என்று அத்தனை பேரும் ஒரு சுனாமியின் வேகத்தோடும், எழுச்சியோடும் படையெடுத்திருந்தனர் !! மணி 11-30 ஆன போதெல்லாம் நடைபாதையில் நிற்கக் கூட வழியில்லை ; ஜனத்திரள் நம்மை அப்படியே வாரிச் சுருட்டி விடுவர் போலிருந்தது ! பற்றாக்குறைக்கு ப்ளூ சட்டையணிந்திருந்த தன்னார்வலர் குழு - 'ஜருகண்டி...ஜருகண்டி..' என்று துரத்தி விட்டுக் கொண்டிருந்தனர் ! அதிலும் நமது ஸ்டால் முன்னே கூடும் கூட்டத்தினையும், அவ்வப்போது வருகை தந்த நண்பர்கள் நின்று அரட்டையடித்தபடிக்கே போட்டோக்களை க்ளிக் செய்து வருவதையும் கவனித்த ஒரு சின்னப் பெண் - 'ஒரு வளர்ந்த முழியாங்கண்ணன் அங்கே தடைபண்ணின பஞ்சுமிட்டாய் வித்துட்டு இருக்கானோ, என்னவோ தெரிலே......ஆனா கூட்டம் சேர்த்திட்டு இருக்கான்....! கவனம் பாய்ஸ் & கேர்ள்ஸ் !' என்று தனது டீமை உஷார்படுத்தியிருப்பாள் போலும் ! மூணு நிமிஷத்துக்கு ஒரு ஆள் வீதம் வந்து வந்து பத்தி விட்டுக்கொண்டே இருந்தார்கள் ! தலையில் கலர்கலராய் காரக்குழம்புகளை ஊற்றிக் கொண்டு வந்த பசங்கள் ; பிள்ளைகள் ; டிசைன் டிசைனாய் Cosplay என்ற காமிக்ஸ் கதாப்பாத்திர வேடமணியும் போட்டிகளுக்கென வருகை தந்த யூத் ; கொடுத்திருக்க தொள்ளாயிரம் காசுக்கோசரமாவது நாள் முழுக்க இங்கேயே தான் டேரா ! என்ற வைராக்கியத்தோடு வந்து இன்ஸ்டாவில் ரீல்ஸ் போட்டுத் தாக்கித் தள்ளிக் கொண்டிருந்த திரள் என்பதோடு மங்கா புக்ஸ் வாங்கிட வந்திருந்த காமிக்ஸ் புதுத் தலைமுறையையும் தரிசிக்க முடிந்தது ! "ஹேய்ய்...இங்கே பாருயா...டாமில்லே காமிக்ஸ் ஸ்டால் ...!" என்ற வியப்பு கலந்த குரல்கள் அவ்வப்போது ஒலித்துக் கொண்டேயிருந்தது ! இதன் மத்தியில் தீவிர (தமிழ்) காமிக்ஸ் ரசிகர்களும் ஆஜராகத் தவறவில்லை - ஒரு மிதமான எண்ணிக்கையில் ! 

நண்பர் கார்த்திக் சோமலிங்கா ; ரபீக் பெங்களூரிலிருந்து பைக்கிலேயே வந்திருக்க, சென்னை நண்பர்களும் ஒவ்வொருவராய் இடையிடையே எட்டிப் பார்க்க - அத்தனை பேருக்குமே சுற்றி நிகழ்ந்து கொண்டிருந்த சென்னையின் தாண்டவம் - தாங்கொணா வியப்பையே தந்து கொண்டிருந்தது ! இன்னொரு கோடியில் ஒரு புக் ரிலீஸூக்கென டைரக்டர் லோகேஷ் வந்திருக்க, அங்கும் அதிர்வலைகள் ! அவர்பாட்டுக்கு 'நான் படிச்ச மொத கி.நா.இரும்புக்கை மாயாவி....ராணி காமிக்சிலே போட்டாங்க !!' என்று அள்ளிவிட்டுச் செல்ல, நம்மாட்கள் என்னைக் கலாய்த்துத் தள்ளி விட்டனர் - 'இம்புட்டு நாளா நீங்க பீலா விட்டுட்டு இருந்திருக்கீங்க போல !' என்று ! மதியத்துக்கு மேல் குறுக்கை கழற்றுவது போல் நோவிட, வேறு வழியின்றி அனைவருமே கிளம்பிவிட்டோம் ! இரவில் அன்றைய விற்பனை தொகையை நம்மாட்கள் அனுப்பிய போது முட்டைக்கண்கள் இன்னும் அகல விரிந்தன - கூத்துக்களுக்கு மத்தியிலும் நமக்கும் விற்பனை நிகழ்ந்திருந்தது !! 'Wow' என்றபடிக்கே  உறங்கிப் போனேன் !! 

ஞாயிறு....!   

To be continued.....(ரயிலைப் பிடிக்க ஓடுகிறேன் ; ரயிலில் டைப்பிடிக்க முயன்றால் நைட்டே நிறைவு செய்வேன் ! )


94 comments:

 1. செம்ம சார் செம்ம செம்ம பதிவு. மீதியையும் எதிர்பார்த்து ஆவலுடன்...

  ReplyDelete
 2. வணக்கம் நண்பர்களே....

  ReplyDelete
 3. Sir, Most of the stalls were selling DC/Marvel or Manga stuff. European comics stuff were very less. I think one shop had some Tintin/Asterix figurines.

  ReplyDelete

 4. நேபாள ட்ரிப்பை வென்ற அருமை நண்பர் பல்லடம் சரவணகுமார் அவர்களுக்கு வாழ்த்துகள்..💐💐💐

  ReplyDelete
 5. சகோதரர் சரவணகுமாருக்கு வாழ்த்துகள் 🥳🥳🥳🥳🥳

  ReplyDelete
 6. @Edi Sir..😍😘

  Comic con ல் கலந்து கொண்ட முதல் தமிழ் காமிக்ஸ் டாண்..😍😘

  வாழ்க..வாழ்க..😍😘💐💐💐

  ReplyDelete
 7. //அம்பது வருஷமா இருக்கோம்....எம்பது வருஷமா இருக்கோம்னு கெத்தா சொல்லிப்புட்டு, அம்பத்தூர் வரைக்கும் கூட தூரைத் தூக்கிக்கினு கிளம்பாட்டி எப்புடி ?'//

  ஆமாங்க ஆசிரியரே
  அதூவும் லயினின் 40 ஆம் ஆண்டில் நாம் கலந்து கொள்வது முக்கியமல்லவாங்க ஆசிரியரே

  ஜூனியர் எடிட்டருக்கு நன்றிகள்

  ReplyDelete
 8. //ஒரு வளர்ந்த முழியாங்கண்ணன் அங்கே தடைபண்ணின பஞ்சுமிட்டாய் வித்துட்டு இருக்கானோ, என்னவோ தெரிலே......ஆனா கூட்டம் சேர்த்திட்டு இருக்கான்....! கவனம் பாய்ஸ் & கேர்ள்ஸ் !' என்று தனது டீமை உஷார்படுத்தியிருப்பாள் போலும் //

  🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  தங்களின் எழுத்தாற்றல் அருமை ஆசிரியரே

  ReplyDelete
 9. //டைரக்டர் லோகேஷ் வந்திருக்க, அங்கும் அதிர்வலைகள் ! அவர்பாட்டுக்கு 'நான் படிச்ச மொத கி.நா.இரும்புக்கை மாயாவி....ராணி காமிக்சிலே போட்டாங்க !!' என்று அள்ளிவிட்டுச் செல்ல, நம்மாட்கள் என்னைக் கலாய்த்துத் தள்ளி விட்டனர்//


  இது தான் சார் போன பதிவிலும்...சொன்னேன்...
  எந்த காமிக்ஸ் ஏன் தஎரஇய்மஆ.. இரும்புக்கை மாயாவி படம்எடுக்கிறாராமாம்..

  ReplyDelete
 10. டைரக்டர் சொல்லிதான் ராணி காமிக்ஸில் கிராபிக் நாவல் வெளிவந்த விபரம் தெரிந்துள்ளது 🙈🙈🙈

  ReplyDelete
 11. ///அவர்பாட்டுக்கு 'நான் படிச்ச மொத கி.நா.இரும்புக்கை மாயாவி....ராணி காமிக்சிலே போட்டாங்க !!' என்று அள்ளிவிட்டுச் செல்ல.///

  கொஞ்சமாச்சும் விசாரிச்சிட்டு பேசியிருக்கலாம்..😂😂😂

  ReplyDelete
  Replies
  1. சினிமானாலே காமெடி தானே மாமா.....😜😜😜அவிங்க பேச்சுக்களையும் காமெடியாகவே சிரிச்சிட்டு கடந்து போகணும்யா...🤣🤣🤣🤣🤣

   Delete
  2. முக்கியமான காரணம் எனக்கு எல்லாந் தெரியும்....எனும் எண்ணமே....எங்கயாவது படிக்காமலே சிறு வயதில் கேள்விபட்டிருக்கலாம்....அல்லது பிற டைரக்டர்கள் காமிக்ஸ் காமிக்ஸ்னு கூவுறாங்களே....இங்க பார் எனக்கும் காமிக்ஸ் லாம் தெரியும்.

   உதவி டைரக்டர் 1....ராணி காமிக்ஸ்னு வந்ததுண்ணா

   உ.டை.2..... அன்று இரும்புக் கை மாயாவி தூள் கிளப்புவார் தெரியுமா

   உ.டை.3... கி.நான்னு காமிக்ஸ் வளர்ச்சில உச்சகட்டமாமே


   லோகேஷ் போன்றோர் மூளை....

   காத்துல வந்து காதுல பட்ட சேதியை நிச்சயமா இங்க போட்டு அசரடிக்குது....காமிக்ஸ்னா எனக்குத் தெரியும்னு இந்தக் கூட்டம் நம்புது.....
   நா சொல்லுது

   Delete
 12. ஒரு வளர்ந்த முழியாங்கண்ணன் அங்கே தடைபண்ணின பஞ்சுமிட்டாய் வித்துட்டு இருக்கானோ, என்னவோ தெரிலே......ஆனா கூட்டம் சேர்த்திட்டு இருக்கான்....! கவனம் பாய்ஸ் & கேர்ள்ஸ் !' ஹாஹாஹா உங்களுடைய அப்டேட்டட் காமெடியெல்லாமே வேற இரகம் சார்..

  ReplyDelete
 13. "ஹேய்ய்...இங்கே பாருயா...டாமில்லே காமிக்ஸ் ஸ்டால் ...!" என்ற வியப்பு கலந்த குரல்கள் அவ்வப்போது ஒலித்துக் கொண்டேயிருந்தது ! இதுதான் சூப்பர் சார். டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இரும்புக் கை மாயாவி கான்செப்ட் மட்டும் அறிந்திருப்பார் போலிருக்கிறது. முன்னாள் காமிக்ஸ் வாசகர் சிறு வயதில் வாசித்த நினைவுகளில் பேசியிருப்பார் என நினைக்கிறேன். இன்னும் அவர் ஸ்டோரி டிஸ்கஷனில் அமர்ந்திருக்க மாட்டார் என்றே தெரிகிறது.

  ReplyDelete
 14. திபெத் செல்ல பரிசு வென்ற தோர்கல் பரம இரசிகர் பல்லடம் சரவணகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகள் சரவணகுமார் சார்...

   Delete
 15. // அன்றைய விற்பனை தொகையை நம்மாட்கள் அனுப்பிய போது முட்டைக்கண்கள் இன்னும் அகல விரிந்தன - கூத்துக்களுக்கு மத்தியிலும் நமக்கும் விற்பனை நிகழ்ந்திருந்தது !! 'Wow' என்றபடிக்கே உறங்கிப் போனேன் !! //

  Super news sir.

  ReplyDelete
 16. // டைரக்டர் லோகேஷ் வந்திருக்க, அங்கும் அதிர்வலைகள் ! அவர்பாட்டுக்கு 'நான் படிச்ச மொத கி.நா.இரும்புக்கை மாயாவி....ராணி காமிக்சிலே போட்டாங்க !!' //

  Comics history theriyamal oru patti ennatha solla ivaarkali😭

  ReplyDelete
 17. Enjoyed spending time with our friends. Thanks for the time sir.

  ReplyDelete
 18. //இரவில் அன்றைய விற்பனை தொகையை நம்மாட்கள் அனுப்பிய போது முட்டைக்கண்கள் இன்னும் அகல விரிந்தன - கூத்துக்களுக்கு மத்தியிலும் நமக்கும் விற்பனை நிகழ்ந்திருந்தது !!//

  💪💪💪💪💪
  இது நம்மளுக்கு ரொம்ப முக்கியம்

  ReplyDelete
 19. ஹைய்யா புதிய பதிவு...

  ReplyDelete
 20. // இரவில் அன்றைய விற்பனை தொகையை நம்மாட்கள் அனுப்பிய போது முட்டைக்கண்கள் இன்னும் அகல விரிந்தன - கூத்துக்களுக்கு மத்தியிலும் நமக்கும் விற்பனை நிகழ்ந்திருந்தது !! 'Wow' என்றபடிக்கே உறங்கிப் போனேன் !! //
  இம்புட்டு ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பு,மகிழ்ச்சி சார்...

  ReplyDelete
 21. இந்த வார நாட்களில் கிடைத்த நேர இடைவெளிகளில் விங் கமாண்டர் ஜார்ஜ் ஸ்பெஷல்-1 படிச்சாச்சி,நெப்போலியன் பொக்கிஷம் ஏற்கனவே படித்த நினைவு,மீட்போர் கழகம் மற்ற கதைகள் முதல் வாசிப்புதான்....
  ஜார்ஜ் ஸ்பெஷல் சூப்பரான ரகக் கதைகள் இல்லையென்றாலும் மோசமில்லை ரகத்தில் இருந்தன,ஆங்காங்கே புராதன நெடியும்,ஜானி நீரோ,லாரன்ஸ் டேவிட் கதைகளில் வருவது கும்,நங்,சத்,வந்தார் பாய்ந்தார் பாணியும் கொஞ்சம் அயர்ச்சியூட்டின...
  எப்படி இருப்பினும் படிக்காத கதைகளை படித்தது மகிழ்ச்சி...
  அடுத்ததா ஜனவரி இதழ்களை வாசிக்கனும்...

  ReplyDelete
 22. சார் .நீங்களே முன்பு ஒரு முறை எழுதியது ஞாபகம் வந்தது ..
  . ..//. இரும்புக்கை மாயாவி ரசிகர்களின் காமிக்ஸ் வாசிக்கும் பழக்கம் இரும்புக்கை மாயாவியில் ஆரம்பித்து இரும்புக்கை மாயாவியிலேயே முடிந்து விடுகிறது//

  ReplyDelete
 23. கடல் சகோ . இரும்புக்கை மாயாவி கிராஃபிக் நாவல் அப்படிங்கிற விசயமே எனக்கு இப்பத்தான் தெரியும்.எல்லாரும் இத்தனை வருசமா இத என்கிட்ட சொல்லாம மறச்சிட்டாங்களே

  ReplyDelete
 24. //அவுக கட்டண விபரங்களை வாங்கிப் பார்த்த நொடியில், நிலநடுக்கத்தை அடிக்கடி அனுபவிக்கும் ஜப்பான் ஜனம் எப்படி உணர்வார்களென்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது //

  இவிங்க ஸ்டால் போடுபவர்களிடமும் நல்லா வசூல் பண்றாங்க, பார்க்க வருபவர்களிடமும் வசூல் பண்றாங்க
  இது போக உணவு ஸ்டால்கள்

  நன்றாகவே கல்லா கட்றாங்க

  ReplyDelete
 25. நேபாள ட்ரிப்பை வென்ற அருமை நண்பர் பல்லடம் சரவணகுமார் அவர்களுக்கு வாழ்த்துகள்..💐💐💐

  இது செல்லாது...
  செல்லாது

  ReplyDelete
 26. அடடா…பரபரப்பான தருணத்திலே இன்டர்வெல் ப்ளாக் விட்டுட்டீங்களே…தூங்கி எழுந்து வந்து அட்டுதபதிவை போட்டு விடுங்க..

  ReplyDelete
 27. // டைரக்டர் லோகேஷ் வந்திருக்க, அங்கும் அதிர்வலைகள் ! அவர்பாட்டுக்கு 'நான் படிச்ச மொத கி.நா.இரும்புக்கை மாயாவி....ராணி காமிக்சிலே போட்டாங்க !!' //

  We should present him our Irumbukai mayavi stories sir.

  ReplyDelete
 28. உங்களது முதல் பெங்களூரு காமிக் கான் அனுபவம் - இரண்டாவது சென்னை காமிக் கான் அனுபவம் இரண்டுக்குமிடையேயான கால கட்டத்தில் உங்களது தரம், பன்முக வரைகதைகள் போன்றவற்றில் உங்களது வளர்ச்சி மிகவும் பிரமிக்கத்தக்து என்பதே உண்மை சார்.

  ReplyDelete
 29. சென்னை மக்கள் காமிக் கானை அதகளப்படுத்தியிருப்பதும், நீங்கள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் மிகுந்த வரவேற்புக் கிடைத்திருப்பதையும் interval வரையிலான உங்களது சிலாகிப்புகளில் உணரமுடிகிறது சார்!! இன்னும் அருமையான சம்பவங்கள்/செய்திகளை பதிவின் தொடர்ச்சியில் படித்திட ஆவலாய் இருப்போம்!

  நேபாள பனிக்குகைகளை பனிமனிதனோடு சுற்றிச்சுற்றி வந்து டூயட் பாடப்போகிற நண்பர் SKவிற்கு மீண்டும் வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. ரீ- செலக்சன் வேண்டும்...
   வேண்டும்....

   Delete
 30. காமிக்கான் வெற்றிக்கு வாழ்த்துகள் சார்...🌹🌹🌹🌹🌹

  ReplyDelete
 31. லட்சங்களில் வாடகை....? 🤭
  என்று கேள்விப்பட்டேன் sir.. கையை கடிக்கும் என்றால் வேண்டாம் sir...இது போன்ற ஆடம்பரங்கள் நமக்கு வேண்டாம்... அநியாயம்... 🤭
  நிதானமாக ஓடினால்.. நீண்டதூரம், நீண்ட நேரம் ஓடலாம்.. ❤️👍🙏..

  ReplyDelete
 32. சுறா மீனை வெற்றி கொண்ட வீரர் வாழ்க வாழ்க...ச்சே,
  நேபாள் டூர் வென்ற வீரர் நண்பர் SK எ சரவணக்குமாருக்கு வாழ்த்துகள்💐💐💐💐💐💐

  இனி தோர்கல் சரவணக்குமார் உடன் நேபாள் சரவணக்குமார் என்றும் அழைக்கப்படுவீராக...👌👌👌👌👌👌👌👌

  ReplyDelete
 33. தென்றல் வந்து என்னைக் கொல்லும்

  142ம் பக்கத்தில் உள்ள நச் வசனம் - தாக்குப் பிடிக்கிறவன் மட்டுமே தழைக்கிற மண்ணுடா மடையா!

  இதுதாண்டா வன்மேற்கு, இதுதாண்டா வாழ்க்கை என்று ஒரே வசனத்தில் சொல்லி விட்டார்கள்...

  மிரள வைத்த கதைக்களம்.

  இதுவரை வந்த டெட்வுட் டிக் கதைகளை அவ்வளவு சிறப்பாக கிரகிக்காத என்னை கட்டிப் போட்டு விட்டது இந்த கதை!

  எருதை வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் செவ்விந்தியர்கள், அதை வேட்டையாடி தோல்களை விற்பதை வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் வெள்ளையர்கள் இருவருக்குமான போராட்டத்தின் இடையே, வெள்ளையின - கறுப்பின நட்பையும், காதலையும், துவேஷத்தையும் தெள்ளத் தெளிவாக காட்டியுள்ளார்கள் தெ. வ. எ. கொ - வில்...

  மனதை தொட்ட இன்னொரு பக்க எண் 67 - இதுதான்.. இதுவே தான் இந்த எருது வேட்டையர்களின் சுபாவமே! வேறொரு ஆளா இருந்தா ஒப்பாரி வைக்கிற இடத்திலே இவனுக சிரிச்சு கும்மாளமடிப்பாங்க!

  சுற்றிலும் ஐந்தாறு செவ்விந்திய இனங்களின் தலைவர்களும், 500க்கும் மேற்பட்ட செவ்விந்தியர்களும் கொலை வெறியோடு காத்திருக்கும் இரவில், சலூனுக்குள் நடக்கும் கொண்டாட்டத்தை வர்ணிக்கும் வரிகள் இவை!

  யப்பா சாமீ! டெட்வுட் டிக்கு, மறுபடியும் வாய்யா! இது ஒன்னோட கடேசி கதைன்னு சொன்னதை நெம்ப முடியலே ராசா

  ReplyDelete
 34. Palladam saravanakumar sir.. My heartiest wishes for winner of Nepal tour trip.

  ReplyDelete
 35. அருமை.. விற்பனை சிறப்பாக நடைபெற்றது நல்லது. குடோன் காலியானால் புதிய கதைகள் வருமே...

  இளைய தலைமுறையினர் விரும்பும் காமிக் கானில் நீங்கள் பங்கேற்றது நமது இதழ்களை அவர்களிடம் சென்று சேர்த்தால் நன்று.

  ஆர்வத்தை தூண்டிவிட்டு இடைவேளை விட்டுவிட்டீர்களே சார்.. சீக்கிரமே மீதி பதிவை போடுங்கள்.

  அஸ்டிரிக்ஸ் சீக்கிரமே ஒரு சாம்பிள் கதை போடுங்கள்..

  Blake and Mortimer, Alix அடுத்து முயற்சி செய்யலாம்.

  https://www.hollywoodreporter.com/movies/movie-news/european-comics-films-alix-tintin-marvel-1235827492/

  ReplyDelete
 36. ஹஹஹஹஹ.....சூப்பர் சார்.... முக்கியமான கட்டத்ல தொடருமா...சுவாரஸ்யங்கள சொல்லுங்க காத்திருக்கோம்

  ReplyDelete
 37. ஹாய் இங்கே பாருடா டாமில்லே காமிக்ஸ் ஸ்டால். சார். இதற்காகத்தான் சார் விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று ஆங்காங்கே பல வாசகர்களும் குரல் கொடுக்கிறோம்.தமிழில் காமிக்ஸ் வருவதை அட்லீஸ்ட் தமிழகத்துக்குள்ளாவது விளம்பரங்கள் மூலம் தெரியப்படுத்துங்கள்

  ReplyDelete
 38. பதிவை வாசிக்க, வாசிக்க புன்னகையும் ,மகிழ்வுமாய் மனம்...அருமை சார்....இடைவேளைக்கு பிறகு இன்னும் ஆவலுடன் காத்திருக்கிறேன்...

  ReplyDelete
 39. நேபாள பயணத்தை வென்ற நண்பர் பல்லடம் சரவணக்குமார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் ,பாராட்டுகளும்..

  ReplyDelete
 40. மன நிறைவான இரண்டு நாள் டியர் எடி... ஞாயிறு 4 மணி வரை இருந்து விட்டபடியால் நள்ளிரவுக்குள் பெங்களூரை எட்டி பிடிக்க வண்டியை விரட்ட வேண்டி வந்தது. இறுதி வரை உங்களுடன் இருக்க முடியவில்லை.🥹

  6 மணி நேரம் இடைவிடாது விரட்டி, வழியில் வாங்கிய அஹ்மீதியா பிரியாணி கூட சாப்பிடாமல் பார்சல் பண்ணி, நள்ளிரவு 12.45 க்கு வீடு சேர்ந்து படுத்ததுதான், இப்போது தான் முழித்து இதை டைப் செய்கிறேன். 😎

  ஆனாலும், இரும்பு கை மாயாவி 'ய கிராபிக் நாவலா ராணி காமிக்ஸ் உங்களுக்கு முன்பே போட்டு இருந்ததை எங்களிடம் மறைத்த பாவத்திற்காக உங்களோடு டூ விடலாம்னு இருந்தேன். 🤬

  லஞ்சமாக ஃபீஸா பார்ட்டி
  கொடுத்து விட்டபடியால் அப்படியே உட்டாச்சு. புழச்சு போங்கோ (#அன்பேசிவம் கமலஹாசன் மாடுலேஷனில் படிக்கவும்) 😎

  ReplyDelete
  Replies
  1. அவரு லயன் கரண்டுல மறைஞ்சு போய் ராணி காமிக்ஸ்ல வெளிப்பட்டத லோகேஷ் கண்டுபிடிச்சி படிச்சதுக்கு நம்ம ஆசிரியர் என்ன பன்னுவார்...பழம் விடுங்க

   Delete
 41. வணக்கம் நண்பர்களே!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கள் நண்பரே..

   Delete
 42. சார் இது போங்காட்டம். 1972 இல் தான் சீனியர் எடிட்டர் இரும்புக்கை மாயாவியை வெளியிட்டார். ஆனால் ராணி காமிக்ஸ் 1984லிலேயே கிராபிக் நகலாக வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த விஷயத்தை தற்போது வரை நீங்கள் மறைத்தது மிகப்பெரிய குற்றமாகும். இதற்கு பரிகாரமாக நீங்கள் புத்தகம் வாங்கும் அனைவருக்கும் ஒரு ரவுண்ட் பன்னை பரிசாக கொடுத்தே ஆக வேண்டும். இல்லையென்றால் போராட்டம் தான்

  ReplyDelete
 43. வாழ்த்துக்கள் தோர்கல் சரவணகுமார் சார் 💐

  ReplyDelete
 44. Me and my elder son thought about coming. He is a manga Veriyan. But unable to come such long distance. Yesterday he took a black and white printout of madara Uchiha and colored and pasted in wall. Pakkave payama irunthathu.

  Happy atleast my sons reading some comics. I am slowly making them read tamil comics. Reading kathai sollum sithirangal was easy. Also eliyappa they liked a lot. Benny I am trying to read to them. Lucky Luke, tex Villar, blue coats no chance. I think western is dead among kids nowadays.

  As one vasagar said here, look at us between 2012 comic con and yesterday's comic con. We leaped a lot.

  Keep appearing in comic cons whenever it happens in TN sir. Soon 2010 kids will start reading tamil comics.

  ReplyDelete
 45. பல்லாடம் சரவணகுமார் சாருக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 46. (ரயிலைப் பிடிக்க ஓடுகிறேன் ; ரயிலில் டைப்பிடிக்க முயன்றால் நைட்டே நிறைவு செய்வேன் ! )

  ரயிலை பிடிக்க ஓடின நமது எடிட்டர் சார் திட்டமிட்டபடி நேற்று ரயிலை பிடித்தாரா? எப்போது இந்த பதிவின் தொடர்ச்சியை பதிவிடுவார் என மிகவும் ஆர்வமுடன் காத்துஇருக்கிறேன்! !

  ReplyDelete
 47. ஆசிரியரே பதிவு பாதில நிக்குது 🥺🥺🥺

  ReplyDelete
 48. பல்லடம் சரவணகுமார் சாருக்கு
  எனது வாழ்த்துக்கள்..
  திபெத்-பயணக்கட்டுரை எழுதவேண்டும் சார்..
  Blog -யில் ஒரு பதிவை தங்களுக்கே ஒதுக்கி தர வேண்டும் என்று விஜயன் சாருக்கு அன்புக்கட்டளை இடுகிறேன்..

  ReplyDelete
 49. சார் மார்ச் 1க்கு இன்னும் 10நாட்களே உள்ளன .இம்மாதம் பிப்ரவரியில் மார்ச்சா?மார்ச்சில் மார்ச்சா?அடுத்த வெள்ளி மார்ச் 1

  ReplyDelete
 50. சார் பதிவின் மீதி???

  ReplyDelete
 51. Naamalum oru thodarum padhivu poduvom

  899

  வரி சேர்த்து 973.26


  புக்கிங் செய்ய கட்டாயம் gpay இருக்க வேண்டுமாம். நெட்பாங்கிங் வசதி இல்லை.


  இந்த காசுக்கு இன்னும் நாலு புக் வாங்கலாம். இருந்தாலும் இலவசமா கொடுக்கிறோம்னு அவன் போட்ட லிஸ்டை பார்த்து ஏமாந்து போய் சேர்ந்தது வேற கதை.


  ஏர்போர்ட்டுக்கு ஒரு சவாரி 8 மணிக்கு கிளம்பலாம்னு சொல்ல ஏர்போர்ட்டுக்கு 11 மணிக்கு போயிடலாம். அங்கிருந்து அரை மணி நேரம் டிராவல் என்று நான் திட்டமிட்டு டிக்கட்டும் புக் பண்ணிட்டு உக்காந்தா, கஸ்டமர் 8:45 க்கு போலாமா என்று கேட்க, சரி இன்னும் எக்ஸ்டரா 45 நிமிஷம் தானேன்னு சமாதானப்படுத்திகிட்டு அப்படி இப்படின்னு 9 மணிக்கு திருவண்ணாமலை விட்டு கிளம்பினேன்.


  ஏர்போர்ட்டுக்குள் நுழையும் பொழுது 11:55. அங்கிருந்து அரைமணி நேரம் 12:25 க்கு போயிடலாம்னு கிளம்பி கரெக்ட்டா சென்னை டிரேட் சென்டர் கேட்டுக்குள் நுழையும் பொழுது 12:25. டைமுக்கு வந்துட்டோம்னு பார்க்கிங் இடம் தேடினா, அவன் எங்கோ ஒரு மூலையில் ஒரு கட்டிடத்தை காட்டினான். எனக்கு முன்னாடி காரெல்லாம் அங்க வரிசை கட்டி நின்றுக் கொண்டிருந்தது. அப்படியே மெதுவா பார்க்கிங் கட்டிடத்துக்குள் நுழைஞ்சா இப்ப தான் நகாசு வேலை செய்ஞ்சிகிட்டு இருக்கானுங்க. முதல் மாடி ஏறினா ஹவுஸ் புல். அப்படியே இரண்டாவது மாடி மூன்றாவது மாடின்னு அஞ்சாவது மாடிக்கு கொண்டு வந்துட்டானுங்க.


  கிடைச்ச கேப்பில் காரை நுழைச்சுட்டு எங்க நிறுத்தியிருக்கோம்னு தெரிஞ்சுக்க அடையாளம் பாக்கலாம்னா எந்த மாடின்னு தெரியல, ஸ்லாட் நம்பர் இல்ல. சரி லிப்ட் இருக்குமே அதில் இறங்கும் பொழுது பாத்துக்குவோம்னு பார்த்தா லிப்ட் இப்ப தான் இன்ஸ்டால் பன்றோம்னு சொல்றானுவ. அடேய்ன்னு படிக்கட்டு இறங்கும் பொழுது எண்ணிக்குவோம்னு இறங்க இறங்க அஞ்சாவது மாடியில் நிறுத்தியிருக்கேன்னு கண்டுபிடிச்சேன். அஞ்சாவது மாடியா? மறுபடியும் எப்படி மேல ஏறுவதுன்னு மகா சிந்தனையுடன் நடக்க ஆரம்பித்தேன் டிக்கட் கவுண்டருக்கு.


  ஒரு ஐந்து நேர நடைபயணம் டிக்கட் கவுண்டர். அந்த நேரம் பார்த்து ஜிமெயில் லில் பார்கோட் காட்டாமல் சாதி செய்ய எதற்கும் இருக்கட்டுமே என்று pdf செய்து வைத்திருந்தது கை கொடுத்தது. வரும் வழியில் நான் காமிக்ஸ் எனும் கனவுலகம் டீ சர்ட்டை போட்டிருந்ததை எவனோ தமிழ் படிக்க தெரிந்த பையன் ஒருவன் அதை படித்து விட்டு என்னை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டே சென்றான். 50 வயசுல என்னய்யா காமிக்ஸ் ரசிகன்னு நினைச்சிருப்பானா அல்லது தமிழ் காமிக்ஸ்சா அப்படின்னு நினைச்சிருப்பானான்னு ஒரே சிந்தனை. காலை டிபன் சாப்பிட்டு கொண்டிருந்த ஒரு குடும்பத்து பெரியவர் என்னை பார்த்து புன்னகைத்தார். சாப்பிடுபவரை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு புன்னகைத்து விட்டு வந்து விட்டேன்.


  ஒரு டோக்கெனும் கையில் காட்டும் பட்டையும் கொடுத்தானுவ. பேக் புக் எங்கன்னு கேட்க, உள்ள போங்க தருவானுங்கன்னு சொன்னானுவ. எனக்கு பின்னாடி ஒரு 10 2k கிட்ஸ் GOODIES எங்க எங்கன்னு கேட்டுகிட்டே வந்தானுங்க. நாம கேக்க வேண்டியதை அவனுங்க கேக்கிறானுங்கன்னு நினைச்சிகிட்டே இருக்கும் பொழுது ஏகப்பட்ட நீலகலர் சட்டை அணிந்த VOLUNTEERS. WELCOME டு காமிக்கான் என்று HI FIVE கொடுத்துக்கிட்டு இருந்தானுங்க.


  புக்கும் பேகும் கிடைக்காதா என்று மகா யோசனை. BOMB CHEKKING முடிஞ்சா உடனே தூரத்துல ஒரு ஸ்டால். கண்டேன் சீதையை என்று போலாம்னு பார்த்தா கோவில் கருவறைக்கு போகும் ஸ்டைலில் சுத்தி சுத்தி போக கயிறு கட்டி வச்சிருக்கானுவ. எனக்கு முன்னாடி இரண்டு அம்மணிகள் அவசரம் தெரியாம பொறுமையா நடக்க நான் கயிறு தாண்டி அவர்களுக்கு முன்னே சென்றேன்.


  அவனுங்க கொடுத்ததை பார்த்த உடனே டேய் இதுக்காடா இவ்வளவு பில்டப்ன்னு தோணுச்சு. அடுத்து நம்ம லயன் காமிக்ஸ் ஸ்டால் தேடும் படலம்.


  ஒரு சுத்து சுத்து சுத்தியும் D 18 கண்ணில் படாமல் VOLUNTEER கேட்டா அவன் அப்படி ஒரு ஸ்டால் இல்லியே சார்னு சொன்னான். என்னடா இது திருவண்ணாமலைக்காரனுக்கு வந்த சோதனைன்னு லயன் காமிக்ஸ் போஸ்டரை காட்டினா D 18 ஆ சார்னு அசால்ட்டா கேட்டுட்டு, அந்த கடைசி சார் என்றான். இந்த வழியா தானே போனோம் எப்படி மிஸ் பண்ணோம்னு யோசிச்சிகிட்டு ஸ்டால்லில் இருந்த கூட்டத்தை போட்டோ எடுத்துக் கொண்டிருக்கையில் நம் டீ சர்ட்டை பார்த்து விற்பனை செய்துக் கொண்டிருந்த ஜோதி மேடம் அடையாளம் கண்டுகொண்டு எடிட்டரும் மற்றவர்களும் இப்பொழுது தான் வெளியே சென்றார்கள் என்றார்கள்.


  அதன் பின்பு ஜோதியில் ஐக்கியமாகி இரண்டு மணி நேரம் எப்படி சென்றதே என்று தெரியவில்லை. கிட்டத்தட்ட 1000 ரூபாய் செலவு செய்த வருத்தம் மறைந்தே போனது.

  -To be continued

  ReplyDelete
 52. டியர் விஜயன் சார்,

  பல ஆண்டுகளுக்குப் பிறகு, உங்களையும், வேறு சில நண்பர்களையும் மீண்டும் சந்திக்க முடிந்ததிலும்......, இதுவரை நேரில் பார்த்திராத  நண்பர்கள் சிலரைப் பார்த்துப் பேச முடிந்ததிலும் மிக்க மகிழ்ச்சி!

  காமிக் கானில் ஒரு யூடியூப் பிரபலம், "எனக்குப் பிடிச்ச காமிக்ஸ் கேரக்டர் சப்பாண்டி..." (ஆமாம், 'ச' தான்!) என்று அள்ளிவிட்டிருப்பது போல, லோகேஷ் கனகராஜும் அவர் பங்குக்கு அரையும் குறையுமாக ஏதோ பேசி வைத்திருக்கிறார் போல! ஏதோ ஒரு காரணத்திற்காக, தெரிந்தே கூட இப்படி பேசி இருக்கலாம், யார் கண்டது?! நீங்களாவது மறுத்து ஒரு அறிக்கை விடலாம்...

  நமது காமிக்ஸ் மற்றும் இரும்புக்கை மாயாவி பற்றி நன்கு அறிந்த திரைத்துறையினர், எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் பல பேர் உள்ளனர். அவர்களில் ஒருவராவது இதைப் பற்றி கண்டித்து எழுதியிருக்கிறார்களா என்று பார்த்தால், ஒரே சப்பாண்டி ஆகி விட்டது! கலை மற்றும் பத்திரிக்கைத் துறையினரின் நேர்மை அந்த அளவுக்கு உயர்ந்து நிற்கிறது, வாழ்க வளமுடன்!

  ReplyDelete
  Replies
  1. // ஏதோ ஒரு காரணத்திற்காக, தெரிந்தே கூட இப்படி பேசி இருக்கலாம், யார் கண்டது?! //

   It’s possible. I too felt the same. One of young leading director how come he doesn’t know about irumbukai mayavi🤔

   Delete
  2. எடிட்டரின் பெயரை வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்வதில் சில மீடியாக்களுக்கு அப்படியொரு கிளுகிளுப்பு!

   Delete
 53. எடிட்டர் சார்.. நேற்றைக்கு இரவு ஆரம்பித்து இன்னும் தொடர்ச்சியாக ரயிலைப் பிடிக்க ஓடிக்கொண்டே இருக்கும் உங்களது விடா முயற்சி பாராட்டுக்குரியது!

  ReplyDelete
 54. தொடர்ச்சி 

  ஜோதி மேடத்திடம் தகவல் கேட்ட பிறகு, தோர்கல் சரவணன் சாருக்கு கால் செய்தேன். அவர் ஹலோ சொல்லவும் அவர்களை நான் கண்டுகொள்ளவும் சரியாக இருந்தது. பார்த்துட்டேன் இதோ வந்துடுறேன் என்று சென்ற உடன் செந்தில் சத்யா சார் என்னை கட்டிப் பிடித்துக் கொண்டு சந்தோஷப் பட்டார். இவர் தான் டின்டின் என்று சரவணகுமாரை காண்பிக்க, தோர்கல் எப்ப டின்டின் ஆனார் என்று குழம்ப, நேபாள் வென்றதை தெளிவு படுத்தினார்கள். 

  அதுக்குள் குலுக்கல் முடித்து விட்டார்களா என்று ஓரமாக ஏமாற்றமடைந்தாலும், பரிசை அடித்தது சரியான நபர் தான் என்று சந்தோஷமடைந்தேன். You deserved it sir and you are the right person to get it. வாங்க சாப்பிட போலாம் என்று விஜயன் சார் அழைக்க, ரபீக் ராஜா, வெங்கடேஷ் மற்றும் அவரது மகள் உடன் நாங்கள் மூவரும் நடை போட்டோம். 

  food court ஒரு பக்கம், game zone ஒரு பக்கம் என்று இருகூறாக பிரித்து ஆங்காங்கே selfi point களும் வைத்திருந்தனர். விஜயன் சார் pizza வாங்கிவர, அனைவரும் ஒரு வட்டமாக உட்கார்ந்தோம். இவ்வளவையும் சாப்பிட முடியாது என்று சேலம் சிங்கங்களான குமார் சார், ஸ்ரீராம் மற்றும் மாதேஷ் மூவரையும் அழைத்தோம். குமார் சாரின் மகன் கண்டேன் புதையலை என்பது போல் ஒரு இடத்தில் நிற்க முடியாமல் நிலை தடுமாறினார். 

  ஆம் இந்த 2கே கிட்ஸ் களுக்கு ஏற்ற இடமாக இது இருந்தது என்றால் அது மிகையில்லை. காமிக்ஸ் புத்தகங்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு மிஞ்சியது ஏமாற்றமே. ஒரு நிமிடம் சுதாரித்து சுற்றும் முற்றும் பார்த்தால் நம் வயதை ஒட்டிய நபர்கள் கண்ணில் படவே இல்லை. ஒரு வழியாக சாப்பிட்டு முடித்து விட்டு ஸ்டால் அருகில் வந்தால், ஒரு சில நபர்கள் ஆர்வமாக புத்தகங்களை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தனர். நம் ஸ்டாலுக்கு இருபுறத்தில் ஒரு புறம் பொம்மைகளும் கீசெயின்களும் மறுபுறம் டீஷர்ட்டுகளும் செம விற்பனை. 

  வருவோருக்கு வழி விட்டு ஓரமாக நின்று கொண்டிருந்த என்னை நோக்கி ஒருவர் வந்து நான் போட்டுக் கொண்டிருந்த காமிக்ஸ் எனும் கனவுலகம் டிஷர்ட் எங்கு கிடைக்கும் என்று கேட்டார். அவருக்கு நான் நம் குழுவை குறித்து விவரிக்க அவரோ வாட்சாப் குழுவினர் டிஷர்ட் கொடுக்கிறார்களா? நம்ப முடியலே என்பது போல் என்னை பார்த்துக் கொண்டிருந்தார். 

  ஒரு youtuber நமது ஸ்டாலை கவர் செய்ய, மேலதிக விவரங்கள் கேட்க என்னை அணுக, நான் தோர்கல் சரவணகுமாரை கோர்த்து விட, அவரோ பேட்டி எடுப்பவரை கேள்விகளால் துளைத்து எடுக்க. youtuber எப்படி ஆரம்பிப்பது என்று புரியாமல் முழித்தார். சில நிமிட நேரம் எடிட்டருடன் மற்றவர்கள் பேசுவதை கவனித்து விட்டு, அவரிடம் நான் என்ன கேட்க வேண்டும் என்று சென்றேனோ அந்த விஷயத்தை மறந்து விட்டு ஊருக்கு திரும்ப விடைபெற்றுக் கொண்டு கிளம்பி விட்டோம். 

  ReplyDelete
 55. சார்.. சின்னவயசுல நாங்கல்லாம் மாட்டுவண்டி பின்னாடி ஓடியிருக்கோம்.. அம்பாஸடர் கார் பின்னாடி ஓடியிருக்கோம்.. அவ்வளவு ஏன் - தண்ணி லாரி பின்னாடி கூட ஓடியிருக்கோம்! ஆனா ரயிலைத் துரத்திக்கிட்டு ஓடும் தைரியமெல்லாம் வந்ததே இல்லைங்க சார்! கோடியில் ஒருவருக்கே இதெல்லாம் சாத்தியமாகிடும்!

  இப்போ நாகர்கோயில் ஜங்சனைத் தாண்டிட்டீங்களா சார்?!!

  ReplyDelete
 56. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)

  ReplyDelete