ம்ம்ம்க்ஹ்ஹ்ஹ ,
ர்ர்ஹ்ஹ்ஸ்க்க் ! க்ஹ்ஹ்ர் ...? ப்ஹ்ர் !
என்ன கண்றாவிலே இது - என்கிறீர்களா ? அட, ஒண்ணும் இல்லே மக்கா, ஒரு வாரமா மார்ட்டின் கூட சுற்றித் திரிஞ்சேனா - அவரோட அசிஸ்டண்ட் ஜாவாவின் பாஷை நம்மளையும் தொத்திக்கிச்சு ! So அந்த குகை மனுஷனின் பாணியிலே..."அல்லாரையும் கும்புடறேன் ! நல்லா கீறீங்களா ?"ன்னு தான் கேட்டிருந்தேன் - மேலேயுள்ள பத்தியில் !
ஹீரோ மார்ட்டின் மேல பாசம் பீச்சிடலாம் - ஓ.கே. ; ஆனா அதென்ன சைடு பார்ட்டி ஜாவா மேலே திடீர் பாசம் என்கிறீர்களா ? காரணம் இருக்கே ! காத்திருக்கும் மார்ச் வெளியீடான "ஆர்டிக் அசுரன்" இதழில், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஜாவாவுக்கு முக்கியத்துவம் இருக்கே ! முக்கியத்துவம் மட்டுமில்லே ; முன்னெப்போதும் இல்லாத மாதிரி அவருக்கொரு லவ்ஸ் இருக்கே ! லவ்ஸ் மட்டுமில்லே...அத்தோட சேர்த்து ஒரு 'கபி..கபி'யும் இருக்குதே ! முன்னர் கார்சனுக்கொரு 'கபி கபி' தந்திட படைப்பாளிகள் மனம் இறங்கியது போல் பாவப்பட்ட ஜாவாவுக்கும் ஒரு ஜாலிலோவை இந்த ஆல்பத்தில் தந்துள்ளார்கள் ! பாருங்களேன் folks :
ஆர்டிக் அசுரன் !
2 ஆண்டுகளுக்கு முன்னமே வெளிவந்திருக்க வேண்டியதொரு சாகசம் ! இதனையும், "வரலாற்றுக்கொரு வாடிவாசல்" ஆல்பத்தினையும் ஒருசேர வாங்கியிருந்தோம் ! And அந்த ஆண்டின் திட்டமிடலில் அசுரனே முதல் இடம் பிடித்திருக்க, கருணையானந்தம் அவர்களிடம் மொழிபெயர்ப்புக்குப் போயிருந்தது ! அவரோ, 'ஒண்ணுமே புரிலேப்பா !' என்று திருப்பி அனுப்பியிருந்தார் ! அந்நேரமோ, எனது மூத்த சகோதரியின் மகனது திருமண வேளை என்பது நினைவில் உள்ளது ! So 'அசுரனை அப்புறமா பார்த்துக்கலாம் மைதீன் ; 'வரலாற்றின் வாடிவாசல்' கதை பாதி எழுதினமட்டுக்கு இருக்கு ....மிச்சத்தை பூர்த்தி செஞ்சு தாரேன் !" என்றபடிக்கே, அந்தக் கப்பலில் ஏறி அந்த ஆண்டின் சவாரியைப் பூர்த்தி செய்திருந்தோம் ! மிகச் சரியாக, 2 ஆண்டுகளுக்குப் பிற்பாடு, எனது இளைய சகோதரியின் மகனது திருமணத் தருணத்தினுள், அசுரனை கரைசேர்க்கும் நேரமும் புலர்ந்திருந்தது செம தற்செயல் ! அதே போல மார்டினின் பிதாமகர் - திரு காஸ்டெல்லினி அவர்கள் இயற்கை எய்திய பொழுதோடு ஒத்துச் செல்லும் விதமாய் இந்த இதழது timing அமைந்ததுமே செம தற்செயல் !
ஸ்டீலின் பதிவுகளை / கவிதைகளை வாசிச்சுக்கிட்டே, இடியாப்பத்தையும், நூடுல்ஸையும் ஒருசேரச் சாப்பிடும் உணர்வினை மார்டினின் கதைகள் விதிவிலக்கின்றித் தரவல்லவை என்பதில் no secrets ! ஆக எப்போது மார்ட்டின் கதைகளைக் கையில் எடுத்தாலுமே லைட்டாய் உதறுவது வாடிக்கை ; and இது "சுத்தமாப் புரிலேப்பா !" என்ற கமெண்ட் சகிதம் திரும்பி வந்த சாகசமெனும் போது உதறல் ஒரு மிடறு ஜாஸ்தியாகவே இருந்தது ! And இங்கு இன்னொரு பொதுவான விஷயமுமே ! இன்டர்நெட்டுக்கு முந்தைய காலகட்டங்களில், இது போன்ற நேர்கோடல்லாத கதைகள் புரியுதோ-புரியலியோ, மேம்போக்காய் பூசி மெழுகியிருந்திருப்போம் தான் ! ஆனால் இணையத்தில் தேடல்கள் சாத்தியமென்றான பிற்பாடு ஒவ்வொரு non-linear சாகசத்தினுள்ளும் வண்டி வண்டியாய் பின்னணித் தகவல்களைத் திரட்டிடல் அவசியமென்றாகி விட்டுள்ளது ! XIII தொடரில் ; டெட்வுட் டிக்கில் ; தாத்தாக்கள் கதைகளில் ; மார்ட்டின் ஆல்பங்களில் ; அட, டைகர் ஆல்பங்களில் கூட கூகுளாண்டவர் நமக்கு அருளியுள்ள விபரங்கள் ஒரு வண்டி !! And "ஆர்டிக் அசுரன்" அதற்கொரு பிரதம உதாரணம் ! கதைக்களமோ நடுக்கும் வட துருவம் ; கதைக்காலமோ 1850 ! கதைமாந்தர்களோ இன்யுவெட் எனப்படும் ஆர்டிக் வாழ் மக்களும், பிரிட்டிஷ் மாலுமிகளும், அப்புறம்...அப்புறம் சில பல அசுர ஜென்மங்களுமே ! So எங்கோ ஒரு தமிழக மூலையில் குந்திக் கிடக்கும் நமக்கு, 175 ஆண்டுகளுக்கு முன்பான இந்த அந்நிய களம் பற்றிய பரிச்சயம் பூஜ்யமாகத் தானே இருக்கக்கூடும் ?! அந்தப் பூஜ்யத்தினில் துவக்கினேன் பேனா பிடிக்கும் படலத்தினை ! துவக்கம் என்னவோ சமகால நியூயார்க்கில் ரொம்பவே அழகான சித்திரபாணியில் இருந்திட, உற்சாகமாய் வண்டி ஸ்டார்ட் ஆனது ! ஆனால் கண்ணிமைக்கும் நொடிக்குள் கதாசிரியர் ஒரு யு-டர்ன் போட்டு நேரா ஒரு ஆர்டிக் புளியமரமாய்ப் பார்த்து வண்டியை அதன் மேலேற்றி....அதன் பின்னே மரத்துக்கு மரம் கப்பலில் டிராவல் என்று சொல்லாத குறையாய் ஏதேதோ அதிரடிகளை இறக்க ஆரம்பிக்க, அப்போது ஓபன் பண்ணினேன் கூகுள் டியூஷனை ! கழுத, பல்போகும் வயசிலே இன்றைக்குச் செய்திடும் ஆய்வுகளையும், எழுதிடும் டன் டன்னான பக்கங்களையும் நான் படிக்கிற வயசிலேயே செஞ்சிருந்தால், நிச்சயமா ஏதாச்சும் மெடல்-கிடலாச்சும் வாங்கியிருக்கலாம் போல - அம்புட்டுத் தேடல்கள் இப்போதெல்லாம் அவசியமாகின்றன ! நிஜ சம்பவங்களையும், வரலாற்று நிகழ்வுகளையும், துளியூண்டு அமானுஷ்யம் கலந்து கட்டி கதாசிரியர் பரிமாறியிருக்கும் இந்த விருந்தில் கூகுள் துணையின்றிப் புகுந்திருந்த கருணையானந்தம் அங்கிள் திகைத்துப் போயிருந்ததில் வியப்பே இல்லை தான் என்பது புரிந்தது ! எங்கே நிஜம் முடிகிறது ? எங்கே கற்பனை சிறகு விரிக்கிறது ? வாய்க்குள் நுழையவே செய்யாத பெயர்களின் உச்சரிப்பென்ன ? பழம் கதைகளில் சொல்லப்பட்டிருக்கும் திகிலான ஜென்மங்களின் பின்னணி தான் என்ன ? என்று தேடித்தேடி எழுத வேண்டிப் போனது ! And கதை நிகழ்ந்திடும் 175 ஆண்டுகளுக்கு முன்பான காலகட்டத்திலேயே ஒரு side track-ல் வைக்கிங்குகளின் வருகை ; அவர்களோடு ஒரு மினி பயணம் ; பச்சக்கென்று 'கட்' பண்ணி நிகழ்கால வடதுருவம் ; சச்சக்கென்று இன்னொரு 'கட்' பண்ணி சமகால நியூயார்க் ; இவற்றினூடே கதாசிரியரின் சில தார்மீக உணர்வுடனான கேள்விகள் - என்று தெறிக்கத் தெறிக்க டிராவல் செய்கிறது இந்த 80 பக்க ஆல்பம் ! இதன் மத்தியில் நம்ம ஜாவாவின் ஜலபுல ஜங்ஸ் வேறு ! Phew ....!! டெக்ஸ் வில்லரின் கதைகள் 220 பக்கங்கள் கொண்டவை ; ஆனால் டிக்கியை இருத்தி எழுத ஆரம்பித்தால் கைவிரல்கள் நோவுமே தவிர்த்து, மண்டையைப் பிய்க்க அவசியமாகிடாது ! ஆனால் அதில் மூன்றிலொரு பங்குப் பக்கங்களே கொண்டிருந்தாலும், மார்டினை கரைசேர்ப்பதற்குள் தலைக்கு ரெண்டுவாட்டி டை அடிக்க வேண்டிப்போகும் போலும் !! சகலத்தையும் முடித்து இன்று மார்ட்டின் பிரிண்ட் ஆகியிருப்பதைப் பார்த்த போது மனசுக்குள் ஒரு இனம்புரியா சந்தோஷம் நிலவியதை மறுக்க மாட்டேன் !
ஆர்டிக் அசுரன் - ஒரு மறக்கவியலா டெரர் பயணம் !! பாருங்களேன் - இந்த இன்னொரு பக்க ப்ரீவியூவையும் :
மார்ச்சின் வாசிப்பில் இது முதலிடம் பிடித்தால் நான் வியப்படையவே மாட்டேன் தான் !
Moving on, இதோ - மார்ச்சின் நமது தலைமகன் !! நிஜத்தைச் சொல்வதானால் இந்த 2024 புலர்ந்தது முதலாய் முதல் 2 மாதங்களிலுமே நம்மவர் முதலிடத்தில் நிற்கவில்லை என்பதே நிஜம் ! ஜனவரியை டின்டினின் அதகள அறிமுகமும், லார்கோவின் பரபர மீள்வருகையும் ஆக்கிரமத்திருந்தன ! பிப்ரவரியின் ஒளிவட்டத்தை டெட்வுட் டிக்கும் ; இளவரசியும் பகிர்ந்திருந்தனர் ! So இந்த மார்ச் மாதத்திலும் தல ஒரு tough போட்டி சந்திக்கவிருக்கிறார் - சக இத்தாலிய ; சக போனெல்லி நாயகர்களின் ரூபத்தில் ! பார்க்கலாமே - இம்முறை நிலவரம் என்னவென்று ! இதோ - ஒரிஜினல் ராப்பருடன் டெக்ஸ் & கார்சனின் "புயலுக்குப் பின்னே பிரளயம்" சார்ந்த preview :
ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னே வெளியான "ஒரு மௌன நகரம்" கதையினை நினைவூட்டும் template இங்கும் ! ஆனால் கதை பயணிப்பதோ வேறொரு ரூட்டில் ! இந்த ஆல்பம் 2 மாதங்களுக்கு முன்னே வெளியாகியிருந்தால், வெள்ளக்காடாய் மிதந்து கொண்டிருந்த நம்மூர்களின் நிலையினைப் பிரதிபலித்தது போலிருந்திருக்கும் - becos கதை ஆரம்பிக்கும் போதே நமது ரேஞ்சர்கள் அறிமுகமாவது குதிரைகளின் மீதமர்ந்தல்ல !! மாறாக - 'ஏலேலோ ஐலசா..' என்று துடுப்புப் போட்டபடியே ஊருக்குள் நுழைகிறார்கள் ! And வெள்ளத்தில் அடித்து வரப்படும் ஒரு இளம் பெண்ணின் சடலம் அவர்களை வழிமறிக்கிறது ! யாரந்த மங்கை ? அவளைக் கொலை செய்த கொடூரன் யார் ? கொலைக்கான முகாந்திரமென்ன ? என்று தேடலை ஆரம்பிக்கிறார்கள் டெக்ஸ் & கார்சன் ! Yet another வித்தியாசமான ஓவிய பாணியில் - சிம்பிளாய், அழகாய் நமது ஆதர்ஷ நாயகர்கள் பவனி வருகிறார்கள் ! பாருங்களேன் !
இந்த மார்ச்சில் காத்துள்ள 3 இதழ்களுமே black & white தான் ; மூன்றுமே போனெல்லியின் நாயகர்கள் தான் (டெக்ஸ் ; மார்ட்டின் & மிஸ்டர் நோ) & மூன்றுமே செம crisp வாசிப்புகளே ! So பரணில் சாத்திப் போடும் படலங்களுக்கு இம்முறையுமே அவசியமிராதென்று தோன்றுகிறது ! Fingers crossed !
இந்த நொடியில் எனது கேள்வி இது தான் : இந்த மார்ச்சில் உங்களது முதல் வாசிப்புத் தேர்வு எந்த இதழாக இருக்குமோ guys ?
And கேள்வி # 2 : பிப்ரவரியின் மூன்று இதழ்களுக்கான உங்களின் ரேங்க் எவ்விதம் இருக்கும் ? (மாடஸ்டி ; டெட்வுட் டிக் & டெக்ஸ்)
கலர் மேளா ஏப்ரல் முதலாய் தோரணம் கட்டத் தயாராகி வருகிறது ! And அதற்கொரு முன்னோடியாய் பெளன்சர் மறுக்கா ஆஜராகிறார் ஏப்ரலில் ! தெறிக்கும் கோடை மலர் guys ! மீண்டும் சந்திப்போம் ! Bye for now ...have a lovely weekend all !