YOUTUBE LIVESTREAM லிங்க் : https://www.youtube.com/watch?v=ndu1YDQ8GqM&t=16504s
வணக்கம் நண்பர்களே,
அமோர் வின்ச்சிட் ஆம்னியா !! AMOR VINCIT OMNIA !!
இன்னா மேன் மேட்டரு ? ஆம்னி பஸ்...மோர்...பால்..தயிர்னு நீட்டி முழக்குறியே ? என்கிறீர்களா ? அது ஒன்னும் இல்லீங்கண்ணா....கி.மு.38-ல் விர்ஜில் எனும் இத்தாலியப் புலவர் எழுதிய வரியாம் இது !
கிருஸ்துக்கு முன்னேயே பதிவு செய்யப்படதொரு வரியானது, யுகங்களைத் தாண்டி இன்று வரைக்கும் நிலைத்து வருகிறதென்றால், அதனில் சாரம் இருக்காது போகாதில்லியா ? So அதன் அர்த்தம் என்னவென்று பார்க்க முனைந்தேன் ! "காதல் சகலத்தையும் ஜெயம் கொள்ளும்" என்பது போலான பொருளாம் !! கடந்த சனியிரவில் நமது ஈரோட்டுச் சந்திப்பு மேளா ஒரு அட்டகாச நிறைவு கண்டான பின்னே, ரூமுக்குப் போய் மல்லாந்து கிடந்த நொடியில் மேற்படி வரி தான் என் மனதில் ஓடியது ! "மெய் தான் விர்ஜில் சார் ; காதல் தன்முன்னே இருப்போர் சகலரையும் வாரிச் சுருட்டி அள்ளிச் சென்றுவிடுமென்பது சந்தேகமற நிரூபணம் ஆகிவிட்டது !" என்று புலவர்வாளிடம் சொல்லத்தோன்றியது ! Becos அந்த அசாத்தியச் சனியன்று நாம் பார்த்த சகலமுமே "காமிக்ஸ் காதல்" ஈட்டிய வெற்றிகளைத் தானே ?! அந்தக் காதலின் சுனாமி போலான வீச்சின் முன்னே, பேரன் பேத்தி எடுத்தோர் கூடப் பச்சிளம் பாலகர்களாய் உருமாற்றம் கண்ட அதிசயங்களைப் பார்த்தோம் ! வயதுகளோ, தூரங்களோ, சொந்தப் பணிகளோ ; செலவுகளோ ஒரு பொருட்டாகிடாது என்பதை நிதரிசனமாய் தரிசித்தோம் ! வீட்டிலிருப்போரிடம் உருப்படியாய் பேசவே நேரமில்லை என்றான இன்றைய பொழுதினில் "மனதுக்குப் பிடித்ததை ரசிக்க அந்த ஒற்றை நாளின் முழுமையையும் செலவிடுவதில் தப்பே இல்லை !!" என்ற ஆர்ப்பரிப்பைப் பார்த்தோம் ! பழமைக்குள் பயணம் செய்யும் பரவசங்களை உணர்ந்தோம் ; இளமையின் வசீகரத்துக்குக் கட்டுண்டோம் ! நட்பின் நிழலில் அழகாய் இளைப்பாறினோம் ; நம்மைச் சுற்றியிருப்போருக்கு மின்சாரமூட்டி, நாமும் அதனை உறிஞ்சிக் கொண்டோம் ! கிடைக்கும் தண்ணீரை சேமித்துக் கொள்ளும் ஒட்டகத்தைப் போல, அந்த ஒற்றை நாளின் உற்சாகங்களை உள்ளுக்குள் சேமித்துக் கொண்டோம் - புனித மனிடோவின் அருளால் அடுத்ததாய் இப்படியொரு பொழுது புலர்ந்திடும் வரைக்கும் ! Phewwww !! என்னவொரு நாளது !!!!
சனியின் திருவிழாக் கோலங்கள் பூர்த்தியான பின்னே ஊருக்குத் திரும்பிய கையோடு பதிவொன்றைப் போட எண்ணியிருந்தேன் தான் ; ஆனால் ஒரு நாளுக்கு முன்வரையிலும் நம் மத்தியில் ஓடியாடிக் கொண்டிருந்த நண்பர் பாபுவின் குழந்தைக்கு சீரியஸ் ; ஹாஸ்பிடலில் சேர்த்திருக்கிறார்கள் என்ற தகவல் கிட்டிய போது, கால்கள் தரையில் இருந்திட வேண்டியதன் அவசியம் புரிந்தது ! மேடையேறி நமக்கெல்லாம் நன்றி சொல்லிய கையோடு, பிள்ளைக்காக தொடர்ந்து வேண்டிக்கொள்ளக் கோரிய அந்தத் தாய் பரிதவித்துக் கொண்டிருக்கும் தருணத்தில் நாம் இங்கே குதூகலிப்பது முறையாகாதென்று பட்டது ! ஆண்டவன் அருளால் பையன் இப்போது தேறி வருகிறான், இரண்டொரு நாட்களில் நலமாய் வீடு திரும்பி விடுவான் என்ற சேதி இன்று கிடைத்த பிற்பாடு தான் எழுத மனம் ஒப்பியது ! God be with the child !!
ஈரோடு !! ஒரு தசாப்தமாகிறது இந்த நகருடன் நமது பந்தம் துவங்கி ! அதற்கு முந்தைய ஆண்டுகளில் ஈரோடென்றால் நல்லதொரு விற்பனைக்களம் ; அங்கிருக்கும் ஏஜெண்டிடமிருந்து கவர் வருகிறதென்றால், உள்ளுக்குள் வெயிட்டான DD இருக்கும் ; ரயிலில் தாண்டிச் செல்லும் போது செங்கற்கட்டி போலான அல்வா பாக்கெட்கள் கணிசமாய் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கடைகளிருக்கும் என்பதைத் தாண்டி பெருசாய் வேறெதுவும் தோன்றியதில்லை ! 2013-ல் மொத தபாவாய் ஸ்டால் கிட்டி, ஈரோட்டுக்கு ரயிலேறிய அனுபவமும் சரி, பயணத்தின் போது ஜூனியர் எடிட்டரின் தேர்வான "இரவே..இருளே..கொல்லாதே.." ஆல்பத்தின் ஆங்கில வார்ப்பைப் படித்தபடிக்கே நடுச்சாமத்தில் இறங்கி LE JARDIN ஹோட்டலுக்குச் சென்றதும் சரி, மறு நாள், ஸ்டாலில் கொஞ்சூண்டு புக்ஸ் சகிதம், கொஞ்சூண்டு நண்பர்களோடு மரத்தடியில் நின்று அரட்டையடித்ததும் சரி, 120 மாதங்களுக்கு முன்பான நிகழ்வுகள் என்பதை சத்தியமாய் நம்ப முடியவில்லை ! இடைப்பட்ட இந்தப் பத்தாண்டுகளில் தான் எத்தனை எத்தனை மாற்றங்கள் !!!!! நம் ரசனைகளில் ; வாசிப்புகளில் ; கேசங்களில் ; விஸ்தீரணங்களில் ; வசதிகளில் ; வாய்ப்புகளில் ; நட்புக்களில் - என்று அடுக்கிக் கொண்டே போகலாம் ! And இதோ - கடந்த சனியின் அசாத்தியங்கள் சகலமுமே 2013-ல் விதைத்தவற்றில் மலர்ந்திருக்கும் புய்ப்பங்கள் தானெனும் போது, நாம் பயணித்திருக்கும் தூரத்தின் பரிமாணத்தை உணர்ந்திடலாம் ! அன்றைக்கு ஒற்றை செல்போனின் காமெராவுக்குள் அடங்கிய நண்பர் அணியானது, இன்றைக்கு ஒரு மெகா அரங்கத்தினுள் ஆர்ப்பரிக்கின்றது !! காமிக்சில் நமது இரண்டாவது இன்னிங்சில் நாம் சாதித்திருப்பது என்னவென்று யாரும் என்னிடம் கேட்கப் போவதில்லை தான் ; but யாரேனும் தப்பித்தவறிக் கேட்டாக்கா - "COMICS AMOR VINCIT OMNIA" என்பேன் ! நாம் பதிப்பிடும் புக்ஸ் பேரீச்சம்பளங்களுக்குப் போக நேரிடலாம் ; பரணில் ஒரு கோடியில் ஐக்கியமும் ஆகிவிடலாம் ; but இவற்றினூடே துளிர்த்திருக்கும் இந்த நட்புக்களும் சரி, இத்தகைய சந்திப்புகளின் சந்தோஷங்களும் சரி, ஆயுட்காலப் பொக்கிஷங்களாய் தொடருமென்பதில் யாருக்கும் ஐயங்களிருக்க முடியாதென்பேன் !
எல்லாமே துவங்கியது ரொம்ப ரொம்ப சொற்ப நாட்களுக்கு முன்னே தான் ! அப்பாவுக்கு சர்ஜரி ; அம்மாவுக்கும் சுகவீனம் ; ஆளாளுக்கு ஆஸ்பத்திரிவாசம் என்ற நோக வைத்த ஏப்ரலின் போதெல்லாம் - "ஈரோடா ? ஈ ரோட்டில் கால் பதிச்சு நடக்க முதல்லே வழி பார்ப்போம் சேட்டா !!" என்றே சொல்லியிருப்பேன் ! ஆனால் மனதளவில் ரொம்பவே தளர்ந்திருந்த அப்பாவை தேற்ற ஏதேதோ முயற்சித்துத் தோற்றுப் போன நொடியில், உள்ளுக்குள் பளீரிட்டது தான் ஈரோடெனும் குச்சி முட்டாயும், குருவி ரொட்டியும் ! "சீக்கிரமா ரெடியாகுங்கப்பா..ஈரோட்டில் இந்த வருஷம் ஸ்பெஷலா ஏதேதோ ஏற்பாடுகள் பண்ணி வர்றாங்க !!" என்று சொல்லி வைத்த போது, லேசாய் ஒரு பொரி தெரிந்தது சீனியரின் விழிகளில் ! நாட்கள் ஓட ஓட அப்பா கொஞ்சமாய் தேறிய போது, நான் விட்டிருந்த ஈரோட்டுப் பீலா பற்றி மறந்தும் போயிருந்தேன் ! ஒன்றோ, ஒன்னரை மாதங்களுக்கோ முன்பாய் நண்பர் ஸ்டாலின் வழக்கம் போல ஈரோட்டு சந்திப்புக்கான ஹொட்டேல் புக்கிங் பற்றிய பேச்செடுத்த போது மாமூலான LE JARDIN அரங்கே போதுமென்று தான் சொல்லியுமிருந்தேன் ! ஆனால் அந்த ஹோட்டல் மராமத்தின் பொருட்டு மூடப்பட்டிருப்பது தெரிந்த பிற்பாடு அருகாமையில் ஏதேனும் சின்னதாய் அரங்கோ, கல்யாண மண்டபமோ கிடைத்தாலே போதும் என்ற கிளையில் குந்திக்கிடந்தேன் ! In fact ஜூன் மாதம் வேறொரு வேலை நிமித்தம் ஈரோட்டுக்கு போயிருந்த சமயம், ஸ்டாலின் சாருடன் , பஸ் நிலையத்துக்கு பின்வாசலில் அமைந்திருந்த நகராட்சி திருமண மண்டபத்தில் சந்திப்பை வைத்துக் கொள்ளலாமா ? என்று எண்ணமெல்லாம் இருந்தது ! அதுவும் ஆடி மாதமெனும் போது ஈயோட்டிக் கொண்டு தான் இருப்பார்கள் ; ரெம்போ சல்லிசாய் வேலை முடிந்து விடும் என்று நமக்குள் இருந்த செல்லூரார் ஆரூடமும் சொன்னார் ! ஆனால் AC இல்லை ; வெளிச்சமும் குறைவு ; அரங்கமும் ரொம்பவே பெருசாய் உள்ளதென்றுபட்டதால் வேண்டாமென்று தீர்மானித்தோம் !
தொடர்ந்த வாரங்களில் நிறைய பேசினோம் ; ஆனால் பட்ஜெட் பத்மநாபனாய் இருந்தால் போதுமென்று நான் பிடித்துக் கொண்டிருந்த பிடிவாதத்தால் வத்தலும் , தொத்தலும் ஆன அரங்குகளே சாத்தியப்பட்டு வந்தன ! "ஈரோடு விஜய் மடியிலே நாலு பேரு ; செந்தில் சத்யா மடியிலே ஆறு பேருன்னு உட்கார வைச்சா அடிச்சுப் புடிச்சு ஒரு 100 பேரை உள்ளாற திணிச்சுப்புடலாம்" என்பது போலான குட்டிக் குட்டி ஹால்களோடு கூத்தடித்து வந்தோம் ! அவற்றின் மத்தியில் இந்த OASIS அரங்கின் போட்டோக்களும் வந்திருக்க, "ஆத்தீ...தீயா இருக்கே ?" என்ற சபலம் எட்டிப்பார்க்கத் துவங்கியது ! ஒரு வடிவுக்கரசி போலவோ, காந்திமதி போலவோ பொண்ணு பாத்தா போதும்னு கிளம்பிட்டு இருக்கவன்கிட்டே, ப்ரியா பவானிஷங்கர் போட்டோவைக் காட்டிப்புட்டா என்னாகுமோ, அதுவே தான் கனகச்சிதமாய் அடுத்து அரங்கேறியது ! அதன் பின்பாய்ப் பார்த்த இதர அரங்குகளில், "வாஸ்து சுகப்படலை ; மண்டபங்களில் திசை ரசிக்கவில்லை" என்ற ரீதியில் கழித்துக் கொண்டே போய் ஒரு வழியாய் ஜூலை 19 தேதியன்று தான் OASIS அரங்கினுள் தலைநுழைப்பதென்று இறுதி செய்தோம் !
"ரைட்டு...அரங்கம் ஜூப்பர் ; அதுக்கேத்தா மெரி இனி கொஞ்சம் உள்ளுக்குள் ஜோடனைகளும் செஞ்சா சிறப்பா இருக்குமே சார் ; அந்த ரவுண்டு டேபிள்களை எடுத்திருவோமா ? ஐஞ்சாயிரம் தான் ஆகும் ?!" என்று நண்பர் கேட்டார் ! நானோ, ஆளுக்கொரு ரவுண்டு பன்னை கொடுக்காம, காக்கா கடி கடிக்க வைச்சா எப்டி இருக்கும் ? என்று சந்திராயனை ஏவிய விஞ்ஞானிகள் ரேஞ்சுக்கு யோசித்துக் கொண்டிருந்தேன் ! "டேபிள் எடுத்திட்டு, மேலே துணி போடாட்டி நல்லா இருக்காதே சார் ? காலுக்குள் கார்பெட் போட்டா ?" வாசலிலே பேனர் ? ; உள்ளே நுழையுற சாலையில் வைக்க பேனர் ?; அப்பாலிக்கா உள்ளே மேஜைகளில் வைக்க ஸ்டைலாய் standees ? ; கட்டித் தொங்கவிட danglers ?? Focus lights ? Speakers ? Buffet சாப்பாடு ; இருபதே பேர் சாப்பிட்டாக்கூட குறைந்தபட்சமாக 120 பேருக்கான கட்டணம் தரணும் என்ற ஒயாசிஸின் நிபந்தனை" என்று நாளொரு மேனி, பொழுதொரு மஹாசிந்தனையாய் திட்டமிடல்கள் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து கொண்டிருந்தன !! எனக்கோ செலவுகள் ஒருபுறமிருக்க, "கூட்டம் தேறாம போயிட்டா அம்புட்டும் வேஸ்ட்டாகிப் போகுமே ?" என்ற பயம் ! "சமீப காலமாய் blog-லேயே ஈயோட்டிட்டுத் தானே இருக்கோம், இந்த அழகிலே பெருசா பிளான் பண்ணி, செமையா பல்பு வாங்கிடப்புடாதே பெருமாளே ?!!" என்ற டர்ர் !! அது மட்டுமன்றி, "10 மணிக்கு ஆரம்பிச்சா 2 மணி வரைக்கும் நாலு மணி நேரங்களை இன்னான்னு ஓட்டுறது ?" என்ற பீதியும் as usual தலைதூக்கியது ! அதன் பின்னே தான் "பட்டிமன்றம்" என்ற ரோசனை உதித்தது !!அவ்வப்போது touch-ல் இருந்த நண்பர்களிடம் கேஷுவலாக கேட்பது போல கொக்கி போட்டுக் கொண்டே இருந்தேன் - "ஆங்...ஒரு அறுபது-எழுபது பேராச்சும் தேறுவாங்களான்னு ?!!" இதற்கு மத்தியில் ஒரு வாரம் முன்பாக ஈரோட்டிலேயே நம்ம கிரிக்கெட் வீரர்கள் களமிறங்கப் போகிறார்கள் என்ற போது , எனது டர்ர் இன்னும் டாரானது ! "அய்யனாரே ...தொப்பைக்கு கீழே கட்டைவிரலை பாக்கவே மொக்கை போடக்கூடிய நம்ம வீரர்களை பத்திரமா பாத்துக்கோங்கய்யா !!" என்று வேண்டிக் கொண்டேன் ! அந்த நொடியே இன்னொரு பயமும் தொற்றிக் கொண்டது - "அடங்கொன்னியா ...ஆறே நாள் கேப்பில மறுக்கா ஈரோட்டுக்கு நம்ம வாசக சந்திப்புக்கோசரம் வீரர்கள் வர வேண்டியிருக்குமே ? அதிலே எத்தனை பேர் மட்டம் போட்டுப்புடுவாங்களோ ?" என்று குழப்பிக் கொண்டேன் ! ஆனால் நண்பர்களோ, சனியன்று தவறாது கலந்து கொள்வோமென்று வாக்குத் தந்திருந்தனர் !
நாட்கள் நெருங்க நெருங்க நண்பர்கள் ஸ்டாலின் + விஜய் ஏதேதோ "மர்ம யோகி" பாணி வேலைகளை சத்தமின்றிச் செய்து வருகிறார்கள் என்பது புரியத் துவங்கியது ! அவற்றை சஸ்பென்சாக வைத்திருக்க அவர்கள் விரும்புவது புரிந்த அதே வேளையில், அவர்களது கைக்காசுக்கு வேட்டு வைச்சுடப்புடாதே ?! என்ற நெருடல் எனக்கு ! So தோணாமல் அவ்வப்போது அவர்களைக் கிண்டிக் கிழங்கெடுக்க ஆரம்பிக்க, வீடியோ ரெடியாகும் சமாச்சாரம் ; கான மழை சமாச்சாரம் ; பரிசுகள் ; மெடல்கள் ; இத்யாதி...இத்யாதி என்று ஒவ்வொரு பூனைக்குட்டியாய் கூடைக்குள்ளிருந்து வெளிப்பட்டது ! தொடர்ந்த நாட்களில் வீடியோவில் கொஞ்சம் over the top ஆகத் தென்பட்ட சித்தரிப்புகளையும் ; பாடலில் இருந்த ஓரிரு 'மிடிலே ' ரக வரிகளையும் எடிட் பண்ண நான் பட்ட பாடிருக்கே..அய்யய்யய்யயோ..ஆறு மார்ட்டின் கதைகளுக்கு பேனா பிடித்திருக்கலாம் ! மனசே இன்றி நான் சொன்ன திருத்தங்களுக்கு சம்மதித்தனர் நண்பர்கள் ! இங்கேயோ ஆபீசில் களேபரம் ; சொல்லி மாளா களேபரம் ! அண்ணாச்சி பணியில் நஹி ; அவருக்கு மாற்றாய் போட்ட நபரோ அத்தனை சோபிக்கவில்லை ; so front office ஜோதி ஈரோடு விழாவுக்கு கிளம்பியாச்சு ! எஞ்சியிருந்த ஸ்டெல்லாவுக்கோ வீட்டில் நெருக்கடி, தாயாருக்கு இடுப்பு முறிவு + ஆப்பரேஷன் என்ற ரூபத்தில் ! ஈரோட்டில் நண்பர்கள் காட்டிய அதே அர்ப்பணிப்போடு இங்கே ஸ்டெல்லாவும் நேரம் காலம் பார்க்காமல் பணியாற்றிட, கூரியர் பேக்கிங் 3 தினங்களுக்கு நடந்தது !! ஆபீசில் திரும்பிய திக்கிலெல்லாம் டப்பிக்கள் ; மிக்ஸர் ; சிப்ஸ் பாக்கெட்கள் இறைந்து கிடக்க, எனக்கோ ஈரோட்டில் தேவைப்படக்கூடியவற்றை மறந்திடப்புடாதே என்ற பதட்டம் !! கடைசி நிமிடம் வரை ரவுண்டு பன் ஆர்டர் தர மறந்து போயிருக்க, தலை தெறிக்க பேக்கரிக்குப் போனால் அங்கே அவர்கள் கறாராய் கண்டிஷன் - 'இத்தினி பன் தான் தர முடியும் ; மதியம் 12.45 க்கு தான் டெலிவரி' என்று !! "பன் இல்லாத பயணம் பைசாவுக்குப் பெறாது " என்ற மூதறிஞரின் அறிவுரை நினைவுக்கு வர, காலை 9 மணி முதலே கிளம்பிக் காத்திருந்த அப்பாவை மதியம் 1 வரை கட்டையைப் போட்டு வெயிட் பண்ண வைத்து, காரில் அட்டைப்படப் பெயிண்டிங்ஸ் ; சிப்ஸ் ; மிக்ச்சர் ; பன் ; தாம்பூலப் பை - என்ற லோடுடன் அனுப்பி வைத்தேன் !
வெள்ளி மாலையே நானும் ஈரோட்டுக்கு சென்று விடுவது ; ஹாலில் இறுதிக்கட்ட ஏற்பாடுகளை உடனிருந்து பார்த்துக் கொள்வதென்று பேசியிருந்தோம் ! ஆனால் டெஸ்பாட்ச்சை பூர்த்தி செய்யாது ஆபிசிலிருந்து நகர்ந்திட எனக்கு 'தம்'மே இல்லை ! விழாவுக்கு வராதோரின் கைகளிலும் மறு நாள் காலையே புக்ஸ் மட்டும் இல்லாது போயின், பிரித்து மேய்ந்து விடுவார்களென்ற பயம் ! So "நான் சாமத்தில் ஈரோடு வந்து சேர்ந்து கொள்கிறேன் ; மன்னிச்சூ !" என்று நண்பர்களிடம் சொல்லி விட்டு, டெஸ்பாட்ச் முடியும் வரை ஆபீசில் இருந்து விட்டு, அதன்பின்பாய் மாலை ரயிலைப் பிடிக்க ஓடினேன் ! ரயில் பயணத்தின் போது மறு நாள் என்ன பேசுவதென்பதை ரெடி பண்ணிவிடலாம் என்பது திட்டம் ! ஆனால் அவ்வளவாய் கூட்டமில்லாத ரயிலின் கீழ் பெர்த்தில் சாய்ந்தவன், கரூர் தாண்டிய பின்னே தான் கண்ணே முழித்தேன் ! மலங்க மலங்க முழிக்கும் நேரத்தில் சிறப்புரைக்கு எக்கட போவது ? மேடையிலே பாத்துக்குவோம் !! என்றபடிக்கே ஈரோட்டில் ஹோட்டலில் போய் விழுந்த போது மணி நள்ளிரவைத் தாண்டிய 12-45. சம்பிரதாயத்துக்கு "Any help ப்ளீஸ் ?" என்று விஜய்யிடம் நான் கேட்கும் வேளையில், அரங்கில் கிட்டத்தட்ட ஒரு டஜன் நண்பர்கள் கண் விழித்து விடிய விடிய பணியாற்றிக் கொண்டிருந்தனர் !! அன்றைய இரவு மூணரை வரை விழித்திருந்து பணி செய்து விட்டு, அங்கேயே படுத்துறங்கி விட்டு. காலை ஆறரைக்கு எழுந்து finishing touches செய்து விட்டு, குளித்துக் கிளம்பித் தயாராகி ஒன்பதுக்கெல்லாம் 'ஜில்'லென்று அரங்கில் காத்திருந்தது - nothing short of a miracle !
ஒன்பதரைக்கு கொஞ்சம் முன்னமாய் நானும் ஜூனியர் எடிட்டரும் அரங்கிற்குள் வண்டியை விட்ட கணமே நமது பேனர்கள் வரவேற்றன ! சரி, "இப்போ தான் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாய் வர ஆரம்பிச்சிருப்பாங்க !' என்ற நினைப்போடு கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே போனால் - திக்பிரமையடைந்து போனேன் - அரங்கமும், நண்பர்களும் அங்கு காட்சி தந்த அழகில் ! Oh yes - போட்டோக்களில் அரங்கைப் பார்த்திருந்தேன் தான் ; நண்பர்களின் கைவண்ணத்தில் புது மணப்பெண் போல ஜொலிக்குமென்று யூகித்தும் இருந்தேன் தான் ; ஆனால் நேரில் அந்த ரம்யத்தை உள்வாங்கிய நொடியில் எனது யூகக்கோட்டைகள் சகலமும் தவிடுபொடி ! அட்டகாசம்...அதகளம்..அமர்க்களம்..என்பதையெல்லாம் தாண்டிய வார்த்தைகளைத் தேட வேண்டி இருந்தது - ஒட்டு மொத்த ஏற்பாடுகளையும் ஒவ்வொன்றாய் மண்டைக்குள் ஏற்றிடும் நேரத்தில் ! ஸ்டாலினின் ஜூனியர் மனோஜ் ஒரு தேர்ந்த வீடியோ எடிட்டர் போல ஒரு லேப்டாப்பின் முன் அமர்ந்து ஏதேதோ டெஸ்ட் பண்ணிக் கொண்டிருக்க, 4 ஆண்டுகளுக்கு முன்னே குட்டியூண்டு பையனாய்ப் பார்த்த அகில் தனது டீமுடன் ஆடியோ / வீடியோ / போட்டோ பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு பம்பரமாய்ச் சுழன்று கொண்டிருந்தான் ! இந்த விழாவினிலிருந்து ஒரு நூறு சந்தோஷ நினைவுகளை நான் வீட்டுக்கு எடுத்துச் சென்றேன் என்றாலும், இம்மி சந்தேகமுமின்றி அவற்றுள் TOP இடங்களை பிடித்திருந்தது மனோஜ் + அகில் என்ற அந்த இளம் புயல்கள் அன்று நிகழ்த்திக் காட்டிய அசாத்திய ஜாலங்களையே ! தேய்ந்து போன ஒரு டயலாக்கை நிறைய சினிமாக்களில், டிராமாக்களில், கதைகளில் நாம் கேட்டிருப்போம் - "என் கண் முன்னே வளர்ந்த பிள்ளை" என்று ! அன்றைக்கு நாம் பார்த்தது simply that - நம் கண் முன்னே வளர்ந்திருக்கும் பிள்ளைகளின் அதகளத்தினை !!
அந்த வரம் பெற்ற தினத்தினில் அடுத்த 8 மணி நேரங்களுக்கு நிகழ்ந்ததெல்லாம் pure magic மாத்திரமே ! சாரை சாரையாய் நண்பர்கள் எங்கெங்கிருந்தெல்லாமோ அணிவகுத்திட, அரங்கமே கொஞ்ச நேரத்தில் அதிரத் துவங்கியது கண்கூடு ! அதிலும் நமது அட்டைப்பட பெயிண்டிங்குகளை வரிசையாய் மேஜைகளில் நண்பர்கள் அடுக்கிய பிற்பாடு அங்கே குழுமியோரின் உற்சாகத்தினை மட்டும் ஒரு பாட்டிலில் பிடித்து மார்க்கெட் செய்ய சாத்தியப்பட்டிருந்தால், நாம் அன்றைக்கே கோடீஸ்வரர்களாகி இருப்போம் ! ஒவ்வொரு படத்தையும் பார்த்துப் பார்த்து நண்பர்கள் நினைவுகளுக்குள் மூழ்கி முத்தெடுத்த காட்சி - one for the ages !!! ஆயிரமாயிரம் போட்டோக்கள் ; உற்சாக அறைகூவல்கள் ; அலப்பறைகள் ; அளவளாவல்கள் ; கும்மிகள் ; கிண்டல்கள் ; கச்சேரிகள் என்று துவங்கிய விழாவானது நமது ஈரோட்டு ஸ்பெஷல் இதழ்களின் ரிலீஸுடன் சூடு பிடித்தது ! அதிலும் "கார்சனின் கடந்த காலம்" உயர்த்திய புருவங்கள் கிட்டத்தட்ட நானூறு இருக்கும் ! மாக்சி சைசில் ஒரு மறுக்கா மறுக்காப்பதிப்பு எனும் போது கணிசமான துடைப்பங்கள் இதுக்கோசரம் பறக்கும் என்பதை நான் எதிர்பார்த்திருந்தேன் தான் ; yet அந்த இதழின் பிரம்மாண்டத்தினை நேரில் காணும் போது உங்களின் reactions வேறு விதமாயிருக்கும் என்ற நம்பிக்கை உள்ளுக்குள் இருந்தது ! And அந்த சனிக்கிழமை எனது நம்பிக்கை மெய்யானதை உணர்ந்த போதே ஒரு பெரும் பெருமூச்சை சத்தமின்றி விட்டுக் கொண்டேன் !!
BIG BOYS ஸ்பெஷல் அடுத்து ரிலீஸ் ஆக, வாயெல்லாம் பல்லாய் கவிஞர் தந்த போஸ் - இந்தத் தளத்தின் தளரா அஞ்சாநெஞ்சனுக்கு ஒரு ஸ்பெஷல் memory என்பேன் ! "சந்துக்குள்ளாற சந்திராயனை சாயந்திரத்துக்குள்ளே விடறீகளா ?" என்ற ரேஞ்சுக்கு கவிஞர் ஸ்டீலின் கோரிக்கைகள் இருக்கும் என்றாலும், எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாய் மனுஷன் தொங்கோ தூங்கென்று தொங்கியது "கொலைப்படை" 2 வண்ண இதழுக்காகத் தான் ! லேட்டானாலும், லேட்டஸ்ட்டாக அந்தக் கோரிக்கை பூர்த்தி கண்டதில் ஹேப்பி அண்ணாச்சி ! தொடர்ந்து சுஸ்கி & விஸ்கி ; மார்ட்டின் என ரிலீசான பிற்பாடு ராட்சச கேக் வெட்டும் சம்பிரதாயம் தொடர்ந்தது !
In hindsight - இதற்கென எடுத்துக் கொண்ட அதீத நேரத்தினை மட்டும் சற்றே மாற்றித் திட்டமிட்டிருந்தால், அட்டைப்பட டூர் ஒன்றினையும் உங்களோடு ஜாலியாய் அடித்திருப்பேன் ! தொடர்ந்து அன்றைய தினத்தின் 2 highlights அரங்கேறின - MUTHU 50 - கடந்து வந்த பாதை குறித்தான ஒரு அட்டகாச வீடியோவும் ; பூனையாரின் குரலில் ஒரு கானமழையும் ! இரண்டுமே அரங்கிலிருந்தோரை கட்டுண்டு போகச் செய்தன என்றால் அதுவொரு understatement !! அவை இரண்டும் சரி, கொஞ்ச நேரத்துக்குப் பின்னே தொடர்ந்த கிரிக்கெட் போட்டி சார்ந்த வீடியோவும் சரி, அசாத்திய உச்சங்கள் !!
செம ஸ்டைலாய் லோகோக்கள் ; அட்டகாசமான டீம் ஜெர்சீக்கள் என்பதோடு நின்று விடாமல், மெய்யாலுமே பேட்டிங்கில், பவுலிங்கில் 4 அணியினரும் அசத்தியதைப் பார்த்த போது - "ஆஹா...நேரில் பாக்காம போயிட்டோமே !!" என்று நெருடியது !! Maybe the next time guys !!
பாராட்டுரைகள் ; கருணையானந்தம் அங்கிளின் உரை ; அப்பாவின் ஏற்புரை ; அடியேனின் டீ ஆத்தல் - என்று தொடர அவ்வப்போது பின்னிருந்த திரையினில் நான் கொண்டு வந்திருந்த மீம்ஸ் மாத்திரமன்றி, பசங்கள் ரெடி பண்ணிய ரவுசுகளும் ஓடிக்கொண்டிருந்தன ! நேரத்தை ஜவ்விழுக்க என்ன செய்வதென்று யோசித்தபடிக்கே வந்திருந்தவனுக்கு அதற்குள் லன்ச் டைம் ஆகிவிட்டதென்பதை சத்தியமாய் நம்ப முடியவில்லை ! கீழிருந்த ஹாலில் லன்ச் ஏற்பாடாகியிருக்க, ஒயாஸிஸ் நிர்வாகம் செமத்தியான சொதப்பலைச் செய்து அன்றைய பொழுதிற்கொரு திருஷ்டிப்பொட்டை பதித்து விட்டனர் ! அவர்களின் கிச்சன் வசதிகளே அத்தனை விசாலமல்ல என்பது அவர்கள் சொதப்பத் துவங்கிய பிற்பாடு தான் புரியவே செய்தது ! ஒரிஜினலான மெனுவின்படி உணவை சரியாய் ரெடி செய்திருந்திருக்கும் பட்சத்தில், அன்று ஒரு அட்டகாச லன்ச் அமைந்திருக்க வேண்டும் ! மாறாக , காலியான சட்டிகளை உற்றுப் பார்க்கும் சங்கடத்தினை ஏற்படுத்தி விட்டார்கள் ! Sorry folks ; இனியொருமுறை இது போலான தவறு நிகழ்ந்திடாது !
லஞ்சிற்குப் பின்பாய் கூட்டம் கலைந்து விடுமோ ? என்ற பயம் கொஞ்சம் இருந்தது தான் ; but surprise - துளியும் குறையாது மதிய ரகளைகளிலும் ஆரவாரமாய்ப் பங்கேற்றது நெஞ்சை நிறையச் செய்தது ! நேரம் குறைவாக இருந்த போதிலும் அந்த காமிக்ஸ் பட்டிமன்றத்தில் ரவுசுகளுக்குப் பஞ்சமே இருக்கவில்லை ! அதிலும் கண நேரத்துக்கு XIII -ஆக மாறிப் போன பாபு அரங்கையே கலக்கினார் !! நடுவரின் தீர்ப்பு ; தொடர்ந்து கிரிக்கெட் போட்டிக்கான கப் வழங்கல் ; மெடல் வழங்கல் என அரங்கேறிய சமயத்துக்குள் மாலையாகி இருந்தது ! நண்பர்களுக்கு நினைவுப்பரிசோடு விட கொடுத்தனுப்பும் நேரம் புலர்ந்த போது லைட்டாக தொண்டை கமறுவது போலிருந்தது !! ஏழு கழுதை வயசு தான் ; ஒரு நூறு கூத்துக்களை பார்த்தும் விட்டாச்சு தான் ; ஆனாலும் இம்முறை நண்பர்களுக்கு டாட்டா சொல்லும் போது நிஜமாகவே ஒரு பண்டிகைக்கு வந்த உறவுகள் ஊர்திரும்புவது போலான உணர்வே மேலோங்கியது ! This has been an awesome day to cherish guys !!
இதனை சாத்தியமாக்கித் தந்த அத்தனை நண்பர்களுக்கும், 'நன்றி' என்ற ஒற்றை வார்த்தையோடு முடித்துக் கொள்வதில் உள்ளுக்குள் ரொம்பவே நெருடலாக உள்ளது ! எதிர்பார்ப்புகளே இல்லா இத்தனை அன்பையும், நேசத்தையும் ஈட்டுவதெல்லாம் கனவுகளில் மட்டுமே சாத்தியமாகிடும் சமாச்சாரங்கள் !! இன்னமுமே திளைத்துக் கொண்டிருக்கிறேன் - அன்றைய பொழுதின் உற்சாகங்களில் ! நெஞ்சமெல்லாம் நிறைந்திருப்பது என்ன மாதிரியான வரம் என்பதை yet again எனக்கு மாத்திரமன்றி, சீனியர் + ஜூனியர் எடிட்டர்ஸ் & கருணையானந்தம் அங்கிளுக்கு உணர்த்தியுள்ளீர்கள் ! அதிலும் அந்த அசாத்தியமான இரும்புக் கர நினைவுப் பரிசுகள் - அசாத்தியங்களின் உச்சம் !! அவற்றின் போட்டோக்களை இரும்புக்கை மாயாவியின் (அசல்நாட்டிலுள்ள ஒரிஜினல்) படைப்பாளிகளுக்கு அனுப்பிடவுள்ளேன் ; நிச்சயமாய் இது போலொரு அங்கீகாரம் நமது லூயி கிராண்டேலுக்கு இன்னொரு மண்ணில் கிட்டியிராதென்பது சர்வ நிச்சயம் !! வரலாற்றில் தடம் பதித்திருக்கிறோம் folks !!
வண்டி வண்டியாய் பணிகளை அரவமில்லாத இரவுகளில் நிசப்தமாய்ச் செய்யும் நாட்களில், ஒரு மெலிதான அயர்வு நடுநடுவே தலைதூக்குவதை மறுக்க மாட்டேன் ! "ஊஞ்சலாடும் இளமைக்கு இது தேவையாடா தம்பி ?" என்றொரு குரல் தலைக்குள் ஒலிப்பது போலவே இருக்கும் ! ஆனால் அடுத்த 12 மாதங்களுக்காவது அந்தக் குரல் எனக்குள் தலைதூக்கவே வாய்ப்பில்லை ; simply becos அந்த சந்திப்பின் ஒற்றை நாளில் மாத்திரமன்றி, அதற்கு முன்பான lead up நாட்களிலும் நீங்கள் கொட்டித் தள்ளியிருக்கும் உழைப்பும், அன்பும், அக்கறையும் எனது பேட்டரிகளை அடுத்த ஆகஸ்ட் வரைக்குமாவது உயிர்ப்போடு வைத்திருக்கப் போவது உறுதி !! And காத்திருப்பது லயனின் ஆண்டு # 40 !
கச்சேரியினை ஆரம்பிக்கலாமுங்களா ?
Bye all....see you around !! Have a lovely week !!
அன்றைய பொழுதினை முழுமையாய் YouTube -ல் பார்த்திட : https://www.youtube.com/watch?v=ndu1YDQ8GqM&t=16504s
PHOTOS WILL BE UPLOADED TOMORROW !