நண்பர்களே,
வணக்கம். அநேகமாய் கரைவேட்டிக்கார மேடைப் பேச்சாளர்களுக்கு அப்புறமாய், தமிழ்நாட்டில் தொட்டதுக்கெல்லாம் ஒரு குட்டிக்கதை வைத்திருப்பது அடியேனாகத் தானிருக்கும் என்பேன் ! So இதோ - இந்த மே தினத்துக்கான குட்டிக்கதையோடு ஆஜர் !
எல்லாம் ஆரம்பித்தது 1979-ல் ; நான் ஏழாப்பு படித்துக் கொண்டிருந்த கி.மு. காலமது ! அப்பாவின் பூர்வீகம் மதுரை என்பதால், அவரது தாயார் ரொம்பவே தளர்ந்து போன பின்னாட்கள் வரையிலும், மதுரையிலேயே தனியாக வசித்து வந்தார் ! ஊரின் நட்ட நடுவே ஒரு நெருக்கடியான சந்துக்குள் இடம் ; நடுவில் திறந்த முற்றம் ; மாடியில் விசாலமான, புராதன அறைகள், விளையாட ஏகமாய் இடம் - என்ற அந்தக் காலத்து வீட்டுக்கு ஏகப்பட்ட பேரப்பிள்ளைகளும் விடுமுறைகளில் போது மொய்யென்று படையெடுப்பது வாடிக்கை !
அப்படிப்பட்டதொரு காலாண்டு விடுமுறை விசிட் முடிந்த கையோடு, ஏதோ காரணத்தின் பொருட்டு, நான் மட்டும் ஒரு நாள் முன்னதாக ஊர் திரும்பிடுவதாக இருந்தேன். அப்போதெல்லாம் மதுரை பெரியாரில், 2 பஸ் நிலையங்கள் இருப்பதுண்டு ; ஒன்று - ரெகுலர் பஸ்களுக்கு and இன்னொன்று எக்ஸ்பிரஸ் பஸ்களுக்கு !! ஊருக்குத் திரும்பிடுவதற்கான பணத்தோடு அந்த கெத்தான (!!) நிலையத்தில் ஒரு மதியப்பொழுதினில் நின்று கொண்டிருந்தேன் ! சாதா பஸ்கள் அழுகாச்சி கி.நா.க்களைப் போல உருட்டோ உருட்டென்று உருட்டியே ஊர் கொண்டு சேர்க்கும் என்பதைத் தாண்டி, அந்த எக்ஸ்பிரஸ் பஸ் ஸ்டாண்டைத் தேடிப் போவதற்கு என்னிடம் இன்னொரு காரணமும் இருந்தது ! அதற்கு அடுத்த வாசலில் சும்மா 'ஜே ஜே' என்று ஓடிக்கொண்டிருக்கும் "அசோக் பவன்" எனும் ஹோட்டலில், வெஜிடபிள் பிரியாணியானது வாசனையிலேயே ஆளை தூக்கும் ஆற்றல் கொண்டது. அங்கே ஒரு பிரியாணியை போட்டுத் தாக்கிய கையோடு, எக்ஸ்பிரஸ் ஸ்டாண்டுக்கு நடந்தால், அங்குள்ள கடையில் ரோஸ்மில்க் தேவாமிர்தமாய் ருசிக்கும் ! So ரெண்டையும் 'ஏக் தம்மில்' ருசிக்கும் மகத்தான திட்டத்தோடும், அதற்கான காசோடும், அங்கே ஆஜராகிய தருணத்தில் தான் விதி விளையாடியது ! ரோஸ் மில்க் விற்கும் கடையானது ஒரு புக் ஷாப்பும் கூட ! இங்கிலீஷில் புக்ஸோ, காமிக்ஸோ மதுரையில் வெகு சொற்பமான இடங்களிலேயே அந்நாட்களில் கிடைத்திடும் ! So அப்பாவோடு அத்தகைய இடங்களுக்கு விசிட் அடித்த அனுபவத்தில், ரோஸ்மில்க் கடையிலிருந்த சின்ன ரேக்கில் என்னென்ன அடுக்கி வைக்கப்பட்டுள்ளன ? என்று கண்கள் ஆட்டோமேட்டிக்காக ஸ்கேன் செய்ய ஆரம்பித்தன ! அப்போது தான் "FLIGHT 714" என்றொரு பெரிய சைசிலான ஆல்பம் கண்ணில்பட்டது ! பார்த்த மாத்திரத்திலேயே புரிந்தது - அதுவொரு காமிக்ஸ் இதழ் என்பது !
ஏனோ தெரியலை - ஆனால் சுக்கா ரோஸ்ட்டைப் பார்த்த கார்சனைப் போல,முதல் பார்வையிலேயே, அந்த இதழ் என்னை உன்மத்தம் கொள்ளச் செய்திருந்தது ! ஆசை ஆசையாய் புக்கை எடுத்துப் புரட்டினேன் ; அள்ளும் வண்ணத்தில், அட்டகாசமான, தெளிவான சித்திரங்களில் பக்கத்துக்கு பக்கம் சரவெடியாய் ஆக்ஷனும், சிரிப்பும் படையெடுப்பது தெரிந்தது ! செம ஸ்மார்ட்டாய் ஒரு ஹீரோ ; துணைக்கு சுவாரஸ்யமாய் பாத்திரங்கள் என்று கதை தெறிக்க விடுவதை அந்த முதல் புரட்டலிலேயே உணர முடிந்தது !பின்னட்டையைப் புரட்டினால், வரிசை ஒன்றுக்கு 4 இதழ்கள் வீதம், 5 வரிசைகளில் அதே நாயகனின் தொடரினில் கிட்டத்தட்ட 20+ ஆல்பங்களின் அட்டைப்படங்கள் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தன ! 'ஆத்தாடி..இத்தனை புக்ஸ் உள்ளனவா இந்த ஈரோ கதையிலே ?" என்று மலைத்துப் போனேன் ! அது வரையிலும் வேதாளர் ; மாண்ட்ரேக் ; இந்த்ரஜால் காமிக்ஸ் ; மாலைமதி ; முத்துவின் Fleetway சரக்கு ; அப்புறம் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்பட்ட Gold Key காமிக்ஸ் என்பனவற்றைத் தாண்டி கலரில் இந்தத் தரத்தில் நான் எதையுமே பார்த்ததில்லை ! அது மட்டுமன்றி, கிட்டத்தட்ட 64 பக்கங்களுடன் அந்த FLIGHT 714 ஆல்பம் இருந்தது என்னை அசரடித்துக் கொண்டிருந்தது - becos எனது அதுவரைக்குமான வாசிப்பின் பாக்கிக் கதைகளெல்லாம், மித நீளங்களே ! நொடியில் பிரியாணி மோகமும் சரி, ரோஸ் மில்க் தாபமும் சரி, தடமேயின்றிக் காணாது போக, எனது மையல் முழுக்கவே அந்த காமிக்ஸின் மீதிருந்தது ! விலையைப் பார்த்தேன் - ரூ.72 என்று போட்டிருந்தது ! மிரண்டே போனேன் ; அந்நாட்களில் அதுவொரு ராஜாவின் சன்மானத்துக்குச் சமானமான தொகை ! பிரியாணி கட் ; ரோஸ் மில்க் nyet என்றாலுமே, புக்கை வாங்கிட என் கைவசமிருந்த பணம் போதாதென்பது புரிந்தது ! ஊருக்குத் திரும்பும் நினைப்பே சுத்தமாய் அற்றுப் போக ; ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் ஏறி நேராக விளக்குத்தூணுக்கே திரும்பினேன் ! கெஞ்சிக் கூத்தாடியாவது, அப்பாவிடம் அந்தக் காசைக் கேட்டு வாங்கிக் கொண்டு, புக்கை கொள்முதல் பண்ணிய பிற்பாடே சிவகாசி போவதென்ற வைராக்கியம் ! Surprise ...surprise ...கேள்வியே இன்றி காசைத் தர, அடுத்த இருபதாவது நிமிடத்தில் FLIGHT 714 இதழைக் கைப்பற்றியிருந்தேன் ! And அந்த ஆல்பத்தின் நாயகனின் பெயரோ - உலகெங்கும் எதிரொலிக்கும் டின்டின் !!
காமிக்ஸ் உலகினை கடந்த 94 ஆண்டுகளாய் ஆண்டு வரும் டின்டின் எனும் அசாத்தியனுடனான எனது முதல் பரிச்சயம் அது தான் ! And அந்த பெல்ஜிய ஜாம்பவான் விரைவிலேயே தமிழ் பேச உள்ளதே இந்த ஸ்பெஷல் பதிவின் சாரம் ! Oh yes - TINTIN in Tamil .....and pretty soon too !!
நெஞ்சோடு அணைத்திருந்த FLIGHT 714 இதழுடன் ஊருக்குப் புறப்பட்ட போது ஒரு நண்பனை உடன் அழைத்து செல்வது போலானதொரு உணர்வு தான் எனக்குள் ! அந்தக் காலத்து பஸ்கள் பெரிய சக்கரங்கள் கொண்ட மாட்டு வண்டிகளுக்கு இணையானவை என்பதால் சாவகாசமாகவே ஊருக்குக் கொண்டு சேர்த்தார்கள் ! வீட்டுக்குள் நுழைந்ததும் முதல் வேலையாய் பரபரவென்று டின்டின் புக்கினுள் மூழ்க ஆரம்பித்த போது - இதுவரையிலும் உணர்ந்திரா ஒரு வாசிப்பு ஆனந்தத்தை உணர முடிந்தது ! மெர்செலாக்கிய கதைக்களம் ; செதுக்கப்பட்டிருந்த கதாப்பாத்திரங்கள் ; செம clean சித்திரங்கள் ; அட்டகாசமான வசனங்கள் ; கலக்கலான கலரிங் என்று சகலமும் போட்டுத் தாக்கிட, அன்றைய தினம் முழுசையும் FLIGHT 714 சகிதமே செலவிட்டேன் ! And அதன் பின்னட்டையில் அச்சிடப்பட்டிருந்த இதர டின்டின் ஆல்பங்களைச் சேகரிப்பதே இனி வாழ்க்கையின் லட்சியம் என்பது போல் தோன்றியது ! மிகச் சரியாக அந்தச் சமயம் எங்களது பள்ளி லைப்ரரிக்கு புதுசாய் புக்ஸ் கொள்முதல் செய்யும் பணியும் துவங்கியிருந்தது ! "தெய்வமே....டின்டின் புக்ஸையும் எப்படியாச்சும் நூலகத்துக்குக் கொண்டு வந்து சேர்த்துப்புடுங்க - ப்ளீஸ்" என்று வேண்டிக் கொண்டேன் ! ஆனால் ஆண்டவனோ ஆஸ்டெரிக்ஸ் & ஒபெலிக்ஸ் ஆல்பங்களை ஏகமாகவும், டின்டின் ஆல்பங்களைக் கொஞ்சமாகவும் லைப்ரரிக்கு கொண்டு வந்திருந்தார் ! பெருமாள்கோவில் வாசல் பண்டாரம் - "பன்னீர் 65 தான் வேணுமென்று" அடமெல்லாம் பிடிக்க முடியாதில்லையா ? So கிட்டிய அந்த 2 டின்டின் இதழ்களை மேயோ மேயென்று மேய்ந்து தள்ளினேன் ! தொடர்ந்த ஒன்றரை ஆண்டுகளுக்குள், கல்கத்தாவின் பழைய புக் சந்தைகளிலிருந்து ; டில்லியின் புத்தகக் கடைகளிலிருந்து ; சென்னையின் மவுண்ட் ரோடில் அந்நாட்களில் இருந்த கென்னெடி புக் ஷாப்பிலிருந்து என அப்பாவின் பயண உபயங்களில், டின்டினின் 21 ஆல்பங்களைச் சேகரித்திருந்தேன் !
தொடர்ந்த பத்தாண்டுகளில் அவற்றை எத்தனை நூறு தடவைகள் வாசித்திருப்பேன் என்ற கணக்கே இராது - ஒவ்வொரு ஆல்பமும் ஒரு அசாத்தியப் பயணத்தில் நம்மை இட்டுச் செல்வதை சலிப்பே இன்றி ரசித்திருக்கிறேன் ! அதிலும் டின்டினின் தோஸ்த்துகளாக பக்க வாத்தியங்களை இசைக்கும் க்வாட்டர் ரசிகரான கேப்டன் ஹாடாக் ; ஞாபக மறதிக்கார புரஃபஸர் கேல்குலஸ் ; கம்பிளிப்பூச்சி மீசைகள் வைத்துச் சுற்றித் திரியும் டிடெக்டிவ் ரெட்டையர்ஸ் தாம்ப்சன் & தாம்சன் - என அத்தனை பேருமே தத்தம் பாத்திரங்களில் மிளிர்வதை ஒவ்வொரு ஆல்பத்திலும் இமைதட்டாமல் ஆராதித்திருக்கிறேன் ! கதைகள் ஒவ்வொன்றும் தோண்டி எடுக்கப்பட்ட ரத்தினங்கள் என்பதில் உலகெங்கும் யாருக்குமே ஐயங்கள் லேது !
இங்கே சின்னதொரு interlude ! இங்கிலீஷில் டின்டின் சாகசங்களை ஏற்கனவே ரசித்திருக்கும் நண்பர்கள், தொடரும் சில பத்திகளை skip செய்திடலாம் : இது முழுக்கவே டின்டினுடன் பரிச்சயம் இல்லாத நண்பர்களுக்கோசரம் மட்டுமே !
நான் தலையில் தூக்கி வைத்துக் கூத்தாடும்
இந்த டின்டின் யார் ?
இவரது கதை பாணி என்ன ?
கதைகளில் அப்படி என்ன தான் ஸ்பெஷல் ?
என்ற கேள்விகள் உங்களுக்குள் எழுவது இயல்பே ! So here goes :
1.யாரிந்த டின்டின் ?
டின்டின் ஒரு இளம் பெல்ஜிய பத்திரிகை ரிப்போர்ட்டர் ! ஸ்நோயி என்றதொரு க்யூட்டான குட்டி நாய் இவரது இணைபிரியா கூட்டாளி ! நம்ம ஜாலி ஜம்ப்பர் பாணியில் அவ்வப்போது ஸ்நோயிவுமே யோசனைகள் சொல்லும் ; மனசாட்சியோடு மல்லு கட்டும் ! தனது பணி நிமித்தம் டின்டின் புலனாய்வுகள் பல செய்திட அவசியமாகிட, சாகசங்களும், ஆபத்துக்களும் அவரை விடாப்பிடியாய்த் துரத்துவது வாடிக்கை ! ஒழுக்கமான மனுஷன் ; எப்படிப்பட்ட சிக்கல்களிலும் கலங்காதவர் ! பார்க்க குட்டிப் பையனாட்டம் 'சிக்'கென்று இருந்தாலும் செம தில் பார்ட்டி !
2.இவரது கதை பாணி ஆக்ஷனா ? கார்ட்டூனா ?
Without a doubt - இவை சகலமும் அதிரடி ஆக்ஷன் மேளாக்களே ! இந்தியாவுக்கு பயணமாகி, டில்லியில் கால்பதித்து, தொடர்ந்து திபெத்தில் சாகஸத் தேடல் ; ஸ்காட்லாந்தின் ஆள் அரவமற்ற தீவினில் புலனாய்வு ; ஆழ்கடலுக்குள் புதையல் வேட்டை ; தென்னமெரிக்க இன்கா பூமியில் அசாத்திய அதிரடிகள் ; நிலவுக்குப் பயணமாகும் சாகசம் etc etc என இங்கே அடுக்கிக் கொண்டே போகலாம் ! ஆனால் கதைகளை செம தரமான நகைச்சுவை கலந்து சொல்லியிருப்பதே இந்தத் தொடரின் இமாலய வெற்றியின் பின்னணி ! டின்டினின் உற்ற நண்பரான கேப்டன் ஹாடாக் ஒரு உற்சாக பானப் பிரியர் & முணுக்கென்றால் மூக்கின் மேல் கோபம் வரும் சூடான பார்ட்டி ! அவர் அடிக்கும் லூட்டிகள் இந்தத் தொடரின் highlights என்றால் மிகையாகாது !! நிலாவுக்குப் பயணமாகும் ராக்கெட்டில் புறப்படும் மனுஷர் போகும் வழியிலேயே செம்மையாய் சுதி ஏற்றுக் கொண்டு, 'ஏய்..கதவை திறங்கப்பா...வாக்கிங் போகணும் !' என்றபடிக்கே விண்வெளியில் குதித்து, பாட்டுப் பாடிக் கொண்டே சுற்றிச் சுற்றி வருவதையெல்லாம் முதன்முறையாக ரசித்திடவுள்ளோர் கேப்டனுக்கு ரசிகர் மன்றம் வைக்கத் தீர்மானித்தால் வியப்பே கொள்ள மாட்டேன் ! அதே போல எந்நேரமும் ஆராய்ச்சியும், கையுமாய்த் திரியும் புரஃபஸர் கால்குலஸ் திடீரென்று கோபமாகி 'என்னோட ஜூடோ கலையைப் பாக்குறியா ? பாக்குறியா ?" என்று எகிறும் sequence நரசிம்ம ராவ்காருவைக்கூட நகைக்கச் செய்து விடும் ! கேப்டன் ஹாடாக் அடிக்கும் உயர்தரச் சரக்கை லேசாக நக்கிப் பார்த்த பின்னே, மனசாட்சியோடு போராட்டம் நடத்தி விட்டு "தீர்த்தத்தில்" குளித்து விட்டு, குத்தாட்டம் போடும் ஸ்நோயியை வாரி அணைக்கத் தோன்றாது போயின் ஆச்சர்யம் கொள்வேன் ! 'துப்பறிகிறோம் பேர்வழி' என்று முக்குக்கு முக்கு பல்ப் வாங்கும் டிடெக்டிவ் ரெட்டையர்கள் தாம்ப்சன் & தாம்சன் (பெயர்களில் ஒரு "ப்" மட்டுமே வேறுபாடு) ; கோடீஸ்வர சுல்தானின் மகனான சேட்டைக்கார அப்துல்லா - என்று இந்தத் தொடரின் கதைமாந்தர்கள் ஒவ்வொருவருமே தத்தம் பாணிகளில் செம நேர்த்தியாய் காமெடி கலவையுடன் கதைகளை நகர்த்திட உதவி இருப்பதைக் காண முடியும் !
3.சரிப்பு....இந்த 24 ஆல்ப தொடரானது அப்படி எந்த வகையில் உலகத்தை ஆளும் ஒரு தொடராக சிலாகிக்கப்படுகிறது ? What is so special about it ?
இதோ - சிலபல தகவல்களை பகிர்ந்திடவா ?
**எனது ஞாபகம் சரியாக இருக்கும் பட்சத்தில் இது வரையிலும் 128 உலக மொழிகளில் டின்டின் பிரசுரிக்கப்பட்டுள்ளது ! We must be # 129 !!
**உலகெங்கும் இது வரையிலும் தோராயமாய் 30 கோடி பிரதிகள் விற்றுள்ளன !
**மனிதன் நிலாவில் கால் பாதித்தது 1969-ல் ! ஆனால் டின்டினின் கதைகளில் நிலாப்பயணம் தத்ரூபமாய்க் காட்சிப்படுத்தப்பட்டது அதற்கு 16 ஆண்டுகளுக்கு முன்னமே (in 1953 !!)
**2006-ல் தலாய் லாமாவிடம் "திபெத்தின் மெய் உணரும்" உச்ச விருதினை பெற்ற பெருமை டின்டினுக்கு உண்டு !
**காமிக்ஸ் நாயகராய் மட்டுமன்றி, தொலைக்காட்சித் தொடர்களாய் ; அனிமேஷன் திரைப்படங்களாய் ; 5 திரைப்படங்களாக டின்டின் கோலோச்சியுள்ளார் ! (ஸ்டீவன் ஸ்பீல்பெர்கின் கைவண்ணத்தில் ஹாலிவுட்டில் உருவான கடைசிப் படம் மொக்கை என்பது வேறு கதை !!)
**டின்டினின் நிலாப்பயணம் ; திபெத் பயணம் ; இன்கா பூமிப் பயணமெல்லாம் செம popular வீடியோ கேம்களாக ரிலீஸ் ஆகியுள்ளன ! இதோ - நடப்பாண்டில் கூட டின்டின் இந்தியா வரும் சாகசம் வீடியோ கேமாகிடவுள்ளது !
**கடிகாரங்களில் ஆரம்பித்து, காப்பி குடிக்கும் mug ; சாக்லேட் ; கீ-செயின் ; டி-ஷர்ட் ; வாட்ச் ; வாட்டர் பாட்டில் etc etc என்று டின்டினின் உருவத்தைத் தாங்கி நிற்கும் பொருட்கள் எக்கச்சக்கம் ! பெல்ஜியத்தில் போய் இறங்கினால், மூன்று விஷயங்கள் தவிர்க்க இயலா அத்தியாவசியங்களாகிடுவதை நானே உணர்ந்திருக்கிறேன் ! முதலாமவது பெல்ஜிய சாக்லேட் ; இரண்டாவது : உருளை கிழங்கில் அவர்கள் செய்யும் fries (இது french fries என்று அழைக்கப்பட்டாலும் தாய்வீடு பெல்ஜியமே !!) மூன்றாவது : டின்டின் !
**எண்ணற்ற தபால்தலைகள் டின்டினை கௌரவிக்க வெளியிடப்பட்டுள்ளன !அது மாத்திரமன்றி, பெல்ஜிய நாணயங்களிலும் டின்டினின் வதனம் பொரிக்கப்பட்டுள்ளது !
**1929-ல் முதன் முதலாய் உலகினை டின்டின் பார்க்க நேரிட்டது ஒரு பெல்ஜிய தினசரியின் சிறுவர் மலர் இணைப்பினில் ! "ஹெர்ஜ்" என்ற புனைப்பெயரில் அதனை உருவாக்கிய ஜாம்பவானின் நிஜப் பெயர் Georges Prosper Remi !
**80 ஆண்டுகளுக்கு முன்பாக உருவான சாகசம் கூட இன்றைக்கும் இம்மி கூடப் புராதன நெடியின்றி தெறிக்க விடுகிறது !
**ஒரு ஆல்பத்தின் அட்டைப்படத்துக்கென ஹெர்ஜ் உருவாக்கி, அப்படியே கிடந்து போனதொரு ஓவியம் 2021-ல் இருபத்தியெட்டுக் கோடி ரூபாய்களின் இணையான தொகைக்கு ஐரோப்பாவில் ஏலம் போயுள்ளது ! உலகிலேயே மிக காஸ்ட்லியான காமிக்ஸ் சித்திரம் என்ற பெருமையை இது ஈட்டியுள்ளது !
**உலகளாவிய மொத்த விற்பனை எண்ணிக்கைகளில் நமது லக்கி லூக் ; சுஸ்கி & விஸ்கி - டின்டினுக்கு tough தரும் ஆற்றல் கொண்டிருப்பதாய்த் தெரியலாம் தான் ! ஆனால் பெரியதொரு வித்தியாசமுண்டு - becos வெறும் 24 ஆல்பங்களைக் கொண்டே டின்டின் சாதித்திருப்பதை மற்ற தொடர்கள் மிக மிகக் கூடுதலான ஆல்பங்களின் எண்ணிக்கைகளோடே சாதித்துள்ளன !
**ஹெர்ஜின் அந்தத் தெளிந்த நீரோடை போலான சித்திர பாணி பிராங்கோ-பெல்ஜிய காமிக்ஸ் உலகினில் ஒரு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது ! Ligne Claire என்று அழைக்கப்படும் இவரது இந்த கிரிஸ்பான சித்திர பணியினை பின்னாட்களில் கணிசமான ஓவியர்கள் பின்பற்றியுள்ளனர் !
இப்போது சொல்லுங்களேன் guys - இந்த நாயகர் நமது சிலாகிப்புகளுக்கு உகந்தவரா ? இல்லையா என்று ?!
ரைட்டு....'ரமணா' mode-ல் இருந்து, மறுபடியும் முழியாங்கண்ணன் mode-க்குத் திரும்பிடலாமா ? டின்டின் எனும் ஜாம்பவானை தமிழில் உலவச் செய்ய வேண்டுமென்பது துவக்க நாட்கள் முதலே எனது கனவென்பதில் no secrets ! 1985-ல் பிராங்கபர்ட் புத்தக விழாவினில் - திறந்த வீட்டுக்குள் எதுவோ நுழைந்தது போல, டின்டின் பதிப்பக ஸ்டாலில் புகுந்து ரைட்ஸ் கேட்டு, செம பல்பு வாங்கியதைப் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன் தானே ? "பல்பு படலம்" அத்தோடு ஓய்ந்திருக்கவில்லை என்பது தான் மேட்டரே ! நமது இரண்டாவது இன்னிங்ஸ் துவங்கிய பிற்பாடு, தரத்தில், கலரில், கணிசமான முன்னேற்றங்களுடன் உலவிடுகிறோமே என்ற தகிரியத்தில் டின்டின் என்ற மாமரத்தினை நோக்கி கல் வீசினால் நிச்சயமாய் மடியில் பழம் விழும் என்ற குருட்டு நம்பிக்கை எப்படியோ உள்ளுக்குள் குடியேறி இருந்தது ! So 2016-ன் ஒரு சுபயோக சுபதினத்தினில் ஜூனியர் எடிட்டரும், நானுமாய் படைப்பாளிகளின் முன்னே ஆஜராகியிருந்தோம் !
'நேரா போறோம்...நம்ம புக்ஸ காட்டுறோம்...பேசறோம்....full cash அஞ்சே நிமிஷத்தில் வாங்கிட்டு திரும்பறோம் !" என்று செம கெத்தாய் ஜூனியரிடம் பில்டப்பெல்லாம் தந்து வைத்திருந்தேன் ! அங்கே பொறுப்பிலிருந்த டாப் நிர்வாகி எனக்கு ஏற்கனவே பரிச்சயமானவர் என்பதால் நிச்சயம் காரியம் ஜெயமாகிடும் என்ற நம்பிக்கை ! அன்பாய் வரவேற்றார் ; நட்பாய்ப் பேசினார் தான் ; ஆனால் தான் நிர்வகிக்கும் டின்டின் பத்தோடு பதினொன்று ரகமல்ல என்பதால் ஹெர்ஜ் அவர்களின் எஸ்டேட் உலகெங்கும் விதித்திடும் கணிசமான நிபந்தனைகளுக்கு ; தரம் சார்ந்த எதிர்பார்ப்புகளுக்கு ஈடு தந்திட இயன்றாலொழிய உரிமங்கள் சாத்தியமே ஆகாதென்று கண்ணியமாய்ச் சொன்னார் ! அந்த நொடியில் நமது உசரமென்ன ? என்பது மெய்யாலுமே எனக்குப் புரிந்தது ! உள்ளூரில் நாம் பெத்த சண்டியர் என்றாலும், அசலூர்களின் ஒப்பீட்டில் நாம் இன்னமுமே பச்சை மண்களே என்பதை மறுக்க முடியவில்லை ! நண்பரின் பேச்சிலிருந்த நயமான லாஜிக் ; நியாயம் எல்லாமே ஸ்பஷ்டமாக மண்டையில் ஏறியது ! அந்த நொடியினில் வீராப்பாய்ப் பேசி உரிமைகளுக்குத் துண்டைப் போட்டிருக்கலாம் தான் ; but எனக்கே அந்தத் தருணத்தினில் நாமின்னும் டின்டினுக்கு ரெடியாகவில்லை என்பது புரிந்தது ! So இன்னமும் உரம் சேர்த்துக் கொண்டதொரு பின்னாளில் மீண்டும் வருகிறோமென்று சொல்லி விட்டு விடைபெற்றோம் !
In hindsight - அதுவே சரியான தீர்மானம் என்பது புரிகிறது ! தயாரிப்பின் டெக்னிக்கல் விஷயங்களில் கணிசமான முன்னேற்றங்கள் இடைப்பட்டிருக்கும் இந்த 7 ஆண்டுகளில் அரங்கேறியுள்ளன ! And அவற்றை நடைமுறைப்படுத்திட ஏற்ற தொழில் நுணுக்கங்கள் நம்மிடம் உள்ளனவா ? இல்லையா ? என்று பகுத்தாய்ந்திடவும் இந்த ஏழாண்டுகள் உதவியுள்ளன ! So தெளிவானதொரு திட்டமிடல் சகிதம், போன ஆண்டினில் டின்டின் குழுமத்தின் முன்னே மறுபடியும் ஆஜரானேன் ! இடைப்பட்ட காலங்களில் நாம் என்ன செய்து வருகிறோம் ? எந்தெந்த பதிப்பகங்களோடெல்லாம் கரம் கோர்த்து வருகிறோம் ? என்பதை அவர்களுமே கவனித்து வந்துள்ளனர் ! நிறைய பேசினோம் ; நிறைய கேட்டுக் கொண்டேன் ; நிறைய புரிந்தும் கொண்டேன் ! And இறுதியாய், கிட்டத்தட்ட 5 மாதங்களின் பிரயத்தனங்களின் பின்பாய், அவர்களின் இசைவும் கிட்டியது ! இந்த பிப்ரவரியில் ராயல்டி தொகையினையும் செலுத்தி கோப்புகளை வாங்கிய நொடியில் எனக்குள் ஏதேதோ நினைவுகள் - கலவையாய் !
17 வயதான பொடிப்பயலாகக் காமிக்ஸ் உலகினுள் கால்பதித்த வேளையில் உலகைத் தூக்கி நிறுத்தப் போகிறோமென்ற உத்வேகமோ ; கடைசி வரைக்கும் இந்தத் துறையினில் தொடர்வோமேன்ற கனவுகளெல்லாம் என்னுள் இருந்ததில்லை ! பத்திரிக்கை துறையினில் காலம் தள்ள வேண்டுமென்ற லட்சியமெல்லாம் அது என்னவென்று தெரியாமலே இருந்தது தான் ; ஆனால் படித்து, முடித்து, ஆபீசில் அமர்ந்த பிற்பாட்டுக்கு அதெல்லாம் தானாய் நிகழும் என்றே எண்ணியிருந்தேன் ! But 'அம்போ'வென நட்டாற்றில் விடப்பட்டிருந்த 1983-ல் - "காலேஜ் போகாமல் வெட்டியாய் ஊரைச் சுற்றித் திரிகிறானே" - என்ற பரிகாசத்துக்கு ஆளாகிடப்படாதே !! காலேஜ் போவதைக் காட்டிலும் எனக்கு முக்கியமான ஒரு புழைப்பு உள்ளதென்று" என் நண்பர்களிடம் சொல்லிக் கொள்ள ஒரு முகாந்திரம் மட்டுமே பிரதானமாய்த் தேவைப்பட்டிருந்தது ! ஆக ஏதோவொரு நோக்கில் ; ஏதோவொரு கட்டாயத்தில், 1984-ல் இத்துறையினுள் அமிழ்ந்திட நேர்ந்தது என்பதே நிஜம் ! So "அன்றைக்கே டின்டின் போடணும் ; சூப்பர்மேன் போடணும் ; மிக்கி மவுஸ் போடணும் ; டெக்ஸ் வில்லர் போடணும் என்றெல்லாம் நெற்றியில் வீரத் திலகமிட்டு வீர சபதம் எடுத்தேன் ; சூளுரைத்தேன் " என்று சினிமா பாணியில் அள்ளி விட என்னிடம் flashback லேது !
எனது பால்யங்களை வண்ணமயமாக்கிய கதை நாயகர்களை உங்களிடமும் காட்டிட வேணும் ; அந்த முயற்சியில் கெளரவமாய் ரெண்டு காசு சம்பாதிக்க முடிந்தால், வீட்டிலிருந்த கஷ்டங்களுக்கு சன்னமாகவாச்சும் நிவாரணம் கிடைக்குமே ?! என்பதே அந்த நேரத்தின் சிம்பிளான கனவாக இருந்தது ! என் தாத்தாவின் ரூபத்தில் ஆண்டவன் துணை நின்றார் ; ஏதேதோ செய்தேன் ; ஸ்பைடர் கைகொடுத்தார் ; ஆர்ச்சி அடுத்த படியேற உதவினார் ; டெக்ஸ் வில்லரெனும் ஜாம்பவான் தனது குதிரையின் ஓரத்தில் தொற்றிக் கொள்ள வாய்ப்புத் தந்தார் ; ஜாலி ஜம்பருக்குப் போட்ட தீவனத்தில் ஒரு கையை நமக்கும் போட்டார் லக்கி லூக் ; பிராங்கோ-பெல்ஜிய காமிக்ஸ் உலகு நம்மை தத்தெடுத்துக் கொண்டது ; இத்தாலிய காமிக்ஸ் உலகம் குளிர் தெரியாதிருக்கப் போர்வை தந்தது ; பசி அறியாதிருக்க அன்பானதொரு வாசக வட்டம் வாய்த்தது - and இதோ 39 ஆண்டுகளுக்குப் பின்பாய் டின்டின் எனும் சிகரத்தினை தொட்டுப் பார்க்கும் அண்மையில் நிற்கின்றோம் !
'அட...நாம பாக்காத காமிக்சா ? வாரம் ஒரு புதுத் தொடரெல்லாம் பார்த்தவுக தானே நாமெல்லாம் ? இதிலே சிகரம்...தகரம்னுலாம் திடீர் செண்டிமெண்ட் சப்போட்டாவைப் புளியோ புளியென்று புளிவானேன் ?' என்ற உங்களின் மைண்ட்வாய்ஸ் எனக்குக் கேட்கிறது guys ! My answer is pretty simple :
பெர்சனலான ஒரு பெரும் கனவு நனவாகிடுவதன் மகிழ்வு மாத்திரமே இது ! நிறைய பயணித்துள்ளோம் ; நிறைவாய்ப் பயணித்தும் உள்ளோம் ; ஏகப்பட்ட கதை நாயகர்களோடு அன்னம்-தண்ணீரெல்லாம் புழங்கியும் உள்ளோம் தான் - but உங்களுக்கெல்லாமே ஸ்பைடர் மீது ; மாயாவி மீது ; சுஸ்கி-விஸ்கி மீதென்ற மறக்க முடியா பால்யக் காதல்கள் உள்ளதைப் போல எனக்குமே 4 மெகா காதல்கள் இருந்ததுண்டு ! And இத்துறைக்குள் நீடிக்கும் வரம் கிட்டிய பிற்பாடு, அவற்றை உங்களோடும் பகிர்ந்திடும் பெரும் கனவிருந்து வந்துள்ளது ! வேதாளர் எனது காதல் # 1 என்றால், டெக்ஸ் வில்லர் கனவு # 2 ! And காதல் # 3 - ஆஸ்டெரிக்ஸ் & காதல் # 4 - சாட்சாத் டின்டின்னே தான் !
இங்கே ஐயமின்றி முடி சூடிய சக்கரவர்த்திகள் ஆஸ்டெரிக்ஸ் & ஒபெலிக்ஸ் ஜோடியே ! ஆல்பம் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 45 லட்சம் புக்ஸ் விற்பனையாகின்றன இன்றைக்கு ! இதோ, காத்திருக்கும் அக்டொபரில் அடுத்த ஆல்பம் வரவுள்ளதாம் ; பிரெஞ்சு புத்தக விற்பனையாளர்கள் அத்தனை பேரும் சப்புக் கொட்டிக்கொண்டு காத்துள்ளனர் ! And இங்கே ஒரு கொடுமை என்னவென்றால் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரைக்கும் ஆஸ்டெரிக்ஸ் தொடருக்கான உரிமைகளை சந்தை செய்து வந்தது நமக்கு ரொம்பவே பரிச்சயமான நிறுவனம் தான் & அந்த நாட்களில் இந்தத் தொடரின் விற்பனைகளும் இத்தனை அசாத்திய உச்சங்களில் இருந்திருக்கவில்லை ! So நாம் நியூஸ்பிரிண்ட்டில் குப்பை கொட்டிக் கொண்டிருந்த காலகட்டங்களில் சீரியஸாக முயன்றிருந்தால் maybe ஆஸ்டெரிக்ஸ் தமிழ் பேசி இருக்கக் கூடும் ! ஆனால் இந்தக் கதைத் தொடரின் முதுகெலும்பே மொழிபெயர்ப்பும், பெயர்களை வைத்துச் செய்திடும் பகடிகளும், பிரெஞ்சு மண் சார்ந்த வட்டார வழக்கிலான காமெடிகளிலுமே எனும் போது - இவற்றை மொழிமாற்றம் செய்து அதே ரீதியிலான வெற்றிகளை ஈட்ட முடியுமா ? என்பதில் ஒரு நூறு சந்தேகங்கள் இருந்தன & இருக்கின்றன ! So ஜாம்பவான்களை அண்ட ஒரு வித பயம் இருப்பதே நிஜம் !
எஞ்சியிருந்த 3 கனவுகளில் டெக்ஸை வெகு காலம் முன்பே நனவாக்கியாச்சு & வேதாளரை சமீபத்தில் ! So டின்டின் மட்டுமே எட்டா உயரத்தில், எட்டா கனவாகவே தொடர்ந்திட, அவரை அண்டும் ஆவல் மட்டும் உள்ளுக்குள் கனன்று கொண்டே இருந்தது ! And இதோ - தொடும் தூரத்தினில் அந்தக் கனவுமிருக்க, விக்கிரமன் பட பாணியினில் சென்டிமென்டை பிழிவதைத் தவிர்க்க இயலவில்லை guys ! "உயிரைத் தேடி" போலான உங்களின் பால்யத்துக் கனவொன்று நனவாகிடும் வேளையில், நீங்கள் கொள்ளும் உற்சாகத்துக்கு ஈடாக இதைப் பார்த்து விட்டு மன்னிச்சூ ! ஏழு கழுதை வயசான பின்னேயும் எப்போதாச்சும் ஒரு உற்சாகத் துள்ளலில் தப்பில்லீங்களே ?
So இதுவே நிலவரம் ! கிட்டத்தட்ட இரண்டரை மாதங்களுக்கு முன்பாகவே உரிமைகளை வாங்கிய பிற்பாடு, வாகானதொரு தருணத்தினில் அறிவிக்கும் பொருட்டு வாய்க்கு பெவிகால் போட்டு வைப்பதற்குள், போதும்- போதுமென்றாகிப் போச்சு ! இனியும் தாமதித்தால் மண்டை தாங்காதென்பதால் சொல்லியாச்சு ! இனி திட்டமிடலைப் பற்றியும் சொல்லிடடுங்களா ?
*உலகெங்கும் வெளியாகிடும் அதே சைசில் ; அதே அமைப்பில் ; அதே அட்டைப்படங்களுடன் இங்கும் வந்திட வேண்டுமென்பது அவசியம். So மேக்சி சைசில் 64 பக்கங்களுடன் முழு வண்ணத்தில் டின்டின் உங்களை சந்திக்கவுள்ளார் ! 'இந்த லே-அவுட் லுச்சாவா இருக்கு ; இந்த சைஸ் பேஜாரா கீது ; இதுக்கு பாக்கெட் சைஸ் தான் குன்சா இருக்கும்' போன்ற அபிப்பிராயங்களுக்கு துரதிர்ஷ்டவசமாய் இங்கே இடமிராது ! Sorry guys !
*இதன் தயாரிப்புப் பணிகளுக்கு நம்மிடமுள்ள திறன்கள் போதாதென்பதால், அடுத்தகட்ட தொழில்நுட்பங்கள் கொண்டிருக்கும் வெளிமாநில அச்சுக் கூடத்திடமே பணிகளை ஒப்படைக்கவுள்ளோம் !
*சந்தாவினில் இடம்பிடித்திருக்கா இதழ் எனும் போது - இது முன்பதிவுக்கென்ற ரூட்டில் தான் பயணித்திட வேண்டியிருக்கும் !
*சந்தாவோடயே சொல்றதுக்கு என்ன கொள்ளை உனக்கு ? பிரிச்சி பிரிச்சி பணம் அனுப்பிட்டே இருக்கணுமா ?" என்ற மைண்ட்வாய்சா ? Sorry folks ; certain things are not in my control ! சில தருணங்களில் நமது முயற்சிகள் காயாகி, கனியாகி, கூடைக்குள் விழுந்திட எத்தனை அவகாசம் பிடிக்குமென்பதை கணிக்க இயல மாட்டேங்குது ! போன வருஷத்தின் பிற்பாதியினில் துவங்கிய முயற்சிகள் இதோ - இந்த பிப்ரவரி வரைக்கும் எடுத்துள்ளது ! So முறையாய் அறிவிப்பு வரும் ; அதற்கேற்ப கணிசமான அவகாசம் தந்து முன்பதிவுகளைத் துவக்கிடுவோம் !
*நடப்பாண்டின் ஆகஸ்டில் - ஈரோட்டில் டின்டின் உங்களை சந்திக்க ரெடியாகிடுவார் என்பதே இந்த நொடியின் சிந்தனை ! And இந்தத் தொடரின் தெறிக்க விடும் top சாகசம், 2 பாக த்ரில்லராய் 'ஏக் தம்மில்' வெளிவரவிருக்கின்றது ! 7 CRYSTAL BALLS & PRISONERS OF THE SUN" என்ற பெயர்களில் இங்கிலீஷில் வெளியான டபுள் ஆல்பம்ஸ் - "7 ஸ்படிகப் பந்துகள்" + "கதிரவனின் கைதிகள்" என்று தமிழில் காத்துள்ளன !
*அதைத் தொடரவிருப்பன 2 தெறிக்கும் சிங்கிள் ஆல்பம்ஸ் ! ஆண்டொன்றுக்கு 4 ஆல்பங்கள் என்பதே திட்டமிடல் !
So தற்போதைய ஆன்லைன் மேளாவின் ஆர்டர்களை அனுப்பி முடித்த கையோடு விரைவிலேயே, டின்டின் முன்பதிவு குறித்த விபரங்களைப் பகிர்ந்திடுவோம் - எனது உற்சாகம் உங்களையும் தொற்றாது போகாதென்ற நம்பிக்கையில் !!! புனித மனிடோ எப்போதும் போலவே நம்மை வழிநடத்துவாராக !
Bye folks ..have a beautiful day ! ஆன்லைன் மேளா களை கட்டட்டும் !!