நண்பர்களே,
வணக்கம். ஒரு நடுக்கும் பனியிரவு ! கொட்டும் பனியில், சாரை சாரையாய் படையெடுத்து வந்து கொண்டுருக்கும் எதிரிகளின் பூட்ஸ் தடங்கள் ஓராயிரம் தடங்களை உருவாக்கி வருகின்றன ! ஊருக்குள் நுழைந்திட உதவும் ஒரு பழைய பாலத்தை வெடி வைத்துத் தகர்த்து விட்டால் எதிரிகளைக் கணிசமாய்த் தேக்கி வைத்து விடலாமென்று அங்கே நிலை கொண்டிருக்கும் தாய்நாட்டுப் படை தீர்மானிக்கிறது ! தொலைவிசை இயக்குமுறையில் குண்டுகளை வெடிக்கச் செய்யலாமென்ற திட்டமிடலோடு அவசரம் அவசரமாய் பாலத்தில் வெடிபொருட்களை பொருத்துகிறார்கள் ! ஆனால்...ஆனால்...எதிர்பார்த்ததை விடவும் எதிரிகளின் டாங்கிகள் வேகமாய் நெருங்கியிருக்க, தொலைவிலிருந்து குண்டை இயக்கும் வாய்ப்பில்லை !! என்ன செய்வதென்று தாய் நாட்டின் சிறு படைப்பிரிவானது கையைப் பிசைந்து கொண்டிருக்க, சிரித்த முகத்துடன் marine வீரன் ஒருவன் முன்னே வருகிறான் ! நண்பர்களுக்கு bye சொல்லிவிட்டு, தானே போய் அந்த குண்டை வெடிக்கச் செய்து பாலத்தோடு, தானும் சுக்கு நூறாகிப் போகிறான் !!
இன்னொரு கொட்டும் பனியிரவு ! உக்கிரமாய் போர் நடந்து வரும் தன் நாட்டிலிருந்து தனது 2 சிறு குழந்தைகளோடு எல்லையை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறார் ஒரு தந்தை ! பிள்ளைகளின் தாயோ, இன்னொரு தேசத்திலிருந்து விரைந்து கொண்டிருக்கிறார், எல்லையில் தன் குடும்பத்தைச் சந்தித்த கையோடு, போர் முடியும் வரைக்கும் வேறெங்கேனும் குடும்பமாய் அடைக்கலம் தேடிடலாம் என்று ! ஆனால்...ஆனால்...எல்லையிலோ அந்தப் பிள்ளைகளின் தந்தை முரட்டுத்தனமாய் வழிமறிக்கப்படுகிறார் ! கை கால் திடமாயுள்ள, 60 வயதுக்குட்பட்ட எல்லா ஆண்மகர்களும் தாய்நாட்டு இராணுவத்தில் இணைந்து, யுத்தத்தில் பங்கேற்பது கட்டாயம் என்ற அவசரச் சட்டம் அங்கே பிரகடனம் செய்யப்பட்டிருப்பதால், அந்தத் தந்தையால் பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு எல்லையைக் கடக்க வழியில்லை ! செய்வதறியாது சுற்று முற்றும் பார்க்கிறார், அவர் கண்ணில் படுவது 58 வயதுப் பெண் மட்டுமே ! அவர் யார் என்பதோ ? எந்த ஊர் என்பதோ தெரியாது ! ஆனால் தனது 2 பிள்ளைகளையும், அவர்களது பாஸ்போர்ட் மற்றும் அடையாள அட்டைகளையும் அவரிடம் ஒப்படைத்து விட்டு, எல்லையின் மறுமுனையில் காத்திருக்கவுள்ள தனது மனைவியின் செல் நம்பரை மட்டும் கிறுக்கித் தருகிறார் ! "எப்படியாவது என் பிள்ளைகளை என் மனைவியிடம் ஒப்படைத்து விடுங்கள் ; போர் முடியும் போது நான் உயிர் பிழைத்து மிஞ்சியிருந்தால் அவர்களை சந்திக்கிறேன்" என்று சொல்லிவிட்டு, கையில் திணிக்கப்பட்ட துப்பாக்கியோடு இராணுவத்தினருடன் நடையைக் கட்டுகிறார் ! முந்தைய நொடி வரைக்கும் அரணாய் நின்ற தந்தை இனி இல்லை என்ற நிலையில் - அந்தப் புதிய, முதிய பெண்ணின் தோளே கதியென்று 2 குழந்தைகளும் சாய்ந்து கொள்கின்றன ! இரவெல்லாம் பயணிக்கிறார் - புதிய பொறுப்பையும், பிள்ளைகளையும் சுமந்து நிற்கும் அந்தப் பெண். எல்லையையும் கடக்கிறார்கள் - மைனஸ் 7 டிகிரி குளிரில் ! போர் பூமியிலிருந்து அண்டை நாட்டுக்குள் தஞ்சம் தேடிக் குவிந்திருந்த ஆயிரமாயிரம் அப்பாவிகளின் ஜன சமுத்திரத்தின் மத்தியில், கிறுக்கலான ஒரேயொரு செல் நம்பரை மட்டும் கையில் பற்றியபடிக்கே அந்தப் பெண் பதைபதைப்போடு காத்திருக்கிறார் ! தேற்ற முடியா அழுகையில் பையன் கரைந்து கொண்டிருக்கும் போது, செல் போன் ஒலிக்கிறது ! சற்றைக்கெல்லாம் அந்தப் பிள்ளைகளின் 33 வயதுத் தாய் அங்கே தலை தெறிக்க ஓடிவருகிறார் தாரையாய் ஓடும் கண்ணீருடன் !! தனது 2 பிள்ளைகளையும் வெறி வந்தவர் போல வாரியணைத்து ஆசுவாசப்படுத்திக் கொண்ட பின்னே - அவர்களை பத்திரமாய் அழைத்து வந்த பெண்மணியை இறுக அணைத்துக் கொள்கிறார் ! இருவருக்குமே பீறிட்டு வரும் அழுகையை அடக்க வழி தெரியவில்லை !
சின்னஞ்சிறு தீவு அது ! அதற்கு காவல் நிற்போர் வெறும் 13 தாய்நாட்டு வீரர்கள் ! ஒரு ராட்சச எதிரி கப்பல் அங்கே கரையினை நெருங்கியபடியே - "மரியாதையாய் அத்தனை பேரும் சரணடைந்து விடுங்கள் !" என்று மிரட்டலாய் அறிவிக்கிறது ! கப்பலில் உள்ள தளவாடங்களைக் கொண்டு அந்தத் தீவையே தடம் தெரியாமல் செய்து விட முடியும் தான் ! ஆனால் ரேடியோவில் செய்திப் பரிமாற்றம் நடத்திடும் தாய்நாட்டு வீரர்கள் துளியும் அசந்தது போல தெரியக்காணோம் ! "டேய் கொங்கனாடொக்குகளா....உங்களுக்குத் தெரிஞ்சதைச் செஞ்சுக்கோங்கடா ஈத்தரைகளா !!" என்று எகிறி அடிக்கின்றனர் ! வெகுண்டு தாக்குதல் நடத்துகிறது கப்பல் ! தோட்டாக்களும், வெடிகுண்டுகளும் ஏற்படுத்திய புகை மண்டலம் கலைந்த போது அந்தப் 13 வீரர்களும் அங்கே குருவிகளைப் போல செத்துக் கிடக்கின்றனர் !!
சரக்குக்குப் பிரசித்தி பெற்ற தேசம் அது ! தவித்த வாய்க்கு வோட்க்கா தருவது அங்கே ஜகஜம் ! ஆனால் திடீரென்று Molotov's Cocktail என்ற புது ஐட்டத்தை செய்வது எப்படி ? என்று அந்த நாட்டின் பாட்டி முதல் பேத்தி வரை ஆராய்ச்சி செய்ய ஆரம்பிக்கின்றனர் !! "அட, ஊரே பற்றி எரிகிறது ; போர் ஒன்று உக்கிரமாய் நடந்து வருகிறது ! இந்த ரணகளத்திலும் இந்தக் கிளுகிளுப்பு தேவை தானா ?" என்று உலகமே மண்டையைச் சொரிகிறது ! அப்புறம் தான் தெரிகிறது - Molotov's Cocktail ஒரு புதுவகைச் சரக்கல்ல ; குப்பென்று பற்றியெறியக்கூடிய சரக்கு உள்ள பாட்டிலுக்குள் திரியைப் போட்டுத் தீவைத்துத் தூக்கி வீச ஏதுவான ஆயுதம் என்று ! எதிர்ப்படும் எதிரிகள் மீது அவற்றை வீச வீடுதோறும் ஜனம் ஆயத்தமாகி வருகிறார்கள் என்பதை உணரும் போது உலகமே வியக்கிறது அந்த மக்களின் வீரத்தையும், தாய் நாட்டுப் பற்றையும் எண்ணி !!
நேற்று வரைக்கும் பிஸியாய் இயங்கி வருமொரு ஐரோப்பியத் தலைநகரம் அது ! இடியாய் போர்மேகங்கள் சூழ்ந்திட, விண்ணிலிருந்து குண்டு வீச்சு நிகழக்கூடுமென்ற எச்சரிக்கை சைரன்கள் நகரம் முழுக்க நாராசமாய் ஒலிக்க ஆரம்பிக்கின்றன ! வளைகளைத் தேடி ஓடும் எலிகளை போல மக்கள் பதுங்கு தளங்களிலும், அருகாமையில் உள்ள மெட்ரோ தரைக்கடி ரயில்நிலையங்களிலும் தஞ்சம் புகுகிறார்கள் ! விறைக்கும் குளிரில் ஆயிரமாயிரம் மக்கள் அங்கே அண்டிக்கிடக்கின்றனர் - தங்கள் வேலைகளை போட்டது போட்டபடிக்கே விட்டுவிட்டு ! ஆனால் சில இயற்கையின் நியதிகளை போரோ ; சைரன்களோ ; பதுங்குதளங்களோ கட்டுப்படுத்தாதே ! நிறைமாத கர்ப்பிணியான ஒரு பெண்ணுமே அங்கே மெட்ரோ ரயில் நிலையத்தில் பதுங்கிக் கிடக்க, அவருக்குப் பிரசவ வலி ஆரம்பிக்கிறது ! மருத்துவமனைக்குச் செல்ல வாய்ப்பே இல்லை என்பதால், அங்குள்ள பெண்களே பிரசவம் பார்க்க முனைகின்றனர் ! மிகுந்த சிரமங்களுக்குப் பின்பாய், சூழ்ந்துள்ள மக்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் ஒரு அழகான பெண்குழந்தை அந்த போர்பூமியில் ஜனிக்கின்றது ! இன்னொரு பக்கமோ, அங்கே பதுங்கிக்கிடக்கும் சுட்டிகளின் பொழுதுபோக்குக்கென யாரோ ஒரு எஞ்சினியர் ஒரு ஸ்க்ரீன் போல ஏதோவொன்றை ரெடி செய்து, புரஜெக்டர் போலவும் உருவாக்கி, அதனில் கார்ட்டூன்களை ஓடச் செய்கிறார் ! எத்தனை இடர்கள் இடைப்பட்டாலும், அத்தனையிலும் ஒரு சாதனை செய்து காட்டும் மனிதனின் போர்குணத்தின் லேட்டஸ்ட் அத்தியாயமாய் இதனை உலகமே பார்க்கின்றது !!
Cut...Cut...!! Back to reality !! மேற்சொன்ன காட்சிகளை ஒரு சுமாரான டைரக்டரிடம் ஒப்படைத்தால் கூட, தனது படத்தில் மெர்சலான காட்சிகளாக்கிவிடுவார் ; ஒரு சுமாரான காமிக்ஸ் கதாசிரியரிடம் ஒப்படைத்தால் கூட - பின்னிப் பெடலெடுத்து விடுவார் தான் ! ஆனால் துரதிர்ஷ்டவசமாய் காட்சிகளில் எவையும் கற்பனைகளே அல்ல ! சகலமும் யுக்ரைன் மண்ணில் கடந்த சில நாட்களாய் தாண்டவமாடி வரும் யுத்தமெனும் அரக்கனின் கைவண்ணங்களே !
யுத்தங்கள் பூமிக்குப் புதிதே அல்ல தான் ; கடந்த கால் நூற்றாண்டுக்குள் மத்திய கிழக்கில் வெவ்வேறு இலக்குகளில் ; ஆப்கானிஸ்தானில் ; பிரிவினை கண்ட ரஷ்ய நாடுகளில் என ஏகமாய் சண்டைகளில் சட்டைகளும், பல்லாயிரம் உயிர்களும் வதைபட்டுள்ளன தான் ! ஆனால் இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்பாய் இத்தனை பெரியதொரு படையெடுப்பினையோ, மோதலையோ உலகம் கண்டதில்லை எனும் போது இது வரலாற்றின் மெகா கரும்புள்ளி என்பதில் ஐயமேயில்லை ! நம்மவர்களிலும் சுமார் 25,000 பேரும் யுக்ரெய்னில் சிக்கிக் கிடக்க, அவர்களுள் 20,000 பேர் மருத்துவம் பயிலச் சென்ற மாணவ / மாணவியர் எனும் போது - எங்கேயோ யாருக்கோ நடக்கும் தலைநோவாய் இதனைப் பார்க்கத் தோன்றவில்லை ! இந்த வலைப்பூவைத் துவங்கிய நாளினில் காமிக்ஸ் சார்ந்த சமாச்சாரங்களைத் தவிர்த்த வேறு 'கருத்து கந்தசாமி' மேட்டர்களுக்குள் ஒரு போதும் தலையை நுழைத்திடவே கூடாதென்பதில் உறுதியாக இருந்தேன் தான் ; ஆனால் ட்விட்டரிலும், இன்ன பிற தகவல் தளங்களிலும் பிரவாகமெடுத்து வரும் செய்திகளின் தாக்கங்களை பார்க்கும் போது ரொம்பவே உறுத்துகிறது ! காப்பியில் அரை ஸ்பூன் சர்க்கரை குறைச்சலாகிப் போனால் விசனம் கொள்கிறோம் நாம் ; ஆனால் சோறு, தண்ணீரின்றி நம் மாணவர்கள் நடுக்கும் குளிரில் எங்கெங்கோ எல்லைகளில் அனாதைகளாய் நிற்கும் காட்சிகளைப் பார்க்கும் போது, அவர்களுக்காகவும், அவர்தம் குடும்பத்தினருக்காகவும் பதறாமல் இருக்க முடியவில்லை !
நமது கதைகளில் இரும்புக்கை நார்மன் யுத்த பூமியில் நடைபோட, பின்னணியில் 'டும்கீல்' என்று வெடிகள் வெடிக்கும் போது நாம் ஆர்வமாய்ப் பக்கங்களை புரட்டியிருப்போம் ! அதிரடிப் படை ; பெருச்சாளிப் பட்டாளம் ; சார்ஜெண்ட் தாமஸ் என ஏகமாய் war நாயகர்களைக் கதைகளில் சந்திக்கும் போது உற்சாகம் கொண்டிருப்போம் ; ஆனால் நிஜத்தினில் யுத்தங்களின் கோரப் பரிமாணங்களைப் பார்க்கும் போது உள்ளுக்குள் எழுவது உற்சாகமல்ல என்பது மட்டும் நிச்சயமாய்த் தெரிகிறது ! இங்கே ஒரு மூலையில் குந்தியபடியே போரின் அவல முகங்களைப் பற்றி ஒரு முழியாங்கண்ணன் அரற்றி, புடினின் மனசும் மாறப் போவதில்லை ; கியெவ் நகரின் அல்லல்களும் மட்டுப்படப்போவதில்லை தான் என்பது புரிகிறது ! கண்முன்னே விரியும் காட்சிகள் ஏற்படுத்தும் ஆற்றமாட்டாமைக்கு இது ஒரு வடிகால் மாத்திரமே என்று வைத்துக் கொள்ளுங்களேன் !! புனித மனிடோ இந்த இரத்தச் சேதத்துக்கு சீக்கிரமே ஒரு முற்றுப்புள்ளி வைத்து காத்திடட்டும் !
And இந்த மாதத்தினில் ஜம்போவின் வெளியீடாக வரவுள்ளதுமே போரும், போர் சார்ந்த முஸ்தீபுகளுமான "போர்முனையில் தேவதைகள்" என்பது செம irony !! இதோ - மெருகூட்டப்பட்ட ஒரிஜினல் அட்டைப்படத்தில் பிரிவியூ + உட்பக்கங்களின் முதற்பார்வைகளுமே :
நாம் வாழ்ந்து வரும் காலங்களின் பிரதிபலிப்பாய் இந்த ஆல்பத்தினைப் பார்த்திடலாம் என்று தோன்றுகிறது ! And இதன் படைப்பாளிகளில் ஒருவர் ஒரு முன்னாள் நீதிபதியுமே என்பதால் கதை நெடுக ஒருவித யதார்த்தம், புலனாய்வின் பரிமாணங்கள், என்று இழையோடுவதைப் பார்த்திட முடிகிறது ! In fact, ஒருவித மேற்கத்திய பார்வையில் இந்த ஆல்பம் புனையப்பட்டிருப்பினும், இது ஒரு நிஜ சம்பவத்தின் தழுவலாம் ; வித்தியாசமான சித்திர பாணி & இதமான டிஜிட்டல் கலரிங்கில் சொல்லப்பட்டிருப்பது ஒரு உக்கிரமான சமகாலத்துக் கதை ! இந்தக் கதையோட்டம் குறித்து நம் மத்தியில் நிச்சயமாய் நிறைய பேசிடுவோம் என்பது இப்போதே உறுதிபட தெரிகிறது ! மதம் சார்ந்த விஷயங்களில், மேற்கின் பார்வைகளும், நமது பார்வைகளும் நிரம்பவே மாறுபடும் என்பதை yet again இந்த ஆல்பத்தில் நாம் பார்த்திடவுள்ளோம் ! நிறையவே கூகுள் தேடல்களோடே இதன் மொழிபெயர்ப்பினைக் கையாண்டிட வேண்டிப் போனது ! சொல்லப் போனால் இந்தக் கடைசி ஒன்றரை ஆண்டுகளில் நமது பணிகளோடு நான் செய்ய நேர்ந்துள்ள கூகுள் தேடல்கள், செம வலிமையானது என்பேன் ! கூகுளப்பா - வாழ்க நீவீர் !!
மார்ச்சின் மூன்று இதழ்கள் + எலியப்பா இணைப்பு இதழும் அச்சாகி, பைண்டிங்கில் உள்ளன ! So செவ்வாயன்று டெஸ்பாட்ச் இருந்திடுமென்று எதிர்பார்க்கலாம் ! And இம்மாதத்து எலியப்பா இதழ் உங்களிடமிருந்து சில வினவல்களை வெளிக்கொணராது போனால் நான் ஆச்சர்யம் கொள்வேன் ! படிக்கும் போது புரியாது போகாது - நான் குறிப்பிடுவது எதையென்று !
அப்புறம் சனியிரவே வந்திருக்க வேண்டிய பதிவானது காணாமல் போனது குறித்து நிறைய நண்பர்கள் - "நலம் தானா ? உடலும் ,உள்ளமும் நலம் தானா ?" என்று அன்புடன் விசாரித்திருந்ததற்கு thanks a bunch folks ! முதுகுவலி எனும் சைத்தான் அநியாயத்துக்குப் படுத்தி எடுத்ததே இந்த சிவகாசி சம்முவசுந்தரம் மட்டையாகிக் கிடக்க வேண்டிப் போனதன் காரணம் ! தவிர, வாரயிறுதியில் சில பல அவசர மராமத்து வேலைகளுக்குள்ளும் தலைநுழைக்க வேண்டியிருந்ததால் இந்தப் பக்கமாய் தலைகாட்டத் தாமதமாகிப் போய்விட்டது ! Sorry guys !!
Before I sign out - சில குட்டி updates :
1.என் மண்டையில் எஞ்சியுள்ள கேசத்தைப் போல, "விரல் விட்டு எண்ணிவிடலாம்" - என்ற எண்ணிக்கையினைத் தொட்டு விட்டது "வேதாளர் ஸ்பெஷல்" கையிருப்பு !! சமீபத்தில் நான் பார்த்த அதகள பரபரப்பு முகமூடி மாயாத்மாவுக்கே !
2.மாண்ட்ரேக் ஸ்பெஷல் சார்ந்த கதைத் தேர்வுகளை நேற்றைக்குத் தான் பூர்த்தி செய்திருக்கிறேன் ! இயன்ற மட்டுமே காதுகளை பூ ஸ்டாண்ட் ஆக்கிடக்கூடிய கதைகளுக்கு கல்தா தந்துவிட்டு, ரசிக்கக்கூடிய கதைகளாய்த் தேர்வு செய்துள்ளேன் ! இந்தக் க்ளாஸிக் கதைகளுக்குள் துளாவத் துளாவத் தான் அந்நாட்களின் படைப்பாளிகளின் கற்பனை வளங்களின் முழுப் பரிமாணங்களும் புரிபடுகின்றன ! Promises to be a thrilling album !
3.ஒரு புது ஜானரில் ஒரு அதிரடி நாயகர் ; வித்தியாசமான பாணியினில் சீக்கிரமே களமிறங்கவுள்ளார் ! Any guesses ?