நண்பர்களே,
வணக்கம். அதகள ஆக்ஷன் நிறைந்த ஆகஸ்டுக்கு விடை தந்திடும் வேளையும் நெருங்கியிருக்க, இதோ செப்டெம்பரின் பணிகள் முழு வீச்சில் ஓட்டமெடுத்து வருகின்றன ! இந்த மாசம் நமது முகவர்களிடம் சகட்டு மேனிக்கு சாத்து வாங்கும் வாய்ப்புகள் நம்மவர்களுக்குப் பிரகாசம் என்பேன் - simply becos - "காமிக்ஸ் நம்மவர்" இம்மாத அட்டவணையினில் நஹி ! "டெக்ஸ் இல்லியா ???" என்று ஏஜெண்ட்கள் போடும் சத்தத்தில் சப்த நாடிகளும் ஒடுங்கியவர்களாய் நம்மாட்கள் பம்முவதை அடிக்கடி பார்த்திட முடிகிறது ! "அது தான் தெரியுதுலே....பின்னே மாசத்துக்கு ஒருக்கா அவரை போட்டுத் தொலைக்குறதுக்கு என்ன ?" என்ற வினா தொடரக்கூடும் என்பதால் பதிலையும் சொல்லி விடுகிறேன் !
நடு நாயகமாய் மஞ்சளார் & கோ. பவனி செல்லும் வேளைகளில் கூடிய மட்டுக்கு second string நாயக / நாயகியரைக் கண்ணில் காட்டாதிருக்கவே நான் முயற்சித்து வருகிறேன் ! அதனால் தான் ஒரு பிரளயப் பயணத்தோடு லக்கி ஆண்டுமலர் ; ஒரு லயன் # 400 உடன் ஒரு தோர்கல் ; சிகப்பாயொரு சிலுவை" சகிதம் இன்னொரு லக்கி லூக் - என சம பலம் பொருந்திய ஈரோக்களை; ஈரோயினிகளைத் தேடிட முயன்றுள்ளேன் ! அந்தந்த மாதங்களின் (விற்பனை) நீர்வரத்தின் பெருமளவை 'தல' தனதாக்கிக் கொண்டாலும், பாக்கிப் பேருக்குமே கொஞ்சமாய் பாய்ந்திடாது போகாது தான் என்பது எனது நம்பிக்கை ! ஆனால் அந்த அளவிற்கான வலு இல்லாத அடுத்த நிலை நாயகர்களாய் களமிறங்கிட வேண்டிய கட்டாயப் பொழுதுகளில் என்ன செய்வது ??? 'பளிச்' என்ற சின்னப் பொண்ணு வீட்டிலிருக்கும் போது, ஒரு மிடறு சுமாரான மூத்த பொண்ணைப் பார்க்க பிள்ளை வீட்டிலிருந்து வரும் போது என்ன செய்வார்களோ - அதையே தான் செய்தாகணும் !! So "சின்னப்பொண்ணு" தலயை எங்காச்சும் அந்த வேளைகளில் பதுங்கிடச் செய்யணும் ! இதுவே காரணம் - மாதமொருமுறை 'தல' தலை காட்டாதிருக்க மையக் காரணம் ! Of course - அட்டவணையின் அத்தினி பேருமே அதிரி புதிரி அதிரடிப் பார்ட்டிகள் தான் என்றொரு சூழல் பிறப்பின், அன்றைக்கு இந்த பயங்களுக்குப் பெரிதாய் முகாந்திரங்களிராது ! அட - 'வலிமை'யான ரிலீஸ் நாளா ? நாங்களுமே 'அண்ணாத்தே' தான் ! No பயம்ஸ் என்று சொல்லிட இயலும் !! புனித மனிடோவிடம் வேண்டி வருகிறேன் - அத்தகையதொரு தினத்தை நமக்குப் புலரச் செய்திட !!
And இதோ இம்மாதம் களமிறங்கவுள்ள அனைவருமே தேனீக்களைப் போலான சுறு சுறுப்புப் பார்ட்டீஸ் ; கொடுத்த பணியினை பிசகின்றி முடிக்கும் திறன் கொண்டோர் !! Before I move on to details : ஒரு சிறு குறிப்பு guys ! செப்டெம்பரில் காத்துள்ள இதழ்கள் மூன்றல்ல - நான்கு ! Trent சிகப்புச் சட்டைக்காரரும் இம்மாதமே இணைந்திடவுள்ளார் !
ஆட்டத்தைத் துவக்கவுள்ளவர் நமது 'திண்டுக்கல் டிக்"...sorry ...sorry ..."டெட்வுட் டிக்" ! போனெல்லி குழுமத்தின் இந்த சமீப உருவாக்கம் பற்றிய பின்னணியில் வரலாற்று சுவாரஸ்யம் ஏகமாய்ப் புதைந்து கிடக்கிறது ! நான்கூட முதலில் இதே பெயரில் ஒரு கறுப்பின ஆசாமி வாழ்ந்தார் போலும் ; அவரையே ஒரு காமிக்ஸ் அச்சில் வார்ப்பெடுத்துள்ளனர் போலும் என்று நினைத்திருந்தேன் ! ஆனால் அப்புறம் தான் தெரிந்தது DEADWOOD DICK என்பது 1877 முதல் 1897 வரையிலும் வெளியானதொரு நாவல் தொடரின் நாயகரின் பெயர் என்று !! லைட்டன் வீலர் என்ற நாவலாசிரியர் - சொற்ப விலைகளிலான பல நாவல்களில் இந்த டெட்வுட் டிக்கை முன்னிறுத்தி கதைகள் பண்ணியிருக்கிறார் !
டெட்வுட் என்பது அமெரிக்காவின் தெற்கு டகோட்டா மாநிலத்திலுள்ளதொரு சிறு நகரம் ! 1870 வாக்கில் இங்கே கொஞ்சம் கொஞ்சமாய் ஜனம் குடியேறியுள்ளனர் ! 1874-ல் தென் டகோட்டாவின் பிளாக் ஹில்ஸ் பகுதிகளில் தங்கம் கண்டுபிடிக்கப்பட, திபு திபுவெனப் படையெடுத்த மக்கள் டெட்வுட் நகரின் முன்னோடிகள் ! ரொம்பச் சீக்கிரமே பெருத்த இந்த நகரத்தின் ஜனத்தொகை 1876-ல் இருபத்திஐந்தாயிரத்தைத் தொட்டிருக்கிறது ! தங்கச் சுரங்க முதலாளிகள் ; சுரங்கத் தொழிலாளர்கள் ; சலூன் நடத்துவோர் ; ப்ராத்தெல் நடத்துவோர் ; சூதாடிகள் ; குடிகாரர்கள் - என்று இங்கே ரகம் ரகமாய் ஜனம் குடியேற, சட்டம், ஒழுங்கெல்லாம் வீசம்படி என்ன விலை ? என்ற நிலவரம் நிலவியுள்ளது ! வன்மேற்கின் நிஜ நாயகர்களான வ்யாட் ஏற்ப் ; வைல்ட் பில் ஹிகாக் ; கலாமிட்டி ஜேன் போன்றோரெல்லாம் இங்கே வாழ்ந்திருக்க, கடைசி இருவரும் இங்கேயே செத்தும் போயிருக்க, அவர்களது கல்லறைகளும் டெட்வுட் நகருக்கு வெளியே தான் உள்ளனவாம் !
1876 -ல் டெட்வுட் நகரம் !!
ஆக ஒருவிதமான ரவுடி நகராய் டெட்வுட் தலையெடுத்த பொழுதினில் - அதனை மையமாய் கொண்டு "டிக்" என்றதொரு ஹீரோவை உருவாக்கி நாவல்கள் எழுதித் தள்ளினார் அந்தக் கதாசிரியர் ! பின்னாட்களில் டெட்வுட் நகரைச் சார்ந்த நிஜமான பிஸ்தா பார்ட்டிகள் - அந்தப் பெயரின் வசீகரத்தால் ஈர்க்கப்பட்டு அதனையே தமது புனைப்பெயர்களாக்கிக் கொண்டிருக்கிறார்கள் ! அவ்விதம் இந்தப் பெயரைக் கடன் வாங்கியவர் தான் Nat Love என்றதொரு டெட்வுட் நகரைச் சார்ந்த கௌபாய் !
1854-ல் பிறந்து, 1921 வரைக்கும் வாழ்ந்திருக்கிறார் முன்னாள் அடிமையும், பின்னாள் சாகச வீரருமான இந்த மனுஷன் ! அடிமைத்தனம் கோலோச்சிய அமெரிக்காவின் தென் மாநிலத்தில் ஒரு அடிமைக் குடும்பத்தில் பிறந்தவர், "கருப்பு அடிமைகள் கல்வி கற்கப்படாது" என்ற கோட்பாடையும் மீறி கொஞ்சமாய்ப் படித்திருக்கிறார் ! அடிமைத்தனம் ஒழிந்த பின்னே தந்தைக்கு விவசாயத்தில் உதவி ; 16 வயசில் கௌபாய் வாழ்க்கை என வண்டி ஓட, குறிபார்த்துச் சுடும் சாகச வீரராய் ; சண்டிக் குதிரைகளை கையாளும் திறன் கொண்ட கில்லாடியாய் ; கால்நடைத் திருடர்களை எதிர்த்து நின்று போராடிய கில்லியாய் பின்னாட்களில் மனுஷன் பிரபலமாகினார் ! So Deadwood Dick என்ற கற்பனைப் பெயர் + Nat Love என்ற அந்தக் கறுப்பின (நிஜ) கௌபாய் வீரன் என்ற கலவையினை ஒரு காமிக்ஸ் நாயகராக்கி, தலா 64 பக்கங்கள் வீதம் ஒரு 7 அத்தியாயக் குறுந்தொடர் ஆக்கியுள்ளனர் போனெல்லி !
நிஜ Nat Love எப்படிப்பட்ட ஆசாமியோ தெரியில்லா ; ஆனால் போனெல்லி இந்த நாயகரை ஒரு கரடு முரடான மனிதராகவே சித்தரித்துள்ளனர் ! கொச்சையான பேச்சு ; நிறைய நக்கல் ; நையாண்டி ; நிறைய ஜொள்ளு ; எவன் எக்கேடோ கெட்டாலென்ன ? என்ற பாணியில் வலம் வருகிறார் ! இவரும், ஒரு சக கறுப்பின சிப்பாயும் முதன் முதலில் சந்தித்துக் கொள்ளும் கட்டம் - எனக்கு செமத்தியாய்க் கட்டம் கட்டவுள்ள தருணம் என்று இப்போதே ஸ்டீலின் பட்சிகள் காதில் ஓதுகின்றன ! இங்கே கதாசிரியர் சிருஷ்டித்துள்ள ஒரிஜினல் வரிகளை, கொஞ்சம் மிதமாக்கிடலாமா ? என்று பேனா பிடிக்கும் போது யோசித்தேன் தான் ; ஆனால் நாயகரின் பாத்திரத்தோடு ஒன்றிட வேண்டுமெனில் அதே கரடு + முரடு அத்தியாவசியம் என்றே பட்டது ! So watch out guys !! இதுவரைக்கும் இந்த மாதிரியான வார்த்தைப் பிரயோகங்களை நீங்கள் நம்மிடையே பார்த்திருக்க மாட்டீர்கள் தான் ; and நாளை துவங்கவுள்ள எடிட்டிங்கில் நானே என் வரிகளுக்கு கத்திரி போடாது விட்டேனெனில் சூடான வார்த்தைக்களமொன்று இம்மாதம் ஆஜராகிடும் ! தெரியலை - நாளைய பொழுதுக்கு எனது 'தெகிரியம்' எந்த அளவிற்கு தாக்குப் பிடித்திடவுள்ளதென்று ! And சித்திரங்களிலுமே எந்த மட்டுக்கு எடிட்டிங் இருந்திடுமென்பதை நானே அடுத்த சில நாட்களில் தான் அறிந்திருப்பேன் ! So பொங்கப் பானையை பரணிலிருந்து இருக்குவதாயின் புக்ஸ் வெளியான பின்னே இறக்கிடல் பொருத்தமாயிருக்கக்கூடும் ! இந்த ஒற்றைப் பக்க டிரெய்லருக்கே பொங்கலோ பொங்கலன்று குலவைகள் போடத்தான் வேணுமா ? என்ற தீர்மானத்தை உங்களிடமே விட்டு விடுகிறேன் !
இந்தத் தொடரின் முதல் 4 பாகங்களை ஒன்றிணைத்து, 256 பக்க ஆல்பமாய் ரூ.200 விலையில் வெளியிடத் திட்டமிட்டிருந்தோம் ! ஆனால் ரொம்பவே கரடு முரடான இந்தக் கதாநாயகனை ; இந்த ரவுசு பாணியினை உங்கள் சிரங்களில் ஏகமாய்க் கொட்டி விஷப்பரீட்சை பார்க்க தயக்கம் மேலோங்கியது ! So முதலிரண்டு அத்தியாயங்களோடு நிறைவுறும் முதல் கதையோடு இந்த இதழுக்கு "சுபம் " போட்டு விட எண்ணியுள்ளேன் ! விலையுமே பாதியாய் - ரூ.100 என்று இருந்திடவுள்ளது ! So இங்கே கத்திரி காணும் ரூ.100 மீதமிருக்கும் நம்மிடம் !
அப்புறம் அட்டவணையில் காத்துள்ள புதுமுகம் "மேகி கேரிசன்" உங்களுக்கு நினைவிருக்கலாம் ! அம்மணி ஒரு வித்தியாச பாணி டிடெக்டிவ் & இவரது தொடரினில் இருப்பன மொத்தமே 3 கதைகள் தான் ! எனது ஒரிஜினல் திட்டப்படி நடப்பாண்டின் டிசம்பரில் இவரது முதல் ஆல்பமான "செய்வன தில்லாய்ச் செய்" இதழை வெளியிட்ட கையோடு, 2022-ன் முதலிரு மாதங்களில் பாகங்கள் 2 & 3 போட்டு விடலாமென்று எண்ணியிருந்தேன் ! ஆனால் காத்திருக்கும் 2022-க்கு ஒரு செம வேக (கமர்ஷியல்) அட்டவணை திட்டமிட்டிருக்க, மேகியின் பாணி அதனுள் நுழைந்திட சிரமப்படும் என்று படுகிறது ! So நடப்பு அட்டவணையில் உள்ள மேகியின் முதல் ஆல்பத்தினை ஏதேனுமொரு Bookfair ஸ்பெஷல் இதழாக்கிடத் தீர்மானித்துள்ளேன் ! So இங்கொரு ரூ.90 மீதமிருக்கும்.
இந்த ரூ.100 + ரூ.90-க்கு ஈடாகத் தான் லக்கி லூக்கின் 75-வது பிறந்தநாள் ஸ்பெஷல் இதழாய் "நிதிக்குத் தலை வணங்கு" & "தாயில்லாமல் டால்டனில்லை" இணைந்த ஸ்பெஷல் இதழ் - ரூ.200 விலையில், ரெகுலர் சந்தாவிலேயே வரவுள்ளது guys !! So கொஞ்சம் கரடு முரடான களங்களில் பிடிக்கும் மிச்சத்தைக் கொண்டு ஒரு ஜனரஞ்சக நாயகருக்கு "ஹேப்பி பர்த்டே" சொல்ல திட்டமிட்டுள்ளோம் !
And of course - "மேக்கியை சந்திக்கும் ஆவலில் இருந்தேன் ; தலையிலே மண்ணள்ளிப் போட்டுப்புட்டியே ?!" என்று குரல் எழுப்ப உள்ளோருக்கு : கூடிய விரைவில் மேகியை கண்ணில் காட்டிடுவேன் guys ; "செய்வன தில்லாய்ச் செய்" கதையெல்லாம் வந்து விட்டது பிப்ரவரி மாதத்திலேயே !!
So இந்த செய்திகளை உங்களிடம் சேர்ப்பித்த கையோடு கிளம்புகிறேன் - இம்மாதத்து ஜம்போ இதழின் எடிட்டிங்கை நிறைவு செய்திட ! கிளம்பும் முன்னே சில குட்டி updates !
- SMASHING '70s முன்பதிவு 210-ஐ தொட்டு விட்டது அதற்குள்ளாய் ! அக்டோபர் 14 வரையிலும் இன்னமும் அவகாசமிருக்க, நிச்சயமாய் 500 எனும் நம்பரைத் தொட்டு விட இயலுமென்றே தோன்றுகிறது !!
- ரிப் கிர்பி கதைத் தேர்வுகள் done & கதைகளும் வந்தாச்ச்சூ !!
- வேதாளர் கதைகளின் தேர்வுகளுமே நேற்றைக்கு done and அடுத்த சில நாட்களில் அதுவும் வந்திடும் !
- அப்புறம் தான் உங்களைத் துணைக்கு அழைக்க வேண்டி வரும் folks - மாண்ட்ரேக் & காரிகன் கதைகளினில் தேர்வுகளை செய்திட !! So இப்போதிலிருந்தே வெண்டக்காயைக் கூட்டுக்களை கொஞ்சம் கூடுதலாக்கிக் கொள்ளுங்களேன் உங்களின் போஜனங்களில் !
Bye all...see you around ! Have a fun weekend !!