நண்பர்களே,
வணக்கம். கொஞ்ச காலமாகவே பகிர்ந்திட நினைத்து வரும் சமாச்சாரமிது ; 'அப்பாலே பாத்துக்கலாம் ; கொஞ்ச நாள் போகட்டுமே ! ' என்றே தள்ளிப் போட்டுக் கொண்டே கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களை விரயம் செய்தாச்சு ! மண்டையைச் சொறிந்து கொண்டே இன்னமுமே இதனில் தயங்கி வந்தால் - மொத்தத்துக்கும் சொதப்பலாகிப் போகும் என்பதால் இந்தத் தருணத்திலாவது திருவாய் மலர நினைக்கிறேன் ! பல சமயங்களில் வாய் நிறைய பெவிகாலைப் பூசிக் கொள்ள சமீப காலங்களில் பழகி விட்டிருந்தாலும், அந்தக் கட்டுப்பாடை இழக்கும் முதல் தருணத்தில் 'தத்து பித்தென்று' எதையாச்சும் உளறி வைத்து எனக்கு நானே சூன்யம் வைத்துக் கொள்வது உண்டு தான் ! எத்தனை கழுதை வயசானாலும் அந்த ஒரு சமாச்சாரத்தில் மட்டும் கவனம் பற்ற மாட்டேன்கிறது ! 'அட - என்னடாப்பா விஷயம் ? இத்தினி பில்டப் ஏதுக்கோசரம் ?' என நீங்கள் கடுப்பாகும் முன்னே மேட்டருக்கு வருகிறேன் !
எல்லாம் ஆரம்பித்தது போன ஆகஸ்டில்...நமது வாசக சந்திப்பின் போது ! ஏதேதோ அளவளாவல்கள் ; அலசல்கள் என்ற ஜாலியில் திளைத்துக் கிடந்த சமயம் அடுத்த (2020-ன்) ஈரோட்டு ஸ்பெஷல் பற்றிய topic தலைதூக்கியது ! "இளம் டைகர்' தொடரினில் எஞ்சியிருக்கும் 12 ஆல்பங்களையும் 'ஏக் தம்மில்' போட்டுத் தாக்கினால் என்ன ? என்று நண்பர்களுள் ஒரு அணி உற்சாகமாய் குரலெழுப்ப - உருமி மேளத்துக்கு மண்டையை ஆட்டும் பூம் பூம் மாடைப் போல நானும் சம்மதம் சொன்னேன் ! And அதனை "முன்பதிவுக்கான பிரத்யேக இதழ்" என்று 2020-ன் அட்டவணையோடும் சேர்த்தே விளம்பரப்படுத்தவும் செய்திருந்தோம் ! இதுவரையிலும் நீங்கள் அறிந்ததே !!
அதனைத் தொடர்ந்த நிகழ்வுகளோ - எனக்கும், நமது பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளருக்கும் மாத்திரமே தெரிந்தவை ! And அவையே இந்தப் பதிவின் துவக்கப் பத்தியினில் நான் மிடறு விழுங்கித் தவிக்கக் காரணமாகவும் இருந்துவிட்டு சமாச்சாரங்கள் !
To cut a long story short - நவம்பர் இறுதியிலேயே இளம் டைகர் ஆல்பம் # 10 முதல் 21 வரையிலான கதைகளின் டிஜிட்டல் கோப்புகளை வரவழைத்து - மொழிபெயர்த்திடும் பொருட்டு நமது ஆஸ்தான பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளரிடம் அனுப்பியிருந்தேன் ! ஏற்கனவே சொன்ன விஷயம் தான் ; but worth repeating again : கடந்த 19 ஆண்டுகளாய் நமது பிரெஞ்சுக் கதைகளின் சகலத்தையும் ஆங்கிலப்படுத்தித் தரும் அசாத்திய ஆர்வலர் கோவையைச் சேர்ந்த அந்தக் குடும்பத் தலைவியே !! அவரது வசதிக்கும், அந்தஸ்திற்கும், நாம் தந்திடும் பீற்றல் சன்மானத்துக்கு 'மாங்கு-மாங்கென்று' பக்கம் பக்கமாய் எழுதித் தள்ளிடும் அவசியங்கள் கிஞ்சித்தும் கிடையாது ! ஆனால் கடந்த 2 தசாப்தங்களில் இதனை தனது அன்றாடத்தின் ஒரு அங்கமாக்கி அசத்தி வருகிறார் ! அனுப்பிடும் கதைகளை 'லொஜக்-மொஜக்' என்று மொழிபெயர்த்து அனுப்பிடுவதே பொதுவாய் அவரது வாடிக்கை ! ஆனால் கடந்த மூன்றாண்டுகளாய் தனது அபிப்பிராயங்களை அவ்வப்போது நாசூக்காய் வாட்சப்பில் கோடிட்டுக் காட்டிடுவது நிகழ்ந்து வருகிறது !
எல்லாம் ஆரம்பித்தது டிடெக்டிவ் ஜெரோமின் ஒரு சமீபத்துப் பணியிலிருந்து ! "தற்செயலாய் ஒரு தற்கொலை" இதழில் நாம் இந்த முட்டைக்கண் டிடெக்டிவை சந்தித்திருந்தது நினைவிருக்கலாம் ; and கதையின் மையக் கரு சற்றே முகம் சுளிக்கச் செய்யும் ரகத்தில் இருந்ததுமே நினைவிருக்கலாம் ! So அடுத்த ஆல்பமுமே இதே சிக்கலை நமக்குத் தந்திடலாகாதே என்ற முன்ஜாக்கிரதையில் - ஜெரோமின் அடுத்த பணிக்கொரு கதைச் சுருக்கம் கோரியிருந்தேன் ! தற்செயலாய் நான் அதைக் கேட்டு வைத்ததும் நல்லதாகப் போயிற்று because அந்தக் கதையும் ஒரு தினுசான plot சகிதமிருந்தது ! அன்றைக்கு முதல் ட்யுராங்கோ ; ரிப்போர்ட்டர் ஜானி ; சிக் பில் ; XIII போன்ற ரெகுலர் கதைகள் நீங்கலாய் புதுசுகள் ; one-shots ; கிராபிக் நாவல்களுக்கெல்லாமே அவரது அபிப்பிராயங்களை மேலோட்டமாய்க் கேட்டுக் கொள்வதை வழக்கமாக்கியிருக்கிறேன் ! அதற்காக அவர் "இதைப் போடுங்கோ ; இதைப் போடாதீங்கோ !" என்ற ரீதியில் வழிகாட்டலெல்லாம் செய்திடுவதில்லை ! "இன்ன மாதிரி...இன்ன மாதிரி கதை ஓடுது...இன்ன மாதிரி..இன்ன மாதிரி முடியுது !" என்று சொல்வதோடு நிறுத்திக் கொள்வார் ! So இறுதியாய்த் தீர்மானிப்பது எனது gutfeel மாத்திரமே !
And true to form - "இளம் டைகரின்" ஆல்பங்களை வாசித்த கையோடு எனக்கு போன் அடித்தார் ! மாமூலான குசல விசாரிப்புகளுக்கு மத்தியில் 'அட...என்ன விஷயமோ ?' என்ற குறுகுறுப்பு என்னுள் ! சட்டென்று விஷயத்துக்கு வந்தவர் - "இந்தக் கதைகளை எழுத ஆரம்பிக்கலாமா ?" என்று கேட்டார் ! ஒரு மெல்லிய தயக்கம் அவரது தொனியில் தென்பட்டது என் கவனத்தைத் தப்பவில்லை ; "ஏன்...ஏதேனும் நெருடுகின்றதா கதைகளில் ?" என்று படபடப்பாக நான் கேட்க - "வறட்சியாய் அந்த வடக்கு-தெற்கு உள்நாட்டுப் போர் தான் நெடுகப் பயணிக்கிறது !" என்றார் சுரத்தே இன்றி ! ; "அப்புறம் டைகர் திடீரென குட்டி-புட்டி-என சகலத்தையும் துறந்து மிஸ்டர்.க்ளீன் ஆகிடுவது ஒரிஜினல் கதாபாத்திரத்தின் தன்மையிலிருந்து விலகி நிற்பது போலவும் படுகிறது !" என்றும் சொன்னார் ! வயிற்றைக் கலக்குவது போல் இருந்தது எனக்கு ; அதே நேரம் ஜோட்டாவால் என்னையே சாத்திக் கொள்ள வேண்டும் போலவும் இருந்தது ! Simply becos 2016-ன் ஒரு உறக்கம் வரா வாரயிறுதியில் இந்த இளம் டைகர் தொடரின் எஞ்சி நிற்கும் ஆல்பங்கள் பற்றி இன்டர்நெட்டில் உருட்டோ உருட்டென்று உருட்டித் தள்ளியிருந்தேன் ! And நமது மொழிபெயர்ப்பாளர் தயங்கித் தயங்கி சொல்ல முனைந்த விஷயங்கள் யாவுமே உலகளாவிய டைகர் ரசிகர்களின் ஆதங்கக் குரல்களில் அன்றைக்கே கேட்டும் இருந்தேன் ! டெலிபோனில் நான் கேட்டுக்கொண்டிருந்த சமாச்சாரம் சகலமுமே எனக்குப் புதிதல்ல ! So 2016 முதலாய் "இளம் டைகர்" என்ற தலைப்பினை யார் துவக்கிட்டாலும் 'ஹி..ஹி..' என்றபடிக்குக் கழன்று கொள்வதையே வாடிக்கையாக்கியிருந்தேன் - 2019-ன் ஆகஸ்டின் ஒரு தன்னிலை மறந்த பொழுதுவரையிலும் !
டெக்ஸுக்கு டைனமைட் ; தனிச்சந்தா ; MAXI தடம் என்று ஏதேதோ செய்ய சாத்தியப்படும் போது இந்த இளம் டைகரின் compilation - டைகர் ரசிகர்களையும் குஷிப்படுத்தியது போலிருக்குமே என்ற உத்வேகத்தில் தலையை ஆட்டி விட்டேன் ! ஆனால் நமது மொழிபெயர்ப்பாளரின் தயக்கம் எனக்குக் குளிர் ஜுரத்தைக் கொணராத குறையாய் நடுங்கச் செய்தது ! மேலோட்டமாய்க் கதைச் சுருக்கங்களை வாசிப்பது ; இன்டர்நெட்டில் விமர்சனங்களை அலசுவது என்பதெல்லாம் ஒருபக்கம் ; ஆனால் கதைகளை முழுமையாய், தெளிவாய்ப் படிப்பதென்பது இன்னொரு விஷயமன்றோ ? அதிலும் கடந்த 19 ஆண்டுகளாய் நம் ரசனைகளோடே பயணம் செய்பவருக்கு எவை சுகப்படும் ? எவை சுகப்படாது ? என்று தெரியாது போகுமா - என்ன ? So கடந்த ஒன்றரை மாதங்களாய் நான் தலைக்குள் பிசைந்து வரும் மாவு இதுவே :
- கதாசிரியர் சார்லியே & ஓவியர் ஜிரோ - பிரான்க்கோ-பெல்ஜியப் படைப்புலகில் ஜாம்பவான்கள் என்பதில் உலகுக்கே மாற்றுக் கருத்துக்கள் கிடையாது ! அவர்களது கூட்டணியில் உருவான கேப்டன் டைகர் கதைகள் கௌபாய் கதைத்தொடர்களுக்கென நிர்ணயித்துள்ள அளவுகோல்கள் இமயத்தின் உசரம் ! So அந்தப் பிதாமகர்கள் மறைந்த பிற்பாடு, கதைப் பொறுப்பை கையில் எடுத்திருக்கக்கூடிய writers அசாத்தியத் திறமைசாலிகளாக இருந்தாலுமே - அவர்கள் சதா நேரமும் போட்டி போட்டிட வேண்டியது இரு அசுரர்களின் நிழல்களோடு என்பதில் தான் சிக்கலே துவங்கிடுகிறது ! உச்சக் கதைகள் சகலத்தையும் மொத்தமாய் ரசித்தான பின்னே, "டைகர்" எனும் ஒரு ராட்சச பிம்பத்தை உள்ளுக்குள் உருவாக்கிக் கொண்டான பிற்பாடு, நார்மலான கதைகளை ரசிப்பது எவ்விதமிருக்குமோ ? என்ற பயமே என்னை வாட்டுகிறது !
- அதிலும் நார்மல் இதழ்களாக அன்றி, முன்பதிவுக்கான ; குறைந்த பிரிண்ட் ரன்னுடனான இதழ் எனும் போது கிட்டத்தட்ட ரூ.1350 விலையில் வெளியாகிடக்கூடிய சமாச்சாரம் இது ! இந்த விலைக்கேற்ற நியாயம் செய்திட சார்லியேவுக்குப் பின்னான கதைகளுக்கு இயன்றிடுமா ?
- "பிஸ்டலுக்குப் பிரியாவிடை" பரிச்சயமில்லா ஒரு கேள்விக்குறியாய் போன ஆகஸ்டில் களமிறங்கி, பெரும் ஆச்சர்யக்குறியாய் சீக்கிரமே சாதித்துக் காட்டியிருக்கும் சூழலில், அதன் அடுத்த "ஈரோட்டு ஸ்பெஷல்" மீதான எதிர்பார்ப்பும் பன்மடங்கு இருக்குமே ?
- And more than anything else - இந்தப் "பிரத்யேக இதழ்கள் - முன்பதிவுகள்" என்ற concept மெகா ஹிட்களாய் அமைந்தாலன்றி, அந்த முயற்சியின் முக்கியத்துவமே குன்றிடும் அல்லவா ?
இவையே என்னை உலுக்கிடும் வினாக்கள் !
On the other hand - "அதெல்லாம் எனக்குத் தெரியாது ; எது எப்புடி இருந்தாலுமே ஆடலும், பாடலும் போட்டே தீரணும் ! அது சரியா இல்லாங்காட்டி அப்புறமா உன்னெ துவைச்சுத் தொங்கப்போட்டுக்குறோம் ! இப்போதைக்கு ஆசை காட்டி மோசம் பண்ணினா கண்ணை நொண்டிப்புடுவோம் - கபர்தார் !" என்று கண்சிவக்க டைகர் ஆர்வலர்கள் தயாராக இருப்பர் என்பதும் புரிகிறது ! "காமிக்ஸ் நேசம்" எனும் சங்கதிகளில் அவரவரது பிடிவாதங்கள் ; கண்சிவத்தல்கள் தான் எத்தகையது என்பதை எண்ணற்ற தருணங்களில் தரிசித்திருக்கிறேனே ?!! Logic என்பதெல்லாம் லாலிப்பாப்புக்கு கூடப் பெறாது அத்தருணங்களில் என்பதில் எது இரகசியம் ?! So தொண்டை கிழிய யதார்த்தங்களை இங்கே முன்வைக்க நான் முனைந்தாலுமே, no escaping the great மண்டகப்படி !! என்பது புரிகிறது !
"அப்படியே அண்ணாச்சி கிழிக்கிறது எல்லாமே மெகா ஹிட்டா தான் கிழிப்பாராம் !! தெரியாதாக்கும் எங்களுக்கு !! அடப் போவியா ??" என்ற ரௌத்திரங்கள் மண்டகப்படி நிகழ்த்திடும் முனைப்பிலிருப்போரின் சிந்தைகளில் நிழலாடிடும் என்பதை யூகிக்க முடிகிறது ! ஆனால் சற்றே பொறுமையாய்ப் பின்னோக்கிப் போயின் - "ஜெரெமியா" நீங்கலாய் ஹிட்டாகிடா ஸ்பெஷல் இதழ்கள் நமது சமீபத்தைய பட்டியலில் லேது என்பது புரியும் ! அந்த வாடிக்கையைத் தொடர்ந்திடும் அவாவே இன்றைக்கு என்னைத் திருத் திருவென முழிக்கச் செய்து வருகிறது !
Make no mistake - இவை ஒரு மார்ஷல் டில்லானோ ; ஒரு கமான்சேவோ வலம் வந்திடும் தொடரின் கதைகளாக இருப்பின், துளித் தயக்கமும் இன்றி அறிவிப்பு-முன்பதிவு என்று மூட்டைகளை எப்போதோ பிரிக்கத் துவங்கியிருப்போம் ! ஆனால் "டைகர்" எனும் ஒரு பிரான்க்கோ-பெல்ஜிய அசாத்தியருக்கு இந்த வீரியங்கள் ஒரு மிடறு குறைவாகத் தென்படுமே என்பதே எனது கவலை ! பற்றாக்குறைக்கு ஒரிஜினல் கதாசிரியரின் விலகலுக்குப் பின்பாய், உச்சம் கண்ட தொடர்களுமே கூட டாஸ்மாக் காதலனைப் போலத் தள்ளாடுவதை ஏற்கனவே XIII-ன் சமாச்சாரத்திலும், இப்போது லார்கோவின் தொடரிலும் பார்த்திடும் அனுபவம் நமக்குள்ளதே ! அந்த மிரட்சியும் சேர்ந்து கொண்டு என்னை விடிய விடிய வாட்டுகிறது !
இந்த பிராஜெக்டை இன்றைக்கே நான் ஒத்தி வைத்தால் - டைகரின் diehard ரசிகக் கண்மணிகளின் கரங்களால் சுடச் சுட "சப்பல்ஸ் சூட்டுவிழா" அரங்கேறிடும் என்பதில் no secrets ! அதே சமயம் இதனை நிஜமாக்கி, ரூ.1350+ விலையில் ஈரோட்டுக்கு ஸ்பெஷல் இதழாகக் கொணர்ந்திடும் பட்சத்தில் - வாங்கிடும் / வாசித்திடும் அத்தனை பேரிடமும் ஏகோபித்த துடைப்பப் பூசை கிட்டிடும் என்பதையும் கணிக்க முடிகிறது !
இந்த நொடியில் பள்ளிக்கூடத்தில் ஒரு குறுந்தாடியை ஒட்டிக் கொண்டு இங்கிலீஷ் டிராமாவில் நான் பேசிய ஷேக்ஸ்பியரின் "ஹாம்லெட்" வசனம் தான் நினைவுக்கு வருகின்றது :
"To be, or not to be, that is the question !"
"இன்றைய சப்பல்ஸ் முடிசூட்டுவிழாவா ? ஆகஸ்டின் துடைப்பத் திருவிழாவா ?"
மத்தளம் கொட்டி உங்களின் கடுப்புக்களைக் கொஞ்சமாய்த் தணித்துக் கொண்டான பிற்பாடு, இதற்கு என்ன தான் தீர்வென்று சற்றே சாந்தமாய் சிந்திக்கத் தயாராகிடும் பட்சத்தில் - this is what I have to propose :
"பிரேத்யேகம் ; முன்பதிவு ; பெரிய விலைகள் ; பெரும் எதிர்பார்ப்புகள்" என்ற நான்கு சமாச்சாரங்களும் கைகோர்க்கும் போதே ஒவ்வொரு முறையும் திரையில் ஒரு "பாட்ஷா" விரிந்திடும் அவசியம் அரூபமாய்த் தலைதூக்குகிறது ! மாறாக - "ரெகுலர் தடம் ; எல்லோருக்குமே ; சிறு விலைகள்" என்ற முக்கூட்டணி சேர்ந்திடும் போது "பெரும் எதிர்பார்ப்புகள்" என்ற மாயை காணாது போய்விடக்கூடும் அல்லவா ? So 2021-ன் சந்தாவினில் "சந்தா T" என்று ஒரு சமாச்சாரத்தை கொணர்ந்து, மாதமொரு அத்தியாயம் என எஞ்சியிருக்கும் 12 பாகங்களையும் ஒரே ஆண்டில் போட்டுத் தள்ளினால் என்ன ? 1975-ல் துவக்கம் கண்ட இந்த "இளம் டைகர்" தொடரின் 21 ஆல்பங்கள் வெளியாகிட 40 ஆண்டுகள் அவசியப்பட்டுள்ளது ஒரிஜினல் பிரெஞ்சில் ! ஆயுளின் பாதிக்கு மேலான காத்திருப்பையே ஏற்றுக் கொண்டுள்ள பிரெஞ்சு டைகர் ரசிகர்களின் அளவுக்கு அதீதப் பொறுமைசாலிகளாய் நாமிருக்கும் அவசியங்கள் இராதே ; பன்னிரெண்டே மாதங்களில் முழுச் சுற்றும் நிறைவுற்றிருக்குமே !! Rs.80 x 12 albums = Rs.960. What say guys ? இது OPTION : A
(Maybe ..just maybe இவை black & white-ல் வெளியானால் கூட ஓ.கே தான் எனின் மாமூலான, ரெகுலரான ரூ.80 விலைக்குமே குறைவாய் விலை நிர்ணயம் செய்து - பெருசாய் பர்ஸைப் பதம் பார்க்காத விதமாய் வெளியிடவும் திட்டமிடலாம் ! ஆனால் "குப்பனுக்கும், சுப்பனுக்கும் கலர் போடுவே ; எங்காளுக்கு black & white-ஆ ?" என்று என் சங்கை வாஞ்சையோடு ருசிக்க டைகரணி பாய்ந்திடும் என்பதால் டிக்கியை க்ளோஸ் செய்து கொள்கிறேன் கருப்பு-வெள்ளை முன்மொழிவினில் !)
So சந்தா T ; மாதமொரு பாகம் ; வண்ணத்தில் ; ரூ.80 விலையில் - 12 books என்ற இந்த சிந்தனைக்கு மாத்திரம் உங்களின் reactions ப்ளீஸ் !
"சரி, ஈரோட்டுக்கு டைகர் சுகப்படாதெனில் அதனிடத்தில் வேறென்ன போட உத்தேசம் ?" என்ற கேள்வி "எதை போட்டாலும் படிப்போம்" அணியினரின் உதடுகளில் துளிர்விடுவதையும் யூகிக்க முடிகிறது !
*கென்யா
*ஒரு புது டிடெக்டிவ் ஸ்பெஷல்
*Ars Magna
*ஒரு அமெரிக்க க்ரைம்-த்ரில்லர்
*ஒரு sci -fi ஸ்பெஷல்
*ஒரு லவ் ஸ்டோரி ஸ்பெஷல்
என்று ஏகப்பட்ட choice உள்ளது !
Of course - டெக்சின் ஸ்பெஷல் இதழ்களும் கைவசம் உள்ளன தான் ! ஆனால் "டைகரைக் கழற்றி விட்டதே அதிகாரியை உட்புகுத்தத்தான் !!" என்று செம காண்டாகிப் போய் என்னை காத்தைச் சேர்த்து அறைய பெரும் போட்டியே அரங்கேறிடும் என்பதால் - strictly a no-no to TEX for ஈரோடு ஸ்பெஷல் 2020 !!
So மேலுள்ள ஆறில் ஏதேனும் இரண்டைக் களமிறக்கலாம் !!
Letting of steam இன்றைக்கும், தொடரும் சில நாட்களுக்கும் தவிர்க்க இயலா விஷயமாகிடும் என்பது புரிகிறது ! கடுப்பினில் - "அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது ! கொஞ்ச புக்னாலும் பிரிண்ட் பண்ணி கையிலே தந்து தொலையேன் !! படிச்சா ஒரே பாகமாய் தான் படிக்கணும் " என்று விடாப்பிடியாய் last try வினாக்கள் எழும் என்பதையும் யூகிக்க முடிகிறது ! அதுவே பெரும்பான்மையின் எண்ணமாய் இருப்பின், ஈரோடு எனும் occasion-ஐ skip செய்து விட்டு, முன்பதிவுகள் சேர்ந்திடவும், பணியாற்றவும் கூடுதலாய் அவகாசம் கொடுத்து தீபாவளிக்கென ; அல்லது சென்னைப் புத்தக விழாவுக்கென முன்பதிவு இதழாக்கிடலாம் - "400" எனும் முன்பதிவு நிர்ணயத்தோடு ! நானூறை முன்பதிவினில் விற்றிட இயன்றால் இன்னொரு நானூறை எப்பாடுபட்டேனும் ஆன்லைனில் ; ஏஜெண்ட்களிடம் ; சென்னை புத்தக விழாக்களில் என்று காலி பண்ணிட முனைந்திடலாம் ! குரல்வளையை நெறிக்கும் விலையினை இயன்றமட்டிலும் தவிர்க்கவும் முனைந்திடலாம் ! இது OPTION : B !
இதற்கொரு offshoot நிச்சயமாய் இருக்குமென்பதையும் இங்கே யூகிக்க சிரமுமில்லை !!
"அட்றா சக்கை...அட்றா சக்கை...இதே பாணியில் XIII spin-offs ஒரு பிரத்யேக இதழாய் வேணும் !!" ; "ஆர்ச்சியும், ஸ்பைடரும், மாண்ட்ரேக்கும், துப்பறியும் சாம்புவும் ; காக்கா காலியாவும் ஒரு ஸ்பெஷல் இதழாய் வேணும் !!" என்ற ரீதியிலான கோரிக்கைகள் ஒலிக்காது போகாதென்பதும் புரிகிறது ! ஈரோட்டில் வாயை விட்டு, ஆசை காட்டியது என் தவறே என்பதால் அதன் பொருட்டே இந்த OPTION B எனும் பரிகார முன்மொழிவு ! If at all it happens - this will certainly be just an one-off !! ஆகையால் இதனை முன்னுதாரணமாக்கிடும் கோரிக்கைகள் மேற்கொண்டு வேண்டாமே ப்ளீஸ் ! சத்தியமாய் சக்தியில்லை - !
OPTION C : "இன்றைய பட்ஜெட்டில், இதுக்கு மேலே எங்க பையிலே டப்பு இல்லை ! அடுத்த வருஷமோ, அப்புறமோ பாத்துக்கலாம் ! டைகரும் ஓடிப் போகப் போவதில்லை ; நாங்களும் இங்கேயே தான் இருப்போம் ! இந்த பிராஜெக்டைத் தற்காலிகமாய் ஒத்தி வைக்க ஓகே. !! " இதுவே உங்கள் மைண்ட்-வாய்சாய் இருப்பின், அதைக் குறிப்பிட்டும் பின்னூட்டமிடலாம் ! Will be the voice of practicality !
A ? B ? C ? உங்கள் தேர்வென்னவோ guys ?
இங்கே பொதுவெளியில் உங்களின் தீர்மானங்களை வெளிப்படுத்துவது தேவையில்லா சர்ச்சைகளை கொணரும் என்று நினைத்திடும் பட்சத்தில்
lioncomics@yahoo.com க்கு ஒரு மின்னஞ்சல் மட்டும் தட்டி விடலாம் - வெறுமனே 'A' என்றோ ; 'B' என்றோ ; 'C' என்றோ குறித்து !!
"கபாலத்தைப் பிளப்பது first ; பாக்கியெல்லாம் next !" என்ற வேகத்திலிருக்கும் நண்பர்களையோ ; "கதைகளை படிக்காம நீ எப்படி அறிவிக்கப் போச்சு ? அந்த மொழிபெயர்க்கிற அம்மா சொன்ன உடனே நீ முருங்கை மரத்திலே ஏறிடுவியாக்கும் ? உனக்கா சொந்தப் புத்தி கிடையாதா ? எதிர்காலத்திலே இன்ன மேரி..இன்ன மேரிலாம் நீ நடந்துக்கணும்..ரெண்டுவாட்டி பல் விளக்கணும்...பொம்மை படம் போட்ட சட்டைலாம் போடப்படாது ! காலர் இல்லாத பனியன் போடப்படாது !..புரிஞ்சுதா ?!" என்று விளக்கவுரை வழங்கிடும் துடிப்பிலிருக்கும் நண்பர்களையோ ; "அல்லாம் புரியுது ; ஆனாலும் உன்னெ குமட்டில் குத்தணும் போலவே கீது !" என்று சொல்ல விழையும் நண்பர்களையோ நான் தடுத்திட மாட்டேன் !
விளக்க வேண்டிய சகலத்தையும் விளக்கி முடித்து விட்டதால் - இனி டபுள் கொட்டு வாங்கிக்க கிரவுண்டில் நிற்கும் வடிவேலைப் போல காத்திருப்பது தானே எனது பணி ? வேட்டைக்கான சீசன் ஆரம்பிச்சாச்சு folks ; ஜமாயுங்கோ !!
P.S : சாத்தி முடித்த பிற்பாடு கொஞ்சமே கொஞ்சமாய் 'தம்' மிஞ்சி இருக்கும் பட்சத்தில் - நெட்டில் LA JEUNESSE DE BLUEBERRY என்று மட்டும் டைப் அடித்து, இந்த இளம் டைகர் தொடரின் அலசல்களின் ஆங்கில மொழியாக்கங்களை தேடிப் படித்துப் பாருங்களேன் - ப்ளீஸ் ?! நிலவரம் ஸ்பஷ்டமாய்ப் புரிந்திடக்கூடும் ! இதை என் தரப்பின் வக்காலத்தாய்ச் சொல்வதல்ல என் நோக்கம் ; மாறாக A ? B ? C ? என்ற கேள்விக்கு விடையளிக்க உங்களுக்கு உதவிடும் கருவியாகிடக்கூடுமே என்ற எண்ணத்திலேயே சொல்கிறேன் ! Bye all ; see you around !!