Powered By Blogger

Sunday, July 31, 2016

"பில்டப்" எனும் கத்தி...!

நண்பர்களே,

வணக்கம். "உலகத்தொலைக்காட்சிகளில் முதன்முறையாக" என்று நீளமாய் இழுக்கும் போதே அவர்களுக்கு நிறைய நேரங்களில் தெரிந்திருக்கும் - அது தியேட்டரில் ஈயோட்டிய சமீபத்துப் படமென்று ! இருந்தாலும் ஒரு பில்டப் தேவையல்லவா ? அதே போலத் தான் - நீங்கள் நடுமூக்கில் 'நச்சென்று' குத்துவீர்களென்று யூகிக்கக் கூடிய கதைகளின் முன்னுரைகளின் போதும் கூட  - "அமெரிக்காவிலே மைக்கேல் ஜாக்சன் பாராட்டுனாங்கோ ; ஜப்பானிலே ஜாக்கி சான் பாராட்டுனாங்கோ !" என்று நான் சிலாகிப்பதும் வழக்கம். (அப்புறமாய் கூடுதல் வேகத்தோடு நீங்கள் மூக்கை பங்ச்சர் பண்ணுவீர்கள் என்பதெல்லாம் வேறு மேட்டர் & "கதை பேஸ்தடிக்கிறதே!"  என்று நானாய் கதையை மாற்றினால் அதற்கும் குமட்டில் குத்து விழுவது முற்றிலுமாய் வேறு மேட்டர் !) 

On the flip side - எப்போதாவது சில தருணங்களில் - ஒரு கதையினில் பணியாற்றிவிட்டு வெளியேறும் போதே மனசு சொல்லும் - "பீப்பீ ஊதினாலும், ஊதாவிட்டாலுமே இந்த முயற்சி உறுதியாய் ஹிட்டடிக்கப் போகிறதென்று" ! அந்த நிமிடத்தில்  மண்டைக்குள் சின்னதாயொரு ஆதங்கம் ஓடும் -"சே...சரக்குள்ள இந்தக் கதையை மெய்யாக சிலாகித்தாலும் கூட  ....அட போப்பா...வழக்கம் போல் நீ விடும் பீலா தானே ?" என்ற எண்ணம்தான் உங்களிடையே மேலோங்குமே என்று !! "பில்டப்" எனும் கத்திக்கு - கூரான இரு முனைகளுண்டு என்பது அப்போதுதான் அழுத்தம் திருத்தமாய் பதிவாகும் சிந்தைக்குள் ! 

But அந்தத் தயக்கங்களைத் தாண்டி -  ஒருசில கதைகளைத் தலையில் தூக்கிக் கொண்டு கரகாட்டம் ஆடத் தோன்றும் ! பணியாற்றும் போது தலையெல்லாம் நோவுவது போல் தோன்றினாலும், "முற்றும்" என்று போடும் தருணம் மனதுக்குள்ளே ஒரு சின்ன ஏக்கம் குடிகொண்டிருக்கும் - "இந்த ப்ராஜெக்ட் முடிந்தே விட்டதே !!" என்று ! And பெரும்பாலுமே அவை ஏதேனும் ஒரு low key நாயக / நாயகியின் just like that சாகஸமாக அமைந்து விடுவதுண்டு! அத்தகையதொரு rare அனுபவத்தை உணரும் யோகம் வாய்த்தது கடந்த வாரத்தினில் ! 

ஆகஸ்ட் இதழ்களில் black & white இதழைக் கடைசியாய்ப் பார்த்துக் கொள்ளலாம் என்ற தெனாவட்டில் - கலர் இதழ்கள் அனைத்துக்கும் முன்னுரிமை கொடுத்து விட்டு மர்ம மனிதன் மார்ட்டினைப் 'போனால் போகுது' என்று போன ஞாயிறு மாலைதான் சாவகாசமாய்க் கையில் எடுத்தேன் ! 220 பக்கக் கதை என்பதால் தூக்கும் போதே அதன் கனம் ஒரு சின்ன நெருடலை ஏற்படுத்தியது ! முறையான homework இல்லாது மார்ட்டினைக் கையில் பிடித்தால் வழிநெடுக தர்மஅடி விழுமென்பதை அனுபவத்தில் உணர்ந்தவன் என்பதால் - "ஆஹா...கொஞ்சம் ரொம்பவே மெத்தனமாய் இருந்து விட்டோமோ ?" என்ற உதறல் லேசாய்த் தோன்றியது ! பற்றாக்குறைக்கு இந்தக் கதையினை இந்தாண்டின் துவக்கத்தினில் நமது மொழிபெயர்ப்பு டீமில் இடம்பிடித்ததொரு புதுவரவிடம் ஒப்படைத்திருந்தேன் ! அவரும் அப்போதே பணியினை நிறைவு செய்து அனுப்பியிருக்க, மேலோட்டமாய் புரட்டி, படம் பார்ப்பதைத் தாண்டி  சீரியஸான கவனம் எதையும் அதன்பக்கம் நான் தந்திருக்கவில்லை  ! ஞாயிறு மாலை கதைக்குள் புகுந்த போது வழக்கமானதொரு மார்ட்டின் பாணி நூடூலாப்பத்தை எதிர்பார்த்தே தயாராகயிருந்தேன் ! ஆனால் surprise ! surprise !! மாமூலான மண்டைக் கிறுகிறுப்புகளுக்கு அதிக அவசியமின்றி - வித்தியாசமானதொரு பாணியில் கதை நகன்று கொண்டிருந்தது ! ஆனால் புதியதொரு மொழிபெயர்ப்பாளரிடம் இதனை பணியாற்றத் தந்ததன் பிழையினை கொஞ்சம் கொஞ்சமாய் உணரத் தொடங்கினேன் !   நிச்சயமாய் அவரைச் சொல்லித் தவறில்லை ; மார்டினை முதல்முறையாக வாசிக்கும் அவருக்கு இந்தத் தொடரின் பயணப் பாதையைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதானே ?!  கொஞ்சம் திருத்தங்கள் செய்ய ; அதற்குள்ளேயே மாற்றி எழுத முயற்சிக்க என்று சில பல மணிநேரங்கள் மல்யுத்தம் நடத்திப் பார்த்ததில் ஞாயிறு மாலைப் பொழுது  காலாவதியானது தான் மிச்சம் ! நண்பர்கள் செனா.அனா. வோ ; கார்த்திக்கோ ; ஆத்தர் ஆதியோ  முயற்சித்திருக்க வேண்டிய கதை இது என்பது கொஞ்சம் தாமதமாய்ப் புரிந்தது !  சரி, இது வேலைக்கு ஆகாது - மரியாதையாய் புதுசாய் எழுதிவிடலாம் என்று புகுந்தேன் திங்கட்கிழமை முதல் ! வீராப்பாய் வேலையை ஆரம்பித்த பின்னர் தான் புலனானது  - எனக்கு முன்பாய் இந்தக் கதையை எழுதியவர் எத்தனை பாடுபட்டிருப்பார் என்று  !! வழக்கம் போல் வரலாறு + விஞ்ஞானம் என்ற combo -வில் கதை வேகம் பிடிக்க, ஒருபக்கம் தமிழ் அகராதியையும், இன்னொரு பக்கம் இன்டர்நெட்டையும் உருட்டிக் கொண்டே வேலைக்குள் தட்டுத் தடுமாறிக் கொண்டிருந்தேன் ! 

"கற்பனை" என்ற 4 எழுத்துக்களுக்குள் நாம் படக்கென அடைத்து விடும் ஒரு சமாச்சாரத்தின் முழுப் பரிமாணத்தையும்  கதாசிரியரின் புண்ணியத்தில் பார்க்க சாத்தியமாக - ஒரு மறக்க இயலா rollercoaster சவாரி போன உணர்வு தான் எனக்கு ! சமீபமாய் நாம் வெளியிட்ட மார்ட்டின் கதை எதுவுமே இந்த நீளம் கொண்டதல்ல + சித்திரங்களிலும் இது அசாத்திய ரகம் என்பதால் - பணியின் பளுவையும் தாண்டி, கதையின் சுவாரஸ்யம் என் தலைக்குள்ளேயே குடிகொண்டு நின்றது ! மார்ட்டினை ஒரு காதல் கணவனாய் ; குற்றவுணர்வு பீடித்ததொரு சராசரி மனிதனாய் ; பயத்தில் உறைந்து போயிருக்கும் ஒரு சாமான்யனாய் ; குழம்பிய குட்டையின் மத்தியில் தெளிந்த நீரோடையாய் - ஏராளமான ரூபங்களில் இந்தக் கதையினில் நாம் சந்திக்கவிருக்கிறோம் ! And கிளைமாக்சில் ஒரு மெல்லிய human touch தந்திருக்கும் கதாசிரியரின் லாவகத்தை நான் ரொம்பவே ரசித்தேன் ! ஒருவழியாய் நேற்று மாலை பணியினை நிறைவு செய்த போது - எனக்குள் ஒரு சன்னமான திருப்தி + மெல்லியதொரு ஏக்கமும் ! ஒரு சவாலான கதைக்கு இயன்றதைச் செய்தது திருப்திக்கு காரணமெனில் - இது போன்ற கதைகளை மாமாங்கத்துக்கு ஒருமுறை மாத்திரமே கையாள இயல்கிறதே என்பது ஏக்கத்தின் காரணம் ! இந்தக் கதையைப் படித்து விட்டு வழக்கம் போல் ஓரணி - "தலையும் புரியலை ; வாலும் புரியலைடா சாமி !" என்று கலாய்ப்பார்கள் என்பது எதிர்பார்க்கக் கூடியதே ! ஆனால் கரம் மசாலா மணம் கம கமவென்று வீசிடும் அடுக்களையில் எப்போதோ ஒருமுறை எழும் இதுபோன்ற சற்றே மாறுபட்ட சுகந்தங்களை ரசிக்கவும் இன்னும் கொஞ்சம் வாய்ப்புகள் கிட்டின் ரம்யமாக இருக்குமே என்று பட்டது ! Anyways - "இனி எல்லாம் மரணமே" உங்களிடம் வாங்கக் காத்திருக்கும் மதிப்பெண்கள் என்னவாக இருக்குமென்று அறியத்  துடிப்பாக உள்ளது ! அடியேனின் இந்த "ஆஹா-ஓஹோ படலம்" காதுலே புய்ப்பமல்ல  ! என்பது உறுதியாயின் - பிழைத்தேன் !! இல்லையேல் - இருக்கவே இருக்கு கன்னத்து மருவும்....பீஹாரும் !! 

நாளைய தினம் மார்ட்டின் அச்சுக்குச் செல்ல வேண்டியதுதான் பாக்கி ; மீத இதழ்கள் எல்லாமே பிரின்டிங் முடிந்து பைண்டிங்கில் உள்ளன ! So சனி காலையில் உங்கள் எல்லோரது கைகளிலும் ஆகஸ்ட் கத்தை கிட்டிடுவதில் தடையிராதென்று நம்புகிறேன் - கூரியர் நண்பர்கள் மனது வைத்தால் ! 

Looking ahead - TEX கிளாசிக் இதழுக்கான கதைத் தேர்வினில் இங்கே முன்னும், பின்னுமாய் ஏகப்பட்ட அபிப்பிராயங்கள் எழுந்திருந்ததை பார்த்தேன் ! "இரண்டு கதைகள் இணைப்பு" என்றதொரு அவா + அது தொடர்பாய் வெவ்வேறு கதைத்  தேர்வுகள் என்று நிஜமாகவே சுவாரஸ்யம் தந்த பின்னூட்டங்கள் நிறையவே ! ஆனால் வலைக்கு அப்பாலுள்ள நண்பர்கள் சிம்பிளாக தங்கள் தேர்வை "டிராகன் நகரம்" என்ற ரெட்டைச் சொற்களோடு நிறுத்திக் கொண்டுள்ளனர் ! எப்போதுமிலா அதிசயமாய் இந்த ஆறு நாட்களில் மின்னஞ்சல்களும், கடிதங்களுமாய்ச் சுமார் 50 பேரின் தேர்வுகள் வந்துள்ளன ! அவற்றைப் பரிசீலித்த போது - almost 80% விரல் நீட்டுவது டிராகன் நகரத்தை நோக்கியே !! பாக்கிப் பேரின் தேர்வுகள் "கழுகு வேட்டை" & "மரண முள்" இதழ்களுக்குள் இருந்ததால் எனது வேலை சுலபமாகிப் போய் விட்டது ! இதில் ஜாலியானதொரு முரண் என்னவெனில் - இங்கே வெவ்வேறு கதைகளுக்கு ஒட்டுப் போட்டுள்ள நண்பர்களில் சிலரும்கூட அங்கே டிராகன் நகரம் ஜிந்தாபாத் ! என்று குரல் கொடுத்துள்ளனர் ! So ABSOLUTE CLASSICS வரிசையில் முதல் hardcover மறுபதிப்பானது டிராகன் நகரத்தையே தாங்கி வரும் ! "மரணத்தின் நிறம் பச்சை " & இதர கதைகளுக்காகக் குரல் கொடுத்த நண்பர்கள் வருத்தம் கொள்ளத் தேவையில்லை - becos 2017-ன் சந்தா D-ல் உங்களுக்கு சந்தோஷங்கள் waiting ! "ம.நி.ப." எனக்குமொரு பால்யத்து favorite என்பதால் வண்ணத்தில் அதைத் தக தகக்கச் செய்ய நிச்சயம் விழைவேன் ! 
இரவுக் கழுகாரின்கீர்த்திகளைப் பற்றி பேசிக் கொண்டே போனால் காதில் தக்காளிச் சட்னி ஒழுகுவது நிச்சயம் என்று தெரிந்தாலும் - அவ்வப்போது காதில் விழும் செய்திகளை பகிராது போனால் தலைதான் வெடித்து விடுமே ?!! நாலைந்து நாட்களுக்கு முன்பாய் ஒரு பணியின் காரணமாய் பொள்ளாச்சி சென்றிருந்த போது நமது விற்பனையாளர்களை சந்தித்தோம் ! "டெக்ஸ்...டெக்ஸ்..டெக்ஸ்.." இதுதான் பெரும்பான்மை வாசகர்களின் தேர்வு என்று அவர் புன்னகையோடு சொல்ல, ஹி..ஹி..ஹி..என்று நானும் மண்டையை ஆட்டி வைத்தேன் ! பொள்ளாச்சியைச் சுற்றியுள்ள கிராமப்புற வாசகர்களும் டெக்ஸ் இதழ்களை மட்டும் தவறாமல் வாங்கிப் போகிறார்கள் என்றும் அவர் சொன்ன போது -  நமது மஞ்சள்சட்டைக்காரரின் வசீகரத்தை நூற்றியோராவது தடவையாய் எண்ணி வியப்பதைத் தவிர்த்து வேறெதுவும் தோன்றவில்லை ! "காமிக்ஸ் வெறியர்கள்" என்ற அடைமொழிக்குரியவர்களும் இங்கே நிறைய பேர் உண்டு என்று நம் முகவர் சொல்லும் போதே - நண்பர் ஜெயராம் புன்னகையோடு உள்ளே நுழைந்தார் ! (நினைவுள்ளதா - வாசக அட்டைப்பட டிசைனிங் முயற்சியில் கேப்டன் பிரின்சின் அட்டைப்படத்தை அழகாய் வடிவமைத்தவர் !) அவரும், டெக்ஸ் லாலி பாட...புயலுக்கு எல்லைகளே கிடையாதென்பது - for the umpteenth time புரிந்தது ! சாமி..கடவுளே....!! ஒருபக்கம் மார்ட்டின் போன்றோரின் சவாலான கதைக்களங்கள் தரும் ஏக்கங்கள் ; இன்னொருபக்கமோ இந்த கமர்ஷியல் ஜாம்பவானின் வசீகர ஆதிக்கம் !! இரண்டுக்குமிடையே ஒரு மத்திய நிலையைத் தேர்ந்து பயணிக்கும் திறனைக் கொடுங்கள் - ப்ளீஸ் !! என்றுதான் வேண்டி வருகிறேன் ! 

ஆக SUPER SIX இதழ் பட்டியலுள் அத்தனை மறுபதிப்புகளுக்குமான கதைகள் தேர்வாகிவிட்டபடியால் - எஞ்சி நிற்பது (புது) இதழான MILLION & MORE SPECIAL இதழுக்கான கதைத் தேர்வு மட்டுமே ! And ஆர்வமிகுதியால் போன ஞாயிறே சில பல REFRESH பட்டன்களைத் தேய்த்துத் தள்ளி - அந்த 2 மில்லியன் இலக்கை எட்டச் செய்த நண்பர்கள் இதுகுறித்து கூடுதல் ஆர்வத்தோடு காத்திருப்பார்கள் என்பது நிச்சயம் ! ஆனால் sorry guys - உங்களது காத்திருப்பு இன்னும் ஓரிரு தினங்களுக்குத் தொடர்வது தவிர்க்க இயலாது போகிறது ! புதிதாய் ஒரு கதைவரிசைக்கு முறையாய் நாம் விண்ணப்பித்துள்ளோம் -ஒன்றரை மாதங்களுக்கு முன்பாய் ! கதாசிரியர் ; ஓவியர் என எல்லோருமே "பெரிய பெயர்கள்" என்பதால்  நமது விண்ணப்பம்   அவர்களது பரிசீலனையில் இன்னமுமே உள்ளது  ! இந்த வாரத்திலேயே இறுதி முடிவு தெரிய வருமென்று அவர்கள் உறுதி சொல்லியிருந்த போதிலும் - கோடை விடுமுறையில் உள்ளதொரு டாப் நிர்வாகி இன்னமும் பணிக்குத் திரும்பவில்லை என்பதால் நம் காத்திருப்பு தொடர்கிறது ! புதன்கிழமைக்குள் நிலவரம் தெரிந்து விடுமென்பதே நிலவரம் ! நம் விண்ணப்பம் ஏற்கப்பட்டு இந்தக் கதைகளுக்கான உரிமைகள் கிட்டின் சூப்பர் ; அப்படியே இது சொதப்பினால் கூட 3 வெவ்வேறு options கையில் உள்ளன ! பொறுத்தது தான் பொறுத்தோம்  - இன்னுமொரு இரண்டோ , மூன்றோ  நாட்கள் மட்டும் பொறுத்துவிட்டால் முடிவெடுக்க ஏதுவாகிடுமே என்று பெவிக்காலை வாயில் தடவிக் காத்திருக்கிறேன் !  So மிகச் சிறியதொரு காத்திருப்பு மட்டுமே ப்ளீஸ் !!

சரி....முதலிடத்திற்கு நாம் அடிப்போட்டு வைத்திருக்கும் புதுத்  தொடரைப் பற்றி இப்போதைக்கு வாய் திறக்காவிடினும், அதற்கொரு மாற்றாய் லைனில் காத்து நிற்போரில் யாரேனும் ஒருவரைப் பற்றியாவது இந்த வாரம் கோடிட்டுக் காட்டுகிறேனே ! கொஞ்ச நாள் முன்பாகவே நமது அணிவகுப்பில் "மகளிரணியை" பலப்படுத்துவது பற்றிய சிந்தனை எனக்குள் ஓடிக்கொண்டிருந்தது ! "இளவரசி" என்று கொடிப் பிடிக்க ஒரு குட்டி அணி இங்கிருப்பினும், ஒரு முழு நீள ; முழு வண்ண female கேரக்டர் ஆழமான கதைக்களத்தோடு தேவை என்ற எண்ணத்தில் இங்கும் அங்குமாய் ஆந்தை விழிகளை சுழற்றிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் நமது CINEBOOK விற்பனை முயற்சியின் ஒரு அங்கமாய் - LADY S தொடரின் இதழ்கள் பல நம்வசம் வந்து சேர்ந்தன ! ஏற்கனவே முதல் 3 கதைகளை மேலோட்டமாய்ப் படித்திருந்தேன் - ஆனால் அது சில பல ஆண்டுகளுக்கு முன்பாக என்பதால் அந்நேரத்து நம் ரசனைகளுக்கு அது சரிப்படுமா - படாதா ? என்ற யோசனையில் ஒரு தீர்மானத்துக்கு வந்திருக்கவில்லை நான் ! இம்முறை சாவகாசமாய்க் கதைகளைப் பரிசீலனை செய்த போது - கதாசிரியர் வான் ஹாம்மே வின் வழக்கமான த்ரில்லர் treatment அழகாய் மிளிர்வதை உணர முடிந்தது ! லார்கோ வின்ச்சின் கதாப்பாத்திரம் போல - எந்தவொரு stereotype களுக்குள்ளும் அடங்காது - ஒரு சுதந்திரப் பறவையாய் செயலாற்றும் லேடி S முறையான கையாளல் இருப்பின் - நிச்சயமாய் நம்மை வசீகரிப்பார் என்று தோன்றியது ! கண்ணுக்கு குளிர்வான (!!!) சித்திரங்களும் ; வர்ணங்களும் இரு மேஜர் plus points எனும் போது - இந்தத் தொடரை சீரியஸாக நாம் பார்வையிடும் வேளை நெருங்கி விட்டதென்றே சொல்லுவேன் ! இதோ - இந்தப் பெண்மணியோடு அறிமுகமில்லா நண்பர்களின் பொருட்டு ஒரு குட்டி preview : 

சித்திரங்களில் சற்றே "காற்றோட்டம்" தூக்கலாய் இருப்பினும், கதைக் களம் முழுக்க முழுக்க ஆக்ஷன் சார்ந்ததென்பதால் - இங்கே பெரியதொரு சிக்கல் நேர்ந்திடாதென்ற தைரியம் உள்ளது ! and ஓவியர் பிலிப் ஐமாண்டின் சித்திர ஸ்டைல் - லார்கோவின் ஓவிய  ஜாடையில் இருப்பதால் - இந்தத் தொடருக்குள் சுலபமாய் நாம் புகுந்திட உதவும் என்றும் நினைத்தேன் ! அது மட்டுமன்றி - இந்தத் தொடர் துவங்கியதே 2004-ல் தான் எனும் போது - ரொம்பவே current -ஆக உள்ளதையும் உணர முடிகிறது ! இதுவரையிலும் 11 ஆல்பங்களே பட்டியலில் உள்ளன என்பதால் - சவ சவ என்று ஒரு தொடரை நாம் வருஷங்களாக இழுத்துக் கொண்டு தொடர இங்கே அவசியங்களும் இராது ! So - நமது first choice தொடர் மீதொரு positive பதில் கிட்டாது போயின் - மறுநிலையில் உள்ளோர்களில் LADY S ஒரு முன்னணி வேட்பாளர் ! தொடரும் நாட்களில் தெரிந்துவிடும் - யார் அதிகாரப்பூர்வ வேட்பாளேரென்று !

மகளிரணி பற்றிய செய்தியில் உள்ள போதே - இதோ இளவரசி பிரியர்களுக்கொரு ஜாலி நியூஸ் ! ABSOLUTE கிளாசிக் இதழான "கழுகுமலைக் கோட்டை" -க்கு வர்ணம் பூசிப் பார்க்கும் பரிசோதனைகளை இப்போது தான் துவங்கவிருக்கிறோம் ! ஒரிஜினல் பாக்கட் சைஸிலேயே - பக்கத்துக்கு 2 கட்டங்கள் மட்டுமே என்ற பாணியிலேயே இந்த இதழைத் திட்டமிட்டுள்ளோம் என்பது additional சேதி ! இதோ கலரில் இளவரசியின் ஒரு சாம்பிள் பக்கம் ! பணிகள் முறையாய்த்  துவங்கும் போது  இன்னமும் மெருகூட்டிட முயற்சிப்போம் - இது சும்மா ஒரு ஆரம்ப கட்டப் பார்வையே !
"கலரில் மகளிரணி" எனும் போது  - சமீபமாய்   நமக்கு வந்திட்ட  ஜூலியாவின் வண்ண ஆல்பத்தையும் பாருங்களேன் !  இது ஜூலியாவின் ஆல்பம் # 200-ன் பொருட்டு போனெல்லி முழு வண்ணத்தில் வெளியிட்டுள்ள சாகசம் ! சமீபமாய் அவர்களது குழும விற்பனையில் சக்கை போடு போட்டு வருகிறாராம் இந்த ஓல்லி பெல்லிப் பெண்மணி ! Maybe இவருக்குக்  கூடுதலாய் வாய்ப்பு தரும் வேளை நம்மிடையேவும் தொடரும் ஆண்டுகளில் புலருமோ ?
Before I sign off - ஈரோட்டுப் புத்தக விழாவின் சந்திப்புப் பற்றி ! வரும் வெள்ளிக்கிழமை புத்தக விழா தொடங்கிட - சனிக்கிழமைக் காலைக்கு (ஆகஸ்ட் 6-ம் தேதி) புத்தக விழா நடைபெறும் VOC பார்க்கின் வாசலில் உள்ள LE JARDIN ஹோட்டலின் முதல் மாடியில் உள்ளதொரு மினி ஹாலை நம் சந்திப்புக்கென புக் பண்ணியுள்ளோம் ! காலை 11 மணிக்கு அங்கே உங்களை பார்த்திட ஆவலாய்க் காத்திருப்போம் ! PLEASE DO DROP IN ALL !!!  

See you around ! Bye for now !!

Sunday, July 24, 2016

அடடே...அதற்குள்ளாக இன்னொரு ஞாயிறா ?

நண்பர்களே,

வணக்கம். "காலை எழுந்தவுடன் "கணவாயின் கதை" ; பின்பு டெரர் தரும் நல்ல டைலன் டாக்...; மதியமோ மர்மத்தின் மார்ட்டின் ; மாலை முழுவதும் மேஜிக் விண்ட் - என்று வழக்கப்படுத்திக் கொள்ளுடாப்பா.!!." என்று "டாப்பா பாட்டு" தான் பாடிக் கொண்டிருக்கிறேன் - இந்த வாரத்தின் பெரும்பகுதிக்கு ! சனிக்கிழமை ஊர் திரும்பிய கையோடு - கும்பகர்ணத் தூக்கம் ஒன்றைப் போட்ட திருப்தியில் ஞாயிறு கிளம்பினேன் - ஏழுமலையான் தரிசனத்திற்கு ! நாக்குத் தொங்கச் செய்யும் நெரிசலுக்குள் திங்களிரவு தரிசனம் செய்த கையோடு செவ்வாய் பின்னிரவு வீடு வந்து சேர - மேஜையில் குவிந்து கிடந்தன ஈரோட்டில் இத்தாலியின் சில நூறு பக்கங்களும் ! 
ராபின் கதை மாத்திரம் கருணையானந்தம் அவர்கள் எழுதியதென்பதால் - அதனை முதலில் படித்து விட்டு எடிட்டிங் செய்ய முனைந்தேன் ! "ஏகமாய் பணிகள் பாக்கி நிற்கின்றன ! " என்ற படபடப்பே மண்டைக்குள் 'தங்கு தங்கென்று' நர்த்தனம் ஆட - முழுசாய்க் கதைக்குள் ஐக்கியம் ஆகிட முடியவில்லை ! சரி, இருக்கவே இருக்கார் நம்ம இரவுக் கழுகார் - அவரது சாகசத்தை முழுமைப்படுத்துவோம் என்று அந்தப் பக்கங்களைத் தூக்கி இன்னொரு மேஜையில் பரப்பிக் போட்டுக் கொண்டு அதனுள் குதித்தால் - "ஆத்தாடியோவ்...400 பக்கங்கள் பிரிண்டிங் மட்டுமே ஒரு வாரம் பிடிக்குமே - சட்டு புட்டென்று நம் வேலைகளை முடித்து - ஒப்படைத்தாக வேண்டுமே ! " என்ற பீதி வயிற்றைக் கலக்க - டெக்ஸை மூடி வைத்து விட்டு டைலன் டாக்கினுள் புகுந்தேன் ; நம்மிடம் மேஜைகளுக்கா பஞ்சம் ??! 

டைலன் டாக்கில் ஒரு சின்னக் கூத்து நடந்திருந்தது ! இந்தக் கதையின் ஒரு ஆங்கில ஆக்கம் நெட்டில் கிட்டியிருந்ததால் அதனை மேலோட்டமாய்ப் படித்த கையோடு 2015-ல் இந்தக் கதையினைப் பட்டியலில் நுழைத்து விட்டு , ஏதோவொரு ஞாபகத்தில் -  "KILLERS" என்ற  ஆங்கிலத் தலைப்பையே சொல்லி கதைக்கு ஆர்டரும் செய்து விட்டேன். And இந்தாண்டுக்கான கதைகளோடு இதன் டிஜிட்டல் பைல்களும் வந்து சேர்ந்தன ! சரி, ஆகஸ்டில் வரும் கதை தானே - அப்போது பார்த்துக் கொள்ளலாமென்று மெத்தனமாய் உள்ளே போட்டு விட்டு - 2 வாரங்களுக்கு முன்பாய் வெளியில் எடுத்துப் பார்த்தால் - செம ஷாக் !! வந்திருந்தது வேறொரு கதையின் பைல்கள் !! "இது என்னடா குளறுபடி ?" என்று பொறுமையாய் அதனைப்  பரிசீலித்தால் தான் புரிகிறது  - THE KILLERS என்ற பெயரோடே - இத்தாலிய மொழியில் ஒரு டைலன் டாக் கதையும் வெளியாகியுள்ளது என்று !! ஆக, KILLERS என்று நான் கோரிய கதையல்ல இது  ; and இதனில் தவறு என்னது மட்டுமே என்பது புரிந்தது ! 'அய்யா...சாமி...! தப்பு நடந்து போச்சு.." என்று கூவுவதை விடவும் - வந்திருந்த கதையை அடுத்தாண்டிற்கென ஒதுக்கி விட்டு - தற்போதைய தேவையினை additional ஆர்டராகப் போட்டுவிடுவதே சாலச் சிறந்தது என்று தோன்றியது. போனெல்லியைப் பொறுத்த வரை ஆண்டின் 335 நாட்கள் பிசியோ- பிசியாக இருப்பவர்கள்  ; ஜூலை நடுவிலிருந்து ஆகஸ்ட் நடுவிலான  30 நாட்கள் மட்டும் அவர்களது கோடை விடுமுறை என்பதால் கிட்டத்தட்ட பாதி ஆபீஸ் காலியாக இருக்கும் ! நம் நேரம் - இந்தக் கதைக்க கோரல் அவசியமானது சரியாக அவர்களது விடுமுறைகள் துவக்கப் பருவத்தில். "டிஜிட்டல் பைல்கள் செக்ஷனில் உள்ளவர் லீவில் உள்ளார் - சாரி !" என்று பதில் வர - எனது 'லப்  டப்'  ஏகமாய் எகிறிப் போனது ! அப்புறம் அங்கே கேட்டு, இங்கே கோரிக்கை வைத்து - நம் அவசரத்தைச் சொன்னேன் ! போனெல்லிக்கு நாம் செல்லப் பிள்ளைகள் என்ற சலுகையின் ஒரே காரணத்தால் - தலை தப்பித்தது இம்முறை - நாலைந்து நாட்களுக்குள் எப்படியோ பைல்களை அனுப்பி விட்டனர! 

பாடுபட்டுப் பெற்ற கதையை  எடிட்டிங் செய்ய முனைந்த போது வேறொரு விதச் சவால் முன்னே நின்றது ! டைலனோடு சுற்றி வரும் அந்தக் கண்ணாடிக்கார கிரௌச்சோ சதா நேரமும் ஏதேனும் மொக்கைக் கடி ஜோக்குகளை உதிர்த்துக் கொண்டே சுற்றி வருவதை நாமறிவோம் ! இந்த சாகசத்தில் அவனது பங்கு நிறையவே - கதையின் முழுசுக்கும் டைலனோடு அவனும் டிராவல் செய்வதால் - முதல் முறையாக அவனது வசன வரிகளுக்கு கொஞ்சம் தனிப்பட்ட கவனம் தந்தால் தப்பில்லை - என்று நினைத்தேன். So இந்த இத்தாலிய மொக்கைச்சாமிக்காக கொஞ்சம் மெனக்கெட்டு டயலாக் உருவாக்கம் நிகழ்ந்துள்ளது ! And எப்போதும் போலவே - கிளைமாக்ஸ் பக்கங்களில் - கதையை விளக்கும் இடங்களின் மொழிபெயர்ப்பினில் ரங்க ராட்டினத்தில் சுற்றிய பீலிங் தான் எனக்கு !! "புரியுது - ஆனாப் புரியலை ; சரக்கு இருக்குது - ஆனா இல்லை ; இப்படி எழுதலாம் ; ஆனா எழுத கூடாது " என்று சரக்கடித்த S.J சூர்யாவைப் போல நிறைய நேரம் பாயைப் பிறாண்டினேன் - கடைசி நாலைந்து பக்கங்களுக்கு ! அந்தப் "பா.பி.ப." உங்களுக்கும் வாய்க்காதிருக்க எல்லாம்வல்ல தேவன்  மனிடூ உங்களைக் காத்தருள்வாராக !!
செவ்விந்திய காவல் தெய்வத்தைத் துணைக்கு அழைக்கும் வேளையில் - செவ்விந்திய ஷமானை மறத்தல் நியாயமாகுமா ? Oh yes - வீட்டின் சிக்கிய மேஜைகளிலெல்லாம் இதர கதைகள் இரைந்து கிடைக்க - ஆபீஸ் மேஜையில் படர்ந்திருந்தவரோ - ஜடாமுடி மேஜிக் விண்ட் !! ஏற்கனவே சொன்னது தான் - but இந்த இதழின் highlight-களுள் ஒன்றாய் "பூமிக்குள் ஒரு பிரளயம்" அமையாது  போயின் நான் ரொம்பவே ஆச்சர்யம் கொள்வேன் ! சும்மா அதிரும் கதை இது - literally & figuratively !!
ஒரு மாதிரியாய் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் சேவல்கள் குறட்டை விடும் வேளைகளிலேயே எழுந்து நிசப்தத்தினூடே ஒவ்வொரு   கதையாய் நிறைவு செயதேன் - நேற்று காலை வரை ! சுடச் சுட - ஆபீசில் திருத்தங்கள் DTP செய்யப்பட - அவற்றை மறுபடியும் மாங்கு மாங்கென்று வாசித்தேன்  ; வாசித்த கையோடு அச்சுக்கு அனுப்பிட - தக தகக்கத் தொடங்கி விட்டது நம் அச்சுக் கூடம் ! ரெண்டு மணி நேரத்துக்கு முன் என் மண்டைக்குள் மட்டுமே இருந்த டயலாக்குகளை ஆவி பறக்க அச்சான ஆர்ட் பேப்பரில் பார்ப்பது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டதொரு த்ரில் ! ஆண்டாண்டு காலமாய் இந்தப் பணிகள் நடந்திடுகின்றன தான் ; கடா மாடு வயசாகியும் விட்டதுதான் ; ஆனால் இன்னமும் ஒவ்வொருமுறையும் பிரிண்டில் நம் எழுத்துக்களை பார்க்கும் அந்தப் பரவசத்தின் தாக்கம் இன்னமும் தொடர்கிறது ! 

பிரிண்டிங் மேற்பார்வையினை ஜுனியர் எடிட்டர் தனதாக்கிக் கொண்டுவிட்டதால் -  "மாதம் மும்மாரி பொழிந்ததா பிரஜைகளே ?"  என்று குசலம் மட்டும்விசாரித்து விட்டு  அறைக்குள் அடைந்துகொள்ளும் சொகுசு எனதாகி விட்டது ! ஈரோட்டில் இத்தாலியில் தற்போது டெக்ஸ் பக்கங்கள் அச்சாகி வருகின்றன - "மிரட்டல் ரகம்" என்று மட்டும் சொல்வேன் - வர்ணச்சே ர்க்கைகளை பார்க்கும் பொழுது  !! "FB -ல் டெக்சின் சில பக்கங்களைக் கலரில் பார்த்த நேரம் முதல் அதனை black & white-ல் ரசிக்கத் தோன்ற மாட்டேன்கிறது ; எல்லா டெக்ஸையும் கலரில் போடுங்களேன் !" என்று நண்பரொருவர் எழுதியிருந்தார் ! FB-ல் பக்கங்களை பகிர்வது அரையணா செலவில்லா சமாச்சாரம் ; ஆனால் அதனை நடைமுறை நிஜமாக்க நாம் முனைந்தால் சில ஆயிரம் பர்ஸ்களைப் பல நூறுகள் பதம் பார்க்க வேண்டி வருமல்லவா ? அதுமட்டுமன்றி - இத்தாலியிலேயே கதைகள் ஒரிஜினலாய் வெளியாவது கறுப்பு-வெள்ளையில் தானெனும் பொழுது - நம் அவாக்களை சற்றே கட்டுக்குள் கொண்டிருத்தல் தேவலை தானே ?

அடுத்த 4 நாட்களுக்குள் அச்சினை முழுமைப்படுத்தி விட்டு - பைண்டிங்கினுள் குதித்து விட்டால் - உள்ளே இழுத்து   வைத்திருக்கும் தொப்பையையும், மூச்சையும் கொஞ்சமே கொஞ்சமாய் வெளியே விட சாத்தியமாகும் ! அப்புறமாய்த் தான் உங்களது ஈரோட்டுக் கேள்வித் தாள் தயாரிப்புப் பணிகளும், முஸ்தீபுகளும் தொடங்கிடும் !!    
அப்புறம் - இம்மாத கார்ட்டூன் இதழினில் ஒரு சிறு மாற்றம் ! நீலப் பொடியர்களின் மொழிபெயர்ப்பினை செய்கிறேன் பேர்வழி - என்று பக்கங்களை அமெரிக்காவுக்கும்,ஐரோப்பாவுக்கும் கையில் தூக்கிச் சென்றிருந்தாலும் பாதிக்கு மேல் பூர்த்தி செய்ய அவகாசம் கிட்டவில்லை ! ஊர் திரும்பிய பின்னே வெவ்வேறு பணிகள் அவசரமாய் போட்டுத் தாக்குவதால்  - ஸ்மர்ப்களின் இடத்தினில் ஏற்கனவே தயாராகியிருந்த சுட்டிப் பயில்வான் பென்னியை - 1 மாதம் முன்பாகவே கோதாவினுள் இறக்கிட உள்ளோம் ! பென்னி ஒரு செம சுவாரஸ்யமானபொடியன் ! சூப்பர்மேன் ; சோட்டா பீம் பாணியில் இந்த வாண்டுக்கு சூப்பர் சக்தி உண்டு ! அதனைக் கொண்டு இவன் செய்யும் ஜாலி சாகசங்கள் 1960 முதல் ஐரோப்பாவில் பிரசித்தம் ! SMURFS கதைகளின் படைப்பாளி PEYO தான் இந்தக் குட்டி பயில்வானில் சிருஷ்டிகர்த்தாவும் கூட ! SMURFS தொடர் செம ஹிட்டாகிப் போக PEYO -வால் இதனில்  அதிக கவனம் செலுத்திட முடியவில்லை ! so இந்தத் தொடரில் இதுவரையிலும் 15 ஆல்பம்கள் மாத்திரமே உள்ளன ! நம்மையும் சரி, நமது வீட்டுக் குட்டீஸ்களையும் சரி - சுஸ்கி-விஸ்கி ; ரின்டின் கேன் வரிசைகளில் இந்த சோட்டா பயில்வானும் மகிழ்விப்பான் என்ற நம்பிக்கை எனக்குண்டு ! Fingers crossed !

So இன்றைய பகல் பொழுதின் அப்பாயிண்ட்மெண்ட் - குட்டிப் பயலோடு தான் ! ஜாலியான கதைதான் என்றாலும் - 60 பக்கங்கள் + பக்கத்தினில் ஏகப்பட்ட frame-கள் என்பதால் இன்றின் பெரும்பகுதியை பென்னி வாங்கி கொள்வானென்றே தோன்றுகிறது ! 'தம்' பிடித்து பென்னியை எப்படியோ சீக்கிரமாய்க் கரைசேர்த்து விட்டால் - இருக்கவே இருக்கிறார் - நமது மர்மங்களின் மன்னவர் - மார்ட்டின் ! நல்ல நாளைக்கே நாற்பது முறை  இன்டர்நெட்டை துழாவி மார்டினின் கதைகளின் பின்புலன்களைத் தேடத் தேவைப்படும் - இதுவோ நீளம் கூடுதலான கதை ! So - இன்றும், நாளையும் & maybe செவ்வாயும் காத்துள்ளது மார்ட்டின் மண்டகப்படி !! பொழுது விடிவது இவர்களோடு - பொழுது ஓடுவதும் இவர்களோடு என்பதால் - கண்ணை மூடினால் கிரௌசோவும் ; கார்சனும் ; போவும் நக்கலாய்ப் பேசிக் கொள்வது போலவே கனவுகளும் கதக்களி ஆடுகின்றன !! ஆனால் - இந்த இத்தாலியக் கதைகளுள் பணியாற்றும் போது அயர்வு நேர்வது உடம்புக்கு மாத்திரமே - மனத்துக்கல்ல என்பதை மறுபடியும் உணர்கிறேன் ! பிராங்கோ-பெல்ஜியக் கதைகளின் பாணிகளுக்கு ரொம்பவே விலகியவை இந்த இத்தாலியக் கதைகள் என்பதால் இவை சற்றே இலகுவாய்த் தெரிவது எனக்கு மட்டும்தானா ?

Looking ahead - ஈரோட்டில் நாம் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை நண்பர் ஸ்டாலினின் உதவியோடு செய்து வருகின்றனர் சேர்ந்தம்பட்டிக் குழுவினர் ! (இந்த முறை கடலை மிட்டாய்க்குப் பதிலாக - என்ன ஸ்பெஷல் ??) வழக்கம் போல மைக்கைக் கையில் நான் ஏந்திக் கொண்டு அதே மாவை அரையோ-அரையென்று அரைப்பதை விட - இம்முறை உங்களை பேசச் செய்து கேட்க விரும்புகிறேன் ! அன்று காலை சொல்கிறேன் - topic என்னவென்று ; மனதில் படுவதை ஜாலியாய்ப் பகிர்ந்திடுங்களேன் ? அப்புறம் இன்னொரு விஷயமும் கூட !! ஏற்கனவே நம் தரப்பில் ஒரு அறிவிக்கப்படா இதழ் + ஒரு சுவாரஸ்ய சமாச்சாரம் அரங்கேறவிருப்பதாகச் சொல்லியிருந்தது நினைவிருக்கலாம் ! Add one more to that folks - ஒரு surprise விருந்தாளி நம் சந்திப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார் - காமிக்ஸ் ஆர்வலராய் ! நிச்சயமாய் நமக்குப் பெருமை சேர்க்கப் போகும் விருந்தினர் அவர் ; so ஈரோட்டுக்கு டிக்கெட் போட இன்னுமொரு காரணம் என்பேன் !! Please do drop in all !! 

ABSOLUTE CLASSICS பணிகளை ஈரோட்டுக்கு அப்புறமாய்த் துவங்கும் திட்டத்தில் உள்ளோம் ! மறுபதிப்புகள் தான் என்றாலும் - ஒவ்வொரு இதழையும் மெருகூட்ட சில பல ஐடியாக்களும், ஏற்பாடுகளும் கைவசமுள்ளன ! நிச்சயமாய் இவை -"இன்னுமொரு மறுபதிப்பு" என்ற ரீதியில் இராது என்பது சர்வ நிச்சயம் !! இதோ - இப்போதைக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ள கதைகள் :

  • லக்கி லூக் Digest - "ஒரு கோச் வண்டியின் கதை " + "ஜெஸ்ஸி ஜேம்ஸ்"

  • கேப்டன் பிரின்ஸ் Digest - "கொலைகாரக் கானகம் " & "நதியில் ஒரு நாடகம்" 
  • சிக் பில் டைஜஸ்ட் : "இரும்புக் கௌபாய் " & "விண்வெளியில் ஒரு எலி" (SUBJECT TO CONFIRMATION OF DIGITAL FILES ; இந்த வாரம் உறுதிபட  தெரிந்து விடும்)
  • மாடஸ்டி கிளாசிக் : "கழுகு மலைக் கோட்டை" (கலரில்)

  • MMS -------->>> :-) :-)

  • TEX டைஜஸ்ட் : ?????

எஞ்சி நிற்கும் அந்த டெக்சின் கதைத் தேர்வை இங்கேயே நடத்தி விட்டால் - "ஈரோட்டில் ஒரு அறைக்குள் குழுமியிருக்கும் 50 பேர் தான் உங்களுக்கு வாசகர்களாகத் தெரிகிறார்களா ?" என்ற விளக்குமாற்றுப் பூசையிலிருந்து நான் தப்பிக்க இயலும் ! So - அந்த இரவுக் கழுகின் இறுதித் தேர்வை இன்று துவக்கி, இவ்வாரம் முடித்துக் கொண்டால் - ஈரோட்டில் ABSOLUTE CLASSICS தொடர்பான முறையான அறிவிப்பும், குட்டி நோட்டீஸ்களும் தயார் செய்திட சாத்தியமாகும் ! நன்கு யோசித்து - உங்கள் தேர்வுகளை 'பளிச்' என்று பதிவிடுங்களேன் - ப்ளீஸ் ! ஒரே தேர்வு மட்டுமே !!

Talking about reprints - மறந்து போன்றதொரு நாயகரைப் பற்றியதொரு தகவலும் ! நாம் மாங்கு-மாங்கென்று வேலை பார்ப்பது ஒரு பக்கமெனில் - "காமிக்ஸ் கலைச்சேவை" ஆற்றத் துடிக்கும் ஆர்வலர்கள் அயராது இன்னொருபக்கம் உழைப்பது புல்லரிக்கத் தான் செய்கிறது ! ரூ.850 என்ற ரொம்பவே சொற்ப விலையில் நமது grey மார்க்கெட் பரமாத்மாக்கள் லேட்டஸ்ட் உப்மா கிண்டி புண்ணியம் சேர்க்க முனைந்து வருவது பற்றித் தகவல்களும், விபரங்களும் வந்துள்ளன ! இந்தத் தொடருக்கான உரிமைகள் கதாசிரியரின் டிரஸ்டின் பொறுப்பில் - ஒரு சட்டக் குழுமத்தின் கைகளில் உள்ளன ! இவற்றை இதுபோல் உட்டாலக்கடி செய்வது சீரியஸான சிக்கல்களுக்கு வழிவகுக்கும் ! பன்னீர் தெளித்து இத்தகைய முயற்சிகளுக்கு தொடர்வரவேற்பிருக்குமென்று  நண்பர்கள் நினைப்பின் - இம்முறை நமது கறுப்பு ஆயா தான் இவர்களுக்குத் துணை நின்றாக வேண்டும் ! அப்பட்டமாய் நமது மொழிபெயர்ப்பை ; கதைகளை வடைசுடும் போக்கு அடங்குவதாய்த் தெரியவில்லையெனில் - நிச்சயமாய் இம்முறை நாம் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கப் போவதில்லை ! சங்கடமானதொரு சூழலுக்குள் எங்களைக் கொண்டு சென்றுவிடாதீர்கள் ப்ளீஸ் ! சேகரிப்புகளை விற்றுக் கொள்ளுங்கள் ; எதுவோ செய்து கொள்ளுங்கள் - அதில் தலையிட எங்களுக்கு முகாந்திரங்கள் கிடையாது ! ஆனால் "காமிக்ஸ் நேசம்" ; "ஆர்வம்" என்ற பெயரில் அரங்கேறும் இந்த அசிங்கங்கள் - அபத்தமாய் உள்ளன ! நூறு ரூபாய்க்கு ஹார்ட் கவரில் மறுபதிப்புகளை வெளியிட நாம் முனையும் போது அதனை வாரு-வாரென்று வாரி விட்டு - ஓராயிரம் நக்கல்கள் செய்து விட்டு ; நமக்கு பத்தி பாதியாய் வாட்சப் க்ரூப்களில் அறிவுரையும், அருளாசிகளும் நல்கிவிட்டு - இன்னொரு பக்கம் இதுபோன்ற "கலைச் சேவைகள்" வேண்டாமேஜி  ! உங்களின் அரும் சேவைகள் இல்லாமலேயும் கூட தமிழ் காமிக்ஸ் உலகமானது எப்படியோ தத்தித் தவண்டு பிழைத்துக் கொள்ளும் ! "தொழிலுக்கு" இடையூறாய் ஏதேனும் நான் செய்யத் துவங்கிய மறுகணமே - ஒன்றரையணாப் பிரயோஜனமிலா விஷயங்களின் பொருட்டு எனக்கு அர்ச்சனைகள் துவங்கிடும் என்பது இப்போதெல்லாம் ரின்டின் கேனுக்கே தெரிந்திருக்கக் கூடிய விஷயம் ! So இந்தப் பதிவைத் தொடர்ந்து பிரெஷ்ஷாக ஒரு ரவுண்ட் என்னைப் போட்டுத் தாக்க சமாச்சாரங்கள் தேடப்படுமென்பது தெரியாதில்லை ! இவையெல்லாமே ஹைதர் அலி காலத்து யுக்திகள் என்பதால் அலுத்துப் போய் விட்டன ! 

And இவற்றை வாங்கி காசையும் விரயம் செய்து ; இந்த முறையற்ற தொழிலை indirect -ஆக ஊக்குவிக்கவும் செய்யும் நண்பர்களுக்கும் : PLEASE - இது வேண்டாமே ? உங்களில் பத்திருபது பேர் இவற்றை வாங்கினாலும் கூட "அவர்களுக்கு" இந்த ருசி அகலாது ! வெறும் டிஜிட்டல் பிரிண்ட் போடுவது மாத்திரமே செலவெனும்  போது - ரூ.850 விலையினில் நீங்கள் தண்டம் அழுதிடப் போவதோ சுமார் ரூ.500 !! அந்தக் காசை உங்கள் தெருக்கோடியிலிருக்கும் கோவில் உண்டியலில் போட்டால் புண்ணியமாவது மிஞ்சும் ! புத்தகம் சேகரிக்க ஒரு FB / வாட்சப் க்ரூப் ; அதனை மார்க்கெட் பண்ண ஆர்வத்தைத் தூண்டும் விதமான  FB posts ; பதிவுகள் ; அப்புறம் - அவர்களுக்குள்ளேயே கேள்விகளும் கேட்டுக் கொண்டு, அப்பாவியாய் பதிலும் சொல்லிக் கொள்ளும் பாங்கு என்று கனஜோராக நடந்துவரும் இந்த சமாச்சாரங்களை உங்கள் பணம் மாத்திரமே வளர்த்து வருகிறது ! "இத்தனை காசு கொடுத்து இதை படிக்க அவசியமில்லை எனக்கு !" என்று சொல்லுங்கள் - தானாய் காணாது போய் விடும் இந்தக் "கலைச் சேவை" ! செய்வீர்களா please ? Say NO to grey please !!

Bye for now all ! Have an awesome sunday !
20,00,000 views !!!!

Sunday, July 17, 2016

இத்தாலிய மாதமிது...!

நண்பர்களே,
            
வணக்கம். பிசியான இரயில்வே ஸ்டேஷன்களிலோ, சந்தைக்கடை மாதிரியான விமான நிலையங்களிலோ, மினுமினுக்கும் குனிந்த தலை நிமிராமல் கடமை வீரன் கண்ணாயிரமாய் நோட்டில் கிறுக்கிக் கொண்டிருக்கும் ஒரு கபாலிக் கண்ணனைப்(!!!) பார்த்தீர்களேயானால்- ஓரமாய் ஒதுங்கிப் போய் விடுங்களேன்? Chances are that – 'அடுத்த பதிவைத் தயார் பண்ணுகிறேன் பேர்வழி !' என்று புதுசாய் ஒரு மொக்கையைத் தயார் செய்துகொண்டிருக்கும் அடியேனாகத் தானிருக்கும் அது ! இப்போதெல்லாம் இரயில்களுக்கோ- விமானங்களுக்கோ காத்திருப்பதென்பது சுவாரஸ்யமான விஷயமாகி விட்டது – simply becos எந்தப் பிடுங்கல்களுமின்றி- சம்பந்தா சம்பந்தமில்லா இடங்களில் உட்கார்ந்து எழுதுவது ஒரு வித்தியாச அனுபவமே !  ‘கிறி-முறி-கிறி-முறி‘ என்று ஆர்டினின் கச்சேரியைப் போல சுற்றுமுற்றிலும் சத்தம் செவியைப் பிளந்தாலும் ஒரு மந்தகாசப் புன்னகையோடு கைபோன போக்கில் எதையாவது எழுதுவதென்பது தான் சமீப வாரங்களது நடைமுறை! படிக்கும் உங்களை பரமபிதா காப்பாறாக !

ஈரோடு” என்ற புயல் பரபரப்பாய் வேகம் சேர்த்து வருவதை சமீப நாட்களின் உங்கள் பின்னூட்டங்கள் வாயிலாகப் புரிந்து கொள்ள முடிகிறது! “ஆந்திரா பக்கமாய் கரை சேர்ந்தது... அந்தமான் திசையில் கரை கடந்தது” என்ற ரீதியில் இந்த வானிலை அறிக்கை பிசுபிசுத்துப் போகாது என்ற நம்பிக்கை ஒவ்வொரு நாளும் அதிகமாகி வருகிறது! இல்லங்களில் விசாக்களை முறையாகக் கேட்டு வாங்கிவிட்டு டிக்கெட்டுகளைப் போட்டீர்களேயானால் இரு நாட்களை நண்பர்களோடு கலக்கலாய் கொண்டாடிடலாம்! And இந்தத் தருணத்தை highlight செய்திடத் தயாராகி வரும் புது இதழ்களின் பக்கமாய் பார்வைகளை இந்த வாரம் ஓட விடுவோமா?

சந்தேகமின்றி “ஈரோட்டில் இத்தாலி” தான் இம்மாத 4+1 (?!)இதழ்களுள் showstopper என்பதில் ஐயமில்லை! 2016-ன் அட்டவணையைத் தயாரித்த போதே ஆகஸ்டிற்கென ‘வெயிட்டான‘தொரு இதழ் அவசியம் என்று note போட்டு வைத்திருந்தேன்! And இதற்கான கதைகளும் ‘டக் டக்‘கென்று தானாகவே தேர்வாகிக் கொள்ள- என் வேலை ரொம்பவே சுளுவாகிப் போனது! 
“What you do well- I can do even better!” என்பது தான் எனக்குத் தோன்றிய முதல் எண்ணம்- இந்த இதழின் பிரதான நாயகரான டெக்ஸ் வில்லரின் "ஒரு கணவாயின் கதை" யினைப் படித்த பொழுது ! சமீபமாய் கேப்டன் டைகரின் சாகஸம் ஒரு வரலாற்றின் நிஜப்பக்கத்தினுள் ஐக்கியமாகிப் பயணித்ததைப் பார்த்திருந்தோம் - சிலாகித்திருந்தோம்! ஆனால் “நாங்களும் பரட்டை தானே... எங்க கிட்டேயும் சீப்பு இருக்குல்லே ?” என்று இரவுக்கழுகார் சொல்லாத குறை தான்- “ஒரு கணவாயின் கதையில்”! வன்மேற்கின் வரலாற்றில் நிகழ்ந்த இன்னொரு இரத்தக்களரியான அத்தியாயத்தினில் நம்மவரை இணைத்து ஒரு அழகான ஆக்ஷன் த்ரில்லரை 100 பக்கங்களில் உருவாக்கியுள்ளார் மௌரோ போசெல்லி ! மனுஷன் எத்தனை தான் research செய்வாரோ தெரியவில்லை- ஆனால் டெக்ஸ் & கோ விற்கு விதவிதமாய் களங்கள் உருவாக்கித் தரும் பொருட்டு இவர் எடுக்கும் மெனக்கெடல்கள் அசாத்தியம் என்பேன்! நமக்கு இப்போது நன்றாகவே பரிச்சயமாகிப் போகியுள்ள அந்த O.K CORRAL நேருக்கு நேர் துப்பாக்கி மோதலைப் பின்புலனாக்கி - இதற்கு முன்பாய் நாம் வெளியிட்ட வரலாறு கலந்த டெக்ஸ் சாகசம் "நில்..கவனி...சுடு." என்பது நினைவிருக்கலாம் ! அதே பாணியில்  - இன்னுமொரு நிஜ நிகழ்வினைப் பின்னணியாக்கி - அதனுள் நம் நண்பர்களைப் பயணிக்கச் செய்துள்ளார் போசெல்லி !  வரலாற்றின்  கோடு கதையினுள் மெலிதாய் இழையோடினாலும் - வழக்கமான டெக்ஸ் அதிரடி பாணியினைத் துளிகூட விட்டுத் தராமல் ஒரு அழகான சிங்கிள் ஆல்பத்தை உருவாக்கியுள்ளார் மனுஷன் !  And இரவுக்கழுகின் முழு டீமும் இங்கே ஆரவாரமாய் ஆஜராவதால்- பக்கங்கள் சும்மா வைகை எக்ஸ்பிரஸ் போல பறக்கின்றன! And முழுவண்ண இதழ் எனும் போது கேட்கவும் வேண்டுமா? பக்கத்துக்குப் பக்கம் கண்ணைப் பறிக்கின்றது! இதோ ஒரு preview !!
கதை # 2 என்று  எதனைக் குறிப்பிடுவதென்று சின்னக் குழப்பம்- ஏனெனில் டெக்ஸோடு பக்கங்களைப் பகிர்ந்திடும் பாக்கி மூவருமே இந்த இதழில் தூள் கிளப்பியுள்ளார்கள்! அப்புறம் யோசித்துப் பார்த்ததில்- சீனியரான C.I.D. ராபினைத் தான் இரண்டாம் இடப் பிரமுகராக்குவதென்று தீர்மானித்தேன்! “காற்றில் கரைந்த காதலி” ராபின் தொடரில் சிலபல காரணங்களுக்காக வித்தியாசமாகத் தோன்றவிருக்கும் கதையென்பேன்! For starters – இது ராபின் தொடரின் கதை # 200! So அந்த landmark-ஐ கௌரவிக்கும் விதமாய் இந்த சாகஸத்தை முழுவண்ணத்தில் வெளியிட்டிருந்தனர்! ராபின் தொடரின் இறுதி சாகஸமும் இதுவே என்பது சற்றே சோகமான சிறப்பம்சம்! 2005 ஜனவரியோடு இந்தத் தொடரை போனெல்லி நிறுத்திக் கொண்டனர்! 199 சாகஸங்களுக்கு ஒண்டிக் கட்டையாய் சுற்றித் திரிந்த மனுஷனுக்கு ஒருவழியாய் இருநூறாவது சாகஸத்தில் கல்யாணம் செய்து வைப்பார்களென்று எதிர்பார்த்தால்- ஆப்பை வசமாகச் செருகுவதே அங்கு தான்! கல்யாண மாப்பிள்ளையாய் தேவாலயத்தில் ராபின் காத்திருக்க- மணப்பெண் is gone - போயே போய் விடுகிறார்! தொடரும் ஆக்ஷன் அதிரடிகள் தான் ராபினின் "கா.க.கா." !முழுவண்ணத்தில் LMS-ல் வந்த ராபின் கதை வண்ணங்களில் பல்லைக் காட்டியதற்கு நேர் மாறாய் இம்முறை ‘பளிச்‘ கலர்களில் கலக்குகிறார்! ஆண்டின் முதல் 'அக்மார்க்' டிடெக்டிவ் சாகசமிது - "ரிப்போர்ட்டர்" ஜானியினை அந்தப் பட்டியலும் நுழைக்காதிருப்பின் ! 200 கதைகள் கொண்ட ராபினுக்கு இன்னமும் கூடுதலாய் இட ஒதுக்கீடு செய்திட ஆசைதான் எனக்கு - ஆனால் நமது நாயகர்கள் பட்டியலின் நீளம் ஒரு தடையெனில் - ராபினின் தொடர்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ள சித்திரத் தரங்கள் ரொம்பவே up & down ரகத்திலானவை ! So - 'இது ராபினின் ஒண்ணுவிட்ட பெரிப்பாவா ? சித்தப்புவா ?' என்ற வினாக்கள் எழ நிறையவே வாய்ப்புகள் உண்டென்பதால் - ஓரளவுக்கு ஓ.கே artwork கொண்ட கதைகளை மட்டுமே தேர்வு செய்து வருகிறோம் ! 
கதை # 3 – நமது கறுப்பு-சிகப்புக் combination டைலன் டாக்கினுடையது! எப்போதும் போலவே இதனிலும் மனுஷன் மர்மம்; திகில்; பரபரப்பு; என்று எங்கெங்கோ ரவுண்ட் கட்டியடித்தாலும்- வண்ணத்தில் அவரோடு சுற்றித் திரிவது செம சுவாரஸ்யமான அனுபவமாய் அமைந்திடப் போகிறது! And இந்த இதழின் artwork மிரட்டல் ரகம்!!! இதுவரையிலும் நீங்கள் பார்த்திருக்கக்கூடிய டைலன் டாக்கின் சித்திரங்கள் வேறொரு ரகமெனில் - இந்த சாகஸத்தின் artwork தரம் அதற்கொரு படி மேலே ! And இம்முறை கதையும் கூட ரொம்பவே மாறுபட்ட பாணி ! பேய்..பிசாசு...மர்ம மண்டலங்கள்...என்றெல்லாம் போட்டுத் தாக்காது - நவீன இலண்டனிலேயே ஒரு வித்தியாச முடிச்சினை டைலன் இம்முறை அவிழ்க்கிறார் ! மஞ்சள் சட்டை மாவீரரின் நீல ஜீன்ஸ் + மஞ்சள் சொக்காய் - புக்கின் முதல் பகுதியினை ஆக்கிரமிக்கிறதெனில் - red & black உடுப்பில் mr .DD கலக்குகிறார் ! And வழக்கம்போலவே டைலனின் இத்தாலிய ரசிகர்கள் தயாராகி வருகின்றனர் - இந்த இதழுக்கு ஆர்டர் செய்திட ! எனக்கு இன்னமும் புரிபடாத ஒரே சமாச்சாரம் - இத்தனைபெரிய  mass following கொண்ட இரவுக்கழுகாருக்கு இத்தாலியில் ஒரு  வீரியமான ரசிகர் அமைப்பு  இதுவரையிலும் என் இல்லை  ? என்பதே...! டைலன் டாகுக்கும் சரி, திருவாளர் டேஞ்சர் டயபாலிக்குக்கும் சரி - ஆர்ப்பாட்டமானதொரு fan following உள்ளதெனும் பொழுது - இரவுக்கழுகாரின் அணியினர் இன்னமும் பன்மடங்கு வேகமாய் இருந்திட வேண்டும் தானே ? டைலன் டாக் எனில் குறைந்த பட்சம் 50 பிரதிகள் இத்தாலிக்குப் பார்சல் ; "டே.ட." எனில் குறைந்தது 100+ என்பது நமக்கே கிடைக்கும் ஆர்டர்கள் ! ஆனால் sadly "தல" ரசிகர்கள் இது விஷயத்தில் ஆர்வம் காட்டுவதே இல்லை !  

கதை # 4 –  இந்த இதழின் ஒரு ஓசையிலா டைனமைட்டாக அமைந்து போயின் ஆச்சர்யப்பட மாட்டேன்! மேஜிக் விண்ட் இது வரையிலும் சம அளவு பூமாலைகளையும், சம அளவில் பூரிக்கட்டைகளையும் ஈர்த்திருப்பதில் ரகசியமில்லை ! 'கௌ-பாய் தொடரென்பதா? fantasy கதையென்பதா? அமானுஷ்யம் சார்ந்ததென்பதா ?' என்று இந்த series-ஐ சுற்றிலும் மெல்லிய குழப்பம் இழையோடுவதை நாமறிவோம்! ஆனால் “பூமிக்குள் ஒரு பிரளயம்” கதை முற்றிலும் புதிதாய் ஒரு நான்காவது கோணத்திலிருந்தும் இந்தத் தொடரை அணுகும் சாத்தியக் கதவுகளைத் திறந்திடப் போகிறதென்பேன்! சளசளத்தபடியே உடன் சுற்றித் திரியும் போ‘ஒரு poor man’s கார்சன்' தான்; ஆனால் அதிகம் பேசாமலே அழுத்தமாய் சுற்றி வரும் மேஜிக் விண்ட்- இந்த சாகஸம் ஹிட்டடிக்கும் பட்சத்தில்- சிலபல துடைப்பங்களுக்கு வேலையின்றிப் போகச் செய்து விடுவாரென்று நம்புகிறேன்! ‘பூ.ஓ.பி‘ 96 பக்க டைனமைட்! இந்தாண்டின் கதைகளுள் நான் ஆவலாய் எதிர்பார்த்திருக்கும் கதைகளுள் இதுவுமொன்று  ! 
So கௌ-பாய் ; டிடெக்டிவ் ; ஹாரர் ; என்பதோடு ‘எது மாதிரியும் இல்லாத புது மாதிரி‘ கதையும் கைகோர்க்க- இந்த போனெல்லியின்  FAB FOUR ஈரோட்டை மட்டுமன்றி நமது சேகரிப்புகளையும் colorful ஆக்கக் காத்துள்ளனர்! Hard cover; முழுக்கவே Art Paper; முழு வண்ணம் எனும் பொழுது இந்த இதழ் நிச்சயம் ரசிக்கும்விதம் அமையுமென்று மெய்யாக நம்புகிறேன் ! And அட்டைப்படமும், ரொம்ப அழகாய் அமைந்துள்ளதை எனக்குத் தோன்றியது ! So fingers crossed ! 

ஆகஸ்டின் black & white குத்தகைக்காரரும் அதே இத்தாலிப் பட்டணக்காரர் எனும் பொழுது அவர் மாத்திரம் கலக்காது விட்டு விடுவாரா- என்ன? இப்பொழுது வெளியாகக் காத்துள்ள மர்ம மனிதன் மார்ட்டின் சாகசமான "இனியெல்லாம் மரணமே"  சுமார் 7 / 8 ஆண்டுகளுக்கு முன்பாகவே நமது திட்டமிடலில் இடம் பிடித்தது ! ! ஏதோ ஒரு சமயம் இத்தாலியில் சுற்றித் திரிந்த போது இந்த மெகா சைஸ் மார்ட்டினின் ஆல்பத்தை, ரோம் நகரின் ரயில்வேநிலையத்தில் பார்த்து, அதன் சித்திரத் தரத்தில் மெய்மறந்து அந்த இதழை வாங்கி வந்திருந்தேன்! இத்தாலிய மொழிபெயர்ப்பினை அந்நாட்களில் நமக்குச் செய்து வந்தவர் மட்டும் ‘திடுதிடு‘ப்பென்று கடையை மூடிப் போயிராவிடில் இந்த சாகஸம் என்றைக்கோ வெளிச்சத்தைப் பார்த்திருக்கும் ! இத்தனைகாலம் என்னிடம் துயில்பயின்ற கதையினை ஜூனியர் எடிட்டரின் இத்தாலிய மொழிபெயர்ப்பு டீமின் புண்ணியத்தில் எழுதி வாங்க சமீபமாய் சாத்தியமாக - இந்தாண்டின் "ம.ம.மா." சாகசம் களம் காண ரெடியாகிறது ! அன்றைக்கே போட்டிருந்த அட்டைப்பட ஓவியம் இத்தனை வருஷங்களாயினும், மெருகு குறையாது பத்திரமாக இருக்க- ஒரு ஜோடி Bata காலணிகள் வாங்கும் செலவு மிச்சமானது - அட்டைப்படத்தின் டிசைனிங்கின்  பொருட்டு! And இந்த இதழின் உட்பக்கச் சித்திரங்களைப் பார்த்தால் திகைத்துப் போய் விடுவீர்கள்- இவற்றின் நேர்த்தியின் காரணமாய் ! “குற்றம் பார்க்கின்” இதழில் டெக்ஸின் சித்தப்பா சார் தான் கண்ணில் பட்டாரென்று கவலை கொண்ட நண்பர்கள்- இம்முறை மார்ட்டினின் சுந்தரத்தைச் சந்தித்து மலைக்காதிருக்க இயலாது! Stunning artwork!!

ஆண்டின் மெகா இதழ்களுள் “தீபாவளி மலர்” மாத்திரமே எஞ்சி நிற்க- இதர கதைகள் பெரும்பான்மையின் மீதான பணிகள் கணிசமாகவே நிறைவுற்று நிற்கின்றன! இப்போதெல்லாம் எனக்குப் பணியாற்றுவது எப்படியோ - உங்களுக்குத் படிப்பது எப்படியோ - ஆனால் தயாரிப்பில் ஈடுபடும் எங்களது டீமுக்கு ஒரு 52 பக்க இதழானது மூன்றல்லது ; நான்கு நாட்களது சமாச்சாரமாகிப் போய் விட்டது ! கதையில் பாதியை எழுதிவிட்டு வேறு வேலையினுள் தலைநுழைத்தால் - ஆபீசுக்குள் நுழையும் போதே - "ஏமண்டி...எங்களுக்கு வேலை லேது !" என்று போர்டு நிற்கிறது ! So  இவர்களுக்குப் பயந்தாவது ஆந்தைகளோடு குசலம் விசாரிக்க தினப்படி அவசியமாகிறது ! 

Before I wind off - 2 தனித்தனி நிகழ்வுகள் - ஆனால் ஒரே திசையினைச் சுட்டுக் காட்டும் விதத்தினில் .....! 
  • வழக்கம் போல் வசூல் + ஆர்டர்களின் பொருட்டு சேலம்  ; கோவை நகர்களில் சென்ற வாரம் நமது மார்க்கெட்டிங் நிர்வாகி கணேஷ் ரவுண்ட் அடித்துக் கொண்டிருந்தார். அன்றாட கலெக்ஷன் + ஆர்டர் நிலவரங்களை update செய்யும் பொழுது - புத்தகக் கடையினரின் ஒற்றை agenda பற்றிச் சொன்னதை கேட்ட பொழுது மண்டையைச் சொரிந்து கொள்ளத் தான் தோன்றியது ! "எல்லா மறுபதிப்புகளிலும் 5 பிரதிகள் வீதம் + எல்லா டெக்ஸ் வில்லர் இதழ்களிலும் 10 பிரதிகள் வீதம்" என்பது தான் கிட்டத்தட்ட எல்லோருமே கொடுத்திருக்கும் ஆர்டர்கள் !! XIII பதிமூன்று ; XIV பதினான்கு ; கிராபிக் நாவல் ; கிச்சடி  நாவல்...லார்கோ ...wells fargo .....சந்தா Z : X ; Y ; ஜூலியா ...அவங்கக்கா .... என்று யாரைப்  பிரதானப்படுத்த முயன்றாலும் அது உங்க ஆசை  சாமியோவ்   - இங்கே விற்பது இது மட்டும் தான் என்பதை அவர்கள் சொல்லாது சொல்வதை "ரோசனை"யோடு ஆராய்கிறேன் !  
  • இது போன வாரத்து நிகழ்வெனில் - நேற்றுக் காலை கிட்டிய அனுபவம் இன்னமும் ஒருபடி மேலே ! திங்கட்கிழமை மதியமே ஒரு திடீர் வேலை நிமித்தம் ஊர் சுற்றக்  கிளம்பியிருந்தவன் சனிக்கிழமை அதிகாலையில் மூன்றரை மணிக்குப் போல் சென்னை வந்து சேர்ந்திருந்தேன். விமானத்தில் என்னோடு கோந்து போட்டு ஒட்டிக் கொள்ளாத குறையாய் நெருங்கிப் போயிருந்த ஒரு 4 வயது குட்டி வாண்டைத் தூக்கிக் கொண்டு அவனின் தந்தை தனது தடித் தடி சூட்கேஸ்களை பெல்ட்டிலிருந்து மீட்டெடுத்து வரும்வரை துணைக்கு நின்றிருந்தேன். எனக்கு மதுரை போகும் விமானம் 5-45 க்கு என்பதால் ஒருமாதிரியாக வாண்டிடமும், தந்தையிடமும் சொல்லிவிட்டு விறு விறுவென்று வாசலை நோக்கி நடைபோட்டேன். ஆப்பிரிக்கா போனாலும் சரி ; அமெரிக்கா போனாலும் சரி - எனது லக்கேஜ் எப்போதுமே ஏழு அல்லது எட்டுக் கிலோ கொண்டதொரு பை மாத்திரமே என்பதால் அதனை உருட்டிக் கொண்டே போகும் என்னை ஒரு நாளும் வாயிலில் நிற்கும் customs அதிகாரிகள் நிறுத்துவதில்லை ! பை நிறைய அழுக்குத் துணிகள் மாத்திரமே இவனிடம் இருக்குமென்பது நம் முகத்திலேயே தான் எழுதி ஒட்டியிருக்குமே ! ஆனால் நேற்றோ - ஒரு மிடுக்கான அதிகாரி என் தோளைப் பற்றி தான் பக்கமாய் இழுத்துக் கொண்டு "ஹலோ சார்" என்றார் ! "போச்சுடா - அடுத்த பிளேனைப் பிடிக்க ஓடும் வேளையில் தானா கஸ்டம்ஸ் பரிசோதனை ?" என்று நினைத்துக் கொண்டே "yes sir ?" என்று கேட்க -  முகம் நிறையப் புன்னகையோடு அருவி கொட்டியது போல் ஆரம்பித்தார் பாருங்கள்........... அடுத்த 5 நிமிடங்களுக்கு "டெக்ஸ் வில்லர்" என்ற மந்திரச் சொல்லின் முழுமையான ஆற்றலை yet again நேரில் ரசித்திட முடிந்தது ! 9-வது படிக்கும் போதிலிருந்தே லயன் காமிக்ஸ் தீவிர ரசிகர் என்றும், திருச்சிக்கு அருகினில் உப்பிலியபுரம் சொந்த ஊர் என்றும் அறிமுகம் செய்து கொண்டார் ! விமானப் படையில் ; அங்கே இங்கேயென்று 15 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு தற்போது சென்னை விமான customs-ல் பணியாற்றுவதாய்ச் சொன்னவர் - டெக்சின் அதி தீதீதீதீவிர ரசிகர் போலும் !! "டெக்சின் அந்தக் கதையில் இந்தப் பக்கத்தின் இந்த action super சார் ; அந்த இதழில் கார்சனின் டயலாக் அட்டகாசம்  ; மெபிஸ்டோ தலைகாட்டும் அமானுஷ்யம் சார்ந்த டெக்ஸ் கதைகள் நிறைய உண்டா சார் ? ; அவற்றைப் போடுங்களேன்....; நெட்டில் தேடித் பார்த்தேன் - எல்லாம் இத்தாலிய மொழியில் உள்ளன ; தமிழில் படிப்பது செம அனுபவம் " என்று மடை திறந்த வெள்ளமாய்ப் பொரிந்து தள்ளினார் ! "இத்தனை கூட்டத்தில் என்னை எங்கே அடையாளம் கண்டு பிடித்தீர்கள் ? " என்று கேட்க - "கவர்னர்  கிரண் பேடி மேடம் நீங்கள் வந்த  பிளைட்டில் தான் வந்திருந்தார்கள் ; அவர்களை வரவேற்க நின்று கொண்டிருந்த போது உங்கள்  பையனோடு வருவதைக் கவனித்தேன் ; ப்ளாக் ரெகுலராய்ப் படிப்பேன் ; so உங்களை அடையாளம் தெரிந்து கொள்வதில் சிரமம் இருக்கவில்லை " என்றார் !  கவர்னர் கிளம்பிய பின்னே என்னைத் தேடி இருக்கிறார் - ஆனால் நானோ அந்தக் குட்டிப்  பையனோடு  ரொம்ப நேரம் நின்று கொண்டிருந்ததால் - எப்படியும் வாயிலைத்  தாண்டித் தானே போயாக வேண்டும் - அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று காத்திருந்ததையும் சொன்னார் ! "இன்னும் ரெண்டு வருஷத்தில் கல்யாணம் பண்ணும் வயசில் பையன் இருக்கான் சார் எனக்கு  ; அது விமானத்தில் ஸ்னேஹம் செய்து கொண்ட வாண்டு" என்று விளக்கி விட்டு, அவரது குடும்பம், பணி பற்றிப் பேச எத்தனித்தேன் ! ஆனால் அவரோ - டெக்ஸைத் தாண்டி வேறெங்கும் நகர்வதாய் இல்லை ! "அட...கண்டு புடிச்சிடீங்களா சார் ?" என்று பக்கத்திலிருந்த பெண் அதிகாரி அந்நேரம் கேட்க - அவருக்கும் இடைப்பட்ட அவகாசத்தில் டெக்ஸ் புராணம் நிச்சயமாய் சொல்லியிருப்பார் என்று நினைத்துக் கொண்டேன் !! எனக்கு அடுத்த டெர்மினல் செல்ல அதிகம் அவகாசமில்லை என்பதால் - "புறப்படுகிறேன் சார்   " என்று விடைபெற்றேன் ! அவரோ - "இருளின் மைந்தர்கள் " பற்றிப் பேசிக் கொண்டிருந்தார் !! "ஒரிஜினலாய் இத்தாலிய கதைகளில் டெக்ஸ் வசனங்கள் இது போலவே இருக்குமா சார் - கார்சனின் நையாண்டி இப்படி இருக்குமா சார் ? ; நம் மொழிக்கேற்ப நீங்கள் செய்யும் மாற்றங்கள் அவை என்று நினைக்கிறேன் ! படிக்கும் போது தெறிக்கிறது " என்று அவர் சிலாகித்துக் கொண்டிருந்தது தொடர, அதிகாலை 4-15 க்கு என் சிரமெல்லாம் ஜிலீரென்றது ! பிரமிப்பாய் இருந்தது - நாம் கண்ணிலேயே பார்த்திரா ஒரு வன்மேற்கின் மண்ணில் உலவும் ஒரு இத்தாலியக் கற்பனைக் கதாப்பாத்திரத்துக்கு இத்தனை பெரிய தாக்கம் ; இத்தனை விதமானோரிடம் இருப்பதை உணரும் பொழுது ! "நான் மௌன ப்ளாக் வாசகன் சார் ; நம்மை விடவும் தீவிர காமிக்ஸ் ரசிகர்கள் இருப்பதை சந்தோஷமாய் ரசித்துக் கொள்வேன் ; அவ்வப்போது டைகர் கதைகளும் படிப்பேன் ; நமக்கு என்னவோ தெரியலை - டெக்ஸைத் தாண்டி உலகமே கிடையாது !" என்றவரிடம் விடைபெற்று புறப்பட்டு விட்ட போதிலும், அந்த 5 நிமிடங்களின் தாக்கம் என்னைவிட்டு நீங்க ரொம்ப ரொம்ப நேரமாகியது ! சில பல டஜன் மணிநேரச் சிந்தனைகள் தரும் தெளிவுகளை விட - ஒரு 5 நிமிட சந்திப்பு தரும் "பாதை விளக்கம்" கூடுதல் ஆற்றல் கொண்டதாக இருக்க முடியுமென்பதை நேற்றைய காலை எனக்கு உணர்த்தியது ! அரசு பணியில் ; அதிலும் ஒரு முக்கிய பாதுகாப்பு சார்ந்த துறையில் நண்பர் பணியாற்றுவதால் அவரது பெயரை இங்கே வெளியிட தயக்கமாகவுள்ளது ! இன்றைக்கு அவரும் இத்தனை மௌனமாய் வாசிப்பாரென்பது நிச்சயம் - thanks a ton to you sir !
And நாம் எல்லோரும் நேசிக்கும்  'தல'யைப் பற்றி சொல்ல புதிதாய் என்னவுள்ளது - 'தலைவா.....you are just awesome !!" என்பதைத் தாண்டி ? Bye folks....see you around !! 

P.S : ஈரோட்டில் ஆகஸ்ட் இதழ்களை பெற்றுக் கொள்ள விரும்பும் நண்பர்கள் - சிரமம் பாராது உங்கள் சந்தா நம்பர் / அல்லது முகவரியோடு ஒரு மின்னஞ்சலைத் தட்டி விடுங்களேன் - ப்ளீஸ் ? இங்கு செய்திடும் பின்னூட்டங்கள் நம்மவர்களை எட்டிடாதே !

Wednesday, July 13, 2016

ஈரோட்டில் நமது ஸ்டால் நம்பர் 91.....

நண்பர்களே,

வணக்கம். "ஆகாஷவாணி....!! செய்திகள் வாஷிப்பது...." என்று அடித்தொண்டையில் கறகறக்கும்  ரேடியோவின் முன்னே தவமிருந்து அன்றைய கிரிக்கெட் ஸ்கோர்களைக் கேட்டுவந்த ஏதோவொரு கி.மு காலத்தினுள் தான் எனது பால்யம் இருந்ததாய் ஞாபகம். அப்போதெல்லாம் பொழுது போக்கிற்கு வழிகள் ஏக குறைச்சல் என்பதால் - புத்தகங்கள் தான் ஆபத்பாந்தவர்களாய்த் தெரிவது வாடிக்கை ! அவற்றுள் ஒரு வகையான activity books-ல் "புள்ளிகளை இணையுங்கள்" என்றிருக்கும்.....!  உதிரியாக உள்ள புள்ளிகளை நம்பர்வாரியாக இணைக்கும் போது அழகாய் ஏதேனும் உருவங்கள் புலப்படும் !ஓரிஜினலாய் படம் வரைவதற்கும் நமக்கும் ஏழல்ல- பதினான்காம் பொருத்தம் என்பதால் - நோகாமல் குடிக்க வசதிப்படும் இந்த நோன்புக் கஞ்சி மேல் எனக்கு ரொம்பவே ஆர்வம் !! புள்ளிகளை சேர்த்து - பதுங்கி கிடக்குமொரு  உருவத்தை வெளிக்கொணரும் அதே  உணர்வு தான் மேலோங்கியது - கடந்த பதிவினில் நான் கேட்டிருந்த கேள்விகளுக்கு நீங்கள் போட்டிருந்த மதிப்பெண்களை கூர்ந்து நோக்கும்  பொழுது..!  

டெக்சின் கதைகளில் உங்கள் ரசனைகளின் pattern ; கார்டூன்களுக்குப் பொதுவாய் உங்களின் மதிப்பீடுகள் ; "என் பெயர் டைகர்" பற்றிய உள்ளத்து திறப்புகள்...ஆண்டின் டாப் + bottom இதழ்கள் .... .இத்யாதி...என ஒவ்வொரு விஷயத்திற்கும் உங்களது ரேட்டிங்குகளைப் பொறுமையாய் கவனிக்கும் போது நிறைய மௌன செய்திகளை உணர முடிகிறது ! மேலோட்டமாய்ப் பின்னூட்டங்களை பார்த்தால் - ரிக்டர் அளவுகோல்களில் பூகம்பத்தின் பரிமாணத்தைக் குறிப்பது போல் 7.0 ....8.0 என்று தோன்றினாலும் அந்த நம்பர்கள் நமக்குச் சொல்லும் செய்தியை ஜுனியரின் உதவியோடு கொஞ்சம் systematic ஆக பத்திரப்படுத்தி வருகிறேன் ! இதே பாணியிலான கேள்விகளை இந்தாண்டின் இறுதியிலும் ஒருமுறை கோரிக் பெறுவோம் ; 2016-ன் ஒரு முழுமையான அனுபவத்தைக் கிரகித்துக் கொள்ளும் பொருட்டு ! இப்போதைக்கு 2017-ன் கதைத் தேடல்களுக்கு ; கல்தா படலங்களுக்கு உங்கள் மதிப்பெண்கள் நிறையவே உதவி உள்ளன என்பது உறுதி  guys !!Keep them going !!

"இன்னுமொரு உபபதிவு" என்பதோடு நிறுத்திக் கொள்ளாது - வரக் காத்திருக்கும் ஈரோட்டுப் புத்தக விழா பற்றிய மேலோட்டமான updates-களையும் பகிர்ந்து கொள்ள இதனைப் பயன்படுத்திக் கொள்வோமே  என்று  நினைத்தேன் !  ஜூலை 13-ம் தேதி ஸ்டால் ஒதுக்கீட்டுக்கான குலுக்கல் நடைபெற உள்ளது ; so மாலைக்குள் நமது ஸ்டால் நம்பர் தெரிந்து விடும் ! Hopefully - சைடு நடைபாதைகளை ஒட்டியதொரு ஸ்டால் இம்முறையும் கிடைப்பின் சூப்பராக இருக்கும் ! வெளியூர் நண்பர்கள் ஈரோடு ட்ரிப் அடிக்கும் நோக்கில் இருப்பதை இங்கும், மின்னஞ்சல்கள் வழியாகவும் தெரிந்து கொள்ள முடிகிறது ! "போன ஆண்டைப் போல சந்திப்புகள் ஏதேனும் உண்டா ?" ; "சென்னையைப் போல "பரீட்சைகள்" உண்டா ?" ;  "சிலபஸ் எதுவோ ?" ; " பிட் ஏதாச்சும் கொண்டு வரலாமா ? " என்ற ரீதியில் ஏகப்பட்ட கலாய்ப்ஸ் !! 

"ஈரோட்டில் இத்தாலி" இதழையும் நேரில் பெற்றுக் கொள்கிறோமே ? என்ற வேண்டுகோள்களும் தான் ! So முதல் வாரயிறுதியின் முதல் நாளைக்கு (சனிக்கிழமை - ஆகஸ்ட் 6) இதழின் ரிலீஸ் + நமது சந்திப்பை வைத்துக் கொள்வோமே என்று நினைத்தேன். முந்தைய தினம் கூரியர்களை சீக்கிரமே அனுப்பிவிடும் பட்சத்தில் ஈரோட்டுக்கு வர இயலா நண்பர்களுக்கும் கூட அதே நாள் காலையில் இதழ்கள் கிடைத்து விடும் ! சென்றாண்டைப் போலவே புத்தக விழாவின் வாசலில் உள்ள LE JARDIN ஹோட்டலின் சின்ன மீட்டிங் ஹாலையே பயன்படுத்தினால் தேவலை என்று தோன்றியது ; அதற்கான ஏற்பாடுகளை சீக்கிரமே செய்து விடுவோம் ! வருகை தர எண்ணியுள்ள நண்பர்களின் எண்ணிக்கை உத்தேசமாய்த் தெரிந்தால் நாற்காலிகளும், பீட்சாக்களுக்கும், "question பேப்பர்" அச்சடிப்புக்கும் உதவிடும் என்பதால்  கை தூக்குங்களேன் - ப்ளீஸ் ?! And இந்தமுறை வாசகர் சந்திப்பினை கொஞ்சமே கொஞ்சமாய் சுவாரஸ்யமாக்கிட ஒரு surprise காத்துள்ளது ! So நமக்கென சற்றே நேரம் ஒதுக்கி விட்டு, மஞ்சள் நகருக்கொரு விசிட் ப்ளீஸ் ?

See you around soon folks ! Bye for now !

Sunday, July 10, 2016

நேற்றும் ...நாளையும் ...!

நண்பர்களே,
            
வணக்கம். ஆண்டின் ஒரு சுவாரஸ்யமான பகுதிக்குள் நாம் நுழைந்திருக்கிறோம்! ஈரோட்டில் நடைபெறவுள்ள புத்தக விழாவில் நமக்கு ஸ்டால் உறுதி என்பதால் மீண்டுமொரு சந்திப்புக்கான வாசல் & விற்பனைக்கொரு சாளரம் திறந்திருப்பது எனது உற்சாகத்திற்கான முதல் காரணம்! முதல் வாரயிறுதி ஓ.கே.வா? இரண்டாவது வாரயிறுதி ஓ.கே.வா? என்பதை உங்களுள் தீர்மானம் செய்துவிட்டுச் சொன்னீர்களேயானால் சட்டி & பெட்டியைக் கட்டிக் கொண்டு (சத்தியமாய் "பெட்டி" as in suitcase தானுங்கோ!!!) ஈரோட்டில் ஆஜராகிடுவேன்! And ஈரோட்டின் casual இதழாகக் களமிறக்க நான் எண்ணியிருந்த “பெட்டி பார்னோவ்ஸ்கி” க்குப் பதிலாக வேறு ஓரிரு இதழ்களைப் பரிசீலனை செய்து வருகிறேன்! So நிச்சயமாய் ஈரோட்டில் ஏதேனுமொரு அறிவிக்கப்படா இதழ் (பழசோ-புதுசோ?!) உங்களை வரவேற்கக் காத்திருக்கும்! (இரத்தப் படலமா? என்று ஆரம்பித்து விடாதீர்கள் ஸ்டீல்!!!!)

But மாமூலான இந்த சமாச்சாரங்களைத் தாண்டிய சுவாரஸ்யம் "நேற்றையும்- நாளையையும்" சார்ந்தவை! Yes- தொடரவிருக்கும் புத்தாண்டின் திட்டமிடல்கள் முழுவீச்சில் நடைபெற்று வரும் தருணமிது என்பதால் நமது ரேடாரில் ஏகமாய் நட்சத்திரங்கள் அணிவகுத்து வருகின்றனர்! 2016-ன் ஒரு உருப்படியான காரியம்- கதைகளை; சந்தாக்களை genre வாரியாகப் பிரித்ததே என்பேன்! So அந்தப் பாணியை தொடரும் வருஷத்திலும் தொடர்வது மட்டுமன்றி- சில பல கூட்டல்கள் & கழித்தல்களைச் செய்து பார்த்து வருகிறேன்- லியனார்டோவைப் போலவே! நாளைய நாயகர்களின் மீதொரு தீர்மானம் எடுக்கும் பொருட்டு, நேற்றும், இன்றும் நம்மோடு தோளில் கைபோட்டுச் சுற்றித் திரியும் நாயகர்களை லேசாய் சீர்தூக்கிப் பார்க்கவும் இத்தருணம் கோருகிறது! So நேற்றும், இன்றும் சிந்தையில் இடம்பிடிக்கின்றன- நாளைய பொருட்டு!

இம்முறையோ இந்த சீர்தூக்கிப் பார்க்கும் படலத்தில் சின்னதாகவொரு மாற்றம் இருந்திடப்போகிறது! நாயக / நாயகியரின் இதுவரையிலான performance-களை ரேட்டிங் செய்திட மாத்திரமே கோரப் போகிறேன்! அவை சொல்லும் சேதிகளை கிரகித்துக் கொண்டு- அவை சார்ந்த தீர்மானங்களை எடுக்கும் பொறுப்பை ஆந்தைவிழியாரிடமே விட்டுவிடப் போகிறேன்! ஆளுக்கொரு அபிப்பிராயம் சொல்லி விட்டு- “கடைசியில் இதை நடைமுறைப்படுத்தவில்லை; அதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை !” என்ற முகசுளிப்புகளையும்; சாத்துகளையும் தேவைக்கதிகமாகவே ருசித்து விட்டபடியால்- “மார்க்குகள் மட்டும் போடுங்கள்; புள்ளையாண்டனையோ - புள்ளையையோ பாசாக்குவதையோ- பெயிலாக்குவதையோ நான் பார்த்துக் கொள்கிறேனே !” என்ற தீர்மானத்துக்கு வந்து விட்டேன்! Not that things were too different before- ஆனால் ஒரு மாறுதலுக்காகவேணும் இந்த வழிமுறையை கையிலெடுத்துத் தான் பார்ப்போமே ?!
முதலும், மெகாக் கேள்வியுமே நமது larger than life நாயகரான டெக்ஸ் வில்லரைப் பற்றியே! இதோ- இந்தாண்டில் இதுவரையிலும் நாம் கடந்து வந்துள்ள Maxi, Mega; Double; Single; கலர் தோரணங்களின் பட்டியல் ! நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒவ்வொரு இதழும் உங்கள் பார்வையில் பெற்றிருக்கும் மதிப்பெண்களைப் பதிவிடுவதே! அந்தந்த மாதத்து Tex கதைகளை நீங்கள் அவ்வப்போதே rate செய்துள்ளீர்கள் தான் என்றாலும்- ஒரு ஒட்டுமொத்த pattern இதனில் தென்படுகிறதா- என்றறிய முயற்சிக்கிறேன்! So here goes:

1. சட்டத்திற்கொரு சவக்குழி    ........................ >
2. திகில் நகரில் டெக்ஸ்        ........................ >
3. விதி போட்ட விடுகதை       ........................ >
4. தலையில்லாப் போராளி      ........................ >
5. டாக்டர் டெக்ஸ்              ........................ >
6. பழி வாங்கும் புயல்           ........................ >
7. குற்றம் பார்க்கின்             ........................ >

இதழ்களின் பெயர்களை டைப் அடிக்கும் அவசியமின்றி 1-7 வரை நம்பரிட்டு அவற்றிற்கு நேராய் உங்கள் மார்க்குகளைப் பதிவு செய்திட்டாலே போதுமானது ! And- கூடுதலாகவோ; குறைச்சலாகவோ நண்பர்கள் அவரவரது மதிப்பெண்களை இடும் பொழுது அவை சார்ந்த விமர்சனங்கள் வேண்டாமே ப்ளீஸ்? இது "டெக்ஸ்" என்ற ஜாம்பவான் நாயகனை சீர்தூக்கிப் பார்க்கும் முயற்சியல்ல; அதனைச் செய்திட அவசியமாகிடும் அளவுக்கு நம்மவர் ஒருக்காலும் இளைத்துப் போகப் போவதுமில்லை! இது வெறுமனே 2016-ன் நமது டெக்ஸ் தேர்வுகள் சொல்லக் கூடிய சேதியினை அறியும் ஆர்வமே!! அப்புறம் இந்தப் “பேப்பர் திருத்தும் குல்லா” வை அணிந்து கொண்ட மறுகணமே “இங்கே இது சரியில்லை; அங்கே அது ஏன் வரவில்லை?” என்ற விமர்சனப் பார்வைகளுக்கும் தற்சமயம் அவசியங்களில்லை என்பதை நினைவில் கொள்க- ப்ளீஸ்! This is just an exercise in rating stories !

எனது கேள்வி # 2 – சந்தா C -ன் performance சார்ந்ததே! மறுபடியும் இங்கே லக்கி லூக்கோ; சிக் பில்லோ; ஸ்மர்ஃபோ on trial என்ற நிலையில் இல்லை! And “கார்ட்டூன்” என்ற genre-ன் வீரியமோ; வீரியமின்மையோ இங்கே ஒரு விவாதப் பொருளே அல்ல ! Plain & Simple – இதுவரையிலான 7 கார்ட்டூன் இதழ்களுக்கு உங்களது ratings என்னவென்பதே நாமறிய ஆசைப்படுவது ! So here we go again:

A. சூ மந்திரி காலி (மதியில்லா மந்திரி)          ........................ >
B. ஒரு பட்டாப் போட்டி (லக்கி லூக்)            ........................ >
C. நில்... சிரி... திருடு (கர்னல் க்ளிப்டன்)         ........................ >
D. ஆர்டினின் ஆயுதம் (சிக் பில்)                 ........................ >
E. தேவதையைக் கண்டேன் (ஸ்மர்ஃப்)           ........................ >
F. பிரியமுடன் பிணைக்கைதி (ரின் டின் கேன்)   .................... >
G. கோடியும் ஒரு கேடியும் (சிக் பில்)            ........................ >

எனது கேள்வி # 3 – இந்தாண்டின் ஸ்பெஷல் இதழின் ranking பற்றியது ! நமது தளபதியின் ஆற்றல் பற்றியோ; அவரது crowd pulling திறன் பற்றியோ நம்மில் யாருக்குமே மாற்றுக் கருத்துக்கள் இருக்கவே முடியாது! மனுஷன் ஒரு proven winner! எனது கேள்வியெல்லாம் “என் பெயர் டைகர்” overall ஆகப் பெற்றுள்ள மதிப்பெண்கள் என்னவென்பதே! இந்தக் கேள்விக்கு மாத்திரம் மார்க் போடுவதை விடவும் நான் வழங்கிடும் choices-களுள் ஏதேனும் ஒன்றைத் தேர்விடுவதே சர்ச்சையற்ற வழிமுறையாக இருக்குமென்று தோன்றுகிறது! So  “என் பெயர் டைகர்” இதழுக்கு உங்கள் மதிப்பீடு எவ்விதமோ?


கேள்வி # 4 – மறுபடியும் “என் பெயர் டைகர்” இதழைச் சுற்றியதே! ஆனால் இதனில் பதில் சொல்லிட எல்லோருக்கும் அவசியமிராது தான்- becos இது வண்ண இதழ் Vs. Black & White பதிப்பு என்ற திறனாய்வு! So- இரு பதிப்புகளையுமே  ரசித்திருந்த நண்பர்கள் மட்டுமே இதற்கு மார்க் போடலாம்!

கேள்வி எண் 5 - overall ரசனையின் பாங்கைப் புரிந்து கொள்ளும் பொருட்டு :
* இதுவரையிலும் இந்தாண்டின் Best இதழ் எது?
* இதுவரையிலும் டப்ஸா இதழ் எது?

கேள்வி # 5 ---> a) .................. b) .................. என்று இதற்கான  உங்கள் பதில்களைப் பதிவிடுங்கள் guys! And மறுபடியும் இங்கே அடிக்கோடிடுகிறேன்: பதில்களைக் கொண்டு விமர்சனங்கள் வேண்டாமே- ப்ளீஸ்!

Moving on- இன்னமும் ஒரேயொரு கேள்வியை இந்த வாரத்திற்கு வைத்துக் கொண்டால் நமது ABSOLUTE CLASSICS பணிகளுக்கு ஒரு துவக்கம் தர உதவியாக இருக்கும்! Now that காத்திருக்கும் வண்ண மறுமதிப்புகள் பற்றிய அறிவிப்பு வலைக்கு அப்பாலுள்ள வாசகர்களையும் இதழ்களின் பக்கங்கள் வாயிலாக எட்டி விட்டதால் கதைத் தேர்வுக்குள் முனைப்பாக இறங்கிடலாம்! தற்போதைய trending-ல் கேப்டன் பிரின்ஸ் இருப்பதால்- அவரது digest இதழின் பொருட்டு கதைத் தேர்வுகளைப் பார்வையிடுவோமா? Here are your options:

இவற்றுள் ஏதேனும் இரண்டை மாத்திரமே தேர்வு செய்யுங்களேன் ப்ளீஸ்?! Again- உங்களது பிரியத்துக்குரிய கதைகள் இந்தப் பட்டியலில் இல்லையெனில் அதன் பொருட்டு விசனம் வேண்டாமே? இந்தச் சுற்றில் இல்லையெனில் அடுத்ததில் உங்கள் choices-களுக்கு இடமிருக்கும் - for sure !
So இந்த மாத இதழ்களின் review-களைத் தொடர்வதோடு- மேற்கண்ட 6 கேள்விகளுக்கும் பதில் தர நேரம் எடுத்துக் கொள்ளுங்களேன் guys?

Looking ahead- “ஈரோட்டில் இத்தாலி” ஜரூராய் தயாராகி வருகின்றது! எல்லாமே நேர்கோட்டுக் கதைகள் ( டைலன் டாக் கூட !!!) என்பதால் ஜாலியாகப் பணியாற்ற முடிகிறது ! ஆகஸ்டின் b&w நாயகர் கூட இத்தாலியரே என்பதால் இதுவொரு நிஜமான “இத்தாலிய தருணமே!” என்று சொல்லலாம் ! "இத்தாலி" என்றவுடன் ஏராளமான அற்புத விஷயங்கள் நினைவுக்கு வந்தாலும் - வயிற்றை மகிழ்விக்கும் அந்த பீட்சா முன்னணியில் நிற்பது எனக்கு மட்டும் தானா என்பது தெரியவில்லை ! So முதல் வாரயிறுதியோ; இரண்டாம் வாரயிறுதியோ நாம் சந்திக்கும் வேளையில் ரகரகமாய் பீட்ஸாக்களையும் ஆர்டர் செய்து விடுவோமா - அந்த வேளைக்கொரு இத்தாலிய flavour கூட்டும் விதத்தில் ? 

 Before I wind off- சின்னச் சின்ன updates!

1. அமெரிக்காவில் இண்டியனாபோலிஸ்  நகரிலுள்ள தமிழ் சங்கத்திற்கு நமது கார்ட்டூன் இதழ்கள் பயணமாகியுள்ளன! அங்கு வசிக்கும் ஒரு குடும்பத்தின் முயற்சியில் இது சாத்தியமாகியுள்ளது! We are thrilled !

2. இந்த வாரத்தின் ஒரு மத்திய நாளில் தஞ்சை நகரிலிருந்து ஒரு வித்தியாசமான வாசகர் அணிவகுப்பு நம் அலுவலகத்திற்கு வந்திருந்தது! தந்தை ; அவர்தம் இளைய சகோதரர்; மகன் மற்றும் மருமகன் என அந்த அன்பான குடும்பமே நமது காமிக்ஸ்களின் உச்சபட்ச ரசிகர்கள்! துவக்கத்தில் நிரம்பத் தயக்கத்தோடிருந்தவர்கள் சற்றைக்கெல்லாம் தங்கள் காதலை வார்த்தைகளாக்க- அற்புதமானதொரு அனுபவமாயிருந்தது!! நெஞ்சார்ந்த நன்றிகள் !! 

3. புதியதொரு அதிரடிக் கௌபாய் நம் அணிவகுப்பில் ஐக்கியமாகிட வாய்ப்புள்ளதாகச் சொல்லியிருந்தது நினைவிருக்கலாம்! அது இப்போது உறுதியாகி விட்டது! கான்டிராக்டுகள் நம் கையில்!

4.கலரில் "தல" தாண்டவம் தொடர்கிறது இத்தாலியில்...! ஆகஸ்டில் வெளியாகக் காத்துள்ள COLOR TEX !!  Phew !!!


5.இது இம்மாதம் வெளியாகி செம ஹிட் அடித்துள்ளதாம் அதற்குள்ளாகவே..!!  "ஜூலியா மன்ற கொ.ப.செ." பதவி தவிர பாக்கிப் பதவிகள் காலியாக உள்ளன ! Any takers ?

6.இதோ - முதல் போட்டியின் முடிவும் - வெற்றி பெற்ற ஜாலி வரிகளும் ! வாழ்த்துக்கள் சரவணன் சார் ...! முத்து காமிக்ஸ் 1-50 -இதழ்களுள் ஏதேனும் ஒன்று திங்களன்று பரிசாய் அனுப்பிடுவோம்  ! முகவரியினை மீண்டுமொருமுறை மின்னஞ்சல் செய்து விடுங்களேன் - ப்ளீஸ் ! 

டெக்ஸ்:  என்னபா! ரொம்ப நேரமா மேக்கப் போட்டுட்டு ஒரே சிரிப்போட போன.....இப்போ அழுதுக்கிட்டே வர?

கார்சன்(அவ்வ்வ்.....)..இல்ல!இந்த கொஞ்சூண்டு பித்த நரைய பார்த்துட்டு 'டோனா' என்ன தாத்தானு சொன்னது கூட பரவால்ல........ஆனா 'லீனா'வும்......என்ன...!!.
(அவ்வ்வ்.....உஉஉ....)
7.போன வாரத்து caption போட்டியின் முடிவுகளும்  இதோ இங்கே :

Erode VIJAY :( ஒரு FLEETWAY ANNUAL பரிசு - ஈரோட்டுப் பூனைக்கு !)

ஆர்ச்சி : ஏய்... யேய்... என் பின்னாலேயே துரத்திக்கிட்டு வர்றதை நிறுத்தித் தொலை ஸ்பைடரு... நீ நினைக்கிற மாதிரியெல்லாம் ஒன்னுமில்லை...!!

ஸ்பைடர் : 'முருகேசன்'னா ஆண்பால்; 'முருகேசி'ன்னா பெண்பால். அதுமாதிரியே 'ஆர்ச்சன்'னா ஆண்பால்; 'ஆர்ச்சி'னா பெண்பால் தானே! எங்கிட்டயேவா? ஹோ ஹோ ஹோ... ஓடாதேடி... நில்லுடி...

=================================================

See you around all...bye for now !! Have a wonderful Sunday !

Friday, July 08, 2016

பெ.பா.-ஒரு உ.ப. !

நண்பர்களே,

வணக்கம். கூரியர் புயலுக்குப் பின்னே பெட்டியின் அமைதியும்....இரவுக்கு கழுகாரின் சரவெடியும்....காமிக்ஸ் கவுண்டமணி & செந்தில் ஜோடியின் லூட்டிகளும் கவனங்களைக் கோரி நிற்பதில் நிம்மதி கலந்த மகிழ்ச்சி ! And பின்னூட்ட எண்ணிக்கை 300+ என்றாகிவிட்டபடியால் - வாரயிறுதி வரையிலும் உங்களது விமர்சனங்களை load more பஞ்சாயத்துக்களின்றிப் படிக்கும் பொருட்டு - இதோ உ.ப. ! 

நிறைய இதழ்கள் எனும் போது ஒவ்வொருவரது முதல் வாசிப்புத் தேர்வும் ஒரே வரிசைக்கிரமத்தில் இருக்கப் போவதில்லைதான் ; ஆனால் - இது ஆண்டுமலர் மாதம் என்பதாலும், ஆண்டுமலரின் surprise addition பெட்டி பார்னோவ்ஸ்கி என்பதால் - இந்த உ.ப. வின் focus அவர் மீதிருந்தாலென்னவென்று தோன்றியது ! (அதற்காக  மற்ற கதைகளின் விமர்சனங்கள் வேண்டாமென்று சொல்லவில்லை !!)  இதோ பெட்டியின் இன்னும் சில பல அட்டைப்பட அவதாரங்களும், படைப்பாளிகளின் முகங்களும் ! 

See you on Sunday morning folks ! அதுவரையிலும் படித்ததில்-பிடித்தது + பிடிக்காதது பற்றிய உங்கள் சிந்தனைகளை இங்கே தெளித்து விடுங்களேன் ? 




கதாசிரியரும் ...ஓவியரும் ...


Tuesday, July 05, 2016

5 இதழ்கள் + 1 டி-ஷர்ட்.....!

நண்பர்களே,

வணக்கம். சனியிரவில் சிவகாசியின் மையப் பகுதியில் நடந்துள்ள வெடி விபத்தினால் நமது பணிகள் ஒரு நாள் தாமதம் கண்டுவிட்டன ! ஞாயிற்றுக் கிழமையும் வேலை வைத்து - திங்கள் காலையில் 5 புக்குகளையும் நம்மிடம் ஒப்படைப்பதாக பைண்டிங் நண்பர் உறுதி சொல்லியிருந்தார். ஆனால் அவரது பணியாளர்கள் பலரின் வீடுகள் விபத்து நடந்த பகுதியில் என்பதால் அவர்கள் யாருமே ஞாயிறன்று வேலைக்கு வந்திடவில்லை போலும் ! அவர்களை சொல்லியும் தப்பில்லை ; அந்த ஏரியாவையே காலி செய்து அங்குள்ளோரை தற்காலிகமாய் 2 கல்யாண மண்டபங்களில் அதிகாரிகள் தங்க வைத்து வருவதால்  - சட்டி-பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு ஓட வேண்டிய சங்கட நிலைமை ! So திங்கட்கிழமை மாற்று ஏற்பாடுகள் செய்து, பணியினை முடித்து இதழ்களை டெலிவரி செய்ய சாத்தியமான பொழுது கூரியர் நேரங்கள் முடிந்திருந்தன ! So இன்று காலை அவ்வளவு பிரதிகளும் - டி- ஷர்ட் சகிதம் கூரியர்களில்சீ க்கிரமே புறப்பட்டு விட்டன என்பதால்  நாளைய காலை உங்கள் இல்லங்களில் கனத்த டப்பாவை ஏந்திக் கொண்டு கூரியர் நண்பர்கள் ஆஜராகிடுவது நிச்சயம் ! 

And இதோ டாக் புல்லின் புது இதழின் அட்டைப்பட first look !! முழுக்கவே ஒரிஜினல் டிசைன் தான் இதன் முன்னட்டைக்கு ! ஒரே மாதத்தில் 2 சிக் பில் கதைகள் என்றாலும் - சித்திர பாணிகளிலும், கலரிங் பாணிகளிலும் ஒன்றுக்கொன்று நிறையவே மாற்றங்கள் தென்படுவதைக் காணப் போகிறீர்கள் ! "கோடியும்...ஒரு கேடியும்...".அந்த நாட்களது பளீர்..பளீர் டார்க் வண்ணங்களில் ஆளை அடிக்கும் ரகத்தில் இருப்பதையும் ; "நி 1...நி.2..!" சற்றே subtle வர்ணங்களில் இருப்பதையும் பார்த்திடலாம் !

ஆன்லைன் லிஸ்டிங்கும் செய்தாகி விட்டோம் ; so அவ்வப்போது வாங்கிடும் நண்பர்கள் க்ரெடிட் கார்டுகளைத் தேடி எடுத்துக் கொண்டால் - ஜூலையின் இதழ்களுக்கு ஆர்டர் செய்துவிடலாம் ! (http://lioncomics.in/special-issues/21085-lion-32-aandumalar.html_)
இதழ்களை பெற்றுக் கொண்டான பின்னே - உங்களது முதல் அபிப்பிராயங்களை பதிவிட மறவாதீர்கள் - ப்ளீஸ் !

பழைய caption போட்டி + இந்த ஞாயிறுக்கான போட்டி - என இரண்டுக்குமான தேடல்களுக்குள் தலைநுழைக்கக் கிளம்புகிறேன் ! ரமலான் பெருநாள் வாழ்த்துக்களும் - முன்கூட்டியே ! Bye now folks ! 

Sunday, July 03, 2016

ஒரு பேயோட்டும் படலம்...!

நண்பர்களே,
  
உஷார் : இதுவொரு ஜாலியான unplugged ரகப் பதிவே...! 
          
வணக்கம். ‘தாமதம்‘ என்ற பேயை ஓட்ட ஏகமாய் முயற்சிகள் எடுத்து- அதனில் ஓரளவுக்கு வெற்றியும் கண்டுள்ள நிலையில் கடைசி நிமிடக் கதை மாற்றமானது காலை வாரிவிட்டது இந்த ஜுலையில்! Maybe லயனின் நெடுங்கால தோஸ்தான “மிஸ்டர் தாமதம்”- ஆண்டுமலர் எனும் முக்கிய தருணத்திலாவது நலம் விசாரித்துப் போகலாமே என்று நினைத்ததோ, என்னவோ! Anyways - தொடரும் மாதங்களில் இந்தத் தலைவலி தொடர்ந்திடாதிருக்க இப்போதே சில ஏற்பாடுகள் பற்றிய ‘ரோசனைகள்‘ தலைக்குள் வாக்கிங் போய்க் கொண்டுள்ளன!

இப்போதென்றில்லை - ஒவ்வொரு சமீப மாதத்திலுமே எனக்குச் சிக்கலை ஏற்படுத்துவது மொழிபெயர்ப்புகளில் அவசியமாகிடும் மேம்படுத்தல்களே! நான் எழுதும் கதைகளில் இந்த பட்டி-டின்கரிங் வேலைகளை அவ்வப்போதே செய்து விடுவேன் என்பதால்- அந்த இதழானது டைப்செட்டிங் செய்யப்பட்டு என் மேஜைக்கு வரும் வேளைகளில், அதிக நேரம் செலவிடாமல்  தாண்டிச் செல்ல சாத்தியமாகிறது !  ஒரு 46 பக்கக் கதையின் ஸ்க்ரிப்டை  எழுதும் போதே குறைந்த பட்சம் 20 தடவையாவது மாறி மாறிப் படித்து விடுவேன் என்பதால் எடிட்டிங்கின்  போது அதனை புதிதாய் வேறொரு கோணத்தில் பார்க்கவே தலையில் 'தம்' இராது ! So எழுத்துப் பிழைகள் ; டிசைனிங் குறைபாடுகள் ; டமால்-டுமீல் சேர்க்கைகள் என்று பொதுவான வேலைகளை செய்து விட்டு கையைத் தட்டிவிட முடியும். ஆனால் நமது டீமின் மற்றவர்கள் பணி செய்த பக்கங்களை ஆங்காங்கே கைவைக்க நினைக்கும் போது ஏகமாய் நேரம் ஓடி விடுகிறது! ‘இது தான் perfect மொழியாக்கம் !‘ என்ற கோனார் நோட்ஸ் ஏதும் கிடையாதென்பதால் ஒவ்வொருவரது அணுகுமுறையும் வெவ்வேறு விதங்களில் இருப்பது இயல்பே! அவற்றை நமது பொதுவான ஸ்டைலுக்கு நெருக்கமாக்கிட முனையும்போது மணித் துளிகளும், மணி நேரங்களும் உசேன் போல்ட்டைப் போல் ஓட்டமாய் ஓடி விடுகின்றன! ஓரளவுக்கேனும் எழுத்து நடைகளில் தோன்றக் கூடிய 'பாணி மாற்றங்களை' நம்மவர்கள் ஏற்றுக் கொள்ளும் நாளொன்று புலரும் வரை பொறுமையாய் இதன் பொருட்டு நேரத்தை முதலீடு செய்தாக வேண்டி வருகிறது ! 

டைப்செட்டிங்கைப் பொறுத்த வரையிலும் நமது in house பெண்களும்; அவ்வப்போது வெளியிலிருந்து உதவிடும் ஆண் / பெண்களும் ‘அவசரம்‘ என்று சொல்லி விட்டால் அசுர கதியில் வேலைகளை ரவுண்ட் கட்டி அடிக்கும் திறனை வளர்த்துக் கொண்டு விட்டனர் என்பதை ‘பெட்டி பர்னோவ்ஸ்கி‘ படலம் காட்டியுள்ளது! எண்ணி இரண்டே நாட்களில் 54 பக்கங்களை முடித்துத் தூக்கி எறிந்து விட்டார்கள் என்றால் பாருங்களேன்! என்ன பிரச்சனை- மாதா மாதம் ‘அவசரம்‘ என்ற பலகையைக் கழுத்தில் கட்டிக் கொண்டே திரியும் அவசியம் ஏதோவொரு ரூபத்தில் எழுந்து விடுகிறது!

And ‘மிஸ்டர் தாமதம்‘ கும்மாளமிட்டுக் குதூகலிக்கும் திடல் # 2- நமது அட்டைப்பட டிசைனிங்கில்! நமது ஓவியரை ராப்பகலாய்க் குடலை உருவி டிசைன் போட்டு வாங்குவதை நம்மால் செய்திட முடிகிறது! And பெரியதொரு மாற்றங்களுக்கு அவசியமின்றி- ஈயடிச்சான் காப்பியாக ஒரிஜினல் டிசைன்களைப் பயன்படுத்த சாத்தியமாகும் இடங்களில் நமது DTP பெண்களே அதைச் செய்து முடித்து விடுகிறார்கள்! ஆனால் கொஞ்சம் நகாசு வேலைகள் தேவையென்று நமது டிசைனர் பொன்னனிடம் ஒப்படைத்து விட்டால்- 2 விஷயங்களை உத்தரவாதமாக உறுதியென்று எடுத்துக் கொள்ளலாம்! டிசைன் ‘பளிச்‘ ரகத்தில் அமைந்து விடுமென்பது முதலாவது உத்தரவாதமெனில்- Bata பாதணிகள் இரண்டு ஜோடிகளாவது அந்த மாதத்துக் கொள்முதல் பட்டியலில் இணைத்திட அவசியமாகும் என்பது இரண்டாவது உத்தரவாதம்! Bata பில்கள் நாளொருமேனி, பொழுதொரு வண்ணமாய் அதிகமாகிக் கொண்டே செல்வது தான் கவலைக்குரிய அம்சம். இடியே விழுந்தாலும் அந்தந்த மாதங்களது கடைசி வாரம் புலரும் வரையிலும் அட்டைப்படங்கள் தயாராவதில்லை எனும் பொழுது- டிசைனுக்கு அப்புறமாய் அச்சு; லேமினேஷன்; க்ரீஸிங் போன்ற பணிகளை லக்கி லூக்கின் சுடும் வேகத்தில் செய்தாகும் நெருக்கடிகள் ஒவ்வொரு மாதமும் எங்களுக்கு ! இதற்கொரு தீர்வு தயாராகிடாதவரை எங்களது கடைசி வார அக்கப்போர்களுக்கு விமோச்சனம்  பிறக்காதுதான் !

And சிக்கல்களின் தாயகம் # 3 – இம்மாதம் போலான கதைத் தேர்வுக் குளறுபடிகளில் ! என்ன தான் ‘தம்‘ கட்டி; ஆலோசனைகள்; reviews; internet ஆராய்ச்சிகள் என்று செய்தாலும் - there are times when it all falls flat! ஐம்பது- அறுபது கதைகள் கொண்டதொரு தொடர் என்றால் இந்தச் சிக்கல் அங்கே பன்மடங்காகிப் போகிறது! ஒவ்வொரு ஆண்டும் கீழ்க்கண்ட தொடர்கள் நம்மை கொலம்பஸை விடவும்; மார்கோ போலோவை விடவும் பெரிய ஆராய்ச்சியாளர்களாக மாற்றிடுகின்றன:

- ரிப்போர்டர் ஜானி
- சாகஸ வீரர் ரோஜர்
- சிக் பில்
- ப்ளுகோட் பட்டாளம்
- ரின்டின் கேன்

லக்கி லூக் தொடரிலும் 70+ கதைகள் உண்டென்றாலும் அவற்றின் பெரும் பகுதி ஆங்கிலத்தில் இருப்பதால் அவற்றை வாசித்து ஒரு தீர்மானம் எடுக்க சாத்தியமாகிறது! ஆனால் மேலேயுள்ள பட்டியலில் (கொஞ்சமாய்) ப்ளுகோட் பட்டாளம் நீங்கலாக மற்ற தொடர்களில் மருந்துக்குக் கூட ஆங்கிலப் பதிப்புகள் கிடையதாதெனும் போது- படிக்கிறோம்; படிக்கிறோம்- பால்யத்தில் பள்ளிகளில் படித்ததையெல்லாம் விடவும் ஜாஸ்தியாக! அதிலும் இத்தாலிய சாகஸக்கரர்களின் கதைகளோ மொத்தமாய் வேறு ரகம்!

* டெக்ஸ் வில்லர்- 660+ கதைகள்; எங்கே ஆரம்பித்து- எங்கே முடிவுறும் என்பதைக் கண்டுபிடிப்பதில் இடுப்பை முறிக்கும் சிரமங்கள் ; சரி- கதையைத் தேர்வு செய்து விட்டோமென்று ஒரு குதூகலத்தில் பக்கங்களைப் புரட்டினால் அதன் சித்தரங்கள் நம்மைப் பார்த்து தரையில் புரண்டுருண்டு பல்லைக் காட்டும். So நமக்கு ஏற்புடைய பாணியில் ஓவியங்கள் கொண்ட ; நமக்கு ஏற்புடைய கதை ஸ்டைலும்; நீளங்களும் கொண்ட கதைகளாக shortlist செய்வது நாக்காரை தூக்கிலிடும் முயற்சிக்கு சமானமானது!

சரி- ‘தல‘ தான் இப்படியெனில்- மார்ட்டின் தொடரில் அதிக வேறுபாடில்லாத் தலைவலிகள்! சரியான கதையைத் தேர்வு செய்தாலே- படித்துப், புரிந்து, ரசிக்க நாம் கைதேர்ந்த அப்பாடக்கர்களாக இருக்க வேண்டி வரும்! இந்த அழகில் ஒரு பூச்சு அதிகமாய் ‘குளறுபடிகள்‘ ஏற்றிக் கொண்ட கதைகளைத் தெரியாத்தனமாய் ‘டிக்‘ அடித்து விட்டால் அந்த மாதம் முழுவதும் ‘டிக்கிலோனா‘ தான்! சமீபத்தைய “கனவின் குழந்தைகள்“ இந்த ரகம் ! அதன் மீது பணியாற்றிய ஒரு வாரம் நானும் ‘குண்டிங்காஸ்‘ போல ஒரு மார்க்கமாய் முழித்துக் கொண்டு தான் திரிந்தேன்! (கதையைப் படித்த போது உங்கள் முழிகள் எவ்விதமோ ?!! )

C.I.D ராபின் இது போல ஜாஸ்தி பஸ்கி எடுக்கச் செய்வதில்லை என்றாலும்- இங்கேயும் ஏகமாய் ஓவியப் பாணிகளில் வேற்றுமைகளுண்டு! And again- கதைகளின் எண்ணிக்கை 200+ எனும் போது எதைப் பார்த்தாலும் சுவாரஸ்யமாய் தோன்றுவதும், தேர்வான பின்னே அவற்றைப் பார்த்தால் ‘ஙே‘ என்ற முழிக்கத் தோன்றுவதும் நடைமுறைகளே!

* இந்தப் பட்டியலில் புதிதாய் நமது அபிமானத்தை ஈட்டியுள்ள ஜுலியாவும் இணைந்து கொள்கிறார்! இங்கேயும் இருநூற்றுச் சொச்சக் கதைகள் எனும் போது, கண்களில் castor oil ஒரு வண்டி விட்டுக் கொள்ள அவசியப்படுகிறது!

* டைலன் டாக்கின் எந்தக் கதையுமே நேர்கோட்டில் பயணம் போவதில்லை என்பதால் அதனில் கொஞ்சமாய் எங்கள் பணி சுலபம் என்பேன்! மிகுந்த ஆராய்ச்சிக்கும் அறிவுசார்ந்த சிந்தனைகளுக்கும் பின்பாக- விஞ்ஞானபூர்வமாக இங்க்கி-பிங்க்கி-பான்க்கி வழிமுறையைக் கையில் எடுத்து விடும் போது ‘எல்லாம் அவன் செயல்‘ என்று மனதைத் தேற்றிக் கொள்ளவாவது மார்க்கமிருக்கும்!

அப்படிப் பார்த்தால் லார்கோ; ஷெல்டன்; கமான்சே போன்ற தொடர்களுள் இலகுவாய் நாம் மூச்சு விட வழிகளுண்டு! வரிசைக்கிரமமாய் சகலத்தையும் போட்டு விடுவதென்றாகும் போது- தேர்வு செய்யும் தலைவலி எங்கள் பொறுப்புகளாகாதே?! தோர்கலைப் பொறுத்த வரையிலும் இதே வசதி தான்! ‘எல்லாவும் இருக்கு- நல்லாவும் இருக்கு‘ எனும்போது நம்பர்வாரியாகக் கதைகளுக்கு ஆர்டர் பண்ணி விட்டு ஆனந்தமாய் மல்லாந்து விடலாம்!

ரெகுலரான தொடர்களிலேயே சமாச்சாரம் இந்த அழகு எனும் போது- கிராபிக் நாவல்கள் தேடல்களில் கிட்டிடும் ஆனந்த அனுபவங்களைப் பற்றி நான் சிலாகிக்கவும் வேண்டுமா என்ன? சமீபத்தில் கூட இதன் பொருட்டு நயமாய் ஒரு லோடு அல்வா வாங்கினேன்- மணக்க மணக்க! பிரெஞ்சில் அந்த படைப்பைப் பார்க்கும் போது ஆக்ஷனும், அதிரடியும் அட்டகாசமாய் தோன்றிட- அதைப் பற்றிய ஆராய்ச்சிகளும் ‘அக்மார்க் ஹிட்‘ என்ற பாணியில் முடிவுகளை நல்கிட- அவசரமாய் அதற்கான கான்டிராக்டைக் கோரினேன்! ஆனால் அதனை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கச் செய்து, படித்துப் பார்க்க ஆரம்பித்த போது தான் ஜண்டு பாம் உற்பத்தியாளர்களை அவசரமாய் தேடும் அவசியம் எழுந்தது! கதை மாந்தர்கள் ஒரு 100 பேர் குஷாலாய் பிக்னிக்  வந்தது போல் வழி நெடுகச் சுற்றித் திரிய- ‘இவர் படித்துறைப் பாண்டி!‘; ‘அது அலெர்ட் ஆறுமுகம்‘; ‘இது நாய் சேகர்!‘; என்று மனதுக்குள் பதித்துக் கொண்டே பக்கங்களைப் புரட்டப் புரட்ட கொஞ்ச நேரத்திற்கெல்லாம் பஞ்சாயத்துச் சங்கிலி முருகன் நிலைமை தான் எனக்கு! இந்தக் கதையைத் தமிழில் இறக்கி விட்டால் ஆங்காங்கே ‘கையப் புடிச்சு இழுத்தியா?‘ பிராதுகள் எழும் வாய்ப்புகள் ஜெகஜ்ஜோதியாய் தெரிந்திட- அவசரம் அவசரமாய் back அடிக்க முயற்சித்து வருகிறேன்! நல்ல காலத்துக்கு டிஜிட்டல் பைல்களை ஆர்டர் பண்ணாததால் இப்போதைக்குத் தலை தப்பித்தது!

ஆனால் சில தருணங்களில்- ரிசல்ட் எவ்விதமிருப்பினும் ‘இவற்றைப் போட்டே தீரணுமே!‘ என்ற ஏக்கத்தை உண்டாக்கும் சில கதைகளும்  இருந்திடுவதுண்டு! இப்போது கூட அத்தகைய முயற்சி ஒன்றை தினமும் என் தலையணைக்கு அடியில் புதைத்து வைத்து அதன் மீதொரு தீர்மானமெடுக்க ஆனமட்டிலும் முயற்சித்து வருகிறேன்! கடைசி நேரத்தில் ‘ஏன் வம்பு?‘ என்ற பயம் இதனிலும் தலைதூக்காது இருப்பின் நிச்சயமாய் மகிழ்வேன்! அசாத்தியமானதொரு dark படைப்பு அது !! 

ஆக, இவையெல்லாமே ஏதோவொரு வகையில் தாமதப் பேய்க்கு படையல் போட்டு உபசரிக்கும் காரணிகளாக அமைந்து விடுகின்றன! அதிலும் முக்கியமாய் அந்த “மொழியாக்க மங்காத்தா“ கிணற்றை மட்டும் தாண்டிட வழிபிறப்பின்- விரயமாகும் நேரத்தை ரொம்பவே மிச்சப்படுத்திடலாம்!

சரி- ஊர்க்கதை; உலகக் கதை எல்லாம் போதும்- தற்போதைய இதர புது இதழ்கள் பக்கமாய் பார்வையை ஓட விடலாமா? இதோ ஜுலையின் நமது இரவுக் கழுகாரின் அட்டைப்பட first look! 

Bombay Dyeing விளம்பர மாடலைப் போல நம்மவர் ராப்பர்களில் வலம் வருவதை மாற்றக் கோரிய குரல்களை  மண்டைக்குள் ஏற்றிக் கொண்டதன் பலனாக- இதோ நமது ஓவியரின் கைவண்ணம்! கதையின் சம்பவங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள டிசைனிது! அச்சாகி, லேமினேஷனோடு பார்க்கையில் pleasant ஆகத் தோன்றுகிறது என்று நினைத்தேன்! நிச்சயமாய் இது பற்றி உங்களுக்கும் சிலபல அபிப்பிராயங்கள் இருக்குமென்பதால்- அவற்றைக் கேட்டு அறிந்திடக் காத்திருக்கிறோம்! And கதையைப் பொறுத்த வரை- 100+ க்க  யானை வெடிச்சரமிது என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்! தமிழ் சினிமாக்களுக்கும், டெக்ஸின் கதைக்களங்களுக்கும் செம நெருக்கமான தொடர்புண்டு என்பது எனது பல காலத்து அனுமானம்! அதனை மீண்டுமொரு தடவை மெய்ப்படுத்தும் கதை- “குற்றம் பார்க்கின்“! செமையாக ரசித்தேன் - இதன் மீதான பணிகளை! நீங்களும் இந்த இதழுக்கு ‘ஜே‘ சொல்லிடும் பட்சத்தில்- கதாசிரியர் போசெல்லிக்கு இன்னுமொரு இறகைச் சூட்டி விடலாம், ஏற்கனவே பல பாராட்டுகளைச் சுமந்து நிற்கும் அவரது தொப்பிக்கு! இயன்ற வகைகளிலெல்லாம் கதைக்குக் கதை மாற்றங்களைக் கண்ணில் காட்ட வேண்டுமென்ற அவரது மெனக்கெடல்கள் ஒரு ராயல் சல்யூட்டுக்கு உகந்தவை !

சிக் பில் & கோ வின்... சாரி... சாரி... டாக் புல் & கோவின் புது சாகஸத்திற்கு அட்சரசுத்தமாய் ஒரிஜினல் ராப்பரே! அதனை கூரியர் அறிவிப்புப் பதிவினில் கண்ணில் காட்டுகிறேனே...?! 

ஆங்காங்கே விமானநிலையங்களில் சிக்கிய சந்து பொந்திலெல்லாம் எழுதோ- எழுதென்று எழுத வசதிப்படுவதால் எனக்கு நேரமும் ஓடி விடுகிறது; வேலைகளும் ஆனது போலாகி விடுகிறது ! என்ன ஒரே  சிக்கல் - IPhone களை நோண்டிக் கொண்டே அமர்ந்திருக்கும் சிறுசுகளும், பெருசுகளும் குனிந்த தலை நிமிராது கிறுக்கிக் கொண்டிருக்கும் என்னைப் பார்க்கும் பார்வைகளைச் சமாளிப்பது தான் ஒரு மார்க்கமான அனுபவமாய் இருந்து வருகிறது!

சென்ற பதிவுகளில் favourite ஆண்டு மலர் இதழ் எதுவோ? என்ற கேள்வியைக் கேட்டிருந்தேனல்லவா? எனது தேர்வானது of course LMS ஆக இருந்திடக் கூடும் தான்; ஆனால் அதையும் விட செம ஜாலியாகப் பணியாற்றிய இதழொன்று உண்டு! அது தான் நமது முதன் முதல் ஆண்டு மலர்! 1985-ல் ‘சைத்தான் விஞ்ஞானி‘யையும், ‘குதிரை வீரன் ஆர்ச்சி‘யையும் உங்களுக்கு அறிமுகம் செய்த நாட்களை மறக்கத் தான் முடியுமா ? அந்நாட்களில் நம்மிடையே ஸ்பைடர்காரு  சந்தேகமின்றி செம 'மாஸ்' நாயகர் என்பதோடு - ஆர்ச்சியும் ஒரு அப்பாட்டக்கரே என்பதால் இந்த இதழைத் திட்டமிட்டே போதே இது பட்டையைக் கிளப்பும் என்று எனக்கு யூகிக்க முடிந்திருந்தது !

அந்நாட்களில் கௌபாய் கதைகளுக்குள் நாம் கால் பதித்திருக்கவில்லை என்றாலும் - ஆர்ச்சியை குதிரையில் ஏற்றிவிட்டு கோணாங்கித்தனங்கள் செய்யும் விதமாய் கதையின் போக்கு இருப்பதை நம்மிடம் கிடந்த (FLEETWAY )LION வாரயிதழின் குவியலில் பார்த்திருந்தேன். So அவை வெளியான தேதிகளைக் குறிப்பிட்டு, இந்த பெட்ரோமாக்சே தான் வேணும் ! என்று டில்லியிலிருந்த ஏஜென்ட்டிடம் கோரியிருந்தேன். லண்டனில் எனக்கு அந்நேரம் FLEETWAY -ல் நேரடிப் பரிச்சயம் கிடையாதென்றாலும் - மாதம்தோறும் இது போன்ற கொக்கு மாக்கான கதைக் கோரல்களை அனுப்புவதால் அடியேன் பெயர் அங்கேயும் லேசாய் பிரபலம் என்பதை பின்னாட்களில் தெரிந்து கொண்டேன் ! "குதிரைவீரன் அர்ச்சி" கதையின் ஒரிஜினல்களைத்  தேடிப் பிடித்து நமக்கு பார்சலில் bromide prints  அனுப்பிய தருணம் - "எங்கள் இதழ்களை - எங்களைவிடவும் ஜாஸ்தியாய் கையிருப்பில் வைத்திருந்து ரசிப்பவருக்கு வாழ்த்துக்கள்" என்றொரு குட்டி note வைத்திருந்தனர் ! டில்லியில் இருந்த ஏஜெண்ட்டைப் பொறுத்தவரை  நானொரு நொய் புடிச்ச பார்ட்டி....; தயாராய் உள்ள கதைகளை பிற மொழிப்பதிப்பகங்களை போல பேசாமல் வாங்கிடாது - "இதை வரவழைத்துக் கொடு ; அதைத் தேடித் பிடித்துக் கொடு " என்று குடலை உருவும் ஆசாமி ! ஆனால் லண்டனில் முகம் சுளிக்காது எனது கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து வந்ததால் - "நமக்கென்ன போச்சு ?" என்று மௌனமாய் இருந்துவிடுவார் ! "இதெல்லாம் உனக்கு எங்கிருந்து கிடைக்கிறது ?" என்று மருந்துக்கு கூட ஒருநாளும் கேட்டதில்லை !
ஆர்ச்சிக்குக் கௌபாய் வேஷம் போட்டு ராப்பரை டிசைன் செய்யச் சொல்லி நமது ஓவியரிடம் கொடுத்த போதே எனக்குள் ஏக பரபரப்பு ! மறு பக்கத்துக்கு ஸ்பைடரின் ராப்பரும் போட்டுத் தாக்க - பாக்கட் சைசில் நிச்சயம் இதுவொரு குண்டு இதழாகத் தோன்றுமென்பதை நிர்ணயித்த போதே 3000 பிரதிகள் கூடுதல் பண்ணினேன் பிரிண்ட் run-ஐ !! இருபதாயிரம் முதல் இருபத்திரெண்டாயிரம் வரைக்கும் நமது நார்மலான விற்பனைகள் இருந்த அந்நாட்களை இன்றைக்கு நினைத்துப் பார்க்கும் போது குக்கரிலிருந்து வருவது போல் பெருமூச்சே மிஞ்சுகிறது ! ஸ்பைடரின் "சைத்தான் விஞ்ஞானி" அன்றைக்கே ஒரு மார்க்கமான கதையாய் எனக்குத் தோன்றினாலும் - அதையெல்லாம் ஒரு விஷயமாகவே பெரிதுபடுத்தத் தோன்றவில்லை ! கோமுட்டித்  தலையனான வில்லனுக்கு  நாலு சாத்து ; ஆர்டினிக்கு ரெண்டு குத்து ; பெல்ஹாமுக்கு கொஞ்சம் அர்ச்சனை என்றாலே கதை  சூப்பர் ஹிட் என்ற அளவுகோல்கள் நிலவிய நாட்களவை !! இதழ் விறு விறுவென்று தயாராகி - பைண்டிங்கில் இருந்த போது அந்நாட்களது நமது பைண்டிங் கான்டிராக்டரான திருநெல்வேலியைச் சார்ந்த "நைனா" (அவர் பெயர் கடைசிவரை தெரியாது ; எல்லோருக்கும் அவர் "நைனா" தான்!) இதழைப் பார்த்துவிட்டு - "புக்கு சூப்பரா வந்திருக்கு தம்பி" என்ற போதே ஜிவ்வென்று இருந்தது எனக்கு ! அந்நாட்களது மனிதர் ; காமிக்ஸ் பற்றித் துளியும் தெரிந்திராதவர் ; ஆனால் மிகுந்த அனுபவசாலி ! அவரது கணிப்பு துளியும் மிஸ் ஆகிடாது - விற்பனை அட்டகாசமாய் அமைந்திட - ரொம்ப ரொம்பச் சீக்கிரமே கையிருப்பு மொத்தமும் விற்றுத் தீர்ந்தது !! பின்னாட்களில் நிறைய இதழ்கள் ; ஆண்டுமலர்கள் என்றெல்லாம் நாம் பார்த்திருப்பினும் - அந்த முதல் மலர் என்றைக்குமே செம ஸ்பெஷல் எனக்கு ! அதுவும் கேக்  முன்னே சப்பணமிட்டு அமர்ந்திருக்கும் அந்தச்  சிங்கத்தின் உருவத்தையும் FLEETWAY கார்ட்டூன் ஒன்றிலிருந்து சுட்டு - நமக்கொரு ஆண்டுமலர் அடையாளமாக்கியது இன்னமும் நினைவில் நிற்கிறது !
இன்றைக்கும் அதே நாயகர்கள் சுற்றி வந்தாலும், அவர்கள் உருவாக்கும் தாக்கங்கள் மாறியிருக்கலாம்! But - லயனின்  ஆரம்ப நாட்களை turbo charged ஆக வைத்திருக்க இந்த இரு பிரிட்டிஷ் பிரகஸ்பதிகளும் தான் காரணம் என்பதில் துளியும் மாற்றுக் கருத்து கிடையாது! ‘ஸ்பைடர்‘ என்றால் வழக்கத்தை விடவும் 5000 ஜாஸ்தி; ‘ஆர்ச்சி‘ என்றால் 3000 ஜாஸ்தி!‘ என்ற பார்முலாக்களை மறக்கத் தான் முடியுமா? இன்றைக்கும் இவர்களைக் கொண்டு ஒரு “சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல்- சீசன் 2“ வெளியிட்டால் தெறிக்கத் தான் செய்யும்...! ஆனால் நம்மில் பலரும் சிக்கிய திசைகளில் தெறித்து ஓடுவதையும் என் மனக்கண்ணில் பார்க்க முடிகிறது! எதற்கும் அசராமல் நமது ஸ்டீல் பொன்ராஜ் மாத்திரமே விசிலடித்துக் கொண்டிருக்க, பாக்கிப் பேர் கன்ன மருக்களோடு ஒடிஷா; பீஹார்; ஜார்கண்ட் பக்கமாய் குடிபெயரச் செய்த ‘புண்ணியம்‘ நமக்கேன்? என்பதால் சட்டித் தலையனுக்கும், கூர்மண்டையர்களுக்கும் இதயத்தில் இடம் தருவதோடு நிறுத்திக் கொள்வோம்!
இங்குள்ளோரின் 90% ஸ்பைடர் & ஆர்ச்சியை ரசித்து வளர்ந்தவர்களே என்ற முறையில் உங்களது அந்நாட்களது அனுபவங்களைக் கேட்டறிய ஆவல்! உங்களது Top ஸ்பைடர் & ஆர்ச்சி சாகஸங்கள் எவையாக இருந்தனவோ? இந்த வாரயிறுதியில் உங்கள் "சூப்பர் மலரும் நினைவுகளால்" மெருகூட்டலாமே?

அப்புறம் நமது பால்யத்து நண்பர்களுக்கொரு  caption எழுதும் போட்டியை பிரெஷ்ஷாக வைத்து இந்த ஞாயிறை அதிர வைப்போமா ? வெற்றி பெறும் வரிகளுக்கு ஒரு FLEETWAY (ஒரிஜினல்) ANNUAL பரிசு ! So get cracking !!மீண்டும் சந்திப்போம் all ! Bye for now !