வணக்கம் நண்பர்களே,
தமிழ் சினிமா பாணியில் இதோ மேற்கொண்டு கொஞ்சம் நம்பர்கள் ; புள்ளி விபரங்கள் :
- இத்தாலி : 45
- சிங்கபூர் : 5
- பிரான்சு : 7
இது என்ன புதுவிதக் கணக்கென்று அதிகம் சிந்திக்க வேண்டாம் - வரவிருக்கும் நமது டேஞ்சர் டயபாலிக் சாகசமான "குற்றத் திருவிழா " இதழுக்கு அதி தீவிர அயல்நாட்டு டயபாலிக் ஆர்வலர்கள் அனுப்பியுள்ள ஆர்டரின் விபரமே இது ! அயல்நாடுகளுக்கு நமது இதழ்களை அனுப்பிடுவதில் புதிதாய் சங்கதிகள் ஏதும் கிடையாது தான் ; கடல் கடந்து ஆங்காங்கே வசிக்கும் நம் நண்பர்கள் சந்தாக்கள் மூலம் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகின்றனர். ஆனால் இம்முறை வந்திருக்கும் ஆர்டர்களோ தமிழின் சுவாசத்தைக் கூட அறிந்திரா இத்தாலிய காமிக்ஸ் சேகரிப்பாளர்களின் வேண்டுகோள்கள் !
தமிழ் சினிமா பாணியில் இதோ மேற்கொண்டு கொஞ்சம் நம்பர்கள் ; புள்ளி விபரங்கள் :
- டயபாலிக் எனும் ஒற்றைச் சொல்லுக்குக் கட்டுப்பட்டுக் கிடக்கும் இத்தாலியர்களின் எண்ணிக்கை ஆண்டொன்றுக்கு 55 லட்சமாம் !
- இவரது facebook fan கிளப்பின் எண்ணிக்கை மலைக்கச் செய்யும் 50,000+
- இவரது ரசிகர்களிடையே எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு சொல்லும் சேதி : வாசக வட்டத்தின் 30 சதவிகிதம் - பெண்களே !!
- ஒவ்வொரு ஆண்டும் இத்தாலிய மொழியினில் மட்டுமே அச்சாகும் புது டயபாலிக் இதழ்களின் எண்ணிக்கை : 40,00,000 !
இத்தனை ஆரவாரத்தோடு வரவிருக்கும் நமது சூப்பர் ஜூனின் இறுதி இதழை COMIC CON -க்கு உரிய நேரத்திற்குள் தயாரிக்க இங்கே நாங்கள் அடித்து வரும் பல்டிகள் சொல்லி மாளா ரகம் ! கோடை வெயிலுக்கு இடையே வர்ண பகவான் சற்றே திடுமென கண் திறந்து சூறைக் காற்றோடு அனுப்பி வைத்திட்ட மழை - ஆங்காங்கே சில மரங்களை மல்லாக்கப் படுக்கச் செய்து விட்டது. அந்த மரங்களில் ஒன்று நமது பைண்டிங் அலுவலகத்தின் வாசலில் துயில் பயின்று விட்டதால் கடந்த 36 மணி நேரங்களாய் அங்கே மின்சாரமில்லை ! ஏற்கனவே சமச்சீர் கல்வியின் பாடநூற் பணிகளின் பரபரப்பிற்கிடையே முண்டியடித்து வரும் நமக்கு இது எதிர்பாரா போனஸ் மண்டைக்குடைச்சலே ! எப்பாடு பட்டாகினும் நமது இத்தாலியப் புதுவரவை ஜூன் 1-க்கு தயார் செய்தாக வேண்டுமென்ற வைராக்கியத்தில் வண்டி ஓடுகின்றது ! எப்போதும் சொல்லும் எனது தேய்ந்த டயலாக்கை எடுத்து விட - இதை விடச் சிறப்பான சந்தர்ப்பம் வாய்க்காது என்பதால் - fingers crossed !!
இதோ இதழின் அட்டைப்படம் :
முன்னட்டை நமது ஓவியரின் கைவண்ணம் - எவ்வித டிஜிடல் ஜோடனைகளுமின்றி ; பின்னட்டை நமது நண்பர் ஷண்முகசுந்தரத்தின் அற்புத ஆக்கம் ! இரண்டுமே சிகப்புப் பின்னணியில் அமைந்திட்டது ஒரு happy coincidence! முன்னட்டைக்கும் நண்பர் ஒரு அழகான டிசைனை தயாரித்து அனுப்பி இருந்தார் - ஆனால் நாம் உபயோகிக்கும் அட்டையின் தரமும் , தற்சமய அச்சு முறையிலும் அதற்கு நியாயம் செய்திடல் சாத்தியமாகாது என்பதால் அதனை பயன்படுத்திட இயலவில்லை ! முழுவதும் metalic UV inks கொண்டு அச்சிட்டால் மட்டுமே அந்த தகதகப்பு சாத்தியாமாகும் ! Anyways - அட்டகாசமான அந்த டிசைனை பார்த்திருக்கா நண்பர்களின் பொருட்டு இதோ :
இத்தனை பில்டப் சகிதம் வருகை தரும் இந்த நெகடிவ் ஹீரோவின் சாகசங்களில் பெரிதாய் ஒரு கதைக் களத்தை எதிர்பார்த்திடல் சரி வராது என்பதை மொழிபெயர்ப்பின் போது தான் உணர்ந்து கொள்ள முடிந்தது ! கொஞ்சம் கொஞ்சமாய் இந்தக் கதை வரிசையினில் ஆழ்ந்திட்டால் ; அந்தப் பிரதான பாத்திரங்களோடு ஒன்றிட்டால் மட்டுமே இந்தத் தொடரை ரசிக்க முடியும் போலும் ! டயபாலிக் இதழ்களில் அவரது சாகசத்தைத் தவிர்த்து வேறு கதைகள் ஏதும் இடம் பிடிக்கக் கூடாதென்ற "தடா" இருப்பதன் காரணத்தால் - இந்த இதழில் ஜாஸ்தி filler pages கிடையாது ! இதோ மாறுபட்ட சித்திரத் தரத்தோடு வரக் காத்திருக்கும் இந்த சாகசத்தின் சில பக்கங்கள் :
'அதோ - இதோ ' என்று இருந்த COMIC CON Bangalore திருவிழா இன்னும் சில நாட்களில் என்று நெருங்கி விட்டதும் ; 2013-ன் ஒரு பாதி கிட்டத்தட்ட நிறைவாகி விட்டதும், நாட்கள் பயணிக்கும் துரிதத்தைச் சுட்டிக் காட்டுகின்றன ! இதோ - நமது COMIC CON ஸ்டாலின் வரைபடம் :
நமக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் ஸ்டாலின் எண் : B10. சனிக்கிழமை (ஜூன் 1) மாலை வரையிலும் & ஞாயிறு காலையிலும் (ஜூன் 2) நானும், விக்ரமும் அங்கே உங்களை சந்திக்கக் காத்திருப்போம் ! பாக்கி நேரங்களில் அனைவருக்கும் பரிச்சயமான நமது ராதாகிருஷ்ணன் + வேலு ஜோடியினர் ஸ்டாலில் இருப்பர் ! Please do drop in folks ! காமிக்ஸ் உலகின் சர்வதேச ஜாம்பவான்களும் பங்கேற்கும் இந்தத் திருவிழா சுவாரஸ்யமாய் அமைந்திடுமென்ற நம்பிக்கை என்னுள் நிறைய உள்ளது ! மீண்டுமொருமுறை fingers crossed !
விரைவில் சந்திப்போம் :-)
========================================================================
P.S : மூச்சிரைக்க நேற்றைய பதிவை எழுதிய போது சின்னச் சின்னதாய் விஷயங்கள் விடுபட்டுப் போயின ...! அவற்றையும் தற்போது ஆங்காங்கே இணைத்துள்ளேன் !
========================================================================
P.S : மூச்சிரைக்க நேற்றைய பதிவை எழுதிய போது சின்னச் சின்னதாய் விஷயங்கள் விடுபட்டுப் போயின ...! அவற்றையும் தற்போது ஆங்காங்கே இணைத்துள்ளேன் !
- திரைப்படமாகவும் ; டிவி தொடராகவும் ,வீடியோ கேம் ஆகவும் ; Play Station CD வடிவிலும் டயபாலிக் தலை காட்டியுள்ளார் !
- 'COMIC CON -ல் ஒரு சின்ன surprise ' என நான் முன்னர் சொல்லி இருந்தது - வண்ணத்தில் வரும் டெக்ஸ் இதழை மனதில் கொண்டே ! அதைப் பற்றி சென்ற பதிவிலேயே எழுதி விட்டதால் - it will no longer be a surprise ! இந்த 4 இதழ்கள் தவிர புதிதாய் இப்போதைக்கு வேறு வெளியீடுகள் ஏதும் கிடையாது !
- COMIC CON -க்காகத் தயாராகி வரும் பேனர்களில் ஒன்று இதோ : (சமீபமாய் புண்பட்ட டைகர் ரசிகர்களின் மனங்களை சற்றே குளிர்விக்க !!)
- அடுத்த மாதம் வரவிருக்கும் ALL NEW SPECIAL பற்றிய விபரமான அறிவிப்புகள் இந்த இதழ்களில் உள்ளன ! சற்றே அவகாசம் கிட்டிடும் போது அதைப் பற்றிய முன்னோட்டம் ஒன்றினைப் பதிவாக எழுதிடுவேன்!
- நாளை மாலைக்குள் சந்தாப் பிரதிகளையும் அனுப்பிட தலை கீழாய் தண்ணீர் குடித்து வருகின்றோம் ! அனுப்பி விட்டு உங்களை update செய்கிறேன் !
Banner-2 |